இதைத் தமிழில் பெயர்க்கும் பொழுது சுவை குறைந்து விடும் என்று அஞ்சுகிறேன். இருந்தாலும் இதோ: ஐன்ஸ்டைனிடம் ஒரு நிருபர் கேட்டாராம்: "அறிவியல்லே புதுசா எதுனா உண்டா? சொல்லுங்க பத்திரிகைல எழுதுறேன்". ஐன்ஸ்டைன் நிருபரிடம், "இன்னும் பழைய அறிவியலே தெரிஞ்சுக்கலிங்களே? அதைப் பத்தி முழுசா எழுதிட்டீங்களா?" என்றாராம்.
'அடுத்தது என்ன?' என்ற கேள்வியை நம்மையறியாமலே கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். 'அடுத்தது' என்பதில் இருக்கும் திரைவிலகலை ரசிக்கிறோம்; எதிர்பார்க்கிறோம். நாளைக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அறிந்து கொள்வதில் கணிசமான நேரத்தைச் செலவழிக்கிறோம். நேரம் என்பது ரெலெடிவ் என்று தெரிந்தும். யோசித்துப் பார்த்தால், இந்த நொடியில் சுட்ட சூரியரேகை எட்டு நிமிடங்களுக்கு முந்தையது என்று தெரிந்தும், புதியதில் ஆர்வம் காட்டுகிறோம். (அப்படின்னா, சூரியன் சூபர் நோவா ஆகும் பொழுது நமக்கு எட்டு நிமிசம் டாடா பைபை சொல்ல அவகாசம் கிடைக்குமா?) யோசிக்காமல் பார்த்தால், இந்த நொடியில் இழுத்த மூச்சில் ஜூலியஸ் சீசருக்குப் பாட்டன் விட்ட மூச்சின் அணுமூலம் கலந்திருக்கச் சாத்தியம் உண்டு என்று தெரிந்தும், புதுமையில் மயங்குகிறோம். (மாலிக்யூல்னே எழுதியிருக்கலாம், அணுமூலம் பயமுறுத்துகிறது).
எல்லாமே அரதப்பழசென்றால் புதுமையின் கவர்ச்சியில் மயங்குவதேன்? புத்தாண்டிலிருந்து புதுக்காதல் வரை எல்லாவற்றிலும் ஒரு புதுமையை விரும்புவதேன்? இதற்கெல்லாம் பதில் தெரியாது. ஆனால், 'அடுத்து என்ன?' என்பது பழைய கேள்வியானாலும் புதிதாய்க் கேட்டுக் கொண்டே இருப்போம் என்பது தெரியும். இதையே வருடா வருடம் கொஞ்சம் தூசு தட்டி, நாலு வித ப்லேவருடன் அழகான அட்டை டப்பாவில் போட்டு 'மேலாண்மைத் தந்திரம்' என்று விற்று, ஆலோசகர்களும் அறிஞர்களும் நிறையப் புதுக்காசு பார்ப்பார்கள் என்பதும் தெரியும்.
காசு என்றதும் காதை உயர்த்தும் பிராணிகளில் நானும் ஒருவன். நடந்ததையே புரட்டிப் போட்டு தொலைநோக்கு என்று புது ரிப்பன் கட்டி நடமாடவிடும் சித்தர் கூட்டத்தில் பழகிப்பழகிப்பழகிப்பழகி, மூச்சு விடுவது போல் இயற்கையாகி விட்டது. 'extrapolation' மற்றும் 'marginal theory' என்ற இரண்டு 'utterly sexy and devious' சாதனங்கள் இருக்கும் வரை இந்தப் புது ரிப்பன்கள் தொடரும். எல்லாருள்ளும் நாஸ்ட்ரேடமஸ் உண்டு. அடுத்த பத்து வாரங்களில் என்ன நடக்கும் என்று பட்டியல் போட்டால், பத்தில் ஒன்றாவது நடக்கும்; "சொன்னேன் பார்த்தியா?" என்று புருவங்களைத் துரிதமாக இரண்டு முறை உயர்த்தலாம். இதை இன்னும் வித்தை அளவுக்குக் கொண்டு போனால் பிழைப்புக்கே வழியாகலாம்; பிழைப்பதோடு நிற்காமல், 'உலக மகா இவன் அல்லது அவள்' என்ற அங்கீகாரத்துடன் சில சமயம் அநியாயத்துக்கு காசு கூடச் சேர்க்கலாம். (இதையே குடுகுடுப்பைக்காரன் சொன்னால் "போப்பா, ஒண்ணுங்கிடையாதுபா" என்று விரட்டுகிறோம்; அல்லது திகில் கதை எழுதுகிறோம். வேறு விஷயம்)
அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 'தொலைநோக்கு' என்ற பெயரில் வீட்டிலும் வெளியிலும் நிறைய ஜல்லியடி நடக்கும் (இந்தச் சொல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது). சென்ற நவம்பரில் தொழிலுக்காகத் தொலைநோக்கியது போகச் சிறிது அறிவுக்கும், நிறைய வயிற்றுக்கும், ஈயப்பட்டது. பிடித்துக் கொண்டேன். 'அடுத்த நூறு வருடங்கள்' என்ற ஆங்கிலப் புத்தகம் பற்றிய ஆய்வுடன், அடுத்த நூறு வருடங்களில் என்ன ஆகும் என்ற கலந்துரையாடலில் கலந்து கொள்ள உள்ளூர் மேலாண்மை குருக்கள் கழக ஆதரவில் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எனக்குப் பிடிக்கும். அருமையான டிசர்ட் தருவார்கள்.
அரசியல், பொருளாதாரம், உலக வளர்ச்சி, தொழில்நுட்பம், சமூகம், மருத்துவம் என்று பல தலைப்புகளில் கலந்துரையாடுவார்கள். அவரவருக்குத் தோன்றியதை ஒரு வெள்ளைப்பேப்பரில் எழுதி சுவற்றில் தொங்க விடுவார்கள். தொங்கவிட்டதிலிருந்து எது முக்கியம் அல்லது சாத்தியம் என்று வகைப்படுத்துவார்கள். வகைப்படுத்தியதிலிருந்து ஐந்தோ பத்தோ அட்டைப் பெட்டிக்கும் புது ரிப்பனுக்கும் தயாராகும். சுவாரசியமான பொழுதுபோக்கு. டிசர்ட் பற்றிச் சொன்னேன், இல்லை?
அட்டைப் பெட்டிக்குள் என்ன போட்டோம் என்பதை விவரிக்குமுன், இந்தக் கும்மியில் நான் ரசித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
'இருபதாம் நூற்றாண்டில் என்ன நடக்கும்?' என்று இதேபோல் நூறு வருடங்களுக்கு முன் (எதுவும் புதிதில்லை என்று சொன்னேனே?) எல்லோரும் கூடிப் பேசி வெளியிட்ட நூறு 'தொலைநோக்குக் கூற்று'களிலிருந்து என்னைக் கவர்ந்த சில :
- புகையில்லாத ரெயில்கள் மணிக்கு நூற்றைம்பது மைலுக்கும் அதிகமான வேகத்தில் ஓடும்
- கார்கள், குதிரைகளை விட சல்லிசாகக் கிடைக்கும்
- ஆகாயக் கப்பல்கள் பெருகும்
- புகைப்படங்களை உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு தந்தி மூலம் அனுப்பலாம்
- காய்கறிகளும் பழங்களும் அளவில் பெரிதாகப் பயிர் செய்யலாம்
- எந்த மலரையும் எந்த வண்ணத்திலும் எந்த மணமும் வரும்படி பயிர் செய்யலாம்
- ஆங்கில அரிச்சுவடியிலிருந்து X, Q எழுத்துக்கள் நீக்கப்படும்
- Wireless (தமிழில் கம்பியற்றவா?) தொலைபேசி வழியாக ப்ரூக்லினிலிருந்து சைனாவுடன் பேசலாம்
- கடைக்குப் போகாமல் வீட்டிலிருந்தே மளிகை வாங்கலாம் (ஒரு குழாய் வழியாக மளிகை வந்து சேரும் என்றார்கள்)
- பாஸ்டனிலிருந்து லன்டனுக்கு இரண்டே நாளில் போய்விடலாம்
- மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியமில்லாமல் நோய்களைக் குணமாக்கலாம்
இனி, இந்த நூற்றாண்டுக்காரர்களின் கும்மியிலிருந்து சில:
- பள்ளிக்கூடம் கல்லூரி போக வேண்டிய அவசியமில்லாமல் வீட்டிலிருந்தே படிக்கலாம்
- தண்ணீரில்லாமல் குளிக்கவும், துணி துவைக்கவும் சாதனங்கள் பெருகும்
- உலகின் எந்த மூலையிலும் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்; மருத்துவர்கள் தொலைக்காட்சி வழியாக மருத்துவம் பழகுவார்கள்
- universal health insurance பரவும்
- அமெரிக்காவில் மிகத்தீவிர பூகம்பம் தாக்கி இருபது முப்பது வருடங்களுக்கான வளர்ச்சியில் சேதமேற்படும்
- எண்ணை வளைகுடா நாடுகளில் சிலிகன் உற்பத்தியினால் எண்ணையை விட அதிகம் செழிப்புண்டாகும்
- wireless நம் தினசரி வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும் (பல் தேய்ப்பதிலிருந்து நிறைய விஷயங்களை wireless பாதிக்கும்)
- சர்க்கரை உபயோகம் மறையும்
- பிறக்கும் பொழுதே கண் பார்வை திருத்தப்பட வேண்டியிருக்கும்
- space weapons பெருகும்; சைனா விண்ணில் கிடங்கு கட்டும்
எனக்கென்னவோ இருபதாம் நூற்றாண்டுக் கணிப்புகளில் ஆழம் இருந்தது போல் படுகிறது. அன்றைய கலந்துரையாடல்கள் ஒரு வட்டத்துக்குள் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இன்றைக்கு எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையும் வழியும் வகுத்து, "இதில் என்ன நடக்கும்? அது என்னாகும்?" என்று சிந்தனை வீச்சைக் குறுக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சாக்லேட் டிசர்ட்டில் கை வைக்கவில்லை; அது வரை சரிதான்.
இத்தனை எழுதிவிட்டு எனக்குத் தோன்றியதை எழுதாமல் விட்டால் எப்படி? வாய்ப்பு கிடைத்திருக்கிறதே, சும்மா விடலாமா? அறிவியல் தொழில்நுட்பம் பற்றித் தொலைநோக்க எனக்கு அறிவில்லை; அதனால் சமூகம் பொருளாதாரம் போன்ற அசல் ஜல்லியடி வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன். அடுத்த நூறு ஆண்டுகளில்:
- ஆண்/பெண் சார்ந்த சமூக அமைப்பு மறையத் தொடங்கும்
- பிள்ளைகள் பெற்றோருடன் வளர்வது மறையத் தொடங்கும்; பிள்ளை வளர்ச்சிச் செலவுக்குப் பொறுப்பேற்பதோடு சரி
- உலகெங்கும் பால் (milk) தடைசெய்யப்பட்ட பொருளாகும்
- பள்ளி/கல்லூரி படிப்பறிவு ஐந்தே வருடங்களில் முடியும்; பிள்ளைகள் பனிரெண்டு வயதுக்கு மேல் தான் முறையாகப் படிக்கத்தொடங்குவார்கள்
- ஆங்கிலம் உலக மொழியாகும்; வேறெந்த மொழியும் பயில வேண்டிய அவசியமிருக்காது
ஐந்து நாள் கும்மி நிறைவாக இருந்ததா என்று கடைசியில் கேட்டார்கள். சாப்பாட்டில் குறை சொல்லவே முடியாது; அட்டகாசமாக இருந்தது. கடைசி நாள் காக்டெயில் பார்ட்டியில் வழக்கம் போல் எல்லோரும் சிரித்தும் சலித்தும் கொண்டிருந்தோம். "interesting.. 'போர்கள் நிற்கும்; வறுமை ஒழியும்; இனப்பகை ஒழியும்' என்று ஏன் எவருமே சொல்லவில்லை? இதெல்லாம் தொலை நோக்கு வளர்ச்சிகள் இல்லையா?" என்றார் நண்பர்.
"these hors d'œuvres are so fucking good" என்றேன்.