2013/02/02

நாற்சந்தி அடிமைகள்



    "வாங்கணே.. நீங்க எதுக்கு வந்தீக.. வட்டாரத்தலை யாரையானும் அனுப்பியிருக்கலாம்ல?"

"நல்லாயிருக்கியாம்மா.. ஏளெட்டு வருசருக்குல்லா பாத்து?"

"பத்து வருசாச்சணே"

"செல்வா.. நெனவிருக்குல்லே? இப்ப அவந்தான் இங்க வட்டாரத்தலை. ஒனக்கு மூணு பிள்ளைங்கனான்... ஆமா.. பய எங்க? நல்லா வளத்திருக்கியா?"

"வந்துருவான்.. காப்பி குடிக்கிறெளா? கொண்டாறேன்.."

"ர்க்ட்டு.. நா வந்த விசயம்.." என்று முத்தண்ணன் கனைத்துத் தொடங்குவதற்குள் ராணி காபி எடுத்து வர உள்ளே சென்றுவிட்டாள்.

    தி.நகரின் மிகப்பெரிய வணிகக் குழுமத்துக்கு உள்முகம் வெளிமுகம் இரண்டும் உண்டு. வெளிமுகத்துக்கு அறிமுகம் தேவையில்லை. உள்முகம் சற்றுச் சிக்கலானது.

வடபழனி - மாம்பல வட்டாரத்தில் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் வீடு வீடாக சைக்கிளில் பாத்திர வியாபாரம் செய்த ஐயாவின் உழைப்பில் இன்றைய குழுமப் பிரம்மாண்டத்தின் பின்புலத்தைத் தேடிப் புரிந்து கொள்வது எளிதல்ல. எனினும், அப்படித்தான் தொடங்கியது ஐயாவின் குடும்ப வணிகம். மெள்ள வளர்ந்து பாத்திரக்கடை, துணிக்கடை, பட்டாசுக்கடை, பழக்கடை, உணவகம் என்று விரிந்து இன்றைக்கு க்ரேனைட், மின்சார சாதனங்கள், வீட்டு மனை என்றுப் பரந்திருக்கும் குழும வேர்களில், வேர்களின் பராமரிப்பில், பராமரிப்பின் நிழல் நாடகங்களில்... உள்முகம் புலப்படும்.

முத்தண்ணன், பதினாறு வயதில் ஐயாவுடன் சேர்ந்து அவர் நிழலில் வளர்ந்து நிலையானவர். அறுபது வயதில், இன்றைக்கும் குழும வியாபாரங்களுக்கான ஆள்படைத் தலைவர், காவலர். இன்றைக்கு மேற்பார்வை பார்த்தாலும், தொடக்கத்தில் வேலையாட்களை சேர்த்து, வளர்த்து, விரட்டுவதே முத்தண்ணனின் வேலையாக இருந்தது.

படிக்காத ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளை முத்தண்ணன் சில விதிகளுக்குட்பட்டு 'விலைக்கு' வாங்கி வருவார். பிள்ளைகளின் விலை, அவர்கள் வயதையும் பெற்றோர்களின் ஏழ்மையையும் குடும்பத்தின் படிப்பறிவையும் ஒட்டி நிர்ணயிக்கப்படும். பத்து வருடங்களுக்குச் சென்னையில் குழுமக் கடைகளில் வேலை. சம்பளமாக வருடத்துக்கு துணி, தினம் சாப்பாடு, தங்குமிடம், மாதம் ஐந்து ரூபாய் கைச்செலவுக் காசு தவிர... வருடத்துக்கு ஒரு பிள்ளைக்கு நூறு ரூபாய் என்றக் கணக்கில் பெற்றோருக்கு வழங்குவதாக முத்தண்ணன் விளக்கியதும், அனேகப் பெற்றோர்கள் சம்மதித்து விடுவார்கள்.

தனியாகச் செயல்பட்ட முத்தண்ணன் நாளடைவில் நெல்லை, நாகர்கோவில், தூத்துகுடி, விருதுநகர், சிவகாசி என்று ஐந்து வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆட்படைத் தலைவரை நியமித்தார். எட்டு முதல் பதினொரு வயது வரையிலான பிள்ளைகளைத் தேடிப் பிடித்துக் குழுமப் பணியில் சேர்ப்பதே வட்டாரத்தலைகளின் வேலை. ஒவ்வொரு வட்டாரத்தலைக்கும் வருடத்துக்கு இன்னின்ன வயதில் இத்தனை ஆண், இத்தனை பெண் பிள்ளைகளைப் பிடித்துக் குழுமத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோட்டாக் கணக்கின் படியே அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. (இன்றைக்கும் பழுதில்லாமல் இயங்கும் முத்தண்ணனின் 'மனிதவள' முறை, மிகச் சிறிய மாற்றங்களுடன் பிற குழுமங்களிலும் பயன்படுத்தப்படுவதை, தி.நகரைச் சுற்றி வந்தால் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். இதை எந்த இயக்கமும் 'கண்டு கொண்ட'தாகத் தெரியவில்லை.).

    ருபது வருடங்களுக்கு முன்பு முத்தண்ணனே நேரில் பார்த்து சேர்த்தவர்கள் ராணியும் சிவாவும். ராணிக்கு பத்து வயது. சிவாவுக்கு ஒன்பது. "நா பாத்துக்குறேன்" என்று ராணியின் அப்பாவிடம் உபரியாக இருநூறு ரூபாய் கொடுத்து அழைத்து வந்தார். "லே சிவா.. இவளை உன் அக்காவாட்டம் பாத்துக்க" என்று வழியெங்கும் ராணியைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.

சென்னை வந்த பிறகு, சிவா பாத்திரக்கடை பகுதியிலும் ராணி துணிக்கடை பகுதியிலும் வேலை பார்த்தார்கள். அசோக் நகரில் கடைக்குச் சொந்தமான பெரிய வீட்டில் ஆண் பெண்களுக்கானத் தனிப் பகுதிகளில் தங்கினாலும் புதன், சனி மாலைகளில் வேலையாட்களுக்கான அடிப்படை எழுத்தறிவு-கணித வகுப்பில் பார்த்துக் கொள்வார்கள், படிப்பார்கள். பேசிக்கொள்வார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய் மாலை கிடைக்கும் அரை நாள் விடுப்பில் சில மணி நேரம் பேசிச் செலவழிப்பார்கள். கடையிலோ வெளியிலோ யாரேனும் ராணியிடம் விளையாட்டாக வம்பு செய்தால் கூட சிவா பாதுகாப்புக்கு ஓடி வருவான். நாளடைவில் வேலைச் சுமை, உடல் வளர்ச்சி என்று பல காரணங்களால் இருவரும் அடிக்கடி சந்திக்காவிட்டாலும் மனதளவில் நெருக்கம் குறையவில்லை.

    ஒரு திங்கட்கிழமை மாலை, ராணியின் துணிக்கடை தோழி சிவா வேலை செய்த பாத்திரக் கடைக்கு வந்து "சிவா.. ராணி விவரமில்லாம நடக்குறா.. விசயம் சொல்ல மாட்டேங்குறா.. சின்ன முதலாளி செந்தில் கூட ரா சுத்துறா.. யாருக்கும் தெரியாம அந்தாளு கூட பைக்கில எங்கனா போயிட்டு வரா.. நேத்து குடிச்சிருந்தா.. எனக்கென்னவோ பயமா இருக்கு.. நீ கவனிக்கிறியா சிவா?" என்று அவசரமாகச் சொல்லிவிட்டுப் போனாள்.

செவ்வாய் மாலை ராணியைச் சந்தித்துக் கேட்டபோது அவள் மழுப்பினாள். சிவா விடாமல் துருவ, விவரங்களைச் சொன்னாள். "என்னைக் கட்டிக்கறதா சொல்லியிருக்காரு" என்றாள்.

சிவாவுக்கு ஆத்திரம் வந்தது. "லூசுப் பொண்ணா இருக்கியே? நீ யாரு? செந்தில் யாரு? உன் அந்தஸ்து என்னானு தெரிஞ்சு தான் பேசுறியா? அவரு சின்ன முதலாளியில்லா? உன்னைக் கட்டிக்குவாரா? உன் கிட்டே எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? பொண்ணா கவனமா இருக்க வேணாமா? இப்ப என்ன பண்ணுறது?" என்று எரிந்து விழுந்தான்.

"நீ ஒண்ணும் செய்ய வேணாம்.. செந்தில் என்னைக் கட்டிக்குவாரு. உன் வேலையைப் பாத்துக்கிட்டுப் போ! நீ கூடப் பொறந்தவனா அப்பனா கேள்வி கேட்க?" என்று பதிலுக்கு எரிந்து விழுந்த ராணி, "நான் மொதலாளியாவுறது உனக்குத் தாங்கலே.. கிடந்து வேகுறே... இனி என்னைப் பாக்க வராதே" என்று விருட்டென்று எழுந்து போனாள்.

    சில மாதங்கள் பொறுத்து ராணியின் தோழி மறுபடி வந்தாள். "சிவா.. உடனே வரியா.. ராணி உங்கூடப் பேசணுங்கறா".

ராணியைப் பார்க்கப் போனான். பத்து நிமிடம் போல் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள் ராணி. பிறகு அழுவதை நிறுத்தி அவனை நேராகப் பார்த்தாள். "என்னை ஏமாத்திட்டாரு.. நான் மூணு மாசம் கர்ப்பம்" என்றாள்.

சிவா ஆத்திரத்தோடு வாய் திறக்க, ராணி தடுத்து நிறுத்தினாள். "வேணாம் சிவா.. என்னைத் திட்டுறதால உனக்கு என்ன லாபம்? என் கஷ்டம் குறையப்போகுதா? நான் உன்னை வரச்சொன்னதுக்குக் காரணம் இருக்கு" என்றாள்.

"என்ன?"

"சிவா.. நான் எத்தினியோ கனவுகளை வச்சிருந்தேன்.. பஞ்சுக்காயாட்டம் வெடிச்சு சிதறிடுச்சு..."

"ராணி.. அதுக்காவ எதுனா குடிச்சி செத்து கித்து வக்காதே.."

"சாவுறதும் வாழுறதும் என் உரிமை இல்லியா சிவா? சாவ விரும்பினா யாராலயும் தடுக்க முடியுமா? எப்படி வாழணும்னு நீ சொன்ன பேச்சையே கேக்காதப்ப, இப்படி சாவாதனு தடுக்குறதயா கேக்கப் போறேன்?"

"லூசு.. "

"இரு" என்று ஒரு சிறு மூட்டையைக் கொடுத்தாள். "நான் ஓடிப்போறதா இருக்கேன் சிவா. வாழுறனோ சாவுறனோ அதை இப்போ தீர்மானிக்கப் போறதில்லே. ஆனா இங்க இருக்க விருப்பமில்லே. இந்த மூட்டைல நான் சேத்த பணம் இருக்கு.. நீ இதை எடுத்துட்டுப் போய் எங்கப்பாம்மா கிட்டே கொடுத்துரு.. தயவு செஞ்சு இந்த உதவியை மட்டும் செய்வியா?" என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

"நீ எங்கயும் போக வேண்டாம்.. இரு வரேன்" என்று கிளம்பிய சிவா, நேராக முதலாளியிடம் போனான். விவரங்களைச் சொல்லி ராணியை வீட்டு மருமகளாக ஏற்கும்படி சொன்னான்.

அவனுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் கண்ட ஐயா முத்தண்ணனை அழைத்து, "டேய் முத்து.. யார்ல இந்தப் பையன்.. என்னென்னவோ சொல்றான்?" என்றார்.

முத்தண்ணன் அவனைத் தனியாக அழைத்து எல்லா விவரங்களையும் கேட்டார். "சிவா.. இதுல தலையிடாதே.. நம்மப் பொண்ணுங்க தான் கவனமா இருக்கணும்.. முதலாளி குடும்பத்து பசங்க அப்படி இப்படி நடந்துக்குவாங்க.. அவங்க முதலாளி, நாம தொழிலாளி.. இப்ப ஏடாகூடமா எதுனா பண்ணிறாதே.. உனக்கும் வேலை போயிரும்.. நீ நல்லா பேரெடுத்திருக்குறே.. இது சாதாரண விசயம்.. புதுசு ஒண்ணுமில்லே.. ஒழுங்கா வேலையைப் பாத்துட்டிருந்தா ராணிக்கு இப்படி நேர்ந்திருக்குமா? அவளா ஏற்படுத்திக்கிட்டது.. நீ குறுக்க வராம உன் வேலையைப் பாத்துட்டு போ.. சொல்றது புரியுதா?" என்றார்.

"முத்தண்ணே.. அவளை என் அக்காவாட்டம் பாத்துக்கனு நீங்க அடிக்கடி சொல்வீங்களே ஞாபகமிருக்கா? என் அக்காவுக்கு இந்த நிலமைனா அதைப் பாத்துட்டு பூப்பறிக்க சொல்றீங்களா? வெட்டிற வேணாம்?"

"நல்லாப் பேசுற.. மீசை வளந்துடுச்சுல்லா? டேய் போக்கத்தப் பயலே.. நீ என்ன செய்ய முடியும்னு நினைக்கறே? கட்டி வைனு சொன்னா அந்த புள்ளையக் கட்டி வப்பாரா ஐயா? சின்ன முதலாளிதான் கட்டிக்குவாரா? ஏதோ வயசு விடப்புல ரெண்டு பேத்துமா சேந்து அடிச்ச கூத்து.. வயசுக்கு வந்த பொண்ணு.. தெரியாமலா செஞ்சா? தேவையில்லாம நீ வந்து மாட்டிக்காதே.. சொன்னாக் கேளு"

"உண்மைதான்.. இதுல அவ பேத்துலயும் பாதி தப்பிருக்கு.. ஆனா தண்டனை மட்டும் முழுக்க அவ வாங்கணும்னா எப்படிண்ணே? படிக்காத, நாதியில்லாத, ஏழை அன்னாடங்காச்சிங்க எங்களுக்கு இருக்குற சொத்து... எப்பனா நல்லது நடக்கும்ன்ற நம்பிக்கையும் கனவு காணுற உரிமையும் தானே அண்ணே? அதைத் தெரிஞ்சுகிட்டு இப்படிக் கீழ்த்தரமா நடந்துகிட்டா தப்பில்லியா? இனி ராணிக்கு நம்பிக்கையும் கனவும் கூட இல்லாம செய்யுறது எப்பேற்பட்ட கொடுமை! பாத்துட்டு சும்மா இருக்க முடியாதண்ணே.."

"என்னா செய்யப் போறே?"

"நியாயமா என்ன செய்யணுமோ அதைச் செய்யப் போறேன். எங்களுக்கு என்ன வசதியிருக்கு முத்தண்ணே? எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? எதுவுமில்லேனு தெரிஞ்சு தானே சின்ன முதலாளி ராணியை ஏமாத்துறாரு? ஏழை.. பட்டிக்காடு.. அதுவும் பொண்ணுங்கற நினைப்பு தானே? நியாயமா பாத்தா நீங்க தலையிடணும்.. எங்களைக் கூட்டிட்டு வந்தது நீங்க தானே? பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டிய எங்களை.. கதியில்லாத காரணத்துனால.. பணம் குடுத்து பெத்தவங்க கிட்டயே எங்களை விலைக்கு வாங்கி இங்க கூட்டியாந்து அடிமையா.." சிவாவின் குரல் உடைந்தது. சற்றுத் தெளிந்து, "அண்ணே.. முதல் வேலையா நான் போலீஸ்ல புகார் குடுக்கப் போறேன்" என்றான்.

"போலீஸ்ல கண்டுக்கக் கூட மாட்டாங்க. மீறி நீ எதுனா செஞ்சா நெலமை இன்னும் மோசமாயிடும்.. ஒரு வாரம் பொறுத்துக்க, நான் பேசிப் பாக்குறேன்.. இப்ப உன் வேலையப் பாரு போ.."

மறு நாள் மாலை ராணியின் தோழி சிவாவைத் தேடி அவசரமாக வந்தாள். "சிவா.. ஊர்லந்து ராணிப்பா வந்திருக்காரு.. விசயம் விபரீதமாயிடுச்சு.. ராணி உன்னை உடனே ஓடிறச்சொன்னா.. இந்தா நூறு ரூவா.." என்றாள்.

"நானா? நான் ஏன் ஓடணும்? சரி. நீ போ" என்ற சிவா, நேரே ராணி வேலை செய்த துணிக்கடையின் ஐந்தாவது மாடியில் உள்ளடங்கியிருந்த குழும ஆபீசுக்கு விரைந்தான். முதலாளி அறைக்குள் நுழைந்தான். முதலாளி இல்லை. முத்தண்ணாவும், ராணியும் அவளுடைய அப்பா அம்மாவும் இருந்தார்கள்.

"வாலே.." என்றார் முத்தண்ணன் கடுப்புடன்.

"ராணி.. நீ பயப்படாதே.. ரெண்டுல ஒண்ணு பாத்துரலாம்" என்றான் சிவா.

"புடுங்குனே.. வாயை மூடிக்கிட்டு போவலின்னா நீதான் இவளைக் கெடுத்தனு உம்பேர்ல புகார் கொடுக்க தயாரா இருக்காங்கலே.. இதா இவளே புகார் குடுக்கேங்குதா.. இப்போ என்னா பண்ணுவே?" என்று மறித்தார் முத்தண்ணன்.

"இவன் கெடக்கான் விடுங்கண்ணே... பெத்தவன் நான் சொல்லுதேன்.. ரெண்டு வருசம் இருக்குதுனாலும் எம்பொண்ணுக்கு பதினெட்டு வயசுல குடுக்குற பவுன் நகையாவது குடுத்து அனுப்புங்க.. இப்படி அஞ்சாயிரம் ரொக்கம் குடுத்து அனுப்புறீங்களே?" என்றார் ராணியின் அப்பா.

"ஒன் வேலையப் பாத்துகிட்டு போ தம்பி.. விவகாரமாயிரும்.. இனி எங்க குடும்ப பொண்ணுங்களை யார் கட்டிக்குவாங்க.. முதலாளி ஐயா விரோதம் எங்களுக்கு வேணாங்கண்ணே.. ஏதோ அஞ்சு பத்து மேலே கொடுத்து அனுப்புங்க.. நாங்க போயிடறோம்" என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் ராணியின் அம்மா.

ராணி நடுங்கினாள். "..தலையிடாதே சிவா.." என்று அழுதாளே தவிர அவளால் அதிகம் பேச முடியவில்லை.

சிவாவுக்கு எரிச்சல் வந்தது. நியாயத்துக்குப் புறம்பாக எதுவும் நடவாதது போலிருந்த முத்தண்ணாவைப் பார்த்தான். இயலாமை வெளிப்பட அழுது கொண்டிருந்த ராணியைப் பார்த்தான். இந்த நிலையிலும் நகை பணம் என்று பேரம் பேசிய ராணியின் பெற்றோர்களைப் பார்த்தான்.. "நீங்கள்ளாம் மனுசங்க தானா?" என்று தாள முடியாத வெறுப்புடன் கத்தினான்.

    "காபி நல்லாருக்கு" என்றார் முத்தண்ணன். உள்ளே ஓடிவந்த இரண்டு பெண்களைப் பார்த்தார்.

"எம் பொண்ணுங்க. இது ஸ்ரீதேவி, அது ஐஸ்வர்யா"

"பேரு நல்லா வச்சுருக்கே.. என்ன வயசாவுது?"

"இவளுக்கு ஆறு, அவளுக்கு எட்டு"

"பையன்?"

"பேரு சிவா. பத்து வயசாவுது"

"ச்..ச்.. புருசன் இறந்துட்டதா செல்வா சொன்னான்.."

