2013/12/21

அஞ்சாத சிங்கம்


    ந்யூயோர்க் கவர்னர் என்றால் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது யார்?

நினைவுக்கு வந்தவரை அங்கேயே சற்று நிறுத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்களேன், ப்லீஸ்.

இவன் பெரோஸ்பூரில் பிறந்த பிள்ளை. இரண்டு வயதில் அப்பா அம்மாவோடு அமெரிக்கா வந்தான்.

ந்யூஜெர்சியில் நடுத்தரமாக வளர்ந்த சாமானியன். இளைய வயதிலேயே குறிக்கோள் என்றால் என்னவென்று ஆசிரியர்களுக்குச் சொன்னவன். மிகச் சிறந்த மாணவர்களில் மிகச் சிறந்த ஒருவருக்கே கிடைக்கக்கூடிய பட்டமளிப்பு விழாவின் முதன்மை கௌரவத்துடன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தான். வேலடிக்டூரியன். ஆனால் இந்தக் கௌரவம் எல்லாம் சாதாரணம் என்பது உலகத்துக்குத் தெரியாது. ஹார்வர்டில் பட்டப்படிப்பு, தொடர்ந்து கொலம்பியா சட்டக்கல்லூரியில் மேல்படிப்பு முடித்து பிரபல ந்யூயோர்க் செனெடர் சக் சூமருக்கு உதவியாகத் தொடங்கி படிப்படியாக முன்னேறினான்.

தொடக்கத்தின் கேள்விக்கு வருகிறேன். இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் ரூடி ஜூலியானி என்ற பதிலே கிடைக்கும். அதற்குக் காரணம் உண்டு. ரூடி ஜூலியானி, ந்யூயோர்க் மட்டுமல்ல அமெரிக்காவின் சிறந்த கவர்னர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கருதப்படுவார். கவர்னராக இருந்த போது அவர் மக்களுக்கு செய்தது என்னவோ சாதாரணம். ஆனால் அயோக்கிய அல்கேதா, செப்டெம்பர் 2011ல் ந்யூயோர்க்கை நாசமாக்க முனைந்த போது தன் மேலாண்மை தலைமை எல்லாவற்றையும் பட்டை தீட்டி ந்யூயோர்க் நகரம் மீண்டும் தன் காலில் மீண்டும் நிற்க முன்மாதிரியாக இருந்தவர். அதைத் தொடர்ந்து ந்யூயோர்க் நகரில் தீவிரவாதிகளின் அடாத தொந்தரவுகள் இருந்தாலும் தீவிரவாதத்துக்குப் பணிய மாட்டோம் என்ற விடாத தீர்மானத்தையும் தன்னம்பிக்கையையும் நகர கலாசாராமாக்கியவர். இதான் ஜூலியானி.

பெரோஸ்பூர் பிள்ளை ஒன்றும் லேசுபட்டவனல்ல.

இத்தாலிய மாபியா பற்றி எல்லாருமே அறிவார்கள். அமெரிக்காவின் கேம்பினோ மாபியா குடும்பம் பற்றிப் படித்தால் குலை நடுங்கும். நூறு வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு அமெரிக்காவை ஆட்டிவைத்த கொலைகார குற்றவாளிக் குடும்பம். அதன் அட்டூழியம் அடங்கிவிட்டது என்று இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நிறைய பேரை உள்ளே தள்ளி கேஸ் மேல் கேஸ் போட்டாலும் இழுத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். நம்ம பெரோஸ்பூர் பிள்ளை, வெளியே இருந்து உதவி வந்த இருபத்தாறு சக்தி வாய்ந்த மாபியா ஆசாமிகளை உள்ளே தள்ளினான். புது அரெஸ்டையும் பழைய அரெஸ்டையும் இணைத்து அத்தனையும் ஒட்டு மொத்தமாக உள்ளே தள்ளினான். கேஸ் வெற்றிகரமாக முடிந்து குற்றவாளிகள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து யாரும் பெரோஸ்பூர் பிள்ளைக்கு ஒரு வாழ்த்து சொல்லவில்லை.

"நான் என்ன கோலி விளையாடறவனையா பிடிச்சு வந்து போட்டிருக்கேன்? சாராயம் காய்ச்சுறவனை பிடிச்சு உள்ளே போட்டிருக்கேன்.. கள்ளச் சாராயம் மேன்?"

ரஜத் குப்தா. உலகப் புகழ் பெற்ற மெகின்ஸி நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர். மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சேக்ஸின் போர்ட் மெம்பர். சில்லறைக் காசுக்கு ஆசைப்பட்ட நிழல் ஊழல் பேர்வழி. யாராலும் தொடமுடியாது என்று நினைத்து சின்னதும் பெரியதுமான ஊழல்கள் செய்தவரை பச்சக் என்று பிடித்து உள்ளே போட்டான் பெரோஸ்பூர் பிள்ளை.

அனில் குமார் என்று மிகப்பெரிய பொறுப்பில் இருந்த இன்டெல் விஞ்ஞானி. நம்ம நாட்டு ஆசாமி. பொன், பெண் என்று இரண்டு ஊழலுமே உண்டாம். பங்கு மார்கெட்டில் செய்த ஊழலைக் கண்காணித்து அவனையும் உள்ளே தள்ளினான் பெரோஸ்பூர்.

இலங்கையின் சூது மன்னன் தமிழன் ராஜரத்னம். பிலியன் கணக்கில் ஊரை ஏமாற்றியவன். அவனை உள்ளே தள்ளுவதில் குறியாக இருந்து வெற்றி பெற்றான் பெரோஸ்பூர் பிள்ளை. ரஜத் குப்தா, அனில் குமார் மற்றும் கூட்டாளி ராஜரத்னம் எல்லாரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தர்மம் வெல்லும் என்ற பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவில் இருந்து யாரும் வாழ்த்து அனுப்பவில்லை.

மடியிலேயே கை வைக்குமா பிள்ளை? வைத்தது. தவறாக இருந்தால் எந்த மடியாக இருந்தால் என்ன? ந்யூயோர்க் மாநில செனெடர்கள் மூவரை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து நிரூபித்து மக்களை ஏமாற்றியக் குற்றத்துக்காக ஏழு வருடம் உள்ளே தள்ளினான் பிள்ளை. தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் என்ற பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவில் இருந்து யாரும் ஒரு வாழ்த்து கூட அனுப்பவில்லை.

அபுதுல்வாலி, பெய்சல் ஷசாத் போன்ற அல்கேதா ஹெஸ்புல்லா தீவிரவாதிகளைக் கொஞ்சம் கூட பிசகாமல் விவரங்களை வரிசையாக அடுக்கி வழக்கு போட்டு உள்ளே தள்ளினான் பெரோஸ்பூர்.

"தீப்பெட்டிக்கு ஒரு பக்கம் உரசினாத்தான் தீப்பத்தும். இந்த பெரோசுக்கு எந்தப்பக்கம் உரசினாலும் பத்திக்கும்"

வேலியே பயிர் மேய்வதைப் பார்த்து நிற்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. நமக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது. நாம் இந்தியர்கள். பெரோஸ்பூர் கொஞ்சம் வித்தியாசமானவன். ந்யுயோர்க் போலீஸ்காரன் ஒருவன் பெண்களைக் கடத்தி அவர்களை வெட்டித் துண்டு போட்டு சமைத்து சாப்பிடப் போவதாகப் பொதுவில் அறிவித்ததும் ஊரெல்லாம் பீதி. அவனை மிகச் சாதுரியமாக மிக விரைவில் பிடித்து உள்ளே தள்ளியவன் நம்ம பெரோஸ்பூர். பிடிபட்ட போலீஸ்காரன், "நான் சொன்னது எல்லாம் சும்மா ஸ்டன்ட். எனக்கு செல்வாக்கு இருக்கு.. வெளில வந்து உன்னை ரெண்டு பண்ணிடுவேன்" என்றபோது பெரோஸ்பூர் பிள்ளை லேசாகச் சிரித்து அவனை 'சரிதான் போடா' என்று நிரந்தரமாக உள்ளே தள்ளினான். "பொது மக்களுக்கு ஊழல் பேர்வழிகளால் ஆபத்து.. தீவிரவாதிகளால் ஆபத்து.. உன் போன்ற முட்டாள்களாலும் ஆபத்து" என்றான். இந்தியாவில் இருந்து அவனுக்கு ஒரு வாழ்த்தும் வரவில்லை.

பெரும் பணமுதலையான பேங்க் ஆப் அமெரிக்கா, வீட்டுக்கடன் ஊழலில் பிலியன் கணக்கில் திருடியதை கொஞ்சம் கொஞ்சமாக அடுக்கி நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்தான் பெரோஸ்பூர். இந்த ஒரு வழக்கில் மட்டும் இவன் உயிருக்கு எத்தனை ஆபத்து வந்திருக்கும் என்று என்னால் சுமாராகக் கணிக்க முடிகிறது. பெரோஸ்பூரா பயப்படுவான்? அஞ்சாத சிங்கம் என் காளை. அத்தனை பேரையும் உள்ளே தள்ளி பிலியன் கணக்கில் அபராதம் வசூலித்தான். இந்தியாவிலிருந்து ஒரு வாழ்த்து கூட.. இல்லை, வரவில்லை.

அப்பேற்பட்ட ரூடி ஜூலியானியின் இடத்தில் இருந்து கொண்டு இத்தனை சாதனைகளையும் வரிசையாக ரஜினிகாந்த் கண்ணாடி சுழற்றுவது போல் சர்வ சாதாரணமாக செய்து வருகிறான் பெரோஸ்பூர் பிள்ளை. ரூடியைப் போலவே இவனும் அடுத்து ந்யுயோர்க் கவர்னராகலாம் என்கிறார்கள். ஆகட்டும்.

ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் பற்றி ந்யூஜெர்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். உலக இசை ரசிகர்களுக்கும் தெரியும். இது ப்ரூஸ் பாடிய பாட்டு:Send the robber barons straight to hell. ஒரு நிகழ்ச்சியில், பாடலை பெரோஸ்பூர் பிள்ளைக்கு சமர்ப்பணம் செய்தார் ப்ரூஸ். கூட்டம் பித்தானது. ரஜினிகாந்த் படத்துக்குக் கூட இத்தனை விசில் கிடைத்திருக்காது. அமெரிக்காவின் பெருமை இந்தப் பெரோஸ்பூர் பிள்ளை.

ஊழலும் குற்றமும் புரிந்தால் தப்பிப்பது கடினம் என்று சமீபமாக நினைக்க வைத்த நகரம் ந்யூயோர்க். அதற்குக் காரணம் நம்ம பெரோஸ்பூர் பிள்ளை. சிகாகோ வாசிகள் தங்களுக்கு ஒரு பெரோஸ்பூர்க்காரன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கினார்கள். ஏங்குகிறார்கள். ஏங்குகிறார்.

Times பத்திரிகையின் 100 most influential people in the world பட்டியலில் இடம்பெற்ற பிள்ளை. இன்டியா அப்ராட் பத்திரிகையின் person of the year விருது பெற்ற பிள்ளை.

எதற்குச் சொல்கிறேன் என்றால்..

ஒருவனுடைய செயலில் அவனுடைய சரித்திரமே வெளிப்படும். எனில், பெரோஸ்பூர் பிள்ளை ஒன்றைச் செய்தால் அதன் பின்னே குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள். பிடிபட்டிருக்கிறார்கள். இந்த சரித்திரம் ஒரு முறை கூட பிறழாமல் வெளிப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் ஏதும் வாராது போனாலும்... ஒரு வாரமாக பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவிலிருந்து கேலிகளும் கண்டனங்களும் சரமாரியாக வந்து கொண்டிருக்கின்றன.

ஏன்?

ந்யூயோர்க் இந்தியத் தூதரகத் துணைத்தலைவர் தேவயானியைக் கைது செய்தான் பெரோஸ்பூர் பிள்ளை.

இந்தியாவின் பல கீழ்த்தரங்கள் உடனே ஆ ஊ என்று கூச்சல் போடுகின்றன. ஒரு பெண்ணை துகிலுரித்துத் தேடுவதா அப்படியா இப்படியா என்று பெரிய கூச்சல். எல்லாம் அரசியல் மத ஆதாய ஊழல் குரல்கள்.

இங்கே ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. அதை ஒரு சட்டத்தின் காவலன் பிடித்திருக்கிறான். அதைவிட்டு, என்னவோ "அவங்களை நிறுத்தச் சொல்லு நிறுத்தறேன்.. இவங்களை நிறுத்தச் சொல்லு நிறுத்தறேன்" என்று மயில் குரலில் வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்கள் அல்பங்கள்.

இங்கே ஒரு சட்டம் மீறப்பட்டிருக்கிறது. தெரிந்தே ஒரு தப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆணவத்தின் அடிப்படையில் ஒரு ஏழைத் தொழிலாளியின் உரிமை பறிக்கப் பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்படிருப்பவர் செல்வாக்குள்ளவர், செல்வந்தர். ஒரு பெண். இந்தியாவில் பிறந்தவர். இந்தியக் குடிமகளான இந்தப் பெண் இந்தியாவின் தாரகமான தர்மத்தை மீறியவர்.

இங்கே ஒரு சட்டமீறல் பிடிபட்டிருக்கிறது. சட்டத்தின் காவல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு உண்டு என்ற சாதாரண நிம்மதி மீண்டும் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. வலியுறுத்தியவர் செல்வந்தரல்ல. ஒரு ஆண். இந்தியாவில் பிறந்தவன். இந்தியக் குடிமகனல்லாத இந்த ஆண் இந்தியாவின் தாரகமான தர்மத்தை நிலைநிறுத்தியவன்.

இவனை நான் வாழ்த்துகிறேன்.

பெரோஸ்பூர் சிங்கமே, ப்ரீத் பராரா.. உன்னை எண்ணிப் பெருமையாக இருக்கிறதடா. இந்தியாவிலிருந்து எவரும் உன்னை வாழ்த்தப் போவதில்லை. அவை உனக்குத் தேவையில்லை. போகட்டும்.

உன் கொள்கையை விட்டுக் கொடுக்காதே. சற்றும் மனம் தளறாதே. பண முதலைகளும் செல்வாக்குப் பச்சோந்திகளும் குரல் கொடுப்பார்கள். மிரட்டுவார்கள். பணியாதே. உனக்கு என் வாழ்த்துக்கள் என்றைக்குமே உண்டு. வாழ்க நீ எம்மான்.

தயவுசெய்து தடுமாறி விழுந்துவிடாதே. நீயும் ஊழலில் இறங்கிவிடாதே. இதுவே என் வேண்டுகோள். என்ன செய்ய, எம் போன்றவர்களுக்கு நம்பிக்கை தந்தவர்களெல்லாம் உடன் குழியும் பறித்திருக்கிறார்கள்.. அதான்!

20 கருத்துகள்:

  1. //குற்றம் புரிந்தவர் செல்வாக்குள்ளவர், செல்வந்தர். //

    தவறு, அப்பதுரை. இவள் குற்றம் புரிந்தவள் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவள். இரண்டுக்கும் மிகப்பெரிய வித்யாசம் உள்ளது.

    ஏழை என்பதால் மட்டும் அந்த வேலைக்கார பெண் செய்தது சரியாகிவிடாது. அந்த பெண்ணின் பயணச்சீட்டு செலவு, மருத்துவ காப்பீட்டு செலவு, தங்கும் இட வசதி என்று சகல வசதிகளுக்கும் இந்திய அரசு தான் செலவு செய்துள்ளது. இந்த விஷயத்தை ஆகஸ்டு மாதம் முதலே இந்திய அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் அந்த பெண்ணின் கணவனையும் குழந்தைகளையும் கள்ளத்தனமாக T-விசாவில் அமெரிக்க அரசாங்கம் கடத்தி விட்டு, அவர்கள் அமெரிக்கா வந்து சேர்ந்த இரண்டாவது நாளே மிக கேவலமான முறையில் இந்த பெண்ணை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். கேட்டால் Standard Proceduresஆம். அவளது பிறப்புறுப்புகளில் டார்ச் அடித்து சோதனை செய்திருக்கிறார்கள்.இத்தனைக்கும் அந்த வேலைக்காரி ஒரு இந்திய பிரஜை, அமெரிக்க பிரஜை இல்லை. அவளது கடவுச்சீட்டை இந்திய அரசாங்கம் ரத்து செய்து விட்டது. அவளது மேல் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேறு உள்ளது.

    இவர்களுக்கு ப்ரேசில் நாடு ஆப்பு வைத்த மாதிரி ஒரு பெரியா ஆப்பு வைத்தால் தான் சரி வரும் (போயிங் விமான பேரத்தை ரத்து செய்தார்களே, அது போல).

    பதிலளிநீக்கு
  2. நன்றி expatguru. குற்றம் சாட்டப்பட்டவர் என்று திருத்திவிட்டேன்.

    மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பது குற்றத்துக்கு வெளியிலான பூசணி மறைக்கும் கூக்குரல்.

    ஆப்பு அடிக்க அறைக்கூவுவதற்குப் பதில் அந்தப் பெண் தவறு செய்திருக்கிறாளா இல்லையா என்பதை அறிய முயல்வது சரியில்லையா? தெரியாமலா போய்விடும்?

    அமெரிக்க அரசாங்கம் ஒரு சாதாரண நபரை கடத்துமா - ஏன்? என்ன motivation? இவங்க என்ன கட்சி மாறிய ரஷிய சீன கம்ப்யூனிஸ்ட் விக்ஞானிகளா? இது என்ன தமிழ் சினிமாவா? அர்த்தம் வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாடிசம்பர் 21, 2013

    வணக்கம்
    ஐயா.

    உண்மைதான் ஒருவனுடைய செயலில் அவனுடைய சரித்திரமே வெளிப்படும்.
    அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.

    உண்மைதான் ஒருவனுடைய செயலில் அவனுடைய சரித்திரமே வெளிப்படும்.
    அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அப்பாதுரை அவர்களே! தேவயானி கொபர்கெடே பிரச்சினை அனேக மாக ஓய்ந்து விடும் என்று தன் தோன்றுகிறது ! அவ்ர் ஓன்றும் உத்தமமன காரியங்கலை செய்து விடவில்லை ! ஆதர்ஷ் ஊழலில் இருந்து ஜெர்மனிக்கு பொஸ்டிங்க் வாங்கியது வரை ! அமெரிக்க ஏன் அந்த பணிப்பெண்ணின் கணவரை ,குடும்பத்தை அமெரிக்க கொண்டு சென்றது என்பது மர்மமாக இருக்கிறது ! இருந்தாலும் ஃப்ரோஸ் பிள்ளை பர்ரி எழுதியிருப்பது அருமை ! நான் என் பதிவில் ஏற்றியிருக்கிறேன் ! எங்களூர்க்காரர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று !---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி காஸ்யபன் ஐயா.

    கடத்தல் நம்ப முடியவில்லை. சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இவை பரபரப்புக்காகப் பேசப்படும் யூகங்கள். எனக்கு பரீத் பராராவின் மேல் நம்பிக்கை இருக்கிறது.
    இங்கே எதைக் காட்டி எதை மறைக்கப் பார்க்கிறார்களோ நம்மூர் மோடி

    மஸ்தான்கள்!

    தேவயானியின் சரித்திரத்தைப் படித்தால்... அத்தனை ஊழல்.

    nobody is above law என்ற எளிய பாதுகாப்பு கொள்கை அடிக்கடி அமல்படுத்தப்படுவதில்லை. அப்படி அபூர்வமாக நிகழும் பொழுது கை தட்டிப் பாராட்ட வேண்டும். ஒரு இந்தியப் பிள்ளை முன்னின்று அமல்படுத்தினால் மார் கொட்டிப் பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. //அமெரிக்க அரசாங்கம் ஒரு சாதாரண நபரை கடத்துமா - ஏன்? என்ன motivation?//

    எனக்கும் அதே சந்தேகம் தான். இந்த கேள்வியை நிருபர்கள் கேட்டதற்கு State Department-இடமிருந்து கிடைத்த பதில் "அந்த வேலைக்காரியின் குடும்பத்தினரை ஒன்று சேர்ப்பது தான் எங்கள் நோக்கம்". எப்படி இந்த திடீர் பாசம்? எனக்கு என்னவோ இது Spy versus Spy கதை போல தோன்றுகிறது. இல்லை என்றால் T-விசாவில் அவசரம் அவசரமாக அந்த வேலைக்காரியின் குடும்பத்தினரை ஏன் கடத்தி செல்ல வேண்டும்? இத்தனைக்கும் அவர்களின் மேல் உச்ச நீதிமன்றத்தில் ஆறு மாதங்களாக‌ வழக்கு வேறு உள்ளது.

    அதெல்லாம் இருக்கட்டும், வேதாளம் கதை என்ன ஆச்சு ஸ்வாமி? இதை விட அது சுவாரசியமாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு

  8. /இந்தியாவின் பல கீழ்த்தரங்கள் உடனே ஆ ஊ என்று கூச்சல் போடுகின்றன. ஒரு பெண்ணை துகிலுரித்துத் தேடுவதா அப்படியா இப்படியா என்று பெரிய கூச்சல். எல்லாம் அரசியல் மத ஆதாய ஊழல் குரல்கள்./ இது சற்று ஓவராகத் தெரியவில்லையா.? பெரோஸ்பூர் பிள்ளையாண்டான் குற்றம் சாட்டி உள்ளே தள்ளி இருக்கும் சிலரது பெயர்கள் ரஜத் குப்தா, அனில் குமார், ராஜரத்னம் இப்போது தேவ்யானி, எதையோ சூசகமாகத் தெரிவிப்பதுபோல் இருக்கிறதே. எல்லாச் செய்திகளும் எல்லோருக்கும் தெரிவதில்லை. அமெரிக்க இந்தியன் ஒரு உளவாளி வெளியில் தென்படக் கூடும் என்று செயல் புரிந்திருக்கலாமோ என்னும் சந்தேகமும் இருக்கிறது. எது எப்படியாய் இருந்தாலும் ஒரு பெண்ணை ஏதோ தீவிரவாதியைச் சோதனை செய்வதுபோல் நடத்தியது மனிதாபிமானத்துக்கு ஒவ்வாத செயல். அதைச் செய்தது அமெரிக்க இந்தியப் பிள்ளை ப்ர்ரோஸ்பூர் பிள்ளையோ இல்லை வேறு எவரோ ஆனாலும். இது பற்றி பல தளங்களிலும் வாசிக்கும் போது நிறையவே விஷயங்கள் தெரியாமல் கட்சி சேருகிறோமோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    எப்பொருள் எத்தன்மைத்தாயினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.


    செய்த வினையிருக்க ....


    அதெல்லாம் சர்தான் அப்பாதுரை சாரே.
    இருந்தாலும் இன்டர் நேஷனல் லா ஒன்னு இருக்காமே...

    அதுலே ஒரு புடி புடிங்களேன்.

    அது யார் அங்கன வேதாளம் கத எங்கே போச்சுன்னு கேட்கறது ?
    யோவ்.!! சுப்பு தாத்தா நிம்மதியா தூங்கறது உனக்கு புடிக்கலையா ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  10. யார் மேல் தவறு? ஒரே குழப்பமாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  11. I will read the comments later. First of all let me tell you, I ENDORSE YOUR VIEWS AND ALSO CONVEY MY WISHES TO THIS REAL SCREEN RAJANIKANTH

    பதிலளிநீக்கு
  12. இந்தப் பிரச்னையில் எந்தப் பக்கம் முழு நியாயம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பக்கம் சங்கீதா அமெரிக்க உளவாளி என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையைப் படியுங்களேன்.

    http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/article5490874.ece

    பதிலளிநீக்கு
  13. //இருந்தாலும் இன்டர் நேஷனல் லா ஒன்னு இருக்காமே..

    அது என்னான்னு எனக்கு தெரியலே சார்.

    நிச்சயமா வியன்னா கன்வென்ஷன்ல இது மாதிரி குழப்பங்களுக்கெல்லாம் ஒரு கரண்டி கொடுத்திருக்காங்க. அதை எல்லாரும் நல்லா பயன்படுத்தறான்கனு புரியுது.

    இந்தம்மா தேவயானி செய்தது தவறு. அமெரிக்காவுக்கான விசாவில் பொய் சொல்வது தவறு. அதற்குப் பிறகு ஒரு தொழிலாளியை தரக்குறைவாக நடத்துவது வேறு தவறு. இதுல ரெண்டு தவறுன்களுக்கும் வெவ்வேறு கண்காணிப்பு அமைப்புகள் என்பது இன்னொரு உப கரண்டி. இருந்தாலும் தவறு என்பது கொஞ்சம் கூட சந்தேகமில்லாமல் தவறென்றே தெரிகிறது.

    இருந்தாலும் வியன்னா ஏன்னா சொல்றாரு? இந்த மாதிரி டிப்புலோமட்டிக்கு பாதுகாப்பு எல்லாம் டிப்புடப்பு செயல்களுக்கு மட்டும் தான் பொருந்தும்னு சொல்லுது. வூட்டு வேலைக்காரி சமாசாரம் டிப்புடப்புக்கு அப்பால ஆச்சுங்களா? அதனால தேவயானியம்மா தகிடுதத்தம்மா.

    இதைத்தான் எடுத்துச் சொல்றாரு பரீத். ஒருத்தரை அரெஸ்ட்ட் செய்யுறப்ப இந்த மண்ணுக்கான அனுமதிப்படி என்ன செய்யணுமோ அதைத்தான் செஞ்சிருக்காங்க. பெண்களை டார்ச் அடிச்சிருந்தா அடிச்சவங்க பொம்பளைங்களாத்தான் இருப்பாங்க. ஊர் பஸ்ல பொண்ணைத் துரத்திக் கெடுத்த கூட்டத்தை பாத்துட்டு இருந்த முந்திரிங்க எல்லாம் இப்ப பெண்ணினத்துக்கான அவமானம்னு பொருமுறாங்க. வேளை!

    இதுல பன்னி (இங்கிலீசு டமாசு) என்னான்னு பாத்தா, இதே வியன்னா கன்வென்ஷன்ல இதே சட்டத்தை வச்சு இத்தாலிய தூதரை பிடிச்சு நாறாக்கனும்னு சொன்னது இதே முந்திரிங்க தான். "அதாகப்பட்டது பிரபோ, இந்த வியன்னா குயன்னாவெல்லாம் தூதரகத்துக்குள்ளே நடைபெறுகின்ற செயல்களுக்குப் பொருந்தும்.. ஆனால் துறைமுகத்துள் பொருந்தாது சுவாமி.." என்று சொல்லி ஒரு பொம்பளையைப் பிடிக்காத காவிங்க கூச்சல் போட்டாங்க. ஆனா இன்னொரு பொம்பளைக்காக அதே சட்டம் செல்லுபடியாகும்னு சொல்றாங்க. அந்தப் பொம்பளை வெளிநாட்டுப் பிறப்பு. மேல் தட்டு. இந்தப் பொம்பளை உள்நாட்டுப் பிறப்பு. தலித்து. அதான் வித்தியாசம். தலித்துனா ஒட்டு பிரச்சினையாயிருமே?

    இம்புட்டு தாங்க இண்டர்னேசனலு. எனக்குத் தெரிஞ்சது.

    பதிலளிநீக்கு
  14. அந்தம்மா அமெரிக்க உளவாளியா இருந்தா அது வேறே கேஸ் இல்லையா?
    இந்தம்மா செஞ்சது சரியாயிடுமா? இந்தம்மாவை கைது செஞ்சது இந்தம்மாவின் குற்றத்துக்கு.
    where is the focus?

    பதிலளிநீக்கு
  15. இந்த மாதிரி இண்டர்னேஷனல் லா வுக்கு
    அந்த ஸ் லே குரு காண்பிக்க இருக்கும் அந்த விரட்டிய பேய்க்கதையே பெட்டர்.

    பொய்யான பேய்கள் உண்மையான பொய்களை விட நிஜம் தான் .
    டாலரபிள் ஈக்வலி அண்டர்ச்டாண்டபிள்.

    அப்பாதுரை சார்...

    அந்த பயணம் போகும்போது என் கையை மட்டும் விடாம புடுச்சுக்குங்க..

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  16. //"There appears to be no question that the government acted legally, but there is a very big distinction between acting under the collar of your authority and doing what as a matter of foreign relations and common goods sense is wise," Stephen Vladeck, professor at the American University College of law//
    அங்கன ஒரு விதுரர் இருக்கார் போல தெரியுது ?? !!!

    இல்ல தருமரா இருப்பாரோ ??

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  17. //இந்தம்மா தேவயானி செய்தது தவறு//
    அதை தீர்மானிக்க வேண்டியது இந்திய நீதிமன்றம். ஏனென்றால் வழக்கு ஏற்கனவே ஆறு மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

    //அந்தம்மா அமெரிக்க உளவாளியா இருந்தா அது வேறே கேஸ் இல்லையா?//
    அது எப்படி வேறே கேஸ் ஆக முடியும்? இத்தனைக்கும் அந்த வேலைக்காரியின் அப்பா பல வருடங்களாக‌ அமெரிக்க தூதரகத்தில் தான் வேலை செய்கிறார். உள்ளே என்ன கசமுசா நடந்ததோ யாருக்கு தெரியும்? வேலைக்காரியின் மீதும் அவளின் குடும்பத்தினர் மீதும் இதே வழக்கு விஷயமாக‌ ஆறு மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவசரம் அவசரமாக அவளுடைய கணவனுக்கும் குழந்தைகளுக்கும் T-விசா கொடுத்து கடத்தி சென்றது அயோக்கியத்தனம். அவர்களுக்கு விமான டிக்கட் எடுத்ததும் அமெரிக்கா தான். அப்படி என்ன அக்கறையோ? கேட்டால் Human Rights-ஆம். என்ன எழவோ! இந்த விஷயத்தில் இந்திய immigration-காரர்கள் கோட்டை விட்டார்கள் என்பது தான் உண்மை.
    உலக போலீஸ்காரனாக இருந்தால் யாரும் ஒன்றும் பேச கூடாது என்று சப்பை கட்டு கட்டும் கும்பலை என்ன சொல்வது? பொம்பளையின் பிறப்புறுப்பை டார்ச் அடித்தது சோதனை செய்தது பொம்பளையாக இருந்தால் என்ன ஆம்பிளையாக இருந்தால் என்ன, டார்ச் அடித்து அவமானப்படுத்தினார்கள் என்பது தான் இங்கே பிரச்னையே. இதை Standard Procedures என்ற பெயரில், செய்த அயோக்கியத்தனத்தை மறைக்க முடியாது (//இந்த மண்ணுக்கான அனுமதிப்படி என்ன செய்யணுமோ அதைத்தான் செஞ்சிருக்காங்க//). இதையே ஒரு வெள்ளைக்கார அமெரிக்க பொம்பளைக்கு,(அவள் diplomat-ஆக இல்லாமல் சாதாரண பெண்மணியாக இருந்திருந்தாலும்) இந்தியாவில் செய்திருந்தால் வரிந்து கட்டி கொண்டு அடுத்த நிமிடம் போரே செய்தாலும் செய்திருப்பார்கள். உலக போலீஸ்காரர்களு 'சட்டப்படி செய்தார்கள்' என்று சப்பைகட்டு கட்ட தான் தெரியும். பாகிஸ்தானில் சாலையில் நடந்து செல்பவனை சுட்டு கொன்று விட்ட அமெரிக்க diplomatஐ இரவோடு இரவாக சிறையிலிருந்து கடத்திவிட்டவர்களை என்ன சொல்வது? What's good for the goose is not good for the gander when it comes to the world cop. உண்மையின் நடந்தது என்னவென்று கடைசி வரை வெளியே வராது என்றே நினைக்கிறேன்.

    வாத்யாரே,நீங்க வேதாள கதையை continue பண்ணுங்க!

    பதிலளிநீக்கு
  18. ஓரு நுணுக்கமான விசயத்தை சுவராசியத்திற்காக தாவி தாவி நகர்த்திக் கொண்டே சென்ற விதம் பாராட்டக்கூடியதாக இருந்தாலும் கடைசியில் மனதில் எதுவும் அழுத்தமாக பதியவில்லை. காரணம் நியுயார்க் அட்டர்னி ஜெனரல் குறித்து தெளிவாக எழுதுவார்களா? என்று தேடிக் கொண்டே வந்த போது இந்த பதிவு என் கண்ணில் பட்டது.

    பதிலளிநீக்கு
  19. Expatguru வை முழு மனதோடு ஆமோதிக்கிறேன். இது குறித்த உண்மைத் தகவல்கள் வெளிவரவில்லை. :(

    பதிலளிநீக்கு