2010/03/30

மெல்லிசை நினைவுகள்



ந்தப் பதிவுக்கான பாடலை என் வயதுக்காரர்களும், முன் வயதுக்காரர்களும், பல பின் வயதுக்காரர்களும், வருடக்கணக்காக விரும்பிக் கேட்பதை அறிவேன்.

என்னுடைய அபிமான பாடகர்கள் வரிசையில் பிபிஸ்ரீக்கு இடமிருந்தாலும், முன்னணியில் இல்லை. ஜேசுதாசை விட இரண்டு படி மேலே கொடுத்திருக்கிறேனே தவிர, பிபிஸ்ரீ குரலைக் கேட்டால் எனக்குத் தூக்கம் தான் வரும் பெரும்பாலும். ஜேசுதாஸ் குரலைக் கேட்டால் உடனே சோகமும் குறட்டையும் கூடவே வரும் - அது இன்னொரு பதிவில்.

பிபிஸ்ரீ பாடல்களை இசையின் காரணமாக ரசித்துக் கேட்டிருக்கிறேன். பத்து பதினைந்து பாடல்கள் போல் பிபிஸ்ரீ அருமையாகப் பாடியுமிருக்கிறார். அந்தப் பத்துப் பதினைந்தில் இந்தப் பாடல், முதல் மூன்றில் அடங்கும் என்று நினைக்கிறேன். இத்தனை அருமையான இசையிலும் இந்தப் பாடலில் சில இடங்களில் அவர் குரல் என்னைத் தூங்க வைத்திருக்கிறது. தூங்க வைப்பது என்றால் தாலாட்டு அல்ல. காதலியின் கையைப் பிடித்துக் கொண்டு அடுத்த எதிர்பார்ப்பில் அலைந்து கொண்டிருக்கிறீர்கள் - அப்போது தூக்கம் வந்தால் எப்படி? என்ன நான் சொல்வது? பிபிஸ்ரீயின் குரல் அப்படியென்றால், படமாக்கப்பட்ட விதமோ மெத்தை தலையணை போர்வை போட்டு இழுத்து மூடாத குறைதான். எம்ஜிஆருக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாத குரல். அதுவும் குண்டு எம்ஜிஆர். முதலிரவு கனவுப் பாடல் காட்சியை இப்படியா கும்பகர்ண வகைப்படுத்துவார்கள்? பிபிஸ்ரீ எந்தப் பாட்டைப் பாடினாலும் உடனே 'ஹிட்' டாகுமென்று பல பேட்டிகளில் எம்எஸ்வி குறிப்பிட்டிருக்கிறார். எனக்கென்னவோ இந்தப் பாட்டை டிஎம்எஸ் பாடி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பின்னியிருப்பார் மனிதர்.

இந்தப் பாடலைத் தேர்வு செய்ய சில காரணங்களுண்டு. விசுவனாதன்-ராமமூர்த்தியின் இனிமையான துள்ளலிசை நிச்சயமான காரணம். துள்ளலும் கொஞ்சலும் கூடிய சுசீலாவின் குரல் அடுத்தக் காரணம். முக்கியமான காரணம் கண்ணதாசனின் வரிகள்தான். இன்றைக்கும் இந்தப்பாடலை ரசித்துக் கேட்க முடிகிறது, கேட்கிறார்கள் என்றால் கண்ணதாசனின் வரிகள் தான் காரணம் என்று அடிக்காமல் சொல்வேன், அருகில் வாருங்கள்.

காதலர்கள் பொதுப்பார்வையில் இருக்கும் போது கண்களால் தொட்டுக் கொள்கிறார்கள். தனிமையில் கைகளால் தொட்டுக் கொள்கிறார்கள். சாதாரணமான நடப்பைச் சாதாரணமாகச் சொல்கிற பாடல்தான். சில பாடலாசிரியர்கள் இதே கருத்தை, 'கண் ஜன்னல் வழியாக குதித்து கையில் சிறை புகுந்தாய்' என்று எழுதுவார்கள். சிலர் 'கண் பார்வையின் வியர்வை அதைக் கையால் துடைக்கும் தயவை..' என்று ஏதாவது எழுதுவார்கள். கண்ணதாசனுக்கு ஈடு இணை உண்டோ? கண்ணதாசன் சொல்லியிருக்கும் விதத்தில் புதுமையும் இலக்கியமும் கலந்திருக்கிறது. 'கண் வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன்' என்று எழுதியிருக்கிறார். அதை காலங்காலமாகத் தொடர்ந்து ரசிக்கும்படி இசையும் அமைத்திருக்கிறார்கள் விசுவனாதன்-ராமமூர்த்தி. பாடல் முழுவதும் தபலாவை குமுக்குகிறார்கள் (தபலா என்று தான் நினைக்கிறேன், அது தபலா கிடையாது தஷ்லா என்று யாராவது திருத்தாமல் இருக்க வேண்டுமே, கடவுளே!). 'கார் வண்ணக் கூந்தல் தொட்டு' என்ற இடத்தில் உருட்டுகிறார்களே, அந்த ஒலிக்காகவே பாடலைத் திருப்பித் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.

கனவு மென்மையோடு தொடங்கும் பாடல், உடனே சூடு பிடித்து கிடார், வயலின், குழல் என்று இசையுடன் நீரருவி போல் பாய்ந்து பரவி ஓடுகிறது. கடைசி வரை டெம்போ குறையாமல் பிசகாமல் இசை அமைத்திருக்கிறார்கள். சுசீலா கை கொடுத்திருக்கிறார்.

என்ன பாடலென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாடல் வரிகளை வைத்துக் கொஞ்சம் தமிழிலக்கியம் பரிமாற விடுவீர்களா?

கண்ணதாசன் பாடல்களில் கருத்தழகு மட்டுமல்ல, சொல்லழகையும் நிறைய கண்டிருக்கிறேன். இவருக்கு மட்டும் இத்தனை தமிழருள் கிடைத்திருக்கிறதே என்று சில சமயம் நினைப்பேன். பழைய தமிழ்ப்பாடல்களின் வடிவத்தைத் தன்னுடைய திரைப்பாடல்களில் கண்ணதாசன் பயன்படுத்தியிருப்பதை, நான் வளர வளர உணர்ந்தேன். கண்ணதாசன் திருப்பிப்போட்ட தமிழ்ப்பாக்களை வைத்து ஒரு பெரிய புத்தகம் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

இந்த 'வண்ணம்' கருத்தை முதலில் எழுதியவர் கவியரசரில்லை; கவிச்சக்கரவர்த்தி. தன்னுடைய ராமாயணக்கதையில் இப்படி எழுதுகிறார் கம்பர்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
  இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
  துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில்
  மழைவண்ணத் தண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
  கால்வண்ணம் இங்குக் கண்டேன்


அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததும் வரும் பாடல். ராமன் தொட்டால் விமோசனமாம். கை பட்டு ஒருத்திக்கு விமோசனம், கால் பட்டு இன்னொருத்திக்கு விமோசனம். இவ்வளவு தான் செய்தி. 'கருவண்ணத் தாடகையுடன் (இன்னும் எத்தனை அரக்கிகளோ தெரியவில்லை) போரில், மேகவண்ணணே, அங்கே உன்னுடைய கைத்திறனைக் கண்டேன். எனக்கு விமோசனம் தந்த இங்கே உன் கால்திறனைக் கண்டேன்.' அந்த 'வண்ணம்' வார்த்தையை வைத்துக் கொஞ்சம் உருகியிருக்கிறார் கம்பர். தமிழார்வம் மிகுந்தோரை உருக்கியிருக்கிறார்.

கண்ணதாசன் காப்பியடித்தாரா? நிச்சயமாக கம்பன் கற்பனையை எடுத்தாண்டிருக்கிறார். இந்தப் பாடல் மட்டுமல்ல, கம்ப காவியத்திலிருந்து எத்தனையோ கருத்துக்களை அபேஸ் பண்ணியிருக்கிறார். பிறகு ஏன் கண்ணதாசன் வரிகளில் புதுமை என்றேன்? கண்ணதாசன் காப்பியடிக்கவில்லை என்றால் இந்த சொல்லழகுப் பாடல்களை சாமானியர்கள் ரசித்திருக்க முடியாது, தெரிந்து கொண்டிருக்கவும் முடியாது, என்பது என் கருத்து. கம்பனின் சொல்லாடல் பொருளாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று என் போன்றவரை வருடக்கணக்கில் ரசிக்கும்படி செய்திருப்பதே கண்ணதாசனின் புதுமை. எம்எஸ்வியின் கொடை.

எம்எஸ்வி-5 | 2010/03/30 | பால் வண்ணம்

20 கருத்துகள்:

  1. இவரை தூங்கு மூஞ்சி பாடகர்னு சில பேர் சொன்னாலும். என்னோட அபிமான பாடகர். இவர் பாடின பாடல்களில் இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல். அப்பாதுரை நீங்கள் எழுதி இருப்பதை போல இந்த பாடலை கேட்டாலே மனசு துள்ளும்.

    'வண்ணம்' இந்த வார்த்தைக்கு கம்ப ராமாயணத்தின் எடுத்துக்காட்டு மிகவும் ரசிக்க வைத்தது.

    //கண்ணதாசன் திருப்பிப்போட்ட தமிழ்ப்பாக்களை வைத்து ஒரு பெரிய புத்தகம் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.// நேரம் கிடைக்கும்போது எழுந்துங்களேன். கண்ணதாசனின் அபிமானத்தில் நீங்கள் எழுதுவது உங்களுக்கும் நிறைவை தரும், நாங்களும் ரசிப்போம்.

    பதிலளிநீக்கு
  2. .....என்று அடிக்காமல் சொல்வேன், அருகில் வாருங்கள்"//

    :))

    காதலியின் கையைப் பிடித்துக் கொண்டு அடுத்த எதிர்பார்ப்பில் அலைந்து கொண்டிருக்கிறீர்கள் - அப்போது தூக்கம் வந்தால் எப்படி?//
    என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்...தூக்கம் எவ்வளவு பெரிய விஷயம்..அது இப்படி சாதாரணமாக ஒரு குரலில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா...!

    பதிலளிநீக்கு
  3. எனக்கு மிகவும் பிடித்த பாடகர் PBS. மிக இனிமையான குரல். TMS குரல் பல பாடல்களில் மூக்கால் பாடுவது போல் இருக்கும் (சாய்ராம் அடிக்க வராதே, அதுதான் உண்மை).
    கண்ணதாசன் பாடல்களின் சுவையை விளக்கி நீ எழுதப் போவதைப் படிக்க ஆவலாயிருக்கிறேன். ---கீது

    பதிலளிநீக்கு
  4. //geetha santhanam சொன்னது…

    TMS குரல் பல பாடல்களில் மூக்கால் பாடுவது போல் இருக்கும் (சாய்ராம் அடிக்க வராதே, அதுதான் உண்மை)//


    கீது, தூங்கி எழுந்திருந்த என்னை உசுப்பி விட்டுட்டே ! விட்டேனே பாரு. எனக்கும் பி.பி.எஸ் பிடிக்கும். போன வருடம் இங்கு வந்த அம்மா அவரின் பாடலை காரிலும் / வீட்டிலும் தேய் தேய் என்று போட்டு (போட வைத்து) எனக்கு கொஞ்சம் அவர் பாட்டின் மேல் ஒரு அவேர்ஷன் வர வைத்துவிட்டாள். இப்போது என் ஐ.போனில் அவரின் பாடல் வந்தால் forward செய்யும் அளவுக்கு.

    பி.பி.எஸ் - டி.எம்.எஸ் அளவு உச்சஸ்தாயில் பாடியிருந்தால் "மூக்கு" என்னே "நாக்கே" வெளியே தள்ளி இருக்கும். யாராவது ஒரு பயலை - கெளரவம் பட பாடலை அனாயசமாக எடுக்க சொல்லேன். சீர்காழி ஒருவர் ஈடுகட்டுவார் என்று நினைக்கின்றேன். எம்.எஸ்.வி சொன்னதுபோல் பி.பி.எஸ் பாடிய முக்கால்வாசி பாடல்கள் ஹிட் அதனால் அவருக்கு பெயர். அவர் மிஞ்சி மிஞ்சி தமிழில் நூற்றுக்கணக்கில் பாடி இருப்பார். டி.எம்.எஸ் மாதிரி ஆயிர கணக்கில் இல்லை.

    டி.எம்.எஸ் மூக்கை விடு - உனக்கு சந்தானத்திடம் சொல்லி காதை சரி செய்ய சொல்லவேண்டும் போலிருக்கே !

    இது எப்படி இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. சிவாஜி நடிப்பு மாதிரி டிஎம்எஸ் குரல். சில சமயம் ஓவர் குரலாக இருக்குமே தவிர, டிஎம்எஸ் குரலில் மூக்கா? மூக்கிலிருந்து கால் வரை டிஎம்எஸ் குரலில் உணர முடியுமே? எம்ஜிஆர் ஜெய்சங்கர் போன்றவர்களுக்கு மூக்கால் சில வரிகளைப் பாடியிருக்கிறார். உண்மை தான். ஜெய்சங்கர் குரலைக் கேட்டால் ஏனென்று புரியுமே? டிஎம்எஸ் தமிழைச் சொதப்பியது எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பாடலில் தான்.

    பிபிஸ்ரீ ஜேசுதாஸ் போன்றவர்கள் மென்மையான, இனிமையான (?) குரலிருந்தும் உணர்ச்சியில்லாமல் பாடுவதால் ரசிக்க முடிவதில்லை - அல்லது கஷ்டப்பட்டு ரசிக்க வேண்டியிருக்கிறது. 'கஸ்டபடும்'.

    மென்மையான குரல் உடையவர்கள் உணர்ச்சியில்லாமல் பாட வேண்டியதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு எஸ்பிபி. எஸ்பிபி பாடுவதையும் பிபிஸ்ரீ போன்றவர்கள் பாடுவதையும் கேட்டால் உணர்ச்சியில்லாமல் பாடுவது நன்றாகப் புரியும்.

