2011/09/01

ஒருமனம்




1 ◀◀ முன் கதை

    னோகரனுக்குப் பதினைந்து வயதிருக்கும். வழக்கம் போல் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்து, அங்கே வரும் அவன் வயதுப் பெண்களை ஆளுக்கொருத்தியாக 'என் ஆள், உன் ஆள்' என்று மானசீகப் பொருத்தம் பார்த்து வம்பும் கேலியும் செய்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் அவளை முதன்முறையாகப் பார்த்தான்.

அத்தனை பேரையும் ஒதுக்கி அவனை மட்டும் தாக்கிய வேல்-வில் கூட்டணி. இதென்ன பார்வையா, ஆளை ஒட்டுமொத்தமாய் இழுத்து உள்ளத்துக்குள் போட்டு மூடிக்கொள்ளும் காந்த வலையா? யாரவள்? அவன் நண்பர்களுக்கும் அவள் யாரென்று தெரியவில்லை.

அதற்குப் பிறகு பல முறை அங்கே இங்கே பார்த்தாலும் பேச மட்டும் தைரியம் வரவில்லை. தன் நண்பர்களிடம் அவளைப் பற்றிச் சொன்னான். "சும்மா, போய் பேசுடா... பேரு கூடத் தெரிஞ்சுக்காம, என்னடா டேய்.. போடா பேசுடா" என்று எத்தனை பேர் ஊக்கம் தந்த போதும் அவனால் முடியவில்லை. அவனே எதிர்பாராமல் ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தது.

பள்ளிக்கூடம் அருகே மாணிக்கச்செட்டியார் புத்தகக்கடையில் அவளைப் பார்த்தவன், ஏதோ வேகம் வந்து உள்ளே நுழைந்தான். அவள் அருகே சென்று நின்று கொண்டான். அவள் மனோகரனைப் பார்த்துவிட்டு நகராமல், "எண்பது பக்க நோட்புக் ஒண்ணு கொடுங்க" என்றாள் கடைக்காரரிடம்.

"உனக்கு என்ன தம்பி வேணும்?" என்ற கடைக்காரருக்கு பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தான். கையில் காசு கிடையாது. யோசித்து பதில் சொல்வதற்குள் அவள் கேட்டதைக் கொடுத்த கடைக்காரர் "என்ன தம்பி, என்ன வேணும்?" என்றார் உரக்க.

மென்மையாய் மனோகரனுக்கு மட்டும் புரியும்படி புன்னகை செய்தவள், அவன் பக்கம் சட்டென்று திரும்பி அவன் கண்களைத் தீர்மானமாய்ப் பார்த்து, "பேனா இருக்கா?" என்றாள். பதில் பேசாமல் சட்டைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். அவனுக்காகவே செய்வது போல் அவள் அந்த நோட்டுப்புத்தகத்தைத் திறந்து முதல் பக்கத்தில் தன் பெயரை எழுதினாள்.

நிலா.

எழுதிய பெயரை அவன் படித்துப் பார்க்கும் வரைப் பொறுத்திருந்து, பேனாவை மூடி அவனிடம் தந்து "தேங்க்ஸ்..." என்று இழுத்தாள்.

"என் பெயர் மனோகரன்" என்றான், மூச்சு வந்தவனாய்.

"தேங்க்ஸ் மனோ" என்றபடி பணம் கொடுக்கப் போனாள் நிலா.

இதற்குள் பொறுமையிழந்த கடைக்காரர் அவனிடம், "என்ன தம்பி ஏதாவது வேணுமா? இல்லே சும்மா வம்பு பண்ணிட்டுத் திரியறியா?" என்றார்.

"அதோ, அவரு ஏதோ கேக்கறாரு பாருங்க?" என்று எதிர்ப்புறம் சுட்டினான். "யாரு?" என்று கடைக்காரர் திரும்பிப் பார்த்துச் சுதாரிப்பதற்குள் ஒரே ஓட்டமாகக் கடையை விட்டு ஓடினான். நிலாவின் சிரிப்பு அவனைத் தொடர்ந்து ஓடி வந்தது.

தன்னை அவள் மனோ என்று அழைத்தது பிடித்திருந்தது. மனோ என்று சொல்லிப் பார்த்துக்கொண்டான். அன்று முழுவதும் பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் அவனுக்கு நிலை கொள்ளவில்லை. மனோ-நிலா என்று காற்றிலும், வெளியிலும், நீரிலும், நெருப்பிலும், மரத்திலும், மண்ணிலும் மனதால் எழுதிப் பார்த்துக் கொண்டான். இரவு வானில் நட்சத்திரங்களை வரிசைப்படுத்தி அவர்களின் பெயரெழுத்திப் பார்த்தான்.

காலையில் எழுந்ததும் "மனோஓகர்ர்" என்று தினமும் தாராளமாய் அழைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம், "அம்மா, இன்னிலேந்து என்னை மனோ என்றே கூப்பிடுங்க" என்றான்.

அம்மா அவனை வியப்புடன் பார்த்தாள். "மனோகரை சுருக்கி மனோவா? ஏண்டா? உன் பேரென்ன வாயில நுழையாதபடியா இருக்கு? வச்சிருக்கணும் உனக்கு உங்க தாத்தா பேரை. சுப்புரத்தினமுருகேசப்பண்டிதர்னு. பேரைச் சுருக்கணுமாமுல்லே?" என்றாள். வேண்டுமென்றே, "மனோஓஓஓகரூஊ" என்று இழுத்தாள்.

    கோடை விடுமுறையின் போது இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்தன.

மனோவுக்குக் கடவுள் நம்பிக்கை பிறந்தது, முதல் நிகழ்ச்சி. காலியாயிருந்த எதிர் பிளாட்டில் நிலாவின் பெற்றோர் குடி வந்ததும், தெய்வம் இருப்பதைத் தீர்மானமாக நம்பத் தொடங்கினான்.

பன்னீர் செல்வதாசுடன் சண்டை போட்டு நிலாவுடன் நெருக்கமானது, இரண்டாவது நிகழ்ச்சி.

பணக்கார தாஸ் என்றுதான் அந்தக் குடும்பத்துக்குப் பெயர். பணத்துக்கும் படிப்புக்கும் ஒத்துவராது என்கிற பொது நம்பிக்கையைப் பொய்யாக்கப் பிறந்தவன் பன்னீர். மனோ, நிலா இருவருடன் ஒரே வகுப்பில் தான் படித்தான். படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி அவன்தான் முதல். வகுப்பிலிருந்தப் பத்து பெண்களுக்கும் பன்னீர் தான் சூபர் ஸ்டார். நிலாவைத் தவிர. இது பன்னீருக்கும் தெரியும்.

ஒரு முறை நிலாவைக் கிண்டல் செய்துவிட்டான். "நிலாவுக்கு நிலத்தில் என்ன வேலை?" என்று ஏதோ சொல்லப்போய், நிலாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டான்.

பதிலுக்கு, "உனக்கு வார்த்தையால தானே கட்டத் தெரியும்? என்னைப் பார்" என்று அவளைக் கட்டி முத்தமிட்டுவிட்டான்.

அன்றைக்குப் பார்த்து மனோ பள்ளிக்கூடம் போகவில்லை. ஏதோ காய்ச்சல். நண்பர்கள் வந்து விவரம் சொன்னதும் யாரிடமும் எதுவும் கேட்காமல், தன்னுடைய பழைய சைக்கிள் செயினை எடுத்துக் கொண்டு நேராகப் பன்னீர் வீட்டுக்குப் போய்விட்டான்.

செய்தி கேட்ட மனோவின் அம்மா அவசரமாக ஓடினாள். நிலாவும் கூடவே வந்தாள்.

அவர்கள் வருவதற்குள் சண்டை அனேகமாய் முடிந்துவிட்டது. அவர்கள் வரவில்லையென்றால் மனோ அன்றைக்கே இறந்து போயிருக்கலாம். மனோ கொண்டு வந்த சைக்கிள் செயினாலேயே அவனைப் புடைத்து விட்டிருந்தான் பன்னீர். வாய், மூக்கு, காது, கண், கை, கால் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லா இடத்திலேயும் சமத்துவ மனப்பாங்கோடு அடி உதை தந்திருந்தான். மனோவை கால்பந்து ஆடிக்கொண்டிருந்தவன், நிலாவைப் பார்த்தவுடன் ஓடினான்.

    மனோ இரண்டு மாதத்திற்குப் பள்ளிக்கூடம் போகவில்லை. மருத்துவமனை - வீடு - மருத்துவமனை என்று உடல் புண்ணும் மனப்புண்ணும் ஆறும் வரை ஒடுங்கிக் கிடந்தான். நிலா மட்டும் தினமும் காலையிலும் மாலையிலும் வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனாள். பன்னீரின் பெற்றோருடன் சணடை போட்டுப் போலீசில் புகார் கொடுப்பதாய் பயமுறுத்தி மருந்துக்கான செலவு எல்லாவற்றையும் அவர்களே ஏற்கும்படி செய்தாளென்று அம்மா சொன்னதும் மகிழ்ச்சியும் வெட்கமும் அடைந்தான் மனோ.

கட்டவிழ்ந்து நடக்கத் தொடங்கியதும், நிலா தினமும் அவனுடன் ஆதரவாய் நடந்தாள். நேரு பூந்தோட்டம் வரை நடந்துவிட்டு வருவார்கள். ஒரு நாள் நிலா, "இன்னும் எத்தனை நாள் இந்த மாதிரி ஏமாத்தலாம்னு இருக்கே?" என்றாள் லேசாகச் சிரித்தபடி.

அதிர்ந்து போனான் மனோ. "என்ன சொல்றே?"

"நீ தனியா இருக்குறப்ப புட்பால் ஆடறதாச் சொன்னாங்க உங்கம்மா, இங்க என்னடான்னா நீ தினம் என் தோளைப் பிடிச்சிக்கிட்டு நடக்கறே?"

"சாரி"

"எனக்காகத்தானே சண்டைக்குப் போனே? எது என்னனு கேட்கவேண்டாமா? பன்னீர் என்னைத் தொடவும் இல்லை, தொடவும் விட மாட்டேன். இது அனாவசியச் சண்டைதானே? உன்னோட ப்ரென்ட்சுக்கு விவஸ்தையே கிடையாது. எதுனா கட்டிவிட்டா நம்பிடுவியா?"

"சாரி" என்றான் மறுபடி.

"என்ன சாரி? முட்டாள்தனத்துக்கு மன்னிப்பே கிடையாது. என் மேல் உனக்கு அக்கறை இருந்தா, அதை எங்கிட்ட இல்லையா நீ காட்டணும்? அவன் உன்னைக் கொன்னிருந்தா நீ என் மேலே அக்கறை வச்சு என்ன பயன்?" என்றாள்.

மனோவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் நிலா. திடீரென்று நின்று, அவன் எதிர்பாரா விதமாய், "நெஞ்சைத்தொட்டுச் சொல்லு, என் மேல் உண்மையிலேயே அவ்வளவு அக்கறையா?" என்றாள்.

கேட்ட உடனே அலறினாள், "என்ன நீ, அங்கெல்லாம் தொட்டுகிட்டு..."

"நீ தானே நெஞ்சைத் தொட்டுச் சொல்லச் சொன்னே?" என்றான் மனோ. "சொல்றதுக்கு முன்னால அலறினா எப்படி?"

"சீ" என்றவள், விலகவில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்த மனோ, அவள் கையைப் பிடித்தபடி பேசினான். "நீ செய்த எல்லா உதவிக்கும் எத்தனை நன்றி சொன்னாலும், போதாது நிலா."

"அப்போ உன் உயிரை எனக்கு எழுதிக் கொடுத்துடேன்?" என்றாள்.

மனோ சிறிதும் தயங்காமல், "இந்தப் பிறவியிலும் இன்னும் ஏழு பிறவியிலும் என் உயிர் நிலாவுக்குச் சொந்தம்" என்று காற்றில் எழுதியபடி உரக்கக் கூவினான்.

"காற்றில் எழுதினால் நிலைக்குமா?" என்றாள் நிலா கிண்டலாய்.

"மகாராணி. இந்தக் காற்று உங்களையும் என்னையும் மீறி யுகம் யுகமாக இங்கே வீசிக் கொண்டிருக்கிறது. காற்றிருக்கும் வரை என் சாசனமும் இருக்கும்" என்று அவன் அடிமை போல் நடிக்க, பேரரசி போல் நடித்து ஏற்றுக்கொண்டாள் நிலா.

"நான் பன்னீர்தாசுக்கும் நன்றி சொல்லணும். இல்லேன்னா உன்னோட அன்பும் நெருக்கமும் கிடைச்சிருக்குமா?" என்றான். மனோவின் தினசரி வாழ்வில் ஒரு முக்கியப் பங்கானாள் நிலா.

அடுத்த இரண்டு வருடங்களில் அவன் கல்லூரிக்குப் போவதற்குள் மேலும் இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்தன.



தொடரும் ►►

12 கருத்துகள்:

  1. காதல்கதை வாசிக்க எப்போதும் சுகமானதே. இப்போதும் கூட.

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சைத்தொட்டு சொல்றேன்.. ரொம்ப நல்லா இருக்கு...

    வான்... நிலா... நிலா... அல்ல....

    லவ் ஸ்டோரி படிச்சாலே... படிச்சாலே.... அந்தப் பாத்திரத்தோடு பின்னிப் பினைஞ்சிடுறோம்... நல்லா இருக்கு சார்!! :-)

    பதிலளிநீக்கு
  3. காதல் மயக்கமாக சுவாரசியமாக கதை போய்க்கொண்டிருக்கிறது ..கூடவே ஆனந்த மயக்கமாய் பாடல்களுடன் .....

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாசெப்டம்பர் 02, 2011

    சுகமான காதல் கதை...சீக்கிரம் தொடருங்க...

    பதிலளிநீக்கு
  5. // இந்தக் காற்று உங்களையும் என்னையும் மீறி யுகம் யுகமாக இங்கே வீசிக் கொண்டிருக்கிறது. காற்றிருக்கும் வரை என் சாசனமும் இருக்கும்"//
    பிரமாதம்! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  6. இரண்டு பகுதிகளையும் ஒரே மூச்சில்
    படித்து முடித்தேன்.அருமை
    பாயாசத்தில் நெய்யில் வறுத்த முந்திரிபோல
    ஆங்காங்கே வருகிற மிக அழகான
    வரிகள் மீண்டும் மீண்டும்
    கதையை படிக்க வைக்கிறது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  7. நிலா...விழுந்த நட்சத்திரம் சுஜாதா கதை நாயகி!
    புஷ்பா தங்க துரை எழுதிய ஒரு கா...தால் கதையின் பெயர் நீ... நான்.. நிலா...
    இவை நிலாச் சிந்தனைகள்.

    ஆனந்த மயக்கம் எஸ் பி பி பாடல் என்ன படம்?

    காதல்...உடல் சம்பந்தப் பட்டதா, மனம் சம்பந்தப் பட்டதா? எதெது, எந்தெந்த வயதில்?

    மன்னிக்கவும்...கதை நடுவில் நின்றிருப்பதால் எதையாவது பேசலாமேன்னுதான்...

    பதிலளிநீக்கு
  8. வருக தமிழ் உதயம், RVs, பத்மநாபன், ரெவரி, meenakshi, Ramani, ஸ்ரீராம், ...

    பாயசத்தில் வறுத்த முந்திரி - அடடே, ரசிக Ramani!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பாடறிவேன் படமறியேன் ஸ்ரீராம்.
    இதையெல்லாம் தெரிந்தோ கண்டுபிடித்தோ சொல்பவர்கள் இரண்டே பேர் தான். ஒருவர் பாலராஜன்கீதா.

    பதிலளிநீக்கு
  10. போற போக்குல நாலு கேள்வியைத் தூவிட்டுப் போயிட்டீங்க ஸ்ரீராம்.. இதுல நடுக்கதைனு சாக்கு வேறே.. சாக்குமூட்டை ஆசாமி கோபிக்கப் போகிறார்.
    சுவாரசியமான கேள்வி. காதல் மனத்தோடு என்று நினைக்கிறேன் நான். உடலளவில் தோன்றும் அத்தனையும் உபாதைகளே என்பது என் அபிப்பிராயம். 'உடலாவது மனமாவது? எல்லாமே ஒண்ணுதான் எரிஞ்சு போனா மண்ணுதான்' கட்சியின் வாக்காளர்களும் இருக்கிறார்கள். அடிக்கடி போகனின் எழுத்துப்பிழையில் கமெந்ட் போடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம், படம் ரோஷக்காரி. கேள்விபட்டதே இல்லை. எல்லாம் Google உபயம். முழு பாடலின் லிங்க் இதோ, வேண்டுமென்றால்.
    http://www.4shared.com/audio/FJQLNQqM/anandha_mayakkam-Roshakkari-PS.html

    அப்பாதுரை, ஒருவர் பாலராஜன் கீதா. அந்த இன்னொருவர் யாருங்கோ?

    பதிலளிநீக்கு
  12. நன்றி meenakshi, டப்பா பாட்டுனாலும் தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்திருக்கீங்க; கொரகொரனு சத்தம் வருதே, நல்ல ஒலிப்பதிவா தேடிப் பிடிக்கக் கூடாதா? (பல்லைப் பிடிச்சுப் பாத்தே பழக்கமாயிடுச்சுங்க)

    பதிலளிநீக்கு