ஆந்தை தன் தலையை முன்னூத்தறுபது டிகிரி திருப்பும் தெரியுமோ? காந்திக்கு வலது காலில் ஆறு விரல் தெரியுமோ? மௌன்ட்பேடனுக்கு மலாய் கோப்தா என்றால் உயிராமே? தண்ணீர் குடிப்பதை விட பால் குடிப்பது காரத்தின் தாக்கத்தைத் தணிக்கும் என்கிறார்களே, உண்மையா?? பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு கண் நொள்ளைக்கண் தெரியுமோ?பக்கத்து வீட்டுக்காரர் நொள்ளைக்கண் தவிர, பொது அறிவு என்ற சாக்கில் இது போன்ற மேதாவித்தனமான கேள்விகளும் ஞான உபதேசங்களும் கேட்காமலே தருவதற்கும் பெறுவதற்கும் நம்மில் நிறைய பேர் உண்டு. 'எல்லாம் தெரிந்த' பெருமிதத்தில் ஒரு போதை இருக்கிறது; நானும் இதற்கு அடிமை. 'எங்கே நிரூபி பார்க்கலாம்?' என்று எவராவது பதில் கேள்வி கேட்டால் சைடு வாங்குவோரைப் பார்த்திருக்கிறேன். 'ஒரு புத்தகத்தில் படித்தேன்', 'என்னுடைய பள்ளிக்கூட நண்பன் சொன்னான்; ஆனா இப்ப அவன் உயிரோட இல்லை' என்று சமாளித்தோரைப் பார்த்திருக்கிறேன். விடாப்பிடியாக நிரூபித்தவர்களைச் சந்திக்கும் பொழுது, எங்கிருந்து கிடைத்தது ஞானப்பழம் இவர்களுக்கு என்று நினைப்பேன். இனி நினைக்க அவசியமில்லை, மரத்தையே பார்த்து விட்டேன்.
ஆன்ட்ரேயா பேரம் எழுதிய இரண்டு தொடர் புத்தகங்களைப் படித்தேன்.
கீரையில் இரும்புச் சத்து உண்டு என்பது உண்மையா பொய்யா? சிசேரியன் முறைக்கு சீசர் தொடங்கி வைத்ததால் அப்படிப் பெயர் வந்ததாமே? பெண்களுக்கு adams apple இல்லையா? தண்ணீரில் மூழ்கும் உடல் மூன்று முறை மேலே வரும் என்கிறார்களே உண்மையா? வௌவாலைக் கபோதி என்கிறார்களே? கண்களைக் குழியிலிருந்து எடுத்து பாலிஷ் மாலிஷ் போட்டு மீண்டும் உள்ளே வைக்க முடியும் என்கிறார்களே, உண்மையா? ஆந்தை தன் தலையை முழு வட்டமாய்த் திருப்புமா? குளிர் காய்ச்சலைத் தவிர்க்க வைடமின் சி உகந்தது என்கிறார்களே? ரோம் பற்றி எறியும் போது நீரோ வயலின் வாசித்தானாமே, உடான்சு போலத் தோணுதே? தும்மும் பொழுது உயிர்த் துடிப்பு நிற்கிறது என்கிறார்களே, உண்மையா? அடுத்தவர் மனைவி/கணவனோடு உறவு வைத்துக்கொள் என்று பைபிளில் சொல்லியிருக்கிறதாமே, அட பரவாயில்லையே நிசமாவா? வானவில்லில் ஏழு வண்ணம் என்பது ந்யூடன் விட்ட உடான்சா? விக்டோரியா அரசியின் கணவன் கண்ட (காணாத?) இடத்தில் துளை போட்டுக் கொண்டானாமே, உண்மையா?
இது போல் நூற்றுக்கணக்கான, சுவையான, 'உண்மையா பொய்யா' துணுக்குகளை ஆராய்ந்து (?) சுவையான விளக்கங்களோடு எழுதியிருக்கிறார். விளக்கங்கள் அரை பக்கத்துக்கு மிகாமல் இருப்பதால் விறுவிறுப்பாகவும் செல்கிறது. சில துணுக்குகள் மனம் விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ('வாய் விட்டுச் சிரித்தான்' என்கிறோமே, ஏன்? புத்தகத்தைப் படியுங்கள் தெரியும்)
மாதிரிக்கு சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். மழை நாளில் காபி, சீடை, முறுக்கு, உருளைக்கிழங்கு போண்டா, மிளகாய் பஜ்ஜி என்று அவரவருக்குப் பிடித்தத் தீனியுடன் தனிமையில் ஒதுங்கத் தோதான புத்தகங்கள்.
• வைடமின் சி குளிர் காய்ச்சல் தீர உதவும் • ஆரியர்கள் கிழக்கிலிருந்து வந்தவர்கள் (வட இந்தியா என்று இரண்டு ஆணி அடித்துச் சொல்லியிருக்கிறார். வட இந்தியா இரான் இராக் வரை பரவியிருந்தது என்கிறார் - கல்லெறிந்தால் யூரோப்) • கோகோ கோலாவில் 1905 வரை கொகேய்ன் போதைப் பொருள் கலந்திருந்தது • சிசேரியன் முறை ஜூலியஸ் சீசர் காலத்தில் தொடங்கியது (பிரசவ முறையாக அல்ல; 'கைப்பற்றிய எதிரி நகரங்களை அழிக்குமுன், இறக்கப் போகும்/இறந்த நிறைமாதப் பெண்களின் வயிற்றிலிருந்து சிசுவை அகற்றவேண்டும்; சிசுக்களைக் கொல்லக்கூடாது' என்ற சீசர் ஆணையின் செயல்பாட்டிலிருந்து தோன்றிய முறை. போருக்குப் போனால் சிப்பாய்களுடன் பிரசவ மருத்துவச்சிகளையும் அழைத்துப் போவார்களாம். பாம்பெய் போரில் மருத்துவச்சிகளுக்கே பிரசவம் பார்க்க வேண்டி வந்துவிட்டதும், இனி ஆண்களைப் பிரசவம் பார்க்க அழைத்துப் போவது என்று சீசர் முடிவெடுத்தானாம். புராணமல்லாத ஓரினச்சேர்க்கையின் பரவலுக்கு, சீசரின் போர்ப்படை ஆதாரமாகக் காட்டப்படுகிறது.) • நகரம் பற்றி எரிகையில் நீரோ வயலின் வாசித்தானாம் (பின்னணிக் கதை சுவாரசியமானது. நீரோ நன்றாக வயலின் (லைர்) வாசிப்பானாம்; தீப்பற்றி வருவது தெரிந்ததும், எச்சரிக்கை தரவேண்டி அரண்மனைக் காவல்கூண்டின் மேல் ஏறிக்கொண்டு 'ட்ரோய் நகர அழிவு' என்ற பாடலை உரக்கவும் வேகமாகவும் வாசித்தானாம். ட்ரோய் நகரம் தீயில் அழிந்த கதை தெரிந்திருக்கும். தவறாகப் புரிந்து கொண்டு கைகொட்டி ரசித்துக் கொண்டிருந்த மக்கள், பின் பக்கம் சுடத் தொடங்கியதும் குய்யோ முய்யோ என்று கத்தி நீரோவைத் திட்டிக் கொண்டே ஓடினார்களாம். மனம் நொந்த நீரோ தற்கொலை செய்து கொண்டானாம்.) • 'ரிங் அரௌன்ட் தி ரோசி' எனும் பாப்பாப் பாட்டு, 1700களில் பிணத்தைச் சுற்றிப் பாடிய பாடல் (பின்னணி: ரோசி எனும் பெண் பிளேக் நோயால் இறந்ததும் அவள் மேல் வைத்த மலர்வளைய அடையாளம், பிளேகினால் இறந்தவர்களின் அடையாளமாகத் தொடர்ந்தது. ரிங்கைப் பார்த்தால் ரோசி என்று ஓட்டமெடுப்பார்களாம். ரோசி என்ற பெயரும் பல நாள் வரை பிளேக் நோயுடன் தொடர்பாக நினைக்கப்பட்டதாம்) • ஆப்பிள் விதையில் சயனைட் இருக்கிறது (த்த்த்த்துளியூண்ண்ண்டு) • விக்டோரியா அரசியின் கணவன் அங்கே துளை போட்டு வளையம் அணிந்திருந்தானாம் (தேவையா?) • வானவில்லின் நிறங்கள் ஆறு தான் (கண்டுபிடித்த ந்யூடன் 'ஏழு' எண்ணிக்கையின் மகத்துவத்தை நம்பியதால் நீல நிறத்தின் கிளையான இன்டிகோவை சேர்த்து ஏழு என்றாராம். அறிவித்த பொழுது ஏழு சுரம், ஏழு நிறம் என்று உரையாற்றினாராம்.) • 'சோரம் போ' என்று கடவுளின் பத்துக் கட்டளைகளில் ஒன்றாக பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது (பின்னணி: கிங் ஜேம்ஸ் பைபிளின் 1631ம் வருடப் பதிப்பில் 'Thou shall commit adultery' என்று அச்சுப்பிழை காரணமாக வந்துவிட்டதாம். முன்னூறு பவுன் அபராதம் கட்டச் சொன்னதாம் வேடிகன். ம்ம்ம்... பாவத்தின் சம்பளம் பொருளிழப்பா?) | • பெண்களால் ஆண்களை விட அதிக உடல்வலியைப் பொறுக்க முடியும் (பிரசவ வேதனையை விடக் கொடுமையான வலிகளை ஆண்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்களாம். இதைச் சொல்லும் ஆன்ட்ரேயா பிரசவ வேதனை கண்டவரா தெரியாது. இருந்தாலும், ஆண்கள் சார்பில் நன்றி.) • சர்க்கரையை விடத் தேன் ஆரோக்கியமானது • ஆந்தை தன் தலையை முழு வட்டமாய்த் திருப்பும் (270 டிகிரி திருப்புமாம்) • ஹிட்லர் சுத்த சைவம் (பெரும்பாலும் சைவம். மீன், முட்டை, மட்டன், மாடு எதுவும் சாப்பிட மாட்டானாம். சிக்கன், பன்றி மட்டும் சாப்பிடுவானாம்; சிக்கபன்னிடேரியன்.) • ஆப்பிள் விழுவதைப் பார்த்துப் புவியீர்ப்புத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார் ந்யூடன் ('ஐயோ அம்மா' என்று அலறிக்கொண்டு ஓடினானாம் சிறுவன் ந்யூடன்; பின்னாளில், 'எத்தனை பலமானக் காற்றிலும் மழைநீர் கீழேயே விழுவதை'ப் பார்த்து யோசிக்கத் தொடங்க.. ஆப்பிள் விழுந்த நினைவு வர... கணக்குப் போட்டு கண்டுபிடித்தாராம்) • நாய் வருடம் ஒன்று, ஏழு மனித வருடங்களுக்குச் சமம் • நகங்களில் வெள்ளைத் திட்டுகள் இருந்தால் கேல்சியம் குறை (நகத்தின் உள்காயமாம்) • மூளையின் சக்தியில் பத்து சதவிகிதம் தான் நாம் பயன்படுத்துகிறோம் (இதை நம்புவோரைக் கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறார், நூறு சதவிகிதம் மூளையை உபயோகித்து) • நீரில் மூழ்குமுன் மூன்று முறை உடல் மேலே வரும் • தும்மும் கணத்தில் உயிர்துடிப்பு நிற்கிறது |
அடித்தது யோகம். இந்தப் புத்தகத்தில் இருக்கும் சரக்கை வைத்துக் கொண்டு இந்தப் பிறவி முழுவதும் ஓட்டுவேன்.
விக்டோரியா அரசியின் கணவன் அங்கே துளை போட்டு வளையம் அணிந்திருந்தானாம்
பதிலளிநீக்கு(தேவையா?)
எடுத்துப் போட்டு விட்டு இப்படிக் கேட்பது என்ன நியாயம்?
"கிங் ஜேம்ஸ் பைபிளின் 1631ம் வருடப் பதிப்பில் 'Thou shall commit adultery' என்று அச்சுப்பிழை காரணமாக வந்துவிட்டதாம். முன்னூறு பவுன் அபராதம் கட்டச் சொன்னதாம் வேடிகன்"
கடவுளிடமிருந்து தூதர் இருபது கட்டளைகள் வாங்கி வருவாராம், மலைச்சரிவில் பத்துக் கட்டளைகள் விழுந்து நொறுங்கி விட, வேறு வழி இல்லாமல் கீழே இறங்கி வந்து மக்களிடம் பத்துக் கட்டளைகள் கடவுள் தந்தார் என்று சொல்வார் என்று ஒரு நகைச்சுவை சித்தரிப்பு ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட் படத்தில் பார்த்த ஞாபகம் வந்தது.
"நகங்களில் வெள்ளைத் திட்டுகள் இருந்தால் கேல்சியம் குறை"
நம்மூர்ல "கிருஷ்ண கிருஷ்ண பூப்போடு..கிருஷ்ண கிருஷ்ண பூப்போடு..."
சுவையான தகவல்கள் & விளக்கங்கள். ரசமன்பு என்றால் என்ன?--கீதா
பதிலளிநீக்குசுவையான தகவல்கள். சுவாரசியமான பதிவு.
பதிலளிநீக்குஆன்ட்ரேயா பேரம் சுவராஸ்யத்தை அவ்வப்பொழுது நீங்களே இப்படி பதிவிடலாம்....எல்லாமே புத்தம் புதிய செய்தியாகவே மேலும் மேலும் படிக்க ஆவல் தூண்டுகிறது...
பதிலளிநீக்குடான்ஸ் ....உடான்ஸ்....அப்ளாஸ்.
என்ன 360 டிகிரியா தலை தொங்கிருமேன்னு நினைக்க நினக்க உடான்ஸ் பட்டியலில் ...270 டிகிரியே ஆச்சர்யம் ... மனுசன் எதிரில் எதுவும் வசமாக வரமால் இருந்தால் பத்து இருபது டிகிரி தேர்வானா? வந்துவிட்டால் முப்பது டிகிரி கோணத்தில் ஒரு டிகிரி பார்வை மட்டுமே சாத்தியப்பட்டவன் ( ஒரப்பார்வை ....)
நியுட்டன், வைட்டமின் சி ( அப்ப காச்சலுக்கு நெல்லிக்கா சாப்பிட சொல்றிங்க.).. இப்படி எல்லாமே சுவராஸ்ய அதகளமாக இருக்கிறது....
ரசம் புரிகிறது...மிளகுரசம், கொள்ளுரசம், கண்ணாடியின் ஆதாரமாக பின் உள்ள ஆரஞ்சு ரசம்....ரசனையின் மறுபெயர்..... அன்பும் புரிகிறது.... அதென்னங்க ரசமன்பு...
அப்புறம்.... ஸ்ரீ க்கு...கிருஷ்ணா கிருஷ்ணா பூ ப்போடு.... நம்பினால் நம்புங்க குட்டிப்பையனா இருக்கறப்ப கழுகு...புறா இவை பறக்கும் பொழுது நானும் என் ஜொட்டு புஷ்பாக்களும் கிருஷ்ணனை வேண்ட, நகத்தில் பூக்கள் இருப்பதையும் அதை ஒருவருக்கொருவர் எண்ணிக்கை செய்து மகிழும் ரசமன்பு கால்சியத்திலும் மேக்னிசியத்திலும் இல்லை என்பது உண்மைதானே..... ( ரசமன்பு பிட்டப் சரியாயிருந்தா தட்டுங்க இல்லைன்னா கொட்டுங்க அப்பாதுரைஜி )
அப்பா...தெரிந்ததும் தெரியாததுமாய் திரட்டிய தகவல்கள் நல்லாவேயிருக்கு.அப்போ இவ்வளவும் வாசிக்கிற நீங்க எவ்வளவு வீதம் மூளையைப் பயன்படுத்துவீங்க.வாசிச்ச நாங்க !
பதிலளிநீக்குஅப்பாதுரை சார்!
பதிலளிநீக்கு// மழை நாளில் காபி, சீடை, முறுக்கு, உருளைக்கிழங்கு போண்டா, மிளகாய் பஜ்ஜி என்று அவரவருக்குப் பிடித்தத் தீனியுடன் தனிமையில் ஒதுங்கத் தோதான புத்தகங்கள்//
ரொம்ப ரசித்தேன் தலைவரே!
//வானவில்லின் நிறங்கள் ஆறு தான்// வானவில் பற்றி சொன்னதால் இதைக் கண்டிப்பாக மறுக்கிறேன்.
என் ப்ளோகின் முகப்பில் வரவேற்பு வரி என்ன பதித்திருக்கிறேன் பார்த்தீர்களா ?
"வருக ! வருக !! நீங்கள் என் வானவில்லின் எட்டாவது வண்ணம்.."
நியூட்டனை விடவும்,ஆன்ட்ரேயா பேரம்ஐ விடவும், நான் உங்களுக்கு ரொம்ப செல்லம் என்பதால், வானவில்லுக்கு எட்டு வண்ணம் என்பதை நீங்கள் ஏற்கத்தான் வேண்டும்
அட.. நல்லா இருக்கே!!
பதிலளிநீக்குவருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி ராமமூர்த்தி, மோகன்ஜி,ஹேமா,பத்மநாபன்,meenakshi,geetha santhanam, ஸ்ரீராம்...
பதிலளிநீக்குஹேமா... மூளையை எத்தனை சதவிகிதம் பயன்படுத்துகிறேனோ தெரியாது... இருந்தால் தானே தெரியும்? அதை விடுங்க.. இந்த மாதிரி ஆராய்ச்சி செஞ்சு (ஹாங்க்? ஆராய்ச்சி எப்படி செஞ்சிருப்பரு ஆன்ரேயா?) ஒரு புத்தகத்தை (ரெண்டு) வெளியிட்டு பேரும் பணமும் சேர்த்த ஆன்ரேயா தான் மூளையை உபயோகித்தவர்... அதைத் தான் சொல்றீங்களா? டக்குனு புரியலிங்க.
பத்மநாபன்... நெல்லிக்காயை சாதாரணமா நெனச்சுறாதிங்க. மூலிகை வஸ்துக்களை அதிகம் நம்புறதில்லை நான். நெல்லிக்காய் விவகாரம் தனி. என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு வருடம் போல் தினமும் மூன்று வேளையும் உணவுடன் ஒரு வேகவைத்த முழு நெல்லிக்காய் சாப்பிட்டார். எடை குறைந்து, சர்க்கரை குறைந்து, மனிதர் ரிலேக்ஸ்டாக மாறியதற்கு நெல்லிக்காய் தான் காரணம் என்று சத்தியம் செய்கிறார். நானும் நம்பத்தான் வேண்டும் - மனிதருக்கு எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரெஸ் டென்ஷன்.. நெல்லிக்காய் மகிமை தானோ என்னவோ இப்பொழுது மிக அமைதியாகக் காணப்படுகிறார்.. முழு நெல்லிக்காய் கிடைப்பதில்லை, கிடைத்தால் தினம் ஒன்று சாப்பிடுவேன்.
'க்ருஷ்ணா பூப்போடு' கேள்விப்பட்டதில்லை ஸ்ரீராம்... எந்த ஊரில் இருந்தேன் நான்?
மோகன்ஜி, மறந்துட்டங்க... வானவில்லே நீங்க தான் கண்டுபிடிச்சதா சொல்லுங்க.. வண்ணத்தை விடுங்க.. உங்களுக்கு ஆமாம் போடுறத விட என்ன வேலை?
ரசமம்மு என்று எழுதியிருக்கணும்; தானாகவே ரசமன்பு என்று வந்துவிட்டது.. என் குடும்பத்தாருக்கு ரசமம்மு பற்றித் தெரிந்திருக்கும்...
(ரசமம்மு நாட் ரசம் சாதம் ...) இதைப் பத்தி பிறகு எழுதுகிறேன்.
நான் மூணு நாள் லேட். இப்படி ஒரு "உங்களுக்கு தெரியுமா?" போட்டு எங்க ஐ. கியுவை பெருக்கிடலாம்ம்னு எண்ணமா உங்களுக்கு அப்பாதுரை சார்? சான்சே இல்லை. இது மழுங்கின மூளை. இன்னும் பல பதிவு இது போல தேவைப்படும்ன்னு சொல்ல வந்தேன். கீழ் கண்ட ஜோக் போல வளம் பெற்றவர்கள் நாங்கள்..
பதிலளிநீக்குஅன்பே! உன் தலையில் இந்த ரோஜா எப்படி பூத்திருக்கு?
யோவ். நக்கலா. தலையில எப்படி ரோஜா பூக்கும்?
உன் மண்டை அவ்வளவு மண் வளத்தோட இருக்கு.
ரொம்ப பழைய ஜோக்கு தான். இதுல இப்போ எவ்வளோ பர்சென்ட் மூளை உபயோகப்'படுத்தி' இருக்கேன்?
ஸ்ரீக்கும் பத்துவுக்கும்..
எங்க ஊர்ல "கிருஷ்ணா கிருஷ்ணாவுக்கு" பதிலா. "மடையான் மடையான் பூப்போடு மடைக்கு ரெண்டு பூப்போடு" அங்கேயும் "மடை"யான் தான் இந்த மடையனுக்கு கிடைத்தது.
(புத்தக அறிமுகத்திற்கு நன்றி)
அன்புடன் ஆர்.வி.எஸ்.