2009/12/15

தடங்களுக்கு வருந்தவில்லை

போக்கற்ற சிந்தனை


என் உயிர் என்று சொல்லும் வகையில் பழகிய தோழி, புதன்கிழமை இறக்கப் போகிறாள். சென்ற வருடக் காலக் கணக்கில்.

இத்தகைய காலக்கணக்கு செயற்கையாகவும் முட்டாள்தனமாகவும் தோன்றினாலும், அவள் இறந்த தினம் வருகிறது என்பதை நினைக்கையில் இது போல் சென்ற வருடம் தோன்றியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியுமா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. பொன் போனது; புதன் இருக்கிறது. சரியாகத் தான் சொன்னார்கள்.

அவளுடைய பிறந்த தினங்கள் சிலவற்றை அவளுடன் கொண்டாடி இருக்கிறேன். அவளுடைய இறந்த தினங்கள் சிலவற்றை எஞ்சியிருக்கும் நண்பர்களுடன் கொண்டாட நினைக்கிறேன்.

சாவி. பாதை வகுத்துக் கொண்டே பயணம் செய்த விசித்திரமான பெண். இடையே தொலைந்து போனாலும் கலைந்து போகாத நட்பு எங்களுடையது. இத்தகைய நட்புகளில் தான் என் வாழ்வின் நிறைவை உணர்கிறேன்.

சாவியின் நினைவில் ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. பிறகு அவள் எழுதியதைப் பொதுவாகப் பகிர்வதே ஒரு வித அஞ்சலி என்று பட்டது. சாவியின் நினைவில் இரண்டு கவிதைகளைக் கொடுத்திருக்கிறேன்.

முதல் கவிதை, சாவி எழுதியது. தள்ளாத முதுமையில் ஓய்ந்து கிடந்த தன் பெற்றோருக்குத் திருமண தினப்பரிசாக சாவி எழுதி வழங்கிய கவிதை. கலைமுகில் பதிப்பகம் வெளியிட்ட 'கண்ணைப் பார் சிரி' என்ற சாவியின் கவிதைத் தொகுப்பிலும், அரசன் ஆதரவில் வெளிவந்த பூத்தூரிகை வலைப்பூவிலும் வெளிவந்தது.

அடுத்த கவிதை - அரைவேக்காடு முயற்சி - சாவியின் நினைவில் பூத்தூரிகை வலைப்பூவில் நான் எழுதியது. அடுத்த வாரம் அவளை மறந்து விட்டால்? நினைவிருக்கும் போதே நினைத்து விடுகிறேன்.


கண்ணைப் பார், சிரி

கரைபுரண்ட காவிரி,
  இன்று
வறண்டுபோன ஓடை.

ஒளிதந்த விளக்கு,
  இன்று
சுடரிழந்த திரி.

மலர் தந்த வனம்,
  இன்று
கருகான பூங்கா.

வழி காட்டிய மண்,
  இன்று
புதரான பாதை.

பாடல் சொன்ன குயில்,
  இன்று
பேச்சில்லாத சிலை.

ஆட்டுவித்த சிம்மம்,
  இன்று
அசையாத பொம்மை.

உடல் தந்து உயிர் தந்து
    உணவோடு உணர்வீந்து
      கடல் வற்றும் கனிவோடு
        எனை வளர்த்த அம்மா,
        இன்று நீ
      காய்ந்து போன கனி.
    ஆனால் என்றும்
தேய்ந்து போகாத நிலவு.

கடவுளுக்குப் பொருள் சொன்ன
    என்னருமை அப்பா,
      இன்று நீ
      ஆட்சி இல்லா அரசன்.
    ஆனால் என்றும்
மாட்சி குறையா மகான்.

வந்த வழி மறந்துவிட்டு
  போகும் வழி தெரியாமல்
    பரிதவிக்கும் பயணிகள்.
    ஆனாலும் நீங்கள்
  போகும் இடம்
எனக்குத் தெரியும்.

புறப்படும் நேரம்
  புலப்படும் வரை
துணை இருப்பேன்.

வாழ்க்கைப்
  பயண வலி
    வாட்டும் போது,
  மெள்ளக் கால் பிடிப்பேன் அம்மா,
நல்லக் கவி படிப்பேன் அப்பா.

முதுமைத் துயரம்
  மறந்து போக
    உன் இளமைப் பிம்பம்
    என்னைப் பார்.
  வருத்தம் தீர,
என் கண்ணைப் பார், சிரி.


தொலையட்டும்

வானத்துக் காவிரி
கடலில் விழும்,
கூவத்திலும்.
  விடு,
  உன் கூவம்
  இனிக் கடல்.

காட்டுத் தீ வடிந்தால்
கரி உண்டு,
பொன்னும்.
  விடு,
  உன் கரி
  இனிப் பொன்.

சுவாசக் காற்றிலே
மணம் உண்டு,
கிருமியும்.
  விடு,
  உன் கிருமி
  இனிப் பூமணம்.

அழுதபின் சிரிக்க
பின் அழ, இருத்தும்
வாழ்க்கை வட்டம்.
  விடு,
  உன் வட்டம்
  இனி வெளி.

ஏனோ
காலப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தைப்
புரட்டி விட்டாய்.
முடிவறியும் அவசரமா?
  விடு,
  நீ படித்ததால்
  காலப் புத்தகத்துக்கு
  கௌரவம்.

7 கருத்துகள்:

  1. அப்பா,கருத்துச் சொல்ல முடியவில்லை.மனம் இறுக்கி வலிக்கிறது.உறவின் பிடிப்பு இதுதானோ !

    பதிலளிநீக்கு
  2. >> பொன் போனது; புதன் இருக்கிறது. சரியாகத் தான் சொன்னார்கள்

    - Brilliant

    >> அவள் இறந்த தினம் வருகிறது என்பதை நினைக்கையில் இது போல் சென்ற வருடம் தோன்றியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியுமா

    - மரணத்தின் வலி கொடுமை. அதுவும் உங்களின் ஆழமான நட்பின் அடித்தளமான நண்பியே போனபின் - ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. பூத்தூரிகையில் எழுதிக்கொண்டிருந்தவர் சடாரென்று மரணம் என்று கேள்வி பட்டபின் மனது வலித்தது.

    ரீவைண்ட் என்று வாழ்க்கையில் ஒரு பட்டன் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாடிசம்பர் 15, 2009

    Glad you remembered for all of us. ஒரு வருஷம் எப்படி ஓடிப்போச்சு! இந்தியா போனியா?

    பதிலளிநீக்கு
  4. மனதில் ஏற்படும் சில உணர்வுகளுக்கு ஏனோ விடை காண முடிவதில்லை. எனக்கு அதிகம் பரிச்சயமே இல்லாத சாவித்திரியை, காரணம் எதுவும் இல்லாமலே அடிக்கடி நினைப்பேன், ஏன் என்று தெரியவில்லை? இது டிசம்பர் மாதம் என்றதும் என் மனதை முதலில் சுட்டது, இது சாவி மறைந்த மாதம் என்பதுதான்!
    சாவித்திரி, நீங்கள் மறைந்தாலும் உங்கள் கவிதைகளும், ரசிக்கும்படியாக நீங்க எழுதிய பின்னூட்டங்களும் என்றும் என் நினைவில் வாழும்.

    பதிலளிநீக்கு
  5. மறைந்தவர்கள் நம் மனதில் என்றும் வாழ்கிறார்கள் என்பது அவர்கள் நம்மோடு பழகிய ஆழத்தின் அளவு. தோழிக்கு மரியாதை கொடுக்கும் உங்களுக்கு எங்கள் மரியாதைகள். உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. //புறப்படும் நேரம்
    புலப்படும் வரை
    துணை இருப்பேன்.//

    //முதுமைத் துயரம்
    மறந்து போக
    உன் இளமைப் பிம்பம்
    என்னைப் பார்.
    வருத்தம் தீர,
    என் கண்ணைப் பார், சிரி.//


    என்னுடைய படிக்கும் திறன் அறிந்து / concentration உணர்ந்து என் மனைவி நேற்று எனக்கு சுட்டிக்காட்டிய வரிகள். அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  7. மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்?
    நினைவுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு