2014/07/02

மறப்போம்.. மன்னிப்போம்..


    ல்லது மண்டையில் ரெண்டு போடுவோம்.

மோகன்குமார் தன் சமீபப் பதிவொன்றில் ஒரு திரைப்பட விமரிசனம் எழுதியிருந்தார்.

படத்தில் ஒரு வசனம். “எதிரிகளை வெல்வதறகானத் தலைசிறந்த வழி அவர்களை மன்னிப்பதாகும்”. அதைத் தொடர்ந்து சில ‘ஹ ஹ ஹ ஹ’க்கள் வந்திருக்கலாம். மோகன்குமார் தெளிவுபடுத்தவில்லை.

இந்தச் சொல்லாடலை வசனமாக கோச்சடையான் ரஜினி தூய தமிழில் துப்ப, மன்னிக்கவும், செப்ப.. மெகாப்லெக்ஸ் சும்மா அதிர்ந்ததாக அறிந்தேன். விசிலொலி பறந்ததாகப் படித்தேன்.

இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. எழுதுவோரைப் பொறுத்தே எழுத்துக்கான வரவேற்பும் அமைகிறது என்று ஜிஎம்பி அவர்கள் ஒரு சமீபப் பின்னூட்டத்தில் எழுதியிருந்தார். நானும் உண்மை என்று ஜால்ரா அடித்திருந்தேன்.

உண்மையில் அது உண்மையாகும். (என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் சுற்றுகிறேன்). அதாவது, கருத்தை விட கருத்தாளர் முக்கியமாவது உண்மையென்கிறேன்.

இந்த… எதிரிகளை வெல்லும் வழியை எடுத்துக் கொள்வோம்.

இதே வசனத்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சென்ற நூற்றாண்டில் சொன்னதாகச் சென்ற நூற்றாண்டிலேயே படித்திருக்கிறேன். இளைய மார்டின் லூதர் கிங் சொன்னதாகப் படித்திருக்கிறேன். அண்ணாதுரை சொன்னதாகப் படித்திருக்கிறேன். சந்திரசேகர சரஸ்வதி சொன்னதாகப் படித்திருக்கிறேன். தாமஸ் ஜெபர்ஸன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சொன்னதாகப் படித்திருக்கிறேன். சேக்குபியர் பதினாறாம் நூற்றாண்டில் சொன்னதாகப் ப. சர்ரென்று அங்கிருந்து சுமார் ஆயிரத்தைநூறு வருடாஸ் பின்னோக்கிப் போனால் ஜெரூசலச் சந்தி ஒன்றில் தச்சன் ஜோசபின் தாடிக்கார மகன் சொன்னதாகப் படித்திருக்கிறேன். ஏறக்குறைய அதே காலத்திலோ அல்லது ஏழெட்டு நூற்றாண்டுகள் தற்காலத்தை நோக்கி வந்தாலோ கன்னியாகுமரி மகனான நம்மூர் ஞானவெட்டியான் சொன்னதாகவும் படித்திருக்கிறேன். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்று கொஞ்சம் கோனார் நாடும் பொய்யாமொழி, மற்றபடி அதே கருத்து.

ஆனால் இதற்கெல்லாம் யாரும் சிலிர்த்ததாகவோ விசிலடித்ததாகவோ படிக்கவில்லை.

அந்நாள் மக்கள் ஒரு வேளை என்னைப் போலிருந்திருக்கலாம். எனக்கு விசிலடிக்க வராது.

பல்லாவரம் தெரசாவிலோ, குரோம்பேட்டை அரசுயரிலோ, க்வீன் ஸ்டெல்லா ப்ரெசிடென்ஸியிலோ வைஷ்ணவாவிலோ அழகழகாக அசைந்து போவார்கள். என் நண்பர்கள் விய்க் விய்க் என்று விசிலடிப்பார்கள். நான் பரிதாபமாக நிற்பேன். ஹ்ம்ம். முயன்று சலித்த சோகம்.

விசிலுக்கு.. அதாவது விஷயத்துக்கு வருகிறேன். இரண்டு விஷயங்கள்.

முதலாவது கொஞ்சம் சிரியஸ்.

ரஜினி ஏதாவது பஞ்சு மிட்டாய் வசனம் சொன்னால் கூட பஞ்ச்ச்சு என்று பிகில் பிய்த்துக் கொண்டு போகிறது. ‘ஆகா என்னா வசனம் என்னா டயலாக்’ என்று ரசிகர்கள் சிலிர்த்துப் போகிறார்கள். அந்தக் கருத்து ஏதாவது சிறிய அளவிலாவது பிகிலைக் கடந்து உள்ளே இறங்குகிறதா தெரியாது. அனேகமாக ரஜினி டயலாக்குகள் அவரது தமிழ்நாடு/தமிழ் மக்கள் பற்று போலவே பஞ்சு மிட்டாய் டயலாகோடு நின்று விடும் சாத்தியமே அதிகம்.

“நான் ஒரு தரம் சொன்னா பத்து தரம் சொன்னா மாதிரி.. (ஆள்காட்டி விரலுயர, பின்னணியில் ஷ்ய்ய்ப்).. நான் நாற்காலி தேட வேண்டியதில்லே.. அது என்னத் தேடி வரும் (ஷ்ய்ய்ப்).. ஹ ஹ ஹ.. கண்ணா.. இதெல்லாம் எனக்கு ஜு..ஜு..பி (ஷ்ய்ய்ப்)” போன்ற அர்த்தமுள்ள வசனங்களைக் கேட்டு கேட்டு.. தமிழ்ப் படத்துக்கு வசனமெழுதுவது சுலபம் என்று.. அப்படித்தான் நினைத்தேன்.

சில மாதங்களுக்கு முன் இரண்டு (குறும்)படங்களுக்கான வாய்ப்புகளை எடுத்துக் கொண்டேன். இரண்டும் இழுபறியாக இருப்பது வேறு கதை. ஒரு படத்துக்கான கூட்டு முயற்சி கதாசிரிய ப்லாக் நண்பர் சிறிது நோய்வாய்ப்பட்டதால் தடங்கலுக்கு வருந்திக் கொண்டிருக்கிறது. (எதற்காக நோய் வாய் பட வேண்டும் என்று யாராவது சொல்லுங்களேன்.. நோய் பட்டால் போதாதா?). இரண்டாவது படத்துக்கான திரைக்கதை வசனம் தகராறில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாருங்கள்.. தயாரிப்பாளர் முதலில் சொன்னது "அப்பாத்துர.. இது சூப்பரான ப்லாட்டு.. டயலாக் எய்தசொல்ல ரெம்ப எஞ்சாய் செய்வீங்க.. மஜாவான முல நீல நக்கசுவ கத்த..". அதை நம்பிச் சம்மதித்தேன். பலான கதையில் முனகலாக வசனம் எழுதினால் போதாதா? இப்போது என்னடாவென்றால் "முழு நீள நகைச்சுவை கதை" என்று சொன்னதாகச் சாதிக்கிறார். தமில் வால்க.

நிற்க, தமிழ்ப் பட வசனம் எழுதுவது சுலபமே அல்ல. தமிழ் தெரிந்தாலும் வழக்கு எனக்குப் பிடிபடவில்லை. முதல் படத்தில் ஒரு சுவாரசியமான கட்டத்தில் இப்படி ஒரு வசனம் எழுதியிருந்தேன்:

கான்ஸ்டபிள் (அறையை நோட்டமிட்டபடி, பையிலிருந்து எதையோ எடுக்கிறார்)
"இன்ஸ்பெக்டர் வந்துடுவாருமா.. என்ன விஷயமா கூப்பிட்டீங்கனு தயங்காம எங்கிட்ட சொல்லச் சொன்னாரு"

இதைப் படித்துப் பரவலாக ச்ச்ச்ச்ச்ச்ச் உதிர்த்த இயக்குனர் இப்படி மாற்றினார்.
"ஐபி வராப்ல.. மேட்டரு என்னானு கேட்டாப்ல..".

இப்படி ஒவ்வொரு வசனத்தையும் ஆப்புல ஆப்புல என்று மாற்றத் தொடங்கினார். சில வாரங்களுக்கு முன் அவரோடு தொடர்பை நிறுத்தினேன்.

டைரக்டரு என்னாச்சுனு இமெயில் போட்டாப்புல. ‘நான் எழுதி முடிச்சாப்புல.. நீங்க படம் எடுத்து விடிச்சாப்புல’னு நான் பதில் சொன்னாப்புல.

இரண்டாவது கொஞ்சம் சீரியஸ்.

மெட்ராஸ் தமிழன் சமீபப் பதிவில் எழுதியிருப்பது நிறைய நினைவுகளைக் கிளறியது. இருபது முப்பது வருடங்களுக்கு முன் தரக்குறைவாக நடந்து கொண்ட ஒருவர் சமீபத்தில் தன்னிடம் உதவி கேட்டு வந்ததைப் பற்றிய சுவாரசியமான பதிவு.

நம் எல்லோர் வாழ்விலும் இது போன்ற நிகழ்ச்சிகள் தூசு படிந்து உள்ளக் குகைக்குள் பல இடங்களில் புதைந்திருக்கும். என்னவோ பெரிய கொம்பென்று நினைத்து நம்முடைய சரிவில் நம்மை எள்ளுவார்கள். பிறகு சக்கரம் சுழன்று வருகையில் ‘பழசை மனசுல வைக்காம கொஞ்சம் தயவு பண்ணு’ என்று இளிப்பார்கள். அல்லது இன்னும் வறட்டாக 'எனக்கு இந்த உதவி செய்யுறது உன் கடமை’ என்று அதிகாரப் பிச்சை கேட்பார்கள். சில வருடங்களுக்கு முன் இதே நபரை எப்படி நடத்தினோம் என்ற நினைப்பே இல்லாமல் நடப்பார்கள்.

உங்களுக்கு எப்படியோ தெரியாது, எதிரிகளை மறப்பதா மன்னிப்பதா என்ற குழப்பம் எனக்கு வரும்.

எதிரிகள் இல்லை என்று சொல்ல நான் புத்தனல்ல. இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள்.

சிலர் எதிரிகள் என்று உடனே புரிவதில்லை. புரியும் போது காலம் கடந்திருக்கும். அந்நிலையில் 'மன்னித்தாலும் மறந்தாலும் ஒன்று தான்' என்ற கடப்பில் கிடப்பேன்.

எண்பதுகளில் எனக்கு மிகவும் பிரியமான ஒரு வேலையில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தேன். திடீரென்று சரிந்தேன். நான் செய்யாத, யார் செய்திருந்தாலும் குற்றமல்லாத, சாதாரணத் தவறுக்காகச் சரிந்தேன். என் மேனேஜரே எனக்கு டேமேஜரானது மிகப் பெரிய அதிர்ச்சியாக அந்நாளில் அவமானம் என்னைக் கொன்றது என்றே சொல்லலாம். வாலிபனாக இருந்தாலும் அப்போது அந்த டேமேஜரை எதுவும் செய்யாமல் என் ஆத்திரத்தையும் வெறுப்பையும் அடக்கிக் கொண்டு விலகினேன். பின்னாளில் அவரைச் சந்தித்த போது மிகக் குன்றியிருந்தார். என் மன்னிப்பைக் கெஞ்சியது எனக்கு வியப்பாக இருந்தது. நான் அதைக் கடந்து மிக வளர்ந்திருந்ததால் அதிகம் நினைக்கக் கூட இல்லை. அவர் மன்னிப்பு கேட்டது என் நினைவுகளைக் கிளறினாலும் அதிகமாகப் பாதிக்கவில்லை.

மறந்து விட்டால் ஒரு சிக்கல். மன்னித்தால் என்ன, மன்னிக்காவிட்டால் என்ன?

மன்னித்து விட்டால் ஒரு சிக்கல். ஏன் மன்னித்தோம் என்று குடைந்து கொண்டே இருக்கும். பிறகு எங்கிருந்து மறப்பது?

மன்னிப்பது மேலா, மறப்பது மேலா? அதான் குழப்பம்.

தொடர்பதிவின் எட்டாவது கேள்விக்கு வாழைப்பழ விளக்கெண்ணைப் பிசினாக வந்து கொண்டிருக்கும் பதில்களைப் போல்.

மண்டையில் ரெண்டு போடுவதே இப்போது சரியாகத் தோன்றுகிறது. அனாவசிய வம்பு வேண்டாமென்று சொல்லிப் பார்க்கலாம். மறக்கப் பார்க்கலாம். மன்னிக்க நினைக்கலாம். எதுவும் ஒத்துவரவில்லையெனில் மண்டையில் ரெண்டு. இது தான் மேலாகப்படுகிறது.

நேற்று மாலை ஒரு நண்பரிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். 'அப்படி நடந்தால் உங்கள் மண்டையும் ரெண்டு படுமே அன்பரே?' என்றார்.

"பரவாயில்லை" என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்தார். "எதையும் தாங்கும் இதயம் தமிழனுக்கு உண்டே?" என்றார்.

‘ஐயோ, இப்படி தமிழால் அடிக்கிறாரே!’ என்று நொந்தாலும் "ஹிஹி.. நம்பள் ஆதா ஆரியன் காதா?" என்றேன். தமிழன் மீது பழியேற மனம் மறுத்தது. அவர் என்னை மறுபடி ஏற இறங்கப் பார்த்தார். எதுவுமே சொல்லவில்லை.

மன்னிக்கும் குணமும் மறக்கும் மனமும் நிம்மதியைத் தரலாம். ஆனால் மண்டையில் இரண்டு போடுவது நிறைவைத் தரும்.

ஷ்ய்ய்ப்.

31 கருத்துகள்:

  1. அப்பா சார்

    உங்களுக்கு நீங்களே விசிலடித்துக் கொண்டீர்கள் போல...

    ஷ்ய்ய்ப் :-)))

    பதிலளிநீக்கு
  2. ஹைய்யோ!!!!!

    எனக்கும் விசில் அடிக்க வராது........:(

    நான் என்ன நினைக்கிறேன்னா..... தமிழ் டிவி சீரியல்களுக்கு வசனம் எழுதுவது எளிது. எப்படிப் பார்த்தாலும் ஒரு பத்து வசனம்தான் திருப்பித்திருப்பி வருது. இதை வச்சே ஒரே சமயம் வெவ்வேற சீரியல்களுக்கு எழுதித் தள்ளிப்பிடலாம். அவளை/அவனை சும்மா விடமாட்டேன்....

    போகட்டும். மறக்கும் மன்னிக்கும் சமாச்சாரத்துக்கு வரலாம் இப்போ. போனாப்போறது,தொலையாட்டுமுன்னு மன்னிச்சு விட்டுருவேன். ஆனா............ மறக்க(வே) முடியாது. அதான் பிரச்சனை:(

    பதிலளிநீக்கு
  3. குமுறிக்கொண்டாவது மன்னித்துவிடலாம். ஆனால் மறப்பது சாத்தியமே இல்லை. மண்டையில் ரெண்டு போடுவது ஆஹா... அதுதான் நிறைவு! ஆனால் தொடருமே பின்விளைவு! அதற்கு பயந்துதானே குமைச்சலோடே ஒதுங்கிப் போய்விடுகிறோம்.

    மிக அருமையான அலசல். பாராட்டுகள் அப்பாதுரை சார். ஷ்ய்ய்ப்!

    நோய்ப்பட்டு- நோய் வந்து துன்பப்பட்டுக்கொண்டு

    நோய்வாய்ப்பட்டு - நோய் வந்து அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு

    இந்த விளக்கம் சரிதானா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியது. நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி என்கிறாரே வள்ளுவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச் சொன்னீங்க..

      நோய் வாய் விவரத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. மன்னிப்பது முடித்து வைப்பது
    மண்டையில் ரெண்டு போடுவது
    தொடருவது எனக் கொள்ளலாமா ?
    முன்னதை யாரும் செய்யலாம்
    இரண்டாவதைச் செய்வதற்கு
    கொஞ்சம் கூடுதலாக ஏதாவது இருக்க வேண்டும்
    குறைந்த பட்சம் தசை கொஞ்சம் தடிமனாக வேணும்

    நோய் இப்போதுதான் வாய் வைத்திருக்கிறது
    இனிதான் திங்கத் துவங்கும் என்கிற பொருளில்
    யோசித்தால் அது சரி போலத்தான் படுகிறது

    மனம் கீறிப்போகும் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //மன்னிக்கும் குணமும் மறக்கும் மனமும் நிம்மதியைத் தரலாம். ஆனால் மண்டையில் இரண்டு போடுவது நிறைவைத் தரும்.//

    வயதையும் அனுபவத்தையும் பொறுத்து இந்தப் பதில் மாறும். நமக்கு கோபம் வரவேண்டும், எரிச்சலடைய வேண்டும் என்று நினைக்கும் எதிராளியை அவர் நினைத்தபடி நடக்க வைப்பது யாருக்கு நிறைவைத்தரும்?

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான பதிவு!

    //இருபது முப்பது வருடங்களுக்கு முன் தரக்குறைவாக நடந்து கொண்ட ஒருவர் சமீபத்தில் தன்னிடம் உதவி கேட்டு வந்ததைப்//

    ஹிஹிஹி நாங்களும் இப்படி ஒண்ணு எழுதி இருந்தோம்ல..

    போச்சுடா... எட்டாவது கேள்வி என்ன என்று எங்காவது ஓடிப்போய்ப் பார்க்கணுமா...

    பக்கிரிசாமியின் பதில் அருமை.

    மண்டையில் ரெண்டு போட்டால் ராம நாராயணன் படம்போல பழிவாங்கல் தொடர்கதையாகும்! மன்னிக்கலாம். மறக்கத் தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  7. இரண்டு விரலை வாய்க்குள் நுழைத்து உதட்டை மடக்கி எப்படித்தான் ஏரியாவே ஸ்தம்பிக்கற மாதிரி விசிலடிக்கறாங்களோன்னு எனக்கும் வியப்புதான் வரும். நான்லாம் விசிலடிச்சா காத்துதேன் வருது.

    உங்களின் வ(வி)சன அனுபவம் படிச்சதால நாங்க உஸாரா இருந்துப்போம்ல... டாங்ஸ்.

    எட்டாவது கேள்விக்கு தீவிரவாதி ரேஞ்சுக்கு யாரும் பதிலளிக்கலன்னு உங்களுக்கு கோபமா? வருத்தமா? நிறைய சந்தர்ப்பங்கள்ல கோபம் உள்ள குமுறிட்டிருந்தாலும் நேர்‘ல சந்திக்கறப்ப சரியாத் திட்டக்கூட பலபேத்துக்கு வரதில்லங்கறது நிஜம். வாட் டு டூ?

    உங்கள் பகிர்வுக்கு என்னுடைய... ஷ்ய்ய்ப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசிலடிக்க வராதுனு நானே நொந்துட்டிருந்தா அதை விவரமா விளக்கிப் போடுறீங்களே.. நியாயமா?

      நீக்கு
  8. மன்னிப்பதற்கு சிறு புன்னகை போதுமே...!!!

    வாயால் தான் எல்லாமே...! அதனால் தான் நோயும் வாய் படல்...?

    பதிலளிநீக்கு
  9. //பிறகு சக்கரம் சுழன்று வருகையில் ‘பழசை மனசுல வைக்காம கொஞ்சம் தயவு பண்ணு’ என்று இளிப்பார்கள். அல்லது இன்னும் வறட்டாக 'எனக்கு இந்த உதவி செய்யுறது உன் கடமை’ என்று அதிகாரப் பிச்சை கேட்பார்கள். சில வருடங்களுக்கு முன் இதே நபரை எப்படி நடத்தினோம் என்ற நினைப்பே இல்லாமல் நடப்பார்கள்.//

    சக்கரம் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. மன்னிக்கும் அளவுக்குப் பெருந்தன்மையும் இல்லாமல், மறக்கும் அளவுக்கு ஞாபக மறதியும் இல்லாமல் தவிப்புத் தான்! :)))))

    பதிலளிநீக்கு
  10. //// மன்னிப்பது மேலா, மறப்பது மேலா? அதான் குழப்பம். ////

    குழப்பமே வேண்டாம். மன்னிப்பதை விடவும் மண்டையில் ரெண்டு போடுவதை விடவும் மறப்பதுதான் அதிகபட்ச நிம்மதி அளிப்பது

    பதிலளிநீக்கு
  11. மன்னிப்பது நல்லது. மறப்பது வன்மம் இல்லையென்றால் சாத்தியமே. மண்டையில் போடுவது விளைவுகளுக்குத் தயார் என்றால் சரிதான். எனக்கும் விசில் அடிக்க வராது. முன்பெல்லாம் பாடல்களை விசிலில் பாடுவேன்நான் சொல்லவந்தது இந்த உஷ்க் விய்ஷ்க் விசில்.

    பதிலளிநீக்கு
  12. புதிய கருத்து என்று நம்மில் எதுவும் இல்லை. எல்லாக் கருத்துக்களும் நீங்கள் சொன்னது போல் என்றோ எப்போதோ யாராலோ சொல்லி வைக்கப் பட்டவைத்தான் அப்பாதுரை சார். அப்புறம் மறப்போம் மன்னிப்போம் என்பது சொல்லளவில் ஒரு பொய்தான். மனதளவில் புரையோடிப் போன துன்பங்கள் சோகங்களுக்கு முன் நம்மை வேதனைப் படுத்தியவரை மறந்தால் என்ன மன்னித்தால்தான் என்ன புண்ணியம்......
    உங்கள் பதிவுகள் க்ளிக் செய்தால் கொஞ்ச நாட்களாக வரவேயில்லை.
    இந்தப் பதிவுதான் காணக் கிடைத்தது. வழக்கம் போல நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மறப்போம் மன்னிப்போம் என்பது சொல்லளவில் ஒரு பொய்தான்.

      உண்மை தான் ::-)

      நீக்கு
  13. கண்டிப்பாக மறக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் அது போன்ற நபர்களை நினைத்து கொண்டிருந்தால் வாழ்க்கையின் அமைதி கிடைக்காது. விலகி செல்வதே தீர்வு. You will spoil a perfectly good present by brooding about the past and worrying about the future.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளைக்கு என்ன ஆகுமோ என்ற குழப்படி பயம் இல்லையெனில் நடந்ததை எண்ணி வருத்தம்/ஆத்திரம் - இதான் சுலபமாக வருகிறது..விலகிச் செல்வதும் மறப்பதும் ஒன்றா?

      நீக்கு
  14. அப்பாடா எனக்கு மட்டும்தான் விசிலடிக்கற பிரச்சனைன்னு நினைச்சேன்.. உங்களுக்கும் இருக்கா. குட் குட்

    bhageerathi.in

    பதிலளிநீக்கு
  15. நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. //எழுதுவோரைப் பொறுத்தே எழுத்துக்கான வரவேற்பும் அமைகிறது என்று ஜிஎம்பி அவர்கள் ஒரு சமீபப் பின்னூட்டத்தில் எழுதியிருந்தார். நானும் உண்மை என்று ஜால்ரா அடித்திருந்தேன்.//

    எதிரிகளை வெல்வதற்கானத் தலைசிறந்த வழி அவர்களை மன்னிப்பதா, இல்லை மறப்பதா என்று பட்டிமன்ற பாணியில் நீங்கள் நீங்கள் நீங்கள் சொன்னதால் (கேட்டதால்),
    அட இந்த கேள்வி கூட சரிதான் என்று செப்பி ஜால்ரா வரிசையின் கடைசியில் நானும் இணைந்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. மன்னித்து விட்டால் ஒரு சிக்கல். ஏன் மன்னித்தோம் என்று குடைந்து கொண்டே இருக்கும். பிறகு எங்கிருந்து மறப்பது?//

    இரண்டு மனம் வேண்டும்
    இறைவனிடம் கேட்பேன்
    மறந்து வாழ ஒன்று
    மன்னித்து வாழ ஒன்று

    என்று பாடி சிரித்துக்கொண்டே அழலாம்..!

    பதிலளிநீக்கு
  18. 'இன்று போய் நாளை வா!' போல 'மறப்போம், மன்னிப்போம்' சொற்றொடரும் மறக்கவே முடியாத ஒன்று. மற்றபடி மறப்பதும் மன்னிப்பதும் கையாலாகாதவர்களின் செயல்களாகி ரொம்ப காலமாச்சு. வேறு வழியே இன்றி மறந்தாலும் இல்லை மன்னித்தாலும் குறைந்தபட்சம் அதுபற்றி சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் புலம்பலாகவாவது வெளிப்பட்டே தீரும்.

    பிறர் தம்மைப் பற்றிச் சொன்ன புகழுரைகளை மறப்பதும், அபாண்டத்தை மன்னிப்பதும் ஞாலத்தில் சிறந்த ஞானவான்களாலேயே முடியும்.

    செலிபிரட்டிகள் சொல்வது பிரபலமடையக் காரணம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டவைகளை இப்படிப்பட்ட சொற்றொடர்களோடு இணைத்துப் பார்ப்பது தான்.

    ஒன்று தெரியுமா?.. வார்த்தைகள் வசப்பட்டுப் போன உங்கள் திறமைக்கு பல தடவைகள் என் மனசுக்குள்ளேயே விசிலடித்திருக்கிறேன். (அட! மனுஷன் என்னமாய் எழுதறார்ய்யா!)

    மிக சமீபத்திய சீழ்க்கை: 'சுவற்றில் எறிந்த சாயம்!' எது நினைத்து எதுவாய்ப் போனது என்பது பற்றியும் இது பற்றி என்னுள் ஒரு சம்சயம் உண்டு!

    பதிலளிநீக்கு
  19. என்ன தான் செலபிரிட்டி என்றாலும் ஜுஜுபி குழப்புகிறது.

    மறப்பதும் மன்னிப்பதும் கையலாகாதவர் செயலா.. யதார்த்தம்.

    புலம்பல் பத்தி சொன்னீங்களே.. பதிவெழுதலாம்.

    பதிலளிநீக்கு
  20. ரொம்ப நல்லாவே எழுதறாப்ல! அதனால தொடர்ந்து வரலாம்னு முடிவுபண்றாப்ல! இத்தனைநாளா தெரியாம போச்சேன்னு வருந்தராப்ல! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லாஜூலை 09, 2014

    Where there is genuine remorse, mannikkalaam. But most ppl say "sorry" only when they need something from u. Appo mandayil naalu podalaam. (Kasa panama podaratha dhaaraalamaa podunga)

    பதிலளிநீக்கு
  22. மறந்து விட்டால் ஒரு சிக்கல். மன்னித்தால் என்ன, மன்னிக்காவிட்டால் என்ன?

    மன்னித்து விட்டால் ஒரு சிக்கல். ஏன் மன்னித்தோம் என்று குடைந்து கொண்டே இருக்கும். பிறகு எங்கிருந்து மறப்பது?//

    அதானே...!

    பின்னூட்டங்கள் சிலதுக்கும் சேர்த்து!

    பதிலளிநீக்கு
  23. மன்னித்தாலும், மறக்காதமனம் இருக்கே!

    பதிலளிநீக்கு