சிறுகதை
லொட்டை ஸ்ரீமதியை மறுபடி சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
உலக இலக்கியப் பராமரிப்புப் பேரவை என்று யுனெஸ்கோவின் ஆதரவில் நடக்கும் ஒரு வாரக் கூத்துக்கு வாடிக்கையாகப் போய்க்கொண்டிருக்கிறேன். சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும் இலக்கியப் பராமரிப்பு என்ற பெயரில் இது தான் என் வேலை. எனக்கும் என் இரண்டு பேர் குழுவுக்கும் நாலு வருடத்துக்கு ஒரு முறை சம்பளம் கேட்டு பட்டுவாடா செய்யும் கௌரவப் பிச்சை. இந்த முறை என்னை நிதிக் குழுவின் தலைவராகப் போட்டிருந்ததால் மற்ற பிச்சைக்காரர்களைப் பார்த்துப் பேசிக் கர்வப்பட வாய்ப்பு கிடைத்தது. நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வழக்கம் போல் அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருந்தக் கூட்டத்தில், வழி தவறிய தேவதையைப் போல் வந்த ஸ்ரீமதியைப் பார்த்தேன்! மறைந்து கொண்டிருக்கும் காளிதாசனின் சம்ஸ்க்ருத இலக்கியங்களை மீண்டும் பொதுவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் இந்தியாவில் காளிதாசன் படைப்புகளைத் தழுவிய ஒரு இலக்கியச் சுற்றுலாத் திட்டத்தை விளக்கி நிதி திரட்ட வந்திருந்தாள். தன்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்று பணிவாகச் சொல்லிவிட்டு மேடையில் உட்கார்ந்தபடியே பேசினாள். அவளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
எனக்கு மட்டுமே புலப்படுகிற முறுவலை மின்னல் போல் காட்டிவிட்டு, பராமரிப்புத் திட்டத்தை விளக்கத் தொடங்கினாள். முகத்தில் முதிர்ச்சியின் அடையாளங்கள் தெரிந்தாலும், களை மாறவேயில்லை. ஓரக்கண்ணால் சுற்றிலும் பார்த்தபடி அமைதியாகவும் அழுத்தமாகவும் பேசும் அந்த மேனரிசம் இப்போது இன்னும் கவர்ச்சியாகத் தோன்றியது. அந்த முறுவல்! உதடுகள் விரிவது போல் பாசாங்கு செய்து கன்னத்துடன் கலக்கும் இடத்தில் காலரைக்கால் மிலிமீடர் அவசரக் குழி வெட்டி, அடக்கமும் பிடாரித்தனமும் அளவாகக் கலந்த வசீகரம்! அன்றைக்கு விழுந்தது போலவே விழுந்தேன்.
ஸ்ரீமதி என்னை விட ஒரு வயது மூத்தவள். குரோம்பேட்டையில் குடியிருந்த போது ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தோம். பக்கத்துத் தெருக்களில் குடியிருந்தோம். குடும்பப் பழக்கம். ஓரளவுக்கு எங்களை விடச் சுமாரான நிலையில் இருந்தாலும், அவள் குடும்பமும் வறுமைக்கோட்டை அண்ணாந்து தான் பார்த்துக் கொண்டிருந்தது. கோடையானதும் அவளுடைய பாடப் புத்தகங்கள் என் வீட்டுக்கு வந்து விடும். என்னிடம் காசு வாங்கவே மாட்டாள். 'இருக்கட்டும் மாமி' என்று அம்மாவும் பெண்ணும் புத்தகத்தைக் கொடுத்து விட்டுப் போய்விடுவார்கள். அதிகம் பேசியது கிடையாது. அவ்வப்போது பார்த்தாலும் ஒதுங்கிப் போய்விடுவோம் என்றாலும், உள்ளுக்குள் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவளும் வகுப்பில் முதல் ரேங்க். நானும். பள்ளிக்கூட இலக்கியப் போட்டிகளில் அவள் முதல் பரிசென்றால் நான் இரண்டாவது; சில சமயம் நிலை மாறி நான் முதல் பரிசு வாங்கினால் முகமெல்லாம் சந்தோஷப்படுவாள். என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் முகத்தில் தோன்றும் முறுவல் எனக்குப் பிடிக்கும். பேச வேண்டிய அவசியமே எனக்குத் தோன்றாது. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் போலிருக்கும்.
முதல் முதலாக அவளுடன் பேசியது சம்ஸ்க்ருத வகுப்பில். அம்மாவின் தொல்லை தாளாமல் நானும் என் தம்பியும் வாரத்தில் மூன்று நாள் போவோம். தொடர்ந்து ஆறு வாரம் போனால் ஒரு ரூபாய் கொடுப்பார்கள்; அதற்காகவும். என் தம்பி ஒரு வயது இளையவன் என்றாலும், எல்லா விதங்களிலும் என்னை விட மூத்தவன் என்று சொல்லலாம். அப்போதே சிகரெட் பிடிப்பான். சிக்கன் சாப்பிடுவான். சர்வோதயா பள்ளியின் ஐந்தாம் வகுப்புப் பெண்களை மரத்தடியில் பம்பரம் விளையாடக் கற்றுத் தருகிறேன் என்று அழைத்துக் கொண்டு வந்து தகாத காரியம் செய்வான். என்னுடைய அக்காவின் தோழிகள் கூட அவனைப் பார்த்துப் பேச வருவார்கள். 'நீ எதுக்கும் லாயக்கில்லைடா' என்று என்னைக் கிண்டல் செய்தபடி என்னுடைய சைக்கிள், க்ரிகெட் மட்டை என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போவான். தானமாகக் கிடைத்த, என் அம்மாவின் டிவிஎஸ்-50க்கு ஸ்பார்க் ப்ளக் மாற்றுவான். அந்த சாக்கில் பக்கத்து தெரு வரைக்கும் ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிக் கண்ணன் கடை பக்கம் ஒதுங்குவான். கண்ணன் கடைக்குப் பக்கத்திலிருந்த வண்ணான் கடையில் என் தம்பியை இசகு பிசகான நிலையில் பார்த்திருக்கிறேன்.
ஸ்ரீமதிக்கு வருகிறேன். சம்ஸ்க்ருத இலக்கண வாத்தியார் லட்சுமி நரசிம்மன் கராறான பேர்வழி. "இஷ்டம் இல்லைனா என்னோட க்ளாசுக்கு வராதேள்" என்று முதலிலேயே சொல்லிவிடுவார். தினம் கேள்வி கேட்பார். அன்றைக்கு நான் மாட்டிக் கொண்டேன். நன்றாக நினைவிருக்கிறது. "ப்ரதம புருஷ த்வீ வசன ஸ்தஹவுக்கும் மத்யம புருஷ த்வீ வசன ஸ்தஹவுக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டுவிட்டு, என் பதிலை எதிர்பார்த்தபடி கரும்பலகை பக்கம் திரும்பினார். கேள்வி புரிந்தால் தானே பதிலைச் சொல்ல? என் தம்பி சட்டென்று "ஒண்ணு ஓஸ்தஹ, இன்னொண்ணு ஒம்மாலஸ்தஹ" என்றான். ஐந்து நிமிடத்துக்கு வகுப்பில் ரகளை. ல.நவுக்குக் கோபம் குடுமிக்கேறி விட்டது. நான் சொன்னதாக நினைத்து என்னைக் கன்னா பின்னாவென்று திட்டத் தொடங்கினார். என் தம்பியை என்னால் விட்டுக் கொடுக்க முடியாததால் அமைதியாக இருந்தேன். "ஏண்டா அப்படி சொன்னே? கசுமாலம், தரித்ரம்" என்று என்னை அடிக்க வந்து விட்டார். ஸ்ரீமதி அவரைத் தடுத்து நிறுத்தினாள். "அவன் தம்பியாக்கும் சொன்னது" என்று உண்மையைச் சொல்லி விட்டாள். "மேலே கை வச்சே, பட்டா எகிறிக்கும்" என்று என் தம்பி சர்வ சாதாரணமாக எழுந்து நின்றதும் ல.ந கொஞ்சம் நிதானமானார். என் தம்பியை ஒரு வாரம் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொன்னதை அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. உடனே வெளியே போனான்.
வகுப்பு முடிந்ததும் ஸ்ரீமதிக்கு நன்றி சொன்னேன். அவள் பதில் சொல்வதற்குள் என் தம்பி வந்து விட்டான். "ஏ லொட்டை, என்ன கோள் மூட்டறே? சும்மா இருக்க முடியலியா?" என்றான் ஸ்ரீமதியிடம்.
"நீ பண்ணின காரியத்துக்கு உங்க அண்ணன் மாட்டிக்கறது உனக்கே நல்லா இருக்கா?" என்று பதிலுக்கு அவனைத் தட்டிக் கேட்டவள், "நீ ஏன் இப்படி பணிஞ்சு போறே? நீ தப்பு பண்ணலேன்னு தைரியமா சொல்ல வேண்டாமா?" என்று என்னைக் கடிந்தாள்.
"இருந்தாலும் என் தம்பி தானே? அவனைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டாம்" என்றேன்.
"போனா போகுது; அவ சொல்றதும் சரிதான். நானே எழுந்திருச்சு நின்னுருக்கணும்" என்று என் தம்பி சொல்லவும் அன்றைய சிக்கல் தீர்ந்தது.
அதற்குப் பிறகு ஸ்ரீமதியும் நானும் அவ்வப்போது பேசிக் கொண்டோம். பத்தாவது படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன். பள்ளிக்கூடத்தில் மதிய வேளைப் பட்டிமன்றத்தின் போது ஒரு முறை வேண்டுமென்றே என் மீது இடித்து, என்னைத் தொட விட்டாள். "அங்கே எல்லாம் படறதா?" என்று அவள் சொன்னது, "சரியா படக்கூடாதா?" என்பது போல் தொனித்தது. தீபாவளி ரிலீஸ் படம் குடும்பத்தோடு வெற்றி தியேடரில் பார்த்த போது, என் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். பாடாவதிப் படத்தில் சிவாஜி மஞ்சுளாவைத் தொடும் போதெல்லாம் என் கைகளை அழுத்தினாள். அந்த வருடம் அவளை நினைத்து எத்தனையோ இரவுகளை அறிந்தும் அறியாமலும் ஈரப்படுத்தியிருக்கிறேன். என் தம்பி என்னைக் கிண்டல் செய்திருக்கிறான். "என்னடா வடகலைப் பொண்ணை மனசுக்குள்ள டாவடிக்கிறியா?" என்று கேட்டுவிட்டு என்னுடைய அரை நிஜாரை எடுத்துக் காட்டுவான். மானம் போகும்.
அடுத்த வருடம் ஸ்ரீமதி காலேஜ் போய்விட்டாள். நான் இன்னும் பள்ளிக்கூடத்திலிருந்ததால் அவளை முன் போல் பார்க்க முடியவில்லை என்றாலும், சம்ஸ்க்ருத வகுப்பில் சந்திப்போம். என் வீட்டுக்கு வரும் பொழுது பேசுவோம். ஆனால் எங்களிடையே முன்பிருந்த மானசீக நெருக்கம் குறைந்து கொண்டிருந்தது.
ப்ளஸ் டூ ஸ்டடி ஹாலிடேஸ் என்று பத்து நாள் விடுமுறை. அக்காவும் அம்மாவும் ஒரு டிகெட்டில் ரெண்டு படம் பார்க்கப் போயிருந்தார்கள். வருவதற்கு இரவு பத்து மணியாவது ஆகும். வீட்டில் நானும் என் தம்பியும் தான் இருந்தோம். தம்பி அவனுடைய பொறுக்கி நண்பர்களோடு வேப்பமரத்தடியில் காசு வைத்து பேந்தா ஆடிக்கொண்டிருந்தான். நான் தேர்வுக்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்த பொழுது ஸ்ரீமதி திடீரென்று கதவைத் தள்ளிக்கொண்டு பதட்டத்துடன் உள்ளே வந்தாள். "உங்கிட்ட முக்கியமா பேசணும்" என்றாள். கேள்விக்குறியுடன் பார்த்த பொழுது, "நான் வீட்டை விட்டு ஓடப்போறேன், எங்கூட வந்துடறியா?" என்றாள்.
அதிர்ச்சியில் வாயடைத்துப் போனேன்.
"எங்கப்பா என்னைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு வற்புறுத்தறார். என் அத்தை பையனைக் கல்யாணம் செஞ்சுக்க சொல்றார். வீட்டுல வசதி குறைஞ்சுட்டே வரதால இந்தக் கல்யாண வரன் போச்சுன்னா வேறே கிடைக்காதுனு அம்மாவும் என்னைக் கட்டாயப்படுத்துறா" என்றாள்.
"அ.. நீ.." என்று புதிதாகச் சுரம் பாடினேனே தவிர என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"என் அத்தை வரதட்சணை எதுவும் வாங்காம செஞ்சுக்கறதா சொன்னாராம். அவங்க பையனை எனக்குப் பிடிக்காது. அப்படியே இருந்தாலும் எனக்குப் படிக்க ஆசை" என்றாள்.
நான் இன்னும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேனே தவிர, எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இரண்டு நாளில் ப்ள்ஸ் டூ தேர்வு என்பது தான் என் மனதில் நிறைந்திருந்தது. "உன்னை ரொம்ப நம்பறேன்; நானே உன்னை வச்சுக் காப்பாத்தறேன். எங்கூட வா, ஓடிடலாம்" என்றாள்.
"ஸ்ரீமதி.." என்று நான் இழுக்கத் தொடங்கவும் என் தம்பி உள்ளே வரவும் சரியாக இருந்தது. "எல்லாம் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன். இவனை நம்பி ஓடறேன்றியே? உனக்கு என்ன பைத்தியமா?" என்றான் ஸ்ரீமதியிடம். "அதுமில்லாமே உன் படிப்பு என்னாறது? நல்லா படிக்கிற பொண்ணு வேறே. நான் வேணும்னா உன் கூட ஓடி வந்துருவேன், ஆனா ஒத்து வராதேனு பாக்குறேன்" என்றான். "ஆமா, எதுக்கு ஓடிப் போற தீர்மானத்துக்கு வந்தே? பிடிக்கலேனு சொல்லிட வேண்டியது தானே? நான் வேணும்னா உங்க அத்தை பையனை ரெண்டு தட்டு தட்டவா? அதுக்கெல்லாம் செட் இருக்கு".
திடீரென்று அழத் தொடங்கினாள் ஸ்ரீமதி. சிறிது நேரத்தில் நிதானமடைந்து, "விஷயம் ரொம்ப சீரியஸ்" என்றாள். "எங்கப்பா எங்க அத்தை வீட்டுக்காரர் கிட்டே நிறைய கடன் வாங்கியிருக்காரு. அதுமில்லாம்... அதுமில்லாம..." என்று தயங்கினாள். நாங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம். எனக்கோ என் அம்மாவும் அக்காவும் உடனே வரமாட்டார்களா என்றிருந்தது. "என்ன சொல்லு... நிதானமா சொல்லு.. பாத்துக்கலாம்" என்று தம்பி தூபம் போட்டுக் கொண்டிருந்தான்.
"அதுமில்லாம... எங்க அத்திம்பேர் ஒரு மாதிரி. அப்பப்போ அசிங்கமா பேசுவாரு. ரொம்பக் கீழ்த்தரமா நடந்துக்குவாரு. சில சமயம் என்னைக் கட்டிப் பிடிச்சுப்பாரு. ஒரு நா எங்க வீட்டுல நான் குளிச்சுட்டிருந்தப்ப பாத்ரூம் கதவைத் திறந்து உள்ளே வந்துட்டாரு. என் மாரைத் தொட்டு..ரொம்ப கேவலமா இருக்கு சொல்றதுக்கு.. அதனால.. அவங்க பையனை நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் நரகம் தான்" என்றாள்.
"பொறம்போக்கு.. லவடா.." என்று தொடங்கிய என் தம்பி திட்டித் தீர்க்க ஒரு நிமிடமானது. "போலீஸ்ல சொல்லேன்?" என்றான்.
"யாருக்கு என்ன லாபம்? என் பேர் தான் கெடும். என் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா தனியா ஓடிப்போக மனசு வரலே. நீ வா. நம்ம ரெண்டு பேருக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்" என்று என் கையைப் பிடித்தாள்.
சரேலென்று அவள் கையை உதறினேன். அவளுக்கு உதவ வேண்டும் என்றோ ஏமாற்ற வேண்டும் என்றோ எந்த எண்ணமும் இருந்ததாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் ஓட வேண்டுமென்று தோன்றியது. அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடினேன்.
திரும்பி வந்த போது வீட்டில் யாருமில்லை. இன்னும் சினிமா முடிய ஒரு மணி நேரமாவது ஆகும். நடுங்கிக் கொண்டிருந்த உடலையும் மனதையும் சீர்ப்படுத்தி, மறுபடி கணக்குப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். அரை மணி பொறுத்து என் தம்பி திரும்பினான். அவன் கையில் கத்தி இருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். ரத்தக் கறை தெரிந்தக் கத்தியை அவசரமாகக் கழுவப் போனதைக் கவனித்தேன். "என்னடா?" என்றேன்.
என்னைப் பார்த்த பார்வையில் ஆத்திரமும் அவமானமும் கலந்திருந்தது. "நீயெல்லாம் ஆம்பிளையாடா? ..த்தா உன்னை என் அண்ணன்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்குடா. ஒம்போது.. பாடு.." என்று வரிசையாக வசைந்தான். "போய் படிரா முண்டம்.. அவளைப் பத்திக் கவலைப்படாதே.." என்று கத்தியைக் கழுவித் துடைத்தான்.
"என்னடா செஞ்சே?" என்றேன்.
"உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லே" என்றவன், "இதைப் பத்தி எவங்கிட்டயாவது மூச்சு விட்டே, அண்ணன்னு கூடப் பாக்க மாட்டேன்.." என்று கத்தியை என் முன் ஆட்டிவிட்டு சமையலறை அலமாரியில் வைத்தான். வெளியேறினான். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ரத்தக்கறைக் கத்தியும், ஸ்ரீமதியின் மறைவும் என்னை மிகவும் பாதித்தன. அவளுக்கு என்ன ஆகியிருக்கும்? இவன் ஏன் கத்தியுடன்..? ஸ்ரீமதி அத்திம்பேரைக் கொன்று விட்டானா? படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. புத்தக மூட்டையையும் கொஞ்சம் துணியும் எடுத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தேன். பம்மலில் மாமா வீட்டுக்குப் போனவன், தேர்வு வரை குரோம்பேட்டை திரும்பவில்லை.
அன்றைக்குப் பிறகு என் தம்பி அதைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாகவே என்னிடம் அதிகம் பேசுவதில்லை. அன்றைக்குப் பிறகு ஸ்ரீமதியையும் பார்க்கவில்லை. தேர்வு முடிந்த மறுவாரமே பம்மலுக்குக் குடியேறி விட்டதால் எல்லாம் நாளடைவில் மறந்து விட்டது.
மதியம் காபி இடைவேளையின் போது சந்தித்தோம். இந்திய ஏலக்காய் மசாலா டீ வாங்கிக்கொண்டு எதிரெதிரே உட்கார்ந்தோம். அவசரப்பட்டு முதலில் உட்கார்ந்து விட்டவன், உடனே எழுந்து அவளுக்காகக் காத்திருந்தேன். "உனக்குக் கண்டிப்பா க்ரேன்ட் கிடைக்கும்" என்றேன். "காளிதாசன் நல்ல ப்ராஜக்டா இருக்கும் போலிருக்கே?"
"தேங்க்ஸ். நீ கமிட்டில இருக்கே? உன் தயவு தான்" என்றாள்.
"அதெல்லாம் இல்லை. என்னுடையது ஒரு ஓட்டு தான்; இன்னும் ஏழு பேர் இருக்காங்களே?" என்றேன். அவளுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லையென்றால் என் மேல் பழி போடக் கூடாதே என்று நினைத்தவன், சலித்துக் கொண்டேன்.
"பயப்படாதே. கிடைக்காட்டா போகுது" என்றாள், என்னைப் புரிந்தவள் போல். எனக்குள் குற்ற உணர்வு தோன்ற நெளிந்தேன். "எப்படி இருக்கே? எத்தனை வருசமாச்சு பாத்து?" என்று பேச்சை மாற்றினேன்.
"குரோம்பேட்டையில எழுவத்தொன்பது மார்ச்சுல பாத்தது" என்றாள். தேதி கூட நினைவு வைத்திருப்பாள் போலிருந்தது. "நீ எப்படி இருக்கே? பெண்டாட்டி பிள்ளைங்க...?" என்றாள்.
"பெண்டாட்டி நர்சு. ஒரு பையன். இப்பத்தான் காலேஜ் முடிச்சு மரீன் கோர்ல சேந்திருக்கான். நீ எப்படி இருக்கே? கல்யாணம்னு சொன்னியே.. " என்றவன், அவளை நேராகப் பார்க்க முடியாமல் தவித்தேன்.
"அதெல்லாம் பழைய கதை. இப்ப எதுக்கு?" என்று சர்வ சாதாரணமாக என்னை நிலைக்குக் கொண்டு வந்தாள். "அன்னய கதை அன்னைக்கோட ஓவர். இப்போ டில்லி யூனிவர்சிடிலே ப்ரொபசரா இருக்கேன். கல்யாணம் ஆகலை" என்றாள்.
"ஏன்?" என் கேள்வி என்னையே உறுத்தியது. ஒரு வேளை அவளுடன் ஓடியிருக்கலாமோ?
"விசயம் தெரிஞ்சு என்னை யாரு கல்யாணம் செஞ்சுப்பாங்க? ஒரு விதத்துல நல்லதா போச்சு. உன் தம்பிக்கு நான் என்னிக்கும் கடன் பட்டிருக்கேன்.." என்றாள்.
"நீ என்ன சொல்றே?"
"உனக்குத் தெரியாதாக்கும்.." என்று என்னைப் பார்த்தவளின் முகத்தில் இருந்த கிண்டல், கேள்விக்குறியாக மாறி திகைப்பில் நின்றது. "யு மீன்...?"
அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியவில்லை. "என்னை மன்னிச்சுடு ஸ்ரீமதி... அன்னிக்கு ஏன் அப்படி நடந்துகிட்டேன்னு நிறைய நாள் நெனச்சு வருத்தப்பட்டிருக்கேன். உண்மையிலேயே உனக்கு என்ன ஆச்சுனு தெரியாது. என் தம்பிக்கும் எனக்கும் அன்னிக்கு ராத்திரிக்கப்புறம் பேச்சு வார்த்தையே ரொம்ப கம்மி" என்று தடுமாறினேன். ஓடிப்போய் திரும்பி வந்ததையும் ரத்தக் கத்தியையும் தம்பியின் எச்சரிக்கையையும் சொல்லி விட்டு அடங்கினேன்.
சில அமைதியான நிமிடங்களுக்குப் பிறகுக் கஷ்டப்பட்டு எழுந்தாள். "நான் உன்னை நம்பினதுக்கு நீ என்ன பண்ணுவே?" என்றாள். மறுபடியும் முறுவல். "இப்ப விவரம் தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப் போறே? தெரியாமலே இருக்கட்டும். நாம இனிச் சந்திக்க வேண்டாம், நான் வரேன்"
"ஸ்ரீமதி, நில்லு. நானும் வரேன்" என்றேனே தவிர, எழுந்திருக்கவில்லை.
நாலடி சென்றவள் திரும்பி வந்தாள். "கத்தியால குத்தணும்னு நான் தான் சொல்லிக் கொடுத்தேன். உன் தம்பி பேர்ல தப்பில்லே. உண்மையைச் சொல்லணும்னா..எனக்கு விடிவே அவனால தான்" என்று விலகி நடந்தாள். நொண்டுவது தெரியாதபடி சிரமப்பட்டு நடந்தாள். எனக்கென்னவோ புரிந்தது போலிருந்தது.
kurompettai........sankrit..kadhaila yevvalavu nijam?
பதிலளிநீக்குthambi matter...ippudi paththa vechchittiye paratta...
எளிய நடை. யதார்த்தமான கதை. 'வைகறை' சிலரது வாழ்கையில் புலப்படுவதில்லை.
பதிலளிநீக்குவாசகனின் யூகத்துக்கு சில விசயங்களைவிட்டுவிட வேண்டும் என்பார்கள்.எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடாது.ஆனால் எல்லாவற்றையுமே யூகத்துக்கு விட்டுவிடக் கூடாது என்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன்.பிறகு கதை எழுதிவிட்டு கதையைவிட நீளமாக விளக்கம் கொடுக்கவேண்டி வரும்.எனக்கு அது போல் நிகழ்ந்திருக்கிறது.
பதிலளிநீக்குகதையின் அடுத்த (இறுதி?) பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு//எனக்கென்னவோ புரிந்தது போலிருந்தது.//
பதிலளிநீக்குஅந்த என்னவோ புரிஞ்சததான் என்னன்னு எழுதி இருக்க கூடாதா? போகன் அவர்கள் சொன்ன கருத்து சரிதான். இதை கொஞ்சம் எங்கள் யூகத்தில் விடாமல் சொல்லிவிடுங்களேன்.
>>kggouthaman கூறியது...
பதிலளிநீக்குகதையின் அடுத்த (இறுதி?) பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நானும் தான் kgg :)
கதை அருமை. கதை என்பதை விட நடை. சமஸ்க்ரித வாத்யார் வகுப்பு வர்ணனைகள், (கேட்ட கேள்வியும் தம்பியின் பதிலும் சரியாய்ப் புரியவில்லை...சொன்னால் 'எனக்கும்தான்' என்பார் துரை..!), தம்பி பற்றிய வர்ணனைகள், ஸ்ரீமதியின் அழுகைப் பிரச்னையில் வெளிப்படும் சுருக்கமான வார்த்தைகள்...
பதிலளிநீக்குஅதெல்லாம் சரி, ஸ்ரீமதியை அந்த நிகழ்ச்சியில் அத்தனை வருடம் கழித்துப் பார்த்ததும் அடையாளம் தெரிந்து விட்டதா? குறைந்த பட்சம் நடுவில் ஒருமுறை ஜெர்மன் ஏர்போர்ட்டிலாவது பார்த்திருக்க வேண்டாமோ..?! அதென்ன பாலச்சந்தர் டைப் முத்தாய்ப்பு...அவள் இன்னும் திருமணமாகாமல் டெல்லியில் வேலை... எதற்கு?!!
வாங்க ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகேட்ட கேள்வி அப்பவே சரியாப் புரியலிங்க... சம்ஸ்க்ருதம் கொஞ்சம் கஸ்டப்படுங்க எனக்கு. இப்ப இன்னும் கஸ்ஸ்டப்படுது. ஏதோ ஞாபகத்துலந்து எழுதினது.. தன்னிலை முன்னிலை படர்க்கையின் ஒருமை பன்மையை ஒட்டிய கேள்வி. முன்னிலை (மத்யம) படர்க்கை (ப்ரதம) - ஒரு வேளை தன்னிலையாகக் கூட இருக்கலாம் - இரண்டுக்குமான பன்மைக்கு 'ஸ்தஹ'னு வரும்; உச்சரிக்கிறது ஒண்ணே தான் ஆனாலும் எழுதுற 'த' வேறே. சமஸ்க்ருதத்துல ரெண்டு பேர் பன்மை, பல பேர் பன்மைனு வேறே இருக்கு - இது ரெண்டு பேர் பன்மையை ஒட்டிய கேள்வி. அதைப் போட்டு நாய் படாத பாடு படுத்தியிருக்கிறார் குடுமி. அதனால இது மட்டும் தான் ஞாபகம் இருக்கு. வேறே ஒண்ணும் கேக்காதீங்க சாமி; ஏதோ ஒரு ரூபாய் கொடுத்த - ஸ்ரீமதியும் வந்த (கதைல கதைல) - காரணத்துக்காக படிக்கப் போனதுங்க. மத்தபடி தமிலே தக்றாரு.
அடையாளம் தெரியாதா? என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? பழகின விதத்துல பழகினா எலும்பைக் கூட அடையாளம் கண்டுபிடிக்கலாமே? துடித்து துடித்து சேர்ந்த பின்னேனு பாடலியா? (அப்படீன்னு கதைல வர்ற தன்னிலைக்காரர் சொல்றாருங்க). வாயைக் கிளற்ற்றீங்க ஸ்ரீராம்.
ஆமா.. நீங்களும் meenakshiயும் சேந்து எதுனா காமெடி பண்றீங்களா? 'கதை அருமை'னு ஒரு வரில சொல்லிட்டு அடுத்த வரில 'ஆனா புரிஞ்சா பரவாயில்லை'னு அவங்கள மாதிரியே நக்கலடிக்கிறீங்களே?
சுஜாதா சார், புஷ்பா தங்கதுரை சார் சேர்ந்து கதை எழுதின மாதிரி ஸ்டைல்.
பதிலளிநீக்குகதை புரியவில்லைன்னு சொல்லமாட்டேன்.எப்படிப் புரிந்துகொண்டேன் என்பது கேள்விக்குறி:)
எழுத்து நடை வெகு அழகு. மைலாப்பூரைத் தாண்டாதவளுக்குக் குரோம்பேட்டில் இதெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது:)
ஆனால் மனுஷா எங்க இருந்தால் என்ன. வக்கிரம் எந்த அத்திம்பேர் ரூபத்திலியும், வரக் காத்திருக்கும்னு நினைக்கிறேன். வறுமை கொடிது.
அதானே..ஒரு வோட்டாவது கிடைக்காதானு பாத்தேன். பொறுமையா படிச்சதுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி வல்லிசிம்ஹன்.
பதிலளிநீக்கு'வறுமை கொடிது'னு நீங்க சொன்னதை வச்சு சரியாத்தான் புரிஞ்சிட்டிருக்கீங்கனு சொல்வேன். (என்ன பண்ண? ஒருத்தருக்கும் புரியக்கூடாதுனு எழுதும்போதும் சில சமயம் ஒண்ணு ரெண்டு பேருக்கு புரிஞ்சு போயிடும் போங்க!)
கொடிது..கொடிது
பதிலளிநீக்குவறுமை கொடிது..
அதனினும் கொடிது
இளமையில் வறுமை..
அதனினும் கொடிது,
பெண்மையில் இளமை..
இளமையில் வறுமையில்..
வறுமையில் இப்படி ஒரு
அத்திம்பேர்!!!