2011/01/07

காதல் காக்க

போக்கற்ற சிந்தனை



    ழக்கம் போல் காற்றுக்குப் புழுக்கம் வர நெருங்கியவர்கள் அன்றைக்கு சற்றுச் சலனப்பட்டார்கள். "எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு, ரகு" என்றாள் மது.

"அப்ப என்ன, கல்யாண ஏற்பாடு தானே?" என்றான் ரகு.

"எங்கப்பா விஷம் கொடுத்துக் கொன்னுடுவேன்னு பயமுறுத்தினாரு; அம்மா உடனே ஊருக்கு வானு அடம் பிடிச்சாங்க. ரெண்டு பேரும் காலைல ஹாஸ்டலுக்கு வந்துட்டாங்க. பக்கத்து ஹோட்டல்ல தங்கியிருக்காங்க"

"ரெண்டு நாளைக்கு அப்படித்தான் இருக்கும் மது... இந்தக் காலத்துப் பெத்தவங்க பசங்க விருப்பத்துக்கு குறுக்கே நிக்கமாட்டாங்க.. இதென்ன 1990ஆ?"

"இல்ல ரகு. நாம கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கிறது நல்லது.. எங்கப்பா எப்படிப்பட்டவருனு சொல்லியிருக்கேன் இல்லே?"

"ஏய்.. என்ன ரூட்டு மாத்துற? நீ உங்கப்பாம்மா பேச்சை தான் கேக்கப்போறியா? இப்பவே சொல்லிரு"

"சும்மா இருடா. எனக்கு நம்ம காதல் முக்கியந்தான். அதுக்காகப் பெத்தவங்களை விட்டு வரமுடியாது"

"நான் உங்கப்பாம்மா கிட்டே பேசவா?"

"வேண்டாம். ஒண்ணும் நடக்காது.." என்று தயங்கினாள். ".. ஏன்னா எங்கப்பா ஒரு மாப்பிளையோட இங்க வந்திருக்காரு. நம்ம காதல் அமர காதல்னு வச்சுக்க வேண்டியது தான்"

அதிர்ந்தான். அவன் அதிர்ச்சியைக் கண்டுச் சிரித்தாள். "என்ன அம்பிகாபதி, ஏனிந்தக் கலக்கம்? இம்மட்டுத் தானோ தங்களின் லவ்வ்வ்வு?" என்று அவனை இடித்தாள். "போவுது விடு, ஒண்ணும் ஆவாது. வந்த விஷயத்தைக் கவனி" என்று அவன் கைகளைக் கோர்த்தாள். ரகு மதுவின் கண்களைப் பார்த்தபடி, "ஏய், என்னை ஏமாத்த மாட்டியே?" என்றான். "ம்ஹூம்" என்றாள். "நெஞ்சைத் தொட்டுச் சத்தியமா சொல்லு" என்றான். "நீ தொடுறியா? நான் சொல்றேன்" என்றாள்.

    மது கிளம்பி சிறிது நேரமானதும் திடீரென்று ஏதோ தோன்ற, அவளை செல்போனில் அழைத்தான். "மது, இன்னிக்கு ராத்திரியே எங்க வீட்டுக்கு வந்துரு. எங்கம்மாப்பா கிட்டே சொல்லி கல்யாணம் செஞ்சுக்கலாம். நீ ஹாஸ்டலுக்கு போவாதே, திரும்பி வந்துரு. உங்கப்பாவை என்னால நம்ப முடியாது. ஊர்ல செல்வாக்கு உள்ள ஆளுனு வேறே சொல்லியிருக்கே, உன்னைத் தூக்கிட்டு ஓடிறப்போறான்".

"அக்கறையப் பாரு? அதெல்லாம் ஒண்ணும் ஆவாது.. அப்படி ஏதாவது நடந்தா நானே உங்க வீட்டுக்கு வரேன் சரியா?" என்று போனை வைத்து விட்டாள்.

வீட்டில் சாப்பிடும் பொழுது நடந்ததைச் சொன்னான். "ஒண்ணும் ஆவாது, அப்படி வந்தா நாங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கறோம்" என்றார் அப்பா. அக்கா மட்டும், "எனக்கென்னவோ அவங்கப்பா அவளை இழுத்துக்கிட்டு இன்னேரம் செங்கல்பட்டு போயிருப்பாருனு தோணுது" என்றாள். அவ்வளவுதான். சாப்பாட்டை உதறி வெளியே வந்தான். 'பதினொரு மணி வரை ஹாஸ்டல் அடைக்க மாட்டார்கள். மதுவைப் பார்க்க வேண்டும்'. "மேகம் மூடிக்கிட்டு இடியும் மின்னலுமா இருக்குடா.. எங்கே போறே?" என்ற அம்மாவின் குரல் தொடர, வாசலுக்கு வந்தான்.

வண்டியை எடுத்தான். நர்ஸ் குவார்டர்ஸ் அருகே மேம்பாலத்தில் தெருவிளக்கு ஒன்று கூட எரியவில்லை. ஏறி இறங்கும் பொழுது அவசரத்தில் பள்ளத்தைக் கவனிக்காமல் விழுந்தான். வண்டி சறுக்கி உருண்டு நின்றது. தடுமாறி எழுந்தான். வண்டியை மீட்டு, எத்தனை உதைத்தும் கிளம்பவில்லை. 'இன்னும் மூணு கிலோமீடர் தான் இருக்கும்'. ஓடினான். விழுந்த குதிகால் வலித்தது. 'ஷூவாவது போட்டிருந்திருக்கலாம்'. சகுனம் சரியில்லை என்று நினைத்தான். கரி நாக்கு அக்காவைத் திட்டினான்.

தொலைவில் பெண்கள் ஹாஸ்டலில் வெளிச்சச் செங்கல்கள். வேகம் கூட்டினான். மதுவைப் பார்க்கப் போவது முட்டாள்தனமாகத் தோன்றியது. காதல் வேகம், கண்ணை மறைத்தது. 'இல்லை, இவள் என் மது'. ஒருவேளை மதுவை ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போயிருப்பார்களோ? நடுங்கினான். 'கூடாது, கூடாது. கடவுளே'. ஹாஸ்டல் வாசலுக்குச் சற்று அருகே வந்து நின்றான். இரும்பு கேட்களில் ஒன்றை அடைத்திருந்தார்கள். அல்சேசன் நாய்களுடன் செக்யூரிடி திரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. நாய் என்றாலே அவனுக்கு நடுக்கம். அல்சேசனைக் கணடதும் ஆதிசேசனைக் கண்டது போலானான். மது தங்கியிருந்த மாடிப்பக்கம் இருட்டியிருந்தது. 'அதற்குள் தூங்கியிருக்க மாட்டாளே? எனக்குத் தூக்கம் வராதபோது என் கண்களுக்கு மட்டும் எப்படித் தூக்கம் வரும்? விழித்திருப்பாள். ஒருவேளை...'. வயிற்றில் ஷாட்புட் வீசியது போலானான். மேற்குத்தெரு மதில் சுவரில் டர்ன்ஸ்டைல் கதவு இருப்பது நினைவுக்கு வந்து நடந்தான். 'அங்கிருந்து மதுவின் கட்டிடத்துக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டியதுதான்'.

டர்ன்ஸ்டைல் கதவைச் சங்கிலி கட்டிப் பூட்டியிருந்தார்கள். ஏறி உள்ளே குதித்தான். வலித்தது. அக்கம் பக்கம் யாருமில்லை. ஆதிசேசன் மோப்பம் பிடித்து வருமென்று பயந்தான். 'படியேறிப் போவதென்றால் நிச்சயம் பிடிபடுவோம்'. இன்னும் பயந்தான். கண்ணெதிரே தெரிந்த மழைக்குழாயைப் பிடித்து மெள்ள மெள்ள மெள்ள இன்னும் மெள்ள ஏறி இரண்டாவது மாடியில் இறங்கினான். மாடிச்சுவரோரம் பதுங்கி தவளைமனிதன் போல் நகர்ந்தான். மது இருந்த கட்டிடம் ஓரமாக வந்தான். பக்கத்துக் கட்டிடம். மெள்ளத் தலை நிமிர்ந்து பார்த்தான். 'இந்த மாடிக்கும் பக்கத்து மாடிக்கும் நாலடி இருக்கும் போலிருக்குதே? எப்படிப் போவது'? துணிந்து சுவர் மேலேறித் தாவினான். பயத்தில் அதிகமாகத் தாவிப் பக்கத்து மாடியில் விழுந்து புரண்ட போது எதிரே இருந்த அறைக்கதவில் மோதி விழுந்தான். ஒலி கேட்டு உள்விளக்கு எரிய, வேகமாக எழுந்து மூலைக்கு ஓடி ஒதுங்கினான். விளக்கு வெளிச்சத்தில் அறையெண்கள் தெரிந்தன. விளக்கு அணைந்ததும் அடி வைத்தான். பதினாறு, பதினேழு...இருபத்தொன்றில் நின்றான். உள்ளே அமைதியாக இருந்தது. ஒருவேளை பெற்றோர்களுடன் ஹோடலில் தங்கியிருக்கிறாளோ? 'மது' என்று தாழ்வாக அழைத்தான். கதவை மென்மையாகத் தட்டினான். மறுமுறை தட்டும் பொழுது கீழே அரவம் கேட்டது. ஆதிசேசனின் உறுமல். தொடர்ந்து நொடிகளில் "சத்தம் கேட்டுச்சு.. லைட்டு போட்டேன்.. யாரோ ஓடினாப்புல.." என்று குரல் வர, பதறினான். "மது, மது!". அறைக்கதவை வேகமாகத் தட்டினான், திறந்தது, உள்ளே விழுந்தான்.

செக்யூரிடி வந்து போகும் வரை அமைதியாக இருந்த மது, ரகுவைப் பார்வையால் எரித்தாள். "மது.. உனக்கு எதுனா ஆயிடுச்சோனு பயந்து.. ஒரு வேளை உங்கப்பாவோட.. பதறிட்டேன் மது.. அதான்" என்றான். ஏதோ சொல்ல வந்தவள், அவன் காலருகே சிவந்து வீங்கியிருப்பதைப் பார்த்தாள். "என்னடா இது? காலில் என்ன?" பதறினாள். விவரமெல்லாம் சொன்னான்.

சீறினாள். "எனக்கும் அறிவில்லைனு நெனச்சுட்டியா? எங்கப்பா என்னை மூட்டை கட்டிகிட்டுப் போனா, திரும்பி வரத் தெரியாதா? ஏன் இப்படி லூசாட்டம் நடந்துக்குறே? வண்டில அடிபட்டு.. இருட்டுல ஓடிவந்து.. சுவரேறிக் குதிச்சு.. திருடனாட்டம்.. இதென்ன லூசுத்தனம்? மாட்டிக்கிட்டா ரெண்டு பேருக்கும் தொந்தரவில்லையா? பொறுப்பில்லாம நடக்குறியே? இப்ப உனக்கு எதுனா ஆச்சுனா யார் பொறுப்பு? எப்படி இங்கிருந்து வெளில போவே? காதலிச்சா கண்மூடித்தனத்துக்கு அளவே இல்லியா? இப்ப டாக்டர் கிட்டே எப்படி போவுறது? உன் வண்டியைப் பாத்துட்டு இந்நேரம் போலீஸ் வேறே தேடிட்டிருக்கும்.. கால்ல வேறே அடிபட்டு நிக்கிறே... நான் பொருமிட்டிருக்கேன், என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு?"

"இல்லே.. உனக்குக் கோபம் வந்தா அழுகை வரும்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்.. கண்ணு ரெண்டும் கலங்கியிருக்கே?" என்றான்.

"போடா.." என்று கண்களைத் துடைத்துக் கொண்டு, பாத்ரூமிலிருந்து ஒரு ஈரத்துணியை எடுத்து வந்து அவன் கால்களில் இறுகச் சுற்றத்தொடங்கினாள். "லூசு, செல்போன் இருக்குல்ல? போன் பண்றது தானே?"

"சட்னு மறந்துடுச்சு மது.. உன்னை நெனச்சா மனசுல வேறே எதுக்குமே எடமில்லாம போயிடுது"

"காட்டான். இந்தக் காலத்துல இப்படியொரு காட்டான்.." என்று கட்டை இறுக்கினாள். "சும்மா கத்தாதே.. சுளுக்குதான், சரியாயிடும். மொதல்ல உங்க வீட்டுக்கு போன் செஞ்சு பத்திரமா இருக்கேனு சொல்லு, போலீஸ் தேடி வந்தா அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லு" என்று செல்போனை எடுத்துக் கொடுத்தாள்.

"புத்திசாஆஆலிடா நீ.. அதான் உன்னை லவ் பண்றேன்" என்றபடி வீட்டுக்குச் செய்தி சொன்னான். "தேங்க்ஸ்" என்றான் அமைதியாக. "சாரிடா, கோச்சுக்காதே. நான் வேணா இப்படியே நைசா ஓடிடறேன்".

"கஷ்டம்! போதும் போதும். பேசாம படு. இரு, விளக்கை அணைச்சுட்டு வரேன். எப்படி வெளியே போறதுனு காலைல யோசிப்போம்" என்றபடி அவனை உருட்டி ஓரம் தள்ளினாள். தலையணையருகே கிடந்த புத்தகத்தை நடுவில் வைத்து, "தொடாம படுக்கணும். நீ அந்தப்பக்கம், நான் இந்தப்பக்கம். புக்கைத் தாண்டி வரக்கூடாது" என்றாள்.

