2012/12/09

அறுந்த காற்றாடி



றுந்தக் காற்றாடிகளைச் சேமித்து வைக்கும் பழக்கம் எனக்கிருந்தது. நூலறுந்தக் காற்றாடியைத் துரத்தி துரத்தி, அறுந்து கிழிந்தது மேலும் சேதமடையாமல் சேமித்து வைப்பதன் முனைப்பும் வேகமும் கலக்கமும் பலனும்... எல்லோருக்கும் புரிவதில்லை.

இந்தியா திரும்பும் நண்பர் ஒருவர் சமீபத்தில் அழைத்திருந்த நட்புக் கூட்டத்தில் ரகுவைச் சந்தித்தேன். எங்கள் சிலிகன்வேலி நாட்கள் மற்றும் இந்திய உணவக நினைவுகளைப் புரட்டிக் கொண்டிருந்தோம். பேச்சுவாக்கில், "தென்காசி ராமலக்ஷ்மி போன வருடம் இறந்து போனார்" என்றான் ரகு. இறப்பில் ஒரு புதுமையும் இல்லை. மேலும், ராமலக்ஷ்மி இறக்கையில் அவருக்கு எண்பது வயதாவது இருக்கும். மரணச் செய்தி கேட்டு இயல்பாகத் தலையாட்டினேன். அதற்குப் பிறகு அவன் சொன்னது என்னைத் திடுக்கிட வைத்தது.

அக்கணத்திலிருந்து ராமலக்ஷ்மியின் மரணம், என்னுடைய முதல் காதல் தோல்வி போல் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போலிருக்கிறது.

        1990-91 என்று நினைக்கிறேன். பெல்மான்ட் சிறுநகர மலையடிவாரத் தெருவொன்றின் பூர்ஷ்வா காபிக்கடை வெளியரங்கில், ப்ரெஞ்ச் டோஸ்ட், கார்லிக்-பெப்பர்கார்ன் ஆம்லெட், மர்மலேட் அப்பிய இங்லிஷ் மபின், அப்பொழுது பிழிந்த ஆரஞ்சு ஜூஸ், கருங்காபி (ஸ்டார்பக்சாவது மண்ணாவது) என்று வகை வகையாக மெள்ளச் சாப்பிட்டபடி, என் சனிக்கிழமையைத் துவக்கியிருந்தேன். தனிமையின் சோகங்களுக்கிடையே இது போன்ற சிறு இனிமைகளைத் தவறவிடக் கூடாது என்றக் கொள்கையுடன், இளவெயில்.. இதமான காற்று.. மணக்கும் உணவு.. வாக்மேனில் மாலி குழலிசை.. என்று மொத்தமாகவும் சில்லறையாகவும் அனுபவித்தபடி சுற்றிலும் பார்த்தேன். எதிரே கண்ணில் பட்டது என்னைக் கிறுகிறுக்க வைத்தது. மூலை டேபிள் மேல் பரந்து கிடந்தப் பீங்கான் தட்டுக்களைத் தாண்டித் தென்பட்ட உருவத்தின் முகத்தை ஒரு குமுதம் பிரதி மூடிக் கொண்டிருந்தது. ஆணா பெண்ணா என்றுகூடத் தெரியவில்லை. இனக் கிறுகிறுப்பு தலைக்கேறி எழுந்தேன். அருகே சென்று அறிமுகம் செய்துகொண்டேன். அப்படி அறிமுகமானவன் ரகு.

நாங்கள் பேசத் தொடங்கியக் கணங்களில் எங்களை இறுக்கிப் பிடித்து கொண்டது நட்பு.

கால மிதியடியின் கீழே எத்தனை கோடிச் சாதனைகள் குப்பைத் துகளாய்க் கிடக்கின்றன என்பது எனக்கு அடங்காத ஆச்சரியம். அன்றைய சிலிகான் வேலியின் சாதனைக் கம்பெனி நொவெல். ரகு அங்கே பெரிய ஹெச்.ஆர் வக்கீலாக இருந்தான். இன்னொரு அருஞ்சாதனைக் கம்பெனியில் பகுதி நேர வேலைக்குச் சேர்ந்திருந்தேன் நான். பெல்மான்ட்டின் வசதியான அபார்ட்மென்ட் ஒன்றில் வாடகைக்கு இருந்தேன். ரகு பாஸ்டர் சிடியில் வசதியான காண்டோ வாங்கியிருந்தான்.

ஊர் படிப்பு வேலை என்று விவரம் கடந்து, இசை புத்தகம் சினிமா என்று கலை கடந்து, சிகரெட் மது மாது என்று பழக்கம் கடந்து, நிறையப் பேசினோம். சாப்பாடு பற்றிப் பேச்சு வந்தது. இப்போது போல் தடுக்கி விழுந்தால் தென்படும் இந்தியக் கடைகளும் உணவகங்களும் அப்போது இல்லை. சேன் ப்ரேன்சிஸ்கோவில் ஒன்று, சேன்டா க்லேராவில் ஒன்று, தவிர்த்து சன்னிவேலில் ஒன்று - இம்மூன்று உணவகங்கள் மட்டுமே இந்தியச் சோறு போட்டன. [சன்னிவேல் உணவக முதலாளி, படிக்காத ஏழை டீனேஜ் தெலுங்குப் பெண்களை வைத்துப் பலான பிசினஸ் செய்து வந்தது பின்னாளில் பலரைத் திடுக்கிட வைத்தது. அங்கே நான் சாப்பிட்டதெல்லாம் இன்றைக்கும் என்னைத் துன்புறுத்துகிறது]. என் வாடகை அபார்ட்மெண்ட் அருகில் எங்கேயும் இந்தியச் சாப்பாடு கிடைக்காததை ஒரு பெரிய பொருட்டாக எண்ணவில்லை. நான் உண்டு என் பகுதி நேர வேலை, பெர்க்லி படிப்பு உண்டு என்று இருந்தேன். நான் தினமும் பூர்ஷ்வா கடை, பிட்சாக் கடை என்று திரிவதைக் கேட்டு, "அப்ப இன்னிக்கு டின்னர் எங்கூட வா.. வீட்டுச் சாப்பாடு, திருநெல்வேலிச் சமையல்" என்றான் ரகு.

"உனக்குச் சமைக்கத் தெரியுமா என்ன?"

"எனக்கும் நல்லா சாப்பிடத்தான் தெரியும்" என்று என் டேபிளைக் காட்டிச் சிரித்தான். "வீட்டுச் சாப்பாடுன்னா என் வீட்டுல இல்லப்பா. சாயந்திரம் ஆறு மணிக்கு இங்க வந்துரு. ஒரு இடத்துக்குக் கூட்டிப் போறேன், அசந்துருவ" என்றான்.

        வன் கார் வைத்திருந்தான். நான் கால் வைத்திருந்தேன். அதனால் ஐந்து ஐம்பதுக்கே வந்துக் காத்திருந்தேன். சரியாக ஆறு மணிக்கு வண்டியோடு வந்தான். புத்தம்புது ஈகிள் டேலன். உள்ளிருந்தபடியே ரிமோட்டில் கதவைத் திறந்து "ஏறிக்கோ" என்றான். சன்னிவேலுக்கும் சேன் ஹோசேவுக்கும் இடையே எல் கமீனோவிலிருந்து வடக்கே திரும்பும் சந்தில் ஒரு பழைய காம்பவுன்ட் சுவர் எதிரே நிறுத்தினான். "வா" என்றான்.

காம்பவுன்டுக்குள் முன்னும் பின்னுமாக இரண்டு வீடுகள். முன் வீட்டின் எதிரே சில மெக்சிகன் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். திண்ணையில் ஒரு வாலிபனின் மடியில் படுத்தபடி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. வாலிபனின் பார்வை என்னைத் தொடர்ந்ததை உணர்ந்தேன்.

பின்வீட்டுக் கதவைத் தள்ளித் திறந்தான் ரகு. ணங் என்று மணியடித்து எதிரொலிக்க. "வாப்பா" என்று ஒரு குரல் கேட்டது. என்னைப் பார்த்து உள்ளே வரும்படி தலையசைத்தான். நுழைந்ததும் என்னை முதலில் தாக்கியது சமையல் மணம். தேங்காய் எண்ணையில் பச்சைமிளகாய் இஞ்சி கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு என்று தாளிக்கும் மணம். தொடர்ந்து ஒரு கரண்டியுடன் எங்களைத் தேடி வந்தார் ஒரு பெண்மணி.

வரும் வழியில் ஓரளவுக்கு அறிமுக விவரம் சொல்லியிருந்தான் ரகு. இருந்தாலும் இத்தனை லட்சணமாய் ஒருவரைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. நல்ல உயரம். வாட்டசாட்டமாக இருந்தார். மஞ்சள் கலர். பெரிய கண்கள். குங்குமப்பொட்டு. மிக லேசானப் பெண்மீசை. எளிய மூக்குத்தி, தோடு. கழுத்தில் மஞ்சள் கயிறு தவிர நகையில்லாதது உறுத்தியது. பச்சைக் கலரில் ஒரு ஜரிகை சின்னாளப்பட்டு சேலை கட்டியிருந்தார். தலையை ஒரு ஸ்கார்பினால் முக்காடு போல் கட்டியிருந்தார். "யாருப்பா இது, ரகு?" என்றார் என்னைக் கண்களால் சுட்டி.

"மாமி.. இவன் பேரு துரை. ஊருக்குப் புதுசு.. சோத்துக்கு லாட்டரி கேஸ்.." என்றான். பிறகு என்னிடம், "துரை.. இவங்கதாம்பா நான் சொல்லலே.. ராமலக்ஷ்மி மாமி.. சொந்த ஊர் திருநெல்வேலி"

"நேக்கு சொந்த ஊர் தென்காசி. அவருக்கு திருநெல்வேலி. வாப்பா.. உனக்கு எந்த ஊர்?"

"மெட்ராஸ்"

"அதெப்படி மெட்ராஸ்னு சொல்றே? பூர்வீகம் எதும் கிடையாதா? மெட்ராஸ் மூர்க்காள் ஊர்னா? மெட்ராஸ்னாலும் சாத்வீகமான மனுஷாளுக்கு பூர்வீகம் இல்லாம இருக்காது.. எந்த ஊர்னு சொல்லு"

"எனக்குத் தெரிஞ்சு மெட்ராஸ் தான்.... மாமி" என்றேன் சற்றே கூச்சத்துடன். நான் யாரையும் "மாமி" என்றழைத்து நாளாகியிருந்தது.

"சங்கோஜப்படாம மாமினே கூப்பிடு" என்று என்னிடம் சொன்ன மாமி, "வாங்கோ" என்று எங்களைத் தாண்டிப் பார்வையை ஓட்டினார். வாசலில் மூன்று பேர் கதவைத் திறந்து வந்தனர். "சாப்பாடு அரை மணிலே ரெடியாயிடும். வாழைத்தண்டு தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு, புளித்துவையல், பீன்ஸ் கறி, பெங்களூர் கத்தாரிக்கா கூட்டு, தக்காளி ரசம், மோர், புதுசா நெல்லிக்காய் ஊறுகாய் போட்டிருக்கேன்.. இதான் மெனு இன்னிக்கு.. சாப்பிட்டுப் பாத்து பிடிச்சிருந்தா மாசக் கூப்பன் வாங்கிக்கோ. இன்னித்துச் சாப்பாடு ப்ரீ உனக்கு மட்டும். போங்கோ.. எல்லாரும் ஹால்லே உக்காருங்கோ.. சாப்பாடு தயாராயிடும்.. ரெண்டு தட்டுல உளுத்தங்களி எடுத்துண்டு வரேன் அதுவரைக்கும்.." என்று உள்ளே போனார்.

பராமரிக்கப்படாத சிறிய வீடு. வாசல் ரூம், தொடர்ந்த ஹால், லேசாக கதவடைத்த பெட்ரூம் போல் தெரிந்த ஒரு அறை. ஸ்டோர் ரூம் போலிருந்த இன்னொரு அறைக்கு மாமி அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தார். தடுப்புக்கு அந்தப்புறம் சமையலறை. தடுப்புக்கு இந்தப்புறம் மாடிப்படிகள். மாடிப்படிச் சுவரில் இடம் வலமாக கட்டப்பட்டிருந்தக் கம்பிக்கொடியில் ஒரு புடவை. ஹால் அலமாரியில் ஒரு கலர் போட்டோ, சில பழுப்பேறிய போட்டோக்கள். வீடெங்கும் சுவரின் கீழ்ப்பகுதியில் அக்கிரகாரங்களிலும் கோவில்களும் இருப்பது போல் காவிப்பட்டை. ஜன்னல்களில் துணித்திரை. மிக மிக இலேசான ஊதுபத்தி மணம். திடீரென்றுத் திருநீர்மலை மனதில் தோன்றியது.

எங்களுக்கு முன்னால் வந்திருந்த நாலைந்து பேருடன் ஹால் என்ற இடத்தை சூழ்ந்து கொண்டோம். ஹாலின் குறுக்கே ஒரு பெரிய மேசை. இந்தியாவில் இந்த இடம் தாராளம் என்று தோன்றினாலும் இங்கே நெரிசலாக உணர்ந்தேன். மாமி கொண்டு வைத்த உளுத்தங்களி உருண்டைகளை அங்கிருந்தோர் அவசரமாக ஒரு கை பார்த்தனர். நான் ஒதுங்கி ரகுவிடம், "மாமி தனியாவா இருக்காங்க..?" என்றேன். பிறகு பேசலாம் என்று சைகை செய்தான்.

சரியாக ஏழு மணிக்கு சாப்பாடு தயார் என்றார் மாமி. எங்கள் வீட்டில் தாம்பாளம் என்பார்கள்.. அங்குல விளிம்புடன் வட்டமான எவர்சில்வர் தட்டைக் கொடுத்தார். "ஸ்வீட் எதும் செய்யலே இன்னிக்கு" என்றபடி கால் ஸ்பூன் சர்க்கரை வைத்துக் கொடுத்தார். நடுவில் இருந்த பெரிய மேசையில் எங்கள் உதவியுடன் அத்தனை சாப்பாட்டையும் அடுக்கி வைத்தார். நாங்களே எடுத்துப் பரிமாறிக் கொண்டோம். அத்தனை சுவையான சாப்பாட்டை நான் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. இரவு ஒன்பது வரை சுமார் ஐம்பது பேராவது சாப்பிட்டிருப்பார்கள். ரகு கிளம்பாததால் நானும் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒன்பதரைக்குக் கடைசி நபரும் சாப்பிட்டுக் கிளம்பியதும், "நான் கொஞ்சம் மாமிக்கு உதவியா பாத்திரம் கழுவப்போறேன், வரியா?" என்றான்.

இதை எதிர் பார்க்கவில்லை. 'ஐம்பது பேருக்கு மேல் சமைத்த பாத்திரங்களைக் கழுவுவதாவது?' என்றுத் திகைத்தேன்.

"மாமிக்கு ஆள் இல்லை.. உன்னால் முடியாவிட்டால் அப்படி ஓய்வாகப் படுத்துக் கொள்.. ஒரு மணியில் எழுப்புறேன்" என்றான் ரகு.

"இல்லை ரகு, நானும் உதவி செய்றேன்" என்று ரகுவுடன் சென்றேன். அத்தனை பாத்திரங்களையும் கழுவி ட்ரெய்னர் ஷீட்டில் அடுக்கி, கரண்டி டவரா கிண்ணம் தட்டுமுட்டுகளை டிஷ்வாஷரில் அடுக்கி, ஐம்பதுக்கு மேற்பட்ட எவர்சில்வர் தட்டுக்களை ஸ்ப்ரே வாஷரில் அடுக்கி, டேபிளை லைசால் வின்டெக்ஸ் போட்டுத் துடைத்து... எல்லாம் முடித்த போது பத்தரை மணிக்கு மேலாகிவிட்டது.

ஓய்ந்து ஹாலில் ஒதுங்கிய போது, மாமி ஒரு சிறிய வால்பாத்திரமும் டம்ளரும் எடுத்து வந்தார். "என்னப்பா மெட்ராஸ் துரை.. மாசக் கூப்பன் வாங்கிக்கிறியா? சனி, ஞாயிறு இங்கே வந்து மூணு வேளை சாப்பாடு, மிச்ச நாளைக்கு சம்படம் கட்டி எடுத்துண்டு போலாம். மாசம் அம்பத்தஞ்சு டாலர். சரியா?" என்றார். நான் பதில் சொல்லுமுன் ரகுவிடம், "கதவைத் திறக்கறியா?" என்றார்.

ரகு உடனே எழுந்து பெட்ரூம் போலிருந்த அறைக்கதவைத் திறந்தான். உள்ளே வீல்சேரில் இருந்தவரைத் தள்ளிக் கொண்டு வந்தான். "இவர் தான் பசுபதி. மாமியோட ஹஸ்பென்ட்" என்றான் ரகு. பார்ப்பதற்கே கோரமாக, பரிதாபமாக இருந்தவரைப் பார்த்து அதிர்ந்துத் தயங்கினேன். "மை காட்! என்ன ஆச்சு?" என்றேன்.

"கதையை அப்புறம் சொல்றேன். இவருக்கு முதல்ல சாப்பாடு ஊட்டணும்" என்று மாமி வால்பாத்திரத்தில் கூழாகப் பிசைந்திருந்த ரசம் சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் ஊற்றிக் கணவருக்கு ஊட்டினார். ரகு ஒவ்வொருமுறையும் அவர் வாயிலிருந்து வழிந்ததைத் துடைத்தான். சாப்பிட்டு முடித்ததும் அவருடைய மேல்சட்டையைக் கழற்றினான். மாமி கொடுத்த சட்டையை மாற்றினான். பிறகு வீல்சேரை தள்ளி உள்ளே படுக்கையருகே கொண்டு நிறுத்திவிட்டு வந்தான்.

எனக்குள் ஏதோ வீக்கம். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தபோது மாமி என்னிடம், "இவர் தான் என்னோட அஸ்பெண்டு. இவா புளியங்குடி சைவப்பிள்ளைமார். அந்தக் காலத்துலயே நாங்க லவ் மேரேஜ் பண்ணிண்டோம். எங்க ஊர்ல தான் காலேஜ் படிச்சார். அந்த நாள்லே நாங்க அடிக்காதக் கூத்தில்லே. குத்தாலத்துலே.."

நான் இன்னும் "மை காட்! என்ன ஆச்சு?"வில் இருந்தேன்.

"அஞ்சு வருஷத்துக்கு முன்னால இங்கே வந்தோம். எங்க பையன் இதோ ரகுவோட கம்பெனில ஜோலியா இருந்தான். இங்கயே ஒரு வெள்ளைக்காரச்சியைக் கல்யாணம் பண்ணிண்டு தினம் சிரிச்சுண்டு சந்தோஷமா இருந்தான்" என்றபடி அலமாரியிலிருந்தக் கலர் போட்டோவைக் கொண்டு வந்து காட்டினார். "இவன் எங்க பிள்ளை அம்பி. கட்டைக்கறி. இவ ரோசு. கள்ளிச்சொட்டு. என்னமா சிரிக்கறா பாரு" என்றார்.

நான் போட்டோவை வாங்கிப் பார்ப்பது போல் பார்த்துவிட்டுத் திருப்பினேன்.

"ரோசுக்கு ரெட்டைக் குழந்தைனு விவரம் தெரிஞ்சதும் எங்களை வரச் சொன்னான் அம்பி. ப்ளேன்ல பர்ஸ்ட் க்ளாஸ்லயாக்கும் வந்தோம். அப்போ ப்லெசன்டன்ல இருந்தோம். ரெண்டு வருஷம் குழந்தைகளை வளக்கறதுக்கு கூடமாட உதவியாயிருந்தோம். மூணாம் வருஷம்.. இங்கதான் ஜூலை நாலாந்தேதி கொண்டாட்டமா இருக்கே..? எங்களைக் கூட்டிண்டு சேக்ரமென்டோ போறேன்னுட்டு.. அம்பி ரோசு ரெட்டைக் குழந்தை இவர் எல்லாம் ஒரு கார்லயும், நான் ரகு எல்லாம் இன்னோர் கார்லயும் போனோம்.. ஒரு பெரிய ஆக்சிடெண்ட் ஆயிடுத்து. அம்பியும் ரோசும் ஸ்பாட்லயே போயிட்டா. ஒரு குழந்தை ஆஸ்பத்திரிலே செத்து போச்சு. இவருக்கு எக்கச்சக்கமா அடிபட்டு மூஞ்சி பத்தி எரிஞ்சாப்புல ஆயிடுத்து.. கை விளங்காம போயிடுத்து.. காலை அறுத்துத்தான் வெளிலயே எடுக்க முடிஞ்சுது.. ஆஸ்பத்திரில ரெண்டு மாசம் இருந்தார்.. உக்காந்துட்டே இருக்கணும், படுக்க முடியாது.. இப்படித்தான்.. சின்னக் கொழந்தை வரைஞ்ச ராட்சசன் படமாட்டம் பிராணன் போறமட்டும் இருக்கணும்".

எனக்கு மனதைப் பிசைந்தது. "கடவுளே!" என்றேன். "...தப்பா நினைக்காதீங்கோ.. இன்னொரு குழந்தை என்னாச்சு?"

"இந்த ஊர்ல எல்லாத்துக்கும் சட்டம் தம்பட்டம்னு வச்சிருக்கானே? அனாதைக் குழந்தை அரசாங்கத்துக்குச் சொந்தம்னுட்டு அவாளே எடுத்துண்டுட்டா.. அதும் நல்லதுக்குத்தான்.. அந்தக் குழந்தையை எங்களால வளக்க முடியாதே?" மாமிக்குக் குரல் கம்மியது.

"என்னை மன்னிச்சுருங்க மாமி.. துக்கத்தைக் கிளறிட்டேன்"

"துக்கச்சட்டி. கிளறினா ஆப்பைல வேறென்ன வரும்? போறது.. ஏதோ உன்னைப் பார்த்ததும் எனக்குச் சொல்லத் தோணித்து.. ஓசிச் சாப்பாடு போட்டு ஒப்பாரி வைக்கறேன்னு நினைச்சுப்பாய்" என்றார்.

"அச்சச்சோ.. அப்படி இல்ல"

"சரி.. நாளை சாப்பாடுக்குத் தயார் பண்ணனும். ஞாயித்துக் கிழமையாச்சே.. கச்சேரியாட்டம் வருவா. மூணு வேளைக்கும் பண்ணனும். காசு வாங்கியாச்சே? கார்த்தால இட்லி, பொங்கல். சட்னி அரைக்கணும். மத்யான சாப்பாட்டுக்கு தேங்காய் ஜீராக் குழம்பு, உருளைக்கிழங்கு ரோஸ்ட், அவியல், அரைச்சு விட்ட ரசம், முட்டைக்கோஸ் பச்சடி, டிபனுக்கு குழம்புமா உப்புமா பண்ணுங்கோனு ரொம்ப நாளா கேட்டுண்டிருக்கா எல்லாரும், அப்புறம் ராத்திரி மீல்சுக்கு எலுமிச்ச ரசம், வாழைக்காய் பொடிமாஸ். வாரத்துக்கு கட்டிக் கொடுக்க முப்பது சம்படம்.." என்று பட்டியல் போட்டார்.

"நான் ஹெல்ப் பண்றேன்" என்று எழுந்தான் ரகு. "வரியா துரை? டயர்டா இருந்தா நீ மாடில படுத்துக்க.."

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மாமிக்கு உதவி செய்தோம். எல்லாம் முடிந்த போது இரவு ஒன்றரைக்கு மேலாகிவிட்டது. மாமி எங்களுக்கு ஒரு டம்ளரில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு என் அம்மா நினைவு வந்தது. தூங்கிக் கொண்டிருந்தாலும் எழுப்பி, குடித்துப் படுக்கச் சொல்லிப் பாலை ஆற்றிக் கொடுப்பார் அம்மா. மாமிக்கு நன்றி சொல்லிப் பாலை வாங்கிக் கொண்டேன்.

"இங்கயே படுத்துக்கோ.. ரகுவாட்டம் நீயும் எனக்கு ஒரு பிள்ளை தான்" என்று அலமாரியிலிருந்து ஒரு புது ஜரிகைவேட்டி கொண்டுவந்து கொடுத்தார். நான் வேட்டியே கட்டியதில்லை, எனினும் வாங்கிக் கொண்டேன். "நான் கண்ணசரணும். கோரமானாலும் எம்புருஷன் எனக்குக் காதலனாச்சே? அவர் கையையாவது பிடிச்சுண்டு படுத்தா தான் தூக்கம் வரும் இந்தக் கட்டைக்கு" என்றபடிக் காணாமல் போனார்.

ரகுவும் நானும் மாடியில் படுத்தோம். "சாரி துரை.. இதையெல்லாம் உன்னிடம் முதலில் சொல்ல வேணாம்னு தான் சொல்லலே.. வேணும்னா உன்னை அபார்ட்மென்ட்ல கொண்டு விடறேன்" என்றான்.

"நோ நோ.. எனக்கு ஆச்சரியமா இருக்கு ரகு.. இப்படி இவங்களுக்கு உதவி பண்றியே? பெத்தவங்களாட்டம்.."

"இதெல்லாம் சின்ன விஷயம்.. இவ்வளவுதான் என்னால் முடியும்" என்றான் ரகு. அந்தக் கணத்தில் ரகு எனக்கு விசுவரூபம் கொடுத்தான்.

"நானும் இனிமே வாராவாரம் உதவி செய்ய வரேன்" என்றேன். "ரகு.. கேட்டா தப்பா நினைக்காதே? இவங்க எப்படி இங்க தங்கறாங்க?"

"இல்லீகல் தான். விசா கிடையாது. க்ரீன் கார்ட் கிடையாது. பசுபதி டிஸ்சார்ஜ் ஆனதும் ஐஎன்எஸ்ல அறுபது நாள் கருணை அவகாசம்னு கொடுத்தாங்க.. வேன்கூவருக்கு டிகெட் வாங்கி அனுப்பிட்டு, அங்கிருந்து கார்ல நான் தான் இவங்களைப் பதுக்கி அழைச்சுட்டு வர ஏற்பாடு செஞ்சேன். இந்தியால இந்த மாதிரி ஒரு புருஷனோட இவங்களால எப்படி சமாளிக்க முடியும்? அதுக்கு மேலே இந்த வயசானக் காதல் ஜோடிக்கு வேறே குடும்பமும் கிடையாது.. அதான் இங்கயே சாப்பாட்டு மெஸ் வச்சுப் பிழைக்கற வழியப் பாத்துக்குறாங்க. எல்லாம் கேஷ்.. பேங்க் அகவுன்ட் கிடையாது, விலாசம் கிடையாது, தபால் கிடையாது.. கஷ்டம் தான், இருந்தாலும் மாமி கஞ்சி ஊட்டறப்ப பாத்தியே பசுபதியோட கண்கள் பளபளன்னதை.. அதான் லவ்.. அந்த அனுபவத்துக்காக மாமி செக்கிழுக்கவும் தயாரா இருக்கா.."

"உடம்பு சரியாமப் போனா?"

"மாமிக்கும் பசுபதிக்கும் கருணை ஆஸ்பத்திரிகளிலும் இந்திய மெக்சிகன் டாக்டர்கள் மூலமும் அப்பப்போ மருத்துவம் கிடைக்குது.. இந்த இடமும் நல்ல பாதுகாப்பு.. நாம வரப்ப முன் வீட்டுல பாத்தமே மெக்சிகன்.. உன்னையே கவனிச்சான் பாரு யுவான்.. அவன் ஏறக்குறைய செக்யூரிடி மாதிரி.. சந்தேகத்துக்கிடமா யாராவது வந்தா உடனே சிக்னல் கொடுத்துடுவான்".

        டுத்த இரண்டு மாதங்களுக்கு நான் வாராவாரம் ரகுவுடன் ராமலக்ஷ்மி வீட்டுக்குப் போவது வாடிக்கையானது. அவருக்குச் சமையல் வீட்டுவேலை என்று உதவி செய்ததால் என்னிடம் நாற்பது டாலர் மட்டுமே வாங்கிக்கொண்டார். என்ன சொல்லியும் கேட்கவில்லை. எனக்கு அவருடன் பழகுவதும் உதவுவதும் ஏனோ கோவிலுக்குப் போய்வரும் நிறைவைக் கொடுத்தது.

ஒரு புதன்கிழமை காலை ரகு எனக்குப் போன் செய்தான். "துரை.. அர்ஜன்டா உதவி தேவை.. பக்கத்துல யாரும் இல்லையே? மெதுவா பேசு" அவன் குரலில் படபடப்பு.

"என்ன?" என்றேன் அலுவலக போனில் மென்மையாக. அப்போதெல்லாம் செல்போன் கிடையாது.

"ப்ராப்ளம். ஐஎன்எஸ்க்கு யாரோ வத்தி வச்சுட்டாங்க.. ராமலக்ஷ்மி பசுபதி ரெண்டு பேரையும் யுவான் பதுக்கி வச்சிருக்கான்.. அவங்களை அங்கிருந்து உடனே வேறே எடத்துக்கு மாத்தணும்.. க்ரைசிஸ்.."

"எங்கே?"

"உன் அபார்ட்மென்டுல அவங்களை வச்சுக்க முடியுமா? கொஞ்ச நாளைக்குத் தான்.. என் வீடு கேடட் கம்யூனிடி.. செக்யூரிடி அதிகம்.. அதில்லாம மூணாவது மாடி.. உன் அபார்ட்மென்ட் க்ரவுன்ட் ப்ளோர்"

"அது சட்ட விரோதமில்லையா ரகு?"

"சில ஆத்மார்த்த நேயங்கள் சட்டத்துக்கு வெளியே தான் ஆரம்பமாவுது துரை.. கேன் யூ? ஏதாவது ஆச்சுனா நான் பொறுப்பு.."


தொடரும்>>


28 கருத்துகள்:

  1. கதையா என்ன? நம்ப முடியலை. எதோ நேர்லே நடக்கறாப்போல இருக்கு ' உங்க நடை'யில்!!!

    அடுத்த பகுதிக்கு ஆவலாக வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாடிசம்பர் 09, 2012

    முதல் இரண்டு வரி மனதை அறுத்தது. //அறுந்து கிழிந்தது மேலும் சேதமடையாமல் சேமித்து வைப்பதன் முனைப்பும் வேகமும் கலக்கமும் பலனும்... எல்லோருக்கும் புரிவதில்லை.//
    புரிந்த அந்த சிலர்தான் அடுத்தவர் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தையும் நிறைவையும் காண்பவர்கள்.

    கணவன்,மனைவினா இப்படி இல்ல இருக்கணும். ஒருத்தருக்காகவே ஒருத்தர். படிக்கும்போது அழுகையே வந்துடுத்து. நேசிக்கும் அன்பான உள்ளம் பக்கத்துலேயே இருக்கும்போது வேற என்ன வேணும். உலகமே அவங்க மட்டும்தான் என்பதுபோல். இந்த மாதிரி ஒரு அன்யோன்ய உறவு கோடில ஒருத்தருக்குதான் வரும். ரகு என் மனசுல ரொம்ப உயர்ந்து இருக்கார்.
    மிக மிக அருமையான எழுத்து நடை. ஒரு இடத்துல கூட தொய்வு இல்லாம அப்படியே கதை ஓட்டத்தோட கைபிடித்து நீந்த வைக்கிறது உங்கள் எழுத்து நடை. பிரமாதம். தயவு செய்து அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுங்கள். மாமி, மாமாவும் எப்படி எங்க இருக்க போறான்னு மனசு தவிக்கறது.

    இது கதையா, நிஜமா இல்லை இரண்டும் கலந்ததா என்று யூகிக்கவே இயலாமல் கதை சொல்வது உங்களுக்கு மிக மிக அருமையாக வருகிறது. Hats off!

    பதிலளிநீக்கு
  3. கதையெனச் சொல்லிய பின்னும்
    கதையாகப் படிக்க முடியவில்லை
    பதிவின் முதல் பத்தியையும்
    இறுதிப் பத்திக்குமான இணைவு குறித்து
    வெகு நேரம் யோசித்தேன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    பதிலளிநீக்கு
  4. கால மிதியடியின் கீழ் சாதனைக் குப்பைகள், இடைவெளி விட்டு மாமி விளி, சின்னக்குழந்தை வரைந்த ராட்சசன் ஓவியம், பசுபதியின் கண்களில் காதல் பளபள,.... எல்லாமே டச்சிங். மறுபடி ஒரு மனதில் நிற்கும் படைப்பின் தொடக்கம் தொடரட்டும்.

    அறுந்த காற்றாடிகளைச் சேமித்து வைக்கும் பழக்கமும் முனைப்பும்...நா கோயி உமங்கு ஹை, நா கோயி தரங்கு ஹை இஸ்கி ஜிந்தகி ஹை கியா கடி பதங்கு ஹை?

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நாளைக்குப் பிறகு படித்த கதை இது தான்.

    தொடக்க நாலைந்து பத்தி மட்டும் என் பார்வையில் கதை புனைவு இரண்டுக்கும் நடுவில் களம் செல்வது போல உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. அவன் கார் வைத்திருந்தான். நான் கால் வைத்திருந்தேன்

    அறுந்த காத்தாடியாய் சேத,அடைந்த வாழ்க்கையை உதவிக்கரம் கொண்டு காப்பாற்றும் அருமையான கதை ??!

    பதிலளிநீக்கு
  7. அருமை துரை. இது கதையா. இப்படி ஒரு காதலா.

    உங்கள் எழுத்துநடை பிரமிக்க வைக்கிறது.
    சில ஆத்மார்த்த நேயங்கள்.!
    கோவிலுக்குப் போகும் நிறைவு.

    எனக்கேன் கண்கள் நிறைகின்றன என்று புரியவில்லை. நன்றி.

    பதிலளிநீக்கு

  8. ரசித்தேனா ?
    இல்லை.
    மனம் நொந்து அழுதேன்.
    இது கதை என என்
    இதயம் சொல்லவில்லை

    என்றோ சுவைத்த சில தேன் துளிகள்
    என்றுமே நிலைத்திடும் உண்மை கண்டேன்.
    ராமலக்ஷ்மி !! பொறுத்திருங்கள்.
    ராமனின் தூதன்
    அனுமன் வருவான்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாடிசம்பர் 09, 2012

    //அறுந்த காற்றாடிகளைச் சேமித்து வைக்கும் பழக்கமும் முனைப்பும்...நா கோயி உமங்கு ஹை, நா கோயி தரங்கு ஹை இஸ்கி ஜிந்தகி ஹை கியா கடி பதங்கு ஹை?//

    Beautiful ஸ்ரீராம். இந்த பாட்டை சரியா நினைவு படுத்தினீங்க.

    பதிலளிநீக்கு
  10. I am unable to express my feelings exactly in words after reading this article in your blog. You started this article with a kite but narrated about someone's real story. Still I am waiting for the next part with heavy heart.

    பதிலளிநீக்கு
  11. நிஜமும், கொஞ்சம் கற்பனையும் கலந்ததா அல்லது முழுதும் கற்பனைக் கதையா? கற்பனை என்றே சொல்லிடுங்க. வாசிக்க வாசிக்க என்னவோ பண்ணுது.

    பதிலளிநீக்கு
  12. இன்னும் படிக்கலை. அதுக்குள்ளே அறுந்த காற்றாடியிலே நடுவிலே இருக்கும் "க்" கண்ணை உறுத்துது. அது அங்கே தேவையில்லை. எடுத்துடுங்க. அறுந்த காற்றாடி தான் சரி! :))))))

    பதிலளிநீக்கு
  13. //கால மிதியடியின் கீழே எத்தனை கோடிச் சாதனைகள் குப்பைத் துகளாய்க் கிடக்கின்றன என்பது எனக்கு அடங்காத ஆச்சரியம். //

    எப்படி எழுதறீங்க இப்படில்லாம் என்றே தோணுது!


    //அவன் கார் வைத்திருந்தான். நான் கால் வைத்திருந்தேன்.//

    அருமை!

    படிக்கையிலேயே கண்கள் நிறைந்து மனம் இனம் தெரியாத நிறைவில் ஆழ்ந்து போச்சு. நிறைவு ஏனெனில் இந்தக் கதையில் ஆங்காங்கே குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் மனிதாபிமானம், மற்றும் உண்மைக்காதல். மனிதம் என்பது இது தான். இது இருக்கும்வரை எதுக்கும் கவலையில்லை. நாளை நமதே!

    அதே போல் தான் ராமலக்ஷ்மி மாமியின் காதலும். அந்த நிலைமையிலும் கணவன் அருகே தான் படுக்க வேண்டும் என ஓடுகிறாளே! பசுபதியின் கண்களின் பளபளா என் கண்களில் நீரை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு

  14. நுண்ணிய உணர்வுகளை அழுத்தமாகச் சொல்லும் அருமையான கதை. எதையும் தனியாகக் கோடிட்டுக் காட்ட விரும்பவில்லை. அத்தனையும் அவ்வளவு எதார்த்தம். நினைவில் ஓடும் எண்ணங்கள் அறுந்த காற்றாடிகளா.?சபாஷ் அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  15. என்ன சொல்ல....

    கதை என்றாலும் மனதில் அதிர்வுடன் தான் படித்துக் கொண்டே வந்தேன்..... ஏன் தொடரும் எனப் போட்டுவிட்டீர்கள் என உங்கள் மேல் கோபம் கூட வந்தது....



    பதிலளிநீக்கு
  16. நான் காரைக்குடியில், project க்காக 6 மாதங்கள் தங்கியிருந்த போது ஒரு வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். 3 பெண்கள்- தாயார், இரு வயதுவந்த மகள்கள். வீட்டிலேயே நடத்திய மெஸ். அழகப்பா பல்கலைக்கழகக பேராசிரியர் ஒருவர் தான் கார்டியன். நிறைய பேர், சிக்ரி விஞ்ஞானிகள் உட்பட சாப்பிடுவார்கள். இன்றும் நாக்கில் அந்த சுவை ஒட்டியிருக்கிறது.
    கதையோடு ஒன்றிப் போகிறேன். மீண்டும் சொல்கிறேன். புறத்தை மறக்கச் செய்யும் எழுத்து. பாலகுமாரனிடம் அனுபவித்து இருக்கிறேன். பிறகு உங்களிடம்.
    \\அவன் கார் வைத்திருந்தான். நான் கால் வைத்திருந்தேன்./// ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. அப்பாதுரை அவர்களே! மிகச்சிறந்த எழுத்தாளரை அமெரிக்காவுக்கு வாரி கொடுத்து விட்டோமே! என்ன செய்ய ! மாமி,ரகு, யுவன்,என்ன அற்புதமான cris cross relationship ! என்ன அற்புதமான சொல்லோட்டம்! எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையது ! அப்படியே வந்தாலும் அந்த தெய்வத்திடம் "உமக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுக்கும்படி" வேண்டுவேன்! வாழ்த்துக்கள்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  18. // எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையது ! அப்படியே வந்தாலும் அந்த தெய்வத்திடம் "உமக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுக்கும்படி" வேண்டுவேன்! வாழ்த்துக்கள்---காஸ்யபன் //

    முதல்லே அந்த ராம லக்ஷ்மி பத்திரமான இடத்திற்கு போகணும் . அதற்கு அந்த தெய்வத்திடம் நான் வேண்டிண்டு இருக்கேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  19. உங்கள் எழுத்து நடை உண்மை கதை என்று நம்ப வைக்கிறது.
    என் கண்ணில் இருந்து பெருகும் நீரும் இது உண்மை கதை என்கிறது.

    ராமலக்ஷ்மி மாமி அவர் கையை பிடித்துக் கொண்டு படுத்தால் தான் தூக்கம் வரும் என்று சொல்லும் போது மனம் பதறி துடிக்கிறது, முன் பாதியில் ராமலக்ஷ்மி மாமி இறந்து விட்டார்கள் என்று படித்து விட்டு பின் அவர்கள் கதையை படிக்கும் போது மாமா என்னவானார்,மாமி போன பின் மாமாவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கேள்விகள் எழுகிறது. அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. அருமையான நடையில் அழகான ஆழமான கதை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. இப்பத் தான் படிச்சேன், அப்பாஜி! படிச்சவுடனே சொல்லலேனா, அப்புறம் எல்லாம் வரவழைச்சிண்டு சொல்ற பொய்யுரையாப் போயிடுமோ ன்னு பயம். அதனாலே தான் இப்பவே; இந்த சடுதியிலேயே.

    நிறைய இடங்களை அடிக்கோடிட்டு மனசிலே பதுக்கி வைச்சிருக்கேன், அப்பாஜி! திருப்பிச் சொன்னாக்கூட அந்த வரிகளை aptட்டா அதே உணர்வோட நெஞ்சிலே ஏந்திண்டது, ஒரு மாற்றுக்குறைச்சலாப் போயிடுமோன்னு அச்சம். அதான்.
    உங்களிடமிருந்து எழுத்தாய் பிரிந்த வார்த்தைகளெல்லாம் அந்தந்த உணர்வுகளை உயிரோட சுமந்து கொண்டு நின்ற நிலையாவும், படுத்த படுக்கை வசமாயும், சுழித்த சுழிகளாகவும் அப்படியே உயிர் வாழட்டும்.

    அபார ஆற்றல். அந்த ஆற்றலில் கையாண்ட மொழியும் மயங்கி ரசித்து, கலங்கி, விழிக்கடை துடைத்து வார்த்தைகளாகிப் புலம்பியிருக்கு. அப்படி அப்படியே அதே உணர்வு உள்ளவங்க கிட்டே கடத்தியிருக்கு. அவ்வளவு தான் சொல்ல முடியும்.

    ரகு மகாத்மா. மகாத்மாவோட பழகப் பாக்கியம் கிடைத்தவர்களும் மகாத்மா ஆயிடத்தான் வேணும். கார்த்திகை விளக்கு மாதிரி. ஒண்ணுலேந்து இன்னொண்ணுக்குக் கொளுத்திக்க வேண்டியது தான்.

    உயிர் கிடைச்சதே அனுபவம் கிடைக்கத்தான் போலிருக்கு. இந்த இந்த நேரத்லே, இந்த இந்த அனுபவம் இவங்க இவங்களுக்குக் குன்னு முன்னாடியே தீர்மானிச்ச மாதிரியும் இருக்கு.

    ஒரு நிஜ தரிசனத்தை திரை விலக்கிக் காட்டியிருக்கிறீர்கள், அப்பாஜி. மனசு கனத்துப் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லாடிசம்பர் 11, 2012

    இந்த கதை பற்றிய உங்கள் பின்னூட்டத்தை படித்து நான் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன் ஜீவி. இப்படி மனம் திறந்து பாராட்ட கூட ஒரு மனம் வேண்டும்.

    //திருப்பிச் சொன்னாக்கூட அந்த வரிகளை aptட்டா அதே உணர்வோட நெஞ்சிலே ஏந்திண்டது, ஒரு மாற்றுக்குறைச்சலாப் போயிடுமோன்னு அச்சம். அதான்.// இந்த உணர்வு, இதே உணர்வு ஈனக்கு பலமுறை ஏற்பட்டதுண்டு. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  23. திக்குமுக்காட வைத்தப் பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வரவேற்பைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
  24. இந்தியாவில், சொந்த நகரத்தில், பார்த்து பதைபதைத்தை அமெரிக்க பின்புலத்தில் சொன்ன பொழுது,
    கதைக்கு வேண்டிய சிக்கலான திருப்பத்திற்கு இமிக்ரேசன் கைகொடுத்திருக்கிறது. அங்கே தான் அப்பாஜியின் கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.

    நூலறுந்ததினால் பறக்கமுடியாமல் தவித்த பட்டம்; அறுந்த காற்றாடி.
    சொந்த பந்தங்களின் நெருக்கம் அறுந்ததினால் வாழ்க்கை வானில் அல்லாடும் ராமலெஷ்மி மாமி.
    அறுந்த காற்றாடி-- எவ்வளவு பொருத்தமான கதைத்தலைப்பு?..
    ஹூம்..

    நன்றி மீனாஷி மேடம். உணர்வுகளின் சங்கிலிகள் இப்படித் தான் அதுபாட்டுக்க தங்களுக்குத் தாங்களே கோர்த்துக் கொள்கின்றன.
    பின்னூட்டத்திற்கு பின்னூட்டமும் அப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  25. என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. மனதை மிகவும் கனமாக்கிவிட்டது முதல் பகுதி.
    மாமா என்ன ஆனார்? மாமிக்கு தன் கணவனை-காதலனை விட்டு எப்படி போக முடிந்திருக்கும்?

    பதிலளிநீக்கு
  26. // kashyapan கூறியது...

    அப்பாதுரை அவர்களே! மிகச்சிறந்த எழுத்தாளரை அமெரிக்காவுக்கு வாரி கொடுத்து விட்டோமே! என்ன செய்ய ! மாமி,ரகு, யுவன்,என்ன அற்புதமான cris cross relationship ! என்ன அற்புதமான சொல்லோட்டம்! எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையது ! அப்படியே வந்தாலும் அந்த தெய்வத்திடம் "உமக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுக்கும்படி" வேண்டுவேன்! வாழ்த்துக்கள்---காஸ்யபன்//

    Sir, you have said it so beautifully about Durai.

    Thanks to blog, we have got him back to write a lot with such versatility & variety.

    Hats off Durai.

    பதிலளிநீக்கு
  27. அமெரிக்க‌ ப‌ச்சை சீட்டுக‌ளுக்கு டால‌ர் த‌விர்த்து வேறு பார்வையே இருக்காது என்ற‌ பிம்ப‌த்தை சுக்கு நூறாக அடித்து நொறுக்கி விட்டீர்க‌ள் அப்பாஜி.

    "க‌ற்ப‌னைக‌ளையும் விஞ்சிய‌து உண்மைக‌ள்" என்பார்க‌ள், உங்க‌ளின் எழுத்துவ‌ண்மை இர‌ண்டையும் ஒரே மேடையில் வீழ்த்தி விடுகிற‌து. மாமியின் வார்த்தைக‌ள் சாட்சாத் நிஜமாய் வாழ்கிறாள். "குழ‌ந்தை வ‌ரைந்த‌ ராட்ஷச‌ன் ப‌ட‌ம்" குரூர‌த்தை ம‌ணிர‌த்தின‌மாக‌ காட்சிப் ப‌டுத்தி விட்டீர்க‌ள். பின்னோட்ட‌மிட்ட‌ அனைவ‌ரின் வார்த்தைக‌ளிலும் என் எண்ண‌ங்க‌ள் க‌டலில் உப்பாய் க‌ர‌ந்திருக்கிற‌து. என்னமாய் எழுதுகிறீர்கள், "எண்ண‌மாய்" எழுதுகிறீர்க‌ள்!! காசிய‌ப‌ன் சொல்லின் வ‌லி நெஞ்சில் முள்ளாய். வ‌ளமையை எல்லாம் சுருட்டுக் கொள்ளும் வ‌ல்ல‌மை கொண்ட‌து அமெரிக்கா என்ப‌து சரிதான்.

    பதிலளிநீக்கு
  28. //ஊர் படிப்பு வேலை என்று விவரம் கடந்து, இசை புத்தகம் சினிமா என்று கலை கடந்து, சிகரெட் மது மாது என்று பழக்கம் கடந்து, நிறையப் பேசினோம். //

    துரை

    முக்கால் வரியில் மொத்தத்தையும் அழுத்தி எழுதிய உங்கள் சொல்வளம் அழகு. நினைத்து நினைத்து பிரமித்தேன்.

    அதே போல், ஜி.வி. அவர்களுக்கு பதில் கருத்தில் கடைசி வரியில் கடவுளின்பால் நமக்கு இருக்கும் பந்தத்தை மூன்றே வார்த்தையில் அடக்கிவிட்டீர்கள்.

    அற்புதம்

    - சாய்

    பதிலளிநீக்கு