2010/09/17

விடாமல்


    வினோத் எண்பது மைல் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். தாமதாகி விட்டது. மேலதிகாரி எர்வின் முதல் நாள் தன்னையும் தன் ப்ளூமூன் குழுவையும் கலர் கலராய்த் திட்டியது நினைவுக்கு வந்தது. 'இன்றைக்கு நிச்சயம் பின்பகுதியைக் குத்திக் கிழிக்கப் போகிறான்' என்ற கடுப்பில் வேகத்தைக் கூட்டினான்.

பழைய மனைவியை நினைத்துக் கொண்டான். ராட்சசி! அவள்தான் தாமதத்துக்குக் காரணம். உலகத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் மனைவிகள். பொருமினான். அதிகாலையில் இரண்டு குழந்தைகளையும் வினோதின் வீட்டில் முன்னறிவிக்காமல் கொண்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டாள். பத்து வயது மீரா, எட்டு வயது ஜே. குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்குத் தயார் செய்து, காலை உணவு கொடுத்து, தானும் குளித்து உடையணிந்து வெளி வந்தபோதே தாமதமாகி விட்டது. மீரா ஜேயுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். வினோத் இருவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டான். "நீங்க இரண்டு பேரும் ஒற்றுமையா இருக்கக் கூடாதா?" என்றான்.

"ஐ'ம் ட்ரையிங் டாடி, இவன் தான்..." என்றாள் மீரா.

"ட்ரை என்கிற வார்த்தையே சொல்லாதே. செய் அல்லது செய்யாமலிரு. முயற்சி செய்றேன்னு சொல்றது பாசாங்கு" என்று வினோத் அறிவுரை வழங்க, "வாடெவர்" என்றனர். அவனுக்குத் தெரியாமல் நாக்கில் விரல் வைத்து குமட்டுவது போல் பாவனை செய்தனர். அப்பாவைக் கிண்டல் செய்வதென்றால் ஒற்றுமை எங்கிருந்தோ வந்துவிடும்.

அவர்களைப் பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டதும் "ஸ்கூல் அரை நாள் தான். முடிஞ்சதும் மறக்காம கேம்ப் போக பிக்கப் பண்ணு டாடி" என்று நினைவு படுத்தினாள் மீரா. நாலு நாள் வார இறுதி என்பதால் இருவரையும் அழைத்துக் கொண்டு கேம்ப் போக ஏற்பாடு செய்ததை அனேகமாக மறந்துவிட்டிருந்தவன், "கண்டிப்பா" என்றான்.

  ள்ளிக்கூடத்திலிருந்துக் காரைக் கிளப்பி நெடுஞ்சாலையில் நுழைந்து, வழி நெரிசலில் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டு, தன் அலுவலகத்துக்கு வந்தபோது இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதமாகி விட்டிருந்தது. காரியதரிசியை அழைத்து, "கான்பரன்ஸ் ரூம் மூன்றில் யாரிருந்தாலும் வெளியே துரத்தி ப்ளூமூன் குழுவை அங்கே வரச் சொல். எனக்கு ஒரு கப் காபி ஏற்பாடு செய். தீவுத்திடலில் மூன்று நாள் கேம்ப் போட அனுமதிப் பணம் கட்டி என் பேரில் ரசீது வாங்கிக்கொண்டு வா" என்று வரிசையாக ஆணைகளிட்டான்.

காபியுடன் வந்தக் காரியதரிசி, எர்வின் கொடுத்த இரண்டு சீட்டுக்களை அவனிடம் கொடுத்தாள். படித்து விட்டு எரிச்சலுடன் கான்பரன்ஸ் அறைக்கு விரைந்தான். ப்ளூமூன் குழு காத்துக் கொண்டிருந்தது. எர்வின் கொடுத்த முதல் சீட்டைக் குழுத்தலைவி மேரிபெத் ஜான்சனிடம் வீசியெறிந்தான். "என்ன ஆச்சு?" என்றான்.

சீட்டைப் படித்துவிட்டு, "புது மாடலுக்கான மாதிரி, இன்னும் ஆறு நாளைக்குத் தயாராகாது" என்றாள் மேரிபெத். தன்னருகே இருந்தவர்களைச் சுட்டினாள். "இவர்கள் விடாமுயற்சி செய்தும் சைனாவிலிருந்து சப்ளை வரவில்லை. அசெம்ப்ளி முடியும் வரை சாப்ட்வேர் டெஸ்டிங் தொடங்க முடியாது" என்றாள்.

அருகிலிருந்தவன், "இன்னும் ஆறு நாளில் முடித்துவிட முயற்சி செய்கிறோம்" என்றான்.

காலையிலிருந்து அதிகரித்துக் கொண்டே வந்த எரிச்சலில் வினோத் கத்தினான். "எந்தப் புடுங்கியக் கேட்டாலும் முயற்சி செய்றேன், திட்டம் போடுறேன்னு சொல்றாங்களே தவிர, எதையும் முடிச்சு வைக்க ஆளில்லை. முயற்சி பண்றதுக்கா உங்களுக்கு சம்பளமும் போனசும் கிடைக்குது? ஏற்கனவே டிலே ஆகியிருக்கு, இன்னும் ஆறு நாளில் முடிக்க முயற்சி பண்றீங்களா? வெட்கமாக இல்லை?"

"வினி, நாங்க எல்லோருமே இதுல தீவிரமா உழைச்சுக்கிட்டிருக்கோம். இன்னும் ஆறு நாளில் தயாராயிடும்" என்றாள் மேரிபெத்.

"டிசைன் சிக்கல் ஒரு காரணம். சிக்ஸ் சிக்மா தொந்தரவு இன்னொரு காரணம், அவசரமாக புதிய உத்தி எதையும் கையாள முடியாது. பார்ட்ஸ் எதுவுமே வேலை செய்யவில்லை. ஹீட் ட்ரேன்ஸ்பர் டெஸ்டிங்கில் எல்லாமே பஸ்பமாகிவிட்டது" என்று இரண்டாமவன் சேர்ந்து கொண்டான்.

அடுத்த நாலு மணி நேரம் குழுவுடன் விவாதம் செய்து, செயல்படுத்த வேண்டிய முறைகளைப் பற்றியத் தீர்மானத்துக்கு வந்ததும், "இன்னும் நாலு நாளில் இது தயாராக வேண்டும். அவ்வளவு தான் கெடு" என்றான் வினோத்.

"முயற்சி செய்றோம்" என்ற குழுவைப் பார்வையால் பொசுக்கிவிட்டு, "மேரிபெத், நாலு நாளில் தயாராகவில்லையென்றால் இருவரையும் வேலையிலிருந்து நீக்கி விடு" என்றான். "முடிக்கிறவங்களுக்குத்தான் இங்கே வேலை, முயற்சி செய்கிறவர்களுக்கு இல்லை".

தன் அறைக்குத் திரும்பியதும் எர்வினின் இரண்டாவது சீட்டை மறுபடி படித்தான். 'அடுத்த வாரம் உனக்கு வர வேண்டிய ஸ்டாக் ஆப்ஷனை நிறுத்தட்டுமா?' என்று எழுதியிருந்த சீட்டைக் கசக்கிக் குப்பையில் எறிந்தான். உள்ளே வந்த காரியதரிசி கேம்ப் ரசீதைக் கொடுத்துவிட்டு, "நேரமாகி விட்டது" என்றாள்.

தலையாட்டிவிட்டுக் கிளம்பினான். திரும்பி வந்து, குப்பையிலெறிந்தச் சீட்டைப் பொறுக்கிச் சீராக்கி, தன் மேஜைக் கண்ணாடியின் கீழே செருகிவிட்டு வெளியேறினான். ஸ்ட்ரெஸ் அதிகமானால் அவனுக்கு வழக்கமாக வரும் ஒற்றைத் தலைவலியில் துடித்தான். என்ன வாழ்க்கை இது? எத்தனை வெற்றி கிட்டினாலும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லையே? திட்டப்படி எதுவும் முடியவில்லையே? தேவைக்கு மேலே எதிர்பார்க்கிறேனா? ஏதோ நினைத்தபடி காரில் ஏறினான். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்று நினைவுபடுத்தியது பசி மயக்கம். குழந்தைகள் டீச்சருடன் காத்திருப்பார்கள். தாமதத்திற்கு ஏதாவது சாக்கு சொல்லி அபராதம் கட்டி, டீச்சரிடம் வேறு வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும். விரைந்தான்.

