2013/05/31

சமீபத்தில்



சிரித்தது

:மாடி போர்ஷனை எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்றீங்களே, ஏன்..?
:என் மனைவி என்னை ரொம்ப எடுத்தெறிஞ்சு பேசுவா, அதான்!
--PUNNAGAI ULAGAM பதிவிலிருந்து


ரசித்தது
'team had a tremendous amount of success' என்று சொல்ல நினைத்தார். என்ன சொல்றாரு கவனிங்க..



நாட்டுல இதே நினைப்பா போச்சுங்க!


படித்தது
சிவப்பிரகாசரின் நன்னெறி.

தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து

தங்கத்தினால் செய்த குன்றுகளைப் போல் மார்பகங்களைக் கொண்டவளே! (சுறக்கத் தயங்கும்) பசுவிடம் அதன் கன்றின் உதவியொடு பாலைக் கறப்பது போல், தமக்கு உதவி செய்யத் தயங்குபவரிடம் உதவி வேண்டின் (அவருக்கு) அண்மையானவரின் தயவுடன் உதவியைப் பெற வேண்டும்.

படித்ததும் ஒரு சந்தேகம்.
செய்யுளில் 'ஆவின்பால்' என வருவது தெருவோரப் பால் விற்பனையகம் அல்ல என்பது இன்றைய இருபதுகளுக்குத் தெரியும் என்கிறீர்கள்?
அதல்ல சந்தேகம். இது உண்மையிலேயே நன்னெறி தானா? ஏமாற்றிக் கறப்பது எப்படி நன்னெறியாகும்?
அதுவுமல்ல சந்தேகம். இந்த நெறியைச் சொல்ல, குன்றுகளைக் கூப்பிடுவானேன்?

நிற்க.

தமிழின் அற்புதமான எளிய நூல்களுள் ஒன்று. இது போன்ற நூல்களைக் கருத்துக்காகவும், குறிப்பாக நூலாசிரியர் கையாண்டிருக்கும் உவமை உருவங்களுக்காகவும் படிக்கப் பிடிக்கும். பிடித்திருந்தால் வெட்கப்படாமல் ஓசைப்படாமல் என் கதை கவதை கட்டுரைகளில் காப்பியடிக்கப் பிடிக்கும்.

ஒரு எளிய நெறியை அதை விட எளிய உவமையோடு விளக்கியிருக்கும் அழகுக்காக ஒரு முறையாவது படிக்க வேண்டிய நூல். ஓசியில் கிடைக்கிறது இணையத்தில். தினம் தூங்குமுன் சில படித்தால் ஒரு வாரத்தில் முடித்து விடலாம். தூக்கமும் நன்றாக வருகிறது. அப்படியும் இதைப் படிக்கத் தயங்குபவர்கள் அடுத்த மணிரத்னம் கமல்ஹாசன் படத்தை இரண்டு முறை பார்க்கக் கடவது.


சுட்டது

கண் கவர்ந்த மார்ச் காலை
கண் கூசிய மே மாலை
ஓட்டல் மதில் மேலே..


ஈர்த்தது
செங்குன்றம்-செவ்வாய் அதிவேக ஸ்லீபர் வண்டி.

ஓகே, அறிவிப்பு அதில்லை, இது: செவ்வாய் கிரகத்தில் குடியேற ஒரு வாய்ப்பு.

2023ல் செவ்வாயில் நிரந்தரக் குடியிருப்பு அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது mars-one எனும் நிறுவனம். செவ்வாய் வாசிகளாகக் குடியேற ஆளெடுக்கிறார்கள். இலவசப் பயணம். செவ்வாய்க்குக் குடியேற விரும்புகிறவர்கள் தங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விளக்கி ஒரு சிறு விடியோ எடுத்து இங்கே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப விடியோக்களைத் தளத்தில் பார்த்து ரசிக்கலாம். சில இந்திய/சீன விண்ணப்ப விடியோக்கள் சுவாரசியமானவை.

இந்த நிறுவனத்தின் குறிக்கோள் சரியாகப் புரியவில்லை, நடைமுறை சாத்தியமா தெரியவில்லை, எனினும் முயற்சி பாராட்டுக்குரியது. பிற கிரகங்களில் நிரந்தரக் குடியிருப்புக்கான வசதிகளைச் செய்வதே இனி மனிதத்தின் தலையாயக் கடன் என்று நம்புகிறார்கள். பூபாரம்.

இலவசமாக வழங்கப்படுவது ஒருவழிப் பயணம் என்பதை சின்ன எழுத்தில் போட்டிருக்கிறார்கள். நம்ம அரசியல்வாதிகள் சிலரை இப்படி நைசா அனுப்பிரலாம்னு தோணுதே? 'செவ்வாய்த் தரணியிலே செந்தமிழ் பேச வா தோழா உடன்பிறப்பே ரத்தத்தின் ரத்தமே உயிரிலும் மேலானக் கண்மணிகளே..' என்று ஆளுக்கு நாலைந்து வேட்டிகளைப் பிடிப்போம், பார்சல் செய்து அனுப்புவோம். on second thought, இப்பவும் கோவில் கும்பாபிஷேகம்னு கிளம்புறவங்களை "செவ்வாய் கிரகத்துல கோவிலே கிடையாது, எல்லாத்தையும் படைத்து காத்து அழித்து, பூமியை மட்டும் ரட்சிக்கும் அகிலாண்டேஸ்வர/டீஸ்வரிகளுக்கு செவ்வாயில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்" என்று நம் கனவில் நாத வேத ரூபங்கள் வந்து வற்புறுத்தியதாகச் சொல்லி ஒரு கன்டின்ஜன்ட் அனுப்பிரலாமா? என்ன சொல்கிறீர்கள்?

சரி.. செவ்வாய்ல குடியேறுகிறோம். நாளைக்கு சூரியன் சூபர் நோவா கிளைமேக்சின் போது செவ்வாயும் சுவாஹா தானே? வியாழனுக்கு அப்பால் போனால் பிழைக்கலாம் என்கிறார்கள். குடியிருப்பை ஏற்படுத்துவோர் கொஞ்சம் தள்ளி ஆஸ்டிராய்ட் பட்டி தாண்டி அந்தப் பக்கமாகப் போகக்கூடாதோ?

'போவோம்.. முதலில் சந்திரன், செவ்வாய் போன்ற இடங்களில் தற்காலிக இட வாகன மற்றும் பிற பயண வசதிகளைச் செய்து கொள்ள இது போன்ற முயற்சிகள் தேவை.. எமது குறிக்கோள் ஜூபிடரின் டஜன் கணக்கான சந்திரன்களில் ஆளுக்கொன்று எடுத்துக் கொண்டு, ஆசுவாசமாகக் கால் நீட்டிச் சுகமாக இருப்பதே..' என்ற தீர்மானம் நிறைவேறும் பொதுக்கூட்டத்தில் உட்கார எனக்கு ஒரு சின்ன இடம் தர வேண்டுகிறேன்.


குமட்டியது
உதர, ப்ராண, தர்ம சங்கடம்.

தெற்கு ப்லோரிடாவில் இருக்கும் பென் சீகல் பூச்சிக் கடையில் அவ்வப்போது நடைபெறும் 'தின்னும் போட்டி', ஏப்ரலில் நடைபெற்றது. கரப்பான், பாச்சை, வெட்டுக்கிளிக் குஞ்சு, மண்புழு, பூரான் என்று சுவையான பூச்சிகளைத் தின்னும் போட்டி. முதல் பரிசு ஒரு மலைப்பாம்பு. சாப்பிடுவதும் சாப்பிடாததும் வெற்றி பெற்றவர் இஷ்டம்.

சரி, போட்டிக்கு வருகிறேன்.

முப்பது பேர் கலந்து கொண்ட போட்டியில் எட்வர்ட் என்பவர் 'பூச்சியா புழுவா எதுவானாலும் கொண்டா' என்று சும்மா அடித்துச் சாத்தினார். வெற்றி பெற்றார் என்று அறிவித்துப் பரிசு வழங்கும் நேரத்தில் தொண்டையைப் பிடித்துக் கொண்டு சரிந்தார் எட்வர்ட். மறுநாள் மரணமடைந்தார்.

"ம்ம்ம்.. என்ன ஆச்சுனு தெரியலியே.. எல்லாப் பூச்சிங்களும் நல்லா ப்ரெஷ்ஷாத் தானே இருந்துச்சு?" என்றபடி கன்னத்தில் கை வைத்து ஆள்காட்டி விரலால் தட்டித்தட்டி யோசித்தார் சீகல் கடைக்காரர்.

அடாப்சி ரிபோர்டைப் படித்து ஆய்ந்துத் தள்ளிய கலிபோர்னியா பல்கலைக்கழக என்டமாலஜி பேராசிரியர், "அனேகமாக கரப்பான் பூச்சியில் தான் ஏதாவது கெடுதல் இருந்திருக்க வேண்டும்.." என்று அதிசயமாகக் கண்டுபிடித்தார். 'வெட்டுக்கிளிப் பச்சடி ஊசிப் போயிருக்குமோ?' என்று ஒரு மாணவர் தெரிவித்த சந்தேகத்தை பேரா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நடுவில் சீகல் கடைக்காரருக்கு தர்ம சங்கடம். எட்வர்டு உழைத்துப் பெற்ற வெற்றிப் பரிசான மலைப்பாம்பை அவர் குடும்பத்தார் 'இந்தப் பக்கமே கொண்டு வராதீங்க' என்கிறார்களாம். என்ன செயவதென்று தெரியாமல் விழிக்கிறார் கடைக்காரர்.

பூச்சிப்புழுக் கூட்டுக்கு அரளிவிதை மசியலே மேலென்று தோணுதோ?

25 கருத்துகள்:

  1. சிவப்பிரகாசர் நாசூக்கா சொல்லியிருக்கார் என நினைக்கிறேன். கன்றைப் பார்த்தவுடன் பசுவிடம் (மடியில்) பால் சுரக்கும், அதுபோல் உதவி என்பது கருணை உள்ளப் பெருக்கால் வருவது அல்லவா? அதனால் அப்படி சொல்லியிருக்கலாம், அதை ஏன் நாம் ஏமாற்றம் என நினைக்கவேண்டும்?

    பதிலளிநீக்கு
  2. ம.க. வேண்டாம்...

    ஒருவழிப் பயணம் - நல்ல யோசனைகள்...

    பாவம் எட்வர்ட்...

    புன்னகை தளத்திற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. // செவ்வாய் கிரகத்துல கோவிலே கிடையாது, எல்லாத்தையும் படைத்து காத்து அழித்து, பூமியை மட்டும் ரட்சிக்கும் அகிலாண்டேஸ்வர/டீஸ்வரிகளுக்கு செவ்வாயில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்" என்று நம் கனவில் நாத வேத ரூபங்கள் வந்து //

    எப்படி அவ்வளவு கரெக்டா எம் கனவில் வந்ததை சொல்றீங்க..

    ஆனா முக்கியமான தகவலை விட்டுட்டீகளே ?

    கும்பாபிஷேகம் செய்யும் குழுவுக்கு தலைவராக அப்பாதுரை அப்பாயின்டட் என்று மெசேஜ் வந்ததே...

    சுப்பு தாத்தா.

    பி.கு: எதுக்குமே நீங்க முன்னோடி இல்லயா. கும்பாபிஷேகத்துக்கு நீங்க போங்க.. மண்டலாபிஷேகத்துக்கு
    டிக்கட் கிடைக்கும்பொழுது நான் வரென்.

    அது சரி. ஆவின் பால் விசயம்.
    எனக்கு ப்புரிஞ்சு போச்சு.
    ஆனால் உங்களுக்கு எப்படி அந்த குன்று சமாசாரம் தெரியல்லைன்னு ....

    சரி..சரி.. செவ்வாய்லே தான் இந்த குன்றுகள் எல்லாமே ஜாஸ்தி. சீக்கிரம் விசா வாங்குங்க.

    பதிலளிநீக்கு
  4. செவ்வாய் கிரக மேட்டருக்கு சுப்பு தாத்தா பதில் சொல்வார் என்று டைப் செய்து கொண்டு வந்தேன். பார்த்தால் முதலிலேயே சொல்லி விட்டார்! (சபாஷ் ஸ்ரீராம்!):))))

    நான் கூட ஆவின்பால் பற்றி இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று யோசித்தேன். இந்தப் பாடலே ஒரு இடைச்செருகலோ என்று கூட யோசித்தேன்!

    பதிலளிநீக்கு
  5. @அரசூரான்.. நல்லா பாயின்ட்டை பிடிச்சீங்க.. 'ஏமாற்றி' may be wrong choice of word.
    deception. பசு பால் சுறப்பது நமக்கு அல்ல, கன்றுக்காக. இங்கே பசுவுக்கு அதன் கன்றிடம் இருக்கும் அன்பைப் பயன்படுத்தி பால் கறந்துவிடும் செயல் - இதற்கு என்ன தமிழ்ச்சொல் தெரியலியே?

    @சூரி சார்.
    நான் ஜீனியஸ் இல்லை, நீங்கள் தான். எனக்குத் தோணவே இல்லையே?! prevention is better than cure இல்லையோ? என் மாதிரி ஆட்கள் போறது தான் பெட்டர். இன்னிக்கே விண்ணப்பம் அனுப்பிடறேன்.

    பதிலளிநீக்கு
  6. சிவப்பிரகாசர் சொன்னதையும் அதற்கு வந்திருக்கும் அழகிய பின்னூட்டங்களையும் மிக ரசித்தேன். செவ்வாய்க் கிரக மேட்டரைப் பொறுத்தமட்டில், அரசியல், சினிமா, கோயில் எல்லாத்தையும் விட்டுட்டு, நாமல்லாம் அங்க போறதே பெட்டர்னுதான் எனக்கும் தோணுது. அந்தக் கடைசி மேட்டர்... எங்க புடிச்சீங்க அப்பா ஸார்? குமட்டலே வந்துடுச்சு படிக்கறப்பவே!

    பதிலளிநீக்கு
  7. சிவப்பிரகாசர் சொன்னதையும் அதற்கு வந்திருக்கும் அழகிய பின்னூட்டங்களையும் மிக ரசித்தேன் அய்யா நன்றி

    பதிலளிநீக்கு
  8. ரசித்தேன்.....

    கடைசி: குமட்டல் தான்!

    செவ்வாய் கிரகம் - எனக்கு ஒரு டிக்கட் நீங்களாகவே போட்டுடுங்க!

    பதிலளிநீக்கு
  9. நெசமாவே சீரியஸ் கமென்ட் இது.

    லிடரரி ஆர் ஆர்டிஸ்டிக் இன்கிவிஸிடிவ்னஸ் இஸ் டிஃபரன்ட் ஃப்ரம் சயன்டிஃபிக் ஒன
    நீங்க முன்னாடி போய் செவ்வாய் கிரகத்திலே இருக்கிற மண்ணை ஆராய்ச்சி பண்ணுங்க.
    பின்னே மண் வாசனையை ஆராய்ச்சி பண்ணுவீங்க.
    மண் வாசனைக்கும் மகரந்தத்துக்கும் உண்டான சம்பந்தத்தை ஆராய்ச்சி செய்வீங்க.
    அற்புதமா எழுதுவீங்க...

    எனக்கு என்னாத்த தெரியும்? நீங்க மகரந்தம் அப்படின்னு எழுதினா, நான் மகர ராசிலே
    செவ்வாய் உச்சம் அப்படின்னு எழுதி உங்ககிட்டெ வாங்கிக் கட்டிப்பேன்.

    அது சரி. அங்கே போனா மூன்றாம் சுழி பதிவு தொடர்ந்து எழுத முடியுமோ ?

    எனி வே ஹாப்பி ஜர்னி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  10. //on second thought, இப்பவும் கோவில் கும்பாபிஷேகம்னு கிளம்புறவங்களை "செவ்வாய் கிரகத்துல கோவிலே கிடையாது, எல்லாத்தையும் படைத்து காத்து அழித்து, பூமியை மட்டும் ரட்சிக்கும் அகிலாண்டேஸ்வர/டீஸ்வரிகளுக்கு செவ்வாயில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்" என்று நம் கனவில் நாத வேத ரூபங்கள் வந்து வற்புறுத்தியதாகச் சொல்லி ஒரு கன்டின்ஜன்ட் அனுப்பிரலாமா? என்ன சொல்கிறீர்கள்?//

    ஒரு இடத்திலே கூடவா வராமல் போயிடும்னு எதிர்பார்ப்போடு வந்தேன். சரியாப்போச்சு. சொல்லிட்டீங்க! :))))

    பதிலளிநீக்கு
  11. பசுவிடம் இருக்கும் எல்லாப் பாலையும் கன்றே குடித்தால் அதுக்கும் உடம்புக்கு ஆகாது என்பது தெரியுமில்லையா?? மத்தபடி சிவப்பிரகாசரோடதாத் தெரியலை, இது. ஸ்ரீராம் சொல்லி இருக்காப்போல் இடைச் செருகலாய் இருக்கலாமோ??

    பதிலளிநீக்கு
  12. உங்களுக்கும், ஸ்ரீராமும் ஒரு தனிப்பட்ட க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\\

    இங்கே "ஆவின் பால்" எனப்பட்டது பசுவின் பால் என்றறிக. ஆ=பசு எனப்பொருள்படும். நம்ம அரசு நடத்தும் ஆவின் பால் பண்ணை இல்லை. :P ::P :P ரெண்டு பேருக்கும் தெரியாமலா இருக்கும்?? :)))) வம்பு! :))))

    பதிலளிநீக்கு
  13. சிவப்பிரகாசர் வரிகளும் அதன் தொடர்பான பின்னூட்டங்களும் ரசிக்க வைத்தது. தங்களுக்கு மட்டும் இது மாதிரி எழுத எப்படி முடிகிறதோ ?

    பதிலளிநீக்கு
  14. NATTULE IDHE NINAIPPE POCHUNGA INCLUDING YOURSELF - READ THE SIXTH LINE OF THE NEXT ARTICLE.
    LET ALL UNWANTED ONES GO TO MARS GRAHAM AND I WOULD LIKE TO LIVE HAPPILY IN THE EARTH FOR EVER.

    பதிலளிநீக்கு

  15. பசுவிடம் கன்றைக் கூட்டி மடி சுரக்க வைத்துப் பால் கறப்பதே ஏமாற்று என்றால், கன்று இறந்து விட்டாலும் வைக்கோல் கன்றைக் காட்டி பால் கறப்பது எதில் சேர்த்தி.? ஒருவழிப்பயணம், அதற்கு செவ்வாய் கிரகம் எதற்கு.? நல்ல வேளை சீகல் கடைக்காரர் நம்மூரில் பந்தயம் நடத்தவில்லை. நடத்தி இருந்தால் எட்வார்டை கொல்ல முயற்சி என்று போலீசில் பிடித்துக்கொண்டு போய் கலந்து கொண்டவர்களையும் விசாரணை என்று கூறி லாக் அப்பில் வைத்து ..... இன்னுமென்னவெல்லாமோ கூட நடக்கும்.
    இம்மாதிரி ஊர்வன வற்றை சாப்பிடும் போட்டியை தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. சிரிப்பு, ரசிப்பு, படிப்பு, சுட்டது, ஈர்ப்பு, எல்லாம் நன்றாக இருக்கிறது.

    குமட்டியது உண்மையில் குமட்டல் தான் இவற்றை தடை செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாகில் பாசிடிவ் செய்திகள் குறைவா இருக்கேன்னு நினைத்தேன்.
    மூன்றாம் சுழியில் வந்திருக்கிறது பல செய்திகள். ஆவின் பால், .!கன்றில்லாது பால் கறக்கும் பசுவைப் பார்த்ததே இல்லை. மார்ஸ் முருகனோட இடமாச்சே, குன்றுகள் இருக்கத்தான் செய்யும். யார் போனாலும் கடிதம் போடுங்க.

    பதிலளிநீக்கு
  18. கன்றுக்குட்டி இல்லாத பசுவின் பாலைக் கறந்து நான் பார்த்திருக்கேன் ரேவதி. (அம்பத்தூரில் பால்காரங்க அப்படித் தான் கறப்பாங்க) ஆனால் அந்தப் பாலை நிவேதனத்துக்குப் பயன்படுத்தறதில்லை. கன்றுக்குட்டி இருந்தால் தான் அந்தப் பசுவின் பாலைப் பயன்படுத்தலாம். இப்போ ஆவின் பால் எல்லாம் சேகரம் செய்து வருதே, கன்னுக்குட்டி இருக்கிற மாடா, இல்லாத மாடானு யாருக்கு என்ன தெரியும்! :(((( எல்லாப் பாலையும் மொத்தமா சேகரித்துத் தானே பக்குவப் படுத்தறாங்க.

    பதிலளிநீக்கு
  19. அனைத்தையும் ரசித்தேன்... நல்லதொரு தொகுப்பு

    பதிலளிநீக்கு
  20. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    @GMB: நீங்க சொன்னதை நானும் நினைச்சேன். அது தான் 'ஏமாற்று', அசல் கன்றைக் காட்டிப் பால் கறந்து விடுவது ஏமாற்று அல்ல, but in similar vein - சரியான சொல் தெரியவில்லை. பூச்சி திங்குற காட்சியைப் பாத்திருக்கீங்களா!

    @geethasmbsvm6://எல்லாப் பாலையும் கன்றே குடித்தால் அதுக்கும் உடம்புக்கு ஆகாது// தெரியவே தெரியாது.. (யப்பா, எவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க!)
    அதையும் சொல்லிட்டு இதையும் சொல்றீங்களே! //ஆனால் அந்தப் பாலை நிவேதனத்துக்குப் பயன்படுத்தறதில்லை// :-)

    பதிலளிநீக்கு
  21. //அதையும் சொல்லிட்டு இதையும் சொல்றீங்களே! //ஆனால் அந்தப் பாலை நிவேதனத்துக்குப் பயன்படுத்தறதில்லை// :-//

    அப்பாதுரை, கன்று வயிறு நிரம்பக் குடித்து மிகுந்திருக்கும் பாலையே நாம எடுத்துக்கணும் என்று பொது விதி. ஆனால் அதை யாருமே பின்பற்றுவது கிடையாது. கன்று இல்லாத மாட்டைக் கறப்பது அதன் உடல் நலத்துக்காகவே. ஆனால் அந்தப் பால் அபிஷேஹம், நிவேதனம் போன்றவற்றிற்குப் பயன்படுத்த மாட்டாங்க. எனக்குத் தெரிந்து எங்க வீடுகளில் மாடு கறக்கையில் கன்றில்லாத பாலைத் தனியாகவே வைப்பார்கள். அதைக் கோயில்களுக்குக் கொடுப்பதெல்லாம் கிடையாது.

    இப்போதெல்லாம் கோயில்களில் ஆவின் பாலே வாங்கிக்கிறாங்க. அங்கே என்ன கன்று இருக்கிற பாலா, இல்லாத மாட்டின் பாலானு யாருக்குத் தெரியும்?

    எல்லாவற்றையும் போல் இதுவும் மாறி வருகிறது.

    பதிலளிநீக்கு
  22. மிகச் சுவையான கருத்துக்கள். அதைவிடச் சுவையான விவாதங்கள். பல விசயங்கள் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  23. அனைத்தும் சுவாரசியம்.


    ஏனோ தெரியவில்லை.தங்கள் பதிவில் உள்ள படங்கள், ஆடியோ வீடியோ எதுவும் என்னால் பார்க்க கேட்க முடியவில்லை..
    அனைத்தும் சுவாரசியம்.
    சுப்புத் தாத்தா வெளுத்துக் கட்டுறார்.
    ஏனோ தெரியவில்லை.தங்கள் பதிவில் உள்ள படங்கள், ஆடியோ வீடியோ எதுவும் என்னால் பார்க்க கேட்க முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  24. கீதாம்மா, சுப்பு தாத்தா... க்ரேட்!

    எனக்கு ஏதோ கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சது :)

    பதிலளிநீக்கு
  25. கன்றில்லாத பசுவின்பால் ரத்தத்துக்குச் சமம் என்பார்கள். மாட்டை வெட்டிச் சாப்பிடுவதும் இதுவும் ஒன்று என்பார்கள். மேலதிகத் தகவல்களை விரைவில் பகிர்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு