2009/07/18

கடத்தல் கல்யாணம்


திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]

அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.

இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.

கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.

சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.

சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.

இனி, கடத்தல் கல்யாணம்.


    வேர்கடலைச் சங்கத்தில் உறுப்பினர் கூட்டம் குறைந்து விட்டது. பொருளாதார நெருக்கடியா தெரியவில்லை, வேர்கடலைச் சங்கத்தில் முன்போல் இளைஞர் கூட்டம் வருவது இல்லை. இளைஞர் கூட்டத்துக்கு அஞ்சி ஒதுங்கியிருந்த 'நாற்பதுக்கு மேல்' கூட்டம் இப்போது பெரும்பாலும் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டதன் பாதிப்பு, சங்க அறை அலங்காரத்திலிருந்து மதுபானம் சாப்பாடு வரை தெரியத் தொடங்கியது. அறைகளிலிருந்த படங்கள் விலகி வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. சிற்றுண்டிகளில் உப்பு குறைக்கப் பட்டிருந்தது. மதுபான வகைகளும் குறைந்திருந்தன.

சாய், நெடுமாறன், சித்து மூவரும் உள்ளே நுழைந்த போது, மாலையை விழுங்கிக் கொண்டிருந்தது மார்கழி இரவு. உள்ளே வந்த மூவரும் திடுக்கிட்டனர்.

"என்னடா நெடு, சாவு வீட்டுக்கு வந்துட்டமா? எல்லாம் போற கேசா இருக்குதேடா?" என்றான் சாய்.

"வேர்கடலை சங்கமா, வேற ஏதாவது சங்கமா? பெர்சுங்க கொட்டமா இல்ல இருக்கு?" என்றான் சித்து.

"சமரசம் உலாவுதுடா, விடு. எகானமி தடுக்கி விழுந்திடுச்சு இல்ல? இதுங்களுக்கு நேரம். அங்க பாருடா, கந்த சஷ்டி படிக்குற கிராக்கி. நம்ம பக்கத்துல வர்றதுக்கு முன்ன ஓடிலாம்டா" என்றான் நெடு.

"இருடா, அன்புமல்லியைப் பாக்க வந்தோம். பாத்துட்டு போவோம்" என்றான் சித்து.

வழக்கமாக உட்காரும் இடத்தில் அன்புமல்லியைக் கவனித்தனர். தனியே அமர்ந்து ஸ்காச் அருந்திக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சாய், "அதோ இருக்காருடா" என்றான். "சித்து, வந்த காரியத்தை முடிச்சுகிட்டு சட்டுனு போயிறலாம், என்ன? விட்டா, அவரு ஏதாவது கதை சொல்றேனு தொடங்கிடுவாரு, ஜாக்கிரதை".

மூவரும் அன்புமல்லி அருகே வந்து அமர்ந்தனர். "எப்படி இருக்கீங்க?" என்றார் அன்பு.

"கல்யாணம் சார்" என்றான் சித்து. "நீங்க கொடுத்த ஐடியாவை வச்சு என் காதலை நிறைவேத்திக்கிட்டேன் சார்."

"அப்படியா?" என்றார் அன்பு. "என்ன ஐடியா கொடுத்தேன்?"

"அதான் சார், நீங்க உங்க மருமகன் சிவாவைப் பத்தி சொன்னீங்களே? சிகாகோல ஒரு பெண்ணை லவ் பண்ணி அவங்க அப்பா அம்மாவை பயமுறுத்தி கல்யாணம் செஞ்சுகிட்டதா சொன்னீங்களே? அதை வச்சுத் திட்டம் போட்டு இப்ப என்னோட கல்யாணமும் நடக்கப் போகுது சார். இந்தாங்க அழைப்பு. அடுத்த மாசம் கல்யாணம். நீங்க கண்டிப்பா வரணும் சார்" என்றபடி சித்து ஒரு திருமண அழைப்பை அவரிடம் கொடுத்தான். வாங்கிக் கொண்ட அன்புமல்லி, "சந்தோசம், வாழ்த்துக்கள்" என்றார்.

"ஓடிறலாம்டா" என்றான் சாய், மெதுவாக.

"ஆமா, இப்ப ஞாபகத்துக்கு வந்திடுச்சு. காசு சேத்தபின்னே கட்டிக்கலாம்னு உன் காதலி சொன்னதா சொல்லி ஐடியா கேட்டே, ஞாபகம் வந்திடுச்சு"

"கழண்டுக்க" என்றான் சாய், மறுபடி.

"என்ன செஞ்சே? விவரமா சொல்லு" என்றார் அன்பு.

"நேரமாயிடுச்சுல்ல நெடு? நீ எங்கியோ போவணும்னு சொன்னியே?" என்றான் சாய். "நானா, இல்லியே?" என்ற நெடுவின் காலில் செருப்பை வைத்து அழுத்தினான்.

"கலாவைக் கடத்திக்கிட்டு போய் அவ அப்பா அம்மாகிட்டே கல்யாணம் செஞ்சு வைக்க மிரட்டினோம்; அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. எல்லாம் உங்க ஐடியா தான் சார்" என்றான் சித்து நெகிழ்ந்து போய்.

"அடடா, வெரி குட். வெரி குட். இப்ப எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு. என் அத்தை பையன் கஜா இப்படித் தான்" என்று தொடங்கினார் அன்பு.

"முன்னாலயே சொல்லிட்டீங்க சார்" என்றான் சாய்.

"இல்லடா, சொல்ல ஆரம்பிச்சாரு. கதை எங்கடா சொன்னாரு?" என்றான் நெடு.

"கூமுட்டை" என்றான் சாய், உரக்க.

அன்புமல்லி எழுந்து, "உக்காருங்கப்பா. உலகமே காதல்ல தான் இயங்குது. காதல் கதையெல்லாம் பொறுமையா சொல்லணும், கேக்கணும்" என்று மூவர் தோளையும் அழுத்தி உட்கார வைத்தார். சிற்றுண்டி பானம் தரவழைத்தார். "என்னோட அத்தை பையன் கஜா... என்ன உதவி வேணும்னாலும் என் கிட்டே தான் வருவான். இப்படித்தான் ஒரு நாள்" என்று சொல்லத் தொடங்கினார்.

ஜா என் அத்தையின் கடைக்குட்டி.

ஈர்குச்சி தலையில ஒரு வேர்கடலை வச்சுப் பாத்தீங்கன்னா கஜா மாதிரியே இருக்கும். அவன் அத்தனை ஒல்லி. பிறந்த போது அவனை எடுத்த டாக்டர், "இங்கே தான் வச்சேன், காணோமே?" என்று ஒரு மணி நேரம் அவனைத் தேடினதாகக் கேள்வி. கஜா சின்ன பிள்ளையா இருந்தப்ப, என் அத்தை வீட்டுல வேகமா விசிறக் கூட மாட்டாங்க. "என்னப்பா, உங்க வீட்டுல உனக்கு சாப்பாடு போடுறாங்களா இல்லையா?" "பாத்துபா, வெளிலே காத்து பலமா அடிக்குது, நீ வேறே இப்ப ஏன் வெளில போவணும்றே?" "மண்டை மட்டும் பெரிசா இருக்கு, கை கால் உடம்பெல்லாம் வரைஞ்சாப்புல இருக்கே?" என்று அவனைப் பற்றிக் கேட்காதவரோ கிண்டல் செய்யாதவரோ கிடையாது. ஒவ்வொரு தீபாவளிக்கும், வீட்டில் மற்ற பிள்ளைகளுக்குத் துணி வாங்கி தைச்சது போக மிச்சமிருக்கும் துணியில் கஜாவுக்கு இரண்டு மூன்று டிரவுசர் சட்டைங்க தைச்சுடுவாங்கன்னா பாத்துக்குங்க. பள்ளிக்கூட சயன்ஸ் டீச்சர் எலும்புக்கூட்டுக்கு பதிலா அவனை நிக்க வச்சு பாடம் நடத்தியிருக்காங்க.

இத்தனைக்கும் அவனுக்கு சாப்பாட்டிலோ எதிலுமே குறை வைக்காம அன்பாத்தான் நடத்தினாங்க அத்தையும் மாமாவும். இருந்தாலும் உடல்வாகு சரியாக அமையாம போனதுனால சின்ன வயசுலருந்தே அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. அவனை விட நான் பனிரெண்டு வயது பெரியவன் என்பதால் என்னோட மட்டும் நெருங்கி நம்பிக்கையாப் பழகுவான். அவனுக்குப் பத்து வயசோ என்னவோ இருக்கும்... நான் மேல் படிப்புக்காக லன்டன் போயிருந்தேன்.

"நிறுத்துங்க சார்" என்று மறித்தான் நெடு. "குருநானக்ல பிஎஸ்சி பாடனி படிக்கவே நீங்க ததிங்கிணத்தோம் போட்டதா சொல்றாங்க, இதுல எங்கே லன்டன் போனீங்க? இதானே வேணாங்கறது?" என்றான். "காதெல்லாம் மணக்குது சார்".

