2013/02/27

அஷ்டலட்சுமி காவியம்


    விக்கிரமாதித்தன், நாரதன், சிவன், இந்திரன் என்று பலர் சொன்னதாகவும், அசலாக நடந்ததாகவும், சொல்லப்பட்டு வரும் அஷ்டலட்சுமிகள் பற்றியக் கதையை எத்தனை பேர் அறிவார்களோ அறியேன்.

கதைச் சுருக்கம்: அரசன் போஜராஜன், அஷ்டலட்சுமிகளை குலதெய்வங்களாக வணங்கி வழிபடுபவன். ஒரு நாள், எட்டு லட்சுமிகளும் வெளிநடப்பு செய்வதாக அறிவிக்கிறார்கள். அரசன் விரும்பினால் எண்மரில் ஒரு லட்சுமியை மட்டும் அவனுடன் தங்க அனுமதிக்கிறார்கள். போஜராஜன் தைரிய லட்சுமியை தங்கச் சொல்கிறான். இணங்கி அவனைப் பிரிந்த ஏழு லட்சுமிகளும், "தைரிய லட்சுமி இல்லாமல் எங்களால் இயங்க முடியவில்லை" என்று சொல்லி ஒவ்வொருவராக அரசனிடமே திரும்புகிறார்கள். அரசன் மகிழ்ச்சியோடு வாழ்கிறான். சுபம்.

'தைரியத்துடன் இருந்தால், எதை இழந்தாலும் மீட்கலாம்' என்ற ஆழமான கருத்தை வலியுறுத்தச் சொல்லப்பட்டு வரும் எளிமையான மரபுக்கதை.

லட்சுமிகளைப் பிரிந்த போஜராஜன் அதனால் ஏற்பட்ட இன்னல்களை வென்று இழந்தவை அனைத்தையும் திரும்பிப் பெற்றதை, அரசனின் ஆஸ்தான கவியாகக் கருதப்படும் மகாகவி காளிதாசன் ஒரு காவியமாகப் புனைந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதில் வருத்தமில்லை. காரணம், அஷ்டலட்சுமி காவியத்தை நயமான எளிமையான நல்ல தமிழ்க்கவிதைகள் வழியாகப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.

    'மகாகவி' வயலூர் கோ. சண்முகம் எழுதிய 'அஷ்டலட்சுமி காவியம்' படித்தேன்.

போஜராஜன், அரசி மங்களமயி, முதலமைச்சர் தயாசமுத்திரன், அவர் பெண் வில்லி சந்திரகலா, ஆஸ்தான கவி காளிதாசன், ஊழல் மருத்துவர் லிங்கர், வில்லன் இராஜகேது, இளவரசன் திலீபன், தளபதி மார்த்தாண்டன், பகையரசர் என்று கதைமாந்தர் பலரைச் சேர்த்து அஷ்டலட்சுமி வரவு பிரிவுகளின் விளைவுகளை - இழந்த செல்வங்களை ஒவ்வொன்றாக மீட்கும் அரசனின் வீரத்தை - விறுவிறுப்பான கதையாக, காவியமாக, திகட்டாதத் தமிழ்க் கவிதைகளால் சொல்லியிருக்கிறார் மகாகவி.

சென்ற இரண்டு மாதங்களில் முழுப் புத்தகத்தை இரண்டு முறையும், மடக்கி வைத்தப் பக்கங்களைப் பலமுறையும் படித்தேன்.

படித்தேன் குடித்தேன் என்பதெல்லாம் இந்தப் புத்தகத்துக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

போஜராஜனின் வளமான நாட்டிலே ஆறு இப்படி ஓடுகிறது:
    வற்றியோர் துயர் துடைக்கும்
    வள்ளலின் கைபோல் நீண்டே..

நாட்டுச் சோலைகளிலே நறுமணம் இப்படி வீசுகிறது:
    அருள்பழுத் தொருவன் செய்யும்
    ஆவிநேர்க் கவிதை போலே..

அரசனுக்கு எந்த விதத்திலும் அரசி இளைத்தவளல்ல என்பதை ஒரே வரியில் சொல்லியிருக்கும் விதம், துணிவும் குறும்பும் கலந்தத் தமிழம்பு. மிகவும் ரசித்தேன்:
    ..சரிநிகர் மஞ்சம் காத்தாள்..

அரசன் பூஜைகளை முடித்து நெடு நேரமாகியும் அஷ்டலட்சுமிகளைக் காணோம். இப்படிப் புலம்புகிறான்:
    காய்களைப் படைத்திட்டேனா?
    காம்புள்ள மலரைத்தானா?
    வாய்குழறி ஒருசொல் தீதாய்
    வழிபாட்டில் உளறினேனா?
    பேய்மனக்குரங்கு வேறோர்
    மேதினி குதித்ததேயோ?

லட்சுமிகள் பிரிகிறார்கள். தன் துயரம், காரணமின்றி மகன் திலீபனையும் தொடப்போவதை இப்படிப் பாடுகிறான் அரசன்:
    சர்க்கரை இருந்த கிண்ணம்
    தட்டினில் ஏறிவந்தே
    மொய்க்கின்ற எறும்பாயீயாய்
    மூளும்விதி நம்மோடிணைந்தே
    மொக்குநிகர் திலீபனையும்
    மோதுதல் உண்மை...
தன் விதி பிறரையும் வாட்டும் என்பதற்கான உவமையை மிகவும் ரசித்தேன்.

எட்டிலே எந்த லட்சுமி வேண்டும் என்பதை மன்னன் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும். மன்னன் தவிப்பைக் காளிதாசன் அறிந்ததை இப்படிச் சொல்கிறார் மகாகவி.
    இன்னலும் இழப்பும் கவிஞன்
    இதயத்தின் விதைகள் அன்றோ?
(ஏனோ தெரியவில்லை. கவிவேல் சிவகுமாரன் நினைவுக்கு வந்தார்:-)

லட்சுமிகள் விலகியதும் அரசன் இப்படித் தத்துவம் பேசுகிறான்:
    எய்தலும் இழப்பும் வாழ்வில்
    இயல்பதாம் யார்க்கும் உண்டாம்
    நெய்யதால் பாலால் தேனால்
    நிரம்பியே வழிந்த கிண்ணம்
    பொய்யதாய் வெறுமையாகப்
    போதலும் உண்டே ஓர்நாள்..

லட்சுமிகள் விலகியதும் அரச குடும்பத்தில் பல துயரங்கள், இன்னல்கள். தீச் சகுனங்கள். மன்னன் நோயில் வீழ்கிறான். அரசிக்குத் துயரம் தாளவில்லை. ஆனால் அரசி என்பதால் துயரத்தை வெளிக்காட்ட முடியாதே? பாசத்தைக் கடமை கட்டும் என்பது மட்டுமல்ல, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்டத் துயரங்களை பொதுநலம் கருதி அடக்க வேண்டியத் தேவை, இங்கே அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது:
    பொங்கிவரும் கண்ணீருக்குப்
    புடவையால் அணையெழுப்பி
    பூத்துவரும் செருமல் துயரின்
    புலம்பலை ஊமையாக்கி..
    ..பாமர மக்களைப் போலே
    பதறினால் கதறினாலோ..
    ..பூமகள்போல் வீற்றிருப்பாள்
    புலம்பினால் நாடே புலம்பும்..

நோயில் வாடும் கணவன். நலம் வேண்டிக் குமைகிறாள் அரசி. சரளமாகத் துள்ளுகிறது பாடல்:
    மஞ்சத்தில் சாய்ந்தாரென்றால்
    மான்குட்டியாய்த் துயில்வார் என்றன்
    நெஞ்சத்தில் சாய்ந்தாரென்றால்
    நேர்காணும் மதனேயாவார்..
    ..மஞ்சளைக் காப்பாய் தாயே
    மாங்கல்யம் காப்பாய் தாயே
    பிஞ்சன்னோன் நீயே தந்தப்
    பிள்ளையைக் காப்பாய் தாயே..

அரசனின் நிலையால் அரசாங்கம் தடுமாறுகிறது. அவைக்கவிஞன் காளிதாசன் குமுறுகிறான். 'தொடையழகும் நடையழகும் மிதக்கும் எழுத்துக் கடை நடத்தும் காளிதாசன்' அரசாங்க நடைமுறையில் நுழையலாமா? கவிஞனுக்கு அங்கே என்ன வேலை? ஒரு மகாகவிக்கு வக்காலத்து வாங்குகிறார் இன்னொரு மகாகவி:
    ..கவிஞன் என்போல்
    அரசியல் எல்லைக்கப்பால்
    போனாலும்.. அவனின்
    தேனாறு போன்ற ஞானச்
    சிந்தனையில் ஆட்சிபீடம்
    நானாவித ஆக்கம் காணும்..
(நாட்டு அரசியலில் காளிதாசன் ஈடுபட்டாலும், இந்தக் காவியம் எழுதிய மகாகவி சண்முகம் அப்படியல்ல. கலைஞர் கருணாநிதியுடன் ஒன்றாகப் படித்தவர். பழகியவர். திருவாரூரில் சிறுவனாக உடன் கொட்டமடித்தவர். எந்தவித நட்புச் சலுகையும் எதிர்பாராமல் வாழ்ந்தவர், இறுதி வரை அரசியல் பக்கமே போகவில்லையாம்).

இடையே நிறைய நடக்கிறது. ஊழல் மருத்துவர் அரசனுக்குப் பைத்திய வைத்தியம் பார்க்கிறார் ('ஊழல் டாக்டர்' தற்செயல் என்று நம்புகிறேன்). இராஜகேது உதவியுடன் வில்லி சந்திரலேகா அரசியாகிறாள். மங்களமயி சிறையில் வாடுகிறாள். திலீபன் தொலைகிறான். அரசன் அரைகுறைத் தெளிவடைகிறான். தெளிவடைந்ததும் அரசியை வெறுக்கிறான் (காரணம் சஸ்பென்ஸ். புத்தகத்தில் படித்தறியலாம்). சந்திரகலாவுடன் குலாவுகிறான். காளிதாசனை இகழ்கிறான்:
    துருப்பிடித்த மனிதர் நீர்
    சொப்பனத்தை அசைபோடுவீர்
    செரிப்பதற்கே முடியாச் சொத்தைத்
    தத்துவத்தின் அழுக்கு மூட்டை..

காளிதாசனுக்குக் கோபம் வந்தாலும் பொறுக்கிறான். அரசியை அவதூறு செய்யலாகாது என்கிறான்:
    கற்றவனே, வாழ்க்கையெனும்
    கதைப்போக்கை அறிந்த வேந்தே..
    ..நிழலுக்கும் தானே இயங்கும்
    பொறுப்புகள் உண்டா? தங்கப்
    பொன்கட்டிக் கரையான் கடித்தே
    நொறுங்கியதாய்க் கேட்டதும் உண்டா?
நிழலுக்கும் தானே இயங்கும் பொறுப்புகள் உண்டா? பிரமாதம்! பிரமாதம்! அரசனுக்கு ஒரு பிரமாதம் கூடப் புரியவில்லை.

திலீபனைக் கொல்வதற்காக அவனைக் கடத்திச் சென்ற தளபதி மார்த்தாண்டன், மனம் மாறி இளவலின் குருவாக அத்தனைப் போர்க்கலைகளையும் சொல்லித் தருகிறான். (அருமையான கதாபாத்திரம். ஏன் மனம் மாறினான் என்பதையும் சஸ்பென்சாக வைக்கிறேனே?) பகைவர்களின் கொடுங்கோலால் வாடும் மாளவத்தை மீட்கத் துடிக்கிறான் திலீபன்:
    தாயகமே மாளவமே என்றன் அன்புத்
    தங்கமணித் திருநாடே! உனக்கா வீழ்ச்சி?
    நாய்களுக்கா பூமகுடம்? ஐயோ என்றன்
    நாடிகளில் ஓடுவது ரத்தம் தானா..
ஜிவ்வென்கிறது படிக்கையில்.

நாடு பகையரசர் வசம். துரத்தப்பட்ட, உண்மையறிந்த போஜனும் அரசியும் இப்போது இணைந்து மாறுவேடத்தில் வாழ்கின்றனர். காளிதாசனை வெறுத்த போஜன், இப்போது பவானிசரண் என்ற பெயரில் சாமியாராகக் கவிபாடி எளிமையாக வாழ்கிறான். 'போதும் இந்த வேடம்' என்று அவனும் சினந்தெழுகிறான்:
    கல்லுக்குள் தேரையென என்றன் நெஞ்சக்
    கசப்புக்குள் வெறுப்புக்குள் ஒரேயோர் எண்ணம்..
ஆனால் தனக்காக அல்ல:
    மன்னவனாய் இனிநானே செங்கோலேந்தி
    மாளவத்தை ஆண்டிடவே ஆசையில்லை
    சின்னவனாய்க் கண்மணியாய் இருந்தபிள்ளை
    திலீபனவன் எங்கேனும் உயிருடன்தான்
    தன்னையுண ராவாறிருப்பான்..

கயவர்கள் ஆட்சி. நாட்டிலே வறட்சி:
    பூக்குலத்து வர்ணவாசப்
    புன்னகை இருட்டிப் போக
    ஈக்குலத்துச் சிறகும் கூட
    ஈரத்தின் நைப்பு காணா
    ஏக்கத்தில் சுருளலாமா?
(ஆகா!)

கிளைமேக்சில் சிலை திறப்பு விழா. புரட்சி வெடிக்கிறது. பிரிந்தவர் கூடுகிறார்கள். ஆதிலட்சுமி, தனலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி எனும் ஏழு லட்சுமிகளின் பிரிவினால் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம் (வசதி), வெற்றி (அரசு), வலிமை, பிள்ளை, நெறி (கல்வி) எல்லாவற்றையும் இழந்து, பசியில் வாடித் திரிந்து கவிபாடி, இன்னலுற்ற மன்னனும் மன உறுதி (தைரியலட்சுமி) குன்றாதிருந்து அனைத்துச் செல்வங்களையும் மீட்கிறான். பெரும் பாடம் கற்கிறான்.

    ந்தக் கதையை, கவிதைக் காவியமாக நான்கு பாகங்களில் பாடியிருக்கிறார் மகாகவி சண்முகம். சமீபத்தில் மிகவும் ரசித்து லயித்துப் படித்தப் புத்தகம். தமிழில் பாடமாக வைக்க வேண்டிய புத்தகம். சந்தேகமேயில்லை.

இறைப்புலமை மிக்கவர் என்று மகாகவி சண்முகத்தைப் பற்றிப் பலர் சொல்லியிருக்கிறார்கள். 'அஷ்டலட்சுமி காவியம்' புத்தகமாக வெளிவரு முன்பே மறைந்துவிட்ட மகாகவி, தன் படைப்பைப் பற்றிச் சொன்னது:
"இந்தக்க் காவியத்தை நான் எழுதவில்லை. இதைப் படைத்தது, எனது அன்னை வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகியே! இது காலங்கடந்தே வெளியாகும்!"
மேலும் சொன்னது:
"இந்நூல் பூஜை அறையில் இடம் பெற்ற இல்லங்களில் அஷ்டலட்சுமிகளின் அருள் சுரக்கும்.. அனைத்து ஐஸ்வர்யங்களும் பொங்கும்!".

இந்த அருமையானப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்த நண்பர் நேசமிகு ராஜகுமாரன், மகாகவி வ.கோ.சண்முகத்தைத் தந்தையாக அடையும் பேறு பெற்றவர். பொறாமையாக இருக்கிறது.

மகன் தந்தைக்காற்றும் உதவி, அவர்தமிழை அவனிக்கு அளித்துவிடல். சிறப்பாகச் செய்திருக்கிறார் ராஜகுமாரன்.

மனமார்ந்தப் பாராட்டுக்களும் நன்றியும்.
    பரிமளா[வின்] ராஜகுமாரன்
    பொங்கல் நாளில்
    பரிசாய் எனக்களித்தப் பாமுடி.
    வரியெங்கும்
    சொற்தேன் பொருள்மணம்,
    இளைப்பாறக்
    கவிமலராய்த் தமிழ்க்கன்னிப் பூமடி.


அஷ்டலட்சுமி காவியம் | 'மகாகவி' வ.கோ.சண்முகம்
தமிழ்க்கூடம் 2009ம் ஆண்டுப் பதிப்பு, விலை ரூ.150




22 கருத்துகள்:

  1. தைரியத்துடன் இருந்தால், எதை இழந்தாலும் மீட்கலாம்' என்ற ஆழமான கருத்தை வலியுறுத்தச் சொல்லப்பட்டு வரும் எளிமையான மரபுக்கதை./

    அருமையான தன்னம்பிக்கையூட்டும்கதை.
    திரு. வை.கோ. சண்முகம் அவர்கள் எழுதிய அஷ்டலட்சுமி காவியம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து ஐஸ்வர்யங்களும் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அஷ்ட லக்ஷ்மிகள் எப்படித திரும்பி வந்தார்கள் என்பதை அழகாக சொன்னீர்கள்.

    நீங்கள் எழுதியிருக்கும் விதம்
    அஷ்டலக்ஷ்மி காவியம் புத்தகத்தை வாங்கத் தோன்றுகிறது.

    பகுதி பகுதியாக நீங்கள் விவரிப்பது மிகவும் சுவாரஸ்யம் .

    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
  4. //பொங்கல் நாளில்
    பரிசாய் எனக்களித்தப் பாமுடி.
    வரியெங்கும்
    சொற்தேன் பொருள்மணம்,
    இளைப்பாறக் கவிமலராய்த் தமிழ்க்கன்னிப் பூமடி.//

    பாமுடி; பூமடி -- ரசித்தேன்.

    சண்முகனாரின் கவிதை
    வாசிப்போரையும் கவிதை
    வாசிக்க வைக்கும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சிறப்பான புத்தக அறிமுகம்.மிக்க நன்றி சார்,பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  6. அருமையான அறிமுகம். இப்படி ஒரு புத்தகம் பரிசாய்க் கிடைத்ததுக்கு அதிர்ஷ்டம் செய்திருக்கீங்க. புத்தகம் வாங்கிப் படிக்கணும். இப்படி ஒண்ணு இருக்குனு கேள்விப் பட்டிருக்கேனே தவிர, யாரும் வாங்கிப் படிச்சதாய்ச் சொல்லிக் கேட்டதில்லை. படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  7. ரசித்ததை ரசனையாய்ச் சொல்லி எங்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல அறிமுகம். புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் அழகிய விமர்சனம். பகிர்விற்கு நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாபிப்ரவரி 28, 2013

    ரசித்ததற்கு சந்தோஷம். கதையை மட்டும் பற்றி எழுதியுள்ளீர்கள். புத்தகத்தில் அஷ்டலக்ஷ்மிகளின் ஒவ்வொரு லக்ஷ்மிக்கும் வண்ணப்படம், சுலோகம் இருப்பதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே? ஏதாவது கொள்கை காரணமோ? :)

    பதிலளிநீக்கு
  10. அப்பதுரை அவர்களே! புத்தகத்தின் அட்டைப்பட "லே அவுட்" கொஞ்சம் நவீனமாக இருந்திருக்கலாம்! என் பொன்றவர்களை அன்னியப் படுத்தி விடும்! உங்கள் பதிவப் பார்த்த பிற்கு தான் அந்த நூல் பற்றி தெரிந்து கோண்டேன்!நன்றி!--காஸ்யபன்!

    பதிலளிநீக்கு
  11. தைரியலட்சுமியின் அருமை பெருமைகளை சிறப்பாய் அறிவுறுத்திய பகிர்வுக்கு மனமார்ந்தப் பாராட்டுக்களும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  12. http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_1699.html

    தைரிய லக்ஷ்மி

    பதிவு தங்கள் பார்வைக்கு

    பதிலளிநீக்கு
  13. http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_1699.html

    தைரிய லக்ஷ்மி

    பதிவு தங்கள் பார்வைக்கு

    பதிலளிநீக்கு
  14. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    எழுதும் போது இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகள் நினைவுக்கு வந்ததும் 
    அட்டைப்படம் கொஞ்சம் அர்ச்சனைப் புத்தகத்தை நினைவு படுத்துவதும் உண்மை.

    பதிலளிநீக்கு
  15. இந்த அருமையானப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்த நண்பர் நேசமிகு ராஜகுமாரன், மகாகவி வ.கோ.சண்முகத்தைத் தந்தையாக அடையும் பேறு பெற்றவர். பொறாமையாக இருக்கிறது.

    மகன் தந்தைக்காற்றும் உதவி, அவர்தமிழை அவனிக்கு அளித்துவிடல். சிறப்பாகச் செய்திருக்கிறார் ராஜகுமாரன்.
    இதை விட சிறப்பு என்ன இருக்குங்க. முதலில் பிள்ளைகள் இப்படி ஆத்மார்த்தமாக பெற்றவரின் திறமைகளை மதித்து போற்றுதல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள அப்பாஜி.அன்பும் நட்பும்.என் தந்தையார் வ.கோ.சண்முகம் அவர்களின் அஷ்டலட்சுமி காவியம் குறித்த தங்கள் விரிவான விமர்சனத்துக்கும் மிக்க நன்றி.நூல் வேண்டுவோர் தொடர்புக்கு; பரிமளா ராஜகுமாரன் 9940353613.மி.அ.thamizkkuudam@gmail.com.நேசமிகு ராஜகுமாரன்

    பதிலளிநீக்கு
  17. எளியவன்மார்ச் 01, 2013

    இதையும் எழுதுகிறீர்கள், கலர் சட்டையும் உங்கள் எழுத்து தான். நீங்கள் யார்?

    பதிலளிநீக்கு
  18. பொதுவாய் இது போன்ற புத்தகங்களை எடுத்து படிக்க நான் கையை உயர்த்துவதில்லை. நீங்கள் எழுதிய விதம் படிக்கத் தூண்டுகிறது. முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. உங்கள் எழுத்து வாசிக்கத்தூண்டும்போல இருக்கிறது அதிகம் இந்தமாதிரி புத்தகங்கள் வாசித்ததில்லை

    பதிலளிநீக்கு
  20. முதலில் மன்னிப்பு தாமதத்திற்கு.
    வணக்கம்.
    ஒரு காவியம் வாழ் நாளுக்குள் எழுதி விட வேண்டும் என்ற என் நீண்ட நாள் பேராசையை தூண்டி விட்டது. இந்த அறிமுகம். எளிய வார்த்தைகள். அழகிய பிரயோகங்கள்.
    நன்றி

    கவிவேல் -- பயத்தையும் கூச்சத்தையும் தந்தது.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லாமார்ச் 04, 2013

    //ரசித்ததை ரசனையாய்ச் சொல்லி எங்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.//

    அதே, அதே!

    பதிலளிநீக்கு
  22. என் தந்தையாரின் அஷ்டலட்சுமி காவியம் பற்றி,நண்பர் அப்பாஜி மிக விரிவான ஒரு விமர்சனம் எழுதியதற்கும்,அதற்கு நண்பர்கள் கருத்துரை அளித்ததற்கும் மீண்டும் எனது நன்றிகள்! என் தந்தையின் இந்த நூல் கனவு அரங்கேற்றம் தாமதமானாலும் ஏதோ அர்த்தமுள்ள தாமதமாகவே தோன்றுகிறது...

    நேசமிகு எஸ்.ராஜகுமாரன்

    பதிலளிநீக்கு