    இதே பாடலில் - 'கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு' வரிகளில் மஞ்சள் கொஞ்சும் வஞ்சி அஞ்சி கெஞ்சும் என்று தமிழழகை சொத் சொத் என்று ஒரே பாவத்தோடு கல்லில் துணி துவைப்பது போல் பாடும் பிபிஸ்ரீயை என்ன சொல்ல?! கொஞ்சம் கூட காதல் உணர்ச்சியே காணோமே? போதாதென்று திடீரென்று 'ஆசை' யில் 'ஆஷையில்லையா?' என்று 'श' போட்டுப் பாடும் போது தூக்கத்திலிருந்து கெட்ட கனவு போல் விழிப்பு வருகிறது.

    உணர்ச்சியோடு பாடுவது என்றால்? இதே பாடலில் 'பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்', 'அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா? 'பூ வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?' வரிகளில் சுசீலாவின் குரலைக் கேளுங்கள். சுசீலா 'கை வண்ணம்' என்று பாடும் போது 'கை'யை எப்படிப் பாடுகிறார் கவனியுங்கள். கேட்கும் போது தொட்ட உணர்ச்சி வருகிறதா இல்லையா? மறுபடியும் பிபிஸ்ரீ வரிகளைக் கேளுங்கள். போர்வை எங்கேடா சாமி? ஹாவ்!

    பதிலளிநீக்கு
  6. Geethu

    a) //http://www.youtube.com/watch?v=1HRga33nSRo//

    Listen to this. Durai pointed me to this song few years back. You should hear the way he says sudari, sem-maangani, I feel the kick of drinking now !

    b) http://www.youtube.com/watch?v=6-akAy3NSgQ

    this is in 2007 when he was 84 years young !! I doubt lot of current age singers will even have muchchu ? He still says the ohoho the same way at this age in this song.

    Original is this. Unfortunately Sivaji stole the show with such an inspiring style (see his left hand, shrugging of right shoulder, eyes after 2nd stanza, style of walking - each part acts - this song is again only upper part of his body!)

    http://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw

    Lot of us started on smoking habit after seeing Sivaji in this movie !!

    Sri. TMS has sang for 50 yrs from his 26 years to 73 yrs. 10171 Tamil film songs,2631 devotional, and in several light music programs !!

    பதிலளிநீக்கு
  7. இந்த தூங்குமூஞ்சி, உணர்ச்சி வாதங்களில் எனக்கு உடன்பாடில்லை. காலங்களில் அவள் வசந்தம் பாடலோ, நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ பாடலோ, துள்ளித் திரிந்த பெண் ஒன்று பாடலோ, இன்னும் எத்தனையோ பாடல்கள் பி பி. ஸ்ரீநிவாஸ் பாடல்களில் நல்ல பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை யார் பாடினால் பொருத்தமாய் இருக்கும் என்று இசை அமைப்பாளர் தான் முடிவெடுக்கிறார். சத்தமாகப் பாடுவதுதான் தகுதி என்று சொல்ல முடியுமா? இல்லை அதில் டி ஆர் மகாலிங்கத்தைதான் ஜெயிக்க முடியுமா?! எனக்கு டி.எம்.எஸ் பாடல்களும் பிடிக்கும். பி.பி.ஸ்ரீ.பாடல்களும் பிடிக்கும்..ஏன்..எம் கே டி பாகவதர் பாடல்கள் கூட பிடிக்கும்..(உன்னையே அன்புடன் வாரியணைத்து..பாடல் கேட்டிருக்கிறீர்களா?)

    பதிலளிநீக்கு
  8. //ஸ்ரீராம். சொன்னது…

    இந்த தூங்குமூஞ்சி, உணர்ச்சி வாதங்களில் எனக்கு உடன்பாடில்லை//

    "அண்ணா சொன்ன சரியாத்தான் இருக்கும்" !

    நான் மேலே சொன்னதை பற்றி அடுத்த முறை சென்னை வரும்போதோ அல்லது துரை அங்கு வரும்போதோ சொல்லறேன் ! அனேகமாக அடுத்த மாதம் வரலாம் ! வெயில் என்னை விடாது போலிருக்கு !

    எனக்கு ஸ்ரீ. பி.பி.எஸ்ஸின் பாடல்கள் பிடிக்கும். பிடிக்காது என்று சொல்லவில்லை. நீங்கள் சொன்ன பாடல்கள் எல்லாம் அருமை. அது என்னவோ டி.எம்.எஸ்ஸை அதை விட பிடிக்கும். என் சித்தப்பா பையன் யேசுதாஸ் பற்றி சொல்லும்போது அவரின் விக்கல், வாந்தி, கொட்டாவி கூட பிடிக்கும் என்பான். ஒவ்வொருவர் டேஸ்ட்.

    நேற்று ஸ்ரீ. யேசுதாஸ் அவர்களின் சில ஐயப்ப பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தேன். இந்த முறை தம்பியிடம் சுட்டது. அருமை அருமை.

    இருந்தாலும் டி.எம்.எஸ். என் உணர்வோடு / உயிரோடு ஐக்கியம் ஆனவர்

    பதிலளிநீக்கு
  9. ம்ம்ம்... துள்ளித் திரிந்த பெண் ஒன்று, அடுத்த வரி என்ன, அட!

    உணர்ச்சி வசப்பட்டு பாடுவது டிஎம்எஸ் என்றால் உணர்ச்சி குறைவாக, பல சமயம் உணர்ச்சியில்லாமலும், பாடுவது பிபிஸ்ரீ. அதற்காகக் கேட்கக் கூடாதென்றெல்லாம் இல்லை. உயர்வு தாழ்வு என்றும் இல்லை. காலங்களில் அவள் வசந்தம் - அருமையான பாடல். உணர்ச்சியில்லாமல் தான் பாடி இருக்கிறார் என்பது என் கருத்து. பிபிஸ்ரீ உணர்ச்சி கலந்து பாடிய சில பாடல்கள்: மாலையில் மலர் சோலையில், ஜாவ்ரே ஜாவ், டிகிரிகி டிகிரிகி, மாடி மேலே மாடி கட்டி, காற்று வந்தால், ஏன் சிரித்தாய், காற்று வெளியிடை, ஒடிவது போல், கன்னி வேண்டுமா, ... இந்தப் பாடல்களைத் தொடர்ந்து இரண்டு மூன்று முறைக்கு மேல் கேட்க முடியும். கா அ வ பாட்டை விட்டு விட்டு தான் கேட்க முடிகிறது.

    கத்திப் பாடுவது மட்டும் தான் பாட்டா என்று கேட்பது முறைதான். 'பாலூட்டி வளர்த்த கிளி' பாட்டின் செல்லம்மாஆஆஆஆவுக்குப் பயந்து வீட்டை விட்டு ஓடியிருக்கிறேன்; ஆனால் அது சிவாஜியின் ஓவர் ஆக்டிங்க் சீனுக்கு ஏற்ற மாதிரியான பாடல். சிவாஜியை மறந்து விட்டாலும் 'நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' வரியின் தாக்கத்தை உணர முடிகிறதே?

    பாடும் விதம் பாட்டை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. என்னதான் பீ.பீ.எஸ். என்னோட அபிமான பாடகரா இருந்தாலும் நம்ப டி.எம்.எஸ்க்கு இணையாகுமா? வெளி நாடுகள் போல நம்ப ஊர்ல அந்த காலத்துல அவ்வளவா மியூசிக் ஆல்பம் எல்லாம் கிடையாது. திரை படத்தில் நடிப்பவர்களுக்கு பின்னனி பாடுவதுதான். அதனால் யாருக்காக பாடுகிறார்களோ, அவர்களுக்கு பாடுபவர் குரல்
    பொருத்தமாக இருப்பதுதான் மிக முக்கியம். டி.எம்.எஸ். குரலை மட்டும் கேட்க வேண்டும் என்றால், அவர் பாடி உள்ள
    பக்தி பாடல்கள், 'கற்பகவல்லி நின்', 'ஓராறு முகமும்', கற்பனை என்றாலும்'... இது போன்ற பாடல்களில் கேட்கலாம். இந்த பாடல்களில் எல்லாம் கூட, பக்தி உணர்ச்சி அவர் குரலில் அற்புதமாக வெளிப்படும். பீ.பீ.எஸ். பாடிய முக்கால் வாசி பாடல்கள் ஜெமினி அவர்களுக்குதான். ஜெமினியின் கதா பாத்திரங்களும் அதிகம் அலட்டிக் கொள்ளாத ஒரே மாதிரியான குடும்ப படங்கள்தான். இவர் குரலுக்கு பின்னணி பாட, அலட்டிக் கொள்ளாத, அதிக பாவங்கள் இல்லாத ஒரு இனிமையான, அவருக்கு பொருந்தும் குரல், அதுதான் பீ.பீ.எஸ். 'மௌனமே பார்வையால்' இந்த பாடல் முத்துராமன் அவர்களுக்காக பீ.பீ.எஸ். பாடியது. இந்த பாடலை அப்படியே ஜெமினி அவர்களுக்கும் பொருந்தும், பாடுவதில் எந்த மாற்றமும் இல்லாமல். இதே நீங்கள் 'வேலாலே விழிகள்', 'மதன மாளிகையில்' இந்த பாடல்களை கேட்டால் நீங்கள் சிவாஜியை தவிர வேறு ஒருவரை இந்த பாடல்களுக்கெல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 'எங்கிருந்தோ ஆசைகள்', 'பொன்னெழில் பூத்தது புது வானில்' இந்த பாடல்களில் எம்.ஜீ.ஆரை தவிர வேறு ஒரு நடிகரை நினைத்து கூட பார்க்க முடியாது. தான் எந்த நடிகருக்காக பாடுகிறாரோ, அவரின் குரலையும், அந்த நடிகர் எந்த அளவு முக பாவத்தை, அந்த பாடலில் கொண்டு வருகிறாரோ, அந்த பாவங்களை அப்படியே தன் குரலிலும் கொண்டு வந்து அற்புதமாக பாடும் ஒரே பாடகர் டி.எம்.எஸ்.தான். இதற்கு திருஷ்டியாக 'மதுரையில் பறந்த மீன்கொடியை', 'நான் பாடிய முதல் பாட்டு', 'தன்னந்தனியாக நான் வந்த போது' என்ற சில பாடல்கள். இந்த அற்புதமான பாடல்களை எல்லாம், ஜெமினி அவர்களுக்காக இவரை பாட வைத்தது எண்ணி நொந்தே போயிருக்கிறேன். எந்த ஒரு பாடலையும், அந்த பாடலுக்கேற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் டி.எம்.எஸ். அவர்களுக்கு பாடவே தெரியாது. இதை நன்கு உணர்ந்தும், இது போன்ற அற்புதமான பாடல்களில், அவர் குரலுக்கு சற்றும் பொருந்தாத ஜெமினி அவர்களை நடிக்க வைத்தது பெரும் தவறென்று நான் அடித்தே சொல்லுவேன். இந்த பாடல்களை கேட்ட பிறகாவது, அந்த பாடல் காட்சியில் ஜெமினி கொஞ்சமாவது, உணர்ச்சி காட்டி நடிக்க முயற்சி செய்திருக்கலாம். மனிதர் பாடலின் அழகை, பாடல் காட்சியில் கெடுத்தே விட்டார். இதே 'அவளுக்கென்ன அழகிய முகம்' பாடலில் நாகேஷ் முக பாவத்தை பாருங்கள், என்ன அழகாக நடித்திருப்பார்.
    நவரசங்களையும் தன் நடிப்பில் கொண்டு வருபவர் சிவாஜி என்றால், அதை குரலில் கொண்டு வரும் ஒரே ஒரு பாடகர் டி.எம். எஸ். அவர்கள் மட்டும்தான். எல்லா விதமான பாடல்களையும் டி.எம்.எஸ். அவர்களால் பாட முடியும். ஆனால் குறிப்பிட்ட பாடல்களைதான் பீ.பீ.எஸ். அவர்களால் பாட முடியும். இதை உணர்ந்து, அவர் குரலுக்கு பொருத்தமான பாடல்களை கொடுத்து, அவரை பாட வைத்து, அதை வெற்றி பாடல்கள் ஆக்கிய பெருமை எம்.எஸ்.வீ. அவர்களைத்தான் சேரும். இதில் பீ.பீ.எஸ். அவர்களின் பங்கு என்னவென்றால் அவரின் குரலின் இனிமையும், மென்மையும்தான்.