  தீவுத்திடல் ஏரியும் உள்ளடங்கிய நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளும் ஒரு நல்ல கவிதைக்காகக் காத்திருந்தன. படகிலிருந்திறங்கி வாடகை ஜீப் எடுத்து கேம்ப் பொருளெல்லாம் ஏற்றி, அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த தீவுக்கு வந்த போது மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. மரங்களடர்ந்த இடமாகத் தேடிக் கூடாரம் அமைக்கத் தொடங்கினான் வினோத். அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியறைகளுடன் கூடாரம் தயாராகிவிட்டது. உணவு, உடை, மீன் பிடிக்கும் கழி, விலங்குகளை விரட்டும் நுண்ணொலிக்கருவி, இரண்டு விளக்குகள், டிவி, பார்பெக்யூ சட்டி, சிறிய ஜெனரேடர், குளிர்பெட்டி என்று மீரா, ஜே உதவியுடன் வரிசையாக ஜீப்பிலிருந்து கொண்டு வந்தான். ஜீப்பிலிருந்து மின்கம்பி கட்டி ஜெனரேட்டரை இயக்கி, கொண்டு வந்திருந்த குளிர்பெட்டியை இணைத்தான். பால், சோடா, சாசெஜ், பழச்சாறு, குச்சி ஐஸ் என்று எல்லாவற்றையும் உள்ளே வைத்தான். விளக்குகளில் பல்ப் பொறுத்தி அறைக்கு ஒன்றாய் வைத்து விட்டு, அவற்றையும் ஜெனரேட்டரில் இணைத்தான். கடைசியாக டிவி, டிவிடியை இணைத்ததும் பிள்ளைகள் சண்டையும் தொடங்கிவிட்டது.

"என் ரூம்ல இருக்கு டிவி, நான் சொல்ற டிவிடி தான் பார்க்கணும். இல்லைனா டிவி கிடையாது" என்றாள் மீரா.

"ஜெனரேடர் என் ரூம்ல இருக்கு, நான் சொல்ற டிவிடி தான் பார்க்கணும். இல்லைனா கரன்டே கிடையாது" என்றான் ஜே.

"நீங்க ரெண்டு பேரும் சமாதானமா இல்லைனா இரண்டு பேருக்குமே டிவிடி கிடையாது" என்றான் வினோத்.

குளிர்பெட்டியைத் திறந்து குச்சி ஐஸ் எடுக்கப் போன மீரா, கைதவறிக் கீழே விழுந்ததை எடுத்து ஜேயிடம் கொடுக்க, மறுபடி சண்டை. "தவறி விழுந்திடுச்சு. இன்னும் பிரிக்கக் கூட இல்லை டாடி.. வேண்டாங்கிறான்"

"டாடி? நான் ஏன் கீழே கிடந்ததைத் திங்கணும்?" என்று ஜே அதைத் தூக்கி எறிய மீராவின் காலில் பட்டுத் தெறித்தது. குண்டடி பட்டது போல் அழுகையை வரவழைத்துக் கொண்டு அலறினாள் மீரா. "ஹி இஸ் எ ப்ரூட் டாடி. கேவ்மேன்"

இரண்டு குச்சி ஐசையும் வெளியே எறிந்தான் வினோத். "பத்து நிமிஷம் சண்டை போடாமலிருக்க முடியாதா உங்களால்? இதுக்குத் தான் குழந்தைகளே வேண்டாமெனு இருந்தேன். இப்படிக் கழுத்தறுக்கிறீங்களே?" என்று கத்தினான். இருவரையும் பிடித்திழுத்து அடுத்த அறையில் ஒரு ஒரமாக உட்கார வைத்தான். "நான் சொல்லும் வரை நீங்கள் இங்கேயே ஒண்ணா உட்கார்ந்திருக்கணும்; எழுந்தா எனக்கு கெட்ட கோபம் வந்துரும்" என்று அதட்டினான்.

"நல்ல கோபம்னு வேறே தனியா இருக்குதா?" என்று ஒற்றுமையாகக் கிண்டல் செய்து சிரித்தவர்களைக் கவனிக்காதது போல் வெளியே வந்தான். சற்று தொலைவிலிருந்த மறைவில் ஒன்றுக்குச் சென்றுத் திரும்பியவன், திடுக்கிட்டான்.

முரட்டுக் கருங்கரடி ஒன்று கூடார வாசலில் உட்கார்ந்தபடி, அவன் எறிந்த ஐஸ் குச்சிகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

  நிலையைப் புரிந்துகொள்ள வினோதுக்குச் சில கணங்களாயின. குழந்தைகளை அதட்டி உள்ளே ஓரமாய் உட்கார வைத்தது ஓரளவுக்கு நல்லது என்று தோன்றினாலும் கரடி எழுந்து உள்ளே செல்ல அதிக நேரம் பிடிக்காது என்பதையும் புரிந்து கொண்டான். யாரையாவது கூப்பிடலாமென்றாலும் செல்போன் இல்லை. ஜீப்புக்குள் ஆயுதம் ஏதும் இருக்கிறதாவென்று பார்க்க நினைத்து, கரடி பார்த்து விடப்போகிறதே என்று அச்சத்தில், தரையில் கைகளை ஊன்றி அடி மேல் அடி வைத்து நகர்ந்தான்.

கைகளைத் தரையில் ஊன்றி நடந்து வந்தவனைப் பார்த்துவிட்ட கரடி, நாலு கால் பிராணி என்று நினைத்து சாப்பாடு கிடைத்த சந்தோஷத்தில் வீறிட்டது. 'கரடியாட்டம் ஏன் கத்துற?' என்றவர்களெல்லாம் கரடி கத்துவதைக் கேட்டதில்லையென்று நேரம் கெட்ட நேரத்தில் புரிந்தது. கரடி பாயுமுன் எழுந்து கொண்டான். அவன் எழுந்து ஆறடி உயரத்துக்கு நின்றதும், கரடியும் திகைத்துப் பின்வாங்கி இரண்டு காலில் நின்று அவனை அளவெடுத்தது.

இதையெல்லாம் பார்த்துவிட்ட மீராவும் ஜேயும் "டாடீ" என்று அலறினார்கள்.

வினோத் கத்தினான். "மெதுவா ஒரு ஓரமா போய் நில்லுங்க" என்றபடி, கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜீப் மேல் வீசியெறிந்தான். ஜன்னல் கண்ணாடி உடைந்துத் தெறித்தது. குரலும் ஒலியும் வந்த திசையை நோக்கித் திரும்பிய கரடி, குழம்பி நின்றது. சத்தம் கேட்டு ஓடிவிடும் என்று அவன் நினைக்க, கரடி முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி, வாயிலிருந்து எச்சில் ஒழுக, கூர்மையான பற்கள் தெரிய, காதைப் பிளக்கும்படி கர்ஜனை செய்தது. வேகமாக நகர்ந்து ஜீப்பை உருட்டிக் கீழே தள்ளியது. ஏற்கனவே சரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் பல முறை உருண்டு கீழே ஏரியருகே ஒரு மரத்தில் சாய்ந்து நின்றது. ஜீப்பிலிருந்த ஜெனரேட்டர் கம்பி அறுந்து கூடாரத்தில் அங்குமிங்கும் பொறி பறந்து மின்சாரம் நின்று போனது.

பின் கால்களில் எழும்பி நின்று முன்னங்கால்களால் தன் நெஞ்சில் அறைந்து கொண்ட கரடி மின்பொறிகளைப் பார்த்ததும் கொஞ்சம் அசந்து நின்றது. வினோதைத் தெளிவாகப் பார்த்துவிட்டு வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், அவன் முடிந்தவரை குரலில் ஒலியைக்கூட்டி "சூ" என்றான்.

"டாடி, அது என்ன நாய்க்குட்டியா சூ சொன்னா விலக?". நேரமறியாத கிண்டல் என்றாலும் மீராவின் குரலில் நடுக்கமும் பயமும் மிகையாக இருந்தன. இருவரும் கூடாரத்தை விட்டு வெளியே வந்தனர். வினோத் அவர்களைப் பார்த்துத் திரும்பி "ஓடுங்க ரெண்டு பேரும்... இந்த இடத்தை விட்டு ஓடுங்க... மீரா, உதவி கேட்டு குரல் கொடு" என்றான். மூச்சு வாங்கியது. வியர்த்தது. 'தனித்தீவுக்கு வந்திருக்கக் கூடாது' என நினைத்து அலைபாய்ந்தான்.

மீரா "வாடா" என்று ஜேயின் கைகளைப் பற்றி இழுக்க, அவன் பயத்தில் வர மறுத்தான்.

"ஜே, மீராவோட போ, ஓடு... நௌ" என்று வினோத் அலறினான். அதற்குள் அருகே வந்து நின்ற கரடி அவனை அறைய, குப்பை போல் காற்றில் பறந்து விழுந்தான்.

அதிர்ச்சியில் மீராவும் ஜேயும் அசையவில்லை. விடாமல் அலறிக் கொண்டிருந்தார்கள். வினோத் வலியுடன் எழுந்தபடியே சலித்தான். தீவுக் காவல் துறை எங்கே? மணிக்கொரு முறை ரோந்து சுற்றுவார்களே? "உதவி" என்று அலறத் தொடங்கினான். யாராவது வர மாட்டார்களா? பக்கத்துத் தீவில் யாராவது இவர்கள் அலறலைக் கேட்க மாட்டார்களா? இடுப்பு வலித்தது. உடைந்து போயிருக்குமா? கால் சுளுக்கிக் கொண்டுவிட்டது. கன்னத்தில் ரத்தம் வருவதைக் கவனித்த வினோத் பயந்தான். குழந்தைகளுடன் ஊர் திரும்ப வேண்டுமே? வெளியே இருட்டத் தொடங்கிவிட்டதே? மின்சாரம் வேறு இல்லையே?

வினோதையும் அலறிக்கொண்டிருந்தக் குழந்தைகளையும் குழப்பத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு, மோப்பம் பிடித்து கூடாரத்தின் உள்ளே செல்லத் தொடங்கியது கரடி. மீரா ஜேயின் கையைப் பிடித்துக்கொண்டு மெள்ளப் பின்வாங்கினாள். கரடி அவர்களைப் பார்த்து உறுமிக்கொண்டே இருந்தது. "டாடி. ஹெல்ப்! ஏதாவது செய் டாடி, சும்மா நிக்கிறியே?" என்று அலறிய மீராவையும் ஜேயையும் கீழே தள்ளியது.

வினோதுக்கு ஆத்திரம் வந்தது. "சும்மாவா நிற்கிறேன்?" என்று கத்த நினைத்தவன், குழந்தைகள் கீழே விழுந்ததைப் பார்த்து உறைந்து போனான். திடீரென்று ஜீப்பின் அலாரம் ஒலி கேட்டுத் திரும்பினான். விழுந்த வேகத்தில் கீழே கிடந்த ஜீப் சாவியை ஜே அறியாமலே அழுத்த, உருண்டு கிடந்த ஜீப் விளக்குகளைச் சிமிட்டிக்கொண்டு இடைவிடாத ஓசை எழுப்பிக்கொண்டிருந்தது. வினோத் ஆத்திரம் தாங்காமல் "ஏய்.. என் குழந்தைகள்" என்று கத்தியபடி நொண்டிக் கொண்டே கரடியைத் தடுக்க டென்டுக்குள் ஓடினான். "எழுந்து நில்லுங்க, உடனே எழுந்து நில்லுங்க" என்று கத்திக் கொண்டே ஓடினான்.

எழுந்திருக்கப் பயந்த குழந்தைகள் பந்து போல் சுருண்டு கொண்டனர். அருகே நின்ற கரடி கர்ஜனை செய்தது. டென்டில் கிடந்த பொருட்களைத் தாறுமாறாக வீசிக் கொண்டிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்த வினோத், கீழே கிடந்த ஜெனரேடரை எடுத்துக் கரடியின் தலையில் வேகமாக எறிந்தான். அடிபட்ட கரடி, குழந்தைகளை விட்டு அவனைத் துரத்தியது. தடுமாறி விழுந்த வினோத், விலங்குகளை விரட்டுவதற்காகக் கொண்டு வந்திருந்த அல்ட்ரா சௌன்ட் கருவியைப் பார்த்தான். அதன் உச்ச ஒலி விசையைத் தட்டினான். கரடி வினோதை மறுபடியும் அறைந்தது. நுண்ணொலிக் கருவி உடைந்து நொறுங்கியது. வினோதின் வாய் கிழிந்து நாலைந்து பற்கள் கீழே விழுந்தன. மயங்கி விடாதே. குழந்தைகளுக்காவது விழிப்புடன் இருக்க முயற்சி செய். தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

ஜேயின் கால்களைக் கவ்வித் தரதர என்று இழுத்துக் கொண்டு உள்ளே ஓடத்தொடங்கியது கரடி. ஜேயின் கால், கை, முகமெல்லாம் ரத்தம். வீறிட்டலறினான். மீரா டிவியை எடுத்து கரடியின் தலையில் அடித்தாள். கண்கள மறைத்தாலும் தடுமாறியபடியே எழுந்த வினோத், அருகில் கிடந்தக் குளிர்பெட்டியை எடுத்து ஓடிச் சென்று கரடியின் தலையில் ஓங்கி அடித்தான். இரண்டு விளக்குகளையும் எடுத்து கரடியின் முகத்தில் குத்தினான். ஜேயை விட்டு விலகிய கரடி உக்கிரத்துடன் வினோதின் மேல் பாய்ந்தது. கீழே விழுந்து கிடந்த பார்பெக்யூ சட்டியை எடுத்து பாய்ந்து வந்த கரடியின் வாயில் அடித்து, டார்சேன் போல் கர்ஜனை செய்தான். அடித்த வேகத்தில் பார்பெக்யூ சட்டியின் தடித்த கம்பிகள் அதன் வாயுள் செருகிக்கொண்டன. முகத்தை இப்படியும் அப்படியும் அசைத்துக் கம்பிகளை விடுவிக்க முயன்ற கரடி, முடியாமல் முன் கால்களால் தரையில் ஓங்கி அடித்தது. குழந்தைகளுடன் ஒரு ஓரத்துக்குப் புரண்டான் வினோத். இனி எங்கேயும் போக வழியில்லை. கடிபட்டுச் சாகப்போகிறோம் என்று நினைத்துக் குழந்தைகளுக்கு வேலியாக நின்று கொண்டான். 'வெறும் கையே ஆயுதம், இன்றைக்கு உன்னை விடுவதில்லை' என்று உறுமினான். வெறி பிடித்தது போல் கரடிக்கு இணையாகக் கத்தினான்.

அவர்கள் மேல் பாய்ந்த கரடி, சரிந்து விழுந்தது. வினோத் புரியாமல் விழிக்கையில், தீவுத்திடல் காவலர்கள் விலங்குகளுக்கான மயக்க மருந்துத் துப்பாக்கியுடன் அவர்களை நோக்கி ஓடி வந்தனர்.

  தீவுத்திடல் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வினோதும் குழந்தைகளும் வெளியேறத் தயாராக இருந்த போது டிஸ்சார்ஜ் செய்ய வந்த மருத்துவர், "நீங்கள் ஜீப் அலாரத்தை புத்திசாலித்தனமாக உபயோகித்தீர்கள். பக்கத்துத் தீவிலிருந்தவர்கள் ஜீப் விளக்குகளையும் ஒலியையும் கவனித்துவிட்டு, காவலர்களை வரவழைத்தனர்" என்றார்.

"எல்லாம் என் தம்பியின் வேலை" என்றாள் மீரா பெருமையுடன். ஜே அவள் கைகளைப் பிடித்தபடி ஒட்டிக்கொண்டு நின்றான்.

அன்றிரவு வீட்டில் குழந்தைகளைப் படுக்க வைத்துக் கதை சொல்லிப் போர்வையை இழுத்துப் போர்த்தினான் வினோத். "கேம்ப் அனுபவம் இப்படி ஆயிடுச்சே, சாரி" என்றான்.

அவன் கழுத்தைக் கட்டிய ஜே, "யூவர் க்ரேட் டாடி, சூபர்மேன்" என்றான். அவர்களுடைய தலையை வருடியபடி "உங்க இரண்டு பேர் மேலேயும் கோபப்பட்டதற்கு என்னை மன்னிச்சுடுங்க" என்றான் வினோத்.

மறுநாள் அவனெதிரில் ப்ளூமூன் குழுவினர் நின்று கொண்டிருந்தனர். புது மாடலுக்கான கெடு முடிந்தும் தயாராகவில்லை. வினோத் அமைதியாக, "முயற்சி பண்ணியிருக்கீங்க... அதான் முக்கியம்" என்றான்.

19 கருத்துகள்:

  1. விறுவிறுப்பான கதை. வாழ்த்துக்கள்.--கீதா

    பதிலளிநீக்கு
  2. கரடி வந்த கதை.... கிளைமாக்ஸ் நல்லா இருந்தது அப்பாதுரை சார்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  3. முதலில் முயற்சியின் மீது எற்பட்ட எரிச்சல் கடைசியில் முயற்சியின் மீது ஒரு நம்பிக்கை ...

    அப்பப்பா...கதையில் கரடி நுழைந்தவுடன் ஆரம்பித்த திகில் இன்னமும் நீங்கவில்லை

    நல்ல முயற்சி..இல்லை இல்லை வெற்றியும் பெற்று விட்டீர்கள்..

    திகில் தீர்ந்தவுடன் மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாவ்... அழகான கதை... நெகிழ வைத்தது... நல்ல கருத்தும் கூட

    பதிலளிநீக்கு
  5. மாற்றங்களைக் கொண்டு வர கடுமையான அனுபவங்கள் தேவையாய் இருக்கிறது. வாழ்க்கையே காலி என்ற டென்ஷன் மிச்ச டெண்ஷங்களை ஒன்றுமில்லாமல் செய்து சிறிய சந்தோஷங்களை அனுபவிக்கக் கற்றுத் தருகிறது. பரபரப்பாய் விறுவிறு கதை. கற்பனைதானே...?

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் புலி சிங்கத்தை விட கரடி மிகுந்த பலம் உடையது.ஒரே அடியில் முகம் பெயர்ந்து குழியிலிருந்து வெளியே வந்துவிட்ட ஒற்றைக் கண்ணோடு ஓடிவந்தவரைப் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. //bogan சொன்னது… உண்மையில் புலி சிங்கத்தை விட கரடி மிகுந்த பலம் உடையது.ஒரே அடியில் முகம் பெயர்ந்து குழியிலிருந்து வெளியே வந்துவிட்ட ஒற்றைக் கண்ணோடு ஓடிவந்தவரைப் பார்த்திருக்கிறேன்.//

    அடி விழுந்தும் கண்ணையும் எடுத்து வந்தாரா ? பலே பலே போகன்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதா, RVS, பத்மநாபன் (திகில் குறைஞ்சதும் திரும்ப வாங்க), அப்பாவி தங்கமணி (ரொம்ப ரசிச்சீங்க போல, நன்றி), ஸ்ரீராம், போகன், சாய்..

    நல்ல கேள்வி கேட்டீங்க ஸ்ரீராம்... இது அக்மார்க் கற்பனை. ஒரு சமயம் கேனடாவுல கேம்ப் போனப்ப கரடி எதிர்பட்டா என்ன செய்யணும், எப்படி பாதுகாத்துக்கணும்னு அரை மணி ட்ரெயினிங் கொடுத்தாங்க... ரெடியா இருந்தேன், காட்டுல கரடியைக் காணோம். அத வச்சு கரடி விட்டேன். கரடி விடுற அனுபவம் மட்டும் தான் எனக்கு உண்டு.

    போகன், நீங்க சொல்றது சரியா இருக்கலாம்... அந்த ஆளை நெனச்சா பக்குனுதுங்க.. ஒரு கண்ணு உள்ள ஆளா? சிங்கம் புலியை விட கரடி ரொம்ப மெதுக்கானதால மனிதர்கள் கரடியை எதிர்க்க முடியும்னு சொல்றாங்க. (சொன்னவங்க உயிரோட இருக்காங்களானு தெரியாது) Anthony Hopkins நடிச்ச The Edge படம் பார்த்திருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  9. Thought I was reading a chapter out of a an camp adventure!!

    very well written Appadhurai.
    sorry for commenting in English.

    very thrilling.

    பதிலளிநீக்கு
  10. எம்மொழியும் செம்மொழி வல்லிசிம்ஹன் (கோபாலபுரத்துல சொல்லிடாதீங்க). நன்றி.

    வாழ்க்கையே கேம்ப் அட்வெஞ்சர்னு ஒரு நாட்டுப் பாடல் இருக்கு. பட்டை (நெத்தியில்) அடிச்சிக்கிட்டு தமிழ்ப்பாட்டு படிச்ச எங்க மாமா அடிக்கடி சொல்வார், அரைகுறையா ஞாபகம் வருது. ஓட்டை ஒடிசல் கூட்டுக்குள்ளே something something something something ஆட்டமாடி ஓஞ்சபின்னே அச்சமென்ன சொல்லுதியோ... தேடணும் இந்தப் பாட்டை.

    பதிலளிநீக்கு
  11. எந்த வருஷத்துப் பாட்டு தெரியலையே துரை. சுவாரஸ்யமாக இரண்டு லைன் சொல்லிட்டுத் தேடறேன்னு ஒரு சஸ்பென்ஸ் வேற:)

    பதிலளிநீக்கு
  12. வல்லிசிம்ஹன், எனக்கே சஸ்பென்ஸ் தாங்க முடியலைனா பாருங்க..
    உடம்புக்குள்ளே புகுந்த உயிர் ஆட்டம் போடுதுங்கற மையமான கருத்து இந்தப் பாட்டுல - நாங்கள்ளாம் (கசின்ஸ் அன்ட் ஐ) நெல்லிக்குப்பம், பழவந்தாங்கல் நாட்கள்ள கன்னாபின்னானு ஆட்டம் போடுவோம்; படிக்காம இப்படி ஆட்டம் போடுறீங்களேனு இந்தப் பாட்டைச் சொல்லி அட்வைஸ் கொடுப்பார். அவ்வளவு தான் ஞாபகம்.

    எங்க அம்மா சைடுல இந்த மாமா, அப்பா சைடுல எங்க பாட்டி - இவங்க ரெண்டு பேருமே இந்த மாதிரி நாட்டுப் பாடல்களை எக்ஸ்டெம்பரேனியசா எடுத்து விடுவாங்க. எங்க மாமா படிச்சவர், ஆங்கிலம், வடமொழி, தமிழ் மூணிலும் தேர்ச்சி பெற்றவர் எங்க குடும்பத்துலயே இவர் ஒருத்தர் தான். பாட்டியோ ரெண்டாம் க்ளாசோட சரினு நினைக்கிறேன்; ஆனா தமிழ்ல அடுக்கு மொழியும் அலங்கார நடையும் சும்மா அந்தக்கால கோடை மொட்டைமாடிக் காத்து மாதிரி பிச்சிக்கும். கோவம் வந்தா கேக்கவே வேணாம். நெல்லை/பாலக்காட்டு நிலவழக்கெல்லாம் திட்டு நக்கல்னு சரமாரியா வரும். கிண்டல் செய்யத் தெரிஞ்ச அளவுக்கு அப்ப ரசிக்கத் தெரியலை.

    இந்த மாதிரி நிறைய நாட்டுப்பாடல் ஒருத்தருக்கொருத்தர் சொல்லியே பரவியிருக்கு; யாரும் எழுதி வைக்காம அனேகமா அழிஞ்சு போய் விட்ட தமிழ்க்கலாசாரச் சொத்துனு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் தான். சுஜாதாவோ மாலனோ இந்த மாதிரி முறையா சேர்க்கப்படாத நாட்டு/சித்தர் டைப் பாடல்களை கலெக்ட் பண்ணி புத்தகம் எழுதினதா நினைவு.

    you might have touched a nerve.

    பதிலளிநீக்கு
  13. ஆமாம் மெதுக்குன்னா மெதுவானது என்று பொருள் கொள்கிறேன்.ஆமாம் கரடி மெதுவானதே[நல்ல வேளையாக!]கரடி அடித்து கண்குழியில்[orbit] இருந்து வெளியே விழுந்துவிட்ட விவகாரத்தில் நான் கரடி விடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!அது அறிவியல் புனைவும் அல்ல!நான் அந்த துறையில் [கண் மருத்துவம்]தான் இருக்கிறேன் இது தருமபுரி பக்கம் நிகழ்ந்தது.மேல் சிகிச்சிக்காக மதுரை வந்தபோது பார்த்தேன்

    பதிலளிநீக்கு
  14. bogan, விழிக்குழியிலிருந்து வெளிவருவது திகிலாக இருந்தாலும், சாதாரண நிகழ்வு என்று அறிவேன். ஒரு கண்ணுடன் ஓடி வந்த ஆளை நினைக்கும் பொழுது திக்கென்று இருக்கிறது. can't even imagine his plight escaping from the beast!

    மெதுக்கு=sluggish

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை சார்! திகிலா துவக்கி, வித்தியாசமா முடிச்சிருகீங்க. உங்க பின்நனூட்டத்திலிருந்து,நெல்லிகுப்பம்லாம் வந்திருக்கீங்கன்னு தெரியுது.என் பள்ளிப் பருவம் சொந்த ஊரான கடலூரில் தான். நெல்லிக்குப்பத்தில் நிறைய தோழர்கள் அந்த நாட்களில்...
    பழைய நினைவுகள் கிளர்ந்தன பதிவைப் படித்த பின்....

    பதிலளிநீக்கு
  16. திருப்பி படித்தாலும் திகில் குறையாத மாதிரிதான் இருக்கு ..கரடி

    முயற்சியின் புரிதல் சொன்னவிதம் அருமை...
    .
    குட்டிக்கதை சாமியார் ஒருவரின் வகுப்பில் ஒரு பயிற்சியாக இதை வைத்திருந்தார்களாம் கலந்து கொண்டவர் ஒருவர் சொன்னது....
    ஒரு பொருளை ( உ-ம் தண்ணீர் பாட்டில் ) மேசையின் வைத்து ஒவ்வொருவராக அழைத்து எடுக்க முயற்சி செய்யுமாறு சொல்வார்களாம்
    வந்தவர்கள்.. ஒவ்வொருவரும் தண்ணீர் பாட்டில் தானேன்னு டக். டக்குனு எடுத்தார்களாம் ..ஒருவர் மட்டும் எடுப்பதுபோல் பாவனை செய்து, பாட்டிலின் மிக அருகில் கையை கொண்டுவந்து கொண்டுவந்து எடுக்காமலே உத்து பார்த்து கொண்டே இருந்தாராம் ... சாமியாரிடமிருந்து அவர்க்கு ஒரே பாராட்டு .... அந்த நபர் சாமியார் சொன்ன வேலையை சரியாக செய்ததாகவும் ....முயற்சி என்பது பாவனை மட்டுமே செயலாக்கம் இல்லை என்று நீண்ட சொற்பொழிவாற்றினாராம்....

    ( இப்போதய சாமியார்கள் முயற்சி செய்வது இல்லை என்பது உண்மை தான் ........)

    பதிலளிநீக்கு