2011/08/19

படித்தால் மட்டும் போதும்

போக்கற்ற சிந்தனை


சமீபத்தில் படித்த சில பழைய, சில புதிய, புத்தகங்கள்.


'i awoke friday, and because the universe is expanding it took me longer than usual to find my robe'
- 'strung out' சிறுகதையின் துவக்கத்தில்.

நான் பெரிதும் மதிக்கும் கலைஞன் உடி ஆலன். கட்டுரை, கதை, நாடகம், திரைப்படம், பாடல் என்று எதையும் விட்டு வைக்காத உன்னத எழுத்தாளர்.

ஆங்கில அகராதியின் உதவியில்லாமல் என்னால் இவர் எழுத்தைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது என்றாலும், ரசிக்க முடியாமல் போனதே இல்லை. இந்தத் தொகுப்பில் சிறுகதைகள் மட்டுமே என்பது இன்னும் சிறப்பு. பரபரப்பான உலகச் செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கும் பதினெட்டு சிறுகதைளில் சில,வயிற்றைப் பிடித்துக் கொண்டு மூச்சு முட்டும் வரை சிரிக்க வைத்தன. வீரப்பன்-ராஜ்குமார் விவகாரத்தை ஒட்டி ஒரு கதை எழுதியிருக்கிறார்.

இதைவிட அருமையான புத்தகங்கள் சில எழுதியிருக்கிறார். சிறுகதைகள் பிடிக்குமென்றால் இந்தப் புத்தகம் படிக்கவும்.

★★★

"இது என்ன பட்டன், தங்கமா?" என்று அவள் சட்டைப் பட்டனைத் தொட்டான்.
வசந்துக்கு விமோசனமே கிடையாது.

- நாவலின் முடிவில்.

தமிழில் சரளமாகப் படிக்கத் தொடங்கியதும் அறிமுகம் செய்து கொண்ட முதல் எழுத்தாளர் சுஜாதா என்று நினைக்கிறேன். பாக்கியம் ராமசாமியாகவும் இருக்கலாம். அனிதா இளம் மனைவி என்ற புத்தகமே முதலில் படித்த சுஜாதா கதை. அதிகம் படித்த தமிழ் எழுத்து சுஜாதாவினது தான்.

இந்தக் கதை மாலைமதியில் வந்தபோது படித்துவிட்டுச் சிலிர்த்தது நன்றாக நினைவிருக்கிறது. கதையை விட, கதை முடிவின் குறும்பை 'ஆகா, சுஜாதா சுஜாதா தான்!' என்று போற்றி விவாதித்த நாட்களுண்டு.

எஸ்ஏபியின் சொதப்பல் முடிவை ஏற்காமல், சுஜாதாவே துணிந்து எழுதி முடித்திருக்கலாம் என்று அன்றைக்கும் நினைத்ததுண்டு. இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது சுஜாதா எழுதிய அசல் முடிவையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம்.

★★★

'one of the torments inflicted on junius was the strappado.. in this cruel act, the victim's arms are tied behind him, the torturer then pulls him up by his tied hands to a height above the floor and lets him drop..'
- புத்தகத்தின் துவக்கத்தில்.

பேய், பிசாசு, மந்திரம், சூனியம் இவை உங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்குமா? அவர்களுக்கான புத்தகம். அந்த சாக்கில் நாமும் படிக்கலாம். பிரமிக்கலாம். இத்தகைய நம்பிக்கைகள் வெகுவாகப் புழங்கிய, கத்தோலிக்க மதத்தின் அடக்குமுறைக் கொடுமைகளுக்குள்ளான, பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைப் பற்றிக் கதைகள், குறிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் அருமையான புத்தகம்.

தூங்கவைக்க வாய்ப்பு கிடைக்கும் நாட்களில் பிள்ளைகளுக்குப் புத்தகம் அவசியம் படிப்பேன். இந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களைப் படித்த அன்று நள்ளிரவுக்கு மேல், 'daddy, can i sleep in your room?' என்று என் பதிலுக்குக் காத்திராமல், அருகில் ஒட்டிப் படுத்துக்கொண்டான் மகன். பிள்ளைகளின் நெருக்கத்தை இப்படியும் பெறலாம்.

★★★★

it's boilable, poachable, fryable;
    it scrambles, it makes a sauce thicken.
it's also the only reliable
    device for producing a chicken.
- முட்டையைப் பற்றி ஒரு கவிதை.

limerick பிடிக்குமா? இந்தப் பாணி நகைச்சுவைக் கவிதைகளை அள்ளி அள்ளித் தந்தவர் பெலிசியா லேம்போர். கவிதை மட்டுமல்ல, ஒரு சொல்லை அதன் பொருளின் வடிவத்தில் 1940களில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். உதாரணமாக,
      ப
          டி
              யி
                  ல் இறங்கி நடந்தான்
என்று நிறைய பிரபலங்கள் இவரைப் பின்பற்றி எழுதியிருக்கிறார்கள்.

ஆழ்ந்த உளவியல் விவகாரங்களையும் அசாதாரணமாக limerick செய்திருக்கிறார்.
the aftereffects of a mother's neglects
   may spoil her boy's orientation to sex
but the converse is worse; if she overprotects
   the patter of oedipus wrecks

நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களுள் ஒன்று. திருவாளர் சென்னைப்பித்தனுக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

★★★★

india, the land where heart is king!
- புத்தகத்தின் நடுவில்.

ஆஸ்திரேலியக் குற்றவாளி ஒருவன் கடுங்காவல் சிறையிலிருந்து பட்டப்பகலில் தப்பித்து, மும்பை வருகிறான்; மும்பையில் இன்னும் சில குற்றங்கள், கடத்தல், mafia என்று தொடர்கையில், மும்பையின் சேரிப்பகுதியில் இலவச மருத்துவமனை திறந்து மனம் வருந்துகிறான். தன்னறிவு பெறுகிறான். இது தான் கதை. உண்மைக் கதை.

தன் கதையைப் புத்தகமாக எழுதியிருக்கும் ராபர்ட்ஸ் அதை சுவாரசியமாக எழுதியிருக்கலாம்.

இந்தியாவைப் பற்றி ராபர்ட்ஸ் எழுதியதைப் படித்ததும், இந்தியாவின் நெரிசலும் புழுதியும் சாக்கடையும் சச்சரவும் சகிக்கக்கூடியதாகத் தோன்றியது. வெளிநாட்டவர் கண்ணில் எப்படிப்பட்ட பார்வை!

ஆங்காங்கே பிரமித்தாலும், சமீபத்தில் படித்த சுமாரான புத்தகம்.

★★


'வாராவாரம் கோவிலுக்குப் போகும் உணர்வோடு மக்கள் இதை உட்கார்ந்து ரசித்தார்கள்'
- பாலுமகேந்திரா

தமிழின் சிறந்த சிறுகதைகள் எனப் பதினைந்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, குறும்படமாக எடுத்து, சின்னதிரையில் தொடர்ந்து ஒரு வருடம் வெளியிட்டாராம் பாலுமகேந்திரா. அதைக் கோவிலுக்குப் போகும் உணர்வோடு பொதுமக்கள் பார்த்தார்கள் என்கிறார். ஸ்ரீராமைக் கேட்டால் உண்மை தெரியும்.

அந்தக் குறும்படங்களின் மூலச் சிறுகதைகளையும், அவைகளுக்கு பாலுமகேந்திரா குழு எழுதிக்கெடுத்த, i mean எழுதிக் கொடுத்த, திரைக்கதைகளையும் தொகுத்து இரண்டு பாகப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். குறும்பட டிவிடியும் சேர்த்து.

பாலுமகேந்திரா மோசமான திரைக்கதாசிரியர் என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி தேவையில்லை என்று நினைக்கிறேன். திரைக்கதைகளைப் படித்துவிட்டு பயந்து, இன்னும் குறும்படங்களைப் பார்க்கவே இல்லை. சிவசங்கரி, மாலன் சிறுகதைகளைச் சிதைத்த பாவம் பாலுமகேந்திராவைச் சுற்றட்டும்.

பாலுமகேந்திராவின் கலையை நான் ரசித்ததேயில்லை என்ற full disclosureடன்:
நான் சமீபத்தில் படித்த மோசமான புத்தகம்.


கொலை நடந்தது என்று தகவல் கிடைத்ததும் போலீசார் முதலில் செய்வது என்ன? திருடனைக் கண்டு பிடிக்க திருட்டு நடந்த இடத்துக்குப் போகுமுன்னரே போலீசார் என்ன செய்வார்கள்? ரத்தக்கறையை வைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் என்ன செய்வார்? கணேஷ்-வசந்த் பென்சில் அடித்துப் பார்க்கும் தத்துவம் எப்படி வந்தது? அரெஸ்ட் வாரன்ட் இல்லாவிட்டால் என்ன செய்யலாம்? குற்றவாளி என்று சந்தேகம் வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? குற்றவாளிகளின் மனநிலை என்ன? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தொடர்கொலை... இவற்றின் பின்னணி என்ன? ஒரு நல்ல துப்பறிவாளருக்கு எத்தகையத் தற்காப்புகள் தேவை?

இன்னும் நிறைய சுவாரசியமான விவரங்கள். பொழுது போவது தெரியாமல் படிக்க முடிகிற புத்தகம்.

கொலைக்கதை, துப்பறியும் கதை எழுத விரும்புவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம். எழுத விரும்பாதவர்கள், அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்தப் புத்தகத்தைப் படித்தபோது சில கதைக்கருக்கள் கிடைத்தன. சுவைபட எழுத வரவில்லை.

★★★




இன்னும் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்.

நாடகம் என்றால் அது மேடை ஏறுவதில் தான் முழுமை பெறுகிறது என்பது என் கருத்து. ஆனால் என் பல நாடகங்கள் தமிழ்நாட்டில், நான் எழுதிய மொழியில், மேடையேறவில்லை என்ற குறை எனக்கு உண்டு
- இந்திரா பார்த்தசாரதி.


முதன் முதலாக இவரது நாடகம் ஒன்றை கல்லூரி நாட்களில் படித்தேன். இவர் எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருந்ததை உணர்ந்தேன். நாடக உரையாடல்களிலும் நாடகக் கதையமைப்பிலும் நவீனத்தைக் கொண்டு வந்தவர் இந்திரா பார்த்தசாரதி என்று நம்புகிறேன்.

இவரது மொத்த நாடகத் தொகுப்பும் புத்தகமாகக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

கொங்கைத்தீ (சிலப்பதிகாரக் கதை - என்னமாக எழுதியிருக்கிறார்!), காலயந்திரங்கள், புனரபி ஜனனம் புனரபி மரணம் என்று சில நாடகங்களைப் படித்து முடித்திருக்கிறேன். ஒரு நாடகத்தைப் படித்து விட்டு அடுத்த நாடகத்துக்குப் போக முடியவில்லை. படித்ததையே திரும்பப் படிக்கத் தோன்றுகிறது. beautiful.

புத்தகத்தின் விலை நானூறு ரூபாய். அதிகமா குறைவா தெரியவில்லை. நிறைய பேர் வாங்குவார்களா? வாங்கிப் படிக்க வேண்டும்.

இந்திரா பார்த்தசாரதி சென்னையில் வசிக்கிறாராம். அடுத்த சென்னைப் பயணத்தில் இவரைச் சந்திக்க முடிந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

நாடகம் படித்து ரசிக்க நிறைய பொறுமையும் கற்பனையும் தேவை என்பார்கள். பொறுமை போதும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு வரியையும் ரசிக்க முடிகிறது.

புனரபி நாடகக் கதை:
கிராமத்தில் மரணம் நிகழப்போவதாகக் கேள்விப்பட்டு மரணத்தை ஒட்டிய சடங்குகளைப் படம் பிடித்து அமெரிகாவுக்கு வினியோகிக்கும் எண்ணத்தோடு வருகிறார் ஒரு தயாரிப்பாளர். இரண்டு சங்கடங்கள். 1. மரணம் இன்னும் நிகழவில்லை. 2. மரணப்படுக்கையில் இருக்கும் கிழவரோ பகுத்தறிவுத் தலைவர், ஈமச் சடங்கெல்லாம் கூடாது என்று தீர்மானமாகச் சொன்னவர். கிராமத்து ஆள் ஒருவரைப் பணம் கொடுத்துக் கையில் போட்டுக் கொண்டத் தயாரிப்பாளர், கிழவரின் குடும்பத்தைச் சரிக்கட்டி படம்பிடிக்க வசதி செய்து கொடுத்தால், இன்னும் நிறைய பணம் தருவதாக ஆசைகாட்டுகிறார். பணத்தைப் பார்த்து ஆசை கொண்ட கிராமத்தாள், கிழவரின் குடும்பத்தாரை ஆளுக்கு லட்சம் தருவதாகச் சொல்லிக் சரிக்கட்டுகிறார். கிழவரும் இறக்கிறார். 'கிழவர் இறக்கும் தறுவாயில், ஐயரைக் கூப்பிட்டு சடங்கெல்லாம் செய்யச் சொன்னதாக'த் திரித்து விடுகிறார்கள் குடும்பத்தார். வைதிகர் வந்து சடங்குகளைத் தொடங்குகிறார். படத்தில் முகம் காட்டும் அத்தனை பேருக்கும் பணம் கிடைக்கும் என்றதும், கிராமமே திரைப்பட ஆர்வத்தில் சாவைக் கொண்டாடத் தயாராக இருக்க்கிறது. பணம் பகுத்தறிவை வென்றுவிட்ட நிலையில், கிழவரின் பேத்தி, "அப்பா! தாத்தா இன்னும் சாவலப்பா! கண்ணைத் தொறந்து பாத்தாரு!" என்று கூவியபடி ஓடிவருகிறாள். கிழவர் இன்னும் இறக்காதது புரிந்து எல்லோரும் திடுக்கிடுகிறார்கள்.

நாடகம் இங்கே முடிந்து விட்டது என்று தோன்றியது. இன்னும் சில பக்கங்கள் இருந்தன. 'அடடா, இழுக்கிறாரே!' என்று நினைத்தபடி தொடர்ந்துப் படித்தேன்.

தயாரிப்பாளருக்கு பணமும் நேரமும் செலவாகிறதே என்று கவலை. வாங்கிய பணத்தைத் திருப்ப நேருமோ என்று கிராமத்தினருக்குக் கவலை. பேசிய தொகை கைதவறுமோ என்று கிழவரின் குடும்பத்தாருக்குக் கவலை. தயாரிப்பாளர் கிராமத்தாளை நெருக்க, சற்று யோசிக்கிறார்கள். "இதெல்லாம் மரணமயக்கம். இப்ப போயிடுவாரு பெரியவரு, கவலைப்படாதீங்க. எதுக்கும் நம்ம வைத்தியர் வந்து பாத்துட்டுப் போவட்டும்" என்று கிராம வைத்தியரை அழைத்து வரப் புறப்படுகிறார்கள் கிராமத்தாளும் வைதிகரும்.

நாடகம் இங்கே முடிகிறது. திடுக்கிட்டு பிரமிக்க வைத்த முடிவு. அவசரப்பட்டதை எண்ணி நொந்தேன். நிறைய கேள்விகளைக் கேட்டு பகுத்தறிவுக் கிழவரின் நிலையை அசைபோட வைக்கிறது நாடகம்.

..படித்த வரையில்
★★★★

மறந்து விட்டதே? தமிழ்ப் புத்தகங்களை வாங்கிய கடை: New World Book Center.

தி.நகர் பனகல் பார்க் தாண்டி மேம்பால முடிவை ஒட்டிய இடத்தில் புதைந்திருக்கிறது. கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. நல்ல கடை. நன்றாகப் பழகுகிறார்கள். மறுபடியும் போகவேண்டும் என்று எண்ண வைத்தார்கள். வெளியே வந்ததும், கடையை அறிமுகம் செய்து வைத்த ஸ்ரீராம் பெயரைச் சொல்லி சரவணபவனில் காபி சாப்பிட்டேன்.

15 கருத்துகள்:

  1. குட்ட வேண்டியதை கொட்டி, தட்டி கொடுக்க வேண்டிய படைப்புகளை தட்டி - நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. பாலு மகேந்த்ரா சீரியல் பார்த்த ஞாபகம் கொஞ்சம் உள்ளது. சில எபிசொட்ஸ் நன்றாக இருந்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  3. அழகான ஃபார்மேட்டில் அருமையான விமர்சனங்கள்... வி..கோ உட்பட எதுவும் படித்ததில்லை ..படிக்க தூண்டுகின்றன ... பாலுமகேந்திரா எப்படி கெடுத்தார் என்பதையும் சேர்த்து....

    தொல்லை காட்சி வந்த பிறகு மக்களுக்கு புத்தகம் படிக்கும் பொறுமை போய்விட்டது.. தொல்லையில் சலித்து மீண்டும் திரும்புவார்கள் என நம்புகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. எதைப் படிக்க கொடுத்தாலும் அழகாக கொடுக்கிறீர்கள். எதிலும் தனித்துவம். நானெல்லாம் இன்னும் பல படி ஏறணும்.

    க்ரைம் புக் அவசியம் படிக்கிறேன். இந்தப் பக்கத்தை சேமித்து வைத்துக் கொள்கிறேன்!!

    லிமெரிக், நாடகம் என்று எல்லாம்...எல்லாம்...எல்லாம்..

    மிக மிக நன்றி.. :-))

    பதிலளிநீக்கு
  5. படித்தால் மட்டும் போதாது துரை, இது போல் எங்களுக்கும் அடிக்கடி நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.thanks

    பதிலளிநீக்கு
  6. அதெல்லம்சரி அப்பாதுரை அவர்களே! இப்ப எந்த ஊர்ல இருக்கேரு!--- காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  7. பிள்ளையைத் தூங்க வைக்க இந்தப் புக் படிக்கிறீர்களா சரிதான்.

    அருமையான கலெக்ஷன். புஸ்தக விவரமும் தந்திருக்கக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
  8. இந்த மாதிரி புத்தக அறிமுகங்கள் நல்ல முயற்சி. சுருக்கமாக, அழகாக அபிப்ராயப் பட்டிருக்கிறீர்கள். பதிவு கொடுக்கப் பட்டுள்ள விதமும் கவர்கிறது. கீதா சந்தானம் சொல்வதை வழி மொழிகிறேன். வி.கோ முடிவை எஸ் ஏ பி மாற்றினார் என்பதைப் படித்ததில்லை.பதிவில் என் பெயரைக் கொண்டு வந்தமைக்கு - முதல் ஸ்ரீராமும் நான்தானா...-எனில் இரண்டு முறை நன்றி நன்றி.... ! Science of the crime கவர்கிறது. வி.கோ - அந்த மாலைமதியே இன்னும் என்னிடம் இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  9. வருக mohan, தமிழ் உதயம், kggouthaman, பத்மநாபன், RVS, geetha santhanam, kashyapan, ராமசுப்ரமணியன், ஸ்ரீராம், ...

    பதிலளிநீக்கு
  10. பணம் பகுத்தறிவை வென்ற புனரபி நாடகக் கதையைச் சேர்த்திருக்கிறேன். யோசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. புரிந்து உணர்ந்து படிப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால்
    அதிகம் ஆங்கில நாவல் பக்கம் போவதில்லை
    பத்தாண்டுகளுக்கு முன்பு வீதி நாடகங்களில்
    அதிக ஈடுபாடு கொண்டிருந்த காலங்களில்
    ஞானி முத்துச்சாமி இந்திரா பார்த்தசாரதி
    இராமானுஜம் ராமசாமி இவர்களின்
    நாடகங்களில் நடித்ததும் இவர்களின் நாடகங்களை
    ஈடுபாடோடும் படித்தும் இருக்கிறேன்
    தங்கள் பதிவு மீண்டும் அந்த நூல்களை
    இன்னும் சரியாக புரிந்து உணர்ந்து படிக்கவேண்டும் என்ற
    ஆவலைத் தூண்டிப் போகிறது.நன்றி

    பதிலளிநீக்கு
  12. //அந்த மாலைமதியே இன்னும் என்னிடம் இருக்கிறது!// ஸ்ரீ ..நீங்களும் நம்ம செட்டா... நைலான் கயிறு ராணிமுத்துவில் ( மறுபதிப்பு)படித்த ஞாபகம்.நிறைய கலெக்‌ஷன் காணமல் போய்விட்டது .மிச்சமிருக்கும் பாலகுமாரனின் பாக்கெட் நாவல்கள் மட்டும் இரண்டு அட்டை பெட்டிகளில் வீட்டம்மாவிடம் பாட்டு வாங்கிக்கொண்டே வீடு மாற மாற வந்து கொண்டே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  13. நல்ல தொகுப்பு. படிக்க நேரம் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. சீக்கிரம் ரிட்டையர்டு ஆக வேண்டும் போல் உள்ளது.
    இந்திராவின் ஒரு சில நாடகங்கள் படித்திருக்கிறேன். வள்ளலார் பற்றிய ஒரு நாடகம் ( இ.பா என்று தான் நினைக்கிறேன் ) இன்றும் நினைவில் இருக்கிறது.
    நன்றி

    பதிலளிநீக்கு
  14. //சிவகுமாரன் சொன்னது… சீக்கிரம் ரிட்டையர்டு ஆக வேண்டும் போல் உள்ளது. //

    பலே பலே, பேஷ் பேஷ். என்னைப்போல் ஒருவன். நானாவது உழைத்து இருப்பைந்தைந்தாம் வருடம் இப்படி புலம்புகின்றேன். நீங்கள் அதற்க்குள்ளாவாக ?

    பதிலளிநீக்கு