2012/12/17

அறுந்த காற்றாடி


3


◄◄   1   2


    றுநாள் காலை நான் வேலைக்குக் கிளம்பும் நேரத்திலும் அவர்கள் எழவில்லை. தூங்கட்டும் என்று ஓசை தவிர்த்துக் கிளம்பினேன். அரை நாள் விடுப்போடு மதியம் வீடு திரும்பினேன். மனம் ஏனோ இலேசாகியிருந்தது. முதல் நாளிருந்த அச்சமும் ஆத்திரமும் இல்லை. 'அஞ்சுவது ஒளியையா, இருளையா?' எனும் ப்லேடோவின் சித்தாந்தக் கேள்வி, காரணமில்லாமல் நினைவுக்கு வந்தது. பத்தடித் தண்ணீருள் மூழ்கி மூச்சுவிட்ட உணர்வு.

கவனமாக உள்ளே நுழைந்து, உடனே கதவடைத்தேன். கிச்சனில் மாமி ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். "வாப்பா. டேபிள் மேலே எல்லாத்தையும் வசதியா எடுத்து வச்சுட்டுப் போயிட்டியே? இருந்த துவரம்பருப்பை வைச்சு மிளகு ஜீரா அரைச்சு ரசம் பண்ணியிருக்கேன். சாப்பிடறியா? காய்கறி எதுவும் காணோம், சிப்ஸ் இருக்கு.."

மனதுள் குறித்துக் கொண்டேன். மளிகை வாங்க வேண்டும். "நீங்க சாப்பிடுங்க. நான் கேன்டீன்ல சாப்பிட்டாச்சு. என்னென்ன வாங்கணும்னு சொல்லுங்க, வாங்கிட்டு வறேன்"

"அப்புறம் போய்க்கலாம். ரெஸ்டு எடு" என்றார் மாமி. இந்த அக்கறை எனக்குக் கொஞ்சம் புதுமையாக இருந்தது. என் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

"நேத்திக்கு உனக்கு சரியா நன்றி சொல்ல முடியாம போயிடுத்துப்பா" என்றார் மாமி. "பேஸ்மென்டுல வேண்டாம், நாங்க உங்கூடத்தான் தங்கணும்னு நீ ரொம்பப் பிடிவாதமா இருந்ததா ரகு சொன்னான். என் பிள்ளையாட்டமா இப்படி எங்களைத் தாங்குறியே..?" என்ற மாமியின் குரல் கம்மியது. "ரொம்ப தேங்சுப்பா.. என்னால எந்தக் கைம்மாறும் செய்ய முடியாம இருக்கே?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமி" என்றேன். எனக்குக் கூசியது. அப்படியா சொன்னான் ரகு? இவர்களிடம் என் நேற்றைய மனநிலையை இப்போது எப்படிச் சொல்வது? "மாமி, நான் ஒண்ணு கேக்கலாமா? இந்த வயசுல எதுக்காக இப்படி இமிக்ரேசனுக்குப் பயந்து பயந்து ஓடணும்? உங்களுக்கு இது கஷ்டமில்லையா?" என்றேன், தயங்கி.

"பயம் இல்லே. என்ன பயம்? இமிக்ரேசன்காரா அவா வேலையைப் பண்றா. இதெல்லாம் 'அடிக்கறாப்ல அடிக்கறேன், அழறாப்ல அழு' விளையாட்டு. கொஞ்சம் யோசிச்சா உனக்கே புரியும். என்னையும் மாமாவையும் பிடிச்சு கேஸ் போட்டா, அவாளுக்குத்தான் கஷ்டம். நஷ்டம். அவர் படத்தைப் போட்டு இமிக்ரேசனைப் பத்திரிகைக்காரா கிழிச்சிடுவா. எத்தனையோ கேடிகள் இருக்கச்சே எங்களால யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லேனு அவாளுக்கு நல்லாத் தெரியும். இது ஒண்ணும் புதுசு இல்லை. அப்பப்போ இந்த மாதிரி விரட்டுவா.. சங்கடம் தான். அங்க இங்கே தங்கிட்டு அப்புறம் மூணு மாசம் கழிச்சு மறுபடி கடை போட்டுப் பிழைக்கணும். ஆனா எங்கக் கஷ்டம் அது இல்லேப்பா"

மாமியின் யதார்த்தம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. காரணமில்லாமல் பயந்தேனா? மாமி வெகுளியல்ல என்றுப் புரிந்தது. "இருந்தாலும்.. இந்த மாதிரி சிரமப்படறதுக்கு பதிலா.. இந்தியா வேணும்னா போயிடறேளா? நான் என்னால ஆனதைப் பண்றேன்.. உங்க கஷ்டம் என்ன அப்போ?" என்றேன்.

"எங்க கஷ்டம் நாங்க தான். இந்தியா போகலாம், பிரச்சினையில்லே. அஞ்சு வருஷமாத்தானே இங்கே இருக்கோம்? அங்கே இவரோட பூர்வீக சொத்து ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருக்கு. ஆள் அட்ரெஸ் காணோம், ஆக்சிடெண்டு ஆச்சுனு தெரிஞ்சு இவரோட தம்பிமார் எல்லாம் வீடு நிலத்தையெல்லாம் இத்தனை நேரம் எடுத்துண்டிருப்பா. ஒரு தபால் கூட போடமுடியாம போச்சே? இப்ப நாங்க போனா நடுத்தெருல நிக்காட்டாலும்... சிரமம். ஆனா அடிச்சுப் புடிச்சாவது எங்க சொத்தைத் திரும்ப வாங்கிடுவேன். அதெல்லாம் பிரச்சினையில்லே. அங்கே போனா வசதியா இருக்கலாம். ஆனா அதுல எங்களுக்கு விருப்பமில்லேப்பா.."

"புரியலியே.. அங்கே வசதியா இருக்கலாம்னா இங்கே ஏன் இப்படி கஷ்டப்படணும்?"

"என் பிள்ளை, மருமகள், சந்ததி எல்லாத்தையும் இங்க தானேப்பா பறிகொடுத்தோம்? இங்கே தானே இருக்கா அவா? இந்த மண்லயும் இந்தக் காத்துலயும் தானேப்பா அவாளை உணர்ந்துண்டிருக்கோம்? உனக்கு வேணும்னா கேலியா இருக்கலாம், ஆனா என் பேத்தியோட வாசனை இங்கே தானே மூக்குலயே நிக்கறது? ஆக்சிடென்டு ஆனப்போ என் பேரக் குழந்தைகளுக்கு ரெண்டு வயசு கூட முடியலே. அந்தச் சின்னக் குழந்தைகளோட மூச்சு இன்னும் இதோ என் கழுத்துல பட்டுண்டே இருக்கேப்பா? இப்படி நான் ஒரு தோள்லயும் இவர் ஒரு தோள்லயும் வச்சுண்டு தூங்கப் பண்ணுவோம்..

..இப்பத்தான் பேச்சு வரலியே தவிர, இவர் நல்லாப் பாடுவார் தெரியுமோ? 'க்ருஷ்ணா.. ப்ரிய க்ருஷ்ணா.. கோவர்த்தனம் கொண்ட கை வலியோ.. காளிங்கனை வென்ற மெய் வலியோ.. கண்ணுறங்கு மணிவண்ணா''னு, என் பையன் குழந்தையா இருந்தப்போ நான் பாடித் தூங்கப் பண்ணுவேன். அந்தப் பாட்டை ஞாபகம் வச்சுண்டு இவர் பேரக்குழந்தைகளைப் பாடித் தூங்கப் பண்ணுவார். ரெண்டும் பட்டுக் குழந்தைகளோனோ? புஸ் புஸ்னு வேக வேகமா மூச்சு விட்டுண்டு தோள்லயே தூங்கிடும். ரெண்டுத்தையும் கைலயே வச்சுண்டிருந்தா எங்களுக்கு கை வலிக்கும்.. கீழே இறக்கினாலோ மனசு வலிக்கும்.. அப்படியே முடிஞ்ச வரைக்கும் தோள்லயே வச்சுண்டிருப்போம்..

..ஹ்ம்ம்.. இந்தியால்லாம் வேண்டாம்பா. எங்களுக்கு இங்கயே, இந்த மண்லயே, பிராணனை விட்டு அவாளோட கலக்கணும்.. இங்கயே பிராணனை விட்டா அவாளோட கண்டிப்பா சேந்துப்போம்னு ஒரு நம்பிக்கை. அந்த உலகம்மை அதையாவது எங்களுக்குச் செய்வானு ஒரு நம்பிக்கை.." என்று மாமி மீண்டும் கலங்கினார்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தோம். எனக்கு ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஒரு எண்ணம் கூடத் தோன்றவில்லை. மாமி சொன்னதைக் கேட்டு ஆடிப்போயிருந்தேன்.

"உனக்கு இது புரியாமப் போகலாம். இளப்பமா கூட இருக்கும்" என்றார் மாமி மூக்கை உறிஞ்சியபடி.

அந்த சோகத்திலும் மாமி களையாக இருந்தார். எனக்குப் பரிதாபமாக இருந்தது. "இல்லை மாமி. உங்க நம்பிக்கைல தப்பே இல்லை.."

"ஒத்தொத்தர் சுமங்கலியா போகணும்னு வேண்டிப்பா. ஆனா இவரை உடனே அழைச்சுக்கோடி உலகம்மைனு நான் தினம் வேண்டிக்கிறேன். ஏதுடா இப்படிப் பேசறாளேனு பாக்காதே. நான் போயிட்டா இவரை யாரும் கவனிக்க மாட்டானு இல்லே. ஏதாவது அனாதை ஆசிரமத்துலே யாராவது கவனிப்பா. இல்லேன்னா தெருவுல நாறிக் கிடந்துட்டுப் போறார். இன்னிக்கு செத்தா நாளைக்கு ரெண்டு. நான் செத்தப்புறம் இவர் உடம்பு கஷ்டம் நேக்கென்ன தெரியவா போறது? அதைப் பத்தி அவருக்கும் காலணா அக்கறை கிடையாது. ஆனா நான் அப்படிப் போயிட்டா, இவர் மனசு நாறிப் போயிடும். மனசு வெம்பியாச்சுனா, உடம்பு இரும்பா இருந்தாலும் துருப்பிடிச்சுருமேப்பா..?..

..ரெண்டு பேரும் எத்தனை சந்தோஷமா இருந்தோம்! ஆக்சிடென்டுக்கு முன்னால நாங்க சிரிக்காத நாள் கிடையாது.. எங்களுக்குள்ளயோ இல்லை பேரக்குழந்தைகளோடோ கொஞ்சாத நேரம் கிடையாது. இப்ப எங்களுக்கு இருக்கறதெல்லாம்.. அந்த சந்தோஷத்தோட நிழல். ஞாபகங்கள். அவ்ளோதான். அந்த சந்தோஷமெல்லாம் காத்தாடி மாதிரி எங்க மனசுல சுத்திண்டேருக்கு. ஒருத்தொருக்கு ஒருத்தர் துணையா இருக்கச்சே அது பலம். ஒருத்தர் போயிட்டா அதே நினைவுகள் பாரமாயிடும். அந்த ஞாபகங்கள் எல்லாம் அப்படியே விஷ அம்பா மாறி அவர் மனசைக் குதறி எடுத்துடும். உடம்பு கிடந்து நாறட்டும், இவர் மனசு நாறக்கூடாதுப்பா"

"என்ன சொல்றதுனே தெரியலே மாமி. உங்களுக்காகவாவது இவர் சீக்கிரம் உயிர் விடணும்னு தோணுது, சொல்றேனேனு தப்பா நினைக்காதீங்கோ" என்றேன் தயங்கித் தயங்கி.

"நானும் அதைத்தான் வேண்டிக்கிறேன். புத்திர சோகம் பௌத்திர சோகம் ரெண்டும் பாத்தாச்சு.. சரி பொட்டுனு போயிடும்னு பாத்தா, உசிர் இலுப்பச்சட்டி பிசுக்காட்டம் ஒட்டிண்டுனா இருக்கு..?..

..இவருக்கு முன்னால நான் போயிடணும்னு தினம் வேண்டிக்கிறார் சைவப்பிள்ளைவாள். வாய் பேசாட்டா என்ன? இவர் நினைக்கறது நேக்குத் தெரியாதா? அதே லாஜிக்கு தான். அவர் போயிட்டா என் மனசு நாறிடுமாம். ஏன்னு கேளு.. என் மனசுல இவர் முழுக்க முழுக்க இருக்காராம், அதனால என் மனசு நாறக்கூடாதாம். என்ன சுயநலம் பாரு.. கையைக் காணோம், காலைக் காணோம், வாயைக் காணோம்னா பிசுநாறிப் பிராமணர் போகவும் காணோம்.. என்னையே நினைச்சுண்டு நைநைனு உசிரைப் பிடிச்சிண்டிருக்கார்.." என்று மாமி கண்களைத் துடைத்துக் கொண்டார். "ரெண்டு பேரும் பொட்டுனு ஒரே டயத்துல போயிட்டா நல்லாயிருக்கும்"

ஆதரவாகச் சிரித்தேன். "அதெல்லாம் நடக்கிற காரியமா? நம்ம கைலயா இருக்கு?"

"எல்லாமே நம்ம கைலதான் இருக்கு துரை. ஆனா எசகு பிசகா நடந்துடக்கூடாதேனு பயம், அதான். எங்களால மனசால சந்தோசமா இருக்க முடியற வரைக்கும்.. மனசு நாறாத வரைக்கும் வாழ்ந்து பாத்துடணும். செத்தப்புறம் பேரக்குழந்தையோட வாசனை தெரியாதே?"

வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மாமி அவசரமாக எழுந்தார். மாமியின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். "நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்ததுக்கு உண்மையிலயே இப்ப ரொம்ப சந்தோஷப்படறேன். கவலைப்படாம உள்ளே போய் உக்காருங்கோ" என்றேன். மெள்ள நடந்துக் கதவைத் திறந்தேன்.

ரகு. சிரித்தபடி உள்ளே வந்துக் கதவடைத்தான்.

    ரகுவைப் பார்த்ததும் முன்பிருந்த ஆத்திரம் திரும்பும் என்று நினைத்த எனக்கு வியப்பு. என் மனதைப் புரிந்தவன் போல் ரகு, "ரொம்ப தேங்க்ஸ்" என்றான். பெட்ரூமிலிருந்து வெளியே வந்த மாமியிடம், "எல்லாம் வசதியா இருக்கா?" என்றான். மாமி பதில் சொல்லுமுன், "நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போகணும், கவனமா இருங்கோ.." என்றான்.

"வேண்டாம் ரகு, மாமி விஷயம் தானே? இங்கயே பேசுவோம்" என்றேன்.

என்னைக் கீழாகப் பார்த்த ரகு, "யூ ஷூர்? மாமியை எங்கே கூட்டிண்டு போறதுனு முடிவெடுக்கணும்.." என்றான்.

"மாமியைப் பத்திப் பேசறதா இருந்தா அவங்க முன்னிலைல தான் பேசணும்.. எங்கே போறதுங்கற முடிவுல மாமிக்குப் பங்கு வேண்டாமா?"

மாமி எங்களிருவரையும் பார்த்தார். "ஒரு வாய் காபி சாப்பிடறேளா ரெண்டு பேரும்?"

"வேண்டாம் மாமி" என்றான் ரகு. "ஓகே துரை. அதுக்கு முன்னால உன்னோட இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். நன்றி சொல்லிடறேன். அதோட உனக்கு உண்டான அதிர்ச்சிக்கு நான் எத்தனை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. நான் உன்னை வஞ்சிக்கணும்னு நினைக்கவே இல்லை துரை, சத்தியமா உன்னை ஏமாத்தி இவங்களை இங்கே கொண்டு வர நினைக்கவில்லை" என்றான்.

நான் மாமியைச் சங்கடத்தோடு பார்க்க, மாமி அவசரமாக எழுந்து போவது போல் எழுந்து உட்கார்ந்தார். ரகு தொடர்ந்தான். "உன்னோட பேசினப்புறம் எனக்கு என்ன செய்யுறதுனே தெரியலே துரை. யுவான் கிட்டே இன்னும் ஒரு நாள் பேஸ்மென்டுல இவங்களை வச்சுக்க முடியுமானு கேட்டேன். அவன் 'மாமி எதுவும் சாப்பிடலே, கஷ்டமா இருக்கு'னு சொல்லி வருத்தப்பட்டான். உன் வீட்டுல கொண்டு விடறதா சொல்லியிருந்தேனா.. அதைப் பத்திக் கேட்டான். நம்ம பேச்சுவார்த்தை பாதிலயே முறிஞ்சு போச்சுனு சொன்னேன். அப்புறமா போன் பண்றேன்னு சொல்லி போனை வச்சுட்டான். அப்புறம் ரெண்டு மணி நேரம் கழிச்சு எனக்கு போன் செஞ்சான். ரெண்டு பேரையும் உங்க வீட்டுல விட்டு வந்ததா சொன்னான். எனக்கு பெரிய அதிர்ச்சி. உங்கிட்டே எப்படிச் சொல்றது? அவனே சொல்றதா சொன்னான். என்னை ரெண்டு நாள் வெளியூர் போகச் சொன்னான். அதான் நீ வந்தப்போ நான் இல்லை. நீ சும்மா வெயிட் பண்ண வேண்டாமேனு செக்யூரிடில ஊருக்குப் போறதா சொல்லிட்டுப் போனேன். ஆனா, ஐ குட் நாட் மேக் பீஸ் வித் மை கான்சியன்ஸ்..."

"இட் இஸ் ஓகே ரகு. நீ மேலே எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் தான் உங்கிட்டே மன்னிப்பு கேக்கணும். மாமி கிட்டேயும்.. மாமி என் வீட்டுல தான் தங்கணும்னு நான் சொன்னதா நீ மாமிகிட்டே சொல்லியிருக்கே. அதுக்கு நன்றி" என்று மாமியைப் பார்த்தேன். மாமி எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார். எனக்கு நாக் குழறியது. "மாமி.. என்னை மன்னிச்சுடுங்கோ.. நீங்க நெனச்ச மாதிரி நான் ஒண்ணும்.." என்று தடுமாறினேன்.

"நீயும் விழுந்துட்டியா மாமியோட வலையில?" ரகு பலமாகச் சிரித்தான். "எதுக்கு இவங்களுக்கு உதவுறேனு என்னைக் கேட்டியே? திஸ் இஸ் வை. மாமி மாதிரி ஆட்கள் நமக்கே தெரியாம நம்மை மனுசனாக்குறாங்க. நான் ஏன் அவங்களுக்கு உதவி செஞ்சேன்னு இன்னி வரைக்கும் எனக்குத் தெரியாது. உண்மையிலே நான் உதவி செய்யறதாக் கூட நினைக்கவே இல்லை. இது.. தர்மம்னு சொன்னா உனக்குக் கோபம் வரும். ஆனா இது ஒரு டைப் தர்மம். சுயதர்மம்னு வச்சுக்கயேன்? நீ என்னை விட எத்தனை சட்டம் பேசினே? தர்க்கம் பண்ணினே? எத்தனை லாஜிக் பார்த்தே? இப்ப என்ன ஆச்சு? சட்டத்துக்கு மேலே போய், நியாயம் என்ன நியாயத்துக்கு மேலே போய், தர்மம் என்ன தர்மத்துக்கும் மேலே போய், ஸ்வதர்மம்னா என்னனு புரிஞ்சுட்டிருக்கே.."

"ஐயம் சாரி ரகு. மாமி, நீங்களும் என்னை மன்னிக்கணும். நேத்திக்கு வீட்டுக்கு வர வரைக்கும், வந்தப்புறமும் கூட, என் மனசுல ஆத்திரமும் கோபமும் இருந்தது. ஆனா உங்களோட பேசினப்புறம், நீங்க சாதம் ஊட்டறதைப் பாத்தப்புறம்.. என்னவோ தெரியலே மனசு மாறிட்டேன். எப்படி இருந்தாலும் வீடு வந்தவங்களை வெளில துரத்தியிருக்க மாட்டேன்னாலும்.. நேத்திக்கு நான் ரொம்பக் குழம்பிப் போயிருந்தேன்.."

"போறதுப்பா.. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறே. வாழ்க்கைல நாம மனசால தினம் கொஞ்சமாவது உசரணும்னு இவர் அடிக்கடி சொல்வார். நீங்க ரெண்டு பேரும் ஆகாசத்துக்கே உசந்துட்டேள்.. நானும் இவரும் நாலு ஜன்மத்துக்கு உங்களுக்கு குழந்தைகளாப் பிறந்துத் தாங்கினாக் கூட இந்தக் கடனை அடைக்க முடியாது.. போறது விடுங்கோ"

ரகு மீண்டும் சிரித்தான். "வெளியில துரத்தறதப் பத்திப் பேசுவோம். என் கலீக் ஒரு மாசம் குடும்பத்தோட இந்தியா போறான். வெள்ளிக்கிழமை சாயங்காலத்துலந்து ப்ரீமான்ட்ல அவன் வீடு காலியா இருக்கும். நான் இவங்களை அழைச்சுட்டுப் போயிடறேன். அதுவரைக்கும்..." என்றான்.

"ஒரு மாசத்துக்கப்புறம்?" என்றேன்.

"அதுக்குள்ள இமிக்ரேசன் விளையாட்டு முடிஞ்சுரும். திரும்ப அங்கயே போயிடலாம், இல்லை ஒண்ணு ரெண்டு மாசத்துக்கு வேறே தற்காலிக இடம் பாத்துக்கலாம்"

"அதுக்கப்புறம் என்ன செய்வே?"

ரகு என்னைத் தீவிரமாகப் பார்த்தான். "வாட் டு யூ ஹேவ் இன் மைன்ட்?"

"இவங்களை ஒரு சர்க்கஸ் கம்பெனியா என்னால பாக்க முடியலே ரகு. தே நீட் எ ஹோம். நேத்து ராத்திரிலந்து யோசிச்சிட்டிருந்தேன். இன்னிக்குக் காலைல எங்க ஹெச்.ஆர் வக்கீல் கிட்டே ரொம்ப நேரம் பேசிட்டு வந்தேன். அம்னெஸ்டி இன்டர்நேஷனல்ல ப்ரோ போனோவா நிறைய வேலை செய்றாராம். அகதியா தஞ்சம் கேட்டா இவங்களோட நிலமையை வச்சு குடியுரிமை கிடைக்கலாம்னு சொல்றாரு. இவங்களுக்கு அசைலம் பெடிஷன் போடுவோம்"

ரகு வெடித்தான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. "வாட்? இவங்க பத்தின டீடெய்ல்ஸ் ஏதானும் கொடுத்தியா?"

"இல்லை.. பட் ஐ வில்"

"ஸ்டாப் இட். தஞ்சம் கேட்டு பெட்டிசன் போட்டா அதுக்கு சான்ஸ் எத்தனை பர்சன்ட்னு சொன்னானா உன்னோட வக்கீல்?"

"அஞ்சு சதவிகிதம்னு.."

"அப்ப மிச்ச தொண்ணூத்தஞ்சுக்கு எங்கே போகச் சொல்றான் உன் வக்கீல்? கிடைக்கலேன்னா இவங்க நிலமை என்ன ஆகும்னு சொன்னான் உன் வக்கீல்?"

"ரகு.. டேக் இட் ஈஸி. என் வக்கீல்னு சும்மா அழுத்தாதே.. னான் இல்லை, னாள்.. ஷி.. இஸ் ஏ லாயர், நாட் மை லாயர். அவ வேண்டாம், நீதான் மனு போடேன்?"

"இது எனக்குத் தெரியாம இருக்கும்னு நினைச்சியா? அமெரிக்காவை விட கேனடால சான்ஸ் அதிகம். அங்கே கூட நான் விசாரிச்சாசு.. இவங்களோ இங்கதான் உயிரை விடணும்னு இருக்காங்க. மாமி சொல்லியிருப்பாங்களே? அர்த்தமில்லாம நான் பண்ற ஆயிரம் லாஜிகல் விஷயங்களை விட, அர்த்தத்தோட நான் பண்ணின ஒரு இல்லாஜிகல் விஷயம்.. மாமியோட இல்லீகல் ஸ்டேடஸ்.. எனக்கு முக்கியம்னு இப்ப புரிஞ்சுட்டிருப்பியே?"

"உனக்கு முக்கியமா, மாமிக்கு முக்கியமா ரகு? முயற்சி கூட செய்யாம தீர்மானிச்சா? ஒருவேளை அம்னெஸ்டி வழியாக் குடியுரிமை கிடைச்சா? கேனடாவுல கிடைச்சாக்கூட இங்கே வந்து இருந்துட்டு ஒரு வருஷத்துக்கொருக்க கேனடா போய்ட்டுத் திரும்பிடலாமே?"

"நோ. மாமி இங்கயே இருக்கட்டும். நான் அவங்களை இங்கயே பாதுகாப்பா எங்கயாவது வச்சுக்கறேன்"

"ரகு.. மாமியை நீயே ஒரு பெட்டிக்குள்ள வேணும்னாலும் பூட்டி வச்சுக்கோ. ஆனா அந்த பெட்டிக்குள்ள தன் இஷ்டத்துக்கு இருக்க மாமிக்கு சுதந்திரம் வேணும்.. எதிர்பார்ப்பில்லாதப் பரோபகாரம்னா என்னனே உங்கிட்டே தான் கத்துக்கிட்டேன். இருந்தாலும், பழைய தவறுகள் தொடர நான் அனுமதிக்க மாட்டேன்"

"என்ன செய்யப் போறே?"

"கருணைத் தஞ்சம் மனு போடுவோம்"

"நான் முடியாதுனு சொன்னா?"

"முடியாதுனு மாமி சொல்லட்டும்".

இருவரும் மாமியைப் பார்த்தோம். விவரங்களைச் சொன்னோம். மாமி தயங்காமல், "கருணை மனு போட்டுப் பாத்துருவமே? கிடைக்கலேன்னா இருக்கவே இருக்கு, உலகம்மை காட்டுற வழி" என்றார்.

"உங்க இஷ்டம் மாமி" என்று ரகு என்னைப் பார்த்தான். அவன் கண்களில் தோல்வியின் அவமானம் சட்டென்றுத் தெரிந்து மறைந்தது.

மறுநாள் ரகுவும் என் அலுவலக வக்கீலும் சேர்ந்து மாமியின் சார்பில் அம்னெஸ்டி வழியாகக் கருணைத் தஞ்சக் குடியுரிமைக்கான மனு கொடுத்தார்கள். உடனடியாகக் கிடைக்கவில்லையெனினும், மனு நிராகரிக்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து ஓடி ஒளிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. ரகு அவர்களுக்கு சன்னிவேலில் ஒரு பழைய தனிவீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்தான். ஆறு மாதங்களுக்குள் மாமி பழையபடி மெஸ் துவங்கினார் என்று கேள்வி. அதற்குள் எனக்கு பாஸ்டனில் பெரிய வேலை கிடைத்ததால் எல்லாவற்றையும் விட்டு, படிப்பையும் நிறுத்தி, கிழக்கே ஓடி வந்துவிட்டேன். ரகுவுடன் அவ்வப்போது இமெயில் தொடர்பு இருந்தாலும் பழைய நெருக்கம் திரும்பவில்லை.

    போன மாதம் நட்புக் கூட்டத்தில் பழைய நினைவுகள் எங்களை நெருங்க வைத்தன. ஏதேதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று "தென்காசி ராமலக்ஷ்மி மாமி ஞாபகம் இருக்கா?" என்றான் ரகு.

"ஷ்யூர்.. நம்மை மனிதராக்கினவங்களாச்சே?"

"மாமி போன வருசம் செத்துப் போயிட்டாங்க"

தலையாட்டினேன். "ஷி லிவ்ட்" என்றேன். "மனம் போல வாழ்ந்தாங்க. அத்தனை கஷ்டத்துக்கு நடுவுலயும் அவங்க ரெண்டு பேர் நெருக்கம் எனக்கு ஒரு ஆச்சரியம்.. அதைவிட நீ அவங்களுக்கு செஞ்ச உதவிகள் இப்பவும் நினைச்சா பெரிய ஆச்சரியமாத்தான் இருக்கு.. "

"எனக்கு என்ன ஆச்சரியம்னா, அவங்க ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்கனு தான்"

"வாட்?"

"கிட்டத்தட்ட இருபது வருஷம் அப்படியே இருந்தாங்க.. திடீர்னு ஒரு நாள் ரெண்டு பேருமே தற்கொலை செஞ்சிகிட்டாங்க. பசுபதியோட கையைப் பிடிச்சுக்கிட்டு மாமி செத்துப் போனது.. பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்த்து.. இத்தனை வருஷம் கழிச்சு இப்ப ஏன்னு... இன்னி வரைக்கும் புரியலே"

மாமியின் கூட்டுத் தற்கொலை நான் எதிர்பாராத அதிர்ச்சி. திடுக்கிட்டு, மெள்ள இயல்புக்கு வர அவகாசமெடுத்துக் கொண்டேன். "எனக்குப் புரியுது" என்றேன்.

ரகு என்னைக் கேள்வியோடு பார்த்தான்.

"மனசு நாறக்கூடாதுனு மாமி சொல்வாங்க" என்றேன்.

"என்ன சொல்றே?"

"காத்தாடி சமாசாரம்" என்றேன்.


முற்றும்.



sury siva, கீதா சாம்பசிவம், ஜீவியின் பின்னூட்டக் கருத்துக்களை இல்லாத உரிமையுடன் கதையில் சேர்த்திருக்கிறேன். மனமார்ந்த நன்றி.

25 கருத்துகள்:

  1. கையைக் கொடுங்க அப்பாதுரை சார்.... என்ன மாதிரி ஒரு கதை.

    மனதினை அப்படியே உலுக்கிப் போட்டுவிட்டது. எப்படிப்பட்ட மனிதர்களை உங்கள் கதை மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  2. நான் ரகுவோ அல்லது துரையோ அவர்கள் இருவரையும் கருணை கொலை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  3. சோக முடிவு என்று சொல்லியிருந்தீர்களே என்று பயத்தோடே படித்தேன். ரகுவோ துரையோ மனிதமின்றி கைவிட்டு இவர்கள் தவிப்பார்கள் என்று யோசித்துப் படிக்கத் தயங்கியிருந்தேன். இதைச் சோக முடிவாகப் பார்க்க முடியவில்லை. நிறைவு, இயல்பு. தாம்பத்த்யம் ஒரு சங்கீதம்தான்.

    பதிலளிநீக்கு
  4. .ஹ்ம்ம்.. இந்தியால்லாம் வேண்டாம்பா. எங்களுக்கு இங்கயே, இந்த மண்லயே, பிராணனை விட்டு அவாளோட கலக்கணும்.. இங்கயே பிராணனை விட்டா அவாளோட கண்டிப்பா சேந்துப்போம்னு ஒரு நம்பிக்கை. அந்த உலகம்மை அதையாவது எங்களுக்குச் செய்வானு ஒரு நம்பிக்கை.." என்று மாமி மீண்டும் கலங்கினார்.//

    நீங்கள் எழுதி இருப்பது எல்லமே கோடிட்டு காட்டலாம்.

    கதை என்று சொல்லமுடியவில்லை.

    இந்த மாதிரி இவர்களை அந்த உலகம்மை ஏன் சோதனை செய்தாள்?
    என்ற கேள்வி மண்டையை குடைகிறது.

    நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது இருந்தாலும் இந்த கதையை படித்த போது அதுவும் அவர்கள் எடுத்த் முடிவு வேறு என்ன முடிவு அவர்கள் எடுத்து இருக்க முடியும் என்று நினைக்க வைத்தது.
    மாமி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. //தலையாட்டினேன். "ஷி லிவ்ட்" என்றேன். "மனம் போல வாழ்ந்தாங்க. அத்தனை கஷ்டத்துக்கு நடுவுலயும் அவங்க ரெண்டு பேர் நெருக்கம் எனக்கு ஒரு ஆச்சரியம்.. அதைவிட நீ அவங்களுக்கு செஞ்ச உதவிகள் இப்பவும் நினைச்சா பெரிய ஆச்சரியமாத்தான் இருக்கு.. "//

    இந்த வரிகளுக்குப் பிறகு கதை இப்படி போயிருக்கலாமோ என்று தோன்றியது. ஃபர்கிவ் மி இஃப் ஐ ஸீ திஸ் இன் எ டிஃபரன்ட்
    ஆங்கிள்....

    இப்ப படிப்போம்.

    " ..........இப்பவும் நினச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு.."

    அது சரி.
    அப்பறம் எப்படி செத்தா ?

    நான் சொல்றதுல்லாம் நடக்குமா ? அப்படின்னு கேட்காதே !

    சரி...
    அப்படித்தான் நடந்திருக்கும்னு நான் சொல்றதற்கு எங்கிட்ட லீகல் மெடிகல் எவிடன்ஸ் எதுவும் இல்ல.
    இருந்தாலும் அவங்களோட பழகி அவங்க மன நிலையை நன்னா புரிஞ்சுண்டவன் அப்படிங்கற ரீதிலெ சொல்றேன்.
    எனக்குள்ளே ஏதோ ஒண்ணு அப்படி நினைக்குது...

    விசயத்துக்கு வா...

    ஒரு நாளைக்கு ராத்திரி ரொம்ப நேரம் லைட் இன்னமும் எரிஞ்சுட்டிருக்கே கிச்சன்லே அப்படின்னு, யுவான்
    உள்ளே போயிருக்கான்...

    போயி....

    இவா இரண்டு பேரும் ஒத்தர் கையை ஒத்தர் புடிச்சுண்டு அந்த அதே நாற்காலி மேலே விழுந்து கிடக்கா..
    தரைலே கஞ்சி கொட்டிப்போயிருக்கு, பாத்திரம் பாதி கவிழ்ந்து கொஞ்சம் கஞ்சி மிச்சமிருக்கு...

    பசுபதி வாயிலே இன்னமும் கொஞ்சம் கஞ்சி தேங்கியிருக்கு....
    மாமி பக்கத்துலெ.. இல்ல... அவர் மேலேயே சாஞ்சாப்போல விழுந்திருக்கா...

    நிசமாவா....
    தெரியாது... ஆனா யுவான் அப்படித்தான் சொன்னான்.
    என்ன செய்யறதுன்னு தெரியாம...

    எனக்கு ஃபோன் பண்ண நான் போய் பார்த்தா, எல்லாமே முடிஞ்சு போயிருக்கு....

    என்ன ஆயிருக்கும் அப்படின்னா ? மாமி தினமும் போல கஞ்சி கொடுக்கறதுக்கு வந்திருக்கா.. கிழவர் வாய திறக்கல்ல..
    திறங்க...திறங்க ... அப்படின்னு மாமி கதறி .. வாயத் துறந்து கொஞ்சம் கஞ்சியையும் ஊத்தி இருக்கணும்...
    அந்த கடைசி வாய் கஞ்சிக்காக கிஞ்சித்தேனும் அந்த பசுபதியோட உயிரு உடல்லே இருந்திருக்கணும். அப்படியே
    அவர் கண்ணைத்துறந்துண்டே சாஞ்சுட்டார். அதப் பாத்து மாமிக்கு ஸடன் ஷாக் . ஒரு மாஸிவ் ஹார்ட் அடாக்லே
    அவளும் கீழே விழுந்துருக்கணும்...

    ச்...ச்...ச் .... என்ன சொல்றதுன்னே தெரியல்ல...

    வேற மாதிரி அவா முடிவு இருக்கும்னு தோணல்லெ... ஏன்னா அவா வாழ்ந்த விதம் அப்படி... அவா ஒத்தரை ஒத்தர்
    புரிஞ்சுண்டு வாழ்ந்த விதம் அப்படி...


    அவர் எனக்கு முன்னாடி போயிடணும் அப்படின்னு மாமி சதா வேண்டிண்டு இருந்தா...
    ஆமா.


    யூ பிகம் வாட் யூ பிலீவ்.

    இதயெ தான் அந்தக்காலத்துலேயும் சொல்லிருக்கா..

    என்னன்னு...?

    யத் பாவம் தத் பவதி...

    நீ என்ன நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்....


    சுப்பு ரத்தினம். @ சுப்பு தாத்தா.

    இஃப் யூ ஃபீல் திஸ் என்ட் இஸ் ட்ரமாடிக் ஆர் ஈவன் மெலோ ட்ரமாடிக், ஐ ஆம் ஸாரி .











    பதிலளிநீக்கு
  6. கதை என்று தோன்றவில்லை.. 3ம் சேர்த்துப் படித்ததும்..

    சில சமயம் நடக்கிறதை வேடிக்கை பார்க்கிற பொறுப்பு மட்டும் நமக்குன்னு நினைக்கிறேன்..

    வேறென்ன சொல்ல..

    பதிலளிநீக்கு
  7. ஒண்ணும் எழுதத் தோணலை. முதல் பாகம் படித்ததிலிருந்து அந்தத் தம்பதியர் ஞாபகமாகவே இருக்குது. தற்கொலைதான் என்றாலும், ஒன்றாகவே இறந்தார்கள் என்பது நிம்மதி தருகிறது.

    பதிலளிநீக்கு
  8. Tears roll down from my eyes - heart has become very heavy - mind is paralysed hence do not know in words the effects in thoughts created by this post. Make me to think from different angles but unable to concentrate to think from one angle. Felt very bad sorry sad after reading this post.

    பதிலளிநீக்கு
  9. மனம் மிக கனத்துப் போனது
    நேரடி நிகழ்வாகச் சொல்லாமல்
    தகவலாகச் சொன்னதே மிகச் சிறப்பு
    சூரித்தாத்தா சொன்னதைப் போலத்தான்
    நடந்திருக்கவேண்டும்.சூரியன் உதிப்பது கிழக்கு
    என ஏன் சொல்லவேண்டும் ?

    பதிலளிநீக்கு
  10. இப்ப‌டிப் ப‌ட்ட‌ "தற்கொலை" முடிவு தான் என்றால், அதை எப்போதே எடுத்திருக்க‌லாமே?
    இவ்வ‌ள‌வு பாடுக‌ள் ப‌ட்டிருக்க வேண்டாம், உங்க‌ளை ப‌டுத்தியிருக‌வும் வேண்டாம் தானே?

    மாமி (ஆன்டி) கிளைமாக்ஸ்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாடிசம்பர் 18, 2012

    // மாமியை நீயே ஒரு பெட்டிக்குள்ள வேணும்னாலும் பூட்டி வச்சுக்கோ. ஆனா அந்த பெட்டிக்குள்ள தன் இஷ்டத்துக்கு இருக்க மாமிக்கு சுதந்திரம் வேணும்.//
    மனதை தொட்ட வரி.
    மனம் நிறைவாக இருந்தால் எப்படியும், எந்த நிலையிலும் வாழலாம். நீங்க முன்னாடி எழுதி இருந்ததை படித்த போது அவர்களுக்கு என்ன ஆகுமோ என்று
    மனதில் ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. இந்த முடிவு மனநிறைவை கொடுக்கிறது.
    அருமையான சிறுகதை. அற்புதமா எழுதி இருந்தீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அப்பதுரை அவர்களே! எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத முடிவு! அவர்கள் ஏன் வாழக்கூடாது? எழுத்தாளன் நம்பிக்கையின்மையை விதைக்கலாமா! எனக்கு என்னமோ தவறான செய்தியை வாசகனுக்குகொடுத்துவிட்டிர்களோ என்று குறையாக இருக்கிறது ! உயிரோடு இருந்தால்கஷ்டப்படுவார்களா ! படட்டுமே ! அது தானே யதார்த்தம்! நானும்,நீங்களும் ,அந்த ரகுவும்,மீனாட்சி,ஜீவி,ஸ்ரீ ராம் ஆகிய அத்துணை பேரும் ஏன் இந்த சாமூகம் முச்சூடும் அவர்கள் கஷ்டத்தை பார்த்துக் கொண்டுதானே இருந்தோம் ! துரும்பை அசைக்க தைரியமில்லை ! நம்கோழித்தனத்தை அந்ததம்பதியர் மீது சுமத்த உங்களுக்கு உரிமைகொடுத்தது யார்! எங்கேயோ நம் சிந்தனையில் கோளாறு! ---கஸ்யபன்

    பதிலளிநீக்கு
  13. 'அஞ்சுவது ஒளியையா, இருளையா?'

    sury Siva கூறிய முடிவுதான் மனதை ஆறுதல்படுத்துகிறது ...

    மனது நாறிய தற்கொலை முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்..

    எத்தனை சிரமப்பட்டார்கள் ..
    கடைசியில் இந்த முடிவை எடுக்கவா ..??

    பதிலளிநீக்கு
  14. துரை அவர்கள் இருவரும் ஒன்றாக மறைந்ததில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை. கை மீறிப் போன நிலையில் மாமி இந்த முடிவை எடுத்திருக்கவேண்டும்.இதுபோல ஒரு கதை இதுவரை படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  15. //"நேத்திக்கு உனக்கு சரியா நன்றி சொல்ல முடியாம போயிடுத்துப்பா" என்றார் மாமி..என் பிள்ளையாட்டமா இப்படி எங்களைத் தாங்குறியே..?" என்ற மாமியின் குரல் கம்மியது.//

    இந்த அத்தியாயத்தில் மாமியின் கேரக்டரைக் கொஞ்சமே கொஞ்சம் செப்பனிட்டிருப்பதற்கான காரணமும் புரிந்தது. அதுவே மாமியின் இயல்புத் தன்மை போய்விட்ட மாதிரியான உணர்வையும் தோற்றுவித்தது. இருந்தாலும் செய்த வரை சரிதான் என்று மனசைத் தேற்றிக் கொண்டேன். இல்லையென்றால், இந்தக் கதையும் இந்த அத்தியாயத்தோடு முடிவதால், அதோடு மாமி-பசுபதியின் கதையும் முடிவதால், இப்போ அதைச் செய்தால் உண்டு. வேறு தருணம் வாய்ப்பதற்கில்லை என்பதினால் சரி.
    செய்ததினால், மொத்தப் பெருமையையும் ரகுவும்,துரையும் வாரிச்சுருட்டிக் கொண்டு போகாமல் சமன்படுத்தப்பட்டிருப்பதையும் சொல்ல வேண்டும்.

    //மாமி வெகுளியல்ல என்றுப் புரிந்தது.//

    இப்பத்தானா?.. எப்போதோ மாமி வெகுளியில்லை என்பது புரிந்து விட்டது. எல்லா நேரங்களிலும் அவர் தன்னைச் சுற்றியே நினைப்பதிலும் இந்த அத்தியாயத்திலும் அது தெரிகிறது. ரகு, துரை, யுவான் எல்லாரும் தனக்கான கசிந்து உருகணும்ங்கற கடப்பாடு ஏன் இருக்கணும்ங்கற எண்ணம் கொஞ்சம் கூட மாமிக்கு இல்லே பாருங்கோ..

    //மாமியோட இல்லீகல் ஸ்டேடஸ்.. எனக்கு முக்கியம்னு இப்ப புரிஞ்சுட்டிருப்பியே?".. //

    ரகுவின் இந்தத் தீவிரம்?.. தொடர்ந்து எழுத வாய்ப்பிருந்தும், முடிச்சிட்டீங் களே!

    //"எனக்கு என்ன ஆச்சரியம்னா, அவங்க ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்கனு தான்"//

    அதுக்குத் தான் மாமியே சொல்லிட்டாங்களே!...

    "ரெண்டு பேரும் பொட்டுனு ஒரே டயத்துல போயிட்டா நல்லாயிருக்கும்"

    ஆதரவாகச் சிரித்தேன். "அதெல்லாம் நடக்கிற காரியமா? நம்ம கைலயா இருக்கு?"

    "எல்லாமே நம்ம கைலதான் இருக்கு துரை. ஆனா எசகு பிசகா நடந்துடக்கூடாதேனு பயம், அதான். எங்களால மனசால சந்தோசமா இருக்க முடியற வரைக்கும்.. மனசு நாறாத வரைக்கும் வாழ்ந்து பாத்துடணும்."

    நிறைய கொக்கிகள்.. மொட்டை மாடியில் மேற்கொண்டு கட்டிடம் எழுப்ப செங்கல்களை துருத்தியபடி நீட்டி கட்டி வைப்பார்களே, அது போல மேற்கொண்டு கதையை நீட்டிக்க சாவகாசமான நிறைய முன்னேற்பாடுகள். வேறொரு சமயத்திலும் வேறு வகையான பாத்திரப்படைப்புகளோடு தொடரலாம்.

    இந்தக் கதையில் எதிர்பாராமல் கதைக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் இடையில் வந்த 'உயிர்' பற்றிய
    கலந்துரையாடல், வேறொரு தருணத்தில் கிளைபரப்பி தழைத்து
    நிழல் தரும் என்று நம்புகிறேன்.

    நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றி, அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  16. //..ஹ்ம்ம்.. இந்தியால்லாம் வேண்டாம்பா. எங்களுக்கு இங்கயே, இந்த மண்லயே, பிராணனை விட்டு அவாளோட கலக்கணும்.. இங்கயே பிராணனை விட்டா அவாளோட கண்டிப்பா சேந்துப்போம்னு ஒரு நம்பிக்கை. அந்த உலகம்மை அதையாவது எங்களுக்குச் செய்வானு ஒரு நம்பிக்கை.." என்று மாமி மீண்டும் கலங்கினார்.


    அந்த ஞாபகங்கள் எல்லாம் அப்படியே விஷ அம்பா மாறி அவர் மனசைக் குதறி எடுத்துடும். உடம்பு கிடந்து நாறட்டும், இவர் மனசு நாறக்கூடாதுப்பா"//

    கண்ணீர் பொங்கியது. என்ன சொல்ல! என்ன சொல்ல!

    //நான் ஏன் அவங்களுக்கு உதவி செஞ்சேன்னு இன்னி வரைக்கும் எனக்குத் தெரியாது. உண்மையிலே நான் உதவி செய்யறதாக் கூட நினைக்கவே இல்லை. இது.. தர்மம்னு சொன்னா உனக்குக் கோபம் வரும். ஆனா இது ஒரு டைப் தர்மம். சுயதர்மம்னு வச்சுக்கயேன்?//

    ஆஹா, நல்ல விளக்கம்.


    //ரகு என்னைக் கேள்வியோடு பார்த்தான்.

    "மனசு நாறக்கூடாதுனு மாமி சொல்வாங்க" என்றேன்.

    "என்ன சொல்றே?"

    "காத்தாடி சமாசாரம்" என்றேன். //

    ம்ம்ம்ம்?? முடிவு தான் ஏத்துக்க முடியலை. இத்தனை வருடம் தாக்குப் பிடிச்சுட்டு திடீர்னு தற்கொலைனா??? ஆனா இம்மாதிரியான ஒரு முடிவை எதிர்பார்த்தேன். சூரி சார் சொல்லி இருக்காப்போல் மாமி பசுபதிக்கும் விஷத்தைக் கொடுத்துட்டுத் தானும் விஷம் தின்று செத்துப் போவார்னு தான் நினைச்சேன்.

    மனதை மிகவும் பாதித்த கதை. கதைனு நினைக்க முடியலை.

    பதிலளிநீக்கு
  17. மாமியின் குரல் காதிலேயே ஒலிப்பது போன்றதொரு பிரமை இன்னமும். :)))))

    பதிலளிநீக்கு

  18. அப்பாதுரை அவர்களே, ஒருவரை சார்ந்து ஒருவர் வாழும் நிலையிலுள்ள முதியவர்களின் எண்ணக்கிடக்கைகளை அந்த மனசுக்குள்ளேயே போய்க் காண்பதுபோல் எழுதி இருக்கிறீர்கள். மனோதத்துவம் தெரிந்தவரோ? இல்லை அதற்கு மேலும் புத்திசாலித்தனமாக யூகிக்கும் உங்கள் அறிவும் கண்டு உங்களுக்கு ஒரு பட்டம் தருகிறேன். தயை கூர்ந்து பெற்றுக் கொள்ளுங்கள். விவரம் என் பதிவில். நன்றி.

    பதிலளிநீக்கு

  19. கதையின் கரு உங்களுடையது, கதா பாத்திரங்கள் உங்களது எண்ணத்தில் எழுவதைத்தானே செய்ய முடியும்.இவர் இப்படி செய்திருக்கலாம், அவர் அப்படிச் செய்திருக்கலாம் என்று எண்ணுவதே தவறோ என்று தோன்றுகிறது.நீங்கள் கதையை அணிகிய முறை மிகவும் எதார்த்தமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். ரசித்தேன். ஒரு எழுத்தாளன் அவனது எண்ண ஓட்டங்களைத்தான் கதையில் கொண்டு வரமுடியும். அதை சிலர் விரும்பலாம், சிலர் விரும்பாது இருக்கலாம். ரசிப்பதும் அல்லாததும் அவரவர் சுதந்திரம். I liked it APPATHURAI.!

    பதிலளிநீக்கு
  20. உண்மையில் கதையல்ல நிஜம்மாதிரிதான் இருக்கு... அழகான ஆழமான காதல்... சில இடங்களில் படிக்கும் போது நம்மையும் மீறி கண்ணீர் துளிர்க்கின்றது...

    அருமை சார்... உங்கள் கர்ப்பனை..... இன்னும் எதிர் பார்க்கின்றோம்.... நன்றி...

    பதிலளிநீக்கு
  21. மூன்று பகுதிகளையும் தொடர்ந்து படித்தப் பொறுமைக்கு நன்றி. பின்னூட்டங்களுக்கு நனி நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்தக் கதையைப் பற்றிய கருத்துக்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதவில்லை என்ற குறையாக இருக்கிறது.

    இந்தக் கதையின் மாமி ஒரு possessive & patronizing lovebird. பசுபதியின் நிலை வெந்த கத்திரிக்காய்க்குச் சமம். இதை அதிகமாக வெளிப்படுத்தவில்லை. 70 வயதுக்கு மேற்பட்ட சில முதிர்ந்த தம்பதிகளை நேரில் கண்டிருக்கிறேன்/நீங்களும் கண்டிருக்கலாம். சாதாரணமாக இயங்கக் கூடிய கணவர்கள் கூட வெந்த காய்கறியாக இருக்கையில், உடல் ஊனம் கொண்ட பசுபதியை மாமி was dominating என்பதில் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. என் குடும்பத்திலே இதைக் கண்டிருக்கிறேன். in fact, மாமியின் பாத்திரம் பெருமளவுக்கு என்னுடைய பாட்டியை மனதில் வைத்து எழுதியது.

    'இருவருமே தற்கொலை செய்து கொள்கிறார்கள்' என்றதால் இதில் பசுபதிக்கும் உடன்பாடு உண்டு. அல்லது ஒன்று கொலையாகி விடும் இல்லையா? 'இது வாழ முடியாததால் எடுத்த முடிவில்லை ரகு, வாழ்ந்து முடித்ததால் எடுத்த முடிவு' என்று துரை சொல்வதாக ஒரு வரி இருந்தது. சுவாரசியம் குறையுமென்று நீக்கிவிட்டேன். தவறாக இருக்கலாம்.

    மாமி வாழ்க்கையை நேசிக்கிறவர் என்று முதல் பகுதிகளில் சொல்ல முயன்றேன். 'செத்தப்புறம் பேரக்குழந்தையோட சுவாசத்தை அனுபவிக்க முடியாதே' என்று சொல்லும் மாமி, நிகழ்ந்து மறைந்த சுவாசத்தை அனுபவிக்கும் ஒரு நபர், வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பதில் கோழைத்தனம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இன்றைய சூழலில் வெளிப்பார்வையில் இதை பார்க்கும் பொழுது சிலருக்குத் தவறாகப் படுகிறது. எண்பது வயதின் ஆதரவற்றத் தள்ளாமையில் மனம் நாறக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

    'தற்கொலை' என்பது பொறுப்பில்லாத செயல். அறிவற்ற செயல். 'வாழ்வை முடித்துக் கொள்வது' அப்படியல்ல. ஆனால் அந்தச் செயலுக்குப் பொருத்தமான ஒரு வார்த்தை கூட இன்றைக்கு நம் அகராதியில் இல்லை. வரும் நாளில் நிச்சயம் அந்தச் சொல் 'தற்கொலை'யாக இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் உரிமை உண்டு என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் அந்த முடிவை அறிவுடன் பொறுப்புடன் எடுக்கும் முதிர்ச்சி வரும் என்றும் நம்புகிறேன்.

    இந்தக் கதையில் வரும் தம்பதிகள் இணைந்தே அந்த முடிவை சரியான காலக் கட்டத்தில் எடுத்தார்கள் என்று நம்புகிறேன். நம்பலாம்.

    தொடர்ந்து படித்தமைக்கும், பின்னூட்டம் மின்னஞ்சல்களுக்கும், தொலைபேசியதற்கும் கோடி நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லாடிசம்பர் 21, 2012

    இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    பதிலளிநீக்கு