2010/07/31

கான்டேலே காதல்

போக்கற்ற சிந்தனை



'பன்னாட்டுக் கலாசாரப் பார்வைகள்' என்ற தலைப்பில் ஒருவாரக் கண்காட்சி, புத்தகக்காட்சி, ஆய்வுரைகள், கருத்தரங்கம் என்று செவிக்குணவு இல்லாத பொழுது, பலவகை சிற்றுண்டிகள் எனச் சிறிது வயிற்றுக்கும் ஈந்தார்கள் சிகாகோ பொது நூலக நிர்வாகத்தினர். காதல் தொடங்கி கடவுள் வரை பரந்த சிந்தனைக்களம். இலவச உணவென்றார்களே என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன். நாட் பேட். சாப்பாடும் சரி, சிந்தனையும் சரி. புராண இதிகாசங்கள் பற்றிய கருத்தரங்கில் பின்லந்து நாட்டுப் புராணம் பற்றித் தெரிந்து கொண்டேன்.

'காலேவால' (Kalevala) எனும் புராணக்கதை. வாயில் நுழையச் சிரமப்படும் பெயர்கள், அதனால் சுருக்கியிருக்கிறேன். பின்லந்து புராணக்காரர்கள் அடிக்க வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில். நம்ம ஊர் தசரதனை டேஷ் என்று அழைத்தால் நாம் சும்மா இருப்போமா? இருந்தாலும் கதை முக்கியமே தவிர பெயர் அல்ல என்ற சுதந்திரத்தில் உங்களுடன் இந்தப் புராணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். புராணம் என்பதால் வளவள உபகதைகளுடன் பக்கம் பக்கமாகப் போகிறது - கருக்குலையாமல் சுருக்கிச் சாரத்தைத் தர முயற்சி செய்திருக்கிறேன். நாமறிந்த புராணப் பாத்திரங்களின் பெயர்களை ஒப்பிடலுக்காகக் கொடுத்திருக்கிறேனே தவிர, வேறு எந்த எண்ணமுமில்லை.

            (THE KALEVALA | www.simplyreadbooks.com)
முக்கிய பாத்திரங்கள்/இடங்கள்:
    காலேவா: காலேவா குலத்தலைவன் (:: பரதன், ஜோசப்)
    காலேவால: காலேவா குலம் தழைத்த பூமி (:: பரதக்கண்டம்)
    ல்மாடார்: புனித அன்னை; எல்லாவற்றையும் படைத்தவள் (:: சக்தி)
    அதி: காற்று, கடல் இவற்றின் தலைவன் (வருணன்)
    விபுனன்: இசையின் தலைவன் (சிவன்)
    இமத்ரா: புனித நதி (கங்கை)
    ஐனோ: புராண நாயகி
    யோகைனன்: ஐனோவின் சகோதரன்
    கிபூடூட: பாவம், சோகங்களை ஏற்று நல்வழி அருளும் தலைவி (:: எமன், சக்தி)
    ஆலூயே: எல்லாச் செல்வங்களையும் அடக்கிய மந்திர நீர்நிலை (:: பாற்கடல்)
    லிங்க: மந்திரக் கருத்தரிக்க வைக்கும் ஒரு வகைப் பழம்
    மானு: பூமிக்கு அன்னை (:: பூமாதா)
    கூடார்: ஒளி (::சூரியன், சந்திரன்)
    லோகி: பாவம், இருளின் தலைவி (:: சாத்தான், எமன்)
    மார்யாதா: சக்தி, அன்னை, தலைவி, மந்திரக்கருவுற்று கடவுளின் பிள்ளையைப் பெற்றவள் (:: மாரியாத்தா? யேசுவின் அன்னை மேரி)
    ஸ்காப்: சக்தி வாய்ந்த வாத்து; அண்டங்களை எல்லாம் படைத்த புனித வாத்து அவதாரம் (:: விஷ்ணுவின் அவதாரங்கள்) - skypeன் பெயர்க் காரணம்?
    ஊகோ: ஆதிகடவுள் (:: சக்தி, சிவன், ஜெஹோவா)
    வாயீனமோயன்: புராண நாயகன்
    கான்டேலே: நரம்பு இசைக்கருவி (:: வீணை, ஹார்ப்)
    சம்போ: வேண்டியதை எல்லாம் தரவல்ல யந்திரம், சக்தி, மாயம்

மேற்சொன்னவை தவிர இன்னும் நாற்பது ஐம்பது பாத்திரங்களும் இடங்களும் உள்ளன. தலைசுற்றுமளவுக்கு உபகதைகள். தமிழ் சினிமா காமெடி போல் கதைக்கு வெளியே நிற்கும் உபகதைகள் ஏராளம். அடிப்படைக் கதை சுவையானது என்று நினைக்கிறேன்.

தொடக்கத்தில் ல்மாடார் தனியாக இருக்கிறாள். அழகும் இளமையும் கொண்ட கன்னியாகவே இருந்துவிடுவேனோ என்று வருந்தியவள் ஊகோவிடம் தன் வருத்தத்தைச் சொல்லி அழுகிறாள். இமத்ரா நதியில் இறங்கி நீந்தியபடி கடலில் கலக்கிறாள். அங்கே அதியின் வேகத்தில் (காற்று அலை வேகத்தில்) கற்பமாகிறாள். ஊகோவிற்கு நன்றி சொல்லி வாயீனமோயனைப் பெற்றெடுக்கிறாள். பெற்றதும் அவனை இயற்கையின் வளர்ப்புக்கு விட்டுவிடுகிறாள். வாயீன் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குகிறான். வீரனாகிறான். அவனுக்கு வயதாகிறது. வாயீனுக்கும் யோகைனனுக்கும் ஒரு நாள் பெரிய சண்டை நடக்கிறது. யோகை வாயீனைக் கிண்டல் செய்ததும் இருவரும் விஷம் தோய்த்த அம்புகளினாலும் தங்கத்தினாலான கதைகளினாலும் போர் புரிகிறார்கள். முதியவனான வாயீன் இளைஞன் யோகையைப் பின்னி எடுத்து விடுகிறான். யோகை பணம், அரசு, நீர், நிலம் என்று பலவற்றைத் தருவதாகச் சொல்லி விடுதலை கேட்கிறான். வாயீன் தன்னிடம் எல்லாம் இருப்பதாகச் சொல்லி இன்னும் வறுத்தெடுக்கிறான். யோகை முடிவில் தன் தங்கை ஐனோவை மணம் செய்து கொடுப்பதாகச் சொல்கிறான். 'சரி, யார் இந்த ஐனோ பார்க்கலாம் வா' என்று யோகையுடன் சென்ற வாயீன், ஐனோவைப் பார்த்ததும் அவளுடைய அழகில் மயங்கி விடுகிறான். யோகையை விடுதலை செய்து அவனுடைய பெற்றோர்களிடம் விட்டு, ஐனோவை மணம் புரிய அனுமதி கேட்கிறான். ஐனோவின் தாய்க்கு ஒரே மகிழ்ச்சி. எப்பேற்பட்ட அறிவாளி, எப்பேற்பட்ட வீரன் தன் மகளை மணம் செய்யக் கேட்டு வந்திருக்கிறான் என்று அவளுக்குத் தலைகால் புரியவில்லை. சரி என்கிறாள். ஐனோ மட்டும் முடியாது என்கிறாள். 'அறிவு, வீரம் எல்லாம் சரி - இளமையில்லையே? நான் முதியவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது' என்று மறுத்து விடுகிறாள். வாயீன் பல வகையில் தன் காதலை வெளிப்படுத்துகிறான். ஐனோவின் தாய் அவளை வற்புறுத்தித் திருமண ஏற்பாடுகள் செய்கிறாள். ஐனோ வீட்டை விட்டு ஓடி, இமத்ரா நதியிடம் தன் நிலையைக் கூறி அழுகிறாள். இமத்ரா நதி அவளைத் தன்னுடன் வரச்சொல்கிராள். தன்னுள் வாழும் மீனினத்துக்கு அன்னையாக இருக்கச் சொல்கிறாள். ஐனோவும் சரியென்று இமத்ராவுடன் சென்று விடுகிறாள். நதியில் மூழ்கிய ஐனோவை எண்ணி நொந்து போகிறான் வாயீன். தன் தவறை எண்ணிப் புலம்புகிறாள் ஐனோவின் தாய். 'பெற்றோர்களே, இனியாவது பிள்ளைகள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்' என்று அறிவுரை சொல்லிவிட்டு உயிரை விடுகிறாள். வாயீன் காதல் சோகத்தில் அங்கே இங்கே என்று திரிகிறான். இடையில் அவன் பிறந்த பூமியான காலேவா வாசிகள் லோகியால் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள். 'நீ அவர்களை விடுவிக்கப் பிறந்தத் தலைவன், சும்மா காதல் சோகத்தில் புலம்பலாகாது' என்று வாயீனுக்குப் பல தேவதைகள் அறிவுரை வழங்கின. உடனே ஆதிகடவுளான ஊகோவிடம் வேண்டிப் பல சக்திகளைப் பெற்று வருகிறான் வாயீன். நன்றாகக் கான்டேலே வாசிக்கவும் வரம் பெற்று வருகிறான். திரும்பி வந்து கான்டேலே வாசித்து எல்லாரையும் நல்வழிப் படுத்துகிறான். முடியவில்லையென்றால் அடித்து நொறுக்கி நல்வழிப் படுத்துகிறான். 'நீ ஊகோவிடமிருந்து பெற்ற சம்போவைக் கொடுத்தால் உன் மக்களைத் துன்புறுத்தாமல் விட்டு விடுகிறேன்' என்று மிரட்டிய லோகியுடன் அனியாயத்துக்கு நாயடிப் பேயடிச் சண்டை போடுகிறான். லோகி 'இனி எவரையும் துன்புறுத்துவதில்லை' என்று உத்தரவாதம் கொடுத்து உயிர்ப்பிச்சை கேட்கிறாள். உயிர்ப்பிச்சை கொடுத்து, 'போகிற வழியில் கான்டேலே இசையைக் கேட்டு விட்டுப் போ' என்று அவளுக்கு வாசித்துக் காட்டுகிறான் வாயீன். இடையில் லிங்கப் பழத்தைச் சாப்பிட்டு மந்திரக் கருத்தரித்த மார்யாதாவை ஊரில் எல்லாரும் ஒதுக்கி வைக்கிறார்கள். அவளைக் கொல்வது தான் சரி என்று எல்லாரும் துரத்துகிறார்கள். அவள் வாயீனிடம் தஞ்சம் கேட்டு வருகிறாள். வாயீன் கொஞ்சம் யோசித்து விட்டு, 'ஊரார் சொல்வது தான் சரி, உன்னைக் கொன்று விடுகிறேன்' என்று அவளைத் துரத்துகிறான். அவளோ ஒரே ஓட்டமாக ஓடி இமத்ரா நதியிடம் தஞ்சம் அடைகிறாள். இமத்ரா நதிக்கு வந்ததும் வாயீன் தயங்குகிறான். ஐனோ நினைவு வந்து விடுகிறது. அதற்குள் மார்யாதாவுக்கு ஆண்குழந்தை பிறந்து விடுகிறது. சுய நினைவுக்கு வந்த வாயீன் தாயையும் சேயையும் கொல்ல வாளெடுக்கிறான் (கான்டேலேயை அவசரத்தில் வீட்டில் வைத்து விட்டு வந்த காரணத்தால்). உடனே பிறந்த குழந்தை பேசுகிறது. 'வாயீன் கிழவா, ஐனோ இறப்பதற்கு நீ தானே காரணம்?' என்கிறது. மறுபடியும் ஐனோ நினைவு வந்து மனம் மாறுகிறான் வாயீன். இமத்ரா நதியில் தொலைவில் பல வண்ண மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. 'வா, கான்டேலே சொல்லித் தருகிறேன்' என்று அவனை அழைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்புகிறான் வாயீன். எல்லோரிடமும் குழந்தையைக் காட்டி, 'இனி இவன் தான் உங்கள் குலத் தலைவன்' என்று சொல்கிறான். மக்கள் ஜே ஜே என்கிறார்கள். கான்டேலே சொல்லிக் கொடுத்துவிட்டு, இமத்ரா நதிக்குப் போகிறான். மீன்கள் துள்ளிக் கொண்டிருக்கின்றன. நதி சுழன்று சுழன்று ஓடுகிறது. ஐனோ தன்னை அழைப்பது போலிருக்கிறது வாயீனுக்கு.

இது தான் பின்லந்து நாட்டின் பிரதான புராணமாம். கொஞ்சம் என் பாணியில் எடுத்து எழுதியிருக்கிறேன் என்றாலும் மையக்கருவிலிருந்து விலகவில்லை என்று நினைக்கிறேன். தேவ வரம், பாயசம், பழம் என்று மாயமாகக் கருத்தரிக்கும் வித்தை எல்லா நாட்டுப் புராணங்களிலும் வருகிறது. பெயர் சாயல் ஒற்றுமையும் வியப்பைக் கொடுத்தது. சொல்லாமல் சொல்லியிருக்கும் காதல் கரு என்னை மிகவும் கவர்ந்தது. காதலும் இசையும் தான் மகிழ்ச்சி எனும் கருத்தைச் சொல்லும் புராணக் கதையை வாய்ப்பு கிடைத்தால் அவசியம் படியுங்கள்.

5 கருத்துகள்:

  1. நீங்கள் படிக்கும் புத்தகங்களை எங்களுக்கும் அறியத் தருவது சிறப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இது மிகப் பெரிய புராணம். சுருக்குப்பையில் முடிந்து வைப்பது போலச் சொல்லியிருக்கிறீர்களே? புராணங்கள் சமுதாய வளர்ச்சி மற்றும் கலாசாரத் தூண்கள். இவற்றை தன்னிச்சையாக எழுதுவது முறையாகாது. உதயணன் எழுதிய தமிழாக்கத்தைப் படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. கற்பனைக் கதியில் மட்டுமின்றி பெயர்களிலும் (லோகி, மானு) இந்தியக் கதைகளை ஒத்திருப்பது ஆச்சர்யம். --கீதா

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோலன் (?); எல்லாப் புராணங்களையும் போல் அங்கே இங்கே திரிந்த கதையின் சுருக்கத்தை மட்டும் சொல்ல நினைத்தேன்; புராணத்தை சில்லறைப்படுத்தும் எண்ணமில்லை.

    பதிலளிநீக்கு