2014/06/08

மாலையில்.. சைபர் சோலையில்..


    ம்பந்தமே இல்லாத இடங்களில் தேவையே இல்லாமல் தலையை நுழைத்து அனாவசியமாக வாயைத் திறக்கும் திறமைக்கு யாராவது பட்டம் பதக்கம் பரிசு பொன்னாடை ஏதாவது தருகிறார்களா தெரியவில்லை. கொடுத்தால் எனக்கு இன்னும் ஒரு பதக்கமும் கிடைக்காத அநியாயத்தை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை நேரம் பரிசும் பொன்னாடையுமாகக் குவிந்திருக்க வேண்டும். ஹ்ம்.

எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான வேலைக்கான information security பற்றி ஒரு குழுவுடன் விசாரிக்க வேண்டியிருந்தது. information security என்றால் யூனிபார்ம் அணிந்து கொண்டு யாரோ பாதுகாக்கும் சமாசாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், 'ஆளெடுக்க எவ்வளவு செலவாகும்? யூனிபார்முக்கு எவ்வளவு செலவாகும்? துப்பாக்கி லைசென்ஸ் தேவையா? போலீசிலிருந்து எடுப்பதா? இதற்கென சிஐடிக்கள் உண்டா?' என்று பரபரவென பந்தாவாகக் கேள்விக் கணைகள் தொடுத்த என்னை மேலும் கீழும் பார்த்த இரண்டு ஆலோசகர்களைக் கவனித்தேன். அப்போதாவது அமைதி காத்திருக்க வேண்டாமோ? "என்ன, நான் கேட்பது புரியவில்லையா, என்ன அப்படி முழிக்கிறீங்க?" என்றேன். குழாயடியாக இருந்தால் வேறு ஏதாவது கேட்டிருப்பேன். நல்ல வேளை.

மரியாதை காரணமாகச் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருவரும் எனக்கு இந்த நுட்பத்தை விலாவாரியாக விவரித்த போது நடுங்கிப் போனேன். information security என்பது மென்பொருள் சேவையாம்.

"ஒரு போலீஸ் கூடக் கிடையாதா?"

"கண்காணிப்பு, தடுப்பு எல்லாம்.. அது கூட சாப்ட்வேர் தான்.. ஆனா நீங்க சொல்றாப்புல மென்பொருள் போலீசுனு வச்சுக்கலாம் சார்"

"அதானே பார்த்தேன்? எனக்குத் தெரியும்ம்ம்ம்ம்... இருந்தாலும் கேட்டேன்".

அத்தோடு விட்டேனா? அவர்களிடம் கற்றுக் கொண்ட சில வார்த்தைகளையும் செய்திகளையும் வைத்துக் கொண்டு அந்த வார இறுதியின் get togetherல் அளந்து விட்டேன். get togetherல் கலந்து கொண்ட சில தரக்குறைவான ஹார்வர்ட் எம்பிஏ அதிகாரிகள் (சக்தி கவனிக்க) அவ்வப்போது உதார் விட்டாலும், கலந்து கொண்ட உண்மையான அறிவாளிகள் (indian institute of information science மாணவர்களும் ஆசிரியர்களும் - சக்தி மீண்டும் கவனிக்க :-) என்னை வியப்பில் ஆழ்த்தினார்கள் என்று இடக்கரடக்கலாக இயம்பலாம்*. அல்லது என் வாய்க்கொழுப்பை அடக்கினார்கள் என்றும் அரற்றலாம்.. வந்திருந்த சில ரஷிய இளைஞர்கள் மொழியால் தடுமாறினாலும் அறிவால் எங்கள் கவனத்தை அப்படியே கட்டிப் போட்டார்கள்.

அந்த மாலை அறிவு மாலையானது ஒரு நிறைவு.


    ணையம் வழியாகத் தகவல் அனுப்பும் பொழுது.. "என்ன ஜீவி சார் நலாமா?" என்று விசாரித்தால் அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் அவர் முன் விழுவதில்லை என்பது தெரிந்தாலும்.. ஒரு செய்தியையோ தகவலையோ பாதுகாப்பாக அனுப்ப இத்தனை வழிகள் உண்டு என்பதும், பாதுகாப்பாக அனுப்ப வேண்டிய அவசியம் பற்றியும் நிறைய அறிந்து கொண்டேன். amazonல் புத்தகம் வாங்க நான் இணையத்தில் பதித்த என் அமெரிகன் எக்ஸ்பிரஸ் க்ரெடிட் கார்ட் 3713 320050 37500 விவரங்களை தாய்லாந்தில் ஒருவர் நைசாக அபேஸ் பண்ணக்கூடிய அபாயமும் அதன் எளிமையையும் விளக்கிய போது வியப்பாக இருந்தது. விவரங்களை அனுப்ப ஒரு பாதுகாப்பு உறை போன்ற அமைப்பை விளக்கினார்கள். எஸ்எஸ்எல்சி என்று ஏதோ சொன்னார்கள். அதை நான் படிக்கவில்லை என்றதோடு நிறுத்திக் கொண்டேன்.

இந்த விவரங்களைத் திருடுவோரின் திறமை பிரமிக்க வைக்கிறது. இவர்களில் பலர் கல்லூரிக்குக் கூட போனதில்லையாம்! படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கு இதை உதாரணமாகக் கொடுக்க வேண்டியிருக்கிறதே! சற்று யோசித்தால் இது அறிவு தானா, ஒழுங்காகப் படித்திருந்தால் இந்த அறிவு மேம்பட்டிருக்குமா என்ற கேள்விகள் அடுக்காக எழும்பினாலும், அவர்களின் திறமையையும் உழைப்பையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

திருடும் திறமை ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஹேக்கர்கள் வைரஸ் எழுதுவோரின் இன்னொரு திறன் என்னை வாய் பிளக்க வைக்கிறது. எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள்! இதோ இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று திண்டாடி கடைசியில் உப்புசப்பில்லாமல் ஒரு தலைப்பை வைப்பேன். இந்த மாதிரி ஆட்களிடம் அல்லவா பெயர் வைக்க நான் பயிற்சி பெற வேண்டும்?

'heartbleed' என்று ஒரு வைரஸ். இதை சமீபத்தில் எப்படி எல்லாரும் அடக்கினார்கள் என்பது பற்றி விளக்கினார்கள். அதனால் விளைந்த நஷ்டங்களைப் பற்றிப் பேசினார்கள். நான் heartbleedலேயே இருந்தேன். heartbleed! எப்படிப்பட்டப் பெயர்! உயிரைக் குடிக்கும் ஒரு கொடிய துன்பத்தின் சாரத்தை இதைவிட எளிமையாக எப்படி விளக்க முடியும்? இவர்கள் எழுதிய வைரஸ் அத்தனை துன்பத்தை விளைவிக்கக் கூடியதாம். வைரஸ் எழுதியவர் கவிஞராக இருக்க வேண்டும் என்றேன். முறைத்தார்கள்.


    ட்வர்ட் ஸ்னோடென் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். இவரை ஹீரோ என்கிறார்கள். zeரோ என்கிறார்கள். எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவுக்கு ஒரு தலைவலி என்பது மட்டும் எனக்குப் புரிந்திருக்கிறது. ஒரு டாகு விடியோ காட்டினார்கள்.

சில மாதங்களுக்கு முன் வரை அமெரிக்க அரசோடு ஒத்துழைத்த தகவல்துறை மற்றும் இணைய நிறுவனங்கள் போன வாரத்திலிருந்து போர்க்கொடி பிடித்திருக்கின்றனவாம். கூகில், யாஹூ, faceபுக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இனி அமெரிக்க தேசிய பாதுக்காப்பு இலாகாவுடன் ஒத்துழைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இணையத்தில் பாமரத்தனமாய்த் திரியும் என் போன்றவர்களுக்கு இது ஒரு ஆறுதல். இதற்கு முன்னால் என்ன பெரிய ஆபத்து என்று கேட்டால் அதற்கும் என்னிடம் பதில் கிடையாது. இருந்தாலும் என் சுதந்திரம் இப்போது கூடியிருக்கிறது என்று யாராவது சொன்னால் ஜே போடத் தோன்றுகிறது.

இனி இணையப் பாமரர்களுக்கு ஏதுவாக அவர்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த எஸ்எஸ்எல்சி வகையை அமைக்கப் போவதாக கூகில் சொல்லியிருக்கிறதாம். தொடர்ந்து மற்ற இணைய நிறுவனங்களும் ஆமாம் போட்டிருக்கின்றனவாம். கூகில் அறிவித்திருக்கும் end-to-end முயற்சி சாதாரணர்களை வீரர்களாக்கும் முயற்சி என்கிறார்கள் - அதாவது என் க்ரோம் ப்ரௌசரில் என்னை நானே பாதுகாத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாமாம். அமெரிக்க NSAவுக்கு பெப்பே சொல்லச் சொல்கிறது கூகில்.


    மெரிக்க அரசு உலகின் அத்தனை இமெயில் செல்போன்களைக் கண்காணிப்பதாக ஸ்னோடென் சொன்னாரும் சொன்னார் - எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த 'சிசரோ அருகே இருபத்தேழு வயது லத்தீன இளம்பெண் உனக்காகக் காத்திருக்கிறாள், உடனே டெக்ஸ்ட் செய்' போன்ற செய்திகள் வருவது நின்றுவிட்டன. ஒருவேளை என் செல்போனை அமெரிக்க அரசு கண்காணிப்பது தெரிந்து விட்டதோ என்னவோ!

ஸ்னோடென் பற்றிய சமீபச் செய்தியொன்றை அலசினார்கள். ஆறு வருடங்களுக்கு முன்பே ரஷிய உளவுத் துறை இவரைக் கண்காணிக்கத் தொடங்கியதாம். இவரை வசியப் படுத்த முனைந்ததாம். இதுவரை ஸ்னோடெனைப் பிடிக்க முயற்சி செய்து தோற்றுவரும் அமெரிக்க அரசு, நேற்று ஸ்னோடென் ஒரு டபுள் ஏஜன்டாக இருப்பார் என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது. ரஷிய உளவுத் துறை பழைய உறவுடன் ஸ்னோடெனை பாதுகாக்குமா இல்லை சந்தேகிக்குமா? எப்படியிருந்தாலும் ஸ்னோடென் நிறைய நாள் தாக்குப் பிடிப்பது கஷ்டம். என்ன வாழ்க்கையோ போங்கள்!

அவரைப் பற்றி ஒர் விறுவிறுப்பான ஹாலிவுட் படம் வருவது நிச்சயம் என்றார்கள். பென் ஏப்லெக் நடிக்காமல் இருந்தால் புண்ணியமாகப் போகும் என்று நினைத்துக் கொண்டேன்.


    போன் தானாகவே தீப்பிடித்துக் கொள்கிறதாம். அமெரிக்க மெய்ன் மாநிலத்தில் ஒரு பதிமூன்று வயதுச் சிறுமி திடீரென்று பள்ளிக்கூடத்தில் துள்ளிக் குதித்தாள். பார்த்தால் அவளுடைய பேன்ட் பின் பாகெட்டிலிருந்து புகை. ஒரு வேளை சிகரெட்டை மறைத்திருக்கிறாளோ என்ற சந்தேகத்தில் டீச்சர் மிரட்ட, பார்த்தால் ஐபோன்! நிறைய பேர் ஐபோனை பின்பாகெட்டில் வைத்திருக்கிறார்கள். கவனம்.

ஐபோன் அப்படி திடீரென்று தானாகவே தீப்பிடிப்பது ஒன்றும் புதிதில்லையாம். 2009லிருந்தே இது போல் அடிக்கடி நடந்து வருகிறதாம். புதிய ஐபோன் மாடல்கள் சாதாரணப் பயன்பாட்டில் கூட நூற்றெழுபது டிகிரி வரை சூடேறித் தீப்பிடிக்கும் சாத்தியம் உண்டு என்றார்கள்! என்னுடைய சேம்சங் போன வாரம் முட்டை பொறிக்கும் அளவுக்கு சூடேறியிருந்தது. நான் பார்த்த விடியோவுக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

சரி, தீயை அணைக்க யாராவது ஒரு app எழுதக் கூடாதோ?


    கூகில் நௌ ஒரு வசதி அறிமுகப்படுத்தியிருக்கிறதாம். இங்கே போவதாகக் குறித்து விட்டால் போதும். இறங்க வேண்டிய இடத்துக்கு சற்று முன்பாகவே கூகில் நம்மை எழுப்பிவிடுமாம். கூகில் மேப், ஜிபிஎஸ் மகிமையே மகிமை.

பஸ்ஸில் ஏறியதும் எனக்குத் தூக்கம் வந்துவிடும். கல்லூரி நாட்களில் பஸ், ட்ரெயினில் இறங்க வேண்டிய இடம் தாண்டித் தூங்கி இருக்கிறேன். எத்தனையோ நாள் நின்றபடியே தூங்கியிருக்கிறேன்!

இத்தனை நாளாச்சா இதைக் கண்டுபிடிக்க?


    *'இயம்பு' என்றதும் நினைவுக்கு வருகிறது. அதை ஏன் கேட்கிறீர்கள்?! விழா என்ற பெயரில் அவ்வப்போது சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் ஏதாவது செய்வார்கள். பிள்ளைகளை மேடையில் தமிழ் படிக்கச் சொல்வார்கள். பரிசு தருவார்கள். மாணவர்கள் படிப்பதற்கான பகுதிகளை ஒரு முறை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு மாணவர் ஏதோ புத்தகத்திலிருந்து 'அவள் இயம்பினாள்' என்று படித்ததும், அருகிலிருந்த த.ச. மூத்த உறுப்பினர் என்னிடம் ரகசியமாக, "என்னங்க.. இயம்பினாள்னு பப்லிக்கா படிக்குது இந்தப் பிள்ளை? என்ன புக்லந்து பிடிச்சீங்க?" என்று அதிர்ந்து போனார். "இயம்பினாள்னா என்னனு நினைச்சீங்க?" என்றேன். வாழிய செந்தமிழ்.

16 கருத்துகள்:

  1. இயம்புதல் தெரியாமல் த.ச உறுப்பினரா. ஹா.எனக்குத் தெரிந்தவரை சொல்லுதல்தானே. அப்போ இது வரை நாம் செக்யூரிடி இல்லாமல் தான் இருந்திருக்கோமோ.

    பதிலளிநீக்கு
  2. இயம்பியது அத்தனையுமே ரத்தினம்.

    ஒண்ணு கவனிச்சீங்களோ? இந்தத் தடவை க.ம.கொ. தலைக்காட்டாதது ஆச்சரியம் தான்.

    பதிலளிநீக்கு
  3. //அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் ... //

    வேண்டுமென்றே செய்திருந்த எழுத்துப் பிழையையும் சேர்ந்து ரசித்தேன். தாங்கள் நலம் தானே?..

    நாங்கள் நலமே. நாடுவதும் அஃதே - என்று ஐம்பதுகளில் எழுதிப் பழக்கம்.

    பதிலளிநீக்கு
  4. சும்மா சொல்லக் கூடாது. தலைப்பு அருமை.. அதுவும் சைபர் சோலை.. த.ச.ங்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  5. கூகுள் பிரௌசரில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் வசதியை வாழ்த்தி வரவேற்போம்

    பதிலளிநீக்கு
  6. கண்டிப்பாக படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை... அது வெறும் தகவல்கள் தானே...? திருடுவோரின் திறமை நல்வழிக்கு சென்றால்.... செல்ல வேண்டும்...!

    பதிலளிநீக்கு
  7. தலைப்பு மிகவும் கவர்ந்தது..

    திறமையான ஆக்கம் ...!

    பதிலளிநீக்கு
  8. /எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த 'சிசரோ அருகே இருபத்தேழு வயது லத்தீன இளம்பெண் உனக்காகக் காத்திருக்கிறாள், உடனே டெக்ஸ்ட் செய்' போன்ற செய்திகள்/ அட எனக்கும் இம்மாதிரி செய்திகள் வந்துகொண்டிருந்தன. யூ ட்யூபில் போனால் இச்செய்திகள் திடீரென்று வரும் . இதற்காகவே யூட்யூப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டேன் . இப்போது நின்று விட்டது போல் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் சில சமயம் கடிதங்கள் எதிர்பாராத சொற்கோவையுடன் வரும் உ-ம் “உங்கள் கடிதம் கண்டு இறும்பூதெய்தினேன்”

    பதிலளிநீக்கு
  10. Nothing I could understand from this post because I am at a loss to understand who is the tech-savvy whether the program writer or the virus creators and who is having more knowledge about the computers. My head is circling around.
    Regarding IYAMBINAL, so called seniors should learn from these kids the real meaning of such words.

    பதிலளிநீக்கு
  11. தலைப்பு என்னைக் கவர்ந்தது. (எனக்கும் தலைப்பு அலர்ஜி உண்டு)

    பதிலளிநீக்கு
  12. இந்த ஏஜெண்டுகள் விவகாரமே பெரும் குழப்பம். சப்ரஜித் நினைவுக்கு வருகிறார்.

    பதிலளிநீக்கு
  13. //என்னுடைய சேம்சங் போன வாரம் முட்டை பொறிக்கும் அளவுக்கு சூடேறியிருந்தது. நான் பார்த்த விடியோவுக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.//

    ஹிஹிஹிஹிஹிஹி


    // இணையம் வழியாகத் தகவல் அனுப்பும் பொழுது.. "என்ன ஜீவி சார் நலாமா?" என்று விசாரித்தால் அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் அவர் முன் விழுவதில்லை என்பது தெரிந்தாலும்.//

    ஹாஹாஹா, ரசித்தேன்.


    // சில தரக்குறைவான ஹார்வர்ட் எம்பிஏ அதிகாரிகள் (சக்தி கவனிக்க) அவ்வப்போது உதார் விட்டாலும், கலந்து கொண்ட உண்மையான அறிவாளிகள் (indian institute of information science மாணவர்களும் ஆசிரியர்களும் - சக்தி மீண்டும் கவனிக்க :-) என்னை வியப்பில் ஆழ்த்தினார்கள் என்று இடக்கரடக்கலாக இயம்பலாம்//

    ஹெஹெஹெஹெஹெஹெ

    எல்லாத்திலேயும் டாப் ஷிகாகோ த.ச. மூத்த உறுப்பினர் தான்.

    பதிலளிநீக்கு
  14. அது சரி, பதிவு எதைப் பத்தி??? அதைச் சொல்லவே இல்லையே? :))))))

    பதிலளிநீக்கு
  15. மாலையில் மலர்ச் சோலையில் பாட்டு போல சைபர் சோலை....

    சொன்ன விஷயங்கள் பலவற்றை ரசித்தேன். சிகாகோ தமிழ்ச் சங்க உறுப்பினர் - :))))

    பதிலளிநீக்கு
  16. தலைப்பு பிரமாதம். பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடல் காதுகளில் ஒலித்தது.
    வெங்கட் அவர்களுக்கும் அந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு