2012/10/20

மைத் மை டியர்

2


◄◄   1



    த்து நிமிடங்களுக்கு முன்னால் நடந்தது அன்புமல்லிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

வேர்கடலைச் சங்கப் பார்க்கிங் தளத்தில் அனேகமாக எல்லா இடங்களிலும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. நுழைவாயிலருகே இருந்த ஒரு இடத்தைப் பார்த்த இரண்டு சிவப்புக் கார்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முனைந்து லேசாக உராய்ந்து நின்றன. உள்ளிருந்து இறங்கிய இரண்டு வாலிபர்கள் முதல் வேலையாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். "நான் தான் முதலில் வந்தேன்" என்று வாதிட்டனர். சிவப்புச் சட்டைக்காரன் சற்றுத் தயங்கி, "ஏய்..நீ வாசு இல்லே?" என்றான். நீலச்சட்டை நிதானித்தான்.

"நெய்வேலி டௌன்ஷிப்..?" தொடர்ந்தான் சிவப்புச்சட்டை.

"ஆமாம்.."

"டேய்.. என்னைத் தெரியலே? ஜே..?"

"ஜே? மை காட்! ஜே! ஜோதிக்கா பையன்? பத்துப் பதினஞ்சு வருசம் இருக்கும்ல பார்த்து? சாரி, அடையாளமே தெரியலேடா, எப்படி இருக்கே?"

ஒருவரையொருவர் அரைகுறையாகத் தழுவி விலகினர். "சாரி.. நான் பேக் பண்ணிடறேன்.. நீ எடுத்துக்க இந்த இடத்தை" என்றான் வாசு.

"நோ.. நோ.. நீ தான் முதலில் வந்தே.. யூ டேக் இட்"

"நீ தாம்பா வந்தே.. நான் சண்டை போட்டதுக்கு மன்னிச்சுரு.. ப்லீஸ் ஜே, எடுத்துக்க.." என்ற வாசு தன் காரைப் பின்வாங்கி வேலியோரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு வந்தான். ஜேயிடம், "அஞ்சு நிமிசத்துல ஏதாவது இடம் காலியாகும், நான் பார்க் பண்ணிடறேன், அதுவரை பேசுவோம்.. எங்க வேலை பாக்குறே?" என்றான்.

"விப்ரோல எம்பெடட் டெஸ்டிங் க்ரூப் லீடர்"

"அக்செஞ்சர்.. ஈஆர்பி டெஸ்டிங்"

சிரித்தார்கள். "உள்ளே போய் பேசுவோம்... உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா?" என்றான் ஜே.

"இல்லப்பா.. உனக்கு?"

"இல்லே... பட் ஐ'ம் இன் லவ்"

"நானும்.."

"வெரி குட். இங்கே எங்க வந்தே?"

வாசு பதில் சொல்வதற்குள் வாயிலருகே வந்துவிட்டார்கள். சுழற்கதவருகே உறுமல் கேட்டுத் தயங்கினான் வாசு. மூன்றடி உயர, கறுப்பு நிற ஜெர்மன் செபர்ட் நாய் ஒன்று கால்களை ஊன்றிக் கண்களைத் தீட்டி உறுமிக் கொண்டிருந்தது.

"யாருப்பா கரடியை உள்ளே விட்டது?" என்றான் வாசு.

அதற்குள் அவசரமாக உள்ளிருந்து ஓடி வந்தப் பணியாள், "மன்னிச்சுருங்க. இது கஸ்டமரோட நாய். என்னைக் கவனிச்சுக்கச் சொன்னாங்க.. அவசரமா உள்ளே போனதால இங்கே நிறுத்திட்டேன்.." என்றபடி நாய்க் காலரைப் பிடித்துக் கொண்டு நின்றான். "நீங்க உள்ளே போங்க. தினேஷ்குமார் ரொம்ப சாது"

"கரடியைப் பத்திக் கேட்டா தினேஷ்குமாருன்றே? யார்யா அவன்?"

"நாய் பேருதாங்க. நல்லா இல்லே? ஒண்ணும் செய்யமாட்டான், வாங்க"

"நாய்க்குத் தெரியுமாய்யா ஒண்ணும் செய்யக்கூடாதுனு? தினேஷ்குமாருனு பேரு வச்சவன் தினசரி சோறு வச்சானாய்யா? விரதம் கிடந்த நாய் மாதிரி இருக்குது.." என்று பொருமினான் வாசு. "காலம் கெட்டுப் போச்சுப்பா. நாய்னா ஜிம்மி பப்பினு பேர் வச்சுகிட்டு ஏதோ குட்டியா காலை நக்கிட்டு இருக்கும்.. ஏன்யா.. இந்த நாய்க்கு நாக்கையே காணோமே? எல்லாம் பல்லா இருக்குதே? அந்தப்பக்கம் கூட்டிட்டுப் போய்யா கொஞ்சம். எனக்கு நாய்னா பயம்.. நாட்டுல கரடியை எல்லாம் இப்ப நாய்ன்றாங்க.."

"தினேசு, வா" என்று பணியாள் நாயை இழுத்துக் கொண்டு நடக்க, ஜே தொடர்ந்தான். "வாசு, இங்கே எங்க வந்தேனு சொல்லலியே நீ?"

"அதுக்குள்ள நாய் விவகாரமாயிடுச்சு. அது பெரிய கதை. நான் லவ் பண்றேன்னு சொன்னேனில்லே? என் ஆளோட மாமா, குடும்ப நண்பராம், இங்கே இருக்காரு இப்ப. அவரைப் பாத்துப் பேசச் சொன்னா.. அவர் சம்மதம் இல்லாம கல்யாணம் நடக்காதுன்றா.. அதான் வந்தேன்.. அவரு உள்ளே இருக்காரா கேட்டுருவோம் வா" என்றபடி உள்ளே சென்ற வாசுவைத் தொடர்ந்தான் ஜே.

அடுத்த ஒரு நிமிடத்தில் இருவரும் வெளியே வந்துத் தீவிரமாக வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வாசு ஜேயை நெட்டித் தள்ளிவிட்டான். விழுந்து சுதாரித்த ஜே, வாசுவைத் தாக்க விரைந்தான்.

இதையெல்லாம் பார்த்து அதிசயித்தப் பணியாள், நாயை அருகிலிருந்த காரருகே கட்டிவிட்டு வேகமாக வந்தான். "சார்.. சார்.. என்னாச்சு? சுமுகமா பேசிட்டிருந்தீங்க.. உள்ளே போய் ஒரு நிமிசத்துல இப்படி ஓடியாந்து அடிச்சுக்கறீங்களே?" என்று இருவரையும் பிரித்தான்.

சற்று அமைதியான ஜே, "வாசு.. நாம ரெண்டு பேருமே மைத்தைக் காதலிக்கிறோம்; அவளும் நம்மைக் காதலிக்கிறா. ஒருவேளை நம்ம ரெண்டு பேருல ஒருத்தனை செலக்ட் பண்ண முடியாம, அவ அங்கிள் கிட்டே பேசச் சொல்லியிருக்கலாம். மாமாக்காரன் என்னதான் சொல்றானு கேப்போம். அவரு யாரை செலக்ட் செய்யுறாரோ அவங்களே மைத்தைக் கட்டிக்கட்டும்.. மே த பெஸ்ட் மேன் வின்" என்றான்.

"டீல்" என்ற வாசு, உடைகளைச் சீராக்கிக் கொண்டான். "சாரி ஜே, ஒரு பெண்ணுக்காக நாம சண்டை போடுறது சரியில்லே".

"இங்கே வாப்பா" என்று பணியாளை அழைத்தான் ஜே. "இந்தா" என்று அவனிடம் இருபது ரூபாய் கொடுத்தான். "எங்க சண்டையைப் பிரிச்சதுக்கு".

"நன்றிங்க. டேபிள் ரிசர்வ் செஞ்சிருக்கீங்களா?"

"இல்லே. அன்புமல்லினு சங்க மெம்பர் ஒருத்தரைப் பாக்கணும்.. எங்க உக்காந்திருக்காருனு தெரியுமா?"

"மல்லி சாரா? நல்லாத் தெரியும். வாங்க, நானே கூட்டிப் போறேன். என் பேரு சிங்காரம். நான் தாங்க அவருக்கு ஆல் இன் ஆல் இங்கே. இப்ப ரெண்டு மூணு இடம் கிளியராயிடுச்சு பாருங்க. நீங்க போய் காரைப் பார்க் பண்ணிட்டு வாங்க" என்றான் பணியாள்.

ஆமோதித்துச் சென்ற வாசு, சில நொடிகளில் அலறியடித்துத் திரும்பினான். "யோவ் சிங்காரம்.. என்னய்யா நீ? கரடியை என் கார் கிட்டே கட்டி வச்சிருக்கே? மேலே பாஞ்சிருச்சுயா.. கீழே விழுந்து கார்ல மோதி பல்லு ஒடஞ்சிடுச்சு"

"ஐயையோ.. வாயில்லாப் பிராணி.. தினேசு" என்று ஓட முனைந்த சிங்காரத்தை நிறுத்தினான் வாசு. "யோவ்.. உடைஞ்சது என் பல்லுயா.. நான் தான் பல்லில்லாப் பிராணி இப்ப.. வாய் கூட கிழிஞ்சிருச்சு.. புசு புசுன்னு வீங்க ஆரம்பிச்சுடுச்சு பாருய்யா"

"மன்னிச்சுருங்க.. வேலியோரமா கட்டினேன்.. பக்கத்துல உங்க கார்னு தெரியாதுங்க.. இதா விலக்கிடறேன்.. நீங்க பார்க் பண்ணி உள்ளாற வந்து முகம் கழுவிக்குங்க.. லேசாத்தான் அடிபட்டிருக்கு, சரியாயிரும்" என்று நாயை இழுத்து வர ஓடினான் சிங்காரம்.

    அனுமதி கோராமல் எதிரே வந்தமர்ந்த இருவரையும் வியந்து பார்த்தார் அன்புமல்லி. உள்ளுக்குள் யூகம் உதற, "யாரு நீங்க?" என்றார்.

"அங்கிள்.. நான் ஜே, ஜோதிக்கா மகன்.."

"நீங்க?" என்றார் மற்றவனிடம்.

பெயர் சொன்னான்.

"ராமுவா..?"

வேகமாகத் தலையசைத்து மறுபடியும் பெயர் சொன்னான்.

"பாபுவா?"

ஜே தலையிட்டு, "வாசு.. சந்தானம் மாமா புள்ள" என்றான்.

"ஏன் அடிக்கடி பேர் மாத்துறான்?" என்ற அன்புமல்லியை முறைத்த வாசு, மேசை மேல் குத்தினான். பிறகு தன் வாயைக் காட்டினான்.

அதற்குள் சிங்காரம் ஒரு தட்டில் இரண்டு ஒத்தடப்பைகளும் இன்னொரு சட்டியில் பனிக்கட்டிகளும் கொண்டு வந்தான். பனிக்கட்டிகளைப் பைக்குள் திணித்து, வாசுவிடம் கொடுத்தான். "தம்பி.. இந்தாங்க ஒத்தடம் வச்சுக்குங்க, எறங்கிடும்" என்றான். அன்புமல்லியிடம், "ஐயா.. தம்பிக்கு அடிபட்டு வாயில லேசா வீக்கம்.. அதான் பேச்சு குழறுது.. அஞ்சு நிமிசத்துல சரியாயிடும் பயப்படாதீங்க" என்றான்.

"ஒண்ணும் அவசரமில்லே" என்ற அன்புமல்லி தன் துரதிர்ஷ்டத்தை நொந்தார். 'அஞ்சு வருசம் ஆனால் நல்லா இருந்திருக்கும்' என்று நினைத்தார்.

"ஐயா.. மூணு பேருக்கும் எதுனா எடுத்தாறவா?

"ஏன் நாலாவது ஆளை விட்டு.." என்ற அன்புமல்லி திகைத்தார். ரகுவைக் காணவில்லை. "சிங்காரம்.. சங்கத்துல பேய் ஆவி எதுனா உலாத்துதா?"

"தெரியாதய்யா.. ஏன்?"

"ஒண்ணுமில்லே. சரி, நீ இவங்களுக்கு எதுனா கொண்டா. எனக்கெதுவும் வேண்டாம்".

சிங்காரம் விலகியதும், ஜே நேரே விஷயத்துக்கு வந்தான். "அங்கிள்.. மைதிலி எங்க ரெண்டு பேரையும் காதலிக்கிறான்றதை நாங்களே இங்க வந்தப்பிறகு தான் புரிஞ்சுக்கிட்டோம்"

"அது மட்டுமில்லேபா. உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்றா. இல்லின்னா உயிரை விடறதா சொல்லியிருக்கா"

"என்ன அங்கிள் இது.. நீங்க எடுத்து சொல்ல வேணாமா? ஒரு வேளை எங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணத் தெரியாம தவிக்கிறாளோ என்னவோ?"

அன்புமல்லிக்கு ஜேயின் பேச்சு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை வயதானதும் முதிர்ச்சி வந்துவிட்டதோ? வியப்புடன் ஜேயைப் பார்த்தார்.

"நீங்க குடும்ப நண்பர்ன்றதால அவளை அரை லூசுனு சொல்ல முடியுமா? பாவம், அவ என்ன செய்வா?" என்று ஜே முடிக்க, அன்புமல்லியின் வியப்பும் மறைந்தது.

"இதப் பாருங்க அங்கிள்.." என்றான் வாசு. "..எனக்கு வாய் வலிக்குது. அதனால விஷயத்தை சுருக்கமா சொல்லிடுறேன். நீங்க என்னைத்தான் மைத்துக்குக் கட்டி வைக்கணும். இல்லின்னா விஷயம் விபரீதமாயிடும். உங்களை நான் சும்மா விடமாட்டேன்"

"என்னப்பா இது.. நாம ஒரு முடிவுக்கு ஒத்துக்கிட்டுத் தானே பேச வந்தோம்?" என்றான் ஜே.

"இப்பவும் அதான் சொல்றேன். இவர் யாரை செலக்ட் செய்யுறாரோ அவங்களே மைத்தைக் கல்யாணம் செய்துக்கட்டும்னு ஒத்துக்கிட்டேன். ஆனா இவரை சும்மா விடுறதா நான் ஒத்துக்கலியேபா? அன்பங்கிள், என்னை செலக்ட் செய்யலின்னா உங்களுக்கு நடக்கிறதே வேறே. வாய் வீங்கியிருக்குதுனு பாக்காதீங்க, நான் எப்பவுமே அதிகமா பேசமாட்டேன். எல்லாம் செயல் தான். ஒழுங்கா என்னை செலக்ட் செஞ்சு உங்க உடம்பைத் தேத்திக்குங்க.. ஏற்கனவே வாயு உபத்திரவம்னு அலையுறீங்க.. வயிறே இல்லாமப் போயிடும்" என்றான் வாசு.

பழைய நினைவுகளைக் குத்திக் கிளறியவுடன் அன்புமல்லி காற்றிழந்த பலூனானார்.

"ஓகே.. நீ இப்படிச் சொல்றதுனால நானும் சொல்லிடறேன். அன்பங்கிள், நீங்க என்னை செலக்ட் செய்யலின்னா இவன் கிட்டே அடிவாங்குறதுக்குக் கூட உங்க உடம்பு தேறாது, புரியுதா? போற வயசுல ஒழுங்கா ஒரு முடிவெடுத்துட்டுப் போங்க" என்றான் ஜே.

"ஏம்பா.. நான் போவணும்னே தீர்மானிச்சுட்டியா?"

"பின்னே என்ன அங்கிள்? உங்கள மாதிரி ஆளுங்களால எத்தனை லொள்ளு பாருங்க. ஏதோ காதலிச்சமானு இல்லாம, உங்களைப் போய் மீடியேட் பண்ணச் சொல்லியிருக்கா பாருங்க. அங்கிள், உங்களை மாதிரி ஆளுங்க உலகத்துல இருந்தா முறையான காதலுக்கு அது நல்லதா, நீங்களே சொல்லுங்க. எங்கனா ஓடி சாமியாராவாம இப்படி காதலுக்கும் காதலருக்கும் கஷ்டம் கொடுக்குறீங்களே? நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க அங்கிள்"

"என்ன செய்றீங்க அங்கிள்?"

"யோசிக்கிறேன்" என்ற அன்புமல்லி, "ஏம்பா வாசு.. ஒரு பேச்சுக்கு உன்னை செலக்ட் செய்யுறேன்னு வச்சுக்க. அப்ப இந்த ஜே என்னை அடிக்க வராம பாத்துக்குவியா?" என்றார்.

"அதெப்படி அங்கிள் முடியும்? உங்களுக்கும் ஜேக்கும் நடுவுல நான் தலையிடுறது நியாயமா? ஆனா ஜேகிட்டே அடி வாங்கி உங்களுக்கு கை கால் உடைஞ்சிருச்சுனு வைங்க, உங்களுக்கு சீக்கிரம் குணமாகணும்னு நானும் மைத்தும் நிச்சயமா பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்குறோம் அங்கிள்.. கவலைப்படாதீங்க"

"அதானே.." என்ற அன்புமல்லி ஜேயைப் பார்த்தார். "நீ எப்படிப்பா?"

"என்ன இப்படிக் கேக்குறீங்க? தேங்காய் உடைக்கிறவனா நானு? எத்தனை வருசமா எங்க குடும்பத்துல பழகியிருக்கீங்க? என்ன அங்கிள் நீங்க.. இந்த வாசு உங்களைப் போட்டுத் தள்ளினா நான் சும்மா பாத்துட்டிருக்க முடியுமா? தர்ம அடி கொடுக்க இப்பல்லாம் சான்சே கிடைக்குறதில்லே அங்கிள். அதனால நானும் அவனோட சேர்ந்து உங்களை ரெண்டு தட்டு தட்டுறேன் அங்கிள், ப்லீஸ்.. கூடாதுனு மட்டும் சொல்லிடாதீங்க.. நல்ல அங்கிள், செல்ல அங்கிள்.."

"பலே, பலே!" என்ற அன்புமல்லி அமைதியானார். மைத்தைச் சபித்தார்.

இரண்டு தட்டுக்களில் உருளைக்கிழங்கு பஜ்ஜி கொண்டு வைத்தான் சிங்காரம். "சாப்பிடுங்க தம்பி.. சூடா இருக்கு பாருங்க. இந்தாங்க தக்காளி சட்னியோட தூக்கலா இருக்கும் பாருங்க" என்றான்.

பஜ்ஜியும் சட்னியும் காலியான வேகத்தைப் பார்த்து அதிர்ந்தார் அன்புமல்லி. "பஜ்ஜி சாப்பிடுற ஒலிம்பிக்ஸ் எதுனா இருக்கா சிங்காரம்?" என்றார் மெதுவாக.

"ஓகே அங்கிள். அப்ப நான் வரேன். சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என்றான் வாசு.

"எதுக்கும் ஆம்புலன்ஸ் நம்பர் ரெடியா வச்சுக்குங்க அங்கிள், வரட்டா?" என்றான் ஜே. சிங்காரத்தைப் பார்த்து, "பஜ்ஜி சூபர். அங்கிள் கிட்டயே பில் குடுத்துருங்க" என்றான்.

"ஆகட்டும் தம்பி" என்று சிங்காரம் சொல்லி முடிக்குமுன் இருவரும் விலகினர்.

    அன்புமல்லி சோகமாக இருந்தார். "சிங்காரம்.. ஒரு விஸ்கி கொண்டாப்பா".

"இதோ கொண்டாறேன் ஐயா" என்று சிங்காரம் கொடுத்த விஸ்கியை ஒரே வாயில் விழுங்கிய அன்புமல்லி, "சிங்காரம்.. உனக்குப் பெண் குழந்தை உண்டா?" என்றார்.

"இல்லிங்க ஐயா"

"பெத்துக்கிட்டா சின்ன வயசுலந்தே அடிச்சு வளக்கணும், மறந்துடாதே"

"ஆவட்டும் ஐயா"

"உன் பெண்டாட்டி என்ன சொன்னாலும் கேக்காதே"

"அவசியம் இல்லிங்கய்யா. எனக்கு கல்யாணம் ஆவலிங்க"

"ஏம்பா? எதுனா காதல் தோல்வியா?"

"ஆமாய்யா.. ஒருத்தியை உயிருக்குயிரா காதலிச்சேன்.."

"அவ உன்னைக் காதலிக்கலியா?"

"அவளும் என்னை உயிரை விட மேலா காதலிச்சா.."

"பின்னே.. பெத்தவங்களுக்குப் பிடிக்கலியா?"

"இல்லய்யா.. அவ புருசனுக்குப் பிடிக்கலே" என்றபடி சிங்காரம் டேபிளைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். "நீங்க ஏன் சோகமா இருக்கீங்க?"

"இந்த உடம்பைக் கடைசியாப் பாத்துக்க சிங்காரம். பாத்துக்கிட்டியா?"

"சரிங்கய்யா"

"இனிமே இப்படி முழு உடம்பா.. கை கால் முகம் ஒடம்போட ஒட்டி இங்கே வரமுடியுமானு தெரியலப்பா" என்ற அன்புமல்லி, நடந்ததைச் சொன்னார்.

"அட, இதுக்கா இப்படி கலங்குறீங்க? அந்தப் பொண்ணுக்கு போன் செஞ்சு பெசன்ட் நகர் பீச்சுக்கு இன்னும் அரை மணி நேரத்துல வரச்சொல்லுங்க. அஷ்டலச்சுமி கோவிலாண்ட வரச்சொல்லுங்க. அந்தப் பசங்களை அரை மணி வித்தியாசத்துல தனித்தனியா வரச்சொல்லும்படி சொல்லுங்க. மிச்சத்தை.." என்ற சிங்காரத்தின் பேச்சை

"..நாங்க பாத்துக்குறோம்" என்று முடித்தான் ரகு.

திடுக்கிட்டு அரையடி உயரம் துள்ளிக் குதித்தார் அன்புமல்லி. "அட, ஆவிமனுசா! நீ எப்போ வந்தே?"

"நீங்க விஸ்கி கொணாரச் சொன்னப்பவே வந்துட்டேன் சார்"

"எங்கே உன் காலைக் காட்டு.. நீ பிசாசானு முதல்ல தெரியணும்பா"

"சிங்காரம் சொன்னாப்புல உடனே மை டியர் மைத்துக்குப் போன் செஞ்சு சொல்லுங்க சார்!"

மைத்துக்கு போன் செய்து விவரங்களைச் சொன்னார் அன்புமல்லி. "ஏம்பா.. நீங்க வேறே எதுனா வம்புல மாட்டிவிடப் போறீங்கப்பா.."

"பீச்சுக்குப் போகலாம், வாங்க சிங்காரம்" என்றான் ரகு.

"ஏம்பா.. நான் வர வேணாவா?" என்றார் அன்புமல்லி.

"வேணாமய்யா. நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க பாத்துக்குறோம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுரும் ஐயா, வாங்க தம்பி" என்றான் சிங்காரம்.


வளரும் >>

19 கருத்துகள்:

  1. தினேஷ்குமாருனு பேரு வச்சவன் தினசரி சோறு வச்சானாய்யா? விரதம் கிடந்த நாய் மாதிரி இருக்குது..

    வித்தியாசமான கதை !!!

    பதிலளிநீக்கு
  2. மேடை,விசில் ஒலி, ஏற்றி இறக்கும் விசிறி மடிப்பு ஸ்க்ரீன் சில்க் துணி, லைட் லைட்டிங் இத்தனையும் இல்லாவிட்டாலும் நகைச்சுவை நாடகம் பார்க்கிற உணர்வு இழக்காமல் நீடித்தது. நகை என்றால் குபீர் ரகம் இல்லை; ஆழ்ந்து அமைதியாக, இயல்பாய் இதழ்க்கடை விரிந்து பூத்து...

    பதிலளிநீக்கு

  3. எழுத்து நடை , நகைச்சுவை எல்லாம் ரசிக்க வைக்கிறது. இருந்தாலும் ஒரு பெண் இருவரையும்.........!

    பதிலளிநீக்கு
  4. செம இன்ட்ரஸ்டிங்... தொடருங்க துரை

    பதிலளிநீக்கு
  5. நேரில் நாம் பேசிக்கொள்ளும் வாத்ஸல்யம் கிடைக்கிறது.

    சகட்டுமேனிக்கு சிரிக்கமுடியுது.

    கலக்குங்க அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாஅக்டோபர் 21, 2012

    கடைசி வரிகளைத்தான் முதலில் படித்தேன். சஸ்பென்ஸ் இன்னும் விடுபடலைன்னு தெரிஞ்சுது. அப்பறமாதான் கதையை நிதானமா படிச்சேன்.
    தொடர்ந்து நகைச்சுவை இழையோட, சுவாரசியமாக தொடர்கிறது.
    //தர்ம அடி கொடுக்க இப்பல்லாம் சான்சே கிடைக்குறதில்லே அங்கிள். அதனால நானும்......// :))) ரொம்ப என்ஜாய் பண்ணின வரிகள்.

    ஜீவி அவர்கள் கமெண்ட் அழகா இருக்கு.


    பதிலளிநீக்கு
  7. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாய் ஒரு கதை....! (கதைதானே?!)

    பதிலளிநீக்கு
  8. எப்படித்தான் உங்களால் இப்படி இயல்பாகவும் மெலிதான நகைச்சுவை இழையோடவும் அறிவு பூர்வமாயும் எழுதமுடிகிறதோ? பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்குது. அருமையா எழுதறீங்க. (நிறையப் பொறாமையோடு சொல்றேன்.) கண்ணு, காது, மூக்குனு புகை வருது. :)))))

    ஒரே பெண் இருவரைக் காதலிக்கும் இந்தக் கருவை வைச்சு கோபல்ல கிராமங்களில் படிச்ச நினைவு இருக்கு. கி.ராஜநாராயணனைப் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். அருமையா எழுதி இருப்பார்.

    ஜீவி சார் சொல்றாப்போல் மேடை நாடகமாப் போடலாம். அன்பு மல்லி காரக்டருக்கு யார் பொருத்தம்னு கூட யோசிச்சு வைச்சுட்டேன்.:))))

    பதிலளிநீக்கு
  10. அப்பதுரை அவர்களே! "மைத் மை டியர்" முதல் பகுதி வந்தவுடனேயே எழுத நினைத்தேன். அடுத்ததைப் பார்த்தபிறகு எழுதலாம் என்று தள்ளிப் போட்டேன்.உங்கள் எழுத்தில உள்ள modernity யும் freshness ம் சுஜதவிடம் கூட இல்லாதது. அற்புதமான craftman ship. சுஜாதாவின் தோளில் ஏறி பார்க்கிறிர்கள். அதனால் பார்வை தீர்க்கமாகவும் வீச்சோடும் உள்ளது.அதேசமயம் நீங்கள் உங்களை ஒரு குடுவைக்குள் அடக்கிக் கோள்கிறிர்களோ என்று ஐயம் எனக்கு உண்டு. அன்பு மல்லி,அசுவத்தாமன், விபரீதக்கதைகள் என்று போவானேன்.நசிக்கேத வேண்பாவை எழுதிய கரங்கள்.இன்னும் கூடுதல் உயரத்திற்கு போக முடியும்.போக வேன்டும்.இது விமரிசனமல்ல! Advice ம் அல்ல.என் ஆசை!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாஅக்டோபர் 25, 2012

    //நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க பாத்துக்குறோம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுரும் ஐயா//

    தக்காளி, இதத்தான் "ஐயாவுக்கு வாழ்க்கையிலே ஒரு திருப்பம் காத்திருக்குனு" சொன்னானா, கைல கிடைசான்...

    பதிலளிநீக்கு
  12. அப்பா... அப்பப்பா.. முடியல.

    இந்தப் பேய்க் (கட்டு)கதையெல்லாம் செட்டா உங்களால்தான் நகைச்சுவையோடு எழுத முடிகிறது.

    இருந்தாலும் ஒரு மனுசன் பல்லில்லாத ஜீவனாய் அடிபட்டுக் கிடக்கும்போது வாயில்லா ஜீவனுக்காக கவலைப் படுவது... வாய் விட்டு சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  13. ha.....haa.... Amazing.....

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  14. காஷ்யபன் அய்யா ... நசிகேத வெண்பா -- எழுதிய கைகள் அதே பாணியில் எழுதுவது தான் குடுவைக்குள் அடங்கிக் கொள்வது.
    அப்பாத்துரையின் versatality க்கு உதாரணம் இந்தக் கதைகள்.

    கலக்குறீங்க அப்பாஜி

    பதிலளிநீக்கு
  15. //"ஏன் அடிக்கடி பேர் மாத்துறான்?" //
    சட்டுனு சிரிப்பு வருது. welcome அன்புமல்லி.

    பதிலளிநீக்கு
  16. தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    சிறுகதைகளின் சக்கரவர்த்தி என்று நான் p.g.wodehouseஐக் கருதுகிறேன். (வழிபடுகிறேன் ?) 'இவன் அவளைக் காதலித்தான்' என்ற சாதாரணக் கருவை பத்து பக்கங்களுக்கு இழுத்துச் சுவையாக எழுதியவர் - அதுவும் நகைச்சுவையை மட்டுமே நம்பி எழுதியவர் - அவருக்கு முன்னும் இல்லை, பின்னும் இன்னும் வரவில்லை. நாற்பது வருடங்கள் போல் இவர் படைப்புகளைப் படித்து வருகிறேன். இன்னும் அலுக்கவில்லை. சிவகுமாரன் சொல்வது போல் 'புறத்தை மறக்கடிக்கும்' சிரிப்பு இவர் கதைகளில் புதையலாய்க் கிடைக்கும். வாழ்வின் சோகங்களையும் சோர்வுகளையும் மறக்கடிக்கும் அலுப்பு மருந்து pgw - அன்றைக்கும், இன்றைக்கும், hopefully என்றைக்கும்.

    நிறைய பேர் எழுத்தை நேசிக்கிறேன். ஆனால் இன்னாரைப் போல் எழுதவேண்டும் என்று நான் ஆசைப்பட்டது உண்டென்றால் அது pgwஐ மட்டுமே.

    pgw ரசித்தவர்கள் அன்புமல்லி கதைகளைப் படித்த உடனேயே இவை pgw பாணியை வெட்கமில்லாமல் காபி அடிப்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். பாணி மட்டுமல்ல, சில வரிகளைக் கூட அப்பட்டமாகச் சுட்டுத் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

    அன்புமல்லி பாத்திரப்பெயர் கூட pgwக்கு என் அன்பஞ்சலி என்பது வேர்கடலைச் சங்க அறிமுகத்தைப் படித்தால் தெரியும்.

    தொடர்ந்து படிப்பதற்கு நன்றி. அடுத்தப் பதிவில் கதை நிறைவுறும் - எழுதி வைத்ததைத் திருத்த நேரம் எடுக்கவில்லை.

    (ஹிஹி.. பத்துப் பதினைந்து அன்புமல்லி கதைகள் சுருக்கமாக எழுதி வைத்திருக்கிறேன். உஷார்!)

    பதிலளிநீக்கு
  17. காஸ்யபனின் பின்னூட்டம் என்னை நெகிழ வைத்தது என்றால் உங்கள் பின்னூட்டம் என்னை ஏறக்குறைய அழச் செய்துவிட்டது சிவகுமாரன்.

    பதிவர் போகன் ஒருமுறை சொல்லியிருந்தார், வாழ்வின் அலாதிச் சோர்வைப் போக்க வழி தெரியாமல் எழுதுவதாக. அதை அடிக்கடி உணர்கிறேன். அடிபட்டு விழுந்தால் அன்புமல்லியோ அசுவத்தாமனோ தான் துணைக்கு வருகிறார்கள். அன்புமல்லி அசுவத்தாமன் கதைகள் எனக்கு ஒரு காலயந்திரம் போல. பரிமாண எந்திரம் போல. சட்டென்று புறத்தை மறந்து எங்கேயோ ஏதோ ஒரு உலகத்துக்கு ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு பரிமாணத்துக்கு என்னை எடுத்துப் போகும் எழுத்து எந்திரம். படிக்கும் சிலருக்கும் அப்படி இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அப்பாஜி.எனக்கொரு கெட்ட பழக்கம்.[சில சமயம் நல்ல பழக்கமாகிவிடும்!]பின்னிரவு சட்டென எழும் வேளைகளில் எனது நூலகத்தில்,கிளி மூக்கால் சீட்டு எடுப்பதுபோல் ஏதாவது நூலை எடுத்து வாசிப்பேன்.அது நல்ல நூல் என்றால் அன்றைக்கு நரிமுகம்.இல்லை எனில் பூனைக் குறுக்கே போனதன் பலன்.இந்தக் கிளிச்சீட்டு வைபவத்தில்,அண்மைக் காலத்தில் இணையமும் நவீனமாக இணைந்து கொண்டு விட்டது.இன்று அதிகாலை 3 மணிக்கு எழுந்து என் விரல்மூக்கு கிளிக்கியது உங்கள் 3ஆம் சுழி.இது நரிமுகம்தான் போங்கள்!அன்புமல்லியின் உள்ளீடு வழமைச் சினிமாவின் முக்கோணக் காதல் என்றாலும் அதை தெரித்து விழும் உரையாடல் வழி நீங்கள் சொல்லியிருப்பதில் ஒரு தேர்ந்த கதைசொல்லியின் கைப்பக்குவம் மிளிர்கிறது.காஷ்யபன் கூறியது போல் இதில் சுஜாதாவின் அங்கதச் சாயலும் தெரிகிறது.சுஜாதாவுக்கு அதை ஸ்பான்ஸர் செய்த புண்ணியவான் பி.ஜி.டபுள்யூவோ என்ற சந்தேகமும் எழுகிறது.பரவாயில்லை படைப்பு என்பதே ஒன்றிலிருந்து இன்னொன்றுதானே.அதை காப்பி என்ற வார்த்தையால் நாம் கொச்சைப் படுத்த வேண்டாம்.நேற்றிரவுதான் இவ்வார விகடனில் ஆத்மார்த்தியின் சந்தானத்தின் மாடிவீடு சிறுகதை படித்துவிட்டு,முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்.அங்கதச் சுவை வகை எழுத அவ்வளவாக இன்று ஆளில்லை ஆத்மார்த்தி.,தொடந்து எழுதுங்கள் என்று.அட அருமையான இன்னொரு அங்கதத் தூவலனாக நீங்கள்.ஆம்!எவ்வளவு ஜாம்பவனான எழுத்தாளனையும் அங்கதம் என்பது குடைசாய்த்துவிடும் அபாயம் நிரம்பியது.ஆனால் அந்த நகைச்சுவை வில்வித்தை உங்கள் தூவலுக்கு அநாயசமாகியிருக்கிறது அப்பாஜி.பட்டையைக் கிளப்புங்கள்!ஒரு சிறு பின்குறிப்பு.இதே மாதிரி ஒரு காதல் முக்கோணத்தை சீரியசாக வைத்து ஒரு திரைக்கதையை எழுதி வைத்திருக்கிறேன் நான்.அது திரைப்படமாக உருவாகும்போது நீங்களும் மெருகேற்றல் டிஸ்கஷனில் கலந்து கொள்ள அழைக்கப்படுவீர்கள்!இடைவேளை விட்டுப் படம் தொடரப்போகும் ஆவலில் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்....நேசமிகு எஸ்.ராஜகுமாரன் 28-102012 - சிற்றஞ்சிறுகாலைப் பொழுது.

    பதிலளிநீக்கு
  19. சிரிச்சுக்கிட்டேத்தான் படிச்சேன் ப்ரோ. காஸ்யபன் சார் மற்றும் சிவகுமாரன் பின்னூட்டம் படிச்சதும் சீரியசாகிட்டேன்.

    நேற்று உங்களிடம் அலைபேசியில் சொன்னதை இன்று நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

    நசிகேத வெண்பாவின் தரத்தில் மீண்டும் ஒரு சுற்று வரவேண்டிய வேளை வந்துவிட்டது. நீங்களாய்க் குதிக்கிறீர்களா,இல்லை தள்ளி விடவா?

    பதிலளிநீக்கு