பதிவு எழுதுவது ஏன்? ஒவ்வொருவருக்கும் ஒரு கோணத்தில் இதற்கான விடை கிடைக்கும்.
வாழ்க்கைப் பயணத்தின் சோர்வைப் போக்க எழுதுவதாக இணைய நண்பர் போகன் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஐமேக்ஸ் முப்பரிமாணப்படம் பார்ப்பது போல, பக்கத்துவீட்டு மாமியை சைட் அடிப்பது போல (ஆர்வீஎஸ்சைச் சொல்லவில்லை, சத்தியமா), இரவு நேர அமைதியில் பழைய சினிமாப் பாட்டு கேட்பது போல, ஓடவுஸ் கார்ல் சேகன் படிப்பது போல, என் பிள்ளைகளுக்கு இட்டுக்கட்டிக் கதை சொன்னது போல, அவ்வப்போது என் அப்பாவை எரிச்சலுடன் நினைத்துக் கொள்வது போல, ஐ-94 நெரிசலில் சிக்கி நிற்கும் பொழுது குறுக்கே புகும் ஔடிக்காரியை நடுவிரல் காட்டி ஒம்மாலத் தமிழில் திட்டுவது போல, "ஏன் B வாங்கினே?" என்று அதட்டினால் தன் அறைக்குப் போய் "gsf dad" என்று txtல் அடக்கும் என் பெண்ணின் துணிச்சலை ரசிப்பது போல, உடற்பயிற்சியைப் போல, அரை ஸ்பூன் நெய்யில் குழம்புகருவடாம் வறுத்துக் கலந்து என் பாட்டி செய்த கொத்தவரங்காய் கூட்டை ஒரு பிடி பிடித்த நினைவுகள் போல, அரைத்தூக்க முத்தத்தைப் போல... எழுதுவது ஒரு வித வடிகால். விடுதலை.
[gsf: get some fiber]
மேலாண்மைத் தந்திரம் என்று ஆங்கிலத்தில் காசுக்குக் குசு விட்டுக்கொண்டிருந்த என்னை உலுக்கியெழுப்பி தமிழ்ப்பக்கம் கொண்டு வந்தவர் என் ஆசிரிய நண்பர் அரசன். தமிழ்ப் பதிவுலக அறிமுகம் அவரால் தான். என் பரம்பரை நதியில் என்னோடு தமிழ் ஓடை வரண்டு போகும் நிச்சயச் சாத்தியம் திடீரென்று உறைத்து, எழுதத் தொடங்கினேன். பூத்தூரிகை, மூன்றாம் சுழி, அபிராமி அந்தாதி வலைப்பூக்களில் எழுதிய அனுபவம் முதல் காதலைப் போல் மறக்க முடியாமல் தொடரும் என்றே நினைக்கிறேன்.
தொடக்கத்தின் மறுபக்கம் முடிவு தானே? கொஞ்ச நாளாகவே மூன்றாம் சுழியிலிருந்து ஓய்வெடுக்க நினைத்து வருகிறேன். சென்ற வருடக் கடைசிப் பதிவுடன் விலக எண்ணியிருந்தேன். தமிழ்மணம் தயவால் ஒரு வாரத்துக்கு சிறப்பானதொரு நீடிப்பு கிடைத்தது. வரும் ஞாயிறுடன் மூன்றாம் சுழியிலிருந்து ஓய்வு பெறப்போகிறேன்.
சோர்வைப் போக்க எழுதத் தொடங்கி அதுவே சோர்வைக் கொடுக்கும் போலிருப்பதால் இந்த முடிவு. வேறு சில பிராஜக்டுகள் வைத்திருக்கிறேன். 'நசிகேத வெண்பா' என்று கொஞ்சம் போரடிக்கும் சமாசாரம் எழுதத் தொடங்கியிருக்கிறேன். முடிந்தால் அங்கே சந்திப்போமே?
என் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாகத் தொடங்கிய முயற்சியில், அருமையான நட்புகள் கிடைத்தது என் தகுதிக்கு மேற்பட்டப் பலன். தொடர்வோம்.
தினம் ஒரு இடுகை எழுதிப் பதிவிடுவது சற்றுச் சிரமம். பொய் சொல்கிறேன். மிகவும் சிரமம். அண்டப்புளுகு. முடியாத காரியம். வலைப்பூ தொடங்கிய நாளில் கூட நான் தினமொரு பதிவு போடவில்லை. தொடக்க நாளில் செய்யாததை முடிக்கும் நாளில் செய்யப்போகிறேன் என்கிற முரணில் ஒரு கிக் இருக்கிறது. Grand finale!
நான் எழுதியதையும் பொருட்டாக மதித்துப் படிப்போருக்கும், பின்னூட்டமிட நேரமெடுத்துக் கொள்வோருக்கும், இன்ட்லியில் தொடர்வோருக்கும் நன்றி. (பாழாய்ப்போன followers gadget இன்னும் 'beta' என்கிறது, பட்டா டேய்). Grand finale வாய்ப்பளித்த தமிழ்மணம் அமைப்புக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்களும் அன்பும்.
2011/01/06
மறுபக்கம்
போக்கற்ற சிந்தனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஒய்வு தேவையாக இருக்கலாம் . ஓய்வாகவும் எழுதலாம் ..நிரந்தரமாக ஒய்வு என்பது வருத்தமளிக்கிறது ,,, மறுபரிசீலனை பிளீஸ்....
பதிலளிநீக்குகண்டிப்பாக ஓய்வுத் தேவை. சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு தொடருங்கள். இந்த பாலோவர் விட்ஜெட் தமிழ் வலைப்பூக்களுக்கு கிடைப்பது இல்லை. வலைப்பூவின் பிரதான மொழியை ஆங்கிலம் தேர்வு செய்யுங்கள் கிடைக்கும்
பதிலளிநீக்குஉங்கள் சேவை எங்களுக்கு தேவை. உங்களின் மாறுப்பட்ட பல சிறுகதைகளை வாசித்த காரணத்தால் சொல்கிறோம், மூன்றாம் சுழிக்கு முற்றுப்புள்ளி வைத்தால் நிச்சயம் எங்களுக்கு இழப்பு தான். தொடர்ச்சியாக பதிவெழுதுவதும் சிரமம் தான் என்பதை மறுப்பதற்கில்லை.
பதிலளிநீக்குபல சிறப்பான சிறுகதைகளைப் படித்த நிறைவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குதோன்றும்போது இங்க தொடர்ந்து உங்கள் சிறுகதைகளை பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்...
மிக்க நன்றி,
இனி நசிகேத வெண்பாவைத் தொடர்கிறேன்.
ஐயா, நான் இப்போதான் உங்க பதிவுகல படிக்க ஆரம்பிச்சு இருக்கன். அதுக்குல்ல நீங்க ஒய்வுன்னு சொன்னா எப்புடி?
பதிலளிநீக்குஇங்க அப்பப்போ உங்கள் பதிவுகல சிறுகதைகளை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்...
நன்றி,
வெண்பாவுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். இருந்தலும் நசிகேத வெண்பாவைத் தொடர்கிறேன்.
ஓய்வு கட்டாயம் தேவைதான். நடுவில் சிறு இடைவெளி விடுவது புத்துணர்ச்சி தரும். நீண்ட விடுப்புக்கு அனுமதி அன்புடன் மறுக்கப் படுகிறது! அவ்வப்போது எழுதுங்கள்.
பதிலளிநீக்கு//"தொடக்க நாளில் செய்யாததை முடிக்கும் நாளில் செய்யப்போகிறேன் என்கிற முரணில் ஒரு கிக் இருக்கிறது."//
உண்மை!
ஒரு நாளைக்கு ஒண்ணு, வாரத்துக்கு ஒண்ணு...ரெண்டாம் சனிக்கிழமைக்கு ஒண்னு ..அப்படிங்கற கண்டிஷன் எல்லாம் வச்சுக்காமா ..தோணறப்ப ஒண்ணுன்னு ஒரு பதிவ போடுங்க ...என்ன பன்றது கிக் பழகிருச்சு. ஊத்தித்தான் ஆகனும் ..ஓய்வ மொதல்ல எடுங்க...அப்புறம் எழுதறத ஓய்வா மாத்துங்க...
பதிலளிநீக்குமூன்றாம் சுழிக்கு மூடுவிழா நடத்த வேண்டாம். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். பதிவெழுதுவதும், பல அன்பான வாசகர்களின் பின்னூட்டங்களைப் படிப்பதும் உங்கள் சோர்வைப் போக்கும் மருந்தாக இருக்கும்.
பதிலளிநீக்குசும்மா சொல்கிறீர்கள் தானே? நசிகேத வெண்பாவிலும் தொடர்வோம் என்றாலும் மூன்றாம் சுழியை தயவுசெய்து தொடரவும்.. உங்களை எல்லாம் பார்த்துத்தான் நானும் ஆரம்பித்தேன், நடுவில் விட்டால் எப்படி? வெறும் நசிகேத வெண்பாவுடன் திருப்தி அடைய உங்களால் முடியாது என நினைக்கிறேன், பார்க்கலாம்.
பதிலளிநீக்குஅப்பாஜி...கஸ்டமாத்தான் இருக்கு.உங்க வயசை மனசில வச்சிக்கிட்டு ஓய்வு கொடுக்கிறோம்.
பதிலளிநீக்குஅப்பப்ப எட்டி வந்து பாத்துக்கோங்க.
பழைய பாட்டும் போட்டுவிடுங்க.
உங்களைவிட வயசானவங்க நாங்க !
//ஹேமா கூறியது... அப்பாஜி...கஸ்டமாத்தான் இருக்கு.உங்க வயசை மனசில வச்சிக்கிட்டு ஓய்வு கொடுக்கிறோம்.//
பதிலளிநீக்குதுரை இது உனக்கு தேவையா ?
ஹேமா, தை மாதம் வந்தால் துரைக்கு இப்பத்தான் பதினைந்து முடிந்து பதினாலு ஆரம்பிக்கின்றது ? நீங்கள் வேற.
நானே ஒரு முறை என் ப்ளாகை டிலீட் செய்து போதும் என்று நினைத்தேன். நீங்கள் சொல்லும் காரணங்கள் என்னை போன்றோருக்கு சரி - ஏனென்றால் சரக்கு கிடையாது. எழுதுவதே தெரியாது என்று இருந்த என்னை அரசன் தயவால் எட்டு பத்து கவிதை எழுத துண்டியதே உன் தமிழால் தான்.
ரெஸ்ட் எடு - தேவை. நான் திருநெல்வேலி இலஞ்சி பக்கம் இடம் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். வந்து காலார நட - புத்துணர்ச்சி வரும் !
நசிகேத வெண்பா - என்னை I-94 இல் காரில் போகும் பெண்ணை நடு விரல் தூக்கி திட்டியது போல் இருக்கு எனக்கு !!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநோ..நோ.. மூன்றாம்சுழி இல்லாமால் நாங்கள் எப்படி ப்ளாக் உலகத்தில் உலா வருவது.. ஏன் சார் இப்படியெல்லாம்.. நானும் பத்துவும் மோகனும் சேர்ந்து வலை பந்த் நடத்துவோம். இன்டர்நெட் மறியல் போராட்டத்தில் குதிப்போம். ஜாக்கிரதை!!.. வேண்டுமென்றால் ஏதாவது மொட்டையாக உள்ள சில வலைப்பூக்களை கொளுத்தவும் தயாராக உள்ளோம்.. நசி சூப்பர். ஒத்துக்கறோம்.. ஆனா எங்களுக்கு சுழியும் வேணும். அப்பாஜி!
பதிலளிநீக்கு(பின்குறிப்பு பக்கத்து வீட்டு மாமி உங்களுக்கு ஜோடியாகும் வயது நிரம்பியவர். ஹேமா சொன்னதை தொடர்ந்து.. சாய் கலாய்த்ததை தொடர்ந்து இது..
இப்படிக்கு
பின்னூட்டத்திற்கு பின்குறிப்பு எழுதும் முதல் தமிழன்.
)
பவீமா பத்தி சேக்காம ஒண்ணுமே எழுத மாட்டீங்களோ RVS? இதுக்காகவே சென்னை வரப்ப உங்களைச் சந்தித்தாகணும். இதான் எங்க வீடுனு யார் வீட்டுக்கோ கூட்டிட்டுப் போயிறாதீங்க.. சரியான பவீ பாத்தாவணும்.
பதிலளிநீக்குவிஷயம் இவ்ளோதானா எல் கே? ஒரு வருசமா மண்டையக் குழப்பிட்டிருக்கேன் - கூகில் உதவி கூட லாயக்கில்லே. சட்டுனு பிச்சி வச்சிட்டீங்களே? வாழ்க!
பதிலளிநீக்குஆடிய பாதமும் தூக்கிய நடுவிரலும் ஓய்வாக அமையாதுன்னு தெரியாதா? ஓய்வு எல்லாம் ரெண்டு வாரம் எடுத்திட்டு, இன்னும் கதைக்கரு யோசிச்சிட்டு வாங்க.
பதிலளிநீக்குநட்சத்திர வாரம் நல்லா இருந்தது. பதிவுலகில் "நல்லவங்க" சொல்றாப்ல, "வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!":))))
சில நாட்கள் உடல் நலம் சரியில்லாததால் அதிகம் இணையம் பக்கம் வரவில்லை.இப்போதுதான் இந்த இடுகை பார்த்தேன்.நிரந்தரமாக என்று எதுவும் செய்யாதீர்கள்.ஒரே ஒரு கருத்து தான்.எழுதவேண்டும் என்ற கட்டாயத்துக்காக எழுதாதீர்கள்.அதே சமயம் எழுதத் தோன்றும்போது சோர்வின் காரணமாகவோ சலிப்பினாலோ எழுதாமால் இருந்துவிடாதீர்கள்.ஒருமுறை கையிலிருந்து தவறவிட்டீர்கள் என்றால் இந்தப் பட்டாம்பூச்சி திரும்பவரும் என்ற நிச்சயம் இல்லை.இது என் அனுபவம்.நீங்கள் ஏற்கனவே ஒருதடவை இந்த ரயிலைத் தவறவிட்டவர் என்று சொன்ன நினைவு.
பதிலளிநீக்கு