2010/03/30
மெல்லிசை நினைவுகள்
இந்தப் பதிவுக்கான பாடலை என் வயதுக்காரர்களும், முன் வயதுக்காரர்களும், பல பின் வயதுக்காரர்களும், வருடக்கணக்காக விரும்பிக் கேட்பதை அறிவேன்.
என்னுடைய அபிமான பாடகர்கள் வரிசையில் பிபிஸ்ரீக்கு இடமிருந்தாலும், முன்னணியில் இல்லை. ஜேசுதாசை விட இரண்டு படி மேலே கொடுத்திருக்கிறேனே தவிர, பிபிஸ்ரீ குரலைக் கேட்டால் எனக்குத் தூக்கம் தான் வரும் பெரும்பாலும். ஜேசுதாஸ் குரலைக் கேட்டால் உடனே சோகமும் குறட்டையும் கூடவே வரும் - அது இன்னொரு பதிவில்.
பிபிஸ்ரீ பாடல்களை இசையின் காரணமாக ரசித்துக் கேட்டிருக்கிறேன். பத்து பதினைந்து பாடல்கள் போல் பிபிஸ்ரீ அருமையாகப் பாடியுமிருக்கிறார். அந்தப் பத்துப் பதினைந்தில் இந்தப் பாடல், முதல் மூன்றில் அடங்கும் என்று நினைக்கிறேன். இத்தனை அருமையான இசையிலும் இந்தப் பாடலில் சில இடங்களில் அவர் குரல் என்னைத் தூங்க வைத்திருக்கிறது. தூங்க வைப்பது என்றால் தாலாட்டு அல்ல. காதலியின் கையைப் பிடித்துக் கொண்டு அடுத்த எதிர்பார்ப்பில் அலைந்து கொண்டிருக்கிறீர்கள் - அப்போது தூக்கம் வந்தால் எப்படி? என்ன நான் சொல்வது? பிபிஸ்ரீயின் குரல் அப்படியென்றால், படமாக்கப்பட்ட விதமோ மெத்தை தலையணை போர்வை போட்டு இழுத்து மூடாத குறைதான். எம்ஜிஆருக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாத குரல். அதுவும் குண்டு எம்ஜிஆர். முதலிரவு கனவுப் பாடல் காட்சியை இப்படியா கும்பகர்ண வகைப்படுத்துவார்கள்? பிபிஸ்ரீ எந்தப் பாட்டைப் பாடினாலும் உடனே 'ஹிட்' டாகுமென்று பல பேட்டிகளில் எம்எஸ்வி குறிப்பிட்டிருக்கிறார். எனக்கென்னவோ இந்தப் பாட்டை டிஎம்எஸ் பாடி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பின்னியிருப்பார் மனிதர்.
இந்தப் பாடலைத் தேர்வு செய்ய சில காரணங்களுண்டு. விசுவனாதன்-ராமமூர்த்தியின் இனிமையான துள்ளலிசை நிச்சயமான காரணம். துள்ளலும் கொஞ்சலும் கூடிய சுசீலாவின் குரல் அடுத்தக் காரணம். முக்கியமான காரணம் கண்ணதாசனின் வரிகள்தான். இன்றைக்கும் இந்தப்பாடலை ரசித்துக் கேட்க முடிகிறது, கேட்கிறார்கள் என்றால் கண்ணதாசனின் வரிகள் தான் காரணம் என்று அடிக்காமல் சொல்வேன், அருகில் வாருங்கள்.
காதலர்கள் பொதுப்பார்வையில் இருக்கும் போது கண்களால் தொட்டுக் கொள்கிறார்கள். தனிமையில் கைகளால் தொட்டுக் கொள்கிறார்கள். சாதாரணமான நடப்பைச் சாதாரணமாகச் சொல்கிற பாடல்தான். சில பாடலாசிரியர்கள் இதே கருத்தை, 'கண் ஜன்னல் வழியாக குதித்து கையில் சிறை புகுந்தாய்' என்று எழுதுவார்கள். சிலர் 'கண் பார்வையின் வியர்வை அதைக் கையால் துடைக்கும் தயவை..' என்று ஏதாவது எழுதுவார்கள். கண்ணதாசனுக்கு ஈடு இணை உண்டோ? கண்ணதாசன் சொல்லியிருக்கும் விதத்தில் புதுமையும் இலக்கியமும் கலந்திருக்கிறது. 'கண் வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன்' என்று எழுதியிருக்கிறார். அதை காலங்காலமாகத் தொடர்ந்து ரசிக்கும்படி இசையும் அமைத்திருக்கிறார்கள் விசுவனாதன்-ராமமூர்த்தி. பாடல் முழுவதும் தபலாவை குமுக்குகிறார்கள் (தபலா என்று தான் நினைக்கிறேன், அது தபலா கிடையாது தஷ்லா என்று யாராவது திருத்தாமல் இருக்க வேண்டுமே, கடவுளே!). 'கார் வண்ணக் கூந்தல் தொட்டு' என்ற இடத்தில் உருட்டுகிறார்களே, அந்த ஒலிக்காகவே பாடலைத் திருப்பித் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.
கனவு மென்மையோடு தொடங்கும் பாடல், உடனே சூடு பிடித்து கிடார், வயலின், குழல் என்று இசையுடன் நீரருவி போல் பாய்ந்து பரவி ஓடுகிறது. கடைசி வரை டெம்போ குறையாமல் பிசகாமல் இசை அமைத்திருக்கிறார்கள். சுசீலா கை கொடுத்திருக்கிறார்.
என்ன பாடலென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாடல் வரிகளை வைத்துக் கொஞ்சம் தமிழிலக்கியம் பரிமாற விடுவீர்களா?
கண்ணதாசன் பாடல்களில் கருத்தழகு மட்டுமல்ல, சொல்லழகையும் நிறைய கண்டிருக்கிறேன். இவருக்கு மட்டும் இத்தனை தமிழருள் கிடைத்திருக்கிறதே என்று சில சமயம் நினைப்பேன். பழைய தமிழ்ப்பாடல்களின் வடிவத்தைத் தன்னுடைய திரைப்பாடல்களில் கண்ணதாசன் பயன்படுத்தியிருப்பதை, நான் வளர வளர உணர்ந்தேன். கண்ணதாசன் திருப்பிப்போட்ட தமிழ்ப்பாக்களை வைத்து ஒரு பெரிய புத்தகம் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.
இந்த 'வண்ணம்' கருத்தை முதலில் எழுதியவர் கவியரசரில்லை; கவிச்சக்கரவர்த்தி. தன்னுடைய ராமாயணக்கதையில் இப்படி எழுதுகிறார் கம்பர்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில்
மழைவண்ணத் தண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததும் வரும் பாடல். ராமன் தொட்டால் விமோசனமாம். கை பட்டு ஒருத்திக்கு விமோசனம், கால் பட்டு இன்னொருத்திக்கு விமோசனம். இவ்வளவு தான் செய்தி. 'கருவண்ணத் தாடகையுடன் (இன்னும் எத்தனை அரக்கிகளோ தெரியவில்லை) போரில், மேகவண்ணணே, அங்கே உன்னுடைய கைத்திறனைக் கண்டேன். எனக்கு விமோசனம் தந்த இங்கே உன் கால்திறனைக் கண்டேன்.' அந்த 'வண்ணம்' வார்த்தையை வைத்துக் கொஞ்சம் உருகியிருக்கிறார் கம்பர். தமிழார்வம் மிகுந்தோரை உருக்கியிருக்கிறார்.
கண்ணதாசன் காப்பியடித்தாரா? நிச்சயமாக கம்பன் கற்பனையை எடுத்தாண்டிருக்கிறார். இந்தப் பாடல் மட்டுமல்ல, கம்ப காவியத்திலிருந்து எத்தனையோ கருத்துக்களை அபேஸ் பண்ணியிருக்கிறார். பிறகு ஏன் கண்ணதாசன் வரிகளில் புதுமை என்றேன்? கண்ணதாசன் காப்பியடிக்கவில்லை என்றால் இந்த சொல்லழகுப் பாடல்களை சாமானியர்கள் ரசித்திருக்க முடியாது, தெரிந்து கொண்டிருக்கவும் முடியாது, என்பது என் கருத்து. கம்பனின் சொல்லாடல் பொருளாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று என் போன்றவரை வருடக்கணக்கில் ரசிக்கும்படி செய்திருப்பதே கண்ணதாசனின் புதுமை. எம்எஸ்வியின் கொடை.
எம்எஸ்வி-5 | 2010/03/30 | பால் வண்ணம்
வகை
இசை
2010/03/24
காங்கலியே?
கவிதை
2010/03/12
மெல்லிசை நினைவுகள்
இந்தப் பதிவுக்காகச் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்த போது ஒன்று புரிந்தது. பதிவுக்குத் தேர்வு செய்யும் சாக்கில் பழைய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க முடிகிறதே? சாதாரணமாக ஒரு முறை கேட்டு ரசித்து விட்டு அடுத்த பாட்டுக்குத் தாவுவேன். பதிவுக்காகப் பல முறை எம்எஸ்வியின் மெல்லிசையைக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவுக்கான பாடல்கள் பல கண்ணதாசன் எழுதியவை என்று தெரிந்த போது, அவருடைய கவிதைக்காகவும் ரசித்துக் கேட்டேன். கரும்பு தின்னக் கூலி. பழந்தின்னப் பொன் தட்டு. முத்தமிட மேனகை. ஓகே, ஓகே.
தேர்ந்தெடுத்த பாடல்களில் பல முறை ரசித்த பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. சாதாரண வரிகள், மிகச் சாதாரணப் படப்பிடிப்பு, தேவையில்லாத பாடல் காட்சி. பொருந்தாத நடிப்பு. இவை எல்லாவற்றையும் மறக்கடிக்கும் மெட்டு, இசை, குரல். ஜானகியின் குரலில் கீச்சொலி வெளிப்படாமல் பாடச் செய்தவர் எம்எஸ்வி. இந்தப் பாடலின் பல்லவி 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' இரண்டாவது முறையாக (அனுபல்லவி?) வரும் போது - பாடல் தொடங்கி இருபத்திரண்டு நொடிகள் போல் கடந்து வருகிறது - அந்த இடத்தில் கவனியுங்கள். பேங்கோஸ், டிரம்ஸ், கிடார், பேஸ் கிடார், சேக்சபோன் (என்று நினைக்கிறேன்) கலந்து அசத்தும். இரண்டு நொடிகளுக்கும் குறைவாகத்தான் வருகிறது என்றாலும், கேட்டால் புல்லரிக்கும். ஹெட் செட் அணிந்து கேளுங்கள், இசை நுணுக்கம் புரியும். இந்தப் பாடலின் சிறப்பே இசை தான். கிடார், பியேனோ, குழல், வயலின், நாயனம் (க்ளேரினெட்?) என்று மன்னர் பின்னிவிட்டார்.
எம்எஸ்வி-4 | 2010/03/12 | உள்ளம் என்பது ஆமை
வகை
இசை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)