2013/03/08
பரணறையில் நன்னாரி மணம்
    பிச்சைமணி எ பிச்சைமணி ராமனாதனுக்கு, வரும் புதன்கிழமை எண்பது வயதாகப் போகிறது. மூன்று பிள்ளைகள், இரண்டு பெண்கள், எட்டு பேரக்குழந்தைகள் என்று நெருங்கிய அன்பருவிக் குடும்பம் இருந்தாலும், அவர் விரும்பி நனைவதும் நிறைவடைவதும் மனைவி ராஜி எ ராஜேஸ்வரியின் காதலில் மட்டுமே.
இன்று நேற்றல்ல, திருமணமான அறுபத்தொரு வருடங்களில், ராஜியின் கை விரலைப் பிடித்தபடி பிச்சைமணி உறங்கத் தவறியதில்லை - ராஜியை முகத்துக்கு நேரே வரச்சொல்லி விழிக்கத் தவறியதில்லை. ராஜியைக் கிண்டல் செய்யாமல் உடன் இருந்தப் பொழுதுகளைக் கழித்ததில்லை - ராஜியை எண்ணி அழாமல் தனிமையைக் கழித்ததும் இல்லை. ராஜி அவரைக் கண்மணி என்று அழைப்பார். கோபம் வரும் போது மட்டும் மணீ. பிச்சைமணிக்குக் கோபம் வந்தாலும் வராவிட்டாலும் ராஜி தான்.
ராஜிக்கு அடுத்தபடியாக பிச்சைமணிக்குப் பிடித்தது பரணறை. நூற்றைம்பது வருடப் பூர்வீகச் சொந்த வீட்டுக் குறுகல் பரணில் ஏறி இறங்க முடியவில்லை என்று பத்து வருடங்களுக்கு முன், கீழே கார் பார்க்கிங் கட்டிய போது, மேலேயிருந்த பெரிய அறைகள் இரண்டை ஒன்றாக்கி வெளிச்சத்துக்கு ஜன்னல்கள் அமைத்து அடுக்குத்தட்டுகள் கட்டி, பரணிலிருந்த பொருட்களையெல்லாம் அறைக்கு மாற்றியிருந்தார்.
பரண் ரூமுள் கதவடைத்துத் தொலைந்து போவது அவருக்கு மிகவும் பிடித்த செயல். ராஜி-பரணறை என்ற வரிசையில் இதுவரை வாழ்ந்த பிச்சைமணி, இன்னும் இரண்டே நாளில், ராஜியை விடப் பரண் ரூம் மேலானது என்றத் திடுக்கிடும் முடிவுக்கு வரப்போவதை ராஜி உணர வாய்ப்பிருந்தால் இந்தக் கதை வேறு விதமாக முடிந்திருக்கும்.
    கண்மணியின் எண்பது வயது நிறைவைக் கொண்டாட அண்மையிலிருந்தும் அமெரிக்கா ஆஸ்திரேலியாவிலிருந்தும் பெண், பிள்ளை, பேரக்குழந்தைகள் வரப்போகிறார்கள் என்று ராஜி முனைப்போடு இருந்தார். அடையாறு வரலட்சுமி சிஸ்டர்ஸ் கேடரிங்கிலிருந்து வந்திருந்த இருவருக்கும் என்னென்ன அலங்காரம், சமையல், இனிப்பு கார வகைகள் செய்ய வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தார்.
"உங்க மெனு எல்லாம் இருக்கட்டும்.. இது எங்க பக்சன்.. செலவானாலும் பரவாயில்லை, எங்க விருப்பத்துக்குத் தான் செய்யணும், சம்மதமா?". இடையே தொலைவாகப் பார்த்து உரக்க, "கண்மணி, குளிச்சுட்டு வந்துருங்க.. உங்களால பசி தாங்க முடியாது"
"..ஓமப்பொடி யாருக்குமே பிடிக்காது, வேண்டாம்.. தீபாவளி மிக்சர் மாதிரி நிறைய பண்ணிடுங்க. பாயசம், ஸ்வீட் மட்டும் நாலு வகை.. ஆமா.. எங்க குடும்பம் அப்படி. பெரிய பையனுக்கு முந்திரிப்பருப்பை அள்ளிப் போட்டு சேமியா பால் பாயசம் வேணும். தேங்காய்ப்பால் பாயசம் இருந்தா சின்னவனுக்கு வேறெதுவுமே வேண்டாம். கடைக்குட்டிப் பொண்ணுக்கு முந்திரி ஏலக்காய் இல்லாம திராட்சை மட்டும் கொஞ்சமா போட்டு ஜவ்வரிசி பால் பாயசம். அமெரிக்கப் பேரக் குழந்தைகளுக்கு பாதுஷா பிடிக்கும். ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு ஜாங்கிரி, அதிரசம். பம்பாய் பேரக் குழந்தைகளுக்கு பாதாம் அல்வா. உள்ளூர் குழந்தைகளுக்கு லட்டு, மேங்கோ குல்பி". இடையே, "கண்மணி, குளிச்சு சாப்பிட வாங்க"
"..இவருக்கு சர்க்கரை கம்மியா கல்கண்டு போட்டு பருப்பு பாயசம் நானே வச்சுருவேன். நாலு பலாச்சுளையைத் துண்டு போட்டு பாயசத்துல ஊறவச்சு, பொறிச்ச அப்பளத்தோட.. என் கையால செஞ்சு கொடுத்தா தான் அவருக்குப் பிடிக்கும். உர்ருனு ஸ்டீம் எஞ்சினாட்டம் குடிச்சுட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம எல்லார் எதிர்லயும் என்னைக் கட்டிப் பிடிச்சு இளிப்பாரு". இடையே, "எங்கே போனாரு இந்த மனுசன்?"
"..சாப்பாட்டுல நிச்சயம் வாழைத்தண்டு தயிர்க்கூட்டு இருக்கணும், அதிகமாகவே செஞ்சுடுங்க, அது எங்க குடும்ப ஐட்டம்.. மறந்துட்டனே.. ரெண்டாவது பையனுக்கும் மாப்பிள்ளைகளுக்கும் உப்பு, இனிப்புக் கொழுக்கட்டை வேணும். கொழுக்கட்டை தொட்டு குழம்பு ரசம் சாப்பிடுற ஜாதில பொறந்தவர் எங்க பெரிய மாப்பிள்ளை. அப்புறம் காலை டிபனுக்கு இட்லி, தேங்காய் சட்னி செஞ்சுருங்க.. வடைக்குப் பதிலா மைசூர் போண்டா செஞ்சுருங்க". இடையே, "கண்மணி, குளிச்சு சாப்பிட வாங்க, நேரமாயிடுச்சு.. அப்பல்லேந்து கூப்பிட்டிருக்கேன் பாருங்க.."
"..அதெல்லாம் வேணாம். சடங்குல இவருக்கு நம்பிக்கையில்லே. ரெண்டு சின்ன ரோஜா மாலை வாங்கிடுங்க. என் பையன் எங்களுக்காக க்ரிஸ்டல் போட்டோ மாலை ரெண்டு செஞ்சு எடுத்துட்டு வரானாம்.. அதைத்தான் மாத்திக்கணுமாம். ஏழைத் தம்பதிங்க ஐம்பது பேர் வருவாங்க.. துணி பணம் பாத்திரம் நகை கொடுத்து கௌரவம் செய்யப் போறோம். என் மூத்த பொண்ணு வீணை வாசிப்பா.. வீணை கேட்கறது அவருக்குப் பிடிக்கும். பேரப் பசங்கல்லாம் சேர்ந்து.. சர்ப்ரைஸ் நாடகம் போடுறாங்களாம் தாத்தா பாட்டிக்காக. நான் வழக்கமா செய்யுற பத்து நிமிச பூஜை.. அரை மணி சுந்தர காண்டம் உரக்கப் படிப்பேன். அப்புறம் சமபந்தி சாப்பாடு.. அவ்வளவு தான் பங்சன்". இடையே, "மணி, பரண் ரூமை விட்டு வெளிய வாங்க.. கூப்பிடுறேனில்லே?"
"..சிம்பிளா அலங்காரம் பண்ணிடுங்க. எல்லாமே இந்த ரெண்டு ஹால்ல நடத்துறதா இருக்கோம். இத்தனை பெரிய பூர்வீக வீட்டுல செய்யாம? கிச்சனுக்குப் பக்கத்துல இருக்குதே அந்த இடம்.. இவங்கப்பா காலத்துல பெட்ரூமா இருந்தது.. அங்கே தான் கண்மணி பொறந்தார்.. அதை அலங்காரம் பண்ணிடுங்க". இடையே, "மணி.. நேரமாகுது.. மறுபடி மதியம் பரண் ரூமுக்குப் போலாம்.."
"..மறக்காம எல்லாம் எடுத்து வந்துருங்க.. எங்க பசங்க ஞாயிறு காலைல வந்துருவாங்க.. அதுக்குள்ளாற முடிக்கப் பாருங்க.. குழந்தைங்க வந்தாங்கன்னா வேலை செய்ய விடமாட்டாங்க.. ரைட்டு, போயிட்டு வாங்க". வந்தவர்களை அனுப்பிவிட்டு, "மணீ...மணீ...".
    பரண் ரூம் கதவைத் திறந்து வெளியே வந்த பிச்சைமணியின் நடையில் ஒரு நடனம் இருந்தது. மனைவியைப் பார்த்த பார்வையில் ஒரு வேகம் இருந்தது.
ராஜியின் கோபம் சற்றே சாம்பல் பூத்தது. "சாருக்கு என்ன ஆச்சு? ஒரே ஆட்டமா இல்லே இருக்கு..?"
"சேர்ந்து ஆடுறியா? கொண்டாட்டமா இருக்குமடி குட்டி.." என்று ராஜியை நெருங்கினார்.
கணவனின் முகத்தைத் தள்ளிவிட்ட ராஜி, மூக்கை விட்டு விட்டு உறிஞ்சினார். மோப்பம் பிடிப்பது போல். பிச்சைமணியின் முகத்தில் ஒரு வாடை வீசியதை அறிந்தார். "என்ன வாடை அது?"
"ஒண்ணுமில்லையே?"
"நிச்சயமா வாடை... இங்க வாங்க.. ம்ம்.. வந்து வந்து.. நன்னாரி வாசனை.. நன்னாரியே தான்.. பரண் ரூமில் ஏது நன்னாரி?"
"கரெக்டா கண்டுபிடிச்சிட்டியா? என் தங்கக்கட்டி, ராஜிக்குட்டி.." என்ற பிச்சைமணி, கைகளை விரித்தார். "முகந்து பாரு" என்றார். பிறகு இரண்டு கைகளையும் தேய்த்து காற்றில் வீசி விரித்தார். இளம் நன்னாரி வேர்மணம் அவர்களைச் சுற்றி இனிமையாகப் பரவியது. "மேஜிக்! கோவில் தெரு சீதம்மா பழக்கடையில சர்பத் சாப்பிடுவோமே ஞாபகமிருக்கா? அதே தான்.."
"உளறாதீங்க.. சீதம்மா பழக்கடை மூடி அம்பது வருசமாவது இருக்கும். எங்கே போயிட்டு வந்தீங்க காலைல? எனக்குத் தெரியாம எதையாவது வாங்கினீங்களா?"
"சே..சே.. காலைலந்து பரண் ரூம்ல தானே இருக்கேன்.. உனக்குத் தெரியாதா ராஜி?"
"ஸ்ரீராமா! இந்த மனுசனுக்கு புத்தி பேதலிக்குதா?" எங்கோ உத்தரத்தைப் பார்த்துக் கேட்டார் ராஜி. பதில் வராததால் பிச்சைமணியிடம், "காலங்காலைல இப்படிக் கோளாறு பண்றீங்களே? பரண் ரூம்ல சீதம்மா வந்து உங்களுக்கு நன்னாரி சர்பத் தந்தாளா?"
