2013/04/08

(மெல்லிசை) நினைவுகள்




    ர் திரும்பியதும் சில பாடல்களைத் தேடிக் கேட்க வேண்டியிருந்தது. அவசரமாக. காரணம் பிறகு சொல்கிறேன். இது முதலாவது பாடல்.
உய்மா உய்மா எ க்யா ஹோகயா..


    றக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஜேசுதாஸ் கச்சேரிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. குவைத் மைத்துனர் அருள். ஜேசுதாசின் கர்நாடக இசை எனக்குப் பிடிக்கும். இன்றைக்கும் குரல் பிசிறில்லாமல் அதே இளமையோடு இருப்பது, பாடும் பொழுது தெரிந்தது. சிலிர்க்க வைத்தது. கொஞ்ச நேரம் தான். அப்புறம் வித்வான்களுக்கேயுள்ள குளறுபடி. கர்நாடக இசை என்று அறிவித்துவிட்டு கர்நாடக இசையுமில்லாமல், இந்துஸ்தானியுமில்லாமல், மலையாள பக்திப்பாடல்கள் என்றுமில்லாமல், ஹிந்தி சினிமாப்பாடல் என்றில்லாமல், ஐயப்பன் பாடல்கள் என்றில்லாமல் - உப்புச்சப்பில்லாத அவியல். குரல்வளத்தை வைத்துக்கொண்டு "தாண்டு ராமா" விளையாடுகிறாரே என்று வருந்தினேன். மனிதர் ஒரு தமிழ்ப்பாட்டு கூட பாடவில்லை தெரியுமோ?

நடுவில் சண்டை வேறே. பாதிப் பாட்டின் போது (சரஸ சாமதான, ஜேசுதாஸ் நன்றாகவே பாடினார்), வரிசையில் இருந்த ஒருவர் செல்போனில் பேசத் தொடங்கினார். என் தம்பி ஏதோ சொல்லப்போய் அந்த நபர், "பஷ்டபால், டு யூ அன்டர்ஸ்டேண்டு வாட்டு ஹி இஸ் சிங்கிங்கு?" என்றார். "பன்னாடை, மூதேவி, பொறம்போக்கு நாயே, இங்லிஷ் வேறயா? செவிட்டுப் பொணமே. உனக்குப் புரியலேனா அடுத்தவனை கேக்க விடுறா.. கசுமாலம் தரித்திரம் பன்னி பன்னி" என்று சொல்லப்போன என்னைத் தடுத்து, என் தம்பி பண்புடன் ஏதோ சொல்லவே நபர் செல் மூடி அடங்கினார்.. கச்சேரி முடிந்து வெளியே வரும்பொழுது சண்டையாவது போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

    ப்லூமிங்டன் பயணத்தில் படித்தப் புத்தகம். இரண்டு பதிவெழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஆனால் எழுதப் போவதில்லை, போரடிக்கும். பாருங்கள், இது போன்ற புத்தகங்களைப் படிப்பது சிரமம். ஓகே, எனக்கு சிரமமென்றேன்.

இரண்டாம் பகுதியில் புத்தர் தோத்திரம் மதம் என்று ஆழமற்ற விஷயங்கள். மணிமேகலை தவிர. முதல் பகுதியில் நிறைய ஆழமான விஷயங்கள். 'அருமையாக இருக்கிறதே படிக்க' என்று பத்து பக்கம் புரட்டினால் பொசுக்கென்று இனப்பகை. பிராமண இனத்தைத் தமிழின் எதிரிகள் போல் பாவித்து எழுதுவது ஏனென்று புரியவில்லை. 'என்னவோ இவர்கள்தான் தமிழ் வளர்த்தார்கள் போல.. யாரிந்த மயிலை சீனி வேங்கடசாமி?' என்று தேடிப்பார்த்தால்.. அய்யோடா, பெர்ர்ரிய சாதனையாளர்! அடக்கிக் கொண்டு படித்து முடித்தேன்.

ப்ரம்மி எழுத்துக்களிலிருந்து ஐம்பெருங்காப்பியங்கள் வரையில் தமிழ் வளர்த்த பௌத்த மதம் பற்றிய நிறையக் குறிப்புகள். தமிழில் பாலி (ஆதி பௌத்த மொழி - தமிழ் நாட்டில் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது) மொழிக் கலப்பு பற்றிய பகுதி சுவாரசியம். புத்தகத்தின் தயவால் குண்டலகேசி கதை கிடைத்தது. பெரிய பலன்.

அவ்வப்போது வசதிக்கேற்றார்போல் சமணமும் பௌத்தமும் ஒன்றே என்ற வாதம் இடிக்கிறது. தமிழ் நாட்டின் பல்வேறு ஊர்களில் இருக்கும் சமண பௌத்த இடங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பிள்ளையார் கோவில் பற்றிய விவரம் சுவாரசியம். பிள்ளையார் இந்துக் கடவுளே அல்ல என்ற பாணியில் விவரம் சொல்லியிருக்கிறார். சமண 'வினாயகர்' கோவில்களை இடித்து இந்துக்கள் பிள்ளையார் கோவில் கட்டியதாகச் சொல்கிறார். கோவில் இடிப்பு, பௌத்த சமண நினைவாலயங்கள், தடங்கள், இடிபாடுகள் என்று பக்கம் பக்கமாகப் போகிறது புத்தகம். இந்துமதம் இதை ஏற்றுக் கொண்டது அதைத் திருடியது என்றும் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்.

இதற்கும் தமிழ் வளர்ப்புக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்குத் தோன்றினால் - ஹிஹி.. நாம் ஒரே கட்சி.

பௌத்த மதம் தமிழ் வளர்த்தது என்று சொல்லட்டும் தவறேயில்லை, உண்மையும் கூட. ஆனால் இன்னொரு மொழியோ இனமோ தமிழைக் கெடுத்தது போல் எழுதுவதால் என்ன பயன்? பழைய புத்தகம். என்றைக்கோ எழுதியது. இப்போது விமரிசித்துப் பயனில்லை.

தமிழ் வளர்க்க விரும்பிய அத்தனை பேரும் வளர்த்தார்கள் என்றே நினைக்கிறேன். ஜாம்பஜார் ஜக்கு உட்பட. நிற்க, ஐம்பெருங்காப்பியங்கள் என்பதே பொருந்தாத, போலி அங்கீகாரம் என்பது என் கருத்து. சங்க இலக்கியங்கள் (குறுந்தொகை, புறநானூறு), இறையிலக்கியங்கள் (திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், தேவாரம்) எல்லாம் தமிழ் வளர்க்காமல் தயிரா கடைந்தன?

போகட்டும். ஐம்பெருங்காப்பியங்கள் மூன்று படித்திருக்கிறேன். மூன்றில் ஒன்று மட்டுமே தமிழ் வளர்க்க எழுதப்பட்டது. இது என் கருத்து. உதைக்க விரும்புவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

மொழி வரலாற்றில் விருப்பமுள்ளோர் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம். தையல் வெளியீடு. ரூ.100.

    ன்னுடன் வாஷிங்டனுக்குப் பனிரெண்டு மணி நேர விமானப்பயணம் செய்தவரைப் பற்றிச் சொல்லவேண்டும். ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஆறுமாத ஆராய்ச்சிக்காக வந்திருக்கிறார். 'இந்தியச் சமூகவளர்ச்சியில் திரையிசையின் பாதிப்பு' பற்றிய ஆய்வு. "இங்கே எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டேன். இந்தியாவில் இல்லாத அளவுக்கு இங்கே பாடல்களைக் குறிப்புகளுடன் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். ஆராய்ச்சிக்குப் பணமும் தருகிறார்களாம். நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் புலம்பலும் கலந்து சொன்னார். "நம்ம ஆளுங்களுக்கு இல்லாத அக்கறை பாருங்க சார்!".

இந்த ஆராய்ச்சி பற்றிய ஆர்வம் எப்படி வந்தது என்றுத் தொடங்கி நிறைய பேசினோம். இசையமைப்பாளர் வேதா இவருடைய உறவாம். "அடடே" என்றேன். வேதாவின் இசையில் நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். "அப்பட்டமான இறக்குமதி என்றாலும் கூச்சப்படாமல் வஞ்சனையில்லாமல் பாடல்கள் தந்திருக்கிறார் உங்கள் உறவினர்.." என்றேன். மனிதர் அமைதியானார். "இந்தியிலிருந்து யார் தான் தட்டவில்லை? எம்எஸ்வி எத்தனை பாடல்களைத் தட்டியிருக்கிறார் பாருங்கள்.." என்று ஒரு லிஸ்ட் கொடுத்தேன். ஒருவேளை வேதாவைக் கிண்டல் செய்வதாக நினைத்துவிடக்கூடாதே? மனிதர் அமைதியாக இருந்தார். "இந்தியிலிருந்து எடுத்தாலும் தமிழில் அட்டகாசமாகத் தந்திருக்கிறார் - அவர் இல்லையென்றால் நிறைய இந்திப்பாடல்களின் இனிமையான மெட்டுக்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.." என்றேன். மனிதர் எதுவும் சொல்லவில்லை. "சமீபத்தில் தெரிந்து கொண்ட 'இதய வானின் உதய நிலவே' அவருடைய உச்சப் பாடல்களில் ஒன்று.. மை மோஸ்ட் ரீசன்ட் பேவரிட்.." என்றேன். குளிர்ந்திருப்பார் என்ற நம்பிக்கையில்.

மெள்ள, "யாரைச் சொல்றீங்க?" என்றார். புருவம் சுருக்கிப் பார்த்தேன். நமக்குத் தெரியாத வேதாவா? பிறகு என்னை நேராகப் பார்த்து, "பாச்சா பாட்டுங்க கேட்டிருக்கீங்களா?" என்றார். பாச்சாவாவது மூச்சாவாவது? என்ன சொல்கிறார் இவர்? "கேட்டதில்லையே? எந்த இந்திப்பாட்டு அது?" என்றேன். "இந்திப்பாட்டில்லிங்க.." என்று விவரம் எல்லாம் சொன்னார். நெளிந்தேன். "ஹிஹி.. நீங்க சொன்னது வேதானு காதுல விழுந்துச்சு.. அதான். மன்னிக்கணும்..." என்றேன்.

தரைதொடும் வரை அவர் பக்கமே திரும்பவில்லை. பாச்சா கேட்கணுமாமே? குலை நடுங்கியது. வீட்டுக்கு வந்ததும் கேட்ட பாடல்களில் அடுத்து வருவது முதலில் கேட்ட இந்திப்பாடலின் தமிழ்.
காவிரிக்கரையின் தோட்டத்திலே..

தமிழ் வடிவம் அட்டகாசம் என்று தோன்றுவதற்குக் காரணம் வேதா மட்டுமல்ல, சுசீலா மட்டுமல்ல, புரிவது மட்டுமல்ல, 00:56 - 01:01ம். தில்லையம்பலம் போற்றிஹி.

    ன் தங்கை மகன் ஹார்வர்டில் படிக்கப் போகிறான். செய்தி கேட்டதும் அவனிடம், "எனக்குப் பெருமையாக இருக்கிறது" என்றேன். "எல்லாம் அம்பாள் அருள்" என்றாள் என் தங்கை. ஆக இருவருமே அவன் செயலை, அவன் உழைப்பை, முதலில் பாராட்டவில்லை என்பது இடித்தது. என்னை விட என் தங்கை எவ்வளவோ மேல். அவளாவது அம்பாள் என்றாள், நான் அவன் உழைப்பில் குளிர்காயப் பார்த்தேன். உருப்படமாட்டேன், விடுங்கள். தவளைகளைத் தத்தித் துரத்தி "இதோ பார் மாமா" என்று எளிய சந்தோஷங்களைத் தேடியச் சிறுவன் கண்களில் நிற்க.. ஒரு மெய்யான சாதனையை சாதாரணப் புன்னகைக்குள் மறைத்து இயல்பாகப் போகும் இவனுக்கு.. இப்பொழுது இதைப் பற்றிப் பதிவிடும் நான் எப்படிச் சொந்தமானேன்? படிப்பிலும் வேலையிலும் காட்டுத்தனமாக உழைக்கிறான். முதியோர் வீட்டு நாய் பூனைகளை தினம் ஒரு மணியாவது பூங்காவில் நடக்க அழைத்துப் போகிறான். படித்து முடித்ததும் என்ன செய்யப்போகிறான் என்றத் திட்டத்தைக் கேட்டதும் அசந்து போனேன். எண்ணத்திலும் செயலிலும் தெளிவாக இருக்கிறான். எங்கிருந்து வந்தான் இவன்?! இந்தப் பரம்பரையின் அடுத்தத் தலைமுறைக்கான ஹீரோ தயாராகிறான் என்பது புரிந்தது. இன்னும் சாதிக்கட்டும். சிறப்போடு வாழட்டும்.

    ன்னொரு பெருமைக்குரிய செய்தி சமீபப் பயணத்தில் தெரிந்தது. என் நண்பன் மகளைச் சந்தித்தேன். என் முகவரியை நினைவாக வைத்திருந்து எனக்குச் செய்தி அனுப்பியிருந்தாள். அவளுடைய அனிமேசன் திறமையைப் பார்த்த டிஸ்னி நிறுவனம் அவளை உடனடியாக வரச்சொல்லி வேலை கொடுத்திருக்கிறதாம். மும்பையிலிருந்து ப்ரான்சுக்கு வந்திருந்தாள். இங்கே ஒரு படப்பிடிப்பில் ஆறு மாதங்கள் கலந்து கொண்டு பிறகு ஹாலிவுட் போவாளாம். வரப்போகும் ஒரு படத்துக்கான முழு வடிவமைப்புப் பொறுப்பையும் இவளிடம் கொடுத்திருப்பதாகச் சொன்னாள். "அப்படியா? நல்ல சம்பளம் கொடுப்பார்களா?" என்றேன். அல்பம், அல்பம்! தொகையைக் கேட்டதும் நடுங்கிப் போனேன் என்றால், அடுத்து சொன்னதைக் கேட்டு ஆடிப் போனேன். "ஒரு படம் அங்கிள், தட்ஸ் இட். நான் திரும்பிப் போறேன். seed money.. பணத்துக்காக இதை ஒத்துக்கிட்டேன். நான் படிச்சதன் காரணம் இது இல்லே.." என்று விவரம் சொன்னாள். ஒரு பெரிய கம்பெனியில் சில வருடங்கள் வேலை பார்த்து, சம்பாதித்தது போதும் என்று வேலையை விட்டவள். புவனேஸ்வர் அருகிலோ எங்கேயோ ஒரு corporate sponsored பயிற்சி முகாம் தொடங்கப் போகிறாளாம். பில் கேட்ஸை சந்தித்திருக்கிறாளாம். அறக்கட்டளையிலிருந்து உதவி கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு சொன்னாள். எட்டு முதல் பதினொரு வயது வரையிலான பின்தங்கிய வசதியற்ற பெண் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி வசதி செய்யப் போகிறாளாம். அவளுடையக் குறிக்கோள் நூறு பெண் குழந்தைகளை ஐஐடி ஐஐஎம் படிக்க வைப்பதாம்! எங்கிருந்து வந்தாள் இவள்?! அசல் ஹீரோ!

"அங்கிள்.. சின்னப்போ வீட்டுக்கு வந்து இஷ்டத்துக்கு மசாலா சேர்த்துப் புராணக் கதை சொல்வீங்களே, ஞாபகம் இருக்கா?" என்று நெகிழ்ந்து பேசினாள். இவளைத் தூங்கப் பண்ணியிருக்கிறேன். இவளுக்கு இப்போது இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்குமா? இருக்கும். இவளின் அப்பா ரங்கன், என் இரட்டைபாத் வட்டத்தில் ஒருவன். "அம்மா எப்படி இருக்காங்க?" என்றேன். "ஷிஸ் ஹேப்பி.." என்றாள். "அப்பா எப்படி இருக்கான்?" என்று கேட்கவில்லை. காரணம், இவள் பிறந்த அன்றைக்கு ரங்கன் இறந்தான்.

காதல் வயப்பட்டிருந்த காலத்தில் ரங்கன் இந்தப் பாட்டை அடிக்கடி முணுமுணுப்பான். அவனுடைய காதல் பற்றி இன்னொரு சமயம். இப்போதைக்கு.. ரங்கா, உன் பெண் சாதனையரசிடா!
சந்தா ஓ சந்தா..

19 கருத்துகள்:

  1. சென்னை பு.கண்காட்சில வாங்கின பெளத்தமும் தமிழும் முழுக்க முடிச்சாச்சா? நல்லது. தேவா - வேதா சரியான குழப்பம்...! தேவா பண்ணின ஜெராக்ஸை விட வேதாகிட்டருந்து வந்த ட்யூன்கள் இப்பவும் இனிமைதான்ங்கறதுதான் என் கருத்தும்!

    பதிலளிநீக்கு
  2. கடைசியிலே கண் கலங்க வைச்சுட்டீங்க.

    ஹிஹிஹி, சீனி.வேங்கடசாமியின் இந்தக் குறிப்பிட்ட புத்தகம் குறித்து நிறைய மின் தமிழில் விவாதம் நடந்தது. அவ்வப்போது நடக்கும். ஹிஹிஹி, தேவாரம், திருவாசகமெல்லாம் சமண முனிவர்கள் இயற்றியதுனு நாங்க எப்போவோ ஒத்துண்டாச்சே! :))))

    பதிலளிநீக்கு
  3. I wished your nephew and his mom after hearing on Harvard.

    Your family = great education.

    பதிலளிநீக்கு
  4. முதலாவது பாடல் கேட்டவுடன், தமிழில் உண்டே (முதல் வரி ஞாபகமே வரவில்லை) என்று நினைத்துக் கொண்டே வாசித்தேன்... பின் காணொளியில் கண்டேன்... நல்லதொரு புத்தக அறிமுகம்... நன்றி... முடிவிலும் இனிமையான பாடல்...

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பரம்பரையின் அடுத்தத் தலைமுறைக்கான ஹீரோ தயாராகிறான் என்பது புரிந்தது. இன்னும் சாதிக்கட்டும். சிறப்போடு வாழட்டும்.//

    சாதனையரசி ---வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  6. There is also a reference of Buddhism in Sandilyan and Kalki's Novels. It is a great research but I do not think whether it will help us to come to any concrete conclusion. Regarding Yesudass, sometime it happens if they want to sing for the audience because audience is a mixture of all.
    Happy to note that your sister's son is doing well in studies and household work. But you ended this post with a sad note.
    Nowadays youngsters are not working only for money; their ambition and goal is beyond our imagination

    In toto, nice post. Actually, when I heard the hindi song, my mind immediately responded by saying that there is tamil song also in the same tune but could not locate the exact wordings and while reading this post, you have given the equivalent song in tamil

    I ENJOYED YOUR POST VERY NICE please keep posted with such matters.

    பதிலளிநீக்கு
  7. தங்கை மகனுக்கும் நண்பர் மகளுக்கும் நல்வாழ்த்துகள். அவர்களது கனவுகள் யாவும் மெய்ப்படட்டும். சாதனையரசியின் அன்னைக்கு என் வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  8. // என் தம்பி பண்புடன் ஏதோ சொல்லவே நபர் செல் மூடி அடங்கினார்..// ஹ ஹா ஹா
    // நாம் ஒரே கட்சி.// நான் உங்க கட்சியே தான்

    அப்போ அது தேவா வா ஹா ஹா ஹா

    அடேயப்பா எவ்வளவு பெரிய மனிதர் நீர்.. பெரிய பெரிய மனிதர்களுடனும் சாதனையாலர்களுடனும் அசாதாரணமாய் பழகுறீங்க...

    உங்களை அறிமுகம் செய்த வாத்தியார் பால கணேசுக்கும், ஸ்ரீ ராம் சாருக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  9. உங்களது நண்பர் மகளைப் பற்றிய பத்தியைப் படித்து முடித்த கணத்தில் கண்களில் நீர்!...

    தந்தையை இழந்த பிறகான உளச்சிக்கல்களுக்கு ஆளாகாமல், அவளைத் தனித்து துணிந்து சிறந்து ஆளாக்கிய பெண்மைக்கு வந்தனம்.

    உண்மையில் ஆண்கள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சியான வாழ்விற்கு பெண்கள் அளிக்கும் பங்கு மகோன்னதமானது; அவர்களுக்கு அளிக்க வேண்டிய பாராட்டை எளிதாக, என் அம்மா, என் மனைவி,என் தங்கை-அவள் செய்ய வேண்டியது அவள் கடமை என்று எளிதாகப் புறம் தள்ளுகிறோம்- என்ன உண்மை சுடுகிறது..

    பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா' என்ற தெரியாமலா அறைந்து சொன்னான் நம் ஞானசூர்யன்?

    இந்தச் சிறு பெண்ணுக்குள் இருக்கும் ஆசைகள் பல்கிப் பெருகி அவளது கனவுகளோடு பல முகந்தெரியாத ஏழைக் குழந்தைகளின் கனவுகளும் மெய்ப்படட்டும்..

    பௌத்தமும் தமிழும் பற்றி என்னுடைய பதிவின் பின்னூட்டத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்; பழந்தமிழில் நிலவிய கலைகளைப் பற்றிய கட்டுரை அந்த நூலில் முக்கியமானது என்று கருதுகிறேன்.(நான் படித்த புத்தகத்தின் பதிப்பகம் வேறு;அவர்கள் தொகுத்த கட்டுரைகளில் அது இருந்தது. இந்தப் பதிப்பில் இருக்கிறதா என்று தெரியவில்லை)

    பதிலளிநீக்கு
  10. மகளின் முகத்தில் நண்பரைத் தேடும் நினைவுகள் நெகிழச்செய்தது. தங்கை மகனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஹிந்திக்குத் தமிழ் தேவலாம்!

    கே ஜே யேசுதாஸ் கச்சேரிக்கு டிக்கெட் இருந்தும் (வாணி மகால்) போகவில்லை. முன்னாள் எல்லாம் நல்லாப் பாடுவார்.

    தமிழை எப்படி வளர்க்கவேண்டும் என்று சொன்னால் எல்லோரும் வளர்க்க முயற்சிக்கலாம்.

    அதே பாட்ஷாவில் இதே தேவா ஹிந்தி 'கேரவான்' படத்திலிருந்து 'தில்பர்...தில்பர்...' பாடலை 'அழகே நீ பேரழகு' என்று சுட்டுச் சுடச்சுடத் தந்திருக்கிறார்!

    தங்கை மகனுக்கு எங்கள் வாழ்த்துகள். ரங்கர் மகளுக்கும்.

    'சந்தா ஒ சந்தா பாடல் காட்சியில் மெஹ்மூத் குழந்தையைத் தூன்காச் செய்ய வேண்டிப் பாடும் பாடல் அது.
    அது கிஷோர் பாடுவது. இது லதாவின் தேன்குரல்.

    என்ன இருந்தாலும் R D Burman, R D Burman தான்

    பதிலளிநீக்கு
  12. வேதாவின் மறு பிறவி தான் தேவா!
    அந்தக் காலத்தில் வந்த ஜெய்சங்கர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் ரக சினிமாக்களின் பாடல்கள் எல்லாமே (வேதாவின் இசையில்) ஹிந்தி பாடல்களின் காப்பிதான்!

    உங்கள் தங்கை மகனுக்கும், நண்பரின் மகளுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா...
    என் வலைப்பூவிற்கு வருகை தந்து வாழ்த்தியிருந்தீர்கள். மிக்க நன்றி...

    இங்கும் உங்களின் பதிவை மிகவே ரசித்தேன்.அருமை.

    முடிவில் உங்கள் நண்பரின் மகளின் சேவை மனப்பாங்கு மனதைத்தொட்டது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

    சிறந்த பதிவினைத்தந்த உங்களுக்கும் என் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா...

    பதிலளிநீக்கு
  14. வேதாவின் பாடல்கள் கேட்க இனிமை காப்பி அடித்தாலும் அழகாய், இனிமையாய் காப்பி அடித்து இருப்பார்.



    //எண்ணத்திலும் செயலிலும் தெளிவாக இருக்கிறான். எங்கிருந்து வந்தான் //

    //அடுத்தத் தலைமுறைக்கான ஹீரோ தயாராகிறான் என்பது புரிந்தது. இன்னும் சாதிக்கட்டும். சிறப்போடு வாழட்டும்.//

    தங்கை மகன் சாதனைகள் பலசெய்து சிறப்பாய் வாழ வாழ்த்துக்கள்.

    //அவளுடையக் குறிக்கோள் நூறு பெண் குழந்தைகளை ஐஐடி ஐஐஎம் படிக்க வைப்பதாம்! எங்கிருந்து வந்தாள் இவள்?! அசல் ஹீரோ!//

    அருமையான குறிக்கோள் உள்ள பெண்
    வாழ்க! வளர்க!
    உங்கள் நண்பர் மகளுக்கு வாழ்த்துக்கள்.


    ’பெளத்தமும் தமிழும்’ புத்தகம் எங்கள் வீட்டில் இருக்கிறது.






    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை அவர்களே! மு.ராகவ ஐயங்கார் பெரிய தமிழ் அறிஞர்! சமணம்,பௌத்தம்,தமிழ் என்று நிறய்ய கட்டுரைகள் எழுதியுள்ளார்! களப்பிரர்கள் பற்றியும் எழுதியுள்ளார்! இந்த ராகவய்யங்கார் யார் தெரியுமா? உமக்கு எளிதாக தெரிய வேண்டுமல்லவா! சினிமா பாட்டு பாடும் "சின்மயி" ங்கர பொண்ணு என்னோட தாத்தா நு அறிவிச்சிருக்கு! அவர் தான்!
    தமிழ் இசை இயக்குனர்களை கீண்டல் பண்ண்றேரே! தமிழ் நாட்டுக்கு எப்போ வரப் போறீர்! திருமா வளவன்,கிருஷ்ணசாமி ஆகியோர் காத்துக் கிட்டு இருப்பாங்க சாமியோவ்!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  16. appathurai! pl.visit u tube - mahathi-chinmayi -vairamuthu -song-one of the beautifully written rendered,recorded,song ! waiting faor ur comment---(ஆத்தோரம் பூத்தமரம்) ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  17. உய்மா விவித் பாரதியில் வராத நாட்கள் கிடையாது.
    காவிரிக்கரையின் கதநாயகி கிக் பாக்ஸிங் கற்றிருப்பார்.
    டைட்ஸ் போட்டே கதநாயகியாகக் காலம் ஓட்டினார்.

    வேதா தேவா ..சரிப்படாது. வேதாவின் பாடல்களில் நளினம் அப்படியே இருக்கும்.

    உங்கள் மருமகனுக்கும்,அசத்தும் நன்பரின் மகளுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். இளம் நெஞ்சங்கள் வளம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  18. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    @அறிவன்: நீங்கள் எழுதிய கட்டுரைக்கும் இதற்கும் ஹிஹி.. என்னங்க நீங்க.. நான் ஏதோ பொழுது போவாம புத்தகம் படிச்சு எழுதுறேன், நீங்க எழுதினது ஆராய்ச்சிப் பதிவு.. அதையும் இதையும் போய்..
    @கீதா சாம்பசிவம்: நீங்கள் சொன்னபிறகு தான் மின் தமிழ் பார்த்தேன். ரொம்ப சிரமமான குழுமம். படிப்பதற்கு. இருந்தாலும், தேடிப் படித்ததில் சுவாரசியமாகவே இருந்தது. நல்லவேளை, அதில் கருத்து பகிர்ந்துகொள்கிறவர்கள் எல்லாருமே மெத்த அறிந்தவர்களாக இருக்கிறார்கள் - நான் பிழைத்தேன். இல்லையெனில் ஏதாவது சொல்லி வைத்திருப்பேன்.
    coming to that: மதம் என்னைக்குமே மொழி வளர்த்ததா சரித்திரத்தில் அதிக ஆதாரம் இல்லை (லத்தீன்/சமஸ்க்ருத மொழி தவிர). மதத்தை சார்ந்தவர்கள் அவரவருக்குத் தெரிந்த மொழியிலே எழுதினார்கள் - மத சார்பின் காரணத்தால் பெரும்பாலும் இறையிலக்கியமாகவும் இருந்தது. அதற்காக மதம் மொழி வளர்த்தது எனலாமா? மதம் மொழி வளர்க்குமென்றால் இன்றைக்கு நிறைய பேர் உலகில் லத்தீனும் சம்ஸ்க்ருதமும் பேசிக் கொண்டிருப்பார்கள். தமிழில் இது போன்ற மத/இனவெறிப் புத்தகங்கள் ஆதரிக்கப்படும்வரை நாம் உண்மையான மொழி வளர்ப்பை அறியமாட்டோம். அறிவை வளர்ப்பது மொழியெனின் எந்த மொழியானால் என்ன? எங்கிருந்து வந்தால் என்ன? மத லேபில் கொடுத்து ஒதுக்கிவிடுவதால் யாருக்கு நஷ்டம். நமக்குத் தான். பிரம்மிக்கு முன்பே தமிழில் எழுத்துக்கள் இருந்தன. அதனால் என்ன, பிரம்மியையும் வரவேற்று ஏற்றது தமிழ். அவ்வளவுதான். இன்றைக்கும் தமிழன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான். இன்றைய டிவியில் தமிழில் தமிழ்ச் சொற்களே இல்லாதது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. ஏஆர்ரஹ்மான் அறிமுகம் செய்யும் பாடகர்கள் பாதிப்பேர் தமிழைக் குதப்பி மாற்றிவிடுகிறார்கள். அதற்காக டிவி/ஏஆரஆர் ரசிக்காமலா இருக்கிறோம்? இன/மத சார்பு கருத்துக்களைச் சொல்லி ஒதுக்கிவிடுகிறோமா? இல்லையே? அதனால் எனக்கு இது போன்ற புத்தகங்களை எழுதுவோரிடத்தே மொழி வளர்ப்பைப் பற்றிய ஆராய்ச்சி நோக்கத்தை விட சற்றுக் கீழ்த்தட்டு நோக்கங்களே ஊடுறுவியிருப்பதாகத் தோன்றுகிறது.
    @காஸ்யபன்: சின்மயா தெரியும், சின்மயி யாரென்று கூடத் தெரியாது. சுட்டிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. சின்ம‌யி பற்றி தெரிந்திருக்க‌ நீங்க‌ள் த‌மிழ் டிவிட்ட‌ர் உல‌கத்துக்கு வந்தாக் வென்டும் அப்பாஜி.
    க‌கிப‌ன் சார் கிரிடிக் அருமை.

    பதிலளிநீக்கு