2013/09/28

கண்பிடுங்கி நீலன்

3


1     2


    "ப்லெசன்டா சிக்கல்கள் உருவானால் அம்மா பிள்ளைங்க மூணு பேருக்குமே ஆபத்து.. எமர்ஜென்சி சி-செக்சன் செய்யணும் வென் வி ஸ்டில் ஹெவ் எ சேன்ஸ்" என்று டாக்டர் சொன்னதும் 'விமலா பிழைத்தால் போதும்' என்ற எண்ணமே ரகுவின் மனதில் இருந்தது. "ஐயோ! எத்தனை காதலித்தேன் இவளை! இப்படி என்னை ஏமாற்றித் தவிக்கவிட்டுப் போய்விடுவாளா?" என்று உள்ளுக்குள் துடித்ததை மறைத்து விமலாவின் கைகளைப் பிடித்தபடி ஏதும் பேசாதிருந்தான். விமலா லேசாகப் புன்னகைத்து தலையசைத்தாள். "வி கெட் இட்" என்றாள்.

"ஐ'ம் ஸோ சாரி விமி" என்றான் ரகு.

"இப்ப வருந்தி என்ன பலன்? இப்படியாகும்னு தெரிஞ்சா தினம் முரட்டுத்தனமா செஞ்சிருப்போமா? போகட்டும் விடு" என்று சிரித்த விமலாவின் கண்களில் தெரிந்த நம்பிக்கையில் அவனுக்கு மன்னிப்பு கிடைத்தாற் போலிருந்தது. எத்தனை சலுகைகளை வாழ்க்கை தகுதியற்ற ஆண்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது!

"குட்.. வி ஹெவ் டு செக் அனஸ்திசியா ரிஸ்க்ஸ்.. மொதல்ல விமலாவை டெஸ்ட் செஞ்சுருவோம்.." என்ற டாக்டர், இன்னும் பிரமை பிடித்திருந்த ரகுவைத் தோளில் தட்டினார். "வேகப் மாசோ மேன்! உங்க பெண்டாட்டி எத்தனை தைரியமா இருக்காங்க.. வாட்ஸ் வித் யூ? ட்ரையிங் டு ப்ரூவ் மென் ஆர் மெலோ? கமான்.. நாட் இன் திஸ் தியேடர்" என்றபடி வெளியேறியவர் திரும்பினார். "ஹேய்" என்றார். இதமாக ரகுவின் தோளை அழுத்தி, "கவலைப்படாதீங்க ரகு. ஷி வில் பி பைன். மேயோவிலிருந்து ஸ்பெசலிஸ்ட் இஸ் ஆன் ஹிஸ் வே. உங்க ஊர்க்காரர். டாக்டர் மனி இஸ்வர். ஹை ரிஸ்க் ப்ரெக்னென்சி சிகிச்சைகளில நிபுணர். உங்க விமலாவை உங்க கிட்டே பத்திரமாக ஒப்படைப்பது என் பொறுப்பு" என்றார்.

    அறுவைச் சிகிச்சை அரங்குள் சென்றதும் ஆடை மாற்றிக் கொண்டான். விமலாவைச் சுத்தமாகத் துகிலுரித்துக் கிடத்தியிருந்தார்கள். மல்லாந்து கிடந்து நிலையிலும் வயிற்றின் பருமன் புலப்பட்டது. மேலுக்கு ஒரு நீலப் போர்வை போர்த்தியிருந்தார்கள்.. ஏற்கனவே வாங்கிக் கொண்ட பத்தாயிரம் கையெழுத்துகளுக்குக் கொசுறாக இன்னும் இரண்டு கையெழுத்துக்களை ரகுவிடம் வாங்கிக்கொண்டு இதோ வருவதாகச் சொல்லிச் சென்ற நர்சுகளுக்காகக் காத்திருந்தார்கள்.

"என்னை ஏமாத்திட்டுப் போயிராதடி" என்றுத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த ரகுவையே பார்த்துக் கொண்டிருந்தாள் விமலா. 'காதலிப்பதாயிருந்தால் இந்தக் கோழையையே மீண்டும் மீண்டும் மீண்டும் காதலிக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டாள்.

"ஆர் வி ரெடி?" என்றபடி நர்சுகளுடன் உள்ளே வந்த டாக்டரைப் பார்த்துத் தலையசைத்தார்கள்.

"ரகு.. இப்ப விமலாவுக்கு அனஸ்திஸ்யா டெஸ்ட் எடுக்கப் போறோம். சிக்கலான கர்ப்பங்கிறதால பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கு.. சோதனைகள் முடியுறப்ப டாக்டர் மனியும் வந்துருவாரு.. லுக்.. இது போல சர்ஜரிகளில் உங்களை உள்ளே அனுமதிக்கத் தயக்கமா இருக்கு.. மருத்துவச் சட்டப்படி உங்களை வெளியே நிற்கச் சொல்லணும்.. ஆனா உங்க மனைவி வற்புறுத்துறாங்க.. நீங்க இங்கே இருக்கலாம்.. என்ன செய்யப்போறோம்னு சொல்லிடறேன்.. வாங்க" என்று ரகுவைப் பார்த்தபடி விமலாவின் அடிவயிற்றைச் சுட்டினார் டாக்டர்.. "வி வில் பி கட்டிங் ரைட் அபவுட் ஹியர்.. கேன் யு ஹேன்டில் த விசுவல்?"

ரகுவுக்குக் குமட்டியது. "ப்லீஸ் பி வித் மி" என்றாள் விமலா.

"ஓகே.. என் விமலாவுக்காக என்னால் எதையும் தாங்க முடியும் டாக்டர்" என்றான் ரகு.

தொடர்ந்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்தான். டாக்டர் மனியைப் பார்த்தக் குழப்பத்திலும்.. விமலாவின் தொப்புளுக்கு மேலும் கீழும் சிறிதாகக் கோடிட்டும் அங்குலங்கள் கீழிறங்கி அடிவயிற்றில் மூன்றாம் பிறையாகக் கீறியும் தோன்றிய ரத்தக் கோடுகளைப் பார்த்துப் பயந்தும்.

    தெளிந்து எழுந்த ரகு, எதிரில் தெரிந்த நர்சைப் பார்த்து அசடாகச் சிரித்தான். நர்ஸ் அவனைப் புரிந்து கொண்டு, "ஹேபன்ஸ் எவ்ரி டைம்" என்றாள். "மயக்கம், களைப்பு எல்லாம் சேர்த்து நாலு மணி நேரம் தூங்கியிருக்கீங்க" என்றாள்.

"என் மனைவி?"

"ஆல் வெல். ஷி இஸ் ரெஸ்டிங். ரெண்டு குழந்தைகளும் அழகுப் பொம்மைகள் மிஸ்டர் ரகு... வாங்க. உங்க வைடல்ஸ் செக் செஞ்சுட்டு உள்ளே கூட்டிப் போறேன்" என்ற நர்ஸ் ரகுவை அழைத்துச் சென்றாள்.

"அடடே! எல்லாத்தையும் தாங்குற முகமா? வருக வருக.." என்று சிரித்து வரவேற்ற டாக்டருக்கு நன்றி சொன்னான் ரகு. "என்னை மன்னிச்சுருங்க டாக்டர். என்னால் எவ்வளவு தொந்தரவு!"

"எங்கே அதிர்ச்சியில உங்களுக்குக் கார்டியாக் அரெஸ்ட் வந்துருச்சோனு பயந்துட்டோம்.. ஆஸ்பத்திரியிலே ஆள் கூடக் கிடையாது.. ம்ம்ம்.. ஹேப்பி டு ஸீ யு அகெய்ன்" என்று ரகுவின் கைகளைக் குலுக்கி மெள்ளத் தோளணைத்த டாக்டர், "குழந்தைகளைப் பாக்கறீங்களா, இல்லை மனைவியையா? யார் முதலில்?" என்றார்.

"விமலா தான் டாக்டர். ஷி இஸ் ஆல் அன்ட் எவ்ரிதிங் டு மி"

"ஹ்ம்ம்ம்.. இதைக் கேட்கும் நிலையில் அவங்க இல்லைனு தெரிஞ்சு சொல்றீங்களா?" என்ற டாக்டர் மறுபடி சிரித்தார். "விமலா இஸ் ரெஸ்டிங். எழ இன்னும் ரெண்டு மூணு மணி நேரமாவது ஆகும். எழுந்ததும் குழந்தைகளைப் பத்திக் கேட்டா நீங்க பதில் சொல்ல வேணாம்? அதனால் லெட்ஸ் ப்ரேக் யுர் ரிசால்வ். முதல்ல குழந்தைகளைப் பார்ப்போம், என்ன சொல்றீங்க?"

    இருவரும் நடந்தார்கள். இரண்டு காரிடார்கள் தாண்டி, அமைதியாக இருந்த பெரிய ஹாலுக்குள் நுழைந்தார்கள். உள்ளே வேலி போல் நான்கு புறமும் கண்ணாடித் தடுப்புச் சுவர் கொண்ட அறை. அறைக்குள் பார்வையாளர் வசதிக்காகச் சுவரோரமாக வரிசையாக அமைக்கப்பட்டிருந்த சிறு கண்ணாடிப் பெட்டிகள். பெட்டிகளுள் சிறு மரப்பாச்சிகளாக சிசுக்கள். ."அதோ!" என்றார் டாக்டர் எதிரே சுட்டி. "கங்கிராசுலேசன்ஸ் ரகு! தேர் தெ ஆர்! உங்க ரெண்டு குழந்தைகளும் ஆர் ட்ரேக்கிங் வெல்.."

ரகு கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தான். எதிரே சுவருக்கு அந்தப்புறம் இரண்டு கண்ணாடிப் பெட்டிகள். ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குழந்தை. ஆண் குழந்தை சற்றுப் பருத்தும் பெண் சற்றுச் சூம்பியும் இருந்தார்கள். பென்சிலால் வரைந்தாற்போல் இருந்தார்கள். குழந்தைகளின் வலது காலிலிருந்து ஐவி பம்புக்கு ஒரு குழாய். இடது காலிலிருந்து ஆக்சிஜன் மானிடருக்கு ஒரு குழாய். தொப்புளிலிருந்து ஆர்டரி மானிடருக்கு வந்தக் குழாய், நடுவில் இரண்டாகப் பிரிந்து ஐவி பம்பிலும் ஈசிஜி மானிடரிலும் இணைக்கப்பட்டிருந்தது. வாய்க்குள் உணவுக் குழாய் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. மூக்குத் துவாரங்களிலும் வாயிலும் வென்டிலேடர் குழாய்கள். மார்பிலிருந்து இரண்டு குழாய்கள் ஈசிஜி மானிடருக்குள் சென்றன. காதருகே இருந்த ஒரு குழாய், மேலே டெம்பரேசர் மானிடரில் செருகப்பட்டிருந்தது. கண்களைச் சுற்றிக் கறுப்புத் துணி போல் மிக மென்மையான கண்ணாடி. இது போதாதென்று இரண்டு குழந்தைகளின் மீதும் கண்ணாடிக் கூரையின் பிலி விளக்குகள் நீல ஒளியைப் பாய்ச்சின. எதையும் பொருட்படுத்தாமல் பரிதாபமாகப் படுத்துக் கிடந்த குழந்தைகளின் கண்கள் மூடியிருந்தன.

சற்று அச்சமூட்டுவதாகவும் அருவருப்பாகவும் தோன்றும் பச்சைக் குழந்தைகளை, பெற்றவர்களால் மட்டும் அழகுப் பதுமைகளாக எப்படிப் பார்க்க முடிகிறது? இதில் எதுவுமே தங்கள் விருப்பமோ தவறோ அல்ல என்று அந்தப் பச்சைக் குழந்தைகள் சொல்வது போல் தோன்றுவதாலா? அவர்களுடைய அந்தக் கணத்தின் நிராதரவும் நாதியற்ற நிலையும், காணும் மனிதர்களின் கருணைச் சுரப்பிகளைத் தட்டுவதாலா? ஏற்று அருள்பாலிப்பதாய் நாடகமாட வசதியாக தெய்வீக ஆணவத்தை உருவாக்குவதாலா? அல்லது, எதற்கும் உதவாத தனக்குக் கூட இப்படி ஒரு பொறுப்புள்ள அந்தஸ்து கிடைக்கிறதே என்றக் கேவலமான கழிவிரக்கம் காரணமா?

ரகுவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. "ப்யூடிபுல்" என்றான். "டாக்டர்.. இத்தனை அழகை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் சில நேரம் கடவுள் நம்பிக்கை வந்து விடுகிறது" என்றான். "தேங்க் யூ டாக்டர்"

"ஹாஹா!. டோன்ட்! இது நீங்களும் விமலாவும் எழுதின கவிதைகள். தேவையில்லாமல் யாருக்கும் க்ரெடிட் குடுக்காதீங்க"

"தேங்க்ஸ்" என்றான் ரகு. தயங்கினான். "டாக்டர்.. பிள்ளையோட வலது கண்ணுக்குக் கீழே ஏதோ கறுப்பா.."

"அது ஒண்ணுமில்லே.. சின்ன காயம்னு நினைக்கிறேன்.. தேமல் அல்லது மச்சமா இருக்கலாம். அப்படி ஏதாவது ப்லெமிஷா இருந்தா பின்னால நிறைய ஆப்ஷன் இருக்கு". டாக்டர் தயங்கிப் புன்னகைத்தார். "டிஸ்டென்ட் தியரி ஒண்ணு கேக்கறீங்களா? பையன் கைகள், பெண் கழுத்தை நெறிக்குறாப்புல இருக்குதுனு சொன்னேன் இல்லையா? ஹ..ஹ.. க்ரேஸி.. பெண் பதிலுக்கு பிள்ளையோட கண்ணைக் கீறப் பாத்திருக்கலாம்..பெண்ணோட கழுத்துலயும் இப்படி ஒரு காயம் இருக்கு.. இங்கிருந்து பார்த்தா தெரியலே உங்களுக்கு.. பட் இட் இஸ் தேர்.. யு ஷூட் னோ..ம்ம்ம்.. சிப்லிங் ரைவல்ரி.. கருப்பைக்குள் சண்டை..."

"புரியலியே டாக்டர்?"

"எது.. கருப்பைக்குள் சண்டையா? ஜஸ்ட் கிடிங் ரகு. நான் சொல்லலே. இந்த சிசுச் சண்டை தியரி.. அது டாக்டர் மனியோட தியரி. ஹி இஸ் அவுட் தேர் அட் டைம்ஸ்.."

"டாக்டர் மனி.." ரகுவுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. மீண்டும் மனதுள் அதிர்ந்து குழம்பினான்.

"அவர் தான். இன்னும் கொஞ்சம் தாமதிச்சிருந்தா உங்க பையன் கண்ணுக்கு ஆபத்து வந்திருக்கும்னு சொல்றாரு.. ஐ டோன்ட் திங் ஸோ" என்ற டாக்டர், கைக்கடிகாரத்தைப் பார்த்தார். "ஓகே.. பேக் டு எர்த்.. குழந்தைகள் ரெண்டு பேரும் எங்க கண்காணிப்புல இன்னும் பனிரெண்டு வாரங்களாவது இருக்கணும். அதிலும் பெண் குழந்தை மே நீட் மோர் கேர். உங்க மனைவியும் இங்கயே ஒரு மாசம் இருக்கட்டும். க்ரிடிகல் ரெகவரிக்காக இதை சிபாரிசு செய்யுறேன். இன்சூரன்ஸ் கவரேஜ் எத்தனை தெரியாது, விசாரிக்கறோம், மிச்சதுக்கு நீங்க பொறுப்பு. சர்ஜரி சார்ஜ், அப்புறம் டாக்டர் மனியோட செலவு எல்லாம்.." என்றபடி ரகுவை அழைத்துக்கொண்டு தன் அலுவலகத்துக்கு நடக்கத் தொடங்கினார்.

"டாக்டர் மனி.. இப்போ எங்கே?"

"அவரு எப்பவோ கெளம்பிப் போயாச்சு ரகு. யு னோ, ஹி கம்ஸ் வித் எ ப்ரீமியம். உங்க மனைவியின் க்ரிடிகல் நிலையினால அவரை வரவழைச்சேன். அவரோட சம்பளம் மூணு மணி நேரத்துக்கு இருபதாயிரம் டாலர். ப்ரைவெட் ப்ளேன் சார்ஜ் ஏழாயிரம். ப்ரேக்டிஸ் அலவன்ஸ் ரெண்டாயிரம். எல்லாம் போதாதுனு அவருக்கு விருப்பமான அறக்கட்டளைக்கு ஐநூறு டாலர். இதுல இன்சூரன்சு அஞ்சாயிரமோ ஆறாயிரமோ தான் தரும். மிச்சம் உங்க பொறுப்பு.. எல்லாம் ஆபீஸ்ல ஸ்டேட்மென்ட் குடுப்பாங்க.."

"அதில்லே டாக்டர்.. அவரு.. டாக்டர் மனி... ஹிஸ் லுக்ஸ்.. அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.."

"டிவி, ந்யூஸ் போட்டோக்கள்ல பார்த்திருப்பீங்க.. நானே இன்னிக்குத்தான் நேரில முதல் தடவையா சந்திச்சேன்.. நேரில் ஹி டஸ் நாட் லுக் ஏஸ் யங்க்.. பாக்குறதுக்கு அப்படின்னாலும், அவர் விரல் வித்தையில் எத்தனை நளினம்!" என்றபடி டாக்டர் தன் அலுவலகக் கதவைத் திறந்தார். "ஓகே ரகு.. நான் கிளம்பணும்.. அட்மின்ல மிச்சத்தை கவனிச்சுக்குவாங்க. ஒரு மணி பொறுத்து நீங்க உங்க மனைவியைப் பார்க்கலாம்" என்று ரகுவை எதிரே இருந்த சோபாவில் உட்காரச் சொல்லி நர்சை அழைத்தார். "ப்லீஸ் ஸிட் ரகு"

'மனி இல்லே, ஹி இஸ் முனி' என்று தனக்குள் சொல்லியவாறு உட்கார்ந்தான் ரகு.

"டாக்டர் முனிஸ்வரன்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவரை நினைவில் நிறுத்தினான். அவருடைய உடல் நாற்பது வயதின் இறுக்கத்தில் இருந்தாலும் முகம் அறுபதின் சுருக்கங்களில் தவித்தது. "உங்க பெண்ணைக் காப்பாத்துறது என் பொறுப்பு" என்றவரை வியப்புடன் ஏறிட்டதும் சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறி, "வி வில் டே கேர்.." என்று பொதுவாகச் சொல்லிப் பிற டாக்டர் நர்சுகளுடன் கலந்து கொண்ட அவசரத்தை உணரும் பொழுதே ரத்தம் பார்த்து மயங்கி விழுந்தது நினைவுக்கு வந்தது. அவரைச் சந்திக்க வேண்டும். "டாக்டர் முனியின் கான்டேக்ட் தரீங்களா?" என்றான் உரக்க.

"இந்தாங்க.." என்ற டாக்டர், அவனிடம் ஒரு பிஸினஸ் கார்டைத் தந்தார். கதவைத் திறந்து நுழைந்த அட்மின் பெண்ணையும் நர்சையும் வரவேற்றார். "ரகு.. நான் கிளம்பணும்.. இவங்க கவனிச்சுக்குவாங்க"

"ஐயம் ஸோ சாரி டாக்டர்.. உங்க பெயரைக் கூட நான் சரியா கேட்டுத் தெரிஞ்சுக்காம.. ப்லீஸ் லெட் மி தேங்க் யு ப்ராபர்லி"

"இன் டைம் ரகு, இன் டைம். என் பெயர் லீலா சிம்ஸ்கோ. கால் மி லீலா.. மை குட்னஸ்! உன் குடும்பத்துல ஒருத்தர் மாதிரி பீல் பண்ணுறேன். வரட்டுமா? ஐ'ம் டைர்ட்" என்று வெளியேறினார்.

அட்மின் சிப்பந்தியுடன் ரகுவும் கீழ்த்தளத்துக்கு வந்தான். ஆஸ்பத்திரி அலுவலகத்தில் மேலும் சில படிவங்களில் கையெழுத்துக்களும், வரிசையாகக் க்ரெடிட் கார்ட் விவரங்களும் தந்தான். விமலாவை ஒரு கிங் பெட்ரூம் சிறப்பறைக்கு மாற்றச் சொன்னான். அறை வாடகையும் சேவைத் துணையும் தன் கணக்கில் சேர்க்கச் சொன்னான். மறுபடி க்ரெடிட் கார்ட். மறுபடி கையெழுத்து. தினம் பிள்ளைகளை வந்து பார்ப்பதற்கான நேரங்களைக் குறித்துக் கொண்டான். ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அனைவருக்கும் பிட்சா சாக்லெட் கேக் வரவழைத்தான். எல்லோருக்கும் நன்றி சொல்லி மறுபடி மேலேறி விமலாவின் அறைக்குள் நுழைந்தான்.

அரை மணி பொறுத்து எழுந்த விமலாவிடம் மெள்ள அத்தனை விவரங்களையும் சொல்லி அவள் தலைக்குக் தோள் கொடுத்து அணைத்துக் கொண்டான். இரண்டு மணி நேரம் அவளுக்கு ஆதரவாக இருந்தான். வீட்டுக்குப் போய் மறு நாள் காலை திரும்புவதாகச் சொல்லிக் கிளம்பினான்.

இந்தியாவுக்குத் தொலைபேசி அக்காவிடம் விவரம் சொல்ல வேண்டும். அக்காவுடன் பேசி ஒரு வருடமாவது ஆகியிருக்கும். அழுவாள். சந்தோஷப்படுவாள். பெய்ஜிங்கிலிருக்கும் விமலாவின் அண்ணனுக்குச் செய்தி அனுப்ப வேண்டும். விமலாவின் ஆபீசுக்கும் தன்னுடைய ஏஜன்டுக்கும் சொல்ல வேண்டும். இனி தினம் விமலாவைக் கவனிக்க வேண்டும். பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை மாதங்களுக்குத் தன்னால் வேலை செய்யாதிருக்க நேரிடும் என்று மனக்கணக்குப் போட்டான். வீட்டு வேலை உதவிக்கு ஆள் தேடவேண்டும். ஏதோ சிந்தனைகளில் படியிறங்கி வந்தவன் கடைசிப் படியில் சிலையாக நின்றான். முதல் நாள் பார்த்த வீல் சேர் முதியவர்! தலை குனிந்து இருந்தாலும் தன்னைக் கவனிப்பது போல் உணர்ந்தான். சட்டென எதிரே ஸ்டார்பக்சிலும் சுற்றிலும் நோட்டமிட்டான். வேலையாட்களைக் காணோம்.

அமைதியாக முதியவரைக் கடந்து போக முயற்சித்தவனை அவர் குரல் தடுத்தது. "பையன் போயிடுவான்".

"வாட்?". நின்று முதியவரை எதிர்கொண்டான். "யார் நீங்க?" என்று அவர் முகத்தை உயர்த்திப் பார்த்தவன், உறைந்தான். "டாக்டர் முனி! நீங்களா?"

முதியவர் பேசவில்லை. ரகுவுக்கு ஆத்திரம். "ஹூ ஆர் யூ? ஹூ ஆர் யூ?" என்று அவரை உலுக்கினான். அதற்குள் சிப்பந்திகள் வந்து அவனைத் தடுத்தார்கள். "ஸ்டாப் இட். ஒரு வயதான நோயாளியை நீங்க துன்புறுத்துறீங்க.." என்று ரகுவைக் கீழே தள்ளினர். செக்யூரிடி வந்ததும் விவரம் சொல்ல விரும்பாமல் மன்னிப்பு கேட்டு வெளியே வந்தான்.

    மறுநாள் மினியெபொலிசுக்குப் பறந்தான் ரகு. மேயோவில் விசாரித்து டாக்டர் முனிஸ்வரனின் அலுவலகத்துக்கு விரைந்தான். ஐந்து நிமிட அனுமதி வாங்கி உள்ளே நுழைந்ததும், தன்னை வரவேற்றவரைப் பார்த்து அதிர்ந்தான். "யு லுக்.. யு லுக்.. யங்.." தடுமாறினான்."..யங்"

சிரித்தார் முனிஸ்வரன். "தேங்க்யு. குட் டு ஸீ யு டூ.. எல்லாம் சரிதானே? அதற்குள் என்னைப் பார்க்க வந்துட்டீங்களே?"

"ஐ மீன்.. யு லுக் டிபரன்ட்.. நேத்து பார்த்தப்ப முகமெல்லாம் சுருங்கி.. வயதான தோற்றம்.."

"நோ.. இப்ப இப்படித்தான் இருக்கேன்.. இன்னும் வயசானா அதெல்லாம் தானா வந்துரும்.. ஆர் யு ஆல்ரைட்?"

ரகு சுதாரித்தான். "என்னை மன்னிச்சுருங்க. ஐ'ம் நாட் ஆல்ரைட் ஐ கெஸ்". முதல் நாள் நடந்த விவரங்களைச் சொன்னான். "உங்க பொண்ணைக் காப்பாத்துறது என் பொறுப்புனு தெளிவா எங்கிட்டே வந்து தமிழ்லே சொன்னீங்க..அப்புறம் பொதுவா ஆங்கிலத்துல பேசினீங்க.."

"எனக்கு தமிழ் தெரியவே தெரியாது ரகு. என் பெற்றோர்கள் அகதிகளாகக் கொழும்பிலிருந்து கேனடா வந்து சந்தித்து திருமணமானவர்கள். எனக்கு ஆங்கிலம் தவிர எந்த மொழியும் தெரியாது. எனக்கு கேனடா அமெரிக்கா தவிர வேறு எந்த இடமும் தெரியாது.. குழம்பிப் போயிருக்கீங்க.. ரெஸ்ட் எடுக்கறீங்களா? காபி குடிக்கறீங்களா?"

"பொண்ணைக் காப்பாத்துறேன்னு சொன்னது? இரட்டைப் பிள்ளைங்களைப் பத்தி டாக்டர் லீலா உங்க கிட்டே சொல்லியிருந்தும்.."

"அதான் சொல்றேனே ரகு? நான் தமிழ் பேச வாய்ப்பே கிடையாது.. உங்களைச் சந்திக்க ஆர்வம் காட்டினதுக்குக் காரணம் உங்க அனுமதியோட இந்த சர்ஜரி பத்தி ஜர்னல்ல எழுதலாம் என்கிற சுயவிளம்பர எண்ணத்தோடே தான்.. இல்லையின்னா பொதுவா நான் என்னை அறிமுகம் கூட செய்துக்கறது கிடையாது.."

"என்னை மன்னிச்சுருங்க டாக்டர் முனி" என்று விடைபெற்றான். மிகக் குழம்பியிருந்தான்.

    மறுநாள் விமலாவையும் பிள்ளைகளையும் பார்க்கப் போயிருந்தபோது டாக்டர் லீலாவைச் சந்தித்து விவரம் சொன்னான். "பாக்குறதுக்கு நாப்பது வயசு கூட சொல்ல முடியாது டாக்டர்.. அப்படி இருக்காரு. அதுவும் தமிழே தெரியாதுனு சொல்றாரு டாக்டர்.."

"வெல்.. மே பி அன்னிக்கு பயணத்துனால கொஞ்சம் ப்ரேஸ்ல்டா இருந்திருக்கலாம்.. ஆனா யாரோ வயசான பேஷன்ட் போல முக ஜாடை.. ஐ டோன்ட் திங்க் ஸோ. நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கீங்க. இதெல்லாம் பெரிசு படுத்தாதீங்க.. ஐ'ம் சர்ப்ரைஸ்ட் உங்க மாதிரி இன்டலெக்ட்.."

வீல் சேர் முதியவர் பற்றிச் சொன்னான் ரகு. "டாக்டர்.. அன்னிக்கு நைட் எல்லாம் முடிஞ்சு கிளம்புறப்ப நான் அவரை.."

"ஓகே.. லெட்ஸ் செக் இட் அவுட்" என்ற டாக்டர் லீலா, அட்மின் ஆபீசுக்கு செய்தியனுப்பினார். சில நிமிடங்களில் வந்த சிப்பந்தியுடன் இருவரும் கீழே போனார்கள். சர்ஜரி நடந்த அன்று இரவு ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை முதியவர் விவரங்களையும் பார்த்த டாக்டர் லீலா, "ரகு.. என்னால் எல்லா விவரங்களையும் உங்க கிட்டே பகிர முடியாது. ஆனால் நீங்க சொல்ற அடையாளப்படி இருபது பேராவது இருப்பாங்க போலிருக்கு. வீல் சேர்ன்றதால ஸ்டார்பக்சுக்குப் பின்னால இருக்குற முதியவர் ஓய்வில்லத்துல பார்க்கலாம். அங்கே அன்னிக்கு நாலே பேர் தான் இருந்திருக்காங்க. அதுல மூணு பேர் பெண்கள்"

"நாலாமவர்?"

"அவரைப் பார்க்க முடியாது. அவர் இறந்து.." என்ற டாக்டர் சற்று சுதாரித்து, "கொஞ்சம் இருங்க ரகு. திஸ் மேன்.. இவர் சர்ஜரி நடந்த அன்னைக்கு இறந்திருக்காரு. குட்னெஸ்.." என்றார்.

"என்ன டாக்டர்?"

"கொஞ்சம் இருங்க ரகு" என்று எதிரே கணினியில் எதையோ பார்த்துத் திரும்பினார். "ரகு.. இதை எப்படிச் சொல்றதுனு தெரியலே.. வெரி பிஸார். இந்த முதியவர் இறந்த நேரம் மதியம் 3:37. உங்க பெண் பிறந்தது 3:36"

"வாட்?"

"இதோ இருக்கு பாருங்க டீடெய்ல்ஸ்.. இருந்தாலும் இவரை நீங்க எப்படி இரவு பத்து மணி போல பார்த்திருக்க முடியும்?

"பார்த்தேன் டாக்டர்" என்றான் ரகு. "பையன் போயிடுவான்னு அவர் சொன்னதும் ஏற்பட்ட கடுப்புலே அவரை உலுக்கினேன். ரெண்டு சிப்பந்திகள் ஓடிவந்து என்னை விலக்கிக் கீழே தள்ளினாங்க. செக்யூரிடில ரிபோர்ட் கூட செஞ்சேன். லெட்ஸ் செக் இட் அவுட்"

"ஓகே.. ரிலேக்ஸ் ரகு" என்ற லீலா, எக்சக்யுடிவ் செக்யூரிடி தலைவரை அழைத்தார்.

"சார் நீங்களா?" என்று மறுபடி அறிமுகம் செய்து கொண்டார் செக்யூரிடி தலைவர். "ரூம்வாச் உபயோகிக்கிறீங்களா? மனைவி நலமா?"

லீலா குறுக்கிட்டு விவரங்களைச் சொன்னார். "ரகு.. நீங்க வேணும்னா இவருடன் போய் விவரங்களை செக் பண்ணிட்டு வாங்க"

"தேவையில்லை டாக்டர்" என்றார் செக்யூரிடி தலை. "அன்னிக்கு ராத்திரி இவர் ஒரு பேஷன்டை உலுக்கினது நிஜம். முதிய பெண் பேஷன்டைப் பிடித்து ஹெரேஸ் செய்ததாக புகார் கூட கொடுத்திருக்காங்க. மன்னிப்பு கேட்டு இவரு வெளியேறினாரு.. ஐம் ஸாரி மிஸ்டர் ரகு. நீங்க நிறைய ஓய்வெடுக்கணும்"

"பெண் பேஷ்ன்டா? நோ.. ஹி வாஸ் தி ஓல்ட் மேன். என் கண்ணால பார்த்தேன்"

"சார்.. இந்த விங்லே இருந்த ஒரே முதிய ஆண் இறந்துட்டாரு.."

"அவங்க உறவினர் யாராவது..?" என்றார் லீலா.

"நோ டாக்டர்.. லைப் டைம் கேர் பணத்தைக் கட்டிச் சேர்ந்தவர். உறவு யாருமில்லாததால அவர் எழுதிக் கொடுத்தபடியே பிணத்தை எரிச்சுட்டோம். எரிச்சது சரியா ஏழு மணிக்கு. அதனால பத்து மணிக்குப் பார்த்ததா சொல்றதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை. மேக்ஸ் நோ சென்ஸ்.. சாரி மிஸ்டர் ரகு". செக்யூரிடி தலை கிளம்பினார்.

"வாங்க ரகு.. நானும் விமலாவைப் பார்க்கணும்" என்று ரகுவை முடுக்கினார் லீலா. அமைதியாகப் படியேறி நடந்தார்கள். லீலா திடீரென்று, "யு னோ ரகு.. சிப்லிங் சண்டை பத்தி டாக்டர் மனி சொன்னதுல அமானுஷ்யம் எதுவும் இல்லை.. கருவுக்குள்ளே இருக்கும் சிசுக்களின் நிலை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.. டூ தே திங்க்? சிசுக்களுக்கும் தற்காப்பு உணர்வு சாத்தியம்.. வி டோன்ட் னோ" என்றார்.

"ஐ'ம் டைர்ட்" என்றான் ரகு.

"ஹேவ் எ லைட் ட்ரிங்க். இட் வில் பி ஆல்ரைட். ரகு, உங்களுக்கு வீட்டுல ஹெல்ப் இருக்கா? என் தங்கை நேனிஹெல்ப்.காம் நடத்துறா. உங்க சார்புல அவ கிட்டே சொல்லியிருக்கேன். இரண்டு மூணு பேரை அனுப்புறதா சொல்லியிருக்கா. உங்களுக்குப் பிடிச்சா வேலைக்கு வச்சுக்குங்க. உங்களுக்கும் வசதி, என் தங்கைக்கும் கஸ்டமர் கிடைச்சாப்புல.. இந்தாங்க அவ பிஸினெஸ் கார்ட்" என்று ஒரு அட்டையைக் கொடுத்தார். விமலாவின் அறை முன் நின்றார்கள்.

"நன்றி டாக்டர். உதவிக்கு ஆள் நிச்சயம் தேவை. மூணு பேரையும் வேலைக்கு எடுத்துக்குறேன். நாளைக்கே வரசொல்லிடறேன்" என்று புன்னகைத்தான் ரகு.

தயாராக இருந்த விமலாவை மேலோட்டமாகப் பரிசோதித்துவிட்டு அகன்றார் லீலா.