"நூல்வேலியா?" என்று சிரித்தான். "ஆமாம், என்ன புக் இது?"

"எல்லாம்.. உன்னை மாதிரி காட்டுவாசிங்க காதலைப் பத்தி.. பேசாமப்படு " என்றாள்.

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே
நீர்பரந்து ஒழுகலின் நிலம்கா ணலையே
எல்லை சேரலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெம் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே?


"ஐயா, எம் தலைவியின் காதலரே! மேகம் மூடிய வானம் இருளை இன்னும் கூட்டியிருக்கிறது; வெள்ளத்தினால் வழி அறியமுடியாத நிலை! அனைவரும் உறங்கும் இந்த வேளையில் மலை, காடு, வெள்ளம், புலி, அரவம் என்ற கொடிய இன்னல்களையும் இந்த இருளையும் பொருட்படுத்தாது எமது ஊர் எல்லையைக் கடந்து வந்து வேங்கை மரம் சூழ்ந்த எம் இல்லத்தையும் எப்படியோ கண்டுபிடித்தீரே? காதலியைச் சந்திக்க இத்தகைத் துன்பம் மேற்கொண்டீரே? வருத்தமாக இருக்கிறது" என்று தோழி தலைவனிடம் சொல்வதாக வருகிறது கபிலரின் குறுந்தொகைப் பாடல்.

ஆதிராவின் பதிவொன்றைப் படித்த போது தோன்றிய கரு.

20 கருத்துகள்:

  1. வாவ்... குறுந்தொகை பாடலை இப்படி கூட interpret பண்ணலாமா? very nice... திருக்குறள் கதைகள் போல் வித்தியாசமாய் இருந்தது...

    பதிலளிநீக்கு
  2. எங்கேயிருந்து எங்கே...

    கலக்கல்.

    பதிலளிநீக்கு
  3. இப்படியெல்லாம் கதை எழுதி எங்களை ஏத்திவிட்டுட்டு ஓடறேங்கிறிங்களே ,நியாயமா.....

    கதை , பாட்டு, அந்த பாட்டு விளக்கம்.. இந்த காலத்தில இப்படி தமிழ்ப் பாடம் நடத்தினால்...குறுந்தொகை என்ன ? புற,அக எல்லா நானுறும் அழகாக உள்ள போய் உட்கார்ந்துக்கும் ...

    சுஜாதா விட்ட நம்மாழ்வாரல்லாம் எங்களுக்கு புரிய வைக்க வேண்டாமா....

    @ஆதிரா, நீங்களும் விடாம நற்றமிழை போட்டுக் கொண்டே இருங்கள்..

    பதிலளிநீக்கு
  4. ரகு-மது - பிரிவோம் சந்திப்போம் ?
    :-)

    பதிலளிநீக்கு
  5. பிரி.சந்த் மதுமிதா...குழந்தைத்தனம் கூடியவள்..

    கா.கா.மது...இறுக்க கட்டு போடுபவள்..

    பிரிவோம் சந்திப்போம் கதையை ஞாபகபடுத்தியதற்கு நன்றிகள் பாலராஜன்கீதா..

    தெரிந்துதான் பெயர் வைத்தீர்களா அப்பாதுரை இல்லை எதேச்சையா...
    (தெரிந்து என்றால் மகிழ்ச்சி கொஞ்சம் கூடும் )

    பதிலளிநீக்கு
  6. நன்றி அப்பாவி தங்கமணி, ஸ்ரீராம், பத்மநாபன், பாலராஜன்கீதா,...

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் என்றால் அப்படியே வைத்துக்கொளுங்களேன் பத்மநாபன்?

    உண்மையில் அந்தக் கதை பற்றி ஒன்றுமே தெரியாது, யார் எழுதியது என்று கூடத் தெரியாது (உங்கள் உற்சாகத்திலிருந்து யூகிக்க முடியும் - simple application of probability).

    இதுபோல் சம்பவமோ குணச்சித்திரமோ அந்தக் கதையில் வந்தால் என்னை மன்னியுங்கள்; நான் படித்ததில்லை. பெயர் வைப்பது random. பாதிக்கதைகளுக்கு நான் பெயரே வைப்பதில்லை :)

    பதிலளிநீக்கு
  8. 'திருக்குறள் கதைகள்' விவரம் சொல்லுங்களேன் அ த? ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி பத்மநாபன்.. (ஐடியா கொடுத்தீங்க)

    என் பள்ளிக்கூட ஆசிரியர் மங்கலமன்னன் நினைவு வந்தது...
    >>>இந்த காலத்தில இப்படி தமிழ்ப் பாடம் நடத்தினால்...குறுந்தொகை என்ன ? புற,அக எல்லா நானுறும் அழகாக உள்ள போய் உட்கார்ந்துக்கும் ...

    பதிலளிநீக்கு
  10. //அப்பாதுரை சொன்னது
    'திருக்குறள் கதைகள்' விவரம் சொல்லுங்களேன் அ த? ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்.//
    சா.வி(சுவநாதன்) அவர்கள் எழுதி ஆனந்தவிகடன் பதிப்பாக பல (45?) ஆண்டுகளுக்குமுன் வெளிவந்ததாக நினைவு.

    பதிலளிநீக்கு
  11. காதல்...காலங்கள்தான் மாறுமே தவிர என்றுமே அதன் சுவை குறைவதில்லையோ !

    பதிலளிநீக்கு
  12. குறுந்தொகைப் பாடல்களில் பண்டையத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைக் கண்டு மகிழலாம். புறநானூறில் நமது வீரத்தையும், ஈகையையும் படித்துப் பெருமைப் படலாம். அருமையானக கதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    நாஞ்சில் இ. பீற்றர்

    பதிலளிநீக்கு
  13. கலைஞரின் சங்கத்தமிழ் பிச்சை எடுக்கணும் போங்க உங்க கிட்ட. சகலகலா வல்லவரப்பா நீங்கள்.

    பதிலளிநீக்கு
  14. //இதுபோல் சம்பவமோ குணச்சித்திரமோ அந்தக் கதையில் வந்தால் என்னை மன்னியுங்கள்;//

    இது வேறு ..அது வேறு.. இது குறுந்தொகை பாடல் வரிகள் கிடைத்தவுடன் பிறந்த கதை..தோதாக இருந்தது.

    அது சுஜாதா காதல் தொடர் எனும் வகையில் முதன்முதல் 80களில் விகடனில் எழுதியது..முதல் பகுதி பொதிகை மலையில் கதாநாயகனின் காதலாகி கசிந்துருக வைத்திருப்பார். இரண்டாம் பகுதி முழுக்க அமெரிக்காவுக்குள் புகுந்து விளையாடி இருப்பார்.

    ரகு மது பெயர்கள் மட்டும் ஒன்றாகி இருந்தது..

    பதிலளிநீக்கு
  15. நன்றி பாலராஜன்கீதா: சாவி எழுதிய புத்தகமா? கேள்விப்பட்டதில்லை; லிஸ்டில் சேர்த்தேன்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி naanjil, சிவகுமாரன், ...

    naanjil சொல்வது உண்மையே; படித்த சில புறநானூறு பாடல்கள் பிரமிக்க வைத்தன. அத்தனை கற்பனையும் தொலை நோக்கும் எப்படி ஒழிந்தன? என்ன காரணம் என்று தெரியவில்லை. மத இலக்கியங்கள் பரவத் தொடங்கியதும் மனித இலக்கியங்கள் மறையத் தொடங்கினவா?

    பதிலளிநீக்கு
  17. அடிச்கீங்களே சிக்சர் சிவகுமாரன்... கலைஞர் தமிழ் தமிழுக்கே பிச்சை தான் (என் கருத்தில்)

    பதிலளிநீக்கு
  18. கலக்கல்! வழக்கம் போல் உங்கள் நடை மனதை கவர்ந்தது. குறுந்தொகை பாடலும், விளக்கமும் அதை ஒட்டிய கருத்தில் உங்கள் கதையும் மிகவும் அருமை.
    //நூல்வேலி// ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கதை அப்பாதுரை.. என்ன கோவையாக போகிறது.. நடை எளிமை அழகு..

    இப்படி கதைகள் பிறக்க சங்க இலக்கியங்கள் இன்னும் இருக்கின்றன. அப்படியென்றால் எண்ணற்ற கதைகள் பிறக்கும்..

    பதிலளிநீக்கு
  20. மிகவும் நன்றி, ஆதிரா. (உங்க பதிவைப் படிச்சு ஏதோ ஒண்ணு தோணிச்சுன்னா, நீங்க என்னவோ எண்ணற்றன்றீங்களே? ஒரு பாட்டுக்கான அருஞ்சொற்பொருள் பாத்து படிச்சு புரிஞ்சு.. ஓ.. மத்தவங்க எழுதலாம்ன்றீங்களா?)

    பதிலளிநீக்கு