"சர்க்கரைத்தேன் நீயிருக்க சர்பத்து தேவையில்லை.." என்றுக் கவிதையாகச் சிரித்தார் பிச்சைமணி. கோபத்துடன் ஒதுங்கிய மனைவியை இழுத்துப் பிடித்தார். "மாதரசே.. என் மனையாளே.. மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப் பால் ஏதுக்கடி?" என்று ராஜியின் கைகளைப் பிடித்தபடி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தார். ராஜியின் எரிச்சல் அதிகமாவதை உணர்ந்து அமைதியானார். "சர்பத் இல்லடி சகியே, தண்ணி. வெறும் நன்னாரித் தண்ணி. ஆனா சீதம்மா கொடுத்தா. அள்ளி அள்ளி கொடுத்தா. என்னை நம்பு.. பானையில ஒரே ஒரு கரும்புத் துண்டை தோல்சீவி.. வெட்டிவேர், நன்னாரி, இஞ்சி கலந்து ஊற வச்சிருக்கா... பழைய பாலாத்துத் தண்ணி.. சில்லுனு வாசமா இருக்கு.. மண் குவளைல தருவா ஞாபகமிருக்கா? குவளையெல்லாம் வேணாம், கைலயே ஊத்து சீதம்மா மாயம்மானு சொல்லி ரெண்டு கைலயும் அள்ளிக் குடிச்சேன்.. கொஞ்சம் மேலே சிந்திருச்சு..". முறைத்த மனைவியைப் பொருட்படுத்தாமல், "..என்னா சாமி ரொம்பக் களைச்சு வந்திருக்கியானு கேட்டா.. ஆமாம் சீதம்மா, ரொம்பக் களைச்சிருக்கேன்.. எப்ப ஓயும்னு தெரியலே.. ஆயாசமா இருக்குது.. இன்னும் கொஞ்சம் தரியானு கேட்டு மறுபடி ரெண்டு கை நிறையக் குடிச்சேன்.. உன்னைப் பத்தியும் கேட்டா.. உனக்காக குண்டுமல்லிப்பூ வச்சிருக்குறதா சொன்னா.. உன்னோட கொலுசு சத்தம் கூட ஞாபகம் வச்சிருக்கா.. உனக்குப் பிடிச்ச கோலி பன்னீர் சோடா ஒரு அடுக்கு கட்டறதா சொன்னா.. வரியா ராஜி? நீயும் நானும் சேர்ந்து சீதம்மா கடைக்குப் போகலாம் வாயேன்.."
"மணீ.. வயசுக்குத் தகுந்தாப்புல நடக்க வேணாமா? எண்பது வயசானாப்புலயா நடக்குறீங்க?"
"சத்தியமாடி ராஜி.. பரண் ரூம்ல தான் இருந்தேன்.. என் கூட வாயேன்.. அங்க ஒரு அதிசயம் இருக்கு. சொன்னா நம்ப மாட்டே"
"போதும்.. அந்தக் குப்பைக் கூளத்துல நான் காலடி கூட வைக்க மாட்டேன்.. நூறு வருஷக் குப்பையை அள்ளி வச்சுக்கிட்டு நாள் முழுக்க உக்காந்திருக்கீங்களே.. சே..சே.. குளிச்சுட்டு வாங்க.. நன்னாரி வாசனை வருதே தவிர என்ன கஷ்டமோ என்னவோ? செத்த மூஞ்சுறாக்கூட இருக்கலாம்.."
பிச்சைமணியின் முகம் வாடியது. "என்ன ராஜி இப்படிப் பேசுறே? இது.. அசல் சீதம்மாள் கையால கரைச்சுக் கொடுத்த அசல் நன்னாரி.."
"சரி..சரி.. முதல்ல குளிச்சுட்டு வாங்க.. ஒரு நாள் இல்லே ஒரு நாள் பரண் ரூம்ல இருக்குறதையெல்லாம் காயலான் கடைலப் போடப் போறேன்.. இல்லே கொளுத்திடப் போறேன்.. அப்பத்தான் நீங்க தேறுவீங்க.." என்ற ராஜியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பிச்சைமணி. அதிர்ச்சியைத் தொடர்ந்து அவர் முகத்தில் பயம் படர்ந்தது. "வேணாம் ராஜி, அதை மட்டும் செஞ்சுராதே.." என்ற அவர் குரலில் நடுக்கம் இருந்தது.
தொடரும் ►
வகை
சிறுகதை,
ப்ரேட்பரி கதைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதையில் ஒன்றிப்போகுமாறு கட்டிப்போட்டு விட்டீர்கள்.தொடர்ந்து என்ன வரப்போகிறது என்பதை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். சீக்கிரம் எழுதி விடுங்கள்
பதிலளிநீக்கு'பரண் ரூம் கதவைத் திறந்து வெளியே வந்த பிச்சைமணியின்'.. இந்த இடத்தில் வசமாக ஏமாற்றி விட்டீர்கள். நினைத்த மாதிரி இல்லாது ஒருவிதத்தில் பரவசம் தான்.
பதிலளிநீக்குஅடுத்ததற்கு கொக்கி போட்டு முடித்த விதமும் அருமை.
என்ன இது? என்ன நடக்கப் போகுது?
பதிலளிநீக்குசந்திரமுகி மாதிரி வரப் போகுதோ ?
பதிலளிநீக்குவிறு விறு சுறு சுறு .
அந்தப் பலகாரங்களை வர்ணிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது போங்கோ.
ராஜியை விடப் பரண் ரூம் மேலானது என்றத் திடுக்கிடும் முடிவுக்கு வரப்போவதை ராஜி உணர வாய்ப்பிருந்தால் இந்தக் கதை வேறு விதமாக முடிந்திருக்கும்.//
பதிலளிநீக்குகதையை ஆரம்பித்தவுடன் அப்படியே ஆழ்ந்து போனேன், தொடரும் வந்து வெளி உலகத்திற்கு மீட்டது.
வயதானால் நிறைய பழங்கதை பேச ஆள் வேண்டும் அது மனைவியாக இருந்து விட்டால் அதைவிடச் சிறப்பு வேறு இல்லை.
ஆனால் மனைவி குழந்தைகள், பேரக் குழந்தைகள் என்று வேறு உலகத்தில் நுழைந்து விடுகிறார்கள்.
கணவன் தனிமை படுத்த படுகிறான்.
அதில் வரும் கோளாறுகள் தான் இது என நினைக்கிறேன்.
"சரி..சரி.. முதல்ல குளிச்சுட்டு வாங்க.. ஒரு நாள் இல்லே ஒரு நாள் பரண் ரூம்ல இருக்குறதையெல்லாம் காயலான் கடைலப் போடப் போறேன்.. இல்லே கொளுத்திடப் போறேன்.. அப்பத்தான் நீங்க தேறுவீங்க.." என்ற ராஜியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பிச்சைமணி. அதிர்ச்சியைத் தொடர்ந்து அவர் முகத்தில் பயம் படர்ந்தது. "வேணாம் ராஜி, அதை மட்டும் செஞ்சுராதே.." என்ற அவர் குரலில் நடுக்கம் இருந்தது.//
பதிலளிநீக்குகுழ்ந்தையிடம் உள்ள பொருட்கள் பிறருக்கு அற்பமாய் தெரியும் ஆனால் குழந்தைக்கு அது பொக்கிஷங்கள்.
அதுதான் பிச்சைமணியின் நிலை.
//உர்ருனு ஸ்டீம் எஞ்சினாட்டம் குடிச்சுட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம எல்லார் எதிர்லயும் என்னைக் கட்டிப் பிடிச்சு இளிப்பாரு". இடையே, "எங்கே போனாரு இந்த மனுசன்?"//
பதிலளிநீக்குஅருமை சார். அதை அந்த அம்மா ரசிக்கறது தெரியுது.அன்பு அழகா வெளிப்படுது
சரியான இடத்தில்... தொடரும்...
பதிலளிநீக்குwaiting...
எங்கேருந்து கிடைக்குது இப்படியான அருமையான கருத்துகள் எல்லாம்! பிச்சைமணி என்ற கண்மணியும், ராஜியும் அடுத்து என்ன செய்யப் போறாங்க? அடடா! பிரிவு வரப்போவதை நினைச்சாலே வருத்தமா இருக்கே. இந்தத் தம்பதிகளுக்குள் இத்தனை வருடங்களுக்குப் பின்னர் பிரிவா? ராஜியை விடப் பரண் அறை எந்தவித்தில் மேலானது?
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம் யோசிக்கிறேன்.
படிப்பவர்களை அப்படியே கட்டிப் போட்டுவிடுகிற வித்தையை எங்கே பிடிச்சீங்க துரை.....
பதிலளிநீக்குமணீ ந்னு கூப்பிடுவது அப்படியே காதுல கேட்டுடே இருக்கு...
தொடரட்டும்....
சீதம்மா பழக்கடை மூடி அம்பது வருசமாவது இருக்கும். //
பதிலளிநீக்கு.//என்னா சாமி ரொம்பக் களைச்சு வந்திருக்கியானு கேட்டா.. ஆமாம் சீதம்மா, ரொம்பக் களைச்சிருக்கேன்.. எப்ப ஓயும்னு தெரியலே.. ஆயாசமா இருக்குது.. இன்னும் கொஞ்சம் தரியானு கேட்டு மறுபடி ரெண்டு கை நிறையக் குடிச்சேன்.. உன்னைப் பத்தியும் கேட்டா.. உனக்காக குண்டுமல்லிப்பூ வச்சிருக்குறதா சொன்னா.. உன்னோட கொலுசு சத்தம் கூட ஞாபகம் வச்சிருக்கா.. //
கனவு கண்டாரா ..??
பிரமையா..!!
பழைய மலரும் நினைவுகளா??
When I was young, I used to hate these oldies lying and occupying the lofts. But now my loft is full of such items. Have I become old?
பதிலளிநீக்குGood story and you bloggers know pretty well where to insert the words "to be continued" No idea when the next part will come. Please come soon.
பதிலளிநீக்குஇன்னொரு அமானுஷ்யக் கதையோ.?
உங்கள் தொடர்கதைகளைப் படிப்பவரை அதைப் பற்றியே நிறைய நேரம் சிந்திக்க வைப்பது உங்கள் எழுத்தின் சிறப்பு. சரியான இடத்தில் தொடரும் போடுவதிலும் கில்லாடி நீங்கள். ஒரு வேளை பிச்சுமணியே இல்லையோ? ராஜி அவ்வப்போது அவரின் நினைவுகளில் மூழ்கிவிடுகிறாரோ? அவர் இருப்பதுபோல் ஒரு பிரமையே வலுக்கட்டாயமாக உருவாக்கிகொள்கிறாரோ?
பதிலளிநீக்குபின்னூட்டங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇது ray bradbury எழுதிய 'a scent of sarsaparilla' கதையைத் தழுவி எழுதியது. பாராட்டெல்லாம் ரேக்குச் சொந்தம்.
நீளமாகிவிட்டதால் இரண்டு பகுதிகளாக சுருக்கப் பார்க்கிறேன் - இல்லையெனில் மூன்று பகுதிகளில் வெளியிட எண்ணம்.
very insightful கோமதி அரசு.
பதிலளிநீக்குஇது வயதானவர்கள், குறிப்பாக ஆண்களிடையே காணப்படும் predicament. கவனிக்காமல் விட்டால் ஒரு மனநோய்க்கான சாத்தியம்னு சொல்லலாம். 'சமூக விதி'களின் விளைவு?
ஒரு ஆண் சுமார் 16-18 வயதில் போல தனிமைப் படுத்தப்படுகிறான் என்று தோன்றுகிறது. 'சம்பாதிக்க' தொடங்கியதும் அவனுடைய உலகம் வேறாகி விடுகிறது. ஓய்வு பெற்றதும் திடீரென்று வேறு உலகத்தில் விட்டாற்போன்ற உணர்வு. வீட்டுப் பெண்கள், பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் (relatively speaking, ஆண்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு) எல்லாரும் இதுவரை ரயில் சினேகிதமாக இருந்தது. தேவைக்கதிகமாக எவரிடமும் நெருங்காததால் no real connection. சரியான பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் அவதிப்படுகிறார்கள். ஓய்வு பெறுவது ஆண்களுக்குப் பலவகைகளில் பேரிழப்பாகவே தோன்றுகிறது.
பெண்கள் அப்படியல்ல. வீட்டில் இருந்ததாலோ என்னவோ நிறைய அக்கம்பக்க சினேகிதம். இல்லையென்றால் ஏதோ சமூகத் தொடர்பு. அதுவும் இல்லையெனில் சமையல், பயணம் என்று ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையைத் தொடர்ந்து இயக்க/இயங்க முடிகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம் என்பதால், may be genetically, பெண்கள் தனிமைக் கொடுமையைக் கட்டத் தெரிந்தவர்களோ என்னவோ?!
என்னுடைய manager ஒருவர், ரிடையர் ஆகும்வரை கலகலப்பாக இருந்தார். ரிடையர் ஆகி ஐந்து வருடங்களில் இப்போது தனி உலகத்தில் இருப்பது போலிருக்கிறார். "சௌக்கியமா?" என்ற கேள்விக்குக் கூட இப்போதெல்லாம் அவரிடம் "same as yesterday" என்ற ஆயாசமான பதில் தான் கிடைக்கிறது. அவர் மனைவி அன்றைக்குப் போலவே ஏதாவது செய்து தன் நாட்களை busyஆக வைத்துக் கொண்டிருக்கிறார். she looks mentally and physically fit. ஆனால் நண்பர் முகத்திலோ அப்படி ஒரு சோகம்!
மாறிவரும் சமூக அமைப்புகளின் காரணமாக, அடுத்த தலைமுறைகளில் இந்த நிலை பெண்களுக்கும் வருமென்று அஞ்சுகிறேன்.
looks like amanushyam. waiting to read the next part.
பதிலளிநீக்குகோமதி அரசின் கருத்துக்கு இன்னொரு follow-up.
பதிலளிநீக்குஜெயா டிவி பேட்டி ஒன்றில் திரு.காஸ்யபன் 'ஓய்வு பெற்றோர் காதல்' பற்றி அழகாகச் சொல்லியிருப்பார். நினைவிலிருந்து:
"..நான் இப்பொழுது தான் என் மனைவியைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதுக்குக் காரணம் உண்டு. இந்த சமூக வாழ்க்கையில்.. நாங்க அரேஞ்ச்ட் மேரேஜ் தான்.. என்னுடைய குழந்தைகள் என்னுடைய மகன் மகள் அவர்களை படிப்பு வசதி வாழ்க்கை மற்றவையெல்லாம் கொடுத்து அவர்களைப் பெரியவர்கள் ஆக்க நாங்கள் பட்ட பாட்டில்.. என் மனைவியின் முகத்தை நான் சரியாகப் பார்க்கவில்லை, என் முகத்தை என் மனைவி சரியாகப் பார்க்கவில்லை.. அப்படித்தான் இன்னிக்கு வாழ்க்கை அனுபவமே இருக்கிறது.. இப்ப என் பசங்கள்ளாம் நல்லா வந்துட்டாங்க... இத்தனை நாளாக நாங்கள் செலுத்தியது அன்புனு சொல்ல முடியாது.. சமூகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஒத்து வாழ்ந்தோம் அவ்வளவு தான்.. இனியாவது நான் என் மனைவிக்காக வாழவேண்டும், மனைவி எனக்காக வாழவேண்டும்.."
@G.M Balasubramaniam, ஹேமா(HVL)
பதிலளிநீக்குஓய்வு பெற்ற ஆண், நினைவுகளால், நினைவுகளின் சின்னங்களால், தனக்காகப் படைத்துக் கொண்ட ஒரு உலகம் பற்றிய கதை. கதையில் அமானுஷ்யம் இல்லை (அப்படித்தான் brabury கதையைப் புரிந்து கொண்டிருக்கிறேன், அல்லது சொல்ல விரும்புகிறேன் :-)
அப்பாதுரை அவர்களே! அநியாயத்துக்கு ஞாபகம் இருக்கு ஐயா உமக்கு! அந்த நேர்கணல்கொடுத்து பத்து பதினைந்து வருடமாகவாவது இருக்கும்! கதையைவிட கதை சொல்லும்பாணி அற்புதம்---காஸ்யபன்.
பதிலளிநீக்குஅப்பாதுரை சார், என் பின்னூட்டத்திற்கு நீங்கள் விளக்கமாய் சொன்ன பதில் அருமை.
பதிலளிநீக்கு//மாறிவரும் சமூக அமைப்புகளின் காரணமாக, அடுத்த தலைமுறைகளில் இந்த நிலை பெண்களுக்கும் வருமென்று அஞ்சுகிறேன்.//
நீங்கள் சொல்வது சரிதான், இந்த காலத்தில் பெரும்பாலும் வேலைக்கு போகும் பெண்களாய் இருப்பதால் நீங்கள் சொல்லும் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இரட்டை சுமைகளை சுமந்து வாழும் பெண்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் ஆதரவு இருந்தால் அவள் அதையும் கடக்கலாம்.
பெண்களுக்கு ஓய்வு காலம் என்பது கிடையாது.முன்பு தன் கணவன், குழந்தை, என்று வாழ்ந்தாள், பின் பேரக்குழந்தைகள் என்ற உலகத்தில் வாழ்கிறாள். எப்போதும் மற்றவர்களை திருப்தி செய்யவே வாழ்கிறாள். அவளும் தனக்கு என்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கி வாழ்ந்தால் அவளுக்கும் இந்த மனச்சிக்கல் வராது.
உங்கள் அம்மாவைப் பற்றி படித்து இருக்கிறேன் கோவிந்தபுரத்தில் தனக்கு தெரிந்த சுலோகங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டு தன் முதுமைக் காலத்தை ஆத்ம திருப்தியுடன் கழிப்பதை. அவர்கள் பாடிய அபிராமி அந்தாதி கேட்டு இருக்கிறேன் . அது போல் முதுமையை அழகாய் கழிக்கலாம்.
//ஆண்களிடையே காணப்படும் predicament. கவனிக்காமல் விட்டால் ஒரு மனநோய்க்கான சாத்தியம்னு சொல்லலாம். 'சமூக விதி'களின் விளைவு?//
ஆண்களுக்கு நீங்கள் சொல்வது போல் நட்பு வட்டம் குறைச்சல்தான். ஆனால் அவர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் நட்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், தனக்கு பிடித்த பொழுது போக்கு, தனக்கு பிடித்த புத்தகங்கள் வாசித்தல் அதைப் பற்றி கலந்துரையாடல் (அதுவும் அளவுடன் இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த பெரிசு கிட்ட மாட்டிக்காதே நம்மை அறுத்துவிடும் ) குழந்தைகளிடம் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை பேசி அவர்களுடம் பொழுதை போக்கலாம். வேலையைகூட தொடரலாம் உடல் ஒத்துழைத்தால். தன் அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவுகிறமாதிரி பதிவுகள் எழுதலாம் முதலில் மனம் விட்டு பேச மனைவி அல்லது உற்ற நண்பன் முக்கியமாய் வேண்டும்.
உங்கள் மேனேஜரும் அவர் மனைவி போல் சுறு சுறுப்பாய் எப்போது தன்னை வைத்துக் கொண்டால் அலுப்பு வராது.
திரு.காஸ்யபன் அவர்கள் சொன்னது போல் //இனியாவது நான் என் மனைவிக்காக வாழவேண்டும், மனைவி எனக்காக வாழவேண்டும்.." //
தொழில்,குடும்பம், குழந்தைகள் என்று ஓடிக் கொண்டு இருந்த வாழ்க்கையை திரும்பி பார்க்காமல் இப்போது கிடைத்த வாழ்க்கை நேரத்தில் இருக்கும் காலம் வரை(கணவன், மனைவி) யார்முந்தி, யார் பிந்தி என்று தெரியாது ஒருத்துக்கொருவர் ஆதரவாய் வாழ்ந்தால் சிக்கல் வராது இருபாலர்களுக்குமே. என்பது என் கருத்து சார்.
குழந்தைகளும் தன் பெற்றோர்களுடன் பேசிக் கொண்டு இருக்க வேண்டும் அடிக்கடி. அவர்களுக்கு தனி ரூம், தனி டிவி, எல்லா வசதிகளும் செய்து கொடுத்து விட்டேன். அப்படியும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லாமல் எல்லோரும் ஒரே அறையில் தொலைக்காட்சி பார்த்தால் பேரன் நேரம் கார்டூன் என்றால் அதையும் நாம் ரசிக்கலாம், பெற்றோர் நேரம் கோவில் தரிசனம். என்றால் அதையும் அது எங்கே இருக்கிறது நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்று பேசலாம். நாடகம் பார்த்து விமர்சிக்கலாம். இப்படி தனிமைபடுத்தபடாமல் இருந்தாலே இந்த மன அழுத்தங்கள் வராது.
மன்னித்துக் கொள்ளுங்கள் பின்னூட்டம் பெரிதாகி விட்டது.
என்னாச்சு நான் போட்ட கமெண்ட்?
பதிலளிநீக்குபரண்ல சந்திரமுகி மாதிரி யாரும் இருக்காளோ ?
//ராஜியை விடப் பரண் ரூம் மேலானது என்றத் திடுக்கிடும் முடிவுக்கு வரப்போவதை ராஜி உணர வாய்ப்பிருந்தால் இந்தக் கதை வேறு விதமாக முடிந்திருக்கும்.//
பதிலளிநீக்குஎன்ன ஆகாப்போகிறதோ??
மிகவும் சுவாரசியமாக இருக்கு. தொடரும் போடாம தொடர்ந்திருக்கலாம்.
//சர்க்கரை கம்மியா கல்கண்டு போட்டு பருப்பு பாயசம் நானே வச்சுருவேன். நாலு பலாச்சுளையைத் துண்டு போட்டு பாயசத்துல ஊறவச்சு, பொறிச்ச அப்பளத்தோட..//
பதிலளிநீக்குசும்மா ரே பிராட்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி-ன்னு கதை விடாதீங்க சார். பாலச்சுளை பருப்பு பாயாசம்ன்னு இது எல்லாம் உங்க சரக்கு, பரணிலிருது பதிவிற்க்கு இன்னும் என்ன வரப்போகிறதோ... ஆவலுடன்.