2012/04/09

பாலுவின் கோடை



        1        2


    வி வீட்டில் ஹோமம் புண்யாசனம் என்று கூத்தடித்தார்கள். குரோம்பேட்டை போனால் வீட்டில் அபிராமி அந்தாதி மற்றும் மகிஷாசுரமர்த்தனி சுலோகங்களை உருட்ட வைத்தார் என் அம்மா. மாமி வீட்டிற்கு வந்தால் கந்தசஷ்டி கவசம், காத்யாயனி காயத்ரி என்று புதிதாக ஏதாவது கிளப்பிப் பாராயணம் செய்யச் சொன்னார்கள். சாம்பா வீட்டில் ருத்ரம் சொல்லத் தொடங்கினார்கள். ஜேம்ஸ் வீட்டில் தோமையார் அகவல், சாக்காடு அறத்தோத்திரம் என்று நோகடித்தார்கள். வீட்டுக்குப் போவதற்கே பயந்தோம். "பேய்த்தொல்லையே பரவாயில்லைடா" என்றான் சாம்பா. பேயை நாங்கள் வீட்டுள் கொண்டு வந்தோம் என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்ததோ இல்லையோ, எங்களுக்கு வந்தது. அதனால் இரண்டு நாளாக நாங்கள் உண்டு, சிந்தாளம்மன் கோவிலில் சீட்டாட்டம் புக் க்ரிகெட் அல்லது சைக்கிளில் ஊர் சுற்றல் உண்டு, என்று இருந்தோம். பெண் குரலில் சீறியதற்காக பாலு எதுவும் சொல்லவில்லை. நாங்களும் அதிகம் கேட்கவில்லை. ஒரே ஒரு முறை "ஏண்டா பாலு அப்படிப் பேசினே?" என்று கேட்டபோது மட்டும், பாலு தலையை ஆட்டி மர்மமாகச் சிரித்தான். அடுத்தக் கணமே இயல்பாகிவிட்டான். "ஒண்ணுமில்லடா" என்று எங்களையும் அடக்கிவிட்டான்.

மூன்றாம் நாள் மதியம் ஈசு வந்தாள். பாலுவுக்கு அவள் மேல் கடுங்கோபம். அனாவசியமாக என்னைப் பயமுறுத்தியதால் இப்படி எல்லார் வீட்டிலும் தினம் நோக வேண்டியிருப்பதைச் சொல்லித் திட்டினான். அவள் ஏதோ சொல்ல, இருவரும் வாக்குவாதம் செய்கிறார்கள் என்று நினைக்கும் பொழுதே அடிதடிக்குப் போய்விட்டது. ஈசு ஏறக்குறைய பாலுவின் உயரம். பளாரென்று கன்னத்தில் அறைந்துவிட்டாள். பாலுவுக்கு அவமானமும் ஆத்திரமும் மேலோங்கினாலும் பெண்ணை எப்படி அடிப்பது என்ற தயக்கம். ஈசுவோ தயங்காமல் மறுகன்னத்தில் அறைந்தாள். இயேசுவுக்கு பொறுமை இருந்திருக்கலாம், பாலுவுக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. ஈசுவின் தலைமுடியை இழுத்துக் கழுத்திலும் கன்னத்திலும் அறைந்தான். அவள் திமிறி பாலுவின் முகத்தில் துப்பினாள். பாலுவின் குத்து சரியாக ஈசுவின் நெற்றியில் விழுந்தது. திக்குமுக்காடிப் போனாள். தளராமல் பாலுவை வேகமாகச் சுவரோரம் தள்ளி அவன் மூக்கைக் கடித்து முகத்தில் ரத்தம் வரும்படிக் கீறிவிட்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த எங்களில் ஜேம்சுக்கு முதலில் விழிப்பு வந்தது. ஓடி இருவரையும் விலக்கினான். உதவினோம். பெண்ணிடம் அடிவாங்கிவிட்டோமே என்று பாலுவுக்கு பெரும் அவமானம். எதுவுமே பேசாமல் ரவியின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டான். ஈசுவை ஏதோ கேட்கப் போன ஜேம்சை அவள் எச்சரித்துவிட்டு பல்பொடி கம்பெனி பக்கமாக நடக்கத் தொடங்கினாள். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சாம்பா வீட்டுக்குப் போக முடிவெடுத்தோம்.

அந்நாள் பம்மலில் காலை மாலை என்று எந்த வேளையிலும் காற்றடிக்கும். எங்கள் வீடுகளைச் சுற்றிலும் ஏரியோ குளமோ இருந்ததால் கொஞ்சம் இதமாகவே இருக்கும். சாம்பா வீட்டு மொட்டை மாடியில் அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்கள், அசந்து தூங்கி விட்டோம். சாம்பாவின் தங்கை "சிவா சிவா" என்று கூவிக்கொண்டே மேலே வந்தவள், எங்களையெல்லாம் பார்த்துத் திடுக்கிட்டு நின்றாள். எழுந்தோம். சாம்பாவுக்காக எடுத்து வந்த காபியை ஜேம்ஸ் வாங்கி ஒரே வாயில் குடித்தான். "இன்னும் நாலு கப் எடுத்தா" என்றான். "வந்து நீயே எடுத்துக்க" என்று அவள் ஓடினாள்.

"போய் பாலுவைப் பார்ப்போம் வாங்கடா" என்று கிளம்பிய ஜேம்சைத் தொடர்ந்தோம். பாலு வீட்டில் இல்லை. "டேய், ரவி.. எங்கடா உங்க மாமா பையன்?".

"எனக்கெப்படிரா தெரியும்? நானே உங்ககூடத் தானே இருந்தேன்?"

சைக்கிளில் அங்கே இங்கே சுற்றிவிட்டு சிந்தாளம்மன் கோவில் பக்கம் வந்தோம். எங்கள் வீட்டில் மறுநாள் கூரைவேயும் தினமானதால் அன்று சீக்கிரமே வேலை முடித்துக் கிளம்பிவிட்டார்கள். "டேய்.. உங்கூட்ல முழுக்க சுவர் எழுப்பிட்டாங்கடா" என்று ஜேம்சும் சாம்பாவும் எங்கள் வீட்டுக்குள் தாவியேறிப் போனார்கள். கோவில் பின்புறச் சுவரோரமாக நின்றப் பூசாரி தணிகாசலத்தைப் பார்த்த ரவி, "பூசாரிண்ணே! பாலுவைப் பாத்திங்களா?" என்றான். "இல்லியப்பா" என்ற பூசாரி, "இந்தப் பக்கம் வராதிங்க கண்ணுங்ளா" என்றார்.

அதற்குள் நாங்கள் அங்கே வந்துவிட்டோம். பூசாரி எதிரே தரையில் ஒரு ஆட்டுக்குட்டி செத்துக் கிடந்தது. உடலில் ரத்தக்காயம். அருகே மண்டியிட்டு ஒரு குருவன் உட்கார்ந்திருந்தான். பேயோட்டங்களை முன் நின்று நடத்தும் குருவன். பீடி புகைத்தபடி ஆட்டுக்குட்டியைச் சுற்றி மஞ்சள் பொடியினால் ஒரு வட்டம் போட்டுக் கொண்டிருந்தான். "ஊர்ல காட்டேறி எறங்கிட்டா. இது காட்டேறிக் கடியாக்கும்" என்றார் பூசாரி.

    திடீரென்று ஜேம்ஸ் ஓடிவருவதைக் கவனித்தோம். 'ஷ்! இங்க வாங்க' என்று சைகை காட்டினான்.

எதுவும் புரியாமல் அவன் பின்னால் சென்றோம். "சத்தம் போடாம வாங்கடா" என்று எங்களை சமையலறை ஜன்னலுக்கு அழைத்துச் சென்றான். எங்கள் வீட்டின் பின்னால் கிணற்றைத் தாண்டி செப்டிக் டேங் கட்டுவதற்காகக் குழி தோண்டியிருந்தார்கள். குழிக்குள் பாலுவும் ஈசுவும்! இங்லிஷ் சினிமா போல் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்!

ரவிக்குப் பொறுக்கவில்லை. "டேய் பாலு!" என்று கூவினான். சாம்பா அவர்களைக் கைகொடுத்து மேலேற்றினான். ஈசு சிரித்துக்கொண்டே "வரட்டா ஐரே?" என்று என் தலைமுடியைக் கோதிவிட்டு ஓடினாள்.

"இப்ப என்ன ஆயிருச்சுன்ற? சண்டை போடத்தான் வந்தேன்.. அவளும் இங்கத்தான் இருந்தா. என்ன ஆச்சுனு தெரியலே.. திடீர்னு அவளாத்தான் கட்டிப்பிடிச்சா" என்ற பாலுவை ரவி அடக்கினான். "நிறுத்துடா. அடுத்த வருசம் நீ எஸெல்சி.. இதென்னடா? கண்டவளோட.. அன்னக்கு சினிமா கூட்டிட்டு வந்தே.. இன்னக்கு..கருமம் கருமம்" என்று தலையிலடித்துக் கொண்டான்.

".. ஏண்டா எங்கப்பன் மாதிரி பதட்டமாவுற? சும்மா கிஸ்ஸடிச்சோம். அவ்ளோ தான்.. விடுறா.. இருந்தாலும் ரொம்பத்தான் கிஸ்ஸடிச்சாடா.. வாயெல்லாம் வலிக்குது" என்று எங்களைக் கடுப்பேற்றிக் கொண்டிருந்த பாலு, வழியில் திடீரென்று வருத்தப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. "அவளைத் தொட்டிருக்கக் கூடாது.. டேய் ரவி.. அத்தை கிட்டே சொல்லிறாதே.. இன்னும் ஒரு வாரம் தானே..?" என்று புலம்பிக் கொண்டே வந்தான்.

ரவியின் வீட்டுக்குள் நுழைந்ததும் ரவியின் அம்மா, "பாலு.. ஏம்பா உன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு? அடி பட்டிருக்காப்ல இருக்கு?" என்றார். முகத்தில் கீறியதைச் சொல்கிறார் என்று எண்ணி, "ஒண்ணுமில்லேத்தே.. எங்களுக்குள்ள சண்டை.. இப்போ சரியாயிடுச்சு" என்றான் பாலு.

"இல்லப்பா வாயெல்லாம் வீங்கியிருக்கே?" என்று அவர் விடாமல் அவன் முகத்தைத் தொட்டுப் பார்த்தார். அடுத்து அலறினார்.

அவருடைய அலறலில் நாங்களும் பயந்துவிட்டோம். பாலு தன் வாயைத் தொட்டுப் பார்த்தான். "என்னடா, எதுனா தெரியுதா?" என்றான் எங்களிடம்.

ஜேம்ஸ் மெள்ள, "டேய்.. உனக்கு காட்டேறிப் பல்லு வந்திருக்குதுடா.. ரெண்டு ஓரத்துலயும்.. கோரப்பல்லு நல்லாத் தெரியுது" என்றான்.

    க்ருஷ்ணா நகரில் தட்சிணாமூர்த்தி க்ளினிக்குக்கு பாலுவுடன் விரைந்தார் ரவியின் அம்மா. நாங்களும் தொடர்ந்தோம். பல்லைப் பார்த்த டாக்டர், "ஒண்ணுமில்லே.. சில சமயம் இப்படி வளர்ச்சி வரும். நாளைக்கு ஆர்தோடான்டிஸ்ட் கிட்டே கூட்டிட்டுப் போயிருங்க.. இதெல்லாம் சாதாரணம்" என்று தி.நகரில் ஒரு மருத்துவமனைக்கு சீட்டெழுதிக் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் "என்னமோப்பா.. இருண்டதெல்லாம் பேயாத் தெரியுது" என்ற ரவியின் அம்மா, எங்களுக்கு நன்றி சொன்னார். "பாலு, நீ இனிமே எங்கயும் போக வேண்டாம்பா. அண்ணா வர வரைக்கும் வீட்டுக்குள்ளயே இருக்கணும். கறாரா சொல்லிட்டேன்" என்றார். பாலு சாதுவாக "நீ சொன்னா சரி அத்தே" என்றான்.

பாலு-ஈசு-கோரைப்பல் பதட்டத்தில், இறந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தது எனக்கும் ரவிக்கும் மறந்தே போனது.

அன்று இரவு குரோம்பேட்டை போக வேண்டியிருந்தது. மறுநாள் அதிகாலை தாத்தாவுடன் சைக்கிளில் பம்மல் வரும்பொழுது திருநீர்மலை ரோடருகே வந்ததும், "எலே.. உன்னோட ப்ரென்டு பாலு.. சல்லிப்பய.. அவன் கிட்ட ஜாக்கிரதையா இரு" என்றார். "சித்தாளோட சுத்தறான்..நேத்து மத்யானம் அவன் தணிகாசலம் வீட்டு ஆட்டைக் கடிச்சிட்டிருந்தான்.. கண்ணால பாத்தேன்" என்றார்.

    தாத்தாவை வீட்டில் இறக்கிவிட்டேன். அன்றைக்கு கூரை வேய்வதால் எல்லாருக்கும் காலையில் விருந்து சாப்பாடு என்று கூட்டமான கூட்டம். தாத்தா என்னைப் பரிமாறச் சொன்னார். கடுப்போடு ஒரு மணி நேரம் வேலை செய்துவிட்டு ரவி வீட்டுக்குப் போனேன். வீடு அமைதியாக இருந்தது. ரவி மட்டும் இருந்தான்.

"விஷயம் தெரியாதா? டேய்.. ஈசுவுக்குப் பேய் பிடிச்சிருச்சுனு தணிகாசலம் வந்து சொன்னான்.. அவனோட ஆட்டைக் கடிச்சது ஈசு மேலே வந்தக் காட்டேறியாம்.. காட்டேறி கபால பைரவினு என்னென்னவோ சொன்னான்.. பசங்களை கவனமா இருக்கச் சொல்லுங்கனு சொல்லிட்டுப் போனான்.. சொல்லி வச்சாப்புல பாலுவுக்கு பல்லுல ரத்தம் வரத் தொடங்கிச்சு.. என்னால பொறுக்க முடியலே.. பாலுவையும் ஈசையும் உங்க வீட்டு செப்டிக் டேங்க்ல பாத்ததையெல்லாம் எங்கம்மாட்டே சொன்னேன்.. அம்மா பாலுவோட உங்க மாமி வீட்டுக்குப் போயிருக்காங்கடா"

"டேய்.. ஆட்டைக் கடிச்சது ஈசு இல்லைடா.."

    சாம்பா, ஜேம்ஸ், ஸ்ரீதர், நான் எல்லோரும் மறுநாள் ரவி வீட்டில் கூடினோம். பாலு வாயில் கட்டுப் போட்டிருந்தார்கள். முதல் நாள் ரவியின் அம்மாவும் என் மாமியும் அவனைத் தி.நகர் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் கோரைப்பல்லைப் பிடுங்கிவிட்டிருந்தார்கள். அனைவரின் அம்மாக்களும் ஸ்ரீதரின் அப்பாவும் வந்திருந்தார்கள். ஸ்ரீதர் எங்களுடன் அவ்வளவாகச் சுற்றவில்லையெனினும் அவன் வீட்டிலும் அழைத்திருந்தார்கள். பூசாரி தணிகாசலம், குருவன் இருவரும் வந்திருந்தார்கள். அவர்களுடன் இன்னொரு முண்டாசு ஆசாமி. முண்டாசின் முகத்தையே பார்க்க முடியவில்லை.

ரவியின் வீட்டில் பேயோட்டும் ராசிச் சடங்கு செய்யப் போவதாகச் சொன்னார்கள். ஈசுவின் நடவடிக்கைகள், இறந்த ஆட்டுக்குட்டி, பாலு-ஈசு நெருக்கம், ஈசுவின் பேய்வெறி, பாலுவின் பல் வளர்ச்சி எல்லாம் சேர்ந்து இனி எதையும் சாதாரண நிகழ்வாக ரவியின் அம்மாவால் எடுக்க முடியவில்லை.

"காட்டேறி வந்திருச்சும்மா" என்றான் குருவன். "கருப்பாவும் வெளுப்பாவும் உலாத்துது.. பச்சைப் புள்ளங்க ரொம்பக் கவனமா இருக்கோணும்"

ரவி வீட்டு மாடியில் நாலு கம்பம் நட்டு ஒரு பெரிய ஜமக்காளத்தை கூரை போல் கட்டியிருந்தார்கள். தரையில் நாலடி விட்டத்துக்கு ஒரு வட்டம் வரைந்திருந்தார்கள். வட்டத்தின் வெளியே நான்கு திசைகளிலும் எடையான பாறாங்கல் நாலு வைத்திருந்தார்கள். கல்லில் கரிக்கட்டியினால் ஒரு முகம் வரைந்திருந்தார்கள். ஒரு முகத்தை மஞ்சளிலும் இன்னொரு முகத்தைக் குங்குமத்திலும் மாற்றிப் பூசியிருந்தார்கள்.

வட்டத்தையொட்டி ஒரு முக்கோணம் வரைந்திருந்தார்கள். முக்கோணத்தின் மூலைகளில் அரிசிமாவு குவித்திருந்தார்கள். மாவைக் குழியாக்கி ஒவ்வொரு குழியிலும் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்திருந்தார்கள்.

வட்டத்தின் முன்னும் முக்கோணத்தின் முன்னும் ஒற்றைப் புதுச் செருப்பு வைத்திருந்தார்கள்.

அருகே இரண்டு ப்லேஸ்டிக் வாளிகளில் மஞ்சள் கலந்தத் தண்ணீர். ஒரு கூடையில் பிரித்து வைக்கப்பட்டிருந்த வேப்பிலைக் கொத்துகள். இன்னொரு சிறு கூடையில் பத்துப் பதினைந்து முழுதும் கனியாத எலுமிச்சைப் பழங்கள். நாலைந்து கிண்ணங்களில் குங்குமம், மஞ்சள் பொடி, விபூதி, அரிசிப்பொறி. அதையொட்டி அவசரமாக இழைக்கப்பட்ட இரண்டு மரப்பொம்மைகள். கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு விரிசல் முறக்கூடை. உள்ளே கோழிக்குஞ்சு திரிவது துல்லியமாகத் தெரிந்தது. அருகே ஒரு சிறிய மண் சட்டி. அதன் பக்கத்தில் சிவப்பு நிறத்தில் இரண்டு துண்டுகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. தோசைக்கல் போல் ஒன்று. அருகே மெல்லிய இரும்புக் கொட்டுத்தடி.

மாடிக்கு வந்து இவற்றைப் பார்த்ததும் எனக்கு வயிறு கலங்கியது. ரவியின் அம்மா அழத் தொடங்கிவிட்டார். "என்ன மாமி இது.. பிராமண வீட்டுல இதெல்லாம் பண்ண வேண்டியிருக்கே.." என்று விசும்பினார்.

"அதனால என்ன மாமி.. இதுல பிராமணாளாவது சூத்ராளாவது.. காத்யாயினி தான் காட்டேறி.. நம்மக் குழந்தைகள் நல்லா இருக்கணும்னு தானே கழிப்பு செய்யறோம்?" என்றார் என் மாமி.

குருவன் "அப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா.. நான் நெறிய பாப்பாரப் பேய் ஓட்டிகிறேன். மலையேறுனா முட்டும். கெட்டித்தயிர் கேக்கும். மசால்வடை துன்றியானு கேட்டா பாவக்கா வறுவல் கொணாறச் சொல்லும். இன்னான்ற நீ.. பேஜாருனாலும் இதெல்லாம் சவஜம்.." என்றதும், ரவியின் அம்மா ஓவென்று பலமாக அழத்தொடங்கினார்.

மாமி குருவனை அதட்டினார் "சும்மா இருக்க மாட்டே நீ? அம்மாவே நொடிச்சுப் போயிருக்காங்க.. நீ வேறே!"

பூசாரி பாலுவை வட்டத்தின் நடுவில் உட்காரச் சொன்னார். முண்டாசு ஆசாமியை அழைத்து முக்கோணத்தின் நடுவில் உட்காரச் சொன்னார்.

வட்டத்துள் பாலு சாதாரணமாகப் புன்னகைத்தான். அதுவே எங்களுக்குப் பயமாக இருந்தது. பாலுவின் பின்னே எங்களை வரிசையாக உட்காரச் சொன்னார். "பாத்து.. அரிச்சந்திரன் கல்லை உருட்டிறாதீங்கப்பா.."

"பாத்துப்பா.." என்றான் ஜேம்ஸ். எனக்கும் சாம்பாவுக்கும் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டோம்.

ஸ்ரீதரின் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? எல்லாம் உங்களால வந்த வினை. பேய் ஓட்டணும்னு எனக்கு என்ன தலையெழுத்து..?" என்று பொறிந்தார்.

ரவியின் அம்மாவும் பிடித்துக் கொண்டார். "வச்சு சாத்திருவேன் படவா" என்றார்.

பூசாரி அனைவரையும் சமாதானப்படுத்தினார். "பொறுங்கய்யா.. பொறுங்கம்மா.. சீக்கிரம் கழிப்பு நடத்திருவோம்.. பசங்க முக்கியம்.. கர்ப்பிணிகளையும் வயசுப் பிள்ளைங்களையும் தான் காட்டேறி.. சவைச்சு உறிஞ்சிருவா. நாம உஷாரா இருக்கோணும்.. கண்ணுங்ளா.. கலாட்டா பண்ணாமக் குந்தியிருக்கணும்.. ஆத்தாவுக்குக் கோவம் வந்துச்சினா நூலாக் கிழிச்சிருவா.. பெரியவங்க பேச்சைக் கேட்டு கம்னு இருங்கய்யா.. கவலைப்படாதீங்கம்மா.. அய்ரூடுன்றதால அடக்கமா செய்யுறோம்".

கைப்பிடிச் சுவரோரமாக விரிக்கப் பட்டிருந்த இன்னொரு ஜமக்காளத்தில் அம்மாக்களும் ஸ்ரீதர் அப்பாவும் உட்கார்ந்தனர்.

பூசாரியும் குருவனும் எங்கள் எதிரே அமர்ந்தார்கள்.

"அரிசி மாவு இருக்குதா?" "து" என்ற குருவன் அரிசிமாவைக் காட்டினான்.
"எலுமிச்சை?" "து"
"செருப்பு?" "து"
"காட்டேறி கபாலம்?" "து" என்றக் குருவன் மரப்பொம்மைகளைக் காட்டினான்.

பூசாரி, "கண்ணுங்ளா.. அனாவசியமா வாயைத் தொறந்து பேசாதீங்க. பாலுக்குள்ற இருக்குற காட்டேறியைக் கழிச்சுப் போட்டதும் அவருக்கு எல்லாம் சரியாயிரும்.. உங்களைச் சுத்தியிருக்குற காத்துக் கருப்பும் கழிஞ்சிரும்" என்றார்.

என் மாமி, "காட்டேறி இனிமே இந்தப் பக்கமே வரப்படாது பூசாரி" என்றார் கண்டிப்பாக.

குருவன் மறித்து, "அதெப்படிமா? காட்டேறி பூஜை பௌர்ணமில தானம்மா செய்ய முடியும்.." என்றான்.

பூசாரி எல்லாரையும் அடக்கினார். "அம்மா.. இது கழிப்பு பூசம்மா. பௌர்ணமி நாலாம் சனிக்கிழமை. அதுவரைக்கும் கழிப்பு உங்க வீட்டுக்கும் இந்தப் பிள்ளங்களுக்கும் ஒரு பாதுகாப்பு. எல்லையம்மா வந்து காத்திருப்பா. சனிக்கிழமை அந்தப் பொண்ணு மேலே வந்திருக்கும் காட்டேறியை ஓட்னதும் எல்லாம் சரியாயிரும். காட்டேறிக்கு இன்னொரு பிறவியே வராம ஓட்டிறுவோம்" என்றார். "இனி யாரும் பேசாதீங்க"

பாலு தன் வாயில் இருந்தக் கட்டைக் காட்டி "என்னால் எப்படிப் பேச முடியும்?" என்று சைகை செய்தான், ரவியின் அம்மா முறைப்பதையும் பொருட்படுத்தாமல்.

குருவன் தோசைக்கல்லையும் இரும்புத் தடியையும் எடுத்துக் கொண்டான். பூசாரி ஒரு வேப்பிலைக் கொத்தை எடுத்துக் காற்றில் வீசியபடி திடீரென்று உரத்தக் குரலில் தொடங்கினார். குருவன் தோசைக்கல்லை இடது கையால் உயர்த்திப் பிடித்துக் கொண்டு கொட்டுத்தடியினால் தட்டினான். "முனீஸ்வரன் அருள வேணும்". தட்டு. "அங்காளம்மமன் அருள வேணும்". தட்டு. "அரிச்சந்திரன் வரவேணும்" தட்டு. "அமைதியைத் தரவேணும்". தட்டு. "வா.. ஆத்தா". தட்டு. "சீக்கிரம் வா ஆத்தா". தட்டு. "கேடழிக்க வா ஆத்தா". தட்டு. "பீலியம்மா நீலியம்மா சுடுகாட்டுக் காளியம்மா சீக்கிரம் வாடியம்மா..." தட்டுக்கேற்றவாறு பூசாரி டப்பாங்குத்து மெட்டில் பாடத் தொடங்கினார்.

கிண்ணங்களில் இருந்த குங்குமம் மஞ்சள் பொடியை எடுத்து பாலு மீதும் முண்டாசு மீதும் தூவத் தொடங்கினார். குருவன் காட்டேறிக் கபாலங்களை எடுத்து வட்டத்துக்கும் முக்கோணத்துக்கும் இடையில் பாலம் போல் வைத்தான். பூசாரி ஒரு வேப்பிலைக் கொத்தை அதன் மேல் வைத்தார்.

மறுபடி பாட்டு. தட்டு.

திடீரென்று பாலு அசைந்தான். பூசாரி வேப்பிலைக் கொத்தால் அவன் முகத்தை லேசாக வருடினார். பிறகு வேகமாக அவன் முகத்தை வேப்பிலைக் கொத்தால் சுற்றிச் சுற்றி முண்டாசு இருந்தப் பக்கமாக வீசினார். பக்கெட்டில் இருந்து ஒரு குவளை நீரை பாலுவின் தலையில் கொட்டினார். "வா.. காட்டேறி.. வந்துரு.. சோறும் பொறியும் தாரேன்.. கோழியும் கெடாவும் தாரேன்.. வா நீலியம்மா சூலியம்மா சுடுகாட்டுக் காளியம்மா..." என்றபடி சற்றும் எதிர்பாராமல் செருப்பால் பாலுவின் கன்னத்தில் அறைந்தார். முண்டாசு குதித்து உட்கார்ந்தான். "ஈஈஈ" என்றான்.

"வந்துட்டா.. வந்துட்டா.. யார் வீட்டு ராணியம்மா நீ?"

எங்களால் நம்ப முடியவில்லை. பாலு அசையவே இல்லை. முண்டாசு பேசத் தொடங்கினான். புரியவில்லை.

"தென்னாட்டு ராசாத்தியா? வடநாட்டு மவராணியா? யாரம்மா நீ? அடையாளம் காட்டு" என்று வேப்பிலையால் தொடர்ந்து பாலு முகத்தை வருடி முண்டாசு மீது எறிந்து கொண்டிருந்தார் பூசாரி.

குருவன் பழக்கூடையிலிருந்த ஒவ்வொரு எலுமிச்சைப் பழத்திலும் கட்டைவிரலை நறுக்கென்று குத்தியெடுத்தான். கொஞ்சம் மஞ்சள் குங்குமம் திணித்துப் பூசாரியின் முன் வைத்தான்.

பூசாரி பாலுவைக் கன்னத்தில் அறைந்தார். "ராணி யாரு சொல்லு.. மருவாதியா சொல்லு.. அரிசிப்பொறி தாரேன்.. வெளியே வா தாயே".

இந்த முறை முண்டாசு பேசியது தெளிவாகக் கேட்டது. பெண் குரலில் பேசினான். "அரிசிப் பொறி குடு. பாயசம் குடு"

குருவன் முண்டாசை செருப்பால் அறைந்தான். "குடுத்தா போயிருவியா?"

பூசாரி ஒரு குவளை நீரை முண்டாசு மேல் வீசினார். "இவங்களை விட்டுரு.. அந்தப் பொண்ணைப் பிடிச்சிக்க.. பௌர்ணமி ராவுக்கு வா. கெடா ரத்தம் தாரேன்"

பாலு திடீரென்று முனகினான். முண்டாசு தலையை முன்னும் பின்னும் ஊஞ்சல் போல் ஆட்டிக் கொண்டிருந்தான்.

குருவனைப் பார்த்துத் தலையசைத்தப் பூசாரி என் மாமி பக்கமாகத் திரும்பி, "அய்யா.. அம்மா.. இப்ப வாடை மாத்தப் போறோம்.. காட்டேறிப் பித்தம் தெளியணும்.. அய்ரு வூடுன்றதால அளவாச் செய்யுறோம்.. பிடிக்கலேனா கிழே போயிருங்க.. இல்லாப்னா மூஞ்சைத் திருப்பிங்கம்மா.. இடையில எந்திரிக்கக் கூடாது" என்றார். யாரும் எழுந்திருக்கவில்லை. எங்களுக்கோ சுவாரசியம் கூடிப் போனது.

பூசாரி "ம்ம்" என்றார்.

குருவன் கூடையை விலக்கி உள்ளிருந்தக் கோழிக்குஞ்சை லாவகமாக எடுத்தான். காட்டேறிக் கபாலத்தின் மீது வைத்துப் பிடித்துக் கொண்டான். கோழிக்குஞ்சின் மீது மஞ்சள் குங்குமம் கரித்தூள் தடவினார் பூசாரி. கோழிக்குஞ்சை இடது கையால் உயர்த்திப் பிடித்தபடி, தனியாக இருந்த மண்சட்டியை எடுத்துக் கபாலத்தின் மீது வைத்தான் குருவன். கும்பத்தேங்காய் வைப்பது போல் சட்டியின் நடுவில் கோழிக்குஞ்சை உள்ளிருத்திப் பிடித்தான்.

பூசாரி இடுப்பிலிருந்து ஒரு கத்தியை எடுத்து மஞ்சள் தண்ணீரால் கழுவித் துடைத்தார். குங்குமத்தை அப்பி குருவனிடம் கொடுத்தார். குருவன் கோழிக்குஞ்சின் கழுத்தில் சருக் என்று துரிதமாகச் சீவினான். 'கீங்' என்று கீச்சிட்டு ஒடுங்கியது குஞ்சு. தேங்காய் மூடி பிளந்து இளநீர் விழுவது போல் கோழிக்குஞ்சின் உடலிலிருந்து ரத்தம் கசிந்துச் சட்டியில் கொட்டத் தொடங்கியது. சில நொடிகள் பொறுத்து பூசாரி தலையாட்ட, கோழிக்குஞ்சைச் சிவப்புத் துண்டில் நன்றாகச் சுற்றி மறுபடிக் கூடைக்குள் வைத்தான் குருவன். கத்தியை மஞ்சள் நீரில் கழுவித் துடைத்து பூசாரியிடம் திருப்பினான்.

பூசாரி சட்டியை முண்டாசின் முன் வைத்தார். முண்டாசு ரத்தத்தை எடுத்து இரண்டு கைகளிலும் முழங்கை வரை பூசிக் கொண்டான்.

குருவன் சட்டியை மற்ற சிவப்புத்துண்டால் மூடி போல் கட்டிக் கூடைக்குள் வைத்தான். பிறகு தோசைக்கல்லையும் கொட்டுத்தடியையும் எடுத்துக் கொண்டு நிறுத்தாமல் தட்டத் தொடங்கினான்.

ஒரு நிமிடம் பொறுத்து, "ராசா முடியைத் தேடு ராசா.." என்றான் முண்டாசு. மிக இனிமையானப் பெண் குரல்.

பூசாரி இடுப்பிலிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு சரேலென்று பாலுவின் அருகில் சென்றார்.

"எந்த முடியில தங்கியிருக்கே தாயி?" என்று பாலுவின் தலையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

"தேடு ராசா" என்றான் முண்டாசு.

தோராயமாக ஒரு கற்றையைப் பிடித்த பூசாரி, "நீ ஓடுனா ராசா முடியுல யாரு தங்குவா ராசாத்தி?" என்றார்.

குருவன் விடாமல் தட்டிக் கொண்டிருந்தான்.

"அந்த அங்காள பரமேசுவரி ஓடியாறா.. அவ தங்கியிருப்பா" என்றான் முண்டாசு.

"ஏமாத்துறியாடி.. என்ன மசுருக்கு உன்னை நம்புறது?" என்று பூசாரி முண்டாசின் முகத்தில் அறைந்தார்.

"இல்லே.. விட்டுர்றேன்.. எனக்குக் கடா வேணும்" என்றான் முண்டாசு.

சரேலென்று பாலுவின் முடிக்கற்றையை வெட்டினார் பூசாரி. பாலு மயங்கி விழுந்தான். முண்டாசு ஏதோ முனகியபடி குறுகினான். குருவன் வாளித் தண்ணீரை அப்படியே முண்டாசு மேல் கொட்டினான். அரிசிமாவு கரைய அதையெடுத்து அவன் மேல் சோப்பு போல அப்பினான். "எல்லாரும் கண்ணை மூடிக்குங்க" என்றான்.

நாங்கள் கண் திறந்த போது முண்டாசைக் காணோம். கோழிக்கூடையையும் காணோம்.

பூசாரி ரவியின் அம்மாவை அழைத்து, "அம்மா.. பையனை கூட்டிட்டுப் போய் படுக்க வைங்கம்மா. காட்டேறி உலாத்தக் கிளம்பிட்டா. இனி பலி கொடுத்தப் பெறவு தான் மலையேறுவா. ஆனா பாலுத்தம்பிக்கு இனி தொல்லை தரமாட்டா" என்றார். எங்களைப் பார்த்து, "பசங்களா.. எந்திரிங்க.. இனி கவனமா இருக்கணும் தெரியுதா?" என்றார்.

பிறகு பாறாங்கற்களைச் சுட்டி ரவியின் அம்மாவிடம், "இதா இந்த அரிச்சந்திரன் கல்லு நாலும் உங்க வீட்டு நாலு மூலைல வச்சிருங்க.. பௌர்ணமி முடிஞ்சதும் சுடுகாட்டுல எறிஞ்சுறலாம். அதும் குருவன் செஞ்சுருவான். அவனுக்கு பத்து ரூவா குடுத்துருங்க" என்றார்.

அத்தனை அம்மாக்களையும் வரிசையாக அழைத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சை பழத்தைக் கொடுத்தார். பழத்தில் குருவன் செய்திருந்த கட்டை விரல் ஓட்டையில் மஞ்சள் குங்குமத்துடன் பாலுவின் முடியும், உடைந்த காட்டேறிக் கபால மரத்துண்டும் செருகியிருந்தது. "அம்மா.. இந்த எலுமிச்ச.. கழிப்புக்கு.. இதை உங்க வீட்டு வாசல்ல குழி தோண்டிப் புதைக்கணும்.. தா குருவன் செஞ்சிருவான். அதுக்கு அஞ்சு ரூவா தனியா குடுத்துருங்க.. நீங்க பழத்தைத் தொட்டுக் கொடுத்தா போதும்.. கை வாசம் ஒட்டணும்" என்றார்.

பிறகு ஆளுக்கு மூன்று பழங்களைத் தனியாகக் கொடுத்தார். "அம்மா.. இந்த எலுமிச்சங்க.. காவலுக்கு.. ஒரு பழத்தை வீட்டு நெலப்படியில கட்டிவைங்க. ஒரு பழத்தை சாப்பாட்டுல கலந்து உள்ளுக்கு எடுத்துருங்க.. கடைசி பழத்தை பூசைல வச்சுருங்க பௌர்ணமி வரைக்கும்" என்றார். "மறந்துறாதீங்க.. காட்டேறி உலாத்திட்டிருப்பா.. காட்டேறி சூனியத்தை பாலுத்தம்பிக் கிட்டேயிருந்து வாங்கிட்டுப் போயிட்டான் முண்டாசு.. காட்டேறி இனி உங்க வீட்டுப் பக்கம் வரமாட்டா.. பௌர்ணமி ராத்திரி ஏரியம்மன் பேயோட்டத்துல அந்தப் பொண்ணோட உசிருலந்தும் காட்டேறியை விரட்டிறுவோம்.. அது வரையிலும் ரொம்பக் கவனமா இருக்கோணும்".

[தொடரும்]


35 கருத்துகள்:

  1. பெயரில்லாஏப்ரல் 09, 2012

    ரொம்ப பயமா இருக்கு. இது நிஜமும் கற்பனையும் கலந்ததா!? இல்லை முழுக்க முழுக்க நிஜமேதானா!? நிஜம் என்றால் அந்த வயதில் இப்படிப்பட்ட அனுபவங்களா! வயதுக்கு மீறின அனுபவங்கள்.இதை எல்லாம் கடந்து வாழ்கை தொடர்ந்திருந்தால், பரவாயில்லை. நீங்கள் முன்பு ஒரு பதிவில் ரகுவை பற்றி எழுதி இருந்தீர்கள். அவரை போல் வாழ்கையை தொலைந்திருந்தால். வயதுக்கு மீறின அனுபவங்களால் மனம் குழம்பி வாழ்கையை தொலைக்காமல் தொடர்ந்து செல்ல எல்லோராலும் முடிவதில்லை.

    சிலபேர் இளமை வாழ்க்கையில்தான் எத்தனை பயங்கரமான அனுபவங்கள்.

    அசத்தலான எழுத்துநடை. எப்படி இவ்வளவு அருமையாக எழுதுகிறீர்கள்! படிக்கும்போதெல்லாம் ரசிக்கிறேன், வியந்தும்தான் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பம்மல்லே சொந்தக்காரங்க இருக்காங்க. போறதா வேண்டாமா?? காட்டேரி இன்னும் அங்கே தான் இருக்கா?

    அது சரி, அந்த வயசிலே இதை எல்லாம் நம்பினீங்களா என்ன??? ம்ஹும், எனக்கு அந்தப் பதின்ம வயசிலேயும் நம்பிக்கை வந்திருக்காது. நல்ல திகிலான தொடர். அடுத்ததுக்கு ஆவலாக் காத்திருக்கேன்.
    சன்னிலோ, ஜெயா, விஜய், ராஜிலோ மெகா சீரியலுக்கு அனுப்பலாமே. பார்க்க நல்லாவே இருக்கும்.

    இப்போவும் வருதே ஒண்ணு பைரவினு கொஞ்சம் கூட த்ரில்லே இல்லை. :(

    பதிலளிநீக்கு
  3. மீனாக்ஷியம்மா சொன்னது மாதிரி சரளமான உங்களின் எழுத்து நடையை இப்போதும் வியக்கிறேன். ட்ராகுலா போல... இந்தக் காட்டேறியும் கடுமையா பயமுறுத்தத்தான் செய்யுது.

    பதிலளிநீக்கு
  4. ரத்தக் காட்டேரிஏப்ரல் 09, 2012

    ஊரு இல்லை நாடு கடந்தும் வருவேன்
    பாரு நீ 'பக்'கெனப் பிடிப்பேன்...
    தரை மட்டுமில்லை
    கரை தாண்டி வருவதும்
    கஷ்டமில்லே எனக்கு
    துரை நீதான் அந்த ஐரா...

    பாலு செத்துப் போனாலென்ன
    மிச்ச
    வாலு எங்க போச்சுதுன்னு பார்த்தேன்
    நூலு விட்டுப் பார்த்தியே
    ஆளு தெரிஞ்சி போச்சு
    காலு இல்லாட்டி என்ன
    அடுத்த ஃபிளைட் பிடிச்சி
    அங்கனையே நான் வாறன்...
    பம்மலுக்குப்
    பக்கம்தான்
    மீனம்பாக்கம்...

    பதிலளிநீக்கு
  5. நல் வரவு ரத்தக்காட்டேரி, தனியா வந்திருக்கீங்களா, துணையோடயா?? நேரிலே பார்க்கணுமே!

    பதிலளிநீக்கு
  6. ரத்தக்காட்டேறிக்கு அடுத்தபடியா பின்னூட்டம் போடுறதா வேண்டாமானு இப்பத்தான் நெனச்சேன்..

    பதிலளிநீக்கு
  7. நன்றி மீனாக்ஷி. இது முழுக்கக் கற்பனையா கூட இருக்கலாமே? :) 65-75 காலப் பம்மல் அனகாபுத்தூர் எல்லாம் கிராமம்.. பொட்டல்.. என்னவெல்லாமோ நடக்கும்.. நிறைய பார்த்திருக்கேன். எங்கம்மா எங்க எல்லாரையும் pretty much c/o அபிராமினு விட்டுட்டதால எங்களுக்கு (இந்தத் தலைமுறைப் பிள்ளைகள்) நெனச்சுக் கூடப் பார்க்க முடியாத சுதந்திரம் இருந்தது. பிஞ்சுல பழுத்தது பத்திக் கேள்விப்பட்டதில்லையா நீங்க? :) இந்தக்கதை கற்பனைதான்.. சில கேரக்டர்ஸ், பேயோட்ட சடங்குகள் எல்லாம் அக்மார்க் நிஜம்.

    கீதா சாம்பசிவம்: பம்மல் தாராளமா போங்க. ஆனா எந்தக் காரணத்தைக் கொண்டும் சத்சங்கத்துலந்து சிவன் கோவில் வரைக்கும் போகும் பொழுது மனசுல கற்பூரத்தை மட்டும் நெனச்சுக் கூடப் பாக்காதீங்க.. சொல்லிட்டேன். அந்தக் காலத்துல நம்பிக்கை இருந்திச்சு.. கடவுளை நம்பினா இதையும் நம்பணுமே? :))

    பதிலளிநீக்கு
  8. அதுவும் ரத்தக்காட்டேரிப் புலவர் போலருக்கு.. கவிதைப் பேயோ?

    பதிலளிநீக்கு
  9. கடவுளை நம்பினா இதையும் நம்பணுமே? :))//

    கடவுளைப் பூரணமா நம்பறதாலே தான் இதெல்லாம் பார்த்தால், கேட்டால் சிரிப்பு வருது. இப்போவும் இம்மாதிரிச் செல்லும் பெண்களைத் தெரியும். பரிதாபமா இருக்கும். :)))))

    ரத்தக் காட்டேரி வெளிநாட்டுக் காட்டேரி போலிருக்கு! ஃப்ளைட் பிடிச்சு மீனம்பாக்கம் இல்லை வரேனிருக்கு. நீங்க இந்தியா வரச்சே மீட் பண்ணினாலும் பண்ணுவீங்க! ரெண்டு பேரும் பேசிக்கிறதை அப்படியே போட்டுடுங்க. :))))))

    பதிலளிநீக்கு
  10. பேயோட்டுறவங்களைக் கேட்டா மனசுல இருந்த விகாரத்தை பேயோட ஓட்டினோம்னு சொல்வாங்க.. பேயோட்டுறவங்களைக் கேட்டா பேய்கள் சக்தியின் வடிவம்னு தான் சொல்வாங்க.. ரத்தக்காட்டேறி (காளி, காத்யாயனி) பித்தக்காட்டேறி (முனி) எல்லாமே கடவுள் வடிவம் தான். என்ன இந்தச் சாமிங்களுக்கு கரடுமுரடா சுலோகம் இல்லே, புராணம் இல்லே.. அவ்ளோ தான். சிங்க முகத்தோட வயித்தைக் கீறி ரத்தத்தைக் குடிச்சா அவதாரம்னு சொல்றோம். அதையே ஆட்டு ரத்தத்தைக் குடிச்சா பேய்ன்றோம். எல்லாம் ஒண்ணு தான்.

    பதிலளிநீக்கு
  11. புராணம் இல்லே.. அவ்ளோ தான். சிங்க முகத்தோட வயித்தைக் கீறி ரத்தத்தைக் குடிச்சா அவதாரம்னு சொல்றோம். அதையே ஆட்டு ரத்தத்தைக் குடிச்சா பேய்ன்றோம். எல்லாம் ஒண்ணு தான். //

    you too?????????? do not take the literary meaning.

    பதிலளிநீக்கு
  12. I mean especially for the puranas, and slokas. :))))))

    பதிலளிநீக்கு
  13. பல்லாவரம் தாண்டும்போதே பல்லு முளைக்கரா மாதிரி இருந்தது....பக்கத்தில் இருக்கறவரைக் கடிக்கலாமா என்று யோசிக்கும் முன்பு தாம்பரம் வந்து பல்லு உள்ளே போய் விட்டது!

    பதிலளிநீக்கு
  14. அப்பாடி....இதைத்தானே காலைலயும் போட்டேன்...பேரும் உள்ளடக்கமும் எப்படி மாறிச்சு...தெரியலையே...!!

    :)))))))))

    பதிலளிநீக்கு
  15. @ஸ்ரீராம், நீங்க தான் அந்த ரத்தக்காட்டேரியா?? மடிப்பாக்கம் பிரயாணம் ஒண்ணு இருந்தது; நல்லவேளையா கான்சல் பண்ணினோம். :P:P:P

    பதிலளிநீக்கு
  16. ஐயோ நான் இல்லை....! நான் இப்போ எழுதினேனே அதைத்தான் காலைலயும் எழுதினேன்...எப்படி மாறியது என்று தெரியவில்லை!! :))

    அப்பப்போ வந்து பார்த்துக்கணும்....இல்லைன்னா பிற்சேர்க்கை என்று கொஞ்சம் போட்டுடுவார் துரை!

    பதிலளிநீக்கு
  17. முந்தைய ஒரு பின்னூட்டத்தில் சோட்டானிக்கரா பகவதி கோவிலில் பேய் பிடியிலிருந்து தப்பிக்க விரதம் இருப்பவரைக் கண்டது குறித்து எழுதி இருந்தேன். சில மரங்களின் உயரத்தில் பேயோட்டிய ஆணிகள் அறையப் பட்டிருக்கும். பேய்களின் தலையால் ஆணிகள் அறையப் படும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். உங்கள் பதிவைப் படித்தபிறகு பேய் பிடித்தவரின் தலையிலிருந்து வெட்டப் பட்ட முடிக்கற்றைகளை ஆணி கொண்டு அறைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, இவ்வளவு துல்லியமாக விவரித்து எழுத நல்ல திறமை வேண்டும். அது அபரிமிதமாக உங்களிடம் இருக்கிறது. ஒவ்வொரு பேய்க்குப் பின்னால் ஒரு கதை. முடிந்தால் ஒரு பேயிடம் பேட்டி எடுக்க வேண்டும். பேயிடம் பேசும்போது பயமாக இருக்குமா.?

    பதிலளிநீக்கு
  18. அப்பாஜி...பேயோ பிசாசோ சாமியோ பூதமோ இல்லாட்டி மனக்குழப்பமோ அடுத்ததா என்ன என்னன்னு மனசு நடுங்குது.இதில வேற ரத்தக்காட்டேறிக் கவிதை....அப்பனே ஆளை விடுங்கோ.அடுத்த பதிவை பாக்க வாறேனோ இல்லையோ !

    எனக்குன்னா சந்தேகம் ஸ்ரீராம்லதான் !

    பதிலளிநீக்கு
  19. அப்பாஜி..உப்புமடச் சந்தியில உங்க கவிதை நச்ன்னு சூப்பர்.தலைப்பும் வரிகளும் பொருத்தமாத்தானே இருக்கு.ஏன் ..ஹ்ம்ம்.. எல்லாம் கணேஷ் தான் காரணம்ன்னு சொல்லி வச்சிருக்கீங்க?!

    பதிலளிநீக்கு
  20. அப்பப்போ வந்து பார்த்துக்கணும்....இல்லைன்னா பிற்சேர்க்கை என்று கொஞ்சம் போட்டுடுவார் துரை! //

    அதே, அதே, நல்லவேளையா ஃபாலோ அப் ஆப்ஷன் இருக்கு. :))))


    எனக்குன்னா சந்தேகம் ஸ்ரீராம்லதான் ! //

    எனக்கும்! :))))))))

    பதிலளிநீக்கு
  21. அப்பாதுரையின் கவிதையும் அகலிகை குறித்தே தானா? :))) ரொம்பவே பாதிச்சிருக்கு போல!

    அது சரி, ஸ்ரீராமின் கவிதை சூப்பர்! பாஹே என்ற பெயரிலும் அவரேவா எழுதி இருக்கார்?? இந்த ரகசியத்தை யாரானும் உடைங்கப்பா.

    பதிலளிநீக்கு
  22. //அப்பப்போ வந்து பார்த்துக்கணும்....
    பேய்க்கதையாச்சே.. ஏடாகூடமா நடக்கும்.

    காட்டேரிக் கவிதையில் ஸ்ரீராம் வாசனையை காணமே?

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஜிஎம்பி சார்.
    பே...யிடம் ப்..ப்..பேட்டியா? எதுக்குங்க வம்பு..?

    பதிலளிநீக்கு
  24. //கவிதையும் அகலிகை குறித்தே தானா?
    "பக்தர்களுக்காக ஏங்கும் கடவுள்
    பாதையோரம்"னு ஒரு வரிதான் முதலில் தோணிச்சு.. எழுதுறப்ப அகலிகையா மாறிடுச்சு!

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லாஏப்ரல் 10, 2012

    "பக்தர்களுக்காக ஏங்கும் கடவுள்
    பாதையோரம்"
    wow! இது இன்னும் கலக்கலா இருக்கு. வரி வரியா அழகழகா கவிதை சொல்றீங்க. super!

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லாஏப்ரல் 10, 2012

    என்னங்க இது உங்க ப்ளாக் அந்த உலகத்துலேயும் ரொம்ப ரொம்ப பாபுலர் ஆயிடுத்து போல இருக்கு. சீக்கிரமா அவைகளும் தொடரதுக்கான இணைப்பை சேர்த்துடுங்க. :)

    ஹலோ ரத்தகட்டேரி, நீங்க ஐயாவா, அம்மாவா! யாரா இருந்தாலும் சரி, என் ஊரு சைதாபேட்டை. எங்க வீட்டை சுத்தி கடும்பாடி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், இளங்காளி அம்மன்னு இப்படி உங்களுக்கு வேண்டியவங்க நடுலதான் பயபக்தியா நான் இருந்தேன். ஒரு மசான கொள்ளை பாக்க விட்டது கிடையாது.
    அதனால நீங்க மீனம்பாக்கத்துல பிளேன் ஏறினா நேர யாரை பாக்கணுமோ அவங்களை மட்டும் பாத்துட்டு போய்டுங்க. connecting flight எடுக்கறேன்னு வழி தவறி இங்க வந்துடாதே. ஆனா ஒரு விஷயம், நீங்க அங்க உங்க படையோட போனா கூட ஒண்ணும் வேலைக்கு ஆகாது. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்பறம் உங்க பாடு! :)

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லாஏப்ரல் 10, 2012

    //மீனாக்ஷியம்மா//
    கணேஷ் மீனாக்ஷியம்மா சென்னைல இருக்காங்க. இங்க இருக்கறது வெறும் மீனாக்ஷி. :)

    பதிலளிநீக்கு
  28. ஹிஹ்ஹி.. கவிதையா? நீங்க சொன்னா சர்தான் மீனாக்ஷி.

    ரத்தக்காட்டேறியெல்லாம் ஏற்கனவே என்னை நிறையப் பிடிச்சாச்சுங்க.

    பதிலளிநீக்கு
  29. முதல்லே ரத்தக் காட்டேரி னு லக்ஷம் தரம் இம்பொசிஷன் எழுதுங்க அப்பாதுரை, காட்டேரியையே எழுதச் சொன்னாலும் சரி. காட்டேறினே எழுதறீங்க.

    இப்போ இங்கே வர நினைச்சேனா? service unavailable அப்படினு வந்ததா? காட்டேரி வேலைனு நினைக்கிறேன். அப்புறமாச் சரியாச்சு.

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லாஏப்ரல் 10, 2012

    சாரி! சும்மா விளையாட்டா எழுதிட்டேன். தயவு பண்ணி தவறா எடுத்துக்காதீங்க.

    பதிலளிநீக்கு
  31. மிகப் பெரிய எழுத்தாளரா வந்திருக்க வேண்டியவர் நீங்கள். சினிமா, சீரியல் என்று கலக்கலாம் நீங்கள்.
    கதை ரொம்ப ஜோரா இருக்கு.

    பதிலளிநீக்கு
  32. காட்டேரியா டேறியா? எது சறி?

    இந்த டயலாக் மட்டும் அந்த நாள்ல வராம போச்சே!.. "டீச்சர்.. இந்த அப்பாதுரை ஒரு தடவ இம்பொசிசன் எழுதினா.."

    பதிலளிநீக்கு
  33. படிப்பதே பெரிது சிவகுமாரன்.. நன்றி.

    பதிலளிநீக்கு
  34. காட்டேரி, இரத்தக்காட்டேரி, காட்டேறி. a sylvan demoness.

    http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=87&table=fabricius&display=utf8//

    ரெண்டுமே சரிங்குது. ஹிஹிஹிஹி, அ.வ.சி.

    பதிலளிநீக்கு
  35. காட்டேரி தான் காட்டேறி.. காட்டேறி தான் காட்டேரி.. ரொம்ப தேங்க்ஸ்.

    பதிலளிநீக்கு