2010/09/09

இன்பவெறியைத் தூண்டும் சைவ உணவு



            தமிழ்நாட்டு உணவு வகைகளில் செட்டிநாட்டுச் சமையல் மேல் எனக்கு என்றுமே ஒரு மையல். என் செட்டிநாட்டு நண்பர்கள் வீட்டில் உண்டு களித்த நாட்கள் அதிகம். அய்யர் வீட்டுப் பையன் இப்படி வெட்டுகிறானே என்று என் நண்பர் குடும்பத்தார் வியந்து போவார்கள். சுவையான சாப்பாட்டைப் பொறுத்தவரை, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் எம்மதமும் சம்மதம்' என்பது என் கொள்கை. அப்பம், இடியப்பம், மசாலாக் கூட்டுக்கறிகள் (கத்தரிக்காய் முருங்கைக்காய் கலந்து ஒரு மசாலா செய்வார்கள் பாருங்கள், வாரியார் தமிழ் கேட்ட மாதிரி இருக்கும்; பெரிய சமாசாரம்), வெள்ளைப்பணியாரம், மாங்காய்-மீன் குழம்பு (சைவ மீன்குழம்பு என்று ஒரு வகை), நண்டுக்கறி, பலாக்காய்ப் பிரட்டல், கோழி ரசம், மட்டன் பொடிமாஸ், பூண்டுக் காரக்குழம்பு, அரிசிப் பாயசம் என செட்டிநாட்டுக்கென்று தனிப்பட்ட உணவுகளை அடையாளமாகச் சொல்லலாம்.

இவற்றையெல்லாம் இனிக் கண்ணால் கூடப் பார்க்க வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்திருந்தபோது நண்பர் ஒருவர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தை அறிமுகம் செய்து வைத்தார். உள்ளே நுழைந்ததுமே தாக்கிய பூண்டு மசாலா நறுமணம் என்னைக் காரைக்குடிக்கு எடுத்துச் சென்று விட்டது. தாமரையாவது பவளமல்லி மல்லிகையாவது, செட்டிநாட்டு மசாலா நறுமணத்துக்கு ஈடாகுமா ஐயா? இடியப்பம், முட்டை போண்டாவில் தொடங்கினோம். தொடர்ந்து செம்மீன் வறுவல், சிக்கன்கறி, காரக்குழம்பு, ரசம் என்று முழுச்சாப்பாடு. பூண்டு காரக்குழம்பைத் தனியாக வரவழைக்க வேண்டியிருந்தது. பருப்புப்பொடியும் நெய்யும் தனியாகக் கொடுத்தார்கள். கடைசியில், என்னால் நம்பவே முடியவில்லை - அரிசிப் பாயசம் கூட கிடைத்தது (கவுனியரிசி?). 2012ல் உலகம் அழியப் போகிறதாமே? பூண்டு காரக்குழம்பை ஒரு பிடி பிடித்தேன்.

சமீபத்தில் மறுபடியும் பூண்டுக்குழம்பு சாப்பிட ஆசை வந்துவிட்டது. கவலை இல்லாத மனிதர் யார்? என்னைக் கேட்டால் சமைக்கத் தெரிந்தவர் கவலையில்லாதவர் என்பேன். சாப்பாட்டுக்காக மட்டும் சொல்லவில்லை, சமைப்பதே அமைதியைக் கொடுக்கும் ஒரு செயல் என்று நம்புகிறேன். எட்டு ஊருக்கு சமைப்பேன் என்றாலும் செட்டிநாட்டு உணவு செய்து பார்த்ததில்லை. முதல் முறையாகப் பூண்டு காரக்குழம்பு செய்தேன். இந்திய உணவு சமைக்கிறேன் என்றாலே வீட்டுக்கதவு ஜன்னல் எல்லாம் திறந்து வைத்துவிட்டு மனைவி குழந்தைகள் வெளியே ஓடி விடுவார்கள். பூண்டு, காரமசாலா என்றால் கேட்க வேண்டுமா? ஒரு வாரம் கழித்துத்தான் அவர்களையே பார்த்தேன்.

வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரைக் காரக்குழம்பு.

            சிலர் பிரமிக்க வைக்கிறார்கள் என்றாலும், தும்மினால் இணையத்தில் காதல் அல்லது தீண்டல் பற்றிக் கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைப் போல் பத்து வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதத் தொடங்கி விடுகிறார்கள்:
    நீ                                                   கண்ணே தமிழரசி!                               ஆடையில்லாதவர்
    கண் திறந்து                                   பொருள் சேர்த்து விட்டேன்                  அரை மனிதராம்.
    பார்க்கும் பொழுதெல்லாம்              அறம் காத்திருக்கட்டும்                        நீயும் நானும்
    நான்                                              உன்                                                   ஒரு மனிதராகும்
    மின்சாரம்                                      ஈர இதழ் தரும்                                    கணக்கு பழகலாம்
    சேமிக்கிறேன்.                               இன்பமே இன்றையத் தேவை.              வாயேன்.

ஓரினக் காதல், கள்ளக்காதல் பற்றிக் கவிதைகளைக் காணோம். தேடிப் பார்க்க வேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, காதல் புலம்பல் அதிகம் காணப்படுகிறது.
    அடி
    நீயும் நானும்
    அந்தரங்கமானதற்கு
    நிலவே சாட்சியென்றாய்.
    நிலவைப் போல்
    நீயும் மறைவாய்
    எனப் புரியாமல் போனதே?
        அங்கே
        உன்னுடன் வளர்பிறையாகப் பூத்திருப்பது
        இன்னொரு காதல்.
        இங்கே
        என்னுடன் தேய்பிறைக்காகக் காத்திருப்பது
        இன்னொரு காயம்.
என்று சோகமும் விரக்தியும் கலந்து தாளிக்கிறார்கள். எப்படியோ, காதலித்தால் சரிதான்.

புதுக்கவிதையில் ஒரு வசதி. நாம் எழுதுவது தான் கவிதை.

            கலைஞர் கருணாநிதியின் 'முத்துக்குளியல்' புத்தகம் படித்து முடித்தேன். முதல் பாகம் சுவை. அவசியம் படியுங்கள். இரண்டாம் பாகத்தை, அவர்களே காசு கொடுத்தால் கொஞ்சம் யோசித்து விட்டு வாங்கி, வடாம் காய வைக்க கித்தானுக்குப் பிடிச்சுமையாகப் பயன்படுத்துங்கள். அவருடைய சொற்பொழிவு, கட்சிப் பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அண்ணாதுரை இறந்ததும் வானொலியில் ஒலிபரப்பான கலைஞரின் 'மூன்றெழுத்து' இரங்கல் பேச்சைக் கேட்ட நாள் முதல் அவருடைய பேச்சுத் திறனைக் காதலித்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பிறந்தவர்கள், தமிழை விரும்புகிறவர்கள், எந்தச் சமூகமானாலும் அவருக்குக் கொஞ்சம் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். சென்ற ஐம்பது ஆண்டுகளில் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் கலைஞர்.

இருக்கும் பொழுதே அவருக்கு ஒரு வணக்கமும் வாழ்த்தும்.

            க்ரைசிஸ் கால அமெரிக்க அதிபர்கள் என்று கணக்கெடுத்தால் ஒபாமா அதில் மிக மோசமானவராக வருவார் என்று நம்புகிறேன். இன்னும் ஆறு ஆண்டுகள் ஒபாமா ஆட்சி என்று நினைக்கும் பொழுதே கலங்குகிறது. படிப்புக்கும் திறமைக்கும் தொடர்பே இல்லை என்பதற்கு ஒபாமா ஒரு மோசமான உதாரணம். எம்ஜிஆரின் கவர்ச்சியை நம்பி ஓட்டு போட்டு ஏமாந்தது போல் உணர்கிறேன். இன்வெஸ்டர்ஸ் பிசினஸ் பத்திரிகை ஆசிரியர் மைகேல் ரேமிரசின் கேலிச்சித்திரங்களை மிகவும் ரசிப்பேன். அவருடைய படைப்புகள் சில:
Obama chokes America | 2010/09/09

            'ரூம் போட்டு யோசிப்பீங்களோ?' என்று சமீபகாலமாக அடிக்கடி கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். ஏன், எப்படி, எங்கிருந்து வந்தது இந்த வழக்கு என்று புரியாமல் சாப்பாடு தூக்கம் விட்டுத் தவித்த எனக்கு அது புரியக் கிடைத்த வாய்ப்புக்கும், இந்த வலைப்பூவில் ஒரு நெடுங்கதை எழுதத் தொடங்கி பாதியில் நிற்பதற்கும் தொடர்பு உண்டு.

பத்து அத்தியாயங்களோ என்னவோ எழுதி முடித்திருந்த போது பிரபல நடிகர்களுக்குச் சொந்தமான ஒரு திரைப்படக் கம்பெனியிலிருந்து சந்தித்துப் பேச அழைப்பு விடுத்தார்கள். இந்தியா சென்ற பொழுது அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அடையார்(?) செனடேப் ரோட் அருகில் இருக்கும் ஹோட்டலில் நிரந்தரமாக இரண்டு ரூம் புக் செய்திருக்கிறார்கள். என்னையும் அங்கே வரச்சொல்லி கதையை அலசினார்கள். அப்போது தான் புரிந்தது ரூம் போட்டு யோசிக்கும் விவகாரம். சுவரிலும் மேசையிலும் எழுதவும் ஸ்டோரிபோர்ட் செய்யவும் வசதி. காலையில் வந்து விடுகிறார்கள். இரண்டு மூன்று மணிக்கொரு தடவை டிபன், காபி. அறைக்குள் பிஸ்கெட், பழத்தட்டு. அவ்வப்போது சிகரெட் பிரேக் என்று போய்விடுகிறார்கள். மதியம் கேரியர் சாப்பாடு எப்படியோ திருட்டுத்தனமாக அறைக்குள் வந்து விடுகிறது. தினம் ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாதாம். பிறகு நாலு மணி போல் மறுபடியும் டீ காபி பகோடா என்று வருகிறது. யோசித்து யோசித்துக் களைப்படைந்து விட்டோமென்று வையுங்கள், பக்கத்து ரூமில் ஒரு குட்டித் தூக்கம் போட வசதி இருக்கிறது. கடைசியில் மாலை ஆறு மணி சுமாருக்கு ஓட்டல் பாரில் கிங்பிஷர் சாப்பிடுகிறார்கள். ஏழு மணிக்கு வண்டி வந்து அழைத்துக் கொண்டு போகிறது. எனக்கோ அங்கே திரிந்து கொண்டிருந்த அழகான பெண்களையும் ஆண்களையும் பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. எங்கிருந்து யோசிப்பது?

கதையை கொஞ்சம் இங்கே மாற்றச் சொன்னார்கள். பிறகு அங்கே மாற்றச் சொன்னார்கள். பிறகு கதாபாத்திரத்தை மாற்றச் சொன்னார்கள். வில்லனை வேறு விதமாகச் சித்தரிக்கச் சொன்னார்கள். இந்தக் கேரக்டர் வேண்டாம் என்றார்கள். இன்னொரு சப் பிளாட் எழுதச் சொன்னார்கள். வசனங்களை மாத்திரம் பிரித்தெடுத்து 'பஞ்ச்' சேர்க்கச் சொன்னார்கள். கதை சின்னாபின்னமாகி விட்டது. அப்படியும் அவர்களுக்குத் திருப்தி இல்லை. கடைசியில், 'உங்களுக்கு அப்ஜக்சன் இல்லையின்னா எங்க கதை இலாகாவை வச்சு ரீரைட் பண்ணிக்கறோம்; பேசிக் ட்ரீட்மென்ட் மட்டும் கொடுங்க' என்றார்கள். அந்த நிலையில் கதை என்னுடையதே இல்லை என்றாகிவிட்டதால், 'தாராளமாக' என்று நான் முதலில் நினைத்திருந்த முழுக்கதையையும் சொல்லிவிட்டு வந்தேன். கதை போனாலும் ஒரு நட்பு கிடைத்த நிறைவு நிஜம். இருந்தாலும், கதையைக் கொன்ற சலிப்பிலும் வருத்தத்திலும் தொடங்கியதை முடிக்கவே இல்லை.

ஒரு ரூம் போட்டு யோசித்து முடிக்க வேண்டும்.

            இணையப் பதிவுகள், நான் கண்ட வரை, பதிவு ஆசிரியரின் பிரதாபங்களை விவரிக்க, திறமை-வக்கிரங்களை வெளிப்படுத்த ஒரு சாதனமாகவே இருக்கின்றன. 'எங்கள் பிளாக்'கில் மட்டும் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். பின்னூட்டத்துடன் நிற்காமல், வாசகர்களையும் பங்கேற்கச் செய்வதில் எபி அளவுக்குப் பிற பதிவுகள் வெற்றி கண்டுள்ளனவா, தெரியவில்லை. சமீப எபி ஆசிரியர் தினப்பதிவு சில நினைவுகளைத் தூண்டி விட்டது. என்னுடைய உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் டாவடித்ததைப் பற்றி எழுதி அனுப்பியிருக்கிறேன் எபி ஆ'சிரி'யர்களுக்கு. ஆசிரியர் தினம் என்ற ஒரு moral high groundல் டீச்சர்கள் கசமுசா பற்றி எழுதினால் பிடிக்குமா தெரியவில்லை, பார்ப்போம்.

