2013/08/09

மெல்லிசை நினைவுகள்



    டனடியாகப் பதிவு எழுதவில்லையெனில் blogஐ bulletin boarடாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது.

மெல்லிசை நினைவுகள் தலைப்பில் பதிவெழுதி நாளானதை நினைவூட்டியப் பெருந்தகைகளைப் பதிவின் முடிவில் கவனிக்கிறேன். பதிவெழுத நினைத்திருந்த எனக்கு சமீப நிகழ்வுகளும் வசதியாக அமைந்தது என்பேன்.

சமீப வாரங்களின் சிக்கல்களினால் பதிவெழுத முடியாமல் போனது. சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள். அது போதாதென்று கண்பிடுங்கி நீலன் கதையின் அடுத்தப் பகுதிகளைப் படித்து நானே திகிலடைந்ததும் ஒரு காரணம்.

திரிந்தும் உடைந்தும் அடைந்தும் கிடந்த நாட்களில் மெல்லிசையும் புத்தகமும் கதியெனக் கிடந்தேன். வீண் அலைச்சலின் இடையே கண்காணாத ஏர்போர்ட் லவுஞ்சில் நான் சற்றும் எதிர்பாரா விதமாகச் சந்தித்த இரண்டு இசைப் பிரபலங்களுடன் சில நிமிடங்கள் பேசக் கிடைத்த வாய்ப்பு, அசதி போக்கும் சந்தன வாடை மயிலிறகாக அமைந்தது. எஸ்பிபியை அடையாளம் தெரிந்தது. வாணியை அடையாளம் தெரியவில்லை. பிறகு ப்ளேன் பக்கத்து இருக்கைப் பயணி தொடர்ந்து சொன்ன ஜோக்குகளும் குட்டிக்கதைகளும் ஆலையற்ற ஊரின் இலுப்பைப்பூவாயின. எழுதி வைத்துக் கொள்ளாமல் போனேனே..! ஜோக்குகளை நினைவில் வைத்துக் கொண்டு வரிசையாகச் சொல்வது ஒரு கலை. நானறியாத கலை.

கோபமும் ஆத்திரமும் தவறு என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் சொல்லும் நான், அநியாயத்துக்குக் கோபம் கொண்டு வாயில் வந்தபடி காய் கவர்ந்ததை எண்ணிக் குறுகிப் போய் வருந்திய சமீபத் தருணங்களில், மெல்லிசை எனக்குத் திரையானது. என் நண்பர் அரசனிடம் ஒரு வழக்கம் இருந்தது. தன் மீது காறித் துப்பியவர்களிடம் கூட கோபம் காட்ட மாட்டார். நான் சாதாரணத்திலும் சாதாரணம். கோபம் எனக்குத் தூண்டில் புழு போல. சட்டென்று கவ்விச் சிக்கிக் கொண்டு திண்டாடுவேன். பிறகு புத்தகம் இசை என்று காணாமல் போய்விடுவேன். அரசனுக்கும் மெல்லிசை பிடிக்கும். தூத்துக்குடி வானொலி நிலைய நண்பரிடம், இரவின் அமைதியில் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பச் சொல்லிக் கேட்பார். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்டப் பாடல் இது.
சித்திரப் பூச்சேலை


அம்ருத்சரில் வந்திறங்கிய கமல், உள்ளூர் பாஷை தெரியாமல் விழித்தபடி அங்குமிங்கும் பார்த்தார். எதிரே தென்பட்ட சர்தார்ஜியை நெருங்கி, "தமிழ் தெரியுமா?" என்றார்.
"சாலா, ஹிந்தி தேரா பாப்!" என்றார் சர்தார்ஜி கோபத்துடன்.


தமிழ் டிவிகளில் ஏமாந்தால் சூபர் சிங்கர் ஜூனியர் சிங்கர் சீனியர் சிங்கர் ஹாரிபில் சிங்கர்.. என்று கூத்தாக இருக்கிறது. அதை விட்டால் நீயா நானா என்று கற்பனை வற்றிய விவாத நிகழ்ச்சி ஒன்று. எரிச்சலாக வந்தது. வருடா வருடம் தமிழ் டிவி வரண்டு வருவதாகத் தோன்றுகிறது. (ஏதோ ஒரு நிமிடம் புலம்பிவிட்டுப் போகிறேன், விடுங்கள். என்னால் வேறென்ன செய்ய முடியும்?)

சரோஜாதேவியுடன் மலரும் நினைவுகள் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது. எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி தேவிகா பத்மினி பானுமதி பற்றிப் பேசினார். முத்துராமன் பற்றி மூச். இணைந்து நடிக்கவில்லையோ? இடையிடையே பாடல் அல்லது படக்காட்சி ஒளிபரப்பினார்கள். 'போர்க்களமானேன் ஐயோ அம்மா நாதியில்லையே' என்று கண்ணீரும் கம்பலையுமாக ஒரு சோகப் பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் எழுந்து சாப்பிடப்போனவனுக்கு அதிர்ச்சி. கம்பலை என்றால் என்னவென்றே தெரியாமல் அந்தச் சொல்லை உபயோகித்து வருகிறேன் என்பதல்ல அதிர்ச்சியின் காரணம். சோகப்பாட்டைத் தொடர்ந்த சுகப்பாட்டே அந்த அதிர்ச்சி. சோகத்தின் part2 அந்தப் பாடல் என்பதை இன்றுவரை அறியாதிருந்தேன். பாடலைப் பிறகு கேட்போம். "இன்றைய நடிகைகளில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?" என்று சரோஜாதேவியிடம் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார் பேட்டியாளர். சரோஜாதேவியின் பதிலை ரசித்தேன். "இப்போ நடிக்கிறவங்க எல்லார் குரலும் ஒரே மாதிரி இருக்குது..".

தொடர்ந்த சூபர் சிங்கர் அறுவையில், சுசீலாவின் பழைய பாடலைப் பாடிய பெண் தமிழை வதைத்துத் தொலைத்தார். தமிழின் சிதைவை மறந்து, குரலை மட்டும் கவனிக்கலாம் என்றால் முடியவில்லை. அசல் பாடலிலும் தத்தித்ததா தித்தித்ததா பொட்டிட்டதா பட்டிட்டதா என்று சுசீலா ஏதேதோ பாடுவார். சிறுவயதில் பாடல் புரியவில்லை. பின்னாளில் ஹெட்செட் அணிந்துக் கேட்டும் புரியவில்லை. எனினும், அது தமிழ் என்பது தெளிவாகத் தெரிந்தது. தேன் குரலில் சுசீலா கொஞ்சியதும் நிறையவே பிடித்தது.

சூபர் சிங்கர் அறுவையில் பாடியவரின் குரலைக் கேட்டதும்... இனி பாடகர்களைக் குரல் வளத்துக்காக மட்டும், பாடுவது தமிழா இல்லையா என்று சந்தேகப்படாமல், கேட்டுப் பழக வேண்டியது தானோ என்று தோன்றியது.
தத்தை நெஞ்சம் முத்தத்திலே

மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிய கமல் பக்கத்து வீட்டுக்காரரிடம், "ஒரு வாரம் என் வைப் ஊருக்குப் போயிருக்கா. தனியா படுக்க பயமாயிருக்கு, என் கூட துணைக்குப் படுத்துக்க முடியுமா?" என்று கேட்டார்.
"என்ன கமல் இது.. உனக்கும் உன் பெண்டாட்டிக்கும் இதே பழக்கமா போயிடுச்சே?" என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.


சூபர் சிங்கர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அந்த நாளிலும் இது போன்ற போட்டிகள் சென்னையின் காஞ்சி, கனிமரா போன்ற ஹோடல்களில் நடந்தன. சினிமாவில் பாட ஆசைப்பட்டு நிறைய இளைஞர்கள் வந்து பாடுவார்கள். என் நெருங்கிய சினேகிதி ஒருத்தி 'சினிமாவில் பாடியே தீருவேன்' என்று அடம்பிடித்து வீட்டுக்குத் தெரியாமல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்று பாடுவாள். என்னைத் துணைக்கு இழுத்துக் கொண்டு போவாள். சனி ஞாயிறுகளில் சாப்பிட்டு தொண்டனுக்கும் உண்டென்று மயங்கிக் கிடக்கையில் என் தங்கை அவசரக் குரல் கொடுப்பாள்.. "துரை, உன் ப்ரெண்டு அனுராதா வராடா..". அலறி எழுந்து பின்கட்டு வழியாகத் தப்பிக்கப் பார்த்தால் கிணற்றடியில் நின்றபடி சிரிப்பாள் கிராதகி. "சாயந்திரம் சுஜாதா மூவிஸ்ல எம்எஸ்வி ட்ரூப் கோரஸ் வாய்ஸ் டெஸ்ட்ரா.. துணைக்கு வாடா ப்லீஸ்?".

சரியாக நினைவில்லை. எம்எஸ்வி இசையில் ஏதோ ஒரு பாடல் பாடினாள் என்று நினைக்கிறேன். பிறகு சங்கர் கணேஷ் இசையில் லாலாலா என்றுப் பின்னணி கும்பலோடு கோவிந்தா போட்டாளே தவிர, கல்லூரிப் படிப்பு முடியும் வரை அனுராதாவுக்கு எந்த சான்சும் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அவள் வாய்ப்பு தேடவில்லை. கடைசி வருடப் படிப்பு முடிந்ததும் முஸ்லிம் பையனைக் காதல் திருமணம் செய்து, சில வருடங்கள் தலைமறைவானாள். அவள் மகன், போன வருட சூபர் சிங்கர் கடைசி சுற்றுகளில் எஸ்பிபி பாடல்களைப் பாடினானாம். ஹேரிஸ் ஜெயராம் (?) குழுவில் இப்போது வாத்தியங்கள் வாசிக்கிறான், பாடுகிறான். எல்லாம் சுபம். அனுராதா அடிக்கடி முணுமுணுத்த பாடல் போல் இப்போது பாடல்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன் (காட்சி அமைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை).
துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு


ஹோட்டல் பாருக்குள் நுழைந்த ஒருவன் பக்கத்தில் இருந்தவனிடம், "ஒரு கமல் ஜோக் சொல்றேன் கேக்குறியா?" என்றான். பக்கத்தில் இருந்தவன் முறைத்தான்: "இதப்பாரு நான் கமல் மன்ற ட்ரஸ்டி. இதோ பார்டெண்டர் இருக்கானே பாடிபில்டர்.. இவன் கமல் மன்றச் செயலாளர். அதோ உக்காந்திருக்காரே மொட்டைத்தலை பார் முதலாளி.. அவரு கமல் மன்றத் தலைவர்.. இதுக்கு மேலயும் கமல் ஜோக் சொல்ல விருப்பமா?"
சொல்ல வந்தவன் தயங்கி, "வேணாம். தனித்தனியா அத்தனை தடவை சொல்லிப் புரியவைக்க முடியாது" என்றான்.


எஸ்பிபி என்றதும் நினைவுக்கு வருபவன், என் பம்மல் வட்ட நண்பன் சாம்பா. எஸ்பிபியை விட எஸ்பிபி போலப் பாடுவான். மவுத் ஆர்கன் வாசிப்பான். முழுப்பாடல்களை மூச்சுவிடாமல் விசிலடிப்பான். தொலைத்த நட்புகளில் மிகவும் தேடுகிற நட்பு. சென்னையில் சொந்தமாக இசைக்குழு வைத்திருக்கிறான், பாடுகிறான் என்கிறார்கள். அடுத்தப் பயணத்தில் இவனைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். அன்புக்கரசன் கிடார், ஜேம்ஸ் டிரம்ஸ், நானும் சாம்பாவும் பாட்டு. கோடை இரவுகளில் அன்புக்கரசன் வீட்டு மொட்டை மாடியில் மணிக்கணக்காகப் பாடியிருக்கிறோம். 'கிறோம்' என்று சந்தடி சாக்கில் சேர்ந்து கொள்கிறேனே தவிர, உண்மையில் சாம்பா பாடுவான். நான் ஹம் செய்வேன். 'சாமரம் போடுவேன்' என்று கா நே சச்சு சொல்வது போல.
காதல் கதை சொல்வேனோ


"அம்மா.. நாளைக்கு எங்க ஸ்கூல் பார்ட்டிக்கு எல்லாரும் சிவப்பு சட்டை போட்டுகிட்டு வரணும்னு டீச்சர் சொன்னாங்க.." என்று சிறுவன் கமல் சொன்னதும் அது போலவே சிவப்புச் சட்டை போட்டனுப்பினார் அம்மா.
மறுநாள் சீக்கிரமே திரும்பி வந்த கமல் அழுதுகொண்டே, "போம்மா.. நான் இனிமே ஸ்கூல் பார்ட்டிக்கு போகமாட்டேன்" என்றதும், "ஏன்?" என்றார் அம்மா.
"பின்ன என்னம்மா..?" என்றான் கமல். "சிவப்பு சட்டைல வரணும்னு எல்லார் கிட்டயும் சொன்னாங்கல்ல?.. கூடவே ஜட்டியும் ட்ராயரும் போட்டுகிட்டு வரணும்னு எங்கிட்ட மட்டும் சொல்லவேயில்லம்மா.."


டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் (சரியா?) ஒரு பிரபல பாடலை அறிமுகப்படுத்துகையில் "இசையமைத்த எம்எஸ்வியைத் தவிர இந்தப் பாடலில் சம்பந்தப்பட்ட எவருமே உயிரோடு இல்லை" என்றார். எம்எஸ்வி உயிரோடிருப்பதற்காக வருத்தப்படுகிறாரா? இருக்காது என்று சமாதானமாகி, வாலி டிஎம்எஸ்சை மனதில் வைத்துச் சொல்லியிருப்பார் என்று நினைத்தால் சுசீலாவை மறந்துவிட்டாரே?. பாடலில் சம்பந்தப்பட்ட பெண் குரலான சுசீலா இருப்பது தெரியாதா? இல்லை பெண் என்று இளப்பமா? சோமாறி டாய்! அவர் குறிப்பிட்ட பாடல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதற்குப் பதில் வேறு பாடலை இணைக்கிறேன்.

வெங்கட்ராமன் என் கல்லூரி கால நெருங்கிய நண்பன். எனக்கும் அவனுக்கும் இரண்டு பெரிய ஒற்றுமைகள் உண்டு. முதலாவது, எங்கள் அப்பாக்கள் மகா உதவாக்கரைகள். இரண்டாவது, எங்களுக்கு டிஎம்எஸ்-சுசீலா என்றால் உயிர். எங்களைச் சுற்றிய ஒரு சுவாரசியமான கதைக்கு இப்போது நேரமில்லை. இந்தப்பாடல் அவனுக்காக. எஞ்சாய் வெங்கட்ராமா!
இதயத்திலிருந்து இதழ்கள் வரை


கிராமத் திருவிழாவில் தங்கள் மனைவிகளைத் தொலைத்துத் தேடிக்கொண்டிருந்த முன்சீபும் கமலும் சந்தித்தார்கள். முன்சீபுக்கு ஆதரவாக, "உங்க பெண்டாட்டி எப்படி இருப்பாங்க?" என்றார் கமல்.
"ராக்கி நல்ல உசரமுங்க.. பச்சைல முழங்கால் உசரத்துக்கு சீலை.. எப்பவும் ரவிக்கை போடமாட்டா.. உதடு ரெண்டும் பளுத்த கோவப்பழம்.. வாளிப்பா கட்டையா இருப்பா.. ஆமா, உங்க பொஞ்சாதி?" என்றார் முன்சீப்.
"கழுத கிடக்கா.. உங்க பெண்டாட்டியை முதல்ல தேடலாம் வாங்க" என்றார் கமல்.


தொடர்வது, நான் மிக விரும்பும் பாடல்களில் ஒன்று. சோகப்பாட்டின் part2. dramatic தொடக்கம், ஏறக்குறைய நௌஷத் மெட்டில் அருவி போல் வயலின், நெஞ்சை வருடும் ஹம்மிங், அற்புதமான வரிகளுடன் இனிய இசை, குரல். serenely uplifting. போட்ட மெட்டைத் திரும்பப் போடுவதில் எம்எஸ்வி வல்லவர் என்றாலும், இந்தப் பாடலின் மெட்டை மறுபடி உபயோகித்தாரா தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். மெல்லிசை நினைவுகள் பதிவெழுத நினைவூட்டியதற்காக:
நான் பாடிய பாடல்

28 கருத்துகள்:

  1. நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறீர்கள்...
    இடையில் கமல் நகைச்சுவைகள்... கமலைப் பிடிக்காதோ?

    டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் தமிழே பேசுவதில்லை... என்ன பேசுகிறோம் என்பதும் இல்லை...

    பதிலளிநீக்கு
  2. இதை பல்சுவைப் பதிவு எனச் சொல்லலாமா ?
    பாடல்களும் பதிவும் அருமை
    மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. எஸ்பிபியை விட எஸ்பிபி போலப் பாடுவான்.

    நிறைய பேர் ஒரிஜினலை விட அருமையாகப் பாடுவதுண்டு..!

    பதிலளிநீக்கு
  4. இந்தியா, அதுவும் சென்னை, தமிழ்நாடு வந்திருக்கீங்களா?? ரகசியமாவே வைச்சிருக்கீங்க போல! :))))

    போகட்டும், விடுங்க, ஜோக்ஸ் எல்லாமேஎங்கே இருந்து எடுத்தீங்க? அது எப்படி இந்த மாதிரி நடு நடுவே ஜோக்ஸைக் கொண்டு வரீங்க. இப்படி எல்லாம் ஜோக்ஸ் இருக்கிறதே உங்க பதிவுகளைப் பார்த்துத் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  5. தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் கூட அத்துபடி ஆயிருக்கு போல. நீங்க சொல்லும் நிகழ்ச்சிகள் எல்லாம் பார்க்கிறதில்லை. பார்த்தவங்க அவ்வப்போது சொல்வதைக் கேட்டுப்பேன். ஆனால் இதுக்கும் பயங்கரமான ரசிகர் கூட்டமே இருக்குங்க!

    பதிலளிநீக்கு
  6. கண் பிடுங்கி நீலன் எப்போ வந்து கண்களைப் பிடுங்கப் போறான்? உங்களையே பயமுறுத்தி இருக்கான்னா அடுத்து வரப் போறதும் பயம்மாத் தான் இருக்கும். சீக்கிரமாப் போடுங்க. படிக்கணும். அப்போவானும் ராத்திரி நல்லாத் தூக்கம் வருதானு பார்க்கணும். :))))))

    பதிலளிநீக்கு
  7. பாட்டு எதுவும் கேட்கலை இன்னும், மறுபடி வரேன். பாட்டுக் கேட்டுட்டு எழுதணும். :)

    பதிலளிநீக்கு
  8. அப்பாதுரை அவர்களே1 இவ்வலவு நெருக்கடிக்கு மத்தியிலும் " you maintain your spirit " ! fine ! keep it up ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு

  9. /சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள்/ எல்லாம் தீர்ந்ததா?கமல் மேல் அவ்வளவு பிரியமா?எஸ்பிபி யைவிட எஸ்பிபி போல பாடுவான் மிகவும் ரசித்தேன். இசையும் எழுத்தும் எல்லாக் கஷ்டங்களையும் குறைக்கும். நீங்கள் பாடிய பாடல் கேட்டேன். . பேஷ் பேஷ்...!

    பதிலளிநீக்கு
  10. சித்திரப் பூச்சேலை பாட்டெல்லாம் கேட்டதே இல்லையே!

    இரண்டாவது ஓ, இதுவா சர்வர் சுந்தரம்! :))))

    மூணாவது பாட்டும் கேட்டதில்லை ஆனால் இந்த ராகத்திலே வேறே பாட்டு ஏதோ கேட்டிருக்கேன்.

    ம்ஹூம், காதல் கதை சொல்வேனே பாட்டும் கேட்டதே இல்லை. :)))))

    இதயத்திலிருந்து இதழ்கள் வரை!! இப்படியெல்லாம் பாட்டு வந்திருக்குனே இன்னிக்குத் தான் தெரியும். :)))

    நான் பாடிய பாடல் பாட்டு மட்டும் ஏதோ சொப்பனத்திலே கேட்டாப்போல் எண்ணம், அது சரி, நீங்க பாடலையே? :))))

    பி.பி.ஶ்ரீநிவாஸோட முழுப்பெயர் பிரதிவாதி பயங்கரம்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். இதிலே அவர் குரலைக் கேட்டதும் இன்னிக்கு அவரைப் பத்திப் படிச்சதும் நினைக்க வியப்பான ஒன்று.

    பதிலளிநீக்கு
  11. // சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள். //

    Hope all is well now.

    //அது போதாதென்று கண்பிடுங்கி நீலன் கதையின் அடுத்தப் பகுதிகளைப் படித்து நானே திகிலடைந்ததும் ஒரு காரணம்.//

    ஹாஹா :) நல்லா வேணும்! மற்றவங்களை மட்டும் பயமுறுத்தணும்னு நினைச்சா எப்படி...!

    பதிலளிநீக்கு
  12. கமல் ஜோக்குகளையும், கடைசி பாடலையும் இரசித்தேன். அந்தக் காலத்தில் எனக்கும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  13. சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள். அது போதாதென்று கண்பிடுங்கி நீலன் கதையின் அடுத்தப் பகுதிகளைப் படித்து நானே திகிலடைந்ததும் ஒரு காரணம்.//

    இந்திய பயணம் நலமாக இல்லையா? விபத்து யாருக்கு?
    பிடித்த பழைய பாடல்களை கேட்டால் சோர்வு போய்விடுமே! பிடிக்காத பாடல்களை ஏன்கேட்கிறீர்கள்?

    சரோஜாதேவியின் பதிலை ரசித்தேன். "இப்போ நடிக்கிறவங்க எல்லார் குரலும் ஒரே மாதிரி இருக்குது.."//

    முன்பு வானொலியில் வைக்கும் ஒலிசித்திரம் கேட்டு இந்த நடிகை பேசுகிறார்கள் என்று சொல்ல முடியும். இப்போது அப்படிசொல்ல முடியவில்லையே! எல்லோருக்கும் பின்னனிகுரல் கொடுப்பவர்கள் ஒரே மாதிரி குரல் கொடுக்கிறார்கள்.

    சரோஜாதேவி கன்னட பைங்கிளியாக இருந்தாலும் கொஞ்சும் தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்தார்.

    அடுத்த பதிவு கண்பிடிங்கி நீலன் கதைதானே?

    பதிலளிநீக்கு
  14. மீண்டும் இந்தியப் பயணமா.....

    நடுநடுவே வந்த கமல் ஜோக்குகளை ரசித்தேன்.....

    பாடல்கள் ஒன்றிரண்டும் கேட்டுவிட்டேன். மீதியையும் கேட்க வேண்டும்.....

    நீலன்.... தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
  15. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ஹிஹி.. 'தலைவா படம் இலவசமா உங்க வீட்டுக்கு வந்து போட்டு காட்டுறாங்க, கூடவே விஜய் வந்து நேர்ல நடிச்சும் காட்டுவாரு'னு யாருனா சொன்னா எப்படி நடுங்குவேனோ அது போலத்தான் நீலன் படிச்சு... மத்தபடி ஒண்ணுமில்லே. thought beat: கமல் ஜோக்சுக்கு பதில்..? ஒரு ஊர்ல விஜை விஜைனு ஒரு வக்கீல். சமயத்துல அவரு டாக்டரும் கூட. தொடருவோம்.

    பதிலளிநீக்கு
  16. //முழுப்பெயர் பிரதிவாதி பயங்கரம்னு..

    எனக்கும் அவர் இறந்தபிறகு தான் தெரியும்.. எங்கள் ப்லாக் தயவில் (?). ஸ்கூல் படிக்குறப்ப அவர் என்ன கஷ்டப்பட்டாரோ பாவம். டீச்சர் அட்டென்டென்ஸ் எடுக்குறப்ப அவர் பெயரை மட்டும் கூப்பிட்டிருக்க மாட்டார்னு தோணுது. சின்ன வயசுல அவர் பாடுறதை கேட்ட நண்பர்கள் "பயங்கரமா பாடுறடா டேய்!"னு அதிசயித்திருக்க மாட்டார்கள்னு தோணுது..

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் எழுதிய விதத்தை ரசித்தேன். கண்பிடுங்கி நீலனை நீங்கள் மட்டுமே படித்து பயந்து கொண்டிருந்தால் எப்படி? சீக்கிரம் பதிவேற்றம் செய்யவும்.

    பதிலளிநீக்கு
  18. Nice post. Chithirapoo Chellai is from the film Pudhu Seruppu Kadikkum which is not released.
    In this song, Kushwant Singh flashed my mind for a moment when I heard the lines : While climbing the staircase, to see the beauty of your palm......
    Kamal jokes are good though one or two are already heard by me.
    It seems you have somehow or other put a post to keep in touch with your followers.
    The first and foremost for me to avoid watching tamil channels in TV is the smothering of tamil language by the news readers and the so called VJs.

    பதிலளிநீக்கு
  19. ANGER - when tongue swirls around without any aim, mind closes. When the tongue takes rest after doing a kaliyattam, mind opens up but it will be too late.

    பதிலளிநீக்கு
  20. Kann Pudungi Neelan - second part frightened me. Avvaluvu Bayangramana Kathaiya!!! - read it in KA NE - Balaiya voice.

    பதிலளிநீக்கு
  21. 'பிரதிவாதி பயங்கரம்' என்பது ஒரு வைணவப் பட்டம். வாதத்திலும் தர்க்கப் புலமையிலும் சிறந்தோருக்கான கெளரவிப்பு.

    திருமலை வெங்கடேச பெருமாள் சுப்ரபாதத்தை இயற்றிய காஞ்சீபுரம் அண்ணங்காச்சாரியார் சொல் ஏர் உழவர். தர்க்க சாஸ்திரத்தில் விற்பன்னர். 'பிரதிவாதி பயங்கரம்' என்ற பட்டப்பெயர் இவர் கொண்டிருந்த தினால் இவரால் தான் அதுபற்றி எனக்கு முதன் முதல் தெரியவந்தது.

    பதிலளிநீக்கு
  22. பிரதிவதி பயங்கரம் ஆச்சாரியார் என்ற பெரியவர் புதுச்செரியில் பரதியாரொடு நெருங்கிய ஆப்தராக இருந்தார் ! பிற்காலத்தில் இந்திய விடுதலைக்காக போராடும் தீவிர வாதிகளொடு சேர்ந்து ஆப்கன்,காபூல் வழியாக சென்று தாஷ்கண்டை அடைந்தார் ! மாஸ்கோவில் லெனினை சந்தித்திருக்கிறார் ! தாஷ்கண்டில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியை ஆறம்பித்த வர்களில் இவருமொருவர் என்று படித்த ஞாபகம் ! அந்த குடும்பத்தைஸ் சேர்ந்தவர் பி.பி.சீனிவாசோ என்று ஒரு சந்தேகம் உண்டு ! உறுதி செய்ய முடியவில்லை ! ---காஸ்யபன் .

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஜீவி சார். தெரியாத விஷயம். கிண்டல் செய்திருக்கக் கூடாது. அறியாமை.

    பதிலளிநீக்கு
  24. //when tongue swirls around without any aim, mind closes.

    so true, mohan.

    //Avvaluvu Bayangramana Kathaiya!!!

    hihihi.. haven't seen KN in a while.. saw ooty varai uravu last night.. watched nagesh-baliah once again destroy comedy boundaries

    பதிலளிநீக்கு
  25. ஆகா! காஸ்யபன் சார்.. எங்கே கொண்டு போய்ட்டீங்க.. ரொம்ப சுவாரசியம் போங்க. சுந்தர்ஜியோட பதிவுல படிச்சது ஞாபகம் வருது.. இவர் அவர் தானா? அவர் இவர் தானா?

    பதிலளிநீக்கு
  26. சுந்தர்ஜி குறிப்பிடும் சாமியார் அல்ல நான் குறிப்பிடும் ஆசார்யா ! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  27. பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் (அவரது இயற்பெயர் அண்ணா - எதிராளிகளுக்கு தன் வாதத்தால் பயங்கரமாக விளங்கியதால் வந்த பட்டப்பெயர் பிரதிவாதி பயங்கரம் என்பது. இவர் ஸ்ரீ ராமானுஜர் நியமித்த 76 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். தற்போது நாம் சேவிக்கும் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் இயற்றியவர் இவரே.இவரது பரம்பரையில் வந்தவர்கள் இந்த அடைமொழியை (குடும்பப் பெயராக)வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    காஞ்சி ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யார் எல்லோருக்கும் தெரிந்தவர். இப்போது இல்லை. மிகப்பெரிய வைணவ பண்டிதர்.

    பதிலளிநீக்கு
  28. 74 சிம்மாசனாதிபதிகளுள் என்று இருக்க வேண்டும். பிழை பொறுத்தருள்க.

    பதிலளிநீக்கு