2012/04/13
பாலுவின் கோடை
1 2 3
கழிப்பின் உடனடி விளைவு, ஸ்ரீதரின் பிரிவு. எங்கள் வட்டத்திலிருந்து நிரந்தரமாக விலகிக் கொண்டான். ஈசுவைக் காணோம். தகவல் தெரிந்து கொள்ள வழியில்லாமல் போனது. அவளை "வீட்டோடு வச்சிருப்பாங்க" என்றார் தணிகாசலம். பாலுவைப் பற்றியும் எங்களைப் பற்றியும் கடைத்தெருவிலும் பிற இடங்களிலும் விசாரிக்கத் தொடங்கினார்கள். ரவியின் வீட்டில் கலவரமாக இருந்ததேயொழிய, எங்கள் வீடுகளில் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. சிலுவையில் இறந்தபின் இயேசு பிழைத்து வந்ததைச் சொல்லி, ஜேம்சின் அம்மா இறந்தவர் அத்தனை பேரும் அரூபமாகத் திரிவதாகவும் பொன்னாளுக்குக் காத்திருப்பதாகவும் சொன்னார். எல்லாருமே ஆண்டவரின் பிள்ளைகள்தான் என்பதால் ரத்தக்காட்டேறியைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை என்றார். நாங்கள் பயந்தோம்.
எங்கள் வழக்கத்தில் எதுவும் மாறவில்லை. மறுநாள் பிற்பகல் வழக்கம் போல் சிந்தாளம்மன் கோவிலில் சேர்ந்தோம். கோவில் பின்புறச் சுவரோரமாக இருந்த மஞ்சள் வட்டத்தில் ஒரு எருக்கம்பூக் கொத்தையும், இரண்டு கண்ணாடி வளையல்களையும் வைத்திருந்தார்கள். காட்டேறித் தடம். பௌர்ணமி வரையில் யாரும் அருகே போகமாட்டார்கள். கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, நான் சாம்பா ஜேம்ஸ் ரவி நால்வரும் சீட்டாடிக் கொண்டிருந்தோம். பாலு வரவில்லை. பல் பிடுங்கிய வலியில் துடித்தபடி வீட்டிலேயே கிடந்தான்.
"பாலுவுக்கு எப்டிறா இருக்கு?" என்றான் சாம்பா.
"வாயெல்லாம் செம்த்தியா வீங்கிருக்குடா. நைட்டு பூரா உளறிட்டிருந்தான். மாமா இன்னிக்கு வந்து பாலுவை கூட்டிட்டுப் போனாலும் போவாரு" என்றான் ரவி.
"டேய்! பௌர்ணமி வரைக்கும் இங்கதாண்டா இருக்கணும்.. காட்டேறி உலாத்திட்டிருக்கா.. பாலுவைப் பாத்தா பிடிச்சுக்குவா..அப்படி அவன் தப்பிச்சிட்டான்னு வை.. நீதான்.." என்ற ஜேம்ஸ், "ராசாத்தி!" என்று உரக்கக் கூவித் திடீரென்று ரவியின் முடியைப் பிடித்தான். நடுங்கி வீறிட்டான் ரவி. சாம்பாவும் ஜேம்சும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
"ஏண்டா.. நீங்க வேறே..." என்றேன். ரவி உண்மையிலேயே ஆடிப்போய்விட்டான்.
மதியம் வழக்கம் போல் சாராய நீர் மோர் பருகிவிட்டு சுவரோரமாகப் படுக்க வந்தார் பூசாரி. "கண்ணுங்ளா.. கவனமா இருக்கோணும்.."
"பூசாரிண்ணே.. யாரந்த முண்டாசு ஆளு?" என்றான் சாம்பா.
"கழிப்பு நடத்துனா காட்டேறி வாடையை வாங்கிட்டுப் போவ இன்னொரு ஆளு வேணும்.. நல்ல கெடாவான ஆளு.. வாடை பிடிச்சுகிட்டு காட்டேறி வருவா.. வந்தா காட்டேறியை அடக்கி வைக்க தெகிறியம் வேணும்.. பாலுத்தம்பி பச்சப்புள்ள.. தாங்காது.. பாலுத்தம்பியை அக்குள்ள வச்சுகிட்டுப் போயிடுவா காட்டேறி.. அதான் முண்டாசைக் கொண்டாந்தோம்.. பௌர்ணமி மட்டும் மறைவா இருப்பான்.."
"எங்கிருந்து பிடிச்சீங்க?.. அந்தாளு மூஞ்சைக் கூடப் பாக்க முடியலே.."
"இதுக்கெல்லாம் வேத்தூரு ஆளு கொணாறணும்.. காட்டேறிக்கு அடையாளம் தெரியாம இருக்கணும்ல? முண்டாசு குன்னத்தூர் வெட்டியான்.. எப்பவும் கொணாறது தான்.. சுடுகாட்டுலயே இருப்பான்.. காட்டேறி கிட்டே வரமாட்டா"
"பாலுவோட அப்பா வராரு இன்னிக்கு.. பாலுவைக் கூட்டிட்டுப் போயிடுவாரு பூசாரிண்ணே", வத்தி வைத்தான் ஜேம்ஸ்.
"அய்யோ.. அப்படி செய்யக்கூடாது கண்ணுங்ளா.. பாலுத்தம்பி இங்கயே இருக்கோணும்.. ஊர் எல்லையத் தாண்டுனா கழிப்புக் காவல் பொசுக்குனு போயிரும்.. காட்டேறி பின்னாலயே சுத்திட்டிருப்பா.. கப்புனு பாஞ்சிருவா.. அம்மா கிட்டே கன்டிசனா சொல்லுப்பா.. நானும் பொழுது சாஞ்சு வூட்டுக்கு வந்து சொல்றேன்.. இப்ப கண்ண சுத்துது.." என்றபடிப் புரண்டு படுத்தார்.
"டேய் ரவி.. நான் சொன்னேன்ல?" என்று கண்ணடித்தான் ஜேம்ஸ்.
செய்தியைச் சொல்ல ரவி வீட்டுக்குக் கிளம்பினோம். ரவியின் அம்மா எங்களைப் பார்த்ததும், "பாலு இல்லியே? உங்களைத் தேடிட்டுப் போறதா சொன்னானே?" என்றார்.
வந்த விஷயத்தைச் சொன்னோம். "அண்ணா நாலு மணிக்கெல்லாம் வந்துருவான்.. அவங்கிட்டே சொல்லி பாலுவை இங்கயே இருக்கச் சொல்றேன்.. அதுக்கப்புறம் அவன் பாடு அவன் பிள்ளை பாடு. தலையெழுத்து!" என்றார்.
"நாங்க பாலுவைத் தேடுறோம் மாமி" என்று கிளம்பினோம். பம்மல் வட்டாரங்கள் முழுதும் ஒரு மணி நேரத்துக்கு மேல் சைக்கிளில் சுற்றித் தேடினோம். திரும்பி வருகையில் காய்கறிக்கடைக் குமாருடன் பாலு பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். "டேய்.. வீட்டுக்கு வாடா" என்று அதட்டினான் ரவி.
என்னுடைய சைக்கிளைப் பிடுங்கிக்கொண்டான் பாலு. "பின்னால உக்காருடா" என்றான் என்னிடம். "வீட்டுக்குத் தானடா? வாங்க.." என்று கிளம்பினான். குமார் கடையிலிருந்து ரவி வீடு அரை மைலாவது இருக்கும். ஜெட் வேகத்தில் பறந்தான் பாலு. பின்னால் உட்கார்ந்திருந்த எனக்கு எலும்பெல்லாம் கழண்டு போனது. நான் கதறக் கதறச் சிரித்துக் கொண்டே சைக்கிள் ஓட்டினான் பாலு. மனித வேகமே அல்ல. செத்தாலும் பரவாயில்லை என்று சிவன் கோவில் திருப்பத்தில் குதித்து விட்டேன். கைகளில் சிராய்ப்புடன் எழுந்து உட்கார்ந்தேன். பாலு சிவன் கோவிலைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மற்றவர்கள் வந்தார்கள். "என்னடா ஆச்சு? எங்கடா அவன்?" என்றான் சாம்பா.
இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். "த்தா.. ஓட்டாண்டா..மனுசனேயில்லடா.. பேயாட்டம்ல வண்டி ஓட்டுறான்?" என்றேன் கடுப்புடன். ரவியிடம் "டேய்.. நிச்சயமா பாலுவுக்கு என்னவோ ஆயிருச்சுடா" என்றேன்.
ரவி வீட்டு வாசலில், பாலு உட்கார்ந்திருந்தான். எங்களைப் பார்த்துச் சிரித்தான். என்னிடம், "என்னடா பயந்தியா?" என்றான் இயல்பாக. எனக்கு வந்த ஆத்திரத்தில் சரமாரியாகத் திட்டினேன்.
எங்களிடம், "என்னானு தெரியலடா.. வாய் துருதுருனுச்சு.. தனியா வேறே இருந்தனா..உங்களைத் தேடிட்டு வந்தேன்.. காய்கறிக் கடை குமாரைப் பாத்தனா.. அவனோட போனேன்" என்றான்.
வெளியே வந்த ரவியின் அம்மா, "எங்கடா போனே? அண்ணா வரவரைக்கும் இங்கயே இருடா" என்று அதட்டிவிட்டு உள்ளே போனார்.
"இவ எங்கடா இங்க வந்தா?" என்றான் பாலு.
"என்னடா இது எங்கம்மாவை மரியாதை இல்லாம.." என்றான் ரவி கோபமாக.
"இல்லடா.. அதோ பாருடா.. நம்மளையே பாத்துட்டிருக்கா.. திலகம் தானே?"
"எங்கடா.." என்று சுற்றுமுற்றும் பார்த்தோம். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.
"ஓடறா பாருடா" என்றான் பாலு. எனக்கு எதுவும் தெரியவில்லை. எட்டிப் பார்த்த ஜேம்சும் சாம்பாவும் "அட.. அது யாரோடா" என்றான்.
பூசாரி சொன்னதை அவனிடம் சொன்னோம். "டேய்.. பௌர்ணமி வரைக்கும் இங்கயே இருடா.."
"ரைட்டு.. எனக்கு மயக்கமா இருக்குடா.. தூங்கணும்" என்று உள்ளே போனான் பாலு. "சாயந்திரம் பாக்கலாம்டா..படம் போறோமில்லே?" என்று ரவியும் அவன் பின்னே போக, நாங்கள் கிளம்பினோம்.
வழியில் காய்கறிக்கடைக் குமார் வந்து கொண்டிருந்தான். எங்களை மறித்தான். "தொரெ.. பாலுக்கு கழிப்பு செஞ்சாங்களா.. மெய்யாலுமா?" என்றான்.
"ஆமா"
தலையிலடித்துக் கொண்டான். "எங்கூட்டு கோழிக்குஞ்சுங்க நாலைக் கடிச்சுப் போட்டான்பா.. அதான் அவசரமா ஓடியாந்தேன்.. கழிப்பு பலிக்கலே.. உடனே அவங்க வூட்ல சொல்லி அவனைக் கட்டிப்போட்டு திரும்ப கழிக்கச் சொல்லு.. சாயந்திரம் நானே வந்து சொல்றேன்.. மொதல்ல எங்க வூட்டுக்கு காவல் வைக்கணும்.." என்றான்.
குமார் விலகியதும், "வேறே வேலை இல்லடா.. டேய்.. நைட்டு படம் போவறதுக்கு ரெடியாவணும்டா.. வேலியிழுத்துக் கட்டலின்னா எங்கப்பா சினிமா போவக்கூடாதுன்வாரு" என்றான் சாம்பா.
அன்றிரவு பல்லாவரம் லட்சுமி தியேடரில் சினிமா போகத் திட்டம் போட்டிருந்தோம். பாடாவதிப் படம். ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் ட்ரெய்லர் காட்டுவதாக ஒரே பரபரப்பு. அதனால் போக நினைத்தோம். லதா என்று ஒரு புது நடிகையை "செம கட்டை மச்சி" என்று ஏற்கனவே உசுப்பேத்தியிருந்தார்கள்.
"ஒண்ணு செய்வோம்.. உங்க வீட்டு வேலியை மொதல்ல கட்டுவோம்.. பிறகு ரவி வீட்டுக்குப் போவோம்" என்றான் ஜேம்ஸ். எல்லாவற்றுக்கும் தீர்வு வைத்திருப்பான். மாலை ஆறு மணிவரை மூன்று பேருமாக சாம்பா வீட்டு வேலியை இழுத்துக் கட்டினோம். தட்டிவேலி ஏறக்குறைய சுவர் போல வந்ததைப் பார்த்த சாம்பாவின் அப்பா, சந்தோசத்துடன் எங்கள் மூவருக்கும் சினிமா டிகெட் வாங்கப் பணம் கொடுத்தார்.
ரவி வீட்டுக்குப் போகும் வழியில் ஜேம்ஸ் மெள்ள, "டேய்... மதியம் யாரையோ பாத்து பாலு என்ன சொன்னான்? திலகம்னு சொன்னான்ல? அவனுக்கு எப்படிரா திலகத்தைத் தெரிஞ்சிருக்க முடியும்? இங்க இருந்துகிறோம், நமக்கே தெரியாது.." என்றான்.
ரவி வீட்டு வாசலில் ஒரு குதிரை வண்டி நின்றிருந்தது. பல்லாவரம் ஸ்டேஷன் முத்திரையுடன். பாலுவின் அப்பா வந்திருந்தார். அறிமுகம் செய்து கொண்டதும், "நீங்கள்ளாம் படிச்சவங்க தானே? இந்த மாதிரி காட்டுமிராண்டிப் பழக்கமெல்லாம் அனாகரீகம் மட்டுமில்லே, ஆபத்துனு உங்களுக்குத் தெரியாதா? உங்கப்பாம்மா இதுக்கு ஒத்துக்கிட்டாங்களா? பம்மல்னா சரியாத்தான் இருக்கு.." என்று எங்களை ஒரு பிடி பிடித்தார்.
ரவியின் அம்மா குறுக்கிட்டார். "அவங்களை ஏன் கோவிச்சுக்குறே அண்ணா? பாலுவை விடச் சின்னவா.." என்று எங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். "டேய் துரை.. அந்த பூசாரி என்னடா சொன்னார்?" என்று என்னை மாட்டிவிட்டார்.
"வந்து.. பௌர்ணமி வரைக்கும் பாலு எங்கயும் போகக்கூடாது.."
"பேத்தல்.." என்றார். குதிரைவண்டிக்காரனை அழைத்தார். "இந்தாப்பா.. இந்தப் பெட்டியை எடுத்துட்டுப் போய் வண்டில வை"
"சரிண்ணா.. அப்புறம் உன் இஷ்டம்" என்றார் ரவியின் அம்மா, தொண்டை கரகரக்க.
"உன் மேலே எனக்கு ஒரு வருத்தமும் இல்லடி.. இதெல்லாம் பேத்தல்.. பாலுவுக்கு ஒண்ணும் இல்லே.. பயப்படாதே" என்றார். பாலுவை அழைத்து, "டேய், போலாம் வாடா.. பிராட்வே போய் பஸ் பிடிக்கணும். லேட்டாச்சு பார்" என்றார்.
அவர்கள் வீட்டுப்படியில் இறங்கும் பொழுது, கேட்டைத் திறந்து கொண்டு வந்தார்கள் பூசாரியும் குமாரும். "ஐரம்மா.. ஐரம்மா.."
பாலுவைப் பார்த்துவிட்டு, "ஐயா.. உடனே உள்ற ஓடு" என்றார் பூசாரி.
"என்னய்யா இது? யாருயா நீங்க?" என்றார் பாலுவின் அப்பா.
"சாமி.. வெவகாரம் முத்திருச்சு சாமி.. அம்மா.. புள்ளய உள்ளாற கூட்டிட்டுப் போங்க" என்ற பூசாரி சற்று நிதானித்து, "யம்மா.. முண்டாசு மதியம் செத்துட்டாம்மா.. தலையைத் திருகிப் போட்டிருச்சும்மா காட்டேறி" என்றார்.
பாலுவின் அப்பா புரியாமல் விழித்தார். ரவியின் அம்மா அலறாத குறையாக, "என்னாச்சு?" என்றார்.
"குன்னத்தூர் பாமணி சுடுகாட்டுல போலீசு பாத்துச் சொல்லிச்சு. முண்டம் ஒரிடத்துலயும் தலை இன்னொரு இடத்துலயும் கெடந்துச்சாம். மூஞ்சுலயும் ஒடம்புலயும் ஓனாய் கீறினாப்ல வெளாறாம்.. பட்டப் பகல்ல அதும்.. நான் கேள்விப்பட்டதும் ஒடனே ஒடியாந்தேன். பாலுத்தம்பில ஏறி மதியம் நாலஞ்சு கோழிங்களை வேறக் கடிச்சுப் போட்டுறுச்சாம்.."
"நான்சென்ஸ்" என்று ஏகத்துக்குக் கத்தினார் பாலுவின் அப்பா. ஜேம்ஸ் சாம்பா நான் ரவி நால்வரும் பயத்தோடும் சுவாரசியத்தோடும் கவனித்துக் கொண்டிருந்தோம். "இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.. நாங்க கிளம்புறோம்".
வேகமாக வெளியே ஒடிய பூசாரி, அதே வேகத்தில் திரும்பி வந்தார். "யம்மா.. அரிச்சந்திரன் கல்லுங்க எங்கம்மா? காணோமே?" என்றார்.
"காணோமா? அதை யார் எடுத்துப் போட்டா?" என்றார் ரவியின் அம்மா.
"என்ன அத்தே... நீ தானே கல்லு ரெண்டையும் எடுத்துத் தூக்கிப் போடுனு சொன்னே?" என்றான் பாலு நிதானமாக.
"நான் எங்கடா சொன்னேன்?"
"மதியானம் இவங்களைத் தேடிட்டுப் போனப்போ நீ வெளில நின்னிட்டிருந்தே.. பாலு.. இந்தக் கல்லைத் தூக்கியெறினு சொன்னியே? ஞாபகமில்லே?" என்ற பாலுவைத் திடுக்கிட்டுப் பார்த்தார் ரவியின் அம்மா. "மத்தியானம் நீ ப்ரென்ட்சைப் பாக்கப் போறதா சொன்னப்போ, நான் கிணத்தடில தானடா இருந்தேன்?"
"காட்டேறி போக்குக் காட்டியிருக்குமா" என்றார் பூசாரி.
"எனக்கு மனசே சரியில்லண்ணா.. நாளைக்கு கார்த்தாலயாவது போ.. உன்னைக் கெஞ்சிக் கேக்கறேன்" என்று எங்கள் முன்னிலையில் அழத்தொடங்கினார் ரவி அம்மா.
"என்ன இழவா போச்சு.. சரி சரி.. அழாதே.. நாளைக்குக் காலைல போறோம்" என்று பெட்டிப் படுக்கையை உள்ளே கொண்டு வரச்சொன்னார் பாலுவின் அப்பா.
"டேய்.. நான் படத்துக்கு வரலடா.. நீங்க போங்க" என்றான் ரவி.
சினிமா முடிந்து நள்ளிரவுக்கு மேல் மாமி வீட்டுக்கு வந்தால், வாசல் ரூமில் ரவி படுத்துக் கொண்டிருந்தான். "என்னடா?" என்றேன்.
"பாலு ஒரேயடியா வாந்தியெடுக்க ஆரமிச்சாண்டா.. ரத்தவாந்தி.. என்னென்னவோ பெனாத்தினான்.. அவனை தாம்பரம் சேனடோரியம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க.. அம்மாவும் மாமாவும் அங்கதான் இருக்காங்க.. என்னை இங்க படுக்கச் சொல்லிட்டுப் போயிருக்காங்க.."
மறுநாள் பத்து மணிக்கு மேல் நாங்கள் நால்வரும் பாலுவைப் பார்க்கப் போனோம். ஆஸ்பத்திரியில் கொடுக்கச் சொல்லி பூரிக் கிழங்கு டிபன் கட்டிக் கொடுத்திருந்தார் மாமி.
பாலுவைத் தனிவார்டில் வைத்திருந்தார்கள். அவன் அப்பா உண்மையிலேயே அரண்டு போயிருந்தார். "நீங்க அவனைப் பாக்காதீங்க.. பயந்துடுவீங்க" என்றார். ரவியின் அம்மா விசும்பிக் கொண்டேயிருந்தார்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்.. நாங்க அவனோட ப்ரெண்டு" என்று தைரியம் சொல்லிவிட்டு ஜேம்ஸ் தலைமையில் உள்ளே நுழைந்தோம். அவர் சொன்னது போலவே பாலுவைப் பார்க்கப் பயமாக இருந்தது. பலத்த மூச்சுடன் தூங்கிக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் இருந்துவிட்டு வெளியே வந்தோம்.
"டாக்டரைக் கடிச்சுட்டாம்பா.. கை விரலை படக்குனு கடிச்சு.. எங்க வீட்டுக் குழந்தையா இப்படி.." என்று ரவியின் அம்மா அழுது புலம்பினார்.
பாலுவின் மரணம், எங்கள் நட்பு வட்டத்தின் முதல் மரணம். சற்றுத் திக்குமுக்காடிப் போயிருந்தோம். பேயா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று எங்களுக்கு ஆராயத் தோன்றவில்லை. நடந்ததை நடந்தபடி ஏற்றுக் கொள்ளும் பருவம்.
இரண்டு நாள் பொறுத்து ரவி வீட்டுக்குப் போனோம். ஆறுதலாக ஏதாவது பேசுவோம் என்று போனால் அங்கே தணிகாசலமும் என் மாமியும் இருந்தார்கள். பூசாரி உண்மையிலேயே அழுதார். "சொன்ன பேச்சு கேக்காம போயிட்டம்மா.. கவனமா இருக்கோணும்னு எத்தினி சொன்னேம்மா.. அந்தத் திலகந்தேன் வேசமாடி பாலுத்தம்பியை கல்லைத் தூக்கிப் போடச் சொல்லியிருக்கோணும்.. அவளை என்னா செய்யுறேன் பாருங்கமா.." என்று ஆவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.
"என்ன செய்யப் போறீங்க?" என்றேன்.
மாமி குறுக்கிட்டு, "டேய்.. இன்னும் காட்டேறி கழிப்பு போகலைடா.. இப்போ ரவிக்கு எதுவும் ஆயிடக்கூடாதேனு பயப்படறா மாமி.." என்றார்.
"காட்டேறியை விரட்டிருவோம் கவலைப்படாதீங்கம்மா" என்ற பூசாரி, இன்னொரு கழிப்புக்கான ஏற்பாடுகளை விவரிக்கத் தொடங்கினார்.
அடுத்தப் பௌர்ணமியில் காட்டேறி பூசை நடந்தது. ஈசுவை உண்டு இல்லையென்று செய்துவிட்டார்கள். ஆட்டை வெட்டி அவள் தலையில் கவிழ்த்ததும், ஏரியம்மன் கோவிலிலிருந்து சிந்தாளம்மன் கோவில் வரை அவளை ஒரு கயிறு கட்டித் திமிறத் திமிற இழுத்து வந்ததும், ரத்தம் கலந்த பொங்கலை அவள் உருட்டி உருட்டி வெறியோடு விழுங்கியதும், பூசாரியின் பச்சை பச்சையான திட்டுக்களும், உடுக்காட்டமும் திகிலூட்டின. எனினும், ஆஸ்பத்திரிப் படுக்கையில் பாலுவைப் பார்த்த அதிர்ச்சிக்கு இணையாகவில்லை.
முகமும் கைகளும் வெடித்து, நெற்றியில் கொப்புளங்களுடன், வலது கண் வெறும் குழிக் காயமாக, 'அஹ்ஹ்!' என்று கட்டுவிரியன் போல் உரக்க மூச்சுவிட்டுக் கொண்டு ஒரு பதின்ம வயது நண்பன் படுத்திருந்தக் காட்சியின் அதிர்ச்சி எங்களைப் பல நாட்களுக்கு இரவில் உறைய வைத்தது.
பிற கோடைகளில் நிறைய விசித்திரங்கள் நிகழ்ந்திருந்தாலும், பாலுவுடன் கழித்த நாட்களின் அதிர்ச்சி விசேஷமானது.ΨΞ◉
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடைசி பாரா வர்ணனைகள்....ஐயோ....!
பதிலளிநீக்குஅந்தக் குறியீடு... எங்கிருந்து பிடித்தீர்கள்?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅப்பாதுரை முதலில் என் பாராட்டுக்கள். இவ்வளவு தெளிவாக எழுத வேண்டுமென்றால் இவை நடந்தது நடந்தபடி இருந்தால்தான் முடியும். இல்லை கற்பனை என்றால் பிரமாதம். எது எது கற்பனை எது எது நிஜம் என்று தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாகிறது. திகிலுக்காக பாலுவை சாகடித்திர்ர்களா, இல்லை உண்மையிலேயே ரத்தம் கக்கி இறந்தானா.
பதிலளிநீக்குரொம்ப அதிர்ச்சியா இருக்கு. காலங்கார்த்தாலே கருமமே கண்ணாயினார்ன்னு படிச்சேன், ஏன்னா அவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க. ஒரு மர்ம படம் பாத்த உணர்வு உங்க எழுத்துல. superb! பாலுவின் மரணம் கொடுமை. ரத்தகாட்டேரி பூஜை, பித்தகாட்டேரி பூஜைன்னு அந்த ஈசுவை சித்ரவதை பண்ணினதை
பதிலளிநீக்குபடிக்கும்போது ரொம்ப பாவமா இருந்துது. ரொம்ப கொடுமைங்க இதெல்லாம். மனசை என்னமோ பண்றது.
அது என்னது முடிவுல ஒரு சூலம், மூணு பட்டை, ஒரு கோழிமுட்டை கண்ணு. ரத்தகாட்டேரி வராம இருக்க இதை வீட்டு வாசல் கதவுல வரைஞ்சு வெக்கணுமா?
இது என்னதான் கதைன்னாலும் கொஞ்சம் இல்லைங்க ரொம்ப ரொம்ப பயமாதான் இருக்கு. ஒரு ரெண்டு நாள் ஆகும் இந்த பயம் போறதுக்கு.
G.M.B. அவர்கள் எழுதி இருக்கா மாதிரி இந்த கதை முழுக்க முழுக்க கற்பனைனா உங்கள் கற்பனை திறனுக்கு hats off! கற்பனையும், நிஜமும் கலந்ததுன்னா எது உண்மையா இருக்கும், எது உங்க கற்பனைன்னே ஒரு வரி கூட தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நீங்க எழுதி இருக்கற விதம் பிரமாதம். பாலு இறந்தது நிஜமா? இப்படிதான் இறந்தாரா? நெனச்சு பாக்கவே பயங்கரமா இருக்கு.
பதிலளிநீக்குமூன்று பதிவுகளையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்தேன்
பதிலளிநீக்குஎங்களூரில் சிறு வயதில் பேயோட்டும் பல நிகழ்வுகளை
அப்படியே ஞாபகப் படுத்திப் போனது
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ஆவியின் ஆர்ப்பாட்டத்தை முழுக்க படிச்சு பயந்தாச்சு ... பால்யத்தில் புளிய மரம் அருகில் செல்லும் நேரங்களில் சட்டையை இறுக்க பிடித்துக் கொண்டு ஓடிய ஞாபகங்கள்... பருவத்தில் எட்டிபார்க்கும் இனம் புரியா உணர்வுகளை புரிந்து எடுத்து வைத்த இடங்களை ரசித்தேன்...
பதிலளிநீக்குபல்பொடி கம்பெனி, அந்த பக்கத்து சந்து, ஏரியம்மன் குளம், காலை மாலை காற்றடிக்கும் பம்மல், கூரை வேயும் தினம், அந்த செப்டிக் டாங்க் குதூகலம் என்று அத்தனைக்கும் நடுவில் சாம்பா,ஜேம்ஸ், ஸ்ரீதர், ரவி, துரை, பாலு என்று நடமாடுகையில் பாலுவை அவன் விடலைத்தனத்தைத் தனியாக அக்கறையோடு நீங்கள் விவரிக்கையில் இந்த மாதிரி கதைகளில் எழுதுபவரின் போக்குக்காட்டல் அது,ஈசுவின் ஆவேசம் வேறு யார் மீதோ என்று நினைத்தேன். நடுநடுவே முக்கியப் படுத்தியும் படுத்தாமலும் பூசாரி தணிகாசலம் வேறு அப்பப்போ தலை காட்டி சந்தேகம் கொடுத்துக் கொண்டிருக்கையில் மூன்றாவது பகுதியில் அவர் இல்லை என்று ஆன பொழுது, ஒரு அவசரகதியில் கதையை முடிதத உணர்வே மிஞ்சியது. சொல்ல வந்தது, இந்த மாதிரியான சந்தர்பங்களில் தனிமனிதர்கள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகளைக் குறித்தும் இருக்கலாம்.
பதிலளிநீக்குஅதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.
சொன்னவிதம் எக்ஸலண்ட். யதார்த்தம் படிக்கும் அத்தனை பேரையும் அந்த ஸ்பாட்டில் கொண்டு போய் இறக்கியதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எந்த அளவுக்கு என்றால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது போனது கூட நினைவில் நிற்காது போன அளவுக்கு.
ஹேட்ஸ் ஆஃப் அப்பாஜி!
இத்தனை ரகளைகளுக்கும் இடையே ரவியின் மாமி மிளிர்கிறார். அவரை சிருஷ்டித்த உங்கள் காரணமும் தெரிகிறது. அவர் நடமாட்டம் அற்புதமாக கதையில் பதிந்து போயிருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.
பதிலளிநீக்குஅதே மாதிரி கதையின் கட்ட கடைசி யில் வந்த பாலுவின் அப்பாவும்.
அவரில் ஒரு குணச்சித்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
'அந்த மாதிரி' அதுவே எல்லாம் என்கிற மாதிரியும் இல்லாமல், இந்த மாதிரியும் அடிக்கடி என்றில்லாமல்
நடுவான பொதுவான சொல்லேயே ஆகவேண்டிய விஷயங்களை குறி வைத்து எழுத வேண்டுமென்று ஆசை..
கடைசி இரண்டு பாராக்கள் தூக்கியடித்தன என்னை. பாலுவின் கோடை என்னுள்ளும் மறக்க முடியாததாய்ப் பதிந்து விட்டது. என்னைப் பொறுத்தவரை அப்பா ஸார் இன்னொரு சுஜாதா!
பதிலளிநீக்குதிகிலூட்டினாலும் ஆவலுடன் படிக்க வைத்தது உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள். தணிகாசலம்(?), காய்கறி குமார் என்று பலபேரை இன்னமும் நினைவில் வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பதிலளிநீக்குமொத்தமா படிச்சு நடுங்கிட்டிருக்கேன். இன்னி நைட் தூக்கம் போச்சு. பலிக்கு இன்னொரு பேரு வாடை மாத்துறதா? கோழி விவரம் ஓவர்.
பதிலளிநீக்குதிகிலுக்கு நடு நடுவே ஹ்யூமர் ரசித்தேன். தட்சிணாமூர்த்தி குரோம்பேட்டையிலிம் க்ளினிக் வச்சிருந்தார். Good man.
பின்னூட்டங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குபம்மல் ஒரு சுவாரசியமான ஊர். பேயோட்டம், குறி சொல்லுதல், பாம்பு பூஜை, கழிப்பு, காட்டேறி காவல், சுடுகாட்டுக் கொள்ளை, வெட்டியான் ஆவேசம், அக்கியெழுத்து, குட்டிச்சாத்தான் பூஜை, அனகாபுத்தூர்/நாகல்கேணியருகே கொள்ளிவாய் அடக்கல் என்று நிறைய அடையாளங்கள்.. எழுபதுகளின் நடுவில் எழுந்த வளர்ச்சி அலை பம்மலின் இந்த அடையாளங்களை அழித்து விட்டன.
geetha santhanam: தணிகாசலம் தான் மூத்த பூசாரி. அவருக்குப் பின் இரண்டு பேர், அதற்குப் பின் வேறு வேலையின்றி சொத்தெல்லாம் வளர்ச்சியில் விற்று/இழந்து பூசாரி வேலைக்கு வந்தவர் வேதாசலம் - இன்றைக்கு யார் இருக்கிறார்களோ? ஹ்ம்ம்ம்.. உங்கள் கேள்வியில் ஒரு கதைக்கரு ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்தேன். G.M.Balasubramaniam, மீனாக்ஷி: இது கற்பனைக் கதை. பேயோட்டம், கழிப்பு நிறையப் பார்த்திருக்கிறேன். இரண்டு பதின்ம வயது நண்பர்கள் அகால அசாதாரண மரணங்கள் அடைந்தது நிஜம். இருந்தாலும் இது கற்பனைக் கதை :). ஜீவி: சுவாரசியமான பின்னூட்டம். உலக நிகழ்வுகளை நான்கு permutation/combinationகளில் அடக்கலாம். right place/right time ஒரு எல்லை - wrong place/wrong time இன்னொரு எல்லை. முதல் எல்லையை ஒட்டியவற்றில் ஒரே சந்தோச மயம்; சுவாரசியம் குறைவு :) இரண்டாவது எல்லையை ஒட்டியவற்றில் சோகம் நம்பமுடியாவதவை அதிகம். அதனால் சுவாரசியமும் கூடுதல். கடவுள், பேய் எல்லாம் இதில் அடக்கம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவை சமூக, ஒழுக்கச் சிக்கல்கள். நான் எழுதி வரும் நாத்திகச் சிந்தனைப் பதிவுக்காக இதைப் பற்றி விரிவாக எழுதும் பொழுது காட்டேறி பற்றிய எங்கள் பிலாக் பதிவைப் படித்ததும் கதையாகச் சொல்லும் எண்ணம் உதித்தது. கதையின் நாயகமாக இருப்பது நாங்கள் நாலு பேர். கதை எங்களுக்கும் பாலுவுக்கும் இடையே விழுந்த எதிர்பாராத பாலம் பற்றியது. balu was at the wrong place at the wrong time. அதை அப்படியே கேள்வி கேட்காமல் எடுத்துக் கொள்ளும் வயதின் நிகழ்வுகள். நீங்கள் சொல்லியிருப்பது போல மற்ற எல்லாம் peripheral interaction. (ஈசுவின் அக்கா பாலுவைத் தேர்ந்தெடுப்பானேன்? தணிகாசலம் சொன்ன விளக்கத்தை எடுத்து விட்டேன் - கதைப் போக்கைத் திருப்புவதாகத் தோன்றியதால். தவறாக இருக்கலாம்). ஸ்ரீராம்: குறியீட்டில் முதலிரண்டும் கிரேக்க அரிச்சுவடி. கடைசி சும்மா.
அப்பா....ஜி இப்பிடியெல்லாம் பயமுறுத்தக்கூடாது.சாராய நீர்மோர்...எனக்கொரு கப் ப்ளீஸ் !
பதிலளிநீக்குஏங்க துரை, இப்போது "மூச்சா" போக துணைக்கு ஆள் சேர்க்கும் அளவு இப்படியா பயமுடுத்துவது !!
பதிலளிநீக்குஉங்கள் தொலைபேசி அழைப்பு கண்டேன். புதிய வேலையில் ரொம்பவே பிஸியாக இருப்பதால் அழைக்க முடிவதில்லை. நாற்ப்பத்தைந்து நாட்கள் ஆகிவிட்டது பிசினஸ் எடுத்துகொடுக்கவேண்டும் ! ப்ரெஷர் வாடிக்கையாக எப்போதும் போல் ஆரம்பித்து விட்டது. 200 பேர் கொண்ட ஒரு ஐ.டி. செர்விசெஸ் டீல் எடுக்க பிரயத்தனபட்டுக்கொண்டு இருக்கின்றேன். வந்தால் கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொள்ளலாம் !
nice , thank u
பதிலளிநீக்குஅப்பாஜி...உங்கள் கவிதைகளுக்கு உப்புமடச் சந்தியில விருது இருக்கு.வாங்கோ !
பதிலளிநீக்குhttp://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.html
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎங்கள் பாட்டி ஊரில் பேயோட்ட நிகழ்ச்சிகள் பார்த்து பயந்திருக்கிறேன். என் வகுப்புத் தோழி ஒருத்திக்கு பேய் பிடித்ததாக சொல்லி ஒரு மாதம் பள்ளிக்கு வரவில்லை.
பதிலளிநீக்குகதை அப்படியே கண் முன்னே காட்சிகளாக விரிய ஒரு சினிமா பார்ப்பது போல் இருந்தது.
கலக்குறீங்க அப்பாஜி
அப்பாதுரை சார் நீண்ட நாள் கழித்து உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இப்படி தெளிந்த நீரோடை போல் கோர்வையாக கதை எழுத எங்கு கற்றீர்கள். பேய் சம்பந்தமான நம்பிக்கைகள், அங்கு நடக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும்
பதிலளிநீக்குகண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி அப்பாதுரை சார்.
//the wrong place at the wrong time.//
பதிலளிநீக்குAndrea Kane's "Wrong Place,
Wrong Time" நாவல் வாசிக்கக் கிடைத்தது. நீங்கள் உபயோகித்திருந்த இந்த வார்த்தைப் பிரயோகமும் நினைவுக்கு வந்தது.
சினிமாவிலே பார்த்தது தான் பேயோட்டம் எல்லாம்; உங்கள் கதையில் உண்மையாகவே உணர்ந்தேன். பாலுவின் முடிவு மனதைக் கலங்க அடித்துவிட்டது. எழுத்துத் திறமை வியக்க வைக்கிறது. என்றாலும் ஏன் பாலு? இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே கடைசிவரையிலும்?
பதிலளிநீக்கு