2014/07/28

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    



லுக்ரீசின் சாபம் [6-15]

6
அடங்கியும் அடங்காத
அந்தப்புறக் கிசுகிசுப்பென
அசை போட்டு நடந்தது
அரசினத் தளிர்.

துணை வந்தக் காவலரும்
ஆவலரும் ஏவலரும்
அணைகட்டிய ஆறென
எல்லையில் நின்றனர்.

ஏவல் பேடிகள்4 இருவரை
சேவகராய் வரச்சொல்லி
அஞ்சாமல் முன் சென்றான் செஸ்டஸ். அவனை
ஒட்டிப் பின் தொடர்ந்தான் கொலாடின். விடாமல்
விட்டுத் தொடர்ந்தனர் விடலையர் பிறர்.

நடுவில் நடந்த
ஜூனியஸின் மனதில்
படிந்தது ஒரு கேள்வி.
வலையில் சிக்கியப் பூச்சியை நோக்கிக்
கலையாத கவனம் கொண்ட சிலந்தியின் பயணமாய்
நிலையாக. மெள்ள. தெளிவாக.
ஒரே ஒரு வரம்.

உடன் வந்தோரின்
தீப்பந்தங்கள்
அருகில்
கொள்ளிவாயென எரிந்து
தொலைவில்
மின்மினியாய் மறைந்தன.

நகரம்
கடந்த கிராமம்
கடந்தக் கா
கடந்த காடு
எனச் சுற்றி
பல நாட்கள் நடந்தபின்
பனிமலையின் காலடியில்
காளையரின் காலடி.

நிலவை விழுங்கிய இரவு.
சலவை செய்தத் தரையில்
படர்ந்த வெண்பனி
பரப்பிய வெளிச்சம்.
சிறுத்தைத் தோல் போர்த்தினாற்போல்
கருவானமெங்கும் ஒளிப் புள்ளிகள்.

அடிவாரத்தை
நோட்டமிட்டான் கொலாடின்.
'இங்கே தங்கலாம்' என்றான்.

'ஆகட்டும்!' என்ற
செஸ்டஸின் ஆணையில்
அஞ்சி நடுங்கிய
அடிமை அலிகள்
பள்ளம் வெட்டி
விறகுத்தூள் பரப்பி
அகண்ட தீ மூட்டி
அத்தர் திரவியம் தூவி
அமைதியாய் ஒதுங்கினர்.

படுத்தது தீயைச் சுற்றிப்
பதின்ம வயதுக் கூட்டம்.

உறக்கம் வரவில்லை.
உற்சாகத்தின் எல்லை.

'விடியுமுன் மேலேறி
வேண்டிய குறி கேட்போம்.
பொழுதைக் கழிக்கச் சற்றுப்
பழங்கதை பேசுவோம்'
என்றான் கொலாடின்.

7
'கிரேக்கப் பித்தியாவில்5
தொடங்கியது குறி தேவதை.
சரியாகக் குறி கேட்கத் தவறினால்
கண்களைக் குதறிடுமாம் தேவதை'
என்றான் ஒரு அரசின இளைஞன்.

'என் பாட்டனார்
குறி கேட்டக் கதை கேளீர்.
தூணில் இருந்த மண்டையோடு6
துடிப்போடு அசைந்திறங்கி
தன்முன்னே வந்ததென்றார்'
என்றான் செஸ்டஸ்.
'ஆ!' என்று
அலறியோரை அடக்கி,
'கேளீர்.
அசைந்து வந்த மண்டையோடு
முகத்தை உரசி நகைத்தது.
என் பாட்டனார்
வீரர்களில் உயர்ந்தவர்.
மண்டையோட்டை அழுத்தி
வலது காலில் நசுக்க
அடுத்த மண்டையோடு
அலறியபடி இறங்கியது.
அவரைச் சுற்றி
தீப்பொறியாய்த் துப்பியது.
கலங்காத வீரரான என் பாட்டன்
அடங்காத மண்டையோட்டை
இடது கையால் ஓங்கியடித்து
இடது காலில் இட்டு அழுத்தினார்'
என்றான்.
'மேலும் சொல், மேலும் சொல்' என
நெருங்கியக் கூட்டம் கண்டுப்
பெருமையுடன் செருமினான் செஸ்டஸ்.
'இரு காலால் இரு ஓடுகளை அழுத்தி
நின்ற என் பாட்டனைப் பார்த்து
பெருங்கோபத்துடன் இறங்கியது
மூன்றாவது மண்டையோடு.
முறைத்தது. முன்கோபத்தில் முரண்டது.
'என் நண்பர்களை விடு,
உன்னை உயிருடன் விடுகிறேன்' என்றது.
பாட்டன் சிரித்தார்.
'நீ குறி சொன்னால், அதிலும்
நல்ல குறி சொன்னால்,
உன் நண்பர்களை விடுவேன்.
அன்றேல் அழுத்திப் பொடி செய்வேன்'
என்று பாட்டனார் மேலும் அழுத்தினார்.
மண்டையோடுகள் அஞ்சிக் கெஞ்சின.
'விடியப் போகிறது.
குறி சொன்னால் உன் நண்பர்கள்
பிழைத்துப் போவர்.
தவறினால் விடிந்ததும்
உன்னையும் என் கைகளால்
அழுத்திக் கொல்வேன்'
என்று அஞ்சாநெஞ்சன்
என் பாட்டன்
உறுதியாக நிற்க,
இளகி வந்தது
மூன்றாவது மண்டையோடு.
உயிர்ப் பிச்சை கேட்டு
உன்மத்தமாய் ஓலமிட்டது
குறி தேவதை.
மூன்று மண்டையோடுகளையும்
விடுதலை செய்தார் பாட்டனார்.
ஓடுகளும்
தப்பினால் போதுமெனத்
தூண்களில் ஏறின.
குறிதேவதையின் குரல்
இங்குமங்கும் ஓலமிட்டது.
பின்னர் தெளிவாக,
மூன்று திங்கள் பொறுத்து
மன்னராவாய் என்றது.
தொடர்ந்தது
என் பாட்டனாரின் வரலாறு'
என முடித்தான் செஸ்டஸ்.

'வீரப் பரம்பரை!' என்றுப்
புகழ்ந்தது அரசினம்.

'வீரப் பரம்பரை ஒரு நாள்
விதிப்படி அழியும் என்றும்
விவரமாகக் குறி சொன்னது'7
என்றான் ஜூனியஸ்.
மெள்ள.

'என்ன உளறுகிறாய்?' அரற்றினான் செஸ்டஸ்.

'ஆமாம் சகோ,
பாட்டன் பேச்சை மறந்தாயா?'
என்ற ஜூனியஸைச்
சுற்றியது அரசினக் கூட்டம்.
'அப்படியா? நீ சொல்லு.
அரச பரம்பரை அழியுமா?'.

ஜூனியஸ் அமைதியாகப் பேசினான்.
'ஆம். தேவதையின் குறிப்படி
பைரவன் பேசிடும் கட்டம்
பரம்பரை அழியும் திட்டம்'.8

சொல்லி முடித்த ஜூனியஸை
தயங்கிப் பார்த்தது கூட்டம்.
ஓகோவெனச் சிரித்தது.
'முட்டாள்களின் அரசன்
மூடர்களின் தலைவன்' எனத்
தலையிலும் வயிற்றிலும்
தரையிலும் வானிலும்
அடித்துத் தாளாமல் சிரித்தனர்.
'நாய் பேசினால்
பரம்பரை அழியுமா?
முட்டாள்.
எனில் அழிய வாய்ப்பே
இனியிலையென்று பொருள்.
இதையறியாத நீ
முட்டாள். மூடன்.
உனக்கெதற்கு குறி தேவதை?'
என்று
செஸ்டஸ் இளப்பம் காட்ட
அனைவரும் ஜூனியஸை
வேடிக்கை பாதி வேதனை மீதியெனக்
கூடிக்கூடிக் கேலி செய்தனர்.
கேலியின் களைப்பில்
கண் சாய்த்தனர்.

