2013/03/31

எழுத்தின் தலை



முன்னுரை [+]

விபரீதம் [+]

என்னுரை []

    டித்து முடித்ததும் இதயப்பகுதியை ஈரத்துணியாகப் பிழிவது போலிருந்தால், சற்று முயற்சி செய்து நிமிர்ந்து பாருங்கள். உங்களுக்கு எதிரே நெஞ்சைப் பிசைந்து கொண்டிருக்கும் உருவம் நானாக இருக்கலாம்.

இது உண்மைக்கதை(?). சமூக அக்கறை தோய்ந்தப் பெருங்குற்ற வழக்குகளில் ஒன்று. சில இடம், பெயர், கால, குற்ற விவரங்களை மாற்றியிருக்கிறேன். சமூக அக்கறைப் பரிமாணங்களைப் பார்க்குமுன் (புலம்புமுன்) சில புள்ளிவிவரங்கள்.

இரண்டு சகோதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தது அமெரிக்க வரலாற்றில் இதுவே இரண்டாவது முறை. அடுத்துப் பிறந்த சகோதரர்களுக்கு மரண தண்டனை வழங்கியது உலகிலேயே முதல் தடவை என்கிறார்கள். வில்சன் சகோதரர்கள் தனித்தும் இணைந்தும் செய்த குற்றங்கள்: 17 கொலைகள், 1280க்கு மேற்பட்ட சில்லறைத் திருட்டுக்கள், 36 தீவைப்பு மற்றும் வன்முறைகள், 11 கொள்ளைகள், 285 பாலியல் மீறல்கள், 13 கற்பழிப்புகள், சுமார் 60000 கிலோ போதைப் பொருள் (!) வியாபாரம், 7 இடங்களில் விபசாரம், 500க்கு மேற்பட்ட கார் திருட்டுக்கள்.. பட்டியல் நீளுகிறது. எழுபதாண்டுச் சராசரி வாழ்நாள் அடிப்படையில் இவர்களின் குற்றப்பட்டியலை ஆய்ந்தவர்கள் சொன்னது: 'தினம் ஒரு கிலோ போதைப்பொருள் வியாபாரம், வாரம் ஒரு திருட்டு, மாதம் ஒரு பாலியல் குற்றம், வருடம் ஒரு கொலை அல்லது வன்முறை...' அதிர்ச்சியில் அயரவைக்கும் உழைப்பு! "சிந்திக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு விரைவானத் தொடர் குற்றவாளிகள்" என்றார் ஒரு குற்றவியல் நிபுணர்.

குற்றம் புரிவதில் இணையான மனப்பாங்குடன் செயல்பட்டச் சகோதரர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை வெவ்வேறு விதமாக அணுகினார்கள்.

ராஜர் எதற்கும் மன்னிப்பு கேட்கவில்லை. வருந்தவுமில்லை. தூக்கிலிடுமுன் ராஜரிடம் தேவச்செய்தி சொல்ல வந்த பாதிரியைக் கூட தலையால் முட்டிக் காயப்படுத்தினான் என்கிறார்கள். தேவனின் ராஜ்ஜியத்தில் இருப்பவர்களையும் ஒரு கை பார்ப்பதாகச் சொன்னான் என்கிறார்கள்.

ஆல்பர்ட் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிர ஆத்திகனாக மாறியுள்ளான். சகோதரி பானியை அடிக்கடி சந்திக்கிறான். குற்றங்களுக்கு மன்னிப்புக் கோரி, சிறையில் தினம் முகமறியா நபர்களுக்குக் கடிதங்கள் எழுதுகிறானாம்.

    இரு சகோதரர்களின் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மனுக்கள் தாக்குதல் செய்யப்பட்டன, சமூக அமைப்புகள் பிரசாரங்கள் செய்தன, என்றாலும் ஆல்பர்டின் வழக்கின் போது அதிகச் சமூக அக்கறையும் ஈடுபாடும் இருந்தது. சமூக அமைப்புகள் சகோதரர் வாழ்க்கையை அலசத் தொடங்கின. அக்கா பானி ஒரு உயர்ந்த சமூக நிலையில் இருக்க, சகோதரர்கள் இப்படிக் கொடியவர்களானதன் சமூகப் பொருளாதார அரசியல் சட்டக் காரணிகளை ஆராய்ந்தார்கள். ஆல்பர்டின் தாய் தந்தை மூதாதையர் பற்றிப் பேசினார்கள். ஆல்பர்டின் விதி, மூதாதையரின் குற்றம் கலந்த நாடோடி வாழ்க்கையினால் நியமிக்கப்பட்டதா? பர்ட் வில்சன் அத்தனை முயன்றும் பிள்ளைகள் இருவரும் குற்றம் தழுவிய நாடோடிகளாகத் தானே வாழ முடிந்தது? சமூக வளர்ச்சியினால் அந்த விதியை மாற்ற முடியவில்லையா? இனி ஆல்பர்டுகள் உருவாகாதிருக்க என்ன செய்ய வேண்டும்?' என்று விவாதித்தார்கள். ஆல்பர்டுடன் பேசி குற்ற உணர்வு, தூண்டுதல், வன்முறை எண்ணங்கள் பற்றி அறிந்தார்கள். "மரியாவின் மீது இவர்கள் காட்டிய மிருக வன்மத்துக்கு என்ன காரணம்? இதற்குச் சமூகம் எந்த விதத்தில் பொறுப்பேற்க வேண்டும்?" என்று ஒரு சமூக ஆர்வலர் தீர்ப்புக்கு எதிரான வழக்குகளில் பேசினார்.

"இத்தனை வயதுக்கு மேல் இவரைத் தூக்கிலிட்டு என்ன பயன்? தண்டனை வழங்கினால் இவரைச் சமூகம் விரைவில் மறந்து விடும். அதற்குப் பதிலாக இவரை இளைஞர் சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் சென்று பேசச் செய்யலாம். சமூக நல அமைப்புகளுடன் இணைந்து வெறிக்குற்றங்கள் தடுப்புக்கான பிரசாரங்கள் செய்யலாம்" என்று ஒரு கூட்டம் ஆல்பர்ட் வழக்கில் விடாமல் பிரசாரம் செய்து வருகிறது. "சமீபமாகத் தோன்றியிருக்கும் ஆத்திகப் பழக்கம் இவரைக் கடவுள் மன்னித்துவிட்டதன் ஆதாரம். கடவுள் மன்னித்த ஒருவனை மனிதர்கள் தண்டிக்கலாமா?" என்று ஒரு மதம் சார்ந்த சமூக நலக்குழு வாதாடி வருகிறது.

விக்டர் பற்றிய மர்மமும் வம்பும் இந்த வழக்கின் உபரி சுவாரசியங்கள். சமூக, மத மற்றும் பல்துறை விற்பன்னர் ஆர்வத்தைத் தூண்டியதும், வக்கீல்களையும் சலுகை ஆய்வாளர்களையும் நியமிக்க பானிக்குப் பண உதவி மிகச் செய்ததும், விக்டர் என்கிறார்கள். இன்று அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குடைய, பண்புக்கும் கண்ணியத்துக்கும் அடையாளமாக விளங்கும், ஒரு வணிகரை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் தான் விக்டர் என்கிறார்கள். சிறு வயதிலேயே ஊர் பெயர் எல்லாம் மாற்றிக் கொண்ட விக்டர் யாரென்று பானிக்கு மட்டுமே தெரியும்.

திருமணமே செய்து கொள்ளாத பானிக்கு எண்பது வயதுக்கு மேல் ஆகிறது. தன் சகோதரர்களின் வழக்கைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் நிறையப் பேசுகிறார். சகோதரர்களின் நலனுக்காகவும் பாவ மன்னிப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். தன் சொத்துக்கள் அத்தனையும் ஆல்பர்டின் பேரனுக்கு எழுதி வைத்திருக்கிறார்.

பர்ட் வில்சனின் கனவு இனியேனும் பலிக்குமா என்றக் கேள்வி இந்த வழக்கில் அடிக்கடி கேட்கப்பட்டது. பானியும் 'முகமில்லா' விக்டரும் தான் வில்சனின் கனவு என்கிறார்கள் சிலர். எனினும், பர்ட் வில்சனின் பரம்பரை ஆல்பர்டின் சந்ததி வழியாக மட்டுமே தழைத்திருப்பதை சமூக ஆய்வாளர்கள் மிகுந்த வியப்புடனும் எதிர்பார்ப்புடனும் கவனிக்கிறார்கள்.

கலர் சட்டைக்காக எழுதியது. சுழிக்குப் பொருந்துவதால் இங்கே பதிவிட்டேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.



2013/03/20

பேசும் படம்



     ரண்டு படங்களுக்கும் என்ன ஒற்றுமை? இரண்டுமே கைக்கடிகார விளம்பரங்கள். ரைட்.


இந்தியாவுக்கு அடுத்தபடி பெண்களை அதிகமாக மதிப்பது இத்தலியாக இருக்க வேண்டும்.

இதற்குத்தான் நான் கைக்கடிகாரமே அணிவதில்லை. கைக்கடிகாரத்தை காட்டுகிறேன் பேர்வழி என்று ஏதாவது செய்யப் போய்..


     ஜான் கெரி வாய் திறந்தால் முத்து உதிரும். அன்றைக்கும். இன்றைக்குச் சற்று அதிகமாகவே உதிர்கிறது.


ஜான் கெரி தன் சொந்த உரிமையைப் பற்றிச் சொல்கிறார், நம்புங்கள். ஒபாமாவுடன் சேர்வதற்கு முன்பிருந்தே இப்படித்தான்.

என்னே அமெரிக்க நாட்டுக்கு வந்தச் சோதனை!


     தான் பெறும் ஒவ்வொரு ஆண் மகவுக்கும் ஒரு தாயின் ஆயுள் 1-6 வருடங்கள் குறைகிறதாம்.


எனில், பெண் குழந்தைகளை நாம் ஏன் வெறுக்கிறோம்? பெரிய சூழ்ச்சியாக இருக்கும் போலிருக்கிறதே?

அதான் இந்தியாவில் பெண்களை ஒரேயடியாக மதித்துத் தள்ளுகிறோமோ?


     குவைத்தின் ஒரு தீவில் (பெயர் மறந்து போனது, பலேக்கா?) பிடித்த படம்.


சிலையோ என்று நினைத்தேன். ஸ்மைல் ப்லீஸ் என்று சொல்ல வேண்டியிருக்கவில்லை. கட்டிப் போட்டிருக்கிறார்கள். வாயை.

ஒட்டகத்தின் கஷ்டம் ஒட்டகத்துக்கு மட்டுமே தெரியும்.


     ரு ஒதுக்குப்புறமான அயல்நாட்டுத் தீவின் (அதே குவைத் அதே தீவு) சாலையில் இந்தக் கையெழுத்து.


சாலைத் தொழிலாளரின் தமிழ்ப்பற்றா இல்லை தமிழர் மீதான கடுப்பா? எதுவாக இருந்தாலும் ஒரு கணம் மனம் இனித்துப் போனது.

ஒருவேளை தொழிலாளரின் காதலி பெயராக இருக்ககூடும். கல்வெட்டுக் கவிதை, அப்படியெனில்.


     குவைத்தில் மஞ்சுபாஷிணியைச் சந்தித்துப் பேசினேன். ஓகே, சந்தித்தேன். "என்ன அப்பாதுரை.. நான் பேசிட்டே இருக்கேன்.. நீங்க எதுவுமே பேசமாட்றீங்க? அடுத்த ட்ரிப்புல நீங்க தான் பேசணும், நான் கேட்டுகிட்டே இருப்பேன்..". அதான் மபா!

2013/03/12

பரணறையில் நன்னாரி மணம்

2

முன் கதை


    சாப்பிடுகையில், "கண்மணி.. ஏன் தட்டுல அப்படியே வச்சிருக்கீங்க? என்ன அது மூக்கு நுனியில? அசப்புல கோபம் மாதிரியே இருக்கு?" சீண்டினார் ராஜி. "..பின்னே நான் உங்களை எத்தனை தடவை கூப்பிடட்டும்? பிறந்தநாள் கொண்டாட்டத்துலந்து ஒவ்வொண்ணா நான் தானே செய்யணும்? பசங்க ரெண்டு நாள்ல வந்துருவாங்க.. அதுக்குள்ளே எல்லாம் முடிக்கணும்னு நான் வேகமா இருந்தா.. நீங்க உதவி செய்ய வேண்டாம்.. கூப்பிட்ட குரலுக்கு ஏன்னு கேக்கலாமுல்ல?"

பிச்சைமணி யோசித்தபடி, மெள்ளக் கொறிக்கத் தொடங்கினார்.

"கோவமா இருந்தா ஒரு வார்த்தை சொல்லிடுங்களேன் மணி.. சாப்பிடுறப்ப முகத்தை இப்படியா வச்சுக்குவாங்க? கொஞ்சம் சிரிக்கக் கூடாதா?" சிணுங்கினார். பிறகு நிதானமாக, "பரண் ரூம் கதவைத் திறந்து உள்ளே வரலாம்னு இருந்தேன். நீங்க பதிலே சொல்லாததால எனக்குள்ளே ஒரு நடுக்கம்.. ஒரு வேளை... பரண் ரூம்ல உங்களுக்கு.."

"அதான் வந்துட்டனே, ஸ்டாம்ப் ஒட்டாத தபாலாட்டம்?"

"என்ன இப்படி சொல்றீங்க? என் தவிப்பு எனக்குத்தானே தெரியும்? எண்பது வயசாகுது.."

"எண்பது.. நூறு.. இதெல்லாம் வெறும் எண்ணிக்கைனு என்னிக்கோ புரிஞ்சு போச்சு. அதைப் புடிச்சுக் கொண்டாடிக்கிட்டு.. இதை சாக்கு வச்சு உனக்கு பொழுது போகுது.. நாலு பேரை ஆள ஒரு சான்சு... பத்து நாள் பிள்ளைங்களோட சந்தோஷம்... அனுபவி.. வேணாங்கலே... என் உணர்வெல்லாம் அதுல இல்லடி. கொஞ்ச நாளா பரண் ரூம் பக்கம் போனாலே உனக்குப் பிடிக்கலே ராஜி. நான் கொஞ்சம் என்னை மறக்கற இடம்.. அதை அழிக்கிறதா சொல்றியே? அந்தப் பரண் ரூமைப் பத்தி எதுவுமே தெரியாம.. அதுவும் என் ராஜி.. நீ அப்படிப் பேசலாமா?"

"உங்களை வருத்தப்பட வச்ச என் மனசு சேறாத்தான் இருக்கணும்... அப்படி அங்கே என்ன இருக்கு? எல்லாம் பழைய தட்டுமுட்டு குப்பை கூளம்.. அதுல என்னத்தைக் கண்டீங்களோ?"

"யோசிச்சு பாரு ராஜி.. பரண் ரூம் ஒரு காலச்சுரங்கம். தோண்டித் தோண்டி ஒவ்வொரு வருஷமா போகலாம். பரண் ரூம் ஒரு காலவெளி. அங்கருந்து இங்கே, இங்கருந்து அங்கேனு போகலாம். மனம் போல் மார்க்கம். அங்கே இருக்குற ஒவ்வொரு பொருளும் ஒருவகையில் நாம வாழ்ந்ததற்கான நினைவு.. நினைவுச் சின்னம் இல்லையா? அங்க இருக்குற ஒவ்வொரு சூட் கேஸ், ட்ரங்க் பெட்டி, அலமாரி, கடிகாரம், தொட்டில், பஞ்சவர்ணக் குடை, போட்டோ ஆல்பம், சைக்கிள், தூளிக்கழி, காஞ்சுப் போன மாலை, மார்கோனி ரேடியோ, வெண்கல டம்ளர், வெள்ளிப் பால்புகட்டி, எங்கம்மா காலத்து அம்மி, உங்க பாட்டி தந்த குமிட்டி அடுப்பு, துருத்தி, நம்ம கல்யாணப் பத்திரிகை, கல்யாணத்துக்கு நீ கட்டின ஒட்டியாணம், கூரைப்படவை.. உன்னோட கர்ப்ப எக்ஸ்ரே படங்கள்.. நாம் ஜோடியா மொத மொத பார்த்த சினிமா டிகெட்.. ஒரு அம்மாவைப் பாத்து ஐயா அடிச்சாராம் கண்ணு.. அவ சிரிச்சாளாம் பொண்ணு.. ஞாபகம் இருக்கா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு காலக் கட்டத்துக்கான நிறுத்தம் இல்லியா? ராஜி.. பரண் ரூம் நமக்கான ஒரு தனிப்பட்ட காலவண்டி. நாம தான் டிரைவர். நாம தான் பேசஞ்சர். ஒவ்வொரு ஸ்டாப்பா ஏறி இறங்கி.. அத்தனை சந்தோஷங்களையும் திரும்பத் திரும்ப அனுபவிக்கலாம்.."

"எத்தனை கஷ்டப்பட்டிருக்கோம்! எவ்ளோ அழுதிருக்கோம்! எத்தனை சீக்கு.. எத்தனை நஷ்டம்.. எத்தனை துயரம்.. எத்தனை ஏமாற்றம்.. அதெல்லாமும் கூட வருமில்லையா? என்னவோ தினம் தினம் ஒரே சந்தோஷக் கூத்தா இருந்தாப்புல பேசறீங்க.."

"ஆனா.."

"என்ன ஆனா சோனா? உங்க புத்தி இப்படி போயிட்டிருக்கேனு பயமா இருக்கு.. சந்தோஷங்களை மட்டும் ஞாபகம் வச்சிருக்கீங்க.. நீங்க சொல்லுற காலவண்டி உண்மைனே வச்சுக்குவோம்.. அங்கே போனா எனக்கு அதே நினைவுகள் வரும்னு எப்படி சொல்ல முடியும்? அட, உங்களுக்கே நாளைக்கு வருத்த நினைவுகள் வராதுனு என்ன நிச்சயம்? இந்த வயசுல வம்பெல்லாம் வாங்கணுமா? இத பாருங்க மணி.. நாம இப்ப இருக்குற நிலமை.. செலபன் டேப்புல ஒட்டின, உடைஞ்ச துண்டுகளால ஆன கண்ணாடி மாதிரி.. முகம் தெரியுது.. கனமாகவும் இருக்கு.. இருந்தாலும் மடிஞ்சு போற.. சுருட்டி வைக்கிற.. உதிர்ந்து போற.. கண்ணாடிப் போர்வை. அதை ஞாபகம் வச்சுக்க வேணாமா? உங்களை நினைச்சா எனக்கு பயமா இருக்கு மணி.. நீங்க பரண் ரூம்லயே இருக்குறது எனக்குப் பிடிக்கலே.."

"உனக்குப் பிடிக்கலேனா.. நான் இதை மெள்ள.. நிறுத்திடறேன் ராஜி" சொல்லும் பொழுது பிச்சைமணியின் குரல் நெகிழ்ந்தது.

"என்னைப் பொறுத்தவரைக்கும் நினைவுகள் ஒரு பெரிய சுமை கண்மணி.. தானா இறங்குன குரங்கை தலையில தூக்கி வச்சுக்கிட்டா ஆபத்தில்லையா? நமக்குக் கண்ணு ரெண்டும் முதுகுல இல்லே. அவ்வளவுதான் சொல்வேன்" என்ற ராஜி, பிச்சைமணியின் இடதுகையை நட்புடன் பிடித்தார். "பரண் ரூமுக்குப் போக வேண்டாம்னு சொல்லலிங்க.. அங்கயே மணிக்கணக்கா இருக்காதிங்கனு சொல்றேன்.. ரெண்டு தடவைக்கு மேலே கூப்பிட வைக்காதீங்கனு சொல்றேன்.. என் செல்லம் இல்லையா.. சொன்னா கேளுங்களேன்?"

"இன்றே கடைசி!" கீற்றுக் கொட்டகை சினிமா போஸ்டர் பாணியில் சிரித்தபடி சொன்னார் பிச்சைமணி. "நீ எங்கூட வாயேன்.. வந்து பாரேன் ராஜி?"

"என்னை விட்டுருங்க.. நீங்க வேணும்னா போங்க.. அங்கே காலடி வைக்கவே எனக்குப் பயமா இருக்கு.."

இருபத்திரண்டு வயதில் டெபுடேசனில் மோகா போன போது, "நீங்க காட்டுக்கே போனாலும் நான் கையைப் பிடிச்சுட்டு வருவேன்.. உங்க கூடத்தான் இருப்பேன். என்னைத் தனியா விட்டுப் போகாதீங்க" என்று ராஜி அடம்பிடித்துக் கெஞ்சி உடன் வந்தது பிச்சைமணியின் மனதில் படம் போல் ஓடியது. சாப்பிட்டு எழுந்தவர், ராஜியைப் பார்த்த ஏக்கப் பார்வையில் ஆழமான வலி இருந்தது.

    இரவுக்கான எளிய சமையலை மேசை மேல் வைத்தபடி கணவனை அழைத்தார் ராஜி. பிச்சைமணி பரண் ரூமுக்குள் போய் மூன்று மணி நேரத்துக்கு மேலாகியிருந்தது. "மணீ" என்று பல முறை கத்திக் கதவைத் தட்டிய பிறகு வெளியே வந்த பிச்சைமணியின் நடையில் துள்ளலும், முகத்தில் களையும் இருந்தது. "இப்ப எங்கிருந்து வரேன், தெரியுமாடி ராஜிக்கண்ணு?"

கணவரின் செயல் எரிச்சலூட்டினாலும் அவருடைய சந்தோஷத்தைக் குலைக்க விரும்பாமல், "மறுபடியும் சீதம்மாள் கடையா? ஞானப்பழ ஜூஸ் எதாவது குடுத்தாளா இந்த தடவை? அதான் வாசனையே காணோம்.."

"ஜூசில்லைடி, என் ப்ரிய லூசு. கச்சேரி! சன்னதி தெருவுல மதுரை மணி தர்மக் கச்சேரி. இசை மழை. நீ உங்க ஊர்க்காரன்னு சொல்லி அலட்டுவியே, அந்தப் பையன் ஜெயராமன்.. மொத மொதலா கானகலாதரருக்கு பக்க வாத்தியம்.. சந்தோஷமா கேட்டு வந்தேன்.. இருநூறு பேராவது இருக்கும்.. கூட்டமான கூட்டம்.. நீயும் வந்திருக்கலாம்ல?"

"மதுரை மணி கச்சேரியா? என்ன உய் உய் பாட்டு பாடினாரு?.." என்ற ராஜியின் கேலி புரியாமல் பிச்சைமணி உற்சாகமாகத் தொடர்ந்தார். "..தர ல ல ல.. பின்னிட்டார் மனுஷன், இல்லையில்லை தேவன். உனக்குப் பிடிச்ச ஸ்ரீரங்கபுரவிகார பாடினாருடி. கேளு.. ராமபக்தி, மனவியால, சரஸ சாமதான, மாஜானகினு சங்கீத அருவியா கொட்டினவரு திடீர்னு ஒரு புது பாட்டு பாடினாரு.. அடடா, நீ பக்கத்துல இல்லையேடி? கா வா வா கந்தா வா வானு முருகர் மேலே ஒரு தமிழ்ப்பாட்டு.. பிச்சு உதறிட்டாரு. அப்புறம் உங்க.. அந்த ஜெயராமனுக்குத் தனியா அஞ்சு நிமிஷம் கொடுத்தார்.. என்னமா வாசிக்கறான்! எல்லாருமே சைலன்ட்! அப்படியொரு கட்டு.. ஆகா! என் கண்ணுல தண்ணி வந்துடுச்சுடி.." என்ற பிச்சைமணியின் அசல் கண்ணீரைக் கண்டதும் ராஜிக்குத் தன் தவறு புரிந்தது. பாட்டு வரிசையெல்லாம் சொல்கிறாரே?

"என்ன சொல்றீங்க நீங்க? கச்சேரியா? அது நடந்து அறுபது வருஷமாவது இருக்காதா? நம்ம கல்யாணத்துக்கு முன்னால இல்லையா?"

"ஆமாடி.. உன்னைப் பெண் பார்த்துட்டு அப்படியே சொக்க்..க்கிப் போயிருந்தேனா? கல்யாணத்தை இப்பவே வச்சுக்கலாம்னு சொன்னா, உங்கப்பன் 'அடுத்த தை'னு குதியா குதிச்சு ஒரு வருசம் இழுத்தடிச்சா? உன்னைப் பாக்குற கிக் கிடைக்காதுனாலும் இசைலயும் போதை இருக்குல்ல? அதான் உன்னைப் பெண் பார்த்தன்னிக்கு.. போனா.. அப்பாவோட தோஸ்தாச்சே.. என்னைப் பாத்துட்டு மேடைக்கு வரச் சொல்லிட்டாரு! அங்கயே உக்காந்து.." என்றுத் தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்த பிச்சைமணியை அதிர்ச்சியுடன் பார்த்தார் ராஜி. மூளை பாதிக்கப்பட்டிருக்கும் என்ற கவலை வந்தாலும் இத்தனை விவரங்களை நினைவில் வைத்திருக்கும் ஒழுங்கு ஆச்சரியமாகவும் இருந்தது அவருக்கு. கணவரின் உற்சாகமும் வேகமும் புதிராக இருந்தது. இவருக்கா எண்பதாகப் போகிறது?!

"இதைப் பாத்தியா?" திடீரென்று பிச்சைமணி ஒரு பிலேஸ்டிக் வளையத்தை ராஜியின் கண்ணெதிரே காட்டிச் சிரித்தார்.

வளையத்தை உயரப் பிடித்தபடி "..ரிமரிமபத இதவுமாட.." என்று ஸ்வரம் பாடித் தன்னைச் சுற்றி வந்தவரைப் பார்த்து ராஜி அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார். "எங்கருந்து பிடிச்சீங்க?"

    பிச்சைமணியின் அப்பா காலத்து சைக்கிள். மரச்சக்கரத்தின் மேல் டன்லப் டயர் பொருத்திய ரேலி 1930ம் வருட மாடல். மாகாண பிரிடிஷ் காரியதரிசி பிச்சைமணியின் அப்பாவுக்குப் பரிசாகத் தந்து, பிறகு பத்து வயதில் பிச்சைமணிக்குக் கிடைத்தது. இரும்புச் சக்கர வண்டிகள் வந்ததும் அதை பரணுக்கு மாற்றிவிட்டாலும், அடிக்கடி துடைத்து வீட்டில் அழகு பார்ப்பார்களே தவிர யாருமே ஓட்டவில்லை. கல்யாணமான புதிதில் மரச்சக்கர சைக்கிளில் சவாரி போக ஆசைபட்டதும் கொஞ்சமும் தயங்காமல், "உனக்கில்லாததா ராஜிச்செல்லம்.. வா" என்று உடனே கிளம்பிவிட்டார் பிச்சைமணி. தெருக்கோடி சீதம்மாள் கடைக்கு முதல் சவாரி.

இளமையை அறிவு என்றாவது வென்றதுண்டா? 

தெருக்கோடி வரை போயிருப்பார்கள். சைக்கிளில் செயினைச் சுற்றி மூடியில்லாததால், ராஜியின் புடவை உள்பாவாடையோடு சேர்த்துச் சிக்கிக் கொண்டது.. இப்படி அப்படி இழுக்க இழுக்க இன்னும் மோசமானது. சிக்கிய இடத்தைச் சுற்றி மெள்ளக் கிழித்தார் பிச்சைமணி. செயினிலிருந்து துணித்துண்டுகளை உருவி எடுத்தார். விவரமறிந்த சீதம்மாள் ஓடிவந்து ராஜியை அழைத்துச் சென்று கடைக்குள் உட்கார வைத்தாள். 'புதுப்பொண்ணு வந்திருக்கே.. எவன் கண்ணு பட்டுச்சோ' என்று உடனடியாக ஒரு எலுமிச்சையைச் சுற்றிக் கசக்கி எறிந்தாள். இருவருக்கும் நன்னாரி கலந்த சர்பத் கொடுத்தாள். "ரொம்ப கிழிஞ்சிருச்சா கண்ணு.. என்னோட புடவை கட்டிக்கிறியா?" என்ற சீதம்மாவிடம் மறுத்து, "திரும்பலாம்" என்றார் ராஜி. "இருங்கய்யா.." என்ற சீதம்மாள் உள்ளே சென்று ஒரு ப்லேஸ்டிக் வளையத்தை எடுத்து வந்தாள். "கோலி சோடா கட்டுற வளையம். இப்படி இழுத்துப் போட்டா நிக்கும்.. திரும்பப் போவுறப்ப கொலுசைக் கொஞ்சம் உயத்திப் புடவையோட சேர்த்து இந்த வளையத்தைக் கட்டிக்க.. மறுபடி கிழியாம இருக்கும்.. கொலுசும் மாட்டாது.. வச்சுக்க.." என்று ராஜியின் புடவையையும் கொலுசையும் சேர்த்துக் கட்டினாள். "மொத மொத மகாலட்சுமி என் கடைக்கு வந்திருக்க தாயி.. உங்கிட்டே காசு வாங்கமாட்டேன்" என்று சோடா வளையம் எதற்கும் காசு வாங்கவில்லை சீதம்மா.

பிச்சைமணிக்கு உள்ளூர கிறக்கம். "முக்கால் பேன்ட் மஹாலட்சுமி.." என்று வழியெங்கும் கிண்டல் செய்தார். வீட்டெதிரே வருகையில் சொல்லி வைத்தாற்போல் ராஜி உட்கார்ந்த மரச்சக்கரம் விரிந்து உடைந்தது. சட்டென்று குதித்த ராஜி உள்ளே ஓடிவிட்டார். அழுகையாக வந்தது. தன் சிக்கலை விட மாமனாரின் 'பொக்கிஷ' சைக்கிள் உருக்குலையத் தன் ஆசை காரணமாகிவிட்டதே என்று பயம். பழைய சைக்கிளில் கூட்டிப்போனதற்காக எல்லாரும் பிச்சைமணியைத் திட்டினார்களே தவிர ராஜியை எதுவுமே சொல்லவில்லை. உடைந்த வண்டியை எப்படியோ ஆணி அடித்து ஒழுங்கு செய்து பரணில் போட்டது தான், எடுக்கவே இல்லை. புடவை மாற்றும் பொழுது எங்கேயோ தூக்கிப் போட்டதோடு சரி, வளையம் என்ன ஆனது என்று கூடத் தெரியாது, 

இத்தனை வருடங்கள் கழித்து ராசியில்லாத நாளை நினைவுபடுத்தும் வளையம்! ராஜியின் நிழலரக்கியை எழுப்பி விட்டது. "எங்கருந்து பிடிச்சீங்க?" என்றார் மறுபடி எரிச்சலுடன்.

"பரண் ரூம்ல ஒரு அதிசயம்னு சொன்னேனே? அந்த மரச்சக்கர சைக்கிள் - வெறும் சைக்கிளில்லே ராஜி, காலவண்டி! காலவண்டி, ராஜி! மேஜிக்! ஏறி உக்காந்தா எங்க வேணும்னாலும் காலப்பயணம் போகலாம்.. அதிசயம்னா அதிசயம்! ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் எனக்கே.." பிச்சைமணி முடிக்குமுன் வளையத்தைப் பிடுங்கினார் ராஜி. பரண் ரூம் கதவைத் திறந்து உள்ளே எறிந்தார். 

"இதோ பாருங்க மணீ... இனிமே என்னைக் கேட்காம இந்த ரூமுக்குள்ள போனீங்கன்னா, இழுத்துப் பூட்டி சாவியை எறிஞ்சுருவேன். போதும் உங்க கற்பனையும் காலவண்டியும்.." என்று எரிந்தார்.  "உங்களுக்குப் பசிக்குமேனு ஒரு மணி நேரமா கூப்பாடு போடுறேன்.. காலவண்டியா விட்டுட்டிருக்கீங்க? எண்பது வயசானா எல்லாம் இப்படிக் கழண்டுருமா? ஒரு பொறுப்பு வேணாம்? ஏற்கனவே ஒடஞ்ச வண்டி, உங்களைச் சொல்லலே.. சைக்கிளைச் சொன்னேன்.. ஒரு விவஸ்தை வேணாம்? அதுவும் அந்த வளையத்தை எடுத்துட்டு வந்து..சே!" ராஜிக்கு அழுகை வந்தது. "என் புருஷன்.. என் குழந்தை.. இன்னும் சாப்பிடலையேனு நான் கிடந்து.. சே! சாப்பிட்டா சாப்பிடுங்க.. என்னவோ பண்ணுங்க.." என்று அழுகை பொங்க அங்கிருந்து அகன்றார். "ராஜிமா.. ராஜிக்கண்ணு" என்று பின் தொடர்ந்தக் கணவரைப் பொருட்படுத்தாமல், படுக்கையறைக்குள் சென்றார்.

    நடந்தவற்றை மறக்க முடியாத பிச்சைமணி சில மணி நேரங்கள் பொறுத்துப் படுக்கையுள் நுழைந்த போது, ராஜி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஓசையின்றி அருகே படுத்தார். உயிரற்ற தலையணை போல் உணர்ந்தார். ராஜியைப் புண்படுத்தியதை எண்ணி அவர் கண்ணீர் நிற்கவேயில்லை. 'நான் சொல்வதை ஏன் நம்ப மறுக்கிறாள் ராஜி? இத்தனை நாள் என் எண்ணங்களை, நான் தொடங்க அவள் முடித்தாளே.. இப்போது என்ன ஆயிற்று? ராஜி.. ராஜி.. என் ராஜி. என்னைப் புரிஞ்சுக்க முடியலியா உன்னால? இது என்ன வாழ்க்கை ராஜி.. புரிஞ்சுக்க விரும்பாத ஒருத்தரோட வாழுறது ருசிக்காக சாப்பிடாம பசிக்காக சாப்பிடறது போல இல்லையா? ராஜி.. ராஜி.. எனக்கு என்ன ஆச்சு? ஏன் உன்னை கலங்கடிக்கிறேன்..?' ஏதோ சிந்தனையில் புரண்ட போது ராஜியை நெட்டி அவரறியாது எழுப்பிவிட்டார்.

"என்னங்க.." என்றார் அரைத்தூக்கத்தில் ராஜி.

"சாரி ராஜி.. உன்னைப் புண்படுத்திட்டேன்.." பிச்சைமணியின் குரல் கரகரத்தது.

"போகட்டும்.. சாப்டீங்களா?" 

பிச்சைமணிக்குச் சிரிக்கத் தோன்றியது. "தூக்கத்துலயும் உன் கவலை உனக்கு.." என்றார்.

திடீரென்று எல்லாம் தெளிவானது. அமைதியாக ராஜியின் காதுகளில் "ராஜிக்கண்ணு.. குட் பை" என்றார்.

ராஜி அரைத்தூக்கத்தில் "சரி கண்ணா, குட் நைட்" என்றபடி கைகளை நீட்டினார். அவர் விரல்களைப் பிடித்தபடி படுத்திருந்த பிச்சைமணி உறங்க முயன்றார்.

    திடுக்கிட்டு விழித்தார் ராஜி. காலை ஏழாகியிருந்தது. இத்தனை நேரம் தூங்கியிருக்கிறேனா? அருகில் பார்த்தார். பிச்சைமணியைக் காணோம். காபி டிபன் செய்யணுமே? பரபரப்போடு எழுந்தார். கணவரைத் தேடினார். "கண்மணி.. காபி சாப்பிட்டீங்களா? இன்னொரு வாய்.." என்று அறைகளை நோட்டமிட்டார். பரண் ரூம் கதவு திறந்திருந்ததைக் கவனித்தார்.

கோபத்துடன் "மணீ" என்றபடி கதவைத் திறந்து உள்ளே அடி வைத்தார். அமைதியாக இருந்தது. கட்டிய புதிதில் பரண் ரூமுள் ஒன்றிரண்டு முறை போனதோடு சரி. "மணீ..?" மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. தென்பட்ட ஜன்னல்கள் அனைத்தும் கர்டன் கலையாமல் அடைத்திருந்தன. அங்கங்கே பெட்டிகள் திறந்திருந்தன. தரையில் துணிகள் கிடந்தன. கணவருக்குக் கொடுத்த தலைதீபாவளி டெரிலின் சட்டை! களையிழந்து கிடந்த சட்டையைக் கடந்து சென்றார். அங்கங்கே சில போட்டோ ஆல்பங்கள் திறந்து கிடந்தன. மதுரை மணி அய்யருடன் எடுத்துக் கொண்ட போட்டோ.  இன்னொரு ஆல்பம் முழுக்கப் பழுப்பேறிய குடும்ப, கல்யாணப் படங்கள். ஒதுக்கி நடந்தாள். 'எங்கே இவர்? ஏதாவது பெட்டிக்குள் உட்கார்ந்திருக்காரா?' "மணீ.." காலடியில் தட்டுப்பட்ட ஒரு நோட்புக் முழுக்க ஸ்ரீராஜிஜெயம் என்று எழுதியிருந்தது. லேசாகத் தொண்டையடைத்தது. "கண்மணீ.." திடீரென்று சில்லிட்டது. 'என்ன இப்படிக் குளிருதே?' கராஜ் மேலாக இருந்த ஜன்னல். திறந்திருந்த ஜன்னலை மூடிய திரை படபடத்தது. 'மணி.. மணி..' மனம் படபடக்க விரைந்தார். திரையை விலக்கிப் பார்த்தார். கம்பியற்ற ஜன்னலின் வலைச்சட்டம் கிழிந்திருந்தது. கீழிருந்து பத்துப் பனிரெண்டடி உயரம் இருக்கும். "மணி..". கராஜை ஒட்டிய வேப்பமரத்தின் வலது புறத்தில் மரச்சக்கர ரேலி சைக்கிள் நொறுங்கிக் கிடந்ததைப் பார்த்தார்.

உள்ளம் நொறுங்கிச் சுவற்றில் சரிந்தார் ராஜி. "மணி.. மணி. என்னரசே.. எங்க போனீங்க என் கண்ணே? என்னை விட்டு ஏன் போனீங்க? நீங்க சொல்லி சொல்லிப் பார்த்து நான் கேட்கலைனு கோபமா? நான் உங்களைப் புரிஞ்சுக்கலைனு ஓடிட்டிங்களே..கண்மணி.. கண்மணி.." உட்கார்ந்தபடி சுவற்றில் முட்டி மோதி அழுதார். ".. எங்க இருந்தாலும் வந்துருங்க.. என் கண்ணில்லையா.. செல்லமில்லையா.. ப்லீஸ்.. வந்துருங்க.. இனிமே பரண் ரூம்லயே இருங்க. நானும் காலவண்டில வரேன். சீதம்மா கடையானாலும் சன்னதித் தெருவானாலும் கூட வரேன். நீங்க மட்டும் தான் எனக்கு வேணும் கண்மணி.. எங்கே போனீங்க.. நீங்க கூப்பிட்டப்ப வராதது என் தப்பு தான்.. அதுக்காக எல்லாத்தையும் முறிச்சுக்கிட்டு விட்டுப் போக எப்படி மனம் வந்தது கண்மணி..?"

ராஜியின் குமுறல்கள் அவருக்கே கேட்கவில்லை. அழும் சக்தியிழந்து அழுது கொண்டிருந்தார். புலம்பும் சக்தியின்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். மனதின் வலிக்குக் கண்களாலும் உடலாலும் ஈடு கொடுக்க முடியவில்லை. சோகத்தின் கொடுமை கண்ணீரைத் தாண்டி வாட்டியது. முகமும் உதடுகளும் துடிக்க, கை கால் நடுங்க, கண்ணீர் வற்றி அழுதார். "..என் தலைவன்.. என் புருஷன்.. என் பிள்ளை.. என் தொண்டன்.. என் கண்மணி.. உங்க எண்ணத்தையும் செயலையும் விருப்பத்தையும் ஏக்கத்தையும் புரிஞ்சுக்காம இருந்துட்டனே.. இனிமேல் நான் என்ன செய்வேன்? பசங்க வந்தா என்ன சொல்வேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே.. கண்மணி.. கண்மணி.. என்னரசே.." கைகளால் முகத்தை மூடி அழுதார்.

ராஜியின் அழுகை திடீரென்று நின்றது. கைகளில்.. கைகளில்.. இல்லை, காற்றில்.. அது என்ன வாடை? மறுபடி முகர்ந்தார். வாசனை. நன்னாரி வாசனை. எங்கிருந்து வருகிறது? எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தார். "மணி..?" அறையெங்கும் தேடினார். மறுபடி ஜன்னல் வெளியே பார்த்தார்.

நொறுங்கிய சைக்கிள் அதே இடத்தில் அசையாமல் கிடந்தது. 



குறிப்பு [-]
இக்கதை ரே ப்ரேட்பரி எழுதி 1953ல் வெளியான 'A scent of sarsaparilla' எனும் அற்புதச் சிறுகதையின் தழுவல். தமிழில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.


2013/03/08

பரணறையில் நன்னாரி மணம்


    பிச்சைமணி எ பிச்சைமணி ராமனாதனுக்கு, வரும் புதன்கிழமை எண்பது வயதாகப் போகிறது. மூன்று பிள்ளைகள், இரண்டு பெண்கள், எட்டு பேரக்குழந்தைகள் என்று நெருங்கிய அன்பருவிக் குடும்பம் இருந்தாலும், அவர் விரும்பி நனைவதும் நிறைவடைவதும் மனைவி ராஜி எ ராஜேஸ்வரியின் காதலில் மட்டுமே.

இன்று நேற்றல்ல, திருமணமான அறுபத்தொரு வருடங்களில், ராஜியின் கை விரலைப் பிடித்தபடி பிச்சைமணி உறங்கத் தவறியதில்லை - ராஜியை முகத்துக்கு நேரே வரச்சொல்லி விழிக்கத் தவறியதில்லை. ராஜியைக் கிண்டல் செய்யாமல் உடன் இருந்தப் பொழுதுகளைக் கழித்ததில்லை - ராஜியை எண்ணி அழாமல் தனிமையைக் கழித்ததும் இல்லை. ராஜி அவரைக் கண்மணி என்று அழைப்பார். கோபம் வரும் போது மட்டும் மணீ. பிச்சைமணிக்குக் கோபம் வந்தாலும் வராவிட்டாலும் ராஜி தான்.

ராஜிக்கு அடுத்தபடியாக பிச்சைமணிக்குப் பிடித்தது பரணறை. நூற்றைம்பது வருடப் பூர்வீகச் சொந்த வீட்டுக் குறுகல் பரணில் ஏறி இறங்க முடியவில்லை என்று பத்து வருடங்களுக்கு முன், கீழே கார் பார்க்கிங் கட்டிய போது, மேலேயிருந்த பெரிய அறைகள் இரண்டை ஒன்றாக்கி வெளிச்சத்துக்கு ஜன்னல்கள் அமைத்து அடுக்குத்தட்டுகள் கட்டி, பரணிலிருந்த பொருட்களையெல்லாம் அறைக்கு மாற்றியிருந்தார்.

பரண் ரூமுள் கதவடைத்துத் தொலைந்து போவது அவருக்கு மிகவும் பிடித்த செயல். ராஜி-பரணறை என்ற வரிசையில் இதுவரை வாழ்ந்த பிச்சைமணி, இன்னும் இரண்டே நாளில், ராஜியை விடப் பரண் ரூம் மேலானது என்றத் திடுக்கிடும் முடிவுக்கு வரப்போவதை ராஜி உணர வாய்ப்பிருந்தால் இந்தக் கதை வேறு விதமாக முடிந்திருக்கும்.

    ண்மணியின் எண்பது வயது நிறைவைக் கொண்டாட அண்மையிலிருந்தும் அமெரிக்கா ஆஸ்திரேலியாவிலிருந்தும் பெண், பிள்ளை, பேரக்குழந்தைகள் வரப்போகிறார்கள் என்று ராஜி முனைப்போடு இருந்தார். அடையாறு வரலட்சுமி சிஸ்டர்ஸ் கேடரிங்கிலிருந்து வந்திருந்த இருவருக்கும் என்னென்ன அலங்காரம், சமையல், இனிப்பு கார வகைகள் செய்ய வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தார்.

"உங்க மெனு எல்லாம் இருக்கட்டும்.. இது எங்க பக்சன்.. செலவானாலும் பரவாயில்லை, எங்க விருப்பத்துக்குத் தான் செய்யணும், சம்மதமா?". இடையே தொலைவாகப் பார்த்து உரக்க, "கண்மணி, குளிச்சுட்டு வந்துருங்க.. உங்களால பசி தாங்க முடியாது"

"..ஓமப்பொடி யாருக்குமே பிடிக்காது, வேண்டாம்.. தீபாவளி மிக்சர் மாதிரி நிறைய பண்ணிடுங்க. பாயசம், ஸ்வீட் மட்டும் நாலு வகை.. ஆமா.. எங்க குடும்பம் அப்படி. பெரிய பையனுக்கு முந்திரிப்பருப்பை அள்ளிப் போட்டு சேமியா பால் பாயசம் வேணும். தேங்காய்ப்பால் பாயசம் இருந்தா சின்னவனுக்கு வேறெதுவுமே வேண்டாம். கடைக்குட்டிப் பொண்ணுக்கு முந்திரி ஏலக்காய் இல்லாம திராட்சை மட்டும் கொஞ்சமா போட்டு ஜவ்வரிசி பால் பாயசம். அமெரிக்கப் பேரக் குழந்தைகளுக்கு பாதுஷா பிடிக்கும். ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு ஜாங்கிரி, அதிரசம். பம்பாய் பேரக் குழந்தைகளுக்கு பாதாம் அல்வா. உள்ளூர் குழந்தைகளுக்கு லட்டு, மேங்கோ குல்பி". இடையே, "கண்மணி, குளிச்சு சாப்பிட வாங்க"

"..இவருக்கு சர்க்கரை கம்மியா கல்கண்டு போட்டு பருப்பு பாயசம் நானே வச்சுருவேன். நாலு பலாச்சுளையைத் துண்டு போட்டு பாயசத்துல ஊறவச்சு, பொறிச்ச அப்பளத்தோட.. என் கையால செஞ்சு கொடுத்தா தான் அவருக்குப் பிடிக்கும். உர்ருனு ஸ்டீம் எஞ்சினாட்டம் குடிச்சுட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம எல்லார் எதிர்லயும் என்னைக் கட்டிப் பிடிச்சு இளிப்பாரு". இடையே, "எங்கே போனாரு இந்த மனுசன்?"

"..சாப்பாட்டுல நிச்சயம் வாழைத்தண்டு தயிர்க்கூட்டு இருக்கணும், அதிகமாகவே செஞ்சுடுங்க, அது எங்க குடும்ப ஐட்டம்.. மறந்துட்டனே.. ரெண்டாவது பையனுக்கும் மாப்பிள்ளைகளுக்கும் உப்பு, இனிப்புக் கொழுக்கட்டை வேணும். கொழுக்கட்டை தொட்டு குழம்பு ரசம் சாப்பிடுற ஜாதில பொறந்தவர் எங்க பெரிய மாப்பிள்ளை. அப்புறம் காலை டிபனுக்கு இட்லி, தேங்காய் சட்னி செஞ்சுருங்க.. வடைக்குப் பதிலா மைசூர் போண்டா செஞ்சுருங்க". இடையே, "கண்மணி, குளிச்சு சாப்பிட வாங்க, நேரமாயிடுச்சு.. அப்பல்லேந்து கூப்பிட்டிருக்கேன் பாருங்க.."

"..அதெல்லாம் வேணாம். சடங்குல இவருக்கு நம்பிக்கையில்லே. ரெண்டு சின்ன ரோஜா மாலை வாங்கிடுங்க. என் பையன் எங்களுக்காக க்ரிஸ்டல் போட்டோ மாலை ரெண்டு செஞ்சு எடுத்துட்டு வரானாம்.. அதைத்தான் மாத்திக்கணுமாம். ஏழைத் தம்பதிங்க ஐம்பது பேர் வருவாங்க.. துணி பணம் பாத்திரம் நகை கொடுத்து கௌரவம் செய்யப் போறோம். என் மூத்த பொண்ணு வீணை வாசிப்பா.. வீணை கேட்கறது அவருக்குப் பிடிக்கும். பேரப் பசங்கல்லாம் சேர்ந்து.. சர்ப்ரைஸ் நாடகம் போடுறாங்களாம் தாத்தா பாட்டிக்காக. நான் வழக்கமா செய்யுற பத்து நிமிச பூஜை.. அரை மணி சுந்தர காண்டம் உரக்கப் படிப்பேன். அப்புறம் சமபந்தி சாப்பாடு.. அவ்வளவு தான் பங்சன்". இடையே, "மணி, பரண் ரூமை விட்டு வெளிய வாங்க.. கூப்பிடுறேனில்லே?"

"..சிம்பிளா அலங்காரம் பண்ணிடுங்க. எல்லாமே இந்த ரெண்டு ஹால்ல நடத்துறதா இருக்கோம். இத்தனை பெரிய பூர்வீக வீட்டுல செய்யாம? கிச்சனுக்குப் பக்கத்துல இருக்குதே அந்த இடம்.. இவங்கப்பா காலத்துல பெட்ரூமா இருந்தது.. அங்கே தான் கண்மணி பொறந்தார்.. அதை அலங்காரம் பண்ணிடுங்க". இடையே, "மணி.. நேரமாகுது.. மறுபடி மதியம் பரண் ரூமுக்குப் போலாம்.."

"..மறக்காம எல்லாம் எடுத்து வந்துருங்க.. எங்க பசங்க ஞாயிறு காலைல வந்துருவாங்க.. அதுக்குள்ளாற முடிக்கப் பாருங்க.. குழந்தைங்க வந்தாங்கன்னா வேலை செய்ய விடமாட்டாங்க.. ரைட்டு, போயிட்டு வாங்க". வந்தவர்களை அனுப்பிவிட்டு, "மணீ...மணீ...".

    பரண் ரூம் கதவைத் திறந்து வெளியே வந்த பிச்சைமணியின் நடையில் ஒரு நடனம் இருந்தது. மனைவியைப் பார்த்த பார்வையில் ஒரு வேகம் இருந்தது.

ராஜியின் கோபம் சற்றே சாம்பல் பூத்தது. "சாருக்கு என்ன ஆச்சு? ஒரே ஆட்டமா இல்லே இருக்கு..?"

"சேர்ந்து ஆடுறியா? கொண்டாட்டமா இருக்குமடி குட்டி.." என்று ராஜியை நெருங்கினார்.

கணவனின் முகத்தைத் தள்ளிவிட்ட ராஜி, மூக்கை விட்டு விட்டு உறிஞ்சினார். மோப்பம் பிடிப்பது போல். பிச்சைமணியின் முகத்தில் ஒரு வாடை வீசியதை அறிந்தார். "என்ன வாடை அது?"

"ஒண்ணுமில்லையே?"

"நிச்சயமா வாடை... இங்க வாங்க.. ம்ம்.. வந்து வந்து.. நன்னாரி வாசனை.. நன்னாரியே தான்.. பரண் ரூமில் ஏது நன்னாரி?"

"கரெக்டா கண்டுபிடிச்சிட்டியா? என் தங்கக்கட்டி, ராஜிக்குட்டி.." என்ற பிச்சைமணி, கைகளை விரித்தார். "முகந்து பாரு" என்றார். பிறகு இரண்டு கைகளையும் தேய்த்து காற்றில் வீசி விரித்தார். இளம் நன்னாரி வேர்மணம் அவர்களைச் சுற்றி இனிமையாகப் பரவியது. "மேஜிக்! கோவில் தெரு சீதம்மா பழக்கடையில சர்பத் சாப்பிடுவோமே ஞாபகமிருக்கா? அதே தான்.."

"உளறாதீங்க.. சீதம்மா பழக்கடை மூடி அம்பது வருசமாவது இருக்கும். எங்கே போயிட்டு வந்தீங்க காலைல? எனக்குத் தெரியாம எதையாவது வாங்கினீங்களா?"

"சே..சே.. காலைலந்து பரண் ரூம்ல தானே இருக்கேன்.. உனக்குத் தெரியாதா ராஜி?"

"ஸ்ரீராமா! இந்த மனுசனுக்கு புத்தி பேதலிக்குதா?" எங்கோ உத்தரத்தைப் பார்த்துக் கேட்டார் ராஜி. பதில் வராததால் பிச்சைமணியிடம், "காலங்காலைல இப்படிக் கோளாறு பண்றீங்களே? பரண் ரூம்ல சீதம்மா வந்து உங்களுக்கு நன்னாரி சர்பத் தந்தாளா?"

"சர்க்கரைத்தேன் நீயிருக்க சர்பத்து தேவையில்லை.." என்றுக் கவிதையாகச் சிரித்தார் பிச்சைமணி. கோபத்துடன் ஒதுங்கிய மனைவியை இழுத்துப் பிடித்தார். "மாதரசே.. என் மனையாளே.. மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப் பால் ஏதுக்கடி?" என்று ராஜியின் கைகளைப் பிடித்தபடி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தார். ராஜியின் எரிச்சல் அதிகமாவதை உணர்ந்து அமைதியானார். "சர்பத் இல்லடி சகியே, தண்ணி. வெறும் நன்னாரித் தண்ணி. ஆனா சீதம்மா கொடுத்தா. அள்ளி அள்ளி கொடுத்தா. என்னை நம்பு.. பானையில ஒரே ஒரு கரும்புத் துண்டை தோல்சீவி.. வெட்டிவேர், நன்னாரி, இஞ்சி கலந்து ஊற வச்சிருக்கா... பழைய பாலாத்துத் தண்ணி.. சில்லுனு வாசமா இருக்கு.. மண் குவளைல தருவா ஞாபகமிருக்கா? குவளையெல்லாம் வேணாம், கைலயே ஊத்து சீதம்மா மாயம்மானு சொல்லி ரெண்டு கைலயும் அள்ளிக் குடிச்சேன்.. கொஞ்சம் மேலே சிந்திருச்சு..". முறைத்த மனைவியைப் பொருட்படுத்தாமல், "..என்னா சாமி ரொம்பக் களைச்சு வந்திருக்கியானு கேட்டா.. ஆமாம் சீதம்மா, ரொம்பக் களைச்சிருக்கேன்.. எப்ப ஓயும்னு தெரியலே.. ஆயாசமா இருக்குது.. இன்னும் கொஞ்சம் தரியானு கேட்டு மறுபடி ரெண்டு கை நிறையக் குடிச்சேன்.. உன்னைப் பத்தியும் கேட்டா.. உனக்காக குண்டுமல்லிப்பூ வச்சிருக்குறதா சொன்னா.. உன்னோட கொலுசு சத்தம் கூட ஞாபகம் வச்சிருக்கா.. உனக்குப் பிடிச்ச கோலி பன்னீர் சோடா ஒரு அடுக்கு கட்டறதா சொன்னா.. வரியா ராஜி? நீயும் நானும் சேர்ந்து சீதம்மா கடைக்குப் போகலாம் வாயேன்.."

"மணீ.. வயசுக்குத் தகுந்தாப்புல நடக்க வேணாமா? எண்பது வயசானாப்புலயா நடக்குறீங்க?"

"சத்தியமாடி ராஜி.. பரண் ரூம்ல தான் இருந்தேன்.. என் கூட வாயேன்.. அங்க ஒரு அதிசயம் இருக்கு. சொன்னா நம்ப மாட்டே"

"போதும்.. அந்தக் குப்பைக் கூளத்துல நான் காலடி கூட வைக்க மாட்டேன்.. நூறு வருஷக் குப்பையை அள்ளி வச்சுக்கிட்டு நாள் முழுக்க உக்காந்திருக்கீங்களே.. சே..சே.. குளிச்சுட்டு வாங்க.. நன்னாரி வாசனை வருதே தவிர என்ன கஷ்டமோ என்னவோ? செத்த மூஞ்சுறாக்கூட இருக்கலாம்.."

பிச்சைமணியின் முகம் வாடியது. "என்ன ராஜி இப்படிப் பேசுறே? இது.. அசல் சீதம்மாள் கையால கரைச்சுக் கொடுத்த அசல் நன்னாரி.."

"சரி..சரி.. முதல்ல குளிச்சுட்டு வாங்க.. ஒரு நாள் இல்லே ஒரு நாள் பரண் ரூம்ல இருக்குறதையெல்லாம் காயலான் கடைலப் போடப் போறேன்.. இல்லே கொளுத்திடப் போறேன்.. அப்பத்தான் நீங்க தேறுவீங்க.." என்ற ராஜியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பிச்சைமணி. அதிர்ச்சியைத் தொடர்ந்து அவர் முகத்தில் பயம் படர்ந்தது. "வேணாம் ராஜி, அதை மட்டும் செஞ்சுராதே.." என்ற அவர் குரலில் நடுக்கம் இருந்தது.


தொடரும்

2013/03/04

அதே Same


    மிழ்ப் படப் பாடல்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைடில் எழுதும் வேலை கிடைத்தால் மகிழ்வேன். உலகத்துக் கவலையெல்லாம் போக்கும் வேலை. யுட்யூபில் பாருங்களேன்:
      garland that moves in air told me as a woman - காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மை என்றது.

இதற்காகத் தனியாகப் பயிற்சி தருகிறார்களா தெரியவில்லை.

எனக்கு இந்த வேலை வேண்டும். பயிற்சி இல்லாமலே என்னால் எழுத முடியும். என் திறமைக்கு எடுத்துக்காட்டாக:
      1
      moon becomes woman, wandering is it cute?
      water waves transpose, swimming is that flute?

      2
      keeping in hand if patient
      waiting on foot grateful dogs in nation..
      hence without kin without bond
      without memory of coming way
      boys also born in the house..
      mother oh mother
      trusting to be a brother..

      3
      born on lies bred on lies
      oh bard great deer
      you she knows truth she knows
      this flower dynasty deer

      4
      what is it rockmother palanquin turning
      my heart is shaking a beat

      5
      this same moon came that day
      that same moon came this day
      always there only moon
      for both eyes only moon
      aaah aaah
      for both eyes only moon

தமிழ்ப்பாடல் வரிகள் உங்களுக்கு உடனே புலப்பட்டால், எனக்கு இந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கூடும். புரியவில்லையெனில், பயிற்சி பெறவும் தயார். எப்படியாவது இந்த வேலை எனக்குக் கிடைத்தால் பரவாயில்லை.

தமிழிலிருந்து அங்கே என்றில்லை, அங்கிருந்தும் இந்தப் பக்கத்துக்கு சும்மா அடித்து விடுவேன்.
      நள்ளிரவுக்கு அது மூடி
      எதுவோ சைத்தான் இருட்டில் லருக்கியது.
      it was close to midnight
      something evil lurking in the dark

எல்லா மொழிமாற்றமும் இப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. இலக்கியம், ரசனை, புதைபொருள், மறைபொருள் என்று சிரமப் படுத்திவிடும். சமீபத்தில் முத்துச்சரம் பதிவில் வந்த ராபர்ட் ப்ராஸ்ட் கவிதையின் தமிழாக்கம் ஒரு உதாரணம். நித்திலம் பதிவில் அவ்வப்போது வரும் கலீல் ஜிப்ரன் மொழி பெயர்ப்புகளும் அப்படித்தான். இவர்களுக்கு என்னைப் போலவோ தமிழ்ப்பட சப் டைடில் எழுதுவோரைப் போலவோ திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, இந்தப் பாட்டு இப்போ தோன்றி இப்போ பெயர்த்தது:
      silk insect silk insect baby
      cut and dropped tied hair toupee
இத்தனை சுலபமாக ராமலட்சுமியாலோ பவளசங்கரியாலோ மொழிமாற்ற முடியுமா? சான்சே லேது (தெலுங்கிலும் உதறுவேன்).

என்ன நான் சொல்வது?

அபாரமான திறமையுள்ள எனக்கு எப்படியாவது இந்த மொழிமாற்ற சப் டைடில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

sir, if you appoint now you will never disappoint sir என்று எனக்கு வந்த வேலை விண்ணப்ப வரிகளின் பொருள் இப்போது புரிகிறது. me telling same that also.