2013/07/12

வாத்து வெளுப்பு



    திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]

அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.

இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.

கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.

சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.

சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.

இனி கதை..



    ண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த இருவரில் ஒருவர் சற்றுத் தயங்கி நின்றார். அவர் முகம் முன்தினம் செய்த மெதுவடை போல் பொலிவின்றித் தொய்ந்திருந்தது. "என்ன இடம் தயா இது?" என்று மற்றவரை இடித்தார். "வேர்க்கடலை சங்கம்னு சொன்னே? வேறே சங்கமாட்டம் தெரியுது? எங்கே பாத்தாலும் காலிப்பசங்களா இருக்காங்க? ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லாம சிரிச்சு பேசிட்டு சந்தோஷமா இருக்காங்க.. தறிகெட்ட இடமா இருக்குதே? இங்கயா இருக்கான் அன்புமல்லி? எல்லாரும் சந்தோஷமா இருக்குதைப் பாத்தா வயத்தை குமட்டுதே? போயிரலாமா?"

தயா விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் ஸ்டைலில் நிதானமாக, "என்னப்பாஆ சொல்றே சிங்கம்ம்? நாலு பேர் சிரிச்சு பேசி சந்தோசமா இருந்தா, அது உனக்குத் தறிகெட்ட இடமாயிருச்சேஏ.. ம்ம்ம்.. ஒருகாலத்துல.. பார்த்தாலே சந்தோசமா சிரிக்கத் தோணுறாப்புல, சிரிச்ச்ச்ச முகமா இருந்த ஆளை.. இந்த நிலமைக்குக் கொணாந்துட்டாளேஏஏ!.. போகட்டும் விடு.. வாப்பா.. வலது காலை எடுத்து வச்சு வா. அது இல்லே, அந்த இன்னொரு வலது கால்.. அதேதான்.. மெள்ள வா. அன்புமல்லி உள்ளாறதான் இருப்பான். உன் பிரச்சினையத் தீர்த்து வைப்பான்" என்றபடி நண்பருடன் அரையிருளில் அறைதேடி நடந்தார்.

    தன்னெதிரே உட்கார்ந்த இருவரையும் பார்த்த அன்புமல்லியின் முகத்தில் புன்னகையும் வருத்தமும் மாறி மாறித் தோன்றின. "வா தயா.. யாரு இவரு? காணாம போன பெண்டாட்டி திரும்பக் கிடைச்ச மாதிரி ஏன் இப்படி வாட்டமா இருக்காரு?"

"மல்லி.. கிடைச்ச பெண்டாட்டி காணாம போனதால வாட்டமா இருக்கான்.. இவனைத் தெரியலியா உனக்கு?"

"பெண்டாட்டி காணாம போனதால வாட்டமா? அவனவன் பட்டாசு கொளுத்தி தானதருமம் செஞ்சு கிடா வெட்டி விழா கொண்டாடுற விஷயமாச்சே! இதென்ன இந்தாளு.. புதுசா இருக்குதே..! சத்தியமா இவர் யாருனு தெரியலபா" என்ற அன்புமல்லி தயாவைப் பார்த்தே பேசினார்.

"டேய்.. மல்லி.. இவன் ராஜசிங்கம்டா. நாம மூணு பேரும் ஒண்ணா படிச்சோம் எட்டாம்ப்பு வரைக்கும்.. இவன் கல்யாணத்துக்குப் போய் ஆளுக்கு ஒரு புதுச்செருப்பு எடுத்துட்டு வந்தமே.. மறந்துட்டியா?"

அன்புமல்லி இருந்த இடத்திலேயே சற்று அதிர்ந்து குதித்தார். சட்டென்று பார்த்தவர்களுக்கு அவர் திடீரென்று உயர்ந்து சுருங்கியது போல் தோன்றியிருக்கும். "டேய் தயா.. என்னை ஏம்பா இழுக்குறே? நீங்க ரெண்டு பேரும் படிச்சீங்கனு சொல்லு.. நான் எங்க அந்தத் தப்பெல்லாம் செஞ்சேன்?" என்ற அன்புமல்லி ஒரு கணம் ராஜசிங்கத்தைப் பார்த்துத் திரும்பினார். "தப்பா நினைக்காதே. அவனைப் பார்த்தாலே துக்கமாயிடுது.. அப்படியொரு களை.. ம்ம்.. ராஜசிங்கம்.. யாரு, முத பெஞ்சுல உக்காந்திருப்பானே அவனா? அதனால தான் எனக்கு அவன் முகம் தெரியலப்பா!"

"மல்லி.. நீதாம்பா இவனுக்கு எல்ப் செய்யணும். இவனையும் இவன் பெண்டாட்டியையும் சேத்து வக்கணும்.. இந்த விஸ்கி கிளாசை உன் காலா நெனச்சுக்குறேன்" என்று உயர்த்தினார். "அட, என்னப்பா காலியா இருக்குது.. சொட்டு கூட காணோம்?"

"தயா.. காதல் சமாசாரம்னா உதவி செஞ்சு காதலர்களை சேத்து வைக்க எனக்குத் தெரியும்.. காணாம போனவங்களை கண்டுபிடிக்கறது என் வேலையில்லையே? இவனுக்கு எப்படி என்னால உதவி செய்ய முடியும் புரியலியே? மன்னிச்சுக்க சிங்கம்.. உன்னை சட்னு நினைப்பு வராமப் போயிருச்சு.. பின் பெஞ்சுலயே இருந்தனா.. உன் முதுகு நினைவிருக்கே தவிர மூஞ்சை அதிகம் பார்க்கலபா.."

"பாத்தியா சிங்கம்? மொத பெஞ்சுல உக்காந்தா யாருக்கும் அடையாளமே தெரியாம போயிரும்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?" என்ற தயாவை முறைத்து, "என் பெண்டாட்டி காணாம போகலே மல்லி" என்றார் ராஜசிங்கம். "என்னோடதான் இருக்குறா.. ஆனா முன்னாட்டம் பேச மாட்டேங்குறா"

"உன் மூஞ்சைப் பார்த்த அதிர்ச்சிலே ஊமையாயிருப்பாளோ?"

"சேசே.. முன்போல பேச பழக மாட்டேங்குறாபா"

"ஞாபகமறதி, பைத்தியம்.. இந்த மாதிரி? பாயைப் பிராண்டுறாளா? பார்க்குறதுக்கு சாதாரணமா இருப்பாங்க.. திடீர்னு பாத்தா பாயெல்லாம் பிஞ்சிப் போயிருக்கும்.. உத்துக் கவனிக்கணும் இதெல்லாம்.."

"இல்லப்பா. அவ அப்படியேதான் இருக்கா. ஆனா வேறே ஆளா மாறிட்டா"

"அப்படியே இருக்கா, ஆனா வேறே ஆளா மாறிட்டா. புரியுது புரியுது.. பேய் பிசாசு காட்டேரி கொள்ளிவாய் கிள்ளிவாய் எதுனா பிடிச்சிருக்கும்னு சொல்றே.."

"இல்லப்பா"

"அப்ப சக்தி, காளி, ருத்ரசாமுண்டி, பைரவி, ஓங்காரி.. இதுல ஏதாவது ஒரு அம்மன் கிம்மன்?"

"வாத்து. வாத்து பிடிச்சிருச்சு.. சொல்லேண்டா சிங்கம்" என்றார் தயா.

"வாத்தா?" என்றார் அன்புமல்லி. "எது..? இந்த க்வாக் க்வாக்னு சத்தம் போட்டுகிட்டு நம்ம கிராமக் குளத்துல.. அதுவா பிடிச்சிருக்கு? வாத்துப்பேய் இப்பத்தான் கேள்விப்படறேன்.. ஆமா.. என்னா செய்யுது வாத்துப்பேய்?"

"வாத்துப்பேய் இல்லே மல்லி. வாத்து ஜோசியம். ஆனா லேசுப்பட்டதில்லே, அதி பயங்கரம். படு பயங்கரம். மகா பயங்கரம். பயங்கரத்தைப் பார்க்கிலும் பயங்கரம். பேயைக்காட்டிலும் பயங்கரம். அதாக்கும் பிடிச்சிருக்கு"

"புரியலியே தயா? வாத்துப்பேய் நிசமாவே நான் கேள்விப்பட்டதே இல்லையே?"

"சும்மா இரு தயா" என்றார் ராஜசிங்கம். "மல்லி.. வாத்துப் பேயும் இல்லே ஜோசியமும் இல்லே. வாஸ்து சாஸ்திரம். அதான் பேயாட்டம் அவளைப் பிடிச்சு ஆட்டுது. அது பிடிச்ச நாள்லந்து என் கனகவல்லி கருங்கல் ஜல்லியா மாறிட்டா.. அப்பப்போ சில்லியா நடந்துக்குறா. என் பசங்களுக்குக் கூட புரியாதபடி ஆளே மாறிட்டா. முப்பது வருசமா ஓடாத் தேஞ்சு போய்.. விட்டது சனியங்கனு பசங்கள்ளாம் போனபிறகு தாம்பா நாங்க காதலிக்கவே ஆரம்பிச்சோம்! அம்பது வயசுக்கு மேலே தனிமையில நாங்க ரெண்டு பேரும் எத்தனை சந்தோசமா இருந்தோம்! இப்ப என்னாடானா அவளை எனக்கே அடையாளம் தெரியலே. இந்த வாத்து சங்கடத்துனால.. அடச்சீ.. வாஸ்து சாஸ்திரத்துனால என் குடும்ப சந்தோசமே போச்சுபா. என் அன்பு மனைவி இப்படி மாறிட்டதால என் மனசே வெம்பிப் போச்சுபா. அதான் சோகம். உன்னால உதவ முடியும்னு தயா இங்க கூட்டியாந்தான். ஜோடி சேத்து வக்கறதுல உனக்கு அனுபவமாமே? வல்லியை பழையபடி மாத்த எனக்கு ஐடியா குடுப்பா.. வழிபண்ணுப்பா..".

"சிங்கம்.. பொதுவா நான் கல்யாணமான கேசுங்களை எடுக்குறதில்லே. ஏற்கனவே கல்யாணமான துக்கத்துல கஷ்டப்பட்டு நொந்துபோய், தானாப் பிரிஞ்சவங்களை நாம வேறே சேத்து வைக்கணுமாங்கற நல்ல எண்ணம். இருந்தாலும் நாம பழைய சினேகிதம்ன்றதால.. யோசிக்கிறேன். சரி, எல்லா விவரமும் சொல்லு. உன் மனைவியைக் கல்யாணத்தன்னிக்குப் பார்த்தது.. அதுகூட தயா சொல்றாப்புல ரெண்டு ஜோடி புதுசெருப்புலயே கண்ணா இருந்தனா, சரியாக் கூட பார்க்காம வந்துட்டேன்.. என்னா நடந்துச்சுன்னு சொல்லு. இந்த வாத்து வியாதி பத்தியும் சொல்லு. அதுக்கு முன்னால தீர்த்தம் பிரசாதம் எதாவது சாப்பிடலாம்" என்ற அன்புமல்லி, சிங்காரத்தை அழைத்தார்.

"கூப்டிங்களா சார்?" என்று அருகில் வந்த சிங்காரம் உடனே கேவி அழுதான். அடங்கியதும், "இல்லே சார்.. இத்தனை துக்கமான மனுசரை நான் பாத்ததே இல்லே சார். நம்ம க்ளப்புல லைட்டெல்லாம் மங்கிடுச்சு கவனிச்சீங்களா சார்? இவர் முகத்துல ஏன் இத்தனை சோகம்?"

"அது ஒண்ணுமில்லே சிங்காரம். சாரோட பெண்டாட்டி.."

"செத்துட்டாங்கனு சோகமா?"

"இல்லப்பா"

"சாவலேனு சோகமா?

"இல்லப்பா"

"யாரோடனா ஓடிப்போயிட்டாங்கனு துக்கமா?"

"இல்லப்பா"

"அப்போ ஓடிபோகலேனு வருத்தமா?"

"அட இல்லப்பா.. அவரே நொந்திருக்காரு, நீ நோண்டிப் பாக்குறியே?"

"மன்னிச்சுங்க சார்" என்ற சிங்காரம், ராஜசிங்கத்தைப் பார்த்துவிட்டு இன்னொரு முறை அழுதான். பிறகு அன்புமல்லியைப் பார்த்துத் திரும்பி நின்றபடி, "விஸ்கி, கொத்தவரங்காய் புளிவறுவல், முட்டைபுர்ஜி, வாழைப்பூ வடை, பூண்டுச்சட்னி.. அப்புறம் எறால் மசாலா தீந்துருச்சு சார்.. கத்தரிக்காய் மசாலா எடுத்துட்டு வரவா? ஒரே மாதிரி தான் இருக்கும் டேஸ்டு. இவரையும் சாப்பிடச் சொல்லுங்க, கொஞ்சம் சரியாவும். இவரைப் பார்த்தா எனக்குத் துக்கம் தூக்குது சார்" என்றபடி வாயைத் டேபிள் துடைக்கும் துணியால் பொத்திக் கொண்டு நகர்ந்தான்.

    விஸ்கியும் கொத்தவரங்காய் புளிவறுவலும் மெள்ள உள்ளே இறங்க விவரங்களை வெளியே கொட்டினார் சிங்கம்.

"இந்த வாஸ்து சாஸ்திரம்ன்றது ரெண்டாயிரம் மூவாயிரம் வருசத்துக்கு முந்தின சமாசாரம்..வீடு எப்படி கட்டுறதுனு சொல்லி வச்சிருக்கு சாஸ்திரத்துல"

"உன் பெண்டாட்டி சிவில் எஞ்சினயரா? அவ்ளோ படிச்சுட்டு உன்னையா கல்யாணம் கட்னா?"

"அந்த வீடு இல்ல மல்லி. இதுகூட தெரியலியே உனக்கு? வூடு கட்டுறதுனா பிரம்பை எடுத்துகிட்டு ஆடுறது.. நாலா பக்கமும் தாவிக் குதிச்சு, எல்லை கட்டி ஆடுறதுக்கு பேரு வூடு கட்டுறது.. எம்ஜிஆர் படத்துல பார்த்ததில்லே? சிங்கத்தோட ஒய்பு இப்ப அது மாதிரி பிரம்பை எடுத்துட்டு ஆடுறானு சொல்றான்"

"சும்மா இருங்கப்பா ரெண்டு பேரும்" என்ற ராஜசிங்கம், முறுகலாகத் தெரிந்த பொன்னிற வாழைப்பூ வடை ஒன்றை எடுத்து முழுதாக பூண்டுச் சட்னியில் நனைத்தார். வடைமேல் கணிசமான சட்னி சேர்ந்து கொள்ள, அப்படியே கடித்து ஓசைவரச் சுவைத்தார். "அட்டகாசமா இருக்குதுபா.. ம்ம்.. வீடு கட்டுறப்ப எட்டு திசைக்கும்.."

"நாலு திசை தானேப்பா? நீ என்னா எட்டுன்றே?"

"அது வந்து தயா.. நீ படிக்குறப்ப உன் அறிவுக்கு ஏத்தமாதிரி குறைச்சுட்டாங்கடா.. மொத்தம் எட்டு திசைங்க தெரியுதா? சொல்றதக் கேளு..இல்லின்னா இந்தா இந்த வடையைத் தின்னு.." என்ற ராஜசிங்கம் தொடர்ந்தார். "எட்டு திசைக்கும் எட்டு தேவதைங்க இருக்குறதை கவனிச்சு வீடு கட்டுறப்ப அந்த தேவதைங்களை ஆராதிக்குறாப்புல வீடு கட்டினா, அந்த வீட்டுல செல்வம், சந்தோசம், நிம்மதி, எல்லாம் இருக்கும்னு சாஸ்திரம் சொல்லுது.."

"வாத்து சொல்லுது.."

"ஆமா.. அதைத்தான் என் பெண்டாட்டி பெரிசா புடிச்சுக்கிட்டு சாஸ்திரம் சம்பிரதாயம்னு வீட்டை மாத்திட்டா.. ஆளை மாத்திக்கிட்டா.. நடத்தையை மாத்திக்கிட்டா.. வீடே தலைகீழா மாறிடிச்சு.. வாஸ்துன்றா.. சூயின்றா.. மாயின்றா.. பஞ்சபூதம்ன்றா.. என்னையும் இதுல இழுத்து விடுறா.. எம் பசங்க லீவுக்கு வந்தவங்க நான் வேறே யாரையோ கல்யாணம் கட்டி வீட்டுக்கு கூட்டியாந்துட்டேன்னு என்னை மொத்தி எடுத்துட்டாங்கப்பா.. அப்புறம் விவரம் சொன்னதும் அலறி அடிச்சுகிட்டு அடுத்த வண்டியிலயே ஊருக்குப் போயிட்டாங்க.. இது போதாதுனு தினம் அவ கிட்டே சாஸ்திரம் கேட்க நாலஞ்சு பேர் வராங்க.. கனகவல்லின்ற பேரைக்கூட இப்ப வல்லிமயினு மாத்திக்கிட்டு.. என்னத்தை சொல்ல..!"

"ஆனா நீதான் வீடு கட்டி வருசக்கணக்கா அங்கியே இருக்கியேபா? இப்ப திடீர்னு வீட்டை எப்படி மாத்துறது? நீ என்ன சொல்றே?"

"வாஸ்து மகிமைனு இல்லாததையெல்லாம் வேலையத்த அம்பட்டப் படுபாவி எவனோ கிளப்பி விட்டுருக்காம்பா.. அதை மிச்ச வேலையத்த அம்பட்டங்க எல்லாரும் பிடிச்சுகிட்டு.. ஏன் கேக்குறே கூத்தை?! நீ வீட்டுக்கு வந்து பாரு.. எல்லாம் விளங்கும்"

மல்லி யோசித்தார். "சரி. நீ சொல்றது என் ஆர்வத்தை கிளப்பிருச்சு சிங்கம். இன்னக்கே உன் வீட்டுக்குப் போவோம்" என்றார். "சின்னதா தயிர்சாதம் சாப்பிட்டா நல்லாயிருக்கும்ல?"

சிங்காரம் கொண்டு வந்த தயிர்சாதம் மோர்மிளகாயை அடுத்த பத்து நிமிடங்களில் மூவரும் ஒரு பிடி பிடித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

    "இதான் உன் வீடா? நல்லா வசதியா இருக்கும் போலிருக்கே?" என்றார் மல்லி, காரிலிருந்து இறங்கியபடி.

"உள்ள வா.. பயந்துருவே" என்ற ராஜசிங்கம் இரும்பு கேட்டை உள்ளே இழுத்துத் திறந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த அன்புமல்லி சுற்றுமுற்றும் பார்த்தார். மென்மையாக அதிர்ந்தார். மாடிப்படியோரமாக இருந்த இடத்தில் ஒரு பெரிய படம் மாட்டியிருந்தது அதனருகே வடக்கும் இல்லாமல் மேற்கும் இல்லாமல் ஒரு கோணலான வாக்கில் போட்டிருந்த நாற்காலியில் கனகவல்லி உட்கார்ந்திருந்தார். எதிரே அதே போல் கோணலான வாக்கில் போட்டிருந்த மயிலிறகு கட்டப்பட்டிருந்த நாற்காலிகளில் இருவர். அதிராமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

வேகமாக நடந்த ராஜசிங்கம், "கனகவல்லி.. கனகம்.. வல்லி.. இத பாரு யாரு வந்திருக்காங்க தெரியுதா? எங்கூட படிச்ச தயாவும் அன்புமல்லியும்.. நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்க.. உனக்கு ஞாபகம் இருக்குதா?" என்றார் உரக்க.

"யாருயா நீ? அம்மாவை வல்லிமயினு கூப்பிடாம கனகம் முல்லைனுட்டு" என்ற நாற்காலிக்காரர் ராஜசிங்கத்தைப் பார்த்துவிட்டு, "ஓ.. நீங்களா சார்.. மன்னிச்சுருங்க.." என்றபடி எழுந்தார். "அப்போ நாங்க போயிட்டு வரோம் மாதா வல்லிமயி.." என்று பணிவுடன் வெளியேறினர்.

நாற்காலியைத் திருப்பாமல் முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்த வல்லிமயி புன்னகைத்தார்.

பேயைக்கூட தனிமையில் சந்திக்கத் துணிந்த அன்புமல்லி ஒரு கணம் திடுக்கிட்டார். மாதா வல்லிமயினுடைய முகம் அத்தனை வெளுப்பு. கண்களில் மை. நெற்றியின் கணிசமான முப்பரிமாண பொட்டு கொஞ்சம் விட்டால் கீழே இறங்கி வந்து இவர்களை அடித்துவிடும் போலிருந்தது. மறுபடி புன்னகைத்து, "வரணும்" என்றார்.

தயா அன்புமல்லியின் பின்னே ஒளிந்துகொண்டு, "பயமா இருக்கு மல்லி.. ஓடிறலாம் வா" என்றார்.


(இன்னொரு பதிவில் முடியும்)



24 கருத்துகள்:

  1. ஹைய்யோ!!!!!!!!!!!!

    அது என்ன வாத்துன்றது புரிஞ்சு போச்சு:-))))

    பதிலளிநீக்கு
  2. வாஸ்து வெளுப்பு வாத்து வெளுப்பெனப் புரிய முற்படும்போது கதை நெடுகிலும் பரவியிருந்த எள்ளல் சிறு புன்னகையாய் வருடியது.

    கதையின் ஒரு முடிச்சை வைத்து இப்படி இழுத்துச் செல்லும் வித்தை உங்களின் பரந்த வாசிப்பாலும், செய் நேர்த்தியாலும்தான் சாத்தியம். அபாரம் அப்பாதுரை.

    ஒருமுறை எழுதிய பின் மெருகேற்றுவதில் நீங்கள் காட்டும் அக்கறையை உபரி ‘த்’ மூலமாக உணர முடிந்தது.

    //வாயைத் டேபிள் துடைக்கும் துணியால் பொத்திக் கொண்டு நகர்ந்தான்.//

    முதல்நாள் மெதுவடை துவங்கி வி.சி.கணேசனில் நுழைந்து முப்பரிமாணப் பொட்டு வரைக்கும் தொடர்ந்த ஹாஸ்யம் கிறங்க வைத்தது.இந்த ஹாஸ்யத்தை எழுத அபூர்வமாய்ச் சிலர்தான் இருக்கிறார்கள்.

    அபாரமாக எழுதுகிறீர்கள் அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  3. அறிமுகத்தை அறிய [+] யை சொடுக்க வேண்டும்... நன்றி... (எப்படி...?)

    பதிலளிநீக்கு
  4. வல்லியை பழையபடி மாத்த எனக்கு ஐடியா குடுப்பா.. //

    ராஜ சிங்கம் ...

    ஒரு பிரபல பதிவர் நினைவுக்கு வருகிறாரே !!

    அவரே தன் பதிவில் இந்த பூதத்தால் பாதிக்கப்பட்ட தன் குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டாரே !

    பதிலளிநீக்கு
  5. "பயமா இருக்கு மல்லி.. ஓடிறலாம் வா
    >>
    சரி வாங்க எல்லாரும் ஓடிரலாம்

    பதிலளிநீக்கு
  6. Mr.Appadurai,
    Second part of Kanpudungi Neelam is still pending.
    Hot Drinks sapptuttu, Thayir Sadam sappittal, kikku erangidume. Combination sariyillye.
    I enjoyed the first part of this story and awaiting the next part.
    So, Vasthu Sastram = Vaththu Sastram. I got it.

    பதிலளிநீக்கு
  7. உ. பொ. ஆனந்தி போல வெளுத்த முகம்! வாஸ்துல பேஸ்தடிச்சுடுச்சோ...

    பதிலளிநீக்கு
  8. //எம் பசங்க லீவுக்கு வந்தவங்க நான் வேறே யாரையோ கல்யாணம் கட்டி வீட்டுக்கு கூட்டியாந்துட்டேன்னு என்னை மொத்தி எடுத்துட்டாங்கப்பா.. அப்புறம் விவரம் சொன்னதும் அலறி அடிச்சுகிட்டு அடுத்த வண்டியிலயே ஊருக்குப் போயிட்டாங்க//

    கற்பனை பண்ணிப் பார்த்துட்டுச் சிரிச்சுச் சிரிச்சுச் சிரிச்சுச் சிரிச்சு முடியலை, கண்ணிலே தண்ணி வந்துடுத்து. :)))))))

    அது சரி, வல்லி இன்னும் இதைப் படிக்கலையா? :)))))

    பதிலளிநீக்கு
  9. Innoru Padivil Mudiym. Innoru Padivil Eppa Sir Varum??????

    பதிலளிநீக்கு
  10. நாடகமாய் விரிந்த நேர்த்தி.

    துணுக்குத் தோரணங்களுக்கிடையே பேனாவின் சாகச நர்த்தனம்!

    பதிலளிநீக்கு
  11. படிச்சேன் கீதா இப்பதன் படிச்சேன்))
    பேர்ப் பொருத்தம் பிரமாதம். அதென்ன வெள்ளை வாத்து ?
    யூஷுவலா நம்ம மேடத்துக்கு தானே அந்தப் பேரு?,.
    வரிக்கு வரி நகைச் சுவைப் பின்னிப் பெடல் எடுத்திருகிறார் துரை!!வெகு நேர்த்தி.

    பதிலளிநீக்கு
  12. அதானே கண்புடுங்கி நீலம் கதை இன்னும் முடிக்கலையே !!

    பதிலளிநீக்கு

  13. பேச்சில் விழுப்புரம் சின்னையா கணேசனின் பாதிப்பும், மாதா வல்லிமயியின் முக வர்ணனையில் சந்திரமுகியின் தோற்ற பாதிப்பும் தெரிகிறது. சுந்தர்ஜி அந்த உபரி ‘த்’ மறைந்து விட்ட்தே...!அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்கியராஜைப் பார்த்து அம்பிகா ‘வாத்து ‘ என்பார்.ஒன்றும் அறியாதவர் எனும் பொருளில்.

    பதிலளிநீக்கு
  14. படிக்கும்போதே வல்லிம்மா பதிவு நினைவுக்கு வந்து போனது.

    வல்லிம்மாவும் படிச்சுட்டாங்க!

    வரிக்கு வரி ரசித்தேன்....

    அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்....

    பதிலளிநீக்கு
  15. கண்பிடுங்கி நீலன், வாத்து வெளுப்பு
    அடுத்து காத்து கருப்பு?

    பதிலளிநீக்கு

  16. வாத்து வெளுப்பு
    கண்பிடுங்கி நீலன்
    அந்தக்கடை
    மூன்றையும் தொடருங்க சார்..
    வினோத்

    பதிலளிநீக்கு
  17. படிச்சவங்க சிரிச்ச இடமெல்லாம் நானும் சிரிச்சேன்... விழுந்து விழுந்து.

    பதிலளிநீக்கு


  18. வாஸ்து சாஸ்திரம் ஃபெங்க் சூயி அப்படின்னு எல்லாம் ஆளுக்கு ஆளு
    உடான்ஸு விடராக.

    இப்ப ரியல்டி காரங்க கூட வாஸ்து கம்ப்லையன்ட் அப்படின்னு ஆட் கொடுக்கறாக.

    சில ரியல்டி அவங்க கிட்டே லீகல் ஒபினியன் மாதிரி வாஸ்து ஒபினியன் வாங்கி அதையும்
    டாகுமென்டுகளுடன் இணைத்து த்ர்றாங்க..

    சொல்லப்போனா வாஸ்து என்கிற வஸ்து,
    அஸ்து என்றும் சொல்லமுடியாது.
    ந அஸ்து என்றும் சொல்லமுடியாது.

    சொல்லப்போனா ருத்ரம் படிக்கறப்போ முதல் பகுதிலே எந்த திசைலே யாரு இருக்காக
    அப்படின்னு விலா வாரியா போட்டிருக்கு. சில பேரு உட்காந்திருக்காக. சில பேரு நின்னுகினு இருக்காக.
    மத்த சில பேரு தொங்கிகினு இருக்காக.
    இன்னும் ஒத்தர் இரண்டு பேரு எல்லா இடத்துலேயும் இருக்காக.

    எல்லாரும் எல்லா இடத்துலேயும் இருக்காக அப்படின்னா, நமக்கு எந்த இடத்துலே படடா கிடைக்கும்.?
    வில்லங்கம் இருக்கா, மைனர் இன்டரஸ்ட் இருக்கா அப்படின்னு எல்லாமும் பார்க்கணும்.
    இந்த வாஸ்து சாஸ்திரத்துக்கெல்லாம் சூத்ரதாரியானவர் ராவணனோட மாமனார். அவர்தான் லங்காபுரியை
    கட்டினாராம். இப்ப ராஜபக்ஷே ராவணன் ஸ்தானத்திலே இருக்கார்.

    வாஸ்து சாஸ்திரம் பார்த்து நான் 1971லே வீடு கட்டல். ஆனா ஏதோ ஒரு காலத்துலே பார்த்ததுலே
    எல்லாமே சரியா இருந்துச்சு. எனக்கு ஆச்சரியமா இருந்தது. பகவத் சங்கல்பம்.

    போன வருசம், என்னோட ஃப்ரன்டு ஆள்வார்பேட்டைலே அவன் வீட்டை ஃப்ளாட் எனக்கு கொஞ்சம் விலை குறைச்சு தர்றேன் அப்படின்னான். என் பையன் போய் பார்த்துட்டு, மேற்க பார்த்து ரோட் இருக்கு. வடக்க பார்த்து
    ஆகாசம் இருக்கு. தெற்க பார்த்து பூமி இருக்கு அப்படின்னு என்னையும் ஒரு தினுசா குழப்பி விட்டுட்டான்.

    எப்படின்னா அவங்கவங்களுக்கு அவங்கவங்க உலகம் தான் நிசம்.
    அதில கிடைக்கற சுகம்தான் சத்யம்.
    மத்ததெல்லாம் அசத்யம். அசிங்கம். அனாசாரம்.

    அதெல்லாம் கிடக்கட்டும்.
    அந்த தயிர்சாதம் மோர் மிளகாய்
    கொஞமா எடுத்து எனக்கு கொஞ்சம் பார்சல் செய்யுங்க.
    உங்க பக்கத்துலே தான் இருக்கேன்.

    அது சரி. சிகாகோவிலே உங்காத்து லாக்கர் எந்த திக்கை நோக்கி வச்சுருக்கீக.
    அந்த திசைலே ஒரு மண் பாண்டத்திலே அன்னி அன்னிக்கு சுத்த ஜலம் ஊத்தி,
    மலர்ந்தும் மலராத தாமரை மொட்டுக்களை போட்டு வையுங்க.

    naduvile oru naapathu daalarum
    pottu vaiyunga. naan theepam kaattittu eduthundu porappa neenga paakkakoddathu.



    சுப்பு தாத்தா.www.subbuthatha7s.blogspot.com

    பதிலளிநீக்கு
  19. பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.
    (மைலாப்பூர் வரப்ப டின் கட்டாம இருந்தா சரி :)

    பதிலளிநீக்கு
  20. வல்லி அக்கா சீன வாஸ்து பதிவு எழுதிய போது இதை அன்பு மல்லியில் பயன் படுத்திக்க போகிறேன் என்று சொன்னீர்கள் பயன் படுத்தி எல்லோரையும் சிரிக்க வைத்து விட்டீர்கள்.
    திகில் முதலில் சிரிப்பு அடுத்ததா?
    கண்பிடுங்கி நீலன் என்ன ஆனான்?

    பதிலளிநீக்கு
  21. "முன்தினம் செய்த மெதுவடை போல". உங்களுக்கு வேறு உவமையே கிடைக்கவில்லையா? இனிமேல் வாழ்க்கையில் வடையே சாப்பிட மாட்டேன் ஸ்வாமி! :)

    பதிலளிநீக்கு
  22. தங்களை கணினி முதல் அனுபவம் தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன். தங்கள் கருத்தை தென்றலில் பதிய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. மீண்டும் படித்து உய்ந்தேன். அஹஹஹாஹஹஹஹஹ்ஹாஆஆஆஆஆஆஆஅ.
    என்ன ஒரு எழுத்து. அச்சோ சிங்கம் இல்லையே
    இதைப் படித்து

    மிக ஆனந்தப் பட்டிருப்பார் அந்த அப்பாவி மனுஷன்.

    துரை உங்க எழுத்து ஸ்கில் ....It's amazing.
    I am still laughing .Thank you so much. You are very astute,.
    And Simmu would have loved the whiskey part too:)
    thank you. Ha..... feel so light.

    பதிலளிநீக்கு