2011/06/25

யுக புருஷன்

சிறுகதை


    னைவியும் மக்களும் இந்நேரம் வந்திருக்க வேண்டும். தாமதத்தின் காரணம் புரியாமல் தவித்தான் முகுந்தன். அரசக் காவலர்கள் பிடித்திருப்பார்களோ? அல்லது.. அல்லது... பிராமணர்களிடம் சிக்கி விட்டார்களோ?

சந்திப்பதாகச் சொல்லி வைத்திருந்த ஆலமரத்தடியில் ஒதுங்கினான். உள் விழுதுகளுக்கிடையே குழி தோண்டியிருந்தான். இரவாகி விட்டால், விடியும் வரை குடும்பத்துடன் குழியில் பதுங்கிக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தான். எங்கே இன்னும் காணோம்? கரையத் தொடங்கிய நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். நெருக்கமாய் விழுதுகள். ஒரு விழுதைப் பிடித்து மேலேறினான். உயரமான இடத்தில் பக்கத்து விழுதோடு இணைந்திருந்த துணிப்பையைப் பார்த்து வியந்தான். அம்புறாத் துணி. பையுள் நிறைய அரசமுத்திரைப் பொற்காசுகளும், இரண்டு தங்கப்பிடி வாட்களும் இருந்தன. அப்படியே விட்டு, விழுதைப் பிடித்தபடிச் சுற்றிலும் நோட்டமிட்டான்.

மாலை மான்குட்டியை விழுங்கத் தொடங்கியிருந்தது இரவு மலைப்பாம்பு. கூவிக் கொண்டும் அலறிக் கொண்டும் கூடு தேடிப் பறந்தது புள்ளினம். எதிர் விழுதில் தலைகீழாகத் தொங்கின சில வௌவால் குஞ்சுகள். புழுதிப் படர்ந்தப் புதர்வெளிகளில் பதுங்கிப் பதுங்கி ஓடிய முயல்களைப் பிடிக்க, சிறு நரிகள் துரத்தின. சற்றுத் தொலைவில் ஒரு முயல்குட்டியைப் பிடித்துவிட்டச் சிறு நரி, குதூகலத்தில் ஊளையிட்டது. 'பாரம்மா, பார், என் முதல் வேட்டை' என்று பின்வந்தத் தாய் நரியிடம் பெருமை பேசியது. பிடிபட்ட முயலுக்காக வருந்திய முகுந்தன், திடுக்கிட்டான். பதுங்கி வந்த ஒரு ஓனாய், தாய் நரியை தாவிக் கவ்விக் கொன்றது. முயலைத் தொலைத்தச் சிறு நரி, தாயையும் மறந்து அலறி மறைந்தது. இறந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடிய ஓனாய் சிலையாய் நின்றது. எதிரே இரண்டு புலிகள். முகுந்தன் நடுங்கினான். விழுதைக் கவனமாகப் பிடித்துக் கொண்டான். புலிகளைப் பார்த்த ஒனாய், தான் தனியாக இருப்பது புரிந்தோ என்னவோ, இரையைத் துறந்து ஓடியது. துரத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல் தயங்கிய புலிகள், அப்பொழுது இறந்த நரியின் இரத்தம் கசியும் இரைச்சியை முகர்ந்தவுடன், ஓனாயை மறந்தன. நரியிரைச்சியை உண்ணத் தயாரான புலிகள், பெரும் ஓசை கேட்டுத் தயங்கின. முகுந்தனும் நடுங்கினான். சிங்கத்தின் கர்ஜனை. 'யாரடா, என் காட்டில் என் உணவை எனக்குத் தெரியாமல் உண்பது?' என்பது போல், வானைப் பிளக்கும் கர்ஜனை. பசி வந்திடப் பத்தும் பறக்க விட்ட புலிகள், 'நாம் இருவர், சிங்கம் ஒருவன். ஒரு கை பார்த்து விடலாம்' என்பது போல் பதிலுக்கு உறுமின. உறுமல்கள் உரசினால் தீப்பொறி தோன்றுமா? முகுந்தனுக்குக் குழம்பியது. விழுதின் பத்திரத்தில் கண்களைத் தொலைவில் தீர்க்கப்படுத்தினான். சிங்கத்தின் கர்ஜனை இன்னும் அதிகமானது. கால்களைத் தரையில் ஊன்றி மண்ணையும் தூசியையும் கிளப்பியது. புலிகளோ, உறுமலோடு நிற்காமல் சிறிது இடம்வலமாய்ப் பாய்ந்து காட்டின. தான் இருந்த இடத்தை விட்டு நகராமல் வாலைச் சுழற்றி இன்னும் கோரமாகக் கர்ஜித்தது சிங்கம். காட்டுச் சட்டம். கர்ஜனை வென்றது. புலிகள் வாலை முடக்கி ஓடி மறைந்தன. சிங்கம் ஒரே தாவலில், நரியிரைச்சியைக் குதறியது. அடுத்த கணம், அம்படி பட்டுச் சுருண்டது. வலியோடு கர்ஜனை செய்து விட்டு இறந்தது. சற்று தொலைவில் இன்னொரு மரத்தின் பின் பதுங்கியிருந்த ஒரு வேடன் வெளியே வந்து, விழுந்து கிடந்த சிங்கத்தை நோக்கி நடந்தான். மானிடச் சட்டம்.

முகுந்தன் திகைத்தான். நெஞ்சு துடிக்க மறக்கும் போலிருந்தது. மனைவி மக்களுடன் இந்தக் காட்டில் எப்படி இரவைக் கழிக்கப் போகிறேன்? எப்படி இந்நிலைக்கு ஆளானேன்? கண்களை ஒரு கணம் மூடிக் கொண்டான்.

    "ஏனம்மா, என்னை அவர்களுடன் வேதம் ஓதவும் வித்தை கற்கவும் சேர்க்க மாட்டார்களா? ஒதுக்கி விட்டார்களே?" என வருந்தியவனைக் கருணையோடு பார்த்தாள் சோதகி. கண்ணுக்கு அழகாக இருந்த தன் எட்டு வயது மகனுக்கு என்ன சொல்வது என்று தோன்றாமல், உண்மையைச் சொன்னாள்.

"இல்லையடா முகுந்தா. அவர்கள் உயர் குலத்தவர்கள். அவர்களோடு நீ பழக முடியாது. நாம் தனியாகவே இருக்க வேண்டும்"

"ஏன்? நான் பிராமணணுக்குப் பிறந்தவன் தானே? நீ தானே சொன்னாய் வாமதேவர் என் தந்தை என்று?"

"ஆமாம். ஆனால் நான், உன் தாய், பிராமண குலத்தில் பிறக்கவில்லை. சூத்திர குலத்தில் பிறந்ததனால் உனக்கு ஒரு பிராமண உரிமையும் கிடையாது"

"நான் அவர்களுடன் படிக்கவும் விளையாடவும் விரும்புகிறேன், அம்மா. அதற்குப் பெயர் உரிமையா?"

"ஆமாமடா. இனி நீ அங்கே போகாதே"

"ஏனம்மா, நான் அவர்களை விட எந்த விதத்திலாவது குறைவானவனா?"

"இல்லையடா, உனக்கென்ன குறை? நீ சிங்கம். தேவன். கடவுளின் அவதாரம். அவர்களுக்குத்தான் இன்னும் புரியவில்லை. புரியும் வரை அவர்களுடன் பழகாதே. சொன்னால் கேள்"

அவன் கேளாது ஓடினான். வேலியைத் தாண்டிக் குதித்து அங்கே விளையாடிக் கொண்டிருந்தப் பிராமண, சத்திரியக் குலப் பிள்ளைகளுடன் கலந்தான். "நானும் வருகிறேன், விளையாட. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றான்.

"போடா" என்று விரட்டினர்.

"என்னுடைய தந்தை வாமதேவர். நானும் பிராமணன் தான். நான் கடவுளின் அவதாரம் என்று கூட என் அம்மா சொன்னார்" என்று வாதாடினான்.

"பிராமணனா? கடவுளின் அவதாரமா?" என்று பிற பிள்ளைகள் கைகொட்டிச் சிரித்தனர். முகுந்தனை நோக்கித் துப்பினர். "நீ பன்றி மேய்க்கும் சூத்திரன். போ, போ" என்று அவனை விரட்டினர்.

"போக மாட்டேன். போக மாட்டேன், என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்"

"போகாவிட்டால் உன் கதி என்னவாகும் பார்!" என்று அந்தப் பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து முகுந்தனைக் கீழே தள்ளினர். அலறிக்கொண்டு வந்தத் தாயைக் கவனிக்காமல் கீழே கிடந்தவனை அடித்து உதைத்தனர். "பிராமணனுக்குப் பிறந்து விட்டால் பிராமணனாகி விடுவாயா?" என்று அவனை முறை போட்டுத் தாக்கினர். தாக்கப்படும் மகனைத் தாங்கத் துடித்தத் தாய், குல வேலியைத் தாண்ட முடியாமல் கூச்சலிட்டாள். உதவிக்கு யாரும் வரவில்லை.

அடித்து உதைத்து ஓய்ந்து போன பிள்ளைகள், "இந்தா, உன் பிள்ளையை எடுத்துக் கொண்டு போ" என்று வேலியைத் திறந்து அவளுக்கு வழி விட்டு விலகினர். "இனி பிராமணன் என்ற எண்ணமே வரக்கூடாது இவனுக்கு". துடித்துப் போன தாய், குருதிப் பரவிக் கிடந்த மகனைப் பார்த்தாள். பிள்ளைகளைப் பார்த்தாள். அவள் பார்வையில் ஊழியின் தீவிரம். சூத்திர சாபம் பலிக்குமா என நினைத்தாள். 'சீ!' எனக் கலைந்து மீண்டும் மகனைப் பார்த்தாள். நினைவிழந்த மகனை மடியேந்தி முகம் துடைத்தாள். மென்மையாகத் தட்டியெழுப்ப முனைந்தாள். கண்ணே, முகுந்தா, என்னைப் பாரடா! இறந்து விட்டானோ? என் மகன்... என் தலைவன்... என் இறைவன் இறந்து விட்டானோ?

    வாமதேவர் இறந்தபோது முகுந்தனுக்குப் பதினாறு வயது. சொத்தைப் பிள்ளைகளுக்குப் பிரித்தளித்த ஊர்ப் பஞ்சாயத்து, அவனுக்கும் அவன் தாய்க்கும் எதுவும் தரவில்லை. முகுந்தனுக்குக் கோபம் வரவில்லையென்றாலும் தன்னுடையத் தாயின் பொருட்டாவது நீதி கோரத் தோன்றியது. ஊர்ப் பஞ்சாயத்தை அழைத்து நியாயம் கேட்டான்.

"நானும் அவர் பெற்ற பிள்ளை, எனக்கு வாமதேவர் சொத்தில் உரிமை உண்டு. எனக்காக இல்லாவிட்டாலும் என் தாய்க்காக... அவள் வாழ்விற்காக... வாமதேவப் பிராமணருக்கு அவள் செய்த அனைத்துச் சேவைகளுக்காக... தியாகங்களுக்காக... அவள் செய்த எல்லையில்லாச் சேவைகளின் சின்னமாக, வரம்பு மீறியத் தியாகத்தின அடையாளமாக.. இதோ நான் இருக்கிறேன், அதற்காக...சொத்தில் பங்கு கொடுங்கள்"

பஞ்சாயத்தில் சிரித்தனர். ஒரு பிராமணர் சைகையால் அவையடக்கிப் பேசினார். மனுநீதிப்படி சொத்து பிரிக்கப்பட்டதென்றார். "பிராமணனுக்கு பிராமணப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு முழுச் சொத்திலும் பங்கு உண்டு. சத்திரியப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு அரைச் சொத்தில் பங்கு உண்டு. வைசியப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்குக் கால் சொத்தில் பங்கு உண்டு. சூத்திரப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு ஒன்றும் கிடையாது. பிராமணராகப் பார்த்து ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. அவர் தான் இறந்து விட்டாரே, உனக்கு ஒன்றும் கிடையாது. போ, போ" என்றார்.

மறுமொழி பேசாமல் நின்றவனைக் கேலி செய்தனர். பஞ்சாயத்துப் பிராமணர் தொடர்ந்தார். "இது மனு ஸ்ம்ருதி. மனுநீதியின் ஒன்பதாவது பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாகப்பிரிவினை நியமம். நாங்கள் புதிதாக எதுவும் சொல்லவில்லை. உனக்கு ஒன்றும் கிடையாது. நேரத்தை வீணாக்காமல் போய்ச்சேர்" என்று அவையைக் கலைத்தார்.

"நீங்கள் யார் நீதி சொல்வதற்கு?" என்றான் முகுந்தன், ஆத்திரத்துடன்.

"நானா? நான் இந்தப் பஞ்சாயத்தின் மூத்தப் பிராமணரில் ஒருவன். நாங்கள் நீதி சொல்லவே பிறந்தவர்கள். நான் ஒரு வேதம் படித்த பிராமணன். அதோ இருக்கிறாரே மூத்தவர், அவர் இரண்டு வேதங்களையும் படித்திருக்கிறார். உனக்கு இதெல்லாம் புரியாது. போ, போய் பிழைக்கும் வேலையைப் பார்" என்றார் பிராமணர்.

அவன் நகராமல் நின்றது, கூட்டத்துக்கு எரிச்சலூட்டியது. "அவனை அடித்து விரட்டுங்கள். மூத்தப் பிராமணரையா எதிர்த்துப் பேசுகிறான்?" என்றது கூட்டத்தில் ஒரு குரல்.

"அவனை விடுங்கள். அவனை இப்படிப் பேச வைத்திருக்கும் அவள் தாயை அடித்து நொறுக்குங்கள். பிள்ளையை வளர்க்கும் விதம் தெரியவில்லை? பிராமணரையா எதிர்த்துப் பேசுவது?" என்றது இன்னொரு குரல்.

எதிர்பாராமல் ஒரு சிறு கல் முகுந்தனின் தாய் முகத்தில் பட்டுக் கீறியது. தொடர்ந்து வந்த கல் மழையை, அவன் தன் தாயின் முன் நின்றுத் தடுத்தான். "வேண்டாம், என் தாயை விட்டு விடுங்கள். நான் போகிறேன். அவளுக்குப் புகலிடம் கொடுங்கள், ருதுவுக்கு ஒரு சேலை, வேளைக்கு ஒரு பிடி சோறு கொடுங்கள், அது போதும்" என்று கெஞ்சினான்.

"ஒன்றும் கிடையாது. சூத்திரக் கூட்டமே ஓடுங்கள்" என்று அவர்களை விரட்டினர். தாயை இழுத்துக் கொண்டு ஓடினான். ஓட ஓட விரட்டினர் ஊரார்.

    டி வந்தப் புது மனைவியைத் தடுத்து நிறுத்தினான் முகுந்தன். "என்ன, ஏன் பதறுகிறாய்?" என்றான்.

"குடி கெட்டது. பழைய பேரரசர் கொடுத்தக் காணி நிலைத்தைப் பிடுங்கிக் கொண்டு துரத்தி விட்டார்கள்."

"யார்?"

"புது அரசர். கேட்பாரில்லையா? நீங்கள் பிராமண குலத்தில் பிறந்தவர் தானே? அரசனிடம் முறையிட்டுப் பாருங்களேன்?"

"ஒரு பிராமணனின் வேட்கை தணியப் பிறந்தவன் என்பதோடு சரி, குல உரிமை எனக்கு ஒன்றுமில்லையே கண்ணே" என்று, அழுது கொண்டிருந்த மனைவியின் கண்ணீரைத் துடைத்தான். புதிய அரசனைப் பார்த்துப் பேச மனைவியோடு விரைந்தான்.

அவையில் அவமானம். சிற்றரசன் சிரித்தான். "பதரே!" என்றான். "உன் அரசன் குடும்பத்தோடு காட்டுக்குத் துரத்தப்பட்டது தெரியாதா? அவன் சொத்து எல்லாவற்றையுமே சூதாடித் தோற்று விட்டான். அவன் நாடு, இனி என் மாமன்னர் சொத்து. அவன் மண், இனி என் மாமன்னர் சொத்து. அவன் மக்கள், இனி என் மாமன்னர் சொத்து. என் மாமன்னருக்காக நான் அரசாளும் முறையில், இனி என் சொத்து. உனக்கு ஒரு தகுதியும் கிடையாது. ஓடு"

"அரசே, இவர் பிராமண குலத்தில் பிறந்தவர். இவருக்குத் தீங்கு செய்யாதீர்கள். நாங்கள் பிழைக்க வழி செய்து கொடுங்கள்", கெஞ்சினாள் மனைவி.

"நீ யார்? இவன் மனைவியா? இனி நீயும் எனக்குச் சொந்தம்" என்றான் அரசன். "இவளைப் பிடியுங்கள். என் மாமன்னன் செய்தது போல் துகிலுரிக்க ஆசைப் படுகிறேன். எவன் பொழிகிறான் இவளுக்கு ஆடை மழை என்று பார்ப்போம்" என்று எக்காளமிட்டான்.

"வேண்டாம், இவள் என் மனைவி" என முன் நின்றுக் காவலர்களைத் தடுத்தான் முகுந்தன். அரசன் காலில் விழுந்தான். "அரசே, இது முறையல்ல"

"என்ன முறை கண்டுவிட்டாய்? உன் பழைய அரசன், மனைவியை ஐவருடன் பகிர்ந்து கொள்ளவில்லையா? அவனை அரசன் என்று கொண்டாடினீர்களே? நான் மட்டும் என்ன கேட்டுவிட்டேன்? என்னுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாதா? நான்தானே உன் அரசன் இப்போது?"

"அரசே, இது கடவுளுக்கும் அடுக்காது, எங்களை விட்டுவிடுங்கள், நிலம் வேண்டாம். பிச்சை எடுத்தாவதுப் பிழைத்துக் கொள்கிறோம்"

"பிடியுங்கள் அவளை" என்று கட்டளையிட்டான் அரசன். அருகிலிருந்த ஆஸ்தான குருவிடம் "அரசனுக்கு உரிமை உண்டா இல்லையா? என்ன சொல்கிறீர்கள்?" என்றான்.

ஆஸ்தான குரு அவசரமாக, "ராஜா தெய்வ ரூபம். உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு" என்றார்.

அரசன் சிரித்தான். "பிராமணரே சொல்லி விட்டார். எனக்கு உரிமை உண்டு. நேற்றுப் பழுத்த மாங்கனி போல் இருக்கிறாள் உன் மனைவி. மன்னனுக்கு வழங்கி விடு. உடனே, உடனே" என்று எழுந்தான். காவலர்களை அழைத்து, "இவளை என் அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்றான்.

"வேண்டாம், விட்டுவிடுங்கள். இந்தப் பாவம் உங்களுக்கு வேண்டாம்" என்று அழுதாள் மனைவி.

"பாவமா? என்ன சொல்கிறாள் இவள் குலகுருவே?" என்று ஆஸ்தான குருவைப் பார்த்தான். பிறகு சிரித்தான். "நான் யார் தெரியுமா? அரசன். ராஜா. தெய்வரூபம். எனக்குப் பாவபுண்ணியமில்லை. இது ராஜநீதி" என்று அவையைக் கலைத்தான். முகுந்தனைப் பார்த்து, "உனக்கு நிலம் வேண்டுமா, அல்லது உன் மனைவி வேண்டுமா?" என்றான்.

"நிலமெல்லாம் வேண்டாம், அரசே. எதுவுமே வேண்டாம். நாங்கள் நாட்டை விட்டே ஓடி விடுகிறோம். என் மனைவியை விட்டுவிடுங்கள்", வெட்கம் விட்டுக் கெஞ்சினான்.

"பிழைத்தீர்கள். இவள் இன்றிரவு என்னுடன் இருக்கட்டும். நாளை வந்து அழைத்துக்கொள். இவனை அவையிலிருந்து எடுத்துச் செல்லுங்கள்" என்றான். மனைவியைக் காவலர்கள் கதறக் கதற அழைத்துச் சென்றது காதில் விழ, அவனை அவையிலிருந்து அகற்றினர். அரசனைக் கொலை செய்யத் தோன்றியது முகுந்தனுக்கு.

    "கொலை செய்தீர்களா? திருடினீர்களா?" அலைபாய்ந்தாள் முகுந்தனின் மனைவி.

"கண்ணே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் பிள்ளைகளும் மனைவியும் பசிக் கொடுமையில் வாடும் நிலையைப் பொறுக்க முடியவில்லை. இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லையே, என் தேனே!", இயலாமை பொங்க அழுதான். "ஆறு பொன்முடிகளைத் திருடினேன். எடுத்து உள்ளே வை. விடிந்ததும் தெற்கே எங்கேயாவது ஓடிவிடலாம்" என்றான்.

"பொன்முடிகளா? எப்படி எங்கே ஒளிப்பேன்?" என்று அஞ்சிய மனைவியை அமைதிப் படுத்தினான். "அன்பே, எனக்கொன்றும் தோன்றவில்லை. நாடெங்கும் கேடு தலை விரித்தாடுகிறது. குருட்சேத்திரப் போரில் இருதரப்பு மன்னர்களும் சேனைகளும் நாசமானதும், இங்கே அரசாளவோ நீதி பேசவோ எவருமில்லை. எங்கும் நாசம். சத்திரியர்கள் குலமே நாசமாகிவிட்டது. அவர்களுக்காகப் போராடிய அப்பாவிச் சூத்திரர்களும் பெரும்பாலும் அழிந்து விட்டார்கள். எஞ்சியிருப்பது பிராமணர்கள் மட்டுமே. வெற்றி பெற்ற ஐவரும் இன்னும் சோகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பழையபடி அரசாளப் போவதில்லை. இனி எங்கேயும் அராஜகம் தான். நாம் இங்கிருந்து தெற்கே ஓடிவிடலாம்"

"தெற்கா? அது எமனின் திசையாயிற்றே? பிராமணருக்குப் பிறந்த உங்களுக்கு தெற்கே ஏதாவது கேடு வந்து விட்டால்?"

"இப்போது மட்டும் என்ன உயர்ந்து விட்டது? பிராமணனுக்குப் பிறந்ததிலிருந்து படிப்பைப் தொலைத்தேன். இளமையைத் தொலைத்தேன். தாயைத் தொலைத்தேன். தாரத்தைச் சோரம் போக்கினேன். இனிப் பிள்ளைகளின் வாழ்வையும் தொலைக்க விரும்பவில்லை. அரசுக்குச் சொந்தமான தங்கத்தை எடுத்துச் சென்ற இரண்டு காவலர்களைக் கொன்று, இந்தப் பொன்முடிகளை எடுத்து வந்தேன். என்னை மன்னித்து விடு"

"கொலையா? பிராமணருக்குப் பிறந்த உங்களுக்கு இந்தப் பாவம் ஏன்?" அவள் ஆற்றாமையால் அழுதாள்.

அவன் தேற்றினான். "பாவமாவது புண்ணியமாவது? நான் பிராமணனில்லை. ஒரு பிராமணக் காமவெளிப்பாட்டின் அடையாளம், அவ்வளவுதான். கண்ணே, கேள். யாதவ குலமெல்லாம் அழிந்து விட்டதாம். கடவுள் என்று எல்லோரும் கொண்டாடிய கண்ணன் கூட இறந்து விட்டானாம். சூத்திர வேடனின் அம்புக்குப் பலியாகி விட்டானாம். அரசர்கள் துறவு பூண்டு விட்டார்கள். போரில் கலந்து கொள்ளாமல் தப்பித்தப் பிராமணர்கள், கண்ணனின் மரணத்துக்கும் அதனாலேற்பட்ட அரசத்துறவுக்கும் காரணமானதால் சூத்திரக் குலத்தையே எரிக்கத் துணிந்துவிட்டார்களாம். மூன்று திசைகளிலிருந்தும் பிராமணர்கள் கூடி வருகிறார்களாம். புது யுகம் வருகிறதாம். பெரிய பூகம்பம் ஒன்று எந்தக்கணமும் நிகழப்போகிறது என்று அரசவையிலும், மடங்களிலும், கோவில்களிலும் பேசுகிறார்கள். பலர் தெற்கே ஓடத் திட்டமிட்டிருக்கிறார்கள். நாமும் ஓடிவிடலாம். குழந்தைகளுடன் நீ ஊருக்கு வெளியே இருக்கும் ஆலமரத்தடிக்கு, அந்தி மயங்கும் நேரத்தில் வந்துவிடு. இன்றிரவு காட்டில் பதுங்கியிருப்போம். விடிந்ததும் பயணம்" என்று புறப்பட்டான்.

"சற்று பொறுங்கள், எங்கே போகிறீர்கள்?"

"நான் இங்கிருந்தால் உங்களுக்கு ஆபத்து. பொன்னைத் தொலைத்தவர்கள் என்னைத் தேடி வருமுன் நான் ஓட வேண்டும்" என்றவனை ஆறத்தழுவினாள். "பிள்ளைகளுடன் வருகிறேன் கண்ணாளா" என்று அவன் கண்களில் முத்தமிட்டாள்.

    ண்ணைத் திறந்தபோது, வேடன் சிங்கத்தை அறுத்து மூட்டை கட்டியிருந்தான். குழி வெட்டி, கழி நட்டு, தீ மூட்டி நரியிரைச்சியை வாட்டிக் கொண்டிருந்தான். சிதறிக்கிடந்த சிறு மாமிசத் துண்டங்களைப் புதருக்குள்ளிருந்தும் பூமிக்குள்ளிருந்தும் வந்தச் சிறு முயல்கள் தின்றன. முயலில் தொடங்கி முயலில் முடிந்த நிகழ்ச்சிகளை நினைத்து வியந்தான் முகுந்தன்.

தீப்பந்தங்களின் ஒளி தொலைவில் தெரிந்தது. கூச்சல், ஆரவாரம். ஆபத்தின் வாடை அறிந்த வேடன் இரைச்சியை அங்கேயே விட்டு ஓடினான். தீப்பந்தம் பிடித்து வந்த ஆட்கள், ஆலமரத்தருகே நின்றனர். முகுந்தன் விழுதுகளின் இடையில் ஒளிந்து கொண்டு பார்த்தான். வந்தவர்கள் தன் மனைவியையும் இரண்டு மக்களையும் கட்டி இழுத்து வருவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

"எங்கே உன் கணவன்? திருடன்?" என்று ஒருவன் அவன் மனைவியைச் சாட்டையால் அடித்துக் கேட்டான். மனைவியும் மக்களும் வீறிட்டலறியதும், முகுந்தனுக்கு நாடி நரம்பெல்லாம் துடித்தன. "எங்கே சூத்திரன்?" என்று இன்னொருவன் அவள் கன்னத்தில் அறைந்தான். முகுந்தனுக்கு வயிற்றில் குருதி கட்டியது. ஆற்றாமையால் தவித்தான். கோபம் பொங்கியது. 'வேண்டாம், சொல்லிவிடாதே' என்று கோழை போல் நினைத்தான்.

"இவளைக் கேட்டால் சொல்வாளா? குழந்தைகளில் ஒன்றைக் கொன்று நரிகளுக்குத் தீனி போடுவோம். அப்போது சொல்வாள்" என்றான் ஒருவன். "ஒழிந்தது ஒரு சூத்திரப் பிள்ளை" என்று சிலர் கூச்சலிட்டனர். அவளிடமிருந்து குழந்தைகளைப் பிடுங்கினர்.

"வேண்டாம், வேண்டாம்...அதோ, அந்த ஆலமரம். அங்கேதான் ஒளிந்திருக்கிறார் என் கணவர். என் குழந்தையை விட்டு விடுங்கள்.. ஐயா.. என் குழந்தைகளை விட்டு விடுங்கள்... உயிர்ப்பிச்சை.. உயிர்ப்பிச்சை.." என்று கதறியழுதாள் முகுந்தனின் மனைவி. குழந்தையின் முன்னால் கணவனும் பொருட்டில்லை தாய்க்கு. கணவனைக் காட்டிக் கொடுத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வில் அழுதாள். முகுந்தன் இருந்த திசை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள். 'என்னை மன்னித்து விடுங்கள். நான் கோழை' என அவள் மனதுள் வெம்பிக் கதறியதை முகுந்தனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

கூட்டத்தினர் தீப்பந்தங்களை உயர்த்தினர். முகுந்தன் இன்னும் நெருக்கமாக ஒளிந்து கொண்டான். தன்னைப் பார்த்து விட்டார்கள் என்று புரிந்தது.

"அதோ! கொலைகாரன்! பிடியுங்கள்" என்று ஆரவாரித்தபடி ஓடி வந்த கூட்டத்தைப் பார்த்தான். "கொல்லுங்கள், எரியுங்கள்" என்று கூச்சலிட்டபடி வந்தவர்களைப் பார்த்தான். தன் மனைவியையும் மக்களையும் மிதித்தபடி ஓடி வந்த வெறியர்களைப் பார்த்தான். தவித்தான். என் கண்ணே! கண்மணிகளே! முகுந்தனின் மனம் பதைத்தது. கூட்டத்திலிருந்து யாரோ விட்டெறிந்த தீப்பந்தம் ஒன்று அவனுக்கு அருகே வந்து கீழே விழுந்தது. மரத்தடிக்கு வந்துவிட்டார்கள். முகுந்தன் இன்னும் உயர ஏறத் தொடங்கினான். அம்புறாத் துணி! ஏதோ தோன்ற, அதிலிருந்த வாட்களை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பொற்காசுகளோடு மூட்டையைக் கழுத்தில் அணிந்தான். உயர ஏறினான். சிலர் மரத்தில் ஏறத் தயாரானார்கள். சிலர் கத்திகளையும் தீப்பந்தங்களையும் உயர வீசினார்கள். உயர ஏறிக்கொண்டே இருந்தான். "உயிரோடு கொளுத்துங்கள்" என்ற கூச்சல். உச்சத்துக்கு வந்து விட்டான். இனி ஏற முடியாது. வேறு வழியில்லாமல் உயரத்திலிருந்து கத்தினான். இரண்டு விழுதுகளில் இரண்டு கால்களையும் பின்னிக் கொண்டு, இரண்டு கைகளிலும் வாளேந்திக் கத்தினான். பொருளற்ற ஓசை.

தீப்பந்தங்களின் ஒளியாட்டத்தில் முகுந்தன் வானத்தையும் பூமியையும் அளந்து நிற்பது போல் இருந்தது. 'ஹே' என்று மறுபடி உயிரைப் பிழிந்துக் கத்தினான். அவன் குரல், சிங்கத்தின் கர்ஜனை போல் காதைப் பிளந்தது. கருகிக் கொண்டிருந்த இரைச்சியின் மணம் எங்கிருந்தோ வந்தக் காற்றில் கலந்து விபரீத உணர்வூட்டியது. காற்றில் விழுதுகள் அசைய, நிலையில்லாது முகுந்தன் இன்னும் சிலிர்த்து அலறினான். கழுத்திலிருந்த அம்புறாத்துணிக் கலைந்து விலகி பொற்காசுகள் பூமியில் பரந்து விழுந்தன.

நிமிர்ந்து பார்த்தக் கூட்டத்தினர், திகைத்தனர். தீப்பந்தங்களையும் ஆயுதங்களையும் எறிந்தனர். தரையில் விழுந்து வணங்கினர்.

56 கருத்துகள்:

  1. ஒரு தடவை படிச்சுட்டேன். இன்னும் ரெண்டு தடவை படிக்கணும் போலருக்கு.. அப்புறமா விரிவா கமேன்டறேன் அரசே! ;-))

    பதிலளிநீக்கு
  2. மாறுபட்ட அனுபவத்தில் மலர்ந்த சிறுகதை. நன்றாக இருந்தது. வாசித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. பெரும்காவியத்திலிருந்து கொய்து இக்கதையை அழகாக படைத்துள்ளீர்கள்..

    (சற்று நேரம் கழித்து அடுத்த பின்னூட்டம்)

    பதிலளிநீக்கு
  4. ஒருமுறை படிச்சேன்.வேற்றுமொழி இல்லைன்னாலும் கதை என்னமோ மாறி மாறிக் குழப்புது.பொறுமையாப் படிக்கணும் !

    பதிலளிநீக்கு
  5. அப்பதுரை அவர்களே! மாலை மானை இரவு மலைப்பாம்பு விழுங்கும் போதே Jungle law துலங்கிவிட்டது.முயல் ,நரி,ஓநாய்,புலிகள்,சிங்கம் என்ற காட்டில் வேட்டை மனிதனின் சட்டம் என்பது நல்ல juxtaposition.
    முகுந்தன் மர உச்சியில் தலைகீழாக தொங்க பொற்காசுகள் விழுகின்றன . A mystic start. பிராமணர்கள் அந்த காசைப் பொறுக்குவது Nature's lesson.
    அப்பாதுரை அவர்களே! உங்கள் எண்ணங்கள் ,தத்துவங்கள், சட்டங்கள் எல்லாவற்றையும் மீறி காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.நடத்துவதுதான் "யுகபுருஷனோ"! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  6. மூன்று முறைப் படித்தப் பின்னே புரிந்தது... வித்யாசமான சிந்தனை . அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட வகுப்பினர் செய்த அட்டூழியங்களையும் கோடிட்டுக் காட்டி உள்ளீர்கள் ..

    பதிலளிநீக்கு
  7. கொஞ்சம் நிறையவே வர்ண கால நடைமுறையை பற்றி எழுதிவிட்டு ''வல்லான் வகுத்ததே சட்டம் '' என முடித்திருந்தேன் .. அந்த பின்னூட்டம் கதையின் அழகை கெடுத்துவிடும் என்பதால் அனுப்பவில்லை ...

    பதிலளிநீக்கு
  8. தெளிந்த நடை! காட்டாட்சியை படிமமாக்கி துவக்கியது முதல் இறுதிவரை ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியவாறு நகரும் கதையோட்டம்... இயல்பான உரையாடல். சிறுபான்மை எதிர்கொள்ளும் கையறு நிலை...வர்ணபேதங்களை ஆட்டிப்படைக்கும் பொன்னின் வர்ணஜாலம்...

    நன்று அப்பாதுரை சார்! நன்று!!

    பதிலளிநீக்கு
  9. அற்புதம். கடைசி வரிகளின் காட்சி உருவகம் மிக அற்புதம்.

    பதிலளிநீக்கு
  10. ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ரசித்து படித்தேன். பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  11. நன்றி RVS, தமிழ் உதயம், பத்மநாபன், ஹேமா, kashyapan, எல் கே, மோகன்ஜி, ஸ்ரீராம், meenakshi, ...

    'பல தடவை படித்தாலும் புரியாமல் எழுதுவது எப்படி?' என்று ஒரு பயிற்சிமுகாம் சென்று வந்தேன். பரவாயில்லை, கொடுத்த காசு வீணாகவில்லை என்பது புரிந்தது.

    meenkashi, ரொம்ப பயமுறுத்துகிறீர்கள். நாளைய பதிவுக்கு இன்றே பின்னூட்டம் போடுவது ஒரு திகில் என்றால், நானே இப்போது தான் எழுதிமுடித்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பது பெருந்திகில். குறைந்தது ஆயிரம் மைல் தொலைவில் இருக்கிறீர்கள்... எப்டீ? ஒரு வேளை இதை வேறே யாராவது எழுதி விட்டார்களா? யார் எழுதியிருந்தாலும் பாராட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்.. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. kashyapan சார், excellent comment! nature's lesson என்பதைத் தெரியாமல் வர்ணாசிரமங்களை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறோமே?

    பதிலளிநீக்கு
  13. வல்லான் வகுத்ததே சட்டம் - நல்ல பார்வை பத்நாபன்.
    இந்தக் கதையின் கரு, பொழுது போகாமல் 'மனு ஸ்ம்ருதி' என்று இணையத்தில் கிடைத்ததைப் புரட்டிய போது உதித்தது.
    எளியோர்களும் கோழைகளும் பொதுவாக பெரும் புரட்சி ஏற்படக் காரணமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறிவுப் புரட்சியாகட்டும் சமூகப் புரட்சியாகட்டும் அதன் மையத்தில் தனிப்பட்ட அல்லது கூட்டுக் கோழைத்தனமோ, 'கையறு நிலை'யோ (அழகான வடிவம் மோகன்ஜி, நன்றி) காணப்படுகிறது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. //nature's lesson என்பதைத் தெரியாமல் வர்ணாசிரமங்களை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறோமே// இதை இதைத்தான் எனக்கே உரித்தான குழப்பமான மொழியில் பெரிதாக எழுதி அடித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  15. ( நினவுக்கு வந்தவரை எழுதி அடித்ததை மீண்டும் எடுத்து குழப்புகிறேன் )


    அந்தந்த சூழலுக்கான வர்ணம்..பாகுபாடு..நீதி அனைவராலும் விருப்பு வெறுப்பின்றி தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது...

    சூத்திரம் அறிந்து செயல்படுபவனை பிரம்மம் உணர்ந்து செயல்படுபவனும் சரி, வைசிய பணி மேற்கொண்டவனை சத்திரிய வழி வந்தவனை தொழில் கேவலப் படுத்தவிலலை..

    சூழல் மாறியது.. எல்லார்க்கும் பிரம்மம் பிடிபட ஆரம்பித்தது...
    சத்திரனிடம் பேராசை கூடியது..
    வைசியனின் நேர்மை முறிய ஆரம்பித்தது...சூத்திரங்கள் கடுமையாய் உணர ஆரம்பித்துவிட்டன.. துவேசம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது...

    துவேசம் மேலிட மேலிட இந்த கதைகள் குல இன அழுத்தங்கள் பெறப்பெற அவரவர்க்கு வசதியாய் கதைகள் திரும்ப ஆரம்பித்து விட்டது…. அடிதடி கூடி ஓயும் ஒரு நாள்...

    வல்லான் வகுத்ததே சட்டம் என முடிவதாக படுகிறது...

    பதிலளிநீக்கு
  16. //எனக்கே உரித்தான குழப்பமான மொழியில் பெரிதாக எழுதி அடித்துவிட்டேன்
    அடடா! ஏன்?

    பதிலளிநீக்கு
  17. இனம் குலம் எல்லாம் பரிணாமங்கள் என நினைக்கிறேன். சில சமயம் அதை மறந்து விட்டு இனத்தையும் குலத்தையும் பிடித்துக் கொண்டு செய்தியை மறந்து விடுகிறோம்.

    அம்பேத்கர் மனு ஸ்ம்ருதியை எரித்தார் என்று படித்திருக்கிறேன். அதனால் என்ன பயன் என்று அன்றைக்கும் தோன்றியது - கேட்ட போது தமிழாசிரியர் உடனே என்னை சாதி அடையாளம் கண்டு, 'பாப்பார பய தானே, இப்படித் தான் கேப்பே' என்று ஏதோ சொன்னாரே தவிர செய்தியின் தீவிரத்தையோ முறை/முறையின்மையையோ விளக்கவே இல்லை. அதுவரை நான் பாப்பாரப் பயலாக ஆசிரியருக்குத் தோன்றவே இல்லை. நம் ஆதர்சங்கள் நமக்கு சங்கடமாக மாறியது புரிந்தும், ஆதர்சங்களைப் பிடித்துக் கொண்டிருக்கையில் யாராவது கேள்வி கேட்டால் உடனே அடைக்கலம் தேடுகிறோம். வர்ணங்கள் அருமையான அடைக்கலம்.

    மனு மறைந்த ஆயிரம் ஆண்டுகளில் யார் எந்த வகை என்பதை யாரும் அறியவில்லை - அதற்குப் பின் சில ஆயிரம் வருடங்களில் கலப்போ கலப்பு! அதையும் மறந்து விட்டோம். மனு சொன்ன செய்தி மட்டம் மறையவில்லை - காரணம் நம் துவேசங்கள் (பத்மநாபன் சொன்னது போல்).

    senseஐ விட sensationalல் தான் யுகம் யுகமாகக் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம். தேர்தல் தோல்விக்குக் கூட ஜாதி மேல் பழி போடுகிறோம். இந்தக் கதையும் அப்படித் தான். sensational elements நீக்கிவிட்டால் ஒன்றுமே இல்லை.

    மாற்றம் வேண்டி மாற்றம் வருவதில்லை என்பார்கள், சரியென்று படுகிறது.

    பதிலளிநீக்கு
  18. //தேர்தல் தோல்விக்குக் கூட ஜாதி மேல் பழி போடுகிறோம்// அது உச்சக்கட்ட நகைச்சுவை....அப்பட்டமாக பகுத்தறிவு சாயம்வெளுத்தது,,,

    பதிலளிநீக்கு
  19. ஆம்..புலனோடு பரிணாமம் ஒய்ந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் ..அறிவு நிலையில் பரிணமிப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அந்த மெட்டபாலிசம் நடந்துகொண்டுதான் இருக்கிறது..

    ( நசியின் பொருளை கண்ணிற்கு நகர்த்துகிறோமோ )

    பதிலளிநீக்கு
  20. //ஹேமா கூறியது... ஒருமுறை படிச்சேன்.வேற்றுமொழி இல்லைன்னாலும் கதை என்னமோ மாறி மாறிக் குழப்புது.பொறுமையாப் படிக்கணும் !//

    Ditto.

    பதிலளிநீக்கு
  21. வருக சாய். பொறுமையா படிச்சாலும் புரியற அளவுக்கு ஒண்ணுமில்லே கதையிலே :)

    பதிலளிநீக்கு
  22. மேலே இருந்து பொற்காசுகள் விழுகுதே - ஒரு வேளை ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தொஸ்த்திரம் வகையா ? முகுந்தன் காசு கொடுத்ததால் அடுத்த கடவுள் அப்படியா ? அப்படிதானே வழிவழியா சொல்லி வருகின்றோம். நல்லது நடந்தால் கடவுள். இல்லையேல் கர்மா ? முயற்ச்சிக்கும் / உழைப்புக்கும் என்றாவது சொல்லரோமா ?

    என்னவோ போங்க. காட்டில் மிருகங்களின் சைக்கிள் ரியாக்சன் சூப்பர். மனதை அங்கே கொண்டு சென்றது.

    புரிஞ்சவங்க புரியாதவங்களுக்கு சொல்லுங்கப்பு ! மண்டை குடையதுல்லே

    பதிலளிநீக்கு
  23. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

    பதிலளிநீக்கு
  24. வர்ணாசிரமம் தர்மமா? அதர்மமா??

    பதிலளிநீக்கு
  25. ஒரே தடவை ஊன்றி வாசித்ததில், அனைத்தும் புரியவந்தது. அற்புதமான படைப்பு, நல்ல வர்ணனைகள், காட்டு விலங்குகளின் இயற்கையான சூழலுக்கு அழைத்துப்போய் அமர்க்களமாகச் சொல்ல வேண்டியதை சொன்னது பாராட்டத்தக்கது.

    அந்தக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் செய்த நியாயமற்ற போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதே.

    இந்தக்கதையிலிருந்து பல புது விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

    ஒருசில பிரச்சனைகளின் வேர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.

    மனதில் பலநாட்களாக ஓடிடும் விடை தெரியாத பல கேள்விகளுக்கு, விடை கிடைத்தாற்போல உணர முடிந்தது.

    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் கேட்டுள்ளது போல

    வர்ணாசிரமம் தர்மமா? அதர்மமா??

    என எனக்கு புரியாமல் தான் உள்ளது.

    சிந்தனையைக் கிளறிவிட்டுள்ள நல்லதொரு படைப்புக்கு, நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்பாளடியாள், இராஜராஜேஸ்வரி, வை.கோபாலகிருஷணன், ...

    பதிலளிநீக்கு
  27. சாய்: இதான் கதை என்று எழுதியவனே சொன்னால் பெரும் ஏமாற்றமாகி விடலாம். உங்கள் கருத்து நன்றாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  28. அம்பாளடியாள்: மனவலிக்கு மருந்தே கிடையாது என்பது என் எண்ணம். நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி இல்லை.

    பதிலளிநீக்கு
  29. வர்ணாசிரமம் தர்மமா? கேள்வி சுற்றிச் சுற்றி வருகிறது இராரா.

    தர்மம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நிறைய பொருளுண்டு. முறைக்கும் நெறிக்கும் வித்தியாசம் இருப்பதைத் தெரிந்தும் முறை/நெறி இரண்டையும் கலந்து தர்மம் என்ற ஒரே வழக்கில் சில சமயம் சொல்கிறோம். உங்கள் கேள்வி 'வர்ணாசிரமம் முறையா' என்பதா, 'வர்ணாசிரமம் நெறியா' என்பதா? ஒரு கேள்வி இப்போது குட்டி போட்டு இரண்டாகி விட்டது - சுற்றி சுற்றி வருகிறது என்றேனே?!

    என் அவசர பதில்: 'முறை' என்ற பொருளில் வர்ணாசிரமம் தர்மம் என்று நினைக்கிறேன். வர்ணாசிரமம் என்னும் முறை இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது - பெயர் தான் வேறே. வர்ணாசிரமம் மனு காலத்தில் ஒரு நெறியாகக் கடைபிடிக்கப்பட்டதாக நினைக்கிறேன். நெறி என்று அமைக்கப்பட்டக் காரணத்தால் நெறி தவற முடிந்தது. முறை தவறினால் புலப்படக்கூடியது. தானாகவோ பிறர் தலையீட்டினாலோ மாற்றிக் கொள்ள முடியும். நெறி தவறினால் உணர மட்டுமே முடியும் - அதனால் நிறைய பேர் தவறினார்கள், தவறுகிறோம் என்று நினைக்கிறேன். முறை தவறினால் தண்டனை - வன்மையாகவோ மென்மையாகவோ இருந்தாலும் தண்டனை/நஷ்டம் இயற்கையிலோ தானாகவோ கிடைத்து விடுகிறது. supply chain காரன் financial audit செய்தால் என்ன நேரும்? தண்டனை என்பது இங்கே பரந்த பொருளில் சொல்லியிருக்கிறேன். நஷ்டம் என்பது பொருத்தமான சொல்லோ என்று தோன்றுகிறது. நெறி தவறினால் 'பாவம்' என்று கண்மூடப்பட்டதால் - ஒழுக்கம் நெறியானது போல - வர்ணாசிரம விதிகளை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். பாவத்தின் சம்பளம் உடனடியாகக் கிடைக்காது என்று தெரிந்ததும் யாருமே கவலைப்பட்டதாக, கவலைப்படுவதாகத் தெரியவில்லை :).
    (அவசர பதிலே இப்படிக் குழப்புகிறதே?)

    சுவாரசியமான கேள்விக்குள் ஒரு கட்டுரை புதைந்திருக்கிறது. (வை.கோபாலகிருஷ்ணன் போன்ற) விவரம் தெரிந்த அனுபவசாலிகள் எழுதலாம். விதைக் கேள்விக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  30. Abstract ஆக இருந்தது. நிறைய layers. கதை படிக்கும் போது-- ஒரு சில பார்த்து/கேட்டு மறந்த விஷயங்களை நினைவு படுத்தியது. ஒரு கட்டம்-- கதையில்-- படிக்க ரொம்பவே சோகமாக இருந்தது... "பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்..." என்று பாரதியார் சரியாகத்தான் பாடியிருக்கிறார்!
    "Sadgati" என்று ஒரு கதை. ஹிந்தியில் மிக பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான "பிரேம்சந்த்" எழுதியது... அதை சத்யஜித் ரே படமாக எடுத்தார்... நீங்கள் பார்த்திருக்கீர்களா தெரியவில்லை. இல்லை-என்றால் கண்டிப்பாகப் பார்க்கவும். அந்தக் கதையின் காட்சிகள் மனதில் தோன்றி மறைந்தன-- இந்தக் கதை படிக்கும் பொது...
    நிறைய "Metaphors"... நான் புரிந்து கொண்டது சரியா என்று தெரியவில்லை... ஆனால்-- ஒரு விதத்தில்... என் விதத்தில்--- நான் புரிந்து கொண்டேன் என்றே தோன்றியது...

    Brilliant!!

    பதிலளிநீக்கு
  31. அற்புதம் அப்பாஜி!இதுவரை நீங்கள் எழுதியவற்றில் இதுவே பெஸ்ட்.தயக்கமே இல்லாமல் இதைச்சொலலாம் இலக்கியமென்று.இது போல ஒரே ஒரு சிறுகதை என்னால் எழுத முடிந்தால் கூட மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
  32. ரொம்ப நன்றி, Matangi Mawley. சத்கதி படித்ததில்லை.. சத்யஜித்ரே படமா? அதே பெயரிலா? கண்டிப்பாகப் படிக்கிறேன்/பார்க்கிறேன். i am intrigued now.

    பதிலளிநீக்கு
  33. நன்றி srikandarajah கங்கைமகன் (ஆகா! அற்புதமான பெயர்).

    பதிலளிநீக்கு
  34. எதைச் சொல்ல வேண்டும் என்றும் எப்படிச் சொல்ல வேண்டும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் bogan. rare art. பாராட்டுக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  35. காஸ்யபன் அவர்களின் வர்ணாஸ்ரம அதர்மம் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  36. @அப்பாதுரை, எனக்கு சாந்தோக்கியத்தில் வரும் சத்யவான் ஜாபாலி கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது:-)

    பதிலளிநீக்கு
  37. அன்புள்ள அப்பாதுரை,
    நான் இன்னும் கதையைப் படிக்கவில்லை. ஆனால் தங்கள் கதை பரிசு பெற்றதில் என் மனம் இன்னும் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. இப்பரிசு எனக்குக் கிடைத்திருந்தால் ,,,,,, ........,,,,













    நிச்சயமாக இத்துணை இன்பம், மகிழ்ச்சி,கொண்டாட்டம், கோலாகலம், துள்ளல், குத்தாட்டம் எதூவும் இருந்திருக்காது. காரணம் பரிசு உரியவர்க்கு, தகுதியான ஒருவருக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நானும் பத்மநாபன் சாரும் அடிக்கடி பேசியதுண்டு. உங்கள் கதையை எதாவது போட்டிகளுக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ அனுப்ப வேண்டும் என்று. மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,

    பதிலளிநீக்கு
  38. அன்புள்ள அப்பாதுரை,
    நான் இன்னும் கதையைப் படிக்கவில்லை. ஆனால் தங்கள் கதை பரிசு பெற்றதில் என் மனம் இன்னும் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. இப்பரிசு எனக்குக் கிடைத்திருந்தால் ,,,,,, ........,,,,













    நிச்சயமாக இத்துணை இன்பம், மகிழ்ச்சி,கொண்டாட்டம், கோலாகலம், துள்ளல், குத்தாட்டம் எதூவும் இருந்திருக்காது. காரணம் பரிசு உரியவர்க்கு, தகுதியான ஒருவருக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நானும் பத்மநாபன் சாரும் அடிக்கடி பேசியதுண்டு. உங்கள் கதையை எதாவது போட்டிகளுக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ அனுப்ப வேண்டும் என்று.

    பதிலளிநீக்கு
  39. வம்சி சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். பரிசுக்குரிய கதைதான். 'பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்'(பாரதி) என்றிருந்த காலத்தை மிக அற்புதமாக கதையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  40. நன்றி Gopi Ramamoorthy, ஆதிரா, குமரன், சித்திரவீதிக்காரன், ...

    பதிலளிநீக்கு
  41. இந்தக் கதைக்குப் பரிசு என்பதைப் பார்த்ததும் இப்போது தான் கதையைப் படித்தேன். நல்ல விளக்கங்கள்;சம்பவக்கோர்வைகள்; ஊடே காவியத்தை இணைத்தது; எல்லாமும் நன்றே.

    ஆனால் வர்ணாசிரமம் குறித்தும் மனுநீதி குறித்தும் சரியான புரிதலில் இல்லையோனு ஒரு சந்தேகம். நல்லதொரு மொழிபெயர்ப்புக் கிடைத்தால் முழுதும் படிங்க; ஒருவேளை...... ஒருவேளை...... உங்கள் கருத்து மாறலாம்.

    மற்றபடி இந்த ஜாதிச் சண்டை எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளாகத் தான் என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். அதற்கு முன்னர் ஜாதிச் சண்டை என்பது இருந்திருந்தால் சரித்திரத்தில் எங்கேயானும் ஒரு இடத்திலாவது குறிப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

    பரிசு கிடைத்ததற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  42. கீதாம்மா.

    எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க சாதிச்சண்டைகள் எல்லாம் கடந்த ரெண்டு நூற்றாண்டுகளாத் தான்னு? வலங்கை இடங்கை சண்டைகள் எல்லாம் நடந்ததா கல்வெட்டு ஆதாரங்கள் ஆயிரம் வருடங்களா இருக்கிறதைப் படிச்சிருப்பீங்களே?! அதுக்கு முன்னால இந்தக் கதை சொல்றது போல் அடக்குமுறைகள் வருண+சாதி அடிப்படையில் இருந்ததா தான் கிடைத்த எல்லா தரவுகளும் காட்டுது.

    பதிலளிநீக்கு
  43. நீங்க சொல்றதுல ஒண்ணு சரி கீதா சாம்பசிவம். அரைகுறைப் புரிதல் எனக்கு சர்வ சாதாரணமா வரும். அப்பாதுரைன்னாலே அரைகுறைனு தான் அர்த்தம்.. வேணும்னா என்னோட டீச்சர்களைக் கேட்டுப் பாருங்க.
    மத்தபடி.. (சித்த நில்லுங்க.. தோளை விட்டு இறங்கிக்குறேன் முதலில். :).. மத்தபடி ஜாதிச் சண்டை சமாசாரம் திரேதா யுகத்துலயே இருந்திருக்கு.. வர்ண பேதம் வர்ணம் தொடங்கின நாள்லந்து இருந்திருக்கு - இல்லையென்றால் வர்ணத்துக்கே அவசியம் இல்லையே? புராணங்களிலும் சரி அதுக்குப் பிறகு ஆதி சங்கரர்.. சைவ சமண வைணவ விவகாரங்களிலும்.. எல்லா வகையிலும் ஜாதிச் சண்டை நடந்திருக்கு. க்ருஷ்ணரைக் கூட வர்ண பேதத்துனால சரியா கௌரவிக்காம போனதா படிச்சிருக்கேன். ஜாதிச் சண்டையும் abuseம் அதிகம் வெளியே தெரியாம இருக்கக் காரணம் ஒரு சில ஜாதிகளைத் தவிர மிச்சவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாமப் போனது தான் காரணம். படிச்சு நாகரீகமான இந்த நாளிலயே ஜாதியும் சடங்கும் மதமும் discriminationம் பாக்குறோம்... காட்டுதனமா இருந்த அந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப சாதாரணமா.. ரத்தவிளாறா.. நடந்திருக்க சாத்தியம்னு நினைக்கிறேன்.
    அடடா.. விடமுடியலியே.. அவசரமா வெளில போக வேண்டியிருக்கே..

    படிச்சதுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.. பொறுத்து வரேன்.. எங்கியும் போயிராதீங்க..

    பதிலளிநீக்கு
  44. ஹிஹி.. முடியலே.. ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டுப் போயிடறேன்.. ஐ மீன்.. வந்துடறேன்.

    கொஞ்சம் யோசிச்சுப் பாத்தோமுன்னா.. ராமாயணத்துல வடக்கத்தி வெள்ளை ராஜாக்கள் தெற்கத்தி கருப்பு ராஜாக்களை அரக்கர்கள் வானரங்கள்னது ஜாதி.. ஜாதி மனப்பாங்குனு சொல்லலாம். (குமரன் சார்: திரேதா யுகத்துக் கதையின் பின்னணி இது தான்.. அடிக்கு பயந்து எழுதி முடிக்கலே)

    பதிலளிநீக்கு
  45. குமரன், ஜாதிக்கும் வர்ணத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தானே? அப்பாதுரைக்கும் தெரியாமல் போகாது. மேலும் இது குறித்துத் தெளிவாக என் கருத்துக்களைச் சொல்லத்தான் ஆசை; ஆனால் எப்போவோ தெரியலை! பார்க்கலாம். ஒரு பத்துப் பதிவாவது தேறும். :))))

    அப்பாதுரை,
    கண்ணனை இடையன் என்றுதான் கேலி செய்தார்கள். இடையர்களும் யாதவ குலத்தின் ஒரு பகுதியே. அவர்களும் யாதவர்களே. ஒரு ஜாதியிலேயே வேறுபாடுகள் உண்டல்லவா? அப்படி யாதவர்களிலேயே க்ஷத்திரியர்கள் தனி
    க்ஷத்திரியர்களிலும் சூதர்கள் தனி இப்படிப் போகும்.

    பிராமணர்களில் வடமன், பிஹசரணம், அஷ்டசஹஸ்ரம், சோழியர் என இருக்கிறாப்போலவும், சிவாசாரியார்கள் தனியான அந்தணர்கள் எனவும் சொல்வதைப் போல.

    இவையே ஜாதி ஆகும். வர்ணம் பொதுவாக உள்ளது. ஆகவே ஜாதிச் சண்டை என்பது நிச்சயமாய் அந்நிய ஆதிக்கத்தின் பின்னேயே தோன்றின. இதற்கான பல ஆதாரங்களும் இருக்கு. ஆனால் இப்போ இது குறித்துக் கவனம் செலுத்த நேரம் இல்லை! பின்னால் பார்க்கலாம். :))))))))))))

    பதிலளிநீக்கு
  46. கொஞ்சம் யோசிச்சுப் பாத்தோமுன்னா.. ராமாயணத்துல வடக்கத்தி வெள்ளை ராஜாக்கள் தெற்கத்தி கருப்பு ராஜாக்களை அரக்கர்கள் வானரங்கள்னது ஜாதி.. ஜாதி மனப்பாங்குனு சொல்லலாம். (குமரன் சார்: திரேதா யுகத்துக் கதையின் பின்னணி இது தான்.. அடிக்கு பயந்து எழுதி முடிக்கலே)//

    ராமன் கறுப்பு என்பதை இப்படி அநியாயமா மறந்து போய் ராமாயணத்தையே மாத்தி எழுதலாமா அப்பாதுரை?? :P :P :P

    அதோட நம்ம ஆளு ராவணர் பிராமணர் என்பதையும் மறந்துட்டீங்களே?? ஹிஹிஹி, அவசரம்! :)))))))))

    வானரங்கள் பத்தித் தனியா ஒருநாள் வச்சுக்கலாம். இப்போ சமைக்கப் போகணும். :)))))

    பதிலளிநீக்கு
  47. அப்பாதுரை, உங்களோட திறமையான எழுத்தின் மூலம் நீங்கள் மனுதர்மத்தின் சரியான தகவல்களை அனைவருக்கும் தெரியும்படி செய்ய முடியும். இது ஒரு வேண்டுகோள்னே வைச்சுக்கலாம். சரியான மொழிபெயர்ப்பைப் படியுங்கள் அல்லது உங்களுக்கே சம்ஸ்கிருதத்தில் ஞானம் இருந்தால் நல்லது. பலவிஷயங்களும் தவறான புரிதலில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  48. கீதா சாம்பசிவம், நீங்கள் சொல்வது மிகச்சரி. வர்ணம் என்பதை ஆக்கப்பூர்வ சாதனமாக வளர்க்கும் பக்குவம் நமக்கில்லாதது வருத்தமே. இன்றைக்குக் கூட வர்ணங்கள் மேலைக் கலாசாரத்தில் ஜாதிப்பூச்சுக்கு உட்படாமல் வளர்வதைப் பார்க்கிறேன். இந்துக் கலாசாரத்தில் வர்ணம் என்பது ஜாதியாக மாறியது வருந்தத்தக்கது. அதற்குக் காரணமும் வர்ணம் பிறந்த அன்றே இருந்ததாகத் தோன்றுகிறது. சத்திரியரும் பிராமணரும் அகந்தை கொண்டவர்களாகவே எனக்குத் தோன்றுகிறார்கள்.
    பிரிவினை என்பதன் வேர் வர்ணத்தில் இருந்ததைத் தான் நான் குறிப்பிட்டேன். காஸ்யபன் அவர்களின் 'வர்ணாஸ்ரம அதர்மம்' பதிவில் இதுபற்றி சுவையான கருத்துப் பரிமாற்றம் நடந்தது. வர்ணங்களை ஒரு சாதனமாக எடுத்துக் கொண்டு அறிந்தோ அறியாமலோ மனு செய்த அநீதியில் ஜாதிச் சண்டைகளின் வேர்கள் சில இருப்பதைப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  49. ஜாதிச் சண்டையை நாம் தான் அன்னியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம் என்று நினைக்கிறேன். நம்மிடையே இருந்த ஜாதிச் சண்டையின் காரணமாகத் தான் இந்தியாவில் அன்னியர்கள் குடியேறினார்கள். தழைத்தார்கள். நம்மிடம் கற்ற தீயவற்றுள் ஒன்று ஜாதிச்சண்டை. ஒரு மதத்துக்குள் பிரிவினை உண்டாக்கும் தந்திரம் இங்கிருந்துப் போனது தான். இன்னும் சொல்லப்போனால் இந்துமதம் சாதிச்சண்டையின் கிடங்கு என்று நினைக்கிறேன். பெரும்பாலான புராணங்களிலும் நூல்களிலும் குறிப்பிட்ட இரண்டு குலங்களின் பெருமையை உயர்த்தி வைத்ததற்கான அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பிராமணர்கள் சொல்லும் வணக்கத்தில் (அபிவாதயே) ஜாதி இருப்பதாக நினைக்கிறேன்.(அடிக்க வராப்ல இருக்கே..)

    பதிலளிநீக்கு
  50. வர்ணங்கள் ஜாதிகளாக மாறியதைப் பார்த்துக் கொண்டிருந்த மதகுருக்களின் திமிரும் ஒரு காரணம். இன்றைக்குக் கூட மதகுருக்களின் அகந்தை அடங்கியதாகத் தெரியவில்லை (எல்லா மதகுருக்களும்).

    பதிலளிநீக்கு
  51. ஜாதிச் சண்டையை நாம் தான் அன்னியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம் என்று நினைக்கிறேன். நம்மிடையே இருந்த ஜாதிச் சண்டையின் காரணமாகத் தான் இந்தியாவில் அன்னியர்கள் குடியேறினார்கள். தழைத்தார்கள். நம்மிடம் கற்ற தீயவற்றுள் ஒன்று ஜாதிச்சண்டை. ஒரு மதத்துக்குள் பிரிவினை உண்டாக்கும் தந்திரம் இங்கிருந்துப் போனது தான். இன்னும் சொல்லப்போனால் இந்துமதம் சாதிச்சண்டையின் கிடங்கு என்று நினைக்கிறேன். பெரும்பாலான புராணங்களிலும் நூல்களிலும் குறிப்பிட்ட இரண்டு குலங்களின் பெருமையை உயர்த்தி வைத்ததற்கான அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பிராமணர்கள் சொல்லும் வணக்கத்தில் (அபிவாதயே) ஜாதி இருப்பதாக நினைக்கிறேன்.(அடிக்க வராப்ல இருக்கே..)//

    அப்பாதுரை, அபிவந்தனம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அனைத்து வர்ணத்தினருக்கும் உரியதே; காலப்போக்கில் இன்று பிராமணர்களிடம் மட்டுமே நிலைத்திருக்கிறது என்று சொல்லலாம். ஜாதிச் சண்டை இருந்திருந்தால் நம் மன்னர்களால் இப்படி எல்லாம் பெரிய பெரிய கோயில்களை எழுப்பி இருக்க முடியாது. எவ்வளவு ஆற்றல் படைத்த மன்னன் ஆனாலும் குடிமக்கள் ஒத்துழைப்பு இல்லாமலா இப்படிக் கோயில்களை இழைத்திருக்க முடியும்? அவற்றுக்கு என நிவந்தங்களை விட்டிருக்க முடியும்?

    இனச் சண்டைனு வேண்டுமானால் சொல்லலாம். சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொண்டதையும், வட மாநிலங்களில் ராஜபுதனர்கள் அடித்துக்கொண்டதையும் காரணம் காட்டலாம். இதிலே ஜாதி வந்ததாய்த் தெரியவில்லை. இந்த ஜாதியைப் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது கும்பினி ஆட்சிக்காரர்களே. சரித்திரப் பாடத்துக்கு இப்போ நேரம் இல்லை; :)))) ஆகவே நல்ல ஆதாரங்களைப் பொறுக்கிக் கொண்டு வரேன். இப்போ இருக்கும் சூழ்நிலையில் அதிகம் எழுத முடியலை. :(

    பதிலளிநீக்கு
  52. மதகுருக்கள் உலகமுழுதும் இப்படித்தான் எனச் சொல்லலாமா? //

    நல்ல தன்மையானவர்களும் இருக்கிறார்கள் அப்பாதுரை, நமக்குத் தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  53. //சரித்திரப் பாடத்துக்கு இப்போ நேரம் இல்லை; :))))

    நான் சட்டுனு குதிச்சு சட்டுனு வெளில வர டைப். ஆழ்ந்து படிக்கிற அளவுக்கு என் எழுத்துல சரக்கு இல்லை. நீங்க பொறுமையா எழுதுங்க. நான் படிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  54. அன்பின் ஐயா,

    எத்துனை அழகான நடை. பரிசு பெற தகுதியான படைப்பு... வாழ்த்துகள் . மிக்க மகிழ்ச்சி. சீக்கிரம் பரிசு வாங்கிட்டு போட்டோ எடுத்துட்டு வந்து காண்பியுங்கள்.

    பதிலளிநீக்கு