"செத்து வருசம் நாலாச்சு. நகை பணம் எல்லாத்தையும் கொடுத்து கட்டி வச்சாரு ங்கப்பாரு.. ஆனா அந்தாளு என்னை தினம் தேவடியானு கூப்பிட்டு குடும்பம் நடத்துனான்.. சிவாவை எட்டி எட்டி உதைப்பான்.. ரொம்பக் குடிப்பான்.. குடிபோதைல ஒரு நா தெருல விழுந்து கிடந்தான்.. பஸ் ஏறி.."

"ஸ்.. எல்லாத்தியும் செல்வா சொன்னாம்மா. அதான் நானே கெளம்பி வந்தேன். இத பாரு.. நடந்தது நடந்துடுச்சு.. உனக்கு ரெண்டு பொண்ணுங்க.. சிவாவை எங்கூட அனுப்பு. ரெண்டு வருசத்துக்குப் பிறவு உன் பொண்ணுங்களையும் நானே கூட்டிட்டுப் போறேன்.. பதிமூணு வயசு ஆவணும்னு சட்டம் கொணாந்திருக்காங்க.. ஆனா யாரு பாக்காங்க அதெல்லாம்... பத்து வருசம் கடைங்கள்ள வேலை பாக்கட்டும்... உனக்கும் அங்க எதுனா வீட்டு வேலை கிடைக்கும்.. சென்னைல இப்பல்லாம் வீட்டு வேலை ஆளுங்களுக்கு கிராக்கி.."

"என்னா கொடுப்பீங்கணே?"

"எல்லா வழக்கமா தரதுதாம்மா, உனக்குத் தெரியாதா? மூணு வேளை சாப்பாடு, வருசத்துக்கு ரெண்டு செட்டு துணி, பண்டிகை போனஸ் இப்ப ஐனூறு ரூவா, பொண்ணுங்களுக்கு பதினெட்டு வயசுல இப்ப மூணு பவுன் தராங்க.. ஒரு புள்ளக்கி மூவாயிரம் ரூவா கணக்குல கைல ரொக்கம்.. என்ன சொல்றே?" என்ற முத்தண்ணன் ராணியை நேராகப் பார்த்தார். "ம்ம்ம்.. எப்படியோ சுத்தி எங்கயோ வந்து.. உன்னை மாதிரி உன் பசங்களுக்கு ஆயிடக் கூடாது பாரு.. அதான் உனக்கு உதவி செய்ய நானே நேர்ல வந்தேன்.. இப்ப சிவாவை கூட்டிட்டுப் போறேன்.. இந்தா மூவாயிரம் ரூவா.. இதுல ஒரு கையெழுத்து போடு.."

"வேணாம்ணே.. லச்ச ரூவா குடுத்தா கூட வேணாம்ணே.."

"திடீர்னு கிறுக்கு பிடிச்சுருச்சா? என்ன பேச்சு பேசுதே? பசங்களை வழிக்கு கொண்டு வர வேணாமா?"

"இல்லணே.. நான் பேச்சு பேசலிங்கணே.. எங்க பரம்பரைல நாங்க எல்லாருமே ஊமையாத்தான்.. நாங்க மட்டுமில்லே.. என்னை மாதிரி எத்தினியோ பரம்பரைங்க.. ஊமையாப் பொறந்து ஊமையா வாழுதொம்.. ரெண்டு வயசுல பேச்சு வந்திடுச்சுனு பெத்தவங்க எங்களைக் கொண்டாடுதாங்க.. வார்த்தை வந்துச்சானு யாருமே கவலைப்படுறதில்லீங்க.. பேச்சு வந்தும் ஊமையாத்தான் வாழுதொம்.. எனக்கு வார்த்தையைக் கொடுத்தது சிவா..பெரிய மனுசன். அவன் பேரு வச்ச என் பிள்ளையை மறுபடி ஊமையா உங்ககிட்டே குடுக்க மனசு வர்லிங்கணே.."

"சாப்பாட்டுக்கு வழியில்லாம திண்டாடுதேனு பாத்தா.. மப்பா?"

"மப்பில்லிங்கணே.. எனக்குப் பிறவு என் குடும்பத்துல யாரும் ஊமையா வாழக்கூடாதுணே.. சாப்பாட்டுக்குத் திண்டாடினா பரவாயில்லிங்க.. என்னைப் போல வாழ வழியில்லாம திண்டாடக் கூடாது பாருங்க? என் பிள்ளைங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. படிக்கப் போறாங்க.. தப்பா நினைக்காம பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்ட்டு வாங்கணே"

"நல்லா யோசிச்சுக்க ராணி.."

"இந்த ரெண்டு பொண்ணுங்களைப் பாருங்கணே.. நீங்க சொல்லுதாப்புல பாத்திரக்கடையிலயும் துணிக்கடையிலயும் அல்லாடிக்கிட்டு.. கண்டவங்களையும் சகிச்சுக்கிட்டு வாழணும்னு இவங்க தலையில எழுதியிருக்கலாம்.. ஆனா என்னா செருக்குப் பாருங்க பாவி மவளுங்களுக்கு.. ரெண்டும் வக்கீலாவணும்னு துடியா துடிக்குதுங்க.. யாரு சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியலே.. சிவா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராவணும்னு சொல்லுதான்.."