என்னுடைய ஆசிரியர்களில் முக்கால் வாசிக்கு மேல் வேறு வேலை கிடைக்காமல் படிப்பு சொல்லிக் கொடுக்க வந்தவர்கள். மணியடித்ததும் எங்களுக்கு முன்னால் நடையைக் கட்டிய ஆசிரியர்களும் உண்டு. கடைசி பீரியட் போது 'லட்சுமிபுரம் பஸ் வருதா பாரு' என்று தினம் ஒரு மாணவனை தெருவோர பஸ் ஸ்டேன்டுக்கு அனுப்பிய மகான் எனக்கு ஆசிரியர். எட்டாம் வகுப்பு சயன்ஸ் டீச்சர் ரொம்ப மோசமான பெண் என்று நினைவு. துரைசாமி என்று தமிழ் வாத்தியார், நாத்திகர். விபூதிக் கீற்றைப் பார்த்து விட்டு அவர் அடிக்கும் கமெண்டுக்கு பயந்து அவர் வந்த உடனே முதல் வேலையாக நெற்றியைத் அழுத்தித் தடவிக் கொள்வோம். 'இன்னிக்கு சாப்பாட்டுல ஒரே சாமியா இருந்துச்சுபா' என்பார். பிள்ளையார் சுழி போட்டால் இரண்டு மார்க் குறைத்து விடுவார். அத்தனை பந்தா செய்தவர் தமிழில் ஒன்றும் பந்தாவாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஞான சூனியம். அம்பாசங்கர் என்று ஒரு ஆசிரியர். குள்ளமென்றால் குள்ளம். நம்மை அடிக்க உயரம் போதாது என்பதால் நம்மைக் குனியச் சொல்வார். 'குனிடா குனிடா' என்று தரைக்குள் தலை புகும் அளவுக்கு குனிய வைத்து வான்கோழியாய் நாம் இருக்க, அவர் நம் முதுகைத் தடவிக் கொண்டே இருப்பார். எப்போது அடிப்பார் என்று தெரியாமல் எதிர்பார்ப்புடன் கலங்கிய சித்திரவதை இருக்கிறதே... ! ஏழாம் வகுப்பு என்று நினைக்கிறேன். சரித்திரம் பூகோளம் இரண்டுக்கும் ஒரே ஆசிரியர். மியூசியம் அழைத்துப் போகிறேன் பேர்வழி என்று எங்களிடம் மூன்று ரூபாய் வசூலித்துவிட்டு மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு போனவர் அளவுக்கு வேறு யாரும் மோசமில்லை.

ஆசிரியர் தினத்தை நினைவுபடுத்தி மனச்சுமையைக் குறைத்த எபி வளர்க!

            அன்புக்கரசன் வீட்டு மொட்டை மாடியில் முப்பத்து மூணு ஆர்பிஎம் இசைத்தட்டுக்களைப் போட்டு ரா முழுக்கக் கூத்தடிப்போம். எம்எஸ்வி-இளையராஜா, பாலசந்தர்-பாரதிராஜா என்று பைசாவுக்குப் பயனில்லாத வாக்குவாதம் செய்வோம். 'இளையராஜா காபி அடிச்சதே இல்லை; அத்தனையும் அசல்' என்று என் நண்பன் வாதாடுவான். ஒரு பாரதிராஜா படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஹார்ட் அட்டேக்கில் இறந்த நண்பனின் நினைவு நாள் சமீபத்தில். பதின்ம வயதின் அதிர்ச்சி இன்னும் பாதிக்கிறது.
அவன் நினைவில் இந்த ABBA பிட்டு. எந்த இளையராஜா மெட்டு, நினைவிருக்கிறதா?

            கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு 'அபிராமி அந்தாதி' விளக்கம் எழுதுகிறீர்களே என்று சிலர் இந்தப் பதிவுக்கான மின்னஞ்சலில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திட்டவில்லை, நயமாகத்தான் கேட்டிருக்கிறார்கள், ஒருவரைத் தவிர (வேஷம் போடும் பார்ப்பான் என்றார்). கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் ஒரு கெட்டப் பழக்கம். என்னவென்று கேளுங்கள். கேட்டீர்களா? கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை முட்டாள்கள் என்று நினைப்பதே அந்தக் கெட்டப் பழக்கம். பார்ப்பான், மூடன் என்று ஸ்பீக்கர் போட்டு அலறுகிறார்கள். கடவுள் எனக்குத் தேவையில்லை என்பதால் நம்பவில்லை. கடவுள் நம்பிக்கையினால் ஏற்படும் விரயத்தை உங்களோடு சேர்ந்து நானும் வெறுக்கிறேன். அத்தோடு விடுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கை உள்ளவரின் படைப்புகளைப் பற்றி எழுதக்கூடாது என்ற சட்டம் வந்தது எனக்குத் தெரியாது.

உள்ளே கிள்ளே தள்ளிடாதீங்க.

            பிளாக் எழுதத் தொடங்கியதிலிருந்து இணையம் வழியாக புது நட்புகள் கிடைத்திருக்கின்றன. சிலரின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. சுஜாதா போன்றோர் இணையச் சூழலில் அத்தனை பிரபலமாகி இருப்பார்களா என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். சமீப இணைய நட்புகளில் போகனின் எழுத்துப்பிழையைப் படித்து விட்டு மூக்கின் மேல் விரல் வைத்தேன். அனியாயத்துக்குத் துணிச்சலாக எழுதுகிறார் போகன். இன்னொரு அசத்தல்காரர் செந்தில்.

நிறைய எழுதட்டும்.

            'ஆண்மையும் செக்ஸ் உணர்வும் பெருக்க சைவ உணவு' என்ற தலைப்பைப் பார்த்து விட்டு உடனே விரைந்தேன் (நீங்கள் மட்டும் என்னவாம்?). பதிவில் இப்படி எழுதியிருக்கிறார்கள் (http://ayurvedamaruthuvam.blogspot.com):
ஜீவகம், ரிஷபகம், மேதா, கீரைபாலை, மூவிலை, திப்பிலி, ஸ்ருங்காடகம், பால் முதுக்கன் கிழங்கு இவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு பலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலே அறுபத்தினாலு பலம் தண்ணீர் அறுபத்துனாலு பலம் பால் சேர்க்க வேண்டும். அதிலே நான்கில் ஒரு பங்கு தென் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
'த்தா டேய்...!' என்று குமுறத் தோன்றியது.

28 கருத்துகள்:

  1. நிறைய விஷயங்களைப் பற்றி நீ எழுதியிருப்பது படிக்க சுவையாக இருந்தது. உன்னோடு நேரில் கடலைப் போட்டது போல் ஒரு நிறைவைத் தந்தது.--கீதா

    பதிலளிநீக்கு
  2. அந்த எட்டாங்கிளாஸ் அறிவியல் டீச்சரைப் பற்றி விரிவாக எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. தப்பா நினைச்சுக்காதீங்க..steinbeck எழுதிய East of Eden படித்திருக்கிறீர்களா..உலகத்தின் மிக மோசமான[evil] பெண் பற்றிய கதை என்றுதான் அட்டையில் போட்டிருப்பார்கள்.எனக்கு மிகப் பிடித்த புத்தகம்.மோசமான பெண்களைப் பற்றி ஆண்களுக்கு ஒருவித அச்சமும் ஆர்வமும் ஒருசேர இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அப்பா....வெள்ளிக்கிழமையும் அதுவுமா சாம்பார் பதிவா.
    நல்லாயிருக்கு.

    சாப்பாடெல்லாம் சொல்லிப் பசியே வந்துவிட்டது.பூண்டுக்குழம்பு வாசனை காத்தில வருது.ஆனா இப்ப இங்க சாப்பிட வெறும் சீஸ் சாண்ட்விச்தான்.தலைவிதி !

    எங்கள் புளொக்கில் உங்கள் நினைவலைகள் படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. ABBA Bit ரொம்பச் சின்னதாக இருக்கிறதா, என் கணினிக் கோளாறா...எதுவாக இருந்தாலும் என்னால் இளையராஜா சுட்ட மேட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. செட்டிநாட்டுச் சமையல்...ஸ்....ஸ்....ஆ....

    பதிலளிநீக்கு
  7. //ஆடையில்லாதவர் அரை மனிதராம்... // அப்பாதுரை சார்... அசந்துட்டேன் இந்த கவிதையில்............

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  8. எல்லா விஷயத்தையும் ஏதோ வரிசையில் அலசி அதில் ஏதோ ஒரு செய்தி வேறு. (ஒபாமாவுக்கு ஒரு போடு !)

    கலக்கல் துரை.

    நீ இதை மாதிரி எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    கீதா மேடம் - எங்கே ரொம்ப நாளாக காணும் !! இந்தியா விஜயமா ? அம்மா சுகமா !

    பதிலளிநீக்கு
  9. சுவாரசியமான பதிவு. நல்லா எழுதி இருக்கீங்க. உங்க எழுத்தை ரசிச்ச மாதிரி, 'ஒபாமா ஜோக்ஸ் அமேரிக்கா' இந்த கிளிப்பிங் பின்னணி இசையா 'ஆஹா இன்ப நிலவினிலே' பாட்டின் இசையை போட்டிருக்கறது super! :) நல்ல ரசனை! இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் மிகவும் ரசித்து கேட்டேன்.
    abba bit guitar கொஞ்சம் 'இளையநிலா' பாட்டை நினைவு படுத்தினாலும், இந்த இசை இன்னொரு spb. பாடலை நினைவு படுத்துகிறது. சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நிறைய்யவே...விஷயங்கள் உங்கள் இடுகையில்..ம்...
    நன்றாக இருந்தது. படிப்பவனை chair ன் விளிம்பில் கொண்டு வந்து விட்டீர்கள் அந்த காலத்து பாலச்சந்தர் படம் போல..

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. தோழர் ...காரக் குழம்பு எனக்கும் பிடிக்கும் ...mazhaik காலங்களில் மட்டும் .

    // ஓரினக் காதல், கள்ளக்காதல் பற்றிக் கவிதைகளைக் காணோம் //
    ஆமாம் தோழர் ..நானும் படித்தார் போன்று தோணவில்லை ....

    //சென்ற ஐம்பது ஆண்டுகளில் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் கலைஞர். //
    நிஜம்மாவா சொல்றீங்க அப்பாதுரை?? எனக்கென்னவோ அப்படியொண்ணும் தோணலை ... முன்னணியில் அப்படின்னு சொல்ல முடியுமா என்ன ...???

    // இன்னும் ஆறு ஆண்டுகள் ஒபாமா ஆட்சி என்று நினைக்கும் பொழுதே ... //
    உங்கள் வாக்கு பலிக்கட்டும் சார் ...

    // கதை போனாலும் ஒரு நட்பு கிடைத்த நிறைவு நிஜம் //
    கலைஞருக்கு கொடுத்த மாதிரி ஐம்பது லட்சம் உங்களுக்கு கொடுத்தாங்க தானே தோழர்!

    //'இன்னிக்கு சாப்பாட்டுல ஒரே சாமியா இருந்துச்சுபா' //
    புரியல சார் ...

    //ஒரு பாரதிராஜா படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஹார்ட் அட்டேக்கில் இறந்த நண்பனின்..//
    எத்தன வயசுல இறந்தார் ...எதனால திடீர்ன்னு ...

    //கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கை உள்ளவரின் படைப்புகளைப் பற்றி எழுதக்கூடாது என்ற சட்டம் வந்தது எனக்குத் தெரியாது...//
    எனக்கும் தெரியாது சார் ...

    செந்தில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் ... போகனை போய் பார்க்கிறேன் .. நன்றி!

    அப்புறம் ...
    இறுதியாய் 'த்தா டேய்...!' என்று குமுறத் தோன்றுகிறது .

    பதிலளிநீக்கு
  13. சார் ஒரு உதவி ...
    ரொம்ப வருசத்திற்கு முன்னால்...
    ஹிக்விட்டான்னு ஒரு மொழிபெயர்ப்பு கதை படிச்சேன் ...எதிலேயோ ... மலையாளக் கதை ... மாதவன் சார் எழுதினதுன்னு நினைக்கிறேன் ... அப்போ அந்தக் கதை எனக்கு நல்லதொரு இனிய மன நிலையை தந்தது ... இப்போ கொஞ்சம் சில தடுமாற்றங்கள் இருக்கிறதால அந்த படைப்பை படிச்சா நல்லாயிருக்கும்னு தோணுது ... அந்தக் கதை உங்க கிட்ட இருந்தா என்னோட மின்னஞ்சலுக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்கள் .... hruprakash@gmail.com... நன்றி தோழர் !

    பதிலளிநீக்கு
  14. அலாதியான செட்டி நாட்டு சமையலின் வர்னனை சரியான அலாசல். சைவ மீன் கொழம்பா, புதுசா இருக்குதே ..நான் வத்தக்கொழம்பு குளியல் பார்ட்டி. கடைசி வரை காராகொழம்பா-- அசத்தல்

    எல்லாருக்கும் கவிதை வருவது மகிழ்வான செய்தி.. உங்கள் கவிதை, மன இளமையை வெளிப்படுத்துகிறது.

    கலைஞரின் தமிழ் வணங்குதலுக்குரியது. நாம் இத்தனை ரைட்டர் மென்பொருள்களை வைத்து திணறும்பொழுது ..மைப்பேனாவை வைத்து எத்தனை காவியங்கள்.

    ஓபாமா அமெரிக்க எம்ஜியாரா..எற்கனவே ரிகனுக்கு அந்த பட்டம் இருந்ததே.

    சினிமா கதை இலாக்கவின் லீலைகள் என ஒரு படமே எடுக்கலாம் போலிருக்கிறதே.

    சிலரை எல்லாம் பாராட்ட மட்டுமே செய்யவேண்டும் என்ற மரபை மீறி ஆசிரியர்களை சிரியர்கள் ஆக்கியது என்னை எங்கள் பிளாக் பக்கம் ஓட வைக்கிறது.

    எங்கள் காலத்திலும் எம்ஸ்வி- இளையா விவாதங்கள் இருந்தது. இப்பொழுது விவாதங்களுக்கே அவசியம் இல்லாத அளவுக்கு எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது.


    அபிராமி அந்தாதியில் இவ்வளவு பாடல் இருப்பது ஆச்சர்யம்.
    நான் வையம் துரகமும் , கலையாத கல்வியும் மட்டும் நினைத்திருந்தேன்.
    நாம் கண் மூடினால் உலகம் இருட்டாவதில்லை, சுவாசம் இல்லை என்று வாயில் சொல்வதால் , சுவாசம் தடை பெறுவதில்லை. அது போல் தான் கடவுளும். அந்த சக்திக்கு முன்னர் , இப்போதய மனித இனத்திற்கு புரிதலும் குறைவு கற்பனையும் மிகக்குறைவே. பரிணாமத்திலேயே இந்த ப்ரொக்ராம் இணைக்கப்பட்டு பின்னால் சரியாக புரிந்து கொள்ளப்படுமோ என்னவோ .......

    வலையில் பிரபலம் என்பது தனி தொழில் நுட்பம் . இப்பொழுது புனைவு நுட்பம் நல்லா கட்டுகிறது கல்லா . எல்லாமே உட்டாலக்கிடியாக இருந்தாலும் குழாயடி சண்டை காரர்களாக , ஹிட்டு குறிக்கோளில் உள்ளார்கள்.

    பால் தண்ணீர் சரி , மற்ற மூலிகை கள் எல்லாம் கிடைக்கிறதா?


    அப்பாடா , எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தது அடுத்த பதிவிடும் பொழுது என்னை மாதிரி தண்டி பின்னூட்டகாரர்களை மனதில் வைத்து எழுதுங்கள்.

    (எழுத்துப்பிழைகளை சற்று குறைத்து மிண்டும்.)

    பதிலளிநீக்கு
  15. ரசித்ததற்கு நன்றி geetha santhanam, bogan,மதுரை சரவணன், ஹேமா, ஸ்ரீராம், RVS, சாய், meenakshi, ஆர்.ஆர்.ஆர்., பத்மநாபன், நியோ.

    பதிலளிநீக்கு
  16. Steinbeckஐ யார் இன்னும் நினைவு வைத்திருக்கப் போகிறார்கள் என்று பார்த்தால்...போகன்!

    சமீபத்தில் என் பிள்ளைகளுடன் விடுமுறைக்குச் சென்று திரும்பி வரும்பொழுது சலீனஸ் என்ற ஊரில் ஒரு இரவு தங்கினோம். ஸ்டைன்பெக் பிறந்து வளர்ந்த ஊர். விவிலிய மூலமானாலும் ஸ்டைன்பெக்கின் கதை இந்த ஊரில் நடப்பது போல் எழுதப்பட்டது நினைவிருக்கும். என் பெண்ணிடம் 'சலீனஸ் எதற்குப் பிரபலம் தெரியுமா?' என்று கேட்டேன். 'for what?' என்றாள். 'John Steinbeck' என்றேன். 'is he your cousin?' என்றாள் டீனேஜ் நக்கலுடன். 'your worst nightmare; wait till school year' என்றேன். கண்களை உருட்டித் தோள்களைக் குலுக்கி கைகளை விரித்தாள். (டீனேஜ் மொழியில் 'என்ன சொல்கிறீர், என்னைப் பெற்ற அரை லூசுப் பெரியவரே?' என்று பொருள்).

    உயர் நிலைப்பள்ளி ஆங்கிலப் பாடத்தில் தவிர Steinbeckஐ மறந்தாகி விட்டது. என்னுடைய எட்டாம் வகுப்பு டீச்சர் வேறு வகையானவர், போகன். Not like Cathy (well, not exactly :-). நல்ல புத்தகத்தை நினைவுபடுத்தினீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம், meenakshi: 'இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது' என்ற இளையராஜா மெட்டும் நன்றாகத்தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. எனக்குத்தான் போதையில ரெண்டு ரெண்டா தெரியுதோனு பார்த்தேன் பத்மநாபன்!

    மூலிகை தண்ணீர் கிடைச்சாலும் 'பலம்'னா எவ்வளவுனு தெரிய வேண்டாமா? அந்தப் பதிவுல இன்னும் இது போல நிறைய எழுதியிருக்காங்க. 'வழுக்கை நீங்கி முடி வளரத் தைலம்'னு போட்டிருக்காங்க பாருங்க... அந்தாளு எங்கிட்டே கிடைச்சாருனு வையுங்க..

    பதிலளிநீக்கு
  19. அந்தப் புத்தகத்தைக் கேள்விப்பட்டதில்லையே நியோ?

    பதிலளிநீக்கு
  20. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க பத்மநாபன்? நான் எழுதுறதையும் படிச்சுட்டு பின்னூட்டம் போடறதுனால சொல்றீங்களா?

    பதிலளிநீக்கு
  21. //என்ன இப்படிச் சொல்லிட்டீங்க பத்மநாபன்? நான் எழுதுறதையும் படிச்சுட்டு பின்னூட்டம் போடறதுனால சொல்றீங்களா?// ஜீ. நான் சொல்லவந்தது, என்னை மாதிரி ஆட்கள் எல்லா சப்ஜக்டையும் டச் பண்ணி நிறைவாக பின்னூட்டம் (குறைந்த பட்சம் மனதில் )இட வேண்டும் என்று நினைப்பவ்ர்கள்...இப்பதிவில் நிறைய சப்ஜக்ட் இருந்தது ...என சந்தோஷத்தில் சொன்னதுதான் ..வெளாசுங்க ( keep rocking க்கு இந்த வார்த்தை பொருத்தமா இருக்குமா )

    பதிலளிநீக்கு
  22. நிறையச் செய்திருக்கிறார் நியோ. தமிழுக்கு என்றதை நீங்கள் தமிழருக்கு எனப் பொருள் கொண்டீர்களோ?

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லாசெப்டம்பர் 15, 2010

    சாப்பிட்டியா, தூங்கினீயா, சளி வத்திப் போச்சா என்று குசலம் விசாரிப்பதையும் கவிதையாகச் சிலர் எழுதுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  24. அப்பாதுரை சார்.. நிறைய விஷயங்களை சுவையான அவியலாக்கி மணக்க மணக்க படைத்திருக்கிறீர்கள். காரைக்குடிசமையல் பற்றி.. அதுலயும் 'கடைசிவரை காரக்குழம்பு'... ரொம்ப ரசித்தேன் சுவாமி! காரைக்குடிக்கு போகும் போதேல்லாம் நண்பர்கள், நான் சைவமானபடியால் ரொம்பவே அனுதாபப் படுவார்கள்..... காரைக்குடிக்காரர்களின் விருந்தோம்பல் அலாதியானது......ரூம் போட்டு யோசித்து யோசித்து , மீண்டும் ரூம் போடவே யோசிக்கும் நிலைக்கு வந்த நண்பர்களும் நிறைய...சினிமா ஒரு மாயச்சுழல்ங்க....டீச்சர் பதிவை தனியா போடுங்க.. ரொம்ப நண்பர்கள் ஆவலா இருக்காங்க இல்ல?

    பதிலளிநீக்கு
  25. வாங்க, மோகன்ஜி. என்ன, காரைக்குடிக்கு பயணம் செஞ்சுக்கிட்டேருப்பீங்களா? ஏன் சார் இப்படி வேணுமின்னே வாட்டறீங்க? :-)

    சினிமா மாயச்சுழல்னு நீங்க சொல்றது சரி; சிக்கி கட்டின துண்டையும் தொலைந்த அனுபவம் எங்க குடும்பத்துக்கு உண்டு. சினிமா ஆசையிருந்தாலும் அதனோட ஏழ்மையும் ஏமாற்றமும் என்னை தள்ளியே நிக்க வக்குது. கள்ளக் காதலி மாதிரி. அப்பப்போ நினைக்கிறதோடயும் எப்பனா எச்சரிக்கையோட நெருங்குறதோடயும் சரி.
    //ரூம் போட்டு யோசித்து யோசித்து , மீண்டும் ரூம் போடவே யோசிக்கும் நிலை//
    நயம்.

    பதிலளிநீக்கு
  26. ஸ்டெயின்பெக், காரக் குழம்பு, டீச்சர் குசும்பு,:))))))
    அப்பா பாட்டு. தெளிவா கேட்க முடியவில்லையே.கேட்டால்தானே சுட்டதைச் சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு
  27. கலந்து கட்டி சாப்டறது போல ,இப்படி கலந்து கட்டி படிச்சாலும் செம டேஸ்ட்..

    இன்று தான் படிக்கிறேன் ..keep writing... keep rocking

    பதிலளிநீக்கு