"பிள்ளைகளைப் பார்க்கப் போலாமா விம்?" என்றான் ரகு. சாய்வுப் படுக்கை சக்கர நாற்காலியில் அமர உதவி செய்தான். மெள்ளத் தள்ளியபடி இங்குபேஷன் விங் வந்தார்கள். கதவுகளைத் திறந்து கண்ணாடிச் சுவரறையைச் சுற்றித் தங்கள் பிள்ளைகளின் கூண்டருகே வந்தார்கள்.

பெண் குழந்தை ரதி கண்ணாடிப் பெட்டிக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்தப் பெட்டியில் இருந்த ஆண் குழந்தை நீல், கை கால் உடலெங்கும் குழாய்கள் புடைக்க இரு கைகளையும் பெட்டியின் மூடி மேல் வைத்தபடி நின்று கொண்டிருந்தான். சகோதரி ரதியைக் கண்கள் தெறிக்க வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

(தொடரும்)

21 கருத்துகள்:

  1. ஆண் குழந்தை நீல், கை கால் உடலெங்கும் குழாய்கள் புடைக்க இரு கைகளையும் பெட்டியின் மூடி மேல் வைத்தபடி நின்று கொண்டிருந்தான். சகோதரி ரதியைக் கண்கள் தெறிக்க வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    பிறந்த குழந்தை நின்று கொண்டிருப்பது திகிலான அமானுஷ்யம் ..!

    பதிலளிநீக்கு
  2. கடைசி பாரா.... படு பயங்கரம்....

    அடுத்த பகுதிக்கான ஆவல் அதிகரிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. திகில்...
    பயங்கரம்...
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. //தேவையில்லாமல் யாருக்கும் க்ரெடிட் குடுக்காதீங்க" //

    இந்த இடுக்கிலுமா?..

    அப்புறம், அந்த---

    3:37-ம் 3:36-ம் இடமாறியிருக்கலாமோ? இடம் மாறியிருந்தால் ஒரு அழுத்தமான யூகிப்புக்கு இடமிருக்கு.

    விவரணையான விவரிப்புகள். இந்திய ஆஸ்பத்திரி அனுபவமுள்ளவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்.

    'இரு கைகளையும் பெட்டியின் மூடி மேல் வைத்தபடி நின்று கொண்டிருந்தான்' என்று ஏற்கனவே தீர்மானித்திருந்த கடைசி வரியை நோக்கி முன்னேறும் அவசரம் மனசில் அப்பப்போ படிந்தாலும் கொஞ்சம் கூட அசராமல் நிதானமான விவரிப்புகளு டன் தேர்ந்த படப்பிடிப்பு எழுத்து.

    பிரமாதம், அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  5. யம்மாடி...! இப்படியா பயமுறுத்துறது...?

    பதிலளிநீக்கு
  6. பெண் குழந்தை ரதி கண்ணாடிப் பெட்டிக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்தப் பெட்டியில் இருந்த ஆண் குழந்தை நீல், கை கால் உடலெங்கும் குழாய்கள் புடைக்க இரு கைகளையும் பெட்டியின் மூடி மேல் வைத்தபடி நின்று கொண்டிருந்தான். சகோதரி ரதியைக் கண்கள் தெறிக்க வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.//
    அமானுஷ்ய கதை என்று நீங்கள் முன்பே கூறி இருந்தாலும், பிறந்த குழந்தை நின்று கொண்டு சகோதரி ரதியை வெறித்து பார்ப்பது பயத்தை வரவழைக்கிறது.



    பதிலளிநீக்கு
  7. செம்ம த்ரில்லிங்கா போகுது சார்.. நான் இன்னும் முதல் இரண்டு பாகங்கள் படிக்கல.. அதுவும் படிச்சுட்டு வர்றேன்..

    பதிலளிநீக்கு
  8. //"குழந்தைகளைப் பாக்கறீங்களா, இல்லை மனைவியையா? யார் முதலில்?" என்றார்.

    "விமலா தான் டாக்டர். ஷி இஸ் ஆல் அன்ட் எவ்ரிதிங் டு மி"//

    ரொம்ப டச்சிங்கா இருந்தது..

    பதிலளிநீக்கு
  9. //எத்தனை சலுகைகளை வாழ்க்கை தகுதியற்ற ஆண்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது!//

    //யாருக்கும் தேவையில்லாமல் கிரெடிட் கொடுக்காதீங்க//

    திகில் கதை எழுதும்போதும் உங்களது தியரிகளை எழுத நீங்கள் மறப்பதே இல்லை!

    பதிலளிநீக்கு
  10. I am waiting for the next part. Please do not delay much. Though I am going through it part by part, I would like to read the entire story in one go so that I can enjoy the same. Really THRILLLLLLING.

    பதிலளிநீக்கு
  11. சற்று அச்சமூட்டுவதாகவும் அருவருப்பாகவும் தோன்றும் பச்சைக் குழந்தைகளை, பெற்றவர்களால் மட்டும் அழகுப் பதுமைகளாக எப்படிப் பார்க்க முடிகிறது? இதில் எதுவுமே தங்கள் விருப்பமோ தவறோ அல்ல என்று அந்தப் பச்சைக் குழந்தைகள் சொல்வது போல் தோன்றுவதாலா? அவர்களுடைய அந்தக் கணத்தின் நிராதரவும் நாதியற்ற நிலையும், காணும் மனிதர்களின் கருணைச் சுரப்பிகளைத் தட்டுவதாலா? ஏற்று அருள்பாலிப்பதாய் நாடகமாட வசதியாக தெய்வீக ஆணவத்தை உருவாக்குவதாலா? அல்லது, எதற்கும் உதவாத தனக்குக் கூட இப்படி ஒரு பொறுப்புள்ள அந்தஸ்து கிடைக்கிறதே என்றக் கேவலமான கழிவிரக்கம் காரணமா?//

    ஹாஹா, குழந்தைகள் தெய்வீகச் சிற்பங்கள். கடவுளை நேரில் காணமுடியாதவர்களுக்குக் கடவுளாகக் காட்சி தரும் அழகுப் பதுமைகள். ஹிஹிஹி, அப்பாதுரையோட பதிவுன்னா இப்படித் தான் பதிலெழுத வருது!

    ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். இதில் எதுவுமே தங்கள் விருப்பமோ, தவறோ அல்ல என்று அந்தக் குழந்தைகள் சொல்வது உண்மை தான் என நமக்கும் தெரியும். அங்கே தான் கண்ணுக்குப் புலனாகாத சக்தி இயக்குகிறது. பிறந்த குழந்தைகளின் அழுகையைப் பார்த்தால் இப்படித்தான் நிராதரவான நிலை என்பதை நினைத்து மனம் வருந்தத் தான் செய்யும், பார்த்தாலே பாவமா இருக்கும். சிலருக்குச் சாப்பாடு போடுகையிலும் எனக்கு இப்படி ஒரு உணர்வு தோணும். எதற்கும் உதவாதவன் ரகு மட்டுமா? நானும் தான்! :))))


    //3:37-ம் 3:36//
    இங்கே ஒரு நிமிட நேர வித்தியாசம் முன்,பின்னாக இருப்பது நெருடலா இருக்கு.

    //பெண் குழந்தை ரதி கண்ணாடிப் பெட்டிக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்தப் பெட்டியில் இருந்த ஆண் குழந்தை நீல், கை கால் உடலெங்கும் குழாய்கள் புடைக்க இரு கைகளையும் பெட்டியின் மூடி மேல் வைத்தபடி நின்று கொண்டிருந்தான். சகோதரி ரதியைக் கண்கள் தெறிக்க வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.//

    தூக்கிவாரிப் போட்டது. திகைப்பூண்டை மிதித்தான் என்பதெல்லாம் ஒண்ணுமே இல்லை. திகைப்பின் உச்சத்துக்கே போயிட்டேன்.

    இதான் அப்பாதுரையோட டச். இயல்பாக அமாநுஷ்யத்தை இப்படி எவராலும் பகிர முடியாது. அடுத்ததுக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  12. சீக்கிரம்... அடுத்த பகுதிக்காக வெய்டிங்....

    பதிலளிநீக்கு
  13. சீக்கிரம்... அடுத்த பகுதிக்காக வெய்டிங்....///

    நான் அடுத்த பிரசவத்துக்காக வெய்டிங்

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  14. போகிற போக்கில் உங்கள் கருத்துக்களை தூவிப் போகும் நீங்கள் இந்த அமானுஷ்ய விவகாரங்களில் நம்பிக்கை வைக்கிறீர்களா,? கதை கன ஜோர்.

    பதிலளிநீக்கு
  15. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    3:36, 3:37.. நுணுக்கமான வாசிப்புக்கும். அந்தப் பக்கம் பார்த்தா திகில். வரும்.

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப யோசிச்சு இந்தச் சுட்டியைத் தரேன், உங்க அளவுக்கு எல்லாம் அமாநுஷ்யத்தைக் காட்டலை; ஆனாலும் இப்படி ஒரு அமாநுஷ்யக் குழந்தை பற்றிப் பல ஆண்டுகள் முன்னர் (கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்) நான் படித்த ஒரு ஆங்கிலக் கதையைக் கொஞ்சம் என் போக்கில் சொல்ல முயன்றேன்.
    http://geethasmbsvm6.blogspot.in/2009/06/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  17. அட்டகாசமான கதை. ரோல்ட் டால், எட்கர் அலன் போ, லவ்க்ராப்ட் போன்றவர்களின் எழுத்தை நினைவுபடுத்தியது. (இந்த சுட்டியைத் தர யோசிக்கலாமா?) ரொம்ப நன்றி கீதாம்மா.

    பதிலளிநீக்கு
  18. அந்தக் கதையில் வரும் பிள்ளையின் அப்பாவுக்கும் இந்தக் கதையின் ரகுவுக்கும் இடையே இருக்கும் சில ஒற்றுமைகள் சில்லிட வைக்கிறது.
    சுட்டிக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. இத்தனை சீக்கிரம் கதையைப் படித்துக் கருத்தும் சொன்னதுக்கு நன்றி அப்பாதுரை.

    முதல்காரணம், உங்க கதையின் போக்குக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பது.

    அடுத்தது அவ்வளவா எல்லாம் எனக்கு ரசிக்கும்படி எழுத வராது என்பதே!

    கொஞ்சம் தயக்கம் சொல்வதற்கு. இதையே இன்னும் ரசிக்கும்படி எழுதி இருக்கலாம். ஆனால் மனதில் அந்தச் சமயம் தோன்றும் எண்ணங்களையே பதிவு செய்துவிடுகிறேன். :)))) திருப்பிப்பார்ப்பது, திருத்துவது, மாற்றி எழுதுவது என்பதே வரதில்லை. :))))))

    பதிலளிநீக்கு
  20. பயம் பயங்கரம்.
    எப்படி துரை இப்படியெல்லாம் சிந்தனை போகிறது. திகில் தொடரட்டும் சீக்கிரம்.

    பதிலளிநீக்கு
  21. நேற்று தான் படித்தேன், அப்பா பின்னிப் பெடலெடுத்து இருக்கீங்க.... ரெண்டு மூணு தடவ படிச்சும் போர் அடிக்கல...

    // எத்தனை சலுகைகளை வாழ்க்கை தகுதியற்ற ஆண்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது! //
    //'காதலிப்பதாயிருந்தால் இந்தக் கோழையையே மீண்டும் மீண்டும் மீண்டும் காதலிக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டாள்.//

    மனதில் நீக்கமற நிறைந்த வரிகள்...

    I'm Waiting

    பதிலளிநீக்கு