"நீ கேள்விப்பட்டது சரி தான். லன்டன் படிக்கப் போனதும் உண்மை தான். அது வேறே கதை" என்றார் அன்புமல்லி.

பதறிப் போன சாய், "ஏண்டா டேய், உனக்கு அறிவு கிறிவு செதறிப் போச்சா?" என்று நெடுவை இடித்தான். அன்புமல்லியைப் பார்த்து, "சீக்கிரம் இந்தக் கதையைச் சொல்லி முடிங்க சார்" என்றான்.

அன்புமல்லி தொடருமுன் முட்டைக்கோஸ் பகோடா, வெந்த வாழைத்தண்டு பஜ்ஜி, மாங்காய் இஞ்சி-தக்காளிப் பச்சடி, வியாழக்கிழமை வழக்கப்படி பாதாம் சட்டினி, பீட்ரூட் குல்கந்து, சாத்துகுடி ஜூஸ், அன்புமல்லிக்காக சர்க்கரை கலக்காத காபி என்று சிற்றுண்டி, பான வகைகளைக் கொண்டு வைத்தான் பணியாள். "மணமும் நிறமும் தூக்குது, ஒரு கை பாருங்க எல்லாரும். சிங்காரம், இந்தா வச்சுக்க" என்று ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்த அன்புமல்லி, பொன்னிறத்தில் முறுகலான ஒரு வாழைத்தண்டு பஜ்ஜியை எடுத்து சற்று நேரம் புரட்டிப்பார்த்து ரசித்து விட்டு, சட்டினியிலும் பச்சடியிலும் மாற்றி மாற்றி இரண்டு மூன்று முறைத் தோய்த்தெடுத்து சற்றே ஒலியெழும்பக் கடித்து ரசித்து மென்றபடி, தொடர்ந்தார்.

லன்டன்லந்து திரும்பி வந்து வருசக்கணக்குல சென்னையிலேயே தங்கிட்டனா? எதுனா கல்யாணம் காரியம் தொட்டு மட்டும் ஊர்ப்பக்கம் போனதாலே சொந்தக்காரங்களோட கொஞ்சம் தொடர்பு விட்டுப் போயிடுச்சு.

திடீர்னு ஒரு நாள் ராத்திரி என் வீட்டு வாசல்லே வயசுப் பையன் ஒருத்தன் வந்து நின்னான். அவன் வச்சுக்கிட்டிருந்த ஈஸ்ட்மென் கலர் தாடி மீசை அரை இருட்டுல பயமுறுத்தினாலும், குச்சி உடம்பும் வேர்கடலைத் தலையும் காட்டிக் கொடுத்துடுச்சு. பேன்ட் சட்டை போட்டிருக்கான், அவ்வளவு தான். "கஜா, வா, வா, உள்ளே வா" என்று அவனை அழைத்து மின்விசிறியை நிறுத்தினேன். "மன்னிச்சுடுபா, பழக்க தோசம். இப்ப கொஞ்சம் ஒடம்பு தேறிடுச்சு போலிருக்கே?" என்றேன்.

"அன்பண்ணா, நீ தான் எனக்கு உதவி செய்யணும்" என்றான். வாழ்த்து விசாரணை எல்லாம் ஒதுக்கிவிட்டு நேரே விசயத்துக்கு வந்தான்.

"என்ன சொல்லு?"

"ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். நீ தான் எப்படியாவது அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கணும்". மறுபடியும் நே வி வந்தான்.

சாதாரணமாகவே காதல் பிரச்சினை என்றால் உதவத் தயாராக இருக்குறவன் தானே நான்? அதுலயும் என்னோட சொந்த அத்தை மகன் கேட்டா மாட்டேனு சொல்வனா? அதுலயும் என்னோட அத்தை பிள்ளைங்கள்ளயே கஜா எனக்கு மிகவும் பிரியமானவன். இருந்தாலும் இவனை யார் காதலிக்கப்போறாங்க என்று எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது. "யாருடா பொண்ணு?" என்றேன்.

"என்னோட அத்தை பொண்ணு சுபா" என்றான்.

சுபா. எனக்கு லேசாக நினைவுக்கு வந்தது. அந்தப் பெண்ணை சின்ன வயசுல பார்த்திருக்கிறேன். சில வருசங்களுக்கு முன்னால் ஒரு கல்யாணத்தில் பார்த்த நினைவும் வந்தது. அழகான பெண்ணை 'கிளி போல் இருப்பாள்'னு சொல்றோம், இல்லையா? சுபா உண்மையிலேயே கிளி போலத்தான் இருப்பாள். கண்கள் இரண்டும் முகத்தின் இரு மூலையில் இருக்க, பெரிய மூக்கு நுனியில் நன்றாக வளைந்து கிளி போலவே இருப்பாள். போதாக்குறைக்கு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வாள். "என்னம்மா எப்படி இருக்கே?" என்று கேட்டால், "நல்லா இருக்கேன், நல்லா இருக்கேன், நல்லா இருக்கேன்" என்று பல முறை சொல்வாள். அடுத்த கேள்வி கேட்கும் வரை நிறுத்த மாட்டாள். ஒரு முறை வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர் தெரியாத்தனமாக "உன் பெயர் என்ன பாப்பா?" என்று கேட்க, "என் பேரு சுபா" என்று வலிய அவரைத் தொடர்ந்து சென்று இருபது முறைக்கு மேல் சொன்னதாகவும், வந்த விருந்தினர் இவளை நிறுத்த வழி தெரியாமல் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டதாகவும் என்னுடைய அத்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

"யாருடா, கிளி மூக்கு சுபாவா?" என்றேன்.

கஜாவின் முகம் கறுத்தது. ஏற்கனவே அவன் கறுப்பு நிறம் தான் என்றாலும், இப்போது கன்னத்தில் அத்தனை கறுப்பும் சேர்ந்து அறையில் வெளிச்சம் மங்கி கரன்ட் போய் லோ வோல்டேஜில் திரும்பி வந்தது போல இருந்தது. "அன்பண்ணா, அவளைக் கிண்டல் செய்யாதே" என்றான்.

"செய்யல. சுபா உன் அத்தை பொண்ணு தானே? உன் அத்தை மாமா கிட்டே சொல்லி கல்யாணம் செய்துக்க வேண்டியது தானே?" என்றேன்.

"எங்க அத்தைக்கும் மாமாவுக்கும் என்னைப் பிடிக்காது" என்றான்.

"ஏம்பா? உனக்கென்ன குறை? அதான் எக்கச்சக்க சொத்து இருக்குதே?" என்றேன். என்னுடைய தாத்தா என் அத்தைக்கு எழுதிய நிலம் நகைக்கு மேல், புகுந்த வீட்டில் என் அத்தையின் கணவர், அதான் என் மாமா, பரம்பரை மிராசுதார்.

"நான் பாக்குறதுக்கு கறுப்பு, உடல்வாகும் இல்லேனு சொல்றாங்க" என்றான்.

"கிளிமூக்கு கிளிநாக்கு பொண்ணைப் பாக்குறப்ப நீ எவ்வளவோ மேல்" என்று சொல்ல வந்தேன். அடக்கிக் கொண்டேன்.

"படிப்பு வேறே இல்லனு சொல்றாங்க" என்றான்.

"ஏண்டா, நீ தான் ப்ளஸ்டூ பாஸ் பண்ணிட்டயே?" என்றேன். அந்தப் பெண் பத்தாவது கூட படித்தாளா என்று சந்தேகம் தான், இருந்தாலும் கேட்கவில்லை.

"நல்லா படிச்ச பையனா சுபாவுக்கு பாக்கணும்னு எங்க மாமா சொல்றாரு" என்றான்.

"சரி, சுபாவுக்கு உன் மேலே காதல் உண்டா?"

"நிச்சயமா அண்ணா. அதனால தானே.." என்று அவன் சொல்லி முடிக்குமுன், "அப்ப இது என்னப்பா கூத்து? இத்தனை சொத்து இருக்கு. சொந்தம் வேறே. அதையெல்லாம் பார்க்காமே... நீ என்ன பொறுக்கியா ரவுடியா? நல்ல குணமான பையன்..ஒருத்தருக்கொருத்தர் விரும்புறீங்க. இதுக்கு மேலே என்ன வேணும்?" என்றேன்.

"ஒரே ஒரு தடவை ஜெயிலுக்குப் போனதை காரணம் காட்டி முடியாதுனு சொல்றாங்க" என்றான்.

திடுக்கிட்டேன். "ஜெயிலுக்கு போனியா?"

"என்னோட மாமாவை எனக்குப் பிடிக்காதுனு தான் உனக்குத் தெரியுமே அன்பண்ணா. ஒரு தடவை அம்பீஸ் ஹோட்டல் வெளியே ஒரு டிவிஎஸ் பைக்கு இருந்திச்சு. எங்க மாமாவுடைய வண்டி போலவே இருந்ததால சத்தம் போடாம ரெண்டு டயர்லயும் ஆணி ஏத்திட்டு வந்தேன். ஆனா அது ஒரு இன்ஸ்பெக்டர் வண்டி. திருடனைப் பிடிக்க மப்டியிலே ஹோட்டலுக்கு வந்திருந்தாராம். எனக்கு எப்படி தெரியும்?"

"டயர்ல ஆணி ஏத்துனதுக்கா ஜெயில்லா போட்டாங்க?"

"இல்ல. என்னை அடிக்க வந்த வண்டிக்காரனை போலீசுனு தெரியாம நல்லா அடிச்சு போட்டேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை அடிச்சதுக்காகவும், வண்டியை நாசம் செய்த காரணத்துக்காகவும் திருடனோட கூட்டாளினு என்னைப் பிடிச்சு ரெண்டு நாள் உள்ளே தள்ளிட்டாங்க" என்றான்.

"பலே பலே" என்றேன். "போலீஸ் இன்ஸ்பெக்டரை அடிச்சுப் போட்டியா? பாத்தா ஒட்றை மாதிரி இருக்கே? நம்ப முடியலயேபா?"

"ரெண்டு மூணு கல்லை எடுத்து குறி வைச்சு அடிச்சேன். மூக்கிலயும் மண்டைலயும் புண்ணாக்குலயும் குறி வச்சு அடிச்சு ரத்தம் வர மாறி ஆயிடுச்சு. அண்ணா... நான் குறி வச்சேன்னு வை, எதுவுமே தப்பாது. நீ சும்மா ஒட்றைனு சொல்லிக்கிட்டிருக்காதே" என்றான்.

"அப்ப திருட்டு, கொலை ரெண்டு தான் பாக்கினு சொல்லு. அதையும் செஞ்சுட்டா ஒண்ணு சாமியாராயிடலாம் இல்லே சீப் மினிஸ்டராயிடலாம்" என்றேன்.

"ஒரு விதத்துல கொலை மட்டும் தான் பாக்கினு சொல்லணும்ணா" என்றான் மெதுவாக.

"அடப்பாவி, என்ன திருடினே?" என்றேன். கஜா மேல் எனக்கு ஒரு புது மதிப்பே வந்தது.

"சுபாவை இழுத்துக்கிட்டு ஓடி வந்துட்டேன். அவங்கப்பன், அதான் என் மாமன், சுபாவைக் கடத்திட்டு வந்துட்டதா போலீஸ்ல புகார் கொடுத்துட்டான். பேப்பர்ல வேறே என் போட்டோவை போட்டு சன்மானம் கொடுக்குறதா சொல்லியிருக்கான். இதோ பார்" என்று தினமலர் உள்ளூர் பிரதியைக் காட்டினான்.

"அதான் தாடி மீசையா? பச்சைக் கலர்லே தாடி எவனாவது வைப்பானா? யோசிக்க மாட்டியா?" என்றபடி தினமலரை வாங்கிப் பார்த்தேன். அதிர்ந்தேன். பேப்பரில் அவன் போட்டோவை பார்த்ததால் அல்ல. பேப்பரை நீட்டுமுன் அவன் சொன்னது உறைத்ததால். "எங்கடா, சுபா எங்க இருக்கா இப்போ?"

"வெளியில தான், நான் சொல்ல வரதுக்குள்ள நீ கேள்வி மேலே கேள்வியா கேட்டு..." என்று சொல்லிக் கொண்டிருந்தவனைப் பொருட்படுத்தாமல் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். அரை இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. "எங்கடா.." என்று கேட்கும் போது வெளி கேட் அருகே சுவர் அசையறாப்புல இருந்துச்சு. அந்த சுவர் என்னைப் பார்த்து வருவதைப் பார்த்து இன்னும் அதிர்ந்தேன். அது சுவர் இல்லை, சுபானு தெரிந்ததும் பயந்தே போனேன்.

"இவளாடா?" என்றேன் கஜாவிடம்.

"ஆமாண்ணா.. நீ அவளை எப்ப கடைசியா பாத்தே? கொஞ்சம் சதை போட்டிருக்கா அவ்வளவு தான்" என்றான்.

"கொஞ்சமா, என்னடா இது? அழிச்சா நாலு சுபா பண்ற அளவுக்கு கிழக்கு மேற்கா வளர்ந்திருக்கா, ஆமா இவளை எப்படிரா இழுத்துக்கிட்டு ஓடி வந்தே? இழுக்க முடியற மாதிரியா இருக்கா? ஆள் மோதி லாரி மரணம்னு சொல்லிக் கேட்டிருக்கேன், இவளை வச்சுத் தான் சொன்னாங்க போ..." என்று நான் சொல்லிக் கொண்டே போக, கஜா என்னைத் தடுத்தான். "அண்ணா, அவ என் காதலி, அவளைப் பத்திக் கிண்டலா பேசுறது நல்லா இல்லே. இன்னொரு வார்த்தை கிண்டலா சொன்னே.." என்றபடி அருகிலிருந்த ஒரு பேப்பர் வெயிட்டை எடுத்து உருட்டினான்.

அவனுடைய குறியைப் பற்றி முன்னமே சொல்லியிருந்ததால் கொஞ்சம் தயங்கி, "சும்மா சொன்னேம்பா. அதை அங்கியே வை" என்று நான் சொல்லி முடிக்கவும், சுவர் அதாவது சுபா அசைந்து அசைந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவளைப் பார்த்ததும் எனக்கே கொஞ்சம் பாவமாகி விட்டது. "என்னம்மா, வெளியிலயா நிக்குறது? உள்ளே அவனோட வர வேண்டியது தானே? உள்ளே வா" என்றேன்.

கிளி மூக்கு சுபா சுவர் போல இருந்தால் என்ன? அண்டாத் தலை கஜா குச்சி போல் இருந்தால் என்ன? அவர்களுக்குள் காதல் வளர்ந்து கொழுக்கட்டையாகி இருக்கிறது என்பது தானே முக்கியம்? உதவி கேட்டு என்னிடம் வந்தவர்களை எப்படி கைவிட முடியும்? அதுவும் காதல் நிறைவேற உதவி கேட்டு வந்திருக்கிறார்கள், விட முடியுமா?

வாசக்காலை உடைக்காமல் பக்கவாட்டாக உள்ளே வந்தவள், என்னைப் பார்த்து புன்னகைத்தாள். "உன்னை நம்பித்தான் வந்திருக்கோம் அன்பண்ணா" என்று அவள் சொன்னதைக் கேட்டதும் கோடைகாலக் கிணற்று நீர் போல் என் கிண்டலெல்லாம் வற்றி விட்டது என்றாலும், அவள் திரும்பத் திரும்ப அதையே சொல்லத் தொடங்குவதற்குள் முந்திக் கொண்டேன். "சரி, தெருக்கோடி ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வரேன். சாப்பிட்டு இன்னிக்கு இங்கியே படுத்து தூங்குங்க. காலைல எந்திரிச்சு யோசிக்கலாம்" என்றபடி அவர்களை ஒரு அறையில் தங்கச் செய்துவிட்டு வெளியே வந்தேன். ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வரும் சாக்கில் ஊரில் என் அத்தையுடன் தொலை பேசினேன். அன்போடு பேசினார்.

"நீயே உருப்படாத பய. உன்னாண்ட தான் வந்திருக்காங்களா ரெண்டு பேரும்? கழுதை கெட்டா குட்டிச்சுவரு. சரியாத் தான் இருக்குது. குட்டிச் சுவருன்னதும் தோணுது. அவளை அங்கியே விட்டுறு, எதுனா லாரி கீரி மோதி நொறுங்கட்டும். ஒரு குழி தோண்டி கஜாவை ஆழம் பாக்க இறங்க சொல்றதா சொல்லிட்டு கபால்னு மண்ணைப் போட்டு மூடிறு. இனி எனக்கு போன் செய்யாதே" என்ற போனை வைத்த என் அத்தையின் குரலில் தொனித்த ஆதரவைக் கேட்டு நெகிழ்ந்து போனேன். உடனே அவர்களை ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

ழியெல்லாம் சுபாவும் கஜாவும் என்னுடன் பேசப் பிடிக்காமல் முறைத்துக் கொண்டே வந்தார்கள். கம்பார்ட்மென்ட் பகுதியில் என்னைத் தவிர சுபாவும் கஜாவும் தான். பாண்டியன் எக்ஸ்பிரஸ் வழக்கத்தை விட மெதுவாகச் சென்றதால் அருகிலிருந்த பயணிகள் சுபாவை அடிக்கடி முறைத்துப் பார்த்தனர், என்னவோ அவள் தான் காரணம் போல. கஜாவின் மீசை தாடியை வருவோர் போவோரெல்லாம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விருத்தாசலத்தில் வண்டி ஏறிய குடும்பத்தின் ஒரு பெண் குழந்தை, அவனைப் பார்த்து விட்டுத் தொடங்கிய அழுகையைத் திண்டுக்கல்லில் அவர்கள் இறங்கிப் போகும் வரை நிறுத்தவில்லை. பால் குடிக்காமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த இன்னொரு குழந்தையை அதன் தாய் எங்கள் காதில் விழும்படி, "டேய், சாப்பிடுறயா இல்லை பக்கத்து செக்சன்ல பிள்ள புடிக்கறவன் இருக்கான், அவனைக் கூப்பிடட்டுமா?" என்று மிரட்டிக் கொண்டிருந்தாள். "என்னடா இது, மீசை ஒரு கலர்லயும் தாடி ஒரு கலர்லயும் வச்சுகிட்டு வந்தா மசான கொள்ளை விழாவுக்கு வந்த மாதிரி இருக்கு. குழந்தை என்னடா, எனக்கே கூட பயமா இருக்குது" என்றேன். அவன் யார் பேச்சையும் பொருட்படுத்தவில்லை. மீசை தாடியையும் கழட்டவில்லை. சுற்றாமல் சண்டி செய்த மின்விசிறியைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். டிக்கெட் கேட்க வந்த டிடிஆர் அவனைப் பார்த்துவிட்டு பயந்துபோய் மெள்ள பின்பக்கமாகவே நடந்தபடி அந்த கம்பார்ட்மென்டில் யாரிடமும் டிக்கெட் கேட்காமல் போனவர், திரும்பி வரவேயில்லை.

ஊர் வந்து சேர்ந்தும் கஜா மீசை தாடியைக் கழட்டவில்லை. முதலில் வந்த டாக்சிக்காரன் கஜாவின் பலவண்ண மீசை தாடியைப் பார்த்ததும் நிறுத்தாமலே போய்விட்டான். பிறகு வந்த டாக்சிக்காரன் சுபாவைப் பார்த்ததும் இருபதடி தொலைவிலிருந்தே ஒதுங்கி வேகமெடுத்தான். கடைசியாக ஒரு வேன் டிரைவர் எங்களை ஏற்றிக் கொண்டு என்னருகே வந்து ரகசியமாக "அந்த அம்மாவுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ்" என்றான். ஏறிக் கொண்டு, "திருப்பரங்குன்றம் போப்பா" என்றேன்.

பசுமலை தாண்டியதும் கஜா என்னுடன் பேசத் தொடங்கினான். "அண்ணா, நீ பாட்டுக்கு எங்களை இங்கே கூட்டியாந்துட்டியே. அவங்க அப்பா வேறே போலீஸ்ல புகார் கொடுத்திருக்காரு. எனக்கு பயமா இருக்கு".

தரமான புன்னகை ஒன்றை அவன் பக்கமாக வீசினேன். "அத்தை தான் உங்களை உடனே கையோட கூட்டியாரச் சொன்னாங்க. சொந்த ரத்தமும் நரம்பும் விட்டுப் போவுமா? நீங்க ரெண்டு பேரும் என்னைப் பாக்கத்தான் வந்தீங்கன்னு சொன்னதும் அப்படியே உருகிப் போயிட்டாங்க. என்னைப் பத்தியும் உங்களைப் பத்தியும் ரொம்ப சாரிச்சுட்டு, அடுத்த ரயிலேறி வரச்சொன்னாங்க. வந்த உடனே ரெண்டு பக்கமும் கலந்து பேசி, கல்யாணம் செய்து வக்கறதா சொன்னாங்க"

"எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை" என்றார்கள் இருவரும், ஒரே நேரத்தில். இது அல்லவோ காதல்!

"கவலைப் படாதீங்க" என்றேன். கஜாவிடம் "முதலில் சுபா வீட்டுக்குப் போவோம். அவளை வீட்டுல சேத்தபின்னே நம்ம வீட்டுக்குப் போவோம்" என்றேன்.

சுபா வீட்டில் எங்களைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒரே சந்தோசம். ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். சுபாவின் அப்பா என் கையைப் பிடித்து குலுக்கிய குலுக்கலில் இரண்டு மூன்று நகங்கள் பெயர்ந்து விட்டன. அவளுடைய அம்மாவும் அப்பாவும் எங்களை வரவேற்ற விதத்தைப் பார்த்ததும் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. "என்னடா இப்படி செய்யலாமா?" என்று சுபாவின் அம்மா கஜாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். சுபாவின் அப்பாவோ "மாப்பிள்ளை" என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கத் தொடங்கினார். "உள்ளே வாங்க" என்று எங்களை அழைத்துச் சென்றனர்.

"என் பெண்ணை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்ததற்கு ரொம்ப நன்றி, அன்பு" என்று என் கையை மறுபடி குலுக்க வந்தார் சுபாவின் அப்பா. ஒதுங்கிக் கொண்டு, "பரவாயில்லை, இது என் கடமை. சிறிசுங்க விரும்பினாங்கன்னா நாம அவங்க விருப்பத்தை நடத்தி வைக்கணும். இவங்க கல்யாணத்துக்கு நீங்க தடையா இருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். வழியெல்லாம் அதான் இவங்க கிட்டே சொல்லிக்கிட்டே வந்தேன்" என்றபடி சுபாவையும் கஜாவையும் பார்த்தேன். அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றாலும் என்னைப் பார்த்த பார்வையில் நன்றியும் பெருமையும் இருந்தது.

"ஆமாமா, இப்படி ஓடிப் போயிருவாங்கன்னு தெரியாமப் போயிடுச்சே. நீங்க வீட்டுக்குப் போங்க தம்பி. கஜா, நீயும் தான். நாளைக்கு நாங்க பரிசம் போட வந்துடறோம் என்ன? என் மச்சான் என்ன எதிர்த்தாலும் நான் பாத்துக்கறேன்" என்றார் சுபாவின் அப்பா. "ஆமாம் கஜா, உன் அத்தை நான் இருக்கேன். எல்லாம் பாத்து ஏற்பாடு செய்யுறேன். வீட்டுக்கு போய் அண்ணங்கிட்டே சொல்லுங்க போங்க" என்றாள் சுபாவின் அம்மா.

நானும் கஜாவும் வீட்டுக்கு வந்தோம். இங்கேயும் வரவேற்பு பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம். வரும்போதே அத்தை "குட்டிச்சுவரும் கழுதையும் ஒண்ணா வருதே" என்றார். என் மாமனோ ஒரு செருப்பை எடுத்து எங்கள் பக்கம் வீசினார். "வாடா பொறுக்கி. என் மானத்தை எடுக்க வந்த கோடாலிக் காம்பு" என்று அன்புமொழியுடன் இன்னொரு செருப்பை எடுத்து கஜா பக்கம் வீசினார். முதல் செருப்பு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த ஒரு சிறு பெண் தலையிலும், இரண்டாவது செருப்பு பழைய துணிக்குப் பாத்திரம் விற்றுக் கொண்டிருந்த ஒரு ஆள் தலையிலும் விழுந்தது. "பழைய பாத்திரம் தேவையில்லேன்னு வாயில சொல்லுங்கண்ணே, செருப்பாலயா அடிக்குறது? இந்த மருதக்காரகளே இப்படித்தேன்" என்று புலம்பிக் கொண்டே போனான். சிறு பெண்ணோ சைக்கிளைப் போட்டுவிட்டு, "ஆத்தா ஆத்தா" என்று கத்திக் கொண்டே எதிர் வீட்டுக்கு ஓடினாள்.

இவருடைய மகனா கஜா? குறி தப்பாமல் போலீசை அடித்துப் போட்ட மகனின் குறி எங்கே, எதிரில் இருப்பவரை விட்டு எல்லாரையும் அடித்த தந்தையின் குறி எங்கே? "நல்ல குறி மாமா" என்றபடி கஜாவை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். "எங்கடா, எங்க வீட்டுக்குள்ளாற போறீங்க?" என்றபடி என் பின்னாலேயே ஓடி வந்தார்கள் அத்தையும் மாமாவும்.

"அத்தே... இப்ப என்ன ஆயிபோச்சு? உங்க பையன் கஜா. உங்க மருமக சுபாவை விரும்புறான். இதுல என்ன குறை கண்டீங்க? சொத்தும் பத்தும் சொந்தத்துக்குள்ளே நிக்கப் போகுது. இவனுக்கும் வயசாயிடுச்சு. அவளுக்கும் வயசாயிடுச்சு. ஆனா உங்க அனுமதியோடத் தான் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறாங்க. அதை பெரியவங்க நீங்க பாத்து நடத்த வேணாமா? போவுது விடுங்க அத்தை. உங்க நல்ல மனசு எனக்குத் தெரியாதா?" என்று இன்னொரு கோணத்தில் பேச்சைத் தொடங்கினேன்.

"அத்தை கூட எங்களை ஏத்துக்கிட்டு பரிசம் போட வரதா சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா செருப்பால அடிக்கிறீயளே?" என்றான் கஜா.

"என்னடா சொன்னே? பரிசம் போட ஒத்துக்கிட்டாங்களா?" என்றார் இந்த அத்தை. எல்லா விவரத்தையும் சொன்னோம்.

"சரி, இவன் தலை விதி இவ்வளவு தான். கட்டின பிறகு கோபம் வந்து அவ கொஞ்சம் தவறிப் போய் இவன் மேலே உக்காந்தா இவன் சட்டினி" என்றார் மாமா. "சரி சரி, சாப்பிட்டுப் படுங்க. காலையில் பாப்போம்".

றுநாள் காலை பத்து மணி சுமாருக்கு எழுந்தேன். பல் விளக்கி, காபி குடித்து விட்டு அத்தை கொடுத்த இரண்டு இட்டிலி, வெங்காயச் சட்டினி, மெதுவடை, பொங்கல் எல்லாவற்றையும் விழுங்கினேன். இன்னொரு கப் காபி குடித்து விட்டு, "கஜா எங்கே?" என்றேன்.

"சுபா வீட்டுக்குப் போயிருக்கான். நீ சொன்னது போல அவங்க பரிசம் கேட்டு வந்தாங்கன்னு வை, எதுனா பதிலுக்கு செய்யணும். பூ பழம் வாங்கியாங்கன்னு மாமனையும் இப்பத்தான் அனுப்பி வச்சேன். நீ எப்படி இருக்கே? நீ ஒரு கல்யாணம் கட்டிக்கிட்டா அண்ணன் ஆத்மா சாந்தியாவும், ம்ம்ம்ம்" என்று பெருமூச்சு விட்டார்.

"என்னை விடுங்க அத்தே. நீங்க போன்ல அப்படிப் பேசினதும் இவங்க கிட்டே எதுவும் சொல்லாம பயந்துகிட்டே வந்தேன். நல்ல வேளையா சுபா வீட்டுல சுமுகமா போயிடுச்சு. பிழைச்சோம். உங்களுக்கு இந்தக் கலியாணத்துல ஒரு குறையும் வராது பாருங்க. ரெண்டு பேரும் அமோகமா இருப்பாங்க" என்றேன்.

"எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலை. பொய்யா சொல்லப் போறேன்? ஆனா இவன் என் மகன். பேரைக் கெடுத்துக்கிட்டுத் திரியாமே இருந்தா சரிதான்" என்று என் அத்தை சொல்லி முடிக்கவும் கஜா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

மிகக் கோபமாக உள்ளே வந்தான். "உன்னை நம்பி வந்தோம் பாரு, என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்ணா" என்றபடி, என் மேல் எறிவதற்கு இசைவாக ஏதாவது இருக்கிறதா என்று தேடினான்.

"என்ன ஆச்சு?" என்றேன்.

"அத்தை வீட்டுக்குப் போனனா? அங்கே சுபாவைக் காணோம்."

"எங்கனா கடைக்குப் போயிருப்பா"

"அத்தை மாமா கிட்டே பரிசத்துக்கு எப்ப வரீங்கனு கேட்டேன். கண்ணகி கோயில் பேயாட்டம் சிரிச்சாங்க அத்தை. மாமா ஒரு கட்டையைத் தூக்கிக்கிட்டு என்னை அடிக்க வந்தாரு. இனி இந்தப் பக்கம் வந்தா கொலை விழும்னு சொன்னாரு" என்றான்.

"என்னடா இது.." என்றார் அத்தை.

"ஆமாம். அதுக்கு மேலே அண்ணா நீ அந்தப் பக்கம் எங்கனா வந்தீன்னா உன் கையையும் காலையும் துண்டு துண்டா ஒடச்சு கண்ணகி கோவிலுக்கு மாலை போடறதா வேண்டிக்கிட்டாங்க அத்தை. அதனால நீ உடனே அங்கன போ. எங்க கலியாணத்தைத் தான் கெடுத்தே. அவங்க வேண்டுதலையாவது நிறைவேத்து போ" என்றான் கோபம் தணியாமல்.

"பதறாம பேசுடா... சுபாவைப் பாத்தியா?"

"அதான் சொன்னனே, சுபா அங்க இல்லைனு. பிறகு குத்தகை நில பங்களாவுக்கு ஓடினேன். அங்கே சுபாவை கைதியாட்டம் அடச்சு வச்சிருக்காங்க. என்னைப் பாத்து சன்னல்லேந்து கத்தினா"

"அவ கெத்துக்கு சுவரை உடைச்சுக்கிட்டு வரவேண்டியது தானே?" என்றார் அத்தை.

"நீ சும்மா இரும்மா. உங்க சொத்து பத்து எதுவும் வேணாமுன்னு தானே ஓடினோம்? சுபா அப்பவே சொன்னா வேறே எங்கனா போவம்னு. நாந்தேன் அண்ணன் கிட்ட போய் உதவி கேப்பம்னு அவளையும் கூட்டிக்கிட்டு போனேன். என்னை செருப்பால அடிக்கணும்" என்று இன்னும் கத்தினான்.

"சரி, சுபாவைக் கூட்டிட்டு வர வேண்டியது தானே?"

"நாலு தடியனுங்க வெட்டறிவாளோட காவல் நிக்குறானுங்க. அது போதாம போலீஸ்ல வேறே இன்னொரு புகார் கொடுத்துட்டாரு மாமா. என்னை உள்ளே தள்ளின அதே இன்ஸ்பெக்டர் அங்கே இருந்தாரு. ஓடியாந்துட்டேன். என்னால இங்க இருக்க முடியாது" என்று புலம்பத் தொடங்கினான்.

அதற்குள் மாமாவும் வந்து விட்டார். ஒரு கூடை பழம் பூ சகிதம். விவரம் தெரிந்ததும் கூச்சல் போட்டார். பழக்கூடையிலிருந்த மாம்பழத்தை எடுத்து என்னைப் பார்த்து எறிந்தார். அது ஜன்னல் வழியாக வெளியே போனது, யார் தலையிலாவது பட்டிருக்க வேண்டும். 'அய்யோ' என்ற குரல் மட்டும் கேட்டது.

"சரி விட்டுது சனியன். நீங்க பதறாதீங்க" என்றார் அத்தை மாமாவிடம். மாமா கோபத்துடன் மாடிக்குச் சென்று விட்டார்.

கஜாவை இழுத்துக் கொண்டு வெளியேறினேன். "வாடா, குத்தகைப் பண்ணை வரைக்கும் போயிட்டு வரலாம்" என்றேன்.

"எதுக்குடா?" என்றார் அத்தை.

"சுபாவைக் காப்பாத்திக் கூட்டியாறத்தான். பொண்ணைக் கடத்திப் போயிட்டதா பொய்ப் புகார் கொடுத்தவரு இப்ப நிசமாவே புகார் கொடுக்க வேண்டியது தான். அதுக்கு முன்னால இவங்க ரெண்டு பேருக்கும் திருப்பரங்குன்றக் கோவில்ல நானே கல்யாணம் நடத்தி வச்சுட்டுப் போயிடறேன்" என்றேன்.

"அவளை விட்டா உனக்கு வேறே பொண்ணா கிடைக்க மாட்டாங்க?" என்றார் அத்தை, கஜாவிடம்.

"அம்மா, நீ செஞ்ச முட்டைகறியை விட சுபா எனக்கு முக்கியம். அவதான் எனக்கு இந்த சன்மத்துல பெண்டாட்டி" என்றான் கஜா.

அவ்வளவு தான். அத்தை ஆடிப் போய்விட்டார். பொதுவாக அம்மா சமையலைக் கிண்டல் செஞ்சுகிட்டு, திருமணமானதும் மனைவி சமையலை "எங்கம்மா சமைக்கிறாப்புல இல்லை"னு குற்றம் சொல்லுறவங்க தான் நாம எல்லாம். இது என் அத்தைக்கும் தெரியும். ஆனா அத்தை சமையலைக் கிண்டல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வெங்காயமும், தக்காளியும், பூண்டும், இஞ்சியும், வால்மிளகும் கலந்து அவங்க முட்டைகறி செஞ்சாங்கன்னா நாள் முழுக்க சாப்பிடலாம். கஜா முட்டைகறியை வேண்டாம்னு ஒதுக்குறதா சொன்னதும், அவன் சுபா மேலே வச்சிருந்த காதல் உண்மையானதுனு அத்தைக்குப் புரிஞ்சு போச்சு.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்செறிந்தார் அத்தை. பிறகு, "சரி, அப்ப நானும் கூட வரேன்" என்றார்.

எங்களுக்கு வியப்பான வியப்பு. "பொண்ணைக் கடத்தி செயிலுக்குப் போவணும்னு விதி இருந்தா, நான் என்ன செய்யட்டும்?" என்றார்.

மூவரும் கிளம்பி பண்ணைப் பக்கம் வந்தோம். பண்ணை பங்களா தாண்டி பம்புசெட்டுக்குப் பின்னால் பலாத்தோப்பு. ஒரு மரத்தடியில் நின்றபடி தொலைவிலிருந்து நோட்டம் விட்டோம். "இது நடக்காது போலிருக்கு" என்றேன்.

"ஏணா இப்ப ஜகா வாங்குறே?" என்றான் கஜா. "தடிப்பசங்களப் பாத்து பயந்துட்டியா?"

"இல்லடா. தடிப்பசங்களப் பத்தி சொன்னே சரி, அவங்க பக்கத்துலயே நின்னுட்டிருக்கறதைப் பத்தி சொன்னியா? இல்லயே?"

"நாய்க்கா இப்படி பயப்படுறீங்க?" என்றான் கஜா.

"சாதாரண நாயாடா அது? ராஜபாளையம் நாய்" என்றேன்.

"ஆமடா... உன்னோட சாதகத்துல கூட நாய் கடி பட்டுத்தேன் சாவுன்னு சோசியன் சொன்னதா அண்ணன் அடிக்கடி சொல்வாரு" என்றார் அத்தை.

"அதுவும் நாலு நாயுங்க. ராஜபாளையம் நாய்குட்டி பொறந்ததும் அதனோட அம்மா பக்கத்துல இருக்குற முதலாளி ஆளுங்களைக் கடிச்சு தான் ட்ரெயினிங் கொடுக்குமாம். கண்ணதாசன் கூட பாடியிருக்காரு, 'நாய்களிலே அவள் ராஜபாளையம், பேய்களிலே அவள் பசுமலை'னு கேட்டதில்லையா?" என்றேன்.

"சேசே, 'கனிகளிலே அவள் மாங்கனி, காற்றினிலே அவள் தென்றல்'னு பாடினாருடா" என்றார் அத்தை.

"நல்லா தெரியுமா அத்தே? எனக்கென்னவோ நாயையும் பேயையும் பத்திக் கேட்டதாத் தான் ஞாபகம்" என்றேன்.

"இல்லடா, எனக்குத் தெரியும்" என்று பாட்டைப் பாடிக் காட்டினார்.

"ஏம்மா, அத்தையும் மருமவனும் இப்பத்தான் பாட்டுக் கச்சேரி நடத்தணுமா? அத பாரு, அந்த ஆளு நம்மள பிச்சக்காரங்கன்னு நினச்சுக்கிட்டு பத்து பைசா வீசி எறிஞ்சுட்டுப் போறாரு" என்றான் கஜா.

"கஜா, உனக்கு வாக்குக் கொடுத்துட்டனில்ல? காப்பாத்தியே தீருவேன். ராஜபாளையம் நாயா இருந்தாலும் சரி நரசிங்கப்பேட்டை நரியா இருந்தாலும் சரி, நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்தியே தீருவேன், கவலைப் படாதே" என்றபடி, எதிரில் விழுந்த பத்து பைசாவை எடுத்து வைத்துக் கொண்டேன்.

"நல்லா பேசுங்க. என்ன செய்யுறதா இருக்கீங்க? உங்களை நம்பி வந்த வினைக்கு என்னை ராஜபாளையம் நாய் கடிச்சா தகும். இப்படி மரத்தடிலே நின்னுக்கிட்டிருந்தா பலாக்காய் பழுத்து மண்டையிலே விழுந்து, மண்டையிடில சாக வேண்டியது தான்."

அவன் சொன்னதும் என் மனதில் ஒரு திட்டம் உருவானது. "டேய், நீ சித்தன்டா. போயிட்டு ஒரு மணிக்கா திரும்பி வருவோம். நீ போய் ஒரு வேனை பேசி எடுத்துகிட்டு வா. பங்களா பின்னால திருப்பரங்குன்றம் ரோட்டுல வேனோட காத்துக்கிட்டு நில்லு. அத்தையும் நானும் சுபாவைக் கடத்திக்கிட்டு வந்துடறோம். வேன்லயே பிச்சுக்கலாம்" என்றேன்.

"எப்படிரா?" என்றார் அத்தை.

என் திட்டத்தைச் சொன்னேன். "கொஞ்சம் பயமா இருக்குடா" என்றார் அத்தை.

"கவலைப் படாதீங்க. ஒண்ணும் ஆவாது" என்றேன்.

"ஆமாம்மா... போனாகூட உசிரு தானே அம்மா? அதான் இத்தனை நாள் சந்தோசமா இருந்திட்டீங்களே. இப்ப உன் பையனோட சந்தோசத்தை நினைச்சு தியாகம் செஞ்சதா வச்சுக்க" என்றான் கஜா.

ரு மணி பொறுத்து வேனில் வந்து இறங்கினோம். தடியன்களை சமயம் பார்த்து அடித்துப் போட்டு விட்டு நான் உள்ளே சென்று சுபாவை அழைத்து வருவதாகத் திட்டம். பழைய மீசை தாடி பொருத்திக் கொண்டிருந்த கஜா, வேனை ஓட்டிக் கொண்டு வந்தான். "டேய் அன்பு, யாருடா இந்த வேன் டிரைவர்? பாத்தாலே பயமா இருக்கு" என்று கிசுகிசுத்த அத்தையிடம் உண்மையைச் சொல்லி அழைத்து வருவதற்குள் பொறுமை இழந்து விட்டேன். நான் என் முகத்தில் கரி பூசிக் கொண்டிருந்தேன். அத்தை முந்தானையால் தலையை மூடிக் கொண்டு இறங்கினார்.

எதிரே கைக்குழந்தையுடன் நடந்து போய்க்கொண்டிருந்த பெண்மணி எங்களைப் பார்த்து விட்டு அதிர்ந்து போய் குழந்தையைக் கீழே போட்டு விட்டு ஓடத் தொடங்கினாள். பிறகு என்ன தோன்றியதோ, திரும்பி வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு எதிர் பக்கமாக ஓடினாள்.

கஜா பலாமரத்தில் ஏறி கையாலெறியும்படி கணிசமான அளவில் பத்து பனிரெண்டு பலாக்காய்களைப் பறித்துக் கொண்டு இறங்கினான். "டேய், நானும் அத்தையும் பம்புசெட்டு பக்கம் போனதும் நீ அந்த ஆளுங்களை அடிச்சுப் போடு. போட்டு வேனை எடுத்துக்கிட்டு பங்களா பின்னால வா" என்றேன். அத்தையுடன் பம்பு செட்டு பக்கம் போனேன்.

"டேய், இந்த நாயுங்களுக்குத் தீனி போட்டு சாணி போடக் கூட்டிப் போ. இங்கனே போட்டா நாத்தம் கொமட்டும்" என்று ஒரு தடியன் சொல்லவும், இன்னொருவன் நாய்களை இழுத்துக் கொண்டு வயலுக்குள் சென்றான். கஜாவுக்கு சைகை காட்டினேன். அடுத்த ஒரு நிமிடத்தில் தடியன்களின் தலை முதுகு தலை முகம் என்று மாறி மாறி ராகெட் வேகத்தில் பலாக்காய்கள் தாக்கவும், கீழே மயங்கி விழுந்தார்கள். அவசரமாக அத்தையை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். "சுபா, அத்தை, நீங்க ரெண்டு பேரும் புடவையை மாத்திக்குங்க" என்றேன்.

"ஏண்டா, இந்தப் புடவைக்கு என்ன குறை?" என்றார் அத்தை.

"சொன்னா கேளுங்க, சீக்கிரம். அவளோட புடவையை நீங்களும் உங்க புடவைய அவளும் மாத்திக்குங்க" என்றேன். மாற்றிக் கொண்டதும் சுபாவை இழுத்துக் கொண்டு பின்பக்கமாக வெளியேறவும் கஜா வரவும் சரியாக இருந்தது. சுபா வேனில் ஏறிக் கொண்டதும் "கொஞ்சம் நில்லு, அத்தையையும் கூட்டிக்கிட்டு... இதா வந்துட்டாங்க" என்றேன்.

"நீயாச்சு உன் அத்தையாச்சு. எப்படியாவது தப்பிச்சு போங்க. இனிமே உன்னை நம்ப முடியாது. வரோம், ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான் கஜா. எங்களுக்காக நிற்கவில்லை.

நானும் அத்தையும் அதிர்ந்து போய் ஒருவரையொருவர் பார்த்தபடி நடுத்தெருவில் நின்றோம்.

"அயோக்கியப் பய" என்றார் அத்தை மூச்சு வாங்க. "இப்ப என்னடா பண்ணட்டும்? குட்டிச்சுவராட்டம் உன்னை நம்பி நான் வந்தேன் பாரு" என்றார்.

"சரி, திட்டம் மாறிடுச்சு. உள்ளே போவலாம் வாங்க" என்று அத்தையை இழுத்துக் கொண்டு மறுபடி பங்களா உள்ளே சென்றேன். ஒன்றிரண்டு வயலுர மூட்டைகள், ஒரு மண்வெட்டி, நாலைந்து கடப்பாரைகள், கிணற்றுக் கயிறு, பம்பு செட்டு குழாய்கள் என்று அறைக்குள் நிறைய கடாபுடா. சன்னலோரமாக இருந்த ஒரு சாய்வு நாற்காலியில் அத்தையை உட்காரச் சொன்னேன். "ஓய்வு எடுங்க ஒரு நிமிசம். நான் யோசிக்கணும், அந்தத் தடியனுங்க எழுந்து வரதுக்குள்ளாற" என்றேன்.

அவர் உட்கார்ந்ததும் தாவிப் போய் கிணற்றுக் கயிற்றை எடுத்து வந்து அவரைக் கட்டிப் போடத் தொடங்கினேன். "என்னடா?" என்று அலறினார். "ஷ்!" என்று அடக்கினேன். "அத்தை, உள்ளாற ஒரு பொன்ணு இருக்குறதா நினைச்சுக்குவாங்க. நான் அதுக்குள்ள போலீசுக்குப் போய்" என்று சொல்லி முடிப்பதற்குள் அறை வாசலில் அரவம்.

ராஜபாளையம் நாய்களுடன் தடியன் திரும்பி வந்துவிட்டிருந்தான். அவனருகில் சுபாவின் அப்பா. சுபாவைக் காணாமல் கோபத்தில் அவர் கண்கள் ரெண்டும் சாராயம் அடித்தது போல் சிவந்திருந்தது. "என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க ரெண்டு பேரும்?" என்றார். சாராயம் அடித்துத் தான் கண்கள் சிவந்திருந்தன என்று புரிந்தது. "டேய், நாய விடுங்கடா இவங்க மேலே. சொந்தக்காரனுங்கனும் பாக்க மாட்டேன்" என்று கத்தினார்.

அந்த சமயத்தில் எங்களைப் பார்த்திருந்தால் ஜெமினி சர்கசில் உடனே எங்களுக்கு வேலை கொடுத்திருப்பார்கள். கையிலிருந்த கயிற்றை வீசிவிட்டு அருகிலிருந்த பீரோ மேல் தாவி ஏறினேன். அத்தையோ பக்கத்திலிருந்த சுவரலமாறி மேல் பல்லி போல் கிடுகிடுவென்று ஏறி மேல் தட்டில் தொற்றிக் கொண்டார். உள்ளே வந்த நான்கு நாய்களும் தாவித் தாவி பயமுறுத்தின. அத்தை எந்த நிமிடமும் விழுந்து விடுவார் என்று தோன்றியது. நான் பீரோவின் மேல் இன்னும் கவனமாக ஒதுங்கிக் கொண்டேன்.

"எத்தினி நேரம் அங்கே உட்கார்ந்திருப்பீங்க?" என்று கொக்கரித்தார் சுபாவின் அப்பா. "டேய், அவங்களை இழுத்துக் கீழே போடுறா" என்றார் தடியனிடம். அதற்குள் கீழே விழுந்து கிடந்த தடியன்களும் எழுந்து கொண்டார்கள். நடுங்கினேன்.

நடுங்கியவன் வியந்தேன். எழுந்த தடியன்கள் எழுந்த வேகத்திலேயே விழுந்தார்கள். அடுத்த நொடிகளில் அறைக்குள் வந்த பலாக்காய் ராகெட்டுகள் சுபாவின் அப்பாவையும் மிச்சமிருந்த தடியனையும் தாக்கின. பட்பட்டென்று சரமாரியாக வந்த பலாக்காய் ராகெட்டுகளின் வேகம் தாங்காமல் அடிபட்டு விழுந்தனர். கஜா! திரும்பி வந்துவிட்டானா? நன்றியுடன் நினைத்துக் கொண்டிருந்தபோது இன்னும் சில பலாக்காய்கள் நாய்களைப் பதம் பார்த்தன. ஊ என்று கத்தியபடி மயங்கி விழுந்தன. உள்ளே வந்தது மாமா. "மாமா, நீங்களா?" என்று வியந்தேன். "நாயுங்களை குறி பாத்து அடிச்சுட்டீங்களே, நம்பவே முடியலையே?"

"அந்த ஆளுங்களைக் குறி பார்த்தேன். நாயுங்க இங்கன இருக்குறதே தெரியாது. அச்சச்சோ, வாயில்லா பிராணிங்களையா அடிச்சேன்?" என்று வருந்தினார்.

"நீங்க வேறே. அந்தப் பிராணிங்களோட பல்லைப் பாத்துட்டு சொல்லுங்க" என்றபடி கீழே இறங்கி வந்தேன். அத்தையும் இறங்கினார். "அப்போ இந்த ஆளுங்களை அடிச்சது?"

"கஜா தான். அவன் தான் என்னை இங்கே கூட்டியாந்தான். மொதல்ல யாரோ தாடிக்காரன் என்னைக் கடத்திக்கிட்டுப் போறான்னு நினைச்சேன், பிறகு தான் கஜானு தெரிஞ்சுது. விவரமெல்லாம் சொன்னான்" என்று அவர் சொல்ல கஜா உள்ளே வந்தான். "டேய், என்னடா ஓடிட்டியோனு நெனச்சேன்" என்றேன்.

"சொந்தமாச்சே, எப்படி விட்டு ஓடுறது? தடியனுங்களைக் கட்டிப் போட்டாச்சு. இந்த நாயுங்க எழுந்திருச்சு நம்மள குதற வாருமுன்னே ஓடிடுவோம்" என்றான்.

"சுபா எங்கடா?" என்றார் அத்தை.

"சுபா பத்திரமா இருக்கா. உன்னண்ட சொல்றதா இல்ல. ஒரு தடவை உதவி செஞ்சதே போதும். உயிரோட இருக்கணும்னா உடனே கிளம்புங்க. இல்லா, நான் போறேன்" என்று அவசரப்பட்டான்.

"இருடா, இருடா" என்றார் அத்தை. "ஒண்ணா போவோம்"

"யாரும் எங்கயும் போவ முடியாது. எல்லாரும் கையை உசத்திக்கிட்டு நில்லுங்க" என்று குரல் கேட்டு அறைவாசல் பக்கம் பார்த்தோம். இன்ஸ்பெக்டரும் இரண்டு ஏட்டும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் நாங்கள் பார்த்த பெண், கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். "இவங்க தான் சார். பிள்ளை பிடிக்கிற கூட்டம்னு சொன்னனே, இவங்க தான்" என்றாள். கைக்குழந்தை எங்களைப் பார்த்து விட்டு கலகலவென்று வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கியது.

"பிள்ளைப் பிடிக்குறவங்க போலத் தெரியலையே?" என்றபடி அறையை நோட்டம் விட்ட இன்ஸ்பெக்டர் கீழே விழுந்து கிடந்த தடியனையும் சுபாவின் அப்பாவையும் நாய்களையும் பார்த்தபடி பேசினார். "ஒரு வேளை இவங்க மலைக்கோட்டை முத்தையா கூட்டமா இருக்கும் போலத் தோணுதே?" என்றார்.

"மலைக்கோட்டையாவது முத்தையாவாவது? இன்ஸ்பெக்டர், எல்லாத்தையும் விவரமா சொல்லுறேன், கேளுங்க" என்றேன். "இதா இருக்காரே இவரு" என்று நான் அடையாளம் காட்டி எல்லா விவரத்தையும் சொல்லி முடிக்கவும் சுபாவின் அப்பா எழவும் சரியாக இருந்தது.

எழுந்ததும் சுற்று முற்றும் பார்த்து விட்டு, "இன்ஸ்பெக்டர், நல்ல நேரத்துக்கு வந்தீங்க. இவங்களையெல்லாம் கைது செய்யுங்க" என்றார்.

இன்ஸ்பெக்டர் சிரித்தார். "யாரு யாரை கைது செய்யுறது? எல்லாத்தையும் டேசன்ல வந்து சொல்லுங்க" என்று சுபாவின் அப்பாவைக் கைது செய்து கொண்டு போனார். விட்டால் போதும் என்று நாங்கள் எல்லாம் கஜாவின் வேனில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். எங்களை இறக்கி விட்டு அடுத்த நொடியே சுபாவைப் பார்க்கணும்னு கஜா பறந்து விட்டான்.

"இதான் என் அத்தை மகன் கஜாவின் காதல் கதை" என்று அன்புமல்லி சொல்லி முடித்தார்.

வாழைத்தண்டு பஜ்ஜி மூன்றாவது ரவுண்டு முடிந்து விட்டிருந்தது. எஞ்சியிருந்த பாதாம் சட்டினியைத் தனியாகப் பதம் பார்த்துக் கொண்டிருந்த சித்து, "என்ன சார் இது? பாதியிலே கதைய விட்டா எப்படி?" என்றான்.

"விட்ட வரைக்கும் பிழைச்சோம்னு ஓடுவம்டா. பின்பக்கம் எதுனா வேன் இருக்குதா பாரு, நாமளும் கஜா மாதிரி ஓடிருவோம். பத்து வருசம் பொறுத்து வருவோம்" என்றான் சாய்.

"அவன் கிடக்கான் சார், நீங்க சொல்லுங்க" என்றான் நெடு.

பணியாளை அழைத்தார் அன்புமல்லி. "சிங்காரம். இன்னொரு சுத்து குல்கந்து கொணாறியா? எனக்கு நெய் வேணாம், பசங்களுக்கு எக்ஸ்ட்ரா நெய் தெளிச்சு கொண்டா" என்றார். எங்களைப் பார்த்து, "நெய் மணக்க குல்கந்து சாப்பிட்டா தான் ருசி. எனக்கு வயசாயிடுச்சு, கொலஸ்ட்ரால் பயம். கொலஸ்ட்ரால்னதும் நினைவுக்கு வருது. என்னோட பழைய நண்பன் கொலஸ்ட்ரால் கந்தசாமி, கேகேனு கூப்பிடுவோம். அவன் பொண்ணு மைதிலி ஒரு சமயம் என் கிட்டே உதவி கேட்டு வந்தா. ரெண்டு பையன்களை ஒரே நேரத்துல காதலிக்கிறதாவும் தீர்மானம் செய்ய முடியாம தவிக்கிறதாவும் சொல்லி ரொம்ப துடிச்சுப் போயிட்டா. என்ன செய்ய, ஆயுசு கம்மி"

"ஏன் சார், மைதிலி இறந்துட்டாங்களா?" என்றான் சித்து.

"இல்லப்பா, கேகேயைச் சொன்னேன். கொலஸ்ட்ரால் மிகுந்து போய் ஒரு நாள் போயிட்டான். மைதிலி நல்லாத்தான் இருக்கா. அவ கதையைச் சொல்லி இருக்கேன் இல்லே?"

சாய் வெலவெலத்துப் போனான். "விடுங்க சார், இந்தக் கதையே போதும்னு பாத்தா டக்குனு ரூட் மாறி இன்னொரு கதைக்குத் தாவுறீங்களே?"

"இதான் முடிஞ்சுருச்சே" என்றார் அன்புமல்லி.

"ஒழுங்கா முடிங்க. கஜாவுக்கு என்ன ஆச்சு, போலீசுல என்ன நடந்தது எல்லாம் விவரமா சொல்லுங்க" என்றான் நெடு.

"அதெல்லாம் முக்கியமில்லைபா. இருந்தாலும் சொல்றேன். இந்தா குலகந்து வந்திருச்சு பார், ஒரு வெட்டு வெட்டு" என்றபடி ஒரு ஸ்பூன் நிறைய குல்கந்தை எடுத்து வாயுளிட்டு மென்றபடியே தொடர்ந்தார்.

"இதா இருக்காரே இவரு"னு சுபாவின் அப்பாவை அடையாளம் காட்டினேன். "இவரு என்னோட அத்தையைக் கடத்திக்கிட்டு வந்து இங்கே அடைச்சு வச்சிருக்கிறதை என் அத்தை மகன் கஜா... இதோ இவன் தான்... தாடி மீசையை எடுறா டேய், கண்டு பிடிச்சு என் கிட்டே சொன்னான்"

"இவரு ஏன் இந்தம்மாவைக் கடத்தணும்?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"அதானே, அவரு ஏண்டா என்னைக் கடத்தணும்?" என்றார் அத்தை. பிறகு புரிந்து கொண்டு, "ஆமாமா..." என்றார்.

"சொத்து விவகாரம் சார். என்ன சண்டையோ எனக்கெப்படித் தெரியும்? ஆனா கடத்திக்கிட்டு வந்துட்டாரு. நாங்க இங்க வந்து பாத்தா நாலஞ்சு தடியனுங்க நாயுங்களோட நின்னுட்டிருக்காங்க. எங்களை அடையாளம் வேறே தெரியுமா, என்ன செய்யுறதுன்னு யோசிச்சோம். அதான் வேஷம் போட்டுக்கிட்டு வந்தோம். எங்களைப் பாத்து பயந்து போன இந்த அம்மா ஓடிப்போய் உங்களைக் கூட்டியாந்துட்டாங்க. நீங்க வரதுக்குள்ளாற, கஜா குறி தான் உங்களுக்கே தெரியுமே, பட்டு பட்டுனு பலாக்காயுங்களை எறிஞ்சு இவங்களையெல்லாம் அடிச்சுப் போட்டான். அத்தையைக் கூட்டிக்கிட்டு நாங்கக் கெளம்பத் தயாரா இருந்தோம். அவ்வளவு தான்" என்றேன்.

"நம்பவே முடியலையே?" என்றார் இன்ஸ்பெக்டர். "சொந்த மச்சினிய கடத்திட்டு வந்துட்டாரே?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"விடாதீங்க சார், புடிச்சு உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி தட்டுங்க" என்றான் கஜா. அவனுடைய கோபம் அவனுக்கு.

"நிறுத்துங்க" என்றார் அந்த பெண். "இவங்க பொய் சொல்லுறாங்க. நான் இவங்களைப் பாத்தப்ப இந்தம்மாவும் கூட இருந்தாங்க. இன்னொரு கலர் புடவை கட்டியிருந்தாங்க" என்றார்.

கஜா அந்தப் பெண்மணியைப் பார்த்தான். கையில் ஒரு பலாக்காய் இல்லாமல் போன வருத்தமும் ஆத்திரமும் அவன் முகத்தில் தெரிந்தது. பிறகு அவன் இன்ஸ்பெக்டரைப் பார்த்த பார்வையில் முன்னெச்சரிக்கை இருந்தது. இன்ஸ்பெக்டர் அத்தையைப் பார்த்த பார்வையில் சந்தேகமிருந்தது. அத்தை என்னைப் பார்த்த பார்வையில் கோபமிருந்தது. நான் என்னருகே நின்றுகொண்டிருந்த ஏட்டைப் பார்த்த பார்வையில் பொருளிருந்தது.

"அட நீ வேறம்மா, பயத்துல எதுனா எசகு பிசகா கவனிச்சிருப்பே. அதான் சாரு இத்தனை அளகா எடுத்துச் சொல்லிட்டாரே. வாங்க போவலாம்" என்றார் ஏட்டு. என் கையிலிருந்த பத்து ரூபாய் அவர் கைக்கு மாறியதை யாரும் கவனிக்கவில்லை. அதற்குள் சுபாவின் அப்பா எழுந்து கொண்டார்.

எழுந்ததும் சுற்று முற்றும் பார்த்து விட்டு, "இன்ஸ்பெக்டர், நல்ல நேரத்துக்கு வந்தீங்க. இவங்களையெல்லாம் கைது செய்யுங்க" என்றார்.

இன்ஸ்பெக்டர் சிரித்தார். "யாரு யாரை கைது செய்யுறது? எல்லாத்தையும் டேசன்ல வந்து சொல்லுங்க" என்று சுபாவின் அப்பாவைக் கைது செய்து கொண்டு போனார்.

சுபாவின் அப்பாவைப் போலீஸ் லாக்கப்பில் தள்ளினதும் அவர் ஆடிப் போய் விட்டார். அவரைத் தனியாகச் சந்தித்து, "கஜா பேர்ல நீங்க கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கிட்டு, சுபாவையும் கஜாவையும் கல்யாணம் செஞ்சு சேத்து வக்கிறதா சொல்லுங்க, அத்தை கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கிறோம். இல்லேன்னா உங்களுக்கு ஜெயில் தான்" என்றேன்.

"டேய், டேய், தம்பி. என் பொண்ணும் கஜாவும் எக்கேடோ கெட்டு போகட்டும். புகாரை வாபஸ் வாங்கிக்கிட்டு என்னை விடுதலை செய்யச் சொல்லுங்கடா. உனக்கு வேணும்னாலும் கல்யாணம் செஞ்சு வக்கிறேன். மானம் போவுதுடா, வெளியே விடுங்கடா" என்றார்.

புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு எல்லோரும் வீட்டுக்கு வந்தோம். கஜாவும் சுபாவும் திருப்பரங்குன்றத்தில்... இவன் முருகனாட்டமும் அவள் தேவயானையாட்டமும், பாக்கறதுக்கும் யானை மாதிரி இருந்தானு வைங்க, கல்யாணம் செய்துகிட்டாங்க. இப்போ அமோகமா இருக்காங்க.

"இப்போ திருப்தி தானே?" என்ற அன்புமல்லி, மூவரையும் பார்த்து "ஏம்பா, என்ன அவசரம், எதுக்கு இப்படி ஓடுறீங்க?" என்றார்.
  ♥♥

6 கருத்துகள்:

 1. வாய் விட்டு சிரிக்க வைத்த கதை. நகைச்சுவையோடு நல்ல சாப்பாட்டை அங்கங்கே தூவி இருக்கிறீர்கள். முட்டைகறி சாப்பிட வேண்டும் போலிருக்குறது.

  பதிலளிநீக்கு
 2. priya schaefferஜூலை 20, 2009

  \\எதிரே கைக்குழந்தையுடன் நடந்து போய்க்கொண்டிருந்த பெண்மணி எங்களைப் பார்த்து விட்டு அதிர்ந்து போய் குழந்தையைக் கீழே போட்டு விட்டு ஓடத் தொடங்கினாள். பிறகு என்ன தோன்றியதோ, திரும்பி வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு எதிர் பக்கமாக ஓடினாள்.\\

  Classic, slapstick funny.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாஜூலை 25, 2009

  இப்பதான் படிக்க நேரம் கிடைச்சுது. வெடிச் சிரிப்புங்க. அருமை.

  பதிலளிநீக்கு
 4. oh my god.

  what a humor in each line


  god bless you

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நன்றி Seshadri. நகைச்சுவை ரசிகரா நீங்கள்? படித்ததற்கும் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு