2010/03/12

மெல்லிசை நினைவுகள்    ந்தப் பதிவுக்காகச் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்த போது ஒன்று புரிந்தது. பதிவுக்குத் தேர்வு செய்யும் சாக்கில் பழைய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க முடிகிறதே? சாதாரணமாக ஒரு முறை கேட்டு ரசித்து விட்டு அடுத்த பாட்டுக்குத் தாவுவேன். பதிவுக்காகப் பல முறை எம்எஸ்வியின் மெல்லிசையைக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவுக்கான பாடல்கள் பல கண்ணதாசன் எழுதியவை என்று தெரிந்த போது, அவருடைய கவிதைக்காகவும் ரசித்துக் கேட்டேன். கரும்பு தின்னக் கூலி. பழந்தின்னப் பொன் தட்டு. முத்தமிட மேனகை. ஓகே, ஓகே.

தேர்ந்தெடுத்த பாடல்களில் பல முறை ரசித்த பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. சாதாரண வரிகள், மிகச் சாதாரணப் படப்பிடிப்பு, தேவையில்லாத பாடல் காட்சி. பொருந்தாத நடிப்பு. இவை எல்லாவற்றையும் மறக்கடிக்கும் மெட்டு, இசை, குரல். ஜானகியின் குரலில் கீச்சொலி வெளிப்படாமல் பாடச் செய்தவர் எம்எஸ்வி. இந்தப் பாடலின் பல்லவி 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' இரண்டாவது முறையாக (அனுபல்லவி?) வரும் போது - பாடல் தொடங்கி இருபத்திரண்டு நொடிகள் போல் கடந்து வருகிறது - அந்த இடத்தில் கவனியுங்கள். பேங்கோஸ், டிரம்ஸ், கிடார், பேஸ் கிடார், சேக்சபோன் (என்று நினைக்கிறேன்) கலந்து அசத்தும். இரண்டு நொடிகளுக்கும் குறைவாகத்தான் வருகிறது என்றாலும், கேட்டால் புல்லரிக்கும். ஹெட் செட் அணிந்து கேளுங்கள், இசை நுணுக்கம் புரியும். இந்தப் பாடலின் சிறப்பே இசை தான். கிடார், பியேனோ, குழல், வயலின், நாயனம் (க்ளேரினெட்?) என்று மன்னர் பின்னிவிட்டார்.


'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாட்டை இப்போது தான் ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து கேட்டேன், பார்த்தேன். மிக எளிமையான பாடல். எனினும், 'தாய்க்கு நீ மகனில்லை' மற்றும் 'வஞ்சகன் கண்ணனடா': ஒரு வரிக் காவியங்கள். இந்தப் பாட்டுக்காகப் படத்தை மறுபடி பார்த்தேன். சொல்ல வந்த கருத்தை மறைமுகமாக, ரசிக்கும்படி, ரசித்து ரசித்து வியக்கும்படி எழுத சில கவிஞர்களால் மட்டுமே முடியும். 'தாய்க்கு நீ மகனில்லை' 'வஞ்சகன் கண்ணனடா' வரிகளைக் கொஞ்சம் விரித்துப் பார்த்தால், கண்ணன் வாயுள் தெரிந்த அண்டம் போல கர்ணன் கதையே தெரிகிறது. புறக்கணித்தத் தாய் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மகனின் சோகம், ஏக்கம், ஆதங்கம், வலி எல்லாமே 'தாய்க்கு நீ மகனில்லை' வரியில் வெளிப்படுகிறது. அந்த வலிகளுக்குக் காரணம் தாயுமல்ல, மகனுமல்ல - சதிகாரன் விதிவாணன் என்பதை 'வஞ்சகன் கண்ணன்' வரி வெளிப்படுத்துகிறது. கம்பன் வரி ஒன்று நினைவுக்கு வருகிறது. ராம சகோதரர்கள் கோதாவரி நதியை அடைந்ததும் அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு வியக்கிறார்கள். நதியைக் கம்பன் எவ்வாறு வர்ணிக்கிறார் தெரியுமா? ராமன் பார்வைக்கு 'சான்றோர் உள்ளம் போல்' இருந்ததாம் நதி. நதியின் ஆழத்தையும் பிரம்மாண்டத்தையும் எவ்வளவு அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்! வேறு யாருக்கு வரும் இந்தக் கற்பனை? கவியரசுக்கு வரும். அதன் வெளிப்பாடு தான் 'வஞ்சகன் கண்ணன்' வரி. பாரதக் கதையின் பின்னணியை இரண்டே சொற்களில் செதுக்கி இருக்கிறார். சீர்காழியின் குரல் கம்பீரமென்றால் மன்னர்களின் இசை இதமான மிதம். (ரசித்த இன்னொரு காட்சியில் பாட்டு, இசை, நடிப்பு, படப்பிடிப்பினால் 'மேனியைக் கொல்வாய்' வரியின் அழுத்தம் என்னை மிகவும் பாதித்தது).
ன்னுடைய தனிப்பட்ட 'Top 10' பாடல்களில் ஒன்று 'உலகமெங்கும் ஒரே மொழி'. ஆயிரக்கணக்கில் கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போது போடுங்கள், உட்கார்ந்து கேட்பேன். இந்த மெட்டும் 'அன்று வந்ததும் இதே நிலா' மெட்டும் ஒரே கூட்டில் வடித்த தேன். கூடு இறக்குமதியோ? நீங்களே கேட்டுப் பாருங்கள்.

ன்னும் சில பாடல்களையும் கேட்டு ரசித்தேன். 'உன்னைத் தானே', 'உறவு என்றொரு சொல் இருந்தால்', 'உன் விழியும் என் வாளும்', 'உலகம் நீயாடும் சோலை'. மான் விழி, வேல் விழி, வாள் விழி எல்லாம் கேட்டிருக்கிறோம், 'பெண்ணின் விழியோடு வாள் போராடி வெற்றி பெருமா?' என்ற மிகவும் ரசிக்கும்படியான கற்பனைப் போட்டியை முன் வைத்தவர் வாலியா, கண்ணதாசனா தெரியவில்லை. இசையும் மெட்டும் அருமை. 'உலகம் நீயாடும் சோலை' பாடலைக் கேட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். டிவிடி பக்கம் போகவே பயமாக இருக்கிறது. சொல்லிவிட்டேன், அப்புறம் உங்கள் இஷ்டம்.

முன்பே சொன்னது போல் மிகச் சாதாரணமான காட்சியைப் பாடலும் இசையும் வலுப்படுத்த முடியுமென்பதை எம்எஸ்வி பாடல்களை உதாரணம் காட்டிச் சொல்லலாம். 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடலும் ஒரு உதாரணம். பாட்டெழுதியது வாலியா, கண்ணதாசனா? ட்ரம்பெட், மேளம், குழல் (எப்படிப் புகுத்தியிருக்கிறார்!), எஸ்.பி.பியின் குரல் என்று மிதமான டெம்போவில் மெல்லிசை மன்னர் முத்திரை பதித்த பாடல். நிறையக் கேட்டிருக்கிறேன். டிவிடி பக்கம் போகவேண்டாம் என்ற அறிவுரை, எச்சரிக்கை இங்கேயும் பொருந்தும்.


திவுக்காக நான் மிகவும் ரசித்த இன்னொரு பாடல்: 'உத்தரவின்றி உள்ளே வா'. எம்எஸ்வி புகுந்து புறப்படும் பல பாடல்களில் இது ஒன்று. எளிமையான தாளமிட வைக்கும் மெட்டுக்கு எத்தனை விதமான இசைக் கருவிகள்! பல்லவியின் துள்ளும் மேற்கத்திய மெட்டுக்கு 'பூமியில் மானிட' சரணத்தின் மிதமான கர்னாடக மெட்டு, இனிமையான முரண்பாடு. எம்எஸ்வியின் டிரேட்மார்க். பல பாடல்களில் இந்த உத்தியைக் கையாண்டிருக்கிறார். மற்ற இசையமைப்பாளர்கள் அதிகம் பயன்படுத்தாத உத்தி என்று தோன்றுகிறது. ஸ்ரீதரின் படப்பிடிப்புக்கு நூறு மார்க். 'மின்னல் மயக்கம் கொள்ளாதோ?' வரியில் குறும்பு கூடிய ஆழமான கவிதை இருக்கிறது. மின்னலுக்கு மயக்கம் வருமளவுக்கு, வேண்டாம், இதை ராமசுப்ரமணி படித்தாலும் படிப்பார். பாட்டை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ந்தேன், வந்தேன். இதோ பதிவுக்காக நான் தேர்ந்தெடுத்த பாடல். கவிதை, குரல், இசை, நடிப்பு, படப்பிடிப்பு என்று ஒவ்வொரு பரிமாணத்திலும் என்னை ரசிக்க வைத்த பாடல். முழுமையாக ரசிக்க வைத்த பாடல். சிவாஜி கணேசனின் கதாபாத்திரத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சௌகார் ஜானகி ஏசுவார். மறுமொழி சொல்லாமல் அத்தனை ஏச்சையும் பேச்சையும் பெற்றுக் கொண்டு அடக்கி வாசிப்பார் சிவாஜி. பொதுவாக, திரைப்படங்களில் பாடல்களைப் புகுத்துவதற்கான rationale ஒன்றும் கிடையாது. பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு பாடல் என்பதைத் தவிர. இந்தக் காட்சியைப் பொறுத்தவரை பாடல் மிகப் பொருத்தம். பதில் பேச முடியாத சிவாஜி கதாபாத்திரத்துக்குத் தன் எண்ணங்களைக் கொட்ட வடிகால் ஒன்று தேவைப்படுகிறது. அந்த நிலையில் நாமிருந்தால் நமக்கும் அப்படித்தான். இந்தப் பாடல் ஒரு emotional release. சிவாஜி அதை உணர்ந்து நடித்திருக்கிறார். பாடல் வரிகள் சான்றோர் உள்ளம் போலத் தான். தோண்டத் தோண்ட ஆழம். ஆமை, ஊமை எல்லாம் rhymeக்காக எழுதப்பட்டவை என்று நினைத்தேன். படத்தைப் பார்த்ததும் புரிந்தது.

சோகத்தை வேதனையை வெளிப்படுத்தும் காட்சிக்கான பாடல். இதற்கு வீணை சிதார் போட்டு டொய் டொய் என்று சோக இசை சேர்த்திருக்கலாம். மெல்லிசை மன்னர்(கள்) அதைச் செய்யவில்லை. சோகமான pathos மெட்டு. ஆனால் இசையில் நம்பிக்கையும் துள்ளலும் இருக்கிறது. 'நாட்பட நாட்படப் புரியும்' என்ற வரிகளின் நம்பிக்கை தான் பாடலின் வேர். சிவாஜி கேரக்டர் சோகத்தில் தலை மேல் கை வைத்துக்கொண்டு அழும் கேரக்டர் இல்லை - பாசமலர் போல். இந்தப் படத்தின் துவக்கத்தில் போர்க்கைதியாக துன்பம் மேற்கொண்டவர் மற்றவர்களின் சாதாரணக் குற்றச்சாட்டுக்கு அழுது அடம் பிடித்தால் பொருந்தாது. அதற்கு ஏற்றார் போல் காட்சி, பாடல், இசை அமைந்திருப்பதால் மீண்டும் மீண்டும் ரசிக்க முடிகிறது. சினிமா பாடலின் பின்னணியில் இத்தனை நுணுக்கமா என்றால், இதற்கு மேலும் இருக்கிறது என்பேன்.

சிவாஜியின் கேரக்டர் எப்படித் தன் உள்ள வேதனையை வெளிப்படுத்துமோ அதைக் கவிதை வரிகளில் கொண்டு வந்திருக்கிறார் கவியரசு. ஆர்ப்பாட்டமில்லாத இசை, அமைதியான மெட்டு. டிஎம்எஸ் குரலின் தெளிவும் அடக்கி வாசிக்கப்பட்ட கம்பீரமும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இதில் பாருங்கள், பாடலின் முதல் சரணத்தில் சிவாஜி வலது கையையும் இடது தோளையும் மட்டும் நடிக்க வைப்பார். இரண்டாவது சரணத்தில் இடது கையயும் வலது தோளையும் நடிக்க வைப்பார். பாடல் பெரும்பாலும் க்ளோசப்பில் எடுக்கப்பட்டிருக்கிறது. இடுப்புக்கு மேல் தான் காட்சியில் தெரிகிறது என்றாலும் சிவாஜி நொண்டுகிறார் என்பது புரிகிறது. கவனித்துப் பாருங்கள். சிவாஜி அணிந்திருக்கும் கோட், டை கூட நடிப்பது போல் ஒரு பிரமை. சே, இவருக்கு ஏன் மூப்பும் மரணமும்?!

மன்னரின் மெல்லிசைப் புதையலில் இன்னொரு நல்முத்து.

எம்எஸ்வி-4 | 2010/03/12 | உள்ளம் என்பது ஆமை

14 கருத்துகள்:

 1. //சே, இவருக்கு ஏன் மூப்பும் மரணமும்?!//

  You bet, I wish God was little considerate on certain things ?

  பதிலளிநீக்கு
 2. இவருக்கு ஏன் இந்த மூப்பும் மரணமும் என்ற வரிகள் பல துறைகளில் பல பேருக்கு பொருந்தக் கூடிய வரிகள். இந்தக் கால நடிகர்களை (மட்டும்) ரசிக்கும் அவனிடம் சிவாஜியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். சிவாஜியைப் பற்றி, பாடல்களைப் பற்றிப் பேச ஒரு பதிவு போதாதுதான். நமது பாடல் ரசனை என்பது நம் மனதின் நினைவுகளோடு ஒத்துப் போகிற பாடல்களைப் பிடிக்கும் என்பதால் நமது ரசனை எல்லோருடனும் ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியமில்லை. ஒத்துப் போகும்போது ஒரு சந்தோஷம். புல்லாங்குழல் பற்றி சொல்லும்போது எனக்கு R D பர்மன் நினைவும் வந்தது.

  பதிலளிநீக்கு
 3. என்னுடைய கணினிக் கோளாறோ என்று சோதனைகள் செய்து வந்து மறுபடி கேட்டேன். ஏனோ ஒரு பாடலும் காதில் விழவில்லை. சிவாஜியும் மெளனமாக நடக்கிறார்.

  பதிலளிநீக்கு
 4. 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்....' எம்.எஸ்.வீ இசையில், ஜானகியின் அற்புதமான பாடலில் ஒன்று. ஓராயிரம் முறை உருகி, உருகி கேட்டிருக்கேன், கேட்டுக் கொண்டும் இருக்கேன். இந்த பாடலில் 'வெள்ளம் செல்லும் வேகம்' இந்த சரணம் தொடங்குவதற்கு முன் வரும் புல்லாங்குழல், இனிமையின் எல்லை என்றே சொல்லுவேன். இதே போன்ற மற்றொரு இனிமையான பாடல்தான் 'காற்றுக்கென்ன வேலி.....'
  சிவாஜி நடித்த படங்களில் நான் மிக மிக ரசித்து பார்க்கும் படங்களில் ஒன்று 'பார்த்தால் பசி தீரும்'. இந்த படத்தை எத்தனையோ முறை பாத்திருக்கேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த பாடலில், 'உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை...' இந்த வரி என் மனதை தொட்ட வரி. வாழ்க்கை என்பதே, நாம பாக்கற கண்ணோட்டத்துலதான் இருக்குங்கறத கண்ணதாசன் எவ்வளவு எளிமையா, அழகா சொல்லிட்டார்.

  //இந்த மெட்டும் 'அன்று வந்ததும் இதே நிலா' மெட்டும் ஒரே கூட்டில் வடித்த தேன். கூடு இறக்குமதியோ? நீங்களே கேட்டுப் பாருங்கள்.//
  எனக்கென்னவோ தற்செயலா இந்த இரண்டு பாடலும் ஒரே மாதிரி இருந்திருக்கும்னு தோன்றது. Good! சரியா தேடி பிடிச்சு போட்டிருக்கீங்க.
  எம்.எஸ்.வீ, இவருக்கு இசை தவிர வேற ஒண்ணுமே தெரியாதுன்னு பலர் சொல்லி கேட்டிருக்கேன். 'சிந்து நதியின்...' இந்த பாரதியார் பாட்டுக்கு மெட்டு போடும் போது, இந்த பாட்டை எழுதினவர கொஞ்சம் கூப்பிடுங்க, இந்த வார்த்தைய கொஞ்சம் மெட்டுக்கு ஏத்த மாதிரி மாத்தணும்னு சொன்னாராம்.

  இந்த பதிவுக்காக நீங்க தேர்வு செய்திருக்கும் எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள்தான். நன்றி! ஆனா, எல்லா பாடல்களையும் முழுசா ஒலிபரப்பியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 5. //பல்லவியின் துள்ளும் மேற்கத்திய மெட்டுக்கு 'பூமியில் மானிட' சரணத்தின் மிதமான கர்னாடக மெட்டு//

  "டி.எம்.எஸ்." அமோகமாக பாடி இருப்பார். எனக்கு பிடித்த அருமையான பாடல் இது. நீங்கள் சொன்னது போல் மேற்கத்திய / கர்னாடக மெட்டின் அழகான சங்கமம்.

  "டி.எம்.எஸ்" அவர்களின் "87" பிறந்தநாள் இந்த மார்ச் இருபத்து மூன்றாம் தேதி. என் இரு தம்பிகளின் பிறந்த நாளும் அன்றே. இனி அவர்களின் பிறந்த நாளை மறக்கமாட்டேன் நான் !!!!.

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீராம், கணினி ஸ்பீக்கர் muteல் இருக்கா என்று பாருங்கள்? நீங்கள் உபயோகிப்பது internet explorerஆ? IEல் உருப்படியான சமாசாரங்கள் எல்லாம் தகராறு என்று சொல்லிக் கேள்வி. மாற்றிப் பாருங்க. இல்லாவிட்டால்.. ஓகே, இதெல்லாம் தெரிஞ்ச பாட்டு தானே?

  பதிலளிநீக்கு
 7. சினிமாப் பாட்டுக்களை ஆராய்கிற போது இத்தனை புதுத் தகவல்களா! இசைக் கருவிகளின் நுணுக்கங்கள், ராமாயணம், கம்பர், மஹாபாரதம்.... மறுபடியும் நீங்கள் அடேங்கப்பா துரை என்று நிரூபித்து விட்டீர்கள்!

  நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பாடல்களில் பல எனக்கும் அபிமானப் பாடல்கள்.

  உத்தரவின்றி உள்ளே வா பாடல் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதில் வரும் ‘காதல், காதல் என்று பேச பாடல்தான் நானறிந்த வரை தமிழ் சினிமாவின் முதல் ‘தர்மவதி’. ரொம்பப் பாப்புலர் தர்மவதி – ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’

  என்னுடைய சொற்ப இசை ஞானத்திலிருந்து ஒரு சின்ன தகவல்,

  அனு பல்லவி என்பது அடிக்கடி ரிப்பீட் ஆகும் பல்லவி அல்லாத வரி. ரொம்ப யோசிக்காமல் சொல்வதென்றால்,

  நாதமா... கீதமா... (ஒரு நாள் போதுமா)
  வீரமுண்டு வெற்றியுண்டு (தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை)

  இன்னும் கொஞ்சம் யோசித்தால் நிறைய கிடைக்கும்.


  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 8. //இந்தப் பாடலின் பல்லவி 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' இரண்டாவது முறையாக (அனுபல்லவி?) வரும் போது//
  ஒரு பாடலின் பல்லவி, அந்த பாடலில் எத்தனை முறை திரும்ப வந்தாலும் அது பல்லவிதான், அனுபல்லவி இல்லை. அனுபல்லவி என்பது, ஒரு பாடலில், பல்லவியை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக வருவது. அதை தொடருவது சரணம். இந்த சரணமானது ஒன்றுக்கு மேற்பட்டு இருக்கலாம். ஒரு சில பாடல்களில், பல்லவியை தொடர்ந்து சரணங்கள் மட்டுமே இருக்கும். அனுபல்லவி எல்லா பாடல்களிலும் இருந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

  இந்த பாடலில் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.....' இது பல்லவி.
  'காற்றில் ஆடும் மாலை.....' இது முதல் சரணம், 'வெள்ளம் செல்லும் வேகம்....' இது இரண்டாவது சரணம், 'ஊடல் கொண்ட பெண்மை...' இது மூன்றாவது சரணம். இந்த பாடலில் அனுபல்லைவி இல்லை.

  பதிலளிநீக்கு
 9. //இந்தப் பாடலின் சிறப்பே இசை தான். கிடார், பியேனோ, குழல், வயலின், நாயனம் (க்ளேரினெட்?) என்று மன்னர் பின்னிவிட்டார்.//
  இது நாயனம் இல்லை ஷெனாய். இந்த பாடலின் பின்னணி இசையில் மங்கள இசையாக நாதஸ்வரத்துக்கு பதிலாக ஷெனாய் இசைதிருப்பதுதான் இந்த பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்திருக்கிறது. எல்லாம் எம்.எஸ்.வீயின் இசைவண்ணம்தான்.

  பதிலளிநீக்கு
 10. கம்பன் வரிகள் இங்கே அய்யர் வீட்டுக் கல்யாணத்தில் அயிரை மீன் குழம்பு அளவுக்கு பொருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. //'உள்ளத்தில் நல்ல உள்ளம்' சீர்காழியின் குரல் கம்பீரமென்றால்//

  இந்த பாட்டில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தேரின் சக்கரத்தில் சாய்ந்து அர்ஜுனன் விட்ட அம்பை எடுத்து விட்டு உருமுவதையும் (முனகுவதையும்) பாட்டில் சேர்த்து இருந்தது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  சில பாடல்கள் சிலர் பாடினால் தான் நன்றாக இருக்கும் என்பதில் இந்த பாடலும் பொருந்தும். சீர்காழியின் குரல் அப்படி உருக வைக்கும் இந்த பாட்டில்.

  அதேபோல். வரிகளில் "செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சந்தில் வீழ்ந்தையாட கர்ணா" - wow கவியரசர் இஸ் கிரேட்.

  பதிலளிநீக்கு
 12. அனுபல்லவி விளக்கமும் உதாரணமும் கொடுத்த ஜவஹர்,meenakshi: நன்றி.

  நாயனம் நம்ம ஊரு ஷெஹ்னாய் என்று கேள்விப்பட்டிருக்கேன் - திருத்தத்துக்கு நன்றி meenakshi.

  ஒரு வழியா கண்டுபிடிச்சீங்களா இல்லையா ஸ்ரீராம்?

  பதிலளிநீக்கு
 13. மியூட் எல்லாம் இல்லை. க்ரோம் உபயோகிக்கிறேன். கேட்கவில்லை. பரவாயில்லை. ஏற்கெனவே கேட்ட பாடல்கள்தானே...!

  பதிலளிநீக்கு
 14. ஸ்ரீராம், இதுக்கு முந்தின பதிவுல எல்லாம் ஒலி கேட்டுதா?

  பதிலளிநீக்கு