2013/01/27

காணாமல் போன காலம்



         ஸ் சர்ச்சுக்கும் முசிறி சுப்ரமணியத்துக்கும் இடையில் ஓடிய வாகனப் பிரளயத்தை எப்படிக் கடப்பது என்று திகிலுடன் தவித்துக் கொண்டிருந்தேன். ஒரு பத்து வயது அரைடிராயர் வடிவிலே இறைவன் தோன்றி வழிகாட்டினார். அவசரமாக அரைடிராயரைப் பின் தொடர்ந்துக் கரையேறினேன். என்னே ஈசனின் விளையாட்டு!



         காயிதே மில்லத் வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடந்த போது, அந்த நாள் காதலியோடு போனது - பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அந்நாள் காதலியும் இல்லை, இந்நாள் காதலியும் இல்லை துணைக்கு இந்த முறை.. அதுவல்ல ஏமாற்றம்.



         தே மின்வண்டி. அதே குப்பை. அதே வெற்றிலைக்காவி. அதே மலமூத்திரம். என் எதிர்பார்ப்பில் தவறு என்றாலும் சென்னை மின்ரயில்களில் கொஞ்சமாவது சுத்தம் சுகாதாரம் உண்டாக எல்லாம் வல்ல ஈசன் அருள் செய்தால் பரவாயில்லை. குறைந்தபட்சம் அசுத்தம் செய்வோரின் கண்களைக் குத்தினாலாவது நன்றாக இருக்கும்.



         டைமேடை(!) கடந்து, தடம் தாண்டி, சுவரிடித்தக் குறுக்கு வழியில் மந்தையோடு மந்தையாக வேளச்சேரி மெட்ரோ ஸ்டேஷன் வெளியே வந்த என் முகத்தில் நிதானமாக சிகரெட் ஊதிப் போன முக்கால் ஜீன்ஸ் காலரைக்கால் நீலச்சட்டை சுந்தரிக்கு, அந்தத் திருமயிலை திருகபாலீசுவரன் திருவருளால் விரைவில் டியோடரன்ட் ஞானம் பிறக்கட்டும். பெண்மணம் இத்தனை மோசமா! தாங்கமுடியலப்பா!



         புத்தகக் காட்சியரங்கின் குண்டுகுழிகளில் தடுக்கியோ கம்பளிகளில் தடுமாறியோ விழுந்து அடிபட்டோர் எவரேனும் பபாசிக்காரர்கள் மேல் வழக்கு தொடுத்தால் என் செலவில் ஆதரவுச் சாட்சி சொல்ல நான் தயார். அழகாக இல்லாவிட்டால் போகிறது, ஆபத்திலாத பாதை போடும் அளவுக்குக் கூட மக்கள் மீது மதிப்பு கிடையாதா பபாசிக்காரர்களுக்கு? சீ!



         ஸ் முனையில் ரத்னா கபே இருந்ததாக நினைவு. சினிமா தியேடருக்கு மறுபிறவி உண்டென்பதைப் புரிய வைத்தது மயிலை காமதேனு. பல்லாவரம் லட்சுமி தியேடர் என்னாகுமோ தெரியவில்லை. மக்கள் சினிமா பார்ப்பதை விட்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள் போல.



         பொங்கல் விடுமுறைக்கு டாஸ்மாக் கடைகள் அடைத்திருந்தாலும் ஸ்டார் ஹோட்டல்காரர்கள் 'ட்ரிங்சுக்கு பில் தரமாட்டோம் பரவாயில்லையா?' என்று பணிவோடு அனுமதி கேட்டு, குளிர்ந்த சாராய பானங்களை ஓசைப்படாமல் இன்முகத்துடன் வினியோகம் செய்தார்கள்.



         பாசிக்காரர்கள் என் இரண்டு நாள் நுழைவுக்கட்டணத்தைத் திருப்பினால் நன்றாக இருக்கும். பொதுநல அக்கறையோ, பொருட்காட்சி அறிவோ இல்லாமல் தொடர்ந்து கண்காட்சி நடத்தும் பபாசிக்காரர்கள் உடனடியாக மூன்று காரியங்கள் செய்ய வேண்டும். 1- இது வரை மக்களை ஏமாற்றியதற்கு வெட்கமும் வேதனையும் படவேண்டும். 2-புத்தகம் வாங்க வருவோரின் எதிர்பார்ப்புகளை அரைகுறையாகவாவது புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். 3-இனி வரும் காட்சிகளில் புத்தகம் வாங்குவோரையும் சுலபமாகக் கிடைக்கும் சமகாலத் தொழில்நுட்பங்களையும் மனதில் வைத்து அரங்கை அமைக்க வேண்டும்.



         தாழ்தள மிதவைப் பேருந்தில் கிண்டி தொழிற்பேட்டையிலிருந்து குரோம்பேட்டை போகையில் கூடவே பயணம் செய்த, தார்தள ஹீரோ ஹான்டாவின் வலது ஹேன்டில் பாரில் தொங்கிய ஒரு புடவைக்கடைத் துணிப்பையிலிருந்து அவ்வப்போது தலையை மட்டும் நீட்டி அலுக்காமல் ஆச்சரியங்களை உள்ளிழுத்து வந்தது வெள்ளை நிறத்தொரு பாமரேனியன் குட்டி. எப்போது வெளியே துள்ளிக் குதிக்குமோ என்று வழி மேல் விழி வைத்துக் கதிகலங்கினேன். அருமையான photo opportunity தவறிப்போனது.



         ஞ்சாவூர் பெரியகோவில் பார்த்தேன். முதல் முறையாகப் பார்த்த இன்ப அதிர்ச்சி தணிய நாளாகும். பேலஸ், கலைக்களஞ்சியம், சரஸ்வதி மஹால் எல்லாம் நாள் நேரமெடுத்துப் பார்க்க வேண்டும். actually, கலைக்களஞ்சியம் பார்க்கப் போவதில்லை. சுவாரசியமாக அமைத்தால் ஒழிய.



         புத்தக அரங்கின் கடைகளை 'வீதி'களில் அமைத்திருந்தார்கள். முதல் வீதி 'ஜவர்ஹர்லால் நேரு' பெயரில். புத்தகத்துக்கும் இவருக்கும் என்னய்யா சம்பந்தம் பிரிய பபாசிக்காரரே? காண்டேகர், அகிலன், லக்ஷ்மி, கல்கி, தாஹூர், கம்பன், பாரதி.. அட ஒரு ஜூஜாதா, வைரமுத்து.. பெயரா கிடைக்கவில்லை? இந்த முறை சுஜாதாவுக்கு பேனர் வைத்திருந்தார்கள். ..ம்.. பேனர் வைத்து விற்கவேண்டியிருந்தால் இனி சுஜாதா புத்தக விற்பனையின் இறங்குமுகமா?



         குறுங்காலப் பயணமாக இந்தியா வரும் உள்ளூர் அடையாளமற்ற அனாதைகளுக்கு இன்டர்னெட் வசதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கலாமா என்று தோன்றுகிறது. அல்லது குரோம்பேட்டை ஆனந்த பவனில் சாப்பிடலாமா என்று தோன்றுகிறது. இரண்டும் ஒன்று தான். 'இங்கே உட்காராதே, அங்கே உட்காராதே' என்று உண்ண வந்த வாடிக்கையாளர்களை விரட்டியடிக்கும் குரோம்பேட்டை ஆனந்த பவன் இதே ரீதியில் தொடர்ந்தால், விரைவில் உட்கார ஆளில்லாமல் துண்டு போட்டு மூடும். சந்தேகமே இல்லை.



         'இதற்குக் கீழ் தரங்கெட முடியாது' என்று சென்ற முறை வந்த போது நினைத்தேன் - ஆட்டோக்காரர்கள் வியக்க வைத்தார்கள். தரங்கெட்டவர்கள் என்றால் அது ஓரளவுக்கு பாராட்டாகத் தோன்றுமளவுக்கு, தொழில் முறை மட்டுமல்ல குறைந்த அளவுப் பண்பு கூட இல்லாமல் இப்படிக் கேடு கெட்டக் கூட்டமாக பெரும்பாலான சென்னை ஆட்டோக்காரர்கள் மாறியிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சென்னை ஆட்டோக் கிருமிகள் பெங்களூர் ஹைதராவிலும் பரவத் தொடங்கியிருக்கின்றன. சென்னை அளவுக்கு மோசமில்லை என்றாலும் பெ, ஹை நகரங்களில் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போடுவதை நிறுத்தியதோடு அல்லாமல் சென்னை போலவே அடாவடியாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.



         மைப்பாளர்கள் அப்படியென்றால் கடை விரித்தவர்கள் இன்னும் மோசம். எத்தனை தொழில் நுட்பம் கிடைக்கிறது இந்த நாளில்! ஒரு புத்தகக் கடையிலாவது புத்தகத் தேடலுக்காக ஒன்றிரண்டு கியாஸ்க் வைக்கக்கூடாதா? காய்கறி போல் அப்படியே புத்தகங்களைக் கொட்டி வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளரையும் மதிக்கவில்லை, புத்தகங்களையும் மதிக்கவில்லை, எழுத்தாளர்களையும் மதிக்கவில்லை - பணத்தை மட்டுமே மதிக்கிறார்க்ள் என்பது புரிந்தது. பணம் பண்ணுவதில் தப்பே இல்லை - இது வியாபாரம் தான், புரிகிறது. பொறுப்பாகச் செய்தால் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாமே?



         பிறந்த ஊர் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. எத்தனை முறை காரணமேயில்லாமல் கும்பகோணம் போயிருக்கிறேன்! கணித மேதை வாழ்ந்த ஊர் என்பது தெரியாமல் போனதே! இந்த முறை ராமானுஜம் நினைவில்லத்தைப் பார்த்தேன். என்னைச் சேர்த்து அந்த நாளைய விசிடர்கள் மொத்தம் மூன்று பேர்.



         பெரிய கோவிலில் ஈ காக்கா இல்லை. கோவிலில் வேலை செய்வோரைத் தவிர அனேகமாக யாரையும் காணோம். இலவசக் கோவில் என்பதாலா? விடுமுறை நாளாக இருப்பதால் அப்படி என்றார்கள். அன்று மாலை ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தபோது, சிவப்பு உடையணிந்த ஒரு லட்சம் பேர் திடீரென்று கோவிலுக்குள் நுழைய நானும் வெங்கட் நாகராஜூம் (actually நான் தான்) பதறியடித்து வெளியே வந்தோம். தரிசனம் செய்ய 2500ரூபாய்க்கு தனிச்சீட்டு இருப்பதாகச் சொன்னார். ஏனோ பெரிய கோவில் நினைவுக்கு வந்தது.



         கிழக்குப் பதிப்பகம் எத்தனையோ விதங்களில் 'முன்னோடி' என்று பெயர் வாங்கியிருக்கிறது. இந்த முறை புத்தகக் காட்சியில் அவர்கள் கடையைப் பார்த்தவர்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். அனேகமாக எல்லாக் கடைகளுமே கடைக்கு வெளியே ஒன்றிலிருந்து இரண்டடி டேபிள் போட்டு ஆக்கிரமித்திருந்தார்கள் எனினும், கிழக்கு அக்கிரமத்துக்கு ஆக்கிரமித்திருந்தார்கள். அது போதாமல், கடை வாசலில் காகிதக் குப்பை. வாடிக்கையாளரின் வாசிப்பு, தேடல், வாங்கல் அனுபவத்தை மேம்படுத்த எதுவும் செய்ய வேண்டாம், குறைந்த பட்சம் எரிந்து விழாத ஆட்களையாவது நியமிக்க வேண்டாமா? கடையில் வேலை பார்த்த மூவரும் வெளிப்படுத்திய திமிரும் ஆணவமும் பார்த்தவருக்கு மட்டுமே புரியும். வாடிக்கையாளரால் கிழக்கு உருவானது. கிழக்கினால் வாடிக்கையாளர் உருவாகவில்லை என்பதை இத்தனை சீக்கிரம் மறந்து விட்டார்களே! புத்தகக் காட்சியின் மிக மோகமான அனுபவத்தைக் கொடுத்தது கிழக்கு.



