2011/12/09

வந்தவளை - எங்கள் சவடால் 2K+11

சிறுகதை


முன்கதை:எங்கள் சவடால் 2K+11


    வேகமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள். "மன்னா.. மன்னா"

"என்னா?"

"நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு உறவோ என்று நினைத்துவிட்டேன்.. எனக்கு உதவி செய்வீர்களா?"

"பெண்ணே.. அரக்கன் கணவன் காப்பாற்று போன்ற வசனங்களெல்லாம் கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது. ஆளை விடம்மா"

"உங்களால் மட்டுமே முடியும் மன்னா, மறுக்காதீர்கள்"

"இது போல் எத்தனை பேரிடம் சொல்லியிருக்கிறாய் பெண்ணே?"

"ஆறு பேரிடம் மன்னா"

"பிறகென்ன வசனம் வேண்டிக் கிடக்கிறது? உங்களால் மட்டுமே முடியும்.." என்று அவள் சொன்னது போலவே புங்கவர்மன் இழுத்தான். "ஆளை விடம்மா.. வசனம் பேச வேறு ஆளைப்பார்"

"கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது என்று சொன்னீர்களே? கேட்டதேயில்லை மன்னா. அதற்கு என்ன பொருள்?"

இதற்குள் அவனுடன் வேட்டைக்கு வந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர். "மன்னா, இங்கே ஒரு பெரிய தவளை போனதே பார்த்தீர்களா?" என்றான் ஒரு காவலன். பதில் சொல்லாது எரிச்சலுடன் பார்த்த புங்கவர்மனிடம் காவலன் புலம்பினான். "அதற்குள் அடித்துச் சாப்பிட்டு விட்டீர்களா மன்னா? எங்களுக்கு ஒரு காலாவது மிச்சம் வைக்கக் கூடாதா?"

"புரிந்தது மன்னா.. சோற்றுச் சிக்கலா?" என்றாள் தவளைப்பெண்.

"ஆமாம் தவளையே.. பெண்ணே... சாப்பிட்டுப் பல நாட்களாயின. அரசன் என்பதால் செடி கொடி காய் என்று ஏதாவது பறித்துக் கொடுக்கிறார்கள். அரிசிச்சோறு தின்று அரை வருடமாகிறது. செலவுக்குச் சில்லறையில்லை. கடனும் தரமறுக்கிறார்கள். கஜானா காலி. இதோ இருக்கிறார்களே, ஏதோ வேலையில்லா திண்டாட்டம் இருப்பதால் சம்பளம் கேட்காமல் என்னிடம் வேலை பார்க்கிறார்கள். இப்படியே இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நான் தனியாகப் பிச்சை எடுக்க வேண்டியதுதான்" என்றான்.

"அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் மன்னா"

"ஏன், நீ பிச்சை எடுக்கிறாயா?"

"அதில்லை மன்னா.."

"எதுவாக இருந்தால் என்ன? பெரிய தவளையாகத் தென்பட்டதே, தனியாகச் சென்று அடித்துச் சாப்பிடலாம் என்று பின் தொடர்ந்தால் பெண்ணாக மாறிவிட்டாய்.. நீ யாரோ நாங்கள் யாரோ? உன் கணவரை மீட்டுக் கொடுக்க நல்ல ஆளைப் பார்த்தாய். வேறே யாராவது எட்டாவது ஆள் வருவான், அவனிடம் வசனம் பேசு, போ.."

"மன்னா.. நான் இளவரசி. என் கணவரை மீட்டுக் கொடுங்கள். உங்கள் கடனையெல்லாம் அடைக்க.."

"பொன்னும் மணியும் தருவாயா?"

"இல்லை. குறைந்த வட்டிக்கு நானே கடன் தருகிறேன் என்று சொல்ல வந்தேன். அதற்கு மேல், இப்பொழுதே உங்கள் அனைவருக்கும் மாமிசச்சோறு வரவழைக்கிறேன்.. என்னிடம் மந்திரசக்தி இருக்கிறது"

"பார்த்தால் தேரை போல் இருக்கிறாய்.. நீ இளவரசி என்று எப்படி நம்புவது? அடையாளம் ஏதாவது இருக்கிறதா? பேன் உண்டா? இருந்தால் எடுத்துக் காட்டு. ஐயா, மந்திரியாரே.. இந்தப் பெண்ணின் அரசுப் பேன் அடையாளத்தை சரி பாருங்கள்"

"இதோ" என்றபடி கூந்தலைப் பிரித்துக் காட்டினாள் இளவரசி. எட்டிப் பார்த்த மந்திரி தலையாட்டினார். "ஆமாம் மன்னா. அரசப்பேன் தான். நன்றாகக் கொழுத்துத் திரிகின்றன. இளவரசி கூந்தலை வேகமாக அசைத்தால் பத்துப் பதினைந்தாவது விழும், வறுத்துச் சாப்பிடலாம்" என்றார்.

"உமது புத்தி உம்மை விடுமா?" என்று புங்கவர்மன் கடிந்தான். பிறகு பெண்ணைப் பார்த்து, "இளவரசி, எங்களுக்கு மாமிசச்சோறு போடுவதாகச் சொன்னாயே?" என்றான்.

"முதலில் என் கணவரை மீட்டு என்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதி அளியுங்கள்"

"உயிர்தானே மன்னா, போனால் போகிறது, வாக்கு கொடுங்கள்" என்று அனைவரும் பிடுங்கி எடுக்க, மன்னன் தலையசைத்தான். "சரி, பெண்ணே. உன்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றுகிறேன். முதலில் சோற்றைக் கண்ணில் காட்டு" என்றான்.

இளவரசி பாடத் தொடங்கினாள். மரணப் பிடியில் சிக்கியத் தவளையின் குரலில் அவள் பாடத் தொடங்கியதும், கூட்டம் அதிர்ந்தது.

"நிறுத்தம்மா.. உன்னை யாரும் இங்கே துன்புறுத்தவில்லை.. சாப்பாடு கேட்டோம்.. தர விருப்பம் இல்லை என்றால் நேரடியாகச் சொல்லிவிடு, பாடத் தேவையில்லை" என்றான் புங்கவர்மன்.

இளவரசி அவனை மறித்து, "பொறுங்கள் மன்னா" என்றாள். ஒரு மணி நேரம் போல் பாடித் தீர்த்தாள். உடனே அங்கே ஒரு பெரிய விருந்து தோன்றியது. உப்பு குறைவு, காரம் அதிகம், வேகவில்லை, குழைந்துவிட்டது, கோழியும் ஆடும் உயிரோடு இருப்பது போலவே தோன்றுகிறது என்று ஆளுக்கொரு குறை சொன்னாலும், விருந்துப் பண்டங்கள் நொடிகளில் மறைந்தன. எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் பாடத் தொடங்கினார்கள்.

"சரி.. இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?" என்றாள் இளவரசி.

"பாடவில்லை.. அது.. எங்கள் ஏப்பம்" என்றான் புங்கவர்மன். "சரி, அரக்கனைப் பிடிக்கப் போகலாம், வா".

"பொறுங்கள் மன்னா. ஒரு நிபந்தனை இருக்கிறது"

"என்ன?"

இளவரசி சரேலென்று ஒரு மரத்தின் பின்னே சென்றாள்.

"பாவம், அவசரம் போல" என்றான் காவலன்.

"நிறுத்தய்யா.." என்று புங்கவர்மன் சொல்லி முடிக்குமுன் இளவரசி திரும்பி வந்தாள். அவள் கையில் ஒரு கிளி இருந்தது.

"மன்னா, இந்த கிளி அரக்கனுடைய கிளி. கிளியுடன் வராவிட்டால் அரக்கன் நிச்சயம் என் கணவனைக் கொன்றுவிடுவான். கிளியைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு" என்றாள்.

"அவ்வளவு தானே? போகலாம் வா" என்று புங்கவர்மன் நடந்தான்.

"அவ்வளவு சீக்கிரம் போக முடியாது. சில சட்டங்கள், விதிகள் எல்லாம் உண்டு" என்ற குரல் கேட்டுத் திரும்பினான் புங்கவர்மன். இளவரசியைப் பார்த்தான். "பேசுவது கிளியா, பெண்ணரசி மொழியா?" என்றான்.

"கிளி தான்" என்றது கிளி.

"ஆம் மன்னா.. இது சட்டக்கிளி"

"சட்டையே காணோம்?" என்றார் மந்திரி.

"சட்டக்கிளி மந்திரியாரே" என்றது கிளி. "நான் வச்சது தான் சட்டம். அரக்கனைப் பிடிக்கப் போகிறவர்கள் சில விதி முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐநூறிலிருந்து ஆயிரம் மூச்சு வரை இழுக்கலாம். ஆபாச பேச்சு ஜாடை எதுவும் கூடாது. ஏழு கடல் ஏழு மலை கடந்து அரக்கனைப் பிடிக்கும் வரை தொடர்ந்து போக வேண்டும், விட்டுப் பிறகு பிடிக்கலாம் என்று நிறுத்தித் தொடரக்கூடாது."

"இன்னும் வேறு ஏதாவது உண்டா?"

"ஒன்றை மறந்து விட்டேன்"

"என்ன?"

"தோன்றும் நேரத்தில் திடீரென்று புது விதி ஏதாவது புனைவேன்.." என்ற கிளி, கிளிகிளி என்று சிரித்தது.

"இதென்ன புது வம்பு? சட்டக்கிளியா?" என்றான் புங்கன்.

"ஆம் மன்னா! தலைவிதி. என் கணவரைத் தூக்கிச் செல்லும் பொழுது அரக்கன், 'கிளி உயிரோடு இருக்கும் வரை உன் கணவனும் உயிரோடு இருப்பான்' என்று இந்தக் கிளியை என்னிடம் கொடுத்துவிட்டு மாயமாக மறைந்து விட்டான். தினம் ஒரு விதி என்று புதுப்புது சட்டம் போட்டுக் கழுத்தறுத்தாலும் கிளியை ஒன்றும் செய்ய முடியாது" என்றாள் இளவரசி.

"கிளிக்.." என்று புங்கன் தொடங்கும் போதே கிளி கத்தியது. "ஆபாசம்! ஆபாசம்!"

புங்கன் அமைதியானான். கூட்டத்துடன் நடந்தான். தொலைவில் தெரிந்த மலை மெள்ள அருகில் வந்ததும் திடீரென்று கிளி கத்தியது. "நீங்கள் எல்லோரும் படுத்து உருண்டு மலையேற வேண்டும்"

"என்ன, இதை முதலில் சொல்லவில்லையே?" என்றான் புங்கன் எரிச்சலுடன்.

"புது விதி" என்றது கிளி.

"மன்னிக்க வேண்டும் மன்னா.. கிளி சொன்னபடி செய்யவேண்டும்" என்றாள் இளவரசி.

"இந்தக் கிளியை யாராவது கொஞ்சம் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்.. கழுத்துப் பக்கமாக" என்றான் புங்கவர்மன்.

வேறு வழியில்லாமல் அனைவரும் படுத்து உருண்டு மலையைக் கடந்தனர். அடுத்து வந்த இரண்டு மலைகளை ஓடிக் கடக்க வேண்டும் என்றது கிளி. சோர்ந்து போன கூட்டம் புங்கவர்மனை விட்டு விலகுவதாகச் சொன்னது. "ஒரு கடல் கூட இன்னும் வரவில்லையே மன்னா?" என்றான் ஒருவன். "என்றைக்குக் கடந்து என்றைக்கு அரக்கனைப் பிடித்து என்றைக்கு எங்கள் சோற்றுச் சிக்கல் தீர்வது?" என்றான் இன்னொரு காவலன். "என்னைக் கேட்டால் இங்கேயே கிளி பிரியாணி செய்து சாப்பிடுவதே மேலென்று தோன்றுகிறது" என்றான் சமையல்காரன். கிளி அஞ்சி ஒதுங்கி இளவரசியின் தோள் மீது அமர்ந்தது.

தன் கூட்டத்தின் அமைதியின்மையைக் கவனித்த புங்கன், அனைவரையும் அடக்கினான். "எல்லோரும் களைப்பாக இருக்கிறோம். இன்றிரவு இங்கே உறங்கிவிட்டு காலையில் தீர்மானிப்போம்" என்றான்.

"நல்ல யோசனை. ஏதாவது புது விதி புனையுமுன் உறங்குவோம்" என்றார் மந்திரி.

"தூங்குமுன் எனக்கு யாராவது கதை சொன்னால் தான் தூக்கம் வரும்" என்றான் புங்கன்.

"கஷ்டம்! இவனெல்லாம் நமக்கு அரசன்" என்றான் காவலன்.

"என்ன?" என்றான் புங்கவர்மன் சினத்துடன்.

"ஐயோ, நானில்லை.. இந்தக் கிளி தான் சொன்னது. விடாதீர்கள் மன்னா" என்றான் காவலன். கிளி படபடத்து இளவரசியின் பின்னே பதுங்கியது.

"சரி, நானே கதை சொல்கிறேன். என்னுடைய கதை" என்றாள் இளவரசி.

"கதை சொல்வதாக இருந்தால், ஒரு ஊர்ல என்று தொடங்கிச் சொல்ல வேண்டும்" என்றான் புங்கன்.

"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவனுக்கு ஒரு ராணியாம். ராஜா என்றாலும் அவன் ஊருக்கு மருத்துவனாம். எந்த வியாதியாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற நிறங்களில் ஒரு மூலிகையைக் கொடுத்து சில சமயம் குணப்படுத்துவானாம். மக்களும் வண்ண மூலிகைகளுக்கு ஆசைப்பட்டு இல்லாத வியாதிகளைச் சொல்லிக் கொண்டு வருவார்களாம். ஒரு நாள் ஒரு கொடிய அரக்கன் அரசனைத் தேடி வந்தானாம். 'மன்னா.. எனக்கு நரம்புவலி, முதுகுவலி, சுளுக்கு என்று பல வலிகள்.. நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும்' என்றானாம். மன்னனும் வண்ண மூலிகைகளைக் கொடுத்தானாம். எல்லாவற்றையும் சாப்பிட்ட அரக்கனுக்கு வலி அதிகமாகி விட்டதாம். வந்த கோபத்தில் அரசனைக் கடலில் எறிவதாகச் சொன்னானாம். ராஜாவை மன்னித்து விடும்படி ராணி அரக்கனிடம் மன்றாடினாளாம். அரக்கனோ மனமிறங்கி, 'சரி, ஒன்று செய்கிறேன். இதோ இருக்கிறதே கிளி.. இதை உன்னிடம் விட்டுச் செல்கிறேன். மன்னனோடு கிளியையும் சேர்த்துத் தூக்க முடியவில்லை. முதுகுவலி அதிகமாகிறது. நீ கிளியோடு ஏழு கடல் ஏழு மலை தாண்டி உன் கணவனைக் கண்டுபிடிக்க வா. இல்லையெனில் உன் கணவனையும் கொன்று உன்னையும் கொல்ல வருவேன்' என்று கூறி ராஜாவோடு மறைந்து விட்டானாம்" என்றாள் இளவரசி.

"யார் அந்த ஏழுமலை?" என்று எழுந்து உட்கார்ந்தான் ஒரு காவலன்.

"ஏழுமலையில்லை. ஏழு கடல் ஏழு மலை" என்றாள் இளவரசி.

"என்ன? ஏழு கடல், ஏழு மலையா?" என்று எழுந்து உட்கார்ந்தார் மந்திரி.

"ஆம்"

"அப்படியெனில் நாம் வீணாகச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.. அரக்கன் இருக்குமிடம் எனக்குத் தெரிந்துவிட்டது" என்றார் மந்திரி. "அரசனை எழுப்புங்கள்".

எல்லோரும் புங்கவர்மனை எழுப்பினார்கள். "அரசே, அரக்கன் இருக்குமிடம் எனக்குத் தெரியும்" என்றார் மந்திரி.

"யார் அரக்கன்.. என்ன இடம்?" என்ற புங்கவர்மன் சுதாரித்து, "சொல்லுங்கள்" என்றான்.

"மன்னா... ஏழு கடல் ஏழு மலைகள் கடந்தால் வருவது நம் உலகின் எதிர்முனையில் இருக்கும் அமாரிகோ எனும் நாடு. அதைத்தான் அரக்கன் சூட்சுமமாகச் சொல்லியிருக்கிறான்" என்றார் மந்திரி.

"மந்திரியாரே.. அப்படியே சென்றாலும் அரக்கனுடைய முதுகுவலியைக் குணப்படுத்தி என் கணவரை எப்படி மீட்பது?" என்று கலங்கினாள் இளவரசி.

மந்திரி புன்னகைத்தார்.

"அதிகம் புன்னகைக்காதீர்கள். அரையிருட்டில் பயமாக இருக்கிறது" என்றான் புங்கன்.

"கவலைப்படாதீர்கள் இளவரசி.. அமாரிகோ நாட்டில் வலி நிவாரண நிபுணர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒன்று குணப்படுத்துவார்கள் அல்லது மருந்து கொடுத்தே கொன்றுவிடுவார்கள். எப்படியும் நமக்கு நன்மையே.. உங்கள் கணவரை மீட்டுவிடலாம். அமாரிகோ போகும் கழுகு விமானத்திலேறி நாம் நாளையே பயணம் செய்வோம்" என்ற மந்திரியை நன்றியோடுத் தழுவிப் பாராட்டினான் புங்கன். அடுத்து இளவரசியை மகிழ்ச்சியோடு தழுவலாம் என்று முனைந்த போது சட்டக்கிளி அலறியது.

    ரண்டு நாட்களுக்குப் பின் அமாரிகோவில் முழு வேர்க்கடலை உரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அரக்கனைப் பிடித்தார்கள். புங்கன் அரக்கனிடம் இளவரசியின் கணவனை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டான். அரக்கன் "என் உடல்வலி மிகவும் மோசமாகி விட்டது. தலையிலிருந்து கால் வரை வலிக்கிறது. எல்லாவற்றுக்கும் இந்த ஆள் கொடுத்த மூலிகையே காரணம். குணமாகாமல் இவனை விடுதலை செய்ய மாட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் குணமாகவில்லையெனில் இவனையும் கொன்று உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்" என்று பலமாகச் சிரித்தான். பிறகு முகத்தைப் பிடித்துக் கொண்டு வருந்தினான். "சிரித்தால் வாய் வலிக்கிறது".

"அரக்கனாரே, முதலில் இந்தக் கிளியைப் பிடியுங்கள்" என்றான் புங்கன்.

அரக்கன் அலறினான். "ஐயோ, சட்டக்கிளியா? மறுபடியுமா? இங்கே வரமாட்டீர்கள் என்று நம்பி சட்டக்கிளியைக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு வந்தால், அதை இங்கேயும் எடுத்து வந்தீர்களா? வரும் வழியில் பசித்தப் பூனை ஒன்றைக் கூடவா பார்க்கவில்லை? கருணையில்லாத கூட்டமாக இருக்கிறதே!" என்று நடுங்கினான்.

"நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற காவலன், சரேலென்று கிளியைப் பிடித்து ஒரு பைக்குள் திணித்தான். வயிற்றை எதிர்பார்ப்புடன் தடவிக் கொண்டான்.

"அரக்கனாரே.. உங்கள் வலிகளைப் போக்கும் வழியைச் சொல்கிறேன். என்னைத் தொடர்ந்து வாருங்கள்" என்றார் மந்திரி.

புங்கவர்மன் தலைமையில் எல்லோரும் மந்திரியைப் பின் தொடர்ந்தார்கள். அரக்கனும் புலம்பிக் கொண்டே நடந்தான். நெடுந்தூரம் சென்றபின் நின்றார்கள். மாலை மயங்கி இரவு தொடங்கியிருந்தது. "அதோ பாருங்கள்.. சிவப்புச் சட்டை அணிந்த அந்தக் கூட்டத் தலைவனை கவனியுங்கள்.."

முழு நிலவின் ஒளியில் அங்கே ஒரு கூட்டம் நேராகவும் தலைகீழாகவும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தது. அரக்கன் அவர்களையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். "இவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்களே!" என்றான். சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் தலைகீழாக நடந்து அவர்களை நோக்கி வந்தார். அரக்கனை இழுத்துக் கொண்டு ஆடத் தொடங்கினார்.



ஆடி முடித்ததும் அரக்கனுக்கு மகிழ்ச்சி. "ஆகா! மூலிகையை நம்பி இப்படி ஆடிப்பாடி மகிழ்வதை மறந்தேனே! என்ன ஆட்டம்! என்ன ஆட்டம்! என் வலியெல்லாம் போய்விட்டது!" என்றபடி இளவரசியின் கணவனை விடுதலை செய்தான்.

வாக்களித்தபடியே புங்கவர்மனுக்குக் குறைந்த வட்டியில் நிறைந்த கடன் கொடுத்த இளவரசி, கணவனை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

"வாருங்கள் மன்னா, கிளி பிரியாணி காத்திருக்கிறது" என்று புங்கவர்மனை இழுத்துக் கொண்டு ஓடினார் மந்திரி.

சிவப்புச் சட்டைக்காரர் பேந்த விழித்துக் கொண்டிருந்தார். "இனி நீயே என் மருத்துவன்" என்றபடி அரக்கன் இழுத்துக் கொண்டு ஓடினான் அவரை.


28 கருத்துகள்:

  1. இப்படியே இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நான் தனியாகப் பிச்சை எடுக்க வேண்டியது தான்" என்றான்.
    "அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் மன்னா"
    "ஏன், நீ பிச்சை எடுக்கிறாயா?"

    "தோன்றும் நேரத்தில் திடீரென்று புது விதி ஏதாவது புனைவேன்.." என்ற கிளி, கிளிகிளி என்று சிரித்தது.

    மந்திரி புன்னகைத்தார்."அதிகம் புன்னகைக்காதீர்கள். அரையிருட்டில் பயமாக இருக்கிறது" என்றான் புங்கன்.

    -இப்படிப் பல இடங்களில் மனம் விட்டுச் சிரித்தேன். கடைசியில் ஒரு வீடியோவையும் சேர்த்த மதியூகம் நன்று. கடைசிவரை நகைச்சுவை இழையோட அருமையாகக் கதை சொல்லியுள்ளீர்கள். போட்டியில் வெல்வதற்கு வாழ்த்துக்குள் அப்பா சார்...

    பதிலளிநீக்கு
  2. கீழே இருப்பது கிளி பிரியாணி வீடியோ ரெசிப்பியோ என்று ஆவலாகப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  3. அப்பாஜி...எனக்கும் கொஞ்ச நாளாவே முதுகு வலி.அமாரிகா நாட்டுக்குப் போக வரைபடம் தந்து உதவுங்களேன் !

    பதிலளிநீக்கு
  4. ஹையோ, முடியலை! எதுக்குச் சிரிக்கிறது, எதுக்குச் சிரிக்காமல் இருக்கிறதுனு தெரியாமக் கன்ன&பன்னாவென்று சிரித்துச் சிரித்துச் சிரிப்பாய்ச் சிரிக்கிறேன்.

    வாழ்த்துகள். நிச்சயம் ஒரு பரிசு உண்டு. ஶ்ரீராம் வேறே வந்துட்டாரே. ஆ"சிரி"யர்களில் ஒருத்தர் வந்தாலே கதை நல்லா இருக்குனு அர்த்தமாம்! :))))))))))

    பதிலளிநீக்கு
  5. ஜி+ ல் ஷேர் பண்ணறேன். :))))))

    பதிலளிநீக்கு
  6. சிரிச்சு சிரிச்சு மாளலை! வரிக்கு வரி ரசிச்சு சிரிச்சேன். சட்டக் கிளி கலக்கல்! கடைசி வரி படு சூப்பர்! இதுக்கு இன்னும் சிரிச்சுண்டு இருக்கேன். :)

    ரொம்ப ரொம்ப பிரமாதம் அப்பாதுரை! சான்ஸே இல்லை!

    பதிலளிநீக்கு
  7. நானும் வந்துட்டேன். நல்லா இருக்கு கதை.

    பதிலளிநீக்கு
  8. //
    ரொம்ப ரொம்ப பிரமாதம் அப்பாதுரை! சான்ஸே இல்லை!//

    என்னங்க புகழ்ந்துவிட்டு, பரிசு கிடைக்க சான்சே இல்லை என்றும் சொல்லிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல வேளை! அரக்கனை மைக்கேல் ஜாக்சனின் மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுப்பிவிடுவீர்களோ என்று வீடியோ பார்த்ததும் பயந்தேன்.

    பதிலளிநீக்கு
  10. படித்துக்கொண்டே சிரித்தேன்;சிரித்துக் கொண்டே படித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. ரெண்டாவது ஆ"சிரி"யர் ஆஜர். அப்பாதுரைக்குப் பரிசு உறுதி செய்யப்பட்டது. :))))

    கெளதம் சார், சான்ஸே இல்லைனு மீனாட்சி சொன்னது எங்களுக்கெல்லாம் பரிசு இல்லைனு. அதானே மீனாட்சி? :))))

    (நைஸாக் கேட்டுத் தெரிஞ்சு வைச்சுக்கலாம் இல்ல!)

    பதிலளிநீக்கு
  12. சிரித்துக் கொண்டே படித்தேன்.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    பதிலளிநீக்கு
  13. //கெளதம் சார், சான்ஸே இல்லைனு மீனாட்சி சொன்னது எங்களுக்கெல்லாம் பரிசு இல்லைனு. அதானே மீனாட்சி? :))))//

    அதான், அதான், அதேதான்! :)

    பதிலளிநீக்கு
  14. அதான், அதான், அதேதான்! :)//

    அதானே! ஜிங் சக்க ஜிங் சக்க ஜிங் சக்க ஜிங்

    பதிலளிநீக்கு
  15. வாய் விட்டுச் சிரித்தேன்.

    சிவப்புச் சட்டைக்காரர்களைத் தாக்குவது போல் தெரிகிறதே.
    காஷ்யபன் அய்யாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள ரெடியா?

    பதிலளிநீக்கு
  16. "தோன்றும் நேரத்தில் திடீரென்று புது விதி ஏதாவது புனைவேன்.." என்ற கிளி, கிளிகிளி என்று சிரித்தது.


    படிப்பவர்களும் தான் விதம் விதமாகச் சிரிக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  17. சூப்பர். சட்டக் கிளி கதையின் ஹைலைட்.

    பதிலளிநீக்கு
  18. மிகவும் நன்றி கணேஷ், ஸ்ரீராம், ஹேமா, geethasmbsvm6, meenakshi, kg gouthaman, சென்னை பித்தன்,திண்டுக்கல் தனபாலன், சிவகுமாரன், இராஜராஜேஸ்வரி, geetha santhanam,...

    பதிலளிநீக்கு
  19. ஆ... என்ன இப்படி சொல்றீங்க kgg.. எழுத்துல இருக்குதே உத்தரவாதம்? சும்மாவா?
    இப்ப இல்லைனு சொன்னா கேஸ் தான்.. அதுவும் பேரிஸ்டர் ரஜினிகாந்த் கிட்டேந்து லெட்டர் வரும்.. (இல்லேன்னா பாலூட்டி வளர்த்த கிளினு பாட்டு வரும்..)

    பதிலளிநீக்கு
  20. நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சேன் சிவகுமாரன்.. இதுல ஒரு செய்தி இருக்குமோ? இந்த விடியோவில் பணி புரிந்த முக்கிய நபர்கள் மூணு பேரும் கம்யூனிசம் பிடிக்காத இடது சாரிகள்.. கம்யூனிசத்தை zombieனு சொல்றாங்களோ? பத்த வச்சுட்டீங்களே?

    பதிலளிநீக்கு
  21. அப்பாதுரை அவர்களே! சும்ம ஒரு ஒறமா நின்னுகிட்டு பாத்துகிட்டு இருக்கென்.சிவகுமரன் வம்புக்கு இழுக்கிறார். நீங்களும் மறைமுகமா "ஒத்து "ஊதறீங்க .இரண்டு பேருமா சேர்ந்து "வாய் கொழுப்பு-2 " எழுத வச்சுராதீங்க.---கஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  22. ஹாஹா காஸ்யபன் சார்.. நீங்க எழுதினா விவரமாத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  23. டபுள் செஞ்சுரியா? வாழ்த்துக்கள்.
    கதையை படிச்சு சிரிச்சு வயித்து வலி. மருந்து பில்லை உங்களுக்கு அனுப்பணும்.

    ரெயில்வே ஸ்தானம் - ரெண்டு பேருக்கும் நல்ல அஞ்சலி அப்பாதுரை. very nice.

    பதிலளிநீக்கு
  24. நாகேஷ்,ஸ்ரீதர்,விவேக் இவர்கள் எல்லாம் சேர்ந்து எழுதின காமெடி ட்ராக் மாதிரி இருந்தது. முகமே வலிக்கிறது சிரித்து சிரித்து.
    உங்களுக்குத் தான் பரிசு. ரெடியாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  25. என்ன ஒரேயடியா இப்படி சொல்லிட்டீங்க!! ரொம்ப நன்றி வல்லிசிம்ஹன்!

    பதிலளிநீக்கு
  26. நகைச்சுவையுடன் நகர்த்தி, அரக்கனை ஆட்டத்தால் அடக்கி முடித்த விதம் அருமை:)! வீடியோ பகிர்வும் பொருத்தம். வெற்றிக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு