2012/06/15

தைவாதர்சனம்




◄◄   1     2     3



    தை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.

பொடி டப்பாவை கால் டேக்சில தொலைச்சுட்டேன்னு சொன்னேனில்லையா? மகராஜன், வீடு தேடிக் கொண்டு வந்து கொடுத்தான். காசு கூட வாங்கிக்கலை. இவாள்ளாம் இருக்கறதுனால தான் மழை பெய்யறது.

மழைன்னதும் பாருங்கோ, அன்னைக்கு சரியான மழை. பின்னால இருக்கற எங்காத்துப் போர்ஷன்லந்து வாசல் கேட்டுக்குக் குறுகலான மண்பாதை. கொட்ற மழைக்குக் கேக்கணுமா? ந்ருஜலம் கோமியத்துலந்து பக்கத்து பில்டிங் சாக்கடை எல்லாம் கலந்து சேறும் சகதியுமா சர்வமூத்ர சாகரமா ஓடிண்டிருக்கு. வாசல்லந்து பீங் பீங்னு ஹாரன் அடிக்கறது. யாருடாதுனு எந்தப் போர்ஷன்காராளும் பார்க்கலை. யாரோ இறங்கி வந்து "ஐரே! ஐரே!"னு கூவறான். நான் ஒரு குடையைப் பிடிச்சுண்டு வாசல்ல வந்தேன். அதுக்குள்ள கால் சேத்துல புதைஞ்சுடுத்து. சபிச்சுண்டே காலை தண்ணில அளஞ்சுண்டே பாத்தேன், கால் டேக்சிக்காரன் தான். மூக்கை மூடிண்டு அங்கயும் இங்கயும் அருவருப்போட தாவித்தாவி நான் சிரமப்பட்டு நடக்க ஆரம்பிச்சதைப் பாத்ததும் அவன் அங்கருந்து, "நின்னுக்க ஐரே.. நான் வரேன்"னு சொல்லி, கன அலட்சியமா சீட்டியடிச்சுண்டே புண்யநதியில இறங்கிவர மாதிரி எங்கிட்ட வந்தான். பொடி டப்பாவைத் தந்தான். நான் ஏதாவது அவனுக்குத் தரதுக்குள்ளே, "ஒண்ணும் வேணாம் ஐரே, வர்ட்டா?"னுட்டு மறுபடியும் சீட்டியடிச்சுண்டே சந்தோஷமா நடந்து போயிட்டான். பொடி டப்பா அந்த மூத்ரசகதியில மூழ்கிடப் போறதுன்னுட்டு சர்வ ஜாக்கிரதையா அடி மேல அடி வச்சு ஆத்து வாசலுக்கு வந்து காலையலம்பிண்டு உள்ளே போனேன்.

எனக்கும் அந்த டேக்சிக்காரனுக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தேளா? நேக்கு உதவி செய்ய வந்திருக்கான். என்னால சந்தோஷமா அந்த சகதியில இறங்கி அந்த உபகாரத்தை வாங்கிக்க முடியலே. ஆனா அவன் சீட்டியடிச்சுண்டே வந்து சந்தோஷமா குடுத்துட்டு நன்றி கூட எதிர்ப்பார்க்காம அதே சகதியிலே நடந்து போயிட்டான். நான் உடம்பு சுத்தம் பார்த்ததாலே எல்லாத்துக்கும் கவலைப்பட்டு எதையும் செய்ய முடியலே. அவனுக்கு மனசு சுத்தமா இருக்குறதால எதைப் பத்தியுமே கவலையில்லாம எல்லாத்தையும் செய்ய முடிஞ்சுது. இதான் வித்தியாசம்.

இதே மாதிரி பாருங்கோ.. பிரதாப ராஜா, பிரம்மா ரெண்டு பேருமே அவாந்த்ர லோகப் பாதையிலே போயிண்டிருக்கா. ஆனா ஒருத்தருக்கு அசூயை, இன்னொருத்தருக்கு ஆனந்தம். அவாந்த்ர லோகத்துக் கிட்டே வரப்போ ரசகந்தம் அடிக்கிறது. இங்லிஷ்ல சல்பர்னு சொல்லுவாளோனோ.. எரியற வாடை அடிக்கறது. என்னென்னவோ சப்தம் எல்லாம் கேக்கறது. பிரம்மா மனசுக்குள்ளே திட்டிண்டே வரார். பிரதாப ராஜாவோ ஒரு சந்தோஷ எதிர்பார்ப்போடயும் தேவாளுக்கு உபகாரம் பண்ணப்போற நிறைவிலயும் வரார். மனசுல பாருங்கோ.. மார்க்கம் உண்டு, மூர்க்கமும் உண்டு.

அவாந்த்ர லோகம் வந்ததும் ப்ரம்மா, "பிரதாபா, நீ போய் அழைச்சுண்டு வா, நான் இங்கயே இருக்கேன்"னு சொல்றார். பிரம்மாவுக்கு உள்ளே போகப் பிடிக்கலைங்கறது பிரதாபனுக்குப் புரியறது.

ராஜா தனியா உள்ளே போறார். அங்கே ம்ருத்யுவான ஜன்மாக்களெல்லாம் ஓலமிட்டிண்டுருக்கு. உருவமெல்லாம் இல்லை. ஆனா தன்னைச் சுத்தி நடமாட்டம் இருக்கறதை உணர முடியறது. தன்னோட குமாரனைத் தேடறார். "பிரதாப குமாரா, குமரா"னு கதறிண்டே போறார். சப்தமே காணோம். இந்த டைம் பார்த்து ஒரு குடும்பப் பாட்டு கூட இல்லாமப் போனது அவருக்கு வருத்தமா இருக்கு. அவாந்த்ர லோகத்துக் கடைசி வரைக்கும் பாத்துட்டு திரும்பறார். பிள்ளையோட ஜீவன் குரல் கொடுக்கக் காணோம். இவ்ளோ தூரம் வந்தும் கண்டுபிடிக்க முடியலையேனு ரொம்ப வருத்தமா போய், "குமரா, குமரா"னு துடிச்சு அழறார்.

மனசுவிட்டு அழறோம் பாருங்கோ, அதுக்கு எப்பவுமே அதீத சக்தி உண்டு. ஜீவனோட ஜீவனை சேக்கற சக்தி. தெய்வத்தையும் மனுஷாளையும் சேக்கற சக்தி. 'ஆருளர் களைகண்?'னு எதுக்கு அழணும்? சகலத்தையும் துறந்து, 'ரங்கா! நீ எனக்கு அம்மாயில்லையா? பிள்ளைக்கு அம்மாவை விட்டா வேற யார் இருக்கா? உன்னை விட்டா நேக்கு வேறு யாரு இருக்கா, என் அம்மா?!'னு ஆத்மா கரைய அழறப்போ, அங்கே அடிப்பொடிக்கும் அனந்தனுக்கும் ஹாட்லைன் கனெக்ஷன் கிடைக்கறது பாருங்கோ.. அந்தச் சக்தி. அமானுஷ்யத்துக்கும் அப்பாற்பட்ட சக்தி.

ராஜா அப்படி மனசு வெம்பி அழ ஆரம்பிச்ச சித்த நாழிக்கெல்லாம், "அப்பா!"னு ஒரு குரல் கேக்கறது.

திக்குமுக்காடிப் போறார் ராஜா. "குமரா!"ங்கறார். "அப்பா!"ங்கறது ஒரு ஜீவன். "குமரா!"ங்கறார் மறுபடி. "அப்பா!"ங்கறது அதே ஜீவன். குரலை வச்சுத் தேடிக் கண்டுபிடிச்சுடறார் ராஜா. அவர் கண்லேந்து தாரை தாரையா ஆனந்தஜலம். நடந்ததையெல்லாம் சொல்றார்.

உள்ளே இப்படி இருக்கச்சே, வெளில பிரம்மா பொறுமையில்லாம காத்துண்டிருக்கார். 'என்னடாது, உள்ள போன ராஜாவை இன்னும் காணோமே?'னு அவருக்கு ஒரே அமாதி. 'சரி, இனிமே ராஜா திரும்பி வரப் போறதில்லை'னு நினைக்கறப்போ, ராஜாவோட குரல் கேக்கறது. "பிரம்ம தேவரே! என் பையனைக் கண்டுபிடிச்சுட்டேன்"னு குரல் கேக்கறது. பிரம்மாவுக்கு பரம சந்தோஷம். "என்ன பிரதாபரே, உம்ம பையனைக் கூட்டிண்டு வந்தீரா?"னு கேக்கறார்.

"அவன் வர மாட்டேன்னுட்டான்"கறார் பிரதாப ராஜா.

"என்ன? வர மாட்டானாமா? என்னய்யா இது?"னு பதட்டப்படறார் பிரம்மா.

"நான் என்ன பண்றது. எவ்வளவு கெஞ்சியும் வரமுடியாதுன்னுட்டான். நீங்களே வேணும்னாலும் கேட்டுப் பாருங்கோ"னுட்டு நடக்க ஆரம்பிக்கறார் ராஜா.

"நான் எப்படிய்யா உள்ளே போறது?"னு எரிஞ்சு விழறார் பிரம்மா.

"அவாந்த்ர லோகத்து வாசல்லயே தான் நிக்கறான். நீங்க இங்கருந்தே பேசுங்கோ"னு சொல்றார் பிரதாப ராஜா.

"பிரதாப குமாரா.. என்னய்யா கூத்தடிக்கிறே? என் வரமாட்டேங்கறே?"னு நாலு வாயாலயும் கத்தறார் பிரம்மா.

குமார ஜீவன் கொஞ்சம் நிதானமா பதில் சொல்றது. கிணத்துக்குள்ளேந்து வர மாதிரி இருக்கு சப்தம். ஆனா நிதானமா, தெளிவாக் கேக்கறது.

பதிலைக் கேட்டதும் பிரம்மாவுக்கு ரொம்பக் கோவம் வரது. அவர் மொகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்கறது. "பிரதாப ராஜா, உம்ம புத்தியைக் காமிச்சுட்டீரே?"னு கோவமா பேசறார்.

"நான் என்னய்யா செய்யறது? எல்லாம் என் பையனோட ஜீவன் சொன்னதைத் திருப்பிச் சொன்னேன்! இப்ப நீங்களே அதன் வாயால கேட்டாச்சு. நீங்க பண்ணின கூத்துக்கு நான் எப்படி ஜவாப்தாரியாறது?"ங்கறார் பிரதாப ராஜா. "என் பிள்ளை சொன்னதை கேட்டேள் இல்லையா? இப்ப என்ன செய்யணுமோ செய்யுங்கோ"னு சொல்லிட்டு அங்கருந்து நடக்க ஆரம்பிச்சார்.

"இரும் ஓய்.. மும்மூர்த்திகளும் சேந்து எடுக்க வேண்டிய முடிவாச்சே?"னுட்டு நேரா ராஜாவை இழுத்துண்டு விஷ்ணு லோகத்துக்குப் போறார்.

அங்க தேவர்கள் கூட்டம் நின்னுண்டிருக்கு. சிவனும் விஷ்ணுவும் காத்துண்டிருக்கா. பிரம்மா வேக வேகமா வர்றதைப் பாக்கறா. "என்னய்யா? அந்த உதவாக்கரை என்ன பண்ணினான்?"னு கேக்கறா.

"ஷ்!"ங்கறார் பிரம்மா. "இதோ என் பக்கத்துல தான் இருக்கான்"னு சைகை காட்டறார் பிரம்மா.

"பிரதாபனை யாரு என்னய்யா சொன்னா? அவர் மகாபுருஷனாச்சே. நாங்க அந்த உருப்படாத தேவ தோப்பனாரைச் சொன்னோம், இல்லையா பரமசிவம்?"னு வழிஞ்சுண்டே சொல்றார் மகாவிஷ்ணு. அசடாட்டம் தலையாட்டறார் சிவன்.

பிரம்மா எல்லாத்தையும் சொல்றார். "அந்தப் பையனோட ஜீவன் கிட்டே பேசிட்டு வந்தேன். ஒரு நிர்ப்பந்தம் போடறான். தன்னோட அப்பாவை, அதாவது பிரதாப ராஜாவை, நாலாவது மூர்த்தியா ம்ருத்யுலோக மேனேஜரா போட்டாத்தான் திரும்பி வருவேன்னு சொல்லிட்டான். இல்லைன்னா இப்படியே ஜீவனாவே இருந்துட்டுப் போறேன்னு சொல்லிட்டான்"கறார்.

"என்னய்யா இது? அக்கிரமமா இருக்கே?"ங்கறார் நமச்சிவாயர்.

"நான் என்ன செய்யறது? என் பையனோட ஜீவன் வேணும்னா இதான் கண்டிஷன்"கறார் பிரதாப ராஜா.

"அத்தனையும் சொல்லிக் குடுத்துட்டு, நான் என்ன செய்யட்டுங்கறார். என்ன ஒரு அழிச்சாட்டியம் பாருங்கோ!"ங்கறார் பிரம்மா.

மகாவிஷ்ணு எல்லாத்தையும் பாத்துட்டு சிவன் காதுல ஏதோ சொல்றார்.

தலையாட்டிட்டு சிவன் சொன்னார். "சரி. நேரமாயிண்டே போறது. எப்படி இருந்தாலும் ம்ருத்யு மேனேஜ் பண்ண ஆள் தேவைன்னு போட்டிருக்கோமே. அமரத்வமான நமக்கு ம்ருத்யு லோகத்தை மேனேஜ் பண்ண வரலை. பிரதாப ராஜாவுக்கு அந்த வேலையைக் கொடுத்துடுவோம். அவரும் ரொம்ப நாளா தேவ வம்சத்துல சேந்துடணும்னு சொல்லிண்டிருக்கார். சீக்கிரம் அந்த ஜீவனைத் திருப்பலைன்னா நம்ம கதி ரொம்ப மோசமாயிடும். நம்ம சௌகரியத்துக்காகவாவது பிரதாப ராஜாவுக்கு இந்த வேலையைக் குடுத்துட வேண்டியது தான். என்ன, பிரதாபரே, உம்மை நாலாவது மூர்த்தியா செஞ்சுட்டா, உம்ம பையன் ஜீவனைத் திருப்பிக் கொண்டு வந்து சேக்க சம்மதமா?"ங்கறார்.

"மொதல்ல என்னை தேவ வம்சமாக்கி, ம்ருத்யுலோகாதிபதி ஆக்குங்கோ"ங்கறார் பிரதாப ராஜா.

"பிரதாபராஜா இந்தக் க்ஷணத்துலந்து தேவ வம்சம். இந்தக் க்ஷணத்துலந்து ம்ருத்யுலோகாதிபதி. இந்தக் க்ஷணத்துலந்து நாலாவது மூர்த்தி. தர்மலோக பரிபாலனம் பண்றதுனால அவர் பெயர் இன்னைலேந்து தர்மராஜன். ம்ருத்யுலோகாதிபதியா இருக்கறதால யமன். இந்தக் க்ஷணத்துலந்து யமதர்மராஜன்"னு நீலகண்டர் பிரதாப ராஜாவோட கையைப் பிடிச்சு அர்க்கயம் விட்டு சொல்றார்.

பிரதாப ராஜனுக்கு சந்தோஷம். மும்மூர்த்திகளைக் காத்தோடக் கட்டிண்டு தேங்க்ஸ் சொன்னார். குமாரனோட ஜீவனைப் பாத்துக் கூட்டிண்டு வர ஓடினார்.

யமதர்மராஜன் தான் தேவ வம்சத்துல சேர்ந்த மொதல் மனுஷன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம், ஆனா இதான் யமதர்மராஜன் உதயமான கதை. உண்டான கதை. நிலைச்ச கதை. அன்னைலேந்து ஸ்ரத்தையா தர்மலோகம் பரிபாலனம், ம்ருத்யுலோக பரிபாலனம் பண்ணிண்டு அமரத்வத்தோட இருக்கார் பிரதாப ராஜன் அலியெஸ் எமதர்மராஜன்.

சாபத்துக்கு அப்புறம் உண்டானதாலே, மனுஷனா இருந்து தேவனா மாறினதாலே, யமன் மட்டுமே மனுஷாள் கண்ணுக்குத் தெரியறான். இதான் கதை. இதி சமாப்தம். எல்லாரும் போய்ட்டு வாங்கோ.

என்ன? துளசி மாமி அடிக்க வராப்ல மொறச்சுண்டு நிக்கறாரே? ஓ! பிரதாபகுமாரன்-ப்ரியதர்சனி பத்தின மிச்ச காதல் கதையா? மறந்து போயிருப்பேள்னு நினைச்சேன். சரி, அதையும் சொல்லி, சுப சமாப்தமா பண்ணிட்டா போச்சு.

யமதர்மராஜன், அதான் நம்ம பிரதாப ராஜன், வேக வேகமா போய் குமாரனோட ஜீவனைக் கூட்டிண்டு வந்து ஒடம்போட சேத்ததும், பிள்ளையாண்டான் பழையபடி புருஷோத்தமனா எழுந்துக்கறான்.

மூச்சு வந்த முகூர்த்தம், "ப்ரியதர்சனி, எங்க நீ, கண்ணே?"னு தேடறான்.

"இங்கே இருக்கேன் கண்ணா.. இதோ வந்துட்டேன் என் ராஜா"னு குரல் மட்டும் கேக்கறது.

'என்னடாது.. குரலைக் காதலிக்கவா இத்தனைக் கஷ்டப்பட்டோம்?'னு நெனக்கறான் குமாரன்.

"இந்தாடி.. தடிச்செருக்கி, சித்த நில்லுடி"னு அதட்டறார் பிரம்மா. "உம்பாட்டுக்கு சாபத்தைக் குடுத்துட்டு கண்ணா ராஜானு சுத்திண்டிருக்கே? எங்க கதி என்னாறது? சாபத்தை மொதல்ல வாபஸ் வாங்கிக்கோ"னு கோவமாச் சொல்றார்.

"மறந்தே போச்சு!"னுட்டு சாபத்தை திருப்பி எடுத்துக்கறா ப்ரியதர்சனி. "சாபம் வாபஸ்"ங்கறா.

ஒரு க்ஷணமாறது, ரெண்டு நாழியாறது, மூணு முகூர்த்தமாறது. ஒரு மாத்தமும் காணோம். தேவாளும் மனுஷாளும் ஒருத்தருக்கொருத்தர் கண்ணுக்குத் தெரியாம இருக்கா.

"கக்கக்க்கும்"னு யாரோ கனைக்கறது கேக்கறது. எல்லா தேவாளும் திரும்பிப் பாக்கறா. அங்கே விஷமமா இளிச்சுண்டே நிக்கறார் தேவகுரு, பிரகஸ்பதி.

"என்னய்யா?"னு எரிச்சலோட கேக்கறா விஷ்ணுவும் சிவனும்.

"ஒண்ணுமில்லே. 'தேவசாபம் சாஸ்வதம்'னு நீங்க ரெண்டு பேரும் தான் தீர்மானிச்சேள். தேவாளுக்கு அம்ருதம் கடைஞ்சு கொடுக்கறச்சே. ஞாபகமில்லையோ?"ங்கறார் பிரகஸ்பதி.

எல்லா தேவாளுக்கும் திக்குங்கறது. எல்லா தேவாளும் சிவாவிஷ்ணு கிட்டே "இப்ப என்ன செய்யறது?"னு கேக்கறா. "கொடுத்த சாபத்தை எடுக்க முடியாது. ஆனா நிவர்த்தி பண்ணலாம்னு நாம சொன்னது நம்மளையே பழி வாங்கறதே? நீயே பரிகாரம் சொல்லுமா"னு கெஞ்சறா ரெண்டு மூர்த்திகளும் ப்ரியத்ரசினி கிட்டே.

ப்ரியதர்சனி பொம்னாட்டியாச்சே? முன் பின் எப்பவும் புத்திசாலியோன்னோ? யோசிச்சு சொல்றா: "தப்பு நடந்து போச்சு. சாபம் குடுத்தாச்சு. சரி, அரூபமா தெரியமாட்டேள். ஆனா லோகத்துல காதலிக்கற மனுஷா யாராயிருந்தாலும் கோவிலுக்கு வர வரைக்கும் இனிமே கோவில்ல விக்ரகம், சிலைனு பல வடிவங்கள்ல கண்ணுக்குத் தெரிவேள். மனுஷாளும் விக்ரகம்னு நினைக்காம தெய்வம்னு நினைச்சு பழைய மாதிரியே நேசமா நம்பிக்கையா இருப்பா. ஒவ்வொரு கோவில் கட்டும் போதும் மூல உற்சவர் வடிவத்துலயும், கோபுர சிலா வடிவத்துலயும் எல்லா தேவர்களும் கொஞ்சம் கொஞ்சமா ரூபத்துக்கு வருவேள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இப்படி ஒத்தொத்தரா கோவில் கட்டி வந்ததும், பழையபடி தேவா மனுஷா சகஜீவிதம் பரிணாமிக்கும்".

சிவா விஷ்ணுவுக்கு ஒரே ஆனந்தம். "நல்ல காரியம்.."னு சொல்றா.

"சரிதான்... முப்பத்து முக்கோடி தேவாளும் ஒத்தொத்தரா கோவில விக்ரகம், கோபுரச் சிலாரூபம்னு வர்றதுக்குள்ளே நிறைய யுகாந்தரமாகுமே?"ங்கறார் தேவ தோப்பனார்.

டக்குனு அவர் வாயைப் பொத்தறார் பிரம்மா. "உமக்கு வேறே ஏதாவது ஐடியா இருந்தா சொல்லும், இல்லை இனி வாயைத் திறந்தீரோ, நீர் தான் கடைசிச் சிலா ரூபம்"னு கோவமா சொல்றார். கப்சிப் காராபூந்தின்னு ஆயிடறார் தேவ தோப்பனார்.

எதனால கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்றோம்னு இப்பப் புரியறதோ? சாமி கும்பிடறதுக்காகனு சிலபேர் நினைக்கறா. ஆனா அது லோகத்துல காதலை வளக்கறதுக்காக. அதே நேரம் ஒவ்வொரு தடவையும் நூத்துக் கணக்குல தேவாளுக்கு ரூபம் கொடுக்கறோம். அப்படி வந்த தேவாள் நம்மோடதான் இருக்கா. எல்லா தேவாளுக்கும் ரூபம் வந்தோடனே, எல்லார் கண்லயும் படும்படி ஒண்ணா இருப்பா. தேவா மனுஷா எல்லாரும் ஒண்ணா இருப்போம். அது வரைக்கும் அங்க இங்கனு சில பேர் கண்ணுக்கு மட்டும் தெரியறா.

ஆச்சு. கதை முடிஞ்சுது.

என்ன? கைல கல்லு வச்சுண்டு நிக்கறாரே வெங்கட்? இன்னும் மொறைக்கலாப்ல இருக்கே? மிச்சத்தையும் சொல்லிடறேன். கல்லைக் கீழே போடுங்கோ.

சாபத்தை தணிக்கும்படியான யோசனை பண்ணியும், தான் இன்னும் தன்னோட காதலனோட சேர முடியலையேனு வருத்தமா இருக்கு ப்ரியதர்சனிக்கு.

அப்போ மகாவிஷ்ணு அவகிட்டே சொல்றார். "அம்மா, ப்ரியதர்சனி. தேவ எண்ணிக்கை அபிக்ஷணமா.. நிரந்தரமா இருக்கணும். இப்ப ஒண்ணு ஜாஸ்தியாயிடுத்து. உனக்கோ உன் காதலனோட சேந்து இருக்கணும்னு ஆசை. ஆனா, அது மனுஷ்ய வம்சத்துல தான் சாத்யப்படும். உனக்குக் காதல் அவ்ளோ பெரிசுன்னா, முக்யம்னா, நீ தேவ வம்சத்தை விட்டு மனுஷ்ய வம்சத்துல சேந்துடு. உன் மனசுக்குப் பிடிச்சவனோட சந்தோசஷமா இருக்கலாம். நான் ஒரு வரம் குடுக்கறேன். காதல்னாலே உங்க ரெண்டு பேர் ஞாபகம் தான் எல்லாருக்கு வரும், காதலிக்கறவா எல்லாருமே உங்க ரெண்டு பேரையும் கொண்டாடுவா. உங்க நினைவா காதலைத் தேடி லோகத்துல ஸ்த்ரீ புருஷாள்ளாம் கோவிலுக்கு வருவா"னு சொல்றார்.

சொல்லிட்டு அவளை ஒரு அர்த்தபுஷ்டியான புன்னகையோடப் பாக்கறார். இவ சாமானியமான பொண்ணில்லை, கார்யத்தை சாதிக்கச் தெரிஞ்சவள்னு சொல்றது அந்தப் புன்னகை.

"வேண்டாம், போகாதே. எங்களை விட்டுப் போயிடாதே"னு தடுக்கறா, ப்ரியதர்சனியோட தோப்பனார் தாயார் பங்காளிகள் எல்லாரும்.

ப்ரியதர்சனி யோசிக்கறா. ஒரு முடிவுக்கு வந்துடறா. "பெத்த பெண்ணோட மனசைப் புரிஞ்சுக்காம நடந்துக்கற அப்பா அம்மா நேக்கு இருந்து என்ன ப்ரயோஜனம்? தன்னோட ஆடம்பரத்துக்கும் ஆசாரத்துக்கும் என்னை பலி கொடுக்கத் தயாரா இருக்குற அப்பா அம்மாவை விட, எனக்காக எதையும் விட்டுக் கொடுக்கற மனுஷ்ய ராஜனே மேல்"னு சொல்லிட்டு தேவரூபத்தைக் களையறா. மனுஷ்ய ரூபம் எடுத்துக்கறா.

பிரதாப குமாரனுக்கு சந்தோஷம். ப்ரியதர்சனி கண்ணுக்குத் தெரிஞ்சதும் அவளை அப்படியே கட்டிண்டு அழறான். "என்னை மீட்டுண்டு வந்தியே!"னு முத்தமா பொழியறான். அவளுக்கோ அவனோட தேக ஸ்பர்சம், வாத்சல்யம், எல்லாம் சொர்க்க லோகத்தை விட மகோன்னதமா இருக்கு.

ரெண்டு பேரும் அப்பவே கல்யாணம் பண்ணிண்டா. அந்தக் க்ஷணத்துலந்து சந்தோஷமா இருந்தா.

அந்த ஜன்மத்துக்கப்புறம் சத்யவான்-சாவித்ரியா பொறந்தா. அப்றம் நள-தமயந்தி, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதின்னு காதல் ஜோடியா ஜன்மம் எடுத்துண்டே இருக்கா. எத்தனை ஜன்மம் எடுத்தாலும் அவாளோட காதல் கொறையவே இல்லை. இது தான் அவாளோட கதை.

இவ்ளோ தூரம் கேட்டேள், இன்னும் சமாசாரம் பாக்கி, அதையும் கேட்டுட்டுப் போங்கோ.

யமதர்மராஜனானதும் திடீர்னு பிரதாப ராஜா எதிர்ல சர்வாலங்காரத்தோட ஒரு மகிஷம், எருமை மாடு.. நிக்கறது. "இனிமே நீ இதுல தான் போகணும்"னு சொல்றா தேவாள்ளாம்.

ஒரு நாள் போறான், ரெண்டு நாள் போறான். ஊர்ல எல்லாரும் சிரிக்கறா மாதிரி இருக்கு. ராஜாவோன்னோ? "இன்னைலந்து எருமை மாடு சாஸ்வதம். எல்லாரும் பசும்பாலுக்குப் பதில் எருமைப்பால் சாப்பிடணும். வீட்டுக்கு ரெண்டு எருமை வளக்கணும்"னு ஆணை போடறான். 'தேவனான உடனேயே அக்கிரமம் பண்றானே!'னுட்டு புலம்பிண்டே எல்லாரும் எருமை மாட்டை வளக்க ஆரம்பிச்சா. எருமைப்பால் காபி இன்னிக்குச் சாப்பிடறோம்னா அதுக்கு பிரதாபகுமாரன்-ப்ரியதர்சனி காதல் தான் காரணமாக்கும்.

கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணப் பண்ண, தேவாள்ளாம் சாப விமோசனம் கெடைச்சு, ஒத்தொத்தரா ரூபத்துக்கு வருவானு சொன்னேனில்லையா? அந்தக் கணக்குப்படி பாத்தா, அனேகம் தேவாளுக்கு ஏற்கனவே சாப விமோசனம் கிடைச்சாச்சு. நாமதான் தெருவுக்குத் தெரு கோவில் கட்டிண்டிருக்கோமே? ஒரு பக்கம் கோவில் பாழடைஞ்சாலும் இன்னொரு பக்கம் புதுசா கட்டறோமே? அந்தக் கணக்குப்படி, இதே வேகத்தில கோவில் கும்பாபிஷேகம்னு பண்ணிண்டிருந்தா, இன்னும் முப்பத்து மூணு வருஷத்திலே, 2045ல, எல்லா தேவாளுக்கும் சாப விமோசனம் கிடைச்சுடும். அன்னைலேந்து தேவா-மனுஷா சகஜீவனம் தான். அதைப் பாக்க எல்லாரும் தீர்க்காயுசா இருக்கணும்னு வேண்டி கதையை முடிச்சுக்கறேன். சுபஸ்ய சுபம்.

இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. ப்ரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.

24 கருத்துகள்:

  1. ஆஹா.. கால்டாக்சிக்காரனுக்கு மனசு சுத்தம்கறதா உடம்பு அசுத்தத்தைப் பத்திக் கவலைப்படலைன்ற விஷயம் கனஜோர். யமதர்ம ராஜன் உருவான கதையும் காதலுக்காக கோயில் கட்டறதுமா... அமர்க்களப்படுத்திட்டேள். தேவாளைச் சந்திக்க நான் இருப்பேனோ... தெரியலையே... ஆனா கதை கேட்டதுல நேக்கு ரொம்பத் திருப்தியாச்சு.

    பதிலளிநீக்கு
  2. அசுவத்தாமனின் பொடிமட்டை கூட பிரசங்கம் பண்ணும் போலிருக்கு.
    பிரமாதம் போங்கோ.
    சகலகலா வல்லவர் தான் நீங்கள் அப்பாஜி

    பதிலளிநீக்கு
  3. ஆஹா.. ஆஹா.... அட்டகாசமா முடிச்சேள்!

    மனசு சுத்தம் வேணும்ன்னேள் பாருங்கோ..... அது!

    இப்பசத்திக்கு ப்ரியதர்சினியும் ப்ரதாபகுமாரனும்..... இந்தப்பிறவியில் 38 வது வெட்டிங் அனிவர்ஸரி கொண்டாடி முடிச்சுருக்கா என்பது தேவ ரகஸ்யம் கேட்டோ!!!

    நியூஸியிலும் ஃபிஜியிலும் எருமையே கிடையாது. ஸோ பசும்பால் காப்பிதான்:-))))

    பதிலளிநீக்கு
  4. அட்டகாசமா முடிச்சேள் பிரசங்கத்தை....

    எருமைப் பால் தான் குடிக்கணும்னு சொன்னதை ரொம்பவே தொடர்ந்து செய்யறவா இந்த ஹரியானால இருக்கறவா தான். :) ஹரியானா முழுக்க, எருமை எருமை எருமை தவிர வேறில்லை.... :)))

    பதிலளிநீக்கு
  5. கதை நடை எல்லாம் நல்லா இருக்கு ஜீ...

    //....நான் என்ன செய்யறது? என் பையனோட ஜீவன் வேணும்னா இதான் கண்டிஷன்"கறார் பிரதாப ராஜா.
    ..........

    மகாவிஷ்ணு எல்லாத்தையும் பாத்துட்டு சிவன் காதுல ஏதோ சொல்றார்.

    தலையாட்டிட்டு சிவன் சொன்னார்.......
    ........... பிரதாப ராஜாவுக்கு அந்த வேலையைக் கொடுத்துடுவோம்...//



    இதினால் அறியப்படும் நீதி என்னானா....

    பிளாக்மெயில் பண்ணினா தான் தேவலோகம்னாலும் காரியம் நடக்கும்...

    மயிலே மயிலேன்ன இறகு போடாதுங்கிறது தான்....


    ஆனாலும் கொஞ்சம் சின்ன சந்தேகம்...

    //...."பிரதாபராஜா இந்தக் க்ஷணத்துலந்து தேவ வம்சம். ...//
    இப்படி ஒரு க்ஷணத்தில் தேவரிலிருந்து மனுஷனுக்கும் மனிஷனிலிரிந்து தேவருக்கும் மாற முடியும்னா.....

    அப்புறம் ஏன் பிராதப ராஜ ஒவ்வொறுத்தரையா கெஞ்சிக்கிட்டு இருக்கார் ?

    பச்சை சட்டைக்கு பதில் மஞ்சள சட்டைய மாற்றூம்படி சமாச்சரம் தான் இனம் மாறுவதும்னா....

    காதலுக்காக கொலை அளவுக்கு போக வேண்டியது ஏன் ?


    எல்லா தேவாளும் கல் சிலை ரூபத்தில் தான் வருவான்னா... எல்லா
    தேவாளூக்கு சிலை வச்சப்புறமும் கல் ரூபத்திலேயே இருந்திட்டா என்ன பண்றது ?

    பதிலளிநீக்கு
  6. அன்பின் அப்பாதுரை சார்,

    ஆகா... அட்டகாசம் .. அருமையான நடை. மிகவும் இரசித்துப் படித்தேன்.

    அன்புடன்
    பவளா

    பதிலளிநீக்கு
  7. இந்த டைம் பார்த்து ஒரு குடும்பப் பாட்டு கூட இல்லாமப் போனது அவருக்கு வருத்தமா இருக்கு. //
    Joooooperu, ippothaiku ithan. appurama thaniya ketukaren. :))))))

    பதிலளிநீக்கு
  8. போங்கோ மாமா.... என் பேரு ப்ரவசனத்துல வரல்ல..... உக்கூம்.... போங்கோ நான் பின்னூட்டம் போட மாட்டேன் போங்கோ....

    பதிலளிநீக்கு
  9. போன இரண்டு பதிவுக்கும் பின்னூட்டமிட முடியவில்லை. என்ன காரணமோ பின்னூட்டப் பெட்டி திறக்கவில்லை THIRD TIME I AM LUCKY.
    கற்பனை எப்படியெல்லாம் விரிகிறது. இன்னும் 33- வருஷமாகுமா. தேவாளோட சக ஜீவனம் பண்ண எனக்குக் கொடுத்து வச்சிருக்கா தெரியலியெ. 107 வயசு வரை இருப்பேனா.?நேக்காக ஸ்பெஷலா வேண்டிக்குங்கோ.

    பதிலளிநீக்கு
  10. நான்கு பகுதிகளையும் தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. எழுதியதும் சுகமான அனுபவம்.

    G.M Balasubramaniam: படிப்பதே போதுங்க.. பின்னூட்டம் போனஸ். நன்றி.
    Vinoth Kumar: நல்ல கேள்வி கேட்டீங்க. தியாகியாவனும்னா தன்னைத் தரணும், வள்ளலாவனும்னா வாரி வழங்கணும்.. இப்படி ஏதாவது செய்யணும். தெய்வமாவனும்னா பாருங்க.. மனுசனா இருந்தாலே போதும் :)

    துளசி கோபால்: மனசார ஒரு நமஸ்காரத்தைப் போட்டு அமோகமா இருக்கணும்னு வேண்டிக்கிறேன் :)
    ஆமா.. அந்தூர்ல திட்டறதெல்லாம் எப்படி? பொதுவா "மாடாட்டம் நிக்கறியே.." தானா?

    வெங்கட் நாகராஜ்: ஹரியானா முழுக்க எருமையா? என்னா தில்(லி)ங்க உங்களுக்கு.. ஹிஹி.. அடுத்தாப்ல எப்ப ஹரியானா பக்கம் போறீங்க?

    பதிலளிநீக்கு
  11. ஊஹூம்........... அப்படித் திட்ட எல்லாம் கொடுப்பினை இல்லாத பாவப்பட்ட ஜென்மங்கள் நாங்க. (வசவு எல்லாம் ஆம்படையானோடு சரி.)

    அடுத்தவாள ... அது நமக்குப் பொறந்ததே ஆனாலும் வாயைத் திறந்து ஒன்னும் சொல்லிட முடியாது.


    வெர்பல் அப்யூஸ்ன்னு உள்ளே தூக்கிப் போட்டுருவான்:(

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. எனக்குத் ’தொடரும்’ போடற சமாச்சரங்களே அலர்ஜி.அதான் மொத்தமா வாசிச்சுட்டு இது.

    நான் சமீபத்துல வாசிச்ச க்ளாஸ் போஸ்ட் இது அப்பாஜி.சபாஷ். பொடி டப்பியிலேயே க்ளூ கொஞ்சம் கிடச்சது.

    அதேபோல ப்ரியதர்சினியை வெச்சே க்ளைமாக்ஸ் வரைக்கும் ஜோரா நகத்திண்டு போனதும் அருமை.

    மூணாவது அத்யாயத்துலயே முடிவையும் யூகிக்க முடிஞ்சாலும் நாலு போஸ்ட்லயும் தூவப்பட்டிருந்த எள்ளல் படிக்கப்படிக்க சுகம்.

    நாலு பார்ட்லயும் ஒரு பொருட்பிழையோ, எழுத்துப்பிழையோ இல்லாதது பொறாமைப் படவெச்சது.

    கொத்தவரங்கா கூட்டு நன்னால்லேன்னு தட்டை நெட்டித் தள்ளினதுதான் கொஞ்சம் ஒட்டலை. நுனி வாழைஇலை?

    செல பேர் விபாகமா சமைப்பா, செல பேர் அபாகமா சமைப்பா. நீங்க சமைச்சிருக்கறது நளபாகம்.

    ரைட்டர்ஸ் ரைட்டர்னு உம்மை சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரை அவர்களே! சமீப நாட்களில் கதா கலட்செபம் குறைந்து வருகிறது.இன்றய இலைஞர்களுக்கு இது ஒருவடிவம் என்பது கூட மறக்கும் வாய்ப்பு அதிகம்.மேலும் இப்பொதும் கதாப் பிரசங்கம் நடக்கத்தான் செய்கிற்து. நான் இரண்டு முறை "விசாகா" என்ற அம்மையாரின் நிகழ்ச்சிகளை கெட்டிருக்கிறேன்..இன்றளவில் சிறப்பாக செய்பவர்களில் அவருமொருவர். அவை Less brahmanical. உங்களிடம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  15. அப்பதுரை அவர்களே! இன்னுமொன்று. இப்பொழுதெல்லாம் அவை less sanskritised கூட---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  16. ரைட்டர்ஸ் ரைட்டர்னு //

    வாஸ்த‌வ‌மான‌ பேச்சு.

    பதிலளிநீக்கு
  17. என் ப்ரிய அப்பாதுரை! மிக நிதானமாய் ஒரு சிறுநடையாய்ப் படித்தேன். கதை, களன் அனைத்தையும் தாண்டி ஒரு ஹரிகதா காலக்ஷேப நடையை மிகுந்த ஆச்சர்யத்துடனும், சற்று தவிப்புடனும் படித்தேன். ஏதும் வித்வாம்ஸம் மிகுந்த பாகவதருக்கு சுருதி பெட்டி வருடக் கணக்கில் போட்டீரா? கூஜாவில் பால் எடுத்து 'தொண்டையை நனச்சிக்கோங்கோண்ணா' என்று ஆற்றிக் கொடுத்தீரா?

    கனக் கச்சிதம்.. ஒரு எழுத்தாளனின் சேமிப்பாய்.. இந்த நடைக்காய் வைத்துக் கொள்ள வேண்டிய படைப்பு.
    நன்று அப்பாதுரை! மிக நன்று!

    பதிலளிநீக்கு
  18. //அந்த ஜன்மத்துக்கப்புறம் சத்யவான்-சாவித்ரியா பொறந்தா. அப்றம் நள-தமயந்தி, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதின்னு காதல் ஜோடியா ஜன்மம் எடுத்துண்டே இருக்கா.//

    ஓ.. தேவதாஸ்..
    ஓ.. பார்வதி...

    பதிலளிநீக்கு
  19. சுந்தர்ஜி - பாராட்டும் கலையை உங்களிடம் பயில வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. மிகவும் நன்றி kashyapan, நிலாமகள், மோகன்ஜி, ஜீவி, திண்டுக்கல் தனபாலன்,...

    பதிலளிநீக்கு
  21. வருவதற்கு தாமதமாகிவிட்டது.. வந்து ஆரம்பித்தவுடன் இரண்டு பதிவும் தடையில்லாமல் வழுக்கிச்சென்றது நடை...

    பதிலளிநீக்கு
  22. அட்ரா சக்கை. பொடி மட்டைன்னானாம். :-))

    பதிலளிநீக்கு
  23. காதலிக்கறவங்களுக்கு கோவில்னு சொல்லி கதையை ஒருவழியா முடிச்சிங்களா? நல்ல கற்பனை. நிறைய இடத்துல குபீர் சிரிப்பு. நல்ல எண்டர்டெயின்மெண்ட்.

    பதிலளிநீக்கு