2014/03/03

பெத்தாபுர மலர்

      சாயம்            யாழ்            தோஷம்     





                    சங்கப்போவது தெரிந்தால், மலர்கள் மொட்டாகவே உதிர விரும்புமோ? சில பெண்கள், மலர்கள். சில மலர்கள், ஆண்கள்.

    முரளியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். தற்கொலைக்கானத் தீவிர முயற்சி.

மூட்டைப்பூச்சி மருந்து குடித்து, அதற்கு மேல் தீக்குளிக்க முயன்றிருக்கிறான். அதற்கும் மேலாக ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து நீரில் விழுந்து மூழ்கவோ கட்டாந்தரையில் விழுந்து நொறுங்கவோ முயலாததால் சாகவில்லை.

எபிடெர்மிஸ் சிதைந்து போகக் காரணமான இரண்டாம் டிகிரித் தீக்காயங்களைக் கவனிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளிருந்து மூட்டைப்பூச்சி மருந்தையும் நீக்க நேரிட்ட சிக்கல் தொட்டு, அல்லது, உள்ளிருந்து மூட்டைப்பூச்சி மருந்தை நீக்க வேண்டியிருந்த கட்டத்தில் எபிடெர்மிஸ் சிதைந்து போகக் காரணமான இரண்டாம் டிகிரித் தீக்காயங்களைக் கவனிக்க நேர்ந்ததால் - முரளி ஒரு வாரமாக மூச்சு பேச்சில்லாமல் கிடந்தான்.

ஒரு வாரமாக எங்கள் வட்டத்தில் அதுவே பேச்சு மூச்சானது.

அசுதோஷிலிருந்து எங்கள் சிறுவட்டம் பெருவட்டம் எல்லாவற்றிலும் அனைவருமே கலங்கிப் போயிருந்தார்கள். சென்னை மேலாபீசிலிருந்து தில்லித் தலைமையலுவலகம் வரை மேலாளர்களும் மனிதவள நிபுணர்களும் எங்களை தொலைபேசியும் நேரில் சந்தித்தும் குடைந்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள் தேவைக்கதிகமாக எவருடனும் பேசவில்லை. சிலரின் நக்கீரப் பார்வைகளைத் தவிர்ப்பதில் குறியாக இருந்தோம். போலீஸ், சமூக சேவை, மருத்துவர், உடன் வேலை பார்ப்பவர்கள், தெரிந்தவர்கள் என்று பலருக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது. பேச்சு கேட்க வேண்டியிருந்தது. பார்வைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எங்கள் வீட்டுப் பெரியவர்களின் கலவரப் போக்கை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இரவின் உறக்க ஆயத்தத்தில் எங்களை நாங்களே தட்டிக் கேட்டுக் கொள்ளத் தூண்டும் அசாதாரண உணர்வுகளைக் கட்ட வேண்டியிருந்தது. எங்கள் வீச்சுக்கு மீறிய வலையாக விவகாரம் உருவெடுத்துக் கொண்டிருந்தது.

இலவசமாகக் கிடைத்தப் பிறவியை வீணாக்காமல் பொதுவாகக் கவலையின்றிக் கொண்டாடித் திரிந்த நாங்கள், அந்த வார இறுதியில் அமைதியாக இருந்தோம். ரெட்டைபாதின் சுகப்பாதை பயணங்களைத் தவிர்த்து நாற்சுவருள் முடங்கிக் கிடந்தோம். எங்கேயும் போகவில்லை. அசைவம் கூடச் சாப்பிடவில்லை.

கொடுமையிலும் கொடுமையாக, சனிக்கிழமை காலை ஆறு மணிக்கெல்லாம் தூக்கம் தொலைத்தேன். எதிரே வத்சன் ஆண்களுக்கே உரித்தான அதிகாலைச் செங்கோணச் சிக்கல் புலப்படத் தூங்கிக் கொண்டிருந்தான்.

எழுந்தேன். சுத்தம் செய்து கொண்டு, முதல் நாளிரவு பேப்பர் கடைக்காரன் போட்டுச் சென்ற குமுதம் ஒரு கையிலும் அப்போது கலந்த சன்ரைஸ் காபி இன்னொரு கையிலுமாக ஹாலில் அமர்ந்தேன். வினியோகச் சத்தம் சேர்த்து எழுபத்தைந்து காசாக அந்த வாரம் குமுதம் விலை உயர்ந்திருந்தது. பேப்பர் கடைக்காரன் எனக்காக விட்டுப்போன குறிப்பை எறிந்தேன். காபி இறங்கவில்லை. லைட்ஸ் ஆனில் மனம் ஒட்டாமல் இலவச இணைப்பை எடுத்தேன். சமீபமாகப் புகழின் உச்சிகளைத் தொட்டுக் கொண்டிருந்த சில்க் ஸ்மிதா, அட்டைப் படத்தில் அரைமுழப் புடவையை மிகுந்த சிரமத்துடன் கட்டியிருந்தார். எப்படி இவருக்கு மட்டும் இத்தனை பருத்த..

..வாசல் கதவு இடிபடும் ஓசை கேட்டு அவசரமாக எழுந்தேன். ஓடிச் சென்று வத்சனை உலுக்கி எழுப்பி, ஹாலில் அபாயகரமாக எதுவும் இல்லை என்று ஒரு முறை எச்சரிக்கை நோட்டமிட்டு, வாசல் கதவைத் திறந்தால்..

..புன்னகையற்ற அசுதோஷ். அவனருகே புன்னகையற்று நின்றிருந்த மற்ற இருவரும் இதே விவகாரம் தொட்ட ஒரு கசப்பான சூழலில் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்.

"துரை.. மீட் முரளிஸ் பேரன்ட்ஸ்" என்றான் அசு.

"வாங்க" என்றேன் மனமில்லாமல். அவர்களுக்கு வழிவிட்டுப் பின் தொடர்ந்த அசுதோஷின் பார்வை, எனக்கு உறுதியான செய்தி சொன்னது. முதல் நாள் மாலையின் எச்சரிக்கைகளை நினைவுபடுத்துவது புரிந்து, நானும் சங்கேதமாக ஆமோதித்தேன்.

அவர்கள் உள்ளே வந்து உட்காரவும் வத்சன் சமையலறையிலிருந்து வரவும் சரியாக இருந்தது. அத்தனை சடுதியில் பல் விளக்கி முகம் கழுவி முடி சீவி உடையணிந்து வந்தது வியப்பாக இருந்தது. அதற்கான ஒலிம்பிக் போட்டி ஏதாவது இருந்தால் அன்றைக்கு அவன் தங்க மெடல் வாங்கியிருப்பான். ஜீன்ஸும் மஞ்சள் டீ ஷர்டும் பளபளக்க, "நானு வத்சன்" என்று நட்புக்கை நீட்டினான். "காபி சாப்ட்றிங்ளா? ரெடியாச்சு"

"நாங்க ஒண்ணும் காபி சாப்பிட வரலே" என்றார் முரளியின் அம்மா, விசும்பலில் நனைந்த கண்டிப்புடன்.

பிறிதொரு தருணமெனில் அவர் மறுப்பை முகத்திலடிக்கும் அவமானமாகக் கொண்டிருப்போம். இன்று அப்படியல்ல. அவர்கள் வந்த காரணம் எங்களுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரிய வேண்டுமானால் கணிசமாகப் பின்னோக்கிப் போக வேண்டும். முரளியின் அறிமுகத்திலிருந்து தொடங்க வேண்டும்.

முரளியின் அறிமுகமும் ஒரு சனிக்கிழமை அதிகாலை அதிவேகக் கதவிடிப்பின் அதியோசையில் நிகழ்ந்தது.

அரும்பு [+]

நனை [+] புதிது

...