2012/05/21

டூ மச் வெறி


    மீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்து முடித்தேன். கொஞ்சம் இழுவை என்றாலும் சிந்திக்க வைத்தப் புத்தகங்கள்.

ரேசா கலிலி என்ற புனைப்பெயரில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர். 'A time to betray' என்ற இந்தப் புத்தகம், இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்க ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. நான் கொஞ்சம் லேட். மகாபாரதத்தையே சமீபத்தில் தான் வாசித்தேன். இந்தப் புத்தகத்தை வெளிவந்த இரண்டு வருடங்களுக்குள் படித்தது ஒரு சாதனை என்பேன் :)

ஷா காலத்தில் டெஹ்ரேனில் வளர்ந்தவர் ரேசா கலிலி. இளவயது நண்பர்களுடன் அடித்தக் கொட்டங்கள் சுவையானவை என்றாலும் வியக்கும்படி ஏதுமில்லை. மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்த நேரத்தில் ஷாவின் அரசு, அயோதுலா கொமேனி என்ற முல்லாவின் தலைமையில் தூக்கியெறியப்படுகிறது. 'எளிமை' என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த முல்லா கொமேனி, மக்களைக் கொடுமைப்படுத்தும் மதவெறியர்களின் அரசை எப்படிப் படிப்படியாக நியமித்திருக்கிறார் என்பதே புத்தகத்தின் சாரம். கொமேனியின் ராஜதந்திரம் ஒரு பாடம். இடையே இராக்குடனான எட்டு வருடப் போர் பற்றிய விவரங்கள். சதாம் ஹுசெய்ன் இரானை அழிக்காமல் விட்டது ஆச்சரியம். இவை எல்லாவற்றுக்கும் இடையில் 'பெர்சிய' கலாசாரமும் பாரம்பரியமும் தொலைந்து போனது என்ற செய்தியை, மென்மையாகக் கீறி வலிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். செப்டம்பர் பதினொன்றுக்கான ஒத்துழைப்பை இரான் அல் கேதாவுக்குக் கொடுத்தது என்பதை ஓரளவுக்கு வெளிப்படையாகவே குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியாக இருந்தது!

ரேசா கலிலிக்கு இந்த விவரங்கள் எப்படித் தெரிந்தன? இரானின் புரட்சிப்படையில் கணினிப் பொறியாளராக இருந்ததால் அத்தனை ரகசியங்களும் இவர் அறிய வாய்ப்பிருந்தது. அரசின் உள்வட்டத்தில் இருந்தவர் இவருடைய இளவயது நண்பர் காசிம். எல்லாவற்றுக்கும் மேலாக, ரேசா அமெரிக்க உளவாளி. சிஐஏ நிறுவனத்தின் கையாள். கடைசியில் குடும்பம் முக்கியமென்று எல்லாவற்றையும் துறந்து இப்போது அமெரிக்காவில் குடியேறிவிட்டார். பத்து வருடங்களுக்கு மேல் இரானியப் பாதுகாப்புப் படையின் உள்வட்டத்திலும் சிஐஏவின் கையாளாகவும் நிழல் வாழ்க்கை வாழ்ந்தவரின் அனுபவங்கள் அங்கங்கே திடுக்கிட வைத்தன.

இரான்-அமெரிக்கா தொட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பால், இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதவெறி என்னை மிகவும் தொல்லைக்குள்ளாக்கியது.

கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு இளம் பெண்களைக் கற்பழிக்க அனுமதித்த முல்லாக்களை எப்படி மனித இனத்தில் சேர்ப்பது? பெண்களைக் கொல்லுமுன் கற்பழித்தக் காரணம் என்ன தெரியுமா? கன்னிப் பெண்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்கிறதாம் இஸ்லாம். தங்கள் மதவெறி அரசியலுக்கு உட்படாதக் குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்களுக்கு சொர்க்கம் கிடைக்கக் கூடாது என்பதனால் கற்பழித்தார்களாம்.

பதினாறு வயதுப் பெண்ணான தன் இளவயது நண்பனின் தங்கை, சிறுமியாகத் தன்னுடன் ஓடியாடி வளர்ந்தவள்... மதவெறியர்களால் தீவிரமாகக் கற்பழிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட அழைத்துச் செல்லப்படுவதை கவனிக்கிறார் ரேசா. அந்தப் பெண், கடைசி நிமிடங்களில் இவரை அடையாளம் கண்டுகொள்கிறார். பரிதாபமாகக் கெஞ்சும் அந்தக் கண்களை விவரித்திருக்கிறார் பாருங்கள் - என்னால் அன்றைக்குத் தூங்க முடியவில்லை. யாரையாவது அடித்துக் கொல்லவேண்டும் போல் தோன்றியது.

எத்தனையோ கொடுமைகளைப் பற்றிய விவரங்கள் புத்தகத்தில் இருந்தாலும், மேற்சொன்ன விவரம் என்னை நோகடித்தது. என்னுடன் கல்லூரியில் படித்த லாஹோர் நண்பனின் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது: "பெண்ணாய்ப் பிறப்பது கொடுமை. கத்தோலிக்க பெண் பிறவி, கேவலமான கொடுமை. இஸ்லாமியப் பெண் பிறவி, நரகத்தின் வாசல்".

    விலியம் டேல்ரிம்பிலின் 'The Last Mughal', இரண்டாவது புத்தகம். நான் எழுதிவரும் (க்க்க்ம்ம்ம்) ஒரு சரித்திரக் கதையின் பின்புலத்துக்காக எதையோ தேடி எங்கோ போய் இந்தப் புத்தகத்தில் விழுந்தேன். சுவாரசியமானப் புத்தகம். சரித்திரப் புத்தகங்களுக்கான குணாதிசயம் எனப்படும் இழுவை, இதிலும் உண்டு. ஜவ்வைக் கோந்தில் கலந்து நிறைய எழுதியிருக்கிறார். என்றாலும், புத்தகத்தை முழுமையாகப் படிக்க முடிகிறது.

செங்கிஸ் கான், பாபர், அக்பர்.. என்று அசகாயச் சூரர்களின் வழிவந்த பகதூர் ஷா (zafar) தன்னுடைய கடைசி நாட்களை அனாதையாக ரங்கூன் சிறையில் கழித்து உயிர்விடுவதில் தொடங்கும் புத்தகம் ஆங்காங்கே ஆச்சரியத்தையும் விறுவிறுப்பையும் கொடுத்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் போர்த்தந்திரங்கள் வியக்க வைத்தன. இந்தியர்களை எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது அதிர்ச்சியாகக் கூட இருந்தது. சமகால வணிக நிறுவனங்களான டச்சு, போர்ச்சுகீசிய, ப்ரெஞ்சு, டென்மார்க் கிழக்கிந்தியக் கம்பெனிகள்.. பிரிடிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அளவுக்கு ஏன் ஊடுறுவி வளரவில்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது.

'ஒரு மாபெரும் பரம்பரை தன்னுடன் முடிகிறது' என்ற எண்ணத்தின் தாக்கம் எப்படியிருக்கும்? உருப்படாத என் பரம்பரையில் என்னுடன் தமிழறிவு முடிகிறது என்பதே என்னை அவ்வப்போது பாதிக்கிறது. பகதூர் ஷாவின் மனநிலையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கடைசி நாட்களில் சிறையின் தனிமையில் எத்தகைய எண்ணங்கள் அவர் மனதில் ஓடியிருக்கும்? பேரரசுப் பாரம்பரியத்தை ஷட்டர் போட்டு இழுத்து மூடியது மட்டுமில்லாமல் சாவியை பிரிடிஷ் அரசுக்குக் கொடுத்துக் காலில் விழ வேண்டிய நிலைக்குத் தாழ்ந்தது மிகவும் வருத்தமாக இருந்தது.

எல்லா ஆணவங்களும் இப்படித் தான் முடியுமோ?

பிரிடிஷ் ராஜா ராணிகள் எப்படியெல்லாம் திருடியிருக்கிறார்கள்! பிரிடிஷ் அரசின் ஆட்சிவெறி, பதவிவெறி, ஆதிக்கவெறி எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிந்தது. பிரிடிஷ் அரசு நாசமாகட்டும் என்று ஒரு கணம் சிறுபிள்ளைத்தனமாக நினைக்காமலிருக்க முடியவில்லை.

மிக நீளமானப் புத்தகம். நூறு பக்கங்களாவது மேலோட்டமாகப் புரட்டியிருப்பேன். எனினும், படித்தப் பக்கங்களில் டேல்ரிம்பில் அருமையாக எழுதியிருப்பதை உணர்ந்தேன். பகதூர் ஷாவின் கலையார்வம், படாடோபம், அந்தக்கால தில்லி என்று நிறைய விவரங்கள் சுவாரசியமாக உள்ளன. படித்து முடித்ததும் பகதூர் ஷாவின் வாரிசுகள் யார், இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றியது.


29 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு நன்றி.
  இந்தப் புத்தகங்களை எல்லாம் நான் படிக்கப் போவதில்லை. தங்களைப் போன்றோர் பகிர்ந்து கொண்டால் தான் உண்டு. ஒரு இர்விங் வாலசையே ஒரு வருடமாக படித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது அகராதி தேட வேண்டியிருக்கிறது.

  மதன் எழுதிய " வந்தார்கள் வென்றார்கள்" படித்திருக்கிறீர்களா ?

  பதிலளிநீக்கு
 2. இரானின் வரலாறு குறித்து எனக்கும் பத்திரிகைகள் வாயிலாகப் படித்ததுதான் தெரியும். ஆனால், இந்த வரி போதும் இந்தப் புத்தகம் ஒரு அபத்தம் என்று சொல்வதற்கு.

  //கன்னிப் பெண்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்கிறதாம் இஸ்லாம்//
  நிச்சயமாக இல்லவே இல்லை. கன்னியோ, சுமங்கலியோ, விதவையோ - அவரவர் வினைகளே சொர்க்கம், நரகம் தீர்மானிக்கும். இன்னும் சொல்லப்போனால், திருமணம் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒன்று என்பதுதான் உண்மை!!

  அமெரிக்காவில் இருந்துகொண்டு,அதுவும் அமெரிக்க உளவாளியாக இருந்தவர் எழுதிய புத்தகத்தில் இப்படியான அபத்தங்கள் இருப்பதில் ஆச்சர்யமில்லை.

  __________

  //The last mughal//
  தமிழில் தொடராக (யாராவது) எழுதினால் நானும் படிச்சுப்பேன். எனிபடி தேர்? மதனை வேற விகடன்ல இருந்து நீக்கிட்டாங்களாமே!! :-(((

  பதிலளிநீக்கு
 3. ஸலாம் சகோ.அப்பாதுரை,
  சகோ.ஹுசைனம்மா மிகச்சரியான பதிலை தந்திருந்தாலும்...
  நீங்கள் யோசித்திருக்க வேண்டாமா சகோ..?

  /// கன்னிப் பெண்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்கிறதாம் இஸ்லாம்.///----அப்படியென்றால்...

  எல்லா முஸ்லிம் பெண்களும் கண்ணியாஸ்திரியாகவே இருந்திருப்பார்களே..? கல்யாணமே நடந்திருக்காதே..? முஹம்மத் நபி (ஸல்) காலத்தோடு முஸ்லிம்களே இல்லாமல் போயி இருந்திருப்பார்களே..? புத்தகம் எழுதினவருக்கு வேண்டுமானால்... சிந்தை வேலை செய்யாமல் இருந்திருக்கலாம்...!

  நமக்குமா..?

  பதிலளிநீக்கு
 4. ////பேரரசுப் பாரம்பரியத்தை ஷட்டர் போட்டு இழுத்து மூடியது மட்டுமில்லாமல் சாவியை பிரிடிஷ் அரசுக்குக் கொடுத்துக் காலில் விழ வேண்டிய நிலைக்குத் தாழ்ந்தது மிகவும் வருத்தமாக இருந்தது.////

  ----ஏதேது.... அவரே ஆசைப்பட்டு அதெல்லாத்தையும் செஞ்சது போலல்லாவா இருக்கிறது எழுதி இருப்பது..?

  உண்மையில்... அவர் ஆங்கிலேயரால் போரில் தோற்கடிக்கப்பட்டு அவரின் புதல்வர்கள் தலைகள் எல்லாம் சீவப்பட்டு, டெல்லியில் இரத்த ஆறை ஓட்டியபின்னர், பர்மாவில் அல்லவா சிறை வைக்கப்பட்டார்..?

  இறந்த பிறகு அடக்கம் செய்ய ஆறடி நிலம் கூட அவருடைய ஆசைப்படி அவரின் தாய்நாட்டில் தரவில்லையே அந்த ஆங்கிலேயே கொள்ளையர்கள்..?

  இங்குள்ள வளங்களை எல்லாம் கொள்ளை அடித்து கொண்டு போயி இங்கிலாந்து அரசி காலடியில் கொட்டிய கொள்ளையர்களை பற்றி குறிப்பிடும்போது "ஆங்கிலேயர் வருகை".... என்றும், இங்கேயே பிறந்து... இங்கேயே ஆண்டு... இங்கேயே செத்து... போனவர்களை "முகலாயர் படையெடுப்பு" என்பதாக அன்னியப்படுத்துவதும்... நமது இந்திய வரலாற்றில் தான், நடக்கும்..! வேறெங்காவது நடக்குமா..?

  இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பொய்யான வரலாற்று புத்தகங்களையே படிப்போம்..?

  முன்னர் ஒருகாலத்தில் நம் கண் முன் நடந்த நிகழ்வுகளான... மூதூர் வரலாற்றை மாற்றி எழுதியவர்கள் கொல்லப்பட்ட வரலாற்றை எல்லாம் கூட மாற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள்...!

  உலகம் ர்ர்ர்ரொம்ப ஸ்பீடுங்க... வரலாற்றை மாற்றி எழுதறதுலே..... நாமதான் உஷாரா இருக்கணும்..!

  யாரோ உண்மைக்கு பொருத்தமின்றி... தன் இஷ்டத்துக்கு வெற்று பரபரப்புக்காக, வேக விற்பனைக்காக, காசுக்காக கண்டதை எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..!

  பதிலளிநீக்கு
 5. சுவாரஸ்யமான பகிர்வு....சிவகுமார் சொல்லியிருப்பதுபோல நானும் எங்கே இந்த மாதிரி புத்தகங்களை எல்லாம் படிக்கப் போகிறேன்? இப்படித் தெரிஞ்சிகிட்டாத்தான் உண்டு!

  பதிலளிநீக்கு
 6. //என்னுடன் தமிழறிவு முடிகிறது என்பதே என்னை அவ்வப்போது பாதிக்கிறது.//

  நிஜமான ஒன்றில்லை என்றாலும் இது கூட ஒரு தலைமுறைத் தோற்றம்; அவ்வளவு தான்! எப்படியானும் துளிர்க்கும்; உண்மையானதும் அது தான்!

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லாமே 22, 2012

  எதையும் 'உண்மை' என்கிற கண்ணாடி அணிந்து பார்க்க விரும்பாமல், 'மதம்' என்கிற பார்வையிலேயே பார்ப்பதலில் இருந்தே தெரிகிறது மத வெறி. இதை சிஐஏ உளவாளி சொல்லி தான் அறிய வேண்டுமா?

  பதிலளிநீக்கு
 8. ஹீம்... நான்லாம் ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டிப் படிக்கிற ஆசாமி. இந்த புத்தகங்கள்லாம் நீங்க படிச்சு சொன்னதை வெச்சு புரிஞ்சுக்கறேன். என்னது... சரித்திரக் கதையா? எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் அது, சீக்கிரம் கொடுங்க அப்பா ஸார்...

  பதிலளிநீக்கு
 9. 'ஒரு மாபெரும் பரம்பரை தன்னுடன் முடிகிறது' என்ற எண்ணத்தின் தாக்கம் எப்படியிருக்கும்? உருப்படாத என் பரம்பரையில் என்னுடன் தமிழறிவு முடிகிறது என்பதே என்னை அவ்வப்போது பாதிக்கிறது.//

  நானும் நினைச்சுப் பார்க்கிற ஒரு விஷயம் இது! :(((((

  மற்றபடி தி லாஸ்ட் மொகல் புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படிக்கணும். முதல் புத்தகம் ஆவலைத் தூண்டவில்லை. இது கிடைச்சால் பார்க்கலாம். இல்லைனா நீங்களே தமிழில் எழுதிடுங்க. இன்னும் சுவாரசியம் கூடும். :)))))

  பதிலளிநீக்கு
 10. பின்னூட்டங்களுக்கு நன்றி.

  புத்தகம் கேள்விப்பட்டதேயில்லை சிவகுமாரன். ஹ்ம்ம்ம்.. இதையெல்லாம் நான் படிக்கப் போவதில்லை :)

  மதன் ஜோக்ஸ் படித்திருக்கிறேன்.. தனியாகப் புத்தகம் எழுதியிருக்கிறாரா? சென்னை வந்தால் தேடிப் பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. புத்தக அறிமுகங்கள் அருமை.. நண்பர்கள் சொன்னது போல் முகலாய ஆட்சி என்றாலே மதனின் ’’வந்தார்கள் வென்றார்கள்’’ நினவுக்கு வருவது தவிர்க்க முடியாது. நிறைய படித்து சரித்திர சான்றுகளோடும் சுவாரசியங்களோடும் எழுதியிருப்பார்....

  பதிலளிநீக்கு
 12. எழுத்தை விமரிசிப்போம்; எழுதியவரை மதிப்போம்.
  இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் ("பரதர்"). முல்லாக்களின் மேற்பார்வையில் தினமும் தொழுகையும் விரதங்களும் மேற்கொண்டவர். ஹாஜி. தவறான கருத்தை எழுதியிருந்தால் அவருடைய அறிவில் குறை. எனினும், 'கன்னிப்பெண்களுக்கு சொர்க்கம் உண்டு என்று இஸ்லாம் சொல்கிறதா?' என்பதல்ல இங்கே சர்ச்சை - எதையோ சொல்லிக்கொண்டு கன்னிப்பெண்களைக் கற்பழித்துக் கொல்வதை இமாம்கள் ஆதரித்தார்கள் என்பதே.

  பதிலளிநீக்கு
 13. புத்தகம் முகலாயர் வருகை பற்றியதா? நன்றி பத்மநாபன்.

  பதிலளிநீக்கு
 14. தன் நாட்டு மக்கள் மதவெறியர்களின் பிடியில் சிக்கித் தவிப்பதைப் பொறுக்கமுடியாமல் சிஐஏவில் சேர்ந்த காரணத்தை விவரமாக எழுதியிருக்கிறார். சிஐஏ பெரிதாக ஏதோ கிழிக்கப் போகிறது என்று அவர் நம்பியது அப்பாவித்தனம். அவரைப் பயன்படுத்திக் கொண்டது சிஐஏயின் இயல்பு.

  அமெரிக்க உளவாளியாக இருந்தததற்கும் இஸ்லாத்தைப் பற்றி குறைவாகச் சொல்வதற்கும் தொடர்பு இல்லை ஹூசைனம்மா.. பாவம் அமெரிக்கா, விட்டு விடுங்கள் :).

  பதிலளிநீக்கு
 15. உங்கள் அளவுக்கு எனக்குப் படிப்போ அறிவோ பண்போ கிடையாது முகமது ஆஷிக், எனினும் பொய் கலக்காத வரலாறே இல்லை என்று நினைக்கிறேன். பொய் கலந்தவுடன் வரலாறு புனிதமடைகிறது என்று நினைக்கிறேன் :).
  ஐம்பது வயது முகமது ஆறு(!) வயது ஆயிஷாவைத் திருமணம் செய்து கொண்டார் என்கிறது வரலாறு. திருமணமாகாமல் கருத்தரித்துப் பிறந்தவர் யேசு என்கிறது வரலாறு. பாயசம் குடித்துப் பிறந்தவர்கள் ராம சகோதரர்கள் என்கிறது வரலாறு. இன்றையக் கண்ணோட்டத்தில் "தகாது" என்று கருத்தப்படும் இவற்றை, வரலாற்றுக்கும் ஒரு தட்டு மேலே வைத்துப் புராணம் என்று புனிதப் போர்வை போர்த்தி நாம் ஏற்கவில்லையா?
  கலப்பவர்களுக்கு அது பொய் என்று தெரிவதில்லை... அவ்வளவு தான்.

  பதிலளிநீக்கு
 16. இறந்த பிறகு அடக்கம் செய்ய ஆறடி நிலம் கூட அவருடைய ஆசைப்படி அவரின் தாய்நாட்டில் தரவில்லையே அந்த ஆங்கிலேயே கொள்ளையர்கள்..?

  இங்குள்ள வளங்களை எல்லாம் கொள்ளை அடித்து கொண்டு போயி இங்கிலாந்து அரசி காலடியில் கொட்டிய கொள்ளையர்களை பற்றி குறிப்பிடும்போது "ஆங்கிலேயர் வருகை".... என்றும், இங்கேயே பிறந்து... இங்கேயே ஆண்டு... இங்கேயே செத்து... போனவர்களை "முகலாயர் படையெடுப்பு" என்பதாக அன்னியப்படுத்துவதும்... நமது இந்திய வரலாற்றில் தான், நடக்கும்..! வேறெங்காவது நடக்குமா..?//

  நம்மவர் படத்திலே இந்த வசனங்களைத் தான் பேசியதாய்க் கமலஹாசன் சொன்னதாய் கூகிள் + லே யாரோ யாரோட பதிவையோ ஷேர் பண்ணி இருந்தாங்க. பார்த்த ஞாபகம்!

  பதிலளிநீக்கு
 17. //உருப்படாத என் பரம்பரையில் என்னுடன் தமிழறிவு முடிகிறது என்பதே என்னை அவ்வப்போது பாதிக்கிறது.//

  அப்படி ஏன் சொல்கின்றீர்கள். அப்படி அந்த உருபடாத பரம்பரை வழியில் நீங்களும் உங்கள் சகோதர / சகோதரிகளின் வளர்ச்சி அசகாய வளர்ச்சி. அது போதுமே.

  உங்கள் தமிழ் வளரும். பலரை சிந்திக்க துண்டும் வரிகளை / உங்கள் பாணியை கடைபிடித்து எழுதும் எல்லோருமே உங்கள் பரம்பரை / வாரிசு என்று யோசியுங்கள்.

  பதிலளிநீக்கு
 18. Both the books sound awesome! but the second one, "The Last Mughal"- really inspires me. May be I would read it once I get time. The reason why this books inspires me is this-- I have never given any credibility to Bahadur Shah. He is described as "the weakest link in the chain of Revolt" (Revolt of 1857). In fact, I felt vexed and even angry when I read that when the Sepoys had even declared him as the emperor of Hindustan, he had all the chance to reinstate the mughal dynasty's former glory. But he failed to do that. As you say- the British had amazing insight about the Indians, then.

  But the one aspect that you mention here-- "'ஒரு மாபெரும் பரம்பரை தன்னுடன் முடிகிறது' என்ற எண்ணத்தின் தாக்கம் எப்படியிருக்கும்?"--- It has captivated me! I have never thought about it this way! It's truly inspiring... And I'd definitely read it, someday...

  பதிலளிநீக்கு
 19. LTNS Matangi...

  good, sometimes boring, book :) hope you can read it in full.

  apparently zafar had no "warrior" in him. it seems that the mughal glory started waning sometime during shah jehan.. most later mughal kings, except may be for aurangazeb, seem to have been happy to live in the past and often indulged in wine, women, drugs and "culture". the british seem to have taken full advantage of it.

  what i find interesting is that the british seem to have methodically exploited mughal/moslem kings not just in India but throughout the middle east. india was their proving grounds as the rest of the middle east wasn't as wealthy in the 16-18 century period.

  பதிலளிநீக்கு
 20. இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப் நாடகம் படியுங்க நேரம் கிடைக்கிறப்ப, மாதங்கி.

  பதிலளிநீக்கு
 21. புத்தகங்கள் படித்தக் காலங்கள் சுவையானவை. எந்த புத்தகமானாலும் படிக்க எடுத்துவிட்டால் முடிக்காமல் விட்டதில்லை. எவ்வளவு மோசமான புத்தகமானாலும் எங்காவது ஏதாவது நல்ல சேதிகளோ, விஷயங்களோ கிடைக்காதா என்ற நப்பாசை.!இப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்கும் பொறுமை இருப்பதில்லை. த லாஸ்ட் முகல் குறித்த விமரிசனம் எப்போதோ படித்த நினைவு.
  என் பரம்பரையில் தமிழ் ஆர்வத்தின் தொடக்கமும் முடிவும் என்னோடே போகும் என்பது என்னையும் பாதிப்பதுண்டு.

  பதிலளிநீக்கு
 22. அப்பதுரை அவர்களே! "புத்தகம் பேசுகிறது" என்று ஒரு மாத.இதழ். பாரதி புத்தகாலய்ம் கொண்டுவருகிறது. தமிழில் வரும் புத்தகங்கள் அத்துணையையும் தெரிவிக்கிறது. வாழ்க்கையில் படிக்கவேண்டிய நூறூ புத்தகங்களை பட்டியலிட்டூள்ளது. திருச்சியில் இருக்கும் என்பேரன் அவற்றில் நாற்பது புத்தகம் படித்துவிட்டான். அவனுடைய தாயர்(என் மகள்) ஹன்சா காஷ்யப். என் பேரன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். தமிழ் இப்போதுதான் எழுதப் படிக்க ஆரம்பித்துள்ளான்.மற்றோரு பேரன் நாகபுரியில் என்னோடு இருக்கிறான். தமிழ் தொலைக்காட்சியில் தமிழ் திரைப்பட்ம் பெயரைப் போடும் போது" தாத்தா,தாத்தா"என்று அவசரமாக கூப்பிட்டு படிக்கச்சோல்லுவான்.அவன் பெயர் நிகால் காஷ்யப். தமிழைக் காப்பாற்ற லட்சக்கணக்கான நமது பரம்பரையினர் தமிழ்நாட்டி ல் இருக்கிறார்கள் என்று நம்புவோம்.நிம்மதியாக இருங்கள்---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 23. ”செஸ் போர்டு கிங்” என்று வர்ணித்து ஆரம்பித்த லாஸ்ட் மொகல் நானும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பாதியில் அதை வைத்துவிட்டு க்ளாஸனின் மாத்தமாடிகல் ட்ராவலர் படிக்கப் போய்விட்டேன். எப்போதுமே நாய் வாய் வைத்ததுபோல ஐந்தாறு புத்தகங்களை திறந்துவைத்துவிடுவேன். ஒரு நாள் திடீர் வைராக்கியத்தில் ஒவ்வொன்றாக முடிப்பேன்.

  இது போன்ற புத்தக பத்திகள் நீங்கள் அடிக்கடி எழுதவேண்டும் என்று விரும்புகிறேன் அப்பாஜி! நன்றி.

  பதிலளிநீக்கு
 24. புத்தகங்கள் பற்றின அருமையான பதிவு. லாஸ்ட் மொகல் புரட்டப் பட காத்திருக்கிறது. இனி படிக்கவும் பதியவும் கொஞ்சம் நேரம் கிடைக்கும் எனக்கு என்று தோன்றுகிறது. ஆமென்.

  பதிலளிநீக்கு
 25. மதனின் 'வந்தார்கள், கண்டார்கள், வென்றார்கள்' புத்தகம் பற்றி குறிப்பிடுபவர்கள், அதற்கு முன்னுரை எழுதிய சுஜாதா, புத்தகத்தை எழுதிய மதன் - யாருமே அந்தப் புத்தகத்தின் ஆங்கில வடிவமான 'They came, They saw, they won' (by Kushwanth Singh) புத்தகம் பற்றி மூச்சுக் கூட விடாதது ஆச்சரியமாக இருக்கின்றது என்கிறார், எங்கள் ஆசிரியர்களில் ஒருவர்!

  பதிலளிநீக்கு
 26. ஆங்கில வடிவமான 'They came, They saw, they won' (by Kushwanth Singh) புத்தகம் பற்றி மூச்சுக் கூட விடாதது ஆச்சரியமாக இருக்கின்றது என்கிறார், எங்கள் ஆசிரியர்களில் ஒருவர்//

  வழக்கம் போல இதிலும் தமிழனுக்கே முன்னுரிமை! :)))))

  பதிலளிநீக்கு
 27. கெளதமன் சார் கொடுத்திருப்பது புதிய செய்தி.

  பதிலளிநீக்கு
 28. யாரு kushwant singh? ஹாக்கி ஆட்டக்காரரா?

  :) மறந்தே போன ஒரு journalist/எழுத்தாளரை/ஆசிரியரை நினைவுபடுத்தினீங்க kgg.

  பதிலளிநீக்கு
 29. /அந்தப் பெண், கடைசி நிமிடங்களில் இவரை அடையாளம் கண்டுகொள்கிறார். பரிதாபமாகக் கெஞ்சும் அந்தக் கண்களை விவரித்திருக்கிறார் பாருங்கள் - என்னால் அன்றைக்குத் தூங்க முடியவில்லை. யாரையாவது அடித்துக் கொல்லவேண்டும் போல் தோன்றியது./

  இதையே என்னால் தாங்க‌முடிய‌வில்லை.அந்த‌ப் புத்த‌க‌ம் என்ன‌வாக்கிருக்கும் உங்க‌ளை? உண‌ர்ச்சியின் அதி உச்ச‌த்தை உதைத்த‌ விசையான எழுத்து கீறிய‌ நிக‌ழ்வின் உறையாத‌ குருதி.

  //என் பரம்பரையில் என்னுடன் தமிழறிவு முடிகிறது என்பதே என்னை அவ்வப்போது பாதிக்கிறது. பகதூர் ஷாவின் மனநிலையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.//

  பார‌தியின் 'த‌மிழினி மெல்ல‌ச்சாகும்...' என்ற வ‌ரிக‌ளின் எச்ச‌ரிக்கை, நம் மேலைநாட்டு மோக‌த்தை இப்ப‌டி
  "மேற்றிசை வாழும் வெண்ணிற மக்க‌ளின்
  செய்கையும் ந‌டையும் தீனியும் உடையும்
  கொள்கையும் ம‌த‌மும் குறிக‌ளும், ந‌ம்முடை
  ய‌வற்ற்னுஞ் சிற‌ந்த‌ன்: ஆத‌லின், அவ‌ற்றை
  முழுவ‌துமே த‌ழுவி மூழ்கிடி ன‌ல்லால்,
  த‌மிழ‌ச் சாதி த‌ர‌ணிமீ திராது,
  ...." எள்ள‌ல் செய்து ம‌ன‌ம் க‌சிந்த‌ வ‌ரிகளால்
  ந‌ம் சாதியை என்ன‌ செய்ய‌ போகிறாய் என்ற‌ வ‌லியை உங்க‌ள் வ‌ரிக‌ளிலும் வாசிக்கிறேன் அப்பாஜி.
  மாத‌ங்கியின் மைத்துளியில் கிளிக்கி உங்க‌ளின் இந்த‌ ப‌திவை அடைந்தேன். மாத‌ங்கிக்கு ந‌ன்றி இத‌ன் வ‌லி/ழியாய்

  பதிலளிநீக்கு