2012/04/28

மீண்டும் சந்திப்போம்



திரும்பிப் பார்க்கையில் எனக்கே மலைப்பாக இருக்கிறது.

பிலாக் எழுதுவதைச் சொல்கிறேன்.

மூன்று வருடங்களுக்கு மேலாக எழுதி வந்திருக்கிறேன். எதற்காகத் தொடங்கினேன் என்பது சரியாக நினைவில்லை. அப்போது உடனிருந்த, உயிருடனிருந்த, நெருங்கிய நண்பர் அறிமுகம் செய்து வைத்தபோது விளையாட்டாகத் தொடங்கினேன் என்பது மட்டும் நினைவிருக்கிறது. எழுதிப் பழகப் பழக, சிறுவயதில் சரியாகப் படிக்காமல் விட்ட மொழியைக் கொஞ்சம் எட்டிப்பிடித்துப் பின் கட்டிப்பிடிக்கும் ஒரு வாய்ப்பை பிலாக் பழக்கம் கொடுத்திருப்பது இப்போது புரிகிறது.

எழுதத் தொடங்கிய போது ஆர்வம் இருக்கும். வேகம் இருக்கும். மனதில் அலையாக நிறைய சிந்தனைகள் எழும். என் வாழ்வின் அனுபவங்களையும் அங்கே இங்கே படித்ததையும் கலந்து, கதை கவிதை கட்டுரை என்று என்னென்னவோ எழுதிவிட்டேன். பிலாக் எழுதுவது ஒரு போதை போலாகிவிட்டது. புலிவாலைப் பிடித்த கதையாகிவிட்டது. பிலாக் எழுதுவதைப் பற்றி நான் பெருமையுடன் சொன்னபோது, என் மனைவி "இதற்குப் பதில் நாலு காசு சம்பாதிக்கும் வேலை ஏதாவது செய்தால் உனக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது" என்று அறிவுரை கொடுத்தாள். அதற்குப் பிறகு பிலாக் பற்றி அவளுடன் பேசுவதில்லை. எங்கே? மாதத்தில் மொத்தமாக அரை மணி அவளுடன் பேசினால் அதிகம். அவளாக வந்து என்னுடன் பேசினால் தான் அதுவும். இருக்கும் சச்சரவுகளில் இதை வேறு இழுப்பானேன்?!

ஒரு விதத்தில் மனைவி சொன்னதும் உண்மை. வேலை ஏதாவது செய்யலாம் தான். இங்கே நூலகத்தில் கீழே கிடக்கும் புத்தகங்கள் செய்தித்தாள் விடியோ டிவிடி எல்லாவற்றையும் அடுக்கி வைத்தால் சம்பளம் கொடுக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் அதைக் கூடச் செய்யாமல் பிலாக் எழுதுகிறேனே என்று தோன்றும். பிறகு, எழுத்தான என் எண்ணம் திடீரென்று மாயமாகக் கணினித் திரையில் உலக மக்கள் அனைவரும் படிக்கத் தோன்றுவதைப் பார்த்ததும் ஒரு சினிமா எடுத்தப் பிரமிப்பு தோன்றும். நூலக வேலையோ வேறு எதுவோ அந்தப் பிரமிப்பைத் தர முடியாதே என்று அடங்குவேன்.

பிலாக் தொடங்கிய காலத்தின் சிந்தனைகளும் வேகமும் மெள்ளக் குறைந்தாலும், ஆர்வம் மட்டும் ஓரளவுக்கு அப்படியே இருந்தது என்று சொல்வேன். தினம் ஒரு பதிவு என்று தொடங்கிய வழக்கம், வாரம் இரண்டு, பிறகு மாதத்துக்கு நான்கு எனக் குறைந்தது. சில நேரம் இரண்டு மாதங்களுக்கு எதுவுமே எழுதாமல் பிலாக் படித்தும் பிற பதிவுகளில் பின்னூட்டம் இட்டும் நிறைவடைவேன்.

அப்படி இப்படி என்று அடித்துப் பிடித்து ஒரு மைல்கல்லைத் தொட்டுவிட்டேன்.

இப்போது நீங்கள் படிப்பது என்னுடைய முன்னூறாவது பதிவு.

எழுதத் தொடங்கிய நாளில், பின்னூட்டம் வருகிறதா என்று நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பார்ப்பேன். என் நண்பர்களிடம் சொல்லிப் பின்னூட்டம் இடச் சொல்வேன். சில நேரம் நானே ஒரு புனைப்பெயரில் பின்னூட்டம் இட்டு மகிழ்வேன். அனானிப் பின்னூட்டங்களும் இட்டிருக்கிறேன். திடீரென்று முகம் தெரியாதவர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத்தொடங்கியதும் எனக்கு உற்சாகம் தலைக்கேறி விட்டது. சினிமா ஹீரோ போல் நினைத்துக் கொள்வேன். பின்னூட்டமிடுவதே பெரிது. போதாமல், அவ்வப்போது பின்னூட்டமிடுவதோடு எனக்குத் தனியாக இமெயில் அனுப்பி நட்பு பாராட்டிய நெஞ்சங்களை மறக்கவே முடியாது. நான் யார், எப்படிப்பட்டவன், என் குணாதிசயங்கள் என்ன என்று எதையும் கருதாமல்.. எழுத்தை மட்டும் வைத்து என்னை எடை போட்டுப் பழகியக் கனிந்த உள்ளங்களை அறிய வைத்தது பிலாக். அந்த மட்டில் இதைக் கண்டுபிடித்தவர்களுக்கும், அறிமுகம் செய்த என் நண்பருக்கும், படித்துப் பின்னூட்டமிடும் உம் போன்றவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இந்தப் பதிவுடன் நிறுத்திக் கொள்ளப் போகிறேன். இனித் தொடர இயலாது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னூறு ஒரு மைல்கல் என்பதனால் மட்டுமல்ல, நான் பிலாக் எழுதுவதிலிருந்து விலக இன்னொரு காரணமும் இருக்கிறது.

நேரம் கிடைத்தாலும், வரும் திங்கட்கிழமை முதல் கணினி கிடைக்காது என்பதே அந்தக் காரணம்.

தொடர்ந்த நன்னடத்தையின் காரணமாக, வரும் திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு, என்னைப் பரோலில் விடுதலை செய்கிறார்கள். வெளியுலகில் கணினி வசதி பெறும் அளவுக்கு என்னிடம் காசில்லை. மனைவியை ஒருமுறை சந்தித்துவிட்டு இங்கே சம்பாதித்த ஆறாயிரத்துச் சொச்சத்தில் பெரும்பகுதியை அவளிடம் அழப்போகிறேன். அதற்குப் பிறகு, பின்னூட்ட நண்பர்களான உங்களுடன் தொடர்பு கொண்டு ஒவ்வொருவராக வீடு தேடி வரப்போகிறேன். ஆதரவு தர மாட்டீர்களா என்ன?

42 கருத்துகள்:

  1. அவ்வ்வ்வ்... வொய் திஸ் கொலவெறி...?

    //சில நேரம் நானே ஒரு புனைப்பெயரில் பின்னூட்டம்//
    இந்த இடத்திலதான் லேசா டவுட்டு வர ஆரம்பிச்சுது...

    பதிலளிநீக்கு
  2. அந்தக் கடைசி பாரா.......... நெசமாவா சொல்றீங்க??????

    சொறிபிடிச்சவர் கையும் ப்ளொக் எழுதுனவர் கையும் சும்மா இருந்ததா சரித்திரமே கிடையாதுங்களே!!!!

    அதுவும் நசிகேதன் கதை எழுதுன கை.....

    வேணாங்க. கொஞ்சநாள் லீவு எடுத்துக்கிட்டு மறுபடி வந்து சேருங்க ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  3. எல்லோருக்கும் வருகிற சிறு இடைச் சோர்வுதான் என நினைக்கிறேன்
    இத்தனை ஆழமாக யோசிக்கிற அழகாக எழுதுகிற தங்களால்
    எழுதாமல் இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை
    ஒருவேளை எழுதுவதில்லை என முடிவு செய்தால்
    அது எங்களுக்குத்தான் இழப்பாக இருக்கும்
    மீண்டும் தங்களை எதிர்பார்த்து இருக்கும்....

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான சிறுகதை! மிகமிக ரசித்தேன். என்றும் உங்களைத் தொடர்பவன் நான் என்பதில் மகிழ்ச்சி எனக்கு. பதிவின் தலைப்பையே உங்களுக்குச் சொல்லி விடைபெறுகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. அப்பாஜி சார், இந்த கடைசி பாரா புரியவில்லை. ப்ளாகில் தெரிவிக்க முடியாவிட்டாலும் மின் அஞ்சலில் தெரியப் படுத்தலாமே. ஒரு நண்பர்-- தொடர்ந்து ஊக்கப் படுத்தி வந்தவர் நீங்கள்.நீங்கள் எழுதுவதை நிறுத்தி விட்டால் இழப்பு எங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  6. அப்படி எல்லாம் விட்டுவிட மாட்டோம். தொடர்ந்து எழுதியே ஆகவேண்டும். இல்லையேல் இங்கிருந்து உங்கள் இருப்பிடம் வரை தொடர் மனித சங்கிலி இணைப்புப் போராட்டம் ஆரம்பமாகும்.

    பதிலளிநீக்கு
  7. இது சிறுகதையா அல்லது தம் கதையா?
    உங்களை அமெரிக்காவிலுருந்து வந்த நண்பராக ஜவர்லால் சொன்னது சரியென்றால் இது சிறுகதைதான்..

    எப்படியும் காமச்சேறு உங்களுக்கு மறக்காது என்று நினைக்கிறேன்...

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. என்னய்யா சொல்றீர்? தலையை சுத்துது கொஞ்சம் தெளிவா சொல்லும் ஓய்; இப்படியெல்லாம் எழுதினா மூன்னூராவது பதிவுக்கு வாழ்த்துக்கள்னு யாரும் சொல்ல மாட்டாங்க ஆமா !

    துளசி மேடம் சொன்னது தான் சரியென படுது ! இந்த பைத்தியம் தெளிவதெல்லாம் கஷ்டம் !

    பதிலளிநீக்கு
  9. //கணேஷ் சொன்னது…
    அற்புதமான சிறுகதை! மிகமிக ரசித்தேன். //

    *****

    ஒருவேளை இது தான் விஷயமா?

    பதிலளிநீக்கு
  10. இது அப்பாதுரை டச் இல்லாத கதை... டச் இல்லாமலும் எழுத முடியும் என்பதை நிரூபிப்பதற்க்கா ?

    நீங்கள் உச்ச பிளாக்கர்...சராசரி பிளாக்கரின் உணர்வுகளை பிரதிபலிப்பதற்க்காக எழுதியதா?

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்காக பால் கோவாவுடன் காத்திருக்கிறேன் ... என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் முடிந்ததை செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. உங்களது சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சொல்ல நினைப்பது யாரை நினைத்துச் சொல்கிறோமோ அவர்களைச் சென்றடைதல் வேண்டும் என்றேன்நான். அதற்கு சொல்ல வருவதே சரியாய் சென்றடைகிறதா என்பதை விட சொல்ல வேண்டும் என்பதே சரி என்றீர். இப்போதும் நீர் சொல்ல வருவது சரியாய் சென்றடைகிறதா என்பதும் சந்தேகமே. இதில் வேறு , சரியாகப் படிக்காத மொழியை எட்டிப் பிடித்துக் கட்டிப் பிடிப்பதாக எழுதுகிறீர்.

    பதிலளிநீக்கு
  13. மன்னிக்கவும் ..பால் கோவாயில்லை .... பால் தெரட்டிபால்

    பதிலளிநீக்கு
  14. அப்பாஜி...இது சரில்ல.அழவைக்கைதாங்கோ !

    பதிலளிநீக்கு
  15. முந்நூறாவது பதிவை இப்படி அமைக்கலாம் என்று தீர்மானித்ததே
    முன்னூற்று ஒன்றாவது பதிவை எதிர்பார்க்க வைத்து விட்டது.. அந்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. மேலும் பல நுறு பதிவுகள் காண வாழ்த்துக்கள். உங்கள் திறமையும் ஆர்வமும் மீண்டும் உங்களைப் ப்ளாக் பக்கம் இழுத்து வருமென்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாஏப்ரல் 29, 2012

    கதையை படிக்க ஆரம்பித்ததும் என்னடா இது என்று ஒரு யோசனையுடனேயே தொடர்ந்தேன். ஹுசைனம்மா அவர்கள் சொன்னது போல் பின்னூட்டமிடும் வரிகளில்தான் எனக்கும் கொஞ்சம் இடறியது. கடைசி பத்தி படித்தபோது கொஞ்சம் கண்கலங்கி விட்டது.
    இப்படி எல்லாம் கூட ஒரு கதையை எழுத முடியுமா! ஒரு பதிவரின் மனதில் இப்படி எல்லாம் கூட எண்ணங்கள் ஓடுமா! சில இடங்களில் உங்கள் எழுத்தின் வலிமையை உணர்ந்தேன். மனதை கலங்கடித்து விட்டது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. ஆகா! வாங்களேன்.. உங்களுக்கு இல்லாத ஆதரவா? போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்து வீடு தான் எங்க வீடு. பெரிய நாய் இருக்கும் பாருங்க அந்த வீடு.. நாயைப் பாத்து பயந்துடாதீங்க.. கடிக்குமே தவிர குரைக்காது. வாங்க,வாங்க.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லாஏப்ரல் 29, 2012

    //ஆகா! வாங்களேன்.. உங்களுக்கு இல்லாத ஆதரவா? போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்து வீடு தான் எங்க வீடு. பெரிய நாய் இருக்கும் பாருங்க அந்த வீடு.. நாயைப் பாத்து பயந்துடாதீங்க.. கடிக்குமே தவிர குரைக்காது. வாங்க,வாங்க//

    :))))

    பதிலளிநீக்கு
  20. அன்பின் அப்பாதுரை சார்,

    கலக்கிட்டீங்க.... என்ன சொல்றது. அசந்து போயிட்டேன்... இப்படிக்கூட எழுத முடியுமான்னு...

    அன்புடன்
    பவள சங்கரி.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லாஏப்ரல் 29, 2012

    This is why i always comment anony. varttaa?

    பதிலளிநீக்கு
  22. முழுசா ஒரு நாள் ஆச்சு, இது கதையா நிஜமான்னு உணர்ந்து கொள்ளவே அப்பாதுரை சார். கொஞ்சம் கலங்கடித்து விட்டீர்கள் என்பது உண்மைதான். கடைசியில் எங்க எல்லாரையும் வச்சு காமெடி
    பண்ணீட்டிங்களே. எது எப்படியோ எங்க வீட்டிற்கு எப்ப வர்றீங்க?

    பதிலளிநீக்கு
  23. நான்காம் ஆண்டு நிறைவில் நானூறாவது பதிவுக்கு வாழ்த்த வருவோம் மீண்டும்!

    பதிலளிநீக்கு
  24. மிகச் சரியாய் சொன்னீர்கள். புலிவாலைப் பிடித்த கதைதான். நானும் நடுவே வாலை விட நினைத்து, மறுபடியும் பிடித்துவிட்டேன்.
    இன்னும் நசிகேதன் மாதிரி நிறைய அறிமுகங்கள் தமிழுக்கு வேண்டியிருக்கிறதே. இடைவெளி விட்டு வாருங்கள். அது சரி ...மதுரைக்கு எப்ப வர்றீங்க?

    பதிலளிநீக்கு
  25. ரசித்தேன். 'கடிக்குமே தவிர குரைக்காது' கமெண்ட் வரிகள் உட்பட!

    பதிலளிநீக்கு
  26. அமைதியாக வாழ வாழ்த்துக்கிறேன் நண்பரே !

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லாமே 01, 2012

    கணக்குல புளி.. பதிவெல்லாம் கூட்டிப் பாத்தா இருநூறு தான் தேறும் போலிருக்குது, அதுக்குள்ளே முனூருனு விழா எடுக்கற?

    மாட்டனே.. இனிமே பேர் போட்டு கமெண்ட மாட்டனே.. பட்டா இன்னா கிலி கெளபிட்ட நீ!

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லாமே 01, 2012

    ரத்தகாட்டேரி ஒரே கிலி! மீண்டும் சந்திப்போம் ஒரே கலக்கம்! இப்போ பூச்சாண்டி படமா! யம்மா! பாக்க கொஞ்சம் பயமாதாங்க இருக்கு!
    ஏங்க, எதுக்குங்க இப்படி ஒரே பயமுறுத்தற வெறி!

    பதிலளிநீக்கு
  29. அனானியாக கருத்து தெரிவித்திருப்பது நீங்களான்னு தெரியணுமே 

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லாமே 01, 2012

    இப்ப இதையேதான் நான் கேட்க வந்தேன் கீதா! பாத்தா நீங்க கேட்டுடீங்க! :)

    பதிலளிநீக்கு
  31. முன்னூறாவது பதிவு ..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  32. வரும் திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு, என்னைப் பரோலில் விடுதலை செய்கிறார்கள். ????!!!!

    பதிலளிநீக்கு
  33. லேபிள் லேபிள்னு ஒண்ணு இருக்கே. அதில் புனைவு, கதை என ஏதோ ஒண்ணு இப்போதாவது சேர்த்திடுங்க:)!

    பதிலளிநீக்கு
  34. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    இது கதை. இந்தக் கதைக்கு நிஜப் பின்னணி கொடுத்தால் punch line தாக்கம் கூடுதலாக இருக்கும் என்று நினைத்தேன். எங்கேயோ இடறியிருக்கிறேன். lesson learned, ஜிஎம்பி சார்.

    கதையென்று புரிந்து கொண்டு பதைத்துக் கலங்கியவர்களுக்கு நன்றி (?). புரியாமல் என்னை விசாரித்துக் கலங்கியவர்களுக்கும் நன்றி (!). அட்வான்சாக முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி :) (அந்த மைல்கல்லைத் தொட இன்னும் ஒரு வருசமாவது ஆகும்).
    புரிந்தும் புரியாமலும் என் மனம் ஆற இமெயில் அனுப்பியவர்களுக்கும் நன்றி.

    சுந்தரராமன்.. அதுக்காக திரட்டிப்பால் இல்லனு சொல்லிறாதீங்க please! எனக்கு அநியாயத்துக்குப் பிடிச்ச ஒரே ஸ்வீட் அதான் சார்!
    ராமசுப்ரமணியன் - ரசித்தேன். 'கடிக்கும் குரைக்காது' இன்னொரு கதையில் உபயோகப் படுத்திக்கிறேன்.
    அனானி சிஐடி யாரென்று ஒரு ஐடியா உண்டு, கீதா சந்தானம். இரண்டு பகுதி கொண்ட 'ம்' என்று முடியும் பெயருக்குச் சொந்தக்காரர் :-).
    (or, படித்ததும் எனக்கு தொலைபேசி குய்யோ முய்யோ என்று கலங்கி, "அதான் அடிக்கடி கண்ட நேரத்துல போன் பண்றீங்களே, ஜெயில்ல இருந்தா நான் செல்போன் தூக்கிட்டா அலைய முடியும்?" என்றதும், "அப்படியா? சும்மா பயமுறுத்தலா..? ஹிஹிஹோஹீஹி" என்று காட்டேறி போல் சிரித்தவருக்கு, பதிவுகளை எப்படிக் கணக்கிடுவது என்று சொல்லிக் கொடுத்தேன். அவராகவும் இருக்கலாம். காரணம், அவர் கணக்கில் புதுப்புளி)

    பதிலளிநீக்கு
  35. ஆ! லேபில். இப்போ சேர்த்திடறேன். நன்றி ராமலக்ஷ்மி. (ஆனா சுவாரசியம் போயிடுமோ?)

    பதிலளிநீக்கு
  36. அப்பாதுரை சார்... ஹி ஹி கதைதானே...சிலசமயம் கதைகள் நிஜம் போலவும் நிஜங்கள் கதை போலவும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  37. ஐயோ துரை, ஏதோ புது கம்பெனி ஆரம்பித்திருப்பதால் பிஸி என்று பார்த்தால் - ரொம்பவே டென்ஷன் பண்ணிவிட்டாய். இது எழுதி அடுத்து வயதானவரின் மரணத்துக்கு காத்திருப்பது படித்தவுடன் யோசித்து இருக்கவேண்டும். ரொம்பவே பீலிங் தான் போ. எல்லா கருத்துகளையும் படித்தால் தான் எனக்கு புரிகின்றது !! நீ எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ் இனி உடனே சாகும் ! (நான் எழுதினால் - தமிழ் இனி மெல்ல சாகும் !!)

    நானும் எழுதுவதையோ / பிறர் ப்ளாக் படிப்பதையோ நிறுத்தியது இதே போல் தான் - சரக்கு காலி ஆனது என்னுடைய ப்ரோப்லேம் வேறு !! புதிய பலான கதை எழுத ஆரம்பித்து நிறுத்தியது உட்பட. இதற்கு நடுவில் ஒரு பதினைந்து நிமிட காமெடி டிராமா வேறு எழுதிக்கொண்டு இருக்கின்றேன். கிரேசி மோகன் முன்பு போடுவதாய் இருந்து என் நண்பர் குழாமுக்கு கொடுக்கமால் ஏதோ திராபை நகைச்சுவை என்று படுத்தி எடுத்துவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  38. படிக்கையிலேயே கதைனு புரிகிறது. பின்னூட்டங்களைப் பார்த்தால் எல்லாரையும் ஒரு கலக்குக் கலக்கி இருக்கீங்கனு புரியுது! இதுவும் ஒரு புது மாதிரியாத் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  39. இப்படிக்கூட பதிவா:)
    துரை ,கலக்கறதுலியே பிரமாதக் கலக்கல். பயப்படும் அளவிற்கு.சரியான சுழி. நான் பதிவைச் சொல்கிறேன்.:)

    பதிலளிநீக்கு
  40. தொரே தொரே... ரசிக்க வைத்ததுப்பா ஏப்ரல்ல போட்ட பதிவுக்கு ரொம்ப தாமதமா பதில் போடுறேனோ??? ஆமாம் ஆமாம் ரொம்பவே தாமதம் தான்... இல்லன்னா இப்படி ரசித்திருக்க தான் முடியுமா? படைப்போடு கமெண்டுகளும் சேர்த்து தான்.. :)

    எப்படி எல்லாம் ஜித்து பதிவு போடறீங்களோ... நீங்க தூங்கிண்டு இருந்தாலும் உங்க சிந்தனா சக்தி மட்டும் எப்பவும் எதுனா விஷயங்களை சேர்த்துட்டு இருக்குமோ?

    என்ன ஒரு கற்பனா சக்தி? ரசித்தேன் ரசித்தேன்... கடைசி வரி டச்சிங்பா... வாங்க வாங்க அத்தனை பேரு வீட்டுக்கும் மரியாதையா வந்துருங்க சொல்லிட்டேன் இல்லன்னா கொன்னேப்புடுவேன் உங்களை.. அன்புக்கட்டளைன்னா அது இது தான் அப்டின்னு நீங்க மனசுக்குள்ள சொல்றது எனக்கு கேட்டுடுத்து :)

    எங்க வீட்டு நாய் கடிக்கும் குரைக்காது... ரசித்து சிரித்தேன்..

    திரட்டுப்பால் எங்க கிடைக்கும்???

    நான் ரொம்பவே லேட்டா இந்த பதிவை படிச்சதால பயப்படலையே... :)

    அசகாய மனுஷன்யா நீர்... :) (காஷ்யபன் சார் ஸ்டைல்ல வாசிக்கவும்)

    பதிலளிநீக்கு