"அறியாப்பிள்ளைங்க அப்படித்தான்.." என்ற முத்தண்ணனை மறித்தாள் ராணி. "உங்க கண்ணுக்கு இவங்க அறியாப்பிள்ளைங்க. என் கண்ணுக்கு..? அதான்.. லச்ச ரூவா கூட வேணாம்னேன். நம்பிக்கையை விக்கறதா இல்லிங்கண்ணே.. போய்ட்டு வாங்கண்ணே" என்றாள்.


அச்சம் ஆற்றாமை இயலாமையுடன் வேகமும் கலந்த நாற்சந்திப் பயணத்தில் தவறாகத் திரும்பித் திரும்பி, முன்னேறவும் முடியாமல் வெளியேறவும் இயலாமல், இறுதியில் ஏதோ ஒரு இலக்கின் ஏதோ ஒரு முனை நாடி ஆயாசமாக ஒதுங்கும், பயணத்தின் தொடக்கமும் முடிவும் தீர்மானிக்க முடியாத சபிக்கப்பட்ட நிலையிலும் அடுத்த நாற்சந்தியே வாழ்வின் இலக்கென நம்பித் தொடரும் கோடிக்கணக்கான நாற்சந்தி வாசிகளுக்கு.

27 கருத்துகள்:

  1. "பிள்ளைங்க.." என்ற முத்தண்ணனை மறித்தாள் ராணி. "உங்க கண்ணுக்கு இவங்க பிள்ளைங்க. என் கண்ணுக்கு..? அதான்.. லச்ச ரூவா கொடுத்தா கூட வேணாம்னேன். நம்பிக்கையை விக்கறதா இல்லிங்கண்ணே.. போய்ட்டு வாங்கண்ணே" என்றாள்.//

    கதை படித்து மனது கனத்து போனது முதலில்.
    கதை நிறைவில் நம்பிக்கை வெளிச்சம் வந்து மனதை நிறைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. இதை எதிர்த்து எந்த இயக்கமும் குரல் கொடுப்பதில்லை:(

    படிக்காத, நாதியில்லாத, ஏழை அன்னாடங்காச்சிங்க எங்களுக்கு இருக்குற சொத்து... எப்பனா நல்லது நடக்கும்ன்ற நம்பிக்கையும் கனவு காணுற உரிமையும் தானே அண்ணே? அதைத் தெரிஞ்சுகிட்டு இப்படிக் கீழ்த்தரமா நடந்துகிட்டா தப்பில்லியா? இனி ராணிக்கு நம்பிக்கையும் கனவும் கூட இல்லாம செய்யுறது எப்பேற்பட்ட கொடுமை! //

    ரெண்டு வயசுல பேச்சு வந்திடுச்சுனு பெத்தவங்க எங்களைக் கொண்டாடுறாங்களே தவிர வார்த்தை வந்துச்சானு யாருமே கவலைப்படுறதில்லீங்க.. //

    நம்பிக்கையை விக்கறதா இல்லிங்கண்ணே.. //

    தடுக்கி விழுந்த இவ்வரிகளில் பலத்த காயம் மனசுக்கு.

    ராணியின் தெளிவு பரவலாகும் காலம் ஆறலாம் காயம்.

    பதிலளிநீக்கு
  3. நாற்சந்தி கதையின் தலைப்பு
    ராணியின் முடிவால் சரியான திசையில் திரும்பட்டும் ..

    அழகான திருப்பம் ....

    பதிலளிநீக்கு
  4. better late than never என்பதை உணர்ந்த ராணிக்குப் பாராட்டுகள். சிவா என்ன ஆனானோ என்ற கவலை குடைகிறது! :))))) பெரும்பாலான கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை இது தான். :(( வருத்தத்துக்கு உரிய செய்தி. ஆனால் கேட்பவர்கள் இல்லை என்பதும் உண்மை.

    பதிலளிநீக்கு
  5. அப்பதுரை அவர்களே! எதனாலோ தெரியவில்லை ! உங்கள் எழுத்தில் மாற்றம் தெரிகிறது ! நல்ல மாற்றமும் கூட ! "தமிழில் "அங்காடித்தெரு" என்று ஒரு திரைப்படம் வந்தது ! முழுக்க முழுக்க இதே மனிதர்கள் ! மிகச் சிறந்தபடம் ! பாட்டு,நடனம் வைத்தால் தான் வசூலாகும் என்பதால் கொஞ்சம் சமரசமும் உண்டு ! கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய படம் ! பொதுத் தொழிலாளர் சங்கம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது ! அவர்கள் முடிந்தவரை இவர்களுக்கக செயல்படுகிறார்கள் ! ஜனநாயக மாதர்சங்கமும் செயல்படுகிறது ! "அங்காடித் தெரு " பட இயக்குனர் வசந்த பாலன் ஒரு முற்போக்குஇயக்கத்தில் இருந்தவர் ! த.மு.எ.க. ச அவரைப் பாராட்டி விருது அளித்தது !வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  6. // தி.நகரின் மிகப்பெரிய வணிகக் குழுமத்துக்கு உள்முகம் வெளிமுகம் இரண்டும் உண்டு //

    யாருக்கு இல்லை? எங்கு இல்லை ?

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாபிப்ரவரி 03, 2013

    //நாற்சந்திப் பயணத்தில் தவறாகத் திரும்பித் திரும்பி, முன்னேறவும் முடியாமல் வெளியேறவும் இயலாமல், இறுதியில் ஏதோ ஒரு இலக்கின் ஏதோ ஒரு முனை நாடி ஆயாசமாக ஒதுங்கும்//
    திரும்ப திரும்ப பலமுறை படித்துவிட்டேன். hats off!

    கதை ஏதோ நம் அடுத்த வீட்டில் நடப்பது போல், பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் பிரமையை உண்டாக்கும் அற்புதமான நடை.

    சுப்பு ரத்தினம் அவர்கள் சொல்வது மிகவும் சரி. உள்முகம் எல்லோருக்கும் உண்டு, எல்லா இடத்திலும் உண்டு. நெருக்கமான பழக்கத்தில் கூட சிலரின் இந்த உள்முகம் வெளிபடுவதில்லை. நெருக்கடியான நேரங்களில் மட்டுமே இது வெளிபடுகிறது. அடுத்தவரை நம்பி கெடுவதை விட, நம்மை நாமே நம்பி அதன் விளைவு நல்லதோ, கெட்டதோ அதை ஏற்றுக் கொள்வதில் ஒரு அர்த்தம் உண்டு என்று தோன்றுகிறது.
    ராணியின் முடிவு நன்று.


    பதிலளிநீக்கு

  8. அப்பாதுரை, இந்தமாதிரிக் கதையெல்லாம் ஒரு சமூக பிரக்ஞை உள்ளவரால்தான் எழுத முடியும். இது மாதிரிய சம்பவங்கள் காலங்காலமாய் நடப்பதுதான். அயல் நாடுகளுக்கு தேயிலைத் தோட்டங்களில் பணி செய்ய ஆள் பிடிப்பவர்களை கங்காணியர்கள் என்பர். அவர்கள் மூலம் அடிமைகளாகச் சென்றவர்களின் கதைகள் ஏராளம். அண்மையில் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வேலை நாடிச் செல்பர்களைத் தேட ஏஜெண்ட் என்று அழைக்கப் படுபவர்கள் இருக்கிறார்கள். வட்டாரத்த்தலை போல. நிறையவே உண்மைக் கதைகள் கிடைக்கலாம். நீங்கள்tip of the iceberg ஐ தொட்டிருக்கிறீர்கள். அழகாக சொல்லப்பட்ட ஒரு அவலக் கதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. //"என்னா கொடுப்பீங்கணே?"//

    என்று ராணி கேட்ட போது கடவுளே! அடுத்த தலைமுறைக்கும் இது தொடருகிறதா என்கிற வருத்தம் என்னை தாக்கியது. ஆனால் இந்த திருப்பம் மிகவும் அருமை.
    ஒரு ராணி போதாது கோடி ராணிகள் உருவாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //யாருக்கு இல்லை? எங்கு இல்லை ?
    மிகச் சரி.

    பதிலளிநீக்கு
  12. //உள்முகம் எல்லோருக்கும் உண்டு, எல்லா இடத்திலும் உண்டு.

    உண்மை. வெளிமுகத்தை விடக் கனிவான உள்முகங்கள் சிலவற்றைக் காணும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. //அயல் நாடுகளுக்கு தேயிலைத் தோட்டங்களில் பணி செய்ய ஆள் பிடிப்பவர்களை கங்காணியர்கள் என்பர்

    அறியாத விஷயம், நன்றி. கங்காணியர் சுவாரசியமான துயரமாக இருக்கும் போலிருக்கிறதே?
    சைனா/வியட்னாமிலிருந்து படகில் நூற்றுக்கணக்கில் அழைத்து வந்து ந்யூயோர்க் சேன்ப்ரேன்சிஸ்கோ அருகே சிக்கிக் கொள்ளும் சில ஏஜென்டுகள் பற்றி அவ்வப்போது படிப்பேன். மனம் வெடிக்கும்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான படைப்பு. சினிமா செய்திகளால் இதழ்களை நிரப்பி, சிறு கதைகளை புறக்கனிக்கும் வார இதழ்கள் இத்தகைய கதைகளை பிரசுரிக்க முன் வரவேண்டும். நாகபுரியில் இத்தகைய தொழிளாளிகளை ஒன்று சேர்த்து இயக்கம் தொடங்கிய சி ஐ டி யுவின் (காலம் தவரிய)திரு மோஹன் சிங்க் வண்மையாக முதலாளிகளால் தாக்கப்பட்டது நினைவிக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு

  15. இன்றைய The Hindu பத்திரிக்கையில் (பெங்களூர் பதிப்பு )ஒரு செய்தி. ஏறத்தாழ இதே மாதிரி ஏமாற்றப்பட்ட பெண்ணின் கதை. கனிவான உள்முகங்கள் பற்றியும் எழுதலாமே.

    பதிலளிநீக்கு
  16. ஒவ்வொன்றும் தன்னுள் தனக்கான மாற்றத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து அழிவு வரை விஞ்ஞானபூர்வமாக செயல்படும் அந்த மாற்றம் தான் வரமாய்ப் பெற்றிருக்கிற ஒரே நம்பிக்கை. நாற்சந்தி எட்டாய் பதினாறாய் முப்பத்திரண்டாய் அறுபத்து நாலாய் மாறும் பிர்மாண்டத்தில் எல்லாமே புரட்டிப் போடப்படும்.

    நிதானமாகக் கதையைச் சொன்ன பாங்கு, அளவாய் உபயோகித்த வார்த்தைப் பிரயோகங்கள், உரையாடலில் கவனம் கொண்ட நேர்த்தி,'பஞ்சுக் காயாட்டம் வெடிச்சு சிதறிடுச்சு' போன்ற உதாரணம் சொல்லி உணர வைத்த பாங்கு என்று எத்தனையோ சொல்லலாம். ஆனால் எல்லாவற்றையும் விட காஷ்யபன் சாரும் சொன்னபடி இந்த 'எழுத்து மாற்றம்' எல்லாரும் வரவேற்கக் கூடியதாக இன்னும் பல படைப்புகளைப் படைக்க வழி கோலட்டும்.

    வாழ்த்துக்கள், அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  17. பிரம்மாண்டமான வரலாறு படித்த நிறைவு வருகிறது.
    வட்டார வழக்கை எப்படிக் கற்றீர்களோ.
    சிவாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லலியே. இல்லை நாந்தான் \
    சரியாகப் படிக்கவில்லையா.
    நசுக்கப்படும் போது சிறு புழு கூடத் துணிவு காட்டுமாம்.
    நன்மை விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல கதை, நம்பிக்கையூட்டும் முடிவு!

    பதிலளிநீக்கு
  19. நல்ல முடிவு.
    எவ்வளவு காலத்துக்குத்தான் இதுபோல் நசுங்கிக் கொண்டு போவார்கள்.

    ராணியின் துணிச்சலைப் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  20. //அறியாத விஷயம், நன்றி. கங்காணியர் சுவாரசியமான துயரமாக இருக்கும் போலிருக்கிறதே?//
    அப்பாதுரை அறியாத விசயமா? ஆச்சரியமாய் இருக்கிறது. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது வலைப்பக்கம் வந்து...அப்படியே ஒரு உள்ளேன் அய்யா சொல்லலாம் என நினைத்தேன்.
    அத்தோடு ”கங்காணியர்” என்பது கண்காணிப்பாளர் (சூப்பர்வைசர்-ன் தமிழாக்கம் என படித்திருக்கிறேன்), கண்காணி என குறுகி பின் கங்காணி என மருவி விட்டது.
    மேலும் காணி என்றால் நாலு-மா(எங்க ஊரு மாயவரம், அங்கு மா கணக்கு), அதை பராமரிக்க நாலு ஆள் (ஃபோர்மேன்) என்று கூப்பிடுவதும் உண்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க அரசூரான்.. போன வாரம் உங்க நினைப்பு தான். வேலன்டைன் அம்மனுக்கு இந்த வருசம் எதாவது கும்பாபிஷேகம் செய்ய்றாங்களானு சொல்வீங்கனு பார்த்தேன்.

    கண்+காணி - இத்தனை எளிமையா இதை எதிர்பார்க்கவேயில்லை. ரொம்ப நன்றி சார். ஒரு பழங்காலப் பயணக் குறிப்பு புத்தகம் படிச்சுட்டு வரேன். அதுல கங்காணியர்னு அடிக்கடி வருது. இப்ப it all makes sense.

    ஃபோர்மேன் - மாயவரக்காரங்களுக்குத் தான் இது தோணும்.

    பதிலளிநீக்கு
  22. //"தமிழில் "அங்காடித்தெரு" என்று ஒரு திரைப்படம் வந்தது !//

    இன்று தான் பார்த்தேன்.

    சென்னை காசி தியேட்டர் பக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் (உலகம் முழுதும் உள்ள ஒரு பவன் தான் !) வேலை செய்யும் பசங்களுக்கு அங்கே பக்கத்தில் வீடு இப்படி தான் இருக்கும்

    - சாய்

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லாமார்ச் 28, 2013

    வணக்கம்
    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_28.html
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  24. அருமையான கதை. அங்காடித் தெரு படம் போல்தான் இருக்கு. இந்த மாதிரி வணிக வளாகங்கள், கடைகள் வைத்திருக்கிற எல்லாத் தொழிலதிபர்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்க, அவங்களைத்தான் வேலைக்கும் வச்சிருப்பாங்க. பெரும்பாலும் அவங்க சமூக முன்னேற்றத்துக்கும் காரணமாக இருக்காங்க.

    மற்றபடி, வேலை exploitation செய்யாத முதலாளி இந்தியாவில் கிடையாது. வெகு அபூர்வமாக ஓரிரண்டுபேர் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு