2013/12/24

பேயாள்வான் புராணம்

2

1





    தி என் கைகளைப் பிடிக்க விரைந்தான். அவன் முகம் வெளிறிப் போயிருந்தது, இருளில் தெளிவாகத் தெரிந்தது.

"ஓ, நோ!" என்று ஒதுங்கினான். குதறப்பட்டுச் செத்துக் கிடந்த ஏதோ மிருகத்தின் மேல் கால் பதித்து, அந்தக் கரடுமுரடான வழுக்கலில் தடுமாறினான். "வாட் இஸ் திஸ் ப்லேஸ்? எப்படி இங்கே வந்தேன்? ஹேய் மேன்.. யார் நீ?". என்னைப் பிடிக்க முயன்றான்.

"நானும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.."

"சிரிக்காதே சூனியக்காரா.. இது என்ன இடம்? யாருடைய கனவு?"

"எல்லாமே நம் கனவு. எல்லாமே நம் நனவு. இந்தக் கணத்தின் இந்த அனுபவம் மட்டுமே நம் நிஜம்"

"வாட் டு யூ மீன்?"

"மாயாமயம் இதம் அகிலம்"

"அப்படினா?"

"சொல்லிக் கொடுக்கலியா? உங்கப்பாம்மா என்னதான் செஞ்சாங்க?"

"எங்கம்மா சாப்பாடு போட்டாங்க... எங்கப்பா சத்தம் போட்டாரு... ஸ்டுபிட்.. ஸே..அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? லெட் மி அவுட்"

"உட்புகுந்தவன் வெளியேறத் தவிக்கிறான்.. வெளிவந்தவன் உட்புகத் துடிக்கிறான்.. இது கவிதையா நீதியா?"

ஆதி பதில் சொல்லவில்லை. வயதுக்கு மீறிய கேள்வியோ என்று நான் எண்ணுகையில் அவன் திடுக்கிட்டுத் தொடர்ந்து அலறினான். எங்களுக்கு அண்மையில் ஒரு உருவம் வெறியுடன் ஓடியது. உருவத்தின் கையில் வீச்சறிவாள். உருவத்தின் முகம் மனித முகமல்ல. கழுதை முகம். ஹீர்ஹீர் என ஆவேசமாக ஊளையிட்டவாறு அறிவாளை ஓங்கியபடி ஓடியது. எனினும் எதிர்விசை போல் அதன் வேகம் எனக்கும் ஆதிக்கும் மிகத் தாமதமாகப் பட்டது. எங்களைக் கவனிக்காமல் ஓடிக்கொண்டிருந்த உருவத்தை நாங்கள் துல்லியமாகக் கவனிக்க முடிந்தது. வெறித்தனமான அதன் மூச்சொலி பஞ்சழுத்திய இடியாக ஒலித்தது.

ஆதி நடுங்கினான். "யாரிது.. கண்ணெதிரே தெரிந்தும் நம்மைக் கவனிக்காமல் ஓடுகிறதே..றானே?"

"கண் இருக்குங் காரணத்தால் எல்லாரும் பார்க்கிறார்கள் என்ற பொருளில்லை"

"உன்னுடைய புதிர்ப் பேச்சில் பன்றிகள் மூத்திரம் போகட்டும்.. ப்லீஸ் ஆன்ஸர் மி. இவன் முகம் இத்தனை குரூரமாக இருக்கிறதே.. கழுதை முகம்.. அதில் இத்தனை ஆத்திரம்.. எங்கே ஓடுகிறான்..? ஓடுகிறது..?"

"வா.. பின் தொடர்ந்து பார்க்கலாம்"

"நோ. இருக்கட்டும், உருவத்தின் வேகம் நமக்கு ஏன் உறைக்கவில்லை?"

"உருவம் யுகக்கணக்கில் ஓடுகிறது.. நீ நொடிக்க்கணக்கில் பார்க்கிறாய்.. இணையுலகங்களின் நாற்சந்தி.. புரிகிறதா..? உன் எஞ்சினியரிங் மூளைக்கு இதெல்லாம் விளங்க வேண்டுமே?"

"திஸ் இஸ் சர்ரியல்.. என் மனதை கெடுத்திருக்கிறாய்.. யூ ஹவ் ஃபக்ட் மை மைன்ட் வித் தட் டோப்.. யூ பீஸ்ட்.. என்ன கலந்தாய் அதில்?". என் மேல் எரிச்சலோடு பாய்ந்தான். நான் நகர்ந்து சிரித்தேன். அவன் தடுமாறி விழுந்து மண்ணின் மிருக ரத்தக் கலப்பில் நனைந்தான். நெருப்பில் விழுந்தது போல் எழுந்தான். உடலெங்கும் ஒட்டிப் பரவிய ரத்தம், அவன் தட்டத் தட்டத் தெறித்தது. படபடத்தான். ஆத்திரத்துடன் மறுபடி என் மேல் பாய்ந்து விழுந்தான். இந்த முறை எழுந்த போது அவன் உடலில் ஆங்காங்கே பூரான்களும் அட்டைகளும் நட்டுவாக்களிகளும் தேள்களும் சிறு பாம்புகளூம் ஒட்டியிருந்தன. சரசரவென ஊர்ந்தன. பயத்தின் உச்சத்தில் துள்ளிக் குதித்து தட்டியெறிய முற்பட்டான்.

"ஆதி!" என்று உறுமினேன். "உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது. என் சொற்படி நடந்தால் உனக்கு நல்லது.. இந்தப் பிரதேசத்தில் என்னை விட்டால் உனக்கு நாதி கிடையாது" என்றேன், குரலில் காட்டத்துடன். நடுங்கிவிட்டான். குழந்தை. பாவம். பூ என்று ஊதினேன். அவன் உடலில் ஒட்டிய ஜந்துக்கள் விலகிச் சிதறின. அவன் கண்களின் பீதி அடங்கியது. என்னை நன்றியுடன் பார்த்தான். அவனைக் கனிவுடன் பார்த்தேன். பாவம், எனக்கும் இவனைத் தவிர யார் இருக்கிறார்கள்?!

"இந்த மிருகம் யாரென்றாயே? இவன்.. உன் தந்தை" என்றேன்.

"ஸ்டாப் இட்.. ப்லீஸ்.. இந்த மிருகம் எப்படி என் தந்தையாகும்?" என்றான் தயங்கி.

"உருவங்கள் உருவகங்கள். உருவகங்கள் உருவங்கள்"

"வாட் த ஃபக் ஸபோஸ்டு மீன்?"

"தந்தை மிருகமானால் மிருகம் தந்தையாவதில் என்ன அதிர்ச்சி?"

"ஸ்டாப் இட். ஸ்டாப் இட். ஸ்டாப் ஃப்கிங் வித் மை மைன்ட்.. ப்லீஸ் உன்னைக் கெஞ்சுகிறேன்.. நான் மிகவும் இளையவன்.. ஆள் இப்படி வளர்ந்திருக்கிறேனே தவிர எனக்குப் பயம் அதிகம்.. என் அம்மாவின் துணையில்லாமல் நிறைய நாள் எனக்கு தூக்கமே வராது.. ப்லீஸ்.. என்னை என் இடத்துக்கு அழைத்துப் போ" என்று அழத் தொடங்கினான்.

சட்டென்று அவன் கால்களில் விழுந்தேன். "அழாதீர்கள் தலைவா! என் விக்ரமரா அழுவது? என்னை மன்னியுங்கள்.. போய்விடலாம் வாருங்கள்" என்றேன் நடுக்கத்துடன்.

விக்கிரமனுக்கு ஆத்திரம் வந்தால் காடு தாங்காது. பார்த்திருக்கிறேன். இந்த அழுகை எல்லாம் நடிப்பு. அவனுடைய அம்மாவிடம் கற்றது. சாகசம். விக்கிரமனுக்காவது பயமாவது? அவனை நன்கறிவேன்.

சொகுசு நாற்காலியில் சரிந்து வசதியாக உட்கார்ந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். "இது உன் வீடா?"

"உன் வீடாகவும் இருக்கலாம்"

"உனக்கு நேராக பதில் சொல்ல வராதா, தெரியாதா? சாதாரணக் கேள்வி. உன் வீடானு கேட்டா ஆமா இல்லேனு ஒரு பதில் சொல்லக் கூடாதா?"

"சாதாரண பதிலைப் பெறக் கேள்விகள் தேவையில்லை. சாதாரணக் கேள்வி என்று எதுவுமே இல்லை விக்ரமா.. மறந்து விட்டாயா?"

"என்னை ஏன் விக்ரமானு கூப்பிட்டிருக்கே? ஹூ இஸ் தட் பர்சன்? என்னைப் பார்த்தா உனக்கு விக்ரமா போல இருக்கா? ஹூ இஸ் ஹி? உன் காணாமல் போன மகன் யாராவது"

"காணாமல் போன என்பது உண்மை.. எனக்கு நானே மகன், நானே தந்தை.. உன்னை விக்கிரமன் என்பதன் காரணம் நீ விக்கிரமன் என்பதே"

"தேர் யு கோ எகெய்ன். ஸ்பெகெடி ஸ்டேட்மென்ட்ஸ். என்னை ஏன் தொடர்ந்து வரே? நான் ஏதோ என் கவலைகளை மறக்கக் கொஞ்சம் குடி சிகரெட்னு இருந்தா யு ஹவ் டேகன் ஓவர் மி.. மை மைன்ட்..யு" என்றபடிச் சரிந்தான்.

தேநீரில் சிறிது எலுமிச்சை சாறும் ஒரு சொட்டு இஞ்சிச்சாறும் கலந்து கொடுத்தேன். பார்த்துக் கொண்டிருந்தான். "குடி" என்றேன்.

"லுக்ஸ் ஓகே. ஆபத்தில்லையே?" என்றபடி மெள்ள அருந்தினான். அவன் தோள்களைப் பிடித்து விட்டேன். "உனக்கு என்ன கவலை?"

"உன் கிட்டே எதுக்கு சொல்லணும்? ஹூ ஆர் யூ?"

"நீ யாரோ நான் யாரோ.. இன்னொரு பார்வையில் நீ வேறோ நான் வேறோ?"

என்னை ஆழமாகப் பார்த்தான். "ஓகே.. சொல்றேன். உன்னைப் பார்த்தால் என் மனதைக் கொட்டத் தோணுது. நீ என்ன எனக்கு உறவா முறையா எதுவும் இல்லே.. ஸ்டில் யு இன்ஸ்பைர் ட்ரஸ்ட்.. உன்னை நம்ப முடியுது" என்றபடி எழுந்து என்னருகே வந்து நின்றான். "யு ஸீ.. மைன் இஸ் எ டிஸ்பங்ஷ்னல் பேமிலி.. எல்லாத்தையும் போல எங்க வீட்லயும் அப்பா அம்மா தாத்தா பாட்டி மாமா அத்தை அண்ணா அக்கா தம்பி எல்லாம் உண்டு. பட் வி வேர் நெவர் எ பேமிலி. எதுக்கு ஒண்ணா இருக்கோம்னு தெரியாம இருந்தோம். ஒரு நாள் எங்கப்பாவுக்கு திடீர்னு பைத்தியம் பிடிச்சிருச்சா என்னான்னு தெரியலே.. எங்களை அம்போனு விட்டுக் காணாமப் போயிட்டாரு. ஏற்கனவே எங்கப்பா ஒரு எக்சன்ட்ரிக், இதுல என்னவோ அவருடைய மேனேஜர் மேலே இருந்த இனம் புரியாத கோவத்துல வேலைய விட்டு.. எங்களை விட்டு.. ஏதோ கோவிலுக்கு சாமியாராப் போறேன்னு கிளம்பினதும்..

..எங்கம்மா எங்களைப் படிக்க வைக்க ஏறக்குறைய மூட்டை சுமக்குற நிலமையாயிடுச்சு. எங்கம்மாவுக்கு சல்லிக் காசு கிடையாதுனு காரே பூரேனு கத்திட்டு ஓடிட்டாரு அப்பா. வி ஹட் நோ மனி. "பிச்சைக்கார நாயுங்க. பசிச்சா பீத்தின்ன வரும்"னு எங்க தாத்தா எங்களைப் பத்தியே சொன்னதா கேள்விப்பட்டதும் எனக்கு அந்த ஆள் மண்டையை ஆணியாலக் குடையணும்னு வெறி. ஸச் அன்கல்சர்ட் ப்ரூட். பட், ஐ லெட் ஹிம் கோ. நான் இங்கே காலேஜில் படிச்சிட்டிருந்தேன். என் கர்ல் ப்ரன்ட் ந்யூயோர்க்ல படிச்சா. அவளுக்காகத்தான் நான் இங்கே தங்கினேன். இல்லையின்னா எங்கம்மாவுக்கு ஹெல்ப் பண்ண அவங்க கூட தங்கியிருந்திருப்பேன்..

..படிக்குறப்ப அவ அடிக்கடி இங்கே வருவா, நான் அடிக்கடி அவ இடத்துக்குப் போவேன். வி வர் இன் லவ். கடைசி வருஷம் முடிச்சு வால் ஸ்ட்ரீட்ல இன்டர்னுக்காக போறேன். அவ கிட்டே சர்ப்ரைசா சொல்லணும்னு போனா.. அவ ரூம்ல ரெண்டு ஆம்பிளைங்களோட அம்மணமா.. ஐ வாஸ் ஹார்ட் ப்ரோகன். பள்ளிக்கூட நாள்லந்து என்னோட வளந்தவ, ஷி ஸ்லெப்ட் வித் மி லாயலி, எப்படி என்னை ஏமாத்த முடிஞ்சுது...? எனக்கு வால் ஸ்ட்ரீட் வேலைல இஷ்டம் இல்லே.. திரும்ப பி எச்டி பண்ண இங்கயே வந்துட்டேன்..

..எங்கப்பா அம்மா குடும்பத்தோட தொடர்பு அறுத்துக்கிட்டேன்.. எல்லோரையும் வெறுத்தேன்.. என் ஆராய்ச்சிகளில் தடுமாறத் தொடங்கினேன்.. புரபசருடன் பழகியதில் லேசாக கஞ்சா பழக்கம் உண்டானது.. சில்லறையாகத் தொடங்கிய கடன் பழக்கம் கணிசமான தொகைகளாக மாறி என்னை நெருக்கத் தொடங்கியது" என்றவன், சற்றுத் தயங்கி அழத் தொடங்கினான். "நேற்று முதல் முறையாகத் திருடினேன்.. லுக் அட் மி.. பி எச்டி கேன்டிடேட், மேல்கம் மன்ரோ ஸ்காலர், நான் ஒரு சில்லறைத் திருடன்.. என் வாழ்க்கை ஏன் இப்படி மாறியது? எனக்கு இருந்த கர்வம், துணிச்சல், அறிவு, தன்னம்பிக்கை எல்லாம் எங்கே போனது? யாரைப் பார்த்தாலும் கோபம் வருகிறது.. என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை.. சிறு குப்பை சமாசாரங்களுக்கும் என் அப்பாவைப் போல் கொலை ஆத்திரம் வருகிறது.. என்னுடைய ஆத்திரமும் இயலாமையும் என்னை ஒரு கோழையாக்கி வருகின்றன.. இந்த நிலையில் எனக்கு அவளைக் கொலை செய்ய ஒரு வெறி.. அடங்காத வெறி.. என்னை ஏமாற்றிய அவள் புழுத்து நெளிய வேண்டும்.. அவளை என் கையால்.. கடன் கொடுத்தவர்கள் நெருக்குகிறார்கள்.. திருடியது தெரிந்துவிட்டால்.. ஐ'ம் ஸ்கேர்ட்.. மை லைப் இஸ் ரூயின்ட்.. எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டேன்!" என்று அழுதான். வெட்கமில்லாமல் என்னிடம், "ஒரே ஒரு சிகரெட் இருந்தா தரியா, ப்லீஸ்?" என்று கெஞ்சினான்.

"இந்தா!" என்று அவன் முகத்துக்கு எதிரே கை நீட்டினேன். அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் கண்களில் என் விரல்களால் குத்தினேன். "ஐயோ! உன்னை நம்புறேன்னு சொன்னதுக்கா?" என்று முகத்தைப் பிடித்தபடி அலறினான். அவன் இடுப்பை ஒரு சுழற்று சுழற்றிக் காற்றில் உயர எறிந்தேன். அந்தரத்தில் தாறுமாறாகச் சுற்றி விழுந்தான். "ஏய்.. சிகரெட் கேட்டால் ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று அலறினான். "ஐயோ.. அம்மா.. என்னைக் காப்பாத்தும்மா!"

"சீ! கோழை!" என்று அவன் மேல் எஞ்சியிருந்த சுடு தேனீரை எறிந்தேன். மறுபடி அலறினான். "என்னைப் போக விடு.. எனக்கு சிகரெட் வேண்டாம். ப்லீஸ்.. அம்மா.." என்று எழுந்து வாயிலை நோக்கி ஓடினான். "ஆதித்யா!" என்று கர்ஜித்தபடி அவன் மேல் மோதினேன். நிலைகுலைந்தான். "உனக்கு உன்னை அடையாளம் காட்டுவதே எனக்குப் பிறவி வழக்கமாகி விட்டது" என்றேன். "ப்லீஸ்.. என்னைத் துன்புறுத்தாதே.. நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்" என்ற அவன் கேவலில் எனக்கு ஒரு பரிதாபமும் பிறக்கவில்லை. அவனை இழுத்துக் கொண்டு முப்பது மைல் வேகத்தில் எதிர் சுவற்றில் மோதினேன்.

"ஷ்!" என்று என்னை அடக்கினான். "அதோ பார்.. அதே கழுதை முக உருவம்!"

"என்னால் நான்கு திசைகளிலும் பார்க்க முடியும்" என்றேன்.

"நோ ஷிட்!" என்றான். அவன் கண்கள் சற்று அண்மையில் எதிரே தெரிந்த காட்சியில் பதிந்தன.

எங்கள் எதிரே ஆசிரமம் போல் ஒரு அமைப்பு. ஒன்றிரண்டு குடிலகள். ஒரு யாக மண்டபம். ஆங்காங்கே மூங்கில் கழிகளைச் சுற்றிய பூங்கொடிகள். காட்டின் அடர்த்தி நிலவின் வெளிச்சத்தைக் கட்டியது. யாக மண்டபத்தின் முகப்பில் ஒரு மூங்கில் பாயில் ஒருவர் தியானத்தில் போல் அமர்ந்திருந்தார். எதிரே இருந்த குடிலில் சிறு அகல் விளக்குகள். மண்டபத்தின் பின்னால் ஒரு இளங்கன்றின் இடைவிடாத தலையசைப்பின் மணியொலி. விட்டெழுந்த மாஆவ். பொழுது விடியப் போகிறதா? ஆ! சுற்றிலும் பார்த்தேன். எதிரே ஆலமரத்தில் தொங்கிய சடலம் ஒன்றின் கண்கள் பசுமையாக மின்னின.

இவை எல்லாவற்றையும் என்னுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ஆதி. "ஏனோ எனக்கு இப்போது பயம் இல்லை!" என்றான்.

அவன் சொன்ன அதே கணத்தில் வேகமாக உள்ளே ஓடி வந்த கழுதை முக உருவம், தியானத்தில் இருந்தவரின் தலைமுடியை ஒரு கையால் இழுத்து உயர்த்தியது. இன்னொரு கையில் இருந்த வீச்சறிவாளால் கழுத்திலிருந்து தலையைச் சீவியெறிந்தது. சீவிய வேகத்தில் சுற்றத் தொடங்கிய தலை கீழே விழுந்தும் சுற்றிப் புரண்டு சில நொடிகள் துடித்து நின்றது. உருவமோ ஹீர்ஹீர் என்று ஊளைக்கும் அலறலுக்கும் இடையிலான ஒலியெழுப்பி, எதிரே இருந்த குடிலுக்குள் நுழைந்தது. கூரையிலிருந்து மிக வேகமாக வெளியே வந்த அழகான அலங்காரம் மிகுந்த ஒரு பெண், அலட்சியமாகக் காற்றில் பறந்து சென்றாள். சற்றுப் பொறுத்து கழுதைமுக உருவம் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்து வெறியோடு ஓடத் தொடங்கியது. குடில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. திடீரென்று கேட்கத் தொடங்கிய ஒரு குழந்தையின் அழுகை ஒலி, மெள்ளத் தீயுடன் அடங்கியது.

"என்ன விக்கிரமரே.. இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றேன்.

"மை குட்னெஸ்.. ரெண்டு நிமிஷத்துக்குள்ள என் இதயமே நின்னுடுச்சு" என்றான். "இது என்ன இடம்? யார் இந்த கழுதை முக உருவம்? அடிக்கடி தென்படுவானேன்?"

"கழுதை முகம் கொண்டவர் உன் தந்தை"

"நோ. இதை நீ முதலில் சொன்ன போதும் நம்பவில்லை. என் அப்பா ஒரு கழுதையா?"

"விவரமாகச் சொல்கிறேன். அந்தரத்தில் பறந்து ஓடியவள் உன் தாய். தியானம் செய்து கொண்டிருந்தவருடன் கள்ளத்தனமாக உறவு கொள்ள வந்தாள். அது தெரிந்து உன் தந்தை இருவரையும் கொல்ல வந்தார். உன் தாய் தப்பித்து விட்டாள்"

"கெட் அவுட். இதென்ன பிதற்றல்? ஏன் இப்படிச் செய்கிறாய்? என்ன காரணத்துக்காக என்னை இங்கே அழைத்து வந்தாய்?"

"உன் பாட்டனாரை நீ சந்திக்க வேண்டாமா விக்கிரமா?"

"வாட்? என் பாட்டனாரா? யு மீன் தாத்தா? உனக்கு அவரை எப்படித் தெரியும்?" அவன் கேள்வியின் குழப்பம் கண்களிலும்.

"யக்ஞேந்திரனைத் தெரியாதவர் உண்டா?" என்றேன்.

12 கருத்துகள்:

  1. பெயரில்லாடிசம்பர் 24, 2013

    வணக்கம்
    ஐயா.

    சிறப்பாக உள்ளது மேலும்தொடர எனது வாழத்ததுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. //"எங்கம்மா சாப்பாடு போட்டாங்க... எங்கப்பா சத்தம் போட்டாரு... //

    பிரமாதம்! வார்த்தை பிரயோகத்தில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை. விருவிரு என்று கதை ஓடி கொண்டிருக்கிறது.

    //உட்புகுந்தவன் வெளியேறத் தவிக்கிறான்.. வெளிவந்தவன் உட்புகத் துடிக்கிறான்//

    ஏதோ நீதியை வேதாளம் சொல்ல வருகிறதோ என்று நினைக்கிறேன்.

    அருமை, அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  3. //"உருவங்கள் உருவகங்கள். உருவகங்கள் உருவங்கள்"//

    இப்படி ஆங்காங்கே எத்தனை கொடி மின்னல் பளிச்சிடல்கள்? கண் கூசி
    தொடர் சிந்தனையைத் தூண்டி வியப்பில் ஆழ்த்தியது.

    //பஞ்சழுத்திய இடியாக ஒலித்தது.//

    கற்பனை சாகசம்! இடியில் பஞ்சை அழுத்த முடிந்ததின் விளைவான ஒலி! இந்த இடத்தில் உணர முடிந்தது, அப்பாஜி!

    கதை படிப்போருக்கு கதை. இந்த மாதிரி வார்த்தை வரிகளை தேர்ந்தெடுத்து ரசித்து மூழ்கிப் போவோருக்கு அவருக்கேயான நிறைய மூழ்கல்கள்!

    தொடருங்கள், அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  4. எண்ணண்ங்கள் கற்பனையோடு கலக்கும்போது கதைகள் உருவாகின்றன. எண்ணங்கள் பல நேரங்களில் அசல் வாழ்வின் பிரதிபலிப்புகளே. கதைக்கு கரு ஒன்று கிடைத்து அதைச் சொல்ல கதாபாத்திரங்கள் உருவாகலாம். நேரில் கண்டும் பரிச்சயப்பட்டும் உலாவும் கதாமாந்தர்களைச் சுற்றி கதை பின்னலாம்.இந்தக் கதை படிக்கும்போது ஆங்காங்கே சிதறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. சில விஷயங்களை நேராகச் சொல்வதைவிட கதையாகச் சொல்வதில் அனுகூலம் உண்டு.

    பதிலளிநீக்கு

  5. schizophrenia என்னும் இந்த நோயை ஓர் அளவுக்கு
    கட்டு படுத்த இயலும். மனம் தளராதீர்கள்.

    உங்களுக்கு நாலு ஆப்ஷன்ஸ் இருக்கிறது.

    உங்கள் ஊரைச் சுற்றிலும் இருக்கும் உளவியல் மருத்துவர்கள் பட்டியல்
    தந்திருக்கிறேன். உடனே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவும்.

    கும்பகோணத்தில் மகா யக்ஞம் நடக்கிறது ய்க்னேந்திரன் என்று யதி அதை நடத்துவதாக கேல்வி. ஒரு வருஷம் தொடர்ச்சியாக நடக்கும் அந்த ஹோமத்தில் 48 நாள் தொடர்ந்து பங்கு எடுத்துக்கொண்டு .... ( மற்றதெல்லாம் இன் கேஸ் யூ ஆர் இன்டரச்டேட் பர்தர் )

    உங்கள் ஜாதகத்தை அனுப்பவும். தற்பொழுது நடக்கும் தசா புக்தி காலம், கோசாரம் அனுசரித்து, பரிஹாரம் உரிய பண்டிதர்களால் சொல்லப்படும். கட்டணம் $ 200 முதல்....

    சற்று பொருங்கள்.
    from behind

    நாலாவது ஆப்ஷனை இப்போது சொல்லாதே என்ற ஒரு சத்தம் கேட்கிறது.

    திரும்பி யார் இந்த சத்தம் போடுவது என்று திரும்பினேன்.

    ஒரு கழுதை.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    ஜிஎம்பி சார் என்ன சொல்றாருனு எனக்கு (மட்டும்) நல்லா புரியுது. :-).

    நாலாவது ஆப்சன் கேட்க பயமா இருக்குதே சூரி சார்? கும்பகோண யாகத்துக்குப் புறப்பட்டுட்டிருக்கேன். ஆனா சில பூனைங்க குறுக்கே வருதே, என்ன பண்ண? யக்ஞத்துல அவிசா கொடுத்துடலாமா? ஒரு நிமிட். யாகம்னா என்ன யக்ஞம்னா என்னானு ஒரு குரல் பின்னால கேக்குது - நான் திரும்புறதா இல்லே.

    பதிலளிநீக்கு
  7. என் இந்தியப் பயணமொன்றில் வரமாக அமைந்த எதிர்பாராத சந்திப்பு. ஒரு பழைய கோவிலுக்கு (?) போயிருந்த போது அங்கே ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆக்ஸ்பர்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து, மனைவி இறந்ததும் எல்லாவற்றையும் விற்றுவிட்டு இந்தியா வந்து சொற்ப காசுடன் கோவிலுக்கருகே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனியாக வாழ்கிறார் பெரியவர். போற வயசுக்கு மேலேயே இருக்கும். வாயைத் திறந்தால் பொக்கிஷம், அதை ஏன் கேட்கிறீர்கள்! வேலை வெட்டி இல்லாமல் கோவிலில் இருந்த எங்கள் இருவரின் யதார்த்த சந்திப்பில் கொஞ்சம் நேரம் சிரித்தோம். என்னை அவருடைய குடிசைக்கு (வசதியான குடிசை) அழைத்துப் போய் சகிக்க முடியாத ராகி ரொட்டியும் சகித்து மாளாத உலகானுபவங்கள் மற்றும் கருத்துக்களையும் வழங்கினார். நிறைய புத்தகங்கள் வைத்திருக்கிறார். அங்கே தெரிந்து கொண்டது வேதாள பஞ்சவிம்சதி. அம்புலிமாமா கதை என்று நினைத்துக் கொண்டிருந்தவனை அசத்தியடித்தது. சே! எனக்குத் தெரியாதது எவ்வளவு இருக்கிறது!! சிரித்துக் கொண்டே புத்தகத்தை எனக்குத் தர மறுத்துவிட்டார். யார் சிரித்தால் என்ன, எனக்கு சிகாகோ பொது நூலகம் இருக்கிறதே என்று நானும் நன்றி சொல்லித் திரும்பிவிட்டேன்.

    அதற்குப் பிறகு இன்னொரு பயணத்தில் நாக்பூரில் விமானத்துக்காகக் காத்து நிற்கையில் கண்ணாடியில் தெரிந்த புத்தகம் கண்ணில் பட்டு வலையாக இழுத்தது. ரிசர்ட் பர்டன் எழுதிய வேதாள கதைகளின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அசல் மறுபதிப்பு. அந்தக் காலத்து நடை, படங்களுடன்! எத்தனையோ புத்தங்கங்கள் இருக்க அந்த ஒரு புத்தகத்தை கண்ணாடியில் அன்றைக்கு மாலையில் தான் அடுக்கினாராம். மற்ற புத்தகங்களை விலக்கி இதை எடுத்துக் கொடுக்க சோம்பல் பட்டார் கடைக்காரர்! என்னை விட்டால் இந்த அறதப் பழசை வேறு யார் வாங்கப் போகிறார் என்றபடி புத்தகத்தை எனக்கு விற்க முனைந்தவர் விலையைப் பார்த்ததும் தயங்கினார். எடுத்துக் கொடுத்த உழைப்புக்கான கூலி கூட வராது போலிருக்கிறதே என்று அவர் வருந்திய அகத்தின் அழகு எனக்குத் தெரிந்தது. மேலே சில நூறுகள் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன் - ஆனால் அவர் கேட்கவில்லை.

    விமானத்திலேயே படிக்கத் தொடங்கினேன். alas.. புத்தகத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! வாங்கும் பொழுது கவனிக்கவில்லை! படிக்கத் தொடங்கிவிட்டதால் ஆர்வம் மண்டையைக் குடைந்தது என்றாலும் மறந்துவிட்டேன்.

    சிகாகோ நூலகத்தில் ஹேலோவீன் பொருட்டு பொதுப்பார்வையில் அடுக்கியிருந்த புத்தகத்தை ஒரு முறை தற்செயலாகப் பார்த்ததும் ஆகா!.. மறுபடி முருங்கை மரம்! வடமொழி (சோமதேவரின் படைப்பை மேக்ஸ் முல்லர் வழங்கியது) மற்றும் ரிசர்ட் பர்டனின் ஆங்கில வடிவங்கள்! படிக்கப் படிக்க சுவாரசியம். அத்தனையும் ஓசி என்பது இன்னும் பரவசம். இதை அரிசிமிட்டாய் அம்புலிமாமாவாக்கி விட்டார்க்ளே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து படித்தேன். இந்தக் கதையில் ஒரு மிக எளிய அரிய உண்மை வாழ்க்கைப் பாடமாகப் புதைந்திருப்பதை உணர்ந்தேன். இதை அப்படியே தமிழில் எழுத வேண்டும் என்று ஒரு ஆசை மனதில் விரல் நுனியாய் இடிக்க.. அந்தக் கட்டத்தில் வேறொன்றை எழுதத் தொடங்கியிருந்ததால்.. இடித்ததை இழுத்து மூடி வைத்தேன், என்றாலும் நிறைய குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்..

    எதற்குச் சொல்கிறேன் என்றால் expatguru, ஜீவி சார் - அசல் நூலில் கையாண்டிருக்கும் உவமைகளிலும் உலகார்த்தங்களிலும் நான் கிறங்கிப் போனேன். படிப்பவர் கற்பனையைப் பட்டைதீட்டும் கல். அது தவிர கதையின் விவரங்கள், விவரங்களைப் பினைந்த விதம்.. என்னை பாதித்தது. ஒரு வருடம் போலானது கிடைத்ததைப் படிக்க.

    அதற்குப் பிறகு சமீபப் பயணமொன்றில் சென்னை விமான நிலையத்தில் ரிசர்ட் பர்டன் புத்தகத்தை - கொஞ்சம பளபளப்பான அளவில் குறைந்த சமீபப் பதிப்பு - பார்த்ததும் இது என்னடா வம்பாக இருக்கிறதே என்று அதையும் வாங்கினேன். தமிழில் எழுதிவிட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன்.

    விக்கிரமாதித்தன் கதையை தமிழில் சொல்லத் தோன்றியதால் எழுதத் தொடங்கியுள்ளேன். இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் அக்மார்க் அசல். இடமும் நடையும் சில சம்பவங்களும் கற்பனை. என் காலத்துக்கேற்ப கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். முழுதும் எழுதி முடிக்க அந்தப் வேதாளம் தான் அருள் புரியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. //வேதாளம் தான் அருள் புரியவேண்டும்.//

    சரி. சரி. தீர்காயுஷ்மான் பவ.

    பதிலளிநீக்கு
  9. இன்னமும் தூங்கலியா சூரி சார்!

    பதிலளிநீக்கு
  10. //இந்த மிருகம் யாரென்றாயே? இவன்.. உன் தந்தை" என்றேன்.//

    ஹாஹாஹா, சிப்பு சிப்பா வருது! :))))

    நல்லாவே இருக்கு வேதாளம் சொன்ன கதை! அதுசரி, எந்த ஊர்க்கோயிலில் அந்தப் பெரியவரைப் பார்த்தீங்க? எங்க ஊரான கருவிலியில் ஒருத்தர் இருக்கார். ஆனால் அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டதாகத் தெரியலை. இப்போ மாதா அமிர்தானந்தமயியின் பக்தராக மாறி இருக்கார். அவரும் ஷிகாகோவிலோ, நியூயார்க்கிலோ, பாஸ்டனிலோ நாற்பது வருடங்கள் வாழ்ந்த பின்னர் இப்போப் பத்துவருடங்களாகக் கருவிலியில் கோயிலின் நுழைவாயிலில் இடப்பக்கமாக ஆசிரமம் மாதிரிக் குடிசை போட்டுக் கொண்டு வாசம். இவரின் மாமா தான் பிரபலமான மாருதி கிருஷ்ணமூர்த்தி. கல்கி வைத்யநாதனின் சகோதரர்.

    பதிலளிநீக்கு
  11. அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அப்புறம் இன்னொரு விஷயம், என்னோட பாலோயர் லிஸ்டிலே இருந்து உங்க பதிவுக்கு வந்தால் மூன்றாம் சுழினு ஒரு வலைப்பக்கமே இல்லைனு தகவல் வருது. எப்படியோ கஷ்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தேன். :))))

    பதிலளிநீக்கு
  12. ஒரு சாயங்கால நடையாக கோவிந்தபுரத்திலிருந்து திருநாகேஸ்வரம் போனபோது கோவில் மணல் திடலில் பெரியவரைச் சந்தித்தேன்.

    பதிலளிநீக்கு