2011/09/17

ஒருமனம்



1 2 3 4 5 6 ◀◀ முன் கதை

வீடு திரும்பியபோது நிலா எழுதி வைத்திருந்த இரண்டு கடிதங்களைப் பார்த்தார்கள்.

ஒன்று அவளுடைய அப்பாவுக்கு. கடிதமும் வங்கிச்சேமிப்புக் கணக்குப் புத்தகமும் இருந்தது. "அப்பா, இந்த கணக்கில் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பணம் இருக்கிறது. என்னைத் தேட வேண்டாம்" என்று சுருக்கமாக எழுதியிருந்தாள்.

மனோவுக்காக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தாள். "காரணங்கள் சொல்லி நம் காதலைக் கொச்சைப் படுத்த விரும்பவில்லை மனோ. முடிந்தால் என்னை மன்னித்துவிடு" என்று இரண்டே வரிகள்.

நிலாவின் தந்தை துடித்தார். மனோவைப் பிடித்து உலுக்கினார். "உன்னால தானே என் பொண்ணு காணாம போயிட்டா... இப்ப நான் அனாதையா இந்த நிலமையிலே என்ன செய்யப் போறேன்? நீ நல்லா இருப்பியா?" என்று பலவாறு ஆத்திரப்பட்டார்.

திடுக்கிட்டுப் போயிருந்த மனோவுக்கு எப்படி நடந்து கொள்வது என்று புரியவில்லை. நிலா ஓடிப்போனதற்குத் தானெப்படிக் காரணமானோம் என்று குழம்பியிருந்தான். தந்தையையும் தன்னையும் தனியாக விட்டு ஓடுமளவுக்கு ஏன் இந்த முடிவு?

சுற்று வட்டாரங்களில் எங்கு தேடியும் நிலாவைப் பற்றியத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. திருமணத் தேதிக்கு பத்து நாட்கள் முன்பே வேலையிலிருந்து விலகியிருந்தாள். திட்டமிட்டு செய்திருக்கிறாளா? சே! நிலாவின் மேல் கோபமும் ஆத்திரமும் வந்தது. விலகியிருந்த காதல் அருகில் வந்து மறுபடியும் விலகிப் போனதில் முற்றிலும் உடைந்து போயிருந்தான்.

சிவாவின் உதவியால் அடுத்த சில மாதங்களில் நிலாவின் தந்தை அமைதியானார். மனோவுடன் சுமுகமாகப் பழகத் தொடங்கினார். மனோ பழையபடி ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினான்.

    வேலையிலிருந்து ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகளே இருக்க, சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்திருந்தான் மனோ.

சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு நண்பரைச் சந்திக்கத் திருத்தணி போனவனுக்கு, அவர் தங்கியிருந்தக் குடியிருப்பு மிகவும் பிடித்துவிட்டது. கோவிலிலிருந்து ஒரு மைல் தொலைவில் திருப்பதி ரோட்டையொட்டி இருந்தது அந்தக் குடியிருப்பு. முப்பது ஏக்கர் பரப்பில் எல்லையெங்கும் கம்பிச்சுவர் கட்டி, எழுநூறிலிருந்து ஆயிரம் சதுரடி வரையிலான கிட்டத்தட்ட முப்பது வீடுகள். எங்கே பார்த்தாலும் மரம், செடி, செயற்கைக்குளம் என்று பசுமையும் செழிப்பும். குடியிருந்தவர்கள் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டவர்களாகவே இருந்தனர். நண்பர் குடியிருந்த வீடு மிகவும் பிடித்துப் போய், விவரம் கேட்டான்.

"நானும் இது போல ஒரு இடத்தை வாங்கிப் போட்டு சீக்கிரமே ரிடையராயிடலாம்னு தோணுது"

"இது அருமையான இடம், மனோ. சின்ன இடம் தான். ரெண்டு ரூம், கிச்சன், பாத்ரூம். நல்ல வசதியா கட்டியிருக்காங்க. முதியோர் குடியிருப்புன்றதுனால எல்லாமே ஒரு மாடிக் கட்டிடம் தான். ஒரு பில்டிங்குக்கும் இன்னொரு பில்டிங்குக்கும் பாலம் மாதிரி நடைபாதை. யார் வீட்டுக்காவது போவணும்னா இறங்கி இறங்கி ஏற வேண்டியதில்லை. பாலத்துக்கு கீழே கார் பார்கிங்க், தோட்டம்னு அழகா வசதி பண்ணியிருக்காங்க.

ஒரு பிரச்னையும் இல்லை. மாசம் நாநூறு ரூபாய் கட்டறேன். மளிகை, தண்ணி, காய்கறி வாங்குறதிலிருந்து, செடி கொடிக்கு தண்ணீர் பாய்ச்சுறது, குப்பை அள்ளுறது, எல்லாத்தையும் வீட்டுக் கமிட்டியில் ஆள் போட்டுப் பாத்துக்கறாங்க. காம்பவுன்டுக்குள்ளாறயே ஒரு பிள்ளையார் கோவில் இருக்குது. இங்கே வந்த நாலு மாசமா தினம் கோவிலுக்கு வாகிங் போகிறேன். வாரத்துல ஒரு நாள் திருத்தணி போக முடியுது, மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குபா.

