2013/08/17

கடைசிவரை கணினி



    ணினி என்னைத் தொடக் காரணமாயிருந்த பெண் இன்று எங்கேயிருக்கிறாளோ, எப்படி இருக்கிறாளோ?! ஆகஸ்டு பதினைந்தை அசலில் கண்டாளோ? அல்லது அப்பனுக்குப் பின் கணவன், கணவனுக்குப் பின் பிள்ளை பெண் பேரர்கள் என்று தொடர் அடிமையாக இருக்கிறாளோ?

அந்தத் தென்னைமரம் பசுமாடு கதைக்குப் பிறகு வருகிறேன், அவள் எங்கிருந்தாலும் வாழ்க என்ற நினைப்போடு (பின்னணியில் தவளை சத்தம் சகிதம்).

    உங்களுக்கு எப்படியோ தெரியாது, நானறிந்த மட்டில் கணினிப்பிடி உடும்புப்பிடி. நினைத்துப் பார்க்காத, பார்க்கவும் முடியாத வகைகளில் பிடித்து வைத்திருக்கிறது. பாதிக்கிறது. பாதிக்கும் என்பதும் புரிகிறது. உதாரணத்துக்கு கீழ்க்காணும் யஜூர்வேத சான்னித்யப் ப்ரஷதமா:
        pecados assombrar nos!, pragas legado en crianças!, manda manda!, escarraar te!

என்ன சுந்தர்ஜி? அது யஜூர் வேதமில்லையா? அப்போ உபநிஷதமா? அதுவுமில்லையா? ப்ச.. அது மட்டும் நாங்க என்ன, பொருள் தெரிஞ்சா சொல்றோம்? ஏதோ உங்க தயவுலயும் கணினி தயவுலயும் கணினியறியக் காரணமான அந்தப் பெண் தயவாலும் கொஞ்சம் தெரிஞ்சுக்க முடியுது - இதுவும் அதுவோனு நினைச்சுட்டேன்.

போகட்டும். மேற்கண்ட ஞானவரிகளுக்கு வருவோம். இவை மூன்றாம்சுழி ப்லாகின் spam commentகளாகக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வருகின்றன. வெனிசுவேலா, ரஷியா என்று பலவித இடங்களில் இருந்து வந்து விழும் கருத்துக் குருத்துக்கள். ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதப்பட்டிருந்தால் அனானியாகப் பதிவாகியிருக்கக் கூடிய, ஒரு சாதாரண IP Mask உதவியுடன் வந்துவிழும் SPAM மழை. IP Mask என்ன பெரிய புடலங்காய்? ஒன்றுமில்லை.

'அன்புள்ள எங்கள் பிளாக், உங்கள் தயவால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். நிற்க, வாந்திபேதி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை. அதைப் படங்களுடன் அறியும்படி ஒரு சுட்டியை அடுத்து இணைப்பீர்களா?' என்று கருத்திட நினைக்கிறேன்.. அல்லது..

'இன்னாம்மே.. சும்மா எதுனா கலாய்ச்சினுகிறே? ஒயுங்கா எயுதுவியா, இல்லே எஸ்க்யுஸ் வுட்டுகினே இருப்பியா?' என்று கவிநயாவை கலவரப்படுத்த விரும்புகிறேன்..

..என்று வையுங்கள். இந்தக் கருத்துக்களை அவல் உப்புமா+காபி சுவைத்தபடி, சென்னை எக்ஸ்பிரஸ் hd பிரதியை இணையத்தில் பார்த்தபடி, சிகாகோவில் சாவகாசமாக எழுதிவிட்டு, ஒரு இலவச ஐபி முகமூடி மென்பொருள் தயவால் பெர்முடா, பங்கலாதேஷ் அல்லது பூந்தமல்லியிலிருந்து வரும்படி மாற்றி அனுப்பமுடியும். அனானி கருத்தாக வந்தாலும் நேரம் இடம் பொருள் ஏவல் பார்த்து, எந்த ஊரில் யார் எங்கே இருக்கிறார்கள், எந்தப் படுக்கையில் யார் ஒண்ணுக்கு போயிருக்கிறார்கள் என்று ஸ்டேடஸ் பார்த்துத் துப்பறிந்துத் தூக்கம் தொலைக்கும் ஷெர்லாக்களின் முகத்தில் கொஞ்சம் தார் பூசமுடியும். அல்லது அசல் நல்ல காரியங்களுக்கோ கசமுசாக்களுக்கோ சங்கேதச் செய்தியும் அனானி இமெயிலும் அனுப்பமுடியும். இணைய அடையாளத்துக்கு ஒரு முகமூடி. அம்புட்டுதேன் ஐபி மேஸ்கு. அட்ரா மோளம்! லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ்...

ஞானவரிகளின் பொருள் ஓரளவுக்குப் புரிவதாலும் இவை தொடர்ந்து வருவதாலும்.. இவற்றை ஒரு செய்தியாகப் பாவிக்கலாமா கூடாதா, இது போன்ற குறிப்பற்ற பொதுவானக் கணினி கருத்துக்கள் தனிப்பட்ட மிரட்டலா இல்லையா, கூகுலுக்கும் போலீசுக்கும் சொல்வதா தவிர்ப்பதா என்று ஒற்றையா இரட்டையா போட்டு வருகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அனானியாகவோ நேரிடையாகவோ சொல்லுங்கள். அல்லது தி.தனபாலனின் இணைய முகவரியைப் பயன்படுத்தி அவர் சொல்வதாகவும் சொல்லலாம். உங்கள் வசதி.

IP முகமூடி என்றில்லை, இலவசமாகக் கிடைக்கும் இணையப் ப்ராக்சிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை வளர்மதி (பூத்தூரிகை) விளக்கியதும் நல்ல தமிழ் சினிமா பார்த்தது போல் அதிர்ந்திருக்கிறேன். ஆசிரிய நண்பர் அரசன், புலிகளல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செய்தி அனுப்ப இந்த முறையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று தெரிந்து சில நாள் பயந்திருக்கிறேன். தன் இணையக்கணக்கு அடையாளங்களினால் உண்டான சிக்கலில் வாழ்க்கையே நாசமான நண்பரின் கதையை எப்பொழுதோ ஒரு முறை எழுதியிருக்கிறேன்.

கொஞ்சம் இந்தப் பக்கம் வந்தால் கணினி சுகமாகவே இருக்கிறது.

கணினி தயவில் கண்காணாதவர்களுடன் நட்பு கொள்ள முடிகிறது. மனம் விட்டுப் பேசமுடிகிறது. இன்னும் நிறைய செய்ய முடிகிறது. சென்னையிலிருந்து சிகாகோவுக்கு கணத்தில் பணம் அனுப்பமுடிகிறது. பெங்களூரு புன்னகையை பாஸ்டனில் பார்க்க முடிகிறது. ஒரே நேரத்தில் ஒரு கணினி ஜன்னலில் சென்னை கணேஷுடனும் இன்னொரு கணினி ஜன்னலில் பெங்களூரு ரஞ்சனியுடனும் வளவளாவ முடிகிறது. சிகாகோ கணினியில் மறந்து போன வணிகக் காகிதம் ஒன்றை ப்ரேங்க்பர்ட் ஏர்போர்டில் ப்ரின்ட் எடுத்து பிசினஸுக்குத் தயாராக முடிகிறது. கூகுல் லிங்க்டின் பேஸ்புக் டம்ளர் என்று உலவித் தேடி ஜாதகம் கணித்தது போல் ஒருவரையோ பலரையோ தேவைக்கு மேல் அறிந்து அதற்கேற்ப நடக்க முடிகிறது. விளையாட்டுப் பிள்ளையின் சிவப்பியில் இரண்டு வருடங்களுக்கு முன் பதித்த குட்டி ஜிபிஎஸ் வழியாக எங்கே போகிறார் என்று இப்போதும் அறிய முடிகிறது. (ஹிஹி.. ச்ச்சும்மா).

விடுங்க, இதெல்லாம் ஜூஜூபி. வருங்காலத்தில்.. இன்ன நேரத்தில் கண்ணை மூடவேண்டும் (நிரந்தரமாக) என்றுத் தீர்மானித்ததும் கணினி வளையலை அணிந்து கொண்டால் சரியான நேரத்தில் அலாரம் வைத்தது போல் பத்தாயிரம் பூக்களால் அடித்த ஒரு மென்மையான அதிர்ச்சி கொடுத்து இதயத்தை நிறுத்தவும் முடியும். (இப்போதே முடிகிறது என்றாலும் பொதுவில் வர நாளாகும்). என் முடிவு அப்படி வந்தால் நன்றாக இருக்கும். கடவுளுக்குப் பதில் கடைசி வரை கணினியை நம்பலாம் என்றே தோன்றுகிறது.

என்ன.. கணினியால் நிறைய முடியும் என்றாலும் எல்லாம் ஆகாது. அன்பும் காதலும் மட்டும் மனித செயலாக, மனித அடையாளமாகவே இருந்துவரும். ஹ்ம்ம். அன்பினாலும் காதலினாலும் என்ன பிரயோஜனமோ, யார் கண்டார்கள்!

இன்றைக்கு ஓரளவுக்குக் கணினிப் படம் காட்டும் நான், அந்தப் பக்கமே போகாமலிருந்திருக்கக் கூடும் என்பதை நினைத்தால் நடுக்கமாக இல்லை? சசிகலா, உங்களைத்தான் கேட்கிறேன். நீங்க தானே பதிவெழுதச் சொன்னீங்க? (நன்றி :)

    எனக்கு இருபது வயது என்று நினைக்கிறேன். விரும்பிய ஐஐஎம் கிடைக்காமல் நொந்திருந்தேன். கிடைத்த வேலையையும் ஐஐஎம்மை நம்பி விட்டிருந்தேன். இரண்டு மாதங்களாக நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தவள், அவளுக்கு இடம் கிடைத்து எனக்கு ஐஐஎம் கிடைக்கவில்லை என்றுத் தெரிந்ததும் 'இனி நாம் பழக வேண்டாம் துரை' என்று விலகிக்கொண்ட கடுப்பும் ஏமாற்றமும் மிகுந்திருந்தேன். சிகரெட் மதுவில் ஈடுபாடு இல்லாததால் (காசு இல்லாததாலும்) அங்கேயும் மறதி தேட முடியாத நிலையில், என் பம்மல் நண்பன் தேசிகன் ஒரு செய்தியோடு வந்தான். அவன் வீட்டு ஹிண்டு பேப்பரை நான் ஒசியில் படிப்பது வழக்கம். முழுப் பக்க விளம்பரம். பெங்களூரில் ஒரு கணினி கலாசாலை தொடங்கப் போவதாகவும் அகில இந்திய அளவில் தேர்வு நடக்கப் போவதாகவும் முபவ. அனியாயத்துக்கு கட்டணம். அந்த நாளிலேயே இருபதாயிரமோ என்னவோ. இரண்டு வருட முதுகலைப் படிப்பு. நுழைவுத் தேர்வில் முதல் ஐந்து இடங்களை வெல்வோருக்கு வருடத்துக்கு மூவாயிரம் ரூபாய் புத்தகம் மற்றும் கணினிக்கான உபரிச் செலவு என்று கொடுத்தார்கள். அது தவிர, முதலிடத்தை வெல்பவர் படிப்பு செலவு மொத்தமும் கொடுத்தார்கள்.

மொரார்ஜியினால் துரத்தப்பட்ட ஐபிஎம் நிறுவனம், பின் கதவு வழியாக இந்தியா நுழையத் திட்டம் போட்டது என்ற குழப்படி செய்தி தெரியாமல் (தெரிந்தாலும் ஏதும் செய்திருக்க முடியாத அறிவற்ற இளமை) கோலாகலமாகத் திறக்கப்பட்ட அந்தக் கணினி கலாசாலையின் நுழைவுத் தேர்வெழுதி, அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் வந்தேன். முதல் இடத்தைப் பிடித்தவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்.

இரண்டாவது இடத்தினால் எனக்கு ஒரு பயனும் இல்லை. கணினிப் படிப்புக்கான பணம் கட்ட முடியாத நிலை. என் நண்பர்கள் சிலர் எனக்கு உதவ முன்வந்தாலும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும் செலவுக்கு எங்கே போவது?! வேலை காதல் படிப்பு என்று எல்லாமே கைக்கெட்டி வாய்க்கெட்டாமலே போன சோகத்தில், சினிமா பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். இசை எம்எஸ் விஸ்வனாதன்.

