2017/07/28

மீண்டும் சுழி



        யாருடைய கெட்ட கனவோ, எனக்கு திடீரென்று மீண்டும் எழுதத் தோன்றியது. தொடர்ந்து எழுதும் பொழுது தோன்றாத பாரம் விட்டு மீளும் பொழுது உறைக்கிறது. சுழியைச் சுற்றிவந்த ஐம்பது தெரிந்த வாசகரை ஏமாற்றி விட்டது போலவும் ஒரு உணர்வு. எழுத்து ஒரு பொழுதுபோக்கு, சோர்வகற்றி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். எழுத்து ஒரு போதை, புலிவால் என்றும் புரிந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு மறுபடி பற்றியிருக்கிறேன். ஒரு வருடம் போல் காணாமல் போனதைப் பொருட்படுத்தாமல், என்னை மறந்துவிடாமல், மீண்டும் வந்து படிப்பதற்கு மனமார்ந்த நன்றி.

ஆதியில் விட்ட சில: பேயாள்வான் புராணம், அந்தக்கடை, பெத்தாபுர மலர்
பாதியில் விட்ட சில: லுக்ரீசின் சாபம், திரவியம், கண்பிடுங்கி நீலன்
மீதியில் விட்ட சில: பல்கொட்டிப் பேய்
இன்னும் இருக்கலாம். மேற்சொன்னவை என் நினைவிலிருந்து.

கர்மயோகிகளிடம் ஒரு சிக்கல். கர்மமே யோகமாகப் பழக வேண்டியவர்கள் அப்படி இருக்கத் தவறினால் கர்மச்சுமை கரையும் வரை மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதே சுமையைக் கரைப்பார்களாம். என்று அந்தக் கிஸ்டப்பிரபு சொன்னதாக என் சகோதரி தன்னுடைய ‘பேட்ட கீதை’யில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறாள். நாம் எல்லோருமே கர்மயோகிகளே என அடித்து வேறு சொல்லிவிட்டாள்.

ஆத்தாடி! இதுக்கு இன்னொரு பிறவியா? வேணாம்மா ஈஸ்வரி! சுழியில் எத்தனை விட்டுப் போயிருக்குதோ அத்தனையும் சட்டு புட்டு ப்ளைட்டுக்கு டயமாச்சுனு மஞ்சு பாணில முடிச்சுர வேண்டியதுதான்.

கானல் புகழுக்குக் கண் இழந்து திரவியம் கண்பிடுங்கி இரண்டையும் நேரே சினிமாவுக்கும் டிவிக்கும் கொடுத்து விட்டதால் ஏவெகோகோகோ. வேறு வழியில்லை. இதில் கண்பிடுங்கி மீண்டு வர கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. பெத்தாபுர மலர் ஏன் தடைபட்டுக் கொண்டே போகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. லுக்ரீசின் சாபம் ஆதர்சம், முடிக்க வேண்டும். அந்தக்கடை, பல்கொட்டி விரைவில். பேயாள்வான் புராணம் பெரிய ப்ராஜக்ட், தொடரும் சாத்தியம் இல்லை. அதுக்காக இன்னொரு பிறவி வேணாம்மா.. படிக்கிறவங்க பாவம் இல்லையா? அவங்களை நினைச்சு ஒண்ணு ரெண்டை டீல்ல விட்டுருவம், என்ன சரியா?

கர்மச்சுமை, பிறவி என்ற பாதையில் சிந்தனை ஓட, சட்டென்று நினைவுக்கு வந்த பாடல்:
    மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
    இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் சேராமற் கா.

'வாழாமற் கா' என்று பட்டினத்தார் பாடியதாகச் சொல்கிறார்கள். எனகென்னவோ 'சேராமற் கா' பொருத்தமாகத் தோன்றுகிறது. சமீபத்தில் இந்த பாடலை ஒருவருக்கு விளக்க நேர்ந்தது. 'வேதாவும் கைசலித்த'தை விளக்கும் போதுதான் இந்த பாடலின் எளிமை - ஏறக்குறைய அலட்சிய அற்புதம் - என்னைத் தாக்கியது. பட்டினத்தாருக்கே கர்மச்சுமை என்றால் ‘புட்டி’னத்தார் ஆசாமி கேவலம் நான் குறைபட்டுக் கொள்வானேன்? போனால் போகட்டும் போடா. சரி, இருப்பையூர் எங்கிருக்கிறது? கோமதி அரசுக்குத் தெரிந்திருக்கும். புனுகீஸ்வரர் மாதிரி கோவில்களை பிடித்தவருக்கு இருப்பையூர் தெரிந்திருக்காதா? :-)

இத்தனை புலம்புகிறேனே, ஏதாவது உணர்ந்து உருப்படப் பார்க்கிறேனா? இல்லை. வலை நண்பர்கள் சிலருடன் இணைந்து கணிசமான ப்ராஜக்ட் செய்யலாம் (எழுதலாம்) என்ற நப்பாசையில் சில ஐடியாக்களைச் சேர்த்து வருகிறேன். பிரசவ வைராக்கியம் என்பது இதானா?

        ணையம் விசித்திரமானது. ஒன்றைத் தேட ஒன்று கிடைக்கிறது. என் வீட்டைப் போலத்தான். பாருங்கள்.. கசிந்து ஒழுகிக் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இறுக்க வேண்டி முறுக்கியைத் தேடினால் என்றைக்கோ தேடிக்கொண்டிருந்த கையுறை கிடைத்தது.. பர்சைக் காணோமே என்று தேடினால் என் மகளின் நூலக உறுப்பினரட்டை கிடைத்தது.. இணையத்தில் ஏதோ ஒன்றைப் பற்றிய விவரம் தேடினால் இந்தத் தேவாரப் பாடல் கிடைத்தது . பாடலின் நயத்தில் தேடலை மறந்தேன்.
    கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
    கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
    கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
    கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.

'கிடந்த'வை நீக்கிப் படித்தால் சட்டென்று புரிந்துவிடும். எதுகை மோனைக்காக கிடக்க விட்டிருக்கிறார் நாவுக்கரசர். வாகீசர் இல்லையா? அவருக்கு எல்லாவித உரிமையும் உண்டு. நீங்களும் நானும்.. சரி.. நானெல்லாம் இப்படி ஏதாவது எதுகைக்காக சேர்த்து கவி எழுதினால் 'அதெல்லாம் நல்லா தமிழ் தெரிஞ்சவங்க எழுதணும்.. உனக்கு எதற்கப்பா வேண்டாத வேலை?' என்பார்கள். எப்படியிருந்தாலும் நாவுக்கரசர் நயத்துக்கு என்னை அவர் காலில் கட்டி அடிக்கலாம், விடுங்கள். பொருள் நயம் முக்கியம்.

இதே வி.கே.ராமசாமியா இருந்தா 'கிடந்து கிடந்துனா? களுத என்னா புரியுது?'னு கேட்டிருப்பாரு. அதுபோல நீயும் கேட்டுகினா வாய் மேல ரெண்டு போட்டு அர்த்தம் சொல்றேன் கெவுனி. நம்ம சிவம் யாரு? உமையொரு பாகன்.. அதாம்பா.. சிவன் பாதி சக்தி பாதி.. ஒரே பாடி.. லெப்டுல சிவன்.. ரைட்டுல சக்தி.. எப்டினு கேக்காதே.. கம்னு கேளு. இந்த சிவனோட தலைல பாம்பு கீதுல்ல.. அதுக்கு வந்த லொள்ள பாரு.. சொம்மா தலைலயோ கயுத்துலயோ குந்திகினு கீராம பாம்பு இன்னா பண்ணுதுனு கேளு.. நைசா சிவனோட மார்புல எறங்கி ரோந்து வுட்டுகுனு வருது.. நம்ம பார்வதிம்மா அதாம்பா சக்தி.. பாடில ரைட்டு ஆப்லக்குதுல? அது பாம்பைக் கண்டுகினதும் டர் ஆவுது.. இன்னாடாது.. பாம்பு ஊந்துகினே வருது.. நம்ம பார்டருல வருதுள்ளாற எஸ் வுடுவம்னா இந்தாளு புர்சங்காரன் பாதி உடம்பை வேறே புட்ச்சி வச்சிங்கிறான்.. பேஜாரா போச்சேனு மெய்யாலுமே பயந்துடிச்சிபா.. இந்தப் பொம்பள பாம்பைப் பாத்து டர் ஆவுதா? அந்தப் பாம்பு கதையை கேட்டுகினியா? அதுக்கும் பேதியாவுது.. ஏன்னு கேளு.. பாம்பு இந்தப் பொம்பள கலரையும் அயகையும் பாத்து மயில்னு நினைச்சுகிச்சுபா.. அட.. பாம்புக்கு மயில்னா பயமாச்சே.. இன்னாடா.. இந்த மன்சன்.. நம்மளை தலைல தூக்கி வச்சுகினானேனு அல்டாப்பா இருந்தா இந்த மயிலுக்கு காவு குட்த்துருவான் போலக்குதேனு அப்படியே ஷாக்காயிடுச்சு.. இங்க பார்வதியும் பாம்பும் மெர்சலாயினிருக்க சொல்ல இன்னொரு கூத்து கேளு.. சிவன் தலைல சந்திரன் இருக்குதுல்ல.. அதும் நடுங்குது.. ஏன்னு கேளு.. தோடா.. ஏற்கனவே ஒட்ச்சி போட்ட முறுக்காட்டம் இந்தாள் தலையில குந்தினுகுறோம்.. பாம்பு வேறே பயந்தாப்புல இருக்குது.. கபால்னு ரூட் மாறி நம்மளை முயுங்கிடுச்சுனா இன்னாவும் கெதினு அதுக்கு ஒரே பெஜாரு.. ஆத்தங்கரைல குந்திகினு இத்தையெல்லாம் பாத்துகினே சொம்மா சிரிச்சினிகுதுபா இந்த சிவம்..! இதான் அர்த்தம் பிரியுதா? அதான் படிக்க சொல்ல ஒயுங்கா தமிளு படின்றது.. அத்தவுட்டு இன்னாத்தையோ படிச்சினிகிறீங்கோ இந்தக்காலத்துப் புள்ளிங்கோ..

அப்படி என்ன இணையத் தேடல் என்கிறீர்களா? நண்பர் ஒருவர் சமீபத்தில் மயில் கறி சாப்பிட்டதாகச் சொன்னார். மயில் மாமிசம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் நம்ப முடியவில்லை. தேசியப் பறவை, முருகன் வாகனம் என்று ஒருபக்கம் இருந்தாலும் - என்னவோ மயில் கறி பரிமாறுவார்கள் என்று நினைக்கவில்லை - மயில் மாமிசம் ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இல்லையாம். சரி, மயில் கறி எப்படியிருக்கும்.. கோழி போலவா வான்கோழி போலவா எப்படிச் சுவைக்கும் என்று அறிய விரும்பி கூகிலில் தேடினால் முதல் வரிசையிலேயே மேற்சொன்ன தேவாரப் பாடல் வருகிறது!

மயில் கறியை மறந்து தேவாரப்பாடலில் லயித்து முடித்தால் இரண்டு வரிசை கீழே டாக்டர் கன்னியப்பன் என்பார் மயில்கறி பற்றி நேரிசை வெண்பா எழுதியிருப்பதைக் கண்டேன். 'அட! என்னே என் தமிழ்த்தேடலின் பாக்கியம்' என்று அதையும் படித்தேன்.
    சூலைப் பிடிப்புகளைச் சோரிவளி யைப்பித்த
    வேலைச்சி லேட்டுமத்தை வீட்டுங்கால் – நூலொத்த
    அற்பவிடை மாதே அனலா மயிலிறைச்சி
    நற்பசியுண் டாக்கு நவில்.

பொருள்:
நூல் போன்ற சின்னஞ்சிறு இடையை உடைய பெண்ணே! மயில் இறைச்சியை உண்பவர்களுக்கு உஷ்ணத்தைக் கிளப்பும். நல்ல பசியை உண்டாக்கும். வலி தரும் மூட்டுப் பிடிப்பு, சோரிவளி, பித்தம், அதிக கபம் இவைகளை விரட்டும்.

மயில் கறிக்கும் அற்ப இடைப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு?

        செவிக்குணவு போதும். இனி கண்ணுக்கு. சமீபத்தில் இரண்டு நாள் கொட்டித் தீர்த்தது மழை. அக்கம்பக்க விளையாட்டுத் திடல்கள் எல்லாம் குட்டைகளாக அவதாரம் எடுத்திருந்தன. ஒரு மாலைப் பொழுதில்:
இவர்களுடன் நடந்த போது இவற்றைக் கண்டேன்
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. வெண்பா கிண்பா எழுதவோ தேடவோ தோன்றவில்லை.

35 கருத்துகள்:

  1. மீண்டும் எழுத வந்து விட்டுப் போன தொடர்களை எழுதபோவது அறிந்து மகிழ்ச்சி.

    //இருப்பையூர் எங்கிருக்கிறது? கோமதி அரசுக்குத் தெரிந்திருக்கும். புனுகீஸ்வரர் மாதிரி கோவில்களை பிடித்தவருக்கு இருப்பையூர் தெரிந்திருக்காதா? :-)//

    மாயவரத்தில் நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகே புனுகீஸ்வரர் இருந்தார்.

    இருப்பையூர் உங்களுக்கு தெரியாமல் இருக்குமா? எனக்கு இருப்பையூர் எங்கு இருக்கு என்று தெரியவில்லை, கணவரிடம் கேட்டேன் தெரியவில்லை என்றார்கள். பட்டினத்தார் தன் உள்ளத்தில் இருக்கும் சிவனை குறிப்பிட்டு சொல்லி இருப்பாரோ என்று நினைத்தேன்.

    எதற்கு கூகிளிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று தேடினேன்.


    //புதுக்கோட்டையில் அமைந்துள்ள இலுப்பூர் சங்ககாலத்தில் இருப்பையூர் (இருப்பை) என வழங்கப் பெற்று, இவ்வூரினை ‘விரான்’ என்னும் மன்னன் ஆண்டு வந்துள்ளான். விரான் ஆண்டதால் இப் பகுதியிலுள்ள மலைக்கு விரான்மலை எனப் பெயருண்டு. பிற்காலத்தில் இம்மலை விராலி மலை என்று மக்கள் சொல் வழக்காயிற்று.//

    http://www.keetru.com புதுக்கோட்டையில் மெய்வழி நூல்கள் என்ற பதிவில் விராலிமலையை இருப்பையூர் என்று சொல்வதாய் வருகிறது.


    மாலை பொழுது படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  2. வாங்க.. இருப்பையூர் நிச்சயமா தெரியாது.. நல்ல ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க.. நான் கெடில நதி எங்கே இருக்குதுன்னு தேடிக்கிட்டிருந்தேன்.. :-) நீங்க சொல்றாப்புல அது பட்டினத்தார் மனக்கோவிலா இருக்குமோனு கூட நினைச்சேன்..
    விராலிமலை பொருத்தமா இருக்குது.. புதுக்கோட்டையில் ஏதாவது நதி கிதி ஓடுதா?

    பதிலளிநீக்கு
  3. மோகன் ஜி கதையில் கெடில நதி வரும். விழுப்புரம், கடலூர் மாவட்டங்க்களில் ஓடும் ஆறு . (இதுவும் உங்களுக்கு தெரியும்)
    கெடில நதியும் இப்போது கூவமாக மாறி வருகிறதாம். சர்க்கரை ஆலையின் கழிவுகள் கலந்து மாசு அடைந்து வருகிறதாம்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. வில்லுனுனி ஆறு இருக்கிறது போல அதில் த்ண்ணீர் கிடையாது.

    பதிலளிநீக்கு
  6. கெடில வாணர் என்றால் கெடில நதியோரமாக இருக்கும் எதோ ஒரு கோவில் என்று தான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது.. அப்படியெனில் புதுக்கோட்டை இருப்பையூர் ஒத்து வரவில்லையே? அல்லது கெடில வாணர் என்பது பிறை சூடி என்பது போல் பொது விளிப்பாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  7. வெள்ளாறு இருக்கிறது. நாகரீகம் வளர்ந்தது நதி, ஆற்று பகுதிகளில் தானே?

    பதிலளிநீக்கு
  8. கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
    கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
    கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
    கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.

    கெடிலவாணர் - கெடில ஆற்றங்கரைக்கண் உள்ள திருவதிகை வீரட்டானத்துறைபவர் ;
    அப்பர் பாடிய தேவாரம்.

    திருவதிகைவீரட்டானம் பாடல் அப்பர் பாடியது
    கெடில நதிக்கு இந்த பதில்
    இருப்பயூர் தெரியுமா என்பத்ற்கு மேலே உள்ள பதில்

    பதிலளிநீக்கு
  9. ம்ம்ம்ம் இருப்பையூர் பத்தி கோமதி அரசு சொல்லிட்டாங்க! உங்களோட சென்னைத் தமிழ் வியாக்கியானம் அருமை! தேவாரத்தை இப்போத் தானே ரசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க! போகப் போகத் தெரியும். இந்தப் பூவின் வாசம் மணக்கும்! செரியா? :))))))))

    பதிலளிநீக்கு
  10. மத்தது எப்படியோ போகட்டும்! அந்த ரெட்டைக் குழந்தைங்க வயித்திலே கர்ப்பப் பையிலேயே ஒண்ணை ஒண்ணு கொல்லப் பார்க்குமே! ஆண் குழந்தை தன்னுடன் வளரும் பெண் குழந்தையைக் கொல்லப் பார்க்கும் இல்லை? அந்தக் கதை(?) என்ன ஆச்சுனு தெரியணும். பல நாட்கள் ராத்திரி அதைப் பத்தி நினைச்சுட்டுத் தூக்கமே வரதில்லை. அப்புறமாப் பல்கொட்டிப் பேயும்!

    பதிலளிநீக்கு
  11. //புதுக்கோட்டையில் ஏதாவது நதி கிதி ஓடுதா?//

    புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒரு வெள்ளாறு கிழ்க்கு முகமாக ஓடி கடலில் கலக்கிறது. இது தென் வெள்ளாறு.

    பதிலளிநீக்கு
  12. இருப்பையூர் பட்டினத்தார் பாடலில் வருது.

    கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.//
    கெடில நதி அப்பர் பாடலில் வருது
    இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே? என்ன சம்பந்தம்?
      மன்னிக்கணும்.. கன்பூஸ் ஆயிட்டேன். இருப்பையூரும் தேடினேன்.. கெடில நதியும் தேடினேன்.. வேறே வேறே.. ஆனா பின்னூட்டத்துல கவனப்பிசகுல சாம்பாராயிடுச்சு.

      நீக்கு
    2. அப்போ திருவதிகை எங்கே இருக்குது?

      நீக்கு
  13. இன்று என்னாச்சு? கேள்வியாக கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்?
    திருவதிகை கடலூர் தான்.

    திருவதிகைவீரட்டானம் பாடல் அப்பர் பாடியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி.
      விடாம நீங்களும் பதில் சொல்லிட்டீஙக.. அதுக்குத் தான் சொன்னேன் உங்களைக் கேட்டா தெரியும்னு.

      நீக்கு
  14. திருநாவுக்கரசருக்கு சூலை நோய் (வயிற்றுவலி ) நீக்கிய ஊர் சமணசமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு சகோதரி திலகவதியால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரு தர்மசேனரா மாறி என்ன செஞ்சாருனு படிச்சுட்டிருக்கேன்.. கூகில் தயவுதான்.

      நீக்கு
  15. மோகன்ஜியை காணோம் வந்தால் அவர் ஊர் பக்கம் ( கடலூர்) திருவதிகை

    நிறைய விளக்கம் தருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேறே.. ஏற்கனவே புஸ்தகம் ஆகா ஓகோனு எல்லாரும் சொல்லிட்டாங்கனு ஒரு நிலமைல இருக்காரு.. இப்ப அப்பர் கடலூரை
      பாடிட்டாருனு தெரிஞ்சிடுச்சுல்லா.. பிடிக்கவே முடியாது போங்க.

      பல்லாவரம் பத்தி கங்கை அமரனைத் தவிர யாராவது பாடியிருக்காங்களா தேடணும்..

      (மோகன்ஜி புக்கு ஆகா ஓகோ தான். சந்தேகமே இல்லை)

      நீக்கு
  16. தேடல் ஆரம்பித்து விட்டதா...? நல்லது... இன்னும் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  17. மீண்டும் சுழி.. மிக்க மகிழ்ச்சி.

    இவற்றைக் கண்டேன்.. அழகான க்ளிக்ஸ். அருமையாக கம்போஸ் செய்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  18. திருவதிகை கடலூரில் இருக்கிறது என்பதை சொல்லி விட்டார்கள். கெடிலம் ஆற்றில் [விழுப்புறம் அருகே] தண்ணீர் வந்து பல வருடங்களாகிவிட்டன. அம்மா சொல்வார்கள், கெடிலம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்திருப்பதை. எனக்குத் தெரிந்து நான் பார்த்ததில்லை!

    மீண்டும் சுழி - மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி பாண்டியில் இருந்தவரை திருவயிந்திபுரம் போய் வருவதுண்டு...கெடிலம் நதிக்கரையாச்சே...ஒரே ஒரு முறை அங்கு தண்ணீர் கொஞ்சமா "ஓடி" க் கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. அப்புறம் தண்ணி குட்டையா தேங்கி எருமை மாடுகளுக்கு செம குஷி!!!

      கோயிலுக்கு அந்த நதியிலிருந்துதான் தண்ணினு வேற சொன்னதும் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்...புண்ணிய தீர்த்தம்??!!! பெருமாள் என்னை மன்னிப்பாராக!!

      கீதா

      நீக்கு
  19. மெத்தப்படித்திருக்க வேண்டும் உங்கள் பதிவுகளைப்படிக்க பழைய பதிவுகளைத்தொடர எண்ணினால் முதலில் ஒரு synopsis அவசியம் பழையதை நினைவூட்ட

    பதிலளிநீக்கு
  20. ஹப்பா பல்கொட்டிப் பேய் மீண்டும் வரப் போவுதா.நல்ல செய்தி சொன்னீங்க ஸார்..இப்பத்தான் சமாதானம். இந்தப் பிறவியில அந்தப் பல்கொட்டிப் பேய பாக்காமலேயே போயிடுவேனோனு ஒரே கவலையா போச்சு...அல்லாத்தையும் முச்சுருங்கபா.. நம்ம ஸ்லோ கோச்சு...2, 3 தபா பயிச்சாத்தான்...

    ஸார் பேசாம பாட்டெல்லாம் மெட்ராஸ் தமிழ்லயே விகே ஸ்டைல்ல விளக்கினீங்கனா நல்லாவே புரியுது!!! ஹஹஹ ரசித்தோம் ஸார்...

    கீதா


    பதிலளிநீக்கு
  21. உங்க பதிவுகள் நிறைய இருக்கு லிஸ்ட்ல இங்க வேற நீலத்துல கோடிட்டுக் காட்டிட்டீங்க....படிச்சுரணும்...அப்பத்தான் நீங்க தொடரும் போது புரியும்...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஸார் படங்கள் ரொம்ப அழகா இருக்குது சார்....அந்த பைரவர் உங்கள் செல்லங்களா!!! ஆ!அதுல ஒரு பைரவர் 8 பிலோ ஹீரோ மாதிரி இருக்காரே!!

    தேங்கின மழைத் தண்ணில தெரியும் நிழல்கள் வாவ்!! சார் செமையா இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. மூன்றாம் சுழி வெள்ளம் , அருமை. அனைத்தையும் ஒழுங்காகத் தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. கெடிலநதிக்கரை பொன்னியின் செல்வன் கதையில் முக்கியமானது.

    //அப்பர் பெருமானை ஆட்கொண்ட இரைவன் எழுந்தருளியிருந்த திருவதிகை வீராட்டானம் இந்த நதியிக் கரையில் இருக்கிரது.சுந்தரமூர்த்தியை தடுத்தாட் கொண்ட பெருமான் வாழும் திருநாவலூர் இந்நதியின் அருகிலே தான் இருக்கிறது.இந்த இரண்டு ஷேத்திரங்களுக்கு மத்தியில் தொண்டை நாட்டுக்குச் செல்லும் இராஜபாட்டை அந்த நாளில் அமைந்திருந்தது. இராஜபாட்டை கெடில நதியைக் கடக்கும் துறை எப்போதும் கல கலவென்று இருக்கும்.//

    நதிக்கரை அழகு, நதிக்கரை அருகே இருக்கும் மரங்களில் இருக்கும் பறவைகளின் குரல்கள் என்று வெகு அழகாய் ந்தியின் சிரப்பு சொல்லபட்டு இருக்கும்.
    பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  25. கொடிலம் நதி விழுப்புரம் மாவட்டத்தை கடந்து வரும் வழியில் கொடிலம் நதிக்கு சற்று தொலைவில் இரும்பையூர் என்று தற்காலத்தில் வழங்கப்பட்டு வரும் கிராமம் உள்ளது. மேலும் இங்கு சோழ வம்சத்தினர் கட்டிய கோவிலாக இரும்பை மகாகலேஷ்வரர் எழுந்தரளியுள்ளார்..மேலும் இது மாணிக்க வாசகர் அவர்களால் பாடபெற்ற தளங்களில் இதுவும் ஒன்று.. ஆக மேற்கண்ட கருத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இருப்பையூர் என்பது இதுவாக இருக்கலாம் என்று என்னுடைய கருத்து.. கருத்து மாறுபட்டு இருக்கும் தருணத்தில் உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன...

    பதிலளிநீக்கு
  26. ரைட்ல சிவம் லெப்ட்ல அம்மா -- அது மட்டும் மாத்திடுங்க! ரொம்ப அழகா இருந்திச்சு

    பதிலளிநீக்கு