    பதிலளிநீக்கு
  11. Meenakshi சொன்ன சரியாத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  12. பின்னிட்டிங்க meenakshi அம்மா பின்னிட்டிங்க

    பதிலளிநீக்கு
  13. அமைதி அமைதி, அமைதி!!! TMS ரசிகர்களைல்லாம் ஏன் இப்படி கொந்தளிக்கிறீங்க? TMS நல்லா பாடுவார் சரி. ஏன் ஒரு இடத்தில் மூக்கால் பாடி, ஒரு இடத்தில் மூக்கடைத்துப் பாடி, சில இடங்களில்
    முக்கிப் பாடி என்று மிமிக்ரி செய்கிறார்? பாட்டிலேயே பாதி நடிப்பதாக எண்ணி இவர் செய்த தொந்தரவாலதான் சிவாஜி overacting பண்ண நேரிட்டதோ!!!
    PBS பாடல்களில் உணர்ச்சி இல்லை என்று எப்படி சொல்லலாம்? 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...', யார் சிரித்தாலென்ன/..' பொன்ற பாடல்களில் சோகம் இழையோடவில்லையா? 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே" , 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' பாடல்களில் காதல் தெரியவில்லையா?
    'ஆண்டொன்று போனால்', 'இளமை கொலுவிருக்கும்' பாடல்களில் துள்ளல் இல்லையா?
    துரை, காற்று வெளியிடைக் கண்ணம்மா, துள்ளாத மனமும் துள்ளும் பாடல்களை மூன்று முறை என்ன, முன்னூறு முறை கேட்டாலும் அலுக்காது.
    மீனாக்ஷி, ' இதில் பீ.பீ.எஸ். அவர்களின் பங்கு என்னவென்றால் அவரின் குரலின் இனிமையும், மென்மையும்தான்.' என்று ஒரு 'தான்" சேர்த்திருக்கிறீர்களே, மென்மையும் இனிமையும் பாடகரின் சிறப்பு இல்லையா? MSV , PBS,-க்கு மட்டுமில்லை , TMS -பாடல்களுக்கும் முக்கிய plus point. TMS-பாடல்கள் ஹிட்டாவதற்கு additional-ஆக சிவாஜி என்ற great actor பெருந்துணை இருந்தார்.
    எனக்கு TMS மேல் வெறுப்பு இல்லை. அவரின் ரசிகர்கள் PBS போன்ற சிறந்த பாடகர்களை ஒன்றுக்கும் லாயக்கிலாதவர் போல் பேசுவதுதான் வருத்தம்.----கீது

    பதிலளிநீக்கு
  14. "நாணத்தாலே கால்கள் பின்ன பின்ன' என்ற பாடல் எனக்குப் பிடித்த பாடல். அதில் சிவாஜி நடிப்பதாகத்தான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில்தான் பார்த்தேன் அது ஜெய்சங்கர் நடித்தது என்று.
    TMS அவர்களின் குரல் சிவாஜிக்குக் கச்சிதமாகப் பொருந்துவது போல் PBS அவர்களின் குரல் ஜெமினி கணேஷுக்குப் பொருந்துகிறது. sivaji ruled the tamil cinema world. கூடவே TMS -ம் வளர்ந்தார். ---கீது

    பதிலளிநீக்கு
  15. அவரவர்கள் திறமையையும் தன் தேவையையும் நன்குணர்ந்து அவர்களை மிகச் சரியாகப் பயன்படுத்திய MSV அவர்களுக்குத்தான் எல்லா பெருமையும் சாரும் என்பது என் கருத்து.---கீது

    பதிலளிநீக்கு
  16. 'துள்ளாத மனமும் " என்று சொல்லிவிட்டேன். 'துள்ளித் திரிந்த' என்று சொல்லவந்தேன்.--கீது

    பதிலளிநீக்கு
  17. இது கொந்தளிப்பு இல்லை, ஒரு தனி பிரியத்தில் விட்டே கொடுக்காமல் பேசுவது. :)

    //மென்மையும் இனிமையும் பாடகரின் சிறப்பு இல்லையா?//
    அதனால்தான் பீ.பீ.எஸ். என் அபிமான பாடகர் என்றேன். இவர் பாடல்களை எப்பொழுதுமே ரசித்து கேட்பேன். குறிப்பாக, இரவு உறங்கப் போவதற்கு முன் மிகவும் கேட்க பிரியபடுவது இவர் பாடலைத்தான். 'பூஜைக்கு வந்த மலரே வா', 'நான் உன்னை சேர்ந்த செல்வம்', 'நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்', 'தோள் கண்டேன், தோளே' இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மென்மை, இனிமை, காதல், சோகம் எல்லாம் இவர் குரலிலும் அழகாக வெளிப்படும். ஆனால், இவற்றை தவிர தன் குரல் மூலம் கம்பீரம், ஆண்மை, ஸ்டைல், கிண்டல், ஆளுமை, போதை, இழப்பு, வருத்தம், அற்புதமான உச்சரிப்பு என்ற இன்னும் பல சிறப்புகளை டி.எம்.எஸ். அவர்கள் குரலில் காணமுடியும். அதனால்தான் இவரை ஒரு அற்புதமான பாடகர் என்பேன். தமிழ் திரை பட உலகை ஆண்ட மூவேந்தர்களில் ஜெமினியும் ஒருவர் இல்லையா! அப்படி இருக்கும்போது, அவருக்கு தொண்ணூறு சதவிகித பாடல்களை பாடிய பீ.பீ.எஸ். அவர்களை லாயக்கில்லாதவர் என்று எப்படி நினைக்க முடியும் கீது, சொல்லுங்கள்?

    //அவரவர்கள் திறமையையும் தன் தேவையையும் நன்குணர்ந்து அவர்களை மிகச் சரியாகப் பயன்படுத்திய MSV அவர்களுக்குத்தான் எல்லா பெருமையும் சாரும் என்பது என் கருத்து// உண்மை. இதுதான் என்னுடைய கருத்தும்.

    பதிலளிநீக்கு
  18. கொடி அசைந்ததும் காற்று வந்ததா கதை தான். யாரால் யார் வளர்ந்தார்களென்று சொல்வது கடினம். இருந்தாலும் டிஎம்எஸ்சினால் சிவாஜி எம்ஜிஆர் வளர்ந்தார்களென்று நினைக்கத் தோன்றுகிறது. 'நான் ஆணையிட்டால்', 'ஏன் என்ற கேள்வி', 'தைரியமாகச் சொல்', 'நினைத்ததை நடத்தியே', 'உன்னை அறிந்தால்', 'நாங்க புதுசா' போன்ற எம்ஜிஆர் பாடல்களையும் 'எங்கே நிம்மதி', 'என்னடி ராக்கம்மா', 'பாட்டும் நானே', 'குடிமகனே' போன்ற சிவாஜி பாடல்களையும் டி எம் எஸ் இல்லாவிட்டால் யார் பாடியிருப்பார்கள் என்று நினைக்கும் போது வெறுமை தான் தோன்றுகிறது. இது போன்ற பாடல்களினால் தான் எம்ஜிஆர் கை வீசி ஊரை ஏமாற்ற முடிந்தது. சிவாஜி தொப்பையையும் வயதையும் நடிப்பில் மறைக்க முடிந்தது. டி எம் எஸ் இல்லாமல் சீர்காழியோ சி.எஸ்.ஜெயராமனோ இவர்களை இப்படி வளர்த்திருப்பார்களா, சந்தேகம் தான். பிபிஸ்ரீ உணர்ச்சியோடு பாடிய சில பாடல்களின் கீதா சொன்ன பாடல்கள் அடக்கம் என்றாலும் துள்ளித்திரிந்த பெண் தூக்கக் கலக்கத்தில் பாடிய பாடல் என்பது என் கருத்து.

    மூவேந்தரா? சாம்பாரா? என்ன மீனாக்ஷி, உங்க கற்பனை ரீலுக்கு அளவே இல்லையா? சாம்பார் தனிக் கதானாயகனாக நடித்து வெற்றி கண்ட படங்களை விட சிவகுமார் தனிக்கதானாயகனாக நடித்து வெற்றி கண்ட படங்கள் அதிகம் தெரியுமோ? அதற்காக சிவகுமாரை மூவேந்தர்னு சொல்லிடறதா? ஆண்மைத்தனம், நடிப்புத்திறமை,குரல் வளம் இவை எதையும் வெளிப்படுத்தாமல் அசடு வழிய சிரிப்பதை வைத்தே வெற்றி கண்ட ஜெமினியின் தமிழ்ப்பட வெற்றி புரியாத புதிர்.

    தமிழ் சினிமாவுக்கு ஒரே ஒரு வேந்த(ர்)ன் தான். ரஜினிகாந்த்.

    பதிலளிநீக்கு
  19. Geethu

    http://moonramsuzhi.blogspot.com/2010/02/blog-post.html

    துரை, அருமையான சண்டைக்களம் அமைத்து கொடுத்த உனக்கு நன்றி !

    எல்லோருக்கும் ஒரே மாதிரி பாடும் பலர் இருக்க. ஒவ்வொருவருக்கும் தன்னை வருத்தி பாடிய டி.எம்.எஸ் எங்கே ? துரை சொன்ன பாடல்கள் தவிர எவ்வளவோ பாடல்கள் நான் எடுத்து வைப்பேன். பி.பி.எஸ். நல்ல பாடகர் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர் எல்லா உணர்ச்சியும் கொண்டு வர தெரியாதவர் என்பது - துரை போட்டுள்ள மேலே உள்ள பாடலில் பட்டவர்த்தமாக தெரியும். பாலையா சொல்லுவது போல் சோத்து நடை !

    சீர்காழி அவர்கள் எனக்கு டி.எம்.எஸ் பிறகு நன்கு பிடித்த பாடகர். (பி.சுஷீலாவுக்கு பிறகு).

    "ஆழம் தெரியாம காலை விட்டு" என்ற பாடலை தேடி கண்டு பிடித்து கேளு - சீர்காழி - பிண்ணி இருப்பார். (தொழிலாளி என்ற படம் என்று நினைக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  20. //geetha santhanam சொன்னது…
    அவரவர்கள் திறமையையும் தன் தேவையையும் நன்குணர்ந்து அவர்களை மிகச் சரியாகப் பயன்படுத்திய MSV அவர்களுக்குத்தான் எல்லா பெருமையும் சாரும் என்பது என் கருத்து.- கீது //

    நீ சொன்னாலும் சரியாத்தான் இருக்கும் !

    ஆபூர்வ ராகங்கள் படத்தில் வரும் "அதிசய ராகம்" பாடலை டி.எம்.எஸ் பாடி இருந்தால் - அப்படி எவ்வளவோ பாடல்கள் - சிலர் பாடினால் தான் நன்றாக இருக்கும்.

    கெளரவம் படத்தில் "கண்ணா நீயும் நானுமா" பாடலை டி.எம்.எஸ். வெளியூர் போனதால் எம்.எஸ்.வி தானே பாடி ரெகார்ட் செய்து விட்டாராம். சிவாஜி-யும் நடித்து கொடுத்து விட்டாராம். தான் பாடிய பாடலை போட்டு பார்த்து தனக்கே சகிக்காமல் இந்த பாடலை டி.எம்.எஸ் ஊரில் இருந்து வந்த பிறகு திரும்பி பாட வைத்தார்களாம் !! கேள்வி ஞானம் தான். சிவாஜி நடித்து போனபின் ரெகார்ட் செய்யப்பட்ட பாடல் என்று இந்த பாடலுக்கு பெருமை உண்டு ! இந்த பாட்டில் முதலில் "கண்ணா" என்று சொன்னதை நான் ட்ரை பண்ணி "ஆய்" வந்துடும் எனக்கு !

    பதிலளிநீக்கு