சாயம் | யாழ் |
'தூக்கில் தொங்க வேண்டியவன் மூழ்கிச் சாகமாட்டான்' என்ற முதுமொழி உண்டு. விதி, தலையெழுத்து, கடவுளின் ஆணை போன்றவைக்கு உதாரணமாகச் சொல்வார்கள்.
சில மாலைகளில் கோல்கோன்டா சிதிலங்களுக்குப் போவோம். அங்கே சாராயக் காற்றாடி சற்றே அறிவாழ்ந்து உரையாடும் பொழுது இடையிடைத் தலைகாட்டிய விதி, தலையெழுத்து, முன்வினை போன்றவற்றை ரங்கன் நம்பினான். செறிவோடு விவாதிப்பான். பஞ்சாங்கம் முதல் டிஎன்ஏ வரை உதாரணம் காட்டி, "இதையெல்லாம் எழுதி வைக்கப்பட்டதென்று ஏற்கிறோம் - வரும் நாட்களின் தட்பவெட்பம் இன்னதென்று தினப்படிக் கணித்துச் சொல்வதை ஏற்று, குடையோ உடையோ எடுத்துப் போகிறோம் - எனில் ஒரு வாழ்க்கைப் பயணம் இவ்வாறு நடக்கும் என்று எழுதி வைத்திருப்பதாக ஏன் ஏற்க முடியாது? நம்மால் முடியாதெனில் அது முடியாததாகுமா? மூடியக் கண்களுக்குப் பின்னால் தானே தினம் பல வண்ணக் கனவுகளை காண்கிறோம்? acceptance is a way of life.." என்பான்.
"சொன்ட்டி டேய்.. பாமரனாட்டம் இதை நம்பிட்டிருக்கியே?" என்றால் சிரிப்பான். "விதி ஏன் தேவைப்படுகிறது? கடவுள் அனாமதேயமாகத் திரிய வேண்டியிருப்பதால். இதை நான் சொல்லலேடா சொன்ட்டி கபாலுங்ளா.. படிச்ச ஞானி ஐன்ஸ்டைன் சொன்னாரு.." என்பான்.
ரங்கனின் நம்பிக்கைகள், அல்லது புரிதல்கள், அவன் வாழ்வின் போக்கைப் பலவிதமாக நிர்ணயித்தனவோ என்ற ஐயம் ஏற்பட்டு நாங்கள் அதிர்ந்தபோது, ரங்கன் இறந்துப் பல வருடங்களுக்கு மேலாகியிருந்தன.
வேலை முடிந்து மதியம் வீடு திரும்பினேன். வத்சனும் விஜயும் சற்று முன்பு வந்திருக்கவேண்டும்.. மறைவாக நிறுத்தப்பட்டிருந்த இள நீல லேம்ரெட்டாவின் அருகே நின்றிருந்தனர். என் யெஸ்டியை நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கினேன். "மச்சி.. இது ரங்கன் வண்டிடா.." என்றான் வத்சன். "அபார்ட்மென்டுல இருக்கான் போல.. இத்னி ஜல்தி வன்டானா?"
ஸ்கூடர் இருக்கையை மோப்பம் பிடித்தான் விஜய். "மச்சி.. ஸ்த்ரீ வாசனைடா.. இரு.. இரு.." என்று மீண்டும் முகர்ந்தான். "ம்ம்.. சந்த்ரிகா சோப்.. லேசா தாழம்பூ சென்ட்.. குடும்பப் பொண்ணு வாசனை.. அனேகமா பச்சைப் புடவை, ப்ரௌன் சோளி, பிங்க் ப்ரா.."
"நிறுத்துடா.. இது திவ்யப்ரபந்த வண்டி. அவங்க வீட்டுல அனுமார் பூஜைக்குப் பூ வாங்கிட்டுப் போயிருப்பான்.. மோப்பம் பிடிக்கிறதப் பாரு.."
"வேணா பாரேன்.." மறுபடி முகர்ந்தான் விஜய். திருப்திப் புன்னகையுடன், "நிச்சயம் குடும்பப் பொண்ணு தான்.." என்றான்.
ரங்கன் எங்கள் அபார்ட்மென்டுக்கு சில மாதங்களாக வரவில்லை. திடீரென்று அவன் வண்டி.. விஜய் சொல்வது உண்மையாக இருக்குமா? ஆர்வத்துடன் நானும் வத்சனும் மாடிப்படி ஏறினோம். "பிங்க் இல்லே கறுப்பு, நிச்சயம் வொயிட் கிடையாது. ரங்கனையே கேட்டுருவோம். இப்பலாம் ப்ரால முன் பக்கமே பட்டனாட்டம் வெல்க்ரோ பொட்டு வந்திடுச்சு தெரியுமாடா? விக்டோரியா சீக்ரட்னு அமெரிக்கால.. நம்ம நாயுடு ஹால் மாதிரி ஆனா என்னா வெரைடிரா! எங்க அண்ணி வந்தப்ப அவங்க ப்ரா ஒண்ணை சுட்டு வச்சுக்கிட்டேன்.." என்று எங்களைத் தொடர்ந்தான் விஜய்.
"your indecency has no bounds" என்றேன்.
"my indecency has plenty of bounce" சிரித்தான்.
"கர்மம்"
"எல்லாம் தெரிஞ்சுக்க வேணாமா? quest for knowledge.. நாளைக்கு விசா இன்டர்வ்யூல ப்ராவைப் பத்தி ஒரு கேள்வி கேக்குறான்னு வை.. பதில் சொல்லலின்னா அமெரிகன் கல்சர் பத்தி எதுவுமே தெரியலனு சொல்ல மாட்டானா? அதைவிடு.. இப்பல்லாம் சிலிகான் வச்சு நமக்குத் தேவையான சைசுல.. தேவையான பதத்துக்கு.."
"..இட்லி மாதிரி பேசுறியே? போதும்டா.." நாங்கள் இரண்டாவது மாடி கடக்கும் போது மேலேயிருந்து நேன்ஸ் சைகை காட்டி ஓசையடக்கச் சொன்னான். அருகில் வந்து, "ஒத்தா மோள வாயுங்களா.. அமைதியா வாங்கடா.. உள்ளே ஸ்ரீசூர்ணம் டாவடிச்சிட்டிருக்கான்.. சமயம் பாத்து அமுக்கிருவோம்" என்று கிசுகிசுத்தான். எங்கள் பெட்டிகளை அப்படியே வைத்து, ஷூக்களைக் கழற்றி, அடி/அடி வைத்து மேலேறினோம்.
பண்பட்ட முதுமை என்று ஏதாவது உண்டா? இருந்தால் அதை ரங்கனின் பெற்றோரிடம் காண முடிந்தது.
வயது நாற்பதைத் தொடும் வேளையில் மணம் புரிந்த பெற்றோருக்கு, ஐம்பதைத் தொடும் வேளையில் பிறந்த ஒரே பிள்ளை ரங்கன். அசல் ஸ்ரீனிவாசப் பெருமாளின் அவதாரமே தங்கள் ரங்கனென்று நம்பினார்கள். அவன் எங்களுடன் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் ஏறக்குறைய எழுபதைத் தொட்டப் பெற்றோர்கள், இன்னமும் அப்படியே பார்த்தார்கள். 'ரங்கா!' என்று அழைக்கையில் ஆழ்வார்கள் போல் தோன்றினர். அவர்கள் ரங்கனைப் பொழுதெல்லாம் கொண்டாடுவதை அவனுடன் தங்கிய வேளைகளில் பார்த்திருக்கிறேன். அவனும் பெற்றோர்களை வைரச் சிம்மாசனத்தில் வைத்துக் கும்பிட்டான். காலையில் அவர்களை ஊஞ்சலில் உட்கார வைத்துப் பாதபூஜை செய்யாமல் வேலைக்குக் கிளம்பியதில்லை. தினம் அவர்களுக்குச் சோறூட்டிக் கால்பிடித்துச் சேவை செய்வான். "..அன்னையும் தந்தையும் தானே.." என்று பாகவதர் பாணியில் பாடி நாங்கள் கிண்டல் செய்வதைப் பொருட்படுத்த மாட்டான். பெற்றோர்கள், ரங்கனுக்கு ஒரு படி மேலே. இரவில் ரங்கன் படுத்த பின்னரே அவர்கள் படுப்பார்கள். ரங்கனின் படுக்கையைத் தொட்டு, "அரவணைப் பள்ளியானே.. ரங்கா!" என்றுக் கைகூப்பி வணங்கிப் பிறகு உறங்கப் போவதைக் கண்டிருக்கிறேன்.
ரங்கனின் அம்மாவுக்கு வசந்தகோகிலம் வசந்தகுமாரி கலந்த அற்புதமான குரல் வளம். பாசுரங்கள் பாடினால் சிலிர்க்கும்.
"..ஓடிக் களைத்தோ தேவியைத் தேடி இளைத்தோ
மரங்கள் ஏழும் துளைத்தோ கடலைக் கட்டி வளைத்தோ..
இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ
இராவணாதியரை மடித்த வருத்தமோ..
ஏன் பள்ளி கொண்டீரய்யா.. ஸ்ரீரங்கநாதா.."
என்று விடியலில் உருகிப் பாடியபடி பெற்றோர்கள் இருவரும் பணிவாக ரங்கனின் பாதம் தொட்டு எழுப்பியதைப் பார்த்து நெஞ்சுருகிக் கண் கலங்கியிருக்கிறேன். பாசத்துக்குப் பலபடிகள் மேலேறி பக்தியோடு பிள்ளையைக் கொண்டாடும் பெற்றோரைப் பெற எத்தனைப் பெருந்தவம் செய்தானிந்த ரங்கன் என்று வியந்திருக்கிறேன். இந்தக் காலத்தில் இப்படி ஒரு குடும்பம் சாத்தியமா என்றுக் கேலியாகத் தோன்றினாலும் அவ்வப்போது மெய்சிலிர்த்து விதிர்த்துப் போயிருக்கிறேன் என்பதும் சத்தியம்.
இதைப் பற்றி அவர்களிடமே கேட்டிருக்கிறேன். "அப்படிப் பேசாதரா.. நாங்க பாவாத்மாக்கள்.. எங்க கோடானுகோடி பாவங்களுக்கு நடுவுல நாராயண ஸ்மரணை எப்பவோ இருந்திருக்கு.. அதனால தான் எங்களுக்கு எல்லா நம்பிக்கையும் போன நேரத்துல.. சம்பவாமினு பொறந்து வந்த ஸ்ரீமன் நாராயணன்டா அவன்! அங்கே பாரேண்டா துரை.. எங்க ரங்கன் திருமண் தீட்டுற அழகைப் பாருடா.. உக்காந்தா உன்னொசரம்.. அந்த தேஜஸ் வருமாடா? ப்ரகலாதனுக்கு அடங்கின நரசிம்ஹனாட்டம் எங்களுக்கு அடங்கி வந்திருக்கானே.. அடியார்க்கடியானில்லையா இவன்?" என்று குழைந்து போவார்கள். "எம்மைக் கரை சேர்க்கவே கூட வந்தாஆஆனிந்த ரங்கன்.. எங்க ரங்கன்" என்று அவனுடைய அப்பா பஜனை பாட்டு போல பாட ஆரம்பித்துவிடுவார்.
இவர்களுக்கு ஒரு பெரிய குறை.
ரங்கனுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை. முதுகலை படிப்பு, ப்பெரிய கம்பெனி வேலை போன்ற தகுதிகளுக்கு அப்பால் பெற்றோரின் முதுமை.. குடும்பத்தில் ஒருவரையொருவர் இறையவதாரமாகக் கொண்டாடும் விந்தையான பாசச்சூழல்.. இவை பெண்களையும் பெண் பெற்றவர்களையும் அவர்கள் பக்கமே வராமல் தடுத்தன. உறவுக்காரர்கள் கூட பெண் தர முன்வரவில்லை. இதை அவர்கள், "கிழங்களுக்கு சிஸ்ருஷை செய்யணும்னு அவாளுக்குத் தலையெழுத்தாடா?" என்று சாதாரணமாக பாவித்தாலும் உள்ளூர ஏங்கினர். "மகாலட்சுமியோ மைதிலியோ ரங்கநாயகியோ ராஜேஸ்வரியோ.. பிராட்டி இருக்காடா.. வருவா" என்பார் ரங்கனின் அம்மா. ரங்கனும் திருமண ஆசைகளை ஒத்தி வைத்தான். "பத்தோ பதினஞ்சோ.. எத்தனை வருசம் இருப்பாங்களோ.. அதுவரை நான் அவங்களைக் கொண்டாடுறேன்.. முப்பது வயசுக்கு மேலே செஞ்சுக்கிட்டா போச்சு.." என்பான்.
ரங்கனின் படிப்பு/வேலைக்காக வீட்டில் தனியறை இருந்தது. அங்கே ஸ்ரீவித்யா படங்களாக இருக்கும். "மாமி.. ரங்கன் ரூம்ல பாருங்கோ.. சினிமா ஸ்டார் படமா ஒட்டிவச்சிருக்கான்.. ஸ்ரீவித்யா மாதிரி பொண் வேணுங்கறான்.." என்பான் நேன்ஸ். ரங்கனின் அம்மா, "மூக்கும் முழியுமா நன்னாத்தான் இருக்கா.. அவளைவிட ஸ்த்ரீ லக்ஷணமா எங்க ரங்கனுக்கு வருவாடா.." என்பார். நேன்ஸ் விடாமல், "ரங்கனுக்கு இருபத்துரெண்டு வயசாகலையா? ஒத்தொத்தராத்துல பதினெட்டு வயசுல பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணிடறா.. நாளானா இந்த சினிமா ஸ்டார் கூட வரமாட்டா.." என்பான். நானும் வத்சனும் முறைப்போம். "ஏண்டா வயசானவங்களை வாட்டறே?" என்று இடிப்போம். நேன்ஸ் கிண்டல் செய்வது தெரிந்தாலும் அவர் ரங்கனை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்.
ஒரு முறை ரங்கனின் அப்பா என்னிடம், "உங்க ஸ்மார்த்தா கூட்டத்துல யாருனா பாரேண்டா எங்க ரங்கனுக்கு?" என்றார். நேன்ஸ் கண்ணாடி உடைப்பது போல, "மாமா.. துரைக்குத் தங்கைகள் இருக்கா.. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் உழைச்சு ஓடாப் போயிருவானு பாக்கறான்.. அதில்லாம நீங்க அய்ங்கார் அரைப் பிராமணர்னு அவனுக்கு இளப்பம் வேறே" என்றான். நான் நடுங்கிப் போய்.."ஐயய்யோ.. அப்படி எதுவுமே கிடையாது மாமா.. இந்த நாசமாப் போற நாராயணன்.." என்று சொல்லடுக்க, அடுத்தக் கணம் அவர் துடித்துப் போனார்.. இரு காதுகளையும் பொத்தி, "ஹரே முகுந்தா!" என்றுக் கலங்கியதும் என் தவறு புரிந்தது. நேன்ஸின் முழுப்பெயர் நாராயணன். திட்டினால் முழுப்பெயர், மற்ற நேரங்களில் நேன்ஸ் என்று எங்களுக்குப் பழகிவிட்டது. ரங்கனின் அம்மா சிறிதும் தயங்காமல், "ஆகா துரை! இனிமே உனக்கு மோக்ஷம் கியேரன்டி.. ஏதோ சாக்குல பெருமாள் பேரைச் சொல்லிட்டியேடா.. சொல்ல வச்சுட்டானேடா எங்க ரங்கன்!" என்று என்னை அணைக்காத குறையாகக் குளிர்ந்து போனார்.
பிறகு நேன்சை நான் தனிமையில் கடிந்து கொண்ட போது, "இப்பத் தெரியுதாடா..? இந்த குடாக்குங்களுக்கு எவன் பொண்ணு கொடுப்பான்?" என்றான். எனக்குச் சங்கடமாக இருந்தாலும் நேன்ஸ் பேச்சில் இருந்த உண்மை உறைத்தது.
இப்படிப்பட்ட ரங்கன் டாவடிக்கிறான் என்றதும் எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம். யாரிந்தப் பிராட்டி?
அபார்ட்மென்ட் கதவை மெள்ள்ள்ள விலக்கித் திறந்து உள்ளே நுழைந்தோம். உள்ளே வெங்கட் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தோம். "ஷ்!" என்று சைகையைத் தொடர்ந்து என் அறையைச் சுட்டினான். அறைக்கதவு மூடியிருந்தாலும் தெளிவாகக் கேட்டது. ரங்கன் சேக்ஸபோன் வாசித்துக் கொண்டிருந்தான். வழக்கமான 'கண்ணே.. தேடி வந்தது யோகம்' பாட்டு.
நின்றதும், "பிரமாதம் ரங்கன்.. மறுபடி வாசியுங்க.." உருது கலந்த இந்தியில் தெளிவானப் பெண்குரல்.
"அடப்பாவி.. துலுக்கப் பொண்ணுரா!" என்றான் விஜய். நேன்ஸ் அவனைக் கிள்ளி அடக்கினான்.
"இன்னும் வாசிக்க வேண்டியது நிறைய இருக்கே?" இது ரங்கன்.
"அடுத்து என்ன வாசிக்கப் போறீங்க?" பெண் குரலில் அப்படியொரு இனிமை.
"உன்னை வாசிக்கவா?"
"என்னையா?" சிரித்தாள். அப்படியொரு கொஞ்சல்.
"எல்லாம் நீ தான்.. இனி நான் இசைக்கப்போகும் இசை.. பாடப்போகிற பாடல்.. படிக்கப்போகிறப் புத்தகம்.. உண்ணப்போகிற உணவு.."
"வேறேதும்..?"
"..உடுத்தப்போகும் உடை?"
"சீய்.." என்ற கெஞ்சலான அதட்டல். தொடர்ந்து, "நீங்கள் வரம் பெற்றக் கவிஞரோ..?"
"நானா? இல்லை. நான் கவிஞன் இல்லை. நீ..கவிதை. தானாக உருவானக் கவிதை. சுயம்பு. நான் உன்னை வரமாகத் தேடும் சாதாரண ரசிகன்"
"ஓ! வெறும் ரசி..கரா? ம்ம்ம்.. எனில் வரக்கவிதையை ரசித்தபின் மறைந்து விடுவீர்களோ?"
"ஆமாம்.."
"என்ன..?"
"கவிதையோடு கலந்து மறைந்துவிடும் ரசிகன்.." என்னை வியப்பிலாழ்த்தினான் ரங்கன்.
"ஆள் விழுங்கிக் கவிதை என்று ரசிகர்கள் சாடினால்?" அந்தப் பெண் விடுவதாக இல்லை.
"மாட்டார்கள். மோட்சம் தரும் கவிதையென ரசிகர் கூட்டம் அதிகரிக்கும்.." ரங்கனும்.
"ரசிகனைக் காணாத உலகம் கவிதையைப் பழிக்குமே?"
"பசித்தக் கவிதைக்கு விருந்தான ரசிகனைப் பாராட்டும்"
"அப்படியும் ரசிகனுக்குத்தான் பாராட்டா?" மெல்லிய சிரிப்பு.
நேன்சுக்குப் பொறுமை குறைந்து கொண்டிருந்தது. "ஒத்தா.. பேசினேகிறாங்க.. அதுவும் இந்திலயே.." என்று மெள்ள என் அறைக்கதவைத் தள்ளினான். அரையங்குலம் திறந்தது.
"ஆள் விழுங்கிக் கவிதைக்குப் பசிக்கிறதே.." பெண்ணின் குரல்.
"பசி தீர்க்க ரசிகன் தயார்.." ரங்கன்.
"தள்ளியிருந்தால் எப்படி விழுங்குவதாம்? கவிதைக்கு அருகில் வந்தால் தானே? வாசனை பார்த்தால் பசியடங்குமா?"
சிறிது நேரம் எந்தக் குரலும் கேட்கவில்லை. இருவரும் எக்கச்சமான நிலையில் இருப்பார்கள் என்று நாங்கள் கதவை அடித்துத் திறந்தோம். சட்டை கூட கழற்றாத ரங்கன், அந்தப் பெண்ணின் கைகளைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தபடி, தரையில் உட்கார்ந்திருந்தான். அந்தப் பெண் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.
"ஜல்சா பண்ணுவீங்கனு பாத்தா.. ஜபம் பண்ணினுக்ரீங்கோ.. யாரு நீங்கோ? இதுக்காகவா அல்லாடுனோம்?" என்றான் நேன்ஸ். அடக்க முடியாமல் சிரித்தான் வெங்கட். தலையிலடித்துக் கொண்டான் விஜய். நானும் வத்சனும் அருகில் சென்றோம்.
அந்தப் பெண் எங்களைப் பார்த்துவிட்டு அதிர்ந்து எழுந்தாள். ரங்கன் கையில் இருந்த துப்பட்டாவைப் பிடுங்கித் தலையைச் சுற்றிப் போர்த்தி மார்பை மறைத்துக் கொண்டாள். "மன்னியுங்கள் சகோதரர்களே!" என்றாள் பயத்துடன்.
அவளைப் பார்த்தோம். உலகத்துப் பெண் கடவுளில் அழகானவர்களை மட்டும் கரைத்து உருவாக்கப்பட்டவள் போல் இருந்தாள். ரங்கனின் வயதிருக்கலாம். அவன் உயரத்துக்கு இணையாக இருந்தாள். கிளிப்பச்சையில் மெல்லிய சரிகை வரிகளாக நெய்த சூடிதார். ரோஜாப்பூக்கள் வரைந்த அரக்குக் கலர் துப்பட்டா, அவளைப் பூந்தோட்டமாகக் காட்டியது. கண்களில் மருட்சி. உட்காராமலும் நிற்காமலும் இடைப்பட்ட நிலையில் இருந்தாள். ரங்கன் அவளை இழுத்து மடியில் கிடத்திக் கொண்டான். அவள் வெட்கத்திலும் பயத்திலும் நடுங்கிப் போய்விட்டாள். ரங்கன் விடாமல் அவளை நெருக்கமாகவும் ஆதரவாகவும் அணைத்துக் கொண்டான். "பயப்படாதே.." என்றான்.
"எதுக்குப் பயப்படுறே? நாங்கள்ளாம் நண்பர்கள்.. இந்தத் தடியன் எங்களைப் பத்தி மோசமா எதுனா சொன்னானா?" என்றான் வத்சன்.
"யாருடா இந்தப் பொண்ணு? வீட்ல தெரியுமா?" என்றான் வெங்கட்.
"எல்லாம் சொல்றேன்.. நீங்கள்ளாம் எங்களுக்கு பெரிய உதவி செய்யணும்.." என்றான் ரங்கன்.
எங்கள் பார்வைகளின் கேள்வியைப் புரிந்து கொண்டு, "முதல்ல.. இன்னிக்கு ராத்திரி மட்டும் இவளை உங்க அபார்டுமென்டுல தங்குறதுக்கு அனுமதிங்கடா" என்றான். எங்களிடமிருந்து பதில் வராததால் தொடர்ந்தான். "ரெண்டாவது.. வெய்ட்.. அதுக்கு முன்னால விவரமெல்லாம் சொல்றேன்..". அவன் கேட்ட உதவி சற்றே அச்சமூட்டியது என்றால் அவன் சொன்ன விவரங்கள் கலங்க வைத்தன.
நாதிரா வசதியான குடும்பத்தில் பிறந்தவள். நிஜாமின் உறவுமுறை. பெற்றோரின் ஒரே பெண் குழந்தை. மூன்று அண்ணன்கள். கடைசி அண்ணனை விடப் பத்தொன்பது வயது இளையவள். இரண்டு வருட முந்தைய மாரடைப்பின் பக்கவாத விளைவால் அவள் அப்பாவுக்கு இடதுபுறம் விளங்கவில்லை. அம்மாவுக்குச் சமீபமாகப் பார்வை கோளாறு. படிப்பும் பண்பும் கொண்டாலும் இனக் கௌரவம் பார்த்த மூத்த அண்ணன்கள், குடும்பச் சொத்துப் பங்கைப் பிரித்துக்கொண்டுத் திரைப்பட, காவல் துறைகளில் வேரூன்றத் தொடங்கியிருந்தனர். முதல் அண்ணன் தயாரிப்பில் வெளியானதாக அவள் சொன்ன சிரஞ்சீவி-ராதா படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. சமீப நக்சலைட் அடக்குமுறை விவகாரத்தில் இரண்டாவது அண்ணனின் புகழ் பரவத் தொடங்கியிருந்தது. படிக்காத பண்பற்ற மூன்றாவது அண்ணன், சமீபத்தில் ஒரு விதவையைக் கற்பழித்தக் குற்றம் அண்ணன்மாரின் மறைமுகச் செல்வாக்கின் காரணமாக நிரூபிக்கப்படாமல் போனத் திமிருடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். ஓய்வு நேரங்களில் கூடாநட்புடன் வீடு வந்து, சொத்துப் பங்கு தரும்படி வயதானப் பெற்றோரைத் துன்புறுத்தினான். பி.காம் படித்த நாதிரா, வங்கித் தேர்வில் வென்று, அபிட்ஸ் கேனரா பாங்கில் ப்ரொபேஷனரி ஆபீசராகச் சேர்ந்திருந்தாள். வேலைக்குப் போகாத நேரங்களில், முதிர்ந்த உடல் நலமற்றப் பெற்றோர்களைக் கவனித்தாள்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன் ரங்கனும் நாதிராவும் செகந்திராபாத் ஆஸ்பத்திரியில் தற்செயலாகச் சந்தித்துப் பழகத் தொடங்கினார்கள். பெற்றோரை அழைத்துப் போயிருந்தான் ரங்கன். நாதிரா தன் பெற்றோரை. அன்று ஆஸ்பத்திரியில் அதிகத் தாமதமானதாலும் நாதிரா அவசரமாக வேலைக்குப் போக வேண்டியிருந்தக் கட்டாயத்தாலும், ரங்கன் உதவி செய்ய முன்வந்தான். சிகிச்சை முடிந்து நாதிராவின் பெற்றோரை வீட்டில் விடுவதாகச் சொல்லி, அவளைக் கலங்காமல் வேலைக்குப் போகச் சொன்னான்.
இப்படித் தொடங்கிய நட்பு குறுகிய காலத்தில் காதலாய் மாறியதற்கு, இருவரின் இளமைக்குத் துணையான உருதுப்பிடிப்பும் பொதுவில் அமைந்து போன பெற்றோர் நிலமையும் காரணங்கள். நாதிராவின் வேலை நிரந்தரமானதும் வீட்டில் சொல்ல நினைத்திருந்தார்கள். இரண்டு நாட்கள் முன்பு நாதிராவின் மணமுறை சித்தி மகன் அவர்கள் இருவரையும் பார்த்து, வீட்டில் சொல்லி விவகாரமாகிவிட்டது. அதுவரை அன்போடு இருந்த நாதிராவின் அம்மா, ரங்கனை வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மீறினால் தன் இளைய மகனை விட்டு ரங்கனை அடித்து நொறுக்கி விடச் சொன்னாள். அதுவரை ஒதுங்கியிருந்த மூத்த அண்ணன்மார் திடீரென்று இனக் கௌரவம் பார்த்து ரங்கனையும் நாதிராவையும் மிரட்டி அடக்கி வைக்கத் தொடங்கினர். அம்மாவோ தங்கை மகனுக்கு உடனடியாகப் பரிசம் போட்டு, வரும் வெள்ளிக்கிழமைக்கு நிக்காஹ் தேதி குறித்துவிட்டாள்.
திருமணத்தில் விருப்பமின்றி, அண்ணன்மார் துணையில்லாமல், அப்பாவிடம் சொல்லிப் பயனில்லாமல், அம்மாவுக்கு அஞ்சி, ரங்கனையும் வறுபுறுத்த முடியாமல்.. நாதிரா வீட்டை விட்டு ஓடத் தீர்மானித்தாள். விவரமறிந்த ரங்கன் அவளைச் சமாதானப்படுத்தி, மறுநாள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்து அதுவரை எங்கள் அபார்ட்மென்டில் தங்குவதற்காக அவளை அழைத்து வந்திருந்தான்.
நேன்ஸ் முதலில் வெடித்தான். "ஒத்தா.. என்னாடா வெளையாட்டாருக்குதா? ஒரு வருஷமா பழகுறேனு சொல்றே..? ஒங்க ரெண்டு பேர் வீட்டுலயும் தெரியாது.. உன் திக் ப்ரண்ட்ஸ்.. எங்க கிட்டேயும் சொல்லலே.. இன்னிக்கு நைட் ஓடிப்போறதா முடிவெடுத்து இப்பத் தீடீர்னு எங்ககிட்டே வந்தா என்னடா அர்த்தம்?"
வெங்கட் அமைதியாக, "நம்மகிட்டே சொல்லாத போனா என்னடா.. யோசிச்சுப் பாரு.. they have a lot in common.. இவன் குடும்ப நிலமை.. அவ குடும்ப நிலமை.. அதான் இப்ப ஒருத்தர் வீட்டுல தெரிஞ்சு போயிடுச்சுன்றானே?"
"டேய் ரங்கா.. முதல்ல அவளை சரியாக உட்கார விடுறா" என்றேன். "நாதிரா.. கட்டில் மேலே வசதியா உக்காந்துக்க. we will sort this out".
எங்களுக்குப் பசித்தது. "சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?" என்றான் வெங்கட்.
"இல்லடா.. இந்த நிலமைலே இவளை வெளில கூட்டிப் போய்.. மாட்டிக்கிட்டா டேஞ்சர்.." என்றான் ரங்கன்.
"சாப்பாடு வாங்கிட்டு வரேன்" என்று கிளம்பினான் வெங்கட். ரங்கனிடம், "உனக்குச் சோறு கிடையாதுடா" என்றான் கடுப்புடன். "வாடா விஜய்.." என்று கிளம்பவும் உமேஷ் வரவும் சரியாக இருந்தது.
ஆறு பேருக்கான எடுப்புச் சாப்பாட்டை எட்டு பேர் சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிக்குமுன் நாதிரா எங்களுடன் சுமுகமாகப் பழகத் தொடங்கிவிட்டாள்.
"போலீஸ்ல சொல்லிப் பாதுகாப்பு எடுக்கலாமேடா?" என்றான் வெங்கட் ரங்கனிடம்.
"அவங்க அண்ணன் செல்வாக்குடா.. தலையிடமாட்டாங்க.." என்றான் ரங்கன். "..ரங்கனைத்தான் உள்ளே வைப்பாங்க.. எனக்குத் தெரியும்.." என்றாள் நாதிரா.
"ரெஜிஸ்டர் மேரேஜ் தவிர வழியில்லைடா.. கல்யாணம் ஆகி.. அப்புறம் எங்க வீட்டுல எப்படியாவது சமாளிச்சுருவேன்.." என்றான் ரங்கன்.
"அறிவுகெட்ட முண்டம்.. ரெஜிஸ்டர் ஆபீஸ்ல தேதி இருக்குதானு கேட்டியா?" என்று முத்துதிர்த்தான் விஜய். எங்கள் யாருக்குமே அது தோன்றவில்லை. "ரெட்டைபாத்துல ரெஜிஸ்டர் ஆபீசுங்கள்ள தேதி பத்து நாளாகும்.. இல்லின்னா போலீஸ் ஸ்டேஷன்ல எமர்ஜென்சி வெடிங்க் ரெஜிஸ்ட்ரேஷன் தான் செய்யணும்.."
"போலீஸ் வேணாங்க.." நிஜமாகப் பயந்தாள்.
"அப்ப வேறே ஊர்ல ரெஜிஸ்டர் செஞ்சுக்கலாம்.. சாட்சிங்களோட" என்ற விஜய், உள்ளே சென்று தொலைபேசி வந்தான். "கண்ணுங்களா.." என்றான். "கரீம்நகர்ல என் டீலர்ட்ட பேசி ஏற்பாடு செஞ்சிருக்கேன்.. அவரே ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் கூட்டிப்போய் சாட்சியோட செஞ்சு வக்குறதா சொல்லிட்டாரு. ஆனா அங்கேயும் வெள்ளிக்கிழமை தான் தேதி இருக்குதாம். நான் நாளைக்கு கரீம்நகர் போறேன்.. அங்கேயே ரெண்டு நாள் தங்கியிருக்கேன்.. நீங்க வந்ததும் எல்லாம் முடிச்சுறலாம்.."
"வெள்ளிக்கிழமை வரைக்கும் டிலே செய்யுறது டேஞ்சர்.." என்ற ரங்கனும் நாதிராவும் சற்று மௌனமாக இருந்தார்கள். "அதுவரை இவ இங்கயே இருக்கட்டும்டா.." என்றான் ரங்கன், என்னையும் வத்சனையும் பார்த்து.
"நீ என்னாடா சொல்றே?" என்று வத்சன் என்னைப் பார்த்தான். நான் அவனை முறைத்தேன். "thought so.." என்றான் வத்சன். "அவ இங்கே இருக்குறது அவளுக்கும் டேஞ்சர், நம்ம எல்லாருக்குமே டேஞ்சர்டா.."
"சொன்னாக் கேளுங்க.. நாதிரா நீ உன் வீட்டுக்குப் போ.. pretend nothing happened.. வேணும்னா நாலு தடவை அழு.. just go with the flow.. வெள்ளிக்கிழமை காலைலே ஆபீசுக்குக் கிளம்புறாப்புல நேரே பஸ் ஸ்டேன்ட் வந்துரு.. எட்டரைக்கு பாயின்ட் டு பாயின்ட் பஸ் பிடிச்சா ரெண்டு மணிக்கு கரீம்நகர். மூணு மணிக்கு ரெஜிஸ்டர் முடிச்சுட்டு, டீலர் வீட்டுல கல்யாண சாப்பாடு.. அந்த ஆளு பாத்துக்குறதா சொல்லியிருக்காரு.. அதுவரை யாருக்கும் இது தெரிய வேண்டிய அவசியமேயில்லை.." என்றான் விஜய்.
"பஸ்ல வேணாம்டா.. டேக்ஸி எடுத்துட்டுப் போயிருவோம்.. இல்லே ப்ரைவேட் கார்.." ரங்கனுக்கு இன்னும் தயக்கமாக இருந்தது.
"நக்கோ" என்றான் உமேஷ், இயல்பான ரெட்டைபாத் இந்தி வழக்கில். "வேணாம்.. பொது பஸ் உங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு. ஒரு வேளை தெரிஞ்சு போச்சுனு வைங்க.. நிச்சயம் தெரிஞ்சு போவும்.. கார் டேக்ஸி தான் முதல்ல மாட்டும்.. மாட்டினாலும் பொது பஸ்ல ஆர்பாட்டம் செய்ய மாட்டாங்க.."
"டேய்.. உடுப்பி வாயா.. கம்னு இருடா.. எதுனா சொல்லாதே.." என்றேன் உமேஷிடம். தொடர்ந்து, "நீங்க தைரியமா இருங்க.. ஒண்ணும் ஆவாது.. இவன் அப்படித்தான் வாய வைப்பான்.."
உமேஷ் விடவில்லை. "ஜரூர் மான்ஜாதே.." என்றான். "நாம தயாரா இருக்கணும். உங்களுக்குப் பாதுகாப்பா என் கடை ரவுடிங்க நாலு பேரை மப்டிலே உங்க பஸ்லே அனுப்பி வைக்கறேன்.. அவங்க வர்றது உங்களுக்குக் கூடத் தெரியாது.. பயப்படாதீங்க.."
உமேஷைச் சுட்டி, "ஊர்ல ஒண்ணாம் நம்பர் பொறுக்கி.." என்றான் நேன்ஸ். "இவனே ஆளை அனுப்புறதா சொல்றான்.. அப்புறம் என்னடா.. கவலைய விடு.. என்னைக் கேட்டா நீ இப்பவே உங்க வீட்டு ஆழ்வாருங்க கிட்டே விஷயத்தைப் பக்குவமா சொல்லிடறது நல்லதுரா.." என்றான் ரங்கனிடம்.
"எல்லாம் செட்டிலாயிருச்சுல்ல? நாதிரா.. தயவு செஞ்சு உடனே வீட்டுக்குப் போயிரு. நார்மலா நடந்துக்க.. வெள்ளிக்கிழமை காலைல பஸ் ஸ்டேன்ட் வந்துரு.. ரங்கா நீயும் அவ வீட்டுப் பக்கமே போவாத.. பஸ் டயத்துக்கு வந்துரு.. குட் லக்.. ஆல் செடில்ட்" என்றான் வெங்கட் முதலாளித்துவமாக.
எல்லாரும் தலையாட்ட விஜய் மட்டும், "ஒண்ணு தான் பாக்கி" என்றான். "வந்து.. நீ மூணு கலர்ல ட்ரஸ் செஞ்சிருப்பேனு இந்தப் பசங்க கிட்டே சொன்னேன். பச்சை சரியாயிடுச்சு..சல்வார். ப்ரௌன் கூட..துப்பட்டா. பிங்க் மட்டும் தான்" என்றான் நாதிராவிடம் சரளமாக.
குப்பென்று கோடி கிலோ குங்குமம் கொட்டியது போல் முகம் சிவந்து.. கண்கள் விரிந்து.. உண்மை வெளிப்பட்டக் கோபம் ரோஷம் பயம் கடந்து நாதிராவின் முகம் மெல்லிய நாணப் புன்னகைக்குச் சடுதியில் மாறிய உணர்ச்சிப் போக்கில்.. அவள் ரங்கனின் விரல்களைப் பிணைத்துத் தன்னுடன் இழுத்துக் கொண்ட ரவிவர்மக் காட்சியைக் காண நேர்ந்தது, எங்கள் அன்றையத் தினத்தின் வரம்.
வெள்ளிக்கிழமை காலையிலேயே நாங்கள் பஸ்ஸில் டிகெட் வாங்கி இடம் பிடித்தோம். உமேஷின் அடியாட்கள் ஆறு பேர் வந்தார்கள். ரங்கன் முன் இரண்டாவது வரிசையில் ஒரு அடியாளருகே உட்கார்ந்தான். நேன்சும் நானும் கடைசி வரிசையில். இடப்புறம் போக்குவரத்து நிறைந்த முச்சந்தி நெரிசல், ரங்கனுக்கும் எனக்கும் தெளிவாகத் தெரிந்தது. வத்சனும் வெங்கட்டும் எதிர்ப்புற டீக்கடையில் இருந்தார்கள். டீக்கடை ஒட்டிய மாரட்பல்லி சாலை எங்கள் கண்ணெதிரே ஆளில்லாமல் விரிந்தது. நாதிராவுக்காகக் காத்திருந்தோம். என்ன ஆனாலும் ரங்கனை பஸ்ஸிலிருந்து இறங்கக் கூடாது என்று சொல்லியிருந்தோம். கூட்டம் சேரத் தொடங்கியது. எட்டு ஐந்து. எட்டேகால். கண்டக்டர் டிகெட் சோதித்தும் விற்றும் கொண்டிருந்தார். எதிரே வத்சன் கட்டைவிரலைத் தாழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தான். தாமதம். எட்டுப் பதினாறு.. பதினெட்டு.. எங்களுக்கு முதல் முறையாகக் கலக்கத் தொடங்கியது. உமேஷ் கண்டக்டரிடம், "ஒருத்தர் வரணும்.. இதா வந்துருவாங்க" என்று சொல்லத் தொடங்கினான்.
எட்டு இருபதுக்கு நாதிரா சற்றுத் தொலைவில் மாரட்பல்லி தெருவில் சந்து திரும்பி எங்களை நோக்கி வருவது தெரிந்தது. சீக்கிரம்!
நிதானமாக நடந்தவள், சற்று வேகம் பிடிக்கத் தொடங்கி.. திடீரென்று ஓடிவரத் தொடங்கினாள். அவள் பின்னால் சந்து திரும்பிய ஒரு ஆட்டோவும் இரண்டு ஆட்களும் துரத்தி வருவதைக் கவனித்து அவசரமாக பஸ் இறங்கி, "வத்சன்" என்று கூவினேன். இறங்க முனைந்த ரங்கனை உமேஷின் அடியாள் பிடித்து அழுத்தினான். எனக்குப் பின்னே இறங்கிய நேன்ஸ் அவசரமாக ஓடி வெங்கட்டை அழைத்தான். "டேய்.. சைட்ல பாருங்கடா..". அதற்குள் வெங்கட் மாரட்பல்லி தெருவைக் கவனிக்க, நாதிரா வேகமாக ஓடிவருவதைப் பார்த்தான். அவள் பின்னால் வந்த ஆட்களைக் கவனிப்பதற்குள் நாதிரா அவனைத் தாண்டி தெருமுனைக்கு வந்து விட்டாள். ஆட்டோவும் வேகமாக அவள் பின்னே வந்துவிட, பஸ்ஸில் ஏறுவதற்காக நாதிரா வேகமாக தெருவைக் கடக்க முற்பட்டாள்.
பேகம்பேட் அவசரத்தில் முச்சந்தி கடந்த ஒரு பியட் கார் அவளைக் கவனிக்கவில்லை. இருபதடி தூக்கியெறியப்பட்ட நாதிராவைக் கவனித்த எங்கள் நெஞ்சாறவில்லை.
தொடர்ந்து பஸ் ஸ்டேன்டில் கலவரம். ரங்கனை அடிக்க ஆட்கள் வர, உமேஷின் ஆட்கள் பாதுகாப்பாக அவனைப் பிடித்துக் கொண்டனர். ரங்கன் திமிறி "ஐயோ நாதிரா நாதிரா!" என்று அலறி ஓடி அவளை மடியில் எடுத்துப் போட்டுக் கதறினான். "என்னையும் கொன்னுறுங்க.. என்னையும் கொன்னுறுங்க" என்றுத் துடித்தான்.
உமேஷின் அடியாட்கள் ரங்கனைப் பாதுகாப்பாகச் சூழ்ந்து கொள்ள, நொடிகளில் நாதிராவின் போலீஸ் அண்ணன் வந்துவிட்டான். "இவன் கொலைகாரன்.. இவனை உள்ளே தள்ளு.. தோலைக்கிழி.." என்றுப் பலவாறு அரற்றிய மூன்றாவது அண்ணனைப் பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் விசாரித்தான். நாதிராவை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி, இருந்த கூட்டத்தை அமைதிப்படுத்தி நகர்த்தியபோது மணி பத்தாகிவிட்டது. "மாரோ இஸ்கோ.. இந்துச்சூத்" என்று இனப்பகை தூண்ட முயன்ற எழுச்சியை அடக்கி, "இது விபத்து" என்ற நாதிராவின் அண்ணன், எங்களை வியக்க வைத்தான். ரங்கனிடம் ஸ்டேட்மேன்ட் வாங்கிக் கொண்டு பாதுகாப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தான். நாங்களும் ரங்கனுடன் வீட்டுக்கு வந்தோம்.
ரங்கன் விவரமெல்லாம் சொல்லி அழுதான். அவன் பெற்றோர்களுக்கு மெள்ள விவரம் புரிந்த போது "க்ருஷ்ணா! க்ருஷ்ணா!" என்றதைத் தவிர எதுவுமே பேசவில்லை.
சிறிது நேரத்தில் நாதிராவின் அம்மா ஆட்டோவில் வந்திறங்கினார். நேரே உள்ளே வந்து ஒரு கைப்பிடி மண்ணை வீசினார். "நீ அல்பாயுசுல போயிடுவே.. என் பெண்ணைப் பலி வாங்கின உனக்கு வாழ்க்கைல சந்தோஷமே கிடைக்காது.. என் பெண் போனாப்புல உங்கப் பையனும் போயிடுவான்" என்றுச் சபித்து, வீசிய மண்ணையும் அவர்களையும் திரும்பிப் பாராமல் வந்த வேகத்தில் வெளியேறினார்.
நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பச் சில வாரங்களாயின. ரங்கனுக்குச் சில மாதங்கள். நாதிராவின் பெற்றோருடன் அவன் சுமுகமானது எங்களுக்கு ஆச்சரியம். இழப்பின் தவிப்பைத் தணிக்க இரு தரப்புக்கும் அந்த நெருக்கம் தேவைப்பட்டது. தன் பெற்றோரையும் நாதிராவின் பெற்றோரையும் மாதமிருமுறை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனான். தினம் நாதிராவின் பெற்றோரைச் சந்தித்துப் பேசினான். முதல் வருட நினைவு நாள் வாக்கில் ரங்கன் அவர்கள் மகன் போலவே பழகிவிட்டான். தன்னலமில்லாத ரங்கனின் மனம் புரிந்து நாதிராவின் அம்மா, அடிக்கடி தன் சாபத்துக்கு மன்னிப்புக் கேட்டு வந்தார். நாளாக ஆக ரங்கனின் பெற்றோரும் நாதிராவின் பெற்றோரும் அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டினர். ரங்கன் மீண்டும் திருமணம் பற்றி நினைப்பான் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. மறுபடியும் ரங்கனைப் பற்றித் தவறாகக் கணித்தோம்.
இரண்டாம் வருடம், சேல்ஸ் மீட்டிங்குக்காக நாங்கள் விசாகப்பட்டினம் போய்த் திரும்பிய அன்று மாலை ரங்கன் வீட்டில் ஒரு முதியவரும் பெண்ணும் வந்திருந்ததைப் பார்த்தோம். அவனுடைய பெற்றோர் என்னையும் நேன்ஸையும் பிடித்துக் கொண்டார்கள்.
"இவா எங்கப் பங்காளிகள்.. புருலியாப் பக்கம்.. இவர் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகலை.. நான் எங்க ரங்கனுக்குப் பண்ணிக்கறேன்னு வரச் சொன்னேன்.. கல்யாணமே ஆகலேன்னாலும் ரங்கனுக்குப் பொண்ணு தர பயப்படுறாளே?" என்றார் நாங்கள் விவரம் கேட்டது போல.
நபர், "ரங்கன் ஜாதகம் பாத்தோம்.. சரி வரல்லியே? என் பொண்ணுக்கு செவ்வாய் தோஷம். எட்டாம் ஸ்தானம். ரங்கனுக்கு சுத்த ஜாதகம்.. அவருக்கும் செவ்வாய் தோஷம்னா ஏதோ பரிகாரம் பண்ணிச் சேக்கலாம்.." என்றுத் தொடங்க, நாங்கள் திகைத்தோம். இதையெல்லாம் எங்களிடம் சொல்லி என்ன பயன்? ரங்கன் உள்ளிருந்து நக்கலாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.
"என்ன பெரிய தோஷம்.. எல்லாம் வேஷம்!" என்றார் ரங்கனின் அப்பா. "மாமி இருக்காளே.. அவளுக்கும் செவ்வாய் தோஷம்னு சொன்னா.. என் ஜாதகத்துல தோஷம் கிடையாது.. நான் பண்ணிக்கலியா? இப்ப என்னாச்சு சொல்லுங்கோ?" என்றார். எங்களை விஷமமாகப் பார்த்தார். "மாமி இருக்காளே.. சாந்தி முகூர்த்தப்போ இவ பயந்து என்னண்டை வந்து.. நேக்கு செவ்வாய் தோஷம்னு தெரிஞ்சும் பண்ணிண்டேளேனு கலங்கறா.. நான் சட்டுனு அவ வாயிலே ரெண்டு உதட்டையும் கடிக்கறாப்ல ஒரு முத்தம்.. பச்சுனு கொடுத்தேன்.. எனக்கு அப்படி எந்தத் தோஷமும் தெரியலியேடி.. சரியா கவனிக்கலியோ.. இன்னொரு தடவை பாக்கட்டுமானேன்.. அவ்ளோ தான்.. ஏற்கனவே தாம்பூலம் போட்ட வாய் லஜ்ஜையிலே இன்னும் சூர்யோதயமா ஜொலிக்கிறது.." என்றுச் சிரித்தார். ரங்கனின் அம்மாவுக்கு இந்த வயதிலும் முகம் சிவந்தது. "see what i mean? அப்பவும் தெரியலே.. இன்னி வரைக்கும் தெரியலே.. எங்களுக்குள்ள மனஸ்தாபம் வரப்போ ஏண்டி உயிரை வாங்குறேனு கேட்டாலும், இன்னைக்கும் நெதம் கையைப் பிடிச்சுண்டு ஊஞ்சலாடறோம்.. தூங்கறோம்.. இல்லையா? என்ன தோஷம் கெட்டுப் போச்சு? மனசுல கல்மிஷம் இருக்கறவாளுக்குத் தான் தோஷம் வேஷம் எல்லாம்.." என்றார் புருலியாக்காரரைப் பார்த்து. எனக்கு ரங்கன் பெற்றோர் கால்களில் விழத் தோன்றியது.
"அப்புறம் என்ன சார்.. பொண்ணைக் கொடுங்கோ.. ரங்கன் உங்க மாப்பிளையா வர நீங்கக் கொடுத்து வச்சுருக்கணும்" என்றான் நேன்ஸ்.
புருலியாக்காரர் பதறினார். "ஐயையோ.. நேக்கந்த சந்தேகமே இல்லை.. எம்பொண்ணு ஜாதகம் எமன்ட்டந்து வந்திருக்குற ஒன்வே டிக்கெட்.. ரங்கன் என்ன பண்ணுவார்? நாங்க ரொம்ப ஏழை.. ரங்கனுக்குப் பொண் கொடுக்கக் கசக்குமா? தோஷ ஜாதகத்தை ஏமாத்திப் பொண் கொடுக்க மனசு ஒப்பலே. பொண்ணு.. பொறந்த வாரமே அம்மாவை முழுங்கிட்டா.. செவ்வாய் தோஷம் அம்மாவை முழுங்குமோ? பெத்தவளை முழுங்கியாச்சு.. புருஷனை முழுங்கணுமா? இன்னும் என்னை முழுங்காம இருக்காளேனு தலையிலடிச்சுக்கறேன்.. செறுக்கி ஜாதகத்தை அழிச்சு நாலு செவ்வா தோஷ ஜாதகம் கணிக்கலாம்.. அத்தனைக்கிருக்கு தோஷம்.. அதான்.."
பெண்ணைப் பற்றி இப்படிப் பேசுகிறாரே என்று அதிர்ந்தோம். இத்தனைக்கும் நடுவில் அந்தப் பெண் அறையோரமாகத் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். எங்களுக்குப் பாவமாக இருந்தது. பெண்ணின் கண் கலங்கியிருந்தது.
"ஏம்மா.. செவ்வாய் தோஷம்னா செக்சுல ரொம்ப ஆர்வமா இருப்பானு சொல்வாளே?" என்றான் ரங்கன் திடீரென்று.
ரங்கன் கேள்வியின் காரணம் புரியாவிட்டாலும் டைமிங் புரிந்தது. கண்ணீர் நீக்கியத் திடுக்கிட்ட வெட்கப் புன்னகையை மறைக்க முயன்றாள் அந்தப் பெண்.
"போதும்டா அசடு.." என்றார் ரங்கனின் அம்மா. "இதப் பாருங்கோ.." என்றார் புருலியா நபரிடம். "எம்புள்ள பங்குனி உத்தராடம் மகர ராசி. மகாவிஷ்ணு வம்சம், மகாலிங்க அம்சம். பத்து செவ்வாய் எட்டு சனியை ஜோட்டாலடிச்சு விரட்டாதோ ரங்கன் ஜாதகம்? ஆட நட்சத்திரம் ஐயா.. இவன் தான் எல்லாத்துக்கும் ஆரம்பம்.. இவனண்டை உண்டானது தான் எல்லாம்.. என் ரங்கனை எந்தத் தோஷம் என்ன பண்ணும்? தோஷத்துக்கு தோஷமாகும்.. இவன் யாரு? இகபரத்ரிலோகாதிபதி.. சாக்ஷாத் நாராயணன், அவ சாக்ஷாத் பிராட்டியாக்கும்.. தவம் பண்ணிக் கடைசியா இங்கே வந்திருக்கா தெரியலியா? உங்க கண்ணை மாயை மறைக்குறது.. நீங்க எதுக்கும் பயப்படாதீங்கோ.. க்ருஷ்ணாய துப்யம் நமனு சொல்லிட்டு கல்யாணத்தைப் பண்ணி வைப்போம்.. நானும் உங்க கிட்டே எல்லாத்தையும் சொல்லியாச்சு.. ரங்கனுக்குக் கல்யாணம் நடந்தா நாங்களும் நிம்மதியாக் கண்மூடலாம்.. பெரிய மனசோட கன்னிகாதானம் பண்ணுங்கோ.. ஸ்ரீநிதியைக் கண்கலங்காம பிராட்டியை விட மேலாப் பாத்துக்குறோம்.. அவ முகக்களை எந்த தோஷத்தையும் பஸ்பமாக்கிடும்.. எல்லாப் பரிகாரமும் பண்ணி.. துவரை வாழைனு தானத்துக்கு மேலே தானமாப் பண்ணி.. தோஷத்தையே கரைச்சுடறோம் கவலைப்படாதீங்கோ.. அவ எங்காத்துப் பொண்ணா வந்துட்டா சந்தோஷத்தைத் தவிர எந்தத் தோஷமும் வராது.. பொண் தரமாட்டேன்னு சொல்லிடாதீங்கோ". ரங்கன் அம்மாவுக்கு குரல் கம்மியது.
"இருந்தாலும் எம்பொண்ணு எமனுக்கு டிகெட் செக்கரா இல்லே வந்திருக்கா.. நாளைக்கு ஏதானு ஆச்சுன்னா அவ நிலமையும்னா கஷ்டம்.. கல்யாணமாகாமலே இருந்துட்டுப் போகட்டும் துடைப்பக்கட்டை.."
நாங்கள் மெள்ள ரங்கனிடம் சென்றோம். "என்னடா இது.. நீங்கள்ளாம் சேந்து அந்தப் பொண்ணை எக்சிபிஷன் பொம்மையாட்டம் வச்சு.. டிராமா போட்டுட்டிருக்கீங்க.. உனக்குப் பிடிச்சிருந்தா பண்ணிக்கடா.. இல்லைனா spare some dignity" என்றேன்.
என்ன தோன்றியதோ, ரங்கன் நேராக அந்தப் பெண்ணிடம் சென்றான். "ஸ்ரீநிதி.. எல்லார் எதிர்லயும் உன்னைக் கேக்கறேன்.. என்னைக் கல்யாணம் செஞ்சுக்க உனக்கு இஷ்டமா?" என்றான்.
அவள் விதிர்த்துப் போய் அவசரமாக எழுந்தாள். ரங்கன் விடவில்லை. "என்ன சொல்றே?"
அவள் ஆமோதித்துத் தலையாட்டினாள். ரங்கன் தொடர்ந்தான், "தலையாட்டினா என்ன அர்த்தம்? சரிங்கறியா வேணாங்கறியா?"
"சரி" என்று அவள் சொன்ன அந்தக் கணத்தில், தயங்காமல் அவள் கையைப் பிடித்தான் ரங்கன். "அப்பா.. அம்மா.. இனிமே ஸ்ரீநிதி தான் எனக்குப் பொண்டாட்டி. நான் ரங்கன், இவ ரங்கநாயகி. நான் கண்ணன், இவ கோதை" என்றபடி ஸ்ரீநிதியின் தந்தையைப் பார்த்தான். "சார்.. தோஷம் எல்லாம் இனிமே எங்க குடும்பத்துக்குள்ள வந்தாச்சுனு வச்சுக்குங்க.. உங்க குடும்பத்தை விட்டாச்சுன்னு சந்தோஷப்பட்டுக்குங்க. அப்படியே ஏதாவது ஆனாலும் உங்க பொண்ணு உங்களுக்குப் பாரமா இருக்கவே மாட்டா.. எங்க சொத்து எல்லாமே அவளுக்குத்தான்" என்று ஸ்ரீநிதியின் தலையிலடித்துச் சத்தியம் செய்தான்.
ஸ்ரீநிதியின் தந்தை, ரங்கனின் பெற்றோர் கால்களில் விழுந்து விழுந்து எழுந்து கொண்டிருந்தார்.
இந்த மெலோடிராமாவின் தாக்கம் தீருமுன் ரங்கன்-ஸ்ரீநிதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு நாதிராவின் பெற்றோரும் வந்திருந்தனர். அவர்களுக்கு அளவிலாத மகிழ்ச்சி. தங்கள் சொத்தில் ஒரு பங்கை திருமணப் பரிசாக ஆசீர்வாதம் செய்துக் கொடுத்தார்கள் நாதிராவின் பெற்றோர்கள்! ரங்கனின் திருமணம் முடிந்த கையோடு தங்கள் மிச்ச சொத்துக்களை விற்று, தானங்கள் செய்து, ஹஜ் சென்ற நாதிராவின் பெற்றோர்களைப் பற்றி நாங்கள் அதற்குப் பிறகு கேள்விப்படவில்லை.
ரங்கன் தம்பதியினர் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள். இரண்டாம் வருடம் ஸ்ரீநிதி கருவுற்றாள். குழந்தை பிறந்த அன்றைக்கு தாயையும் சேயையும் பார்க்க ரங்கன் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வருகையில் லேம்ரெட்டாவில் ப்ரேக் பிடிக்காமல் எதிரே வந்த சிமென்ட் லாரிமேல் மோதி.. ரங்கன் தென்படவில்லை.
யாருக்கு எந்த விவரத்தைச் சொல்வது என்று நாங்கள் தவித்து ஒருவழியாக எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லி முடித்தோம். 'க்ருஷ்ணா!' என்றுக் கதறிய ரங்கனின் அப்பா, அந்தக் கணத்தில் பேச்சையிழந்தார். பெற்றோர் இருவரும் அறைக்குள் தாளிட்டுக் கொண்டு ஒரு வாரம் போல் வெளியே வரவேயில்லை. 'க்ருஷ்ணா!' என்ற மாமியின் குரல் மட்டும் அந்த அறையிலிருந்து இராப்பகலாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் நேன்சும் நிறையப் பயந்தோம். ரங்கனின் இறுதிச் சடங்குகளை நாங்கள் செய்தோம்.
2006ல் இந்தியா போயிருந்தேன். நேன்ஸின் சென்னை வீட்டில் தங்கியிருந்தேன். நாலு நாள் லீவ் போட்டு என்னுடன் சுற்றினான் நேன்ஸ். இருவரும் ரங்கன் வீட்டுக்குப் போக எண்ணி நேன்சின் சொந்த விமானத்தில் ஹைதராபாத் போனோம். வழியெல்லாம் ரெட்டைபாத் நினைவுகளைக் கிளறினோம்.
நாங்கள் எல்லோருமே ரங்கன் குடும்பத்துக்கு உதவினோம் என்றாலும், நேன்ஸ் ரங்கனின் பெற்றோர்களை பத்து வருடங்களுக்கு மேல் சொந்த மகன் போல் கவனித்துக் கொண்டான். ஸ்ரீநிதிக்கு எத்தனையோ உதவிகள் செய்தான். ரங்கனின் அப்பா இறந்த போது அத்தனை காரியங்களையும் நேன்ஸ் செய்தான்.
"ரங்கன் பொண்ணு எப்படிரா இருக்கா?" என்றேன்
"ஒத்தா.. பெரிய ஆள்டா அவ.. பிட்ஸ் பைனல் இயர் கம்ப்யூடர் சயன்ஸ்.. இப்பவே ட்ரீம்வொர்க்ஸ்ல ப்ரீலேன்ஸ் அனிமேஷன் பண்றா.. சூபர் ஸ்மார்ட்.. ஷ்ரெக் பாத்திருப்பியே அதுல நாலு சீன் அவளோட அனிமேஷன்.. அப்படியே ரங்கனை உரிச்சு வச்சிருக்கா.. ஆனா அழகாவும் புத்திசாலியாவும் இருக்கா.. எவ்ளோ பெரிய ஆளா வருவா பாரு.."
"ரொம்ப சந்தோஷமா இருக்குடா" என்றபடி அமைதியானேன்.
வெளியே விமானம் தரையிறங்கத் தொடங்கியிருந்தது. மிகச் சிறிய விமானமானாலும் டர்புலன்ஸ் தெரியவில்லை. சிஇஓ தகுதிக்கேற்றபடி உள்ளே சொகுசாக இருந்தது. எங்கே எப்படி எப்போது இங்கே வந்தேன்.. இந்தக் கணத்தின் மகத்துவம் என்ன?
எங்கள் வட்டத்திலிருந்து விழுந்த முதல் ஆள் ரங்கன். அவனுடன் கழித்த வருடங்கள் எங்களை உலுக்கியதோடு ஒரு அச்சாணியாகவும் இருந்தது பல வருடங்கள் கழித்தே புரிந்தது. 'செவ்வாய் தோஷமாவது மயிராவது' என்று ஸ்ரீநிதியைக் கைதொட்டக் கணத்திலே ரங்கன் தன் வாழ்வை முடித்துக் கொண்டதாக அவன் இறந்த நேரத்தில் தோன்றினாலும், உண்மையில் இரண்டு புதிய வாழ்க்கைகளை உருவாக்கியவன், ஏழெட்டு வெற்று வாழ்க்கைகளை நிறைவாக்கியவன்.. முடிவின் முடிவே தொடக்கம் என்ற ரங்க ரகசியம் போகப் போகப் புரிந்தது. எங்கள் வட்டத்திலிருந்து விழுந்த இரண்டாவது ஆளான எனக்கு ஒரு பிடிப்பு தேவைப்பட்டது. ரங்கன் இறந்த அடுத்த வருடம், நான் அவமானம் தரும் விதத்தில் என் வேலையை இழந்தேன். தற்கொலை எண்ணம் இருந்தது. என்னுடன் தங்கிய உமேஷ் ஒரு இரவு முழுதும் ரங்கனைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது. எதையுமே இயல்பாகக் காண முடியாத என் இயலாமையை எண்ணிப் பின்னாளில் சிரித்ததும்.
நேன்ஸ் என்னை உலுக்கினான். "என்னாடா சைலன்ட் ஆயிட்டே? லேன்டிங் தியானமா?"
"this rangan.. strange bird.." என்றேன். நேன்ஸ் என்னைப் பார்த்தான். "ஆமாடா" என்றேன். "நீயும் நானும் ஒண்ணு செய்யுறதுக்கு முன்னால எதையெதையோ நினைக்கிறோம்.. we rationalize.. rangan just did it.. எதையும் தன்னிடம் வருவதாகவே பார்த்தான்.. நாதிரா.. தன்னோட பெற்றோர்.. நாதிராவோட பெற்றோர்.. ஸ்ரீநிதி.. நம்ம வட்டம்.. எல்லாமே அவனுக்கு ஒரு sign.. ஒண்ணிலந்து இன்னொண்ணுக்கான transition.."
"he embraced it" என்றான் நேன்ஸ்.
பேச்சை மாற்றினேன். "ரங்கனோட அப்பாம்மா, ஸ்ரீநிதி.. எல்லாரும் உனக்கு ரொம்பக் கடன் பட்டிருக்காங்கடா.. நம்ம கும்பல்லே அவன் குடும்பத்தை ரொம்பக் கிண்டல் செஞ்சது நீதான்.. அவங்க கூட இருந்து அதிகமா உதவி செஞ்சதும் நீதான்.."
"சீசீ.. நாமள்ளாம் ஓடற நதி மாதிரிடா.. அவங்கள்ளாம் கரைல நிலைச்சு இருக்குற மரம் மாதிரி.. we recede.. they remain.. அப்பப்போ அவங்களை சுத்தி நாம நதியா வாழ்ந்துட்டுப் போறதுனால, வத்திப் போறப்ப கூட உள்ளுக்குள்ளே ஈரமா இருக்கு.. இல்லேன்னா எல்லாம் மண்ணுதாண்டா.. நானும் அவங்களுக்குக் கடமைப்பட்டிருக்கேன்.. நாம எல்லாருமே.. rangan made us.. each of us.. in some way. this is about him, not about us.." என்றான்.
விமானம் தரை தொட்டுத் தயங்கி நின்றது. அவன் கம்பெனிக் கார் எங்களைக் கூட்டிப் போனது. வழியில் நான் பேசவில்லை. நேன்ஸ் சொன்னது உறுத்தியது. 'நாம எல்லாருமே கடமைப் பட்டிருக்கோம்.. இல்லை.. நாங்கள் யாருமே நேன்சுக்குச் சரியான முறையில் நன்றி சொல்லவில்லை.. இன்றைக்கு ரங்கனின் அடுத்த தலைமுறை வளர்ந்த நிறைவில் மட்டும் பங்கெடுக்கிறேனே.. இவனுக்கு எப்படி நன்றி சொல்வது' என்று ஏதோ யோசிக்கும் வேளையில் ரங்கன் வீட்டுக்குள் வந்துவிட்டோம். ஸ்ரீநிதி என்னை அடையாளம் கண்டு முகமெல்லாம் புன்னகையாக வரவேற்றாள். "வாங்க அண்ணா!" என்றாள். எப்படி இவர்களால் பொய்யில்லாமல் வாழ முடிகிறது!
"மொதல்ல அம்மாவைப் பாத்துடறோம்" என்று நேன்ஸ் என்னை இழுத்துக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான். ரங்கனின் அம்மாவுக்கு தொண்ணூறுக்கு வடக்கே வயது. கண் பார்வை அறவே கிடையாது. எலும்பை ஒட்டிப் போர்த்திய தோலாக ஈசிசேரில் படுத்திருந்தார். நேன்ஸ் அவருக்கு மிக மிக அருகில் சென்று, கையைப் பிடித்து மென்மையாக, "அம்மா!" என்றான்.
பேசச் சிரமப்பட்டாலும் பொக்கையாக முயன்று, நேன்சின் கையைப் பிடித்து வருடியபடி, "வந்..துட்..டியா ரங்..கா!" என்றார்.
அந்தக் கணத்தில் எங்கள் எல்லாருக்கும் சேர்த்து, எங்கள் யாராலும் முடியாத அளவுக்கு, ரங்கனின் அம்மா நேன்சுக்கு நன்றி சொன்னதாகப் பட்டது.
மலர் |
Luved it Appaji...
பதிலளிநீக்கு"மொதல்ல அம்மாவைப் பாத்துடறோம்" என்று நேன்ஸ் என்னை இழுத்துக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான். ரங்கனின் அம்மாவுக்கு தொண்ணூறுக்கு மேற்கிலான வயது. கண் பார்வை அறவே கிடையாது. எலும்பை ஒட்டிப் போர்த்திய தோலாக ஈசிசேரில் படுத்திருந்தார். நேன்ஸ் அவருக்கு மிக மிக அருகில் சென்று, கையைப் பிடித்து மென்மையாக, "அம்மா!" என்றான்.
பதிலளிநீக்குபேசச் சிரமப்பட்டாலும் பொக்கையாக முயன்று, நேன்சின் கையைப் பிடித்து வருடியபடி, "வந்..துட்..டியா ரங்..கா!" என்றார்.
அந்தக் கணத்தில் எங்கள் எல்லாருக்கும் சேர்த்து, எங்கள் யாராலும் முடியாத அளவுக்கு, ரங்கனின் அம்மா நேன்சுக்கு நன்றி சொன்னதாகப் பட்டது.//
தாயின் பாசம் நெகிழ வைத்துவிட்டது. கண்ணன் பக்தர்களுக்கு எல்லோரும் கண்ணன் தான் அது போல் ரங்கனின் தாயாருக்கு எல்லோரும் ரங்கன் தான்.
இந்த அன்பு வளையத்தை விட்டு ஏன் போனார் ரங்கன் என்று வருத்தமாய் இருக்கிறது.
fantastic!! no more words
பதிலளிநீக்கு-surya
அன்பென்னும் பிடியில் அகப்பட்ட
பதிலளிநீக்குஅருமையான கதை ..!
அப்பாதுரை அவர்களே! acceptance is a way of life என்று ஆரம்பித்து ஒண்ணிலெருந்து இண்ணொண்ணுக்கான transition - he embraced it நேன்ஸ் சொல்லும் வரை, a beautiful,emotional,intelectual travel ! பழமையை நோகாமல் விமரிசிப்பதும்,புதுமையை வரவேற்பதும் படிமமாக ரங்கன்,ஸ்ரீநிதி,ரங்கன் பொண்ணு என்று வடிவமைத்ததும் அருமை! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
பதிலளிநீக்குபண்பட்ட முதுமை என்று ஏதாவது உண்டா? இருந்தால் அதை ரங்கனின் பெற்றோரிடம் காண முடிந்தது.//
பதிலளிநீக்குஅருமையான வார்த்தை பிரயோகம்.
//பிட்ஸ் பைனல் இயர் கம்ப்யூடர் சயன்ஸ்.. இப்பவே ட்ரீம்வொர்க்ஸ்ல ப்ரீலேன்ஸ் அனிமேஷன் பண்றா.. சூபர் ஸ்மார்ட்.. ஷ்ரெக் பாத்திருப்பியே அதுல நாலு சீன் அவளோட அனிமேஷன்.. அப்படியே ரங்கனை உரிச்சு வச்சிருக்கா.. ஆனா அழகாவும் புத்திசாலியாவும் இருக்கா.. எவ்ளோ பெரிய ஆளா வருவா பாரு..//
முன்பு இந்திய பயணம் பற்றியபதிவில் நம்பிக்கை தரும் இளைய தலைமுறையில் நண்பனின் பெண் அனிமேஷன் படிப்பு பற்றியும் அவள் புத்திசாலியாக பேசுவதைப்பற்றி பகிர்ந்து இருக்கிறீர்கள் அல்லாவா?"
ரங்கன், ஸ்ரீநிதி மகள் எல்லாவளங்களும் பெற்று நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்த தோன்றுகிறது.
இன்னொரு பெருமைக்குரிய செய்தி சமீபப் பயணத்தில் தெரிந்தது. என் நண்பன் மகளைச் சந்தித்தேன். என் முகவரியை நினைவாக வைத்திருந்து எனக்குச் செய்தி அனுப்பியிருந்தாள். அவளுடைய அனிமேசன் திறமையைப் பார்த்த டிஸ்னி நிறுவனம் அவளை உடனடியாக வரச்சொல்லி வேலை கொடுத்திருக்கிறதாம். மும்பையிலிருந்து ப்ரான்சுக்கு வந்திருந்தாள். இங்கே ஒரு படப்பிடிப்பில் ஆறு மாதங்கள் கலந்து கொண்டு பிறகு ஹாலிவுட் போவாளாம். //
பதிலளிநீக்குரங்கன் இறந்த அன்று பிறந்தாள் என்று பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
அன்னையின் அன்பு நெகிழ வைத்தது...
பதிலளிநீக்குகாதல் வயப்பட்டிருந்த காலத்தில் ரங்கன் இந்தப் பாட்டை அடிக்கடி முணுமுணுப்பான். அவனுடைய காதல் பற்றி இன்னொரு சமயம். //
பதிலளிநீக்குசந்தாஓ சந்தா பாடிய ரங்கன், நாதிராவின் சோகமுடிவு ஏன் இப்படி என்று நினைக்க வைக்கிறது.
// அப்பப்போ அவங்களை சுத்தி நாம நதியா வாழ்ந்துட்டுப் போறதுனால, வத்திப் போறப்ப கூட உள்ளுக்குள்ளே ஈரமா இருக்கு.. இல்லேன்னா எல்லாம் மண்ணுதாண்டா.. நான் அவங்களுக்குக் கடமைப் பட்டிருக்கேன்..// இதப் படிக்கும் போது நிஜமாவே ஒரு ஆன்ம திருப்தி சார்...
பதிலளிநீக்கு//பிட்ஸ் பைனல் இயர் கம்ப்யூடர் சயன்ஸ்.. இப்பவே ட்ரீம்வொர்க்ஸ்ல ப்ரீலேன்ஸ் அனிமேஷன் பண்றா.. சூபர் ஸ்மார்ட்.. ஷ்ரெக் பாத்திருப்பியே அதுல நாலு சீன் அவளோட அனிமேஷன்.. // ஒரு நாலு பதிவுக்கு முன்னாடி நீங்க இதப் பத்தி விலாவாரியா எழுதறதாச் சொன்னீங்களே அது தானே இது.....
உங்க பதிவுகள்ள ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கு ஸார்.....
நன்றி
I have read only once. Makes me to read once again as half way through, heart became very heavy and could not grasp the entire post in one go. Let me read once again. First let me control my tears which is about to come out of my eyes.
பதிலளிநீக்கு"சீசீ.. நாமள்ளாம் ஓடற நதி மாதிரிடா.. அவங்கள்ளாம் கரைல நிலைச்சு இருக்குற மரம் மாதிரி.. we recede.. they remain.. அப்பப்போ அவங்களை சுத்தி நாம நதியா வாழ்ந்துட்டுப் போறதுனால, வத்திப் போறப்ப கூட உள்ளுக்குள்ளே ஈரமா இருக்கு.. இல்லேன்னா எல்லாம் மண்ணுதாண்டா.. நான் அவங்களுக்குக் கடமைப் பட்டிருக்கேன்.. நாம எல்லாருமே..
பதிலளிநீக்குஅழகான வார்த்தைப்பிரயோகம் அருமையான நட்பின் கரு. என்ன சொல்வதென்றே தெரியலைங்க. ரங்கா ரங்கா என மட்டுமே அவர் அம்மாவைப் போல சொல்லத்தோன்றுகிறது.
ஆமாங்க //பிட்ஸ் பைனல் இயர் கம்ப்யூடர் சயன்ஸ்.. இப்பவே ட்ரீம்வொர்க்ஸ்ல ப்ரீலேன்ஸ் அனிமேஷன் பண்றா.. சூபர் ஸ்மார்ட்.. ஷ்ரெக் பாத்திருப்பியே அதுல நாலு சீன் அவளோட அனிமேஷன்.. // ஒரு நாலு பதிவுக்கு முன்னாடி நீங்க இதப் பத்தி விலாவாரியா எழுதறதாச் சொன்னீங்களே அது தானே இது....எனக்கும் அந்த தாக்கமே உண்டானது.
In your last post, you have described the character of Shri Ashuthose now about Sri Rangan.
பதிலளிநீக்குYour way of describing the character of your RETTAIBATH VATTAM is really superb. I need to read your at least thrice to understand the density and gravity of the character involved. Every post you start with a happy note but ends with a very very sad note making our heart to feel heavy.
மிக நீண்ட பதிவு. உள்வாங்கிப் பின்னூட்டமிட மறு வாசிப்பு தேவை. மீண்டும் வருவேன்.
பதிலளிநீக்குஒரு சினிமா தியேட்டரில் நுழைந்து, சினிமா பார்த்துத் திரும்பியது போல இருக்கு. நல்ல சினிமா. ஸ்டார் வால்யூ இல்லாத, ஸ்டோரி வால்யூ மட்டும் இருக்கின்ற ஒரு சூப்பர் படம் பார்த்த திருப்தி.
பதிலளிநீக்குவணக்கம், சிறுகதை என்று நீங்கள் வகைப்படுத்தினாலும் அதில் உள் ஓடும் மைய நிகழ்வு உங்களை பாதித்த நிகழ்வாக இருக்கும் என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குஏ+பி=சி-ன்னு மாயவரத்து கோமதி அம்மா சொல்லிட்டாங்க பாருங்க.
உங்கள் எழுத்து நடை, ச்சான்ஸே இல்ல, வழக்கம் போல கலக்கல். நன்றி.
அப்..........ப்....பா.................. துரை!
பதிலளிநீக்கு"சீசீ.. நாமள்ளாம் ஓடற நதி மாதிரிடா.. அவங்கள்ளாம் கரைல நிலைச்சு இருக்குற மரம் மாதிரி.. we recede.. they remain.. அப்பப்போ அவங்களை சுத்தி நாம நதியா வாழ்ந்துட்டுப் போறதுனால, வத்திப் போறப்ப கூட உள்ளுக்குள்ளே ஈரமா இருக்கு.. இல்லேன்னா எல்லாம் மண்ணுதாண்டா.. நானும் அவங்களுக்குக் கடமைப்பட்டிருக்கேன்.. நாம எல்லாருமே.. rangan made us.. each of us.. in some way. this is about him, not about us.." என்றான்.//
பதிலளிநீக்குஎனக்குள் ஈரமுண்ட்டாக்கி வறண்டு போன
பலரை நினைவூட்டிப்போனாலும்
கடைசி பாரா நான் தொடர்ந்து செல்ல
வேண்டிய வழியை மிகத் தெளிவாகக்
காட்டிப் போனது
மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும்
எப்படிச் சொல்வது எனத் தெரியாததால்
படைப்பு குறித்துச் சொல்வதற்கேதுமில்லை
தொடர வாழ்த்துக்கள்
நிறைவால் தளும்பும் கண்ணீரை அடக்க வழி தெரியவில்லை.படபடப்பாய் உணருகிறேன்.
பதிலளிநீக்குவாழ்வின் சூக்ஷ்மத்தை உணர்ந்த அறிவுக்கு, மனதின் ஆரவாரத்தை அடக்க வழியில்லாது தவிப்பாய் இருக்கிறது.
வாழ்வைக் கற்க உங்கள் நட்புவட்டத்தின் கடந்த காலமே போதுமானதாய் இருக்குமெனத் தோன்றுகிறது.
You are profound and precise. சொல்வது அத்தனையும் அனுபவங்களில் இருந்து என்ற வலுவான தளத்தில் எழுப்பப்பட்ட எழுத்தானாலும், ப்ரமிக்க வைக்கிற சொற்சிக்கனம், நேர்த்தி, கவித்வம்.
அபாரம் அப்பாதுரை. உங்களை வாசிப்பது என் பெருமை. உங்கள் நட்பு என் கௌரவம். உங்கள் எழுத்து என் பொறாமை.
if TSUNAMI OCCURS IN AN OCEAN - OKAY WE CAN UNDERSTAND; BUT IF IT HAPPENS IN A STREAM - CAN WE BEAR IT? THIS IS WHAT TRANSPIRED IN MY MIND IMMEDIATELY AFTER READING THIS POST. Now onwards, I have to prepare my heart and mind before reading your posts.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅப்பாதுரை முதலில் என் பாராட்டுக்கள்.இந்தக் கதை(?) பலவிதமான உண்ர்ச்சிகளை எழுப்பிச் செல்கிறது. நல்லெண்ணங்கள் நம்பிக்கைகள் என்று பல தடங்களில் பிரவகிக்கிறது. ரங்கனின் பெற்றோரின் பாத்திரப் படைப்பு (?) வித்தியாசமாக இருப்பதே சிறப்பாய் இருக்கிறது. நிகழ்வுகள் எல்லாமே சாத்தியம்.காதலுக்கு கண்ணில்லை, தோஷமுமில்லை என்று சொல்லிப் போனவிதம் நெஞ்சை அள்ளுகிறது. இந்தக் கதை என் வலைத்தள முகப்பில் நான் எழுதி இருக்கும் வார்த்தைகளுக்கு பலம் சேர்க்கிறது. இந்தக் கதையில் சரியெது தவறெது என்று சொல்லாமல் விட்டதற்கு மீண்டும் பாராட்டுக்கள்.
//அப்பப்போ அவங்களை சுத்தி நாம நதியா வாழ்ந்துட்டுப் போறதுனால, வத்திப் போறப்ப கூட உள்ளுக்குள்ளே ஈரமா இருக்கு.. இல்லேன்னா எல்லாம் மண்ணுதாண்டா.. நானும் அவங்களுக்குக் கடமைப்பட்டிருக்கேன்.. நாம எல்லாருமே.. rangan made us.. each of us.. in some way. this is about him, not about us.." என்றான்.//
பதிலளிநீக்குமாபெரும் உண்மையை மிக சகஜமாய்ச் சொல்லிட்டீங்க. ஏற்கெனவே ரங்கனின் பெண்ணையும், அவள் திறமையையும் குறித்து எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன். இதைக் கதைனு சொல்ல முடியாது.
அற்புதம்! மனம் பல இடங்களில் நெகிழ்ந்து போயிற்று. அதுவும் கடைசியில் ரங்கனின் அம்மா நேன்ஸை ரங்கா என்று கூப்பிடுகையில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
art imitates life என்பதில் எனக்கு முழு நம்பிக்கை. ரெட்டைபாத் சாயங்களில் வந்த/வரும் அத்தனை சிறுகதைகளும் அந்த வகைக் கற்பனை நீட்சியே.
பதிலளிநீக்குநீ..ள..ம் பொறுத்துப் படித்ததற்கும் ரசித்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மிக நீண்ட சம்பவத்தைப் பக்கத்தில் இருந்து பார்த்தாச்சு.பெற்றோர் பெருமை. பிள்ளை பெருமை. நடுவில் வந்த நாதிரா அழகு.
பதிலளிநீக்குஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு அதன் நீட்சியை இன்னோரு கட்டுரையில்(?) காண்பிப்பது மஹா அதிசயம். உங்களது பொறுமையையும் கற்பனைக் கட்டையும் காண்பிக்கிறது..
நேன்ஸ்ங்கிற நாராயணன், நதிகள் சுற்றிய ரங்கன்,நதிக்கரையில் நிற்கும் மரமான ஈஸிசேர் அம்மா,உங்கள் வார்த்தைகள் பிரயோகம்,சம்பவம் சென்ற வேகம்
பெருமூச்சு விடவைக்கிறது.மனம் நிறைந்த நன்றிகள் துரை.
வாவ்! சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணீரே சொல்லி விட்டது. என்னமாய் எழுதுகிறீர்கள்!
பதிலளிநீக்குGreat story, as usual Appadurai. I like the way in which you were not judgmental. I thoroughly enjoyed reading it.
பதிலளிநீக்குஒருவித படபடப்போடு தான் படித்தேன். அழகான திரைப்படம் பார்த்த உணர்வு.
பதிலளிநீக்குரங்கதோஷம் படித்து முடித்ததும் மனம் முழுக்க ரங்ககோஷம்
ப்ரிய அப்பாதுரை! களனும் காட்சிப் படுத்தலும் துல்லியம்.. தேவையில்லை இத்தனை நீளம் என்று தோன்றும் அவசியமான கதை நீளம்.. படிமங்களாய் விரியும் கதை மாந்தர்கள். இன்னொரு வாசிப்புக்கு குறித்துக் கொள்கிறேன்..
பதிலளிநீக்குஅப்பதுறை சார்,
பதிலளிநீக்குரொம்ப நன்றி...
ஆவ்வுக்காக உங்க சாதகம் தருவீங்களா?
நன்றி,
வினொத்
நடேசன் பூங்காவில் பார்த்த அப்பாதுரையா?
பதிலளிநீக்குஎப்படியான ஒரு பரிமானம் நீங்கள்?
வியக்கவைகிறீர்கள். விஸ்வரூப தரிசனமாய்
விண்ணையும் மண்ணையும் தொட்டு நிற்கிறது
சமீபத்திய பதிவுகள். பிரமிப்புடன்.
கருத்துரையிட பக்குவமற்றவளாய் தங்கள் அநேக பதிவுகள் என்னை செயலிழக்க செய்தாலும்...
பதிலளிநீக்குதங்கள் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பேனும் வாய்க்கிறதே எனக்கு...!!