2010/06/25

முதலில் பெண்; அடுத்தது காமம்



த்து நாள் காட்டுக்குப் போயிருந்தேன். உண்மையிலேயே காடு. இணையம், தொலைபேசி எதுவுமே கிடையாது. அவசரத்துக்கு மட்டும் செல்போன். அதுவும் பாதி நேரம் வேலை செய்யவில்லை. வனவாச அனுபவத்தை இன்னொரு பதிவில் எழுதுகிறேன். காட்டின் தனிமையில் நான் படித்தவை பற்றியது இந்தப் பதிவு.

அதான் இப்படி இடுகைத் தலைப்பு. ஹிஹி.

'பெண்', நான் எதிர்பாரா விதத்தில் என்னைத் தாக்கியக் கவிதை. இந்த வருடத்தொடக்கத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கிப் படிக்காமல் வைத்திருந்த பல புத்தகங்களிலிருந்து எடுத்துச் சென்ற காலச்சுவடு இதழில் படித்தது. மாயா ஏஞ்சலோவின் ஆங்கிலக் கவிதை - குவளைக்கண்ணனின் மொழிபெயர்ப்பிலிருந்து மாதிரிக்கு:
உனது கசந்த திருகலான பொய்களால்
வரலாற்றில் என்னைக் கீழ்மைப்படுத்தி எழுதிவிடலாம்
என்னைப் புழுதியில் தள்ளி மிதித்து விடலாம்
ஆனால் இருந்தும், புழுதியைப் போல் நான் எழுவேன்.

எனது செருக்கு உன்னைக் காயப்படுத்துகிறதா?
எனது புழக்கடையில் தங்கச் சுரங்கங்களை
தோண்டிக் கொண்டிருப்பதைப் போல
நான் சிரிப்பதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அல்லவா?

எனது கவர்ச்சி உன்னை நிலைகுலைக்கிறதா?
எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்திருப்பது போல் நான் நடனமாடுவது
அதிர்ச்சியடைய வைக்கிறதா?

உனது சொற்களால் என்னைச் சுட்டு வீழ்த்தலாம்
உனது கண்களால் என்னை வெட்டி விடலாம்
உனது வெறுப்பால் என்னைக் கொன்று போடலாம்
ஆனால் இருந்தும், காற்றைப் போல நான் எழுவேன்.
குவளைக் கண்ணனின் தமிழ் வடிவம் தைக்கிறது. மாயாவின் ஆங்கிலத் தொகுப்பு ஒன்று வீட்டில் இருக்கிறது. தூசி தட்ட வேண்டும்.

காமத்திற்கு வருகிறேன்.

நியூயோர்க் பொது நூலகமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகமும் இணைந்து தத்துவம், இலக்கியம், அறிவியல், சமூகவியல், பொருளாதாரம் என்று பல்வேறு தலைப்புகளில் அந்தந்த இயலின் தலைசிறந்த அறிஞர்களை அழைத்துத் தொடர் சொற்பொழிவாற்றச் செய்து பின்னர் புத்தகமாக வெளியிடுகிறார்கள். நூறு வருடங்களாக இதைச் செய்து வருகிறார்கள். சமீபகால சொற்பொழிவுகள் வாழ்வியல், சமூகவியலை ஒட்டி அமைந்திருப்பதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்வியல் அடிப்படையில் ஆற்றப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பாக ஒரு புத்தகத்தை என்னுடன் காட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தேன். ஏழு பெரும்பாவங்களில் ஒன்றாகச் சொல்லப்படும் 'காமம்' என்பதைப் பற்றியப் புத்தகம். சைமன் ப்ளேக்பர்ன் காமத்தைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு. (LUST | Simon Blackburn | New York Public Library/ Oxford University Press Lecture Series).

அவருடைய வாழ்வியல் புத்தகம் இன்னொன்றை (Being Good: An Introduction to Ethics) முன்பே படித்திருந்ததாலும், இந்தப் புத்தகத்தின் கரு பலானதாக இருப்பதாலும் எடுத்துச் சென்றிருந்தேன். இதையெல்லாம் ஆளில்லாத இடத்தில் தான் படிக்க முடிகிறது. என்ன செய்ய? அறிவை வளர்க்கத்தான் படிக்கிறேன் என்றாலும் முறைக்கிறார்கள்.

Lust என்பதற்கு காமம் பொருத்தமான தமிழா தெரியவில்லை. காதல், அன்பு போன்ற உணர்வுகள் தீவிரமடையும் பொழுது காமம் என்றாவது போலும், மனதைத் தொட்டால் காதல், உடலைத் தொட்டால் காமம் என்பது போலும், புணர்ச்சி என்றாலே காமம் தான் என்பது போலும் நம்முடைய சமூக போதனையில் வளர்ந்தவன் என்ற முறையில் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த வகைக் கண்ணோட்டத்தில், காமம் என்பது பாவம் என்றாகிறதே? காமம் பாவமா? பாவம் புண்ணியம் இவற்றில் சற்றும் நம்பிக்கையில்லாதவன் என்ற முறையில் பாவமாவது மயிராவது என்று ஒதுக்க நினைத்தாலும், பெரும்பாலான பாவ/புண்ணிய முத்திரைகளும் கோட்பாடுகளும் மனித ஒழுக்கத்தின் காரணமாகச் சொல்லப்பட்டவை என்பதையும் உணர்ந்திருப்பதால் ஒதுக்கவில்லை.

காமம் என்பது தகாத நெறியா? காமம் என்றதுமே மனதுக்குள் ஒரு ஹைகூ படிக்கும் படபடப்பு தோன்றினாலும், முகத்தளவில் ஒரு சுளிப்பை ஏற்படுத்திக் கொள்கிறோமே, ஏன்? காதல் என்றால் நெறி, காமம் என்றால் வெறி என்பது போல் வெளியில் நடந்து கொள்கிறோமே, ஏன்? 'உன்னை இன்ன இடத்தில் முத்தமிடப் போகிறேன்' என்றால் வெறியெனப் பட்டம் கட்டும் நாம், 'உன்னை அணைத்துக் கொள்ளப் போகிறேன்' என்றால் மட்டும் நெறியென ஏற்கிறோம். ஏன்? திரைக்குள் நடந்தால் காமம் நெறியாகுமா? சட்ட சமுதாய வட்டத்துக்குள் நடந்தால் நெறி; அதே நெறி வட்டங்களின் இடையில் நடந்தால் வெறி என்கிறோம்.

மதங்களுக்குட்பட்ட பாவ/புண்ணிய கண்ணோட்டத்திலோ அல்லது மதிக்குட்பட்ட மனித நேயக் கண்ணோட்டத்திலோ எப்படிப் பார்த்தாலும், காமம் என்பது ஒரு சாதாரண உணர்ச்சியின் மிகை வடிவம் என்பது தான் உண்மை. மிகை என்பதும் இங்கே ரெலெடிவ். இதைப் புரிந்து கொண்டால் பசி தாகம் தலைவலி போல் காமத்தையும் இயல்பாகப் பழகிக் கொள்ளலாம் என்பதே புத்தகத்தின் சாரம்.

பதினைந்து சொற்பொழிவுகளின் தொகுப்பான இந்த நூற்று முப்பது பக்கப் புத்தகத்தை எடுத்தால், முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. ஆசை என்றச் சொற்பொழிவில் தொடங்கி, அமைதி (விடை) என்றச் சொற்பொழிவில் முடித்திருக்கிறார் சைமன். சொற்பொழிவுகளில் அவர் எடுத்தாண்டிருக்கும் கருத்துக்களும், எடுத்துச் சொல்லியிருக்கும் விவரங்களும் சுவை, சுவை, சுவை.

தொடக்கமே அபாரம். ஷேக்ஸ்பியரின் வரிகளுடன் தொடங்குகிறார்: before, a joy proposed; behind, a dream. எண்ணி எண்ணிக் காமுற(!) வேண்டிய வரி.

புத்தகம் முழுதும் கதைகளும் மேற்கோள்களும் ஏராளம். ஆதி மனிதனிலிருந்து ஏசு உள்பட, விக்டோரியா அரசி சேர்த்து, சமீப பில் க்லின்டன் வரை... ஒருவரை விடவில்லை. என்னைக் கவர்ந்த ஒரு குட்டிக்கதை புத்தகத்தின் தொடக்கத்தில் வருகிறது:

அலெக்சேந்தர் அரிஸ்டாடிலின் மாணவன் என்பது தெரிந்திருக்கும். அலெக்சேந்தர் பிலிஸ் எனும் நாட்டியக்காரியுடன் நெருக்கமாக இருந்த பொழுது, காமத்தின் தீமையை அரிஸ்டாடில் தன் மாணவனுக்கு விளக்கிச் சொல்லி பிலிஸை விட்டு விலகச் சொன்னாராம். அலெக்சேந்தரும் "காமம் என் குறிக்கோள்களை அடைய முடியாமல் செய்து விடும்; இனி நெருக்கமாக இருக்க முடியாது" என்று பிலிஸிடம் சொல்லி விலகினானாம். தன் ஆசிரியரான அரிஸ்டாடிலே சொல்லியிருப்பதால் இனி நெருக்கமாக இருக்க முடியாது என்றானாம். மனமுடைந்த பிலிஸ் பழி வாங்கத் தீர்மானித்தாளாம். அரிஸ்டாடில் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் தினமும் அவர் முன் சென்று நிர்வாணமாகவும் அரை குறை ஆடையுடனும் பல் வேறு நிலைகளில் ஆடியும் பாடியும் அவரைக் கவர முயற்சித்தாளாம். முதலில் பிலிஸைப் பொருட்டாக எண்ணாத அரிஸ்டாடில் நாளடைவில் தளர்ந்து போய், பிலிஸை நாடினாராம். தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு உடைகளைக் களைந்து பிலிஸின் முன்னே சென்று மன்றாடினாராம். அரிஸ்டாடிலின் உடலழகைக் கண்ட பிலிஸும் அவரை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி, ஒரு நிபந்தனை விதித்தாளாம். இருவருமே நிர்வாணமாக இருக்கையில், அரிஸ்டாடில் பிலிஸை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு அலெக்சேந்தரின் தோட்டத்தை வலம் வர வேண்டும் என்பதே நிபந்தனை. அரிஸ்டாடில் தயங்காமல் உடனே அவளுடைய உடைகளைக் களையச் சொல்லி, பிலிஸை முதுகில் ஏற்றிச் சுமந்து தோட்டத்தை வலம் வந்தாராம். பிலிஸ் கேட்டுக் கொண்டிருந்தபடி அலெக்சேந்தர் அங்கே வந்து நின்றதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆடை துறந்தது மட்டுமில்லாமல், தன்னைத் துறக்கச் சொன்ன அதே பெண்ணை உடையில்லாது உப்பு மூட்டைத் தூக்கி வந்த ஆசிரியரைக் கண்டானாம்! அரிஸ்டாடிலுக்கு வெட்கமாகி விட்டதாம். ஒரு கணம் யோசித்த அலெக்சேந்தர், "நீங்கள் சொன்னது சரிதான் குருவே. காமம் படுத்தும் பாட்டை இப்போது நன்றாகப் புரிந்து கொண்டேன்" என்று பெருந்தன்மையுடன் அரிஸ்டாடிலிடம் சொன்னாலும் அன்றிலிருந்து அவரின் மாணவனாகப் பழகுவதை நிறுத்திக் கொண்டானாம்.

உலகின் ஒவ்வொரு கலாசாரத்திலும் காமத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார். கலைக் கண்ணோடு பார்க்க, கிளுகிளு படங்களும் உண்டு.

காமம் இல்லாமல் உடலுறவு கொள்வதும் இயற்கை என்று சொல்லும் பொழுதெல்லாம் வாதாடத் தோன்றும். உடலுறவு என்பதே காமம் என்று நம்புவதால் இந்த எண்ணம் என்கிறார். காமம் இல்லாத புணர்ச்சி பற்றிய முரண்பாட்டை, அது முரண்பாடென்றால், சந்ததி பெருக்கத்திலிருந்து மருத்துவ சோதனை வரை பல காரணங்களை எடுத்துக் காட்டி விவரமாகவும் மிக நளினமாகவும் சொல்லியிருக்கிறார். காம உணர்வு இல்லாமலே புணர்ச்சி எனும் உடல் செயல்பாட்டைப் பற்றி எழுதி, அதை காமம் எனும் 'பாவ'க் கண்ணோட்டத்திலிருந்து வேறுபடுத்திச் சொல்லியிருப்பது சுவை.

காமம் என்றதும் பொதுவில் முகம் சுளித்து தனிமையில் நாக்கைத் தொங்கப் போடும் கூட்டம் தன்னம்பிக்கையில்லாத கூட்டம் என்கிறார். காமம் இயற்கை மட்டுமல்ல அவசியம் கூட என்று சொல்கிறார். காமம் புணர்ச்சியில் முடியவேண்டிய அவசியமில்லை என்பதையும் அடிக்கடி எடுத்துச் சொல்கிறார். மேற்சொன்ன அரிஸ்டாடில் கதை ஒரு உதாரணம்.

இன்றைக்குக் காமம் என்றால் பாவம் என்று நடுங்குவதற்குக் காரணம், கிறுஸ்தவ மதம் தான் என்கிறார். கிறுஸ்தவ மதம் உலகெங்கும் பரவத்தொடங்கிய ஆயிரம் ஆண்டுகளில் இத்தகைய எண்ணம் உலகத்தின் மற்ற மத/சமூகங்களிலும் பரவியது என்கிறார். ஒழுக்கம் என்பது எல்லா மதங்களிலும் அடிப்படை நெறியாகச் சொல்லப்பட்டிருப்பதால் கிறுஸ்தவ நெறியான 'காம அடக்கம்' மெள்ள எல்லா சமூகங்களிலும் ஒரு மதக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்கிறார். காமத்தையும் சேர்த்து ஏழு பெரும்பாவங்கள் என்று தொகுத்திருப்பதைச் செயற்கை என்று சாடுகிறார். நூற்றுக்கணக்கான வருடங்களாக நடைபெற்று வந்த/வரும் கத்தோலிக்கப் பாதிரிகளின் முறையில்லா பாலுணர்வின் அடிப்படையே இப்படி இயல்பான உணர்ச்சியைப் பாவ முத்திரையிட்டுத் தடுத்ததனால் உருவான விகாரம் தான் என்கிறர்.

'காமம் கண்ணை மூடும்' என்று நாம் சொல்வது போல், காமத்தினால் அறிவிழந்த செயலைச் செய்யும் பொழுது மனிதன் மிருகமாகிறான் என்று சொல்கிறார். காமம் என்பது இயல்பான உணர்ச்சி என்று உணர்ந்து பழகும் பொழுது 'கண்ணை மூடி மிருகமாகிற' சாத்தியங்கள் குறைகின்றன என்று சொல்லி முடிக்கிறார்.

முதிர்ந்த வாசகருக்கான புத்தகம். கண்களோடு மனதையும் திறந்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய புத்தகம்.

20 கருத்துகள்:

  1. பெயரில்லாஜூன் 25, 2010

    idhayum padiththu naduvula abirami andhaadhiyum padikkarellaakkum?
    besh besh!!!

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா ரெண்டுமே ஒரே விஷயத்தைத் தான் சுத்தி சுத்தி வருதுங்க பெயரில்லா.

    பதிலளிநீக்கு
  3. இப்போது தான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.அற்புதமாக எழுதுகிறீர்கள்.காமம் பற்றி நாம் எப்போதுமே இரட்டை நிலைகள் வைத்திருக்கிறோம்.காமம் பற்றிய இந்த இரட்டை நிலைக்கு செமிடிக் மாதங்கள் குறிப்பாக கிறித்துவத்தின் பங்கு அதிகம் என்ற கருத்து எனக்கும் உண்டு.தடுக்கப் பட்ட கனியை புசித்ததும் ஆதி ஜோடிக்கு முதல் முதலாக வந்த 'அறிவு'பால் வேறுபாடு பற்றிய அறிவுதான்!நிறைய எழுதுங்கள்.தமிழில் சீரியசாய் காமம் பற்றி இன்னும் யாரும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.எழுதப் பட்ட சிலவும் சிறுபிள்ளை விளையாட்டுக்கள்.உங்களைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ள ஆவல்.தளத்தின் முகப்பில் அதிக விவரங்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. சந்திப் பிழையால் சந்ததிப் பெருக்கம்...! காமம் இல்லாத (ஆண் - பெண்) காதல் இருக்க முடியாது, ஆனால் காதல் இல்லாத காமம் சாத்தியம்!
    //"காமம் இல்லாமல் உடலுறவு கொள்வதும் இயற்கை என்று சொல்லும் பொழுதெல்லாம்.."//

    சாத்தியமா?

    பதிலளிநீக்கு
  5. கவிதை, LUST இரண்டுமே மாறுபட்டு இருந்தது. படிக்க வாய்ப்பில்லாத சில புத்தகங்களை இம்மாதிரியில் பதிவில் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  6. ஒருவர் மீதுள்ள அளவற்ற ஆசைதானே காமம். காமம், மோகம் இரண்டும் ஒன்றுதானா? உடலுறவு என்பதே காமம் என்று முழுமையாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. காமம் இல்லாத உடலுறவு சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. கட்டாய உடலுறவில் காமம் எப்படி இருக்கும்? ஒரு அறுபது வயது கிழவரை இருபது வயது பெண், விருப்பம் இல்லாமல் மணக்க நேரும்போது, அவர்கள் உடலுறவில் அந்த பெண்ணிற்கு என்ன ஈடுபாடு இருக்க போகிறது. அவள் வெறும் இயந்திரமாகத்தானே இருப்பாள். அன்பும், காதலும் நிறைந்தவர்கள் மனதில் தோன்றும் காமத்திற்கும், வக்கிர எண்ணங்கள் நிறைந்தவர்கள் மனதில் தோன்றும் காமத்திற்கும் கூட நிச்சயம் வேறுபாடு இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி போகன்.
    நீங்கள் சொல்வது சரி. சமீபத் தமிழில் காமத்தைப் பற்றி அதிகம் எழுதப் படவில்லை. நான் படித்த வரை காமம் பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்பட்டிருப்பது ப்ரெஞ்சு மற்றும் அரேபிய இலக்கியங்களில் மட்டும் தான். ஆங்கிலத்தில் கூட சமீப காலம் வரை இலை மறை காய் விவகாரமாகத் தான் எழுதப்பட்டு வந்தது. சமீபத் தமிழில் எழுதப்படவில்லையே தவிர, உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு காமம், காமத்தினால் விளைந்த இனிய உபாதைகள், ஒழுக்கச் சிக்கல்கள் போன்றவை சங்க இலக்கியங்களில் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன. வடமொழியில் காமசூத்திரம். அரேபிய இலக்கியங்களில் (கலீல் கிப்ரன், அரேபிய இரவுகள், உமர் கய்யம்...) காம வெளிப்பாடுகள் இருந்தாலும் இஸ்லாம் என்ற மதம் இத்தகைய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்தியது ஏன் என்று தெரியவில்லை. அதுவும் ஒருதலையாக. போதை என்கிற கிறக்கமான சொல்லே அரேபிய இறக்குமதி தெரியுமோ? இஸ்லாம் பாதி செமிடிக் என்று வைத்துக் கொள்வோம். மற்றபடி கிழக்கத்திய கலாசாரங்கள் எல்லாமே மேற்கத்திய மத/கலாசாரங்களினால் பாதிக்கப்பட்டு போர்த்தப்பட்டிருக்கின்றன என்பேன். நீங்கள் சொல்வது போல் செமிடிக் மதங்கள் எல்லாமே இத்தகைய கட்டுப்பாட்டிற்குக் காரணமாயினவோ என்று தோன்றுகிறது. இன்றைக்குக் கூட மது, மாது, காமம், போதை போன்றவற்றைக் கிழக்கத்தியத் தாக்கம் என்கிறது மேற்கத்தியக் கலாசாரம். கட்டுப்பாட்டின் மறுபக்கம் வளர்ச்சி, விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. //ஸ்ரீராம். கூறியது... சந்திப் பிழையால் சந்ததிப் பெருக்கம்...!


    :-) ஸ்ரீராம்!
    நல்ல கேள்வி. காமம் என்றால் என்ன என்பதைப் பொருத்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளாக அமைந்து விட்டது காமம். சிலர் காமம் என்றால் புணர்ச்சி என்று நினைக்கிறார்கள் (அகராதிகளில் கூட இப்படி ஒரு பொருள்). ஆங்கிலத்தில் கூட 'உடலுறவில் அதீத நாட்டம்' என்று அகராதியில் பொருள். அந்த வகையில் பார்த்தால் காமம் இல்லாத காதல் இருக்கலாமே? காதல் இல்லாத காமமும் இருக்கலாமே? (சைமன் நிறைய உதாரணங்கள் கொடுத்திருக்கிறார். மீனாக்ஷியின் மறுமொழியிலும் உதாரணம் இருக்கிறது). இதைக் கொஞ்சம் புரட்டிப் போட்டால் என்ன? உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எளிய ஆனால் நுட்பமான வேற்பாடு. உணர்வு என்பது அறிவு (தெளியப் பெற்ற அறிவு) என்ற பொருளில் வழங்கப்படுகிறது; உணர்ச்சியோ வெளிப்பாடு மட்டுமே. பசி, ஆத்திரம், தாகம் இவை எல்லாம் உணர்ச்சிகள். காதல் உணர்ச்சியா உணர்வா? காமம் உணர்ச்சியா உணர்வா? இதைப் புரிந்து கொண்டால் ஒன்றில்லாமல் இன்னொன்றா என்ற கேள்விகளுக்கு விடை காணலாம். ம்ம்ம். குழப்பம். (இது உணர்வு).

    பதிலளிநீக்கு
  9. சங்க இலக்கியத்தில் ஒரு பால் விழைவு பற்றி,தகாத உறவு [incest]பற்றியெல்லாம் கிடையாது.அடல்டரி பற்றியும் பண்ணக் கூடாது என்ற போதனை தாண்டி வடக்கிலிருந்து ராமாயணத்தை கம்பன் கொண்டுவரும் வரை எதுவும் பதியப் படவில்லை.நம்முடைய காமம் எல்லாம் பரத்தைகளுடன் நின்றுவிட்டது.[ஆனால் விவிலியத்தில் இவை எல்லாம் வருகின்றன என்பது சுவராஸ்யமான ஒரு செய்தி]ஆங்கில இலக்கியத்தின் வயது அதிகம் இல்லை.சற்று கட்டுப் பெட்டியான மொழி அது. பிரஞ்சுக் காரர்கள் இந்தியாவைப் பிடித்திருந்தால் நம்முடைய இலக்கியம் இன்னும் சற்று செழுமையாக இருந்திருக்கக் கூடும்

    பதிலளிநீக்கு
  10. நன்றி, தமிழ் உதயம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் படியுங்கள். (சில சித்திரங்களைப் புரட்டும் பொழுது மட்டும் அக்கம் பக்கம் பார்த்துக் கொள்ளவும். ஒரு முறை புத்தகத்தைப் புரட்டும் பொழுது என் எட்டு வயது மகன் இருந்ததைக் கவனிக்கவில்லை. 'dad was looking at naked pictures' என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். வேதனை.)

    இந்தப் புத்தகங்களின் pdf வடிவம் இணையத்தில் இருக்கலாம். கௌதமன் என்று ஒரு சூரர் இருக்கிறார்...உலகத்தின் அத்தனை pdf வடிவங்களும் அவரிடம் இருக்கிறதோ என்று எனக்கு ஒரு ஐயமுண்டு.

    பதிலளிநீக்கு
  11. // meenakshi கூறியது...உடலுறவு என்பதே காமம் என்று முழுமையாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.

    முதிர்ந்த கருத்து, பாராட்டுக்கள்.
    நல்ல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். காமம், மோகம் இரண்டு சொற்களும் புணர்ச்சி எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வேறு பொருளில் தான் அதிகம் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. மோகம் என்பது காதல் நெருக்கத்தின் வெளிப்பாடு என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன். மோகம் புணர்ச்சியில் முடியாவிட்டாலும், காமம் என்பது அவசியம் புணர்ச்சியில் தான் முடியும் எனபது போலப் படித்தும் கேட்டுமிருக்கிறேன். (திரைப்படப் பாடல்கள் ஒரு உதாரணம்).

    மன்மதனுக்கு காமன் என்று தமிழில் பெயருண்டு. காமன் வைத்திருக்கும் வில்லில் ஐந்து வகை அம்புகள் உண்டாம். அதில் ஒன்று மோகம். காமனின் மோக அம்பினால் தாக்கப்படும் பொழுது மட்டுமே ஆணோ பெண்ணோ காதல் மிகுந்து கிறக்கம் கொள்கிறார்கள் என்கிறது இலக்கியம். சிவனை மோக அம்பினால் தாக்கியதால் தான் சிவனின் தவம் கலைந்தது; விசுவாமித்திரனையும் மோகக் கணையினால் தாக்கியதால் தான் நமக்கு சகுந்தலை கிடைத்தாள் என்கிறது இலக்கியம். இதை வைத்துப் பார்க்கும் பொழுது காமம் என்பது இயல்பான உணர்வாகவும், மோகம் என்பது அதன் வெளிப்பாட்டு உணர்ச்சியாகவும் எண்ணத் தோன்றுகிறது. காமத்தை விட மோகம் தான் அதிக உபாதை என்பது போலவும் தோன்றுகிறது. 'மூச்சை நிறுத்தி விடு' என்று பாரதி சொன்னது புரிகிறது.

    பதிலளிநீக்கு
  12. சிந்திக்க வைக்கிறீர்கள் போகன். நீங்கள் சொல்வது சரி. விவிலிய (பழைய எற்பாடு) விவரங்கள் சுவையானவை. தமிழ் இலக்கியங்களிலும் நீங்கள் சொல்வதெல்லாம் இருக்கின்றன. ஒரு பால் விழைவு கொஞ்சம் வித்தியாசமானது; சங்க இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறதென்றும் இன்றைக்குப் போலவே அன்றைக்கும் அது 'தகாத' உறவென்று கருத்தப்பட்டதால் சங்க இலக்கியங்களில் புதைந்திருக்கிறது என்றும் படித்திருக்கிறேன். ராஜ ராஜ சோழன் ஆண், பெண் இருவர் மீதும் நாட்டம் கொண்டவர் என்று ஒரு கருத்து இருக்கிறது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றியும் அப்படி ஒரு கருத்து இருக்கிறது. அவர்களை விடுங்கள். சிவன், விஷ்ணு என்ற கடவுள்கள் கூட புணர்ந்திருக்கிறார்கள். அதை அப்படியே எழுத வேண்டாம் என்று விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். இடக்கரடக்கல். ஆணும் பெண்ணும் சேர்வதே இயற்கை என்று நம்பப்பட்டதால் இப்படி பூசி மெழுக வேண்டியதாயிற்று. ராமாயணம் தமிழில் வருமுன்னரே சிவனின் "லீலை"கள் பற்றி நிறைய இறையிலக்கியங்களில் எழுதியிருக்கிறார்கள். முருகன் பிறந்த வரலாற்றைப் படித்தால் பக்தர்கள் முகத்தை மூடிக் கொள்வார்கள். இன்றைய செயற்கைக் கருத்தரிப்பு தான் ஒரு வேளை அன்றைக்கே சொல்லப்பட்டது என்று ஒரு விடாக்கண்டர் கூட்டம் வாதிப்பதை அறிவேன். திருப்பாவை எனும் இறையிலக்கியத்தில் ஆண்-பெண், ஆண்-ஆண், பெண்-பெண் என்று எல்லா வகை உறவு முறையும் கோடிடப்பட்டிருக்கிறது. தமிழில் தேடிப் பார்க்க வேண்டும், இருந்தாலும், ஓர்குடித் தகாவுறவு வடமொழி இறக்குமதியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. பிரம்மன் தன் மகளையே மணந்து கொண்டதில் தொடங்கி பக்கம் பக்கமாகப் போகிறது புராணம். ' பக்தி' என்ற கண்ணாடி அணிந்து பார்க்கும் பொழுது இவையெல்லாமே 'பெரும்பேற்றின்' அடையாளமாகக் கொண்டார்கள். யாராவது எடுத்துச் சொன்னால், உடனே 'விகார புத்தி' என்று அடக்குவது போதாமல் அவர் மனம் மாற அதே இறைவனிடம் மன்றாடுவார்கள். மற்றபடி அத்தகைய உணர்வுகள், உணர்ச்சிகளும் எவருமே விதி விலக்கல்ல என்பது என் கருத்து.

    >>பிரஞ்சுக் காரர்கள் இந்தியாவைப் பிடித்திருந்தால் நம்முடைய இலக்கியம் இன்னும் சற்று செழுமையாக இருந்திருக்கக் கூடும்
    oui.

    பதிலளிநீக்கு
  13. கச்சி சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம் உட்பட எல்லாமே வடமொழித் தழுவல்களே.ராஜ ராஜன் மற்றும் பற்றிய செய்தி புதிது.ஓர் பால் உறவு பெரும்பாலும் போர்க்குணம் கொண்ட குழுக்களிடையேதான் அதிகம் இருந்தது.[கிரேக்கர்கள்,அரேபியர்கள்]அதேபோல் ஒருகுடிஉறவு [incest க்கு சரியான தமிழ்ச் சொல் தேடிக்கொண்டிருந்தேன்.நன்றி.]பெரும்பாலும் நெருங்கிய அல்லது மூடிய இனங்களிலும் குடும்பங்களிலும்தான் நடக்கிறது.காமத்திற்கும் வன்முறைக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.நாம் இவ்வளவு வன்முறை மிக்க சமுதாயமாய் மாறிவிட்டதற்கு நமது காமம் பற்றிய இரட்டை நிலை தான் காரணமோ என சிலசமயம் தோன்றுவதுண்டு.

    பதிலளிநீக்கு
  14. //காமம் என்றதும் பொதுவில் முகம் சுளித்து தனிமையில் நாக்கைத் தொங்கப் போடும் கூட்டம் தன்னம்பிக்கையில்லாத கூட்டம் என்கிறார்.//

    நாம்பள் ஒரே மாதிரி பிரதர். உள்ளொன்று வைத்து புறமொன்று கிடையாது. எப்போது நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஜொள்ளு தான் !! அதுவும் இப்போதைய நியூயார்க்கில் எல்லா பெண்களும் கர்சீப் சைஸ் தான் துணி. ரொம்ப தொல்லே பண்ணறான், மனசு பேஜார் ஆகி போவுது நம்பளுக்கு !!

    பதிலளிநீக்கு
  15. // meenakshi கூறியது...ஒருவர் மீதுள்ள அளவற்ற ஆசைதானே காமம். காமம், மோகம் இரண்டும் ஒன்றுதானா? உடலுறவு என்பதே காமம் என்று முழுமையாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. காமம் இல்லாத உடலுறவு சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. கட்டாய உடலுறவில் காமம் எப்படி இருக்கும்//

    மீனாக்ஷி, எதாவது ஒன்று சொல்லுங்கள். முதல் வரிக்கும் நான் கடைசியில் கட் அண்ட் பேஸ்ட் செய்த வரிக்கும் கொஞ்சம் உதைக்குதே ?

    உடலுறவே வைத்துக்கொள்ள முடியாத வயதில் கூட காதல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. interesting point சாய்ராம். ஜொள்ளு விடுவது காம வெளிப்பாடா? கொச்சையான ரசனையா? எப்படி இருந்தாலும் பரவாயில்லை. காமம் என்பது கொஞ்சம் ஆழமான உணர்வுனு நினைக்கறேன். காதலுக்கும் காமத்துக்கும் தொடர்பு இருந்தாலும் ஒன்றில்லாமல் இன்னொன்று இருக்கலாம் என்பது என் கருத்து. காதல் வந்தால் தான் காமம்னு நிறைய பேர் சொல்றாங்க. எனக்கென்னவோ உல்டாவா தோணுது. உடலுறவு மட்டும் தான் காமம்னும் என்னால சொல்ல முடியல. ஆனா காமம்னாலே உடல் சம்பந்தப்பட்டிருக்கணும்னு தோணுது. நான் சொல்ல வந்ததும் வேறே. முகம் சுளிப்பது என்ற போது. பெண்களையோ ஆண்களையோ.. தொடக்கூட வேண்டாம் ஐயா.. வர்ணிக்கும் பொழுது அழகாக இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நாம் அந்தப் பெண் அல்லது ஆணின் உடலழகை வர்ணிக்கும் பொழுது நமக்கு நாமே எல்லைங்களை வரைஞ்சுக்குறோம்னு சொல்ல வந்தேன். பாவம் புண்ணியம்னு ஒரு செயற்கை திரையை போத்திடறோம்னு சொல்ல வந்தேன். சிவனும் விஷ்ணுவும் புணரதைப் பத்தி புராணங்கள்ள இருக்கு. சிவன் விஷ்ணுவை (மோகினி) வர்ணிப்பதாக புராணம் சொல்கிறது. மோகினியின் பெண்குறி படமெடுத்த நாகம் போல் இருக்குனு புராணத்துல சொல்லியிருக்கு (not making this up) - இதை ஜொள்ளுனு சொல்லுறதா இல்லை சிவன் உளமாற நினைச்சு சொன்னதா எடுத்துக்குறதா? அதைத் தான் சொல்ல வந்தேன். மோகினியோட முகம் தாமரையாட்டம் இருக்குனு சொல்றதை பக்தியோட எடுத்துக்குறோம் - பெண்குறி நாகப்பாம்போட படமாட்டம் இருக்குனு சொன்னதை தணிக்கை செய்துடறோம் இல்லை முகம் சுளிக்கிறோம். see what i mean?

    பதிலளிநீக்கு
  17. Ramasubramanianஜூன் 29, 2010

    இதை விட கீழ்த்தரமாகப் போக முடியாது என்று நினைக்கும் போதெல்லாம் இன்னும் பத்தடி போவேன் என்பதே நீங்க எழுதும் லட்சணம் ஆகிவிட்டது. What an atrophy, Mr.Durai! We are all ashamed.

    பதிலளிநீக்கு
  18. பதிவைவிட பின்னூட்டங்களில் அலசும் விஷயங்களைக் கவனிக்கிறேன்.வாழ்வியல்.
    நிச்சயம் அறிந்திருப்பது நல்லதே !

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஹேமா, கருத்துக்கு நன்றி. இந்தப் பதிவுல சீரியசா அசை போட வாய்ப்பு கிடைச்சது. (என்ன.. நீங்களும் சாய்ராம் போல பின்னூட்டம் மட்டும் படிக்கத் தொடங்கிட்டீங்கள்?)

    பதிலளிநீக்கு
  20. பதிவும் பின்னூட்டங்களும் ஆழமாய் வெகு ஆழமாய் ...

    காமம் இயல்பானது என்றான் என் நண்பனொருவன். நான் ஒன்றும் சொல்லவில்லை. எப்போதும் எது நம்முடனே இருக்கின்றதோ அவை தாமே இயல்பானவைகள். காமம் நம்மை விடாது தொடரும் நிழலா என்ன? நாம் அழைக்க அவ்வப்போது வந்து போகும் அ-அழையா விருந்தாளி தானே காமம்!

    பதிலளிநீக்கு