'என்னால் சேர முடியாது' என்று கணினி கலாசாலைக்காரர்களுக்கு எழுதினேன். இளைஞர் காங்கிரசில் சேர்ந்தேன். சஞ்சய் காந்தி தயவில் ஐயாயிரம் ரூபாய் வரை கேள்வி கேட்காமல் கிடைத்துக் கொண்டிருந்த கடன் ஸ்கீமில் கணிசமாக அடிக்கத் திட்டம் போட்டிருந்த செங்கை இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு என் இங்க்லிஷும் இந்தியும் தேவைப்பட்டது. ஒரு கடன் பத்திரம் முடித்தால் எனக்கு ஆயிரம், தலைவருக்கு மூவாயிரம், வங்கி மேனேஜருக்கு ஐநூறு, கடன் வாங்கியவருக்கு ஐநூறு என்ற விகிதப்படி பட்டுவாடா செய்ய வேண்டும். கடன் கொடுத்த கணக்கை இந்தியிலும் இங்க்லிஷிலும் எழுதி அவருக்கு அனுப்ப வேண்டும். அதான் வேலை. கட்சியில் சேர்த்துக் கொண்டு பணம் தருவதாகவும், வளர்ந்து டெல்லியில் எம்பி ஆகலாமென்றும் தலைவர் ஆசை காட்டியதில் விழுந்தேன். வீட்டில் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. 'என்னடா இது நாலு தங்கைகளை வச்சுக்கிட்டு, இப்படி அரசியல்ல குதிக்கறேன் சினிமா கதை எழுதுறேன்னு என்னென்னவோ சொல்லிட்டிருக்கே? ஒழுங்கா வேலைக்குப் போடா.. அம்மா கர்ப்பரட்சே, அபிராமி! என் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுமா' என்று புலம்பத் தொடங்கினார். அவசரத்துக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குச் சேவை செய்துவிட்டு அத்துடன் அரசியல் ஆசையை விட்டேன்.

அந்த நிலையில் கலைஞரின் நெருங்கியவராக இருந்த நல்லதம்பியின் 'நெருங்கியவராக' இருந்த ஒருவர் எனக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். அவருக்குச் சொந்தமான ஒரு கம்பெனியில் மேனேஜர் வேலை. இந்திய டேக்சி டிரைவர்களை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி, அங்கே அவர்களை 'மேய்க்கும்' மேனேஜர் வேலை. டிரைவர்கள் கொடுக்கும் 'விசா செலவுக்கான' பெருந்தொகையை வாங்கி அங்கே அவர் கணக்கில் சேமிக்க வேண்டும். அங்கிருந்து வருடாவருடம் இன்னொரு அடையாளம் தெரியாத வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்ற வேண்டும். இதான் வேலை. துபாயில் நூறு பணம் சம்பளம். அதைத் தவிர, இந்தியாவில் பம்மல் வங்கிக் கணக்கில் மாதம் இரண்டாயிரம் சம்பளம். அரசாங்கத்துடன் பேசிப் பழகி முடிவுகள் எடுக்க என் ஆங்கிலமும் பட்டப்படிப்பும், அதே நேரம் 'நம்மாள்' என்ற முறையில் என் நாணயமும் நெருங்கியவருக்கு உதவும். வெளிநாடும் வேலையும் சம்பளமும் எனக்கு உதவும். அவருக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. எனக்கும். வீட்டில் சொல்வதில்லை என்று தீர்மானித்திருந்தேன். துபாய் போனபின் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருந்தேன்.

பத்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வந்தது. ஓசியில் டிவிஎஸ் ஒட்டிக்கொண்டிருந்த எனக்கு கார் டிரைவிங் லைசென்சும் வந்தது. நான் எங்கேயும் போகவில்லை. எதையும் செய்யவில்லை. எல்லாம் நெருங்கியவரே பார்த்துக் கொண்டார். தொடர்ந்து சில வாரங்களில் விசாவும் வந்தது. 'என்சைக்லோபிடியா விற்கும் வேலை' என்றது என் விசாத்தாள். 'என்ன இழவாக இருந்தால் என்ன!' என்று நான் கிளம்பத் தயாரானேன்.

கிளம்ப ஒரு வாரம் இருக்கும் பொழுது எனக்கு ஒரு தந்தி வந்தது. கணினி கலாசாலையிலிருந்து. சென்னை சபையர் அருகே இருந்த ஹோட்டலில் வந்து சந்திக்குமாறு சொன்ன தந்தியைத் தூக்கி எறியலாமென்று நினைத்தேன். ஏனோ தெரியவில்லை, தியேடரில் படமாவது பார்ப்போம் என்ற சமாதானத்தோடு கிளம்பினேன்.

"மிஸ்டர் துரை. உங்களுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது. கணினிப் படிப்பின் மொத்த செலவையும் கலாசாலையே ஏற்கும். பிடியுங்கள் அட்மிஷன் பேப்பர்ஸ். இன்று மாலை அமெரிக்க எம்பசியில் ஒரு இன்டர்வ்யூ. அது சரியாகிப் போனதென்றால் உங்களுக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆகும்" என்று கைகுலுக்கினார் சிவப்பாக இருந்த ஒரு கோட் சூட் இந்தியர்.

ஆச்சரியமாக இருந்தது. பெங்களூர் படிப்புக்கு அமெரிகன் எம்பசியில் எதற்கு இன்டர்வ்யூ என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. "ஒரு பெண் அல்லவா முதல் இடத்தை வென்றார்? என்ன ஆச்சு?" என்றேன்.

"ஆமாம்.. ஆனால் அந்தப் பெண் தனக்கு இந்தப் படிப்பில் இஷ்டமில்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் பலமுறை அவர் வீட்டுக்கே சென்று கேட்டுப் பார்த்துவிட்டோம். பிடிவாதமாக இருக்கிறார். அவர் விட்டுக் கொடுத்ததால் உங்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அவசரப்பட்டு படிப்பு வேண்டாம் என்று எழுதிவிட்டதால் அட்மிஷன் பேப்பர்ஸ் மறுபடி தர வேண்டியிருக்கிறது. உங்களை மாணவராக அடைவதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி" என்றார்.

"கொஞ்சம் யோசிக்கிறேன். மாலையில் பார்ப்போம்" என்றேன். அமெரிக்க தூதரகத்தில் இன்டர்வ்யூ முடிந்து எதிரே இருந்த உட்லண்ட்ஸ் டிரைவின்னில் காபி டிபன் சாப்பிட்டோம். மதுரைப் பெண்ணின் முகவரி வேண்டும் என்றேன். கொடுத்தார்கள்.

ஏனோ தெரியவில்லை, மதுரைப் பெண்ணைப் பார்த்து விவரம் கேட்க வேண்டும் என்று மதியத்திலிருந்து தோன்றிய எண்ணத்தை ஒடுக்க முடியவில்லை. முகமறியாத பெண்ணுக்கு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நண்பன் வயலினிடம் (பெயர்க்காரணம் இன்னொரு சமயம்) யெஸ்தி கடன் வாங்கிக் கொண்டு மதுரை சென்றேன். அதிகாலை ஏழுமணி சுமாருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெருவில் இருந்த ஹோட்டலில் குளித்து உடை மாற்ற மட்டும் வாடகைக்கு ரூம் கொடுத்தார்கள். அட்டகாசமாக டிபன் சாப்பிட்டு விட்டு (அப்பொழுதெல்லாம் ரெண்டு இட்லி, பொங்கல், வடை, சாதா தோசை, பூரி மசாலா, காபி என்று சர்வ சாதாரணமாக நாஷ்தா சாப்பிட முடிந்தது) மதுரைப் பெண் வீடு தேடிக் கிளம்பினேன்.

பெண்ணின் அப்பா வரவேற்றார். என் பெயரைக் கேட்டதும் அவர் கேட்ட முதல் கேள்வி: "பாக்கறதுக்கு பிராமணாள் போல இருக்கியேபா?". திண்ணை கடந்து உள்கட்டில் ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். கிராமத்து அசல் அக்கிரகார வீடு. பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

"ஐயா.. ஆமாம்" என்று என் சர்மாவைச் சொன்னதும், "அப்படியா? எந்த ஊர் பூர்வீகம்?" என்றார்.

தோளைக் குலுக்கி எனக்குத் தெரிந்தவரையில் சொன்னேன்.

"நன்னா தெரியுமே? அவாள்ளாம் த்ர்னாங்கோயில்லையோ? நீ என்ன படிச்சிருக்கே? உத்யோகம் பாக்கறியா? எத்தனை அக்கா தங்கை? அப்பா அம்மா என்ன பண்றா? காபி சாப்பிடுறியா?"

உரையாடல் வேறே ரூட்டில் போவதை உணர்ந்து சடன் ப்ரேக் போட்டேன். "சார்.. உங்க பெண்ணோட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்" என்றேன்.

"எம்பொண் கிட்டயா? ஏன்? எதுக்கு? யாரு? உனக்கு எப்படி அவளைத் தெரியும்?" என்று வரிசையாக கேள்விக்கணை தொடுத்தார். காபி தரமாட்டாரென்று தோன்றியது.

வந்த விவரத்தை சொன்னேன். "சார்.. மொதல் இடத்துல வரது எவ்ளோ பெரிய சாதனை.. ஏன் விட்டுக் கொடுத்தாங்கனு கேட்க வந்தேன். இது பெரிய வாய்ப்பாச்சே சார்?" என்றேன். சொல்லும் பொழுது அருகே இருந்த அறையில் (ரேழி?) நிழலாடுவதை உணர்ந்தேன். என் எதிரே இருந்த தூண்களில் தொங்கிய செவ்வக நிலைக்கண்ணாடியில் லேசாக ஒரு முகம் தெரிந்தது.

"பொம்னாட்டிகளுக்கு எதுக்கு ஊர் விட்டுப் போய் படிப்பு வேண்டிக்கிடக்கு? அதுவும் கம்பியூடர் எல்லாம்? நாளைக்கு வாக்கப்பட்டு போற இடத்துல அவாளா சொன்னா எல்லாம் படிச்சுக்கட்டும்.. இருக்குற செலவு போறாதா?"

"சார்.. முதல் ரேங்க்னால அவங்களே எல்லா செலவையும் ஏத்துக்குவாங்க சார். இது எவ்வளோ பெரிய சான்ஸ்! நாளைக்கு அமெரிக்கா எல்லாம் போகலாம். அதும் பெண்கள் இப்படி முதல் ரேங்க்ல வந்தா அதை விடுறது தப்பு சார்"

சொல்லியிருக்கக் கூடாது. வெடித்தார். "என்ன தப்புங்கறே? யார்டா நீ? எம்பொண்ணுக்கு எது தப்பு ரைட்டுனு எனக்குத் தெரியாதா? இந்த மாதிரி சொல்லிண்டு தான் ஒரு வடக்கத்திக்காரனும் வெள்ளைக்காரனும் வந்தாங்க.. வாசல்லயே வச்சு போங்கடான்னுட்டேன்.. உன்னை உள்ள விட்டது தப்பா போச்சு"

உடனே பணிந்தேன். "சாரி சார். தெரியாம சொல்லிட்டேன். தப்பா நினைக்காதீங்க. நீங்க வேணாம்னு சொன்னதால உங்க பொண்ணோட இடத்தை எனக்குக் கொடுத்திருக்காங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா யோசிச்சு சொல்லுங்க சார். நான் இதை உடனே எடுத்துக்கணும்னு இல்லை சார். நாலு நாள் வேணும்னா யோசிச்சுக்குங்க. அங்கே நிறைய பெண்கள் படிக்கிறாங்க. உங்க பெண்ணுக்கு ஒரு ஆபத்தும் வராது". உள்ளறையோரமாக லேசான கொலுசு சப்தம் கேட்டது.

"அதெல்லாம் யோசிக்கறதுக்கு ஒண்ணும் இல்லே. ஏதோ டெஸ்டு எழுதினா. பேங்கு எக்சாம் எழுதுறி தடிச்செறுக்கினா இதையெல்லாம் எழுதி வைக்கறா.. அவ அம்மா குடுக்குற எடம். அவளுக்கு இந்தப் படிப்பெல்லாம் வேண்டாம்" என்றார். உள்ளறையோரமாக ஒரு பெண் ஒரு தட்டில் இரண்டு கப் காபி கொண்டு வைத்ததை உணர முடிந்தது. சட்டென்றுத் திரும்பிப் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தாலும் பயனிருந்திருக்காது. காபியை என்னிடம் கொடுத்தார். அற்புதமான டிகாக்ஷன் காபி.

காபி அருந்தியதும் பத்து நிமிடம் போல் பேசினோம். கடைசியில் அவருக்குப் பொறுமை குறையத் தொடங்கியதும், "எனக்குக் கிடைச்ச இந்த இடம் உங்க பெண் போட்ட பிச்சைனு சொல்வேன் சார்" என்றேன். சினிமாவில் எழுதத் துடித்த எனக்கு டயலாக் பேசவா வராது? "அவங்க கிட்டே ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு போயிடறேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவளுக்கு எது நல்லதுனு பெத்தவனான எனக்குத் தெரியும். ஒண்ணு செய்.. உங்காத்து அட்ரெஸ் குடுத்துட்டுப் போ. எம்பொண் ஜாதகத்தை அனுப்பறேன். பரவாயில்லையா?" என்றவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் என் பம்மல் முகவரியை எழுதிக் கொடுக்க முன்வந்தேன். ஏன் அப்படித் தோன்றியதோ தெரியவில்லை, தெருப்பெயரை மாற்றி எழுதிக் கொடுத்தேன். இன்றைக்கும் லேசாக உறுத்துகிறது.

நெருங்கியவரிடம் எனக்குத் துபாய் வேலையில் இஷ்டமில்லை என்று சொன்னேன். அவரிடமும் தேசியின் அண்ணனிடமும் காங்கிரஸ் தலைவரிடமும் ஆளுக்கு ஆயிரம் கடன் வாங்கினேன். பெங்களூரு சென்று கணினி கலாசாலையில் சேர்ந்தேன்.

    தென்னைமரத்தில் இனி பசுமாட்டை கட்டலாம்.

சேர்ந்த முதல் வாரமே தனியறையில் வீற்றிருந்த வேக்ஸ் மினியைக் காட்டினார்கள். இருபத்து நாலு மணி நேரமும் கணினி உபயோகிக்க ஒரு கார்டு கொடுத்தார்கள். குளுகுளு அறையின் மணத்தில் மனதைக் கொடுத்தேன். விஎம்எஸ் புடலங்காய் என்று ஏதேதோ சொல்லிக் கொடுத்தார்கள். சிஸ்டம்ஸ் அனாலிசிஸ், கோட் செக்மன்ட், கெர்னல், அது இது என்று என்னென்னவோ கற்றேன். சிஎப்டிஆர்ஐ, அமெரிக்க எம்பசி நூலகம், தில்லித் தூதரகம் போன்ற அமைப்புகளுடன் சுலபமாக கணினியில் நெட்வொர்க் செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள். ஸ்ட்ரெடிஜிக் டிசைன், காக்னிடிவ் அசோசியேசன் என்று மேல்தட்டில் நிறையக் கற்றேன். கணினி அறையின் குளுகுளு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இருபத்து நாலு மணி நேரம் கணினி கிடைத்தாலும், தினம் ஹாஸ்டலில் கொடுத்த சப்பாத்தியும் உடன் சாப்பிடத் தொடங்கிய மஞ்சள் மளேர் மங்களூர் பெண்ணும் கவனத்தில் இருந்தார்களே தவிர கணினிப் படிப்பு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்றாலும் நான் முதல் வகுப்பில் தொடர வேண்டியிருந்தது - இல்லையென்றால் ஸ்காலர்ஷிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம். கணினியறையின் குளுகுளு பிடித்திருந்தது. தொடர்ந்து முதல் வகுப்பில் வந்ததால் நிறைய அமெரிக்க அறிமுகங்கள் கிடைத்தன. அடுத்த ஒரு வருடத்தில் சிபிஐ என்று இக்கட்டாகி கலாசாலை சீக்கிரமே காலிசாலையானது. மறுபடி ஐஐஎம் எழுதத் தீர்மானித்தேன்.

கணினிப் படிப்பு நின்றாலும், என் அமெரிக்க வாழ்வு அங்கே விதைக்கப்பட்டது என்பதும் விதைத்தவர் அந்த மதுரைப் பெண் என்பதும் என் வாழ்நாளின் கடைசி நொடி வரை மறக்க முடியாது. கணினியுகத்தில் என்றைக்காவது அவரை சந்திக்க முடியாமலா போய்விடும்?

தொடர, Expatguruவை அழைக்கிறேன்.

27 கருத்துகள்:

  1. தென்னை மரக் கதை அதிகம் பிடித்திருந்தது
    பசுமாட்டுக் கதையை விட...

    பதிலளிநீக்கு
  2. மதுரைப் பெண்ணை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பீர்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. ரமணி ஸார்... துணைக்கதைகள்தான் நிறைய சுவாரஸ்யம் கொடுக்கும்!

    பதிலளிநீக்கு
  4. //என் பம்மல் முகவரியை எழுதிக் கொடுக்க முன்வந்தேன். ஏன் அப்படித் தோன்றியதோ தெரியவில்லை, தெருப்பெயரை மாற்றி எழுதிக் கொடுத்தேன். இன்றைக்கும் லேசாக உறுத்துகிறது. //

    கடந்த கால நினைவுகள் சில உறுத்துகின்றன.
    உண்மை தான். எனினும்
    சில நினைவுகள் மட்டும்
    உறக்கம் கொள்ள அனுமதி தர
    மறுக்கின்றன !!!

    சுப்பு தாத்தா.

    பி.கு. : எப்பொழுது இந்தியா வருவீர்கள் ?

    பதிலளிநீக்கு
  5. அப்பாதுரையின் அருமையான மலரும் நினைவுகளில் ரசனையானது, ரசனையற்றது என எதுவுமே இல்லை. எழுத்துக்கு எழுத்து ரசனை. சரளம். வெகு சாதாரணமாக, சகஜமாகச் சொல்லிக் கொண்டு போயிருக்கிறார். எல்லாம் நேருக்கு நேரே பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான எழுத்தோட்டம். சுவையான நினைவுகள். தாங்கள் ஒரு கணினி விற்பன்னர் என்பதை இன்றுதான் அறிந்தேன். ஆரம்பத்தில் நசிகேத வெண்பா மட்டுமே படித்து வந்தேன்.
    மைக்கேலின் கதை படித்து அதிர்ந்தேன்.
    2009 இல்தான் எனக்கு இணையம் வீட்டில் அறிமுகம். நீங்கள் சொல்லிய வழிமுறைகள் பயனுள்ளவை.
    மூன்றாம் சுழியின் பிற பதிவுகளையும் படிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. இன்னைக்கு வார முதல் நாள்... ஒழுங்கா ஆபிசுக்கு போய் வேலை செய்யனும்.. தப்பித்தவறிக்கூட வலைப்பூ பக்கமோ முகநூல் பக்கமோ போயிரவேக்கூடாது மஞ்சு... அப்புறம் உன்னை அங்கிருந்து இழுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்... அப்டின்னு மண்டையில காலங்கார்த்தால அலாரம் வைக்கிறதுக்கு முன்னாடியே முழிப்பு வந்து இதை கரெக்டா யோசித்து குளிச்சு ஸ்வாமி கும்பிட்டு ஸ்லோகம் சொல்லிட்டு சமைச்சு எல்லாருக்கும் டிபன் லஞ்ச் பேக் பண்ணிட்டு ஆபிசு வந்தேனா??

    வந்துட்டு ஒழுங்கா ஆபிசுல வேலைய தானே ஆரம்பிச்சிருக்கணும் நானு?

    ஜீ மெயில் செக் செய்றேன் பேர்வழின்னு அப்டியே ப்ளாக்கர் பக்கம் வரனுமா நானு?

    அப்டியே வந்தேன் சரி எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்துட்டு கம்முனு வேலைய ஆரம்பிச்சிரக்கலாமோன்னோ?

    விட்டதா நமக்கு ஆசை?

    மூன்றாம் சுழில நம்ம அப்பாதுரை என்னவோ கணிணிப்பத்தி எழுதி இருக்காரேன்னு க்ளிக் பண்ணினது தான் ஸ்வாமி நான் செய்தது :)

    ஒரு செகண்ட் இது எழுதினது நானா அப்பாதுரையான்னு முதல்ல எனக்கு ஒரே டவுட் :-p

    ஏன்னு யாராச்சும் கேளுங்கப்பா...

    ம்ம் அது....

    எப்பப்பார்த்தாலும் இந்த மஞ்சு வளவளன்னு பேசிண்டிருப்போ அப்டின்னு சொன்ன அப்பாதுரை..

    ஆனா அப்பாதுரை மாதிரி விஷயஞானத்தோடு பேசமாட்டேன் அது வேற விஷயம்.. எல்லாம் வெட்டிப்பேச்சு தான் என்னோடது..

    சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குன்றாமல்....

    இருங்க சொல்லி முடிக்கல அப்பாதுரை அப்டியே உட்கார்ந்து ஒழுங்கா முழுக்க படிச்சுட்டு தான் நகரனும்..

    எவ்ளோ கலாட்டா எவ்ளோ கலாட்டா.. அப்பப்பா... முடியல...

    படிக்கிறவங்களை ரசனை மாறாம அப்டியே கடைசி வரி வரை விடாம விடாப்பிடியா இழுத்து உட்காரவைக்கும் யுக்தி அருமையா அட்டகாசமா இருந்திச்சு அப்பாதுரை.. இருங்க முடிக்கல.. இதுல இன்னும் அதிகம் எழுதினா அப்புறம் ஒத்துக்கமாட்டேன்னு கத்தும் இருங்க அடுத்த பத்திக்கு வரேன்...

    பதிலளிநீக்கு
  8. படபடபபடன்னு பட்டாசு பொரியிற மாதிரி ஆரம்பிச்சு... விடுவிடுவிடுன்னு இப்படியா எழுதுவீங்க.. ரசித்து வாசித்தேன் அப்பாதுரை...

    அதிலும் நையாண்டி குறும்பும் குசும்பும் ஏற்கனவே அதிகமாச்சே உங்களுக்கு..

    நேர்ல பார்த்தா சத்தியமா யாருமே நம்பவே மாட்டாங்க.. எழுத்தில் இவ்ளோ கலாட்டா செய்யும் இந்த அப்பாதுரை அப்டியே பச்சைப்பிள்ளை போல ஒரு முகபாவம் தான்...

    அதுமட்டுமா? எத்தனை அமைதி எத்தனை அமைதி... முடியாம தானே நானே ஆரம்பிச்சேன் பேச :)

    கதைகள் எல்லாம் சொல்லிட்டு வராரே.. என்னா செக் வைக்கிறார்னு பார்ப்போம்னு பார்த்தா.. அம்மாவையும் விட்டு வைக்கலையா ஸ்வாமி? :) அம்மா கர்ப்பரட்சே அபிராமி இந்தப்பிள்ளையை காப்பாத்துப்பா.... அட்டகாசம் அட்டகாசம்.. வரிக்கு வரி வரிக்கு வரி.. அப்டியே டைப் செய்ய செய்ய செம்ம ஃப்ளோ மனசுல இருப்பதை எல்லாம் மலரும் நினைவுகள் போல அத்தனை அசத்தலா அட்சரம் பிசகாம அற்புதமான டிகாஷன் காபி அதான்பா அந்த மதுரை பெண் கொடுத்தது இன்னமும் நெஞ்சில் அந்த ருசி தங்கி இருக்குன்னா அப்ப அந்த நன்றியை நீங்க மறக்கவே இல்லை என்பது மட்டுமில்ல.. இனி காலமெல்லாம் கூட மறக்கமாட்டீங்க என்பதையும் உணர்த்திற்று... ஸ்ஸ்ஸப்ப்பா.... இன்னும் முடியல அப்பாதுரை.. அமைதியா சமர்த்தா எப்படி உட்கார்ந்திருந்தீங்களோ அப்டியே உட்காருங்க பொறுமையா.. விட்றதா இல்ல :)

    பதிலளிநீக்கு
  9. வேலை, படிப்பு, காதல் எதுவுமே கைக்கெட்டாத நிலையில்...

    பொலிடிஷியனா சரி ஒரு எம்பி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... ஆஹ் நீங்க ஒருவேளை அரசியல்வாதியா வந்திருந்தா.. நாடு கண்டிப்பா சுபிஷமா தான் இருந்திருக்கும்னு தோணுதுப்பா.. ஏன்னா நன்றி மறவாமல் இருப்பதை வெச்சு சொல்றேன்பா...

    உண்மையே கணிணி இருப்பதால் எல்லா இடத்திலும் நம்மால் எளிதாய் உடனுக்குடன் பேசவோ கம்யூனிக்கேட் செய்யவோ முடிகிறது.. பார்க்கவும் முடிகிறது....

    மதுரைப்பெண் உங்களுக்கு வேலையை விட்டுக்கொடுத்ததுப்பற்றி இத்தனை ஆழ்ந்து சொல்லி இருப்பதை படிச்சதுமே கண்டிப்பா மனம் நெகிழ்ந்ததுப்பா அப்பாதுரை...

    மே பி அந்தப்பெண் இதை படித்துக்கொண்டோ அல்லது யார் மூலமாவது அறியக்கூட செய்யலாம்...

    எப்படியோ அம்மா வணங்கும் அபிராமியே இந்தப்பெண் மூலமா உங்களுக்கு லைஃப் கொடுத்திருக்காங்கன்னு தோணுது...

    கார் லைசன்ஸ் முதல் கொண்டு விசா பாஸ்போர்ட் எல்லாம் கிடைச்சும் போகலன்னா கண்டிப்பா விதி உங்களை இங்க முடிந்து வைத்திருக்கிறதுன்னு மட்டும் தெரியறதுப்பா...

    மதுரைப்பெண்ணோட அப்பா அத்தனை திட்டியும்... நீங்க கொஞ்சம் கூட பொறுமை விலகாம.. அமைதியா அந்தப்பெண்ணுக்கு சப்போர்ட் செய்து அதில் இருக்கும் நல்லவைகளை எடுத்துச்சொல்லியும்....

    போகட்டும்.. அந்தக்காலத்தில் மட்டுமல்ல இப்பவும் சில இடங்களில் பெண்களை எங்கும் வெளியே அனுப்பாம இருக்காங்க....காலம் மாறித்தான் போய்விட்டது.. ஆனா சில இடங்களில் மட்டும் இந்த கட்டுப்பட்டித்தனம் தொடர்ந்துக்கொண்டே....

    கணிணிப்பத்தி மட்டும் தெரிஞ்சுக்க வந்த எங்களுக்கு முழுக்க முழுக்க சுவாரஸ்யம் நிறைந்த ஒரு மலரும் நினைவுகள் பக்கம் படித்தது போல முழு திருப்திப்பா அப்பாதுரை..

    என்ன இன்னும் உட்கார்ந்திட்டு இருக்கீங்கப்பா?

    ம்ம்ம்ம்ம் எழுதி முடிச்சிட்டேன் :)

    சரி சரி திட்டாதீங்க.. மஞ்சு வளவளன்னு பேச ஆரம்பிச்சாலும் சரி எழுத ஆரம்பிச்சாலும் சரி இப்படித்தான்.. என் உடம்பிலும் மனசுலயும் சக்தி இருக்கும்வரைக்கும் தான்பா தொடரும் என் வாயாடித்தனமும் எழுத்தும் :)

    வலைப்பூவுக்கு திரும்ப எழுத வந்தும் இன்னும் நிறையப்பேருடைய வலைப்பூவுக்கு செல்ல இயலவில்லை.. உங்க வலைக்கு வந்தும் இப்பத்தான் எழுதவே முடிந்தது...

    அம்மா தாயே ஆளை விடுன்னு நீங்க கத்துறது புரியுதுப்பா... சரி சரி :) ஓகே நிறுத்தியாச்சு...

    ரசித்து வாசித்தேன்பா அப்பாதுரை.... தொடருங்கள் உங்கள் சுவாரஸ்யத்துடன் ரசனையுடன் எழுத்துகளை.... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
  10. முன்பாதியை விட பின்பாதி சுவாரஸ்யம். அதாவது 'கொஞ்சம் இந்தப்பக்கம் வந்தாலு'க்கு அப்புறம்.. அதற்கு அப்புறம் தானே உள்ளம் கொள்ளை கொண்ட அந்தக் 'கணினி கதை' வருகிறது! அதுவும்,அந்த 'பெண்ணின் அப்பா வரவேற்றார்'-க்கு அப்புறம், சும்மா சொல்லப்படாது, யதார்த்த நேர்த்தி கொஞ்சுகிறது.. 'இன்றைக்கும் லேசா உறுத்துகிறது' வரை கவிதை! கவிதைக்கு பொய் அழகு தான்; இருந்தாலும் இதையும் சொன்னா, அந்த ரேழிப் பிரயோகம் இன்னும் களைகட்டும்!

    //அருகே இருந்த அறையில் (ரேழி?) நிழலாடுவதை உணர்ந்தேன்.//

    அதில்லை, ரேழி.. உட்கார்ந்திருந்த இடம் தான் சுவாமி, ரேழி!

    பதிலளிநீக்கு

  11. பசுமாட்டுக் கதையைத் தேடினேன். கிடைக்க வில்லையே .சரியாகத் தேடவில்லையோ, இல்லை புரிந்துகொள்ள முடியவில்லையோ. ? இருந்தால் என்ன... நான் ஒரு பசுமாட்டுகதையை என் பதிவொன்றில் எழுதி இருந்தேன். சுட்டி தருகிறேன். படித்துப் பயன் பெறுங்கள்.
    gmbat1649.blogspot.in/2010/12/blog-post_24.html அறிந்த அளவு.

    பதிலளிநீக்கு
  12. கணனி நல்லதா கேட்டதா? நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

    //நேர்ல பார்த்தா சத்தியமா யாருமே நம்பவே மாட்டாங்க.. எழுத்தில் இவ்ளோ கலாட்டா செய்யும் இந்த அப்பாதுரை அப்டியே பச்சைப்பிள்ளை போல ஒரு முகபாவம் தான்...

    அதுமட்டுமா? எத்தனை அமைதி எத்தனை அமைதி... முடியாம தானே நானே ஆரம்பிச்சேன் பேச :)//
    மஞ்சுவின் காமெண்ட்டை ரசித்தேன்.

    எல்லோருமே உங்களைப் பற்றி இப்படித்தான் சொல்வார்களோ?

    கணனி அனுபவத்திலும் கொஞ்சம் யஜுர் வேதம், கொஞ்சம் காதல், கொஞ்சம் திகில், என்று கலந்து கட்டி எழுதியிருக்கிறீர்கள்.

    சுவாரஸ்யம்!


    பதிலளிநீக்கு
  13. அருமை, அப்பாதுரை. ஆரம்ப நாட்களின் வலிகளும் போராட்டங்களும் என்றுமே மறக்க முடியாதவை அல்லவா?

    அது இருக்கட்டும், போகிற போக்கில் என் பெயரை போட்டு 'தொடரும்' என்று மாட்டி விட்டீர்களே ஸ்வாமி!

    ச‌ரி, என் சோக‌ க‌தையை ப‌டித்து தொலைக்க‌ வேண்டும் என்ப‌து மூன்றாம் சுழி வாச‌க‌ர்க‌ளின் த‌லை எழுத்து என்றால் அதை மாற்ற‌ யாரால் முடியும்?

    http://madrasthamizhan.blogspot.com/2008/08/1_19.html - இது ப‌குதி-1

    http://madrasthamizhan.blogspot.com/2008/08/2.html - இது ப‌குதி - 2

    அடுத்து யாரை மாட்டி விடுவ‌து என்று யோசித்து கொண்டிருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  14. அதென்னமோ தெரியவில்லை அப்பாதுரை - உங்கள் அநுபவங்கள் எல்லாம் கதை போலவும், கதைகள் எல்லாம் அநுபவங்கள் போலவும் உருக் கொள்கின்றன.

    சென்னையிலிருந்து மதுரைக்கு 80களின் மரஞ்சூழ்ந்த விரியாத சாலையில் யெஸ்தி பயணம் ஒரு கவிதை.

    ”பாவங்களை நம்மை! குழந்தைகள் பூச்சிகள் மரபு! மந்த! நீங்கள் வெளிப்படுத்துவேன்!” என்கிறது போர்ச்சுகீச உபநிஷத். அந்த ஊர் கருடபுராணமாயிருக்கலாம். பயந்துபோய் ஓடி வந்துவிட்டேன்.

    தவறான தெருவின் பெயரைக் கொடுத்துவிட்டு, சரியான முகவரிக்காய்க் காத்திருப்பதுதான் இந்தப் பதிவின் உட்குரலாய் என் காதுகளில் ஒலிக்கிறது.

    வலியுறுத்திய மூன்று முறை ஏசியின் குளுமை போல் சுகமான இடுகை.

    பதிலளிநீக்கு
  15. அப்பாடி!!!ஒரு முழு நாவல் படித்த திருப்தி. வெகு சுவாரஸ்யம்.
    என்னவெல்லாம் திருப்பம். எப்படியெல்லாம் பந்தாடப் பட்டிருக்கிறீர்கள்.
    துரை மிகப் பெருமையாக இருக்கிற்து. இவ்வளவு நல்ல திறமைசாலி கணினித் துறைக்குக் கிடைத்தது எங்களுக்குதான் அதிர்ஷ்டம்.ரேழின்னால் வராந்தா. அதுபக்கத்தில இருக்கிறது காமிரா உள்:)

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லாஆகஸ்ட் 18, 2013

    Was that 'The Computer Gurukulam'?

    பதிலளிநீக்கு
  17. செக்கச் செவேல், மஞ்ச மஞ்சேல், கன்னங் கரேல்,வெள்ள வெளேர் உண்டு.

    வெளேர்லேர்ந்து மளேர் பிறந்து புதுப் ப்ரயோகமாகிறது.

    பதிலளிநீக்கு
  18. என் அமெரிக்க வாழ்வு அங்கே விதைக்கப்பட்டது என்பதும் விதைத்தவர் அந்த மதுரைப் பெண் என்பதும் என் வாழ்நாளின் கடைசி நொடி வரை மறக்க முடியாது. கணினியுகத்தில் என்றைக்காவது அவரை சந்திக்க முடியாமலா போய்விடும்? //
    நெஞ்சம் மறப்பதில்லை உண்மைதான்.
    நிலையான வாழ்வை தந்தவர் அல்லவா!
    எங்கிருந்தாலும் வாழ்க மதுரை பெண்.
    அந்த பெண்ணின் அப்பா போல இல்லாமல் பரந்த மனபான்மை உள்ள அந்த பெண்ணின் திறமைகளை கொண்டாடும் கணவன் கிடைத்து மகிழ்ச்சியாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி. அவள் தகப்பானரையும் குறை சொல்ல முடியாது அவர் காலம் வேறு.

    அருமையான பதிவு ஆரம்பம் முதல் நிறைவு வரை. புத்தகத்தை கீழே வைக்காமல் படிக்கும் விறு விறுப்பான நாவல் போல.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பதிவு ஆரம்பம் முதல் நிறைவு வரை. புத்தகத்தை கீழே வைக்காமல் படிக்கும் விறு விறுப்பான நாவல் போல இருந்தது இங்கள் கணினி அனுபவம்.
    அன்பு, கருணை, காதல், சோகம், நன்றி அறிதல், எல்லாம் கலந்த கதை போல அருமை.

    பதிலளிநீக்கு
  20. கடந்த கால நினைவுகள் வசந்த கால நீரலையாய்....
    அருமை.

    பதிலளிநீக்கு
  21. மொத்தத்தில் அந்த மதுரைப் பெண் தான் அப்பாதுரையை எங்களுக்கு அறிமுகப் படுத்தியவர். எங்கள் சார்பிலும் அவருக்கு ஒரு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. சில சமயங்களில் புத்தகம் படிப்பதற்கு முன் அல்லது படம் பார்ப்பதற்கு முன் விமர்சனம் படிப்பது போல, இந்த முறை ஏனோ முதலில் பின்னூட்டங்களைத்தான் படித்தேன்... :) பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  23. Not only the Madurai girl even the decoction coffee is still hovering in your mind sorry in your throat. Good way of writing your experience. Nowhere I felt boring to discontinue and I do not know what made me to read the entire post at one go. I think this is the secret of your writing. Very nice. Would like to talk to you over phone / mobile when you are in India please.

    பதிலளிநீக்கு
  24. ஆரம்பிச்சதுதான் தெரியும்... விறுவிறுப்புக் குறையாத இயல்பான எழுத்து.

    //அதென்னமோ தெரியவில்லை அப்பாதுரை - உங்கள் அநுபவங்கள் எல்லாம் கதை போலவும், கதைகள் எல்லாம் அநுபவங்கள் போலவும் உருக் கொள்கின்றன.//

    சுந்தர்ஜி சொன்னதை ரசித்தேன் :)

    //எப்படியோ அம்மா வணங்கும் அபிராமியே இந்தப்பெண் மூலமா உங்களுக்கு லைஃப் கொடுத்திருக்காங்கன்னு தோணுது...//

    ரிப்பீட்டு!

    மதுரைப் பெண்ணுக்கு நன்றி... நன்றி!

    பதிலளிநீக்கு
  25. பின்னூட்டங்களுக்கு மிக நன்றி.

    மஞ்சுபாஷிணி: அடடே.. எங்கே காணோமேனு பார்த்தேன். அடிக்கடி வந்து நாலு பக்கம் பின்னூட்டம் எளுதிட்டுப் போங்க.. (உங்க ஆபீஸ் மேனேஜர் இமெயில் கொஞ்சம் அனுப்புங்க.. என்னா? நீங்க தான் டேமேஜரா.. அப்ப இன்னும் ரெண்டு பக்கம் எழுதுங்க பரவாயில்லை)

    expatguru: நைசா கழண்டுக்க பாக்கறீங்களே? தொடர் பதிவுல உங்க முதல் கணினி அனுபவத்தைப் பத்தி எழுதணும். இல்லே என்னை மாதிரி பசுமாட்டுக் கதையும் எழுதலாம். ஆனா புச்சா பதிக்கணும் பாபு.

    சுந்தர்ஜி: போர்ச்சுகீசிய உபநிஷது - பதினாறடி பாஞ்சுட்டீங்க போங்க. அர்த்தமும் ஏறக்குறைய சரி. அதனால் தான் இது தலையை சுத்தி மூக்கை தொடுற hate messageஓனு தோணுது. வேறே காலமாயிருந்தா கடவுள் என் பக்கம்ன்னு சொல்லியிருப்பேன். என்ன செய்ய! மளேர் - ஏதோ என்னாலான தமிழ்த்தொண்டு :)

    ஜீவி, வல்லிசிம்ஹன்: ரேழிக்கு நன்றி.

    mohan: கண்டிப்பா பேசலாம். i would be delighted. இந்தியா வந்தாத்தான் பேசணும்னு இல்லே.. உங்க தொடர்பு விவரங்களை msuzhi@ymail.comக்கு நேரம் கிடைக்குறப்ப அனுப்புங்களேன் please?



    பதிலளிநீக்கு
  26. " ஏன் அப்படித் தோன்றியதோ தெரியவில்லை, தெருப்பெயரை மாற்றி எழுதிக் கொடுத்தேன். இன்றைக்கும் லேசாக உறுத்துகிறது."-- LOL!

    பதிலளிநீக்கு
  27. அடேங்கப்பா....!!!

    எனது கணினி பற்றிய அனுபவத்தை டிராப்டில் போட்டுட்டேன்.:)

    அதற்கான உங்க பின்னூட்ட வஞ்சப் புகழ் இப்போது என்னை அதிகம் நெளிய வைப்பதால்.

    உங்களுக்கெல்லாம் பின்னூட்டமிடும் தகுதி கூட இனி எனக்கில்லை.

    பதிலளிநீக்கு