சாப்பாடு கூட நாங்க நாலஞ்சு குடும்பங்க முறை போட்டு தினம் ஒரு வீட்டுல சமையல் பண்ணிக்கிறோம். பழைய புக்ஸ் எல்லாம் படிக்கிறேன். கூட்டமில்லே. நெரிசல் இல்லே. தினமும் பகல் தூக்கம். தொல்லையில்லாத நிம்மதி" என்று சிரித்தார் நண்பர்.

"பிரமாதமா இருக்கு இடம்.. ஹௌ கேன் ஐ கெட் இன்?"

"இங்கயா? ரொம்ப கஷ்டம். இங்கே முப்பது வீடு கூட இல்லை. கட்டுப்பாடு வேறே. வாடகைக்கு விடக்கூடாது. வித்தாலும் கமிட்டி அனுமதி வாங்கித்தான் விக்கணும். அடுத்த வாரம் கமிட்டிலே கேட்டுப் பார்க்கறேன், யாராவது விக்கறாங்களானு. நாங்களே இங்க வந்தது குருட்டு அதிர்ஷ்டம் தான். இந்த வீட்டுல எங்களுக்கு முன்னாடி இருந்தவங்க, என் மனைவிக்கு உறவு.." என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் மனைவி காபியும் பலகாரமும் எடுத்து வந்தார். மனோவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, "என்னோட உறவுக்காரங்களைப் பத்தி இன்னும் குறை சொல்றாரு பாருங்க" என்றார்.

"இல்லமா, மனோகர் இங்க எப்படி வீடு வாங்கறதுனு கேட்டாரு. நம்ம நிலாவைப் பத்திச் சொல்ல வந்தேன்" என்று அவர் சொன்னதும், மனோவின் அடி வயிற்றில் முகம் தெரியாத யாரோ முள்ளால் கீறியதை உணர்ந்தான்.

"நிலாவா?" என்றான் மனோ தன்னையுமறியாமல்.

"ஏம்பா, என் பெண்டாட்டியோட உறவுபா.."

"கொஞ்சம் சுத்தின தூரத்து உறவு தான்" என்றார் அவர் மனைவி. "நிலா எங்க அப்பாவோட பெரியம்மா பேத்தி" என்று தொடங்கி, அவர்கள் சொல்லச் சொல்ல மனோவின் தலையும் நிலையும், முழு வேகத்தில் வைத்த மின்விசிறியானது.

"அதுல பாருங்க மனோ... கல்யாணத்துக்குத் தயாரா இருந்தவ, கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் முன்னாடி முதல் முறையா அதைப் பார்த்திருக்கா. மார்ல சின்னக் கட்டி. அவங்க அம்மாவுக்கு கேன்சர் அப்படித்தான் ஆரம்பமாச்சு. அவ காதலனுக்கோ அப்பாவுக்கோ யாருக்குமே பாரமா இருக்கக் கூடாதுனு யார் கிட்டேயும் சொல்லிக்காம அவங்க காதலனுக்கும் அப்பாவுக்கும் ஒரு சீட்டு எழுதி வச்சுட்டு, அடுத்த முடிவு எடுக்கும் வரை தனியா இருக்கணும்னு கோவா போயிட்டா. அந்தப் பையனும் அங்கே இங்கே தேடிப் பார்த்துட்டு ஊரை விட்டே போயிட்டான்.

ரெண்டு வருசம் கழிச்சு நிலா மட்டும் அவ அப்பாவுக்கு அப்பப்போ கடிதம் போட்டுக்கிட்டு இருந்தா. கோவாவிலிருந்து கொஞ்ச நாள் கழித்து மும்பை போய் அங்கே ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா. கேன்சர் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிச்சுட்டதால அவளுக்கு குணமாயிட்டுது. அஞ்சாறு வருஷம் போனதும் எந்தவித பாதிப்போ மறுபடி கேன்சர் திரும்புவதற்கான அறிகுறிகளோ இல்லைனு தெரிஞ்சதும் பத்து வருஷம் அங்கே இங்கே வேலை பார்த்துட்டு, பிறகு அந்த வேலையையும் விட்டு, இந்த வீட்டை வாங்கி இங்கே தங்கியிருந்தா.

இடையில அவ அப்பா இறந்து போனதால அவளுக்கு வேறு யாருமே இல்லை. அவ காதலிச்ச அந்தப் பையனை ஏமாத்திட்டமேனு குற்ற உணர்வுலயும், சேரும் நேரத்துல பிரிய நேர்ந்த துரதிர்ஷ்டத்தையும் நினைச்சு ரொம்ப நொடிஞ்சு போயிட்டா"

மனோவுக்கு தரை பிளந்துத் தன்னை விழுங்காதா என்று தோன்றியது. இங்கேயா இருந்திருக்கிறாள்? இந்தத் தரை என் நிலா நடந்தத் தரையா? இந்த ஜன்னல் என் நிலா கண்கள் பட்ட ஜன்னலா? இந்தக் காட்சி என் நிலாவின் பார்வையில் பட்டக் காட்சியா?

"பாருங்க மனோ, வாட் ஹேபன்டிஸ்... இந்தப் பொண்ணு ... தனக்கும் உடம்பும் முடியாம அப்பாவையும் காப்பாத்த முடியாம போயிடுமோனு பயந்து போய் அவசர முடிவெடுத்துட்டா.." என்றார் நண்பர்.

நண்பரின் மனைவி தொடர்ந்தார். "நான் அவளை கடைசியா எங்க கல்யாணத்துல பார்த்தது. ஆளே ரொம்ப மாறிட்டா. இவர் ரிடையரானதிலிருந்து மாதா மாதம் திருப்பதி வந்தமா, வழியில இங்க வந்து தங்கி அவளோட நெருக்கமாயிட்டோம். மனசுல வருத்தம் இருந்தா அது சிமென்டு மாதிரி, இறுகிக்கிட்டே எல்லாத்தையும் நசுக்கிடும்னு சொல்வாங்க. அது போலத்தான் நிம்மதியில்லாம ஏதோ வாழ்ந்துக்கிட்டிருந்தா. அவளைப் பார்த்துட்டுப் போறப்பெல்லாம் உங்களை மாதிரியே நாங்களும் இந்த வீட்டைப் பத்திக் கேட்போம்.."

நண்பர் குறுக்கிட்டுத் தொடர்ந்தார். "திடீர்னு ஒரு நாள் நான் இந்த வீட்டை விக்கப்போறேன், வாங்கறீங்களானு கேட்டா. அவ குருவாயூர்ல ஏதோ ரிசர்ச் பண்ற குழுவுல சேரணும்னு ஆசைப்பட்டா. அது சம்பளமில்லாத வேலையாம், வீடும் சாப்பாடும் கொடுப்பாங்களாம். இந்த வீட்டை வித்துட்டு அந்தப் பணத்துல அங்கே போறதா திட்டம் போட்டிருந்தா. நாங்க இங்க வந்த நேரம் சரியா அமையவும், இந்த வீட்டை நாங்களே வாங்கிட்டோம்", மனோவின் நண்பர் சொல்லி முடித்தார். "எதுக்குச் சொல்றேன்னா, இந்த மாதிரி யாராவது வித்தா மட்டுந்தான் இங்கே இடம் கிடைக்கும். எல்லாம் சோல்ட் அவுட்".

மனோவுக்குத் தலை சுற்றியது. "கொஞ்சம் தண்ணி குடுங்களேன்" என்று தடுமாறிக் கேட்டான்.

"மனோ என்ன ஆச்சு?"

".. ஒரு மாதிரி இருக்கீங்களே?"

"என்னப்பா ஆச்சு? ..அந்தப் பலகாரத்தைக் குடுக்காதேனு சொன்னா கேட்டியா?" என்று மனைவியிடம் கிண்டலடித்தார் நண்பர்.

"எனக்கு ஒன்றுமில்லை. அந்த குருவாயூர் முகவரியும் தொலைபேசி நம்பரும் இருக்கா?" பதட்டத்துடன் கேட்டான் மனோ.

"ஏன்?"

"முப்பது வருஷமா அதையே தான் நானும் கேட்டுக்கிட்டிருக்கேன்..ப்லீஸ், குடுங்களேன்"" என்றான் மனோ.

"பாத்துபா... என் மனைவியோட சொந்தம்ன்றதுனால சொல்லலே... கொஞ்சம் அராத்தான பொண்ணு.." என்றபடி தன்னிடமிருந்த டைரியிலிருந்து ஒரு தொலைபேசி எண்ணும் முகவரியும் எழுதிக் கொடுத்தார் நண்பர்.

திருத்தணியிலிருந்து திரும்பியதும் குருவாயூர் முகவரிக்குக் ஒரு வரியில் கடிதமெழுதினான்: 'அதே எள், அதே மனோ.'

தன்னுடைய நிலாவாக இருக்க வேண்டுமென்றுத் துடித்தான். சில வாரங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை. போன் செய்துப் பார்த்தான். பதிலில்லை.

நேரில் சென்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கிளம்பும் தினத்தில், சுருக்கமான பதில் கடிதம் வந்தது: 'தேயும் நிலா'.

    "என்ன சார் எழுந்துட்டீங்க? முழுக்க சொல்லிட்டுப் போங்க.. இப்ப நிறுத்தாதீங்க சார்" என்று ஒரே குரலில் அனைவரும் கெஞ்சினர்.

பொன் சார் நீண்ட கொட்டாவி விட்டு, "இல்லபா, ரொம்ப டயம் ஆய்டுச்சு..அப்புறம் பார்க்கலாம். கடையடைக்க காத்துக்கிட்டிருக்கான் பார், அவன் வீட்டுக்குப் போக வேணாமா?" என்றார். பக்கத்தில் இருந்தவனிடம் "இந்தா, ஒரு அம்பது ரூபா கொடு" என்று பிடுங்கி, கடை மூடாமல் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனிடம் கொடுத்தார்.

அங்கிருந்து கிளம்பினார்.

என்னிடம் திரும்பி "என் ரூம் நம்பர் என்னடா?" என்றார்.

"நூத்திப்பத்து சார். முதல் மாடி" என்றேன்.

பொன் சார் நடக்கத் தொடங்க, கூட்டம் விடாமல் "சார், அந்த லெட்டருக்கு என்ன அர்த்தம்? குடையுது சார், கதையை முடிக்காம போவாதீங்க சார்" என்றபடி பின் தொடர்ந்தனர். "ஒரு லார்ஜுக்குப் பத்து வருசம்னு கணக்கு போட்டு சொல்றீங்க.. இன்னொரு விஸ்கி வேணும்னா வாங்கியாந்துடறோம் சார்... கோடித்தெரு பாதர் வீட்ல இருக்கும் சார். திருடிட்டாவது வந்துடறோம் சார்... சார்..சார்.."

பதில் சொல்லாமல் நடந்த பொன் சார், மாடிப்படி ஏறும் போது தடுமாறிக் கீழே விழுந்தார்.

"ஐயோ! சார்...!"

    மணி காலை நாலரை. பொன் சாரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பினேன். இரவு முழுவதும் யாரும் தூங்கவில்லை. எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

"மாரடைப்பு. பைபேஸ் பண்ணப் போறாங்களாம். பிழைக்க சான்சு இருக்குன்றாங்க. ஆனா சர்ஜரி முடிஞ்ச பிறவுதான் முடிவா சொல்வாங்களாம். அவர் குடும்பத்துக்கு உடனே தகவல் சொல்லச் சொன்னாங்க. பொன் சார் குடும்பம் யாரு என்னானு யாருக்காவது தெரியுமா? காலைல ஆபீசுக்குப் போன் பண்ணிக் கேக்கணும்" என்று நான் தலைப்புச் செய்தி கொடுத்தவுடன், அவரவர் அறைக்குச் சென்றனர்.

பொன் சார் அறைச்சாவி என்னிடம் இருந்தது. மருத்துவமனையில் என்னிடம் கொடுத்திருந்த ஒரு பையில் அவருடைய பேன்ட், ஷ்ர்ட், பேனா, பர்ஸ் எல்லாமிருந்தது. பையை அவருடைய அறையில் போட்டுவிட்டுப் போக எண்ணித் திறந்தேன்.

கட்டிலருகே இருந்த நாற்காலி மேல் அந்தப் பையைப் போட்ட போது கவனித்தேன். அருகே மேஜை மேல் இருந்தக் கடிதத்தைக் கவனித்தேன். பழுப்பேறிய பேப்பரில், பழைய கடிதம். ஏதோ தோன்ற, எடுத்துப் படித்தேன். படித்துவிட்டு அதிர்ந்து போய் பைக்குள்ளிருந்த பர்சைத்திறந்து அவருடைய டிரைவிங் லைசென்சைப் பார்த்தேன்.

பொன்மனோகர் ராமசாமி லேசாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

பர்சுள் தேடியபோது இன்னொரு புகைப்படம். சற்றே வெளிறியப் புகைப்படம். முகத்தோடு முகமிணைத்த டீனேஜ் ஆணும் பெண்ணும். புகைப்படத்தைத் திருப்பிப் பார்த்தேன். நினைத்தபடியே இருந்த வரிகளைப் படித்ததும் எனக்கே நெஞ்சையடைத்தது.

என் அதிர்ச்சியை அடக்கிக்கொண்டு அறையெங்கும் தேடித் பார்த்தேன், ஏதாவது போன் நம்பர் இருக்கிறதா என்று.

பொன் சார் பெட்டியில் அவருடைய டைரி இருந்தது. முதல் பக்கத்தில் ஒருவரிக் கடிதம். "தேயும் நிலா". கூடவே இருந்த உறையில் விலாசம்.

    மணி காலை ஏழரை. வாடகைக் காரில் குருவாயூர் போய்க் கொண்டிருக்கிறேன். வேகமாகப் போகும்படி டிரைவரை அடிக்கடி தூண்டிக் கொண்டிருக்கிறேன்.

பொன் சாருடைய குடும்பம் யாரென்றுப் புரிந்துவிட்டது. குருவாயூர் சென்றால் தீர்மானமாகத் தெரிந்து விடும்.

இருங்கள், ஒரு வேளை இந்தக் கதைக்கும் ஒரு முடிவு தெரியலாம்.



தொடரும் ►►


27 கருத்துகள்:

  1. இவர்கள் காதலை என்னவென்று சொல்வது! இவர்களை சேர்த்து வைக்காமல் மனசை இப்படி துடிக்க வைக்கறீங்களே அப்பாதுரை, இது நியாயமா! இப்பவாவது தயவு பண்ணி அவங்களை சேத்து வையுங்க. இல்லை என் மனசு ஆறாது.
    உணர்வுகளால் மட்டுமே சேர்ந்த அழகான காதல் இது. (டயலாக் உதவி நசிவெண்பா) உங்கள் எழுத்து இந்த காதலுக்கு வலுவூட்டி அழுத்தமாக மனதில் பதித்து விட்டது. பொன் சார்தான் மனோ என்பது எதிர்பாராத அதிர்ச்சி. முடிஞ்சா அடுத்த பதிவை நாளைக்கே போட்டுடுங்களேன், புண்ணியமா போகும். :)
    இரு கோடுகள் படத்தில் வரும் 'அச்சா' பாலச்சந்தரின் அசத்தலான முத்திரை. அதே போல் இந்த கதையில் வரும் 'அதே எள், அதே மனோ'! 'தேயும் நிலா' உங்கள் முத்திரை. நன்றாக இருக்கிறது.

    'ஊருக்கும் தெரியாது' பாடலை கேட்டதே இல்லை. சூலமங்கலம் அதிராமல் அமைதியாக பாடி இருக்கிறார்களே. கூகிள் உதவியில் முழு பாடலையும் கேட்டு விட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. பொன் சாருக்கு பெரிய காதல் பின்னனி இருக்கும் என்பது முதல் பாகத்திலேயே பு ரிந்தது ..ஆனால் இவ்வளவு முன்னனியில் இருப்பார் எனத் தெரியவில்லை...காதல் கதையில் நல்ல சஸ்பென்ஸ்...
    கேன்சர் தான் சரியா போச்சே.. பென்னம் பெருசுகளை சேர்த்து வச்சிருங்களேன்...

    (நிலாவை பெருசா கற்பனை கூட பண்ணமுடியவில்லை ..சில பெயர் ராசி அப்படி )

    பதிலளிநீக்கு
  3. ஒரு லார்ஜுக்கு பத்து வருஷம் முன்னாடியே கதையில் இருந்ததா...பிற்சேர்க்கையா ?

    தேயும் நிலா ஒரு வரி...பல கற்பனைகள்.

    இங்கு இவரும் அங்கு அவரும் அம்பி அமராகிவிடப் போகிறார்கள்! ஏனெனில் சேர்ந்து விட்டால் நினைவிலிருந்து மறைந்து விடுவார்கள்!!

    பதிலளிநீக்கு
  4. நன்றி Rathnavel, meenakshi, பத்மநாபன், ஸ்ரீராம்,...

    பதிலளிநீக்கு
  5. சூலமங்கலமா ஜிக்கியா என்று எனக்கு சந்தேகம் வரும். சூலமங்கலம் தானா? (ரொம்ப முக்கியமா phone செஞ்சு பாட்டைப் பத்தி விசாரிச்சீங்க. முழுப்பாட்டையும் அனுப்புறேன்.. இதையெல்லாம் கேக்குறதுக்கு நாலு பேர் இருக்காங்கனு டிம்எஸ்சுக்கு சந்தோசம் வரும்)

    இருந்தாலும் நீங்க ரொம்ப ரசிக்கிறீங்க, meenakshi.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. எல்லாம் நீங்க போட்ட லார்ஜ், ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  7. அவர் கதை சொல்லிப் போகும் போதே அதிக
    உணர்ச்சிவசப்பட்டு தொடர்ந்து சரக்கு கேட்கும்போதே
    இவர்தான் அவராய் இருக்கக் கூடும் என சந்தேகித்தேன்
    பாவம் கடைசியில் சந்திக்கவாவது விடுங்கள்
    மனதை பாதித்த பதிவு

    பதிலளிநீக்கு
  8. // ஏனெனில் சேர்ந்து விட்டால் நினைவிலிருந்து மறைந்து விடுவார்கள்!!//
    படிக்கறவங்க நினைவுல இருக்கனும்ங்கறதுக்காக அவங்களை அமரர் ஆக்கணுமா! ஏன் ஸ்ரீராம் உங்களுக்கு இந்த கொலை வெறி! :)

    பதிலளிநீக்கு
  9. //ஏன் ஸ்ரீராம் உங்களுக்கு இந்த கொலை வெறி! ://


    கிடைக்கும் வரைதான் ஒரு பொருளின் மீது ஆசை இருக்கும். கிடைத்த பொருளின் மீது கிரேஸ் போய் விடுகிறது! கதைதானே...(?) கதை அமரத்துவம் பெறுவதற்கு கதை மாந்தர்கள் அமரர் ஆவதில் தவறில்லையே...கதையை சிரஞ்சீவி ஆக்குவதால் கொலைவெறி என்று சொல்ல முடியாதே...!! சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது - பெற்ற பாலச்சந்தர் கூட அரங்கேற்றம் போன்ற படங்களைப் பற்றிச் சொல்லும்போது அதைத்தான் சொன்னார். "அப்புறம் எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்" என்று முடியும் கதைகள் பெரும்பாலும் பாட்டி குழந்தைகளைத் தூங்க வைக்கச் சொல்லும் கதையாகத்தான் இருக்கும்...இல்லையா மீனாக்ஷி...!

    பதிலளிநீக்கு
  10. என்னுடைய கருத்தும் அதே ஸ்ரீராம்.. இன்றைக்கும் அம்பிகாபதியை நினைக்கக் காரணம் காதலின் வலி. அம்பிகாபதி கதை போலவே சேக்குபியரும் ஏதோ எழுதினார், சட்னு ஞாபகம் வரமாட்டேங்குது. அப்புறம் சிவகாமியின் சப்தமா சபதமா.. அது கூட இப்படித்தானே?

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி. கதைதான் என்றாலும் காதலுக்காக இறந்ததால், தோற்ற கதைகளும் இருக்கின்றன. 'காதல் கோட்டை' படத்தை போல, உணர்வுகள் ஒன்றி துடித்து துடித்து சேர்ந்து, மாபெரும் வெற்றி பெற்ற கதைகளும் இருக்கின்றன. அம்பிகாபதி-அமராபதி, லைலா-மஜ்னு இந்த கதைகளில் எல்லாம் சேரமுடியாமல் போன மறுகணமே அவர்கள் இறந்து விடுகிறார்கள். இது எவ்வளவோ மேல். உயிரோடு இருந்து வலியுடன் வாழ்வதை விட, சாகலாம். ஒருதலை காதலோ அல்லது ஒருவர் இறந்து விட்டாலோ அல்லது ஒருவர் நினைவில் ஒருவர் இருந்தும் சேராமல், வேறு வாழ்கை அமைந்து விட்டதால் வாழ்ந்து கொண்டிருந்தாலும், பரவாயில்லை என்று நினைக்கலாம். ஆனால் இந்த கதையில் இப்படி பதினைந்து வருஷம், மீண்டும் பத்து வருஷம் என்று ஒருவர் நினைவில் ஒருவராகவே வாழ்ந்து கொண்டு சேருவதற்கான வாய்ப்புகள் வந்த பின்னும் சேர விடாமல் அப்பாதுரை தடுத்துக் கொண்டிருப்பதுதான் கொஞ்சம் கூட நியாயமே இல்லை. :)

    காதலில் வலி மிகவும் வேதனையானது. இயன்றவரை இந்த வேதனையை அனுபவிப்பதை தவிர்க்கலாமே. சிவகாமியின் சபதத்தில் மாமல்லன் வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு விடுவார்.

    கையில் கிடைத்த உடன் அதன் மேல் உள்ள கிரேஸ் போய்விடும் என்றால் வாழ்கையில் நிறைவு என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் இல்லையா ஸ்ரீராம்! பொருளாக இருந்தாலும் உயிராக இருந்தாலும் விரும்பியதை அடையும்போது அதை அனுபவிப்பதில் உள்ள ஆனந்தமே அலாதிதான். அதில் நிறைவு கண்டு நிம்மதி அடைவதுதானே வாழ்கையில் வாழ்ந்ததற்கான அர்த்தமே.

    //கிடைக்கும் வரைதான் ஒரு பொருளின் மீது ஆசை இருக்கும். கிடைத்த பொருளின் மீது கிரேஸ் போய் விடுகிறது! // மிகவும் விரும்பிய பொருள் இறுதி வரை முயன்று கிடைக்காவிட்டால் அதன் மேல் உள்ள கவர்ச்சி குறைந்து விடும் என்பதும் உண்மைதானே. இந்த கதையில் இவர்கள் சேரவில்லை என்றால் இவர்கள் காதலித்ததற்கே அர்த்தம் இல்லை. இந்த காதலில், காதலும் தன் மதிப்பை இழக்கிறது.

    இது கதைதான் ஸ்ரீராம். அழகான காதல் கதை. அதனால்தான் அவர்கள் இப்போதாவது சேரவேண்டும்
    என்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. காதல் கோட்டையா? பார்த்ததில்லை. பெயரே சரியில்லையே... நிச்சயமாகப் பார்க்கமாட்டேன் என்றே தோன்றுகிறது. :)
    அம்பிகாபதி அமராவதி ரேஞ்சுக்கு காதல் கோட்டைன்றீங்களே நியாயமா meenakshi? காவியத்துக்கும் ஜிலுக்கடிக்கும் வித்தியாசம் இல்லையா? என்னவோ போங்க, நீங்க சொன்னா சரிதான். ஆட்டோ அனுப்பிடுவீங்க போலிருக்கே?

    தேடலின் இன்பம் சூடலில் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  13. //கையில் கிடைத்த உடன் அதன் மேல் உள்ள கிரேஸ் போய்விடும் என்றால் வாழ்கையில் நிறைவு என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்

    true.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லாசெப்டம்பர் 20, 2011

    சுவாரஸ்யம்...
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  15. சார்! இது தேய்ந்த நிலா வளருமா?

    ஏன்னா கடைசியில தொடரும் போட்ருக்கீங்க...

    குருவாயூருக்கு வாருங்கள் அங்கே குழந்தை சிரிப்பதை பாருங்கள்னு முடிக்காம இருந்தா சரி!!! :-)))

    பதிலளிநீக்கு
  16. தேயும் நிலாவுக்கும் தேய்ந்த நிலாவுக்கும் வித்தியாசம் உண்டே RVS? ஆமாம், என்ன ஆளையே காணோம்?

    பதிலளிநீக்கு
  17. தலைவரே! பிட்டு பிட்டா ஒரு காதல் கதை படிக்க முடியமாட்டேங்குது. அதான் முடிஞ்சா மாதிரி இருக்கேன்னு வந்து ஒட்டுக்கா படிச்சேன்!

    உங்களோட க்ளாஸிக் முத்திரை. வேறென்ன சொல்ல.

    தேய்ந்த நிலா வளருவதும் வளர்ந்த நிலா தேய்வதும் இயற்கைதானே!!

    தேய்ந்த நிலாவா ஓய்ந்த நிலாவா? :-))

    பதிலளிநீக்கு
  18. கருத்து எழுதமுடியலை... அழுதுட்டே இருக்கேன் இன்னமும்... ஏன் ஏன் ஏன்? :( போன பகுதி படிக்கும்போது எத்தனை காரணம் எழுதினேன்... ஏன் இதை மறந்தேன் :( கதை சினிமாத்தனமாக இல்லாம ரொம்ப இயல்பா இருந்தது தான் காரணமா??? முடியலையே...அழறதை நிறுத்த முடியலயே.. இப்படி உயிராய் தகித்த காதல்... தீயாய் அணைத்த காதல் தனக்கென்று ஒன்று வந்ததும் தன்னை நேசித்த மனதை மட்டும் தனக்கு சொந்தமாக எடுத்துக்கொண்டு ரெண்டே வரி எழுதிவிட்டு ஓடிபோகமுடிந்ததே... இப்படி ஒரு காதல் நான் எங்கும் பார்க்கலையே.. நிஜத்திலும் சினிமாவிலும் பார்க்கலையே :(

    நிலா நிலா நிலா..... ஆசைகளை காதலை மனதில் இத்தனை தேக்கமுடியுமா??? தன்னை நேசித்தவனுக்காக இத்தனை வலிகளை தாங்கமுடியுமா??? மனோ தான் என் வாழ்க்கை என்று வாழமுடியுமா??? வாழ்ந்திருக்காளே... :( தனக்கு வந்தது ஆரம்ப ஸ்டேஜ் தான் என்று தெரிந்தப்பின் சரி ட்ரீட்மெண்ட் தான் எடுத்துக்கிட்டோமே இனியாவது மனோவை போய் சேர்வோம் என்ற சுயநலம் தோன்றவில்லையே இந்த பெண்ணை நான் என்ன சொல்வேன் :(

    மனோ....
    மனம் முழுக்க நிலா....
    உயிராய் உதிரம் முழுக்க நிலா....
    காணும் வரை சத்தியம் நிலா....
    கண்டப்பின்னும் அவளுடனே வாழ்வேன் என்ற பிடிவாதம் பிடிக்கவைத்த நிலா....

    காத்திருந்து காத்திருந்து காதல் தீரவில்லையே.....
    இத்தனை வயதிற்கு பின்னரும் நிலாவின் தாக்கம் மனதை விட்டு அகலவில்லையே?? என்ன காதல்யா இது என்று மனம் நிறைந்த அன்புடன் இருவரையுமே நேசிக்க தோன்றுகிறதே நிலாமனோவின் காதல் வெற்றி அடைந்த காதல் என்றே சொல்லலாம்...

    என்னவோ மனதை இறுக்குகிறது :( மனோ தா பொன்னா :( ஏமாந்துட்டேனே.... கதை படிக்கும்போதே கதையின் போக்கு இப்படி போகுமா அப்படி போகுமான்னு தான் யோசிக்க வைச்சதே தவிர... முற்றிலும் வித்தியாசமா இப்படி கூட நடக்கும்னு அழுத்தமா தலையை குட்டி சொல்லவெச்சிடுச்சே உங்க வரி....

    பொன் சார் தான் மனோவா :( ஐயோ ஐயோ குடிச்சு குடிச்சு தன் உடலை கெடுத்துக்கொண்டாரே... நிலா எங்க நிலா எங்கே :( அழுகையா வருது எனக்கு....

    பிரிப்பது நானில்லைம்மா விதி என்று சொல்லாமல் சொல்லிவிட்டதே உங்க வரிகள்....

    இருவருமே போராடினார்களே விதியை எதிர்த்து சேரநினைத்தபோது இப்படி கேன்சர் ரூபத்தில் வந்து அழித்தாலும் அழிக்க நினைத்தாலும் காதல் அழியலையே....

    மனம் அமைதி அடையமாட்டேங்கிறது அப்பாதுரை... :(

    அழுகையை நிறுத்தமுடியவில்லை. கதையாய் நினைக்கமுடியவில்லை.. இத்தனை உணர்வுகள் கதையில் கொட்டி எழுதமுடியுமா??

    இத்தனை நேசத்தை காதலை வரிகளில் புகுத்தி எழுதமுடியுமா??

    முதியோர் நிம்மதியாக இருக்க ஒரு அருமையான இடத்தை நீங்க விவரிச்சதை படிக்கும்போதே மனம் சட்டென்று எனக்கும் ஒரு இடம் அங்கே கிடைக்குமா என்று பரபரப்பதை தவிர்க்கமுடியவில்லை...

    என்னாகும் இனி :(
    இணையாமலேயே அணைந்துவிடுமா காதல் :(

    அழவெச்சுட்டீங்க அப்பாதுரை... கோபமில்லை உங்க வரிகளில் ஆச்சர்யமாகிறேன்.. எப்படி எப்படி எப்படி??

    நானும் என் நண்பர் கலையும் இணைந்து ஒரு தளத்தில் சௌந்தர்யலஹரி என்று ஒரு தொடர் எழுதினோம்.. கதையின் தாக்கம் என் உடலை உருக்குலைக்கவே பயந்து நிறுத்தினேன் ஒரு சில பாகங்களிலேயே... முடியலை என்னால்... அத்தனை அழுத்தம் என்னால தாங்கமுடியவில்லை... காதல் பிரிவு எத்தனை கொடுமை என்பதை அந்த கதையில் நான் எழுதும்போதே என் மனம் உடல் இரண்டுமே பலகீனப்பட்டுக்கொண்டு வர வர என்னால் தொடரமுடியாமல் போய்விட்டது....

    இப்ப இந்த கதை படிக்கும்போது ஐயோ இங்கும் இணையலையே இரு உள்ளங்கள் என்று அழுகை வருகிறது... விதி என்று விட்டுவிட வேண்டியது தானா? :(

    இறுதி காலத்திலாவது நிலாமனோ சேர்ந்து இருக்கமுடியாதா :(

    கதை அசத்தல் படிப்பவர்களின் மனதை நெகிழவைத்த வரிகள் அப்பாதுரை...

    இந்த கதைக்கு கிடைத்த வெற்றி சினிமாவாக இதை எடுக்கவேண்டும் என்பதே...

    சிறை என்றொரு சிறுகதை நான் குமுதத்தில் படித்தேன் முன்பு.. அதையே படம் எடுத்து பார்க்கும்போது அழுகை வந்தது... ஆனால் கதையின் கதாப்பாத்திரங்கள் உயிர்த்தது போல் அத்தனை தத்ரூபம் இல்லை..

    இந்த உங்க கதை படமாக எடுத்தாலும்...
    இந்த கதையில் இருக்கும் உயிர்கள் உயிர்ப்பிக்கமுடியாது சினிமாவில்..

    ஏன்னா இது சத்தியம்.. சினிமா வெறும் உணர்வுகளை நடிக்கமுடியும்.. வாழமுடியாது..

    உங்க கதையில் இருக்கும் கதாப்பாத்திரங்கள் வாழ்ந்திருக்காங்க.. வெற்றி வெற்றி உங்க கதை மட்டுமில்ல..மனோநிலாவும் தான்.. நான் முடிவு அப்டியே எடுத்துக்கிறேன். சேரணும், இப்பவும் சொல்றேன். சேரணும்.... இருவரும்...

    என் அன்பு வாழ்த்துகள் அப்பாதுரை... இப்படி ஒரு அருமையா கதை எழுதி எங்க மனதை அசைச்சுட்டீங்க.

    அடுத்த கதை எப்ப????

    வேணும் வேணும் அடுத்த கதை வேணும்....

    பதிலளிநீக்கு
  19. அடுத்த வியாழனாவது இரு உள்ளங்களையும் சேர்த்துவிடுவீங்க என்ற நம்பிக்கையில் கண்டிப்பா காத்திருப்பேன் படிக்க.....

    பதிலளிநீக்கு
  20. கதை முடிஞ்சிடுச்சா, தொடருமா? விஷயம் தெரிஞ்சு போச்சு.. இந்த டயத்துல அம்பலக்கனா இல்லாம போயிட்டாரே?

    பதிலளிநீக்கு
  21. அப்பாதுரை சார்.இன்றுதான் முழுவதும் படித்தேன்.இனியும் பதிவுகளை மிஸ் பண்ணாமல் இருக்க வேண்டித் தளத்தில் இணைந்து விட்டேன். சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  22. நன்றி Ramani, ரெவெரி, RVS, மஞ்சுபாஷிணி, ராமசுப்ரமணியன், சென்னை பித்தன்,...

    பதிலளிநீக்கு
  23. நன்றி என்று இரண்டு மாத்திரை ஒலியுடன் உங்களை அங்கீகரிக்க முடியவில்லை மஞ்சுபாஷிணி. உங்கள் பின்னூட்ட sincerity வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. அம்பலக்கனாவை எதுக்கு இழுக்குறீங்க ராம்?

    பதிலளிநீக்கு
  25. மனசுல வருத்தம் இருந்தா அது சிமென்டு மாதிரி, இறுகிக்கிட்டே எல்லாத்தையும் நசுக்கிடும்னு சொல்வாங்க./

    கதையும் மனதில் இறுக்கத்தை கூட்டிக்கொண்டே போகிறதே!

    பதிலளிநீக்கு
  26. \\ நன்றி என்று இரண்டு மாத்திரை ஒலியுடன் உங்களை அங்கீகரிக்க முடியவில்லை மஞ்சுபாஷிணி. உங்கள் பின்னூட்ட sincerity வியக்க வைக்கிறது. \\

    உங்களை விடவா அப்பாதுரை? வியாழன் வரை எங்களை காக்கவிடாம அடுத்த நாளே நல்லமுடிவை கொடுத்ததற்கு நான் ரொம்ப நன்றி சொல்லனும்பா உங்களுக்கு...

    இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த ஒரு மனசு கதைய நினைச்சுக்கிட்டே சுத்திக்கிட்டு இருப்பாங்க நிறைய பேரு பாருங்க... நல்ல டைரக்டர் கிட்ட உங்க ஒரு மனசு கதை கிடைச்சால் எவ்ளோ நல்லாருக்கும்....

    என்னிக்காவது இந்த கதையை படமாக பார்ப்பேனா?

    பதிலளிநீக்கு