2012/01/15

கரையோரம்    ரவுச் சாப்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதென்று இந்த வருடம் புத்தாண்டு தினத்தன்று உறுதியெடுத்தேன்.

இதுவரை இரண்டு நாள் தவிர்த்திருக்கிறேன். (அதற்கு மேல் முடியவில்லை :)

புதிதாக எதுவும் வேண்டாம். போன வருடம் செய்தத் தவறுகளைச் செய்யாதிருந்தாலே போதும் என்றுத் தீர்மானித்து விட்டேன். new year resolutions for the infernally dumb என்று யாராவது புத்தகம் எழுதினால் கும்பிடுவேன்.


    மீபத்தில் படித்தச் சுவையானப் புத்தகம்.

போர், காமம், உணவு - மனித வாழ்க்கை நெறிகளையும், சமீப நூற்றாண்டுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், இந்த மூன்று தேவைகளும் எப்படித் தூண்டி வளர்த்திருக்கின்றன என்பதைப் பற்றியப் புத்தகம்.

மனிதனின் அடிப்படைத் தேவை உணவு மட்டுமே. அந்தத் தேவையே பரிணாம வளர்ச்சியில் பலவிதமாக வெளிப்பபட்டிருக்கின்றன என்கிறார் ஆசிரியர் பீடர் நோவேக்.

நாலு கால் பிராணியாகத் திரிந்து கொண்டிருந்தவர்கள் இரண்டு கால் பிராணியாக எழுந்து நின்றதன் அடிப்படையில் போர், காமம், உணவு மூன்றும் உண்டு என்று எழுதியிருப்பது சுவாரசியம். பெண் துணைக்காக ஆண் குரங்கினம் அடித்துக் கொண்ட காலத்தில், சில பலவீன புத்திசாலிக் குரங்குகள், சாப்பாடு தேடி எடுத்துக் கொடுத்து பெண் குரங்குகளைக் கவரத் தொடங்கின. சாப்பாட்டைச் சுமந்து கொண்டு பயணிக்க இரண்டு கைகள் இரண்டு கால்கள் தேவைப்பட்டன. பரிணாம வளர்ச்சி தொடங்கியது. விவரங்களில் இருக்கிறது விவகாரம். நம்ப முடிகிற ஆச்சரியம்.

விடியோ கேமரா தொழில்நுட்பம் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கக் காரணம் நீலப்படங்கள் என்கிறார். தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் போர் உதவியது போல் போர்னாக்ரபி உதவுகிறது என்று சொல்வதுடன் நிற்காமல் நிறைய விவரங்கள் தந்திருக்கிறார். interesting.

உணவில் biotechnologyன் influenceஐப் படிக்கும் பொழுது கொஞ்சம் பக் என்று இருக்கிறது. ஏறக்குறைய 90% உணவு வகைகளில் genetic modification ஏதோ ஒரு விதத்தில் நடைபெறுகிறது என்கிறார். அடுத்த இருபது வருடங்களில் fully synthetic தானியங்கள் காய்கறிகள் கிடைக்குமாம். [ஹ்ம்ம். 2100க்குள் இப்படி நடக்கலாம். estrogen கலந்த பால் குடித்துப் பழகி அநேகமாக homosexual ஆண்கள் அதிகமாகப் புழங்கும் வீடு. தொழில் நுட்பம் இருப்பதால் கல்வி, வேலை, வணிகம் எல்லாம் வீட்டில் இருந்தபடியே. சமையல் உரையாடல்: 'அந்த ப்லேஸ்டிக் வெண்டைக்காயைப் போட்டு modified தண்ணீர் கலந்து உப்பில்லாம சாம்பார் வைடா தங்கம்'.]

அமெரிக்க ராணுவம், pornography (தமிழ்ச்சொல் தெரிந்தால் சொல்லுங்கள்), மற்றும் McDonalds - இவை மூன்றும் சிக்கலானத் தொழில்நுட்பம் உலக அளவில் சாதாரணமாகப் புழங்குவதற்கு எப்படிக் காரணமாகின்றன என்று நிறைய உதாரணங்கள், விவரங்களுடன் விளக்கும் புத்தகம் Sex, Bombs and Burgers. ஆசிரியர்: Peter Nowak. (இது போன்ற தலைப்புகள் குறைந்தபட்சம் புத்தகத்தை எடுத்து நாலு பக்கமாவது புரட்ட வைக்கின்றன :)


    ருங்காலத்தில் சமூக, கல்வி, இன, பொருளாதார, சட்ட, தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து வருட இறுதியில் சிகாகோவில் ஒரு வாரக் கருத்தரங்கு நடக்கும். நிறைய forward, lateral, oob thinking ஆசாமிகளைச் சந்திக்கலாம். அளவளாவலாம். (வெட்டிப் பேச்சுக்குச் சரியானத் தமிழ்ச்சொல் என்று நினைக்கிறேன். வார்த்தையிலேயே வளவளா. அக்மார்க் onomatopoeia).

இலவசமாக intellectual கும்மி அடிக்கலாம் என்றாலும், சாப்பாட்டைக் குறை சொல்ல முடியாது. 'வருங்காலத் திருமணப் பத்திரங்கள் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். புதுப்பிக்கவில்லையெனில் தானாகவே காலாவதியாகும்' என்ற கருத்தில் நான்கு வருடங்களுக்கு முன் கருத்தரங்கில் பேசியிருந்தேன். தொடர்ந்து அழைப்பு விடுத்தார்கள். 2011ல் இடம் கிடைக்கவில்லை. ஓசிச் சாப்பாட்டை நிறையத் தின்றுவிட்டு உருப்படியாக எதுவும் கருத்து சொல்லாதது காரணமோ என்னவோ, யார் கண்டார்கள்?!

இடம் கிடைக்கவில்லையே என்று நினைத்த போது, இன்னொரு ஜன்னல் திறந்தது.

மெக்சிகோ நகரில் ஒரு கருத்தரங்கத்துக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அங்கே திருமணக் காலவரம்புச் சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம்! பரிசோதனை முறையில் ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள். தொடர்ந்து பரவ சமூக ரீதியில் என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு நிபுணர் கருத்தரங்கம். என்னை(யும்) மதித்து ஒரு கருத்தரங்க அழைப்பு. சும்மா விடலாமா? வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

மெக்சிகோவில் மாட்டுக்கறி நன்றாக இருக்கும். நம்மத் தலைவியே மாட்டுக்கறி சாப்பிட்டு சுவாகா பண்றப்ப, நாம சும்மா இருப்போமா? அதனால இந்த மாதிரி.. இந்த விதத்திலே.. சமைக்க வேண்டும் என்றுத் தெளிவாகச் சொல்லிவிட்டேன். "வெண்ணை மாதிரி பண்ணி வைக்கிறேன், வாங்கோண்ணா" என்று சொல்லியிருக்கிறார் chef. கருத்தரங்கம் எப்படிப் போகிறதோ, கறியை ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம்.


    ஹிஹ்ஹிஹ்ஹி...

இந்த கோல்கீப்பர் அன்றைக்கு எப்படி நொந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.


    ம்சி பதிப்பகம் நடத்தியச் சிறுகதைப் போட்டியில் யுகபுருஷன் கதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. திடீரென்று கிடைத்த அங்கீகாரம். நான் எழுதியதையும் படித்து மதித்து அங்கீகரித்தார்களே என்று நன்றி. நன்றி. நன்றி.

திடீரென்று வந்த மின்னஞ்சல்களையும் சந்திப்புக்களையும் எதிர்பார்க்கவில்லை. பிராமண குலத்தை மட்டம் தட்டி எழுதியிருப்பதாக வந்த இமெயில்கள் உறுத்தின. சிகாகோ பாலாஜி கோவிலுக்கு வந்த இரண்டு பேர் எப்படியோ என் வீட்டைத் தேடிப் பிடித்து வந்து விட்டார்கள். இனி இது போல எழுத வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு, கோவில் பிரசாதம் வேறு கொடுத்துவிட்டுப் போனார்கள்.

இணையம் ரொம்ப டேஞ்சருங்க. இனிமேல் profileல் பாலராஜன்கீதா படத்தையும், பின்னூட்டம் இடும்பொழுது மோகன்ஜியின் படத்தையும் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

seriously, ஏதோ எழுதினேன், அவ்வளவு தான். அதற்கு மேல் துருவிப்பார்க்க செய்தி எல்லாம் எதுவுமே இல்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எழுத்தில் இருப்பதற்கு மேல் எதையும் தேடிப்பார்க்க வேண்டாம்.

on that note, ஒரு சின்னப் பின்புலம். வர்ணாசிரமங்களின் அடிப்படையில் ஒவ்வொரு யுகத்தின் பின்னணியிலும் ஒரு கதை என்று நாலு கதைகள் எழுதி வைத்தேன். கி, தி யுகங்களை வைத்துப் புனைந்த கதைகளை முடிக்கவில்லை. மற்ற யுகங்களின் பின்னணியில் புனைந்த யுகபுருஷன், லிக என்ற இரண்டு கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தனித்தனியாகப் படிக்கலாம் என்றாலும் சேர்த்துப் படிப்பவர்கள், கதையில் வரும் தம்பதிகளின் சமூக, தர்ம, ஒழுக்கச் சிக்கல்களின் ஒற்றுமையைப் பிடித்துக் கொள்வார்கள்.

யுக வரிசை மாற்றி எழுதியிருந்தேன். லிகவை எழுதி ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து யுகபுருஷனை எழுதி முடித்தேன். எதற்குச் சொல்கிறேன் என்றால் லிகவைப் படித்துவிட்டு, 'பிராமணன் ஒரு நாளும் பீ அள்ள மாட்டான்' என்று அதற்கும் கண்டனம் தெரிவித்தார்கள்.

கதை எழுதுவது எப்படி என்று ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறேன். அடி வாங்காமல் கதை எழுதுவது எப்படி என்று இனிமேல் தெரிந்து கொள்ளவேண்டும்.


    தேவ் ஆனந்த் மரணம் கொஞ்ச நாள் கழித்து உறைத்தது. சில மரணங்கள் நம்மில் ஒரு பகுதியைப் பிய்த்துக் கிழித்துக் கொண்டு போவது போல் உணர்வேன். திடீரென்று நினைவு வந்து ஒரு வார இறுதியில் என்னிடமிருந்த நாலைந்து தேவ் படங்களைப் பார்த்த போது, குரோம்பேட்டை பம்மல் நினைவுகள் வந்து வெந்தேன். தேவ்-மதுபாலா ஜோடி மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல், ஆங்கோன் மே க்யா ஜி, எனக்கு மிகவும் பிடித்தப் பத்து இந்திப் பாடல்களில் ஒன்று. உடன் நடித்திருப்பது தேவின் அசல் மனைவி. பெயர் மறந்து விட்டது. இருவருமே பாடலில் கண்களால் புன்னகை செய்வதைப் பாருங்கள். there's romance for you.


முதலாவது, அவள் பர்கா அணியவில்லை. இரண்டாவது, அவளுடைய முடி முக அலங்காரங்கள் அவளை மேற்கத்திய நாகரீகக்காரி என்று விளக்கின. மூன்றாவது, அவள் ஜீன்ஸும் முழுக்கைச் சட்டையும் அதன் மேல் டோல்சே கபானா டிசைனர் மேலங்கியும் அணிந்திருந்தாள். ஷ்! நான்காவது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மேலங்கிக்குள் கைபடும் அவசரத்தில் ஒரு இத்தாலிய பெரட்டா கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தாள்.

நான் எழுதியதைப் படித்து மதிக்கும் இன்னொரு குழு அதீதம் இணைய இதழ். பொங்கலுக்கு ஒரு கதை வந்திருக்கிறது. மேலே மேற்கோள் காட்டியிருக்கும் சஸ்பென்ஸ் கதை. அம்ருதவல்லி.

அடுத்த மாதமும் ஒரு கதை வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். சரித்திரப் பின்புலத்துடன் எழுதிய முதல் காதல் சிறுகதை.

அதீதம் குழுவுக்கும், படிக்கப் போகும் உங்களுக்கும் (!), என் மனமார்ந்த நன்றி.


    துவும் காதல்! என்று ஹேமா தன் உப்புமடச் சந்தியில் தொடர்பதிவைத் தொடர்ந்து விட்டு, சும்மா இராமல், என் போல் சிலரைத் தொடர இழுத்து விட்டார் :).

ஹேமா எழுதியக் கதை, பாடல் தேர்வுகளுடன் கோர்வையாகச் செல்கிறது. நானும் நாலைந்து விடியோக்களை வைத்துக் கொண்டு யோசிக்கிறேனே தவிர, கதைக்கரு ஒன்றும் தோன்றக்காணோம். 'ஹீரோ ஹீரோயின் ம்யூசிக் லொகேஷன் எல்லாம் தயார். இந்தக் கதை ஒண்ணு தான் கெடக்கலே..'

கதை எழுதுகிறேனோ இல்லையோ, எடுத்து வைத்த விடியோக்களில் நிச்சயம் கதைக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்று தீர்மானித்த விடியோ இது. பிடித்தப் பழைய பாடல்களில் ஒன்று. துள்ளும் துடிப்பான இசையும் போதையில் துவளும் குரல்களும், தூங்குமூஞ்சி நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பில் தொலைந்து போன துக்கத்தை என்னவென்பது! இருந்தாலும் பாடலை ரசிக்க முடிவது உலக மகா ஆச்சரியம்!


    றக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய இந்தப் பதிவை அவ்வப்போது யாராவது தேடிப் படிக்கிறார்கள். அன்று எழுதியபோதும் நிறைய கருத்துக்கள் வந்தன. நான்கு வருடங்களாக அடிக்கடிப் படிக்கப்படும் இடுகை. படித்துவிட்டுப் பின்னூட்டமும், நல விசாரிப்பு இமெயிலும் அனுப்பியவர்களுக்கும் அனுப்புகிறவர்களுக்கும் நன்றி.

இதை விடப் படுகுழியான நாள் இருக்கமுடியாதென்று எண்ணிய நாள் அது - அதனால் பதிவிட்டேன். சில கடுமையான நாட்களைச் சந்தித்திருந்தாலும், அன்றைப் போல் சோர்வூட்டிய நாளை அதற்குப் பிறகு சந்திக்கவில்லையென்றே சொல்லவேண்டும். தொக்கி நின்ற சிலவற்றைத் தொடர்ந்து எழுதி முடிக்கலாமா என்று அவ்வப்போது தோன்றும். மூன்றாம் சுழியின் போக்கும் அடையாளமும் மாறிவிட்டதால் எழுதவில்லை.

அந்தப் பதிவில் எழுதியிருந்த எங்கள் நாய் spot இறந்துவிட்டது. சிகிச்சைக்குப் பிறகு மூன்று வருடங்களுக்கு மேல் இழுத்துப் பிடித்த spotஐ, சென்ற நவம்பர் மாதம் ஒரு சுமாரான குளிர் நாளில் கண்மூட வைக்க நேரிட்டது.

மூப்பின் கொடுமை அதிகமாகித் திண்டாடிய நாயை இன்னும் இழுத்து வாழ வைக்க வீட்டில் போராட்டம். எத்தனை சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்தார்கள். நல்ல வேளையாக மருத்துவர் உதவியுடன் அனைவரையும் convince செய்ய முடிந்தது. என் பெண்ணின் முதிர்ச்சி வியக்க வைத்தது. spotன் மரணத் தேவையைத் தெளிவோடு ஏற்றுக் கொண்டாள். அவள் குழந்தையாக இருந்த போது எடுத்து வந்த குட்டி நாய் spot. ஒரு வாரக் குட்டியாக இருந்ததிலிருந்து உடன் வளர்ந்தவள். அவளுக்கு spotடம் அதிக நெருக்கம். spot என்று பெயர் வைத்ததும் அவள் தான். (நாய்க்குட்டிக்குப் பெயர் சூட்டியக் குட்டிப்பெண் இன்று என்னிடம், 'don't live my life for me, you bald man' என்கிறாள். ஹ்ம்ம்).

மரணப்படுக்கையில் இருந்த spotடன் என் பெண் முதலில் பத்து நிமிடங்கள் தனிமை கோரினாள். நாங்களெல்லாம் வெளியில் வந்துக் காத்திருந்தோம். வெளியே வந்தவள், நேரே காரில் உட்கார்ந்து விட்டாள். குடும்பத்தில் ஒவ்வொருவராக நாயுடன் ஏதோ பேசிவிட்டு நகர்ந்தனர். பக்கத்து வீட்டிலிருந்து இருவர். போதாக்குறைக்கு இன்னொரு மாநிலத்துக்கு தொலைபேசி அங்கிருந்த உறவினர்கள் வேறு spotடன் பேசினார்கள். நாய் என்ற நினைப்பில் யாரும் இருக்கவில்லை. என்னுடைய இறுதிக் கணம் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

நாயைக் கண்மூட வைக்கும் அந்தக் கணத்தில் உடன் இருக்க யாருக்கும் மனமில்லை. நானும் மருத்துவரும் மட்டுமே. ட்யூப் கட்டி முதலில் மயக்க மருந்து செலுத்தினார்கள். என் உள்ளங்கையை நாக்கினால் தடவிக் கொண்டிருந்த spot, என்னையே பார்ப்பது போலிருந்தது. நிச்சயமாக ஏதோ சொன்னது. என்னவென்று புரியவில்லை. மயக்க மருந்து வேலை செய்யத் தொடங்கியதும் இன்னொரு hi-dose மருந்து செலுத்தினார்கள்.

ஒன்று. இரண்டு. மூன்று. spot கண்மூடியது. 'he had a peaceful exit' என்றார் மருத்துவர். ஒரு பழகிய உயிர் என் கைபடப் பிரிந்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். spotன் கழுத்தைத் தடவிக் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.

"என்ன ஆச்சு?" என்று ஒரே கேள்விமழை காரில். "what did spot say? was he scared?" என்றான் மகன்.

"don't know.. but he seemed to say something for sure" என்றேன்.

நீண்ட அமைதிக்குப் பின், "he said thank you, dad" என்றாள் பெண்.

எனக்கும் சட்டென்று புரிந்தது. 'பதினைந்து வருடங்கள் என்னைப் பார்த்துக் கொண்ட புண்ணியவான்களே, நன்றி, போய் வருகிறேன்' என்றே சொல்லியிருக்க வேண்டும். சற்று நிம்மதியாக இருந்தது.


    2008 பதிவின் போது குட்டியாக இருந்த எங்கள் வீட்டின் இரண்டாவது நாய் stella இன்றைக்குப் பெரிய மனுஷி. என் மகனின் தோழி. அவன் ஸ்கூல் பஸ் மாலையில் அடுத்த தெருவில் வரும் பொழுதே வாசலில் புலி போல் உறுமிக்கொண்டே சுற்றிச் சுற்றி வருவாள். என் மகன் பக்கம் யாராவது போனால் போதும், பிடுங்கி விடுவாள். சாது.

பத்து நாளில் spot மறந்துபோகக் காரணமானவள். இன்னும் பத்து வருடங்களுக்கு இவளால் தொந்தரவு இருக்காது.

life is good.

37 கருத்துகள்:

 1. அந்த புக் படிக்க ஃப்லிப்கார்ட்ல தேடினேன். ஆயிரத்துச் சொச்சம் போட்டிருக்கிறார்கள். பட்ஜெட்ல இடிக்குது.. அப்புறமா பார்க்கலாம்..

  கருத்தரங்குல என்ன பேசினீங்கன்னு அப்புறமா போடுங்க அப்பா சார்!

  அதீதமாய் நாங்களும் உங்களைப் படிக்கிறோம் சார்!

  பொங்கல் வாழ்த்துகள். :-)

  பதிலளிநீக்கு
 2. வாங்க RVS.. ஆளையே காணோமேனு பார்த்தேன்.

  பதிப்பகம் பெயரை நான் காரணமாத் தான் சேர்க்கவில்லை.. இது போன்ற புத்தகங்கள் 'for distribution in India only' என்று சல்லிசாக டெல்லி ஏர்போர்டில் விற்கிறார்கள். யுஎஸ் விலையில் பாதிக்கும் குறைவு. இன்னொண்ணுங்க.. office libraryனு ஒரு வசதியை ஏற்படுத்துக்கிட்டோம்னு வையுங்க... அதுவும் இது மாதிரி 'செய்தித் துறை' புத்தகங்களுக்கு.. உங்களுக்குத் தெரியாத ஆபீஸ் பட்ஜெட் பத்தி நான் என்ன சொல்லிடப் போறேன்? :)

  பதிலளிநீக்கு
 3. அப்பாஜி...கதம்பப் பொங்கலா...அருமை அருமை.இனிய பொங்கல் வாழ்த்துகள்!

  பழைய பாடல் இனிமை.உங்களின் பாடல் தெரிவுக்காகவே தொடரில் உங்கள் பெயரை இணைத்தேன்.
  கண்டிப்பாய் பதிவு போடணும் !

  வீட்டுப்பிராணிகள் வளர்ப்பது மனதிற்குச் சுகம்.ஆனால் அவர்களின் காலம் எங்களைவிடைக் குறைவானதால் மிகவும் கஸ்டப்பட்டுப்போவோம்.நானும் அனுபவித்திருக்கிறேன்.அழகானவள் உங்கள் மகள் !

  பதிலளிநீக்கு
 4. அப்பா ஸார்... கதம்பப் பதிவை மிகமிக ரசித்துப் படித்தேன். (இதுபோன்ற மிக்ஸர்கள் எனக்கும் ரொம்பப் பிடித்தவை) ப்ளாஸ்டிக் வெண்டைக்காய், மாடிஃபைட் தண்ணீர்.. அவ்வ்வ்வ... நல்லவேளையா... நான் அப்ப இருக்க மாட்டேன்! அதீதத்தில் பரிசு பெற்றதற்கு என் வாழ்த்துக்கள். த்ரில்லரை உடன் படிக்கிறேன். தளத்தில் ஃபோட்டோ போட்டதால் உங்களுக்கும் இப்படி ஒரு சோதனை வந்ததில் எனக்கு அல்ப திருப்தி. (வொய் பிளட்..? ஸேம் பிளட்!) தேவ் ஆனந்த் படங்கள் நிறைய பாத்திருக்கேன். பாதி வார்த்தையை தொண்டைக்கு்ள்ள வெச்சுக்கிட்டு மீதியத்தான் பேசுவார். ஸ்டைல்? ஆனால் பாட்டுக்களில் அவரை ரசிச்சிருக்கேன்.

  பதிலளிநீக்கு
 5. புத்தாண்டு சபதம் நிலைத்து கடைப் பிடிக்க வாழ்த்துகள்.
  நல்லதொரு புத்தகப் பகிர்வு. 15 3 இல் படிக்க கூகிளிய போது கிடைக்கவில்லை!!
  பாவம் கோல்கீப்பர்!
  வம்சி சிறுகதைப் போட்டியின் வெற்றிக்கு வாழ்த்துகள். நீங்கள் வெல்லாவிட்டால் வேறு யார் வெல்வார்கள்? (நிஜவார்த்தைகள்)
  அசல் மனைவி என்றால் கல்பனா,,,,முன்னதாக சுரையாவுடனான அவரின் தெய்வீகக் காதல் கைகூடவில்லை.
  அடேடே...அதீதத்தில் கதைக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றி...
  spot நினைவுகள் கண்ணில் நீரை வரவழைத்தன. ஸ்டெல்லா பார்க்க நன்றாக இருக்கிறாள்.
  லைப் இஸ் குட்....ஆமாம்...அழகிய தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 6. அரிதான புத்தககங்களின் அரிதான அம்சங்களை தேடி தருகிறிர்கள். அதற்காக முதல் பாராட்டு. வம்சி சிறுகதை போட்டி வெற்றிக்கு இரண்டாவது பாராட்டு.

  பதிலளிநீக்கு
 7. போட்டியில் வென்றதற்கு(தாமதமாய் கூறுகிறேன் வெட்கமாக இருக்கிறது இதுக்கு.. என்னவோ சில நேரங்களில் இப்படி ஆகிவிடுகிறது, மனதுக்கு இருக்கிறவேகம் கைக்கு வருவதில்லை) முதல்ல வாழ்த்துகள்.. அதீதம்ல உங்க விமர்சனம் எனகதைககானதையும் வாசித்தேன் நன்றி. இந்தப்பதிவை நிதானமாய் படித்துவிட்டு வரேன்

  பதிலளிநீக்கு
 8. இரவு சாப்பிடாம இருக்க முடியமா உங்களால்? பெரிய விஷயம் தான் ! என்னால் அரை வயிறு
  வச்சிக்கிட்டு கூட தூங்க முடியாது

  பேசியதை இங்கே பகிருங்கள்

  வீடு தேடி எழுத்தாளரை பார்க்க வராங்களா? ரைட்டு

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. //எழுத்தில் இருப்பதற்கு மேல் எதையும் தேடிப்பார்க்க வேண்டாம்.//
  படைப்பாளியின் மனதில் தோன்றாத எண்ணங்களைத் தாங்களாகவே வலிந்து திணிக்கும் நிலை என்றும் மாறாது.

  பதிலளிநீக்கு
 11. இரவு உணவை தவிர்த்தமைக்கு முதலில் என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் அப்பாதுரை... ஏன் தெரியுமா? நானும் பலவருடங்களாக இரவு உணவு சாப்பிடுவதே இல்லை... ஏம்பா அப்டின்னு கேட்க தோணுமே? அட உங்களைப்போல உறுதிமொழி எல்லாம் எடுத்துக்கலைப்பா.. என் லஞ்ச்சே மாலை 4 டு 5 ஆகிவிடுகிறது.. ஏனாம்? அதான்பா ஆபிசு விட்டு போகவே ஆகிவிடுகிறதே மூணரை.. அதுவே அப்படியே பழக்கமாகிடுத்து... மாலை சாப்பிட்டு உடனே நைட் சாப்பிட முடியாதில்ல? அதுமட்டுமில்லாம தினமும் அதிகாலை 4 மணிக்கு எழ நைட் வயிறு காலியா இருந்தால் நலம்.... அதனால் இதை அப்டியே கடைப்பிடிப்பீங்களாம்...

  என்னப்பா பயமுறுத்துறீங்க :( ப்ளாஸ்டிக் வெண்டைக்காயா? கடவுளே அதுவரைக்கும் எப்படியும் நாம இருக்கப்போறதில்லைன்னாலும் நம்ம சந்ததியினர் இருப்பார்களே.. குழந்தைகள் எப்படி? எல்லாம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கும்னு தான் தோண்றது....

  எல்லாத்தையும் அலசி பிழிஞ்சு உதறி விவரிக்கிற திறமை உங்கக்கிட்ட இருக்குன்றதுக்கு இந்த ஒரு பதிவு போறுமே ( ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஒரு மனசு கதை )

  எந்த ஒரு விஷயம்னாலும் அதை நுணுக்கமா நீங்க ஆராய்வதை நான் கவனிச்சிருக்கேன் அப்பாதுரை...

  ஸ்பாட் மனிதர்களின் ஸ்நேகிதி.... தானும் நல்லவர்களால் வளர்க்கப்பட்டதால் மனுஷியாகவே வாழ்ந்து மனுஷியாகவே கண்ணை மூடிட்டா...

  எத்தனை வாஞ்சை ஸ்பாட் மேலே உங்க எல்லாருக்குமே... ஸ்பாட் படமும் ஸ்பாட் பற்றிய நேசமும் சொல்லிட்டே வந்து கடைசில அதன் அவஸ்தை பொறுக்கமுடியாம கண்மூடவைத்த மனம் கனக்கவைக்கும் நிமிடங்களை நானும் நினைத்து பார்த்தேன்... ஏன்னா எங்க வீட்லயும் ஸ்பௌட்டி இப்படி தான் ரொம்ப பாசமான பிள்ளையா இருந்தான்... குட்டில வந்தது.. என்னை படிக்கவிடாம மடில தூக்கி வெச்சுக்கோன்னு மிரட்டும்.. ச்சோ ச்சுவீத்து... ஹூம் இங்க குவைத் வந்துட்டு 2 வருஷம் கழிச்சு போனப்ப பெரிய மனுஷனாகி என் ஹைட்டுக்கு எகிறி என்னை கொஞ்சியது...

  இப்ப இல்லை :( அவனோட நினைவுகள் மட்டும் தான் எங்க மனசுல இப்ப...

  அன்பை பகிர மனிதர்களால் மட்டும் தான் முடியுமா என்ற கேள்விக்கு பதில் தான் நீங்க தந்த ஸ்பாட் விஷயங்கள்... பிள்ளைகளிலிருந்து அக்கம் பக்கத்து வீட்ல இருக்கிறவங்கவரை எத்தனை பாசமா இருக்காங்க... அதன் கடைசி நொடி வேதனைக்கூட பார்க்க விரும்பாம குழந்தை காரில் ஏறி உட்கார்ந்ததில் தெரிகிறது குழந்தையின் மென்மையான மனசு.....

  உங்க பகிர்வு படிக்கும்போது உலகஞானம் நிறைய தெரிஞ்சுக்கலாம்பா கண்டிப்பா...

  கடைசி சில வரிகள் மனம் நெகிழவெச்சிடுத்து அப்பாதுரை....

  வாழ்த்துகள்... ஸ்பாட்டின் ஆத்மா எங்க இருந்தாலும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா....

  பதிலளிநீக்கு
 12. தல... வம்சியில ஜெயிச்சத்துக்கு ”அண்ணனுக்கு ஜே!” அப்படீன்னு கோஷம் போட மறந்திட்டேன். வாழ்த்துகள். :-)

  பதிலளிநீக்கு
 13. திருமண காலவரம்பு சட்டம் பரவலாக்க இருக்கும் கருத்தரங்குக்கு அழைப்பு கிடைத்தது கேட்டு மகிழ்ச்சி. எந்த தலைப்பில் பேசுவதாயிருந்தாலும் அதில் நம்பிக்கையும் உண்மைத்தனமும் இருக்கும் என்று நம்புகிறேன். பட்டிமன்ற வாதம்போல் ஒட்டியோ வெட்டியோ பேச நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  செல்ல வளர்ப்புப் பிராணிகள் இழப்பு மிகவும் வருத்தம் தரக் குடியது. நானும் ஒரு காக்கர் ஸ்பேனியல் நாய் , செல்லி என்று பெயர், வளர்த்த கதையை பதிவில் எழுதி இருக்கிறேன்.

  வம்சி சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். யுகபுருஷன் படித்தேன். பிறப்பில் ஏற்ற தாழ்வு பற்றிய கருவில் கதை அருமை. வாழ்த்துக்கள் அந்தப் போட்டிக்கு எனக்குத் தெரியாமலேயே ஒரு வாசகர் என் ஒரு கதை அனுப்பியிருந்தார். போட்டி பற்றி எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் ஒரு நல்ல கதையை நான் அனுப்பியிருப்பேன். வெற்றி வாய்ப்பு கூடுதலாயிருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 14. ’ஸ்பாட்டின்’ அந்த இறுதி கணங்கள் மிகவும் கனமாக இருந்தது..’ஸ்பாட்டி’ ன் இடத்தில் என்னையும் ’நிறுத்திப்’ பார்த்தேன்..மிக,மிக அச்சமாக இருக்கிறது..
  அடிக்கடி கடிகாரம் பார்க்கும் NRI குழந்தைகள்..அந்த இறுதி கணங்களில் எப்படி REACT செய்வார்களோ?
  இறுதி பயணத்தில் இருப்பவனுக்கு TIME இன்றியமையாத ஒன்று..
  அதைவிட ஆயிரத்தெட்டு கமிட்மெண்ட்களோடு நேரத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நம் மக்கள்..
  ’ஸ்பாட்’ட்டுக்கு கிடைத்த மாதிரி மாதிரி கிடைப்பது சந்தேகம் தான்!
  அது என்ன ப்ளாஸ்டிக் வெண்டைக்காய்?
  இதையெல்லாம் உண்டால்,மனிதர்கள் செலுலாய்ட் மனிதர்கள் ஆகி விட மாட்டார்களா?..
  உடல் வலு குறைந்த ஆண் குரங்குகள் பிரியாணி பொட்டலத்தோடு பெண் குரங்குகளை அணுகுவது அருமை..வலிமை புத்திசாலித் தனத்தில் தான் இருக்கிறது..உடலில் இல்லை..
  அது சரி..மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷனை ஐந்து வருடங்களுக்கொரு முறை..ரினியூ பண்ண வேண்டுமென்றால்..
  என்ன சொல்ல? அக்னியை சாட்சியாய்
  வைத்து சொல்லப் பட்ட அந்த சப்தபதி மந்திரங்கள் அவ்வளவு தானா?

  பதிலளிநீக்கு
 15. இணையம் ரொம்ப டேஞ்சருங்க. இனிமேல் profileல் பாலராஜன்கீதா படத்தையும், பின்னூட்டம் இடும்பொழுது மோகன்ஜியின் படத்தையும் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.//

  ஹிஹிஹி,, பாவம் ரெண்டு பேரும்.

  பதிலளிநீக்கு
 16. உங்க ஸ்பாட் பத்திப் படிச்சப்போ எனக்கு எங்க மோதியின் நினைவு வந்தது. 98 டிசம்பர் 16-ஆம் தேதி காலையில் மார்கழி மாசம் ஒன்றாம் தேதினு கோலம் போட வாசலுக்கு வந்தப்போ இழுத்துக்கொண்டு கிடந்தது. ராத்திரி நல்லா இருந்தானே என்ற நினைப்போடு கணவரை எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். உடனே டாக்டரை அழைத்தால் அவர் கிடைக்கவில்லை.

  மோதியை வேறு மருத்துவர் கிட்டேக் காட்டுவது கஷ்டம். பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு செய்வதறியாது இருந்தோம். ஒரு நிமிஷம் கண்களைத் திறந்து பார்த்து வாலை ஆட்டிவிட்டுப் பின் நிரந்தரமாகக் கண்களை மூடினது. மறக்கவே முடியாத தினம். :((((((((((((((((((

  பதிலளிநீக்கு
 17. அதீதத்தில் உங்கள் கதையை நான் இன்னும் பார்க்கவே இல்லை! போய்ப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. இ.கொ. சொல்றது சரியாத் தான் இருக்கு! சரியாவே கவனிக்கறதில்லை! :))))))

  பதிலளிநீக்கு
 19. ஸ்டெல்லா அழகு தான். ஆனால் மோதிக்கு முன்னர் நான்கு நாய்களை வளர்த்தோம்; அதென்னமோ மோதிக்குப் பின்னர் எந்த நாயையும் இனிமேல் வளர்க்கவேண்டாம்; இப்படித் துன்பப் படவேண்டாம்னு வைச்சுட்டோம். :(

  பதிலளிநீக்கு
 20. வம்சி பதிப்பகம் நடத்தியச் சிறுகதைப் போட்டியில் யுகபுருஷன் கதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. திடீரென்று கிடைத்த அங்கீகாரம்.

  இனிய நிறைவான வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 21. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை contract renew பண்ணனுமா? இது என்ன தேர்தலா என்னங்க இது... இது கல்யாண பந்தத்தை இன்னும் பலவீனப்படுத்தாதா? சுத்தமா commitment- ஏ இல்லாமல் ஆயிடும். குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பெரிய பிரச்சினையாகும். இன்னும் சொல்லப்போனால் குழந்தை பெற்றுக் கொள்வதே குறைந்தாலும் குறைந்துவிடும்.
  உங்கள் வளர்ப்புப் பிராணி பற்றி படித்து மனம் கனத்தது. உங்கள் மகளின் maturity-யைப் பாராட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 22. இரவு சாப்பாட்டை நிறுத்துவது உடலுக்கு செய்யும் மிகப் பெரிய நல்ல காரியம். நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
  நிறைய புத்தகம் படிங்க. படிச்சுட்டு தயவு பண்ணி பதிவிடுங்கள். அதையாவது நான் படிக்கறேன். :)

  திருமணத்துக்கு இந்த கால வரம்பு சட்டம் எந்த விதத்தில் உதவும் என்று நினைக்கிறீர்கள்? இந்த சட்டம் வந்தால் மட்டும் ஒருவர் விலக நினைத்து இன்னொருவர் வாழ வேண்டும் என்றால் என்ன முடிவெடுப்பார்கள்? வேண்டாம் என்று நினைக்கும்போதுதான் வெளியேறதான் ஏற்கெனவே சட்டம் உதவுகிறதே. பின் எதற்காக இந்த திருமண கால வரம்பு சட்டம்? வேண்டியபோது இணையவும், வேண்டாத போது விலகவும் விரும்புபவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே 'living together' என்று காலம் முழுதும் விருப்பம் போல பிடித்தவர்களோடு எல்லாம் இருந்து விட்டு சென்றும் விடலாமே.
  மெக்சிகோ கருந்தரங்கில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. கலக்கிட்டு வாங்க! வாழ்த்துக்கள்!

  ஸ்பாட் மரணம் மனதுக்கு வேதனைதான். உங்கள் மகளின் அறிவு முதிர்ச்சி வியக்க வைக்கிறது. ஸ்டெல்லா ஜோரா இருக்கா.

  //life is good.// இனி எப்பொழுதும் நலமாகவே இருக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. Thought you would like this TED speech...

  http://www.ted.com/talks/alain_de_botton_atheism_2_0.html?utm_source=feedburner

  பதிலளிநீக்கு
 24. கல்யாணத்தை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்ற யோசனை விபரீதமாக படுகிறது. செல்போன் பிளான் காண்ட்ராக்ட் புதுப்பிக்கும்போதேல்லாம் போன் மாடலை மாற்றுவோரை நினைத்து கலங்குகிறேன்!

  பதிலளிநீக்கு
 25. நன்றி ஹேமா, கணேஷ், ஸ்ரீராம்.,தமிழ் உதயம், ஷைலஜா, மோகன் குமார் (நூறுக்கும் குறைந்த தமிழ்க் குடும்பங்கள் இருக்கும் பகுதியில் ஒருவரைக் கண்டுபிடிப்பது சிரமமில்லை), kg gouthaman, சென்னை பித்தன், மஞ்சுபாஷிணி (ஸ்பௌட்டி - சுவாரசியமான பெயர்), RVS, G.M Balasubramaniam, ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, geethasmbsvm6 (காரைக்காலில் வளர்ந்த நாட்களில் எங்கள் வீட்டு ஓனருடைய நாய் பெயர் மோதி - நிறைய மோதியிருக்கிறேன் மோதியுடன்.. ஹ்ம்ம்ம்.. நாலு நாய்களா?! பிராணிகளிடம் அன்பு செலுத்துவோர் சற்றே மேம்பட்டவர்கள் என்று நினைக்கிறேன்), இராஜராஜேஸ்வரி, geetha santhanam, meenakshi, குமரன் (Kumaran) (linkக்கு நன்றி சார்), bandhu, ...

  சுவாரசியமான பின்னூட்டங்களுக்கு நன்றி.

  பதிவுகளுக்கான சில கருக்கள் கிடைத்தன.

  திருமணக் காலவரம்புச் சட்டம் - சட்டம் என்பதை விட, சலுகை என்பதே சரியென்று தோன்றுகிறது. இன்றைக்கு 60% விவாகரத்து (உலக சராசரி - அரபு நாடுகள், சைனாவைத் தவிர்த்து) நடக்கையில், திருமணம் என்ற சடங்கில் நம்பிக்கை குறைவது இயற்கை என்று நினைக்கிறேன். பிள்ளைகள் கதி என்ன ஆகும் என்ற கவலைக்காக திருமணக் கொடி பிடிப்பவர்கள் சற்று கண்ணாடி பார்த்துச் சிந்திக்க வேண்டும் என்பது என் கருத்து. விவாகக் கால வரம்புக்கு சட்டம் துணைக்கு வர வேண்டியதில்லை. காலவரம்பை எதிர்க்கும் இரண்டு கும்பல்களில் ஒரு கும்பல் விவாகரத்து வக்கீல்கள் என்றால் நம்புவீர்களா? இன்னும் சில பதிவுகளில் என் எண்ணங்களை எழுதுகிறேன். காலவரம்பை ஆதரிக்கும் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்பது இன்னேரம் புரிந்திருக்கும் - ஹிஹி. காலவரம்பை எதிர்ப்பவர்கள் நான் பதிவெழுதினால் படிக்க வேண்டுகிறேன். சாணி அடிப்பவர்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்குகிறேன். (சோவின் முகமது பின் துக்ளக் படத்திலிருந்து சுட்டது).

  இரண்டு வருடங்களாகவே ஆத்திகம் நாத்திகம் பற்றி சில கருத்துக்கள் மனதை அரித்துக் கொண்டே இருக்கின்றன. குமரன் அவர்களின் link பார்த்தவுடன்/படித்தவுடன் இன்னும் வலுவடைந்து விட்டது. மதம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு பார்ப்பதும் முகமூடியைக் கழற்றிவிட்டுப் பார்ப்பதும்... இங்கே இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பெற முடியும். not a big deal. but, நாத்திகம் தழைக்க மதம் தேவையில்லை என்பது big deal என்றே நினைக்கிறேன். அதே நேரம் ஆஸ்திகப் பாதைக்குக் கடவுளும் அவசியமில்லை என்று நினைக்கிறேன். that is even bigger a deal. (கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காதில் விழுகிறது). நாத்திகன் என்ற தமிழ் வழக்கு என்னவோ கெட்ட வார்த்தை போலானதற்குக் காரணம் கருப்புச் சட்டைக்காரர்களா காவிகளா தெரியவில்லை. இந்தப் பாதைகளை சற்று முதிர்ச்சியோடு கண்டு பயணிக்க இன்று நம்மால் முடிகிறது - ஐம்பது வருடங்களுக்கு முன் கூட இது சாத்தியமாகவில்லை. ஹிஹி.. கடவுள் அவசியமில்லை என்றக் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்பதும் புரிந்திருக்கும். ஊதுகிற சங்கை நானும் கொஞ்சம் ஊதி வைக்கிறேன். திட்டாதீர்கள்.

  இந்த வருடம் இது போன்ற உருப்படாத சமூக விஷயங்கள் பற்றி அவ்வபோது எழுதலாமென்று எண்ணியிருக்கிறேன். இப்போதே வார்னிங் கொடுத்தாச்சு.

  பதிலளிநீக்கு
 26. (கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காதில் விழுகிறது).

  ஹிஹிஹிஹி,

  நாத்திகன் என்ற தமிழ் வழக்கு என்னவோ கெட்ட வார்த்தை போலானதற்குக் காரணம் கருப்புச் சட்டைக்காரர்களா காவிகளா தெரியவில்லை.

  ராமாயணத்தில் ஜாபாலி பேசாத நாத்திகமா?? கேலி செய்யாத சடங்கா? சம்ஸ்காரமா?? நாத்திகம் இப்போ ஐம்பது வருடங்களாகவே புதிதாய்ப் பேசறாப்போல் ஆகிவிட்டது.
  அவ்வளவு ஏன்? கூர்ந்து கவனித்தால் புத்தரைக் கூட நாத்திகர் எனலாம்.

  பொதுவாய் பக்திக்கும், ஆன்மிகத்துக்கும் வித்தியாசம் நம் மக்களுக்குத் தெரியலை. ஆன்மிகத்திலே மேலே போகப் போக நீங்க சொல்ற கடவுள் இருக்கிறார்/ அல்லது உருவ வழிபாடு என்பது குறையலாம். அது வரைக்கும் இதெல்லாம் தேவையே. ஒரு வடிகால் என்றும் சொல்லலாம். ஹிஹிஹி, ரொம்ப எழுதினாப் பதிவா ஆயிடும். வரேன் அப்புறமா ; நிதானமாப் பேசலாம். :)))))))

  பதிலளிநீக்கு
 27. ஆஸ்திகப் பாதைக்கும் கடவுள் தேவையில்லை..// ஆன்மீகப் பாதைக்கும் கடவுள் தேவையில்லை என்று சொல்ல வந்தேன்.. சறுக்கி விட்டது :)

  புத்தர் நாத்திகர் - interesting view.
  ஆத்திகர் நாத்திகருக்கு பதிலா இன்னொரு கட்சிக்கான அவசியம் இருப்பதாகத் தோணுது. தேவை, தேவையில்லை என்ற கட்சிகள் betterஓனு தோணுது.

  ரொம்ப எழுதினாப் பதிவா ஆயிடும்// true.

  பதிலளிநீக்கு
 28. பக்திக்கும், ஆன்மிகத்துக்கும் வித்தியாசம் நம் மக்களுக்குத் தெரியலை//
  கரெக்டா பிடிச்சீங்க.

  பதிலளிநீக்கு
 29. அப்பதுரை அவர்களே! நாத்திகம் பற்றி எழுதும் ஐயா! நிறைய பகிர்ந்து கொள்ளலாம்!---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 30. பொங்கல் வாழ்த்துக்கள். கரையோரம்-ன்னு தலைப்ப பார்த்தோன்ன ரொம்ப மகிழ்ச்சியான பதிவா இருக்கும்னு நினைத்தேன், படிக்க படிக்க நெகிழ்வான பதிவாயிடுச்சி. வாழ்க்கை அனுபவத்தை இப்படி யாரும் அனுபவிச்சி எழுதியதில்லைன்னு நினைக்கிறேன். ஆத்திகம்/நாத்திகம் பற்றிய பதிவுகளா? கலக்குங்க.

  பதிலளிநீக்கு
 31. அந்தக் கால மஞ்சரி புத்தகம் படித்தாற்போல
  அனைத்து விஷயங்களும் அறிய வேண்டியவைகளாகவும்
  சுவர்ஸ்யமாகவும் இருந்தது
  பகிர்வுக்கு நன்றி
  தசாவதாரத்தில் கமல் சொல்வது போல
  கடவுள் இருந்தால நல்லது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான
  தங்கள் அது குறித்தான பதிவு நிச்சயம் அதிக
  சுவாரஸ்யமானதாக இருக்கும் என நினைக்கிறேன்
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 32. அருமையான கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பதிவு இது வழக்கம்போல தமாதமாய் படிக்கிறேன் anyway better late than never!

  ///உணவில் biotechnologyன் influenceஐப் படிக்கும் பொழுது கொஞ்சம் பக் என்று இருக்கிறது. ஏறக்குறைய 90% உணவு வகைகளில் genetic modification ஏதோ ஒரு விதத்தில் நடைபெறுகிறது என்கிறார். அடுத்த இருபது வருடங்களில் fully synthetic தானியங்கள் காய்கறிகள் கிடைக்குமாம். [ஹ்ம்ம். 2100க்குள் இப்படி நடக்கலாம். estrogen கலந்த பால் குடித்துப் பழகி அநேகமாக homosexual ஆண்கள் அதிகமாகப் புழங்கும் வீடு. தொழில் நுட்பம் இருப்பதால் கல்வி, வேலை, வணிகம் எல்லாம் வீட்டில் இருந்தபடியே. சமையல் உரையாடல்: 'அந்த ப்லேஸ்டிக் வெண்டைக்காயைப் போட்டு modified தண்ணீர் கலந்து உப்பில்லாம சாம்பார் வைடா தங்கம்'.]///
  இப்படி நடந்தா ஆச்சரியமே இல்லை!
  //மெக்சிகோ நகரில் ஒரு கருத்தரங்கத்துக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அங்கே திருமணக் காலவரம்புச் சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம்! பரிசோதனை முறையில் ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள். தொடர்ந்து பரவ சமூக ரீதியில் என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு நிபுணர் கருத்தரங்கம். என்னை(யும்) மதித்து ஒரு கருத்தரங்க அழைப்பு. சும்மா விடலாமா? வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

  ////

  அடேயப்பா எத்தனை சிறப்பும் பெருமையும் இதில்! எனக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு ஜன்மத்துக்கும் கிடைககது வாழ்த்துகள் அப்பாதுரை!


  ///பத்து நாளில் spot மறந்துபோகக் காரணமானவள். இன்னும் பத்து வருடங்களுக்கு இவளால் தொந்தரவு இருக்காது.

  life is good.

  ///

  நாய் நிகழ்வை அதன் கடைசி கணங்களை நெகிழ்ச்சியாக சொல்லிய விதம் ஸ்டெல்லா வந்ததில் குடும்பத்தில் மகிழ்ச்சிமீண்டதைகூறி முடித்தவிதம் அருமை!

  பதிலளிநீக்கு
 33. அவசரத்தில் தமிழில் பலதவறுகள் செய்து அப்படியே அனுப்பிவிட்டேன் பின்னூட்டத்தை மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 34. biotech: குழந்தை - மேக்கிங்கே வந்துவிட்டதாம். உணவு "modify" ஆகி வருவது என்ன அதிசயம்? :-)))))

  //திருமணக் காலவரம்புச் சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம்//
  ஒருகால கட்டத்தில், அக்காலத்திற்குரிய மனிதர்களால் கொண்டுவரப்பட்டச் சட்டங்கள், பிறிதொரு காலகட்டத்தின் மனிதர்களின் ரசனைக்கு ஒவ்வாமல் போவதும், மாற்றத்திற்கு உள்ளாவதும் வழமைதான்.

  ஆனால், விவாகரத்து, லிவிங் டுகெதர், (மகளிர் காவல் நிலையம்) எல்லாம் இருக்கும்போது, இதனால் என்ன பயன் இருக்கும் என கெஸ் பண்ண முடியவில்லை.

  //இரண்டு பேர் எப்படியோ என் வீட்டைத் தேடிப் பிடித்து//
  அமெரிக்காவுக்கே ஆட்டோவா? :-))))

  //நாயைக் கண்மூட வைக்கும் அந்தக் கணத்தில்//
  நாய் என்பதால் euthanasia பெரிதாகப் பாதிக்கவில்லை. இதுவே மனிதர் என்றால், எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

  //இரவுச் சாப்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதென்று//
  முழுவதும் தவிர்ப்பதால் அஸிடிட்டி, வாயுத் தொந்தரவு வரலாம். பழ/காய்கறி சாலட், பால் போன்றவையாவது எடுத்துக் கொளவது நல்லது. (அறிவுரை இல்லை)

  //மோகன் குமார் கூறியது...
  ... என்னால் அரை வயிறு வச்சிக்கிட்டு கூட தூங்க முடியாது//

  என் மாமியார் சொல்லும் ஒரு பழமொழி ஞாபகம் வந்தது. “குத்துப்பட்டவன் கிடந்தாலும் குறைவயிறான் கிடக்க மாட்டான்”!! :-)))))) (சிரிக்க மட்டுமே)
  நான் பெரும்பாலும் அரைவயிறோடுதான் படுப்பது!! :-))))))

  பதிலளிநீக்கு
 35. இரவு சாப்பாட்டை முழுசா தவிர்க்கறதும் நல்லதில்லனு சொல்றாங்க சார். சரியான அளவுல carbohydrate குறைவா எடுத்தா தப்பேதும் இல்லனு நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 36. முன்பு படித்து பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். ப்ளாக் மீட்டெடுக்கும்போது என்ன நேர்ந்தது.?இப்போது இப்பதிவைப் பார்க்கும்போது அப்போது பார்க்காத சில விஷயங்கள் சேர்ந்ததுபோல் தோன்றுகிறது. OR IS THERE SOMETHING WRONG WITH ME.?

  பதிலளிநீக்கு