2014/06/14

சிவப்பு வட்டம்


    குழப்பத்துடன் விழித்த முப்பது நாட்களுக்கு முந்தைய காலையின் நினைவையும், தொடர்ந்த நாட்களின் அதிர்ச்சி அடங்கிய எதிர்பார்ப்புகளையும் அசை போட்டபடி காரின் வேகத்தைக் குறைத்தான் ஹிமான்ஷு. வீட்டுத் திருப்பம் அண்மையில் புலப்பட்டது.

திருப்பச் சுவரில் எண்களைச் சுற்றிய ஒரு சிவப்பு வட்டத்தைக் கண்டான். அவசரமாக தேய்க்கப்பட்ட சிவப்பு. தன்னம்பிக்கை குறைவை உணர்த்தும் சற்றே வடமேற்காகச் சாய்ந்த எழுத்துக்கள்.

காலையில் இல்லை. இப்போது யாரோ சேர்த்திருக்கிறார்கள்.

பெருமூச்சு விட்டான். சிவப்பு வட்டத்தைப் பார்ப்பது இது தான் கடைசி முறையா? கடைசி முறையாக இருந்து விட்டால் நல்லது தானா? மறுபடி பெருமூச்சு விட்டான். சென்ற சில நாட்களாக இயல்பாகவே பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

    ஹிமான்ஷு முதல் முறையாகச் சிவப்பு வட்டத்தைப் பார்த்தது ஒரு அதிகாலைக் கனவில். கனவா நனவா என்று சரியாகக் கணிக்க முடியாத, குழப்பம் கலந்த எழுந்தும் எழாத அதிகாலையில், கண் திறந்தும் திறவாத மயக்க நிலையில்.. செய்தி வந்து போனது.

1477. தொடர்ந்து ஒரு சிவப்பு வட்டம். நிறுத்தத்தைக் குறிக்கும் சிவப்பு அடர்ந்த வட்டம். தொடர்ந்து எண்களை உள்ளடக்கிய சிவப்பு வட்டம். 1477. வட்டம். 1477. தொடர்ந்து ஒரு சிவப்பு வட்டம். நிறுத்ததைக் குறிக்கும் சிவப்பு அடர்ந்த வட்டம். தொடர்ந்து எண்களை உள்ளடக்கிய சிவப்பு வட்டம். 1477....

சட்டென்று எழுந்தான். அருகே பார்த்தான். "விபாஷா?." காணவில்லை. சுற்றிலும் பார்த்தான். புது வீடு இன்னும் பழகவில்லை. எங்கே போனாள்? "விபா?" எதிரே பாத்ரூம் அடைத்திருந்தது.

தடுமாறினான். கண்டது கனவா? இல்லையே? கண் விழித்து சில கணங்களானதே? இல்லை. கனவாகவே இருக்க வேண்டும். அப்படியெனில் இந்த எண்களும் வட்டமும் திரும்பத் திரும்ப கண் முன் உருள்வதேன்? கண் முன் உருள்கின்றனவா அல்லது மனதுள் புரள்கின்றனவா? மனதுள் என்றால் இது கனவா? சே.. இல்லை, எழுந்து நிற்கிறேனே.. என்ன உணர்வு இது? கை கால்களை அழுத்திப் பார்த்துக் கொண்டான். அலமாரியிலிருந்து சிறிய பெட்டியை எடுத்தான். சுருட்டியிருந்த எடைக்கருவியை பாய் போல் தரையில் விரித்து அதன் மேல் நின்றான். 155 பவுன்ட். ஓகே. மானிடரில் ரத்த அழுத்தம் பார்த்தான். 124/82. இட் இஸ் ஆல் ரைட். சுருக்கென்று விரலில் தைத்து ரத்தமெடுத்து சர்க்கரை அளவு பார்த்தான். 101. பரவாயில்லை. ம்ம்ம்.. உடலில் கோளாறு இல்லை. மனதில்? இந்த எண்ணுக்கு என்ன பொருள்? வட்டம்? எனக்கு ஏதாவது மனநிலை கோளாறா? ஷுட் ஐ ஸீ எ ஷ்ரிங்க்?

பாத்ரூம் திறந்து வெளிவந்த மனைவியைப் பார்த்தான். இவளிடம் கேட்பதா?

"விபா?"

"எஸ் மான்.. குட்மார்னிங்.. உன் குறட்டை உன்னையே எழுப்பிடுச்சா?". தாராளமாகப் புன்னகைத்தாள்.

கடுங்கோடையில் வரமாகக் கிடைத்த மரநிழல் புன்னகை. அழும் குழந்தைக்குக் கிடைத்த ஆறுதல் முலைப் புன்னகை. தன்னை மறந்த ஹிமான்ஷு, சொல்ல வந்ததை அடக்கிக் கொண்டான். மனைவியைத் தட்டிக் கொடுத்து விட்டுக் குளியலறைக்குள் மறைந்தான். இவளிருக்க பயமேன்?

மெல்லிய ஈரச்சாரலின் வேகம் உடலில் பரவ இதமானான் ஹிமான்ஷு. கனவுகளை விரட்டுவது போல் உணர்ந்தான். கூட்டினான். அதிவேகச் சாரல் புத்துணர்ச்சியாக இருந்தது. திடீரென்று மறுபடி நினைவுக்கு வந்தது. சிவப்பு வட்டம். தொடர்ந்து குரல் போலவும் குரல் போல் அல்லாமலும் செய்தி. 1477. சிவப்பு வட்டம். தொடர்ந்து குரல் போலவும் குரல் போல் அல்லாமலும் செய்தி. 1477. சிவப்பு வட்டம். தொடர்ந்து குரல் போலவும் குரல் போல் அல்லாமலும் செய்தி. ஷ்!.. சட்டென்று வேகத்தைக் குறைத்து, பதறி வெளியே வந்தான்.

"மான்.. வாட்ஸ் திஸ்?.. ஷவர்லந்து நிர்வாணமா வரே? சொட்டுற ஈரத்தோடே? எதுக்காக இந்தப் புறப்பாடு? நான் செய்யாத தரிசனமா?" என்று விளையாட்டாக ஒரு மைக்ரொ பைபர் அங்கியைத் தன் மேலே போர்த்திய மனைவியைப் பார்த்து சுதாரித்தான்.

"மன்னிச்சுரு.. ஏதோ நினைவுல.." என்றான். "விபா.."

"என்ன?"

"ஒண்ணுமில்லே" என்றபடி ஒப்பனையறைக்குள் மறைந்தான். மனைவியின் பார்வை தன் முதுகைத் துளைத்தது போல் உணர்ந்தாலும் பொருட்படுத்தாமல் உடையணிவதில் கவனமாக இருந்தான். இவளிடம் இப்போது சொல்ல வேண்டியதில்லை. எல்லாம் என் மனவுளைச்சல். பிரமை. இறுக்கங்களின் இரகசிய வெளிப்பாடு. காற்றைக் கையால் அடிப்பது போல் ஒதுக்கினான். அலுவலக வேலையில் கவனம் செலுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். சமாதானங்களின் துணையோடு தயாராக முயன்றான். முடியவில்லை. திரும்பி மனைவியைப் பார்த்தான்.

"விபா.. காலையில் எழும்போது உனக்கு ஏதாவது வந்ததா..?" என்றான்.

"ஜஸ்ட் த யூஷுவல்.. ஒண்ணுக்கு.. பிறகு"

"நோ..". விவரம் சொன்னான். "உனக்கு ஏதாவது கனவு வந்ததா? ஐ வாஸ்ன்ட் ஸ்லீபிங்.. யெட் ஐ வாஸ் ட்ரீமிங்.. யு நோ?"

ஒரு கணம் அமைதியாக இருந்த விபாஷா அவனருகே வந்து அவன் வயிற்றில் கிள்ளினாள். "எனக்கும் அந்த கனவுச் செய்தி வந்தது மான். நானும் கொஞ்சம் குழம்பி... லெடிட் கோ.."

"விபா.. 1477.. ஏழும் ஏழும் பதினாலு.. டஸ் இட் மேக் சென்ஸ்? நீ என்ன நினைக்கறே?"

"ம்? பதினாலில் நீ பாதி நான் பாதி" சிரித்தாள்.

"சிவப்பு வட்டம்? நம்மை சுத்தி ஏதாவது அபாயம்?"

"எப்படியெல்லாம் யோசிக்கிறே?" சிரித்தாள். "உன் கலவரமான குழந்தை முகம் என் பெண்மையை சுண்டியிழுக்குது மான்.. என் மார்பு நேராயிடுச்சு பாரு.. ஹ்ம்..நீ மட்டும் இப்ப டிப்டாப்பா இல்லாதிருந்தா.. ப்ச.. ஜட்டிக்குக் கூடுதலா சின்னதா உடையணிஞ்சா கூட தொடுற ஆசை பொசுக்குனு போயிடுது.." என்று அவனை விளையாட்டாகத் தள்ளி நகர்ந்தாள். பிறகு அருகே வந்து அமைதியாக, "லெட் கோ, மான்ஷு" என்றாள். "நான் பிள்ளையை எழுப்பி ப்ரக்பாஸ்ட் தரணும்.. ஹெவ் எ குட் டே அட் வர்க்".

    அடுத்த நாட்களில் அடிக்கடி சிவப்பு வட்டங்களைப் பார்க்கலானான். புத்தகங்களில், அலுவலகக் கட்டிடங்களில், விரையும் வாகனங்களின் விளக்குகளில், உடைகளில், சூரிய உதயங்களில்..மறைவுகளில், அவசர முகச்சவரத்தின் வெட்டுக்கள் கூட சிவப்பு வட்டங்களாகத் தோன்ற... மிகக் குழம்பித் தடுமாறினான். உளவியல் மருத்துவரைத் தயக்கத்தோடு அணுகினான். "கொஞ்ச நாளா.."

மருத்துவர் சொன்னது திடுக்கிட வைத்தது. "இது போல நிறைய பேருக்கு செய்தி கிடைச்சிருக்கு ஹிமான்ஷு.. உண்மையைச் சொல்லணும்னா எனக்கும்.."

நெருங்கிய நண்பர்களை அணுகினான். அத்தனை நண்பர்களுக்கும் அதே செய்தி. மெள்ள... பள்ளிகளில் கல்லூரிகளில் அலுவலகங்களில் உலக ஊடகங்களில்.. இந்தச் செய்தி பரவி அலசபட்டது. இதன் பொருளென்ன என்ற பலவகை சர்ச்சைகளுக்கிடையில் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவரின் யுட்யூப் அறிக்கை கிருமி போல் பரவியது.

'ஜூலை ஏழு இரண்டாயிரத்துப் பதினாலு.. அன்று ஒரு பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது' என்ற மாணவரின் அறிக்கையைத் தொடர்ந்து, "தெரியும்.. அப்போதே சொல்லலாமென்றிருந்தேன்.." என்று மரமேறிய மதவாதிகள், அரசியல்வாதிகள், தலைவர்கள், பேராசிரியர்கள், ஞானிகள்.. அத்தனை குரங்குகளும் தங்களுக்குத் தோன்றிய தியரி சொன்னார்கள். நடுவே 'ஜூலை ஏழாம் தேதியில் உலகம் அழியும்' என்று ஒரு மதவாதி கிளப்பி விட, பெருங்கலவரமானது. 'அப்படி எதுவும் இல்லை' என்று ஒரு குழுவும், 'உலகம் நிச்சயம் அழியும்' என்று ஒரு குழுவும் டிவியில் தாங்கள் சொல்வது தான் சரியென்று கூச்சல் போட்டு.. அடித்துக் கொள்ளாத குறையாக விவாதித்தார்கள். 'உலகம் அழியுமுன் உருப்படுங்கள்' என்றார் ஒரு சாமியார்.

'உலக அழிவு என்றால் என்ன? இந்த வருஷம் புதுத்துணியோட தீபாவளி கொண்டாட முடியாதா?' என்று கேட்ட ஏழு வயது ஸ்ரீராமை கன்னத்தில் அறைந்த தகப்பன், 'உலகமே அழியுது, உனக்குப் புதுச் சட்டை கேக்குதா?' என்றான்.

"ஏன் இப்படி எல்லாரும் அடிச்சுக்குறாங்க தாத்தா.. உலகத்தை யாரு அழிக்கப் போறாங்க?" என்ற ஐந்து வயது பேரன் மகேஷின் நெற்றியில் விபூதியிட்டு "இங்க வா.. இப்படி உக்காரு.. தாத்தாவை தொந்தரவு செய்யாதே.. பூஜை பண்ணிட்டிருக்காரு இல்லே?" என்று இழுத்தார் பாட்டி. "உன்னை மாதிரியே இருக்கான் முந்திரிக்கொட்டை" என்று எதிரே வந்த மருமகளைக் கடிந்தார்.

'இதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை. யாரோ கிளப்பிவிட்ட புரளி' என்று வரிசையாக வரலாற்றுப் புரளிகளை எடுத்துச் சொன்ன புத்திசாலி எட்டாம் வகுப்பு உதயகுமாரை முழங்காலில் அமரச் செய்தான் கணித ஆசிரியன். "இத்தினி படிச்சவங்க பெரியவங்க எல்லாம் சொல்றாங்க.. இவரு புரளினு சொல்றாரு.. இன்னும் குனிஞ்சு நில்லுலே".

"உலகம் எப்படி அழியும்? எல்லாம் பத்தி எரியுமா? இல்லே தண்ணில மூழ்கிடுமா டீச்சர்?" என்று கேட்ட சிஜோவை "ஏன்? உங்க பைபில்ல என்ன சொல்லியிருக்கு தெரியாதா?" என்று காரணமில்லாமல் இடித்தாள் அறிவியல் ஆசிரியை.

'இதையெல்லாம் நம்பாதீர்கள்.. பள்ளிக்குச் சென்று படியுங்கள்' என்று வயதொத்தவரை அழைத்த பதினொரு வயது மெஹருன்னிஸாவை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள்.

"உலகம் அழிய இன்னும் முப்பது நாட்களே இருப்பதால் பள்ளி கல்லூரிகளை இழுத்து மூடுங்கள்.." என்று ஆரகனில் ஒரு பெற்றோர் கூட்டம் கொடி பிடித்தது.

"சீக்கிரமப்பா சீக்கிரம்.. உலகம் அழியுறதுக்குள்ள செஞ்சு முடிங்க" என்று எழுபதடி உயரப் பிள்ளையார் சிலையை நிறுவிக் கொண்டிருந்தது ஜூஹூவில் ஒரு கூட்டம். பள்ளிக்கூடம் போகாமல் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளை பிள்ளையார் பிடிக்க வற்புறுத்தினர்.

"வேலை நிறுத்தம்" என்று தொழிற்சாலைகளை இழுத்து மூடக் கூச்சல் போட்டன தொழிற்சங்கங்கள். நாட்கூலி வேலையாட்கள் சம்பளம் மறந்து உலக அழிவை எதிர்நோக்கி கடனில் சாராயம் குடித்தனர். முறையிட்ட பெண்டாட்டி பிள்ளைகளை அடித்து உதைத்தனர்.

நாற்பது வருடமாக ஒரே கம்பெனியில் சீ தேய்த்து சூ பழுத்த ஒரு இழவும் தெரியாத பெரியவர், 'எல்லாம் யங் ஜெனரேஷனோட இரெஸ்பான்சிபிலிடி.. என்னை மாதிரி எக்ஸ்பீரியன்ஸ்ட் பீபில் சொல்றதையெல்லாம் யாரு கேக்குறாங்க இப்பல்லாம்? விஷ்ணு சகஸ்ரநாமத்துல இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லியிருக்கு.. யார் கேக்குறா? ஹ..' என்று ப்லாக் எழுதினார்.

பேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் அறிவுக்கிழங்கள் கருத்துச் செருப்பால் அடித்துக் கொண்டார்கள். 'உலக அழிவுக்குக் காரணம் பெர்வேஸிவ் இன்சபார்டினேஷன்' என்று பனிரெண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களிலான சொற்கள் கொண்டு அரை ஆங்கிலத்தில் புலம்பினார்கள்.

பேஸ்புக் ஒதுக்கிய இளசுகள் டம்ளரிலும் மெரூனிலும் பெரிசுகளைக் கிண்டலித்தார்கள்.

மெள்ள ஆளாளுக்குப் பொதுவில் கிறுக்கத் தொடங்கினர். சுவர்களில். பஸ்களில். கடைக் கதவுகளில். கட்டிடங்களில். தங்கள் பயங்களையும் வக்கிரங்களையும் சிவப்பு வட்டக் கிறுக்கலில் வெளிப்படுத்தினார்கள்.

குருவாயூரில் சிலுவைகள் அறைந்தார்கள். இஸ்லாமியரல்லாதவருக்கும் மெக்கா பயணம் அனுமதித்தார்கள். வேடிகனில் தேங்காய் உடைத்தார்கள். ஜூலை நெருங்க நெருங்க கலவரங்கள் அடங்கி இனம்புரியாத மாற்றத்துக்குத் தயாராகினர்.

அழிவின் அச்சம் அத்தனை முரண்களையும் அடித்தெறிவதை வியந்தபடி..இத்தனை பரவலாக ஒரு செய்தி.. எந்தவித அறிவிப்பும் இன்றி.. கடவுள்தனத்தை நம்பும் குருட்டு அறிவு போல் பரவியதில்.. தானும் அதை நம்பத் தொடங்கியதில் அதிர்ந்தான் ஹிமான்ஷு. ஜூலை ஏழு, 2014ல் உலகம் அழியும் என்று நம்பத் தொடங்கியிருந்தான்.

    காலையிலிருந்த மனக்கலவரம், வெயில் போல் பொழுதேறக் கணிசமாகக் கூடியிருப்பதை உணர்ந்தான் ஹிமான்ஷு. இந்த நாள் வரப்போகிறதென்பது அறிவிக்கப்பட்ட முறை புதிதானாலும், அறிவிக்கப்பட்ட செய்தி அறிவளவில் ஒட்டியிருந்தாலும்.. இன்றுவரை மனதளவில் ஒட்டாதிருந்தது. சில உறவுகளைப் போல.

இன்று அப்படியல்ல. காலையிலிருந்து அதே நினைப்பில் இருந்தான். நேரமாக ஆக மெள்ளச் சலனப்பட்டுக் கொண்டிருந்தான். அதுவும் சென்ற சில மணிகளாய்.. உணர்விலிருந்து உணர்ச்சிக்கு உருமாறியிருந்த செய்தி அவனைக் கலக்கத் தொடங்கியிருந்தது.. முடிவின் கலக்கம். முடிவைத் தொடர்ந்து வரப்போவதன் இனம் புரியாத கலக்கம். தொடர்ந்தால் அது எப்படி முடிவாகும்? முடிந்தால் தொடருமா? இருந்தாலும்.. தொடர்ந்தால் தானே எதுவும் முடியும் சாத்தியம்? எனில், இந்த முடிவைத் தொடர்ந்வது எதுவுமில்லையா? முடிவின் முடிவா?

தேவையில்லாமல் நிறைய சிந்தித்தான். வீடு நெருங்க, காரின் வேகம் தணியத் தொடங்கியது. அவனுடைய பெருமூச்சின் வேகம் பெருகத் தொடங்கியது.

'இதானா? இதற்குத்தானா இத்தனை வருட போராட்டம்? ஏதோ பிஎச்டி படிப்பு ஏதோ ஆராய்ச்சி ஏதோ உழைப்பு ஏதோ பிழைப்பு என்று தன் கட்டுக்கு உள்ளும் வெளியும் முரட்டுப் பிசினாக ஒட்டியும் வெட்டியும் ஒதுங்கியும் பிதுங்கியும் சிரித்தும் அழுதும் சிந்தித்தும் நொந்தும் வாழ்ந்த வாழ்வு.. வளர்ந்த உறவு.. எல்லாம் இதோ ஒரு முடிவுக்கு வருகிறதா? அடுத்தக் கட்டம் என்ன? அடுத்த கட்டம் என்று ஒன்று உண்டா?'. இந்தக் கட்டத்துக்கு வந்ததை அவனால் நம்ப முடியவில்லை. 'ஒரு வேளை பொழுது விடிந்தால் புதிதாக ஏதாவது விளங்குமா? எல்லாம் கெட்ட கனவாக பொசுக்கென்று மறைந்து விடுமா? எல்லாமே கனவில் தானே தொடங்குகிறது? கலவிக் கனவில் தொடங்கி கலவரக் கனவில் முடிந்தால்.. கெட்ட கனவு நல்ல கனவு என்று தனியாகப் பிரித்து நொந்து போவானேன்?'

ஏதேதோ நினைத்தபடி வீட்டு வளாகத் தனியார் சதுக்கத்தின் பாதாள கராஜ் வாயிலில் தன் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டான் ஹிமான்ஷு. கதவில் விரல் பதித்து விடை கொடுத்ததும் கார் மெள்ள ஊர்ந்து பூமி வாய் பிளக்க சீதை போல் காணாமல் போனது. ஹ்ம்ம்ம். ஆயாசப் பெருமூச்சு. நடந்து அபார்ட்மென்டுக்கான எலவேடரை நெருங்கினான். ஹ்ம்ம்ம். இலவச இணைப்பாக இன்னொரு பெருமூச்சு.

எலவேடர் கூண்டு ஓசையின்றித் திறந்தது. மனம் மாறி, எலவேடரை விட்டுப் படிகளில் ஏறத் தொடங்கினான்.. எழுபத்தாறு படிகள், ஆறு மாடிகள்! மூச்சுத் திணறியது. சமீபத்தில் உடற்பயிற்சி செய்தது எப்போது என்று நினைவுக்கு வரவில்லை. தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். இந்த உடலுக்கு என்ன பயிற்சி வேண்டியிருக்கிறது? பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது?

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். சமையலறையிலிருந்து விபாஷாவின் குரல் கேட்டது. "ம்ராட்டி.. யாரு பாரு கண்ணு?". எட்டிப் பார்த்த பூத்தலை, "ப்ச.. எல்லாம் அப்பா தாம்மா" என்ற குரலுடன் முகவொளி காட்டி மறைந்தது.

தினம் நடப்பதே என்றாலும் அன்றைய 'அப்பா தாம்மா' சற்றுச் சூடாகப்பட்டது ஹிமான்ஷுவுக்கு.

அப்பா.. தானா? அப்பா என்றால் ஒரு சிறப்பும் கிடையாதா? அப்பா என்றால் இளப்பமா? முதல் நாள் இட்ட தோசையா? அந்தக் கணத்தில் ஒரு சிறிய பூச்சி போல் தன்னை உணர்ந்தான் ஹிமான்ஷு. ஒரு கணம். ஒரு கணம் தான். அடுத்த கணமே பிள்ளைகள் மீது எதற்காக அன்பு செலுத்துகிறோம் என்ற காரணம் நினைவுக்கு வர, உடனே வெட்கிச் சுதாரித்தான். பத்து ரூபாய் செலவுக்கான நன்றி எதிர்பார்ப்புடன் பிள்ளைகளை வளர்த்து கணக்கு பாருக்கும் அல்பப் பெற்றோர் கூட்டம் ஒரு புறம்.. கடமை தவறியவர் என்ற உலக ஏச்சுக்கு மட்டுமே பயந்து, அறிவில்லாமல் கண்மூடித்தனமாக அன்பு செலுத்தும் நாடகப் பெற்றோர் கூட்டம் ஒரு புறம். எதையுமே எதிர்பார்க்காமல் பிள்ளைகளுடன் வாழும் வாய்ப்பையே பேறாகப் பேணி இயல்பான ஒருவழி அன்பு செலுத்தும் அசல் பெற்றோர் கூட்டம் ஒரு புறம். தான் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று எண்ணி ஒரு கணம் தடுமாறினான். மறுபடி வெட்கப்பட்டான்.

அவசரமாகக் கையைத் துடைத்தபடி எதிர் வந்த மனைவியைப் பார்த்தான். 'ஆ! எத்தனை அழகாக இருக்கிறாள்! மகளைப் பற்றிக் கவலையில்லை, ஆனால் விபா? காதல் மனைவி? அவளை எப்படி இழப்பது?' சிந்தனையில் சற்றுப் பின்வாங்கினான். 'மகளும் என் ரத்தமாயிற்றே? எப்படிக் கவலைப்படாதிருப்பது?'

வழக்கம் போல் நெருங்கி வந்து ஹிமான்ஷுயின் பாதங்களில் ஏறித் தன் பாதங்களைப் பதித்தாள் விபா. காதல் கணவனை ஒட்டி.. ஆற அணைத்து,. உடலின் இதத்தை ஒரு நிமிடம் தாங்கி.. உதட்டில் பட்டும் படாமல் முத்தமிட்டாள். விலகினாள். விலகியவளை இழுத்துக் கொண்டான் ஹிமான்ஷு.

'ஏன் இன்றைக்கு உபரி மோகம்?' விபாவின் கண்கள் கேட்ட நேர் கேள்விகளுக்கு.. அவன் உதடுகள் தந்த சுற்றி வளைத்த பதில்.

பூக்களைப் பறிப்பது போல் சிறிது சிறிதாக அவள் முகமெங்கும் கண்ணியமாக முத்தமிட்டான். விபாஷா இசைந்தாள். அவன் அமைதியாகும் வரை இசைந்தாள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இப்படி இவனை முத்தமிட அனுமதிக்கலாம் என்று எண்ணியபடி இசைந்தாள்.

"இன்னும் எவ்வளவு நேரம் இப்படி கிஸ் பண்ணிட்டிருப்பீங்க?" குரல் கேட்டுக் கலைந்தார்கள்.

ஆறு வயது மகள் மீரா இடுப்பில் கைகளை ஊன்றியபடி நின்று கொண்டிருந்தாள்.. "இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? பர்த் டே.. வெடிங் ஆனிவர்சரி.. லவர்ஸ் டே கூட இல்லையே? ஓ.. வொர்ல்ட் என்டிங்க் டே.. அதானா?"

சிரித்தபடி மகளைத் தள்ளினான் ஹிமான்ஷு. "ம்ராட்டி.. நீ தான் அப்பாவைக் கண்டுக்கலே.. 'ஜஸ்ட் டேடி'னு சொன்னேல்லே? அம்மாவுக்காவது அப்பா மேலே ஆசை இருக்குல்ல? அதனால அம்மாவுக்குத்தான் முத்தம்.." அலுவலக உடை களையாமல் சோபாவில் விழுந்தான்.

"என்ன டேடி.. எனக்குந்தான் உம்மேலே ஆசையிருக்கு.. இங்க பாரு டேடி.. எனக்கு உன் மேலே இவ்வ்ளோ ஆசை தெரியுமா?" என்றபடி இரு கைகளையும் அகல விரித்து மேலே விழுந்த மகளை விளையாட்டாக ஒதுக்கினான். "ஒண்ணும் வேணாம் போ.. உங்கூட பேச மாட்டேன் போ" என்று பொய்யாகச் சிணுங்கினான்.

சிரித்தபடி மீண்டும் அருகே வந்தவளைப் பொய்க் கோபத்துடன் விரட்டினான்.

எழுந்து போன மீரா, "கிஸ் வேணாம்னா சாக்லெட் தரேன் டேடி" என்றபடி ஒரு கிட்கேட் கட்டியுடன் திரும்பினாள். "இந்தா டேடி.. எனக்கு ஒரு பீஸ் கூட வேண்டாம் டேடி.. இது முழுக்க.. எல்லாம்.. உனக்கே உனக்கு டேடி" என்ற பெண்ணின் கொஞ்சல் கலந்த கெஞ்சலை ரசித்தாலும், "போ.. போ.. உன் சாக்லெட்டை நீயே வச்சுக்க.." என்று விரட்டினான்.

ஒரு கணம் தயங்கிய மீரா, "சாக்லெட் வேணாம்னா.. அப்போ.. கதை சொல்லட்டுமா டேடி? டைகர் கதை? அப்ப எங்கூட பேசுவியா டேடி?" என்று அவனருகே மீண்டும் ஒட்டினாள்.

ஹிமான்ஷு வேண்டுமென்றே, "எங்கூட பேச வேணாம்னு சொன்னேன் இல்லே? டைகர் கதை வேணாம்.. போ" என்று ஒதுங்கினான்.

செயவதறியாது விழித்த சிறுமி மீண்டும் எதிர் வந்தாள். ஹிமான்ஷுவின் வலக்கை சிறுவிரலை இழுத்து, "டே..டி.. யு ஆர் கிடிங்.. இது விளையாட்டு தானே?" என்றாள்.

எதிரே நின்றவளைப் புறக்கணிப்பது போல் கைகளை உதறித் திரும்பிக் கொண்டான் ஹிமான்ஷு. தான் அந்தக் கணத்தில் தன் மகளுக்குத் தேவைப்படுவதில் ஒரு அல்ப நிறைவை உணர்ந்தாலும் வீம்பாகத் தொடர்ந்தான். "எங்கூட பேசாதே போ.. என் கிட்டே வராதே..". கைகளால் கண்களைப் பொய்யாக அழுந்தப் பொத்திக் கொண்டான். "என் முகத்துல விழிக்காதே போ.."

சில கணங்கள் தொடர்ந்த அமைதியில் வியந்து, கை விலக்கிக் கண் திறந்தான். மகளைக் காணோம். 'ஒரு வேளை அதிகமாக விளையாடி விட்டோமோ?'

திடீரென்று மீரா ஒரு சிறு உண்டியலுடன் வந்தாள். "இந்தா டேடி.." என்றாள். "டேடி.. யு லைக் மனி. உனக்கு பணம் தான் முக்கியம்னு சொல்வியே..? ரத்தம் கக்கிப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டறதா அடிக்கடி சொல்வியே..? ஸ்கூல் பீஸ் கட்டினா கூட உன் சொத்து அழியுறதா அடிக்கடி சொல்வியே..? என்னோட கிஸ்.. சாக்லேட்.. கதை எல்லாம் வேணாம்னா.. உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு டேடி.. இந்தா டேடி.. எங்கிட்டே இருவது ரூபா இருக்கு டேடி.. ஸீ.." என்று உண்டியலின் மூடியை விலக்கிக் காண்பித்தாள். "யு கென் ஹேவ் இட் டேடி.. நீயே வச்சுக்க டேடி.. எனக்குப் பணம் வேணாம்.. டேடி தான் வேணும்.. இது போதாதுனா அம்மா கிட்டே வாங்கித் தரேன் என்ன? சரியா டேடி? இப்போ பேசுவியா டேடி?"

உண்டியலை இரு கைகளாலும் முகத்தருகே நீட்டிய மகளைத் திடுக்கிட்டுப் பார்த்தான் ஹிமான்ஷு. குழந்தையின் கண்களில் நீர் முட்டத் தொடங்கியிருந்தது.

"மை குட்னஸ்..! என்ன செய்கிறேன் என்பது தெரியாமல் செய்துவிட்டேனே!" என்று நொந்து கொண்டான் ஹிமான்ஷு. "இங்க வாம்மா என் மீரா குட்டி..". பெண்ணை இழுத்து மடியில் கிடத்திக் கொண்டான். "என்னை மன்னிச்சுடு ம்ராட்டி... ஐ அம் ஸோ ஸாரி.. நான் சும்மா விளையாடினேன்.. உங்கூட பேசாம என்னால் இருக்க முடியாது.. உனக்குத் தெரியாதா?".

என்ன சொல்லியும் மகள் முகத்தில் புன்னகை வராதது கண்டு வருந்தினான். "என்ன காரியம் செய்தேன்!" என்றபடி நிமிர்ந்தவன், சுவர் ஓரமாக நின்றிருந்த விபாவைக் கவனித்தான். அவள் முகத்தில் கரிசனம் கலந்த புன்னகை. அருகில் வந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள். மெள்ளச் சிரித்த மீரா, "ஐ வாஸ் கிடிங் டூ டேடி.. உனக்கு மட்டும் தான் ரேக் பண்ண வருமா?" என்றாள். ஹிமான்ஷுவைக் கட்டிக் கன்னத்தில் முத்தமிட்டாள். 'ஐ லவ் யூ டேடி.. அன்ட் ஐ'ம் ஸ்மார்டர் தேன் யு'.

"ஐ லவ் யு பேபி" என்றபடி மகளை இறுக அணைத்துக் கொண்டான் ஹிமான்ஷு.

"அம்மாவுக்கு இனிமே லவ் கிடையாதா?" என்றபடி அருகில் வந்தாள் விபாஷா. "பிள்ளையைப் புடுங்கிக்கிட்டு அம்மாவை ஒதுக்கிடறதா?" என்றபடி ஹிமான்ஷுவின் இடுப்பைக் கிள்ளினாள். ஹிமான்ஷு போலி வலியுடன் துடிக்க, விரல்களால் இதமாகத் தடவினாள். இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

ஆசை மனைவியும் அன்பு மகளும் தனக்குக் கிடைத்ததன் இனம் புரியாத நன்றியுணர்வில் ஹிமான்ஷு திகைத்தான். இது தானே முக்கியம்? இனி இந்த உலகம் என்னவானால் என்ன?

இரவு படுக்கையில் "வாட் டு யு திங் வில் ஹேபன்?" என்றான் ஹிமான்ஷு.

"வழக்கமா நடக்குறது தான்.. முதல்ல முத்தம்.."

"ஐ மீன்.. சிவப்பு வட்டம்.."

"ஓ.. நடக்குறது நடக்கட்டும்னு நினைக்கிறேன். உலகம் அழிஞ்சு போச்சுனா என்னாகும்னு பயப்படுறியா?"

"நோ. அரைகுறையா அழிஞ்சா தான் கவலை. உன்னை விட்டு என்னால இருக்க முடியுமானு தெரியலே"

"நான் அழிஞ்சுருவேன்.. நீ உயிரோட இருப்பேனு பாக்கிறியா? ஆணாதிக்கப் பன்றி"

"இல்லேடா.. ஜஸ்ட் செல்ஃபிஷ்.. சாதாரண சுயநலப் பன்றி. என்னோட சுயநலம் உன்னை இழக்க மறுக்குது. ஐ'ம் சாரி.. எனக்கு சரியா பேச வரலே.. உன்னைப் போல எக்ஸ்பிரஸ் பண்ணத் தெரியலே.."

"சரி, ஒழிஞ்சு போ" என்ற விபா, திடீரென்று அருகில் வந்தாள். "நோ.. ஐ டிட் நாட் மீன்.. நீ ஒழியணும்னு நான் நினைக்கலே" என்று குரல் கம்ம அவனை இறுக அணைத்தாள். "சரி.. உலகம் அழியுற அன்னைக்காவது டிரஸ் போடாதயேன்.. படுக்கைல யாராவது டிரஸ் போடுவாங்களா?" என்று அவனை இடித்தாள். அவன் அங்கியைக் களைந்தாள்.

"ஐ லவ் யு" என்றபடி ஹிமான்ஷு விபாவை முத்தமிட்ட போது, கதவு திறந்து உள்ளே நுழைந்தாள் மீரா.

"இடியட்.. கதவு தட்டாம வரக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல?" என்று சுதாரித்து எரிந்து விழுந்த ஹிமான்ஷுவை அடக்கினாள் விபா. "என்ன ம்ராட்டி?"

"வந்து.." என்று தயங்கினாள் மீரா. "உங்க கூட படுத்துக்கட்டுமா?"

"நோ" என்றான் ஹிமான்ஷு. "என்ன இது கெட்ட பழக்கம்? கோ பேக் டு யுர் ரூம்"

"டேடி.. இன்னிக்கு வொர்ல்ட் என்டிங் டே.. வொர்ல்ட் வெடிச்சுரும்னு குர்பி சொன்னான். நாமெல்லாம் ஸ்கெலிடனா மாறி ஊளையிடுவோம்னு ரூபி சொல்றா.. வொர்ல்ட் முடியுறப்ப ஷிவ் சூலம் வச்சுகிட்டு சுடுகாட்டுல ஸாம்பீஸ் கூட டேன்ஸ் ஆடுவாருனு டிவில சொல்றாங்க.. எனக்கு பயமாயிருக்கு டேடி.. நான் உங்க பக்கத்துல படுக்காட்டி கூட.. இங்க தரையில படுக்கறேன் டேடி.. ஸேம் ரூம்.. ப்லீஸ்" என்று தன்னிடமிருந்த டெடி கரடியை நெஞ்சோடு இறுக்கினாள்.

"சரி.. டென் மினிட்ஸ்.. ஓகே?" என்று அழைத்த விபாவை முறைத்தான் ஹிமான்ஷு. தாவி வந்து படுக்கையில் விழுந்த மகள் சிரித்தாள். விபாவைப் பார்த்து ரகசியத் தொனியில், "டேடி இஸ் நேகட்" என்றாள். மறுபடி சிரித்தாள். "டிரஸ் போட்டுக்க டேடி.. ஷேம் ஷேம்" என்றாள் இயல்பாக. "நான் தூங்கினப் பிறகு என்னை என் பெட்ல போட்டுரு டேடி.. குட் நைட்".

    யல்பாக விழித்தான் ஹிமான்ஷு.

விடிந்திருந்தது. எழுந்தான். சோம்பல் முறித்தான். ஜன்னலோரமாகப் பார்த்தான். முதல் நாள் பார்த்த அதே குருவி, காக்கை, சிவப்பு நிறப் பூக்கள். முப்பது நாட்களுக்கு முன் பார்த்த அதே மரங்கள். மூன்று மாதங்களுக்கு முன் பார்த்த அதே அக்கம்பக்கம்.

சிவப்பு வட்டம், உலக அழிவு.. மை ஃபுட். பலமாகச் சிரித்தான்.

பாத்ரூம் திறந்து வந்த விபாவைப் பார்த்தான். "இதோ நானும் குளிச்சுட்டு வரேன்". குளிக்கும் பொழுது கதவு திறந்து வந்த விபாவை ஏறிட்டான். "வான்ட் டு ஜாயின் கப்கேக்? முதுகு தேய்ச்சு விடு.. கையால இல்லே.. நோ ஹேன்ட்ஸ் அலவ்ட்"

"மீராவைப் பார்த்தியா ஹிமான்ஷு?" என்றாள். அவள் குரலில் கலவரம்.

"இல்லையே? ஏன்? என்னாச்சு அவளுக்கு?"

"அவளைக் காணோம். வீடு முழுக்கத் தேடிட்டேன்"

"இதோ வரேன்" என்று அவசரமாக துடைத்துக் கொண்டு வெளிவந்தான். அழைப்பு மணி ஒலி. "யாரோ கூப்பிடறாங்க பாரு.. மீராவா இருக்கும். மேஜர் வீட்டுக்குப் போயிருந்திருப்பா".

"நோ.. இட்ஸ் சிக்ஸ் ஏஎம் ஸ்டுபிட்.." என்று பதறியபடி அவசரமாகக் கதவைத் திறந்தாள் விபா. எதிர் வீட்டு சர்தார். "ஜி.. என் பையன் குர்பிந்தரைக் காணோம்.. உங்க வீட்ல..".

அக்கம்பக்க விசாரிப்புகள், போலீஸ் தகவல்கள், செய்தி சுதாரிப்புகள், ஊடகங்கள், அரசாங்கம் என்று புழுதியாய்ப் பரவிய கலக்கம். மெள்ள உள்ளிறங்கிய உண்மையின் அதிர்ச்சி.

குழந்தைகளைக் காணவில்லை. வீட்டில். நாட்டில். உலகில். எங்கேயும்.



குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1951ல் வெளியான 'The last night of the world' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
பரணறையில் நன்னாரி மணம் |(A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் |(The happiness machine)



31 கருத்துகள்:

  1. சில வருஷங்களுக்கு முன் இப்படி பயந்து இன்று போய் நாளை வா என்று சுவர்களில் எழுதித் தள்ளினார்கள். அது நினைவுக்கு வருகிறதுஆனால் ஏறத்தாழ எல்லோருக்கும் ஒரே மாதிரி கனவுகள் ( கனவா ) வந்த காரணம் புரியலையே கடந்த ஆண்டும் இன்ன தேதியில் உலகம் அழியும் என்று மாயன்.(?) காலண்டர் கூறியதாக ஒரு புரளி கிளம்பியதே.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சிறிய பதிவாக இருப்பதால் எளிதாகப் படிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிய பதிவாக // ஸ்ரீ ராம் jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

      நீக்கு
    2. ப்ரேட்பரி கதை படிச்சதும் என் மனசுல தோணிய வரி 'குழந்தைகளை காணவில்லை'. அதை வச்சு வருசத்துக்கு மேலே உருட்டி எத்தனை சுருக்கமாக சொல்ல முடியுமோ சொல்லிடுறதுனு தீர்மானிசேன்.. ஹிஹி.. இன்னும் சுருக்கமாக சொல்ல நினைச்சேன்..

      நீக்கு
    3. இன்னும் சுருக்கமாகவா? ஆ!

      நீக்கு
  3. Excellent narration appa sir...!

    Emotions, science , feel , love சமகால சலம்பல்கள் மீதான சவுக்கடி ன்னு பின்னிட்டீங்க ...!

    பொண்ணு dollar கொடுப்பான்னு நெனச்சேன் .

    //டம்ளரிலும் மெரூனிலும்// என்ன அப்பா சார் இது புதூஸா இருக்கு .

    //வீட்டு வளாகத் தனியார் சதுக்கத்தின் பாதாள கராஜ் வாயிலில் தன் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டான் ஹிமான்ஷு. கதவில் விரல் பதித்து விடை கொடுத்ததும் கார் மெள்ள ஊர்ந்து பூமி வாய் பிளக்க சீதை போல் காணாமல் போனது.

    ஓ இந்த அளவு வசதி வந்திடிச்சா ? இப்பத்தான் தெரிஞ்சுண்டேன் .ஹ்ம்ம்ம். ஆயாசப் பெருமூச்சு.//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க.
      தானியங்கி car park எத்தனையோ வருசமா இருக்குதே? இருபதாம் நூற்றாண்டு நுட்பம் ;)
      மும்பையில் automated garages இருப்பதாகப் படித்த நினைவு.

      நீக்கு
  4. //பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.//

    எனக்கு ரெம்ப புடிச்சுருக்கு உங்க பதிவு - அப்பா சார் அப்ப நா matured வாசகர் ஆயிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  5. வேகமாக ஒருமுறை வாசிச்சாச்சு , நிதானமாக ஒரு முறை வாசிக்க வேண்டும் .

    ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே எழுதலாமே அப்பா சார் !

    பக்காதுல // பக்கத்துல ?

    பதிலளிநீக்கு
  6. Wow superb அப்பா சார் 1951 அ 2014 க்கு மேட்ச் பண்ணிட்டீங்க.. செம

    கதாபாத்திரங்களின் மனப்போராட்டங்கள் ஆசம் ஆசம் :-)

    அதானே வருங்கால சமுதாயத்தை அழிப்பதே வருங்கலாத்தை அழிப்பது தானே.. குழந்தைகள் எங்குமே காணவில்லை... நினைத்துப் பார்க்கவே வித்தியாசமா இருக்கு...

    பதிலளிநீக்கு
  7. விஞ்ஞானக் கதைகளில் ப்ராட்பரியை அடிச்சுக்க ஆள் கிடையாது. உங்களின் எழுத்தில் படிக்க கூடுதல் சுவை.

    பதிலளிநீக்கு
  8. குருவாயூரில் சிலுவைகள் அறைந்தார்கள். இஸ்லாமியரல்லாதவருக்கும் மெக்கா பயணம் அனுமதித்தார்கள். வேடிகனில் தேங்காய் உடைத்தார்கள். ஜூலை நெருங்க நெருங்க கலவரங்கள் அடங்கி இனம்புரியாத மாற்றத்துக்குத் தயாராகினர்.//

    உண்மைதான். மரணத்தை விட மரண பயம் கொடிது அன்றோ.

    i also heard from reliable sources:

    சிகாகோ விலே நசி கேத புராணம் கருட புராணம் எல்லாம் best seller பேஸ்ட் செல்லர் ஆனதாம். !!
    வீட்டுக்கு வீடு ம்ர்த்யுஞ்ச்சய ஹோமம் நடந்ததாமே !!

    ஹோம குண்டத்தில் இருந்து கொஞ்சம் அந்த கருப்பு சாம்பலை எடுத்து சில பேரு தன பெட் நாய்க்குட்டி நெற்றியிலும் வைத்ததாகக்
    கேள்விப்பட்டேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி.. ஆமாம்.. பத்தாயிரம் சாந்திகள் ;)

      நீக்கு
  9. முதிர்ந்த வாசகனாகனும் என்கிற பேராசை
    தங்கள் பதிவுகளைப் படிக்க படிக்க
    விஸ்வரூபமெடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை

    பதிலளிநீக்கு
  10. ஹையோ, உங்களைத் தவிர யாராலும் இப்படி எழுத முடியாது. குழந்தைங்களை நினைச்சுக் கவலையாவும் இருக்கு! :(

    பதிலளிநீக்கு
  11. எதுக்குப்பா குழந்தைகள் காணாமப் போணும். அடுத்த கதையில் அவர்களைக் கொண்டுவந்துவிடுங்கள் கதையைப் படித்ததிலிருந்து எனக்கும் பெருமூச்சு. பயப் பெருமூச்சு. வாவ் வாட் அ ஸ்டோரி.

    பதிலளிநீக்கு
  12. எனக்கு மனமுதிர்ச்சி வரவில்லை போல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படி எல்லாரும் முதிர்ச்சியை பிடிச்சுக்கிட்டீங்க? :)

      நீக்கு
  13. oh my God
    What a climax? Why only children? why? why? why?

    பதிலளிநீக்கு
  14. oh my God
    What a climax? Why only children? why? why? why?

    பதிலளிநீக்கு
  15. நல்ல படைப்பு, அப்பாதுரை.
    //கடமை தவறியவர் என்ற உலக ஏச்சுக்கு மட்டுமே பயந்து, அறிவில்லாமல் கண்மூடித்தனமாக அன்பு செலுத்தும் நாடகப் பெற்றோர் கூட்டம்?//
    இப்படி கூட பெற்றோர் இருக்கிறார்களா? சற்றே மிகைப்பட்டு எழுதியிருந்தது போல‌ இருந்தது.

    பதிலளிநீக்கு
  16. கதை முழுதாய் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பிறகே படிக்கத் துவங்கினேன். இப்படிபட்ட முடிவை எதிர்பார்க்கவில்லை!

    பதிலளிநீக்கு
  17. எதிரபாராத ஒரு முடிவு........

    மாயன் காலண்டர் உலகத்தின் முடிவு என்று சொன்னபோது எல்லோரும் அதையே பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.....

    உங்களுடைய வார்த்தைகளில் கதை படிக்கப் படிக்க அலாதியான ஒரு இன்பம்..... தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  18. அப்பாதுரை அவர்களே! வாசிப்பு சுகம் இருக்கிறது ! ஆனாலும் வெகு நட்கள் மனத்தில் நிற்காது என்றே நினைக்கிறேன் ! உங்கள் எழுத்து நடை சுகத்தினக் கொடுக்கிறது ! ஒரு அமானுஷ்யத்தை எதிர் பார்க்க வைத்தீர்கள் ! சரி ! இறுதியில் குழந்தைகளை காண வில்லை என்பது திருப்பம் ! இயல்புதன்மை இல்லை ! வாசக அதிர்ச்சிக்காக மெனக்கெட்டு இருக்கிரீர்களோ என்று தோன்றுகிறது ! பூ மலர்வது போல மலர வேண்டும் நிகழ்ச்சிகள் ! மாறாக ராஜெஷ் குமார் லெவலுக்கு இறங்கி விட்டது ! பத்திரிகை ஆசிரியர்கள் மொழியில் சொல்வதானால் "செய்த " கதை ! வழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இயல்புதன்மை இல்லை ! வாசக அதிர்ச்சிக்காக மெனக்கெட்டு இருக்கிரீர்களோ என்று தோன்றுகிறது ! பூ மலர்வது போல மலர வேண்டும் நிகழ்ச்சிகள் ! மாறாக ராஜெஷ் குமார் லெவலுக்கு இறங்கி விட்டது ! பத்திரிகை ஆசிரியர்கள் மொழியில் சொல்வதானால் "செய்த " கதை ! வழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.//
      உண்மையை பட் என்று உடைத்துப் போடவும் ஒரு தகிரியம்
      வேணும்.

      காஷ்யபன் சார். தாங்க்ஸ்.

      அது சரி, என்ன அது வழ்த்துக்கள் ?

      ஏதோ ஒன்னு வழுக்கி இருக்குது அப்படின்னு சொல்றீக போல.
      சர்தான்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  19. ஆறு வயது உம்மைவிட பெரியவனாக இருந்தாலும் சுப்பு தாத்தா நே கூப்புடுறென் ! சாமி! தமிழ் டைப்பும் தெரியாது ! ஆங்கில டைப்பும் தெரியாது ! 38 வருடம் "கம்ப்யுட்டரை "எதுத்து போராடியவன்! சொல்லப்போனால் ஒரு "கம்ப்யுட்டர் மூடன்" ! கூடுமானவரை முடிக்கும் போது வாழ்த்துக்கள் நு முடிக்கறது ! டைப் பண்ணூம் போதுமிஸ்டேக் ! அதுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுப்பீங்கனு தெரியாம போச்சு ! வாழ்த்துக்கள் ! ---காஸ்யபன்.!
    (அப்பாதுரை எங்க ஊர்காரர் ! நல்ல நண்பர் ! இரண்டுமுறை என் வீட்டிற்கு வந்து இருக்கார் ! இந்த தடவை தான் வந்துட்டு சொல்லாம போயிட்டார் ! சுத்தி வளைச்சு என் மறு மகளூக்கு உறவுக்காரர் !
    சம்மந்து உறவை பாது காக்கணும் சாமியோவ் ---கா)

    பதிலளிநீக்கு
  20. //அறிவுக்கிழங்கள் கருத்துச் செருப்பால் //

    //கடவுள்தனத்தை நம்பும் குருட்டு அறிவு போல் //

    //பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது? //

    //அப்பா என்றால் இளப்பமா? முதல் நாள் இட்ட தோசையா? //

    //பிள்ளைகளுடன் வாழும் வாய்ப்பையே பேறாகப் பேணி இயல்பான ஒருவழி அன்பு செலுத்தும் //

    mmmmmm!!!!!

    பதிலளிநீக்கு
  21. இந்த உடலுக்கு என்ன பயிற்சி வேண்டியிருக்கிறது? பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது? //

    உண்மை.

    தந்தை ,மகள் பாசப்பின்னல் அருமை.
    குழந்தைகள் எங்கே!

    பதிலளிநீக்கு
  22. ப்ரேட்பரி கதைகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
    எழுத்து நடை அருமை.

    பதிலளிநீக்கு
  23. சுவை!///இன்னும் 'கொஞ்சம்' சுருக்கமாக பதிந்திருக்கலாம்,தான் ஹ!ஹ!!ஹா!!!

    பதிலளிநீக்கு