2011/12/18

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை


1 ◀◀ பூர்வத்துலே..

    துக்குள்ள மாமா லேசா தொண்டைய கனைச்சுண்டார். என்னை அங்கேயே இருக்கும்படி சைகை காண்பிச்சார். காசித்துண்டால வாயைப் பொத்திண்டு பொழக்கடை பக்கம் போனார்.

'ஆகா, என்னமோ புதுசா கதை சொல்றார்'னு காத்துண்டிருக்கேன். அதுக்குள்ள மாமி ரெண்டு கைலயும் ரெண்டு தட்டைக் கொண்டு வந்தா. ரெண்டு தட்லயும் கிண்ணம். எழுந்து கை குடுப்போம்னு நினைக்கறச்சே, "சாப்டுங்கோ, போளியும் பால்பாயசமும் பண்ணினேன்"னுட்டு என் எதிர்ல தட்டையும் கிண்ணத்தையும் வச்சார். "எங்க போனார்? அவர் சொல்றதை எல்லாம் கேட்டுண்டிருக்காதீங்கோ.. என்னமாவது சொல்வார்.. அவருக்கு சித்தசுவாதீனம் இல்லையோனு நேக்கே செல சமயம் தோணும்"னு சொல்லிட்டு உள்ளே போனார். "பாயசம் ஆறிடப் போறது, சீக்கிரமா சாப்டுங்கோ ரெண்டு பேரும்"னார்.

நான் பாயசத்தைப் பாத்தேன். சுண்டக்காய்ச்சின பால், நெய்யில வறுத்து வேகவச்ச ஜவ்வரிசி, குங்குமப்பூ, ஏலக்காய், முந்திரிப்பருப்புனு வாசனை மூக்கைத் துளைக்கறது. "மாமா வரட்டும்"னு சொன்னேன்.

ஒண்ணு மட்டும் நேக்குப் புரியலை. மாமாவுக்கோ நிரந்தர உத்யோகம் இல்லை. பூர்வீக சொத்தும் இல்லை. ஆனா பாருங்கோ, எங்களுக்கு சாப்பாடு போட்ட தாம்பாளம் வெள்ளி. மாமி கழுத்துலயும் காதுலயும் கைலயும் ஜாஸ்தி இல்லேன்னாலும், ஏதோ மினுக்கறது. பகு ப்ரமாதமா விருந்து பண்ணிப் போட்டுட்டு, இப்ப என்னடான்னா வெள்ளிக் கிண்ணத்துல பால்பாயசம் கொண்டு வரார். இதுக்கெல்லாம் எங்கேந்து முடியறது இவாளாலனு நேக்குத் தோணினாலும், ஒண்ணும் கேக்கலை. விருந்தோம்பல்னா செல பேருக்கு தெய்வ கைங்கர்யம்னு கேள்விப்பட்டிருக்கேன்.

அதுக்குள்ள மாமா வந்து, "எல்லாம் அந்த திருவாழத்தான் வேலை"னார்.

நேக்குப் புரியலை. "யாரு? என்ன?"னேன்.

"எதுத்தாத்து ராமலிங்கம் ஓய். என்னோட செப்புக் கிண்ணத்தை வாங்கிண்டு போனான், திருப்பித் தரலை. இப்போ வெத்தலை போட்டா, எழுந்து போய் துப்பிட்டு வர வேண்டியிருக்கு"னார்.

யாரோ ராமலிங்கம் இவரோட செப்புக் கிண்ணத்தை வச்சுண்டு என்ன பண்ணினா, நமக்கென்ன ஹானி சொல்லுங்கோ? "மாமா.. அகல்யை பத்திச் சொல்ல ஆரம்பிச்சேள்"னேன்.

"சொல்றேன். மொதல்ல போளியும் பாயசமும் சாப்பிடும் ஓய்"னு மாமா சொன்னதும், கண்ணாலயும் மூக்காலயும் அனுபவிச்சுண்டிருந்த பாயசத்தை ஆச்வாதம் பண்ண ஒரு வாய் எடுத்துண்டேன்.

ஆகா! அம்ருதம் எப்படி இருக்கும்னு நேக்குத் தெரியாது, ஆனா இந்த பாயசத்தோட பாதி ருசி அதுக்கு இருக்கும்னா, தேவாசுர யுத்தம் ஏன் வந்துதுனு புரிஞ்சு போச்சு. அப்படி ஒரு அலாதி ருசி போங்கோ. இதைப் பண்ணின மாமியைக் கட்டிப் புடிச்சு ஒரு முத்தம் கொடுக்கலாம்னா, மாமா ஏதாவது சொல்லுவாரோனு பேசாம இருந்துட்டேன். போளியையும் பாயசத்தையும் ரசனையே இல்லாம க்ஷணத்துல கபளீகரம் பண்ணிட்டு, தட்டையும் கிண்ணத்தையும் தடால்னு கீழே வச்சுட்டார் மாமா. 'என்னடாது, இந்த மனுஷனுக்கு அனுபவிக்கத் தெரியலையே?'னு நேக்கு தோணித்து.

சாப்பாட்டு ரசனை பாருங்கோ, அது காதலிக்கிற மாதிரி. நல்ல சாப்பாட்டை பஞ்சேந்த்ரியம், அதான் அஞ்சு புலன்ம்பாளே, மெய் வாய் கண் மூக்கு செவி, எல்லாத்தாலயும் அனுபவிக்கணும்.

த்ருஷ்டாந்தத்துக்கு, காதலியோட லாவண்ய மொகத்தைப் பாக்கறேள்னு வச்சுங்கோ. பொண்கள்ளாம் காதலனோட மொகத்தைப் பாக்கறதா நெனச்சுக்குங்கோ, அசுவத்தாமனுக்கு ஸ்த்ரீபுருஷ பேதம் கெடயாது. காதலியோட உதடு வாவானு ஏங்கறது. ஓடிப் போய் பச்சுனு ஒரு முத்தம் குடுத்துடலாம், தப்பில்லை. ஆனா பாருங்கோ.. மொகத்தைக் கைல ஏந்திண்டு உதட்டைத் தொட்டும் தொடாம கிட்ட கொண்டு போய்ட்டு, வெளையாட்டா கொஞ்சி, அவ முகத்து வாசனையையும் மூச்சு சப்தத்தையும் அனுபவிச்சுண்டே, லேசா உரசி, கொஞ்சம் கொஞ்சமா அந்த முத்தம் உதட்டுல ஆரம்பிச்சு, மூளையில ஏறி, மனசுல பதியறதுக்கு அவகாசம் கொடுத்தேள்னு வச்சுங்கோ, அது முத்தம். அப்படி அனுபவிச்சா தானே காதலிக்கும், நாம அவளை மதிக்கறோம்னு தெரியும் இல்லையோ? முத்தத்துக்கும் அதானே மதிப்பு?

அந்த மாதிரி, நேக்கு அந்த பாயசத்தை சித்த அனுபவிச்சு சாப்டலாமேனு தோணித்து. போளியை சின்ன துண்டா பிச்சு பாயசத்துல தோச்சு ஒரு வாய், போளி தனியா ஒரு வாய், அப்றம் பாயசம் தனியா ஒரு வாய்னு மாத்தி மாத்தி சாப்ட வேண்டாமோ? ஆனா.. இந்த மனுஷன் புர்ர்னு உறிஞ்சு தட்டைக் கீழே வச்சுட்டு என்னையே பாக்கறார். என்ன பண்றது, நானும் பீமபோஜனம் பண்ணிட்டு தட்டையும் கிண்ணத்தையும் கீழே வச்சேன்.

கதையை விட்ட எடத்திலந்து சொல்ல ஆரம்பிச்சார் மாமா.

    ந்த்ரன் நெலமை இப்படி இருக்கச்சே, பூலோகத்துல அகல்யா மனசு சஞ்சலப்படறது.

தன்னை யாரோ கவனிச்ச மாதிரி அவளுக்குத் தோணறது. இந்த்ரனா இருக்குமோனு நெனக்கறா. பூலோகத்துல இருக்கற அத்தனை பொண்களையும் இந்த்ரன் பாத்துண்டிருப்பான்னு அகல்யா பொதுவா கேட்டிருந்தாலும்.. ராஜேஸ்வரி மாமி.. இதை நான் சொல்லலை, இந்த்ரன் த்ரிலோகத்துப் பொண்களை சதா கண்காணிச்சுண்டு இருக்கறதா புராணத்துல சொல்லியிருக்கு.. லோகத்து புருஷாளுக்குத்தான் க்லேசம்.. இருந்தாலும் இந்த்ரன் தன்னை மட்டும் கவனிச்ச மாதிரி அகல்யாவுக்குத் தோணித்து. ரிஷிபத்னியோல்லியோ? கோவம் வரது. சாபம் குடுக்க நெனக்கறா. ஆனா க்ஷணத்துல கோவம் மறைஞ்சு போறது. தலை சுத்தறது. கரையோரமா இருந்த துணி துவைக்கற கல் ஒண்ணு மேலே உக்காந்து ஆசுவாசப்படுத்திக்கறா. தான் கௌதமரோட பத்னினு நெனச்சுண்டிருந்த அகல்யாவுக்கு திடீர்னு என்னென்னவோ ஞாபகம் எல்லாம் வரது. தன்னோட பூர்வீகம் ஞாபகம் வரது. ஸ்ரீராம் அண்ணா சிலாகிக்கற மாதிரி ப்ளேஷ்பேக்கா ஓடறது அவ மனசுல. பூமிக்கு வரதுக்கு முன்னாடி பிரம்மாவோட பேசினதும், இந்த்ரனோட சந்திப்பும், அகல்யாவுக்கு ஞாபகம் வரது.

பிரம்மா சொல்றார், "உன்னைப் போல ஒரு சுந்தர ஸ்வரூபிணியை இதுவரைக்கும் நான் படைக்கலை. இனிமே படைக்கவும் போறதில்லை". அவளைப் படைச்சதா சொன்னதும், பிரம்மா கால்ல விழறா அகல்யா. "நித்யகீர்த்தியோட இரும்மா"னு ஆசீர்வாதம் பண்ணிட்டு, "உன்னை யாருமே புரிஞ்சுக்க முடியாது. அதனாலயும் உனக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு வ்யாதியாலயும் உனக்கு அகல்யானு பேர் வைக்கறேன்"னார் பிரம்மா.

"எனக்கு என்ன வ்யாதி?"னு கேக்கறா அகல்யா.

"நான் சொல்லமாட்டேன், தானா உனக்குத் தெரியும். படைக்கும் போது ஒரு சின்ன தப்பு செஞ்சுட்டேன். அதான். ஆனா பயப்படாதே, நீ பூலோகத்துலந்து திரும்பி வரச்சே இந்த வ்யாதியை அங்கேயே விட்டுட்டு வந்துடலாம். இந்த வ்யாதியினால ஒன்னோட கீர்த்தி ஒசரப்போறது"னுடறார் பிரம்மா.

"பூலோகமா? எதுக்கு?"ங்கறா அகல்யா. "இப்பத்தானே என்னைப் படைச்சேள்?"

"கௌதமர்னு ஒரு மகரிஷி, மகா தபஸ் பண்ணிண்டிருக்கார். அவரோட தவபலத்தைக் கொஞ்சம் திசை மாத்திவிட உன்னை அவருக்கு தாரமா கொடுத்து, சேவை செய்யச் சொல்லப்போறேன். நீ அவருக்கு நானாவித சிஸ்ருஷையும் பண்ணி, அவர் தவத்தை கட்டுப்படுத்தணும்"

"நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்"னு சமத்தா சொல்றா அகல்யா.

"செய்யச் சொல்றதை செய். செய்யக்கூடாதுனு சொல்றதை செய்யாதே"னு புதிர் போடறார் பிரம்மா.

"என்ன செய்யக்கூடாது?"

"நாளைக்கு வருஷாந்த்ர மகோத்சவம். நீ உன் இஷ்டத்துக்கு தேவலோக உத்சவத்தை அனுபவி. ஆனா, இந்த்ரன் கண்ல மட்டும் படாதே. பட்டாலும் அவனை நீ பாக்காதே. அப்படியே பாத்தாலும் ஒரு வார்த்தை பேசாதே. அப்படியே பேசினாலும் அவனையோ அவன் சொன்னதையோ மனசுல வச்சுக்காதே. அப்படியே மனசுல வச்சுண்டாலும் ஒடனே மறந்துடு"னு சொல்லிட்டு வேகமா போயிடறார் பிரம்மா.

மனசு இருக்கு பாருங்கோ, விசித்ரமா வேலை செய்யும். ராமஜபம் பண்ணச் சொன்னா, மனசு கேக்கறதோ? அப்பத்தான் ஜிலுக்கடி ஜிகினானு பாட்டு ஞாபகம் வரதில்லையோ? வைராக்யத்தைப் பிடிச்சுக்கோன்னா வையாக்ரத்துலனா தடுக்கி விழறது? 'பாக்காதே, பேசாதே, நினைக்காதே'னு பிரம்மா சொன்னதெல்லாம் 'கண்டிப்பா பாத்துடு, பேசிடு, மனசார நினைச்சுக்கோ'னு அர்த்தமாறது அகல்யாவுக்கு. ஒண்ணும் புரியாம, சரி, மறுநாள் பாத்துக்கலாம்னு விட்டுடறா.

மறுநாள் ஞானோத்சவ வைபவத்துல அகல்யை இந்த்ரனைப் பாத்ததும் என்ன ஆச்சுனுதான் நமக்குத் தெரியுமே? பாத்த க்ஷணத்துலயே 'என்னோட மனசு ஒனக்கு, ஒன்னோட மனசு எனக்கு'னு ரெண்டு பேரும் நைமேயம் பண்ணிண்டது தெரியுமே? எங்கிட்ட இருக்கறது அவரோட மனசுன்னா? இதுல அவர் சொன்னதை வச்சுக்கவோ மறக்கவோ எனக்கு க்யாதியில்லையே? என் மனசுதான் எங்கிட்டயே இல்லையே? இன்னும் சித்த நாழி அவர் முகத்தை பாத்துண்டு இருந்திருக்கலாமோ? அங்கே என்னை பொசுக்கிட்டு எங்கே இந்த கிழட்டு பிரம்மனைக் காணோம்?'னு நெறைய பிரச்னச்சின்னம் அதான் கேள்விக்குறி போட்டு நினைச்சுக்கறா. ஞானோத்சவத்துல இந்த்ரனை விட்டு பொசுக்னு கிளம்பினதை நெனச்சு வருத்தப்படறா.

டாண்ணு பிரம்மா வந்துட்டார். "என்ன அகல்யா, ரெடியா? முன்னாடியே வந்தேன்.. ஒன்னைக் காணோம்னு சரஸ்வதியைப் பாத்து.."

"விஸ்வகர்மாவைப் பாத்துப் பேசினேன். வர நாழியாயிடுத்து. எதுக்கு என்னைப் பொசுக்கினேள், இந்த்ரன் இருந்த இடத்துலேந்து?"னா அகல்யா.

பிரம்மாவும், "இல்லேன்னா ஒன்னை அங்கயே த்வம்சம் பண்ணியிருப்பான் போலத் தோணித்து.. பார்வையா பாக்கறான் பாவி? ம்ம்ம்.. இந்த்ரனை விட்டு வரதுக்குள்ள போறும்னாயிடுத்து.. ஒன்னையே நெனச்சுண்டிருக்கான்.. பக்கம் வராதடா படவானு நன்னா சொல்லிட்டு வந்திருக்கேன்"னார்.

திடீர்னு அகல்யா மொகத்தைத் தூக்கி வச்சுக்கறா. "பூலோகத்துக்குப் போகப் பிடிக்கலை"னு சொல்றா. "இனிமே இந்த்ரனைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, யாருக்கும் சிஸ்ருஷை பண்ண முடியாது. இந்த்ரனும் என்னைக் காதலிக்கறது தெரியும். நீங்க சொல்றபடி கேக்க முடியாது"னு சொல்றா.

பிரம்மாவுக்குத் தூக்கிவாரிப் போடறது. பெத்தவனையே எதிர்த்துப் பேசறாளே? தன்னோட தப்பு அதுக்குள்ள விஸ்வரூபம் எடுத்துடுத்தேனு அவருக்கு விபக்கம்.. கடுப்பு. "இந்தா தடிச்செருக்கி.. இந்தக் காதல் கீதல்னு பேச்சே ப்டாது இந்த இடத்துல. ப்டாதுன்னா ப்டாது"னு ஏகதேசத்துக்கு கோவப்படறார். அப்புறம் சாந்தமாகி, "கொழந்தே.. ஏதோ தெரியாம கோபிச்சுண்டேன். மனசுல வைச்சுக்காதே"னு சொல்றார். மண்ணெண்ணை தீந்து போற அரிக்கேன் விளக்காட்டம் பிரம்மா மனசு பக்கு பக்குனு அடிச்சுண்டுது. "அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு இந்த்ராணி கூட இருக்காளே?"னு சொல்றார் பிரம்மா. சொல்லும்போதே அவருக்கு தன்னோட வீக் பாயின்ட் புரிஞ்சு போயிடுத்து.

"காதலாகப்பட்டது சித்தாந்தம். கல்யாணம் வெறும் சடங்குதானே? அதனால இந்த்ரனோட கல்யாணத்தையும் மதிக்கிறேன், அவரோட காதலையும் மதிக்கிறேன். என்னோட காதலை விட்டுக்குடுக்க முடியாது"னு சொல்லிடறா அகல்யா. "ஒரு வேளை அவர் என்னையும் இந்த்ராணியாக்கலாம்"னு சொல்றா.

'இது ஏதுடா வம்பா போயிடுத்தே?'னு இருக்கு பிரம்மாவுக்கு. 'இவளை ஏதாவது சொல்லி வழிக்கு கொண்டு வரணுமே'னு நினைக்கறார். "இந்தாம்மா அகல்யா, நீ இந்த்ரனைக் காதலிக்கறதா சொல்றே, அவனுக்காக ஒரு சின்ன த்யாகம் கூட பண்ண மாட்டேங்கறியே? அவன் என்னடான்னா நேக்கு இந்த்ர பதவி வேண்டாம், அகல்யாதான் வேணுங்கறான். ஒன்னால அவனுக்கு இந்த்ர பதவி போயிடப்போறது போ"னு அளந்து சொல்றார் பிரம்மா.

"இந்த்ரனுக்காக என்ன த்யாகம் வேணும்னாலும் செய்வேன். என்ன செய்ய்யணும்?"னு கேக்கறா அகல்யா.

பிரம்மா விட்டுப் பிடிக்கறார், "இல்லம்மா, ஒனக்கு அவன் மேலே ரொம்ப ப்ரீதி வந்துடுத்து. இனிமே நீயாச்சு, இந்த்ர பதவி போன அவனாச்சு".

"இந்த்ர பதவிக்கு ஆபத்தா? ஏன்? யாராலே?"னு வெகுளியா கேக்கறா அகல்யா.

"கௌதம ரிஷி இருக்காரே, அவராலதான் ஆபத்து. தவ ஸ்ரேஷ்டர். அவரை இப்படியே தவம் செய்யவிட்டா இந்த்ர பதவிய அவருக்குக் கொடுக்க வேண்டி வரும். நீதான் அவருக்கு எல்லா விதத்துலயும் உதவியா இருந்து அவர் தவத்தைக் கட்டுப்படுத்தணும். இந்த த்யாகத்தை செய்வியா?"

"என்னுடைய காதலை விட்டுக்கொடுத்து, இன்னொருத்தரைக் கல்யாணம் செய்யச் சொல்றேளே?"னு அழறா அகல்யா.

"பூலோக விவாகம் தேவலோகத்துல செல்லாது கொழந்தே.. யாருக்காக கேக்கறேன்? எல்லாம் உன் காதலனுக்காகத் தானே? இந்த்ரன் எப்பவுமே தேவராஜாவா இருக்கணும்னு நீ மனசார நினைக்கறேனு தெரிஞ்சதால தானே கேக்கறேன்? நீ இந்த த்யாகத்தைப் பண்ணலைனா, அவன் இந்த்ர பதவி போனப்புறம் உன் மனசு பாடுபடக் கூடாதேனு தானே கேக்கறேன்?"னு அடுக்கி விடறார் பிரம்மா.

"எங்களோட காதல் உங்களுக்கு புரியலையா?"னு விசும்பறா அகல்யா.

பிரம்மா கொஞ்சம் விட்டுப் பிடிக்கறார். "அழாதே. அழறதுக்காகவா உன்னை இத்தனை அழகா படைச்சேன்? அழாதே. சரிம்மா கொழந்தே. உன்னோட காதல் நேக்குப் புரியறது. அதுவும் மொதல் காதல் வேறே. காதலிக்கறவாளைப் பிரிக்கற கல்நெஞ்சக்காரன் இல்லை நான். வேறே ஏதாவது ஏற்பாடு செஞ்சுக்கறேன்"னு சொல்லிட்டு புறப்படற மாதிரி பாவலா பண்றார். "ஒரு வேளை, என்னால கௌதமரோட தவத்தைக் கட்டுப்படுத்த முடியாம போய் இந்த்ரனுக்கு தேவராஜ அந்தஸ்து போனாலும், நீ இதைச் செய்யாம இருந்துட்டேங்கறதை நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன். இந்த்ரன் கிட்டே மட்டும் நிச்சயமா சொல்ல மாட்டேன். நீ தியாகம் பண்ணாததாலே அவன் பதவி போச்சுனு அவனுக்குத் தெரியவே படாது. வரட்டுமா?"னார். கடைசியாச் சொன்னது அகல்யா மனசுல பதியணும்ங்கறதுக்காக கொஞ்ச நாழி நிக்கறார். சண்முகத்தையும் மோகனாவையும் பிரிக்க வைத்தி வில்லத்தனம் கத்துண்டது யார்ட்டேனு நினைக்கறேள்?

அதுக்குள்ள அகல்யா கண்ணைத் தொடச்சுண்டு, "சரி, நான் இந்தத் த்யாகம் பண்றேன்"னு சொல்றா. "நீங்க எனக்கொரு வரம் தரணும். பூலோகத்துலந்து திரும்பி வந்ததும் என்னையும் இந்த்ரனையும் சேத்து வைக்கணும்".

"தந்தேன்"னுடறார் பிரம்மா. வரம் தரதுக்கு முன்னால துளியாணும் யோசிக்குமோ இந்த மூர்த்தி? என்னிக்கு யோசிச்சு வரம் கொடுத்தார், இன்னைக்கு யோசிக்க?

"ரொம்ப சந்தோஷம். நான் இப்பவே பூலோகம் போகத் தயார்"னு சொல்றா அகல்யா.

"ஒன்னோட பேரும் கீர்த்தியும் சிரஞ்சீவியா நெலைக்கப் போறது. இந்த த்யாகத்தைப் பண்ணுவேனு தெரியும். ஆனா.."னு இழுக்கறார் பிரம்மா.

"என்ன?"ங்கறா அகல்யா.

"எந்தக் காரணம் தொட்டும் நீ பூலோகத்துல இந்த்ரனைப் பாக்கவே கூடாது. அப்படிப் பார்த்தா, அதனால உண்டாகக் கூடிய அபாயத்துனால நீ இங்கே திரும்பி வர அனேக வர்ஷாயுதமாகலாம்"னு சொல்றார் பிரம்மா. வர்ஷாயுதம்னா பத்தாயிரம் வருஷம்.

"அனேக வர்ஷாயுதமா? என்ன அபாயம்?"னு கேக்கறா.

"என்னால அதைச் சொல்ல முடியாது. நீ இந்த்ரனைப் பாத்தாலும் சரி, அவன் உன்னைப் பாத்தாலும் சரி, ஒனக்குத்தான் அபாயம் வரும்னு மட்டும் சொல்ல முடியும்"னுடறார் பிரம்மா.

பாருங்கோ.. பிரம்மா சறுக்கினது இங்கதான். சபைலே நெறைய பேர் இருக்கா. சேல்ஸ்ல இருக்கறவாளுக்கு நான் சொல்றது புரியும். சாய்ராம் அண்ணாவைக் கேளுங்கோ சொல்வார். வியாபாரம் முடியற சிக்னல் கிடைச்சப்புறம் வளவளனு ஏதாவது பேசப்படாது. வியாபாரத்தை முடிச்சோமா, ஆர்டரை வாங்கினோமானு இருக்கணும். சேல்ஸ் க்ளோஸ் ஆற டயத்துல எதையாவது சொன்னா ஏடாகூடமாயிடும். டிஸ்கவுன்ட் குடு வாரன்டி குடுனு எக்ஸ்ட்ராவா கேக்க மாட்டாளோ?

அகல்யா 'வாங்கோ பூலோகம் போலாம்'னு சொன்னாளோனோ? அந்த இடத்துல டீலை க்ளோஸ் பண்ணாம, அபாயம் கிபாயம்னு எதாவது சொல்லலாமோ பிரம்மக் கிழம்? அண்வ வாயிருக்கச்சே ரகஸ்யம் ஏதாவது மனசுல நிக்குமோ? பிரம்மாவுக்கு சல்லடை வாய்னு அகல்யாவுக்குப் புரிஞ்சு போச்சு.

"பூலோகத்துல அடியெடுத்து வச்சதும் எனக்கு இந்த்ரன் ஞாபகமே இருக்காதே? அவரைப் பார்த்தாலும் அடையாளம் தெரியாதே?"னு நைசா சொல்றா.

"ஆனா இந்த்ரனுக்கு ஞாபகம் இருக்குமே? அவன் உன் கண்ணை எங்கேந்து பாத்தாலும் உனக்குப் பூர்வீகமெல்லாம் தெரிஞ்சுடுமே? அதனால உன்னைக் கண்ணாலயும் பாக்கக் கூடாது, உன்னை மறந்துடணும்னு அவன் கிட்டே திட்டமா சொல்லியிருக்கேனாக்கும்"னு பெருமையா சொல்றார் பிரம்மா.

"அப்போ, பதிலுக்கு நீங்க எனக்கு ரெண்டு வரம் தரணும்"னு கேக்கறா.

"வரமா? என்ன சொல்லு.."னு இழுத்தார் பிரம்மா.

அகல்யா சித்த நாழி யோசிக்கறாப்ல நடிக்கறா. பிரம்மா ஓட்டை வாய்னு தெரிஞ்சதுமே அவ சப்ஜாடா ப்ளான் போட்டாச்சே? புத்திசாலிப் பொண்ணோல்லியோ? "சரி, நீங்க சொல்ற மாதிரி நான் இந்த்ரனைப் பாக்கலை. ஆனா அவர் என்னைப் பாத்தா நான் என்ன செய்ய முடியும்? ஆம்பளையோட முட்டாள்தனத்துனால பொம்பளைக்கு ஆபத்து வரது நியாயமா படலியே? அதனால அவர் என்னை முதல்ல பாத்தார்னு வைங்கோ, எனக்கு அபாயம் வரதுக்கு முன்னாடி அவருக்கு விஸ்வகர்மா ஞாபகம் வரணும். ரெண்டாவது, பூலோகத்துல இருக்குற வரைக்கும் எனக்கு எதையாவது அடிக்கடி ஆகாசத்துல எறியத் தோணனும். இதான் நான் கேக்கற வரம்"னா.

விஸ்வகர்மாவைப் பாக்கணுமா? ஆகாசத்துல எதையாவது எறியணுமா? வரம் கேக்கத் தெரியலியே இவளுக்கு? ரொம்ப சோமபானம் குடிச்சிருப்பாளோ இந்தப் பொண்ணு? பிரம்மாவுக்கு ஒண்ணும் புரியலை. யாராலயும் புரிஞ்சுக்க முடியாதவள் என்கிறதால தானே அவளுக்கு அகல்யானு பேர் வச்சார்? என்னென்னவோ நெனச்சுக்கறார். ஆளவிட்டாப் போறும்னு இருக்கு. சரினு தலையாட்டறார். அவர் காரியம் ஆகணும் அவருக்கு.

பெரிய சமஸ்தான ராஜாக்கள் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானத்துல முடிஞ்ச மாதிரி இருக்கு ரெண்டு பேருக்கும். "பூலோகத்துல கார்த்தால இருக்கணுமாக்கும். தயாரா இரு, வரேன். சொன்னதை மறந்துடாதே"னுட்டு பிரம்மா கிளம்பிப் போயிடறார்.

    கொஞ்ச நாழி கழிச்சு, இந்த்ரன் வந்தான். அகல்யாவைப் பாத்ததும் "என்ன நீ? ஞானோத்சவத்துல பொசுக்னு காணாமப் போயிட்டே? உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. எனக்கு இந்த்ர பதவி வேண்டாம்னு உன் கிட்ட வந்துட்டேன். இனிமே நீ தான் எனக்கு பூலோகம், தேவலோகம், ஸ்வர்க்கம் எல்லாம்"னு சொல்றான்.

'இது ஏது ரெண்டுங்கெட்டானா மண்டூகமா இருக்கே? இதுக்கா இப்படி த்யாகம் பண்ணினோம்?'னு தோணறது அகல்யாவுக்கு. இருந்தாலும் தன் மேலிருந்த வாஞ்சையினாலும் ப்ரேமையினாலும் தானே இந்த்ரன் எல்லாத்தையும் விட்டு ஓடி வந்தான்னும் தோண்றது. ஒடனே இந்த்ரனை ஆலிங்கனம் பண்ணிக்கறா. இந்த்ரனும் அவளை அப்படியே அள்ளிக்கறான். அவளோட ஸ்தனம் ரெண்டும் அவனோட ஹ்ருதயத்தை அழுத்தறது. ஸ்தனமுக்யம் முறிஞ்சுபோயிடற மாதிரி உத்வேகத்தோட அணைச்சுக்கறான். அவ மூச்சோட உஷ்ணம் அவன் முகத்தைப் பொசுக்கறது. அவனும் அதே வேகத்தோட அவ மொகத்துல உதட்டால ஒத்திப் பாக்கறான். சின்ன முத்தம். ம்ருதுசும்பம்னு பேரு. அப்புறம் அவளோட நயனம், நாசினு மாறி மாறி முத்தமா பொழியறான். சும்பானந்தம்னு பேரு. முத்தமே லாகிரி வஸ்துவா மாறி மனுஷாளைக் கெறங்க அடிச்ச நிலை. முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வரனு புலவர் பாடலியோ? அகல்யாவோ இந்த்ரனுக்கு ஒரு படி மேலே போறா. அவனோட கைகளை எடுத்து தன் இடுப்பில கொக்கி மாதிரி போட்டுக்கறா. மேகலை நழுவறது தெரியலை. ஒட்டியாணம் கழள்றது தெரியலை. இடுப்புலேந்து துணி வெலகறது தெரியலை. ரெண்டு பேருக்கும் என்ன நெலைல இருக்கோம்னும் தெரியலை. என்ன பண்றோம்னு புரியலை. புரிஞ்சப்போ ரெண்டு பேரும் கலந்தாச்சு.

ஒருத்தரை ஒருத்தர் மனசோட மட்டும் நெனச்சுண்டிருந்தா, அது வெறும் ப்ரேமை.. மானசீகக் காதல்னு சொல்வா. ரெண்டு பேர் உணர்ச்சியும் கலந்தாத்தான் மானசீகக் காதலுக்கு ப்ராணன் வரதும்பா. 'மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா?'னு பாடலியோ புலவர்? இதுல பாருங்கோ, கலந்தப்புறம் என்ன தெரிஞ்சு என்ன ப்ரயோஜனம்? கலந்தப்புறம் ரெண்டே நிலமை தான். ஒண்ணு பரமானந்தமான நெலமை. இல்லேன்னா பரமசங்கடமான நெலமை. இல்லையா? இவா ரெண்டு பேருக்கும் ஒரு பக்கம் பரமானந்தம், இன்னொரு பக்கம் பரமசங்கடம். ஒரு பக்கம், ஆத்ம காதலுக்கான ஆசீர்வாதம் கெடச்சாச்சுனு குதூகலம். இன்னொரு பக்கம், காதலுக்காக ஆத்மாவையே சீதனம் கொடுக்க வேண்டியதாப் போச்சுனு சங்கடம்.

பிரம்மாவோட பேசினதையெல்லாம் அவளண்டை சொல்றான் இந்த்ரன். அவன் மார்ல தலைய வச்சுண்டே, அவளும் நடந்ததையெல்லாம் சொல்றா. அவளுக்காக அவனும் அவனுக்காக அவளும் த்யாகம் பண்ண சித்தமாயிருந்ததை சொல்லிப் பாத்து ஏகத்துக்குச் சிரிச்சுக்கறா.

"அகல்யா.. வா. எல்லாத்தையும் விட்டு ரெண்டு பேரும் எங்கேயாவது கண்காணாம ஓடிப்போயிடலாம்"னு சொல்றான் இந்த்ரன். இந்தக் காலத்து காதல் ஜோடிக்கெல்லாம் இந்த டயலாக்கைக் கொடுத்தவன், இந்த்ரன் தானாக்கும்.

"வேண்டாம். நான் திரும்பி வரப்போறேனே. வந்ததும் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கப் போறோமே?"ங்கறா அகல்யா.

"ஏதோ ஆபத்து வரும்னு சொன்னியே?"ங்கறான் இந்த்ரன். அவன் நெஜமாவே பதறதைப் பாத்ததும் அவளுக்குச் சிரிப்பும் ஆசையும் கூடிவந்து அவனைத் தன் மேலே இழுத்துக்கறா. "நீங்க என்னைப் பாக்க வந்தாத்தானே ஆபத்து?"னு கொஞ்சறா.

"ஒன்னை பாக்காமே என்னாலே எப்படி இருக்க முடியும்?"னு பதிலுக்குக் கொஞ்சறான் இந்த்ரன்.

"நீங்கதான் எல்லாப் பொண்களையுமே எப்பவுமே பாத்துண்டு இருக்கறதா சொல்றாளே?"ங்கறா அகல்யா பொய்க் கோபத்தோடே.

"ஆனா எந்தப் பொண்ணைப் பாத்தாலும் நீயாத்தானே தெரியறது?"னு சிரிக்கறான் இந்த்ரன்.

"ஓஹோ? அப்ப என்னைப் பாக்கணும்னு உங்களுக்குத் தோணினா, ஏதாவது ஒரு பொண்ணைப் பாப்பேளோ?"னு இன்னும் கடுமையான பொய்க்கோபத்தோடே கேக்கறா அகல்யா.

"இல்லை. உன்னைத்தான் பாக்கணும். ஆனா, என்ன பண்றதுனு தெரியலையே?"ங்கறான் இந்த்ரன் ஆதங்கத்தோடே. "வேணும்னா, அந்த கௌதமரை வஜ்ராயுதத்தாலே கொன்னுடட்டுமா?"ங்கறான்.

"வேண்டாம்"னு அவ பதறிப் போயிடறா. இந்த்ரன் முகத்தை ரெண்டு கைலேயும் தாங்கிண்டு அவன் கண்ணைத் தீட்சண்யமா பாத்து, "அந்த மாதிரி அசட்டுக் காரியமெல்லாம் செய்யமாட்டேன்னு சொல்லுங்கோ"ங்கறா. அவனும் சரின்னு தலையசைக்கறான்.

"நீங்க என்னைப் பாக்க வரணும்னு எனக்குத் தோணித்துனா, ஒரு பூவை எடுத்து ஆகாசத்துல எறிவேன். அப்ப நீங்க என்னை வந்து பாக்கலாம்"னு சொல்றா.

"நான் உன்னைப் பாக்க வந்து, உனக்கு ஏதாவது அபாயம் வந்து, அப்புறம் மன்வந்த்ரக் கணக்குலே ஒன்னைப் பாக்க முடியாமலே போயிடுத்துனா?"னு இந்த்ரன் சந்தேகப்பட்டுக் கேக்கறான்.

"அதுக்குத்தான் உங்களுக்கு விஸ்வகர்மா ஞாபகம் வரணும்னு வரம் வாங்கியிருக்கேன்"னு சொல்றா அகல்யா, விஷமமா சிரிச்சுண்டே.

"விஸ்வகர்மா என்ன பண்ணப் போறான்?"னு கேக்கறான் இந்த்ரன்.

"என்னோட அண்ணா மேலே ஒரு நம்பிக்கை"னு சொல்லிட்டு இந்த்ரனைக் கீழே தள்ளறா.

"ஒண்ணும் புரியலையே?"ங்கறான் இந்த்ரன்.

"அதனாலதான் என் பேர் அகல்யா"னுட்டு அவனுக்குச் செல்லமா ஒரு முத்தம் குடுக்கறா. "பொழுது விடியப் போறது பூலோகத்துல. நான் போகணும்"னு எழுந்துக்கறா.

    கண்ணைத் தொறந்து பாத்த இந்த்ரன் கோதாவரியையும் காணாம அகல்யாவையும் காணாம தவிச்சுப் போனான். இதென்ன ஆச்சர்யம்! பூலோக நடப்பை எப்படி தன்னால கை வீசினதும் பார்க்க முடியறது? மறுபடியும் காத்துல கையைத் தேச்சான். இப்போ நன்னா தெரியறது. கரையோரமா நின்னுண்டு ஆகாசத்தையே ஏக்கத்தோட பாத்துண்டு இருக்கறவள், தன்னோட அகல்யானு தெரிஞ்சுத் துடிச்சுப் போறான்.

அப்போதான் அவனுக்கு அவள் சொன்னது ஞாபகம் வரது. "நீங்க என்னைப் பாக்க வரணும்னு எனக்குத் தோணித்துனா, ஒரு பூவை எடுத்து ஆகாசத்துல எறிவேன். அப்ப நீங்க என்னை வந்து பாக்கலாம்".

என்ன செய்யணுங்கற ஒரு தீர்மானத்தோட எழுந்துக்கறான் இந்த்ரன்.

கொஞ்சம் நிலைக்கு வந்த அகல்யா, ஆகாசத்துல பூ விட்டெறிஞ்ச எடத்தையே பாத்துண்டிருந்தா. இந்த்ரன் தன்னை இன்னும் ஞாபகம் வச்சுண்டிருப்பானா, மறந்து போயிருப்பானா?

பிரம்மா சொன்ன அபாயம் என்னன்னு இன்னும் புரியலை அகல்யாவுக்கு. ஆனா தனக்கு வந்த வ்யாதி மட்டும் என்னன்னு அவளுக்குப் புரிஞ்சு போச்சு. லாலசம்.

லாலசம் அபிகாமம் இதுக்கெல்லாம் பசலைனு அர்த்தம். நமக்கு பசலையைக் கொடுத்துட்டுப் போனது அகல்யை. வையறதானாலும் வாழ்த்தறதானாலும் நாம அகல்யாவைத்தான் வையணும், வாழ்த்தணும். அகல்யாவுக்கு முன்னாலே பூலோகத்துலே ஆத்மார்த்தமான காதலும் பிரிவும் சோகமும் சேர்ப்பும் கிடையாது. 'அண்ணலும் நோக்கினான்' 'செம்புலப்பெயநீர்' எல்லாம் அவளாலே கிடைச்சது. காதல், காதல் சம்பந்தப்பட்ட உபத்திரவம் எல்லாமே நமக்கு அகல்யா கொடுத்தது. தேவர்களுக்கு இந்த வியாதி கிடையாது. 'அகல்யா'ங்கற பதத்துக்கு 'காதல் நோய்'னும் ஒரு அர்த்தம் உண்டாக்கும். ஆத்மார்த்தமா க்ஷணம் கூடப் பிரிஞ்சு இருக்க முடியாம காதலிக்கறவாளை, அப்படிப் பிரிஞ்சு இருக்கும் போது உண்டாற அதீத மனக்கஷ்டம் இருக்கு பாருங்கோ, அதுக்குத்தான் பசலைம்பா. அதைப் பத்தி மகா பண்டிதாள்ளாம் பாட்டு எழுதித் தள்ளியிருக்கா. சபைல கூடப் பாருங்கோ. காதலைப் பத்தி அவாவா விதம்விதமா எழுதறா. இன்னோரு புலவர் மழைமுத்தம்னு பாடினதை ரொம்ப சிலாகிச்சு அப்பாதுரைனு ஒரு ஆப்தர், நேக்கு அனுப்பிச்சார். படிச்சுப் பாத்து அசந்துட்டேன். யாரிந்தப் புலவர்னு பாத்தா.. நம்ம ஹேமாவாக்கும். இந்தக் காதல் பசலை பாட்டு எழுதுறதுலே அவர் ரொம்ப பிரசித்தம்னு சொல்லிக்கறாளே?

சரி, கதைக்கு வந்துடறேன். சித்தே இருங்கோ. மோகன்ஜியாட்டம் அப்பப்போ காணாமப் போனாலும், பத்மநாபனாட்டம் திரும்பி வந்துடுவேன்.

    பூர்வீகம் எல்லாம் ஞாபகம் வந்து என்னென்னமோ யோசிச்சுண்டிருக்கா அகல்யா. வியாமோகம். மனக்கொழப்பம் தீர்ந்தபாடில்லை. ஆச்சு, ஆஸ்ரமத்துக்குப் போயாகணும். அங்கே தன்னை ஜடமாட்டம் பாவிக்கற கௌதமருக்கு சகல சிஸ்ருஷையும் செய்யணுமே? கௌதமரை அகல்யா தப்பாவே நெனைக்கலை. அவர் தபஸ்வி. தபஸ்தான் முக்யம்னு நெனைக்கறவர். அதுதான் ப்ரதான கர்மம்னு நினைக்கறவர். அவருக்கு அகல்யா ஒரு சேவகி, அவ்ளோதான். அதனால தன்னை ஜடமா பாவிச்சாலும் அகல்யா அதைப் பெரிசு பண்ணலை.

'இதுநாள் வரைக்கும் தோணாம இப்ப ஜடமாட்டம் நடத்தறதா தோணுவானேன்?'னு யோசிச்சுண்டே கரைலேந்து நடந்து வரா. மத்த ரிஷிபத்னியெல்லாம் இன்னும் ஜலத்துலயே இருக்கா. ஆஸ்ரம திக்குலே அகல்யா மட்டும் தனியா கைல ஒரு கொடத்தோட நடந்து வரா.

கொஞ்சம் தள்ளி எதிர்க்க யாரோ நிக்கறாப்ல தெரியறதே, யாருன்னு பாக்கறா. பாத்தா அவளுக்கு அதிந்து போயிடறது.

ஒரு அத்யந்த சுந்தரன் சிரிச்சுண்டே நின்னுண்டிருக்கான். அவளைப் பாத்து, "அகல்யா? என்னைத் தெரியலையா? நான்தான் இந்த்ரன்" அப்டீங்கறான்.

திடுக்கிட்டுப் போய் கைல இருந்த கொடத்தைக் கீழே போட்டுடறா அகல்யா.


மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல. ►►

18 கருத்துகள்:

  1. நைமேயம், க்யாதி, ஹானி, பகு பிரமாதமாய், விபக்கம், காலம் சொல்லும் அனேக வார்த்தைகள்...விபக்கம்னா திகைப்பா...நடுக்கமா...

    மண்ணெண்ணெய் தீர்ந்து போன அரிக்கேன் விளக்கட்டமா மனசு அடிச்சுக்கறது ரசிக்க முடிகிறது.

    பூலோக விவாகம் தேவலோகத்துல செல்லாதா...அட....

    முத்த விவரணையும், கலந்த விவரங்களும்...சாண்டில்யன் தோற்று விட்டார் போங்கள்...!

    பதிலளிநீக்கு
  2. நல்ல உவமைகள்:

    மண்ணெண்ணெய் தீர்ந்து போன அரிக்கேன் விளக்கு!
    இது ஒண்ணு போதுமே!

    பதிலளிநீக்கு
  3. மனசு அகல்யா அகல்யான்னு கெடந்து அடிச்சுக்கறது.
    முத்த விவரணை படு ஜோர்.
    சாண்டில்யன் , இர்விங் வாலஸ் ஸ்டைல் தோத்துப் போகும் போங்க ஓங்க கிட்ட

    பதிலளிநீக்கு
  4. கதைக்குள்ள இருந்தாலும் சுவாரஷ்யம் வெளியே வந்தாலும் சுவாரஷ்யம்.... இப்படி கைதேர்ந்த பாகவதருக்கே உரித்தான வித்தையை அழகாக விரித்துள்ளீர்கள்.... சிவா ஸ்ரீராம் அவர்கள் முன் மொழிந்ததை நானும் வழி மொழிந்து ஜென்ம சாபல்யத்துக்கு வழி தேடிக் கொள்கிறேன் ....

    பதிலளிநீக்கு
  5. அப்பாஜி...கதையில நானும் இருக்கேனான்னு மட்டும்தான் தேடிப்பாத்தேன்.நானும் ஆகாசத்தில பூவை விட்டெறிஞ்சிட்டுப் பாத்திட்டுத்தான் இருக்கேன் ஐஸ்தான் கொட்டுது !

    பதிலளிநீக்கு
  6. நிஜமாவே கதை விபரீதமாகத்தான் போறது
    கதைக்குத் தலைப்பு காரணப் பெயர்னு நன்னா புரியரது
    ஆனாஆர்வம் மட்டும் அடுத்த பதிவைப் படிக்க கூடிண்டே போறது
    அதுதான் ஏன்னு மட்டும்புரியலை

    பதிலளிநீக்கு
  7. அப்பாதுரை அவர்களே! தமிழில் வந்த மிகச்சிறந்தகதைகளில் ஒன்று "சாப விமோசன்ம்" என்பதாகும். புதுமைப்பித்தன் எழுதிய கதை.பார்க்கலாம் --நீ எப்படி கொண்டுபொகிறீர் என்று."சாபவிமோசனமும்" அகல்யாய் பற்றியதுதான் ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  8. படிச்சதுக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி துளசி கோபால் (வந்துட்டாஆன்..), இராஜராஜேஸ்வரி, ஸ்ரீராம்., geethasmbsvm6, சிவகுமாரன், பத்மநாபன், ஹேமா (ha ha :), Ramani, kashyapan,...

    பதிலளிநீக்கு
  9. புதுமைபித்தனையும் இதையும் கம்பேர் பண்ணலாமா சார். அவர் யாரு? புதுமைபித்தனாச்சே? இது சாதாரண காலட்சேபக் கதை - literally பொழுது போக்குக் கதை. அவ்வளவு தான். அவர் கதையைப் படிச்சு முடிச்சா சந்தோஷமா இருக்கும். இந்தக் கதையைப் படிச்சு (?) முடிச்சாலும் சந்தோஷமா இருக்கும் - முடிஞ்சிடுச்சே என்று. அப்புறம்.. சாபவிமோசனம் எழுதின புதுமைபித்தனுக்கு அந்த நாள்ல யாராவது ஜட்காவண்டி அனுப்பிச்சாங்களா தெரியுமா? எதுக்கும் கேட்டு வச்சுக்கலாம்னு தான்.. ஜட்கா வண்டி இல்லைனாலும் இந்த நாளில் ஆட்டோ கீட்டோனு என்னென்னவோ சொல்றாங்க.. அதான் :)

    புதுமைபித்தன் கதையை இன்னொரு பதிவுல சுருக்கமா எழுத நெனச்சிருந்தேன் - இந்தக் கதையை முடித்த பிறகு. இருந்தாலும் கிளறி விட்டீங்க. புதுமைபித்தன் கதை முதல் முதல் படிச்ச போது மெய்சிலிர்த்தது உண்மை. அவர் கதையை முடிச்ச விதத்தில் (இன்னும் படிக்காதவர்கள் இருந்தால் படிக்கட்டும் என்று முடிவைச் சொல்லவில்லை) புதுமை உண்டோ இல்லையோ எழுதிய விதத்தில் இருந்தது. இருக்கிறது - இப்போ படித்தாலும். உணர்ச்சிச் சிக்கலைப் பொதுவில் வைத்து அவர் புனைந்த கதை. அவர் காலத்தில் அது புரட்சியாகக் கூட இருந்திருக்கலாம். இந்த நாளில் அப்படித் தோன்றுமா என்பது கேள்விக்குறி.

    என் கணிப்பில், இந்திய இதிகாசங்கள் இரண்டும் புராணங்கள் பலவும் ஆணாதிக்கப் பார்வையில் எழுதப்பட்டவை. அறிந்தோ அறியாமலோ எழுதினார்கள் என்பதை ஏற்க முடிந்தாலும். வசதிக்கேற்றபடி கற்புக்கொடி பிடித்த நாளிலிருந்து நிறைய காலம் கடந்து வந்திருக்கிறோம் என்பது கொஞ்சம் நிறைவாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. சாப்பாட்டு ரசனை பாருங்கோ, அது காதலிக்கிற மாதிரி. நல்ல சாப்பாட்டை பஞ்சேந்த்ரியம், அதான் அஞ்சு புலன்ம்பாளே, மெய் வாய் கண் மூக்கு செவி, எல்லாத்தாலயும் அனுபவிக்கணும்.

    Nice saying..

    பதிலளிநீக்கு
  11. விபக்கம் என்றால் 'frustrated anger' - சரியான தமிழ்ச்சொல் தெரியாததால் கடுப்பு என்றேன் ஸ்ரீராம். இயலாமையினால் வரும் கோபம்? ['எதுக்கெடுத்தாலும் ஒரு வியாக்யானம் விபக்கம்.. இப்டியே போயிண்டிருக்கு எங்க தாம்பத்தியம்']

    பதிலளிநீக்கு
  12. கூகிளில் எதையோ தேடப்போய் இதை கண்டேன். அப்படியே சொக்கி போய்விட்டேன். பேஷ், பேஷ், ரொம்ப பிரமாதமாய் இருக்கு. கலக்கிட்டேள் போங்கோ!

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி Expatguru.

    பதிலளிநீக்கு