         த்தனையோ நாள் கழித்து 'ஒரே மூச்சில்' படித்த புத்தகம் ராகிரவின் 'நான், கிருஷ்ணதேவராயன்'. இரண்டு பாகமும் படித்தேன். ராகிர எழுதியதில் மோசமான புத்தகம் இதுவாக இருக்கும். ஏன் தொடர்ந்து படித்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. என்னதான் எழுதியிருக்கிறார் பார்ப்போம் என்று படித்து வைத்தேன். இதைப் படித்ததும் யார் வேண்டுமானாலும் சரித்திரக் கதை எழுதலாம் என்று தோன்றிவிட்டது. ராகிர மேல் எனக்கிருக்கும் அபிமானத்தால் அதிகமாக விமரிசிக்க மனம் மறுக்கிறது.



         'நான் ஒரு கம்யூனிஸ்ட்' என்றுக் கலைஞர் சொன்னதாகப் படித்ததும் 'ஆகா! தமிழக மார்க்சிசம் செயத நல்வினையின் பயனல்லவோ இது!' என்று வியந்தேன். பொங்கல் பரிசாகக் கிடைத்த இந்தப் புதுப் பெருமையில் நிச்சயம் நெகிழ்ந்து நெக்குருகிப் போயிருக்கும் தமிழக மார்க்சிசம். எனினும், மார்க்சிச சான்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.



         புத்தகக் காட்சியின் இனிமையான அனுபவம் அலையன்ஸ் பதிப்பகம். கடையமைப்பும் புத்தகங்களைக் கொட்டியிருந்த விதமும் (கவனித்தீர்களா - அடுக்கி வைத்ததாக ஒரு கடையைக் கூடச் சொல்ல முடியவில்லை) பிற கடைகளைப் போலவே இருந்தாலும், கடை வாசலில் அமர்ந்திருந்த வெள்ளைச் சட்டைப் பெரியவர் made all the difference. பெயர் கேட்க மறந்தது என்னுடைய பெரும்பிழை. யார் என்ன புத்தகம் கேட்டாலும் 'இருக்கிறது - இல்லை' என்ற விவரம் சொல்வதோடு, புத்தகம் இருந்தால் அவரே தேடியெடுத்துக் கொடுத்தார் அல்லது விவரங்களைச் சொல்லி வேலையாட்களை எடுத்துத் தரச் சொன்னார். நாகேஷின் 'சிரித்து வாழ வேண்டும்' வாங்க நினைத்து எங்கேயும் கிடைக்கவில்லை என்று அவரிடம் சொன்னேன். தன்னிடம் இல்லை என்றும், வானதி பதிப்பகம் வெளியிட்டது என்றும் கேட்காத விவரங்களைச் சொல்லி வானதி பதிப்பக கடையெண்ணைச் சொல்லி என்னை அங்கே அனுப்பி வைத்தார்.



         மிதாப் ரஜினி படங்களில் பார்த்திருந்தாலும் ஒரு போலீஸ்காரரை ஒரு பாமரர் பளார் இலக்கண வழுவின்றிக் கன்னத்தில் அடித்து நேரில் பார்த்தது இதுவே முதல் அனுபவம். சோமாஜிகுடாவில் அதிகாலை நடந்த போது காணக் கிடைத்தக் கண்கொள்ளாக் காட்சி. பிற ஹைதராக்காரர்களைப் போலவே ராங் சைடில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பணம் கேட்டார் துரத்தி வந்தப் போலீஸ்காரர். 'கையூட்டு தரமுடியாது. சலான் எழுது, அபராதம் கட்டுகிறேன்' என்ற பாமரரின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல் அவருடைய சாவியை மோட்டார்சைக்கிளிலிருந்து பறித்தார் போலீஸ்காரர். என் வயிறு பந்தாய்ச் சுருள நடுங்கினேன். பாமரர் அலட்சியமாகப் பாய்ந்து போலீஸ்காரரின் பைக் சாவியைப் பறித்தார். ஐயோ, என்ன ஆகுமோ என்றுப் பதறினேன். இவர் சாவியை அவர் எறிய, அவர் சாவியை இவர் எறிய, தொடர்ந்தக் கணங்களில் 'காரே மூரே' என்று ஹைதரா இந்தியில் தெருச்சுப்ரபாதம் சொல்லிக் கொண்டார்கள். திடீரென்று போலீஸ்காரர் பாமரரைத் தரையில் தள்ளினார். துடித்துப் போனேன் நான். துள்ளி எழுந்தார் பாமரர். அப்பொழுது தான் நான் முன்சொன்ன அதிசயம் நிகழ்ந்தது.



         கிழக்குப் பதிப்பகத்தில் 'க்ருஷ்ணகுமார்' எழுதியப் புத்தகங்கள் இருக்கிறதா என்றுக் கேட்டபோது, 'அப்படி ஒரு எழுத்தாளர் தமிழில் இருந்ததில்லை, இல்லை' என்று என்னை அடிக்காத குறையாகச் சொல்லி விரட்டியடித்தார்கள். அலையன்சில் வெள்ளைச் சட்டைப் பெரியவர் 'இப்போ க்ருஷ்ணகுமார் புத்தகங்கள் அசல் ரா.கி.ரங்கராஜன் பெயரிலே' வருவதாகச் சொல்லி மூன்று தலைப்புகளைத் தேடித் தந்தார். நான் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கியது அலையன்சில் தான்.



         ரு கிசு. கள்ளிக்காட்டு கவிஞர் 'நொபெல்' பரிசு பெறவேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக அறிந்தேன். யார் யார் சிபாரிசு வேண்டும், என்ன செய்தால் பரிசு கிடைக்கும் என்று பட்டியல் போட்டு விடாப்பிடியாக முயற்சி செய்கிறாராம். ஒபாமாவிடம் கேட்கக் கூடாதோ? ஒன்றுமே 'புடுங்காமல்' நொபெல் பரிசு பெற்றவராச்சே? கிண்டல் aside, கவிஞருக்கு இலக்கிய நொபல் பரிசு கிடைக்கட்டும். அவருக்கும் பெருமை, தமிழுக்கும் பெருமை.



         புத்தகக் காட்சியின் வணிகக் கசப்பை மறக்கடித்தது பதிவுலக நட்புக் கூட்டம். போகனைச் சந்தித்தேன் (மீனாட்சி: போகன் அசலாக இருக்கிறார், confirmed). ராஜகுமாரனைச் சந்தித்து உரையாடியது சுவாரசியம். ஜீவி சந்திப்பு பல விதங்களில் இனிமை. சந்திக்க இயலாத பலருடன் தொலைபேசினேன். சந்திப்பதாகச் சொல்லி சந்திக்க முடியாமல் போனவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். திருச்சியில் ரிஷபன், ராமமூர்த்தி, வெங்கட், கோவை2தில்லி, வைகோ, கீதா சாம்பசிவம் பதிவர்களைச் சந்தித்தேன். எவருடனும் அதிக நேரம் உரையாட முடியவில்லை. அடுத்த முறை. ஓ..மீண்டும் திருச்சி வந்தால் வைகோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வைகோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். காணக் கண் கோடி வேண்டும்.



         வர்கட் புலம்பல். மாமா.. நம்ம டிவியில படம் தெரியலேனா கேபிள்காரங்க கிட்டே புலம்பலாம்.. கேபிள் கம்பெனியிலயே பவர் கட்டுனா அவங்க யாரைப் பாத்து புலம்பி ஆறுதல் அடைவாங்க மாமா?

34 கருத்துகள்:

  1. அடேங்கப்பா.... எம்பூட்டு மேட்டர்கள் அப்பா ஸார்... புத்தகக் கண்காட்சி விஷயத்துல நீங்க சொன்ன கருத்துக்களுடனதான் நானும். நடக்கறப்பவே டங் டங்குன்னு சத்தமும், அங்கங்க தடுக்கி விழ வைக்கறதும்.. அப்பப்பா... நிறைய பப்ளிஷர்ஸ்க்கு புத்தகங்களைப் பத்தியே தெரியலங்கறது எரிச்சல். ஸ்ரீராமுக்காக மெளனி கதைகள் கிடைக்குதான்னு நான் தேடினப்ப, யாரு மெளனின்னு கேட்டாங்க. ஹய்யோ.. ஹய்யோ... கிழக்கு விஷயத்துல உங்க நுணுக்கமான பார்வைக்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு
  2. இந்த ஆட்டோக் கிருமிகளைப் பத்தி என்ன சொல்ல... சென்னையில இவங்க அடிக்கற கொள்ளையால மட்டுமில்ல... ரோடுங்கற ஒண்ணு தங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டிருக்குன்றது இவங்க எண்ணம். இஷ்டத்துக்கு திருப்புவாங்க பின்னால, முன்னால வர்ற வாகனங்கள்தான் சடன் பிரேக் போட்டாகணும். வெங்கப் பயலுங்க! என் கொதிப்பு உங்க வார்த்தைகளைப் படிச்சதும் கொஞ்சம் ஆறுதலாச்சு.

    பதிலளிநீக்கு
  3. சென்னையில புகைக்கும் பெண்கள் மிக அரிதாகக் கண்ல படுற நிலைமை மாறி இப்ப சாதாரணமாப் பாக்க முடியுது. உங்க மேல புகை ஊதின அம்பிகையை நினைச்சா சிரிப்புத்தான் வருது... ரா.கி.ர. ஸாரின் கிருஷ்ண‌ தேவராயர் கதை ‘சரித்திரக் கதைகள்ல ஃபர்žஸ்ட் பர்சன்ல எழுதப்பட்ட முதல் கதை’ங்கறதுதான் அதோட சிறப்பு. வேற ஒண்ணுமில்ல. ட்ரெயின்ல அழுக்கு, அசுத்தம் பண்றவங்க பத்திச் சொல்லியிருக்கீங்க பாருங்க... கை கொடுங்க ஸார்!

    பதிலளிநீக்கு
  4. கிருஷ்ணகுமார் மட்டுமில்ல... லலித், மோகினின்னு ரா.கி.ர. எழுதின மத்த பேர்களையும்கூட அல்லயன்ஸ் ஒருங்கிணைப்பு ரா.கி.ரங்கராஜன்னே போட்ருக்காங்க. பன்முக எழுத்தாளரை ஒரே முகமாக்கின அல்லயன்ஸ்!

    பதிலளிநீக்கு
  5. சுஜாதாவுக்கு எல்லாமுறையும் பேனர்கள் உண்டு.

    பாமரேனியன் - சுவாரஸ்யத் திகில்!

    சிகரெட் சுந்தரி - அட!

    பெரிய கோவில்- முதல்முறை - ஆச்ச்ச்சர்யம்!

    சுவாரஸ்ய இந்தியப் பயணத் துக்கடா! இதன் விரிவுகள் இனி வரும் காலங்களில் வருமென்று எதிர்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு


  6. //. கேபிள் கம்பெனியிலயே பவர் கட்டுனா அவங்க யாரைப் பாத்து புலம்பி ஆறுதல் அடைவாங்க மாமா? //

    பவர் ஸ்டார் அப்படின்னு ஒரு ஸ்டார் வந்திருக்காரே .. அவருகிட்டே கேட்டுப்பாக்கலாமா ?

    ஆமாம்.
    இந்த மூன்றாம் சுழி அப்பாதுரை ஸாருடையது அல்லவோ ? எழுத்துக்களைப்பார்த்தால்
    கொஞ்சம் என்ன நிறைய வித்தியாசம் தெரிகிறது !!

    நடுவிலே ஆக்சுலே வெங்கட நாகராஜ் நானே என்று வேறே வருகிறது.

    அப்பாதுரை சாருக்கு ஒரு செல்லடித்தேன். பிறகு கால் செய்யுன்டி என்று தெலுங்கிலே
    மெஸேஜ

    நீங்க எங்க ஊரு பெரிய கோவிலுக்கு வந்ததைப்பத்தி ரொம்ப சந்தோசம். எத்தனி பேரு வந்தாலும்
    அது ஈ காக்கா கூட இல்லையே அப்படின்னு தான் தோணும். அம்புட்டு பெரிசு.

    ரத்னா கேஃப் இருக்கிறதே !! அதே இடத்திலே தான்.

    கும்பகோணத்தில் ராமானுஜம் வாழ்ந்த இல்லத்தில் உங்களையும் சேர்த்து மூன்று பேரே என்று
    விசனித்து இருப்பது எனக்கு அதிசயமாக தோன்றவில்லை.

    இந்த ராமானுஜம் கணிதத்தில், எண்களின் சிறப்பினையும் மேன்மையையும் என்ன சொல்லியிருக்கிறார்
    என்பதை மட்டுமல்ல, எந்த அளவில் அவரது ஆராய்ச்சி இருந்தது என்பதை கணிதத்தில் அதுவும்
    எண்கள் கணிதத்தில் பட்டம் என்று ஒன்று வாங்கி வைத்திருக்கும் என் போல் உள்ளவர்களாலேயே
    இன்னமும் சரிவர ப்புரிந்துகொள்ள இயலவில்லை. ஒவ்வொரு தடவையும் ஒரு நாலு பக்கம்
    படிப்பதற்குள் அசதியும் ஆயாசமும் மேல் வருவதால், புத்தகம் கீழ் நோக்கி போகிறது.

    இவர் துறையை சாராதவர்கள் இவரது பெருமையைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அது என்ன சாரே ! அவர் என்னதான் சொல்லி இருக்காரு ? யாருனாச்சும் ஒரு ஐந்து பக்கத்திலே எழுதித் தாருங்களேன்....
    ஒரு கணக்கு வாத்திக்கு இவ்ளோ மதிப்பா ? என்றார் என்னுடன் பணி புரிந்த ஒரு இலக்கிய ஆசிரியர் ஒருவர்
    ஒரு பத்து ஆண்டு கட்கு முன்னே.

    இன்றைய நாள் தமிழ் நாடு எதிர்கொள்ளும் ஒரே வினா. விஸ்வரூபம் வெளியிடப்படுமா ?

    சுப்பு ரத்தினம்.
    சென்னைக்கு திரும்பி எப்பொழுது வருகிறீர்கள் ?..

    பதிலளிநீக்கு
  7. புத்தகக் காட்சியின் இனிமையான அனுபவம் அலையன்ஸ் பதிப்பகம். //

    எங்கள் ஊரில் (மயிலாடுதுறை)நடந்த புத்தக கண்காட்சியில் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட தேவன் அவர்களின் நான்கு புத்தகங்கள் வாங்கினேன்.
    ( மல்லாரி ராவ் கதைகள், சீனுப்பயல், நடந்தது நடந்த படியே , சின்னஞ்சிறு கதைகள்)
    விலையும் மலிவு.
    சென்னை அனுபவம் ஒன்று கூட நல்லதே இல்லையே! நல்லவை ஒன்றும் உங்கள் கண்ணில் படவில்லையா?

    வைகோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வைகோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். காணக் கண் கோடி வேண்டும்.//

    வை.கோ அவர்கள் வீட்டு ஜன்னல் என்ன சிறப்பு என்று நீங்களே சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. //ஒரு பத்து வயது அரைடிராயர் வடிவிலே இறைவன் தோன்றி வழிகாட்டினார். அவசரமாக அரைடிராயரைப் பின் தொடர்ந்துக் கரையேறினேன். என்னே ஈசனின் விளையாட்டு! //

    மென்னகை விரிந்து, 'க்ளுக்'!

    //தாழ்தள மிதவைப் பேருந்தில் கிண்டி தொழிற்பேட்டையிலிருந்து குரோம்பேட்டை போகையில் கூடவே பயணம் செய்த, தார்தள ஹீரோ ஹான்டாவின்...//

    தாழ்தளம் - தார்தளம்.. அதகளம்!

    //ஜீவி சந்திப்பு பல விதங்களில் இனிமை.//

    உங்களைச் சந்தித்ததும் தான்.

    நான் பரிந்துரைத்த அந்த 'யாத்ரா' இதழ்கள் தொகுப்பை முழுவதும் படித்த பிறகு உங்கள் உணர்வை ஒரு பதிவாய் வெளிப்படுத்தினால் அழகாக இருக்கும். மெதுவாக, அமெரிக்கா சென்றடைந்து அசதியெல்லாம் போன பிறகு தான்.

    பதிலளிநீக்கு
  9. ஒரு என்.ஆர்.ஐ.யின் டிபிக்கல் புலம்பல்கள்!! (ஹி.. ஹி.. நாங்களும் தி கிரேட் என்னாரைதான்!!)

    பதிலளிநீக்கு

  10. நிகழ்வுகளை அயல்நாட்டுடன் உங்களை அறியாமல் ஒப்பிடும்போது ஆயாசம் ஏற்படுவது நியாயமே. ஏன், என்னைப் போன்ற இளைஞர்கள் அந்தக் கால பண்புகளுடன் ஒப்பிட்டு ஆயாசப்படுவதுபோல் தான் இருக்கிறது. அது சரி. நலமா.? வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீரங்கத்தில் 250/- டிக்கெட் இருக்கிறது. ஒரு பூஜ்யம் அதிகமாகி விட்டது போல்! :)

    ஊர் போய் சேர்ந்தாச்சா?

    மீண்டும் வருகிறேன்! :)

    பதிலளிநீக்கு
  12. வெள்ளை நிறத்தொரு பாமரேனியன் குட்டி. எப்போது வெளியே துள்ளிக் குதிக்குமோ என்று வழி மேல் விழி வைத்துக் கதிகலங்கினேன். அருமையான photo opportunity தவறிப்போனது.//

    புத்தகம் போடுமளவுக்கு
    புத்தக்கண்காட்சி சிரமங்கள் பகிர்வு...

    பதிலளிநீக்கு
  13. Sir, can you pl let me know what happened in Kizhakku stall? Thanks. Regarding other complaints, I agree, you are right. We were havIng our own issues.

    பதிலளிநீக்கு
  14. இந்த வருடம் புத்தகக் கண்காட்சி செல்ல இயலவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு, சென்ற புத்தகக் கண்காட்சிக்கும் இந்த வருடக் காட்சிக்கும் அதிக வித்தியாசம் காணப்படவில்லை என்ற உங்களின் இந்தப் பதிவு பெரும் ஆறுதலை அளித்தது.

    பதிலளிநீக்கு
  15. நிறைய விஷயங்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்.....:)

    தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  16. ////சென்னை ஆட்டோக் கிருமிகள் பெங்களூர் ஹைதராவிலும் பரவத் தொடங்கியிருக்கின்றன. சென்னை அளவுக்கு மோசமில்லை என்றாலும் பெ, ஹை நகரங்களில் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போடுவதை நிறுத்தியதோடு அல்லாமல் சென்னை போலவே அடாவடியாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். ////

    இப்போது மும்பையிலும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்கனு சமீபத்தில் சந்தித்த எங்கள் மும்பை உறவினர்கள் கூறுகிறார்கள். :((((

    ஊர் போய்ச் சேர்ந்தாச்சா?? வைகோ வீட்டு ஜன்னல் விசேஷத்தைத் தெரிஞ்சுக்காமல் மண்டை வெடிச்சுடும் போலிருக்கே! அடுத்த விசிட் எப்போ?

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாஜனவரி 29, 2013

    வெளி நாடுகளில் இருந்து இந்தியா வரவங்களுக்கு எல்லாம் இப்படிதான் எல்லாம் கண்ல படும். கொஞ்ச நாள் இருந்தா அப்படியே ஜோதில கலந்துடலாம். ஆனா
    சில பேரால என்னிக்குமே முடியாது. நீங்க எப்படின்னு எனக்கு தெரியல. :))

    // தஞ்சாவூர் பெரியகோவில் பார்த்தேன். முதல் முறையாகப் பார்த்த இன்ப அதிர்ச்சி தணிய நாளாகும்.//
    வாழ்நாளில் பார்க்க வேண்டிய ஒரு கோவில். இந்த கோவில், தாராசுரம் எல்லாம் அடுத்தமுறை பார்த்தே ஆகணும்னு இருக்கேன். தள்ளி போட்டா சிலதெல்லாம்
    முடியாமலே போய்டும்.

    கிசு கிசு :)). கவிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தால் தமிழுக்கு பெருமைதான். நல்லா சொன்னீங்க.

    பதிவர்களை சந்தித்து பற்றி எழுதுங்கள். போகன் அசாதரணமான எழுத்தாளர். நீங்கள் அவரை சந்தித்து குறித்து மகிழ்ச்சி. மறக்காமல் வைகோ. வீட்டு ஜன்னல் பற்றி விரிவாக எழுதுங்கள். இவ்வளவு பில்ட் அப் குடுப்பதற்கு ஒரு போட்டோ எடுத்து பதிவில் போட்டிருக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  18. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    முறையான தொடர்ந்த இணைய இணைப்பில்லாமல் நான் படும் பாடு (வேணாம் .. என்ஆர்ஐ புலம்பல்னு சொல்லிடுவாங்க ஹூ :) புலம்பலாகப் பட்டாலும் இவை நாம் நம் எதிர்பார்ப்புகளை மிகச் சாதாரண தரை மட்ட அளவிலே சிலசமயம் வைத்திருக்கிறோமோ என்ற ஆதங்கம். (ஆமாங்க. சொன்னா நம்புங்க..)

    வைகோ வீட்டு ஜன்னலைப் பற்றி வியக்கும் உரிமை எனக்குண்டு; விளக்கும் உரிமை வைகோவுக்கு மட்டுமே உண்டு.. (முதல் உரிமை privilege இரண்டாவது right - டமில் வால்க:-)

    பதிலளிநீக்கு
  19. இவ்ளோ விஷ்யங்கள ஒரு பதிவுல இப்பதான் படிக்கிறேன் சார்... மிக அருமை!! ரயில் பற்றி சொல்லியது, ஆட்டோகாரர்களின் அடாவடித்தனம்.. இது மிக முக்கிய பிரச்னைகள் சார்..

    நானும் அலையன்ஸ் பதிப்பகத்தில் தான் நிறைய புத்தகம் வாங்கினேன்.. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பெரியவரை நான் பார்க்கவில்லை...

    பதிலளிநீக்கு
  20. //திருச்சியில் ரிஷபன், ராமமூர்த்தி, வெங்கட், கோவை2தில்லி, வைகோ, கீதா சாம்பசிவம் பதிவர்களைச் சந்தித்தேன். எவருடனும் அதிக நேரம் உரையாட முடியவில்லை.//

    ஐயா, தங்களின் திடீர் வருகை எனக்கும் அன்று பெரும் மகிழ்ச்சியளித்தது.

    இருப்பினும் அதில் இரண்டு விஷயங்களை நான் மறந்து போனேன்.

    தாங்கள் சென்ற பிறகு மிகவும் அதற்காக வருந்தினேன்.

    [1] தங்களுக்கு பொன்னாடையொன்று போர்த்த நினைத்தேன்.

    [2] என்னுடைய சிறுகதைத்தொகுப்பு நூலில் என் கையொப்பமிட்டு தங்களுக்கு நான் அன்பளிப்பாகத் தந்திருக்க வேண்டும்.

    இவை இரண்டும் என்னால் மிகச்சுலபமாக அன்று செய்திருக்க முடியும்.

    ஏனோ நீங்கள் மின்னல் வேகத்தில் வந்து போனதால் உங்களுடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, ஏதோ SKC Offer செய்ய மட்டுமே என்னால் முடிந்தது.

    தங்களைக்கூட்டி வந்த என் அருமை நண்பர் வெங்கட்ஜீ அவர்களாவது நினைவு படுத்தி இருக்கலாம். ஏனோ அவரும் அவ்வாறு செய்ய்வில்லை.

    இதுவரை என்னை நாடி வந்த அனைத்துப் பதிவர்களுக்குமே இதுபோல நான் மரியாதை செய்துவிட்டு, உங்களுக்கு மட்டுமே, அது விட்டுப்போனது எனக்கு மிகவும் தாபமாகவே இருந்தது.

    கோவிந்தபுரத்துக்கே உங்களைத் துரத்திக்கொண்டு வரலாமா எனவும் நினைத்தேன். இருந்தாலும் எனக்கு அங்கு வந்தால் ஏற்படக்கூடிய அன்புத்தொல்லை ஒன்றையும் உங்களிடம் விரிவாகவே எடுத்துச் சொல்லியிருந்தேன் அல்லவா!

    அதனால் தான் வரவில்லை. உங்களுடைய அலைபேசி எண்ணையும் நான் வாங்கிக்கொள்ளாமல் போய் விட்டேன்.

    நான் அன்று இதுபோல முக்கியமான இரண்டு விஷயங்களை மறந்து போனதற்கும் முக்கியமான காரணம் உண்டு.

    என் மகன் அன்று அருகில் உள்ள மருத்துவமனையொன்றில் அட்மிட் ஆகி ச்கிச்சை பெற்று வருகிறார், அவரைப்பார்க்கச் செல்ல வேண்டும் என்று சொன்னேன் அல்லவா. அந்தக் குழப்பதில் மட்டுமே, எனக்கு இவையெல்லாம் சுத்தமாக மறந்து போய் விட்டது, சார். மன்னிக்கவும்.

    இருப்பினும் மீண்டும் நாம் சந்திக்காமலா இருக்கப்போகிறோம்!

    அப்போது வட்டியும் முதலுமாகச் சேர்த்தே கவனித்து விடுகிறேன், சார்.

    >>>>> தொடரும் >>>>>

    பதிலளிநீக்கு
  21. //அடுத்த முறை. ஓ..மீண்டும் திருச்சி வந்தால் வைகோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வைகோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். காணக் கண் கோடி வேண்டும்.//

    ஐயா, தாங்கள் இந்தப்பதிவு வெளியிட்டுள்ளதே எனக்கு சுத்தமாகத்தெரியாது.

    இப்போது ஒருசில மெயிலகளும், தொலைபேசி அழைப்புகளும் வந்து அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டது.

    முதல் தகவல் என் அன்புக்குரிய திருமதி உஷா அன்பரசு, வேலூர் என்பவரிடமிருந்து வந்துள்ளது.

    ”உங்கள் வீட்டு ஜன்னலில் உள்ள இரகசியம் என்ன?

    இப்போ சொல்லப்போறீங்களா அல்லது நானே அங்கு புறப்பட்டு வந்து தெரிந்துகொள்ளட்டுமா?”

    எனக் கேட்டு விட்டார்கள்.

    >>>>> தொடரும் >>>>>

    பதிலளிநீக்கு
  22. கோமதி அரசு கூறியது...
    *****
    வைகோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வைகோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். காணக் கண் கோடி வேண்டும்.
    *****

    //வை.கோ அவர்கள் வீட்டு ஜன்னல் என்ன சிறப்பு என்று நீங்களே சொல்லி இருக்கலாம்.//

    வாங்கோ மேடம், தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

    தொடர்ந்து வரும் என் பின்னூட்டங்களை இங்கு படியுங்கள்.

    >>>>>>>>

    பதிலளிநீக்கு
  23. //Geetha Sambasivam கூறியது...

    வைகோ வீட்டு ஜன்னல் விசேஷத்தைத் தெரிஞ்சுக்காமல் மண்டை வெடிச்சுடும் போலிருக்கே! //

    வாங்கோ மேடம், தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

    தொடர்ந்து வரும் என் பின்னூட்டங்களை இங்கு படியுங்கள்.

    அதற்குள் தங்கள் மண்டை வெடிச்சுடாமல் இருக்க நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    >>>>>>>>

    பதிலளிநீக்கு
  24. //மீனாக்ஷி கூறியது...

    மறக்காமல் வைகோ. வீட்டு ஜன்னல் பற்றி விரிவாக எழுதுங்கள். இவ்வளவு பில்ட் அப் குடுப்பதற்கு ஒரு போட்டோ எடுத்து பதிவில் போட்டிருக்கலாம் இல்லையா?//


    வாங்கோ மேடம், தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

    தொடர்ந்து வரும் என் பின்னூட்டங்களை இங்கு படியுங்கள்.

    >>>>>>

    பதிலளிநீக்கு
  25. //அப்பாதுரை கூறியது...

    வைகோ வீட்டு ஜன்னலைப் பற்றி வியக்கும் உரிமை எனக்குண்டு;

    விளக்கும் உரிமை வைகோவுக்கு மட்டுமே உண்டு..

    (முதல் உரிமை privilege
    இரண்டாவது right - டமில் வால்க:-) //

    சுற்றி வளைத்து, இங்கு தாங்கள் மிகவும் சாமர்த்தியமாகப்பேசி என்னை ஒரு தொடர்பதிவிட அழைத்து விட்டீர்கள்.

    சந்தோஷம்.

    தூங்கிக்கொண்டிருக்கும் [ஸாரி ... தூக்கம் வராமல் ஏங்கிக் கொண்டிருக்கும்] எனக்கு சிலர் விருது அளிப்பதாகச் சொல்லி, எழுப்பி விட்டனர், சென்ற ஆண்டில்.

    இப்போது தாங்கள் என் வீட்டு ஜன்னலைப் பற்றிக் குறிப்பிட்டு, எல்லோரையும் என்னவோ ஏதோ என நினைத்துக் குழம்பச்செய்துள்ளீர்கள்.

    எல்லோருடைய குழப்பங்களுக்கும் ஓர் நகைச்சுவைப் படைப்பாகவும், தனிப்பதிவாகவும் தரும் RIGHT எனக்கு மட்டுமே உள்ளது என்று PRIVILEGE உடன் சொல்லியும் விட்டீர்கள்.

    அதுவரை எல்லோருக்குமே ஓர் சஸ்பென்ஸ் நீடிக்கட்டும்.

    விரைவாக இது பற்றி ஓர் பதிவு வெளியிடுகிறேன்

    தங்களின் சமீபத்திய இந்திய விஜயம் பற்றி, அழகாக பல விஷயங்களைக் கூறி பதிவிட்டுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள், சார்.

    நான் முதன்முதலாக என் வீட்டில் சந்தித்த வெளிநாட்டில் வாழும் ஆண் பதிவர் தாங்கள் மட்டுமே, என்பதும் இதில் ஓர் தனிச்சிறப்பாகும்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள அப்பாஜி,
    இதற்குத்தான் இந்தியாவில் இருக்க வேண்டும். இந்தியனாக இருக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமே இந்தியனாக இருக்க வேண்டும்.

    பல சமயங்களில் வேறு நாட்டில் பிறந்திருக்கலாம் என்று தோன்றினாலும்(!) 'சொர்க்கமே என்றாலும்...' என்று பாடி சந்தோஷப் பட வேண்டியதுதான்!

    பெங்களூரில் உங்களை சந்திக்காமல் விட்டுவிட்டேனே என்று இருக்கிறது.

    அடுத்த முறை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.

    கேரளாவில் ஆட்டோக் காரர்கள் இப்போதைக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  27. அப்பாதுரை அவர்களே! 26ம் தேதி இரவு தாணே நாகபுரியை விட்டு கிளம்பினீர் ! 27 சென்னையிலிருந்து பதிவு போட்டீரா? நல்லகாலம் - என்வீட்டு ஜன்னல் பற்றி எழுதவில்லை! அப்பாதுரையை சென்ற முறைபார்த்தவர்களுக்கு ஒரு "சர்ப்றைஸ்"! தலையில் உண்மையன முடியோடு ஆணழகனாக இருக்கிறார் ! சென்னையில் முடி transplant பண்ணிக் கொண்டு மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் ! அவருடைய பிளாகில் கண்டிப்பாக அவருடைய புகைப்படத்தை போடச்சொல்லி சண்டைபோடுங்காள் நண்பர்களே! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  28. //kashyapan சொன்னது…

    தலையில் உண்மையன முடியோடு ஆணழகனாக இருக்கிறார் ! சென்னையில் முடி transplant பண்ணிக் கொண்டு மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் ! அவருடைய பிளாகில் கண்டிப்பாக அவருடைய புகைப்படத்தை போடச்சொல்லி சண்டைபோடுங்காள் நண்பர்களே! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.//

    காஷ்யபன் சார்,

    என் தந்தை முன்பே சொல்லி சஸ்பென்சை உடைத்துவிட்டார் இருந்தும், புகைப்படம் காண ஆசை. போன முறை இந்தியா போனபோது நாணாவின் வீட்டில் இருந்து பெங்களூர் லிங்கராஜபுரம் வீடு க்ரஹபிரவேசம் போட்டோவில் ஒரிஜினல் முடியுடன் இருக்கும் போட்டோ இருக்கு. சுட்டு வந்துள்ளேன். 1987 தானே !

    இந்தியாவை பழித்தாலும், மெடிக்கல் செலவு இந்தியாவில் அமெரிக்காவை விட சீப் தானே துரை !! இங்கே இன்சூரன்ஸ் இருந்தும் லங்கோடு முதற்கொண்டு உருவி அனுப்பும் போது இந்தியாவில் மருத்தவம் மற்றும் இந்த மாதிரி வேலைகள் சீப் தான் !

    நல்லதை பற்றியும் சொல்லுங்கள். நான் முன்பு அடிக்கடி இந்தியா சென்று புலம்புவதை நீங்கள் செவ்வனே செய்வதில் மகிழ்ச்சி.

    - சாய்

    பதிலளிநீக்கு
  29. இந்த முறை உங்களை சந்திக்க இயலாமல் போனது எனக்கு ரொம்ப வருத்தம்.

    பதிலளிநீக்கு
  30. //இப்போது தாங்கள் என் வீட்டு ஜன்னலைப் பற்றிக் குறிப்பிட்டு, எல்லோரையும் என்னவோ ஏதோ என நினைத்துக் குழம்பச்செய்துள்ளீர்கள்.

    எல்லோருடைய குழப்பங்களுக்கும் ஓர் நகைச்சுவைப் படைப்பாகவும், தனிப்பதிவாகவும் தரும் RIGHT எனக்கு மட்டுமே உள்ளது என்று PRIVILEGE உடன் சொல்லியும் விட்டீர்கள்.

    அதுவரை எல்லோருக்குமே ஓர் சஸ்பென்ஸ் நீடிக்கட்டும்.

    விரைவாக இது பற்றி ஓர் பதிவு வெளியிடுகிறேன்//

    தொடர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

    Mrs. Gomathi Arasu Madam
    Mrs. Geetha Sambasivam Madam
    Mrs. Meenakshi Madam
    and
    Mr. Kashyapan Sir

    are requested to please Note this.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சார்.

    நீங்க சிரிக்கும் விதமாக சொல்லியிருந்தாலும், வேதனையான அனுபவங்கள்தான்.

    பெங்களூரில் 7/8வருடங்களுக்கு முன் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த பின்புதான் போக வேண்டிய இடத்தை சொல்லுவோம் அதன்பின்புதான் ஓட்டுநர் மீட்டரை போடுவர். இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது.

    பதிலளிநீக்கு
  32. ஏ அப்பா ,இத்தனை விஷயங்களா துரை?

    புத்தகக் கண் காட்சிக்குப் போகாமலிருந்தது என் பாக்கியம்.
    லஸ்சர்ச் ரோடில் நீங்கள் க்ராஸ் செய்யும் வரை நானும்ம் கவலைப் பட்டேன்:)இதுவரை ஸ்ரீரங்கம்
    போகணும்னு ன்னு கவலைப் பட்டேன். இப்போ வைகோ வீட்டு ஜன்னல் புராணம் படித்த பிறகு
    அதுக்காகத் திருச்சி போக ஆசை. ஸாரி. ரெண்டு பதிவுகளுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேனோ.

    பதிலளிநீக்கு
  33. அப்பாதுரை சார்,

    சென்னை புத்தகத் திருவிழா போக முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. உங்கள் பதிவைப் பார்த்தவுடன் நல்ல வேளை போகவில்லை என்று சமாதானம் ஆகிறது..... அழகான பகிர்வு. நன்றி.

    அன்புடன்
    பவளசங்கரி

    பதிலளிநீக்கு