8
எங்கோ ஊளையிட்ட ஒநாய் ஒன்று
எழுப்பியது அனைவரையும் அவசரமாய் நன்கு.
களைப்பாற
மூலிகை நீர் கொணர்ந்தனர்
அலிகள்.
முகங்கழுவி முடிசீவி
முறையாக உடையணிந்து
குறிகேட்கத்
தயாரானது அரசினம்.
அலிகளை
அடிவாரத்தில் அமரச்செய்து
குருடர் போல் கோல் பிடித்து
இருளில் மலையேறினர்
மன்னர் மக்கள்.

உச்சிக்கு வந்த
கொலாடின்
சுற்றிலும் பார்த்துச்
சமாதானமானான்.
எதிரே தெரிந்த
குறி தேவதைக் கோயிலைக் கண்டான்.
'வாருங்கள்' என்று
மற்றவரை அழைத்தான்.
வந்தனர்.
வாய் பிளந்த குகையைக் கண்டு
வாய் பிளந்தனர்.

9
முப்பெரும் தூண்கள்.
தூண்களிடைப் பாறைச்சுவர்.
சுவற்றுக்குப் பின்புறம் எரிதணல் ஒளி.
மேலெழுந்தப் புகை
தூண்களைச் சுற்றியக் கொடி போல் படர்ந்தது.
தூண்களின் உச்சியில் மேடை.
மேடைகளில் மண்டையோடு.
வாய் பிளந்த மண்டையோடுகளின் வழியே
பேய் நுழைவது போல் வெளியேறிய புகையும் ஒளியும்
பிள்ளைகள் மனதில் பயமூட்டின.
அமைதியாக ஒவ்வொருவரும்
ஒரு காணிக்கையைச்
சுவற்றுக்குப் பின்புறம்
எரிகின்ற தணலில் எறிந்தனர்.
'குறிதேவதைக்கு வணக்கம்' என்றனர்.
அமைதியாகக் காத்திருந்தனர்.

மெள்ள வீசியக் காற்றுடன்
மோக விளையாட்டு ஆடியது புகை.
இங்கொரு தழுவல். அங்கொரு சீண்டல். பின்னொரு விலகல். மீண்டும் தழுவல்.
ஒட்டிவந்தத் தணல் ஒளியில் புகையின் காமம்.
திட்டமின்றிப் பிள்ளைகள் பார்க்கையில் திடுமென
வெட்டறிவாள் விழுந்த கன்று போல்
ஓரகில் தேவதை ஓலமிட்டாள்.
சிங்கத்தின் வாயில் சிக்கிய சிறுநரி.
இறந்து பிறந்த பிள்ளையைக் கண்டத் தாய்.
பிறந்த காரணம் புரியாதப் பிள்ளை.
பாலுக்கு அழும் சேய்.
நூலுக்கு அழும் அறிஞன்.
பொங்கியெழும் பெண்ணின் சீற்றம்.
வெற்றிக் கெக்கரிப்பு.
பற்றறுத்தப் பரதேசியின் மௌனம்.
நீண்ட ஆயுளின் வலி.
நிறைந்த கலவியின் ஆனந்தம்.
அத்தனையும் கலந்து
பித்தியா தேவதை ஓலமிட்டாள்.
மேடையில் ஓடுகள் தாளமிட்டன.

'அரசாளும் தகுதியோடு வந்திருக்கிறேன்.
தரமானக் குறி சொல்ல வேண்டும்' என்றான் செஸ்டஸ்.

'அரசனைக் கேட்டால் ஆண்டி மேலென்பான்
ஆண்டியைக் கேட்டால் அரசு வேண்டுமென்பான்.
ஆண்டியாகும் வலிமையிருந்தால்
அரசையாளும் பொலிவும் பெறலாம்'
என்றுச் சிரித்தது ஓரகில்.

சீறினான் செஸ்டஸ்.
'ஏய்! பிணந்தின்னும் பிசாசே!
நல்ல குறி சொல். இல்லை உன் மண்டையோடுகளை
நான் மண்ணில் புதைப்பேன்!'.

பயமின்றி இளித்தது ஓரகில்.
'பாட்டனின் பேரனா? வந்தாயா?
சொல்கிறேன். குறி சொல்கிறேன்.
முகத்தைப் பார்த்துச் சொல்கிறேன். கேள்.
முத்தத்தில் உள்ளது மகுடம்'.
பித்தச் சிரிப்பு.
பேய்ச் சிரிப்பு.
மண்டையோடுகள் ஆட
மனதை உலுக்கும் சிரிப்பு.
'முத்தமிடு முடிசூடு முத்தமிடு முடிசூடு'.
தணல் தீடீரென்று திக்கெங்கும் தீயாக
அணலைக் கூட்டும் எக்காளச் சிரிப்பு.
கழிந்த ஊழியின் அமைதி.

பழிக்கும் தேவதை குறி கேட்டு
விழித்தான் கொலாடின்.
வெருண்டான் செஸ்டஸ்.
குழம்பினான் ஜூனியஸ்.
தயங்கினர் பிறர்.

முயலின் குட்டி போல்
முனகிய தேவதை
மெள்ளக் குரலுயர்த்தியது.
'ஆம். முத்த மகுடம்.
முடியாளு முன்னே
முத்தமிட வேண்டும்.
தாயைத் தழுவியவள் கட்டியவள்
வாயிலே முத்தமிடுவோன்
விடியலில் உலகை வென்று
துடிப்புடன் தரணியாள்வான்.
உங்களில் ஒரு தங்கம்
முத்தமிடுவார், முடியாள்வார்'.

குறி நின்றது.
தீயும் தணலும் அணைந்தன.
தூணசைய மண்டையோடுகள் மறைந்தன.
அயர்ந்துறங்கும் கிள்ளையின்
மூச்சொலி போல்
முனகல் மட்டும்.
தீயில் வேகும் இறைச்சியின் வாடை
மேவிய காற்றின் ஓசை.
செவிடரின் அமைதி.

அரசினப் பிள்ளைகள்
விரசலாய் விலகினர்.

10
மலையிறங்க முனைந்த
மன்னர் மக்கள்
முத்தக் குறியில்
சித்தம் குழம்பினர்.
'முத்தத்தில் உள்ளது மகுடம்'
பித்தியாவின் குரல் முனகலாய்.

'நானிடுவேன் என் தாயை முத்தம்!' என்று
பதவி வேகத்தில் ஓடத்தொடங்கிய
செஸ்டசைத்
தொடர்ந்தனர் பிறர்.
நடுவில் நடந்த
ஜூனியசைத் தள்ளினர்.
இடறி விழுந்த ஜூனியஸ்
தடுமாறிப் புரண்டு உருண்டான்.
கலங்காமல் அவனை மிதித்து ஓடினர்
அலட்சிய அரசினர்.
ஒருமணி பொறுத்துத்
திரும்பிய கொலாடின்
மண்ணில் கவிழ்ந்து
புண்பட்டுக் கிடந்த
நண்பனைக் கண்டான்.
மேலேறி வந்து
கோல் கொடுத்து கைத்தாங்கலாய் எழுப்பினான்.

ஜூனியசின்
கை ஒடிந்திருந்தது.
முடி குலைந்திருந்தது.
முகம் சிவந்திருந்தது.
முகமெல்லாம் மண்.
மண் மறைத்தப் புண்.
ரத்தக்காயங்கள் நிரவியிருந்தன.

'வா' என்றழைத்த
கொலாடினின் கைபிடித்துக்
காலெடுத்தான்
ஜூனியஸ்.

11
அரச மருத்துவர்
அமைதியாக
விவரம் கேட்டார்.
ஓய்ந்திருந்தப் பிள்ளையின்
காயங்களைக் கட்டினார்.
தாயைத் தனிமையில் அழைத்தார்.

'என்னருமை யூரிதி!
உன் பிள்ளை உன்மத்தனல்ல' என்றார்.
'என்ன சொல்கிறீர் மருத்துவரே?'
என்று கேட்ட அன்னையை அடக்கினார்.
'அமைதி. யூரிதி, அமைதி.
தேவதையின் குறியைக் கேட்டாயா?
தாவி வந்துத் தாயை முதலில்
முத்தமிட ஓடியவர்கள்
மத்தியிலே உன் பிள்ளை மட்டும்
புத்தியினால் பயன் பெற்றான் யுரீதி
புத்தியினால் பயன் பெற்றான்!
அனைவருக்கும் தாயாவாள் பூமி.
அசல் தாய் அவள் ஒருத்தியே.
புவனம் அத்தனையும் ஈன்றெடுத்தாள்.
அவளை இவன் முத்தமிட்டான்.
முகத்தின் காயம் முத்தத்தின் காயம்.
விழுந்தவன் தொழுதவன்.
இவன்
உதட்டின் ரத்தம் நம்
தாயின் முத்தம்'.

திடுக்கிட்டாள் யூரிதி.
திடமாய்ச் சொன்னார் மருத்துவர்.
'ஆம் மகளே!
நீதியின் வேகம்
நத்தையின் வேகம்.
நீண்ட விரல்களின் நிற்காத பொம்மலாட்டம்.
வேண்டியபடி உன் மகன் முடியாளலாம்.
இது நீயும் நானும் நம் தாயும் அறிந்த ரகசியம்.
முத்தமிட்ட இவனை இனி
பித்தனாகவே இருக்கச் சொல்.
சத்தியம் இவனைச் சந்திக்கும் வரையில்
பித்தனுக்குப் பெரும் பாதுகாப்பு'
நன்றுரைத்து மருத்துவர்
சென்று மறைந்தார்.

12
காற்றானது காலம்.
வளர்ந்தனர் பிள்ளைகள்.
வாலிப வேகமும்
வாழ்க்கையின் வேகமும்
நண்பர்களை நெருக்கியது. விலக்கியது.

வளர்ந்து இளவரசான செஸ்டஸ்
பெருமுடி பெறுமுன்
ஒருமுடி அனுபவம் பெறக்
குறுநில மன்னன் ஆனான்.
தந்தையைத் தொடர்ந்து
முடிசூடத் தயாரானான்.
மதுவும் மாதும் மன்னருக்கழகென
புதுப் புதுக் கலைகள் பழகினான்.

இளவலின் தளபதி கொலாடின்.
இணைபிரியா நண்பனுமானான்.
அழகுத் தேவதைக் குழம்பு
இளம் பூக்களின் பிழம்பு
லுக்ரீஸ் என்னும்
இனிமைப் பெண்ணின் இதயக்கனி.
இதய அதர உரிமையாளன்.

மக்களுக்காக மக்களால் மன்னனேயன்றி
மன்னனுக்காக மன்னனால் மக்களல்ல
என்னும் பகுத்தறிவுத்
தத்துவங்கள் பேசித் திரியும்
பித்தனென்று ஊர் சிரித்தாலும்
மன்னர் குலமென்ற மரியாதையுடன்
தன்னந்தனியே வாழ்ந்தான் ஜூனியஸ்.

13
பதவி மோகம்
புறக்குருடனாய் பகை வளர்க்கும்
அகக்குருடனாய் அமைதி கெடுக்கும்
புதைகுழி
பரம்பரையை அழிக்கும்
தீராப்பிணி
நாராசம்
தனிமையின் விதை
மனிதத்தின் விழல்.

சிற்றப்பன் லூசியஸ் பதவி மோகத்தின் அதிபதி.
ஒட்டு மொத்தக் குத்தகையாளன்.

மாபெரும் எனும் அடைமொழி
விளக்காது தன்னை,
அளவிற் சிறியதென்னும்
அகந்தையுடையோன்.

அங்கிருந்தும் இங்கிருந்தும்
நாடுகளை இணைத்து
பெருஞ்சீசரின் கனவில்
இருமாந்திருந்தான்.

அடுத்தவர் நாடும் அடுத்தவர் மனையும்
எடுத்தவர் என்றும் கெடுத்தவர் ஆவர்.

தலைவனை மீறிய நெறிகள் இல்லையென
செருக்குடன் நடந்த லூசியஸ் மன்னன்
இருக்கும் நாடுகள் போதாதென்று
இன்னொன்றன்மேல் ஆசை கொண்டான்.

யுரீதியின் தந்தை மேல் போர் தொடுத்தான்.

முறையிட்டாள் யுரீதி.
மறையோதினான் லூசியஸ்.
'மாறுகிறது காலம்.
ஒரு குடையின் கீழ்
நாடுகள் இருக்க வேண்டும்.
மக்களை அடக்க முடியாமல்
சிக்கித் தவிக்கிறான் உன் தந்தை.
அவனுக்கு இது விடுதலை'.

மனம் வெறுத்த யுரீதி
மகன் நினைவில் ஒதுங்கினாள்.

கடுமையான போர்.
மகன் செஸ்டஸ் முன் நின்று போரிட்டான்.

போர் முடியும் தறுவாயில்
அரிதியா நகருக்கு
இளவலை அனுப்பிய லூசியஸ்
'மகனே, இது உன் பேரரசின் துவக்க விழா.
அரிதியா நகர ஆக்கிரமிப்பு.
இங்கிருந்து தொடங்கு உன் அரசை.
அரிதியாவில் அரியணை அமை.
சுற்றிலும் சீராக்கு.
வெற்றியுடன் திரும்பி வா.
பேரரசின் முடிசூட வா'
என்று ஆசி கூறித் திரும்பினான்.

14
அரிதியா தலைநகர்.
ஆயிரம் வீரர்களுடன் போர்.
அரிதியாவை அசர வைத்தான் கொலாடின்.
யுரீதியின் தந்தையை வென்றான்.

சிறை பிடித்த மன்னவனின்
கறை படிந்த சிரத்தைக் கொய்து
'இந்த வெற்றி உனக்கான என் பரிசு' என்று
முந்தி வழங்கினான் இளவலிடம்.

உயிர் நண்பனின் செய்கையில்
உவகை கொண்ட செஸ்டஸ்
உலகறியக் கூவினான்.
'என் நண்பன்!
என் உயிர்!
இனியவன் இனியிவன்
என் பேரரசின் பெருந்தளபதி!'.
தன் விரலையும் கொலாடின் விரலையும் கீறிக் குருதி கலந்தான்.
உன்னுயிர் என்னுயிரென்றான்.
நட்பின் சங்கமம் என்றான்.
'என் பேரரசின் தலைநகர்
உன் பெயரில் இனி
கொலாடியம் என வழங்கும்'.
நண்பனைக் கட்டினான்.
நாடு காணக் கட்டினான்.

15
எரிந்தது அரிதியா.
போரின் வெப்பம் தணியவில்லை.
மன்னனை இழந்த அரசு
மானத்தை இழக்க மறுத்தது.
இன்னும் போர் என்று இழுத்தது.

செஸ்டஸும் படையும்
இறுதி வெற்றிக்காக
உறுதியாகக் காத்திருந்தனர்.

களைப்பகலக் கூடாரத்தில்
மதுவும் மங்கையும் இருந்தாலும்
மன்னனும் நண்பனும் மக்களும்
மனம் சோர்ந்திருந்தனர்.

போருக்குத் துணைவந்த
ஓரூர் சிற்றரசன்
மாறுதலுக்கு இன்று நம்
மனைவி பற்றிப் பேசுவோமென்றான்.
'இனிமைகளைப் பேசுவோம்.
தனிமையினைப் போக்குவோம்' என்றான்.

வரிசையாகப் பேசினார்கள் வீரர்கள்.
மதுவின் போதையிலே
தத்தம் மனைவியரின்
அழகையும் அறிவையும் கற்பையும் பற்றி
பொழுதெல்லாம் பேசினார்கள்.

அள்ளவியலா லுக்ரீஸின் அழகைச் சொல்ல
மெள்ளத் தொடங்கினான் கொலாடின்.


லுக்ரீசின் சாபம் [16-18]


4 இளவல்களையும் இராணிகளையும் பாதுகாக்கப் பேடிகளை நியமிப்பது எகிப்து, கிரேக்க, ரோம் அரசினர் வழக்கமாக இருந்தது.

5 கிரேக்க வரலாற்றில் பித்தியா எனும் குறிதேவதை ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பின் உடலில் புகுந்தவள். பாறைகளுக்குப் பின்னால் அருவமாகவும் உருவமாகவும் இருந்து பித்து பிடித்தாற்போல் குறி சொன்னவள்.

6 குறி தேவதையின் இருப்பிடம் பொதுவாக ஒரு குகை வாயில், மூன்று தூண்கள், தூண்களை இணைக்கும் பாறைச்சுவர், மற்றும் தூண்களின் தலைமேடையில் ஒரு மண்டையோடு எனச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

7 நல்ல குறி சொல்லும் தேவதை, சொன்ன வேகத்தில் கெடுதலும் சொல்லும். குறி கேட்டு வந்ததும் நல்லதை அல்லது சாதகமானதை பொதுவில் அறிவிப்பதும், தீய குறிகளை மிக நெருங்கியவர்கள் தவிர யாருக்கும் தெரிவிக்காதிருபப்தும் அரச வழக்காக இருந்தது.

8 ரோம் மன்னரகளின் அழிவை இரண்டு தீய குறிகள் முன் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
    - நாய் மனிதக் குரலில் பேசும்
    - தாய் உதட்டில் தனயன் முத்தமிடுவான்
இரண்டும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சொன்னதாகவும் நடந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. இடறி விழுந்து அழுந்தி முகத்திலும் உதட்டிலும் அடிபட்டு ரத்தக்காயம் பெற்ற நிகழ்வு, பூமித் தாயைத் தொட்டு முத்தமிட்டதன் குறி. ஷேக்ஸ்பியர் கதையில் இது மட்டுமே வருகிறது. கூடுதல் சுவைக்காக தமிழ்க் கதையில் இரண்டையும் இணைத்துள்ளேன். மனிதக் குரல் நாய் பின்னால் வரும்.

12 கருத்துகள்:

  1. முந்தய பகுதியை விட இன்றைய பகுதி படிப்பதற்கு சற்று எளிதாக இருந்தது. சிக்கலில்லாத தெளிவான நடையில் தெளிந்த நீரோடைப்போல் கதை செல்வது உங்களது ஆத்மார்த்தமான உழைப்பினை வெளிப்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் மீண்டும் படிக்கும் அளவுக்கு அழகாக புனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  3. பதவி மோகம் புதைகுழி.
    பதவி மோகம் பரம்பரையை அழிக்கும்.
    பதவி மோகம் நிரந்தரக் கேடு.
    பதவி மோகம் முற்றிலும் தனிமை.//
    பதவி ஆசையால் ஏற்படும் விபரீதங்களை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டாமல் சுட்டியதற்கு நன்றி :-). திருத்திவிட்டேன்.

      நீக்கு
  4. எனக்கு ஏனோ நம் திரைப்படங்கள் சில நினைவுக்கு வந்தது. ஷேக்ஸ்பியரின் கதை பலராலும் கையாளப் பட்டு வந்திருக்க வேண்டு.ம் எளிய தமிழில் அழகுடன் எழுதும் பாங்கு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. திரைக்கதைகளில் அதிகமாகக் கையளாப்பட்டவை சேக்ஸ்பியர் படைப்புகள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.அநியாயத்துக்கு எழுதிக் குவித்திருக்கிறார். அதே போல் ஆங்கில மொழியின் அத்தனை சொற்களையும் பயன்படுத்திய இருவரில் முதல்வர் சேக்ஸ்பியர் என்றும் சொல்லப்படுகிறது (அது என்ன கணக்கோ, யார் எப்படி எடுத்தார்களோ தெரியவில்லை).

      நீக்கு
    2. சேக்ஸ்பியர் கதைகளை வைத்து 250க்கு மேற்பட்ட படங்களை ஹாலிவுட் வெளியிட்டிருக்கிறது. ஹேம்லெட் மட்டுமே நூறு படங்களுக்குக் கருவானதாகச் சொல்லப்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட திரைக்கதைகளைப் பின்னத் தூண்டிய இன்னொரு பெரும் படைப்பு டூமாவின் count of monte cristo. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் மகாபாரதம். இரண்டாவது மான்டி கிரிஸ்டோ. எத்தனை முறை படித்தாலும் சலிக்காதவை.

      நீக்கு
  5. குறி கேட்ட கதையெல்லாம் சிறார்களுக்குச் சொல்வது போல் அழகாக இருந்தன. ஆனால் குறி தேவதையின் இருப்பிடம், அது சொல்லும் குறிகளைப் பற்றி விளக்கக் குறிப்பில் படித்த பொழுது இந்திரா செளந்திரராஜன் அளவில் ஏதாவது எழுதலாமா என்கிற அசட்டு எண்ணம் தோன்றியது உண்மை.

    குறி தேவதையிடம் குறிகேட்ட வர்ணிப்பில் (தமிழ்) கவிதையிலும் ஒரு நாடகக் காட்சி எஃப்க்டை கொண்டு வந்திருந்தது நேர்த்தியாக இருந்தது.

    நிறைந்த கலவிக்கு கிடைக்கும் ஆனந்த ஓலச் சிறப்பு, நூலுக்கு அழும் ஓலத்திற்குக் கிடையாதா? அறிவு தேடல் ஓலமன்றோ அது?..

    முத்தத்திற்கும் முடியாள்வதற்கும் போட்ட முடிச்சு அவிழ்க்க முடியாத திணறல்.

    கவிதையாக்கத்தில் 'என் மொழியில் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்கிற வீம்புத்தனமில்லாமல் புரிதலுக்காக தெரிந்தே வளைந்தும், நெகிழ்ந்தும் போனமைக்குப் பாராட்டுகள்.

    ஓனாய் = ஓநாய்
    மூப்பெரும் = முப்பெரும்?

    ஷேக்ஸ்பியரின் மேல் கொண்ட காதலால் ஒரு காலத்தில் ஜெகப்பிரியன் என்று ஒருவாறு அவர் பெயரைத் தமிழாக்கம் கொண்டு அந்த புனைப்பெயரில் பத்திரிகைகளில் சில கதைகள் எழுதியிருப்பதும் இப்பொழுது நினைவிலாடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுதிய பின்னூட்டமே காணாமல் போவது கொஞ்சம் பயமாக இருக்கிறது.
      மறுமுயற்சி ஜீவி சார்.

      இத்தோடு பலமுறை கேட்டாகிவிட்டது - அவசரமாகப் படித்தேயாக வேண்டும் இந்திரா சௌ புத்தகம் ஒன்றை.

      நூலுக்கு அழும் ஓலம் இருக்கிறதே - புரிந்தார் புரிவார்.

      கவிதையாக்கம்? ஹிஹி. நன்றி.

      திருத்தங்களுக்கும்.

      நீக்கு
    2. நூலுக்கு அழுவது இன்னும் போதாதென்ற ஏக்கம் :-)
      நிறைந்த கலவியின் ஓலம் போதுமென்ற (ஆளைவிடு) தாக்கம்?

      நீக்கு
  6. சரி தான். மூ.சு.வில் இப்போ கவிதை சீசன் போலிருங்கு. பிச்சுகிட்டு வருதே! :))
    உங்கள் காட்டில் மழை. ஜமாயுங்க.

    பதிலளிநீக்கு
  7. ஆம். மீள் வாசிப்பைத் தூண்டுகின்றன பல வரிகள். பிரமாதம்.

    பதிலளிநீக்கு