2011/06/03

அமுதன் குறள்


சமீபத்தில் படித்துப் பிரமித்து, உடனே மறுபடியும் படித்தப் புத்தகம், 'அமுதன் குறள்'.

தமிழில் வெண்பா எழுதவேண்டும் என்று தீர்மானித்த போது, என் நண்பரும் ஆசிரியருமான அரசனிடம் பயிற்சியளிக்குமாறு முதலில் கேட்டேன். அரசனோ, அமுதனின் 'வெண்பா எழுதலாம் வாங்க' வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்து, 'அங்கே போய் படிச்சுக்கோ' என்றார். திரு. அமுதன் அவர்களை, அவருடைய வலைப்பூ வழியாகவே அறிமுகம் செய்துகொண்டேன். அவருடைய வலைப்பூவில் நான் கற்ற வெண்பா இலக்கணம் மட்டுமல்ல, நுணுக்கங்களும் எனக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றன. அதற்காக திரு.அமுதன் அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றி கலந்த வணக்கம். அவருடைய வெண்பா வலைப்பூவில் என் படைப்புக்கும் ஒரு இணைப்பை உருவாக்கியது பெரிதும் ஊக்கம் கொடுத்தது. அந்தப் பெருந்தன்மைக்கு என் பெருமதிப்பு கலந்த வணக்கம்.

'அமுதன் குறள்' புத்தகத்தில் மொத்தம் 297 குறட்பாக்கள். பதினைந்தே நாட்களில் எழுதி முடித்தாராம் அமுதன்! அந்த உழைப்புக்கும் பிடிப்புக்கும் என் அடங்காத வியப்பு கலந்த வணக்கம்.

இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயத்திற்காக எழுதியிருக்கிறார். பெற்றோரும் உற்றோரும் தம் பிள்ளைகளுக்கும் இளையோருக்கும் படித்துச் சொல்ல நல்ல புத்தகம்.

சமீபத்தில் சென்னை சென்றிருந்த பொழுது சில பிரதிகள் வாங்கி வந்தேன் - இங்கே என் நண்பர்களுக்கு வழங்க. சிகாகோ அருகே ஒரு பெண்மணி, இங்கு வாழ்த் தமிழ்க்குடும்பங்களின் சந்ததிகளுக்கு வார இறுதியில் தமிழ் வகுப்பு நடத்துகிறார். என்னிடமிருந்த அமுதன் குறள் புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாகக் கொடுத்தேன். போன வாரம் அவரைச் சந்தித்த போது, திருக்குறள் வகுப்பை நிறுத்தி விட்டு அமுதன் குறள் வகுப்பைத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார். பிள்ளைகள் விரும்பிப் படிக்கிறார்கள்; எளிமையாகத் தமிழ் கற்பதுடன் இழையூடியிருக்கும் நகைச்சுவையையும் ரசிக்கிறார்கள் என்றார். பிள்ளைகளுக்குத் திருக்குறளுக்குப் பதில் அமுதன் குறள் வாங்கியிருக்க வேண்டும் என்றார்!

அந்தப் பெண்மணி சொன்னது முற்றிலும் உண்மை. அமுதன் அவர்களின் குறட்பாக்களின் எளிமை மட்டுமல்ல, நிறைய கருத்துக்களைப் புதுமையான முறையில் எடுத்துச் சொல்லியிருக்கும் விதமும் ரசிக்க முடிகிறது.

'அமுதன் குறள்' புத்தகத்திலிருந்து சில பாக்கள்:

பாட்டி கதைகூற பாட்டனார் பண்ணிசைக்கக்
கேட்டு விழியுறக்கம் கொள்
- இந்த அனுபவம் இனி எல்லாப் பிள்ளைகளுக்கும் கிடைக்குமா? எத்தனை இழந்திருக்கிறோம்!

தட்டான் பிடித்தால் தவறாகும் உன்விரல்
பட்டால் அழுமே அது
- உயிர்த்துன்பம் தவிர் என்பதை எத்தனை எளிதாகச் சொல்கிறார்!

ஓடிவிளை யாடி உடலை உறுதிசெய்
ஆடும் அருவிபோல் ஆடு

மூச்சுப் பயிற்சியால் முன்தொப்பை சீராக்கி
யாக்கைக்கு உரமேற்று வாய்

கண்டதை உண்டால் வரும்நோய் பலவாகும்
உண்பவை ஆய்ந்துநீ உண்

கனிக்கூழ் பருகிக் களிபல் அழிக்கும்
பனிக்கூழ் மறக்கப் பழகு
- உடலைப் பேணும் வழியை இதைவிட எளிமையாகச் சொல்ல முடியுமா தெரியவில்லை. (பனிக்கூழ்: ஐஸ்க்ரீம்!)

தவற்றை மறைத்தல் சரியில்லை மாறாய்
அவற்றைப் புரியாது இரு

வஞ்சித்தல் சொல்லாடல் வன்முறை பொய்களவு
நெஞ்சினுள் சேர்க்காதே நீ

துணிவே அனைத்தின் திறவுகோல் சேயுன்
பணிவே படிப்பின் பயன்

விழுந்தால் விதையாய் விரிந்தால் சிறகாய்
எழுந்தால் மரமாய் எழு
- சிகாகோ பெண்மணி, அமுதன் குறள் வகுப்பு தொடங்க விரும்பியது இப்போது புரிந்தது.

மரமும் செடியும் வளருனக்கு நாளும்
தரமான காற்றைத் தரும்

பொசுக்கும் வெயிலின் புழுக்கத்தைப் போக்க
பசுமை உலகம் படை
- காலத்துக்கேற்ற பாடம்; எளிமையான ஆழமான கருத்து.

சின்னத் திரைத்தொடர்கள் சீரழிக்கும் உன்னறிவை
உன்னி விலகல் உயர்வு
- அட! போட வைத்தக் குறள்.

இனமும் குலமும் இழிவென்று ஒதுக்கி
மனிதம் வளர்த்து மகிழ்.
- என்னை மிகவும் கவர்ந்தது.

இன்றைய காலத்துக்கேற்ற நெறிகளை எளிமையான நடையில் அருமையான தமிழில் குறட்பாக்களாய் வடித்திருக்கும் அகரம் அமுதனுக்கு நன்றி. அவருடைய குறள் புத்தகம் பரவலாகப் படிக்கப்படும் என்று நம்புகிறேன். விரும்புகிறேன். வாழ்த்துகிறேன்.



அமுதன் பதிப்பக வெளியீடு | ரூ.50
அமுதன் பதிப்பகம், அகரம் சீகூர் அஞ்சல், பெரம்பலூர் 621108
மின்னஞ்சல்: agaramamuthan@gmail.com | தொலைபேசி: 9940723625

31 கருத்துகள்:

  1. ஒவ்வொரு குறளும் அற்புதம் ..அமுதன் அவர்கள் அமுதாக படைத்திருக்கிறார் .. அவர்களை தமிழ் கூறும் நல் உலகம் நிச்சயம் தலை வணங்கும் . எடுத்தளித்த உங்களுக்கு மிக்க நன்றி .. விழுந்தால் ..விரிந்தால் ..எழுந்தால் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது ....

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே அருமையான குறள்கள்.... விழுதாய் சிறகாய் மரமாய் அருமை. காலத்துக்கேற்ற கவிதை படைத்திருப்பது பாராட்டப் படவேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  3. அருமையான புத்தகம். விழுந்தால்....' குறளும், 'துணிவே...' குறளும் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் அன்பர் அமுதனுக்கு.

    பதிலளிநீக்கு
  4. /பாட்டி கதைகூற பாட்டனார் பண்ணிசைக்கக்
    கேட்டு விழியுறக்கம் கொள்/

    /
    விழுந்தால் விதையாய் விரிந்தால் சிறகாய்
    எழுந்தால் மரமாய் எழு/

    அழகு,அருமை

    குறள் வடித்த அமுதன் அவர்களுக்கும்,அதைப் படம் பிடித்து
    இடுகை இட்டு உங்களுக்கும்
    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  5. கடைசி இரண்டும், எழுந்தால் மரமாயும் அற்புதத்திலும் அற்புதம். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. சென்னையில் எங்கே கிடைக்கும் அப்பாஜி? ;-))

    பதிலளிநீக்கு
  6. அப்பாதுரை அவர்களே! குறளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எங்களுக்கு சொந்த புத்தி கிடையாது .சொல்லித்தான் இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது என்பதே தெரியும். வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  7. நன்றி பத்மநாபன், ஸ்ரீராம், geetha santhanam, திகழ், யாதவன், RVS, kashyapan, ...

    பெருமையெல்லாம் திரு.அமுதனுக்கே. ஓசை வராமல் சாதனை புரிவோர் இன்னும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. RVS..பெரம்பலூர் உங்கள் ஆபீஸ் பக்கம்னு முதலில் நினைத்து அமுதனை சந்திக்கப் போன் செய்து ஆங்கிலத்தில் விசாரித்த போது, "இல்லை ஐயா, பெரம்பலூர் திருச்சி அருகில் உள்ளது" என்றார் வழுக்காத தமிழில்.

    புத்தகம் சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை; அமுதனிடமே நேரடியாகத் தொடர்பு கொண்டு பெறுவது சுலபம். தொடர்பு கொள்வதால் நட்பும் உண்டாகுமே? அமுதனின் எளிமையையும் இனிய பேச்சையும் நட்பையும் விரும்புவீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. அமுதனின் குறள் அமுதம்!
    “ஆறறிவு படித்த அத்தனை உயிர்க்கிங்கு
    பா அறிவை ஈயும் குறள்”
    என்று அமுதனின் குறள் வெண்பாவைச் சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  10. அழகாகவும்,ஆழமாகவும், இனிமையாகவும்... நல்ல அறிமுகம்! என் கூகிள் பஸ்ஸில் இந்தப் பதிவினைப் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றமாதிரியான குறள்கள்.

    பதிலளிநீக்கு
  12. தட்டான் பிடித்தால் தவறாகும் உன்விரல்
    பட்டால் அழுமே அது

    ஹா..!

    பதிலளிநீக்கு
  13. //இனமும் குலமும் இழிவென்று ஒதுக்கி மனிதம் வளர்த்து மகிழ்.//

    Brilliant

    பதிலளிநீக்கு
  14. //துணிவே அனைத்தின் திறவுகோல் சேயுன் பணிவே படிப்பின் பயன்

    விழுந்தால் விதையாய் விரிந்தால் சிறகாய் எழுந்தால் மரமாய் எழு

    மரமும் செடியும் வளருனக்கு நாளும்
    தரமான காற்றைத் தரும்

    பொசுக்கும் வெயிலின் புழுக்கத்தைப் போக்க பசுமை உலகம் படை//

    அற்புதம்

    அற்புதம்

    அற்புதம்

    பதிலளிநீக்கு
  15. all the lines of Thiru Amuthan's Kural are very inspiring.
    wish I had heard abt it earlier.
    thanks Durai.

    பதிலளிநீக்கு
  16. இப்பா(நூல்) நிறையென் றியம்பி எனைவாழ்த்தும்
    அப்பா துறையேயென் ஆருயிரே! -அப்பப்பா!
    நாணாத என்றனையே நாணிடச் செய்துவிட்டீர்
    பாணாறும் வாயாற் புகழ்ந்து!

    உம்பாவால் என்றன் உளத்தைக் கவர்ந்தவரே!
    எம்பாவில் வைத்தீர் இதயத்தை -அம்மட்டோ?
    வாழ்த்தியுரை செய்ததை வாங்கப் பணித்திட்டீர்
    தாழ்த்திவணங் கேனோ தலை!

    பதிலளிநீக்கு
  17. அமுதன் குறள் நூல் வாங்க விரும்புவோர் எனது இந்த கைப்பேசியில் தொடர்புகொள்ளலாம்.

    0091 -9940723625

    பதிலளிநீக்கு
  18. எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன். திருத்திய வடிவம் கீழே!

    இப்பா(நூல்) நிறையென் றியம்பி எனைவாழ்த்தும்
    அப்பா துரையேயென் ஆருயிரே! -அப்பப்பா!
    நாணாத என்றனையே நாணிடச் செய்துவிட்டீர்
    பாணாறும் வாயாற் புகழ்ந்து!

    பதிலளிநீக்கு
  19. //விழுந்தால் விதையாய் விரிந்தால் சிறகாய் எழுந்தால் மரமாய் எழு

    மரமும் செடியும் வளருனக்கு நாளும்
    தரமான காற்றைத் தரும்

    பொசுக்கும் வெயிலின் புழுக்கத்தைப் போக்க பசுமை உலகம் படை//

    அருமையான படைப்பு.. வாழ்த்துகள். தங்களிருவருகும்..

    பதிலளிநீக்கு
  20. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. அமுதனுக்கு வாழ்த்துக்கள்.... உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அப்பாதுரை சார்! ஒரு நல்ல முயற்சியை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அமுதன் சாருக்கு என் அன்பும் வாழ்த்தும்.

    பதிலளிநீக்கு
  23. அமுதன் குறள்வாங்க ஆயத்தம் ஆனேன்.
    உமக்கென் நன்றி உரித்து.

    பதிலளிநீக்கு
  24. ஆகட்டும் சிவகுமாரன்! (ஆகா!)

    பதிலளிநீக்கு
  25. "உமக்கெனது" சரியாய் இருக்குமோ ? -

    பதிலளிநீக்கு
  26. உமக்கெனது.. நீங்க சொன்ன பிறகு தான் கவனித்தேன் சிவகுமாரன். (நம்பல்கி தமில் அவ்லோ தான் தெரியறான்)

    பதிலளிநீக்கு
  27. ஆகா அதான் தெரியறதே , நசிகேத வெண்பாவில் நீங்கள் தொடும் உயரத்தை பார்க்கும் போது.

    பதிலளிநீக்கு
  28. மரமும் செடியும் வளருனக்கு நாளும்
    தரமான காற்றைத் தரும்

    பொசுக்கும் வெயிலின் புழுக்கத்தைப் போக்க
    பசுமை உலகம் படை

    எளிய தமிழில் அழகாக எழுதியிருக்கிறார். பகிர்விற்கு நன்றி.
    -சித்திரவீதிக்காரன்.

    பதிலளிநீக்கு
  29. ஐயா,வணக்கம்.தங்களின் இந்தப்பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.நன்றி

    பதிலளிநீக்கு
  30. சொல்லுவது எளிது செயல் கடிது என்பதை மாற்றும் ஒரு பயணம் ........தொடர்க .......வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு